இந்திரநீலம் - 56
பகுதி பத்து : கதிர்முகம் – 1
கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட கழிகளால் முழக்கி இடியோசை எழுப்பினர். நகர்மேல் பனிப்பரவல் போல இறங்கிய ஓசை உண்டாட்டுக்கு அறைகூவியது. நீராட்டு விழவு முடிந்து ஈர உடையுடன் இல்லம் திரும்பி இன்னுணவு உண்டு சாவடிகளிலும் மண்டபங்களிலும் திண்ணைகளிலும் விழுந்துகிடந்து விழிமயங்கிக் கொண்டிருந்த மக்கள் அவ்வோசை கேட்டு எழுந்தனர். முரசு முழக்கம் அடங்கி அதன் ரீங்காரம் தேய்வதற்குள் நகரம் பேரோசையுடன் விழித்துக் கொண்டது. சில கணங்களுக்குள் தெருக்கள் எங்கும் மக்கள் நிறைந்து கூச்சலிட்டு அங்கும் இங்கும் முட்டிமோதி ததும்பத் தொடங்கினர். மரக்கிளையில் தேனடை என வரதாவின் கரையில் அமைந்த நகரத்தின் நூற்றுக்கணக்கான சிறிய தெருக்களில் இருந்து எழுந்த மக்கள் அரண்மனை முகப்பின் அரைவட்டப் பெருஞ்சதுக்கம் நோக்கி சென்றனர்.
வரதாவின் சேறு அழுந்தி உருவான பட்டைக்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக தூக்கி வைத்து கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையின் ஏழு காவல்மாடங்களும் மரத்தாலானவை. அவற்றின் உச்சியில் அமைந்திருந்த காவல்முரசுகளும் உண்டாட்டுக்கான அழைப்பொலியை எழுப்பின. அவ்வொலி கேட்டு கோட்டைக்கு அப்பால் காட்டுவிளிம்பின் உயர்ந்த மரங்களின் மேல் அமைந்திருந்த மலைக்குடிகளின் காவல்முழவுகள் ஒலிக்கத்தொடங்கின. ஒலி காடெங்கும் பரவிச்சென்றது. மலைக்குடிகள் தங்கள் கோல்களுடனும் தோல்மூட்டைகளுடனும் மகவும் மகளிருமாக கிளம்பி மலையிறங்கினர்.
நகரின் மூன்று பெருவாயில்களில் நின்றிருந்த காவலர்கள் உண்டாட்டு கொண்டாட வந்த மலைக்குடியினரை ஒவ்வொருவராக நோக்கி உள்ளே அனுப்பினர். மலைக் குடியினர் படைக்கலம் ஏந்தி நகர் நுழையக்கூடாது என ஆணை இருந்தது. கௌண்டின்யபுரியின் உண்டாட்டு மலைக்குடியினருக்கு நினைவில் வளரும் நிகழ்வு. பெருஞ்சோற்றூண் என்பதோ தலைமுறைக்கு ஓரிரு முறை நிகழ்வது. நெடுநாட்களுக்கு முன் இளவரசி பிறந்தபோது அரசர் பீஷ்மகர் அமைத்த உண்டாட்டை முதியவர்கள் எப்போதும் நினைவுகூர்வதுண்டு. அன்று உண்ட சுவைகள் அவர்களின் நாவிலிருந்து சொல்லுக்கு சென்றுவிட்டிருந்தன.
மாலை தொடங்கி மறுநாள் விடிந்து கதிர்எழுந்து உச்சி ஒளிர்ந்து அந்தி மயங்கி மறுநாள் தோன்றும்போதும் அவ்வுண்டாட்டு தொடரும். உண்டு உறங்கி எழுந்து உண்டு உடலற்றுக் கிடந்து உடலுணர்ந்து எழுந்து உண்டு உணவென்றே காலம் விரைய ஒருதுளியும் உணவு எஞ்சாமலாகி மீள்வதையே உண்டாட்டு என்றனர். புழுக்களைப் போல் உண்க என்பது மலைக்குடியினரின் முதுசொல். உணவில் திளைப்பவை புழுக்கள். உணவன்றி பிறிதின்றி ஆகி உண்ணுதலே உயிர்வாழ்தலென்று வாழ்பவை. உண்ணுதல் உயிர்வாழும் பொருட்டு. உண்டாட்டு என்பது உணவுக்கு தன்னை முழுதளித்தல். உடலை, உயிரை, உள்ளத்தை, ஊழை, ஊழ் கடந்து விளைவென வாழும் தெய்வத்தை உணவால் நிறைத்தல்.
வருடந்தோறும் புதுநீராட்டுக்குப்பின் நிகழும் உண்டாட்டு அல்ல அவ்வருடத்தையது என்பதை முன்னரே மலைக்குடிகள் அறிந்திருந்தனர். சேதி நாட்டு அரசன் தன் படைகளுடனும் அகம்படியினருடனும் கௌண்டின்யபுரிக்கு வந்ததும் அது உறுதியானது. இம்முறை பெருஞ்சோறு என்ற செய்தி மலைகள்தோறும் குறுமுழவு ஒலியாக பரவியது. தேனடைகளும் அரக்கும் கொம்பும் சந்தனமும் அகிலும் கோரோசனையும் கொண்டு புதர்ச் செறிவுகளூடாகச் சென்ற சிறுபாதைகளில் நடந்து அவர்கள் கௌண்டின்யபுரியை நோக்கி வந்தனர். வெல்லக் கட்டியில் ஈக்கள் என மொய்த்து நகரை நிறம்மாற்றினர். காலை வெயில் பழுக்கத் தொடங்கியபோது அரண்மனை முகப்பின் பெருஞ்சதுக்கம் தலைகளின் கரிய வெள்ளத்தால் நிரம்பியது. அதில் வண்ணத்தலைப்பாகைகள் மலர்க்கூட்டங்கள் போன்று மிதந்து சுழித்தன.
அரண்மனையின் சாளரங்கள் அனைத்தில் இருந்தும் காற்றுடன் கலந்து வந்த ஓசை பொழிந்து அறைகள் யாழ்குடங்கள் என விம்மிக் கொண்டிருந்தன. சேடியரும் ஏவலரும் பேசிய சொற்களை அவை வண்டுகள் எனச் சூழ்ந்து அதிர வைத்தன. இளைப்பாறி எழுந்து நன்னீராடி ஆடை புனைந்துகொண்டிருந்த ருக்மிணியை நோக்கி வந்த சேடி “இளவரசி, உண்டாட்டுக்கு சற்று நேரத்தில் அரசரும் அரசியரும் எழுந்தருளிவிடுவார்கள்” என்றாள். “சதுக்கம் நிறைந்துவிட்டது. அரசர் அணிகொண்டு கூடமேகிவிட்டார். அரசியருக்காக காத்திருக்கிறார்.”
ருக்மிணிக்கு கூந்தல் சமைத்துக் கொண்டிருந்த முதிய சமையப்பெண் “இரவுக்கான அணி புனைதல் இன்னும் காலம் எடுப்பது. பந்த வெளிச்சத்திற்குரிய மணிகளை தேர்ந்தெடுப்பது எளிய பணி அல்ல என்று சென்று சொல்” என்றாள். “அணிசூடுவது தொடங்கி இரு நாழிகையாகிறது. அங்கே அனைவரும் விழிநோக்கியிருக்கிறார்கள்” என்றாள் சேடி. “அணி செய்வது என்பது பெண்ணில் பெருந்தெய்வத்தை எழுப்புதல். அதை கண்ணில் ஒளியுள்ளோர் அறிவர்” என்றாள் சமையப்பெண். சேடி “இவை அணிச்சொற்கள். நான் சென்று சொன்னால் என்னை சினப்பர்” என்றாள். “கேட்பவரிடம் இளவரசி சமைந்து முடியவில்லை என்று சமையச்சேடியர் சொன்னார்கள் என்று சொல்” என்றாள் சமையப்பெண். “ஆம், கையில் ஒரு கலையிருந்தால் சொல்லில் ஆணவம் ஏறும்” என்று சொன்ன சேடி “ஏவலருக்கு சொல் சுமையே” என்றபடி சென்றாள்.
சிறிய ஆடி ஒன்றை ருக்மிணியிடம் காட்டிய இளைய சமையச்சேடி “தோடு, மூக்குத்தி இரண்டையும் இளநீலக் கற்களால் அமைத்திருக்கிறேன் இளவரசி. பார்த்து சொல்லுங்கள்” என்றாள். செவ்வரி ஓடிய விழிகளால் ஆடியை நோக்கிய ருக்மிணி அணி புனைந்த எப்பெண்ணும் அடையும் கிளர்ச்சியை அடைந்து கைகளால் காதணியை திருப்பி விழிசரித்து தன் முகத்தை நோக்கி நெஞ்சு விம்ம “விண்மீன்கள்” என்றாள். அவள் பின்னால் நின்ற சமையப் பெண் “அணி புனைந்த பெண் ஆடி நோக்கினால் நன்று என்றும் குறை என்றும் மாறிமாறிக் காட்டி தெய்வங்கள் அவள் ஆன்மாவை பந்தாடும். ஒருபோதும் துலாமுள் நிலைகொள்ளாது” என்றாள்.
அமிதை விரைந்த காலடியோசையுடன் அறைக்குள் வந்து “இளவரசி, விரைவு கொள்ளுங்கள். அரசரும், அரசியரும் உண்டாட்டு முற்றத்துக்கு சென்றுவிட்டனர்” என்றாள். எவள் நீ என தோன்றிய விழிதூக்கி நோக்கிய ருக்மிணியைக் கண்டு அருகே வந்து “சேதி நாட்டு அரசர் தன் மாளிகையை விட்டு கிளம்பி விட்டார். முழுதணிக்கோலத்தில் வருகிறார். நம் இளவரசரும் தொடர்ந்து வருகிறார்” என்றாள். முதுசமையப் பெண் “நிழல் தன் உருவத்தைப் பிரிவது இல்லை அல்லவா?” என்றாள். அமிதை சினத்துடன் அவளை நோக்கி “அரச குலத்தைப் பற்றி சொல்லெடுப்பது இங்கு அனுமதிக்கப்படுவதில்லை” என்றாள். “நான் இந்நிழலைச் சொன்னேன்” என அவள் ருக்மிணியின் பின்னால் தரையில் விழுந்து கிடந்த நிழலைச் சுட்டி சொல்ல இளம் சமையப்பெண்கள் இருவரும் கையால் பொத்தி சிரிப்பை அடக்கினர்.
அமிதை அவர்களை உளம்விலக்கி “இந்நகர் முழுக்க அனைவரும் சேதிநாட்டு அரசரை அன்றி பிறிதெவரையும் எண்ணவில்லை. தெருக்களில் பாணரும் புலவரும் அவர் புகழ் பாடி ஆடுகின்றனர். இன்று ஒரு நாள் இங்கு பாடிய பாடல்களைத் தொகுத்தாலே அது ஒரு பெருங்காவியம் என்கின்றனர்” என்றாள். ருக்மிணி “ஆம். அவர் பெருவீரர். வரதை அவரை தன் மடியில் இட்டு சீராட்டியதை நாம் கண்டோமே” என்றாள். அருகே வந்த அமிதை “இளவரசி, சிசுபாலர் நிகரற்ற வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால்…” என்று தயங்க ருக்மிணி ஏறிட்டு நோக்கி “என்ன?” என்றாள்.
சொல்லுக்காக தயங்கியபின் அமிதை விழிகளால் சமையப்பெண்டிரை விலகச்சொல்லிவிட்டு மெல்லியகுரலில் “நான் செவிலி. என் சொற்களுக்கு எல்லை உள்ளது. ஆனால் சங்கு சக்கரம் அணிந்த உங்கள் செம்பொற்பாதங்களை சென்னியில் சூடியவள். உங்கள் அன்னையென்றானவள். நான் இதை சொல்லாமல் இயலாது” என்றாள். ருக்மிணி நோக்க “இன்று உண்டாட்டில் தங்கள் மண அறிவிப்பை மக்களுக்கு முன் வைக்க இளவரசர் எண்ணியுள்ளார்” என்றாள். “நீராட்டின் போதே சொல்ல விழைந்ததாகவும் அப்போது சொல்வது முறையல்ல என்று அமைச்சர் விலக்கியதாகவும் சொல்கிறார்கள். தங்கள் அன்னையோ சேதிநாட்டு அரசர் தங்கள் கைகொள்வது உறுதியாகிவிட்டது என்று சேடியருக்குச் சொல்லி விழவு கூட ஆணையிட்டிருக்கிறார்கள். அலுவல்மாளிகையில் தங்கள் மணநிகழ்வுக்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டன” என்றாள்.
அவற்றை ருக்மிணி பொருளற்ற சொற்கள் என கேட்டிருந்தாள். “இளவரசி, தங்கள் உள்ளத்தில் சேதிநாட்டு அரசர் இடம் பெற்றுள்ளாரா?” என்றாள் அமிதை. ருக்மிணி “அவர் இனியர் என்றே எண்ணுகின்றேன்” என்றாள். “இளவரசி, தங்கள் கை பற்றும் தகுதி உடையவர் என்று எண்ணுகிறீர்களா?” என்றாள் செவிலி. “இல்லை” என்றாள் ருக்மிணி. “இம்மண்ணில் நான் எழுந்தது அவருக்காக அல்ல. என் அருள் பெறும் அரசர் அவர். என் கைகொள்ளும் கொழுநர் பிறிதெங்கோ எவ்வடிவிலோ எழுந்தருளியுள்ளார். எவர் என்று அறியேன். அவருக்காக இங்கு மலர்ந்துள்ளேன்” என்றாள்.
முலைகள் விம்மித் தணிய ஆறுதல் மூச்சுவிட்டு அமிதை சொன்னாள் “ஆம். அவ்வண்ணமே நானும் உணர்கிறேன். ஆழி வெண்சங்கு ஏந்திய மணிவண்ணனே மானுடனாக எங்கோ பிறந்திருக்கிறான் .திருமகளைக் கொள்ள அலை அமைந்தோன் எழ வேண்டும்.” ருக்மிணி தன் கையில் அணிந்த வளையை மெல்ல உருட்டியபடி விழிப்பீலிகள் சரிய “மிக அருகிலென அவரை உணர்கிறேன் அன்னையே” என்றாள்.
காலடி ஒலிக்க இடைநாழியில் வந்து நின்று அறைக் கதவை ஒலியெழுப்பித் திறந்து நோக்கிய முதியசேடி ஒருத்தி “இளவரசி, தங்களை அழைத்து வரும்படி இளவரசர் ஆணை இட்டிருக்கிறார்” என்றாள். “இளவரசர் வந்துவிட்டாரா?” என்றாள் அமிதை. தழையாத ஆணைக்குரலில் “அவரும் சேதிநாட்டு அரசரும் சதுக்கத்திற்கு வந்துவிட்டனர்” என்ற முதியசேடி சமையப் பெண்ணிடம் “அணி முடிந்து விட்டதா?” என்றாள். அவள் “இன்னும் ஏழு குழல்மணிகள் எஞ்சியுள்ளன” என்றாள். “கூந்தல் நீலமணிகளால் நிறைந்துள்ளது. இதற்கு மேல் என்ன?” என்றாள் முதியசேடி. “எத்தனை விண்மீன் சூடினாலும் இரவின் பரப்பு எஞ்சியிருக்கும்” என்ற சமையப் பெண் பொன்னூசிகளில் கோக்கப்பட்ட நீலமணிகளை நீள் கூந்தலில் செருகி இறுக்கினாள்.
“எனக்கான ஆணை இளவரசியை உடனே கொண்டுசெல்வது. இளவரசரின் சொல்லுக்கு இங்கே மறு சொல் இல்லை” என்ற முதிய சேடி ஆணையிடும் ஒலியில் “எழுக இளவரசி!” என்றாள். அமிதை ருக்மிணியிடம் “ஆம் இளவரசி. இனியும் பிந்துவது முறையல்ல” என்றாள். ருக்மிணி எழுந்ததும் சமையப் பெண்கள் அமர்ந்து பொன்னூல் பின்னிய ஆடை கீழ்மடிப்புகளை சீரமைத்தனர். இரு பெண்கள் அவள் மேலாடையின் பின்மடிப்புகளை இணைத்து பொன்னூசியால் பொருத்தினர். ஒருத்தி அவள் குழலை அலையென பின்னோக்கி நீட்டிவிட்டாள். “செல்வோம்” என்றாள் அமிதை.
முதியசேடி வழிநடத்த ருக்மிணி அரண்மனை முகப்பின் சதுக்கத்தை அடைந்தாள். அங்கே அரசமேடையில் பீஷ்மகரும் அரசியரும் அமர்ந்திருக்க அருகே ருக்மியும் சிசுபாலனும் இருந்தனர். அவள் மேடைமேல் ஏறியதும் அரசி திரும்பி “எத்தனைமுறை உனக்கு தூதனுப்புவது? அங்கு என்னதான் செய்துகொண்டிருந்தாய்?” என்றாள். ருக்மிணி புன்னகையுடன் “அணிகொள்ளுதல் எளிதல்ல அன்னையே” என்றபடி அமர்ந்தாள். பீஷ்மகர் திரும்பி புன்னகையுடன் “பல்லாயிரம் வாய்களும் நாவுகளும் உணவுக்கென ஊறி எழுந்துவிட்டன. நீ வராது உண்டாட்டு தொடங்கலாகாது என்றனர் நிமித்திகர். நூல்முறைப்படி நீ அன்னலட்சுமி அல்லவா?” என்றார். ருக்மிணி புன்னகைத்தாள்.
அமைச்சர் அருகே வந்து தலைதாழ்த்தி “ஆணையிடுக அரசே!” என்றார். பீஷ்மகர் எழுந்து தன் செங்கோலை தூக்கினார். கூட்டம் ஓசையழிந்து விழிகூர்ந்தது. “விதர்ப்பத்தின் குடிகளனைவரையும் என் மூதாதையர் வாழ்த்துக! வரதாவின் கொடை நம் மண்ணில் விளைந்து உணவாகி வந்து நிறைந்துள்ளது. அவள் கருணையை உண்போம். அவள் அருளை குடிப்போம். அவள் மைந்தர் இங்கு மகிழ்ந்திருப்போம்” என்றார். முரசம் முழங்கியது. உடன் பல்லாயிரம் குரல்கள் இணைந்து எழுந்த களிப்போசை கலந்தது.
சதுக்கத்தின் பன்னிரண்டு வாயில்கள் வழியாகவும் நூற்றுக்கணக்கான உணவு வண்டிகள் கூட்டத்தைப் பிளந்தபடி வந்தன. கூட்டம் பிளந்து வழி விட்டு கூவி ஆர்ப்பரித்து மீண்டும் கூடியது. செம்பாலும் வெண்கலத்தாலுமான யானைகள் போன்ற பெருங்கலங்கள் அவ்வண்டிகளில் அசைந்து வந்து நிலைகொண்டன. வரதாவில் இருந்து கரையேற்றப்பட்ட படகுகள் வண்டிகளில் ஏற்றப்பட்டு புரவிகளால் இழுத்துவரப்பட்டன. அவற்றில் இருந்த தொன்னைகளையும், மூங்கில் குவளைகளையும் படை வீரர்கள் அள்ளி கூட்டத்தின்மேல் வீசினர். சிரித்துக் கூவி ஆர்ப்பரித்தபடி மக்கள் அவற்றை தாவிப் பற்றிக் கொண்டனர். ஒருவர் கையில் இருந்து பிறிதொருவர் கைக்கு என குவளைகள் விரிந்து பரந்தன. தொன்னைகளும், குவளைகளுமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறித்தாவி கூவி கைவீசி கொண்டாடினர்.
மேலிருந்து நோக்கிய சிசுபாலன் “இவ்வண்ணம் ஓர் உண்டாட்டு களத்தில் மட்டுமே உண்டென்று நூலில் அறிந்திருக்கிறேன்” என்றான். ருக்மி “ஆம். இங்கு பந்தி அமர்ந்து உண்ணும் பெருவிருந்துகள் பல உண்டு. ஆனால் உண்டாட்டு என்பது கட்டற்றதாக அமைய வேண்டும் என்பதே நெறி. உணவு தெய்வமென பெருகி எழுந்தருளவேண்டும். பெருமலையென உணவு குவிந்திருப்பதை நம் விழிகளால் பார்க்க வேண்டும். அவ்வின்பம் அளிக்கும் கொண்டாட்டம் வேறெதிலும் வருவதில்லை” என்றான். தரையில் விரிக்கப்பட்ட பெரிய ஈச்சம்பாய்கள்மேல் கலத்தில் இருந்த சூடான உணவு பெருங்குவியல்களாக கொட்டப்பட்டது . கிழங்குகளாலும் ஒன்பதுவகை கூலமணிகளாலும் அக்காரமும் உப்பும் இட்டுச் செய்யப்பட்ட அப்பங்கள். பன்னிருவகை அன்னங்கள். பந்தங்களின் ஒளியில் அவற்றில் எழுந்த ஆவி தழலென நடனமிட்டது.
அன்னமலைகளைச் சூழ்ந்து மக்கள் கூச்சலிட்டனர். தோண்டியில் அள்ளி அள்ளி நீட்டப்படும் அன்னத்தை தொன்னைகளில் பெற்று குவித்துக்கொண்டனர். நீண்ட கை கொண்ட அகப்பைகளால் மதுவை அள்ளி அள்ளி குவளைகளில் ஊற்றினர். கைசுட்டி “உண்டாட்டில் சுடப்பட்ட ஊன் மட்டுமே அளிக்கப்படவேண்டும் என்பது நெறி” என்று ருக்மி சொன்னான். “முழுக் கன்றுகளையும் அப்படியே அனலில் சுட்டு எடுக்கும் அடுதிறனாளர்கள் இங்குள்ளனர்.” மூங்கில்கள் நடுவே நான்கு கால்களையும் சேர்த்துக் கட்டிக் கொண்டுவரப்பட்ட சுட்ட களிற்றுக் காளைகள் வெண்கலத்தாலானவை போலிருந்தன. மிளகும் உப்பும் கலந்து பூசப்பட்ட அவை தங்கள் கொழுப்பாலேயே வெந்து உருகிச் சொட்டின. கரி பரப்பி தழலிட்ட அடுப்பின்மேல் அவை வெம்மைமாறாதபடி தொங்கவிடப்பட்டன. ஆடுகளும் காட்டுப்பன்றிகளும் மான்களும் என எங்கும் சுட்ட ஊன் கனிந்த பழங்கள் போலச் சிவந்து தொங்கியது.
முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க முது நிமித்திகர் மேடைமேல் எழுந்து “உண்ணுக! நம் உடல்கள் ஆற்றலுறட்டும். உண்ணுக! நம் மூதாதையர் நிறைவுறட்டும். உண்ணுக! நம் கொடிவழியினர் செழிப்புறட்டும். உண்ணுக! இங்கு நம் தெய்வங்கள் வந்து அவிபெறட்டும். மண்ணை ஆக்கும் வைஸ்வாநரன் மகிழட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!” என்று கூவினார். தங்கள் குலக்குறி பொறிக்கப்பட்ட தடிகளைத் தூக்கி ஆட்டி வெறிக்கூச்சலிட்டபடி குலமூத்தவர்கள் உணவுக்குவையை அணுகி அன்னங்களையும் அப்பங்களையும் அள்ளி மூன்றாகப் பகுத்து ஒரு பகுதியை பின்பக்கம் வீசி இன்னொருபகுதியை முன்பக்கம் வீசி மூன்றாம்பகுதியை தாங்கள் உண்டனர். அவர்கள் கோல்களைத் தூக்கியதும் கரை உடைந்து பெருகிச்செல்லும் வெள்ளம் போல மக்கள் உணவின்மேல் பரவினர்.
படைவீரர்கள் தங்கள் உடைவாளால் கன்றுகளின் ஊனை வெட்டி எடுத்து சிம்மங்கள் போல் உறுமியபடி கவ்வி உண்டனர். ஆட்டுக்கால்களை கையில் பிடித்து கிழித்துண்டனர். குழிகளுக்குள் இறக்கி கல்லிட்டு மூடி மேலே அனல்பரப்பிச் சுடப்பட்ட பன்றிகள் ஊன்நெய் ஊறிச்சொட்ட ஈச்ச இலைப் பொதிகளில் கொண்டுவரப்பட்டன. முழுப்பன்றியையே ஐவராகவும் அறுவராகவும் சேர்ந்து தூக்கிச் சென்று உடைவாளால் துண்டுகளாக்கி உண்டனர். அவற்றின் தொடைகளைத் தூக்கி வீசி வாயால் பிடித்து கூவிச் சிரித்தனர். அப்பங்களை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசினர். மதுவை மாறி மாறி தலையில் ஊற்றிக்கொண்டனர்.
சிசுபாலன் “உண்பதில் விலங்குகள் அடையும் பேருவகை மானுடரிடம் இல்லை என்று எண்ணியிருக்கிறேன். அதை இப்போது கண்டேன்” என்றான். “ஆம். உண்பது என்பது உயிருடனிருப்பதை நாம் கொண்டாடும் தருணம்” என்றான் ருக்மி. விழிதொடும் தொலைவெங்கும் உணவை உடலெங்கும் பூசிய மக்கள் முட்டிமோதித் திளைத்தனர். உணவில் சறுக்கி விழுந்து புரண்டு எழுந்தனர். உணவே உயிர்கொண்டு எழுந்து கொந்தளித்தது.
வண்டிகள் மேலும் மேலும் அப்பங்களையும் அன்னங்களையும் கொண்டுவந்து அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தன. “விதவிதமான சுவைகள் இனியவை என்பதில் ஐயமில்லை. ஆனால் உணவின் மிகை என்பதுதான் இங்குள்ள பெரும் கேளிக்கை. உண்மையில் அதுவே உணவின்பத்தின் உச்சம்” என்றான் ருக்மி. சிசுபாலன் “கூடி உண்பது என்பதும் அல்லவா?” என்றான்.
மேடை ஏறி வந்த அமைச்சர் “அரசே, தாங்களும் அரசியரும் உண்டாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று குலமூத்தார் அழைக்கின்றனர்” என்றார். “ஆம். அதுவே தொல்குடி நெறி” என்றபடி பீஷ்மகர் எழ சிசுபாலன் “மக்களுடன் இணைந்து உண்பதா?” என்றான். பீஷ்மகர் “அன்னம் என்னும் தெய்வத்தின்முன் மானுடர் அனைவரும் வயிறு மட்டுமே” என்றார்.
மேடையில் இருந்த அரசகுடியினர் அனைவரும் படி இறங்கி அந்த உணவுக்கொந்தளிப்பில் உட்புகுந்தனர். அக்கணமே அவர்கள்மேல் அன்னமும் ஊனும் நெய்யும் ஒன்றாகிப் பொழிந்தன. உணவுக்குவியல்களை அணுகுவதற்குள் அவர்கள் உடலெங்கும் உணவே வழிந்தது. “எங்கள் மூதாதையரை உண்க அரசே!” என்றபடி பீஷ்மகர் அன்னத்தை தோண்டியால் அள்ளி தொன்னையில் இட்டு சிசுபாலனுக்கு அளித்தார். சிசுபாலன் உரக்கச் சிரித்தபடி “அரசே, இவ்வேளையில் அன்னம் உண்பவன் மூடன்” என்றான். “நான் விழைவது மூதாதையரின் செங்குருதியை.” ருக்மி “ஆம், இதோ. கொள்ளுங்கள் இந்த வெண்ணிறக் கள்ளை. தெளிந்த விழிநீர்” என்றான்.
உடலே நாவென மாறி உண்டனர். மணிமுடியும் செங்கோலும் விலக்கி வெற்றுடலுடன் நின்று விலங்கென உண்டார் அரசர். நாணிழந்து உடல்மறந்து உண்டனர் அரசியர். உணவு தன்னை அலையென எழுந்து சூழ்வதை ருக்மிணி அறிந்தாள். உணவுக்குள் மூழ்கி மூச்சுத்திணறினாள். சிரித்தபடி ஓடி வந்த வீரர்கள் மதுக்கிண்ணத்தை ருக்மிணி மீது வீசினர். அவள் நகைத்தபடி விலகுவதற்குள் தொன்னை நிறைந்த அன்னத்தை அவள் மேல் கொட்டினர். அன்னமும் மதுவும் வழிய விலகிய அவள் கால்வழுக்கி அவற்றின்மேல் விழுந்தாள்.
உண்டு களியாடிக் களைத்தவர்கள் தள்ளாடி அமர்ந்துகொள்ள அவர்கள் மேல் பிறர் தள்ளாடி விழ இறுதி விழைவைத் திரட்டி வயிற்றை உந்தி மேலெழுந்து மீண்டும் உணவின் மீது பாய்ந்தனர். “இங்கு உண்ணும் உணவைவிட வீணடிக்கும் உணவு மிகை” என்றான் சிசுபாலன். “உணவு என்பது ஒரு போதும் வீணடிக்கப்படுவது அல்ல. மானுடர் உண்ணாத உணவை பிற உயிரினங்கள் உண்ணும்” என்றார் சோற்றுக்குவையென நின்ற முகுந்தர்.
அத்தனை உண்ணமுடியும் என சிசுபாலன் அறிந்திருக்கவில்லை. கைகளும் கால்களும் ஒழிந்த பையென்றாக அங்கெல்லாம் உணவு சென்று நிறைவதுபோல. உடலின் மையமே வயிறென்றானதுபோல. “இளவரசே, எங்காவது சரிந்து விழாமல் இனி என்னால் மீண்டும் உண்ண முடியாது” என்றான் ருக்மியிடம். “எங்காவது என்ன? வருக! இங்கேயே படுத்துக் கொள்வோம்” என்றார் பீஷ்மகர். “உணவில் உறங்குவதுபோல் களிமயக்கு பிறிதில்லை.”
அமைச்சர் முகுந்தர் அருகே வந்து “அரசே, தாங்கள் அறை மீண்டு உடல்கழுவி சென்று ஓய்வெடுக்கலாம்” என்றார். பீஷ்மகர் “விலகிச் செல் மூடா… உணவுக்கு நடுவே என்ன வீண் சொல்?” என்றார். உடைவாளால் கன்றின் தொடை ஒன்றை வெட்டி பெரிய ஊன் துண்டு ஒன்றை கடித்தபடி “இது களம். இங்கு வெற்றி என்பது ஊன் நிறைவன்றி பிறிதல்ல. விலகு!” என்றார். அரசி சுஷமை ருக்மிணியின் கைபற்றி “வாடி செல்வோம்” என்றாள். ருக்மிணி அவளை அறியாதவள் போல நோக்கி “என்ன? யார்?” என்றாள்.
அமிதை அவள் தோள்பற்றி “போதும், அரண்மனைக்குச் செல்லலாம் இளவரசி” என்றாள். ருக்மிணி சிரித்தபடி வழுக்கி கீழே அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் மீது விழ அவர் “உணவு! வானில் இருந்து விழுகிறது உணவு!” என்று அவளை பிடித்தார். அருகிருந்த இளைஞன் சிரித்தபடி கைசுட்டி களிமயக்கில் ஏதோ சொல்லவந்து மீண்டும் சிரித்து விழிசரிய உறங்கலானான். அமிதை அவள் தோள்களைப் பற்றி தள்ளிக்கொண்டு சென்று மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய வாயிலின் ஊடாக அரண்மனை இடைநாழியை அடைந்தாள். ருக்மிணி “நான் இன்னும் உண்ணவில்லை…” என்றாள். “போதும்” என்றாள் அமிதை.
இடைநாழி முழுக்க உணவும் உணவுண்ட பெண்டிரும் மக்களும் குவிந்து கிடந்தனர். வீரர், மக்கள், சிறுவர், முதியவர், பெண்கள், ஆண்களென வேறுபாடற்று எங்கும் மனித உடலே திளைத்துக் கொண்டிருந்தது. இடைநாழிக்கப்பால் கிடந்த வாயிலை நோக்கி அவள் செல்ல அமிதை “உண்டாட்டு முடிகையில் அனைத்தும் உறுதியாகிவிட்டிருக்கும் இளவரசி” என்றாள். “அரசர் இன்று சொல்லளித்து விடுவார்.”
ருக்மிணி படிகளில் கால் வைக்கையில் உடலிலிருந்து வழிந்த ஊன்நெய்யில் வழுக்கி விழப்போனாள். அவளுடைய இடையை வளைத்துப் பற்றி விழாமல் காத்து நிறுத்திய அமிதை “மெல்ல காலெடுத்து வையுங்கள் இளவரசி. எங்கும் ஊன்நெய்” என்றாள். படிகளின் அடியில் அமர்ந்திருந்த தலைப்பாகை அவிழ்ந்துகிடந்த முதியசூதர் ஒருவர் விசும்புவதுபோல ஏதோ சொன்னார். கடந்து சென்ற ருக்மிணி பிடரியில் தொடப்பட்டவள் போல உடல் அதிர நின்றாள். அவர் “விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம்” என்று கள்மயக்கில் குழைந்த குரலில் பாடினார்.
ருக்மிணி முன்னால் குனிந்து “யார்? யார் நீர்?” என்றாள். சூதர் அவளை நோக்காமல் கைகளை ஆட்டியபடி முற்றிலும் தன்னை இழந்து ஓங்கி பாடினார் “விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம்! தண்நீலம் தழல்நீலம் தானாகித் தனித்த முழுநீலம்!” மண்டியிட்டு அவர் முன் அமர்ந்து “சூதரே, என்ன பாட்டு இது?” என்றாள். அவர் திரும்பி “என்ன?” என்றார். “எதைப்பற்றிய பாடல் இது?”
“மதுநிறைந்த மலர்வண்ணன் பற்றிய பாடல். துவாரகை ஆளும் இளையோன். கடலென விரிந்த கரியோன்.” “யார்?” என்று நெஞ்சு ஒலிக்க அவள் கேட்டாள். “நான் இப்பாடலை மட்டும் அறிவேன்” என்றார் சூதர். “என் ஊர் முக்கடல் முயங்கும் முனைநிலம். அங்கே ஒற்றைக்கால் ஊன்றி மலையுச்சியில் நீள்தவமியற்றும் நீலக்கன்னி என் தெய்வம். அவள் விழிமுன் திசைகளென விரிந்த விரிநீலத்தை என் குலமூதாதையர் பாடினர். அவர் கண்ட நீலம் இங்கு கடல்நகரில் மலர்ந்துள்ளது என்று வடநாட்டு சூதன் ஒருவன் சொன்னான். அவன் சொற்களை சரடு என பற்றி இப்பெருவலையின் பல்லாயிரம் கண்ணிகளை கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.”
ருக்மிணி “அவன் எத்தகையவன்? அவன் வடிவம் என்ன? இயல்புதான் என்ன?” என்றாள். “இளையவளே, இப்போது இங்கு அவனைக் கண்டேன்” என்றார் சூதர். “எங்கு?” என்றாள் ருக்மிணி. அவர் சாளரத்தைச் சுட்டி “வெளியே நோக்குக! அறுசுவையும் ஐம்புலன்களும் நான்குள்ளமும் அமைந்த ஒன்றும் அதுவென்றாகிக் கொந்தளிக்கும். இந்த அன்னப் பேரலையில் எழுவது அவன் தோற்றம். தெளிந்த பெருநீலம்” என்றார். இரு கைகளையும் சாளர விளிம்பில் ஊன்றி வெளியே நோக்கிய ருக்மிணி வரதாவில் அலைச் சுழிப்பு போல மானுடத்தை கண்முன் கண்டாள்.