இந்திரநீலம் - 22

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 3

மன்றுகூடியிருந்ததை பாமை அறியவில்லை. அவள் தன் இளங்கன்றுகளுடன் குறுங்காட்டில் இருந்தாள். பூத்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்து பசுமைவழிந்து சரிந்துசென்று ஒளியென ஓடிய சிற்றோடையில் நாணல்களாக மாறி கரைசமைப்பதை, காற்றிலாடும் அவற்றின் வெண்ணுரைக்கொத்துப் பூக்களை, அவற்றிலிருந்து எழுந்து நீரில் பாய்ந்து சிறகு நனைத்து உதறிக்கொண்டு எழுந்து சுழன்று வந்தமரும் சாம்பல்நிறமான சிறுசிட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தாள். அருகே நின்ற அவளுடைய செல்லப்பசுவாகிய சியாமையின் கரிய தோல் நீர்ச்சறுக்கிப்பூச்சிகள் பரவிய சுனைநீர்ப்படலம் போல அசைந்துகொண்டிருந்தது. வால் குழைந்து குழைந்து சுருள காதுகள் முன்குவிந்து பின்மலர குளம்புகளை புல்மெத்தைமேல் வைத்து வைத்து முன்னகர்ந்து மூக்குமடிய கீழ்த்தாடை கூழாங்கற்பற்களுடன் நீண்டு அசைய அது புல் கடித்துச் சென்றது. பசு புல் கொய்யும்போது எழும் நறுக்கொலியில் உள்ள பசியும் சுவையும் ஆயர்கள் அனைவருக்கும் விருப்பமானது. குழவி முலைகுடிக்கும் ஓசைக்கு நிகரானது அது என்று ஆயர்குடிப்பாணர் சொல்வதுண்டு. பசு கடிக்கும் புல் வளர்கிறது. புல்வெளியாக தன்னை விரித்திருக்கும் அன்னை மகிழ்ந்து சுருள் விரிந்து அகன்று தன்னை காட்டிக்கொண்டிருக்கிறாள் அப்போது.

ராகினி சிற்றாடை பறக்க குழல் கூத்தாட ஓடிவருவதை அவள் சிந்தையின்றி நோக்கி நின்றாள். மூச்சிரைக்க அருகே வந்த அவள் குனிந்து முழங்காலில் கைவைத்து நின்று “இளவரசி, அங்கே மன்றுகூடியிருக்கிறது. அவர்கள் இளைய யாதவரை பழிக்கிறார்கள்” என்றாள். பாமை நிமிர்ந்து “என்னடி?” என்றாள். “இளையஅரசரின் இறப்பை குடிமூத்தார் ஆராய்கிறார்கள்…” என்று அவள் சொல்லத்தொடங்கியதுமே புரிந்துகொண்டு பாமை எழுந்து தன் இடையாடையை சீரமைத்து குழல்நீவி செருகிக்கொண்டாள். திரும்பி கன்றுகளை நோக்கி “இவற்றை நீ பார்த்துக்கொள்ளடி” என்று ஆணையிட்டபின் ஆயர்பாடி நோக்கி விரைவின்றி நடந்தாள். அவள் செல்வதை ராகினி திகைப்புடன் நோக்கி நின்றாள். நீள்குழல் பின்குவைமேல் மெல்லத்தொட்டு ஆடியது. இடை வளைந்து குழைய சிற்றாடை சூடிய மத்தகம் மெல்ல ததும்ப பொன்னாடை விரித்த அரசபாதையில் நடப்பவள் போல, சூழ ஒலிக்கும் பல்லாயிரம் தொண்டைகளின் வாழ்த்தொலிகளை ஏற்றுக்கொண்டவள் போல, அவள் சென்றாள். ராகினி கோலுடன் மரத்தடியில் அமர்ந்து பெருமூச்சுவிட்டாள்.

பாமை ஊர்மன்றுக்கு வந்தபோது அந்தகக்குலத்தின் முதற்பூசகர் கிரீஷ்மர் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு அப்பால் மரவுரி மூடிய பீடத்தில் அமர்ந்த சத்ராஜித் தன் கைகளில் தலையை தாங்கியிருந்தார். அவரது விழிகள் சேறுவற்றி ஓரம் காய்ந்த சேற்றுக்குழிகள் போலிருந்தன. உதடுகள் கரிய அட்டைகள் போல உலர்ந்திருக்க தொண்டையில் குரல்முழை ஏறியிறங்கியது. அந்தகர்கள் அனைவரும் புலிக்குரல் கேட்ட ஆநிரைகள் போல நடுங்கியும் கிளர்ந்தும் நிலையழிந்திருந்தனர். கிரீஷ்மர் உரக்க “எந்த ஐயமும் இல்லை. சொல்லப்பட்ட சான்றுகள் அனைத்தும் ஒன்றையே சுட்டுகின்றன. சியமந்தகத்திற்காக நடந்த கொலை இது. அதை எண்ணி காத்திருந்தவர்கள் அடைந்துவிட்டனர். நாம் நம் இளையவரை இழந்துவிட்டோம்” என்றார். அந்தகர்கள் அனைவரும் கைகளில் இருந்த வளைதடிகளைத் தூக்கி கூச்சலிட்டனர். “நாம் வெல்லப்படவில்லை, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். நம் குலதெய்வம் இழிமுறையில் கவரப்பட்டிருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்றார்.

பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் “கிரீஷ்மரே, நாம் என்ன செய்யமுடியும்? இன்று விருஷ்ணிகள் தனியர்கள் அல்ல. யாதவர்குடி முழுமையும் அவர்களுடன் நின்றிருக்கிறது. துவாரகையோ பேரரசரும் அஞ்சும் பெருநகர். நாம் எளிய மலையாதவர்” என்றார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் “ஆம், நாம் போருக்கு எழமுடியாது. நாம் அவர்களிடமிருந்து நமது குலமாணிக்கத்தை வென்றெடுக்க வழி ஏதுமில்லை. ஆனால் ஒன்றுசெய்யலாம்…” அவர் உள்ள எழுச்சியால் மேலும் சில அடிகள் முன்னால் வந்து “அந்தகரே, யாதவ குடிகளனைத்தும் விருஷ்ணிகளுடன் நின்றிருப்பது எதனால்? இளைய யாதவன் மீதுள்ள பெருமதிப்பால் மட்டுமே. அவனை யாதவர்களின் பேரரசன் என்றும் உலகுய்ய வந்த உத்தமன் என்றும் சொல்லிச் சொல்லி நிறுவியிருக்கிறார்கள் அவர்களின் பாணர். நாம் அதை வெல்வோம். அவன் செய்ததென்ன என்று யாதவர் அனைவரும் அறியட்டும்… நமது பாணர் நடந்தது என்ன என்பதை பாடட்டும்” என்றார்.

கிரீஷ்மர் உரக்க “ஆம், பாடினால் போதாது. அதை நாம் நிறுவவேண்டும். யாதவரே, ஒன்று அறியுங்கள். குருதியோ கண்ணீரோ கலக்காத சொற்கள் வாழ்வதில்லை. நமது பாணன் ஒருவன் அவன் மேல் அறம் பாடட்டும். அவன் தன் சொற்களுடன் எரிபுகட்டும். அச்சொற்களும் அவனுடன் நின்றெரியவேண்டும். அவை அழியாது. காய்ந்தபுல்வெளியில் கனலென விழுந்து பரவும்” என்றார். அவரது குரலை ஏற்று “ஆம்! ஆம்!” என்றனர் யாதவர். ஒரு பாணன் எழுந்து “நான் சொல்லெடுக்கிறேன் . இளையவர் எனக்களித்த ஊனுணவால் என்னுள் ஊறிய நெய் சிதையில் எரியட்டும்” என்று கூவினான். இன்னொரு பாணன் எழுந்து “நான்! என் சொற்கள் இங்கே எரியட்டும்… அவன் மேல் நான் அறச்சொல் விடுக்கிறேன்!” என்றான். மேலுமிரு பாணர் எழுந்து கைதூக்கி “நான்! என் சொற்கள்!” என்று கூவினர். கிரீஷ்மர் “எவர் சொற்கள் நிறையுள்ளவை என நாம் முடிவெடுப்போம். யாதவரே, எளியவரின் படைக்கலம் என்பது சொல்லே. நம் பழியின் நஞ்சு தடவிய சொல்லை அவன் மேல் ஏவுவோம்” என்றார். அவை அதை ஏற்று குரலெழுப்பியது.

பாமை அவைபுகுந்தபோது அனைவரும் திரும்பி நோக்கினர். அவள் இயல்பாக அவை ஓரத்திற்கு வந்து அங்கிருந்த மூங்கில்தூணில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றாள். மூக்கில் தொங்கிய புல்லாக்கின் ஒளித்துளி அவள் இதழ்களில் விழுந்தாடியது. கன்னக்குழல் புரி ஒன்று காற்றில் நெளிந்தது. ஹரிணர் “தேவி, எங்கள் சொல்லை பொறுத்தருளவேண்டும். சியமந்தக மணி மறைந்ததைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். விருஷ்ணிகள் உங்களைத் தேடிவரவில்லை என இப்போது அறிந்தோம். அவர்கள் நாடியது எங்கள் குலமணியை மட்டுமே. அதை வஞ்சத்தால் அடைந்துவிட்டார்கள்…” என்றார். சத்ரர் “இளையவரைக் கொன்று மணியைக் கவர்ந்தவன் இளைய யாதவனேதான் இளவரசி. உறுதியான சான்றுகள் வந்துள்ளன” என்றார்.

பாமை “குலமூத்தாரே, இந்த அவையில் நான் அனைத்தையும் கேட்டறிய விழைகிறேன்” என்றாள். “எங்கள் சொற்கள்…” என சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சொல்லத்தொடங்க “நான் அவற்றை ஏற்கவில்லை” என்றாள். அவர் சினத்துடன் “நான் குடிமூத்தவன். அவையில் என்னை இழிவுசெய்யும் இச்சொற்களை நான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது…” என்று கூவ பாமை தாழ்ந்த குரலில் கூரிய விழிகளுடன் “அவையீரே, இங்கு என் கொழுநர் குறித்துச் சொல்லப்பட்ட சொற்களுக்காக இதை இக்கணமே எரித்தழிப்பேன்” என்று சொன்னாள். அவையமர்ந்திருந்தவர்கள் உடல் சிலிர்க்க, ஒரு முதியவர் “அன்னையே” என்று கைகூப்பினார். ஓரிருவர் “போதும்! அன்னை சொல்லே போதும்!” என்று கூவ ஒரு தனிக்குரல் “போதாது, அவை என்பது சான்றுகளுக்கானது. இது ஒன்றும் குலதெய்வம் சன்னதம் கொண்டெழும் ஆலயம் அல்ல” என்றது. “ஆம், அவையில் சான்றுகள் முன்வைக்கப்படட்டும்” என்றார் ஹரிணர்.

“என் பொருட்டல்ல, என் கொழுநர் பொருட்டும் அல்ல, உங்கள் பொருட்டு இங்குள்ள சான்றுகள் அனைத்தையும் கேட்க விழைகிறேன்…” என்று அவள் சொன்னாள். அச்சொற்கள் அவளிடமிருந்துதான் வருகின்றனவா என்று எண்ணத்தக்கவகையில் உணர்வுகள் அற்று சித்திரம்போலிருந்தது அவள் முகம். பிரமதவனத்தின் ஹரிணர் அவையை திரும்பி நோக்கிவிட்டு “இளவரசி அறிய என்ன நிகழ்ந்தது என மீண்டும் சொல்கிறேன்” என்றார். “ஊஷரகுலத்தவரின் கதிர்வணக்க விழாவில் அந்தகர்சார்பில் கலந்துகொள்ள பிரசேனர் அரசரின் ஆணையால் அனுப்பப்பட்டார். அவருக்கு சியமந்தக மணியை அரசரே மார்பில் அணிவித்து வழியனுப்பிவைத்தார். ஊஷரர் நம்மையும் கதிர்குலத்தார் என ஏற்கவும் அணுகவும் அது வழிவகுக்கும் என நம்பினோம்.” அவர் பாமைவை பார்த்தபோது அவள் நோக்குகிறாளா என்ற ஐயத்தை அடைந்தார். “இளையவர் சிருங்கசிலையின் தலைவர் சத்ரரும் நானும் துணைசெல்ல குலப்பூசகர் பத்ரரும் பாவகரும் தொடர இரு பாணரும் நூற்றெட்டு துணைவீரருமாக கான்புகுந்தார்.”

“நான்குநாட்கள் காட்டுக்குள் சென்றோம். அஸ்வபாதமலையின் அடியில் காளநீலத்தின் விளிம்பில் அமைந்த கஜத்ரயம் என்னும் மலைப்பாறைக்கு அருகே எங்களை ஊஷரர் சந்தித்து மேலே கொண்டுசெல்வதாக சொல்லப்பட்டிருந்தது. நான்காம் நாள் கஜத்ரயம் அரைநாள் நடையில் இருப்பதாக சொன்னார்கள். மாலையில் வரிக்கோங்கு மரத்தின் மேல் கட்டப்பட்ட பரண்குடிலில் அந்தியமைந்தோம். பிரசேனர் தங்கிய குடிலில் அவருடன் பாணர் இருவரும் நானும் சிருங்கசிலையின் தலைவர் சத்ரரும் துணையிருந்தோம். இரவு நெடுநேரம் அவர் சியமந்தக மணியை எடுத்து நோக்கி நெடுமூச்செறிந்துகொண்டிருப்பதை கண்டோம். இருளில் அந்த மணியின் நீல ஒளியில் அவர் முகம் விண்ணில் திகழும் முகில் என தெரிவதை மரவுரிக்குள் சுருண்டு குளிரில் நடுங்கியபடி நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அழுகிறார் என்று எண்ணினேன். கண்ணுக்குத்தெரியாத எவரிடமோ பேசுகிறார் என்று பட்டது.”

“காலையில் அவரை காணவில்லை” என்றார் சிருங்கசிலையின் சத்ரர். “ஹரிணர் எழுப்பிய குரலைக்கேட்டுத்தான் நான் விழிதிறந்தேன். குடிலுக்குள் பிரசேனர் இல்லை என்றதும் காலைக்கடனுக்காக சென்றிருப்பார் என எண்ணினேன். ஆனால் தனியாக காட்டுக்குள் செல்லக்கூடாதென்பது எங்கள் நெறி என்பதனால் ஏதோ பிழை இருக்கிறது என்று ஹரிணர் சொன்னார். வீரர்கள் புல்லை முகர்ந்து பிரசேனர் சென்ற பாதையை அறிந்தனர். அதைத் தொடர்ந்து சென்றபோது மலைச்சரிவின் இறுதியில் மரக்கூட்டம் சூழ்ந்த மென்சதுப்பில் பிரசேனரின் உடலை கண்டோம்.” சத்ராஜித் தேம்பியழுதபடி தன் கைகளில் முகம் புதைக்க அருகே நின்ற கிரீஷ்மர் அவர் தோளை தொட்டார். சத்ராஜித்தின் தோள்கள் குலுங்கிக்கொண்டிருந்தன. கிரீஷ்மர் திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி ஆணையிட்டார். மது வந்ததும் சத்ராஜித் இருகைகளாலும் அதை வாங்கி ஓசையெழக்குடிப்பதை அவை பதைப்புடன் நோக்கியிருந்தது. கிரீஷ்மர் சத்ராஜித்திடம் அவர் சென்று ஓய்வெடுக்கலாம் என்றார். சத்ராஜித் இல்லை என்று தலையசைத்து மேலாடையால் வாயை துடைத்தார்.

ஹரிணர் “நாங்கள் கண்ட பிரசேனரின் உடல் கூருகிர்களால் நார் நாராக கிழிக்கப்பட்டிருந்தது. குடல் எழுந்து நீண்டு கொடிச்சுருள்போல குழம்பிக்கிடக்க குருதி ஏழு வளையங்களாகப் பரவி கருமைகொண்டு களிச்சேறென்றாகி சிற்றுயிர் மொய்த்துக் கிடந்தது . நெஞ்சக்குவை மட்டும் உண்ணப்பட்டிருக்கக் கண்டோம். அப்பகுதியெங்கும் அவர் உடைகள் கிழிபட்டுப் பறந்து புல்லில் சிக்கி காற்றில் தவித்தன. இளையவர் தன் இருகைகளையும் விரித்து ஏதுமில்லை எஞ்ச என்பதுபோல கிடந்தார். தேவி, அம்முகத்தில் தெரிந்த தெளிவின் ஒளியைக் கண்டு நாங்கள் திகைத்து நின்றோம். பின் ஒரேகுரலில் அலறி அழுதோம். ஊழ்கம் கனிந்த யோகியின் முகம் கொண்டிருந்தார் எம்மவர்.” சத்ராஜித் உரக்க அழுதபடி எழுந்தார். “இளையோனே, பிரசேனா, உன்னை நான் கொன்றுவிட்டேனே, என் செல்லமே, என் தெய்வமே” என்று கூவி தன் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தார். கிரீஷ்மர் அவரை பற்றிக்கொள்ள அப்படியே கால் தளர்ந்து மீண்டும் பீடத்தில் அமர்ந்து தோள் அதிர விசும்பி அழுதார்.

மெல்லிய குரலில் ஹரிணர் தொடர்ந்தார் “இளவரசி, எமது வீரர் அப்பகுதியெங்கும் கூர்ந்தனர். அங்கே சிம்மக்காலடியை கண்டனர். குருதிபடிந்த அக்காலடித்தடம் எழுந்து அஸ்வபாதமலை மேல் ஏறி மறைந்தது. தொடர்ந்துசென்றவர்கள் மலைச்சரிவின் எல்லைவரை நோக்கி மீண்டனர். ஆகவேதான் இளையவரை சிம்மம் கொன்றது என்று எண்ணினோம். அரசரிடம் முறையாக அதை அறிவித்தோம். சிம்மத்தால் கொல்லப்படும் யாதவர்களுக்குரிய கேஸரம் என்னும் பொன்னிறமான விண்ணுலகுக்கு அவர் சென்று சேர்வதற்கான சடங்குகளை முறைப்படி செய்தோம். அவரது முகம் சிதையிலும் புன்னகையுடன் இருந்தமையால் அவர் அங்கே சென்றிருக்கிறார் என்றே எண்ணினோம். அங்கு அவர் நிறைவுடனிருக்கிறார் என்றே குலப்பூசகர் நீத்தார்நீர்முறை செய்தபோதும் சொன்னார்கள். அவருக்காக வைத்த கள்குடம் நுரையெழுந்து பொலிந்தது. அவருக்குச் சூட்டிய செம்மலர்களில் ஓரிதழ்கூட உதிரவில்லை.”

பாமை தலையசைத்தாள். ஹரிணர் சொன்னார் “ஆனால் அனைத்தும் முடிந்தபின்னர் ஒரு வினா எஞ்சியது, சியமந்தகம் எங்கே சென்றது? சிம்மம் அவரை உண்டிருந்தால் அது சியமந்தகத்துடன் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே ஒற்றர்களை அனுப்பி அந்நிலம் முழுக்க தேடச்செய்தோம். புல்லைக் கோதி சேற்றைக் கிளறி நோக்கினோம். அந்த ஓடையை அரித்தோம். சியமந்தகம் அங்கு எங்குமில்லை என்பது உறுதியானதும் ஐயம் வலுத்தது. ஆனால் வேறேதும் செய்வதற்கில்லை என்பதனால் பொறுத்தோம். ஒவ்வொருநாளும் நம் தெய்வங்கள் அளிக்கப்போகும் செய்திக்காக காத்திருந்தோம். தெய்வங்கள் நம்மை கைவிடுவதில்லை தேவி.”

அவையில் அமைதி நிறைந்திருந்தது. சத்ராஜித் மூக்கை உறிஞ்சிய ஒலி மட்டும் கேட்டது. சத்ரர் “இளவரசி, நேற்றுமுன்தினம் இங்கே துறைமுகத்து மதுச்சாலையில் ஊஷரகுலத்தவன் ஒருவன் களிமயக்கில் உளறியதை நம்மவர் கேட்டனர். அவன் இளையவர் கொல்லப்படுவதை நேரில் கண்டதாகச் சொன்னான். அவனுக்கு பணமில்லாமல் மது அளிக்கப்படவில்லை என்றால் அக்கொலைகாரனை அழைத்து மூத்தவரையும் கொல்லும்படி சொல்லப்போவதாக சொல்லிழிந்தான். அக்கணமே அவனை கொண்டுவரும்படி ஆணையிட்டோம். அவனை இங்கே தெளியவைத்து சொல்லேவினோம். அவனும் ஏழு ஊஷரகுலத்து வீரர்களும் நாங்கள் கான் புகுந்த கணம் முதலே புதருக்குள் ஒளிந்து உடன் வந்திருக்கிறார்கள். நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.”

“அன்றுகாலை இளையவர் எழுந்து செல்வதை அவர்கள் புதர்மறைவில் அமர்ந்து கண்டனர். தலைவனின் ஆணைப்படி மூவர் அவருடன் சென்றனர். இளையவர் துயிலில் நடப்பதுபோல சென்றார் என்றார்கள். நடந்துசெல்லும்போது கால்களே அவரை கொண்டுசெல்வதை உணரமுடிந்ததாம். தன் வலக்கையில் சியமந்தக மணியை வைத்து அதை நோக்கிக்கொண்டு சென்றார். அவரது முகம் மட்டும் நீலமென்வெளிச்சத்தில் ஒரு பெரிய மின்மினி போல மிதந்துசெல்வதை கண்டிருக்கிறார்கள். சிம்ஹசாயா என்னும் மலைப்பாறை அருகே அவர் சென்றபோது சிம்மத்தைப்போல் விழுந்துகிடந்த அதன் நிழல் உருக்கொண்டு சிம்மமென்றே ஆகி எதிரில் வந்திருக்கிறது. இளையவர் சிம்மத்தை நோக்கி புன்னகைசெய்தபடி கைகளை விரித்து நின்றார். அவர் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பது போல தெரிந்தது என்று ஒருவன் சொன்னான். மிகப்பெரிய சிம்மம் என்றும் அத்தகைய சிம்மத்தை அவர்கள் எவரும் கண்டதில்லை என்றும் மூவருமே சொன்னார்கள்.”

“சிம்மம் அவரை அணுகுவதைக் கண்டு எச்சரிக்கை ஒலியெழுப்பலாம் என எண்ணியிருக்கிறார்கள். ஆனால் எந்நிலையிலும் அவர்களை எவரும் அறியலாகாது என்பது தலைவனின் ஆணை என்பதனால் வாளாவிருந்துவிட்டனர். சிம்மம் இரு கால்களில் எழுந்து முன்கால்களை விரித்து அவரை வரவேற்பது போல நின்றது. அவர் அருகணைந்தபோது அது அவரை அணைப்பதுபோல தன் கைகளில் எடுத்துக்கொண்டதையும் அவர் செவியில் பேசுவதுபோல குனிந்ததையும் கண்டதாக ஒருவன் சொன்னான். அவர் அதன் கைகளில் சரிந்ததை மூவருமே கண்டனர். அவர் அலறவோ துடிக்கவோ இல்லை. இருளில் எழுந்த குருதியின் வெம்மணத்தை அவர்கள் அறிந்தனர். அவர் கொல்லப்பட்டார் என்று தெரிந்ததும் அவர்களின் தலைவன் திரும்பிவிடலாம் என்று கைகாட்டியிருக்கிறான். அவர்கள் திரும்பும்போது ஒருவன் இறுதியாக திரும்பி நோக்கினான். அங்கே நீலமணியுடலும் ஒளிரும் விழிகளும் செந்நிற இதழ்களும் கொண்ட ஒருவனின் கைகளில் இளையவர் அமைந்திருப்பதை கண்டான். அவன் கையால் தொட்டு பிறரை அழைக்க மூவருமே அவனை கண்டனர். கணநேரத்தில் அக்காட்சி மறைந்தது. சிம்மம் சென்று மறைந்த இடத்தில் இளையவரின் உடல் கிடந்தது.”

ஹரிணர் கைகளைத்தூக்கி வீசியபடி முன்னால் வந்து உரத்த குரலில் “இளவரசி அவன் தன் கார்குழலில் ஒரு மயிற்பீலியை அணிந்திருக்கிறான் என்று அடையாளம் சொல்கிறார்கள். அதைவிடப்பெரிய சான்றை எவர் சொல்லிவிடமுடியும்? இன்று பாரதவர்ஷத்தில் அவன் ஒருவனே குழலில் பீலியணியும் இளைஞன்” என்றார். பாமையின் முகம் மாறவில்லை. “குடிமூத்தாரே, அந்நாளில் துவாரகையின் தலைவர் எங்கிருந்தார் என உசாவினீரா?” என்றாள். “ஆம் இளவரசி, கேட்டறிந்தோம். அன்று துவாரகையில் யவனர்களின் ஒரு கேளிக்கை நிகழ்வு. அதில் அவர் மேடையில் அமர்ந்திருந்திருக்கிறார்” என்றார் சிருங்கசிலையின் தலைவர் சத்ரர். “அவரேதான், ஐயமே இல்லை என்கிறார்கள்.” யாதவர் சிலர் வியப்பொலி எழுப்ப ஹரிணர் திரும்பி “ஆயரே, அவன் மாயன். வித்தைகள் அறிந்தவன். அங்கே மன்றமர்ந்திருந்தவன் அவனல்ல. அன்றி இங்கு வந்து நம் இளையவரைக் கொன்றவன் அவன்! மன்று மிகத்தொலைவில் உள்ளது. மக்கள் அவனை சேய்மையில் கண்டனர். ஆனால் இங்கு இவர்கள் அண்மையில் கண்டிருக்கின்றனர்” என்றார்.

“அத்துடன் நம் இளையவரைக் கொல்ல ஏனைய வீரரால் எளிதில் இயலாது. மலர்கொய்வது போல அவரை கொன்றிருக்கிறான் என்பதே அது இளைய யாதவன் என்பதற்கான சான்று” என்றார் மலையஜபுரியின் தலைவர் அச்சுதர். யாதவர் கிளர்ந்த குரலில் “வஞ்சம்… வஞ்சத்தால் கொல்லப்பட்டார் நம் அரசர்” என்று கூவ பாமை மெல்ல நடந்து அவை முன் வந்து நின்று தலைதூக்கி “அவையீரே, அனைவருக்குமென ஒரு சொல். இளைய யாதவர் நம் இளையவரை கொல்லவில்லை. சியமந்தகமும் அவரிடம் இல்லை. இது உங்கள் குலம் காக்கும் மூதன்னையர் சொல் என்றே கொள்க!” என்றாள். ஹரிணர் ஏதோ சொல்ல வாயெடுக்க “இச்சொல்லுக்குப்பின் உள்ளது என் உயிர். இளைய யாதவர் பழிகொண்டார் என்றால் அக்கணமே உயிர்துறப்பேன்” என்று அவள் சொன்னாள். ஹரிணர் “அன்னையே, உன் சொல் மூதன்னையரின் சொல்லே என்றறிவோம். ஆனால் நீ இத்தனை நாட்களாக எங்கிருக்கிறாய் என்றே உணராத பித்துகொண்டிருந்தாய். உன்னால் அரசு சூழ்தலை அறியமுடியாது. எங்கள் சொல் இதை நம்பு. இது துவாரகையின் வஞ்சவிளையாட்டுதான்” என்றார்.

சத்ரர் “சியமந்தகம் நம்மிடம் இருக்கும் வரை யாதவரின் முழுமுதல் தலைவராக எவரும் ஆகமுடியாது இளவரசி. அதை நாள்செல்லச்செல்ல அவர் உணர்ந்துகொண்டே இருந்தார் என நாம் அறிவோம். சியமந்தகத்தை கொள்ளும்பொருட்டே அவர் இதை செய்திருக்கிறார். ஐயமே இல்லை” என்றார். பாமை திரும்பி யாதவர்களை நோக்கி “மூத்தாரே, என் சொல்லை நீங்கள் ஏற்கவில்லையா?” என்றாள். அவள் அதை மிக இயல்பாகக் கேட்டது போலிருந்தமையால் யாதவ இளைஞன் ஒருவன் “காதல்கொண்டவளின் சொற்சான்றுக்கு அப்பால் நிலைச்சான்று என ஏதும் அவனுக்குள்ளதா?” என்றான். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் “இளவரசி, இது உங்கள் மகளிர்மன்று அல்ல. இது யாதவரின் அரசுமன்று. இங்கு நின்று பேசவேண்டியவை நீட்டோலைகள் மட்டுமே” என்றார். பாமை தன் தந்தையிடம் “தந்தையே, இளையவர் அவர் விழைந்த நிறைவையே அடைந்தார் என்று கொள்க!” என்றாள். சத்ராஜித் எவரும் எண்ணியிராத விரைவுடன் எழுந்து அஞ்சியவர்போல கைகளை வீசி “போ… போய்விடு… இங்கு நில்லாதே. அவனைக்கொன்றது நானல்ல. நீ… நீதான்” என்று கூச்சலிட்டார். கால்கள் தளர பின்னால் சரிந்து கிரீஷ்மர் தோளை பற்றிக்கொண்டார். நெஞ்சில் கைவைத்து “பிரசேனா, இளையவனே” என்று அழுதபடி பீடத்தில் சரிந்தார்.

பாமை அவையை ஒருமுறை ஏறிட்டு நோக்கிவிட்டு சற்றும் மாறாத சித்திரமுகத்துடன் “மூத்தவர் அனைவரும் அறிக! இனி நான் இந்த அவை நிற்கவில்லை. அந்த நீலக்கடம்பின் அடியில் சென்று அமர்ந்திருக்கப்போகிறேன். என் சொல் இப்போதே இங்கிருந்து இளைய யாதவரை அடைவதாக! இன்றிலிருந்து பதிநான்காம்நாள் முழுநிலவு. அன்று நிறையிரவுக்குள் சியமந்தக மணியுடனும் அதைக் கவர்ந்தவனுடனும் இளைய யாதவர் என் தந்தையை அணுகவேண்டும். அந்த மணியையே கன்யாசுல்கமாகக் கொடுத்து என் கைப்பிடிக்கவேண்டும். அதுவரை ஊணுறக்கம் ஒழிவேன். அதற்குள் அவர் வரவில்லை என்றால் உயிர் துறப்பேன். இது கன்றுகள் மேல் குலம் காக்கும் அன்னையர் மேல் ஆணை” என்றாள். அவள் சொற்களை புரிந்துகொள்ளாதவர்கள் போல அனைவரும் விழிவெறித்து அமர்ந்திருக்க ஆடையை சுற்றிப்பிடித்துக்கொண்டு அவள் மன்றிலிருந்து முற்றத்திற்கு இறங்கினாள்.

மறுகணம் கொதிக்கும் நெய்க்கலம் நீர்பட்டதுபோல மன்று வெடிப்பொலியுடன் எழுந்தது. “இளவரசி, என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டபடி இரு முதியவர்கள் கைவிரித்து ஓடிவந்தனர். “நில்லுங்கள். எதற்கு இந்த வஞ்சினம்… நில்லுங்கள் இளவரசி!” அவள் சீரான நடையில் சென்று நீலக்கடம்பின் அடியில் யமுனையை நோக்கி அமர்ந்தாள். பின்னால் ஓடிவந்தவர்கள் “இளவரசி, வேண்டாம். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்… உங்கள் சொற்கள் எங்கள் அன்னையரின் சொற்கள்… வீணர்களின் சொல்லுக்காக தாங்கள் உயிர்துறக்கவேண்டாம்…” என்று கூச்சலிட்டு அழுதனர். அவளுடைய முகத்திலிருந்த சித்திரத்தன்மை விரைவிலேயே அவர்களை சொல்லிழக்கச் செய்தது. அவர்கள் எவரையும் அவள் காணவே இல்லை என்பது போல, அச்சொற்கள் எதையும் கேட்கவே இல்லை என்பது போல, அவ்விடத்திலேயே அவள் இல்லை என்பதுபோல. அவள் அமர்ந்த இடத்தைச் சூழ்ந்து நின்ற யாதவர் என்ன செய்வதென்றறியாமல் ஒருவரை ஒருவர் தோள்பற்றிக்கொண்டனர்.

ஆயர்மன்றுகளில் இருந்து அழுகுரலுடன் ஆய்ச்சியர் ஓடிவந்து அவளை சூழ்ந்தனர். மாலினி நெஞ்சிலும் தலையிலும் அடித்து அழுதபடி வந்து அவள் முன் நின்று “வேண்டாமடி… என் செல்லம் அல்லவா? நான் சென்று அவன் கால்களில் விழுகிறேன். சியமந்தகத்துடன் வரச்சொல்கிறேன். நீ நினைத்ததெல்லாம் நிகழ வைக்கிறேன். என் செல்லமே. வேண்டாம்… எழுந்து வா” என்று அழுதாள். அவள் கைகளைப்பற்றி இழுத்தபின் தளர்ந்து அருகே அமர்ந்து கண்ணீர் பெருக்கினாள். தொழுவில் கன்றுகளை சேர்த்துவிட்டு ராகினி ஓடிவந்து அவள் அருகே அமர்ந்தாள். எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் மஹதி வந்து அவளருகே ஈச்சையோலைகளை சாய்த்து வைத்து வெயில் படாது மறையமைத்தாள். கிரீஷ்மர் அச்செய்தியை ஒலையில் பொறிக்கச்செய்து துவாரகைக்கு பறவைத்தூதனுப்ப விரைந்தார். பாணர் அவளைச்சூழ்ந்து நின்று குலப்பாடல்களை பாடினர். அவள் எதையும் அறியாதவளாக நீலம்பெருகிச் சென்ற யமுனையை நோக்கி அமர்ந்திருந்தாள்.