இந்திரநீலம் - 5
பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 5
துவாரகையின் பெருவாயில் தொலைவில் தெரிந்ததுமே அமரமுனையில் நின்றிருந்த மாலுமி உரக்க குரலெழுப்பினான். மரக்கலத்தில் இருந்தவர்கள் அனைவரும் அறைகளிலிருந்தும் பாய்மடிப்புகளுக்கு அப்பாலிருந்தும் அடித்தட்டின் களஞ்சியங்களிலிருந்தும் ஈசல்களென கிளம்பி கலத்தட்டுக்கு வந்தனர். மழைக்காலம் முடிந்து தெளிந்த காலைவானம் தேனிறமாக விரிந்திருந்தது. கிழக்கே கதிர் எழவில்லையென்றாலும் வான்திரவவெளிக்குள் கடலாழத்துச் சூரியனின் ஒளி கசிந்துபரவியிருந்தது. அலையற்ற கடலின் நீலப்பளிங்கு முகடுக்கு மேல் பொன்னிறமான சிறிய கணையாழி. நோக்கி நின்றிருக்கவே எழுந்து வந்த பொன்னொளியில் அது மேலும் மேலும் சுடர்விடத்தொடங்கியது.
“யானைமேல் அம்பாரி போல” என்று யாரோ சொன்னார். “அது ஒரு கைப்பிடி. அதைப்பற்றி அந்த நகரை தெய்வங்கள் விண்ணுக்கு எடுத்து காலையில் திரும்ப வைக்கின்றன” என்று வேறெவரோ சொன்னார். மெல்லிய சிரிப்பொலி. “அண்ணா, இவனுடைய கற்பனைத்திறனைப்பார்க்கையில் இவன் தாய்க்கு சூதர்களுடன் அணுக்கமிருப்பது தெரிகிறது” என்றது ஒரு குரல். “ஓசையிடாதே. அப்பால் இளவரசர் நின்றிருக்கிறார்.” மேலும் பதிந்த குரலில் ஏதோ கூற்று. அடக்கிப்பிடித்த சிரிப்புகள். கடற்காற்று கரையில் மோதி திரும்பிவந்து சுழல பாய்கள் உப்புநீர்த்துளி சிதற அடித்துக்கொண்டன.
கலக்காரன் அமரமுனையில் நின்று கைகளை காட்ட கலமுகட்டில் நின்றிருந்த கலத்தலைவன் தன் இடையிலிருந்த சிறிய கொம்பை எடுத்து மயிலகவல் போல் ஒலியெழுப்பினான். மூன்று இடங்களில் கலத்தவர் அதை மாற்றொலித்தனர். பாய்களை இழுத்த வடங்கள் கொக்கிகளிலிருந்து விடுவிக்கப்படும் முனகல் ஓசைகள் எழுந்தன. பாய்கள் புகைபடிவதுபோல மெல்ல இறங்கி கலமுற்றத்தில் வந்தணைந்தன. திருஷ்டத்யும்னன் விழியிளக்காமல் அந்தக் கணையாழி வளையலாக ஆவதை நோக்கிக்கொண்டிருந்தான். அதனடியில் அதை ஏந்திய பெரும்பாறைமுகடு எழுந்துவந்தது. அதன் வலப்பக்கமாக சிறிய சித்திரக் களித்தேர் போல நகரம் தெரிந்தது. நீர்விளிம்பு இறங்கி இறங்கிச்செல்ல நகரத்தின் கொடிகள் படபடக்கும் மாளிகைமுகடுகள் தெரிந்தன.
“மல்லாந்து படுத்த அழகிகளின் முலைக்கூட்டம் என்று அவற்றை ஒரு சூதன் ஒருமுறை பாடினான்” என்றது குரல். கலம் கரையணைவிக்கும் அலுவலர்கள் அன்றி பிறருக்கு அப்போது பணியென ஏதுமில்லை. அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தனர். நகரின் தெருக்கள் தெரியத்தொடங்கின. புலரியிலேயே துறைமுகப்பிலிருந்து நகரை வளைத்துச்சென்ற சாலைகளில் கருமணிமாலைகளைப்போல பொதிவண்டிகள் சென்றன. துறைமேடைகள் நீருக்குள் இருந்து எழுந்து வந்தன. முகப்பில் எட்டு பெரும் பீதர்கலங்கள் நின்றிருந்தன. அவற்றின் மேலே உடல்வளைத்த சிங்கநாகம் நா பறக்க உறுவிழிகளுடன் துடித்த செந்நிறமான கொடிகள் பறந்தன.
சிறிய கலங்கள் நூற்றுக்குமேல் நின்றிருந்தன. திருவிடத்து நாவாய்கள் மூன்றும் தமிழ்நிலத்துநாவாய்கள் எட்டும் கலிங்கநாவாய் ஆறும் தெரிந்தன. யவனநாவாய்களும் சோனகநாவாய்களும் துறைமேடையின் மறுபக்கம் நின்றிருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டான். திசைப்பாய் தவிர பிற பாய்கள் கீழிறங்கின. அவற்றை கம்பங்களில் சுருட்டிக்கட்டிய மாலுமிகள் உரக்க ஓசையிட்டனர். அலைகளில் பாய்ந்தேறி விழுந்திறங்கியபடி அவர்களின் கலம் துறைமுகப்பை நோக்கி சென்றது. அங்கே நின்றிருந்த பெரிய பீதர்கலம் அவர்களை நோக்கி அசைந்தாடியபடி வந்தது. நோக்கி நிற்கவே அதன் உடலின் கரிய மரப்பரப்பு பெரிய கோட்டைபோல மாறி திசையாகியது. இருளாகி விழிகளை மூடியது. அவன் பெருமூச்சுடன் திரும்பி தன் அறைக்குள் சென்றான்.
அவன் ஆடைமாற்றி கலமுகப்புக்கு வந்தபோது அவன் கலம் துறைமேடையை அணுகி அங்கே நின்றிருந்த பன்னிரண்டு சிறிய கலங்களுக்குப்பின்னால் நின்றிருந்தது. அவன் திரும்பி கலக்காரனிடம் “சிறியபடகுகளில்தான் கரைசேரவேண்டும் என நினைக்கிறேன்…” என்றான். ”இங்கே கரைசேர வடக்கடிகைகள் உள்ளன இளவரசே” என்றான் அவன். அதற்குள் திருஷ்டத்யும்னன் அதை கண்டுவிட்டான். துறைமேடையில் நின்றிருந்த பெரிய துலாக்கால் ஒன்று மெல்ல குனிந்து ஒரு கலத்தை நோக்கி வடத்தில் கட்டப்பட்ட மூங்கில்கடிகை ஒன்றை இறக்கியது. அதில் பயணிகள் ஏறிக்கொள்ள அப்படியே தூக்கிச் சுழற்றி கரைக்கு கொண்டு சென்று இறக்கியது. திருஷ்டத்யும்னன் “யானை தூக்கி இறக்குவதுபோல” என்று புன்னகையுடன் சொன்னான்.
வடக்கடிகை அவன் கலத்தில் இறங்கியதும் சிறுவர்களுக்குரிய உவகையை அடைந்தான். சிரித்துக்கொண்டே இருப்பதை கலக்காரனிடம் பேசமுனைந்தபோது உணர்ந்து முகத்தை இறுக்கியபடி “பரிசில்களை உச்சிக்குள் அரண்மனைக்கு கொண்டுவந்து விடுங்கள்” என்றபின் ஏறிக்கொண்டான். கடிகை ஒருமுறை அதிர்ந்தபோது அடிவயிற்றில் அச்சம் எழுந்தது. பின்னர் அவன் மெல்ல வானிலெழுந்தான். சிறிய கலங்கள் கீழே சென்றன. பின்னர் பீதர்களின் கலத்தின் பாய்கள் மட்டும் இணையாக மேலே வந்துகொண்டிருந்தன. வானிலிருந்து கீழே நோக்கியபோது மீன்கூட்டங்களாக நாவாய்கள் மொய்த்த துவாரகையின் துறைமுகப்பு ஒட்டுமொத்தமாக தெரிந்தது.
விண்ணில் மிதந்து சுழன்று மறுபக்கம் சென்றபோது ஒன்றுடன் ஒன்று பின்னி வலைபோல விரிந்த துவாரகையின் தெருக்கள் தெரிந்தன. பூக்குலைகளும் தளிர்க்கிளைகளுமாக புதுமழைநீர் பெருகி வழிவதுபோல அவற்றினூடாக வண்ணப்பட்டாடைகளுடன் நிறைந்து சென்று கொண்டிருந்த பெண்களின் நிரையை கண்டான். அவர்கள் எழுப்பிய இசையை அத்தனை ஓசைகளுக்கு நடுவிலும் தனித்து கேட்கமுடிந்தது.
நிலத்தை நோக்கி இறங்கி மண்ணைத் தொடாமல் ஆடி நின்ற கடிகையை நோக்கி வந்த இரு வீரர்கள் அதைப்பற்றி “வணங்குகிறேன் இளவரசே” என்றனர். அவன் சிரித்துக்கொண்டே இறங்கி “பறந்து இறங்கியிருக்கிறேன், கந்தர்வர்களைப்போல” என்றான். வீரர்தலைவன் “கந்தர்வர்கள் இன்று துவாரகையில் வந்து குழுமுவார்கள் இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “ஏதேனும் விழவா?” என்றான். “இன்று எங்கள் அரசரின் பிறந்தநாள். ஷ்ராவண மாதம் எட்டாம் கருநிலவு. ரோகிணிமீனுக்குரிய நாள்” என்றான். “அதுதான் நகரில் பெண்களின் நிரையா?” என்றான். “ஆம், இன்றுமுழுக்க பெண்கள் எவரும் இல்லத்தில் இருக்கப்போவதில்லை…” திருஷ்டத்யும்னன் சிரித்தபடி “உகந்த நாளில்தான் வந்திருக்கிறேன்” என்றான்.
உலோகமும் மரமும் மானுட உடல்களும் சேர்ந்து ஒலித்து சூழ்ந்திருந்த துறைமேடையில் வெண்கலக்கீல்களில் ஒலியின்றி நகரும் பெரிய மரத்தட்டு வண்டிகளில் துலாக்கள் பொதிகளை ஏற்றிக்கொண்டிருந்தன. அவற்றை வலுவான வெண்ணிறக் காளைகள் இழுத்துச்சென்றன. நான்கடுக்குத் துறைமேடையின் கீழே இருந்த மூன்று அடுக்குகளிலும் நகரிலிருந்து வந்த சாலைகள் நேரடியாகவே சென்று மரக்கலங்களுக்குள் நுழைந்தன அங்கே வண்டிகள் செல்லும் ஒலி எழுந்து தடித்த கற்தூண்களை வீணைக்கம்பிகள் என அதிரச்செய்துகொண்டிருந்தது.
அவனை எதிர்கொள்ள நூற்றுவர்தலைவன் தன் அலுவல்மேடையிலிருந்து இறங்கி வந்தான். தன்னை நாகபாகு என அறிமுகம் செய்துகொண்டு தலைவணங்கி “பாஞ்சால இளவரசரை வணங்குகிறேன். துவாரகையில் தங்கள் வரவு நலம்நிறைக்கட்டும்” என முகமன் சொல்லி வாழ்த்தினான். திருஷ்டத்யும்னன் ”துவாரகைக்கு வரும் நல்வாய்ப்புக்காக நானும் மகிழ்கிறேன்” என்றபடி விழிகளால் தேடினான். நூற்றுக்குடையோனுக்குப்பின்னால் எட்டு புரவிவீரர்கள் நிற்க ஒருவன் வெண்புரவியுடன் அணுகிவந்தான். அழகிய பெண்குதிரை அவனை நோக்கி மூக்கை நீட்டி ஆவலுடன் வாசம் பிடித்து பர்ர் என்று தும்மியது. தலையைக்குனித்து பிடரியை சிலிர்த்துக்கொண்டு தரையை முன்கால் குளம்பால் தட்டியது.
அவனுடைய வருகையை முன்னரே முறைப்படி அறிவித்திருந்தும்கூட அரசகுடியினர் எவரும் வந்து வரவேற்கவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான். பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசன் அல்ல அவன். அஸ்தினபுரியின் முதன்மைத்தூதனும் அல்ல. அவனை நூற்றுவன் வரவேற்பதே முறைமை. ஆயினும் அவன் எங்கும் திரௌபதியின் உடன்பிறந்தான் என்றே எண்ணப்பட்டான். அவ்வாறு எதிர்பார்ப்பதன் சிறுமையை எண்ணி சலித்து விலகியபோதும் மீண்டும் உள்ளம் அதிலேயே சென்றுகொண்டிருந்தது. தன் உள்ளத்தை முகத்தில் காட்டாமலிருக்கும் பொருட்டு வாயை நீட்டி புன்னகைபோல ஒன்றை தேக்கிக்கொண்டான்.
நூற்றுக்குடையவன் வீரனிடமிருந்து கடிவாளத்தை வாங்கி அவனிடம் அளித்து “பாஞ்சாலரே, தாங்கள் அரண்மனைக்குச் செல்ல அகம்படியாக எட்டு புரவிவீரர்களையும் கொம்பூதியையும் அனுப்பும்படி ஆணை” என்றான். திருஷ்டத்யும்னன் சினத்தால் சிவந்த முகத்துடன் “தேவையில்லை” என்றபின் தன்னை அடக்கி “வரட்டும்” என்றான். பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்று புரவியின் கடிவாளத்தை வாங்கினான். அது திரும்பி அவனை நக்க தன் கத்தரிப்பூ நிற நாவை நீட்டியது. அவன் அதன் வெண்கழுத்தில் வருடிவிட்டு சேணத்தில் கால்வைத்து ஏறிக்கொண்டான். அகம்படியர்கள் புரவிகளில் ஏறிக்கொள்ள கொம்பூதி தன் புரவியின் சேணத்தில் தொங்கிய கொம்பை எடுத்து மும்முறை ஊதினான்.
கொம்பூதி முதலில் செல்ல சீர்நடையில் திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். செதுக்குகல் பாவப்பட்ட சாலை வளைந்து மேலேறி குன்றின்மேலிருந்த நகரம் நோக்கி சென்றபோதுதான் அந்தக் கணையாழி மேலேறிமறைந்துவிட்டதை திருஷ்டத்யும்னன் எண்ணினான். அது எங்கோ வானில் இருக்கிறது. வானத்தின் காதில் தொங்கவிடப்பட்ட குண்டலம் என்று அப்போது தோன்றியது. இந்நகரத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. ஒரு நகரத்தின் தலைமேல் அப்படி ஒரு வாயிலை அமைக்க எவருக்குத் தோன்றியது? அந்த வாயிலினூடாக இங்கு வந்திறங்கப்போவது யார்? யாதவர்களின் தெய்வங்கள் அனைத்தும் மண்ணில் பெரும்புல்வெளிகளில் வாழ்பவை. மூதன்னையர், குலமூதாதையர், ஆகாக்கும் மலைத்தெய்வங்கள், நீர்காக்கும் சோலைத்தெய்வங்கள்…
எதிரே புரவியில் ஒருவன் வருவதை கண்டான். அந்தப்புரவியின் நடையே அவனை தனித்துக்காட்டியது. சிலகணங்களிலேயே அவனை அடையாளம் கண்டுகொண்டான். இளைய யாதவனின் தோழன். அவன் பெயர் என்ன என்று நினைவுக்குள் துழாவினான். அவன் முகம் தெளிவடைந்து வந்தது. மேலே வெண்முகில்கள் போல எழுந்து எழுந்து சென்ற குவைமாட மாளிகைகளின் நிழல் சாலையில் சரிந்துகிடந்தது. கீழே சென்ற வண்டிகளிலிருந்து உதிர்ந்த தானியங்களை பொறுக்கும் மணிப்புறாக்கள் மேலே வந்து அந்தச்சாலையின் கைப்பிடிகள் முழுக்க செறிந்து அமர்ந்திருந்தன. அவனுடைய புரவியின் குளம்போசையில் மெல்ல எழுந்து இடம்மாறி அமர்ந்தன.
அவன் தந்தையின் பெயர் சத்யகர். அவனை சாத்யகி என்றழைக்கிறார்கள். திருஷ்டத்யும்னன் அவன் அருகே வரவர அவனை வெறுக்கத்தொடங்கினான். அவன் அணுகியதும் உடலை அதிரச்செய்யும் அளவுக்கு அவ்வெறுப்பு உச்சம் கொண்டது. ஓரிருசொற்கள் முகமனாகச் சொல்லி அவன் கடந்துபோனால்போதும் என்று நெஞ்சு ஏங்கியது. அவனிடம் பேசினால் அவ்வெறுப்பு எவ்வழியிலோ வெளிப்பட்டுவிடும். அவனை ஏன் வெறுக்கிறேன்? அவன் அருகே வந்து கடிவாளத்தைப்பற்றி புரவியைத் திருப்பி நின்றபோது அது தெரிந்தது. அவன் உடல் இளமையின் வலிமையுடன் இருந்தது. வலிமையான எந்த உடலும் தன்னுள் கடும் சினத்தையே மூட்டுகின்றது.
சாத்யகி “வணங்குகிறேன் பாஞ்சாலரே. துவாரகைக்கு தாங்கள் வருவது யாதவர்களுக்கு பெருமை” என்றான். “துவாரகையை காணும் பேறு எனக்கும் அமைந்தது” என்று கண்களை திருப்பிக்கொண்டு திருஷ்டத்யும்னன் சொன்னான். “தங்களை நானே நேரில் அழைத்துவரவேண்டும் என்று அரசரின் ஆணை” என்றான் சாத்யகி. “யார்?” என்று திருஷ்டத்யும்னன் அறியாமல் கேட்டுவிட்டான். “இளைய யாதவர். நீங்கள் இங்கே அரசத்தூதராக உணரக்கூடாது என்றும் நீங்கள் இந்நகரில் எதன்பொருட்டு வந்திருந்தாலும் அத்தூது வெற்றியடைந்துவிட்டது என்றும் சொன்னார். உங்களை முறைமைப்படி நான் வரவேற்கலாகாது என்றும் நீங்கள் நகர்நுழைந்தபின்னர் வழியில் சந்தித்து மதுக்கடைகளுக்கோ நடனக்கூடத்திற்கோ அழைத்துச்செல்லும்படி ஆணை.”
ஒருகணம் திகைத்தபின் திருஷ்டத்யும்னன் சிரித்துவிட்டான். “என்ன இது? எனக்கு புரியவில்லை” என்றான். “நீங்கள் ஓர் இளைஞனாக உணரவேண்டும் என்கிறார்” என்று சாத்யகியும் சிரித்தான். திருஷ்டத்யும்னன் “இத்தனை பெரிய அகம்படியுடன் எவரும் நடனக்கூடத்திற்கு செல்வதில்லை” என்றான். “திருப்பி அனுப்பிவிடுவோம்” என்று சொன்ன சாத்யகி திரும்பி கொம்பூதியிடம் திரும்பிச்செல்லும்படி ஆணையிட்டான். அவர்கள் தயங்கி ஒருவரை ஒருவர் நோக்கியபின் நின்றனர். “பாஞ்சாலரே, உங்கள் புரவியை ஒரு முறைகூட கடிவாளம்பற்றி இழுக்காமல் முழுவிரைவில் மேலே நகர்வரைக்கும் செல்லமுடியுமா?” என்றான்.
திருஷ்டத்யும்னன் மேலே பார்த்துவிட்டு “பன்னிரு சுற்றுகள் உள்ளன. வழியில் மாளிகைகள்… ஒரு கடைவீதிகூட இருப்பதாக தோன்றுகிறது…” சாத்யகி “ஆம், மக்கள் நெரிசல் உள்ள பகுதி… ஆனால் கடிவாளத்தை இழுக்கலாகாது” என்றான். திருஷ்டத்யும்னன் தன் உடல்நிலையைப்பற்றித்தான் முதலில் நினைத்தான். ஆனால் தன் உடல் நோய்க்கோலத்தில் இருப்பதைக்கண்டும் சாத்யகி அதை அறைகூவியது அவனுக்கு நிறைவளித்தது. “செல்வோம்” என்றான். சாத்யகி சிரித்தபடி குதிரையை குதிமுள்ளால் தூண்ட அது முன்னங்கால் தூக்கி கனைத்தபடி குளம்புகள் தடதடக்க பாய்ந்தோடியது. திருஷ்டத்யும்னனின் உடலெங்கும் அச்சம் குளிராக நரம்பதிர்வாக ஓடிச்சென்றது. மறுகணமே அதை வென்று குதிமுள்ளால் புரவியை செலுத்தினான். இளமையான பெண்புரவி. ஒருமுறைகூட குதிமுள்பட்டிராதது என அது திடுக்கிட்டு நின்று உடல்சிலிர்த்ததிலிருந்து தெரிந்தது. பின்னர் கனைத்தபடி அது கொக்கு எழுவதுபோல பின்னங்கால்களில் எழுந்து முன்னால் பாய்ந்தது.
சிலகணங்களில் அவன் பறவையைப்போல காற்றில் சென்றுகொண்டிருந்தான். கட்டடங்களும் விளக்குத் தூண்களும் மரங்களும் பின்னால் பாய்ந்துசென்றன. குளம்படி அவன் எண்ணங்களின் தாளமாக இருந்தது. ஆனால் அந்த விரைவு தன் சித்தத்தை கூர்மையாக்கிவிட்டிருப்பதை உணர்ந்தான். ஒவ்வொரு புறாவையும் அவற்றின் சிறகுகளையும் தனித்தனியாக பார்க்கமுடிந்தது. எதிரே வந்த ஒவ்வொரு விழியையும் சந்தித்து அவர்களின் எண்ணங்களை உணரமுடிந்தது. முழுவிரைவில் கடிவாளத்தை ஒருமுறைகூட இழுத்து புரவியை நிறுத்தாமல் வளைந்தும் தாவியும் முன்னால்சென்றான். நாய்களை குறுக்கே சென்ற பூனையை எதிரே வந்த குதிரைகளை அத்திரிகளை பல்லக்குகளை சுமைதூக்கிகளை சிறுவணிகர்களை…
ஒரு கட்டத்தில் அது மிக எளிதான ஒன்றாக ஆகியது. ஒன்றையுமே அவன் செய்யவேண்டியிருக்கவில்லை. கண்கள் பார்த்து கைகால்கள் இயற்றி உடல் முன்னால்சென்றுகொண்டிருக்க சித்தம் ஒவ்வொரு காட்சியையும் பல்லாயிரம் மடங்கு நுட்பத்துடன் அள்ளி அள்ளி உள்ளே அடுக்கிக்கொண்டிருந்தது. கொடிகள் பறந்த அங்காடியின் காலைக்கூட்டத்தின் நடுவே கணம்தோறும் மாறிக்கொண்டிருந்த இடைவெளியினூடாக வால்சுழற்றி மூச்சிரைத்து தடதடத்துச் சென்றான். விழிகளை நோக்கி அவர்கள் எத்திசையில் விலகுவார்கள் என்று கணித்து அதற்கு எதிர்திசையில் ஒதுங்கி பாய்ந்தான். சாலையில் எங்கே வளைவு வரும் எங்கே ஓடைவரும் என்றுகூட முன்னரே அறிந்திருந்தது சித்தம். விழிகள் உடலில் இருந்து இருபறவைகளாக எழுந்து குதிரைக்கு முன் நெடுந்தொலைவில் பறந்துகொண்டிருந்தது. உடலே செவியாகி முரசுத்தோல்போல அத்தனை ஒலிகளையும் வாங்கிக்கொண்டிருந்தது.
பன்னிரண்டாவது சுற்றில் நகரத்தின் மையப்பெருஞ்சாலையை அடைந்ததும் சாத்யகி திரும்பி குதிரையை நிறுத்திவிட்டு வெண்பற்கள் ஒளிவிட சிரித்தான். “வந்துவிட்டோம் இளவரசே” என்றான். மூச்சிரைக்க புரவியை இழுத்து விரைவழியச்செய்து அருகணைந்து வளைத்து நிறுத்திய திருஷ்டத்யும்னன் “நான் ஒருமுறைகூட இழுக்கவில்லை…” என்றான். திரும்பி ஆழத்தில் சுருண்டிறங்கிய பாதைச்சுருளை நோக்கியபோது நெஞ்சு நடுங்கியது. “நம்ப முடியவில்லை” என்றான். “இந்நகரில் சிலரே இப்படி வரமுடியும்…” என்றான் சாத்யகி. “புரவியின் உடலும் நம் உடலும் ஒன்றாகவேண்டும்… புரவியின் கண்களும் நமக்கு வாய்க்கும்.” திருஷ்டத்யும்னன் வியப்புடன் அவன் பார்த்த அத்தனை காட்சிகளும் புரவியின் கண்களின் உயரத்தில் இருந்ததை எண்ணிக்கொண்டான்.
மீண்டும் ஆழத்துப்பாதையை நோக்கி “ஆனால் இது ஒரு நச்சுவிளையாட்டு. ஒரு சிறு எதிரீடு நிகழ்ந்திருந்தால்கூட புரவியின் கால்கள் ஒடிந்திருக்கும். இறப்புதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, வீரனுக்கு இறப்பு அருகே இல்லாத உவகை ஒன்று உண்டா என்ன?” என்ற சாத்யகி “நாம் நடனக்கூடம் செல்வோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “அதற்கு முன் மது” என்றான். சாத்யகி “இன்று இந்நகரில் மதுவுக்கு எங்கும் செல்லவேண்டியதில்லை. நகரத்தெருக்களெங்கும் மது கிடைக்கும்” என்றான். “இங்கே அயல்வணிகர்கள் நகர்முழுக்க மது அளிப்பார்கள். ஆணும்பெண்ணும் மதுவுண்ட மயக்கில்தான் இருப்பபார்கள்.” திருஷ்டத்யும்னன் “இந்திரவிழாவின்போது மட்டும்தான் பாஞ்சாலத்தில் மது நுரைக்கும்” என்றான். “யாதவபுரிகளில் இந்திரவிழவு இல்லை. எங்கள் இந்திரன் இளையவரே” என்றான் சாத்யகி.
அவர்கள் நகரத்தெருக்கள் வழியாக புரவியில் மெல்ல சென்றனர். தெருவெங்கும் இரு புறங்களையும் நெருக்கியபடி சென்ற மக்களின் ஆடைகளால் வண்ணம் கலந்து கொந்தளித்தது. அத்தனை முகங்களும் சிரித்துக்கொண்டிருக்க ஒவ்வொருமுகத்தையும் தனியாகப்பார்க்கமுடியாமல் தவித்தலைந்த நோக்கில் மொத்த தெருவே நகைமுகம் கொண்டிருப்பதுபோல தோன்றியது. சிரித்தபடி நான்கு இளம்பெண்கள் ஓடிவர வண்ணப்பட்டு சுற்றிய களிக்கோலால் அவர்களை அடிக்கத் துரத்தியபடி நாலைந்துபெண்கள் வந்தனர். முதலில் வந்த பெண் திருஷ்டத்யும்னனின் குதிரையில் முட்டிக்கொண்டு அவன் இடக்காலைப்பற்றி நின்று சிரித்தபடியே குதிரைக்குப்பின்னால் சென்று ஒளிய அவளை துரத்திவந்த இருவரும் அவன் காலைப்பிடித்தபடி அவளை எட்டிப்பிடிக்க முயன்றனர். அவள் கூவிச்சிரித்தபடி மறுபக்கம் ஓடி சாத்யகியின் காலைப்பிடித்துக்கொண்டு நின்று கைகாட்டி சிரித்தாள். அவர்கள் “பிடி, அவளை விடாதே” என்று கூவியபடி இருபக்கமாக வளைத்து அவளைப்பிடிக்க முயல அவள் பாய்ந்து முன்னால் ஓடினாள். அவர்கள் துரத்திச்செல்ல பின்னால் வந்த சற்று தடித்த பெண் “விலாசினீ… நில்… எங்கு போகிறீர்கள்?” என்றாள். “கூட்டத்தில் தவறினால் கண்டுபிடிக்கமுடியாது… ஏடீ…”
திருஷ்டத்யும்னன் “நாணிலாது களிக்க விரும்புகிறார்கள்” என்றான். சாத்யகி “பாஞ்சாலரே, இங்கே யாதவபுரியில் பெண்களிடம் நாணம் எதிர்பார்க்கப்படுவதில்லை” என்றான். நாலைந்துபெண்கள் ஒரு சாலையோர மதுச்சாலையை சுற்றிக்கொண்டு மது அளித்துக்கொண்டிருந்த நீளமுகமும் நீலக்கண்களும் கொண்ட யவன இளைஞனை களியாடினர். அவன் அவர்கள் வருவதைக் கண்டதுமே உள்ளே போக முயல ஒருத்தி அவன் இடைக்கச்சையை பிடித்துக்கொண்டாள். இன்னொருத்தி தன் பெரிய முலை ஒன்றை அவன் புயம் மேல் அழுத்தி அவன் தோளை வளைத்துக்கொண்டு அவன் மூக்கைப்பிடித்து இழுத்தாள். அவன் நடுங்கிக்கொண்டிருக்க ஒருத்தி அவன் இடையாடையை களையமுயல்பவள் போல கைநீட்டினாள். அவன் திகைத்து உடலை வளைத்து அமரப்போனான். அருகே இருந்த செந்நிறத்தாடிகொண்ட யவனமுதுமகன் சிரித்துக்கொண்டே இருந்தான். ஒருத்தி அவர் தாடியை வருடி ஏதோ கேட்க அவர் சொன்ன மறுமொழி கேட்டு பெண்கள் சேர்ந்து வெடித்துச்சிரித்தனர்.
திருஷ்டத்யும்னன் “அவரால் இவர்களை கையாள முடியும்” என்றான். “ஆம், பெண்களைப்பார்த்தவர்” என்றான் சாத்யகி. அவர்கள் பார்ப்பதைக்கண்ட ஒருத்தி இடையில் கையை ஊன்றி நின்று “என்ன வீரரே? என்ன பார்வை?” என்றாள். சாத்யகி ”ஏன் பாதையை பார்க்கக் கூடாதா?” என்றான். திருஷ்டத்யும்னன் “நாம் போய்விடுவோம்… வேண்டாம்… போய்விடுவோம்” என்றான். “என்ன அச்சம்? என்ன செய்யப்போகிறார்கள்?” என்று சாத்யகி புரவியை நிறுத்திவிட்டான். “எதற்கு? போய்விடுவோம்” என்று திருஷ்டத்யும்னன் சொல்லி புரவியை முன்னால் செலுத்தினான். ஆனால் சாத்யகி இல்லாமல் தனித்துச்செல்வது இன்னமும் கேலிக்குரியதாக ஆகும் என்று தோன்றவே புரவியை இழுத்து சுழற்றி மீண்டும் அருகே வந்தான். அந்தப்பெண் அருகே வந்து “இங்குள்ள பாதைகளில் எது பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் யாதவரே?” என்றாள். “எனக்கு பெரிய குன்றுகள் உள்ள பாதைதான் பிடித்திருக்கிறது” என்று சாத்யகி சொல்ல அவளுடைய தோழிகள் ”ஓ” என்று குரலெழுப்பி துள்ளிக்குதித்தனர். அவள் ஒருகணம் நாணிவிட்டாள்.
திருஷ்டத்யும்னன் “போதும் போய்விடுவோம்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சாத்யகி அவள் இடையைப்பிடித்து வளைத்துத் தூக்கி புரவிமேல் ஏற்றிக்கொண்டு அதை முன்னால்செலுத்தி அவனை கடந்துசென்றான். அவளுடைய தோழிகள் கூவியபடி பின்னால் ஓடி பின்னர் சிரித்தபடி ஒருவரோடொருவர் தோளை அணைத்து நின்றனர். சாத்யகியின் குதிரையின் வால் சுழன்று கூட்டத்தில் மறைந்தது. திருஷ்டத்யும்னன் நெஞ்சு படபடக்க குதிரைமேல் அமர்ந்திருந்தான். எந்த விழிகளையும் பார்க்கமுடியவில்லை. சேணத்திலிருந்து உடல் வழுக்கிச்செல்வதுபோலிருந்தது. கால்களால் குதிரையை இறுக அணைத்துக்கொண்டான். “வீரரே, இங்கு வாரும்” என்றாள் ஒரு பெண். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஏய், இதென்ன கேள்வி? மூத்தவள் அழைக்கிறார்கள் என்றால் போய் பணிந்து நிற்கவேண்டியதுதானே?” என்று ஒரு பெண் கையை ஓங்கியபடி வந்தாள். “முதலில் குதிரையைவிட்டு இறங்கு” என்று இன்னொருத்தி சொன்னாள்.
திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகி சென்ற திசையை நோக்கிவிட்டு “நான் பாஞ்சாலத்திலிருந்து வருகிறேன்” என்று தழுதழுத்த குரலில் சொன்னான். “ஆமாம், பாஞ்சாலம்… திரௌபதியின் நாடு. அப்படியென்றால் இவருக்கு ஐந்து தேவை… அடீ, ஐந்துபேர் மட்டும் வாருங்கள். மற்றவர்கள் ஒதுங்குங்கள்…” ஒருத்தி அவன் இடையாடையைப்பிடித்து “ஐந்து வைத்திருக்கிறீர்களா பாஞ்சாலரே?” என்றாள். இன்னொருத்தி “என்னடி கேட்கிறாய்? ஐந்து இருப்பது பெண்களுக்கு… ஆண்களுக்கெல்லாம் ஐந்தில் ஒன்றுதான்” என்று சொல்ல அத்தனைபேரும் வெடித்துச்சிரித்தனர். “நான் அயலவன்… தூதனாக வந்தேன்” என்று சொல்லி திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியின் தலை தெரிகிறதா என்று பார்த்தான். “சீ இறங்கு கீழே. அயல்நாட்டு ஒற்றனே, என்ன துணிச்சலிருந்தால் எங்கள் தமக்கை ஆணையிட்டும் புரவியில் இருந்து இறங்காமலிருப்பாய்? சாவித்ரி, அவன் புரவியின் கண்ணில் சுண்ணத்தைப்போடு” என்று ஒருபெண் சொல்ல அவன் “வேண்டாம் வேண்டாம்” என்று கூவியபடி பாய்ந்து இறங்கிவிட்டான்.
உயரமான பெண் ஒருத்தி அவன் உடைவாளை உருவிக்கொண்டு “இது என்ன புதுக்கருக்கு அழியாமலிருக்கிறது? போருக்கே செல்வதில்லையா?” என்றாள். “இல்லை… நான் போரில் காயம்பட்டு…” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் இன்னொருத்தி தன் தோளில் கை சுற்றுவதை உணர்ந்து உடல்விதிர்த்து நிறுத்திக்கொண்டான். “விழுப்புண்ணா… எங்கே காட்டு… அடியே, இதோ என் ஆணை, அவன் உடலில் உள்ள அத்தனை விழுப்புண்களையும் எண்ணி என்னிடம் உடனே அறிவியுங்கள்” என்றாள் பெரியவள். “அரசி, அதற்கு இவன் ஆடைகளை களையவேண்டுமே?” என்று ஒரு மெலிந்த பெண் கேட்க “இதென்ன கேள்வி? அரசி ஆணையிட்டால் களையவேண்டியதுதானே?” என்றாள் ஒருத்தி. “வேண்டாம்… நான் இளவரசன். பாஞ்சால இளவரசன்… அயல்நாட்டுத் தூதன்” என்று திருஷ்டத்யும்னன் கூவிக்கொண்டிருக்கையிலேயே அவன் கச்சையை ஒருத்தி அவிழ்த்துவிட்டாள். இடையாடையின் முதல்சுற்று அவிழ்ந்து சரிந்தது. இருகைகளாலும் அவன் அதை இறுகப்பற்றிக்கொண்டு “அவமதிக்காதீர். வேண்டாம்” என்றான்.
“சரி, பாஞ்சால இளவரசன் என்கிறாய். என்ன சான்று உள்ளது?” “முத்திரை மோதிரம் உள்ளது… இதோ” என்று திருஷ்டத்யும்னன் தன் முத்திரை மோதிரத்தை எடுத்தான். “காட்டு” என்று ஒருத்தி அதை வாங்கி “இதை எனக்குப்போட்டுவிடு” என்றாள். “உனக்கு அளவு சீராக இருக்காது… இங்கே கொடு” என்று ஒரு மூத்தவள் முன்னால் வந்தாள். “ஏய், உனக்கும் அளவு சரியாக இருக்காது. சரியைக்குத்தான் சரியாக இருக்கும். சரியை, வாடி முன்னால்.” பெரிய முலைகள் கொண்ட தடித்தபெண் சிரித்தபடி வந்து நின்று “போட்டுப்பார்ப்போமே” என்றாள். ”போட்டுவிடுங்கள் பாஞ்சாலரே” என்றாள் ஒருத்தி. நடுநடுங்கும் கைகளால் கணையாழியை பற்றிக்கொண்டு “சரி” என்றான் திருஷ்டத்யும்னன். “உம், என்ன தயக்கம்?” என்று அரசி அதட்டினாள். அவன் அப்பெண்ணின் விரலை நோக்கி கைநீட்ட ஒரு கரியபெண் அவன் தலையைத் தட்டி “என்ன செய்கிறாய்?” என்றாள். “கணையாழியை போட்டுவிட…” என திருஷ்டத்யும்னன் இழுத்தான். “நாங்கள் இங்கே கணையாழியை விரலில் போடுவதில்லை.”
திருஷ்டத்யும்னன் “பொறுத்தருளவேண்டும்” என்றான். வறண்ட தொண்டையை சரிசெய்தபடி ”எனக்குத்தெரியவில்லை” என்றபோது குரலே வெளிவரவில்லை. கண்களில் கண்ணீர் பரவிவிட்டது. “என்னடி குழந்தையை இந்தப்பாடு படுத்துகிறாய்? இளையவனே, நீ கிளம்பிப்போ” என்றாள் அரசி. “ஆனால் போவதற்கு முன் அவளுக்கு அந்தக் கணையாழியை போட்டுவிட்டுப்போ” என்றபின் “ஏய், விரலைக் காட்டு” என்றாள். தடித்தபெண் தன் மார்புக் கச்சை விலக்கி பெரிய இடமுலையில் சுட்டு விரல்முனை போல துருத்தி நின்றிருந்த கரிய முலைக்காம்பை காட்டினாள். பெண்கள் கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் பிடித்துத்தள்ளி சிரிக்க திருஷ்டத்யும்னன் அதிரும் உடலுடன் திரும்பிப்பார்த்தான் அவனைச்சுற்றி ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர். அவர்களின் கூட்டச்சிரிப்பைக்கேட்டு மேலும் பெண்கள் ஓடிவந்துகொண்டிருந்தனர்.
அங்கிருந்து முடிந்தவரை விரைவில் விலகிச்சென்றுவிடவேண்டும் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். அவன் இடது தொடை அறுத்துப்போடப்பட்டது போல துடித்துக்கொண்டிருக்க நெஞ்சுக்குவையின் ஒலி காதில் கேட்டது. விழுந்துவிட்டால் அதைவிடக் கீழ்மை என ஏதுமில்லை. “அரசி!” “என்ன விழிக்கிறாய்? ம்ம்… விரைவு” என அதட்டினாள். திருஷ்டத்யும்னனின் கையிலிருந்து கணையாழி வழுக்குவதுபோல் இருந்தது. அவன் அந்தப்பெண்ணின் கண்களைப்பார்த்தான். அவள் சிரித்து “அச்சமா? இங்கே கொடு, உனக்கு நான் போட்டுவிடுகிறேன்” என்றாள். பெருஞ்சிரிப்பு அவனைச்சூழ திருஷ்டத்யும்னன் ஒரே கணத்தில் முன்னால் சென்று அவளுடைய முலைக்கண்ணில் அந்தக் கணையாழியை வைத்தான். அவள் கூச்சத்துடன் பின்னால் செல்ல அது கீழே விழுந்தது. அவன் குனிந்து அதை எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டான்.
பெண்கள் சிரித்து ஆர்த்தபடி அதை அடித்தனர். அவன் குதிரையை குதிமுள்ளால் மிதித்துத் தூண்ட அது கனைத்தபடி கூட்டத்தை ஊடுருவிச்சென்றது. அதன் கடிவாளத்தை தளரப்பற்றி அதன் போக்கில் விட்டபடி மேலிருந்து நடுங்கிக்கொண்டிருந்தான். எதுவுமே கண்களில் படவில்லை. நீராவிப்படலம் ஒன்று கண்களை மூடியிருந்தது. உடலை வியர்த்து வழியச்செய்தது. மூச்சுத்திணறச்செய்தது. விடாய் கொண்டு நெஞ்சு தவிக்கவைத்தது. பின் தன்னை உணர்ந்தபோது பெய்து கொண்டிருந்த வெள்ளிவெயிலில் கண்கள் கூசின. உதடுகள் உலர்ந்த தோலால் ஆனவை போலிருந்தன.
உடல்களை ஒதுக்கி வகுந்து வளைந்து வளைந்து சென்ற குதிரை கூட்டத்தில் சென்ற ஒருத்தியின் தலையிலிருந்த மலரை நோக்கி நாநீட்டியபடி நின்றது. அவள் நிமிர்ந்து மதுவுண்டு சிவந்த நீள் விழிகளால் நோக்கி “என்ன வீரரே?” என்றாள். ”மலர் அழகாக இருக்கிறது” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் குனிந்து அவளுடைய கூந்தலில் இருந்த இன்னொரு மலரை எடுத்து முகர்ந்து “நறுமணம்” என்றான். அவள் முகம் சிவந்து சிரித்தபடி கடந்து ஓடினாள். இன்னொருத்தி அவனை நோக்கி “என் மலர் வேண்டுமா?” என்றாள் “இங்குள்ள அத்தனை மலர்களும் வேண்டும்” என்று அவன் அவள் கூந்தலைப்பற்றி அங்கிருந்த செம்மலரை எடுத்துக்கொண்டான். அவளுடன் வந்த பெண்கள் கூவிச்சிரித்தனர். திருஷ்டத்யும்னன் சிரித்துக்கொண்டே புரவியைத் தூண்டி பெருநடையில் முன்னால் சென்றான்.