இந்திரநீலம் - 16
பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 5
துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன் மீது கனன்று உருகுவதுபோல பந்த வெளிச்சத்தில் சிவந்திருந்தன. சூழ்ந்திருந்த முகங்களனைத்தும் எரியொளி ஏற்று தழலென தெரிந்தன. வெண்ணிற ஆடைகள் எரிந்தன. பொலனணிகள் கனன்றன. வெண்மணிகள் பற்றி எரிந்தன. செம்மணிகளோ நிறமிழந்து நீர்த்துளிகளாயின.
கால்கோள் நிகழ்வுக்கான வைதிகச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. பதினெட்டு வைதிகர் கால்கோள் அகழ்விடத்தை கங்கை நீர் தூவி தூய்மைப்படுத்தினர். வேள்விச்சாம்பலையும் அவிமிச்சத்தையும் அதனுள் இட்டு அரிமலர் தூவி வணங்கினர். கங்கை நீர் நிறைக்கப்பட்ட மூன்று பொற்குடங்கள் குழிக்குள் இடப்பட்டன. வேதநாதம் பாறைமேல் அறைந்து பின்வாங்கும் அலைகளைப்போல திருஷ்டுப்பு சந்தத்தில் எழுந்துகொண்டிருக்க சூழ்ந்தவர்கள் கூப்பிய கரங்களுடன் நின்றனர்.
வைதிகர் வினைமுடித்து முரசு ஒலிக்க வணங்கி பின்னகர்ந்தபோது குலச்சடங்குகள் தொடங்கின. யாதவர்களின் அனைத்துக்குலங்களில் இருந்தும் முதுபூசகர் தங்கள் குலச்சின்னம் பொறிக்கப்பட்ட தலைப்பாகைகளுடனும் வளைதடிகளுடனும் வண்ண ஆடைகள் அணிந்து வந்து கால்கோள் அகழ்வை சூழ்ந்து நின்றனர். அவர்களின் குலமுறைமையும் மூப்பிளமை முறைமையும் பேணப்பட்டது. அக்ரூரர் முதற் குலமூத்தாராக முன்னால் நின்று அப்பூசையை வழிநடத்தினார்.
மூங்கில் தூண்களில் கட்டப்பட்டிருந்த பன்னிரு வெண்பசுக்கள் ஓட்டிவரப்பட்டு அவர்கள் அருகே நிறுத்தப்பட்டன. செம்மணிக்கொம்புகளில் பொற்குமிழ்களும் கழுத்தில் கல்மணி ஆரங்களும் அணிவிக்கப்பட்டிருந்த பசுக்களுக்கு மலர்மாலை சூட்டி மடி வழிபாடு செய்து ஒவ்வொருவராக தொட்டு தலைசூடினர். சாணி, ஆநீர், பால், நெய், மோர் எனும் ஐந்து ஆமங்கலங்களை நீரில் கரைத்து அகழ்வைச்சுற்றியும் உள்ளேயும் தெளித்தனர். தும்பை, வெட்சி, முல்லை, மருதம், செண்பகம், தாமரை, நீலம் என்னும் ஏழு மலர்களிட்டு வழிபட்டனர்.
குலச்சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு குலத்துக்கும் சிறியவேறுபாடுகளுடன் கூடிய சடங்குகள் இருந்தன. விருஷ்ணிகள் தங்கள் தலைப்பாகையை அவிழ்த்து அதில் மலர்களை இட்டு தலையில் சுற்றிக்கட்டிக்கொண்டு மும்முறை வணங்கினர். சத்வதர்களுக்கு பசுவின் கொம்புகளையும் குளம்புகளையும் வணங்கும் வழக்கம் இருந்தது. குக்குரர் குலத்தில் அக்குலத்து மூதாதை ஒரு கொம்பை மும்முறை ஊதியபடி வடக்கு நோக்கி வேப்பிலைக்கொத்துக்களை விட்டெறிந்து வாழ்த்தும் சடங்கு இருந்தது.
சித்திரமென விழி வெறிக்க அரசர்களும் குலமூத்தாரும் இளவரசர்களும் அரசிகளும் இளமகள்களும் நோக்கி அமர்ந்திருந்தனர். சடங்குகள் நீடிக்க மெல்ல அவர்களின் உடல்கள் தொய்ந்து இயல்பாக இருக்கைகளில் படிந்தன. ஒருவருக்கொருவர் மிகமெல்லியகுரல்களிலும் கையசைவுகளிலும் பேசிக்கொண்டார்கள். அரசமேடையின் முகப்பிலேயே பாமாவுக்காக பெரிய வெள்ளி பீடம் ஒன்று போடப்பட்டிருந்தது. அவள் மேடைக்கு வந்ததும் வீரர்கள் பணிந்து அழைத்துச்சென்றதும் அரண்மனைச்சேடி அவளுக்கு அகம்படி செய்ததும் அவளுடைய இடமென்ன என்று தெளிவாகவே காட்டியது. அங்கிருந்த அத்தனை விழிகளிலும் அவர்கள் துவாரகையின் மணத்தூதை அறிந்திருந்தது தெரிந்தது. பெண்களும்கூட அதை ஏற்றுக்கொண்டுவிட்டிருப்பதும் தெரிந்தது.
பாமா மலர்க்கிளையில் அமரும் சிட்டுபோல மிக இயல்பாக வந்து பீடத்தின் மேல் ஆடை நீவி மடித்து மேலாடை சீரமைத்துக்கொண்டு அமர்ந்தாள். கூந்தலை மஹதி சீரமைக்க கீழாடையின் மடிப்பை ராகினி ஒழுங்கமைக்க அவள் எப்போதும் அங்கே ஆட்சிசெய்பவளென தோன்றினாள். எவரையும் நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் கைகளை இரு கைபீடங்கள் மேல் வைத்து முதுகை சாய்க்காமல் அமர்ந்தாள். நிகழ்ச்சி முழுக்க அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் மேல் அத்தனை விழிகளும் பதிந்திருந்ததையும் பின் அவ்வப்போது ஒவ்வொரு நோக்கும் வந்து தொட்டுச்சென்றதையும் அவள் எண்ணியதாக உடல் காட்டவில்லை.
அங்கு எழப்போகும் பெருவாயிலை அவள் முழுமையாக அணிச்செதுக்குகளுடனும் சிற்பங்களுடனும் கண்டிருந்தாள். அவளன்றி அதைக் கண்ட ஒருவனே அங்கிருக்கிறான் என உணர்ந்திருந்தாள். ஆனால் அவள் விழிதூக்கி ஒரு கணம்கூட அவனை நோக்கவில்லை. அவன் விழி தன்னை பலமுறை வந்து தொட்டுச்சென்றதை உடலாலே அறிந்தாள். அதிலிருந்த காதலைக்கூட உணர்ந்தாள். அவள் உள்ளத்தில் எக்களிப்போ மயக்கோ உருவாகவில்லை. அது எப்போதும் அப்படியே இருந்தது என்றே உணர்ந்தாள். அவள் அவனுடனேயே பிறந்து அவன் காதலிலேயே வளர்ந்து வந்திருந்தாள்.
குலச்சடங்குகள் முடிந்ததை முரசொலி காட்டியதும் அரசமேடை எங்கும் ஓர் அசைவு கடந்துசென்றது. அனைவரும் ஆடைதிருத்தி அணி செம்மையாக்கிக்கொண்டனர். பெண்களை சேடியர் குனிந்து குழல் நெறிப்படுத்தி வியர்வை ஒற்றினர். ராகினி பாமையிடம் “இன்னீர் அருந்துகிறீர்களா இளவரசி?” என்றாள். பாமா தலையசைத்து மறுத்தாள். மஹதி அவளிடம் குனிந்து “இந்த அவைக்கூடலிலேயே துவாரகைத்தலைவர் வசுதேவர் மணமுடிவை அறிவிப்பார் என்று சொன்னார்கள் இளவரசி. அவ்வண்ணமென்றால் தாங்கள் முற்றத்திற்கு செல்லவேண்டியிருக்கும். மங்கலச்சடங்குகளும் சில இருக்கும்… நீர் அருந்துங்கள்” என்றாள். பாமா மறுத்து தலையசைத்தாள்.
மாலினி மெல்ல “அரசர் சியமந்தக மணியை அணிந்திருக்கிறாரா பார். எனக்கு மறைக்கிறது” என்றாள். மஹதி எட்டிப்பார்த்து “ஆம்” என்றாள். “அது செந்நிறக்கனல் போல ஒளிவிடுகிறது…” ராகினி “அவர் அருகே ஒரு விளக்கு எரிகிறது என்றுதான் நான் நினைத்தேன்” என்றாள். “கிளம்பும்போதுதான் இளையவர் அதை நினைவுபடுத்தினார். இன்றைய விழா அல்லவா யாதவர்களின் முதற்பெருநாள். இன்றைக்கு சியமந்தகத்தை அணியாவிட்டால் பிறகெப்போது? நானும் அதுதான் முறை என்று சொன்னேன்.”
“சியமந்தகத்தை இளவரசிக்கு மணச்சீர் என அளிக்கலாம் அரசி” என்றாள் மஹதி. “என்னடி சொல்கிறாய்? அது அந்தகர்களின் குலச்சொத்து. அவர்களின் குடித்தெய்வம் அது. அதை எப்படி விருஷ்ணிகளுக்கு கொடுப்பார்கள்?” என்றாள் மாலினி. “அப்படியென்றால் இங்கே அணிந்து வந்திருக்கக் கூடாது. அத்தனை யாதவரும் அந்த மணியால் அமைதியிழந்திருக்கிறார்கள். இங்கே இளைய யாதவரை முழுமுதல் தலைவராக ஏற்றிருக்கிறார்கள். அரியதெல்லாம் அரசனுக்குரியது என்பதே நெறி. அந்த மணியை இளைய யாதவர் வைத்திருந்தால் அனைவரும் ஏற்பர். இல்லையேல் அதற்காகவே பூசல் நிகழலாம்” என்றாள் மஹதி.
“எதற்குப்பூசல்? மணி அந்தக குலத்திற்குத்தானே சூரியனால் அளிக்கப்பட்டது?” என்று மாலினி கேட்க மஹதி பெருமூச்சுடன் “ஆம், அதைத்தான் சொன்னேன்” என்றாள். “அதை எப்படி பிறருக்கு அளிக்க முடியும்?” என்றாள் மாலினி. “அரசி, வைரம் என்பது ஆறு பட்டைகள் கொண்டது என்பார்கள். இறையருள், அழகு, நல்லூழ், பேராசை, ஆணவம், அழிவு. எந்த மணியும் எப்பக்கமும் திரும்புவதே” என்று மஹதி சொல்லி அதற்குமேல் பேசவிழைவில்லை என்பதுபோல திரும்பி ராகினியிடம் “வேறு துவாலையை எடுத்து வைத்துக்கொள். இளவரசி அவைமுற்றத்துக்கு அழைக்கப்படும்போது முகம் திருத்தி அனுப்பவேண்டும்” என்றாள்.
“இங்கே எவரேனும் பூசலிடுவார்கள் என நினைக்கிறாயா?” என்று மாலினி மேலும் கேட்டாள். அவளை திரும்பி நோக்கி விழிகளை சந்தித்து “ஆம் அரசி, ஒரு பூசல் நிகழுமென என் உள்ளுணர்வு சொல்கிறது. காலையிலேயே இளையவரின் நோக்கம் அதுவாக இருந்தது. இப்போது இந்த மணச்செய்தி வந்த பின்னர் அது சற்றே கூடியிருக்கிறது” என்றாள். மாலினி சிரித்து “பூசல் நிகழட்டும். யாதவர்கள் பொறாமை கொண்டதை சூதர்கள் பாடுவார்களல்லவா?” என்றாள். மஹதி மாலினியை சற்று சலிப்புடனும் இரக்கத்துடனும் நோக்கி “அரசி, நான் சொல்வது அதை அல்ல” என்றாள்.
“இளையவர் காலையிலேயே சியமந்தகத்தை எடுத்துக் கொடுத்தாராம். அவர்தான் அதை களிந்தகத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறார். அந்தகர்கள் தங்கள் அடையாளத்தை விடக்கூடாதென்று அவர்தான் சொன்னாராம்… மணச்செய்தி வந்தபோதுகூட அவர் உடனே ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை, அந்தகக் குலத்து மூத்தாரவை ஒன்றைக் கூட்டி அவர்களிடம் கேட்டபின் சொல்லலாம் என்று சொல்லி ஓரிருநாட்கள் கடந்தபின் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்றுதான் சொன்னார். எனக்கும் அதுவே உகந்தது என்று பின்னர் தோன்றியது” என்றாள் மாலினி.
தொடர்ந்து அவள் “ஏனென்றால் எனக்கு விருஷ்ணிகளை தெரியும். அக்ரூரரோ இளைய யாதவரோ வசுதேவரோ மட்டும் விருஷ்ணிகள் அல்ல. விருஷ்ணிகுலத்தில் வெறும் ஆணவம் மட்டும் கொண்ட எத்தனையோபேர் இருக்கிறார்கள். இப்போது துவாரகை அமையும்போது விருஷ்ணிகுலம்தான் யாதவர்களில் முதன்மையானது என்ற மிதப்பு அவர்களிடம் இருக்கிறது. அந்தகக்குலம் விருஷ்ணிகளின் மண உறவுக்காக ஏங்கி தவம் செய்தது என்று அவர்கள் பின்னாளில் சொல்லக்கூடாதல்லவா?” என்றாள்.
சற்று பொறுமையிழந்து “அரசி, தாங்களும் விருஷ்ணிகுலம்தானே?” என்றாள் ராகினி. அதை அப்போதுதான் உணர்ந்தவள் போல திகைத்த மாலினி “ஆம், இல்லை என்றா சொன்னேன்? ஆனால் நான் அந்தகக் குலத்திற்கு அல்லவா அரசி?” என்றாள். விட்டுவிடு என்று மஹதி விழியசைக்க ராகினி உதட்டைச்சுழித்தபடி வேறுதிசையை நோக்கினாள். “அந்தகர்களிடம் சியமந்தகம் இருப்பது அவர்களை ஒருபடிமேலாக காட்டும் என்றுதான் எனக்குப்படுகிறது” என்றாள் மாலினி. எவரும் ஒன்றும் சொல்லாததை உணர்ந்து “சியமந்தகம் எளிய வைரம் அல்ல. அது முதுமூதாதை வீரசேனருக்கு சூரியனே அளித்தது அல்லவா?” என்றாள்.
அக்ரூரர் எழுந்து கைகளை தூக்கியதும் அவையில் இருந்த ஓசைகள் அவிந்தன. முரசு மும்முறை அதிர்ந்து அமைய சங்கு எழுந்து ஓய்ந்தது. அக்ரூரர் “அவையீரே, கால்கோள் சடங்கின் முடிவாக இப்போது வஞ்சினம் என்னும் சடங்கு. நமது நிலங்களின் மண்கலந்த அரிமலர்குவையை கால்கோள் அகழ்வில் இட்டு மூடியதும் இங்கு வந்துள்ள யாதவ அரசரும் குடிமூத்தாரும் இந்தப்பெருவாயிலுக்கு முன்வந்து தங்கள் வாளை உருவி இதன்முன் தாழ்த்தி தங்கள் முழுதளிப்பை அறிவிக்கவேண்டும். விழா முடிந்ததும் விடியல் வரை உண்டாட்டு நிகழும்” என்றார்.
ஏழு குலப்பூசகர் இணைந்து உருளியில் இருந்த மண்மலரரிக்கலவையை கைகளால் அள்ளி இரு குழிகளிலும் போட்டனர். மங்கல இசை எழுந்து சூழ குரவையொலிகள் இணைந்துகொண்டன. உருளியில் சிறிது எஞ்சிய மண்ணை குலப்பூசகர் தங்கள் சென்னியில் சூடிக்கொண்டனர். அவர்கள் வணங்கி பின்னகர்ந்ததும் கூடிநின்றவர்களில் ஒரு முதியவர் தெய்வம் எழுந்ததுபோல கைகளை விரித்தபடி முன்னால் வந்து “வாழ்க பெருவாயில்! வாழ்க யாதவப்பெருங்குலம்! வாழ்க பாரதவர்ஷம்!” என்று கூவினார். கூட்டம் அதை ஏற்று வாழ்த்தொலி எழுப்பியது. “அறம் வளர்க! வெற்றி சூழ்க! ஆழியும் சங்கும் அகிலமாள்க!” என்று அவர் கூவியதை ஏற்று வீரர்கள் கூவினர்.
அக்ரூரர் கைகாட்ட யாதவப்பெருங்குடிகளின் மூத்தவர் ஒவ்வொருவராக வந்து பெருவாயிலின் அகழ்வை வணங்கி வாளை உருவித்தாழ்த்தி வஞ்சினம் உரைத்து மீண்டனர். “என் உயிரும் என் சொல்லும் என் குடியும் என் குலமும் முழுதளிக்கப்படுகிறது. இப்பெருவாயில் என் தெய்வமாகிறது. ஓம் ஓம் ஓம்” என்று அவர்கள் கூறியதும் முரசும் கொம்பும் சங்கும் இணைந்து அதை ஏற்றொலித்தன. கூடிநின்றவர்கள் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்ற ஒலி முழக்கம் போல எழுந்தது.
முரசுகளும் வாழ்த்துகளும் சூழ ஒவ்வொருவராக வந்து வாள்தாழ்த்தி வஞ்சினம் உரைத்துச்சென்றனர். குந்திபோஜரும் தேவகரும் வந்து வஞ்சினம் உரைத்துச்சென்றபோது “அரசர் அசையாமல் அமர்ந்திருக்கிறார்” என்றாள் மாலினி. “குலமுறைப்படி அந்தகர்கள் இறுதியாக பிரிந்து வந்தவர்கள். ஆகவே முறைமை இறுதியாகவே வரும்” என்றாள் மஹதி. “சிறியவர் இறுக்கமாக நின்றிருக்கிறார்” என்று ராகினி மெல்ல சொல்ல மாலினி “அவரும் சேர்ந்து வஞ்சினம் உரைக்கவேண்டும் அல்லவா?” என்று பொருளில்லாமல் சொன்னாள்.
சதபதத்தின் அரசர் ஹ்ருதீகரும் மைந்தர் கிருதவர்மனும் வந்து வாழ்த்துரைத்தனர். கூர்மபுரியின் கிருதாக்னி எழுந்து நின்றபின் திரும்பி சத்ராஜித்தை பார்த்தார். அப்போதே அங்கிருந்த அரசர்கள் ஏதோ பிழையை உணர்ந்துவிட்டனர். அக்ரூரர் திரும்பி வசுதேவரிடம் ஏதோ சொல்ல வசுதேவரின் அமைச்சர் பிரகதர் உடல் குலுங்க மைய மேடையிலிருந்து இறங்கி அரசர்மேடையை நோக்கி ஓடினார். கிருதாக்னி தன் மைந்தருடன் வந்து வாள்தாழ்த்தி வஞ்சினம் உரைத்துவிட்டு முதுகு காட்டாமல் பின்னகர்ந்து மேடையில் ஏறியபின்னரும் சத்ராஜித் அசையாமல் அமர்ந்திருந்தார்.
பிரகதர் அவரிடம் குனிந்து ஏதோ சொல்ல அவர் தலையை திருப்பாமல் ஓரிரு சொற்களில் மறுமொழி உரைப்பது தெரிந்தது. மீண்டும் இருமுறை பேசிவிட்டு பிரகதர் ஓடிவந்து அக்ரூரரிடம் பேச வசுதேவர் தலைசாய்த்து அதை கேட்டுக்கொண்டார். பலராமர் எழுந்து வந்து இடையில் கையை வைத்து நின்று “என்ன என்ன?” என்று வினவுவது அனைவருக்கும் கேட்டது. அங்கு நிகழ்வது எதையுமே அறியாதவன் போலிருந்தான் கிருஷ்ணன். பாமா அங்கே இல்லாதவள் போலிருந்தாள்.
கூட்டம் முழுக்க அமைதிபரவியது. அனைவர் விழிகளும் சத்ராஜித் மேல் பதிந்திருக்க பந்தத்தழல்கள் ஆடும் ஒலியையே கேட்கமுடியுமென்று தோன்றியது. அக்ரூரர் கூட்டத்தை பதற்றத்துடன் நோக்கிவிட்டு அவரே இறங்கிச்சென்று அரசமேடையேறி குனிந்து சத்ராஜித்திடம் பேசினார். அவர்கள் பேசுவதை பல்லாயிரம் விழிகள் நோக்கி நின்றன. அந்தப்பேச்சுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதுபோல பிரசேனர் விரைப்புடன் வேறெங்கோ நோக்கி நின்றார். சத்ராஜித்தின் உடலசைவுகளில் அக்கூட்டத்தை எரிச்சல்படுத்திய ஒன்று இருந்தது. எவரோ எங்கோ ஏதோ சொல்ல கூட்டம் சினம் கொண்ட பெருமிருகம்போல மெல்ல உறுமலோசை எழுப்பியது.
அக்ரூரர் திரும்பி பிரசேனரிடம் பேச அவர் மிகுந்த பணிவுடன் உடல்குழைத்து தன் தமையனை சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். பலராமர் சினத்துடன் திரும்பி உரத்த குரலில் “என்ன அங்கே? என்ன சொல்கிறார்கள் அக்ரூரரே? அவர்களுக்கு ஏதேனும் சொல்வதற்கிருந்தால் எழுந்து சொல்லட்டும்” என்றார். அக்ரூரர் “இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார். “என்ன பேச்சு? அத்தனை யாதவர்களும் செய்வதை இவர்கள் ஏன் செய்யக்கூடாது? ” என்றார்.
பிரசேனர் “அத்தனை யாதவர்களும் நாங்களும் நிகரல்ல. எங்களுக்கு தனி முறைமைகள் உள்ளன” என்றார். “என்ன முறைமைகள்? அதை சொல்லுங்கள்” என்று பலராமர் கூவ பிரசேனர் “மூத்தவரே, நீங்களே அதை அவை முன் சொல்லுங்கள்” என்றார். சத்ராஜித் ஒரு கணம் தயங்கியபின் தொடையில் கையூன்றி எழுந்து கைகூப்பி நின்றார். கூட்டம் முற்றமைதி கொண்டது. சத்ராஜித் “யாதவப்பெருங்குடிகளே, நாங்கள் சூரியதேவனால் வாழ்த்தப்பட்டவர்கள். நூற்றாண்டுகளுக்கு முன் எங்கள் குலமூதாதை வீரசேனர் காமகுரோத மோகங்களை வென்று சூரியனை கண்முன் வரவழைத்துப்பெற்றுக்கொண்ட சியமந்தக மணிக்கு உரிமையாளர்கள் நாங்கள்” என்றார்.
தன் மார்பில் கிடந்த மணியை தூக்கிக்காட்டி “இந்த மணி சூரியனின் சிறுவடிவம். இதை அணிந்திருப்பவன் சூரியனேதான் என்கின்றனர். நான் எளியவன், ஆனால் என் மார்பில் இது அணிசெய்வது வரை சூரியனுக்கு நிகரானவன். மண்ணில் எவர் முன்பும் நான் தலைவணங்கலாகாது. எந்த தெய்வத்தையும் சூரியனுக்கு நிகர்வைக்கலாகாது. எந்த அடிகளிலும் என் வாள் தழையலாகாது” என்றார்.
அக்ரூரர் “களிந்தரே, முன்பு நீர் யாதவரின் முன் வாள்தாழ்த்தினீர்” என்றார். “ஆம், அது ஒரு போருக்காக. அதை நான் செய்யலாம். ஆனால் இங்கே இந்தத் தோரணவாயில் முன் வாள்தாழ்த்தினால் இதை நான் தெய்வமென்று ஏற்றதாக பொருள். வாழ்நாளில் என்றென்றைக்குமாக இதற்கு கட்டுப்பட்டதாக பொருள். அது என் தெய்வத்துக்கு எதிரான வஞ்சினம். அதை நான் எந்நிலையிலும் செய்யமுடியாது” என்றார்.
பலராமர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி மேடையிலிருந்து இறங்கிவந்து “அடேய், அந்தகா! மூடா! நீ எவருக்கும் நிகரல்ல என்றால் இங்கே அதை மன்றுமுன் காட்டு. வா, வந்து என்னுடன் தோள்பொருது!” என்றார். அக்ரூரர் இறங்கிச்சென்று பலராமரை தடுத்து தோள்களைப்பற்றி “வேண்டாம்… இது அதற்கான இடமல்ல” என்றார். “இந்த நகரை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இவன் நம்மை எதிரியென எண்ணுகிறான்… நாம் இவனை இங்கேயே அழித்தாகவேண்டும்” என்று பலராமர் கூவினார்.
“என்னை அழிக்க உங்களால் முடியும் யாதவரே. ஆனால் என்னை பணியவைக்க முடியாது” என்று சத்ராஜித் கூவினார். பிரசேனர் “விருந்துக்கு அழைத்து வஞ்சக்கொலை செய்வது விருஷ்ணிகளின் மரபு என்றால் அதை செய்யுங்கள்” என்றார். “சீ, பதரே. நீதான் இதையெல்லாம் செய்கிறாய்” என்று கூவியபடி பலராமர் மீண்டும் பாய அக்ரூரர் அவரை இறுகப்பற்றி “விலகுங்கள் இளவரசே. நான் ஆணையிடுகிறேன்… விலகுங்கள்!” என்றார்.
விருஷ்ணி குலத்தவரான கர்க்கர் “அந்தகரே, உங்கள் குலமுறைமைகளை நாங்கள் அறியவேண்டியதில்லை. நீங்கள் இங்குள்ள யாதவக்கூட்டமைப்புடன் இணைகிறீர்களா இல்லையா என்பதே எங்கள் வினா” என்றார். “யாதவக்கூட்டமைப்பு எங்களை ஏற்றுக்கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்கு மாற்று எண்ணம் இல்லை. ஆனால் ஒருபோதும் ஒருவர் முன்னும் அந்தகர் தலைவணங்கமாட்டார்கள்” என்றார் சத்ராஜித். கூட்டம் சினம் கொண்டு எழுந்த ஒற்றைப்பெருமிருகமாக ஒலியெழுப்பியது. கூட்டத்தின் விளிம்பு ததும்பித்ததும்பி அருகே வந்தது.
கைகால்கள் சினத்தால் ஆட எழுந்த போஜகுலத்து தனகர் “அந்தகரே, அப்படியென்றால் இங்கு விருஷ்ணிகள் முன் தலைவணங்கிய அத்தனைபேரையும் உங்களைவிட எளியவர்களாக எண்ணுகிறீர்களா?” என்றார். “ஆம், அதில் என்ன ஐயம்? தலைவணங்கியவர்கள் தங்கள் தாழ்வை ஏற்கிறார்கள். சியமந்தக மணி இருப்பது வரை நாங்கள் அனைவரையும் விட மேலானவர்களே” என்றார் சத்ராஜித். ஒருகணம் மேடையிலும் கீழேயும் யாதவர்கள் திகைத்து சொல்லிழந்து நின்றனர். பின்னர் பேரோசையுடன் கூச்சலிட்டபடி மேடைநோக்கி வந்தனர்.
அக்ரூரர் கைகளைக் காட்டி தடுத்ததை அவர்கள் அறியவில்லை. சிலர் வாள்களை உருவியபடி முன்னால் வந்தனர். மாலினி “என்னடி, ஏன் பூசலிடுகிறார்கள்? என்ன நடக்கிறது?” என்று கூவி எழுந்துவிட்டாள். மையமேடையில் கிருஷ்ணனும் அரசியர்மேடையில் பாமாவும் மட்டுமே எதையும் அறியாதவர் போலிருந்தனர். அக்ரூரர் கைகாட்ட யாதவ வீரர்கள் பாய்ந்து வேல்களாலும் வாள்களாலும் வேலியமைத்து கூட்டத்தை தடுத்தனர். கரைகளுக்கு அப்பால் அலையடிக்கும் ஏரி போல முட்டிமோதியது கூட்டம்.
விருஷ்ணிகுலத்தலைவர் தசகர் கைகளைத் தூக்கி “நாங்கள் கோருவது ஒன்றே. எங்கள் குலமுறைகளை ஏற்று இவ்வுறுதியை மேற்கொள்ளாவிட்டால் அந்தகரை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார். யாதவகுலத்து மூத்தார் அனைவரும் தங்கள் வளைதடிகளை தூக்கி “ஆம் ஆம்” என்று கூவினர். “நாங்கள் எங்கள் சொற்களை சொல்லிவிட்டோம். எங்களுக்கு சூரியனன்றி அரசனும் இறைவனும் இல்லை. சியமந்தக மணி அன்றி நாங்கள் சூடும் அடையாளமும் பிறிதில்லை” என்றார் பிரசேனர்.
“அவ்வண்ணமென்றால் யாதவக்கூட்டமைப்பில் இருந்து உங்களை வெளியேற்றுவோம்” என்று போஜகுலத்து தனகர் கூவினார். “அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கதிரவன் அருளிருக்க எங்களுக்கு தோல்வி என்பதே இல்லை” என்றார் சத்ராஜித். “இனி என்ன தயக்கம்? இப்போதே அந்தகர்களை யாதவக்கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுவோம்” என்றார் ஷைனிய குலத்தலைவர் சுருதசோமர். கைகளைக் கூப்பி உரத்தகுரலில் “இருங்கள், பொறுங்கள். நாம் பேசுவோம்” என்று அக்ரூரர் சொன்னார். “என்ன பேசுவது? அவர்கள் முடிவெடுத்துவிட்டனர். துவாரகை என்பது யாதவர்களின் கொடி. அதை ஏற்காதவர்களுக்கு இங்கென்ன வேலை?” என்று பலராமர் கூவினார்.
பிரசேனர் “எழுந்திருங்கள் மூத்தவரே, நம்மை வெளியேற்ற இவர்கள் யார்? இவர்களை நம்பியா நாம் இருக்கிறோம்?” என்றார். சத்ராஜித் எழுந்ததும் அக்ரூரர் “வேண்டாம் அந்தகரே, நாம் பேசுவோம்” என்றார். வசுதேவர் “அக்ரூரரே, பேசமுடியாது. அந்தகர்களில் இளையோன் இம்முடிவை பலநாட்களுக்கு முன்னரே எடுத்திருக்கவேண்டும்” என்றார். அக்ரூரர் திகைப்புடன் “அவனா?” என்றார். “ஆம், அவன் இதை நடத்திக்கொண்டு செல்கிறான்” என்றார் வசுதேவர். பலராமர் “இறுதியாக நான் அறிவிக்கிறேன், பெருவாயில் முன் வாள்தாழ்த்தாத எவருக்கும் துவாரகையில் இடமில்லை” என்றார். யாதவர்கள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டனர்.
விருஷ்ணிகுலத்தலைவர் தசகர் ”நாங்கள் இதோ அறிவிக்கிறோம், விருஷ்ணிகுலத்துக்கும் அந்தகர்களுக்கும் இனி எத்தொடர்பும் இல்லை” என்றார். ஷைனியகுலத்தலைவர் சுருதசோமர் “நாங்களும் அறிவிக்கிறோம்” என்றார். குக்குர குலத்து சமீகர் “இதோ எங்கள் குலத்தின் முடிவை அறிவிக்கிறோம். எங்கள் நோக்கில் இனிமேல் அந்தகர்கள் யாதவர்களே அல்ல” என்றார் . அங்கிருந்த அனைத்து குலத்தலைவர்களும் பூசகர்களும் தங்கள் வளைதடிகளைத் தூக்கி அதை ஏற்று ஒலியெழுப்பினர்.
புன்னகை மாறாத முகத்துடன் அமர்ந்திருந்த கிருஷ்ணனை அந்தக் கொந்தளிப்பில் அனைவரும் மறந்துவிட்டதாகவே தோன்றியது. அக்ரூரர் “இளைய யாதவர் என்ன சொல்கிறார்?” என்றபோதுதான் அவர்கள் திரும்பி அவனை பார்த்தனர். அவன் புன்னகையைக் கண்டதும் மெல்ல அனைவரும் அமைதியானார்கள். கிருஷ்ணன் “நான் யாதவன். யாதவக்குலச்சபைகளுக்கு கட்டுப்பட்டவன்” என்றான். பலராமர் “இனி என்ன வினா? இதோ அந்தகர்களுக்கு நான் ஆணையிடுகிறேன். வாள்தாழ்த்தி வணங்குங்கள். அரியதெல்லாம் அரசனுக்குரியது என்பதனால் சியமந்தக மணியை உடனே துவாரகையின் கருவூலத்திற்கு அளியுங்கள். இல்லையேல் இக்கணமே நகர் நீங்குங்கள்” என்றார்.
சத்ராஜித் எழுந்ததும் பலராமர் “ஆனால் ஒன்றை நினைவில்கொள்ளுங்கள்… எங்கள் நண்பர்கள் அல்லாதவர்கள் எதிரிகளே. எதிரியை வேருடன் அழிப்பதே துவாரகையின் கொள்கை” என்றார். பிரசேனர் “அஞ்சி அமைவது அந்தகர் வழக்கம் அல்ல, விருஷ்ணிகுலத்தவரே” என்றார். திரும்பி “செல்வோம் மூத்தவரே” என்றபடி படிகளில் இறங்கினார். மாலினி “என்ன செய்கிறார்கள்? ஏன் செல்கிறார்கள்?” என்றாள். “நாம் பேரவையில் இருந்து வெளியேறுகிறோம் அரசி. கிளம்புங்கள்” என்று சொல்லி அவள் ஆடையை அள்ளி தோளிலிட்டாள் மஹதி.
“ஏன்? எதற்காக நாம் வெளியேற வேண்டும்? என் மகள் அல்லவா யாதவர்களின் அரசி?” என்றாள் மாலினி. சத்ராஜித் மேடையைவிட்டு இறங்கியதும் அக்ரூரர் திரும்பி உரக்க “ஹரிணபதத்தின் இளவரசி, தங்களை தன் மணமகளாக இளைய யாதவர் ஏற்றிருக்கிறார். மலர்கொண்டு வந்து முறைபேசிவிட்டிருக்கிறோம். தாங்கள் அவரை உளமார ஏற்றிருந்தால் தாங்கள் தந்தையுடன் செல்லவேண்டியதில்லை. துவாரகையின் பேரரசியாக இங்கே இருக்கலாம். அரசகுலமுறைப்படி அது சுயம்வரமென்றே கொள்ளப்படும். வைதிகர் வாழ்த்துவர்” என்றார்.
விருஷ்ணிகுலத்து தசகர் “யாதவப்பெண்ணுக்கு விரும்பியவனை ஏற்க முற்றுரிமை உள்ளது இளவரசி” என்றார். பாமா தலையை நிமிர்த்தி விழிகள் தொலைவை நோக்க அசைவற்று அமர்ந்திருந்தாள். மஹதி “நீ வரவேண்டியதில்லை இளவரசி” என்றாள். “ஆம், இது உங்கள் நகரம் இளவரசி” என்றாள் ராகினி. மாலினி “ஆம் பாமா, நீ வந்தால் மீண்டும் இந்நகருக்கு வரவே முடியாது. அந்தகக் குலம் உன்னை இளைய யாதவர் கொள்வதையும் ஏற்காது. இங்கேயே இருந்துவிடடீ” என்றாள்.
அப்பால் மொத்தக் கூட்டமும் பாமாவை நோக்கி நின்றிருந்தது. கீழிறங்கிய சத்ராஜித் இடையில் இருந்த வாளில் கையை வைத்தபடி நோக்கி நின்றார். அருகே பிரசேனர் மீசையை நீவியபடி நின்றார். பாமா மெல்லிய குரலில் “ராகினி” என அழைத்தாள். “என் சொற்களை உரக்க அவைமுன் சொல். என் தந்தைக்குரியவள் நான். கன்யாசுல்கம் அளித்து கன்யாதானமாக என்னை பெற்றால் மட்டுமே நான் இளைய யாதவருக்குரியவள் ஆவேன். இதுநாள் வரை என்னை வளர்த்த என் தந்தையையும் குலத்தையும் உதறி வர என்னால் முடியாது.”
ராகினி “இளவரசி” என்றாள். “ஆனால், இப்பிறவியில் இனி ஒரு காலடியை நான் விழிகளால் நோக்கமாட்டேன். அதையும் இந்த அவையிலேயே சொல்லிவிடு” என்றபின் பாமா எழுந்துகொண்டாள். ராகினி உரக்க அதை கூவிச் சொன்னதும் பாமா கைகூப்பினாள். அசைவற்று ஒலியற்று நின்ற கூட்டம் வெடித்தெழுந்தது போல “யாதவப்பேரரசி வாழ்க!” என்று குரலெழுப்பியது. பாமா கைகூப்பி அனைவரையும் வணங்கியபின் தன் குழலை சீராக எடுத்து பின்னால் இட்டு ஆடைமடிப்புகளை ஒழுங்கமைத்து மெல்ல காலடி எடுத்துவைத்து திரும்பிச்சென்றாள்.