இந்திரநீலம் - 49

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 7

துவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன் புன்னகையுடன் இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி மாலையின் மக்கள் பெருக்கு சென்று கொண்டிருந்த தெருவின் ஓரத்திற்கு வந்து கைகளும் புயங்களும் முட்டிச்செல்ல அசைந்தபடி நின்றான். திருஷ்டத்யும்னன் அருகே வந்ததும் “தாங்கள் இத்தனை விரைவில் திரும்புவீர்கள் என்று எண்ணவில்லை இளவரசே” என்றான்.

திருஷ்டத்யும்னன் “அப்படியானால் ஏன் இங்கு காத்திருக்கிறீர்?” என்றான். சாத்யகி “தனியாக உள்ளே அமர்ந்து இசை கேட்க பிடிக்கவில்லை. நீங்கள் வரக்கூடும் என்ற உணர்வு முன்னரே இருந்ததால் நிலையழிந்த உள்ளத்துடன் இருந்தேன். சற்று நேரம் அமர்ந்துவிட்டு வெளியே வந்து நின்றேன்” என்றான். திருஷ்டத்யும்னன் இறங்கி புரவியை ஏவலனிடம் கொடுத்துவிட்டு “உள்ளே என்ன நிகழ்கிறது?” என்றான். “ராதாமாதவம்” என்றான் சாத்யகி சிரித்தபடி.

திருஷ்டத்யும்னன் “இந்த நகர் முழுக்க இசைச்சூதர் நடிப்பது யாதவ இளையோனின் காதலை மட்டும்தானா?” என்றான். சாத்யகி “இம்மக்கள் கேட்க விரும்பும் கதையும் அது மட்டுமே. அவற்றில் ராதாமாதவத்திற்கு உள்ள இடம் பிறிதெதற்கும் இல்லை. இதில் இளைய யாதவர் என்றும்மாறா இளமையுடன் இருக்கிறார்” என்றான். “இவர்களின் விழைவே அவரை முதுமை கொள்ளவிடாது” என்றான் திருஷ்டத்யும்னன். “இது தாழ்வில்லை. பலர் கற்பனையில் அவர் இன்னமும் கைக்குழந்தையாகவே இருக்கிறார்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் சிரித்தான்.

“என்ன சொன்னார் விதர்ப்ப அரசி?” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இயல்பான புன்னகையுடன் “சியமந்தகத்தை வரும் அரசுத்தூதர் அமர்ந்திருக்கும் பேரவையில் தான் சூடவேண்டுமென்று விழைகிறார். அதை நான் யாதவ அரசியிடம் சென்று பேசி பெற்று வரவேண்டுமென்று பணித்திருக்கிறார்” என்றான். சாத்யகி நின்று திகைத்து அவனை நோக்கி பின் இடையில் கைவைத்து தலையை பின்னுக்குச் சரித்து வெடித்துச் சிரித்தான். இசைக்கூடத்தின் அப்பகுதியில் நின்றிருந்த அனைவரும் திரும்பி அவனை நோக்க திருஷ்டத்யும்னன் தோளில் கை வைத்து “மெதுவாக” என்றான்.

சாத்யகி தன்னை அடக்கிக்கொண்டு கண்களில் படர்ந்த நீருடன் “நீரா? யாதவ அரசியிடம் சென்று இளையவருக்காக சியமந்தகத்தை கேட்கப்போகிறீரா?” என்றான். “எனக்குப் பணித்திருக்கும் செயல் அது. நான் ஆணைகளை தலைக்கொள்ளும் எளிய வீரன் மட்டுமே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “ஆகவே மீண்டும் யாதவ அரசியை சந்திக்கப் போகிறீர்கள், சியமந்தகத்தை கோரி பெறப்போகிறீர்கள், அல்லவா?” என்றான். திருஷ்டத்யும்னன் “சந்திப்பது உறுதி. கோருவதும் உறுதி. ஆனால் எச்சொற்கள் எவ்வகையில் எங்கு என்று இன்னும் முடிவு செய்யவில்லை” என்றான்.

சாத்யகி “பாஞ்சாலரே, இந்த ஆடலை நிகழ்த்த இளைய யாதவரால் மட்டுமே முடியும். இரண்டு கூரிய வாட்கள் போரிடும்போது ஊடே கடந்து செல்வது காற்றால் மட்டுமே இயலும் கலை என்பார்கள். நீர் முயன்றால் வெட்டுப்படுவீர்” என்றான். திருஷ்டத்யும்னன் சற்று நேரம் எண்ணங்களில் ஆழ்ந்துவிட்டு “ஆம் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். காற்றை ஒரு படைக்கலமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான். சாத்யகி அதை கருத்தில்கொள்ளாமல் “அவர்களிடையே ஒருநாளும் சமர் ஓய்வதில்லை… இந்நகரின் பெருங்கொண்டாட்டங்களில் அதுவும் ஒன்று” என்றான்.

திருஷ்டத்யும்னன் “அந்தப்போரின் விசையையே நாம் கையாளமுடியும்” என்றான். சாத்யகி “வாருங்கள், உள்ளே சென்று இசை கேட்போம்” என்றான். இருவரும் இசைக் கூடத்தின் உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த மரவுரிப்பாய் மேல் அமர்ந்து கொண்டனர். தொலைவில் மேடையில் சூதனும் விறலியும் ஒருவரை ஒருவர் நோக்கும்படி அமர்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப்பின்னால் யாழும் முழவுகளும் குழலுமாக இசைக்குழுவினர் அமர்ந்திருந்தனர். இளைய யாதவனின் உள்ளம் நோக்கி ராதை பாட, அவள் உள்ளமாக மாறி அவளைச் சூழ்ந்திருந்த விண்ணாகவும் மண்ணாகவும் நின்று சூதன் மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தான்.

திருஷ்டத்யும்னன் தன் தலையை கைகளால் தாங்கி கால்மடித்து அமர்ந்து பாட்டை கேட்டான். முழவும் குழலும் ஒன்றென ஆகும் ஒருமை. “இவ்விதழ் கொண்ட செம்மை. இச்சிறு தோள் கொண்ட மென்மை. இடைகொண்ட வளைவு. இடைகொண்ட கரவு. இவையாவும் எனக்காக நீ பூண்ட அணியல்லவா? நெற்றிக்குழல் கொண்ட சுருளும் விழிமணி கொண்ட மருளும் நான் காண நீ கொண்ட நகை அல்லவா?” செம்பட்டு போல் நெளியும் மொழி. தேனென நாவிலிருந்து செவிக்கு வழியும் இசை. விறலியின் குரல் ஒருசெவிக்கென மட்டுமே போல் ஒலித்தது. “என் கண்ணன். என் உள்ளம் நிறைந்த மன்னன். எனக்கில்லாது எஞ்சாத எங்கும் நிறை கரியோன்.” பாணனின் குரல் அவளுக்கென்றே என மறுமொழியுரைத்தது “உனக்கென்றே உலையாகி நான் சமைத்த அமுதமிது. உண்டு நிறையட்டும் உன் நெருப்பு.”

பாடல் முடிந்ததும் விறலி திரும்பி சிறு மரக்குவளையில் ஏதோ அருந்த பாணன் முழவுக்காரனிடம் தாளமிட்டு ஏதோ சொன்னான். அவை அசைந்து அமரும் ஒலியும் மெல்லிய பேச்சொலிகள் இணைந்த ரீங்காரமும் எழுந்தன. சாத்யகி பெருமூச்சுடன் உடலை எளிதாக்கி “ராதாமாதவ பாடல்களில் இதுதான் சிறந்தது. நீலாம்பரம். தட்சிணநாட்டிலிருந்து வந்த காஞ்சனர் இயற்றியது. இது விப்ரலப்தா பாவத்தில் அமைந்த முப்பத்துமூன்றாவது பாடல்” என்றான். “உருகிவழிவது போலிருக்கிறது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தலையசைத்து “இந்தக் காதல் எனக்கு புரிவதே இல்லை. இப்படியொன்று நிகழவே இல்லை என்றும் ராதை என்று எவளும் யாதவக் குடிகளில் இல்லை என்றும் அறிவுணர்ந்தோர் சொல்வதுண்டு” என்றான்.

திருஷ்டத்யும்னன் மேடையை நோக்கியபடி “அழகிய சித்திரம்” என்றான். சாத்யகி “ஆம், இது கவிஞர்களால் இளையவர் மேலேற்றப்பட்ட ஒரு கற்பனை. பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் இது தொடர்ந்து மாற்றி எழுதப்பட்டு வளர்ந்து வந்துள்ளது. இனியவை அனைத்தும் திரட்டி இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இசை, நிலவு, வசந்தம், உளமுருகும் காதல் அனைத்தும். பெண்கள் தங்கள் முதிரா இளமையில் அடைந்த, அடைந்த கணமே இழக்கத்தொடங்கிய இனிமை ஒன்றை என்றென்றும் என தேக்கி வைத்திருக்கும் கலம் இக்கதை என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் அந்தக் கதைக்குள் சென்றுவிட்டிருக்கிறார்கள். நாம் மட்டும் வெளியே நின்று ஏன் இதை விவாதிக்கிறோம்?” என்றான். சாத்யகி திரும்பி அரங்கை நோக்கிவிட்டு “ஆம், உண்மை” என்றான். “இளவரசே, போரிலும் அரசு சூழ்தலிலும் நாம் இந்த இனிமையை இழந்துவிட்டோமா?” திருஷ்டத்யும்னன் “யாதவரே, இக்கனவு நமக்குள்ளும் வாழ்வதுதான். அதற்குள் ஒரு போதும் நுழைய முடியாதவர்கள் என்று நம்மை நாம் எண்ணிக் கொள்கிறோம்” என்றான். “உண்மையில் இத்தருணம் போல் என்னால் எப்போதும் இவ்வுணர்ச்சிகளுக்குள் நுழைய முடியுமென்று தோன்றவில்லை.”

சாத்யகி “அப்படியானால் இங்கு வருவதற்கு முன் அவ்வாறு எண்ணவில்லையா?” என்றான். திருஷ்டத்யும்னன் தலையை அசைத்தபடி தனக்குள் என “இல்லை” என்றான். சாத்யகி அவனையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னன் எதையோ சொல்ல வருபவன்போல் இருந்தான். ஆனால் ஒரு சொல்லும் அவனிலிருந்து எழவில்லை. மேடையில் விறலி கண்ணனுடன் ஊடும் கலகாந்தரிதை ஆனாள். அவளைச் சூழ்ந்து கண்ணீருடன் கனத்து நின்றிருந்தது வானம். இலைத் துளிகள் ஒளிர்ந்து மழை சொட்டின. குளிர்ந்த காற்று சாளரங்களைக் கடந்து வந்து ஆயர்குடியின் அனைத்து சுவர்களையும் தழுவிச் சுழன்று குளிர்ந்தது. எழுந்து பறக்கும் ஆடையை விரல்களால் பற்றிக்கொண்டு அவள் கண்ணனை எண்ணி கண்ணீர் விட்டாள்.

வாயிலுக்கு அப்பால் வந்து கண்ணன் அவள் பெயர் சொல்லி அழைத்தான். ‘ராதை’ என்ற குரல் கேட்டு அவள் ஓடிச்சென்று தாழ்திறந்தாள். கதவைத் தட்டி உலுக்கியது மழைக்காற்று என்று அறிந்தாள். அவள் பெயர் சொல்லி அழைத்தது முற்றத்தில் நின்ற பாரிஜாதம். சோர்ந்து கதவைப் பற்றிக்கொண்டு உடல் தளர்ந்து சரிந்து ஏங்கி அழுதாள். எங்கோ எழுந்தது வேய்ங்குழல் நாதம். தூண்டில்கவ்விய மீன் எனத் துடித்தாள். அவளைச் சுண்டி தூக்கி மேலெழுப்பியது தூண்டில் சரடு.

“நிலவெழும் இரவு. முகிலொளிர் குளிர்வு. இன்றென் தலைவீங்கி படமாகிறது. இருபுறமும் எழுகின்றன ஆயிரம் தலைகள். ஈராயிரம் விழிகள். பிளவுண்டு துடிக்கும் நாவுகள். முக்காலமும் ஆன மூன்று கருஞ்சுருள்கள். என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன். என் வால் அளைகிறது பாற்கடலை. எனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி. மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன். என்மடியின் குழந்தை நீ. என் தொடையசைந்தால் விழித்தெழுந்து முலைதேடும் மகவு…” விறலியின் எரிந்துருகி வழியும் குரல் அரங்கைச்சூழ்ந்தது.

திருஷ்டத்யும்னன் எழுந்து “செல்வோம்” என்றான். சாத்யகி எழுந்தபடி “இசை கேட்கவில்லையா?” என்றான். திருஷ்டத்யும்னன் “இல்லை” என்றபடி வெளியே சென்றான். சாத்யகி அவனுடன் சென்றபடி “இவ்விசையின் உளமயக்குக்குள் நாமும் தன்னிலையழிந்து செல்லாவிடில் இப்பித்தெழுந்த உணர்வுகள் அனைத்தும் பொருளற்றவையென தோன்றும். உணர்வுகள் இல்லையேல் இசை நீர் போல தெரியும் பளிங்கு, அதன் மேல் நடக்க முடியும் மூழ்கி நீராட முடியாது என்று என் தந்தை சொல்வதுண்டு” என்றபின் “பெரும்பாலும் இசை மீது நான் புரவியில்தான் சென்று கொண்டிருக்கிறேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் அச்சொற்களுக்கு புன்னகை புரியவில்லை. ஏதோ நினைவில் தொலைந்தவன் போல இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி வெளியே வந்து நின்றான். நெரிந்துசென்ற கூட்டத்தைப்பார்த்தபின் “நாம் வேறெங்காவது செல்வோம் யாதவரே” என்றான். சாத்யகி “துறைமுகப்புக்குச் செல்வோம்” என்றான். “இல்லை. அங்கு ஓசைகள் நிறைந்திருக்கும், நான் அமைதியை நாடுகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “நகருக்கு மறுபக்கம் கோமதி ஆற்றின் நீர் கொணர்ந்து தேக்கப்பட்டுள்ள செயற்கை ஏரி உள்ளது. அங்கு நகர் மக்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது” என்றான் சாத்யகி. “செல்வோம்” என்று திருஷ்டத்யும்னன் மறுமொழி சொன்னான்.

துவாரகையின் சுருள் வளைவுச் சாலையில் புரவிகளில் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இணையாகவே மெல்லிய நடையில் சென்றனர். மாலைக் களியாட்டுக்கு எழுந்த நகர்மக்களும் அயல்வணிகரும் ஒருவருடன் ஒருவர் கலந்து தெருக்களில் முகங்களாக ததும்பிக் கொண்டிருந்தனர். மொழிகள் கலந்த ஓசை எழுந்து காற்றில் அலையென நிறைந்திருந்தது. மாலை வெயில் வெள்ளி அணைந்து பொன் எழுந்து விரிய முகில்களின் விளிம்புகள் மட்டும் ஒளிபெற்றிருந்தன. கோபுரமாடங்களின் குவைமுகடுகளின் வளைவுகளின் பளிங்குப்பரப்புகள் நெய்விளக்கருகே நிற்கும் இளமகளிர் கன்னங்கள் போல பொன்பூச்சு கொண்டு மின்னிக் கொண்டிருந்தன.

“இந்நகரில் காலையும் மாலையுமே அழகானவை. உச்சி வெயில் வெண்மாளிகைகளை கண்கூசும்படி ஒளிர வைக்கிறது” என்றான் சாத்யகி. “இரவெல்லாம் மதுவுண்ட கண்களுக்கு உச்சிவெயில் போல துயரளிப்பது எதுவுமில்லை. நடுப்பகல் உணவுக்குப்பிறகு இங்கு தெருக்கள் ஓய்ந்துவிடும். அயலூர் யாதவர்கள் மட்டுமே தெருக்களில் அலைவார்கள். துவாரகையின் வணிகருக்கும் செல்வம் உடைய குடிகளுக்கும் மாலை என்பது இரண்டாவது துயிலெழும் காலை.” திருஷ்டத்யும்னன் அச்சொற்களுக்கு செவி கொடுக்காமல் புரவியில் அமர்ந்திருந்தான். புரவி தன் விழைவுப்படி செல்வது போலவும் அதன் மேல் அவன் உடல் கண்ணுக்குத் தெரியாத கயிறால் கட்டப்பட்டு அமர்ந்திருப்பது போலவும் தெரிந்தது.

சுழல் பாதையின் மூன்றாவது வளைவிலிருந்து பிரிந்து மறுபக்கம் வளைந்து சென்ற புரவிப்பாதை புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்கத்தில் இருந்த காவல்மாடத்தின் தலைவன் இறங்கி வந்து கடுமையான நோக்குடன் தலைவணங்கி அவர்களிடம் “எங்கு செல்கிறீர்கள்?” என்றான். சாத்யகி “கோமதத்தின் கரையில் ஓர் அரசு அலுவல்” என்றபின் முத்திரைக் கணையாழியை காட்ட ஐயம் விலகாமலேயே அவன் தலைவணங்கி உள்ளே செல்ல ஒப்புதல் அளித்தான். கருங்கல் பாவப்பட்ட தரையில் புரவிக்குளம்புகளின் உடுக்கோசை ஒலிக்க சென்றபோது சாத்யகி அந்தத் தாளம் தன் அகத்தை விரைவுகொள்ளச்செய்வதை உணர்ந்தான். “புரவியின் குளம்புகளின் துடிப்பு எப்போதும் விரைவு கொண்ட எண்ணங்களை உருவாக்குகிறது. புரவி விரையத்தொடங்கியதுமே அதுவரை இருந்த எண்ணங்கள் அச்சமோ சினமோ உவகையோ கொண்டு தாவத்தொடங்குகின்றன” என்றான்.

திருஷ்டத்யும்னன் அச்சொற்களும் சென்று சேராத விழிகளுடன் திரும்பி அவனை நோக்கியபின் திரும்பிக் கொண்டான். சாத்யகி சற்றே சினம் கொண்டு “பாஞ்சாலரே, தங்களிடம்தான் நான் பேசிக்கொண்டு வருகிறேன். தங்கள் சொல்லின்மை என்னை பொறுமையிழக்கச் செய்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். “தாங்கள் எண்ணிச் செல்வது என்ன? நான் தங்களுடன் உரையாட முயன்றுகொண்டிருக்கிறேன்” என்றான் சாத்யகி. “ஆம். நான் கேட்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். தணிந்த குரலில் “எதை எண்ணிக்கொண்டு செல்கிறீர்?” என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் “ராதாமாதவத்தைத்தான்” என்றான். எண்ணியிராது எழுந்த எரிச்சலுடன் “அது ஒரு விடியற்காலை வீண்கனவு. அதில் ஒரு துளி மாந்திய ஆண்மகன் தன்மேல் மதிப்பிழப்பான். கேலிப்பொருளாகி பெண்கள் முன் நின்றிருப்பான். தங்கள் வாழ்க்கையில் இளமை இனி இல்லையென்று கடந்து சென்றுவிட்டது என்றானபின் பெண்கள் அமர்ந்து எண்ணி கண்ணீர் சிந்தும் ஓர் இழிகனவு அது” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டு “நான் சுஃப்ரை என்ற பெண்ணைப் பற்றி உம்மிடம் சொல்லியிருக்கிறேனா?” என்றான். முகம் மலர்ந்து “எந்த நாட்டு இளவரசி?” என்றான் சாத்யகி. “எந்நாட்டுக்கும் இளவரசி அல்ல” என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் மலர்ந்து “பரத்தையா?” என்றபடி சாத்யகி அருகே வந்தான். “திறன்மிக்கவள் என்று எண்ணுகிறேன். தங்களை இத்தனை நாள் கழித்தும் எண்ணச்செய்கிறாளே?”

திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கி “ஆம், திறன்மிக்கவள். வெல்லமுடியாதவள்” என்றான். விழி தெய்வச்சிலைகளைப்போல வெறித்திருக்க “அவளைக் கொல்வதற்காக வாளால் ஓங்கி வெட்டினேன். என் உடல் புண்பட்டு நிகர்நிலை அழிந்திருந்ததனால் ஒரு கணம் பிழைத்தது வாள். இமைகூட அசைக்காமல் அவள் என்னை நோக்கியபடி தன்னை முழுதளித்து மஞ்சத்தில் மல்லாந்து படுத்திருந்தாள்” என்றான். சாத்யகி திகைப்புடன் “அறியாதுகூட அசையவில்லையா? அது உயிரின் தன்மையல்லவா?” என்றான். திருஷ்டத்யும்னன் “அசையவில்லை” என்றான். “அவள் விழிகள் போல இருந்திருக்கும் பர்சானபுரி ராதையின் விழிகள்.”

சாத்யகி புன்னகைத்து “இப்போது புரிகிறது அனைத்தும். தாங்கள் அவளை எண்ணத் தொடங்கிவிட்டீர்கள். எப்போது கிளம்பிச் செல்கிறீர்கள்?” என்றான். “நான் இங்கு வந்ததே அவள் விழிகளிடமிருந்து தப்பிதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “இங்கிருந்து மேலும் தொலைவுக்கு தப்பிச்செல்லவே விழைகிறேன். மீள அவளிடம் சென்றால் நானென செதுக்கி வைத்திருக்கும் அனைத்தையும் இழந்து உருகி அழிவேன்.” சாத்யகி “ராதை என பெண்கள் நின்றிருக்கும் தருணங்கள் வாழ்க்கையில் உண்டு. ராதை என்றே அவர்கள் வாழ முடியாது. ராதை என்பது பெண்ணில் தெய்வமெழும் ஒரு கணம் மட்டுமே என்று சூதர் சொல்வதுண்டு” என்றான். “அதை நான் அறியேன். இன்று அவள் என்னை எவ்வண்ணம் உணர்கிறாள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவ்விழிகளின் அக்கணத்தை என்னால் எந்நிலையிலும் மறக்கமுடியாதென்று இப்போது உணர்கிறேன். அவற்றை நான் நோக்கிய அக்கணம்போல் ஒன்று என் வாழ்வில் இனி மீளாது.”

சாத்யகி “இளைய பாஞ்சாலரே…” என்று ஏதோ சொல்லவர அதை கேளாதவன் போல திருஷ்டத்யும்னன் “யாதவரே, எங்கெங்கோ ஏதேதோ விழிகளிலிருந்து சுஃப்ரையின் அந்தக் கணம் எழுந்துவருவதை காண்கிறேன். கிருஷ்ணவபுஸின் முற்றத்தில் யாதவர்களின் குருதி படிந்த வாள்கள் சூழ நிற்க ஒரு பெண் இளைய யாதவரின் கண்ணை நோக்கி நீ எனக்கு வெறும் ஒரு நீலப்பீலிவிழி மட்டுமே என்று சொன்னாள். அவ்விழிகளிலிருந்தவளும் சுஃப்ரைதான். இன்று இளைய அரசியை கண்டேன். அவரைப் புகழும் சொற்களை முதற்கணத்திலேயே கண்டு கொண்டேன். எதைச் சொன்னால் தான் மகிழ்வேன் என்று அவரே என்னிடம் உரையாடலின் தொடக்கத்திலேயே உணர்த்திவிட்டார். அச்சொற்களை திறம்படச்சொல்லி அவரை மகிழ்வித்து அவர் விழைவதென்ன என்று அறிந்தேன்” என்றான்.

பின்னர் திரும்பி சாத்யகியை நோக்கி “அங்கிருக்கையில் அவரை தன் கொழுநனின் அன்பை மட்டுமே விழையும் எளிய பெண்ணென்று எண்ணினேன். ஆணை முழுதாக உரிமை கொள்ளத் தவிக்கும் ஒரு பெண் என்று வகுத்துக் கொண்டேன். தன் சொற்களால் அச்சித்திரத்தை அவர் மீள மீள செதுக்கி முழுமை செய்தார். பின்பு கிளம்பி என் அரண்மனை நோக்கிச் செல்கையில் ஏதோ ஒரு கணத்தில் உணர்ந்தேன் அது அவர் கொள்ளும் நடிப்பு என. அவருக்கு மிக உகந்தது என அறிந்து அவர் சமைத்து பரிமாறும் இனிமை அது. யாதவரே, அவர் சியமந்தக மணியைக் கோருவதும் அதன் பொருட்டே. தன் நெஞ்சமர்ந்தோன் சூடும் மணி ஒன்று தனக்குரியதும் ஆக வேண்டும் என விழைகிறார். அவரை பகடை என யாதவ அரசியின் முன் உருட்டி விடுகிறார்.   அவர் இளைய யாதவரை திரும்ப தன்னை நோக்கி உருட்டுவார் என்று அறிந்திருக்கிறார்” என்றான்.

புன்னகைத்து திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான் “இன்று அவர் சொன்னவை செய்தவை அனைத்தும் இனிய நடனம் போலிருக்கின்றன. அவர் விழிகளை நான் எண்ணுகையில் அங்கு நான் கண்டதும் சுஃப்ரையையே. காதல் கொண்ட விழிகளனைத்திலும் ஒரு பெண்ணையே நான் நோக்குவது ஏன் என்று விளங்கவில்லை.” சாத்யகி சிரித்தபடி “இதன் பெயர்தான் காதல் போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் “இங்கு எப்படி என் உள நிலையை வகுத்துரைப்பதென்று அறியேன். சத்யபாமாவின் விழிகளில் நான் கண்டதும் சுஃப்ரையின் அக்கணத்தைத்தான். யாதவரே, இவர்களனைவரும் ஒரு கணம்கூட உளம் விலகாது அவருக்காக உயிர் கொடுப்பார்கள். இவ்விழிகள் அனைத்தில் இருந்தும் தொட்டுத் தொட்டு பர்சானபுரியின் ராதையை என்னால் சென்றடைய முடிகிறது” என்றான்.

சாத்யகி “இளவரசராகிய உங்களுக்கு அப்பெண்ணை கொள்வதில் என்ன தடை? திரும்பிச்சென்றதும் அவளை அடையுங்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “யாதவரே, அவள் விறலி. அவள் உடலை மலர்கொய்வது போல் என்னால் எடுத்துக்கொள்ள முடியும். அந்த மலரை எங்கு வைப்பதென்பது மட்டுமே என் முன்னிருக்கும் இடர்” என்றான். “பட்டத்தரசியாக்கப் போகிறீர்களா?” என்றான் சாத்யகி சிரித்தபடி. திருஷ்டத்யும்னன் “பிறிதொரு இடத்தில் அவளை வைக்க என்னால் முடியாது” என்றான். சாத்யகி புரவியின் கடிவாளத்தை இறுக்கி நிறுத்தி நின்றுவிட்டான். ஓரிரு அடிகள் முன்னால் சென்ற திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க “என்ன சொல்கிறீர்கள் இளவரசே?” என்றான்.

திருஷ்டத்யும்னன் “என் ஐங்குலத்தைச் சாராத பெண்ணொருத்தியை அரசியாக்க என் குலம் ஒப்பாது. ஆனால் பிறிதொருத்தியை அவளுக்கு நிகர் வைக்கவும் என் உளம் ஒப்பவில்லை” என்றான். “ஆம். நீங்கள் பாஞ்சாலத்தின் மணிமுடி சூடப்போகும் இளவரசர். உமது பிறவிநூல் கணித்த அத்தனை நிமித்திகர்களும் அதை சொல்லியிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம் யாதவரே, மூன்று தமையர்களைக் கடந்து எனக்கு பாஞ்சால மணிமுடி வரப்போவதில்லை. ஆனால் எங்கோ நான் நாடாளப்போகிறேன் என்று எனக்கும் தெரிகிறது” என்றான்.

“ஐங்குலம் அவர்களின் நிலத்தில் நீங்கள் மணிமுடி சூடினால் அல்லவா உம்மை கட்டுப்படுத்த முடியும்?” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் எங்கள் ஐந்து குலத்தின் படைவல்லமையின்றி நான் எங்கு சென்று எந்நிலத்தை வெல்லமுடியும்?” என்றபின் தலையசைத்து “எண்ணப்புகுந்தால் வெட்டவெளியை சென்றடைகிறேன். என் நெஞ்சில் அவளிருப்பது அரியணையில். அதற்குக் குறைவான ஒன்றை அவளுக்களிக்க என்னால் இயலாது. மிக அருகே என அவ்விழிகளைக் காணும்போதெல்லாம் வாள் உருவி முடி தாழ்த்தி அவள் முன் மண்டியிடவே தோன்றுகிறது. பாஞ்சால இளவரசனாக அதைச் செய்ய இயலாது கட்டுண்டிருக்கிறேன்” என்றான்.

கோமதம் பெரியதோர் ஆடி போல நீள்வட்ட வடிவில் வான் பரப்பிக் கிடந்தது. அதை நோக்கி வளைந்திறங்கிய பாதை அருகே இருந்த சிறிய மரமேடையை சென்றடைந்தது. அவ்வேளையில் அங்கு எவரும் இருக்கவில்லை. திருஷ்டத்யும்னன் புரவியை பெருநடையாக்கி அருகே இறங்கி படிகளிலேறி மேலே சென்று இடை அளவு எழுந்த சுவரைப் பற்றிக் கொண்டு அப்பால் விரிந்து கிடந்த நீலநீர் வெளியை நோக்கி நின்றான். அவனுடைய நிழல் நீண்டு நீரில் விழுந்து சிற்றலைகள் மேல் நெளிந்து கொண்டிருந்தது. இரு புரவிகளையும் பற்றி அங்கிருந்த தறியில் கட்டியபின் சாத்யகி மெல்ல நடந்து அவனருகே வந்து சற்றுத்தள்ளி நின்றான். அவன் நிழல் நீரில் நீண்டு திருஷ்டத்யும்னனுக்கு இணையாக விழுந்து நெளிந்தது.

பின்னாலிருந்து விழுந்த ஒளியில் திருஷ்டத்யும்னனின் காக்கைச்சிறகு குழல்சுருள்களின் பிசிறுகள் பொன்னிறம் கொண்டிருந்ததை சாத்யகி கண்டான். நோக்கி நின்றிருக்கவே மேலும் மேலும் ஒளி கொண்டு பொற்சிலை என திருஷ்டத்யும்னன் மாறினான். மேற்கே கதிர் சிவந்தபடியே செல்ல வானில் விரிந்திருந்த முகில்களனைத்தும் செந்தழலாயின. திருஷ்டத்யும்னனின் மென்மயிர்கள் ஒவ்வொன்றும் செந்தழல் துளிகளாகத் தெரிந்தன. மனிதன் உருகி பொன்னாகும் கணம் என்று எண்ணியதுமே சாத்யகி அவ்வெண்ணத்தின் மீவிசையால் என மெல்ல அசைந்து பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் நீரில் பரவிய காந்தள்மாலை போன்ற ஒளிப்பாதையை நோக்கிக் கொண்டிருந்தான்.

அந்தக் கணத்தின் உணர்வெழுச்சியின் பொருளின்மையை உணர்ந்த உள்ளம் அதை கலைக்க விரும்பியது போல சாத்யகி உடலை சற்று அசைத்தான். பின்பு “முற்றிலும் செயற்கையான ஏரியிது. வடக்கே கோமதியின் நீரை அணைகட்டி இரண்டு கால்வாய்களின் வழியாகக் கொண்டுவந்து இங்கே சேர்க்கிறார்கள். இதனடியில் இருப்பது வெறும் மணல். இங்கு வரும் நீர் அக்கணமே சல்லடைபோல மணலில் இறங்கி ஊறி கடலில் சென்றுவிடும். எனவே கால்வாய்களின் அடித்தளமும் இந்த ஏரியின் அடித்தளமும் முற்றிலும் கற்களால் பாவப்பட்டு சுதை பூசி இறுக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு நீர்கூட வீணாவதில்லை” என்றான்.

திருஷ்டத்யும்னன் குனிந்து அவன் நிழல் மேல் மொய்த்த மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் நிறமே கொண்ட சிறு விரல்கள். ஏரி தன் விரல்களால் அவன் நிழலுருவை அள்ளி அளைந்து விளையாடுவதைப் போல உணர்ந்தான். ஒரு கணத்தில் அந்த மீன்களின் தொடுகையை தன் உடலெங்கும் அறிந்து சிலிர்த்தான். அந்த இனிய தவிப்பிலிருந்து விலக முடியாதவனாக விலகத்தவித்து நின்றிருந்தான். சாத்யகி “இந்த ஏரியிலிருந்துதான் நகர் முழுக்க குடிநீர் செல்கிறது. மறுபக்கம் காற்றில் சுழலும் காற்றாடிகள் வழியாக குழாய்கள் நீரை அள்ளி மேலே கொண்டு செல்கின்றன” என்றான்.

அச்சொற்கள் பொருளற்று எங்கோ ஒலித்தாலும் அந்த உணர்வு நிலைக்கு அவை எப்படியோ துணையாக ஆவதையும் திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். பெரிய மீனொன்று ஏரியிலிருந்து எழுந்த கைபோல மேலே வந்து வளைந்து அவன் நிழலின் நெஞ்சில் பாய்ந்தது. ஆழ்ந்திறங்கி வால்சுழல மறைந்தது. திருஷ்டத்யும்னன் தன் நெஞ்சிலிறங்கிய குளிர்ந்த வாளென அதை உணர்ந்தான். திரும்பி சூரியனை நோக்கி நின்றான். அவன் முகமும் தோள்களும் பற்றி எரிவதுபோல் செந்தழல் வடிவம் கொண்டன. சாத்யகி “தாங்கள் எண்ணுவதென்ன பாஞ்சாலரே?” என்றான். திருஷ்டத்யும்னன் “தெரியவில்லை. என் உள்ளம் எச்சொல்லிலும் நிலைக்கவில்லை” என்றபின் “இளைய யாதவர் விதர்ப்ப அரசியை ஏன் மணந்தார்? துவாரகையை ஓர் அரசாக ஆக்க ஷத்ரியர்களின் துணை தேவை என்று எண்ணினாரா?” என்றான்.

சாத்யகி புன்னகைத்தபடி “அவர் எதையும் திட்டமிடவில்லை. பறவை ஒன்று மரக்கிளையில் வந்தமர்வது போல விதர்ப்ப அரசி அவரிடம் வந்தாள் என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்றான். “அவர் விதர்ப்பநாட்டுக்கு இளவரசியை கவர்ந்துவரச்சென்றபோது நானும் உடனிருந்தேன்.”