இந்திரநீலம் - 47
பகுதி எட்டு : காந்தளும் குருதியும் – 5
திருஷ்டத்யும்னன் ஆடையணிந்து கிளம்பும்போது அறைக்கு வெளியே சாத்யகியின் குரலை கேட்டான். அக்குரலே தன் உள்ளத்தை மலரவைப்பதை எண்ணி புன்னகைத்தபடி கதவை நோக்கினான். வாயிற்காவலன் உள்ளே வருவதற்குள் சாத்யகி உள்ளே நுழைந்தபடி “பாஞ்சாலரே, தங்களை விதர்ப்பப் பேரரசி காண விழைகிறார். தூதனுடன் தேர் வந்துள்ளது” என்றான். “யார்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்ட பின்னரே அச்சொற்களை உணர்ந்துகொண்டு “ருக்மிணி தேவியா? என்னையா?” என்றான். “ஆம், அவர்கள் அஸ்தினபுரியிலிருந்து திரும்பியதுமே தங்களை சந்திக்க விழைந்திருக்கிறார்கள். தாங்கள் படைநிகழ்வில் இருந்தமையால் சந்திக்க முடியவில்லை. இன்று மீண்டும் அமைச்சரிடம் ஆணையிட்டிருக்கிறார்கள்” என்றான் சாத்யகி.
அவன் தோளில் தேன்மெழுகு பூசிய துணியால் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. வலக்கையால் இடக்கையை பற்றித்தூக்கி சிறு குழந்தையை வைப்பது போல குறுபீடத்தில் வைத்தபின் மஞ்சத்தில் அமர்ந்து “ஆகவே இன்று நாம் செல்லவிருந்த நடன நிகழ்வுக்கு வாய்ப்பில்லை” என்றான். “என் பிழைதான். இளைய அரசியை நான் உடனே சென்று பார்த்திருக்க வேண்டும். அதுவே முறைமை. நான் இங்கு பாஞ்சாலத்தின் அரசமுறைத் தூதனாகவே வந்துள்ளேன். ஆனால் துவாரகையின் குடிமகனாக என் உள்ளம் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறது” என்றான்.
சாத்யகி கண்களில் சிரிப்புடன் “முறைமை செய்வது தேவையே. ஆனால் தாங்கள் சொன்ன ஒரு சொல் பிழையானது” என்றான். திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். “இங்கு மூத்த அரசி யாரென்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. சென்ற நான்காண்டுகளாக ஒவ்வொரு நாளும் அதற்குரிய பூசலே அரண்மனையில் நிகழ்ந்து வருகிறது” என்றான் சாத்யகி. “உம் சொற்கள் புரியவில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி நகைத்தபடி “இளைய யாதவர் முதலில் மணம் கொண்டது விதர்ப்ப மன்னனின் மகள் ருக்மிணி தேவியைத்தான். ஆனால் வயதிலும் குல உரிமையிலும் மூத்தவர் ஹரிணபதத்தின் சத்யபாமா. யாதவர்கள் சத்யபாமாவை தங்கள் பேரரசியாக எண்ணுகிறார்கள். துவாரகைக்கு வெளியே அத்தனை ஷத்ரியர்களும் ஷத்ரிய குல மகளாகிய ருக்மிணியையே துவாரகையின் பட்டத்தரசி என கொள்கிறார்கள்” என்றான்.
திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து “இது என்ன விளையாட்டு?” என்றான். “இளைய யாதவர் மிக விரும்பி இந்த விளையாட்டை நிகழ்த்துகிறார் என்று தோன்றுகிறது. இங்கே அனைத்து குலமன்றுகளிலும் சத்யபாமா துவாரகையின் மணிமுடி சூடி அமர்ந்திருக்கிறார். இங்கிருந்து கிளம்பி எந்த நாட்டுக்குச் சென்றாலும் ருக்மிணி தேவி மணிமுடியை அணிந்திருக்கிறார். என்ன நுண்நகை என்றால் யாதவ அரசிக்கு ருக்மிணிதேவி அவ்வாறு பட்டத்தரசியாக அமர்வது தெரியாது. யாதவ குலமன்றில் அமர்வதே பட்டத்தரசியின் அடையாளம் என்று ருக்மிணிதேவிக்கும் தெரியாது” என்றான் சாத்யகி.
“இதுநாள்வரை எந்த அரசனுக்கும் இரண்டு பட்டத்தரசிகள் இருந்ததில்லை” என்றான் திருஷ்டத்யுமன். சாத்யகி “எஞ்சிய அறுவரும் என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியாது” என்றான். திருஷ்டத்யும்னன் “குலமன்றில் அமராமல் எப்படி பட்டத்தரசியாக முடியும்?” என்றான். சாத்யகி “இதை மறந்தும் விதர்ப்ப அரசியிடம் சொல்லிவிட வேண்டாம். அரண்மனைத்தூண்கள் அனலில் உருகத்தொடங்கும்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து “என் நாவை என்னால் நம்ப முடியாது. அது என்ன உரைக்கிறது என்பதை என் குலத்து மூதன்னையரே முடிவெடுக்கிறார்கள்” என்றான். “இன்று விதர்ப்ப அரசி உம்மை அழைப்பதே துவாரகையின் பட்டத்தரசி யாரென்று நிகழும் சமரில் தன் தரப்பில் ஒரு வலுவான வாளேந்திய குரல் எழுவதற்காகவே” என்றான் சாத்யகி.
“அதில் நான் என்ன செய்ய இயலும்?” என்று திருஷ்டத்யுமன் கேட்க “சென்று பாரும்! பல அவைகளில் நீர் அரசு சூழ்ந்திருப்பீர். இந்த அவையில் உமது சொற்கள் பத்துமுகம் கொண்ட பகடையில் சென்று அமைகின்றன என்பதை அறிவீர்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “பார்க்கிறேன், அதன் பின் என்னால் என் தமக்கையை வெல்லமுடியுமென படுகிறது” என்று சொல்லி சிரித்தபின் “உமது புண் ஆற இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?” என்றான். சாத்யகி கையை நோக்கியபின் “இன்றும் மருத்துவர் கட்டவிழ்த்து மறு கட்டு போட்டார். தசைநார்கள் கூடிக்கொண்டிருக்கின்றன. மூன்று வாரத்தில் இந்தக் கைகளில் வாளேந்த முடியும் என்றார்” என்றான்.
கையை மெல்ல தூக்கி வலியுடன் முகம் சுளித்து “இந்நாட்களில் இதுவரை நான் அறியாதவற்றை அறிந்து கொண்டிருக்கிறேன் பாஞ்சாலரே. என் உடலில் தொங்கிக்கிடக்கும் இந்த இடக்கரம் என்னுடன் பிறந்து என் குருதியைக் கொண்டு வளர்ந்தது. நான் விழைந்ததை ஆற்றியது. இன்று என் எண்ணச் சொற்கள் அதை எட்டவில்லை. பிறிது ஒன்று என இதை நான் பேணுகிறேன். உடலில் இருந்து அறுபட்டு விலகும் கை என்பது என்ன என்று பலமுறை எண்ணியிருக்கிறேன். வெட்டி வீழ்த்தப்பட்ட ஒரு மானுடக்கை கொள்ளும் பொருளென்ன? அது ஆற்றுவதற்கு இவ்வுலகில் ஏதுமில்லை. கையறுந்தவன் இவ்வுலகிலிருந்து விடுபட்டு உதிர்ந்து வேறெங்கோ சென்று விழுந்து விட்டவன் அல்லவா?” என்று சாத்யகி சொன்னான்.
திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து “நன்று! போர்க்களம் கண்டுவிட்டீர், விழுப்புண் பட்டுவிட்டீர். நோய்ப்படுக்கையில் தத்துவங்களையும் எண்ணத்தலைப்பட்டீர். எனவே முழு வீரராகி விட்டீர்” என்றான். சாத்யகியும் சிரித்தபடி “ஆம். இவை வெறும் வீண் எண்ண ஓட்டங்கள் என்று அறிகிறேன். ஆனால் ஒரு வீரனின் தலையை வெட்டுவதைவிட கொடிது கையை வெட்டுவது என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இன்றில்லை. சித்தத்தால் அல்ல, விழிகளாலும் சொற்களாலும் அல்ல, கைகளாலேயே மானுடன் ஆக்கப்பட்டிருக்கிறான். ஆற்றுவதும் பற்றுவதும் அணைப்பதும் அகற்றுவதுமாக அவனுக்கென அனைத்தையும் நிகழ்த்துவது கைகளே” என்றான்.
“அரிய சொற்கள்! இதை ஒரு சூதன் சிறந்த பாடலாக அமைக்கலாம்” என்ற திருஷ்டத்யும்னன் “நான் கிளம்புகிறேன், இளைய அரசியை சந்திப்பதென்றால் நான் முறையான அரச உடையணிந்து முழுதணிக்கோலம் கொள்ள வேண்டும்” என்றான். “மீண்டும் பிழை செய்கிறீர். இளைய அரசி அல்ல, பட்டத்தரசி” என்றான் சாத்யகி. “அது விதர்ப்ப அரசியின் அரண்மனைப் பெருவாயிலை கடந்தபின்பு அல்லவா?” என்றபடி திருஷ்டத்யும்னன் தன் ஏவலனை கைகாட்டி அழைத்தான். திறந்த வாயிலுக்கு அப்பால் நின்றிருந்த அவன் அருகே வந்து தலை வணங்க “நான் முழுதணிக்கோலத்தில் கிளம்பவிருக்கிறேன்” என்றான்.
சாத்யகி எழுந்து “தாங்கள் அணிகொள்ளுங்கள் இளவரசே, நான் நோக்கியிருக்கிறேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “அணிகளினூடாக நான் அரசனாகிறேன். இளவயதில் அணிக்கோலம் கொண்ட என்னை ஆடியில் பார்க்கையில் அங்கு பிறிதொருவனை பார்ப்பேன். நானே அஞ்சும் ஒருவன். பின்னர் அவனிலிருந்து என்னை நோக்கவும் கற்றுக் கொண்டேன்” என்றபடி அணியறைக்குச் சென்றான். அங்கிருந்த இரு சமையர்களும் அவனை வணங்கி குறுபீடத்தை பேராடியின் முன் போட்டனர். தன் ஆடிப்பாவையை நோக்கியபடி அவன் அமர்ந்ததும் அவனுடைய தூக்கிக் கட்டியிருந்த கொண்டையை அவிழ்த்து கொம்பாலான கொண்டை ஊசிகளை உருவி எடுத்தனர். குழலை காகபட்சமாக ஆக்கி அவன் தோளில் புரளவிட்டனர்.
அவன் நெற்றியிலும் கழுத்திலும் இருந்த வியர்வையை கடற்பஞ்சால் துடைத்தபின் நறுஞ்சுண்ணத்தால் துடைக்கத் தொடங்கினான் ஒருவன். இன்னொருவன் அணிப்பேழையைத் திறந்து நவமணிகள் பதிக்கப்பட்ட தோள்வளைகளையும் பதக்க மாலைகளையும் குண்டலங்களையும் கைவளைகளையும் வெளியே எடுத்து அணிமேடைமேல் பரப்பி வைத்தான். சாத்யகி எடை ஒலிக்கும் காலடிகளுடன் நடந்து அருகே வந்து சாளர பீடத்தில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். “நீர் வருகையில் உமது காலடி ஓசை மாறி ஒலிக்கிறது. தோள்பட்ட புண் உமது உடலின் நிகர் நிலையை மாற்றிவிட்டது” என்றான் திருஷ்டத்யும்னன். “உள்ளத்தையும்தான்” என்றான் சாத்யகி. “இன்னொரு போருக்கு எழுவேனென்றால் அப்போதிருப்பது பிறிதொரு வீரன். இனி போர் எனக்கு கிளர்ச்சியளிக்காது. அச்சமும் எழாது. வெற்றியில் நான் களிப்பேனென்றுகூட தோன்றவில்லை. உண்பது போல் உறங்குவது போல் ஓர் எளிய செயலாக அது மாறிவிட்டிருக்கிறது” என்றான்.
திருஷ்டத்யும்னன் “முதல் போருக்குப் பின் எஞ்சியிருப்பது வஞ்சமும் சினமும் மட்டுமே” என்றான். சாத்யகி சில கணங்கள் கழித்து “கிருதவர்மர் தன் ஊருக்குச் செல்லவில்லை என்று ஒற்றர்கள் சொல்கிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் ஆடியை நோக்கியபடி “ஆம், அதை நான் முன்பே உணர்ந்திருந்தேன்” என்றான். “அவனால் இனி தன் குலத்து மன்று முன் நிற்கமுடியாது” என்றான். சாத்யகி “அவர் எங்கு மறைந்தாரென்று ஒற்றர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “அவன் என்னுடைய முதற்பெரும் எதிரி எவனோ அவனிடம் சென்றிருப்பான்” என்றான். குழப்பத்துடன் “மகதத்திற்கா?” என்றான் சாத்யகி.
“மகதமோ காசியோ கலிங்கமோ வங்கமோ எதுவென்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் இப்பிறவி முழுக்க தன்னுள் நின்றெரியும் பெரு வஞ்சமொன்றுடன் இங்கிருந்து சென்றிருக்கிறான்” என்ற திருஷ்டத்யும்னன் “அவன் எங்குசென்றிருப்பான் என்று பலநாள் எண்ணிநோக்கினேன். இளைய யாதவருக்கு எதிராக அவன் செல்ல மாட்டான். ஆகவே அது மகதம் அல்ல. மகதத்தின் துணையரசான காசியும் அல்ல. எனக்கு மட்டுமே எதிரியான நாடு. அப்படியென்றால்…” என்றபின் ஆடியிலேயே சாத்யகியின் விழிகளை நோக்கி “அவன் அஸ்வத்தாமனின் உத்தரபாஞ்சாலம் நோக்கி சென்றிருப்பான்” என்றான்.
சாத்யகி “ஏன்?” என்றான். “என்னுடைய இயல்பான எதிரி என்றால் அது அஸ்வத்தாமனே. என் நாட்டில் பாதியை கொண்டிருப்பவன். கிருதவர்மன் அஸ்வத்தாமனின் இயல்பான அணுக்கன் ஆகவே வாய்ப்பு.” சிலகணங்கள் நோக்கியபின் “ஆம், அவ்வண்ணமே தெரிகிறது” என்ற சாத்யகி “அவர் மேல் இரக்கமே எழுகிறது. இனி மண்ணில் அவருக்கு இன்பமென ஏதுமில்லை” என்றான். திருஷ்டத்யும்னன். “யாதவரே, நீர் கள்ளமற்ற உள்ளம் கொண்ட மலை ஆயர். வஞ்சத்தாலும் பழியாலும்தான் ஷத்ரிய மாவீர்ர்கள் உருவாகிறார்கள்” என்றான்.
சாத்யகி “அவ்வண்ணம் ஒரு வஞ்சம் தங்களுக்குள் உள்ளதா?” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். சாத்யகி எழுந்து “எவர் மேல்?” என்றான். திருஷ்டத்யும்னன் ஆடியை நோக்கி புன்னகை புரிந்து “இப்புவியில் எவர்முன் முழுஆணவத்தையும் வைத்து தாள் பணிவேனோ அவர் மேல். எனக்கு படைக்கலம் எடுத்துத் தந்து பயிற்றுவித்த ஆசிரியர் மேல்” என்றான். அக்கணமே அனைத்தையும் புரிந்துகொண்ட சாத்யகி சற்றே தடுமாறி மீண்டும் சாளரபீடத்தில் சென்றமர்ந்து “பாஞ்சாலரே, உண்மையாகவா?” என்றான்.
திருஷ்டத்யும்னன் “நெடுநாள் வஞ்சம் அது. கங்கைப்பெருக்கில் கூழாங்கல் போல உருண்டுருண்டு மென்மையாகி விட்டிருக்கிறது” என்றான். “இன்று இனியதோர் தலையணையை அருகே வைத்தபடி துயில்வது போல அதனுடன் என்னால் துயில முடிகிறது. கூர்வாள் ஒன்று சித்திரச்செதுக்கு உறைக்குள் என உள்ளத்தில் அது காத்திருக்கிறது.” விழிசுருங்க கசப்புடன் சிரித்தபடி “ஆகவே என்னால் கிருதவர்மனை புரிந்துகொள்ள முடிகிறது. என் தந்தைக்கு அர்ஜுனன் செய்ததையே நான் கிருதவர்மனுக்குச் செய்தேன். அதை அன்று அவை முடிந்து தனியனாக என் அறை நோக்கிச் செல்லும்போது உணர்ந்தேன். எடைமிக்க கதாயுதம் ஒன்று என் பிடரியில் அறைந்தது போல அந்த உண்மை எனக்குப்புலப்பட்டது. அதன் பின் என்னால் மதுவின்றி துயில்கொள்ளமுடியவில்லை” என்றான்.
“பாஞ்சாலரே” என்று சாத்யகி அழைத்து மேலே சொல்லில்லாமல் கையை அசைத்தான். “பின்னர் எண்ணினேன், மாபெரும் எதிரியைப்பெற்றவனே மாவீரனாக முடியும் என்று. எனக்கு கிருதவர்மனே எதிரி. ஒருநாள் அவன் என்னை பழிதீர்ப்பான், ஐயமே இல்லை. அதற்கென்றே அவன் வாழ்வான். அப்படி ஒரு எதிரி எனக்காக கூர்கொண்டு நின்றிருக்கையில் எனக்கு கணம்கூட ஓய்வில்லை. இனி என் வாழ்க்கையை பொருள்கொள்ளச் செய்வதே அவன் கொண்ட அப்பகைதான்.”
சமையர் அவனுக்கு அணிகளை ஒவ்வொன்றாக பூட்டினர். ஆடியில் வைரங்கள் ஒளிரும் உடலுடன் பிறிதொருவன் எழுவதை திருஷ்டத்யும்னன் நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அப்பீடத்தில் அசையாமல் அமர்ந்திருக்க ஆடிக்குள்ளிருந்து எழுந்த ஆணவம் மிக்க இளவரசன் சாத்யகியிடம் “யாதவரே, இளைய அரசியைக் கண்டு உறவை அறிவித்து மீள்கிறேன்” என்றான்.
உடைவாளை கச்சையில் அணிந்து குறடுகளையும் இறுக்கியபின் திருஷ்டத்யும்னன் மரப்படிகளில் எடைமிக்க காலடிகள் ஒலிக்க இறங்கி இடைநாழிக்கு வந்தான். அவனுக்காக காத்திருந்த அணித்தேர் அரசகுலத்தவருக்குரிய செந்நிற பட்டுத்திரைச்சீலைகள் கொண்டிருந்தது. முகப்பில் விதர்ப்ப நாட்டின் இரட்டைப்பசுங்கிளிகள் கொண்ட அரசக்குறி பொன்னில் செய்து பொருத்தப்பட்டிருந்தது. தேர்ப்பாகன் அவனை அணுகி வந்து வணங்கி “அரசி அனுப்பிய தேர் இது இளவரசே. தங்களுக்காக அவர் அணிக்காட்டில் காத்திருக்கிறார்” என்றான்.
திருஷ்டத்யும்னன் ஏறி அமர்ந்துகொண்டு கைகாட்ட பாகன் முன்னால் அமர்ந்து நுகத்தில் திமிறி கால்தூக்கி நின்ற மூன்று வெண்புரவிகளை சவுக்கு நுனியால் மெல்ல தொட்டான். கற்பாளங்கள் மேல் இரும்பு வளையங்கள் ஒலி எழுப்ப தேர் முன்னகர்ந்து சென்றது. திருஷ்டத்யும்னன் சாய்ந்தமர்ந்து ருக்மிணியை சந்திப்பதைப்பற்றி எண்ணினான். சொல்லவேண்டிய முறைமைச்சொற்களை தன்னுள் வகுத்துக்கொண்டான். அவளுக்காக எந்தப் பரிசிலும் தன்னிடம் எஞ்சியிருக்கவில்லை என்று நினைவுக்கு வந்ததும் தன்னையே கடிந்தான்.
விதர்ப்ப அரசியின் மாளிகையும் துவாரகை அரசியின் மாளிகையும் அரசமாளிகைக்கு இருபக்கங்களிலாக அமைந்திருந்தன. கடலை நோக்கி திறக்கும் நூறு சாளரங்கள் கொண்டதாக கட்டப்பட்டிருந்த ஏழடுக்கு மாளிகையில் அடித்தளம் முதல் மேல்தளம் வரை சென்ற சுதையாலான பன்னிரு பெருந்தூண்கள் இடைநாழியில் தங்கள் நிழலை வரிவரியாக சரித்து நின்றிருந்தன. தூண்களின் அடித்தட்டில் கவிழ்ந்த தாமரை வேதிகையும் மேலே நிமிர்ந்த தாமரை போதிகையும் இருந்தன. அவற்றுக்கு அப்பால் எழுந்த அரைவட்ட வடிவிலான மாளிகையின் ஏழடுக்குகளிலும் பெரிய சாளரங்கள் சிறுஉப்பரிகைகளுடன் திறந்திருந்தன.
தேர் முற்றத்தை கடந்து செல்லுகையில் அந்த மாளிகை ஒரு யாழ் போன்றிருப்பதாக திருஷ்டத்யும்னன் நினைத்தான். பெருங்கரங்கள் கொண்டு விண்தெய்வம் ஒன்று மீட்டும் தந்திகள் அந்தச் சுதைத் தூண்கள். மாளிகையின் மொத்த நீளத்திலும் அமைந்த பதினெட்டு படிகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்பட்ட ஏட்டுச் சுவடிகள் போல தெரிந்தன. முற்றத்தில் அமைச்சர்களின் மஞ்சல்களும் அரசகுடியினரின் அணிப்பல்லக்குகளும் தேர்களும் புரவிகளும் இருபக்கமும் நிரை வைத்து நின்றிருந்தன. வலப்புற ஓரமாக ஆறு யானைகள் முகபடாமும் முனைதந்தமும் அம்பாரியும் அணிபடாமும் அணிந்து பொன்பூத்த கொன்றையின் அசைவுகள் என நின்றிருந்தன.
அவன் தேர் முற்றத்தின் முகப்பில் சென்று நின்றது. மகரயாழ் போல தெரிந்த மாளிகை அணுகுந்தோறும் பெருகி தலைமேலெழுந்து எட்டு கால்களை ஊன்றி நிற்கும் பெரிய வெண்ணிறக் கடல் நீராளி போலாயிற்று. படிகளில் ஏறி இடைநாழியை அடைந்தபோதுதான் தூண்கள் ஒவ்வொன்றும் இருபது பேர் கைகோர்த்து பற்றினாலும் வளைக்க முடியாதபடி பேருருவம் கொண்டவை என்பதை அவன் உணர்ந்தான். தூணொன்றின் நிழலைக் கடக்கவே ஐந்து எட்டுகள் எடுத்துவைக்க வேண்டியிருந்தது. உள்ளே நுழைந்ததுமே தூண்கள் வெண்ணிறயானையின் கால்களென்றாயின. பின்னர் வெண்பளிங்கு மரங்கள் நிரைவகுத்த காட்டில் நடப்பது போல் தோன்றியது.
அங்கே அவனை எதிர்கொண்ட அரண்மனை ஸ்தானிகன் தலை வணங்கி “பாஞ்சாலரை விதர்ப்ப அரண்மனைக்கு வரவேற்கிறேன். துவாரகையின் பேரரசி தங்களைப் பார்க்க உள்ளே அணிக்காட்டில் காத்திருக்கிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் “இவ்வரண்மனைக்கு அழைக்கப்பட்டதை பேறெனக் கருதுகிறேன். பாஞ்சாலம் பெருமை கொள்கிறது” என்று மறுமுகமன் சொன்னான். ஸ்தானிகன் மீண்டும் தலை வணங்கி அவனை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.
இடைநாழியின் மறுஎல்லையில் வெண்ணிற சுதையால் கட்டப்பட்ட விரிந்த படிகள் சற்றே வளைந்து மேலேறிச்சென்றன. ஸ்தானிகனுடன் படிகளில் ஏறும்போது “உபவனத்திற்கு என்றீர்கள்?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம். நந்தவனம் மாளிகை மீதுதான் உள்ளது” என்றான் ஸ்தானிகன். திருஷ்டத்யும்னன் திகைப்புடன் “மாடம் மீதா?” என்றான். “ஆம் இளவரசே, இது சோனகர்களின் முறை.”
மூன்றாவது மாடியை அடைந்து இன்னொரு சிறிய இடைநாழி வழியாக நடந்து அரைவட்ட முகடு கொண்ட கதவற்ற சுதைவாயிலை கடந்தபோது அங்கே தொட்டிகளில் வளர்க்கப்படும் பூச்செடிகள் வைக்கப்பட்ட தோட்டம் ஒன்றை அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் உயர்ந்த பூ மரங்கள் மண்டிய குறுங்காடு ஒன்றை அங்கே கண்டு ‘படி ஏறினேனா இல்லை இறங்கினேனா’ என்று ஒரு கணம் சித்தம் மயங்கப் பெற்றான். மரமல்லிகளும் மந்தாரங்களும் செண்பகங்களும் வேம்பும் கமுகும் பசுமை கொண்டு செறிந்திருந்த அக்குறுங்காட்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வெண்சுதைப் பாதையில் ஸ்தானிகன் அவனை இட்டுச் சென்றான்.
அன்று பூத்து நிலமெல்லாம் உதிர்ந்த செண்பகத்தின் மூச்சடைக்க வைக்கும் மணம் நிறைந்திருந்தது. “இந்த மரங்கள் எங்கு வேர்விட்டுள்ளன?” என்றான் திருஷ்டத்யும்னன். “இந்த மாடத்தளம் மீது கீழிருந்து உயர்தர கருமண் கொட்டப்பட்டு அதன்மேல் இவை வளர்க்கப்பட்டுள்ளன” என்றான் ஸ்தானிகன். “எத்தனை அடி உயரத்திற்கு மண் போடப்பட்டுள்ளது?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஏழடிக்குமேல் ஆழமிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மாளிகை அமைக்கப்படும்போது நான் இங்கில்லை” என்றான் ஸ்தானிகன்.
“இதற்குரிய நீர் எப்படி மேலே வருகிறது?” என்று மேலும் திருஷ்டத்யும்னன் கேட்டான். “கடற்காற்றில் சுழலும் காற்றாடிகள் வழியாக நீரை மேலேற்றும் யவனப் பொறிகள் ஐந்து மறுபக்கம் உள்ளன. கீழே வந்து சேரும் கோமதியின் நீர் மேலேறி இங்கு வருகிறது” என்றான் ஸ்தானிகன். செடிகளின் நடுவே சுதையாலான சிறிய ஓடைகளில் நெளிந்தோடிய நீரை திருஷ்டத்யும்னன் பார்த்தான். ஈரமண் அப்பகுதியெங்கும் நீராவியையும் குளுமையையும் நிறைத்திருந்தது.
சோலைக்கு நடுவே இருந்த வெண்ணிற மரத்தாலான கொடிமண்டபத்தில் ருக்மிணி அமர்ந்திருப்பதை திருஷ்டத்யும்னன் தொலைவிலேயே கண்டான். அவளருகே அணுக்கச் சேடியர் நின்றிருந்தனர். சற்று தள்ளி முதிய சேடி ஒருத்தி கையில் மங்கலத்தாலத்துடன் நின்றாள். ஸ்தானிகன் தலைவணங்கி “தங்களை அறிவிக்கிறேன் இளவரசே” என்று சொல்லி முன்னால் சென்றான்.
ஸ்தானிகன் சென்று அவனை அறிவிக்க திரும்பி அவனை நோக்காமலேயே வரச்சொல்லும்படி கையசைத்தாள். ஸ்தானிகன் அவனிடம் வந்து “தாங்கள் செல்லலாம்” என்றான். திருஷ்டத்யும்னன் அருகே சென்றபோது முதிய சேடி மங்கலத்தாலத்துடன் முன்னால் வந்து “விதர்ப்ப அரசியின் அரண்மனைக்கு பாஞ்சாலரை வரவேற்கிறேன்” என்றாள். “என் நல்லூழால் இவ்வாய்ப்பை பெற்றேன். என் உடைவாள் தாழ்த்தி விதர்ப்ப அரசியை வணங்குகிறேன்” என்றான். அருகே சென்று மும்முறை அரசியை வணங்கி “தங்கள் ஆணை ஏற்கும் பேறு வாய்த்துள்ளது” என்று கூறினான்.
ருக்மிணி அவனிடம் “அமர்க!” என்று கையசைத்தாள். வெண்ணிற மரத்தாலான பீடத்தின் பின்பக்கம் பொன்னாலான மலர்அணி வளையம் பொருத்தப்பட்டிருந்தது. அமரும் இடமும் சாயும் இடமும் செந்நிறமான பீதர் நாட்டுப் பட்டால் அமைக்கப்பட்டிருந்தன. திருஷ்டத்யும்னன் அமர்ந்ததும் ருக்மிணி “தங்கள் தமக்கையை நான் நன்கறிவேன். இப்போது அஸ்தினபுரிக்குச் சென்றபோதும் நான் அவைசென்று அவளைக் கண்டேன். அவள் சாயல் தங்கள் முகத்திலிருப்பது உவகையை அளிக்கிறது” என்றாள். “ஆம். நான் அவளுடைய பிறிதொரு வடிவமே” என்றான் திருஷ்டத்யும்னன்.
“இருவரும் அனலில் பிறந்தவர்கள் என்று சூதர்கள் பாடுவதை அறிந்துளேன். அவள் தழலென்றால் நீங்கள் கனல்” என்று சொல்லி புன்னகை புரிந்தாள். ருக்மிணியைக் கண்டதுமே திரௌபதி தன் உள்ளத்தில் எழுந்தது ஏன் என்று திருஷ்டத்யும்னன் அப்புன்னகையில் அறிந்தான். ருக்மிணி மெலிந்து உயர்ந்த கரிய உடல் கொண்டிருந்தாள். சுருள் குழல் தோளில் விழுந்து இடைவரை சரிந்து வளைத்து அவள் மடியில் போடப்பட்டிருந்தது. நீண்ட மருள்விழியும் குறுகிய நெற்றியும் கூர் மூக்கும் கருஞ்சிவப்பு சிமிழ் போன்ற உதடுகளும் கொண்ட நீள்வட்ட முகம். கழுத்தும் கைகளும் தளிர் நரம்புகள் தெரிய மெலிந்து நீண்டிருந்தன. அந்த விரல்கள் அளவுக்கு நீண்ட விரல்களை எங்குமே பார்த்ததில்லை என்று எண்ணிக் கொண்டான். விரல் நகங்கள் சிட்டுக்குருவியின் அலகுகள் போல நீண்டிருந்தன.
கருமை நிறமன்றி அவளுக்கும் திரௌபதிக்கும் பொதுத்தன்மை ஏதுமிருக்கவில்லை. ஆனால் புன்னகைக்கும் ஒவ்வொரு முறையும் திரௌபதியை நினைவுபடுத்தினாள். அமர்வில் உடலைசைவில் குரலில் விழிசலிப்பில் திரௌபதியிடமிருக்கும் நிமிர்வு அவளிடமிருக்கவில்லை. ஒவ்வொரு சொல்லிலும் அவள் உடல் சற்றே ஒசிந்தது. பேசும்போதே ஆடையையும் அணிகளையும் கழுத்தையும் கைவிரல்கள் தொட்டுச் சென்றன. நீண்ட விரல்கள் அச்சம்கொண்டவைபோல ஒன்றோடொன்று தொட்டுப் பின்னி விரைந்தன. அவளுடைய மெல்லிய மேலுதடுகளுக்கு மேல் வியர்வை துளிகள் பூத்திருந்தன. காதிலணிந்த குழையின் நிழல் கழுத்திலும் கன்னங்களிலும் அசைந்தது.
“தாங்கள் வந்து என்னை சந்தித்து முறைமை செய்வீர் என்று எதிர்பார்த்தேன் பாஞ்சாலரே” என்று ருக்மிணி சொன்னதுமே அவள் அரசு சூழ்தலில் ஏதுமறியாதவள் என்று திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். உள்ளூர ஊறிய புன்னகையுடன் “நான் களம் சென்று நேற்று முன்தினம்தான் மீண்டேன் பேரரசி. சற்று ஓய்வெடுத்தேன். யாதவர்களின் பட்டத்தரசியின் முன் முழுதணிக் கோலத்தில் மட்டுமே வரவேண்டுமென்பதால் சற்று பிந்தினேன்” என்றான். அவள் முகம் மலர்வதைக் கண்டதும் அவன் உள்ளே எழுந்த புன்னகை மேலும் விரிந்தது. “இங்கு வந்த பின் அறிந்தேன் தங்கள் முன் நான் முறைமை ஏதும் கொள்ளவேண்டியதில்லை என்று. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என சூதர் கொண்டாடும் என் தமக்கையின் பிறிதொரு வடிவாக தாங்கள் தோன்றுகிறீர்கள்.”
ருக்மிணியின் கண்களில் சிரிப்பு நன்றாகவே மலர்ந்தது. முகம் சிவக்க மெல்லிய ஒலியுடன் சிரித்து கைகளால் கழுத்தைத் தொட்டு உடலொசிந்து “ஆம். என்னைப் பற்றி இளைய யாதவரும் அவ்வண்ணம் சொல்வதுண்டு” என்றாள். திருஷ்டத்யும்னன் “விழியுடையோர் அனைவரும் சொல்லும் சொல்லல்லவா அது?” என்றான். இளைய யாதவர் வேறென்ன சொல்லியிருப்பார் என்று அவன் உள்ளம் தேடியது. உடனே கண்டடைந்து “துவாரகை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் நடுவே இன்று ஒரு பேரரசாக எழுந்து நிற்கிறதென்றால் விதர்ப்ப நாட்டு அரசரின் திருமகளாகிய தங்களின் கால்கள் இந்நகரத்தை தொட்டதனால் அல்லவா?” என்றான்.
அவள் மேலும் சிவந்து சிரிக்க “யாதவ அரசியை சந்திக்க நான் முறைமை பேண வேண்டியதில்லை. தாங்களோ தொல்கதை கொண்ட ஷத்ரிய குலத்தவர். ஆகவே முறைமை அனைத்தையும் பேணியாகவேண்டிய நிலையில் உள்ளேன்” என்றான். அவள் அதுவரை அடக்கிக்கொண்டிருந்த சிரிப்பு எழுந்தது. கைகளால் முகத்தை ஏந்திக்கொண்டபோது சிரிப்பொலியுடன் கைவளை ஒலி கலந்தது. “ஆம். என்னை ஷத்ரிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லும்போது இளைய யாதவர் இதைச் சொல்வதுண்டு” என்றாள். திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான்.