இந்திரநீலம் - 12

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 1

யமுனையின் படகுத்துறையில் வண்ணக்கொடிகள் பறக்கும் ஏழு அணிப்படகுகள் அணைந்ததை சத்யபாமையின் தோழி ராகினிதான் முதலில் பார்த்தாள். “யாரது படித்துறையில்?” என்று நீண்ட கழுத்தை நீட்டி நோக்கியபோது அவை வணிகப்படகுகள் அல்ல என்று அறிந்தாள். வியப்புடன் “அவை அணிப்படகுகள் அல்லவா?” என்றாள்.

மஹதி எட்டிப்பார்த்து “மரங்கொத்திக் கொடிகள். அவை பார்ஸ்வ குலத்தவருக்குரியவை அல்லவா? எங்கு வருகிறார்கள்?” என்று சொன்னதுமே அவளுக்கு புலப்பட்டுவிட்டது. “ஏடி, உள்ளே சென்று அரசியிடம் சொல். விருந்து வந்துகொண்டிருக்கிறது” என்றாள். “என்ன விருந்து?” என்றாள் ராகினி. அதற்குள் ஆய்ச்சி ஒருத்தி புரிந்துகொண்டாள். “மணத்தூது வருகிறது. அரசரும் நீண்டநாளாக இதைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார் என்றார்கள்” என்றாள்.

ராகினி ஒருகணம் கடந்து அதைப்புரிந்துகொண்டு திரும்பி சிற்றாடையை அள்ளிக்கொண்டு துள்ளி ஓடி இல்லத்திற்குள் சென்று சிறுதிண்ணையில் மலர்தொடுத்துக்கொண்டிருந்த சத்யபாமையை அணுகி “எழுந்திரடீ. உன்னை மணம்பேச வருகிறார்கள்” என்றாள். சத்யபாமா கனவு நிறைந்த விழிகளுடன் நிமிர்ந்து “என்ன?” என்றாள். ராகினி படபடப்புடன் அமர்ந்துகொண்டு “உன்னை மணம்பேச பார்ஸ்வகுடியினர் வருகிறார்கள். யமுனையில் ஏழு அணிப்படகுகள் அணைந்துள்ளன. குலமூத்தாரும் தந்தையுமாக சததன்வா வருகிறார் என்றாள் செவிலியன்னை” என்றாள்.

அப்போதும் சொற்கள் சத்யபாமைக்கு பொருளாகவில்லை. “எவரை?” என்றாள். “என்னை, போதுமா? இங்கே மணம்பேச எவரிருக்கிறார்கள்?” என்றாள் ராகினி. “உன்னைத்தான்… எழுந்திரு. பட்டும் பொன்னும் அணிந்துகொள். பொட்டிட்டு பூச்சூடு… அன்னை இதோ வருவார்கள்.” அவள் பேசிக்கொண்டிருக்கையிலேயே மாலினி ஆடை ஒலிக்க அணுகி வந்து “ஏடீ, என்ன செய்கிறாய்? எழுந்து அணிசெய்துகொள். உன் தந்தையின் ஆணை” என்றாள். ராகினி “நான் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன் அரசி…” என்றாள். மாலினி “இப்படி சொல்லிக்கொள்ளாமல் வருகிறார்கள்… எப்போது அமுது சித்தமாகவேண்டுமென தெரியவில்லையே” என்று புலம்பியபடியே உள்ளே ஓடினாள்.

ராகினி “எழுந்துவந்து நோக்கு… உன்னை மணமாலை தேடிவரும் சித்திரம் உன் நினைவில் நிற்கவேண்டுமல்லவா?” என்று கைபற்றி எழுப்பினாள். சத்யபாமா எழுந்தபோது மடியிலிருந்து மலர்கள் உதிர்ந்தன. “என்னடி இது? மலர்தொடுக்கும் அழகா இது? ஒரு கண்ணியும் இறுகவில்லையே… கனவுகண்டு அமைந்தாயா?” என்றாள் ராகினி. உலர்ந்த இதழ்களும் கன்றியதுபோன்ற முகமுமாக சத்யபாமா “நான் மலரை நோக்கவில்லையடி” என்றாள். “எதைத்தான் நோக்கினாய் இத்தனை நேரம்?” என்ற ராகினி “சரி, மணச்செய்தி வந்ததும் நல்லதே. உன் கனவு கனியட்டும்… வா” என்று கைபற்றி இழுத்தாள்.

சத்யபாமா அவளுடன் சென்று ஏணி மேல் ஏறி மாடம் மீது நின்று நோக்கினாள். செந்நிறச் சித்திரப்பாய்கள் ஒவ்வொன்றாக சுருங்க கண்ணெதிரே வாடும் மலர்போல படகுகள் கரையை அடைந்தன. முதல்படகிலிருந்த காவலர் இறங்கி பலகைகளை நீட்டி படகின் மேல் வைத்தனர். உள்ளிருந்து பார்ஸ்வ குலத்தின் மரங்கொத்திக் கொடியுடன் ஒருவன் இறங்க தொடர்ந்து எழுவர் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் முழக்கியபடி வந்தனர். “மங்கல இசையுடன் வருகிறார்கள்… செவிலியன்னை படகில் இசைச்சூதர் இருப்பதைப் பார்த்துத்தான் சொல்லியிருக்கிறாள்” என்றாள் ராகினி.

சத்யபாமா பொருள் திரளாத விழிகளுடன் நோக்கி நின்றாள். “விழிகளால் அள்ளிக்கொள்ளடி… நீ எண்ணி எண்ணி துலக்கிவைக்கும் காட்சியென இது திகழவிருக்கிறது” என்றாள் ராகினி. யார் அவள் என்பதுபோல சத்யபாமா திரும்பி நோக்கினாள். படகிலிருந்து பார்ஸ்வகுடி ஆளும் கூர்மபுரியின் அரசர் கிருதாக்னி இறங்க அவருக்குப்பின்னால் சததன்வா இறங்கினான். அப்போதுதான் சத்யபாமா அக்காட்சிக்கு என்ன பொருள் என்று உணர்ந்து ராகினியின் கையைப்பற்றி “எனக்காகவா வருகிறார்கள்?” என்றாள். “ஆம், உனக்காகத்தான். பலநாட்களாகவே இந்தப்பேச்சுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றாள் ராகினி. “உன் தந்தை கூர்மபுரியினரின் துணையுடன் தன் நகரை வலுப்படுத்த எண்ணுகிறார். களிந்தகமும் கூர்மபுரியும் இணைந்தால் யமுனைக்கரையில் மதுராபுரிக்கு நிகராக நின்றிருக்கமுடியும் என்று அவர் எண்ணுவதாக சொன்னார்கள்.”

சத்யபாமா எதையுமே உளம்கொண்டிருக்கவில்லை. “இங்குதான் இருக்கிறாய். மத்துச் சரடிழுக்கும் ஆய்ச்சியர் அறிந்ததைக்கூட நீ அறிந்திருக்கவில்லையா?” என்று அவளது திகைத்த விழி நோக்கி ராகினி கேட்டாள். “நானறியேனடி…” என்றாள் சத்யபாமா. “மதுராவை யாதவர்கள் வென்றதுமே இது தொடங்கிவிட்டது. தன்னந்தனியாகச் சென்று கம்சரைக் கொன்றதனாலேயே மதுராவுக்கு முழுமுதல் தலைவராக இளைய யாதவர் ஆகிவிட்டார். அஸ்தினபுரியின் படைகொண்டுவந்து மதுராவை கைப்பற்றியதனால் அவர்கள் யாதவர்களுக்குச் செலுத்தவேண்டிய கடன் என ஏதுமில்லை. யாதவர்கள்தான் இன்று அவரை நம்பியிருக்கிறார்கள்” என்றாள் ராகினி. யாதவன் என்ற சொல்லையன்றி எதையும் சத்யபாமையின் உள்ளம் கொள்ளவில்லை.

”இளைய யாதவர் தெற்கே கூர்ஜரத்தின் கடற்கரையில் நகர் ஒன்றை அமைக்கவிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அவருக்கு அஸ்தினபுரியை ஆளும் அவரது அத்தையின் செல்வத்துணை உள்ளது. மதுராவை வெல்வதுவரை யாதவர்கள் ஒற்றுமையாக இருந்ததே அரிது என்று செவிலியன்னை சொல்கிறாள். இன்று அனைவரும் இளைய யாதவரைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். யாதவர்களின் பன்னிரு குலங்களுக்கும் அவரே தலைவர் என்பதுபோல ஒரு பேச்சு எங்கும் உள்ளது. யாதவ இளையோரெல்லாம் அவரைத்தான் தங்கள் அரசராக எண்ணுகிறார்கள்…” என்றாள் ராகினி. அறிந்ததை எல்லாம் பேசிவிட விழைவு எழுந்தாலும் சத்யபாமா எதையும் சிந்தைகொள்ளவில்லை என்று உணர்ந்தாள்.

கீழிருந்து செவிலியன்னை கூவியழைத்து “என்னடி செய்கிறீர்கள்? நீராடி ஆடைமாற்றுகிறீர்களா இல்லையா?” என்றாள். “இதோ” என்ற ராகினி “விரைந்து வாடி… இல்லையேல் நான் பழிகேட்கவேண்டியிருக்கும்” என்றாள். சத்யபாமா வருபவர்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். சததன்வா பொன்னூல் பின்னலிட்ட வெள்ளை அரையாடையும் இளமஞ்சள் மேலாடையும் பொன்னாலான குடிச்சின்னம் பதிக்கப்பட்ட செவ்வண்ணத் தலைப்பாகையும் அணிந்து மார்பில் மணியாரம் துவள நடந்தான். அவன் தந்தை கிருதாக்னி பொன்னூல் பின்னிய ஆடைகளும் குடிச்சின்னத்திற்குமேல் செங்கழுகின் இறகும் சூடியிருந்தார். தலைதூக்கிய மரம்கொத்தியை முனையில் கொண்டிருந்த வெள்ளிக்கோலை கையில் வைத்திருந்தார்.

சத்யபாமா “கீழே செல்வோம்… அவர்கள் தந்தையை நோக்கி முகமன் சொல்லி முடிப்பதற்குள் சித்தமாகிவிடுவேன்” என்றாள். “அய்யோடி… நீ இவரைத்தான் நெஞ்சில் வைத்திருந்தாயா? உன் பொருளெழா விழிகளை நோக்கி நானும் என்னவோ எண்ணிவிட்டேனே?” என்றாள் ராகினி. சத்யபாமா கீழிறங்கிச் சென்று செவிலியன்னை மஹதியிடம் “என் நீராட்டுக்கு எடுத்துவையுங்கள் அன்னையே” என்றாள். மஹதி புன்னகையுடன் அவளை நோக்கிவிட்டு ராகினியிடம் “செம்மஞ்சளும் பயற்றுமாவும் எடுத்துக்கொடு. அவள் அணியவேண்டிய ஆடையை நான் சித்தமாக்குகிறேன்” என்றாள். “வாடி” என்று ராகினி அவள் கைபற்றி அழைத்துச்சென்றாள்.

மரப்பட்டைகள் சூழ்ந்த குளியலறையில் பீடத்திலமர்ந்த சத்யபாமையை ராகினி நீராட்டினாள். செம்மஞ்சள் அவள் உடலை பொன்னாக்கியதைக் கண்டு “யாதவக்குடியில் உன்னைப்போல் பொற்பாவையென எவருமில்லையடி” என்றாள். சத்யபாமா புன்னகைசெய்தாள். மஹதி பொற்பின்னல் கரையிட்ட சிற்றாடையும் செந்நிறமலர்கள் பின்னிய பீதர்நாட்டு பட்டு மேலாடையும் எடுத்து வைத்திருந்தாள். நீலக்கடம்பின் காய்போன்ற குழைகளை அணிந்தாள். மார்பில் வேப்பிலையடுக்கியதுபோன்ற சரப்பொளியாரம். நீர்த்துளியென மணியாரம். நீலம் பதித்த பொன்வளையல்கள். அன்னை அணிசூட்டிக்கொண்டிருந்தபோது ராகினி அவள் கால்களுக்கு செம்பஞ்சுக்குழம்பிட்டாள். கைகளுக்கு செம்பஞ்சிட்டு அந்நிறம் ஆடையில் படாதிருக்க மெல்லிய துணியால் சுற்றிக்கட்டினாள்.

அன்னை உள்ளே வந்து மூச்சிரைக்க “மஹதி, அவர்கள் அரசரில்லத்தை அடைந்துவிட்டனர். இளையவரும் உடனிருக்கிறார். மணம் கோரவே வந்துள்ளனர். அவர்களை அரசரும் இளையவரும் வரவேற்றதைப் பார்த்தால் முன்னரே செய்தியறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது” என்றாள். “ஆம், செய்தியின்றி இத்தனை பேர் வரமாட்டார்கள்” என்றாள் மஹதி. “அப்படியென்றால் ஏன் நமக்கு சொல்லவில்லை?” என்று மாலினி கேட்டாள். “எதையோ அஞ்சுகிறார்கள். இவள் மணத்தை எவருமறியாமல் முடித்துவிட எண்ணுகிறார்கள்.” மாலினி விழி சுருக்கி ”எவரை?” என்றாள். “இன்று யாதவப்பெண்கள் அனைவருமே அவன் விரிந்த மார்பைத்தானே கனவுகாண்கிறார்கள்?” என்றபடி சத்யபாமையின் குழல்கற்றைகளுக்கு குங்கிலியப்புகை காட்டினாள் மஹதி.

அன்னை திரும்பி அவளை நோக்கி சினந்து “என்ன சொல்கிறாய்? அவர் இன்று பாரதமே நோக்கும் பெருமன்னர். அங்கே கடலோர நகரம் கால்கோளிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். பாஞ்சாலன் மகளையே அவர் மணம்கொள்ளக்கூடுமென்று கேள்விப்பட்டேன். கூர்ஜரனும் மாளவனும் வங்கனும் கலிங்கனும் தங்கள் இளவரசிகளுடன் அவருக்காக காத்திருக்கிறார்கள். காடுசுற்றி கன்றுமேய்க்கும் யாதவப்பெண்ணையா மணக்கப்போகிறார்? அரியணையமர்ந்து கோலேந்துபவளுக்கு செம்மொழியும் தொல்மொழியும் தெரிந்திருக்கவேண்டாமா? அவைமுன் தோன்றி அவள் அரசு சூழவேண்டாமா?” என்றாள். “பெண்களுக்கென்ன, கனவுகாண்பதுதானே வேலை?” என்றாள் ராகினி. “சித்தமாகி வாடீ” என்றபடி மாலினி திரும்பிச்சென்றாள்.

நறுமணம் ஏறிய குழலை சுற்றிக்கட்டி கொண்டையாக்கி அதில் மணிமாலைகளை சுற்றிக்கட்டினாள் மஹதி. முல்லைச்சரம் சுற்றி முனை தொங்கவிட்டாள். நெற்றிச்சுட்டியும் பில்லைகளும் பொருத்தினாள். “ஆடிநோக்குகிறாயா கண்ணே?” என்றாள். ஆம் என்று சொல்லி சத்யபாமா எழுந்து தன் ஆடையை மெல்ல கையால் அழுத்தி மடிப்பு குலையாது நடந்து சென்று ஆடிமுன் நின்றாள். உடலை மெல்லத்திருப்பி தன்னை நோக்கி கையால் கூந்தலை அழுத்தி பில்லையை பொருத்திக்கொண்டாள். மேலாடை மடிப்பை சீரமைத்து திரும்பி ராகினியிடம் “ஒரு ஊசி” என்றாள்.

ஊசியை எடுத்து ஆடையை பொருத்தியபடி ராகினி “மணக்கோலம் அமைந்துவிட்டதடி பாமா” என்றாள். “உன்னைக் கண்டதுமே முடிவுசொல்லிவிடுவார்கள். களிந்தகமும் கூர்மபுரியும் ஒன்றாகலாகாதென்று மதுராபுரியினர் எண்ணக்கூடுமென்றுதான் இதை இத்தனை மந்தணமாக்கியிருக்கிறார்கள்.” அவள் கண்ணாடியில் தன்னை நோக்கிக் கொண்டாள். கண்களில் செவ்வரி ஓடியிருந்தது. முகத்துக்குள் குருதி வெம்மைகொண்டு ஓடத்தொடங்கிவிட்டிருந்தது.

அன்னை உள்ளே வந்து “அரசர் செய்தியனுப்பியிருக்கிறார். உன்னை மன்றுக்கு அனுப்பும்படி சொல்கிறார்… அடி ராகினி, நீயும் உடன் செல்லடி… ஆடைமாற்றிக்கொள்” என்றாள். ராகினி “எனக்கென்ன, சற்று நேரம்” என்றாள். “கையில் அமுதுடன் செல். முதலில் கூர்மபுரியின் அரசரிடம் அதை கொடு. அவர் உன்னை வாழ்த்தியதும் தலைவணங்கி முகமன் சொல். அதன்பின் திரும்பி இளவரசரிடம் கொடு. அவர் சொல்லும் இன்சொல்லுக்கு மறுமொழி சொல். அவையை வணங்கி மீண்டுவா” என்றாள் மாலினி. திரும்பி ராகினியிடம் “அவள் தோள்பற்றி பின்னால் நின்றுகொள். அவள் பணிந்து முடித்ததும் நீயும் இன்சொல் சொல்லி அழைத்துக்கொண்டு வந்துவிடு” என்றாள். ராகினி “நான் பார்த்துக்கொள்கிறேன் அரசி” என்றாள்.

அரசரில்லம் மறுமுனையில் தனித்திருந்தது. அதன் முன்னால் கூர்மபுரியில் இருந்து வந்த காவலர்களும் இசைச்சூதர்களும் மகிழமரத்தடியிலும் மரமல்லி மரத்தடியிலும் நிழல்நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் வருவதைக்கண்டு ஒருவன் சொல்ல அத்தனை முகங்களும் திரும்பி நோக்கி மலர்ந்தன. முதிய சூதர் ஒருவர் தலைமேல் கைகூப்பி ஏதோ சொன்னார். சத்யபாமா அத்தனை நோக்குகளையும் தன்மேல் ஏற்று ஏதுமறியாதவள் போல சீரான அடிவைத்து நிமிர்ந்த தலையுடன் நடந்து சென்றாள். இல்லம் விட்டு வெளியே வந்ததுமே அவள் நடை மாறிவிட்டதை ராகினி கண்டாள். அவளுக்குள் அறியாதெய்வமொன்று குடியேறியதைப்போல.

அரசரில்லத்தின் முற்றத்தை அவள் அடைந்தபோது சத்ராஜித்தின் அணுக்கச்சேவகனாகிய அஜன் ஓடிவந்து வணங்கி “வருக இளவரசி… தங்களுக்காகவே காத்திருக்கிறோம்” என்றான். ராகினி “இளவரசி, தாலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றாள். சத்யபாமா அதை தன் கையில் வாங்கிக்கொண்டு பட்டாடையை மெல்ல ஒதுக்கி படிகளில் காலடி எடுத்துவைத்து உள்ளே சென்றாள். வட்டவடிவமான இல்லத்தின் நடுவே இருந்த பெருங்கூடத்தில் இடப்பட்ட பீடங்களில் சத்ராஜித்தும் கிருதாக்னியும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். சத்ராஜித்தின் அருகே பிரசேனர் நின்றிருக்க கிருதாக்னியின் பின்னால் சததன்வா நின்றிருந்தான். பார்ஸ்வகுலத்து மூத்தவர் மூவர் அருகே அமர்ந்திருந்தனர்.

அனைவர் விழிகளும் அவளை நோக்கி திரும்ப சத்யபாமா நிமிர்ந்த நோக்கும் புன்னகையுமாக அவர்களை நோக்கியபடி அருகே சென்றாள். அவளுடைய நடையிலிருந்த மாறுதலை அக்கணமே சத்ராஜித் அடையாளம் கண்டுகொண்டார். வெயில்மங்கி மீள்வதுபோல புன்னகை அணைந்து எழ “என் மகள் பார்ஸ்வரே. இவளை அந்தகக் குலத்தின் விளக்கு என்கிறார்கள் பாணர்கள்” என்றார். கிருதாக்னி அவளை மலர்ந்த முகத்துடன் நோக்கி “யாதவகுலத்திற்கே மணிவிளக்கு என்றிருக்கவேண்டும்… அந்தகரே, கைகூப்பி வணங்கவேண்டுமென்றே என் உள்ளம் எழுகிறது” என்றார். சததன்வாவின் உடல் காற்றில் எழத்தவிப்பதுபோலிருந்தது.

சத்யபாமா தாலத்தை மூடிய வெண்பட்டை விலக்கி பொற்குவளையை கிருதாக்னியிடம் நீட்டியபடி “அமுது ஏற்றுக்கொள்க மூத்தவரே!” என்றாள். அவர் குவளையை எடுத்துக்கொண்டு “திருமகள் அளிக்கும் அமுதென்றே கொள்கிறேன் குழந்தை” என்றார். “இத்தருணத்தில் எங்கள் மூதன்னையர் அனைவரையும் வாழ்த்தட்டும்” என்ற சத்யபாமா திரும்பி சததன்வாவிடம் தாலத்தை நீட்டி “அமுது கொள்க இளவரசே!” என்றாள். அவன் குவளையை எடுத்துக்கொண்டு “இந்நாள் என்றும் நினைவில் வாழவேண்டும்” என்றான். “பார்ஸ்வகுலத்தின் வருகை அத்தகையது” என்றாள் சத்யபாமா. திரும்பி பார்ஸ்வகுலமூத்தாருக்கு அமுதளித்துவிட்டு தாலத்தை ராகினியிடம் நீட்டினாள்.

ராகினி தலைவணங்கி “மங்கலங்கள் பூக்கும் வேளை என்று பாணர் சொன்னார்கள். நற்செய்தியுடன் வந்திருக்கிறீர்கள். அனைவரையும் வணங்குகிறேன்” என்றாள். சத்ராஜித் அவர்கள் செல்லலாம் என்பதுபோல மெல்ல விழியசைத்தார். சத்யபாமா “மூத்தவரே, தாங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் அறியலாமா?” என்றாள். சத்ராஜித் ஏதோ சொல்லப்போக கிருதாக்னி அதை கையால் தடுத்து “அறியலாம் குழந்தை. முன்பு நம் அன்னையர் அவையமர்ந்து அரசாண்டனர் என்று கேட்டிருக்கிறேன். அவர்களின் முகம் உன்னைப்போலத்தான் ஒளியுடன் இருந்திருக்கவேண்டும்” என்றார். “நாங்கள் என் மைந்தனுக்கு உன்னை மணக்கொடை கோரி வந்திருக்கிறோம்.”

“அதன் நோக்கத்தை நீங்கள் விளக்கவேண்டுமென விழைகிறேன்” என்றாள் சத்யபாமா. “முதன்மை நோக்கம் என் மைந்தன் உன்மேல் மாளா பெருமையல் கொண்டிருக்கிறான் என்பதே. அவன் விழிகளை நோக்கியதுமே இதை முடிப்பதென்று நான் முடிவெடுத்தேன். உன்னைக் கண்டபின் என் குடிவாழ நான் செய்யக்கூடுவது இது ஒன்றே என்று உறுதிபூண்டேன்” என்றார் கிருதாக்னி. “ஆனால் இன்றைய அரசுநிலையையும் நீ அறிந்திருப்பாய். விருஷ்ணிகுலம் இன்று யாதவர்களுக்கு தலைமைதாங்குகிறது. மதுவனத்தை சூரசேனர் ஆள்கிறார். அவர் மகளைப் பெற்ற குந்திபோஜரால் ஆளப்படுகிறது மார்த்திகாவதி. மதுராவை மூத்தயாதவர் பலராமர் ஆள்கிறார். வசுதேவரின் துணைவி தேவகி உத்தரமதுராபுரியின் மூதரசியும்கூட. சதபதத்தை ஆளும் போஜகுலத்து கிருதவர்மன் தன் வாளை உருவி இளைய யாதவனின் காலடியில் வைத்துவிட்டான். ஆகவே யாதவ அரசுகளில் நமது இரு அரசுகள் அன்றி அனைத்துமே ஓரணியில் நின்றிருக்கின்றன. நாம் இருவரும் ஒன்றாகவில்லை என்றால் அழிவோம். ஆகவே உன் தந்தை இந்த மணத்தை விழைகிறார்.”

“அழிவோம் என்பது உங்கள் அச்சமா?” என்றாள் சத்யபாமா. “இல்லை குழந்தை. அரசு சூழ்தலில் எப்போதும் நிகழ்வது இது. யாதவப்பெருங்குலங்களில் அரசெனத் திரண்டவை இவையே. நாங்கள் அமைத்துள்ள இவ்விரு அரசுகளையும் அழித்துவிட்டால் மட்டுமே யாதவர்களின் ஓரரசாக துவாரகை எஞ்சமுடியும். எந்த அரசுவிற்பன்னனும் அதையே எண்ணுவான்” என்று கிருதாக்னி சொன்னார். பார்ஸ்வமூத்தார் ஒருவர் “குழந்தை, ஓர் அரசென்பது எளிதாக உருவாவதல்ல. காட்டில் ஆயிரம்செடிகள் முளைக்கும். தலைமுறைக்கொரு ஆலமரமே வேரோடி எழும். இவ்விரு அரசுகளும் நாமடைந்த வெற்றிகள். நாம் இவற்றை இழக்கலாகாது” என்றார்.

“அவ்வண்ணமென்றால், நீங்கள் இருவரும் கூட்டமைப்பது துவாரகைக்கு அறைகூவல் அல்லவா? அவரது படைவந்து உங்களைச் சூழ்ந்தால் என்ன செய்வீர்? போரிட்டு நிற்கும் வல்லமை உள்ளதா நம்மிடம்?” என்றாள் சத்யபாமா. “இல்லை. இன்று நாம் சிறியநாடுகளே. ஆனால் நாம் மகதத்தை துணைகொள்ளமுடியும். இளைய யாதவனை மகதம் அஞ்சிக்கொண்டிருக்கிறது. அவன் அஸ்தினபுரியின் துணைவன் என்று கணித்து தருணம் நோக்கியிருக்கிறது” என்றார் கிருதாக்னி. “இளையவன் துவாரகையை அமைப்பதற்குள் ஒரு போர் எழவேண்டுமென விழைகிறார் மகதத்தை ஆளும் ஜராசந்தர். இளையவனோ துவாரகையை அமைப்பதுவரை போரை விழையவில்லை… இன்று நாம் மகதத்தை துணைகொண்டால் நம்மை துவாரகை தீண்டமுடியாது.”

“மூத்தோரே, யாதவர்களின் பேரரசு ஒன்று அமையாதிருக்கும்பொருட்டு நாம் மகதத்தை நாடுகிறோம் என்றல்லவா இதற்குப்பொருள்?” என்று சத்யபாமா கேட்டாள். “ஓர் ஆலமரம் உருவாவதே அரிதென்றால் காடு ஒன்று எழுவது எத்தனை அரிது? அகந்தையாலோ அச்சத்தாலோ நாம் ஆற்றும் இச்செயலுக்காக என்றோ ஒருநாள் நம் மூதன்னையருக்கு நாம் மறுமொழி சொல்லவேண்டியிருக்கும் என நினைவுறுங்கள்.” சததன்வா சினத்துடன் “என்ன பேசுகிறாய்? அச்சமா? எவருக்கு?” என்றான். “அரசு சூழ்தலில் துணைதேடுவதென்பது அச்சமல்ல… அதை அறிய அடுமனையில் உழல்பவர்களால் முடியாது.”

சத்யபாமா புன்னகையுடன் “ஆம், ஆனால் ஆண்களை அறிய பெண்களால் முடியும்” என்றாள். “அச்சமில்லை என்றால் ஒன்று செய்யுங்கள். இளைய யாதவரை ஒரு தனிப்போருக்கு அழையுங்கள்.” சததன்வா சினமெழுந்து துடித்த கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கிட்டித்தபற்களுடன் “நீ இங்கு அவைநின்று பேசுவதை உன் தந்தை ஏற்கிறாரா?” என்றான். “எந்த ஆணின் சொல்லுக்கு முன்னும் தாழ்வதல்ல என் தலை யாதவரே. நான் இக்குடியின் மூதன்னையரை மட்டுமே ஏற்றவள். தந்தையும் நாளை கொழுநனும் தனயர்களும் எவரும் எனக்கு சொல்லிடுபவரல்ல” என்றாள். “சொல்லுங்கள், யாதவரிடம் தனிப்போருக்கு எழுகிறீர்களா?”

சததன்வா “தருணம் வரும். அவனை நான் களத்தில் சந்திப்பேன். அவன் தலையறுத்து மண்ணில் இடுவேன்” என்றான். “ஆனால் இத்தருணத்தில் கூர்மபுரி அதற்கு சித்தமாக இல்லை. அதை நீயும் அறிவாய். நீ சொல்லும் இச்சொற்கள் என் கால்கள் தருணச்சகதியில் ஆழ்ந்திருப்பதை அறிந்து சொல்வதன்றி வேறல்ல.” சத்யபாமா வளையல்கள் ஓசையிட தன் கையை இடையில் வைத்து புன்னகையுடன் ”யாதவரே, நானும் வில்லும் வாளும் சக்கரமும் பாசாயுதமும் பயின்றவள் என்று அறிந்திருப்பீர். என்னுடன் போரிட வாருங்கள். வென்றால் என்னை அடையலாம்” என்றாள். சததன்வா திகைத்து சத்ராஜித்தை பார்த்தபின் “என்ன சொல்கிறாள்?” என்றான்.

சத்யபாமா மாறா நகையுடன் “போருக்கு எழுங்கள் யாதவரே. ஆனால் ஆணென்று கனிவுகொள்வேன் என்று எண்ணவேண்டாம். உங்கள் மார்பில் கால்வைத்து தலையறுத்து என் குடியன்னையர் முன் பீடத்தில் வைப்பேன்…” என்றாள். அவளைத் தொட கையெடுத்த ராகினி தயங்கி பின்னிழுத்துக்கொண்டு அமர்ந்திருந்த பார்ஸ்வகுலமூத்தாரை நோக்கினாள். அவர்களின் முகங்கள் தெய்வமெழக் கண்டவர்கள் போல மலர்ந்திருந்தன. சத்ராஜித் மெல்ல அசைந்து பின் நிமிர்ந்து தன் இளையவரை நோக்க பிரசேனர் “யாதவனே, அவள் சொல்வது உண்மை. எங்கள் குடியில் அவளுக்கு நிகரான வில்லவரும் வாளுடையோரும் பிறரில்லை” என்றார்.

சததன்வா ஏதோ சொல்ல வாயெடுக்க சத்யபாமா சிரித்தபடி “வேண்டியதில்லை யாதவரே, நீங்கள் அஞ்சிவிட்டீர்கள். இனி வெல்லமுடியாது” என்றாள். ”வெல்லமுடியாதென்றால் உயிர்துறந்து பெருமைகொள்ளலாம் என்ற எண்ணமே வீரரை தனிப்போருக்கு எழச்செய்கிறது. இறப்பதும் இழிவே என்றால் கையில் படைக்கலம் நிற்காது.” சததன்வா பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.

“தந்தையே, கார்த்தவீரியருக்குப்பின் யாதவர்களுக்கு அரசரில்லை என்று அறிந்திருப்பீர்கள். அதன்பின் நம் குலங்கள் ஒன்றுபடவேயில்லை. மேய்ச்சல்நிலம்தேடி பிரிந்துசெல்லும் இயல்புடையவர் நாம். அவ்வியல்பையே அரசியலிலும் கைக்கொண்டோம். விழுந்து சிதறும் மணிகள் போல நம் குலங்கள் அகன்று சென்றுகொண்டே இருந்தன. இன்று நம்மை அள்ளித்தொகுக்கும் ஒரு கை அமைந்திருக்கிறது. நாம் அவரிடம் சேர்வோம். அவரது படைக்கலமாவோம். சிறப்புகள் சூழும். நம் அன்னையர் வாழ்த்துவர்.”

சததன்வா “எப்படி அவனை நம்புவது? நாங்கள் அடைந்தவற்றை எல்லாம் அவன் காலடியில் வைப்பதா?” என்றான். “உங்கள் எவரைவிடவும் பெரிய அரசு சதபதம். அதன் இளவரசர் வாள் தாழ்த்த முடியுமென்றால் உங்களுக்கென்ன?” என்றாள் சத்யபாமா. “உண்மைதான், ஆனால்…” என்றார் கிருதாக்னி. சத்யபாமா அவரை மறித்து “அச்சமல்ல, உள்ளுறைந்த பேராசையே உங்களை சிறுமையை நோக்கி செலுத்துகிறது” என்றாள். “இங்கு வருவதற்கு முன் நீங்கள் எண்ணியதென்ன என்று நான் சொல்லமுடியும். துவாரகை எழுவதை ஷத்ரியப் பேரரசர்கள் விரும்ப மாட்டார்கள். அஸ்தினபுரிகூட அதை அஞ்சும். ஆகவே அனைவரும் சேர்ந்து அதை அழிப்பார்கள். அழிப்பவர்களுடன் நின்றால் உங்கள் அரசுகள் எஞ்சும். அழிவில் எஞ்சும் துணுக்குகளைச் சேர்த்து உங்கள் அரசை பெருக்க முடியும் என்று எண்ணினீர்கள்.”

சத்ராஜித் “என்ன சொல்கிறாய்?” என்று சீறியபடி எழுந்தார். “தந்தையே, அடுமனை நின்று ஆண்களை பார்ப்பவர்கள் எளிதில் அறியும் உண்மை இது. நானோ அரசுமன்றுக்கும் வந்து நிற்பவள்” என்றாள் சத்யபாமா. “ஷத்ரியர்களுக்கு கப்பம் கட்டி காத்திருக்கலாமென எண்ணினீர்கள். நாளை அஸ்தினபுரியும் மகதமும் போரிட்டழியும்போது மேலும் தலையெடுக்கலாமென்று சூழ்ந்தீர்கள்.” பிரசேனர் சினத்துடன் “ஆம், அவ்வண்ணம் எண்ணினாலும் என்ன பிழை? அரசு சூழ்தலின் நெறி அதுவே” என்றார்.

“பிழையென ஏதுமில்லை தந்தையரே. ஆனால் அறிந்துகொள்ளுங்கள். இனி ஆரியவர்த்தத்தின் அரசியலின் பகடை இளைய யாதவராலேயே உருட்டப்படும். உண்மையில் மதுராவை வெல்ல அஸ்தினபுரியின் படைகள் இளைய யாதவருக்கு தேவையிருக்கவில்லை. அவருடன் கிருதவர்மனுக்கு நிகரான இளையோர் நூற்றுவர் இருக்கிறார்கள். யாதவப்பெருங்குலம் அவர் சொல்கேட்டு எழுந்து சூழ்ந்திருந்தது. ஆயினும் அவர் அஸ்தினபுரியின் படைகொண்டார். அதன் வழியாக அவர்களையும் மகதத்தையும் பகைகொண்டு முகம் நோக்கி நிற்கச்செய்திருக்கிறார். மத்தகம் கோத்து செயலற்று நிற்கும் மதகளிறுகள் அவை. நீங்கள் எண்ணுவதுபோல இன்று மகதம் உங்களைக் காக்க வராது. அது அஸ்தினபுரியை அஞ்சிக்கொண்டிருக்கிறது. மூத்தோரே, இன்று எந்த ஷத்ரிய அரசும் தன்னை தீண்டாமல் காத்துகொண்டிருக்கிறார் இளைய யாதவர். அஸ்தினபுரியிலோ இன்று முடிநிலைக்காத ஆட்சி நிகழ்கிறது. அவர்கள் இருசாராருமே அவர் வில்லையும் சொல்லையும் நாடுகிறார்கள்.”

“துவாரகை ஓங்கி எழுவதற்கு இதற்கு முன் எப்போதும் இதுபோன்றதொரு தக்க நிலை வந்ததில்லை” என்று சத்யபாமா சொன்னாள். “பேராசை விழிகளை மறைக்காமலிருந்திருந்தால் அதை எப்போதோ உணர்ந்திருப்பீர்கள். அத்துடன் ஒன்றும் தெரிந்திருக்கும். உங்களை அழிக்க இளைய யாதவர் எண்ணியிருந்தால் இதுதான் மிகச்சிறந்த தருணம். கிருதவர்மரின் தலைமையில் ஆயிரம் புரவிவீரர்கள் வந்தால்போதும்.” சத்ராஜித் திரும்பி பிரசேனரை நோக்கினார். பிரசேனர் “அவர்களுக்கு என்ன தடை என்று தெரியவில்லை…” என்றார். “எந்தத் தடையுமில்லை. நீங்கள் யாதவர் என்பதைத்தவிர” என்றாள் சத்யபாமா. “நீங்கள் உங்களை அந்தகர் என்றும் சத்வதர் என்றும் எண்ணலாம். அவர் உங்களை யாதவர் என்றே எண்ணுகிறார் என்பதற்கு சான்று பிறிதில்லை.”

மூத்தயாதவர் ஒருவர் “ஆம்… நான் அதை முன்னரே எண்ணினேன்” என்றார். “விருஷ்ணிகள் யாதவர்கள் என்பதை ஏன் மறந்தீர் மூத்தவர்களே? மகதத்தை நம்புகிற நீங்கள் யாதவக்குருதியை ஏன் நம்பக்கூடாது? அந்த யாதவர்களின் இல்லங்களில் உறையும் அன்னையர்மீது கூடவா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை?” ஒருவர் “நம்புகிறோம் குழந்தை. எங்கள் குலம் இளைய யாதவருடன்தான் நிற்கும். இது மணம்சூழல் என்பதனால்தான் வந்தோம்” என்றார்.

“இந்தமணம் நிகழாது மூத்தாரே” என்ற சத்யபாமா திரும்பி சததன்வாவிடம் “திரும்பிச்செல்லுங்கள் யாதவரே. நான் உங்கள் எவருக்கும் உரியவளல்ல. என் முன் நின்று பொருதும் ஆற்றல்கொண்டவர் ஒருவரே” என்றாள். சததன்வா பற்களைக் கடித்து சினத்துடன் “தெரிந்துகொள், அவன் அங்கே பொற்தேர் சமைக்கிறான். பாஞ்சாலத்து இளவரசியை அடைந்து பாரதவர்ஷத்தை வெல்ல திட்டமிடுகிறான். வளைதடியேந்தி காடுசுற்றும் உன்னை வேட்க வருவானென்று எண்ணாதே” என்றான்.

”வருவார்” என்று சத்யபாமா சொன்னாள். “அதை அவரை நான் கண்ட முதல்நாள் என் முன் எழுந்த தெய்வங்கள் சொல்லின. இம்மண்ணில் நான் அவருக்களிப்பவற்றை எவரும் அளிக்கவியலாது. இத்தனைநாள் நான் நோற்றிருந்தது அவருக்காக. என் மூதன்னையர் இருபக்கமும் நின்று என்னை வாழ்த்துகிறார்கள்.” அமர்ந்திருந்த முதுயாதவர் எழுந்து கைகளைக் கூப்பியபடி “நாங்கள் சென்று அவன் காலடியில் விழுந்து மன்றாடுகிறோம் அன்னையே. யாதவகுலம்பூத்த மாமலர் நீ. உனக்கன்றி எவருக்குள்ளவன் அவன்?” என்றார். அமர்ந்திருந்த பிற முதியவர்களும் உணர்வெழுச்சியுடன் நடுங்கியபடி எழுந்தனர்.

கிருதாக்னி “உன்னிடம் நான் சொல்வதற்கென்ன இருக்கிறது மகளே! நீ அறியாத எதையும் நானறியேன். நான் செய்யவேண்டுவதென்ன என்று மட்டும் சொல்” என்றார். “உங்கள் வாள் இளைய யாதவரிடம் இருக்கட்டும் பார்ஸ்வரே” என்றாள் சத்யபாமா. “ஆம், இது என் மூதன்னையரிட்ட ஆணையென கொள்கிறேன். என் குலத்து விளக்காக நீயிருக்கவேண்டுமென எண்ணினேன். நாளை யாதவகுலத்துக்கே அன்னையென அமர்பவள் நீ. என் வழித்தோன்றல்கள் வழிபடும் தெய்வம்” என்றார்.