இமைக்கணம் - 52

wild-west-clipart-rodeo-31அர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன்.

இறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே என்று உணர்க! நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? நிலையன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாக சொல்லக் கேள்.

அது முனிவர்களால் பலவகையில் பாடப்பட்டது. பலவகை சந்தங்களால் இசைக்கப்பட்டது. உறுதியான சொல்லமைவுகள் கொண்ட பிரம்மசூத்திரத்தில் கூறப்பட்டது. ஐம்பருக்கள், தன்னிலை, அறிவு, அறியப்படாதது, பத்து புலன்கள், உள்ளம், புலனறியும் புலங்கள் ஐந்து, வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடல், தன்னுணர்வு, உளநிலை ஆகிய மாறுபட்ட தளங்கள் கொண்டது இந்த நிலையம் என சுருக்கிச் சொல்லலாம்.

ஆணவமின்மை, பெருமிதமின்மை, கொல்லாமை, பொறுமை, நேர்மை, ஆசிரியனிடம் பணிவு, தூய்மை, நிலைத்த தன்மை, தன்னை கட்டுதல், புலனறிதல்களில் விருப்பின்மை, தன்முனைப்பின்மை, பிறப்பு இறப்பு நரை நோய் துயரம் உளக்குறை இவற்றில் இயைந்த பார்வைகொண்டிருத்தல், மைந்தர் மனைவி இல்லம் ஆகியவற்றில் பற்றிலாதிருத்தல், உடைமை கருதாமை, விரும்பியவற்றிலும் அல்லவற்றிலும் நிகர்நோக்கு, பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றி செலுத்தப்படும் வழிபாடு, தனியிடங்களை மேவுதல், கூட்டத்தில் விருப்பமின்மை, ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ அறிதலில் பொருளுணர்வு – இவை அறிவு எனப்படும். இவற்றினின்றும் வேறுபட்டது அறிவின்மை.

அறிபடுபொருளை, எதை அறிந்தால் சாகாமை கைகூடுமோ அதை விளக்கிக் கூறுவேன். தொடக்கமற்ற பரம்பொருள் இருப்பு அல்ல. இருப்பின்மையும்  அல்ல. அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது. எங்கும் செவியுடையது. இங்குள அனைத்தையும் சூழ்ந்து நிற்பது. எல்லா புலனியல்புகளும் வாய்ந்து ஒளிர்வது. புலனியல்புகளுக்கும் புறம்பானது. பற்றில்லாதது. அனைத்தையும் பொறுப்பது. தன்னியல்பற்றது. தன்னியல்புகளை துய்ப்பது. பருப்பொருட்களுக்கு உள்ளும் புறமுமாவது. அசைவதும் நிலைப்பதுமாவது. நுண்மையால் அறிதற்கரியது. சேய்மையிலுள்ளது. அருகிலிருப்பது.

அறிபடுபொருளாகிய அது உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதென தோன்றுவது. பொருட்களை தாங்குவது. அவற்றை உண்பது. பிறப்பிப்பது. ஒளிகளுக்கெல்லாம் அதுவே ஒளி. இருளிலும் சுடர்வது அறிவு. அறிபடுபொருள் அந்த அறிவால் அடையப்படுவது. அனைத்துக்கும் ஆழத்தில் அமர்ந்தது என்று கூறப்படுகிறது. இவ்வாறு நிலையம் நிலையன் அறிவு அறிபடுபொருள் சுருக்கமாக விளக்கப்பட்டது. என் அடியான் இதை உணர்ந்து என்னியல்பை தானும் அடைகிறான்.

முதலியற்கையும் முதலோனும் தொடக்கமில்லாதவர்கள் என்று உணர்க! வேறுபாடுகளும் இயல்புகளும் முதலியற்கையிலிருந்தே பிறப்பன. நிகழ்வுகளையும் முதனிகழ்வுகளையும் ஆக்குவதற்கு முதலியற்கையே அடிப்படை என்பர். இன்பதுன்பங்களை அடைவதற்கு முதலோன் அடிப்படை. முதலியற்கையில் நின்று முதலோன் முதலியற்கையிலிருந்து பிறக்கும் இயல்புகளை துய்க்கிறான். இயல்புகளில் இவனுக்குள்ள பற்றுதலால் இவன் நன்று தீதெனும் பிறவிகளை அடைகிறான்.

மேற்பார்ப்போன், ஒப்புதலளிப்போன், சுமப்பவன், உண்பவன், இறைவன் என உடலிலுள்ள முழுமுதலோன் பரம்பொருளென்றே சொல்லப்படுகிறான். இவ்வண்ணம் முதலோனையும் முதலியற்கையையும் அதன் இயல்புகளையும் அறிபவன் எல்லா நெறிகளிலும் இயங்கினாலும் அவனுக்கு மறுபிறப்பில்லை.

சிலர் ஆத்மாவில் ஆத்மாவால் ஊழ்கம் செய்து ஆத்மாவை அறிகிறார்கள். சிலர் உலகியல்யோகத்தால் அறிகிறார்கள். சிலர் செயல்யோகத்தால் அறிகிறார்கள். வேறு சிலர் இவ்வாறு அறியாமல் அயலாரிடமிருந்து பெற்ற செவியறிதல்களைக் கொண்டு வழிபடுகிறார்கள். அவர்களும் அவ்வறிதல்களின்படி ஒழுகுவார்கள் என்றால் இறப்பை வெல்வர். நிலைகொண்டதாக இருப்பினும் அசைவதாயினும் உயிர் பிறக்குமென்றால் அங்கே நிலையமும் நிலையனும் இணைந்துள்ளது என்று அறிக!

அழியக்கூடிய எல்லா பொருட்களிலும் அழியாதவனாக, நிகர்நிலையில் நிற்பவனாக இறைவனை பார்ப்பவனே காட்சிகொண்டவன். எங்கும் நிகராக இறைவன் நிற்பதை இணையாக நோக்கிக்கொண்டிருப்பவன் தன்னை தான் துன்புறுத்திக்கொள்ள மாட்டான். அவன் பெருநிலை அடைகிறான்.

எங்கும் செயல்கள் முதலியற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆகவே நான் செய்பவன் அல்ல என்று அறிபவனே காட்சியுடையவன். பலவகையான பருப்பொருட்கள் ஒரே அடிப்படை கொண்டவை என்றும் அந்த அடிப்படையிலிருந்து விரிந்தவை என்றும் காண்கையிலேயே அவன் பிரம்மத்தை அடைகிறான். தொடக்கமின்மையால், தன்னியல்பின்மையால் இந்தப் பரம்பொருள் குறைவற்றவன். இவன் உடலில் உறைந்தாலும் செயலாற்றுவதில்லை. பற்றுகொள்வதுமில்லை.

எங்குமிருந்தாலும் வானம் தன் நுண்மையால் எங்கும் பற்றிலாதிருப்பதுபோல உடலில் ஆத்மா எங்குமிருந்தாலும் எங்கும் பற்றுவதில்லை. கதிரவன் இவ்வுலகமுழுதையும் ஒளியுறச் செய்வதுபோல நிலையன் நிலையத்தை முழுமையாக ஒளிரச்செய்கிறான்.

இவ்வாறு நிலையத்திற்கும் நிலையனுக்குமான வேற்றுமையையும் முதலியற்கையையும், அதன் செயல்களிலிருந்து விடுபடுவதையும் தன் அறிவிழிகளால் காண்பவர்கள் பரம்பொருளை அடைகிறார்கள்.

wild-west-clipart-rodeo-31இறைவன் சொன்னார். அனைத்து முனிவர்களும் எதை அறிந்து இவ்வுலகில் ஈடேற்றம் அடைந்தார்களோ அந்த மெய்மைகளில் உயர்ந்த முழுமெய்மையை நான் உனக்கு உரைக்கிறேன். இந்த மெய்மையை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.

அர்ஜுனா, கருவடிவ பிரம்மமே எனக்கு அடிப்படை. நான் அதில் கருக்கொள்கிறேன். எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன. பலவிதமான கருவறைகளில் இருந்து உடல்கள் கொண்ட உயிர்கள் உருவாகின்றன. அவை அனைத்துக்கும் முதலியற்கையே பிறப்பிடம். நான் விதையளிக்கும் தந்தை. நிறைநிலை, செயல்நிலை, அமையும்நிலை என்னும் மூவியல்புகள் முதலியற்கையில் எழுவன. அவை உடலில் அழிவற்ற ஆத்மாவை பிணைக்கின்றன.

நிறைநிலை மாசற்றது, ஒளிகொண்டது, நோவற்றது. இன்பத்தை அணையவும் அறிவை நாடவும் செலுத்துவது. விழைவுமிக்க செயல்நிலை உலகவிழைவுகளின் இணைவால் உருவாவது. ஆத்மாவை செயற்சுழலில் சிக்கவைக்கிறது. உடலுடைய அனைத்தையும் மயங்கச்செய்யும் அமையும்நிலை அறியாமையிலிருந்து எழுவது. அது பிழைகளாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் உயிர்களை ஆள்கிறது.

நிறைநிலை இன்பத்தில் பற்றுகொள்ளச் செய்கிறது. செயல்நிலை செயல்களில் பற்றுகொள்ளச் செய்கிறது. அமையும்நிலை அறிவைச் சூழ்ந்து உயிர்களை தேங்கவைக்கிறது. செயல்நிலையையும் அமையும்நிலையையும் அடக்கி நிறைநிலை இயல்கிறது. நிறைநிலையையும் அமையும் நிலையையும் வென்று செயல்நிலை ஓங்குகிறது. அவ்வண்ணமே நிறைநிலையையும் செயல்நிலையையும் கடந்து அமையும்நிலை சூழ்கிறது.

உடலில் உள்ள எல்லா வாயில்களிலும் ஞானத்தின் ஒளி பிறக்கும்போது நிறைநிலை வளர்ச்சி பெற்றுவிட்டது என அறியலாம். செயல்நிலை மிகும்போது விழைவு, முயற்சி, செயல்தொடக்கம், அமைதியின்மை, நிலைகொள்ளாமை, ஈடுபாடு ஆகியவை உருவாகின்றன. அமையும்நிலை ஓங்குமிடத்தில் ஒளியின்மை, முயற்சியின்மை, பிழைகள், மயக்கம் ஆகியவை பிறக்கின்றன.

நிறைநிலை ஓங்கி நிற்கையிலே உடல்கொண்டோன் இறப்பானாயின் மாசற்றவனாகி ஞானிகளின் உலகங்களை அடைகிறான். செயல்நிலையில் இறப்போன் செயலூக்கம் கொண்டோரிடையே பிறக்கிறான். அவ்வாறே அமையும்நிலையில் இறப்போன் அறிவிலார் கருக்களில் தோன்றுகிறான்.

நிறைநிலையின் மாசின்மையே நற்செய்கைகளின் பயன். செயல்நிலையின் பயன் துன்பம். அமையும்நிலையின் பயன் அறிவின்மை. நிறைநிலையிலிருந்து ஞானம் பிறக்கிறது. செயல்நிலையிலிருந்து விழைவும் அமையும்நிலையிலிருந்து பிழைகளும் மயக்கமும் அறிவின்மையும் தோன்றுகின்றன. நிறைநிலைகொண்டவர் மேலேறுகிறார்கள். செயல்நிலைகொண்டவர்கள் இடையில் நிற்கிறார்கள். அமையும்நிலை கொண்டவர்கள் இழிந்த இயல்புகளுடன் கீழே செல்கிறார்கள்.

ஆராய்பவன் இம்மூன்று இயல்புகள் அன்றி வேறான படைக்கும் விசை இங்கில்லை என்று அறிந்து இவ்வியல்புகளுக்கு மேலுள்ளதை உணர்ந்து என் இயல்பை அறிகிறான். உடலில் பிறக்கும் இம்மூன்றியல்புகளையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, துயர் என்பனவற்றிலிருந்து விடுபட்டோன் இறவாமையை அடைகிறான்.

அர்ஜுனன் கேட்டான். இம்மூன்று இயல்புகளையும் கடந்தவனின் அடையாளங்கள் என்ன? அவன் எப்படி ஒழுகுவான்? இம்மூன்றியல்புகளையும் அவன் எப்படி கடக்கிறான்?

இறைவன் சொன்னார். வெளிப்பாடு, செயல், மயக்கம் இவை தோன்றும்போது முரண் கொள்ளாமல் நீங்கியபின் விரும்பாமல் புறக்கணித்தவன்போல் இருப்பான். இயல்புகளின் சிக்கலால் சலிப்புகொள்ளாமல் இவ்வியல்புகள் சுழன்றுவருமென்று உணர்ந்து அதனால் நிலைகுலையாமலிருப்பான். தன்னிலை உணர்ந்து துன்பத்தையும் இன்பத்தையும் நிகரெனக் கருதி ஓடும் செம்பொன்னும் ஒப்பவே கண்டு, இனியவரிடமும் இன்னாதவரிடமும் நிகராக நடந்து இகழ்வையும் புகழையும் இணையெனக் கருதி ஒழுகுவான்.

சிறுமையும் பெருமையும் நிகரென்று இருப்பான். நண்பரிடமும் பகைவரிடமும் நடுநிலைகொள்வான். எல்லா செயல்களையும் துறந்து அமைவான். அவனே இயல்புகளைக் கடந்தவன் எனப்படுவான். வேறுபாடிலாத வழிபாட்டு யோகத்தால் என்னை வணங்குபவன் இயல்புகளைக் கடந்து பிரம்மநிலையை பெறத் தக்கவன். ஏனென்றால் அழிவற்றதான பிரம்மத்திற்கும் அமுதநிலைக்கும் என்றுமியலும் அறத்திற்கும் தன்னுள் இயலும் இன்பத்திற்கும் நானே உறைவிடம்.

wild-west-clipart-rodeo-31இறைவன் சொன்னார். மேலே வேர்கள் கொண்ட, கீழே கிளைகள் விரித்த அரசமரம் அழிவற்றது என்பார்கள். அதற்கு வேதங்களே கிளைகள். இயலுலகம் என்னும் அந்த அரசமரத்தை அறிந்தவனே வேதமறிந்தவன்.

அவ்வியல்புகொண்ட அந்த மரத்தின் இயல்புகள் புலனின்பங்கள் என்னும் தளிர்களுடன் மனிதர்கள் விலங்குகள் முதலிய பிறவிகளான கிளைகள் எழுந்தும் விரிந்தும் பரவியிருக்கின்றன. மானுடவுலகில் செயல்பிணைப்புகளாக ஆணவம், பற்று, முன்னைச்சுவை எனும் வேர்களும் விரிந்தும் ஆழ்ந்தும் விரவியிருக்கின்றன. இந்த மரத்தின் உருவம்போல வேறெங்குமில்லை. முடிவும் தொடக்கமும் நிலைக்களமும் தென்படுவதில்லை. ஆணவம், பற்று, முற்பிறவிச்சுவை என்னும் உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரசமரத்தை பற்றின்மை என்னும் ஆற்றல்மிக்க வாளால் வெட்டி வீசுக!

அதன் பின் சென்றவர் மீளாத பெருநிலையை நன்கு தேடுக! அந்த உலகியல் மரம் எங்கிருந்து கிளைத்துள்ளதோ அந்த முழுமுதலோனை அடைக்கலம் புகுக! செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள், பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள், ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், இன்பதுன்பங்களெனும் இரட்டைகளினின்றும் விடுபட்டோர், அறிவின்மையற்றோர் அழியாநிலையை எய்துகின்றனர்.

அவ்விடத்தை சூரியனும், சந்திரனும், தீயும் ஒளியேற்றுவதில்லை. எதை எய்தினோர் மீள்வதில்லையோ அதுவே என் முழுமைநிலை. இவ்வுடலில் உள்ள உயிர் எனது கூறு. அது முதலியற்கையிலுள்ள உள்ளம் மற்றும் ஐம்புலன்களை ஈர்க்கிறது. காற்று மணங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதுபோல உடலை ஆளும் ஆத்மா உள்ளத்துடன் இயைந்த புலன்களை ஓருடலில் இருந்து இன்னொன்றுக்கு கொண்டுவருகிறது. கேட்டல், காண்டல், தொடுதல், சுவை, மோப்பு, உளம் இவற்றில் நிலைகொண்டு உயிரின் நுகர்வுகளை தொடர்ந்து நடத்துகிறது.

அது புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், இயல்புகளை சார்ந்திருக்கையிலும், அவனை அறிவிலார் காண்பதில்லை. மெய்விழியுடையோர் காண்கின்றனர். யோகிகள் அதை தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மை தாம் தகுதிப்படுத்திக்கொள்ளாத அறிவிலார் அதை காண்பதில்லை.

சூரியனிடமிருந்து ஒளி அனைத்துலகையும் சுடர்கொள்ளச் செய்கிறது. சந்திரனிலும் தீயிலும் அத்தகைய ஒளியே உள்ளது. அவ்வொளியெல்லாம் என்னுடையதே என்று உணர்க! நான் பூமியுள் புகுந்து உயிர்களை என் உயிர்விசையால் தாங்குகிறேன். சோமமாகி பசும்பயிர்களை செழிக்கச் செய்கிறேன். பசி வடிவோனாகி உயிர்களின் உடலில் வாழ்கிறேன். எழுமூச்சு, விழுமூச்சு என்ற காற்றுகளுடன் கூடி நால்வகை உணவை செரிக்கிறேன்.

அனைவரின் அகத்திலும் புகுந்துள்ளேன். என்னிடம் இருந்துதான் நினைவும், அறிவும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன. எல்லா இடத்திலும் அறியப்படும் பொருள் நான். வேதமுடிபை ஆக்கியோன் நான். வேதத்தை உணர்ந்தவனும் நானே. உலகத்தில் இரண்டு வகை முதலோர் உண்டு. அசையும் முதலோர் அசைவற்றோர். அசையும் முதலோன் என்பது எல்லா உயிர்களையும் குறிக்கும். அறியப்படாது மறைந்திருப்பவன் அசைவிலா முதலோன்.

மூன்று உலகங்களிலும் புகுந்து தாங்கி காப்பவர், அழிவற்றவர் என்றும் இறைவன் என்றும் பரம்பொருள் என்றும் அழைக்கப்படும் அந்த முழுமுதலோன் இவர்களிலிருந்து மாறுபட்டவன். நான் அழிவைக் கடந்தோனாதலாலும், அசைவிலா முதலோனைவிட சிறந்தோனாதலாலும் உலகத்தாராலும் வேதங்களாலும் முதலோனில்முதலோன் என்று கூறப்படுகிறேன்.

அறிவின்மை அகன்று என்னை முழுமுதலோன் என்று அறிபவன் அனைத்தும் அறிந்தவன். அவன் அனைத்து வகையிலும் என்னை வழிபடுகிறான். இவ்வாறு இந்த மிக மந்தணமான அறிவை உனக்கு சொன்னேன். இதை உணர்ந்தவன் அறிவன், ஆற்றத்தக்கதை ஆற்றுபவன்.