இந்திரநீலம் - 38
பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 4
கிருஷ்ணவபுஸின் அருகே கங்கைக்குள் முன்னும்பின்னும் சென்றுகொண்டிருந்த படகில் நாள் முழுக்க காத்திருந்த போது நேரத்தின் பெரும்பகுதியை திருஷ்டத்யும்னன் துயிலிலேயே கழித்தான். படகின் மெல்லிய அசைவு துயிலுக்கு உகந்ததாக இருந்தது. படுத்ததுமே உடல் எடைகொள்வதுபோல துயில் வந்து படர்ந்து விரிப்பலகைமேல் அவனை வைத்து அழுத்தியது. அவன் குறட்டைவிட்டு துயில அருகே சாத்யகி ஒரு கணமும் நிலை கொள்ளாது உள்ளறைக்கும் அகல்முற்றத்துக்குமாக அலைந்து கொண்டிருந்தான். பலமுறை திருஷ்டத்யும்னன் படுத்திருந்த பலகை மஞ்சத்தின் விளிம்பில் வந்தமர்ந்து தொண்டை செருமி ஒலியெழுப்பினான். மெல்ல புரண்டுபடுத்து விழி திறந்து “செய்தி வந்துள்ளதா?” என்றான் திருஷ்டத்யும்னன். இல்லை என்று தலையசைத்துவிட்டு மீண்டும் அகல் முற்றத்திற்கே சென்று தொலைவில் தெரிந்த சததன்வாவின் நகரை நோக்கி நின்றான் சாத்யகி.
அந்தி சாயும்வரை திருஷ்டத்யும்னன் படகுக்குள்ளேயே படுத்துத் துயின்றான். பின்பு எழுந்து படகிற்குள்ளேயே நீராடி உடைமாற்றி கவசங்களையும் வாளையும் அணிந்து கொண்டு அகல் முற்றத்திற்கு வந்தபோது முழு கவசங்களுடன் இரும்புச்சிலை போல மறுமுனையில் நின்றிருந்த சாத்யகியைக் கண்டு புன்னகைத்தான். பாய் மர வடத்தில் உடல் சாய்த்து “பதற்றத்துடன் காத்திருப்பதனால் செய்தி விரைந்து வரப்போவதில்லை யாதவரே” என்றான். சாத்யகி திரும்பி நோக்கி விட்டு “ஏதோ பிழையுள்ளது பாஞ்சாலரே. ஒரு பகல் கடந்துவிட்டது. அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை” என்றான். அமர்ந்தபடி “சததன்வா அவர்களுக்கு விருந்தளிக்கிறான் என்று எண்ணுகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சினத்துடன் “அவர்கள் சென்றது விருந்துண்ண அல்ல” என்று உரக்கச் சொன்ன சாத்யகி உடனே குரலை தாழ்த்தி நோக்கை விலக்கி “சென்ற செயலை முடித்துத் திரும்ப இரண்டு நாழிகைகள் கூட தேவையில்லை” என்றான். புன்னகையுடன் “ஒருவேளை சியமந்தகமணி எங்கிருக்கிறது என்று அவர்களால் அறிய முடியாமல் இருக்கலாம். அதை அறியும் பொருட்டு விருந்து நீடிக்கலாம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “அவ்வண்ணமெனில் அச்செய்தியை உடனே நமக்கு அறிவிக்கலாம் அல்லவா?” என்றான். திருஷ்டத்யும்னன் மேலும் சிரித்தபடி “அறிவிக்க முடியா நிலையில் அவர்கள் இருக்கலாம். விருந்துகள் எப்போதும் பல நூறு விழிகளால் சூழப்பட்டவை” என்றான். சாத்யகி “இல்லை, அதுவல்ல. என் உள்ளுணர்வு சொல்கிறது, பிழையென ஏதோ நிகழ்ந்துள்ளது. அவர்கள் சததன்வாவிடம் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நகருள் சென்று அவர்களை காக்க வேண்டியிருக்கும்” என்றான்.
“அத்துமீற வேண்டியதில்லை. பொறுத்திருக்கும் பொருட்டு நாம் இங்கு வந்திருக்கிறோம்” என்றான் திருஷ்டத்யும்னன். “எந்தப் போரிலும் காத்திருத்தல் என்பதே முதன்மையான தேவை. வேட்டை விலங்குகளிடமிருந்து போர் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதுவே என்பார் என் ஆசிரியர்.” சாத்யகி தத்தளிக்கும் உடலசைவுடன் அவன் அருகே வந்தான். “நான் சொல்லாட விழையவில்லை பாஞ்சாலரே. ஏதோ பிழை நிகழ்ந்திருக்கிறது. இங்கிருந்து சததன்வாவால் அவர்கள் உள்ளழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒரு பகல் முழுக்க அங்கு செய்ய அவர்களுக்கு என்ன இருக்கிறது? விருந்துண்டிருக்கலாம். ஆனால் பகல் முழுக்க உண்ணும் விருந்தென ஒன்றுண்டா என்ன?”
திருஷ்டத்யும்னன் “காத்திருக்கையில் நம் உள்ளம் பல்லாயிரம் வினாக்களால் ஆனதாக மாறுகிறது. ஒவ்வொரு விடையையும் மேலும் வினாக்களாக மாற்றிக்கொள்கிறோம். இந்த ஆடலை நானும் நன்கு ஆடி சலித்திருக்கிறேன். காத்திருப்பதற்கான காலத்தை அது நிறைக்கிறது என்றால் ஒரு ஆடலாக அதை கொள்வதில் பிழையில்லை. ஆனாலும் காத்திருக்கத்தான் வேண்டும்” என்றவன் “நான் உணவருந்தச் செல்கிறேன். வருகிறீரா?” என எழுந்தான். சாத்யகி “என்னால் இப்போது உணவருந்த முடியாது” என்றான். “பகலெல்லாம் என்ன உணவு உண்டீர்?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி திரும்பிக்கொண்டான். “உண்ணவில்லையா?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி இல்லையென தலையசைத்தான். திருஷ்டத்யும்னன் அருகே சென்று அவன் தோளைத் தட்டி “வருக! உணவு உண்பதற்கான நேரம் இது” என்றான்.
சாத்யகி “என் உள்ளம் நிலையழிந்திருக்கிறது பாஞ்சாலரே” என்றான். “நீர் எண்ணுவது போல ஒரு போர் தொடங்கும் என்றால் அதற்கு முன் நாம் முழுதுணவு உண்டிருக்க வேண்டும், வருக!” என்று அவன் தோளைச் சுற்றி கையிட்டு இழுத்துச் சென்றான். அறைக்குள் அமர்ந்து சுட்ட மீனும், கோதுமை அப்பங்களும், பருப்புக்கூழும், புளித்த அரிசிக்கள்ளும் கொண்ட உணவை உண்டனர். “என்னால் விழுங்க முடியவில்லை” என்றான் சாத்யகி. “கள்ளுடன் கலந்து உண்ணும். இளம்கள்ளின் மயக்கு உணவை எரிய வைக்கும்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி கையில் அப்பத்துடன் எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கி “தூதன் எவனோ நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறது” என்றான். “துறையிலிருந்து பாய்விரித்து ஒரு படகு வருகிறது. வணிகப்படகுகள் அத்தனை விரைவாக வருவதில்லை.” “வருவானென்றால் நன்று. நாம் உண்பதற்கான அடிப்படை அமைகிறது” என்றான் திருஷ்டத்யும்னன். “அவனை துரத்திவரக்கூடும் அவர்கள்…” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “சிறந்த தூதன் என்றால் அவன் எப்படியும் இங்கு வந்து சேர்வான். வந்தபின் அவனிடம் செய்தி தேர்வோம். வரவில்லை என்றால் அதன்பின் சிந்திப்போம். இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீர் அமர்ந்து உண்ணும்” என்றான்.
சாத்யகி அப்பத்தைக் கடித்து மென்று கள்குடுவையை எடுத்து அண்ணாந்து மிடறு ஒலிகளுடன் குடித்தான். ஏப்பக் குமிழியுடன் அதை கீழே வைத்து “என்ன நிகழ்கிறது எனக்குள் என்று தெரியவில்லை பாஞ்சாலரே. இத்தனை நிலையழிதல் இயல்பல்ல என்றும் உணர்கிறேன்” என்றான். “முதல் போர் எப்போதும் எண்ணங்களுக்குள் நிகழ்வதே” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “புண்பட்டு படுத்திருக்கையில் நிகழ்ந்த போரை நூறாயிரம் முறை எனக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தேன் யாதவரே. ஒவ்வொரு செயலாக, பின் ஒவ்வொரு அசைவாக, பின் ஒவ்வொரு விழியொளியாக அப்போரை நான் கண்டேன். போரின் உள்ளடுக்குகள் ஒவ்வொன்றும் தெளிந்து வந்தன. நான் கண்டது அச்சமும் உயிர் விழைவும் கலந்த துடிப்பை மட்டுமே. பின்னர் அவற்றுக்கு அடியில் இருந்து குருதிவெறி கொண்ட கொடுந்தெய்வம் ஒன்று விழிகள் மின்ன எழுந்து வந்தது. அனைத்தையும் அது கையில் எடுத்துக்கொண்டது. இலக்குகளும் இலட்சியங்களும் அறங்களும் எதுவும் அதன் முன் நிற்கவில்லை.”
சிறிய விரைவுப் படகு புடைத்து எழுந்த ஒற்றைப் பாயுடன் வர அதிலிருந்தவன் கைகளை ஆட்டிக்கொண்டிருந்தான். சாத்யகி “தூதன்! நான் எண்ணியது போலவே தூதன்தான் வந்துகொண்டிருக்கின்றான்” என்றான். திருஷ்டத்யும்னன் எழுந்து கைகளை நீர்க்கலத்தில் கழுவி மரவுரியால் துடைத்தபடி சீர் நடையுடன் வெளியே வந்து கங்கை நீர்ப்பரப்பை கிழித்தபடி அணுகிக்கொண்டிருந்த சிறு படகை நோக்கினான். கை வீசும் படகோட்டியைக் கண்டு “யாதவரே, அவனை அடையாளம் காண முடிகிறதா?” என்றான். சாத்யகி “இல்லை. ஆனால் மதுராவின் வீரன் என்றால் இப்படகின் கலக்காரர் அறிவர்” என்றான். கயிற்றைப் பற்றிப் பாய்ந்து சென்று அமரமுனையில் நின்ற முதற் கலக்காரனிடம் “அத்தூதனைத் தெரிகிறதா?” என்றான். அவன் விழி கூர்ந்து உடனே துடிப்படைந்து “அவன் சக்கரன். மதுராவின் முதன்மை ஒற்றன்” என்றான்.
மேலும் அருகே சென்று உரக்க “நூற்றுவருடன் அவன் சென்றானா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம் இளவரசே” என்றான் அமரக்காரன். சாத்யகி கலத்தின் விளிம்புப் பலகையைப் பற்றியபடி குனிந்து நோக்கினான். அவன் தசைகள் இறுகி விதிர்ப்பதை உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அருகே சென்று அவன் தோளில் கை வைத்து “பதற்றம் கொள்ள வேண்டாம் யாதவரே. அவன் தீய செய்தியுடன் வருகிறான் என்பதில் ஐயமில்லை” என்றான். சாத்யகி திரும்பி “எப்படி சொல்கிறீர்?” என்றான். “இத்தனை பிந்தி வருவதும் சரி, ஒற்றை வீரனாக வந்து செய்தி சொல்லவிருப்பதும் சரி, அச்செய்தி தீயதென்பதையே காட்டுகின்றன. அதை நாம் உளம் அலைப்புற நின்று கேட்பதில் பயனில்லை. நம் எண்ணங்களை முன்னரே அமையச் செய்வோம். அலையழிந்த சித்தத்துடன் அவன் சொல்வதை கேட்போம். கேட்டு அனைத்துச் சொற்களையும் மும்முறை நம்முள் ஓட்டி அதன் பின் ஆவதென்ன என்று முடிவெடுப்போம்” என்றான்.
சிறு படகு அருகணைய சாத்யகி உடல் தளர்ந்து “என்னால் நிற்க முடியவில்லை பாஞ்சாலரே” என்றான். “நடந்ததென்ன என்று இக்கணம் முழுதறிகிறேன். அவர்கள் சிறைப்பட்டுவிட்டனர். கொல்லப்பட்டிருக்கவும் கூடும்.” திருஷ்டத்யும்னன் கைகளை விளிம்பில் ஊன்றி படகை நோக்கியபடி பேசாமல் நின்றான். “இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “ஏனெனில் நாம் அனைவரும் ஒரே விழைவால் இணைக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் அந்த மணியை பார்த்துவிட்டார்கள். அது அவர்களை வென்றுவிட்டது.” சாத்யகி திகைத்து நோக்க திருஷ்டத்யும்னன் கசப்புடன் புன்னகைத்து “ஆம், நிகழ்வது அது ஒன்றுதான்” என்றான்.
அலைகளில் ஏறி இறங்கி அம்பு நிழல் நீரில் செல்வது போல் அருகணைந்தது சிறு படகு. அதிலிருந்த ஒற்றன் படகிலிருந்த அமரக்காரனை நோக்கி தன் மந்தணக் கை அசைவுகளைக் காட்டியதும் அவர்களின் படகிலிருந்து விசையுடன் ஏவப்பட்ட தொடுகயிறு நீரில் நிழல் நெளிந்து நீள பறந்து சென்று சிறுபடகைத் தொட்டு வளைந்து விழுந்தது. அதைப் பிடித்து தன் அமரத்தில் கட்டிக்கொண்டான் ஒற்றன். மூன்று கலக்காரர்களால் சுழற்றப்பட்ட சக்கரத்துடன் இணைக்கப்பட்ட கயிறு சிறுபடகை விரைந்து தன்னருகே இழுத்தது. அன்னைமடி முட்டும் பன்றிக்குட்டியென வந்த ஒற்றனின் படகு கலத்தின் விலாவைத் தொட்டதும் அவன் கயிற்றின் முடிச்சுகள் வழியாக கால் வைத்து விரைந்து தொற்றி ஏறி உள்ளே வந்து கலத்திற்குள் குதித்தான்.
சாத்யகி அவன் ஏறிக்கொண்டிருக்கையிலேயே படகின் விளிம்பைப் பற்றியபடி குனிந்து “என்ன நடந்தது?” என்றான். திருஷ்டத்யும்னன் “பதற்றம் கொள்ளாதீர் யாதவரே. நாம் அவனிடம் தனியாகவே பேச வேண்டும்” என்றபின் படகின் அறைக்குள் சென்றான். சாத்யகி திரும்பி நோக்கியபடியே வந்து அவனருகே பீடத்தில் பதற்றத்துடன் பாதி அமர்ந்து கொண்டான். ஒற்றன் உள்ளே வந்து தலைவணங்கி முகமன் கூட சொல்லாமல் “விரும்பத்தகாத செய்திகள் இளவரசே” என்றான். “கூறுக!” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் யாதவ அரசியால் ஆற்றுப்படுத்தப்பட்டவன். கிருதவர்மரையும் அக்ரூரரையும் கூர்நோக்கும் பொருட்டு என்னைப் பணித்திருந்தார்கள் அரசி” என்றான் ஒற்றன். சாத்யகி பதற்றத்துடன் இருகைகளையும் மார்பில் கட்டிக்கொண்டான்.
“துவாரகையிலிருந்து கிளம்பும் போதே அவர்கள் இருவரையும் என் அகவிழி ஒன்றால் உற்றுநோக்கிக்கொண்டிருந்தேன். இருவரும் உளம்கிளர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு கணமும் சததன்வாவை வென்று அம்மணியை கொண்டு அரசியின் காலடியில் வைப்பது குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அடைந்த உணர்வுகளும் எழுச்சிகளும் உண்மையானவை என்றே எண்ணினேன். மதுராவிற்கு வந்து படையணி நிறைவிக்கச் செய்கையிலும் படைக்கலமும் கவசமும் கொண்டு எழுகையிலும் அவர்கள் உண்மையாக இருப்பதாகவே தோன்றியது. இளவரசே, அப்படகுகளில் ஏறி அலைமேல் செல்லும்போதும் ஒருகணமும் அவர்கள் உள்ளம் ஐயமோ அசைவோ கொள்ளவில்லை என்பதை நான் உறுதியாக சொல்வேன். ஏனென்றால் ஒவ்வொரு கணமும் நான் அவர்களுடன் இருந்தேன்.”
“இங்கு காசியைக் கடந்து சததன்வாவின் அழைப்பை அடைந்து கிருஷ்ணவபுஸின் எல்லைக்குள் நுழையும்போது கூட அவர்கள் உள்ளே சென்றதுமே அவரது தலையை வெட்டி குருதி கொள்வதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். கிருதவர்மரின் கைகள் பொறுமையழிந்து துடிப்பதை நான் கண்டேன். அக்ரூரர் அடிக்கடி ‘இளையவனே, மிகைவிரைவு கொள்ளாதே. தருணம் நோக்கியே அவன் தலை கொள்ள வேண்டும்’ என்று அவரை ஆற்றுப்படுத்துவதை கண்டேன். சததன்வாவின் தலையை தானே கொய்ய வேண்டுமென்று அக்ரூரர் உறுதி கொண்டிருந்தார். அவ்வாய்ப்பை தனக்களிக்கும்படி பற்பல இன்சொற்களால் மீளமீள கிருதவர்மர் கேட்டுக்கொண்டிருந்தார். அக்ரூரர் அவர் யாதவ அரசிக்கு வாக்களித்துவிட்டதாக சொன்னார்.”
“கிருதவர்மர் தன் ஆடைக்குள் யாதவர்களின் கவர்கத்தி ஒன்றை மறைத்திருந்தார் என்பதை நான் அறிந்தேன். சியமந்தகமணியுடன் சததன்வாவைக் காணும் தருணத்திலேயே அவரை தானே கொன்றுவிடவேண்டும் என அவர் திட்டமிட்டிருந்தார். அவர்களின் படகு கிருஷ்ணவபுஸின் துறையை அடைந்தபோது சததன்வாவின் கொடியசைவைக் கண்டதுமே அக்ரூரர் எழுந்து கலமுகப்பிற்குச் சென்று இடையில் கை வைத்து நோக்கி நின்றார். அவர் நெற்றி சுருங்குவதை, விழிகளில் கடுமை எழுவதைக் கண்டதுமே அவர்தான் சததன்வாவை கொல்லப்போகிறார் என்று உணர்ந்தேன். கிருதவர்மர் அவரை நுட்பமாக திரும்பி நோக்கியபின் என்னிடம் ‘சததன்வாவை அக்ரூரர் கொல்வார் என்றால் மணியை அரசியிடம் கொடுக்கும் வாய்ப்பை எனக்கு அளிக்கும்படி அவரிடம் சொல்’ என்றார். நான் புன்னகையுடன் ‘இது நீங்கள் இருவரும் சேர்ந்து பெற்ற வெற்றியென்றே இருக்கட்டும் யாதவரே’ என்றேன்.”
“கிருதவர்மர் தலையசைத்து ‘இல்லை. அக்ரூரர் எனக்கென எதையும் விடப்போவதில்லை’ என்றார். சததன்வாவின் கொடியுடன் அவர்களின் படகுகள் அணுகி வந்தன. அக்ரூரர் திரும்பி கிருதவர்மரை அணுகி ‘இளையோனே, நமது முகங்களில் தெரியும் கடுமை அவனை எச்சரிக்கக்கூடும். நம் முகங்கள் சற்று அமைதியின்மை கொண்டிருக்கட்டும். விழிகளில் நட்பு தெரியட்டும்’ என்றார். கிருதவர்மர் ‘நாம் ஷத்ரியர் போல நடிக்கத் தெரிந்தவர்கள் அல்ல. என் தலைவனுக்கு வஞ்சம் செய்தவன் அவன். என் தலைவியின் தந்தையைக்கொன்றவன். நடிப்புக்காகக்கூட அவனிடம் நட்புகொள்ள என்னால் இயலாது’ என்றார்.”
அக்ரூரர் ‘இது நடிப்பல்ல. இதுவும் ஒருவகை போர் என்று கொள்வோம். ஒன்று செய்க! சததன்வாவும் யாதவனே. முன்பு நாம் யாதவர் மன்றுகளில் சென்று அவனுடன் போர்விளையாடி இருக்கிறோம். அவனை என் மடியில் அமர்த்தி நான் புரவி ஓர்ந்து மலைச்சரிவில் சென்றிருக்கிறேன். அந்த நாட்களை நினைவு கூர்வோம். சியமந்தகத்தை இக்கணம் மறப்போம். அவனிடம் நட்பு கூடவே வந்துள்ளோம் என்று எண்ணம் கொள்வோம். அவ்வெண்ணம் நம் உள்ளத்தில் நிறைகையில் நம் முகம் மலரும். நம் கண்களில் உண்மையான நட்பை அவன் காண்பான். அதுவே அவனை நம்ப வைக்கும்’ என்றார்.”
எரிச்சலுடன் ‘ஏன் நம்ப வேண்டும்?’ என்றார் கிருதவர்மர். ‘மூடா, சியமந்தகம் எங்கிருக்கிறது என்று சொல்ல வேண்டாமா? அவன் நெஞ்சில் அது இருந்ததென்றால் அக்கணமே அவனை கொல்வோம். இல்லையெனில் அவன் அதை சொல்வதுவரை காத்திருக்க வேண்டியிருக்கும். அவன் நம்மை நம்பாமல் அதை சொல்லப்போவதில்லை’ என்றார் அக்ரூரர். நூலேணிகளில் இறங்கி சததன்வாவின் படகுகளில் ஏறி கரை அணையும் போது இருவரும் தங்களுக்குள் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் கரை நோக்கி அமர்ந்திருந்தனர். நான் என் படைக்கலங்களுடன் காவலன் போல் அருகில் நின்றேன். அக்ரூரர் என்னிடம் ‘இளமையில் பலமுறை கன்று பொருது விழாவிற்காக நான் கூர்மபுரிக்கு சென்றிருக்கிறேன். அன்று சததன்வா மிக இளையவன். விழைவும் விரைவும் கூடிய உள்ளம் கொண்டவன். யாதவர்களில் பெரும் வீரர்களில் ஒருவனாக வளர்வான் என்று அன்றே குலமூத்தார் சொன்னார்கள். மன்று எழுந்தால் கன்று கொளாது திரும்பாதவன் என்று அவனை இளையோர் கொண்டாடினர்’ என்றார்.”
“கிருதவர்மர் அப்போது என்ன பேசவேண்டுமென ஒரு தொடக்கத்தை அடைந்து என்னிடம் திரும்பி ‘எங்கள் மன்றுக்கு வந்து மூன்றுமுறை கன்று கொண்டு சென்றிருக்கிறான். இருமுறை நானும் அவனும் தோள் பொருதி களம் நின்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அவனே வென்றிருக்கிறான்’ என்றார். ‘அந்தகக்குலத்தில் பெண் கொள்ள அவன் விழைந்தது இயல்பே’ என்றார் அக்ரூரர். ‘யமுனைக்கரையில் இருந்து விலகி குடியமர்ந்த யாதவரில் அந்தகக் குலம் முதன்மையானது. அந்தகர்களில் அவனே மாவீரன். அந்தகக்குலத்து திருமகள் அவனுக்குரியவள் என்றே அனைவரும் இளமைமுதல் சொல்லி வந்தனர்’ என்றார். பின்னர் தலையைத்திருப்பி ‘அவள் திருமகள் என்பதனாலேயே அனைவராலும் விரும்பப்பட்டவள்’ என்று தனக்கென சொல்லிக்கொண்டார்.”
“கிருதவர்மர் ‘சததன்வா இளைய யாதவரை உளமுவந்து ஏற்றிருக்கலாம். யாதவகுலம் அவனால் பெருமை கொண்டிருக்கும்’ என்றார். ‘பெண் பொருட்டும் நிலம் பொருட்டும் பூசல் கொண்டவர்கள் ஒருபோதும் இணைந்ததில்லை’ என்று நான் சொன்னேன். ‘பொன்னுக்கும் மண்ணுக்கும் அப்பால் உள்ளது புகழ். குலப் பாணர் நாவில் நின்றிருக்கும் வெற்றி. அதை அவனால் உணர முடியவில்லை’ என்றார் அக்ரூரர். கிருதவர்மர் ‘இனியாவது அவனிடம் அதை சொல்ல முடிந்தால் நன்றே’ என்றார். ‘இனி அவன் திரும்புவது எங்ஙனம் முடியும்? அவன் செய்த அருங்கொலைகள் யாதவர் குலங்களை உளம்கொதிக்க வைத்திருக்கிறது. சத்ராஜித்தின் குருதி அவன் கையில் இருக்கிறது’ என்றார் அக்ரூரர்.”
“கிருதவர்மர் ‘ஒருவகையில் நோக்கினால் இரக்கத்திற்கு உரியவன், எளியவன். ஒரு போர்க்களத்தில் படைக்கலம் கொண்டு எதிர்நின்று தலைஅறுந்து விழுந்தான் என்றால் புகழ் கொள்வான். அன்றி ஓடி ஒளிந்து பிடிபட்டு இறப்பான் என்றால் இழிவுலகில் எஞ்சுவான்’ என்றார். தலையசைத்து ‘அவன் நம் கையால் இறப்பான்’ என்று அக்ரூரர் கூறினார். அவர்கள் அச்சொற்களின் ஊடாக மெல்ல மெல்ல சததன்வாவை தங்கள் அருகே இழுத்துக்கொள்வதை கண்டேன். முதலில் இரக்கத்திற்குரியவனாக, பின்னர் இனியவனாக, இறுதியில் ஏற்றவனாக என அப்படகிலேயே அவன் உருமாறிக்கொண்டிருந்தான். துறையணைந்து படியிறங்கி மேடையேறி அங்கே விரித்த கைகளுடன் நின்ற சததன்வாவைக் கண்டதும் இருவர் முகங்களும் மலர்வதை கண்டேன்.”
“சததன்வா வெயிலுக்கென சுருங்கிய விழிகளுடன், சற்று இறுகிய உடலுடன் அக்ரூரரையும் கிருதவர்மரையும் நோக்கி நின்றார். அவர்கள் படகுப்பாலத்தில் நடந்து அணுகிய போது ஏதோ ஒரு கணத்தில் அவர்களை புதியதாகக் கண்டறிந்தது போல முகம் மலர்ந்தார். சிறிய உடல்துடிப்புடன் விரைந்து படியிறங்கி அருகே வந்து அக்ரூரரையும் கிருதவர்மரையும் மாறி மாறி தழுவிக்கொண்டு இன்சொல் சொன்னார். ‘நெடுநாட்களுக்குப் பின் என் தோள்தோழர்களைக் காணும் நல்வாய்ப்பு கொண்டேன். வருக வருக!’ என்று மீண்டும் அணைத்துக்கொண்டார். ‘எளியவனின் இச்சிறு நகரம் உங்கள் கால்களால் தொடப்படுவது ஒரு நல்லூழ். இதன்பொருட்டு என் குலமும் மூதாதையரும் உங்களை வணங்கட்டும்’ என்றார்.”
“அக்ரூரர் ‘இளைய யாதவர்களில் ஒருவனாக நீயும் தனியரசும் கொடியும் கொண்டு நிற்கக் காண்பது உவகையளிக்கிறது இளையோனே’ என்றார். ‘நீ பெருந்தோள்கொண்டவனாக இருக்கிறாய் யாதவனே’ என்றார் கிருதவர்மர். மூவரும் மாறிமாறி தோள் தழுவி நகைத்து இன்சொல்லாடி நடந்து சென்று தேரில் ஏறிக்கொள்வதை கண்டேன். இளவரசே, அக்கணம் அங்கு நிகழ்ந்தது நடிப்பல்ல என்று உணர்ந்ததும் என் உடலில் புகுந்த பதற்றத்தை நினைவு கூர்கிறேன். உண்மையான அன்புள்ளவர்கள் உடல்தொட்டிருக்க விழைவார்கள். உள்ளே வஞ்சமோ வருத்தமோ இருந்தால் உடல்தொட முடியாது கைவிலகுவதை காணலாம். கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களின் பகடை ஒன்று மெல்லப் புரண்டதை அறிந்தேன்.”
“அதை என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. பொய்யென இருந்தாலும் தன்னுள் அதை சொல்லிச் சொல்லி உள்ளத்தைப் புரட்டிக்கொள்ள மானுடரால் முடியுமென்று தோன்றியது. நாளெல்லாம் எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டிருந்தேன். என் அறைக்குச் சென்று இளைப்பாறி உடைமாற்றி அரண்மனைக்குச் சென்றபோது அங்கு சாளரங்கள் திறந்த இளம் கூடத்தின் நடுவே அவர்கள் மூவரும் அமர்ந்து பகடை ஆடுவதைக் கண்டேன். சாளரங்களின் ஒளியில் அவர்கள் முகங்கள் மின்னிக்கொண்டிருந்தன. சததன்வா சொன்ன ஏதோ ஒரு நகையாடலுக்காக இருவரும் நகைத்து முடித்து விழிகளில் அவ்வொளி எஞ்ச என்னை நோக்கி திரும்பினர். நான் தலைவணங்கி கிருதவர்மரிடம் ‘இளவரசே, செய்தி ஏதேனும் உண்டா?’ என்றேன். அவர் விழிகளில் படைக்கல நுனி தெரிந்து மறைந்தது. கைகளை வீசி ‘செய்தி இருந்தால் அழைப்பேன். செல்க!’ என்றார்.”
சாத்யகி முன்னால் நகர்ந்து “அப்போது சியமந்தகம் எங்கிருந்தது?” என்றான். “சியமந்தகம் அக்ரூரரின் மார்பில் கிடந்தது” என்றான் ஒற்றன். சாத்யகி உரக்க “அக்ரூரரின் மார்பிலா?” என்றான். “ஆம் இளவரசே, அக்ரூரரின் மார்பில்தான்” என்றான் ஒற்றன். சாத்யகி பெருமூச்சுடன் உடல் தளர்ந்தான். திருஷ்டத்யும்னன் அலைகள் ஒளிவிட்ட கங்கைப்பெருக்கை நோக்கி முகம் திருப்பி புன்னகைபுரிந்தான். சாத்யகியின் மூச்சொலிகள் கேட்டன. ஒற்றன் இருமுறை தொண்டையை செருமிக்கொண்டான்.
சாத்யகி மெல்ல “என்னதான் நிகழ்ந்திருக்கும்?” என்றான். “அவர்கள் ஒன்றிணைந்துவிட்டார்கள். இளைய யாதவருக்கு வஞ்சமிழைக்க முடிவுகொண்டுவிட்டார்கள். பிறிதொன்றுமில்லை” என்றான் ஒற்றன். சாத்யகி உரக்க “அது எப்படி? அது நிகழ்வதே அல்ல. அது நிகழ்வதே அல்ல” என்று கூவியபடி எழுந்தான். “அக்ரூரரும் கிருதவர்மருமா? என்ன சொல்கிறீர்?”
“அவ்வண்ணமன்றி பிறிது எவ்வகையிலும் நிகழ்ந்திருக்க வழியில்லை யாதவரே” என்றான் ஒற்றன். “அக்ரூரர் மார்பில் இருந்தது சியமந்தகமா? நீ உறுதியாக அறிவாயா?” என்றான் சாத்யகி. “நான் நூறுமுறை கண்ட மணி அது. ஒருமுறை கண்டாலே நம்மை வெல்லும் அருமணி அது” என்று ஒற்றன் சொன்னான். “அவர்களின் விழிகளை இதற்குள் ஆயிரம் முறை நினைவில் ஓட்டியிருப்பேன். அவர்கள் அவற்றில் இல்லை, அறியாத தெய்வம் ஒன்று குடியேறியிருந்தது.”
சாத்யகி நீள்மூச்சுடன் தளர்ந்து “என்ன இது பாஞ்சாலரே?” என்றான். “சததன்வாவின் நெஞ்சில் இருந்து அக்ரூரரின் மார்பிற்கு அது எப்படி சென்றது என்பது எளிதில் ஊய்த்துணரக்கூடியதே. கைக்குழந்தை கைநீட்டித் தாவுவதுபோல அவர்களை நோக்கி அது வந்திருக்கும்” என்று சிரித்தபடி திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஒற்றர் சொன்னது சரிதான். அதிலுறையும் தெய்வம் ஆற்றல் மிக்கது. எளியமானுடரால் எதிர்கொள்ளப்படமுடியாதது.”