இமைக்கணம் - 53
அர்ஜுனன் சொன்னான். கிருஷ்ணா, நூல்நெறியை மீறி ஆனால் நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களுக்கு என்ன நலன் அமைகிறது? நிறையா செயலூக்கமா அமைவா?
இறைவன் சொன்னார். உயிர்களின் இயல்பான நம்பிக்கை மூன்றுவகை. நிறை, செயல், அமைவு. அனைவருக்கும் நம்பிக்கை அவர்கள் உள்ளியல்புக்கு ஒத்தபடியே அமைகிறது. மானுடன் உளக்கூர் கொண்டவன். எப்பொருளில் நம்பிக்கையுடையவனோ அதுவே ஆகிறான். ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர்.
செயலூக்கம் கொண்டவர்கள் யட்சர்களுக்கும் அரக்கருக்கும். பிறர் இறந்தோருக்கும் பேருருக்களுக்கும். நெறிநோக்காது பெருமிதமும் ஆணவமும் கொண்டு காமமும் விழைவும் அற்றவர்களாக கடுந்தவம் செய்பவர்கள் உடம்பின் ஐம்பருக்களையும் உள்ளுறையும் என்னையும் வருத்துகிறார்கள். அந்த உளம்தெளியாதவர்கள் அசுரத்தன்மைகொண்டவர்கள்.
ஒவ்வொருவரும் விரும்பும் உணவுகள் மூவகை. வேள்வியும் தவமும் கொடையும் அவ்வாறே. அந்த வேற்றுமையை அறிக! உயிர், விசை, ஆற்றல், நோயின்மை, இனிமை, விழைவு ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் சுவையான, மென்மையான உணவுகள் உறுதியளிப்பவை, உள்ளத்திற்கு இனியவை. இறைநிலைகொண்டவர்களுக்கு விருப்பமானவை. கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும், வெம்மையும் கொண்ட உலர்ந்த, எரிச்சலூட்டும் உணவுகளை செயலூக்கம் கொண்டோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன. கெட்டுப்போன, சுவையற்ற,
அழுகிய, பழைய, எச்சில்பட்ட, தூய்மையற்ற உணவு அமைவுநிலை கொண்டோருக்கு உகந்தது.
நெறிகளின்படி சடங்குகள் செய்வது கடமை என்று உணர்ந்து பயன்கருதாது செய்யப்படும் வேள்வி நிறைநிலை கொண்டது. பெருமைக்காகவோ பயன்கருதியோ ஆற்றப்படும் வேள்வி செயலூக்கம் கொண்டது. நெறி தவறியது, பகிர்ந்துண்ணப்படாதது, உரிய நுண்சொல்லற்றது, உரிய கொடைகள் அளிக்கப்படாதது, நம்பிக்கையின்றி செய்யப்படுவது அமைவுநிலை வேள்வி.
தேவர், அந்தணர், ஆசிரியர், அறிஞர் ஆகியோருக்கு பூஜை செய்தல் மற்றும் தூய்மை, நேர்மை, காம ஒறுப்பு, கொல்லாமை ஆகியவை உடல்சார் தவமெனப்படும். சினத்தை விளைவிக்காததும் உண்மையுடையதும் இனியதும் உலகநலன் கருதியதுமாகியவை சொற்தவம் எனப்படும். தன்னுள் மகிழ்தல், அமைதி, சொல்லவிதல், தன்னை கட்டுதல், எண்ணத் தூய்மை இவை உளத்தவம் எனப்படும்.
பயனை விரும்பாத யோகிகளால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இம்மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம் நிறைநிலை எனப்படும். மதிப்பையும் பெருமையையும் பிறர் போற்றுதலையும் நோக்கிய தவம் செயலூக்கம் கொண்டது. அது நிலையற்றது, நீடித்த நலம் அளிக்காதது. அறியாக் கொள்கையுடன் தன்னை துன்பப்படுத்திக்கொண்டு பிறரைக் கெடுக்குமாறு செய்யும் தவம் அமைவுநிலை எனப்படும்.
கொடுத்தல் கடமையென்று கருதி இடம் காலம் கலம் கருதி கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப்படும் கொடை நிறைநிலை. உளம் வருந்தி, கைம்மாறு வேண்டி, பயனைக் கருதி கொடுக்கப்படுவது செயலூக்கக் கொடை. மதிப்பின்றி, இகழ்ச்சியுடன்,
தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதவருக்கு தரப்படுவது அமைவுநிலைக்கொடை எனப்படும்.
ஓம் தத் ஸத் என மூன்று சொற்கள் பிரம்மத்தை குறிப்பது என்பார்கள். முதனூல்கள், வேதங்கள், வேள்விகள் தொல்காலத்தில் வகுக்கப்பட்டன. ஆதலால், பிரம்மத்தரப்பினர் நெறிப்படி புரியும் வேள்வி, தவம், கொடை என்ற சடங்குகள் எப்போதும் ஓம் என்று தொடங்கி செய்யப்படுகின்றன. ‘தத்’ என்ற சொல்லைச் சொல்லி பயனைக் கருதாமல் பலவகை வேள்வியும் தவமும் கொடையும் விண்விழைவோரால் செய்யப்படுகின்றன.
‘ஸத்’ என்ற சொல் உண்மையென்ற பொருளிலும் நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பெருஞ்செயலை குறிப்பதற்கும் அச்சொல் வழங்குகிறது. வேள்வி, தவம், கொடை இவற்றில் உறுதிநிலையும் ‘ஸத்’ எனப்படுகிறது. மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் எச்செயலும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும். உளம் ஒன்றாது செய்யப்படும் வேள்வியும் தவமும் கொடையும் பிறசெயல்களும் ‘அஸத்’ எனப்படும். அவற்றால் இம்மையிலும் மறுமையிலும் பயனில்லை.
அர்ஜுனன் கேட்டான். துறவின் இயல்பையும் விடுத்தலின் தன்மையையும் பிரித்துச் சொல்க! இறைவன் சொன்னார். விருப்பத்தால் செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் விடுவதே துறவு. செயற்பயன்களை கொள்ளாமை விடுத்தல். சிலர் செயல்கள் அனைத்தையும் பிழையெனக் கருதி விடவேண்டும் என்கிறார்கள். வேள்வி, கொடை, தவம் ஆகியவற்றை விடக்கூடாதென்கிறார்கள் சிலர்.
விடுத்தலில் என் தரப்பை சொல்கிறேன். விடுத்தல் மூவகை. வேள்வி, கொடை, தவம் என்ற செயல்களை விடக்கூடாது, செய்தாகவேண்டும். அவை அறிவுடையோரை தூய்மை செய்கின்றன. ஆனால் அவற்றை பற்றின்றி பயன்கருதாது செய்யவேண்டும். நெறிகளின்படி வகுக்கப்பட்ட செயல்களை துறத்தலாகாது. உளம் மயங்கி அவற்றை விட்டுவிடுதல் அமைவுநிலையை அளிக்கும். செய்யவேண்டியவற்றை துயரெனக் கருதி உடலுக்கு வருத்தம் நேருமென அஞ்சி விடுவோம் என்றால் செயல்நிலையில் நின்று துறப்பதன் பயனை அடையமுடியாது.
நெறிகள் கூறும் செயலை ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் பற்றையும் பயன் வேண்டலையும் விடுத்து செய்தால் அதுவே நிறைநிலைத் துறப்பு எனப்படும். நிறைநிலை நின்று மெய்மை உணர்ந்து ஐயங்களை அறுத்த துறவி
இன்பமற்ற செய்கையை வெறுப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் பற்று கொள்வதில்லை. உடல் கொண்டவனால் முழுமையாக செயல்களை விட்டுவிட முடியாது. செய்கைகளின் பயனை துறப்பவன் தியாகி எனப்படுவான்.
வேண்டுவது, வேண்டாதது, இரண்டுமானது என மூன்று வகை செயற்பயன்கள் துறக்காதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகின்றன. துறந்தோருக்கு அப்பயன் இல்லை. செயல்களை ஒறுக்கும் வழியை கூறும் செயல்நெறியில் செயல்கள் முழுமைகொள்ள ஐந்து அடிப்படைகள் சொல்லப்பட்டன. செயல்நிகழும் இடம், செய்வோன், செயல்கள், செயல்முறைகள், இயற்கை என ஐந்து. மனிதன் உடம்பாலும் சொல்லாலும் எந்தச் செயலை தொடங்கினாலும் அது முறையானதாயினும் அல்லாவிடினும் இவ்வைந்துமே அடிப்படைகள்.
தனிப்பொருளாகிய ஆத்மாவை செயலாற்றுபவனாக எண்ணுபவன் அறிவிலி. நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இன்றி பற்றுதல்கள் அற்று செயல்புரியும் மதியுடையவன் உலகங்கள் அனைத்தையும் கொன்றபோதிலும் கொலையாளி ஆகமாட்டான். பழிகொள்ளவும் மாட்டான்.
அறிவு, அறிபடுபொருள், அறிவோன் என இம்மூன்றும் செயல்களை தூண்டுவன. கருவி, செயல், செய்வோன் என செயலின் அமைப்பு மூன்று பகுதிகள் கொண்டது. இயல்புநிலைகளை எண்ணினால் அறிவு, செயல், ஆற்றுவோன் என அவை மூன்று. பிரிவுபட்டு நிற்கும் அனைத்திலும் பிரிவற்ற, அழிவற்ற ஒரே இயல்பைக் காணும் அறிவே நிறைநிலை. உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட இயல்புகள் இருப்பதாக பிரித்துக் காணும் அறிவே செயல்நிலை. அடிப்படைகளைக் கருதாமல், ஏதேனும் ஒற்றை நலனை அனைத்துமாகக் கருதி பற்றுதல் கொள்வதும், உண்மையில் அறியாததும், சிறுமைகொண்டதுமான மெய்யறிதல் அமைவுநிலை.
பயன்களை வேண்டாதான் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றி செய்யும் நெறிநின்ற செயல் நிறைநிலை. விருப்பங்களுக்கு ஆட்பட்டவன் ஆணவத்துடன் மிகுந்த முயற்சிகொண்டு செய்யும் செயலே செயல்நிலை. பின்விளைவையும், பிறருக்கு நேரக்கூடிய ஊறையும், தன் துன்பத்தையும், ஆற்றுவோனின் திறமையையும் கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படும் செயல் அமைவுநிலை எனப்படும்.
பற்றற்றவனாகவும், நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும், உறுதியும் ஊக்கமும் உடையவனாகவும், வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும் செயலாற்றுபவனை நிறைநிலையன் என்பர். வேட்கை கொண்டவன், பயன் விரும்புவோன், எண்ணிச்செய்வோன், இடர்இயற்றுவோன், தூய்மை அற்றோன், களிக்கும் துயிலுக்கும் ஆட்பட்டோன் என நின்று செயலாற்றுவோன் செயலியல்புகொண்டவன். யோக நிலை பெறாதோன், பண்படாதோன், அறிவிலி, முரட்டியல்பு கொண்டவன், வஞ்சகன், பொறாமையுடையவன், சோம்பலும் ஏக்கமும் கொண்டவன், காலத்தை நீடித்துக்கொண்டே செல்பவன் என செயலியற்றுபவனை அமைவுநிலை கொண்டவன் என்பர்.
இயல்பினால் மூன்று வகைப்பட்ட அறிவின் வேற்றுமைகளையும் பகுத்துரைக்கிறேன். தொழிலையும் ஒழிதலையும், செய்யத்தக்கதையும் தகாததையும், அஞ்சவேண்டியதையும் வேண்டாததையும், பற்றையும் விடுதலையையும் பகுத்தறியும் அறிவே நிறைநிலை. அறமும் அல்லதும் ஆற்றவேண்டியதும் ஒழியவேண்டியதும் முறையாக உணரப்படாத அறிவே செயல்நிலை எனப்படும். இருளால் கவரப்பட்ட, மறத்தை அறமென மயங்கி அனைத்தையும் மாறாகக் காணும் அறிவே அமைவுநிலை.
உளம், உயிர், புலன்கள் ஆகியவற்றின் செயல்களை பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் கொள்ளும் உறுதியே நிறைநிலை. பற்றுதலுடையவன் பயன்நாடி அறம் பொருள் இன்பங்களை பேணுவதில் செலுத்தும் உறுதி செயல்நிலை. உறக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், ஏக்கத்தையும், கொள்ளும் கருத்தையும் மாற்றத் திறமையில்லாத உறுதி அமைவுநிலை.
மூன்று வகை இன்பங்களை சொல்கிறேன், கேள். பயிலப் பயில உவகை மிகும், துயரை அறுக்கும், தொடக்கத்தில் நஞ்சும் விளைகையில் அமுதமும் ஆகும் இன்பமே நிறைநிலை. அது தெளிவிலிருந்து எழுவது. புற இன்பங்களில் புலன்கள் பொருந்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் செயல்நிலை. தொடக்கத்திலும் இறுதியிலும் ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதும், உறக்கம் சோம்பல் தவறுகள் ஆகியவற்றில் பிறப்பதுமான இன்பம் அமைவுநிலை.
முதலியற்கையில் தோன்றும் இம்மூன்று இயல்புகளில் இருந்து விடுபட்ட உயிர் மண்ணில் இல்லை; வானில் தேவரிடமும் இல்லை. அந்தணர், வீரர், தொழிலோர், தொண்டர் என நால்வகையினரின் செயல்கள் அவர்களின் இயல்பில் இருந்து வகுக்கப்படுவன. அகச்செயல் வென்று புறச்செயல் அடக்கிய தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, நல்லறிவு, கல்வி, நம்பிக்கை இவை அந்தண இயல்புகளாக இயற்கையாக தோன்றுகின்றன. வீரம், மிளிர்வு, உறுதி, வெல்லும்திறன், பின்வாங்காமை கொடை இறைத்தன்மை ஆகியவை வீரர் இயல்பாக நிகழ்கின்றன. உழவு, ஆபுரத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் தொழிலோர் செயல்கள். தொண்டு புரிதல் அத்தொழிலோனுக்கு இயற்கையில் எழும் தன்மை.
தனக்குத் தானே உரிய செயலில் மகிழ்ச்சியுறுபவன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எப்படி நிறைவடைகிறான் என்று சொல்கிறேன். உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையம் எங்கும் நிறைந்திருக்கும் முழுமுதலை தன் செயலியல்பால் வழிபடுபவன் நிறைவடைகிறான். பிறர்க்குரிய அறத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய அறத்தை குன்றச் செய்தலும் நன்று.
இயற்கையிலேயே தன்னிலெழும் செயலைச் செய்வதனால் மனிதன் பழிகொள்வதில்லை. இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன. பற்றற்ற மதியுடன், விழைவைத் தவிர்த்து, தன்னை வென்றவன் செயல் கடந்து நிறைவடையும் வெற்றியை அடைகிறான்.
நிறைநிலை அடைந்தவன் எப்படி பிரம்மத்தில் கலக்கும் உச்சமான ஞானநிலை எய்துகிறான் என்பதை கூறுகிறேன். தூய்மை பெற்ற அறிவுடன், உறுதியால் தன்னை வென்று, பலசொல் செவிகொள்ளும் அலைவைத் தவிர்த்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு, தனித்த இடங்களை நாடுவோனாக, விழைவுகள் மங்கலாகி சொல்லையும் உடலையும் உள்ளத்தையும் வென்று ஊழ்கத்திலமர்ந்து பற்றின்மையே பற்றெனக் கொண்டவனாக ஆணவம், உறுதிகள், செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை உதறி தன்னிலை அகன்று அமைதியடைந்தவன் தானே பிரம்மம் என ஆகிறான்.
பிரம்மநிலை பெற்றோன், மகிழ்வுடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் நிகராக நினைப்போன் என்மேல் பெரும்பற்றுகொள்ளும் மெய்நிலையை அடைகிறான். என்னை யார் என்றும் எத்தன்மை உடையவன் என்றும் அந்தத் தற்கொடையால் முழுமையாக அறிகிறான். மெய்யாக என்னை அறிந்தபின் அவன் தத் எனப்படும் பிரம்மத்தில் புகுகிறான்.
எல்லாச் செயல்களையும் எப்போதும் செய்துகொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டவன் என் அருளால் அழிவற்ற பெருநிலையை எய்துகிறான். அறிவினால் எனை எண்ணி செயல்களை எல்லாம் துறந்துவிட்டு, என்னிடத்தில் ஈடுபட்டு, அறிவெனும் யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னை உளம்கொண்டவனாக இரு. என்னை உளத்துள் கொண்டிருப்பவனாக எல்லாத் தடைகளையும் என் அருளால் கடந்து செல்க! நீ ஆணவத்தால் இதை கேளாது விடுவாய் என்றால் அழிவடைவாய்.
ஆணவத்தால் போர் புரியமாட்டேன் என்று முடிவெடுத்தால் உன் முடிவு பொய்யாகும். இயற்கை உன்னை போரில் செலுத்தும். இயற்கையில் தோன்றிய தன்னறத்தால் கட்டுண்டிருக்கும் நீ உளமயக்கத்தால் போர்செய்ய விரும்பாவிட்டாலும் உன் இயல்பால் உன்னைமீறி அதை செய்வாய். உடல் என்ற பொறியில் அனைத்து உயிர்களையும் ஏற்றி மாயையால் சுழற்றியபடி அனைத்து உள்ளங்களிலும் இறைவன் நின்றிருக்கிறான். அனைத்து வடிவங்களிலும் அவனையே அடைக்கலம் கொள்க! அவன் அருளால் பேரமைதியாகிய அழியா நிலையை அடைவாய்.
மந்தணங்களில் முதன்மையான மெய்மையை உனக்கு சொன்னேன். இதை தீர ஆராய்ந்து உன் விருப்பப்படி செயல்படுக! என் சொற்களை கேள். நீ என் நண்பன். உனக்கு உகந்ததை சொல்கிறேன். உன் உள்ளம் எனதாகுக! என் தொண்டனாகுக! எனக்கென வேள்விசெய்க! என்னையே வணங்குக! என்னை எய்துவாய். உண்மை இதுவே, உனக்கிதை ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ எனக்கு இனியவன். எல்லா அறங்களையும் கைவிடுக! என்னையே அடிபணிக! எல்லாப் பழிகளில் இருந்தும் உன்னை விடுவிப்பேன். துயர்கொள்ளாதே!
இச்சொற்களை எப்போதும் தவமிலாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், செவிகொடுக்காதவனுக்கும் என்மேல் ஒவ்வாமை கொண்டவனுக்கும் சொல்லாதே. இம்மாபெரும் மறைபொருளை உகந்தவர்களுக்கு சொல்லுபவன் என்மேல் அன்புகொண்டு என்னையே எய்துவான். ஐயமில்லை. மானிடருள்ளே அவனைவிட எனக்கு இனிது செய்வோன் வேறில்லை.
இந்த அறச்சொல்லாடலை படிப்பவர் இயற்றும் ஞானவேள்வியால் நான் நிறைவு பெறுவேன். இது என் ஆணை. நம்பிக்கை கொண்டு, உளவிலக்கம் அகற்றி இதனை கேட்பதை மட்டுமே செய்பவன்கூட விடுதலை அடைவான். நற்செயல் செய்தமையால் சென்றடையும் நல்லுலகங்களை எய்துவான். பார்த்தா, சித்தத்தை ஒருமைப்படுத்தி இதை நீ கேட்டாய் அல்லவா?
“அர்ஜுனா, உன் உளமயக்கம் அழிந்ததா?” என்ற இளைய யாதவரின் குரல் கேட்டு அர்ஜுனன் இடமுணர்ந்தான். திகைத்து “யாதவரே” என்றான். பின்னர் அவருடைய புன்னகைத்த முகத்தை நோக்கி “ஆம், மயக்கம் அழிந்தது. அச்சுதா, நான் நினைவு மீண்டேன். ஐயம் விலகியது. நீங்கள் ஆணையிட்டதை செய்வேன்” என்றான்.
அர்ஜுனன் உபப்பிலாவ்யத்தின் அரண்மனையை அடைந்தபோது வாயிலில் நகுலன் காத்திருந்தான். அவன் புரவியிலிருந்து இறங்கியதும் அருகே வந்து “மூத்தவரே, தங்களை அரசர் நேற்றிரவு பலமுறை அழைத்தார். எங்கிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை என்றேன். தேடி அழைத்துவரச் சொன்னார். கோட்டையின்மேல் காவல்மாடத்திலேயே துயில்கொண்டுவிட்டீர்கள் என்றார்கள். அங்கு வந்தபோது தாங்கள் இல்லை. விரித்திருந்த துணிமட்டும் கிடந்தது. காட்டுக்குள் சென்றிருப்பீர்கள் என எண்ணினேன்” என்றான்.
“ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். ஏவலனிடம் புரவியின் கடிவாளத்தை அளித்துவிட்டு அர்ஜுனன் நடக்க நகுலன் உடன் சென்றான். அர்ஜுனனின் நடை மாறுபட்டிருந்தது. எதிரே வந்து வணங்கிய சுரேசரிடம் புன்னகைத்து “நலம்திகழ்க அமைச்சரே, நேற்று துயில்நீத்தீர்களோ?” என்றான். அவர் அந்தப் புன்னகையை எதிர்பார்க்கவில்லை “ஆம்” என்றார். பின்னர் நகுலனை விழிதொட்டு நோக்கால் வினவினார். நகுலன் புன்னகைத்து அறியேன் என விழிகாட்டினான். சுரேசர் சென்றபின் நகுலன் அர்ஜுனனுடன் அணுகி நடந்து “மூத்தவர் துயர்கொண்டிருக்கிறார். நீங்கள் படைசூழ்கையில் போதிய ஈடுபாடு காட்டவில்லை என்று கருதுகிறார்” என்றான்.
அர்ஜுனன் சினம் கொள்ளலாகாது என்னும் விரைவுடன் “ஆனால் இப்போது உங்களை பார்த்தால் மகிழ்வார். உங்கள் முகமே மாறிவிட்டிருக்கிறது. உங்கள் முகத்தில் நெடுநாட்களுக்குப்பின் இப்போதுதான் புன்னகையை காண்கிறேன்” என்றான். அர்ஜுனன் தலையை அண்ணாந்து உரத்த குரலில் நகைத்தான். அங்கே நின்றிருந்த காவலர்களின் திகைப்பை நகுலன் கண்டான். “சிற்றவைக்குள் அரசர் இருக்கிறார். மூத்தவர் பீமனும் இளையவன் சகதேவனும் உடனிருக்கிறார்கள்” என்றான் நகுலன். “நேற்று மாலை அனைத்து படைஎழுகைகளும் முடிவடைந்தன. சூழ்கைகளை ஓலைகளில் வரைய ஆணையிட்டிருந்தோம். ஓலைகள் அனைத்தும் வந்து சேர்ந்துவிட்டன. அதைத்தான் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.”
சிற்றவைக்கு முன் நின்றிருந்த காவலன் உள்ளே சென்று ஆணைபெற்று தலைவணங்க அர்ஜுனன் நகுலனுடன் உள்ளே சென்றான். அவனைக் கண்டதுமே பீமன் உரத்த குரலில் “ஆ! என்ன இது? இளையோனே, நீ முற்றாக மாறிவிட்டாய்!” என்று கூவியபடி கைவிரித்து அணுகினான். யுதிஷ்டிரரும் எழுந்துகொண்டு “ஆம், இடும்பவனக் காட்டில் இருந்த அந்த இளையோனின் புன்னகை இது!” என்றார். பீமன் அர்ஜுனனின் தோள்களை பற்றிக்கொண்டு “என்ன நடந்தது? மீண்டும் ஏதாவது காதலில் இறங்கிவிட்டாயா?” என்றபின் திரும்பி சகதேவனிடம் “முதற்காமத்தில்தான் இளையோர் இப்படி கனவுகண்ட குழந்தைபோல சிரித்துக்கொண்டு அலைவார்கள்” என்றான்.
அர்ஜுனன் சிரித்தபடி யுதிஷ்டிரரை வணங்கினான். பீமன் அவன் தோளில் ஓங்கி அறைந்து “சொல்க, என்ன நிகழ்ந்தது?” என்றான். “நான் ஒரு கனவு கண்டேன், மூத்தவரே” என்றபடி அர்ஜுனன் அமர்ந்தான். “கனவா?” என்ற பீமன் சகதேவனிடம் “நான் சொல்லவில்லையா? காமக்கனவு!” என நகைத்தபின் “அதில் நீ முதிரா இளையோன் அல்லவா?” என்றான். “இல்லை, நான் அதில் இளைய யாதவரை கண்டேன்” என்றான் அர்ஜுனன். “எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரர். “இயல்புதான். அவர் நைமிஷாரண்யம் சென்றபின் நீ சென்று அவரை பார்க்கவேயில்லை” என்று பீமன் சொன்னான்.
“சென்ற சிலநாட்களாகவே உளக்கொதிப்பு உச்சம் கொண்டிருந்தது, மூத்தவரே. என்னைச் சூழ்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த இந்தப் படையொருக்கம் எனக்குள்ளும் நிகழ்ந்தது. ஆனால் ஒருபக்கம் படைகள் திரள மறுபக்கம் படைகள் விலகிப்பிரிந்து வெற்றுத்திரளென்றும் ஆகிக்கொண்டிருந்தன. எங்கிருக்கிறோம் எவரை பார்க்கிறோம் என்ன சொல்கிறோம் என்றே என் ஆழம் அறியவில்லை. பித்துப்பிடிக்கச் செய்யும் நிலையழிவு. வெறுமை நாளுமென ஏறிவந்தது. நேற்று மாலை காவல்மேடைமேல் ஏறியபோது அங்கிருந்து கீழே கைவிடுபடைகளின் அம்புக்கூர்கள் மேல் குதித்துவிட்டாலென்ன என்ற எண்ணம் எழுந்ததைக் கண்டு நான் திடுக்கிட்டேன். தற்சாவு என்னும் எண்ணம் என்னுள் எழுந்ததே இல்லை.”
“என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவ்வெண்ணம் எழுந்தது எப்படி என எண்ணியபடி சுவர் விளிம்பில் நெடுநேரம் அமர்ந்திருந்தேன். எண்ணிச்சலித்து அப்படியே படுத்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தேன். பலகோடி விண்மீன்கள். ஒவ்வொன்றும் பிறரில்லா இருள்சூழ தனிமையில் அமைந்து நடுங்கி அதிர்ந்துகொண்டிருந்தன. அப்படியே துயில்கொண்டிருப்பேன். அதில் ஒரு கனவு. மிகமிக நீண்ட கனவு. பல படிகளாக, அலையலையாக நிகழ்ந்துகொண்டே இருந்தது. நெடுநேரம்” என்றான் அர்ஜுனன். “கனவுகள் எத்தனை நீண்டவை என்றாலும் இமைக்கணமே நிகழ்பவை” என்றார் யுதிஷ்டிரர்.
“என்ன கனவு?” என்று பீமன் கேட்டான். “நான் இளைய யாதவரை சென்று சந்திப்பதைப்போல” என்றான் அர்ஜுனன். “அது எவரும் எண்ணக்கூடியதே” என்றான் பீமன். “நானும் அவரை சென்று பார்ப்பதாக கனவு கண்டேன்.” யுதிஷ்டிரர் “ஆம், நானும் அவரை சென்று சந்தித்ததாக கனவு கண்டேன். அக்கனவில் அவர் எனக்கு நீண்ட அருளுரையை அளித்தார். அக்கனவிலிருந்து மேலும் மேலுமென கனவுக்குள் சென்றேன். அஸ்தினபுரிக்குச் சென்று சகுனியை கண்டேன். ஏன் எதிர்காலத்திற்குச் சென்று நம் கொடிவழியில் ஓர் அரசனின் மைந்தரில் ஒருவனாக இருந்தேன்… அதைத்தான் சற்றுமுன் இளையவனிடம் சொல்லி நிமித்தம்சூழ்ந்து உரைக்கும்படி கேட்டேன்” என்றார்.
“நான் நானாக அவரிடம் செல்லவில்லை, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “பலராக சென்றேன். ஒருவர் பின் ஒருவராக பல வடிவங்களில்… பல நீளுரைகள், பல உட்கனவுகள்.” யுதிஷ்டிரர் “எவராகச் சென்றாய்?” என்றார். “அங்கராக, பின் பீஷ்மராக. உங்கள் வடிவிலும் திரௌபதியின் வடிவிலும்கூட” என்று அர்ஜுனன் சொன்னான். இமைக்காமல் அவனையே நோக்கியிருந்த யுதிஷ்டிரர் “என்ன கண்டாய்?” என்றார். “கண்டதையும் கேட்டதையும் என்னால் தொகுத்துக்கொள்ள முடியும் என தோன்றவில்லை. அவ்வளவு நீண்ட ஆழ்நிகழ்வு. எண்ணினால் ஒரு கணம் என்று தோன்றுகிறது. ஒரு சொல்லும் ஒருதுளிக் காட்சியும் எஞ்சவில்லை. அவ்வினிமை மட்டும் என் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ளது.”
“ஆனால் என் உடலில் அழுந்திய அனைத்து எடைகளும் விலகிவிட்டன என உணர்கிறேன். நினைவறிந்த நாளில் இருந்து இதுவரை இத்தனை உள்ளமைதியை உணர்ந்ததில்லை. உவகை என்பது அலையல்ல, ததும்பாமை என அறிகிறேன்” என்றான். யுதிஷ்டிரர் “அது உன் முகத்தில் தெரிகிறது. ஊழ்கம் கனிந்து மெய்மையை அடைந்த ஞானிகளின் முகமும் விழிகளும் கொண்டிருக்கிறாய்” என்றார். “ஆம், அதையே நானும் எண்ணினேன், மூத்தவரே” என்று நகுலன் சொன்னான். பீமன் “கனவில் புன்னகைக்கும் குழந்தைபோல என நான் எண்ணினேன்” என்றான்.
யுதிஷ்டிரர் “நீ விடுபட்டுவிட்டதை அறிந்து உவகை கொள்கிறேன், இளையோனே” என்றார். “நீ இன்றிருக்கும் நிலையில் எவ்வுயிருக்கும் எத்தீங்கும் செய்ய இயலாது என அறிவேன். போர்புரியும்படி உன்னிடம் சொல்லமாட்டேன். நீ விழைந்தால் கானேகலாம். உன்னை எங்கள் குலத்திலெழுந்த மாமுனிவன் என எண்ணி பணிந்து உவகையுடன் விடையளிக்கிறோம். எங்களில் நீ நிகழ்ந்தபோதே அனைத்து வெற்றிகளையும் புகழ்களையும் அடைந்துவிட்டோம். இனி நாங்கள் வெல்லவும் கொள்ளவும் ஏதுமில்லை” என்றார்.
இனிய புன்னகையுடன் “இல்லை மூத்தவரே, நான் போரிடுகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். அவன் புன்னகை இளைய யாதவருக்குரியது என நகுலன் எண்ணினான். “ஆனால்…” என யுதிஷ்டிரர் தயங்கி சகதேவனை நோக்க அவன் “போரிடும் தவமுனிவர் என்றுகொள்க, அரசே!” என்றான். யுதிஷ்டிரர் மேலும் சிலகணங்கள் அர்ஜுனனை நோக்கிவிட்டு முகம் நெகிழ்ந்து “ஆம், அவ்வண்ணமே” என்றார்.
பீமன் “நம் படைகள் முழுதமைந்துவிட்டன, இளையோனே. ஆனால் இன்றைய நிலையில்கூட அவர்களின் படைக்கு நாலில் ஒன்றே நம் அளவு. இவ்வடிவில் இப்போரில் நாம் வெல்ல வாய்ப்பே இல்லை என்று விராடர், துருபதர் போன்ற படைவல்லுநர் கூறுகிறார்கள்” என்றான். “நம் தரப்பின் முதன்மைத்திறலோன் இளைய யாதவரே. அவர் படைக்கலம் எடுக்கப்போவதில்லை எனும் செய்தி இருபக்கப் படைகளிலும் பரவிவிட்டது. முதல் அம்பு எழுவதற்கு முன்னரே அவர்கள் அடைந்த பெருவெற்றி அது.”
சகதேவன் புன்னகையுடன் “யோகத்திலமைந்த கிருஷ்ணனும் வில்லேந்திய விஜயனும் இருக்குமிடத்தில் திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலைதவறா அறமும் திகழும். சூதர்கள் பாடும் முதன்மை வரி இது, மூத்தவரே” என்றான்.
[இமைக்கணம் முழுமை]