இமைக்கணம் - 47

பகுதி பன்னிரண்டு : இறைப்பாடல்

wild-west-clipart-rodeo-31முதற்கதிர்ப்பொழுதில் இளைய பாண்டவனாகிய அர்ஜுனன் நைமிஷாரண்யத்திற்குள் நுழைந்து இளைய யாதவர் தங்கியிருந்த சிறுகுடிலை நோக்கி சென்றான். வானம் ஒளிகொண்டிருந்தாலும் நிழல்கள் கூர்கொள்ளத் தொடங்கவில்லை. இலைப்பரப்புகள் அனைத்தும் தளிர்மென்மை காட்டின. சுனைச்சுழிகளும் ஓடைவழிவுகளும் இருண்டே இருந்தன. தலைக்குமேல் பெருநகரங்கள்போல் பறவையோசை நிறைந்திருந்தது. அவன் பாதைக்குக் குறுக்காக நாகம் ஒன்று எடைமிக்க வயிற்றை மெல்ல இழுத்தபடி வால் நெளிய கடந்துசென்றது. புதருக்குள் இருந்து மறுபக்கம் செல்ல எழுந்த ஒரு வெளிமான் அவனைக் கண்டு அஞ்சி உடல்குறுக்கி பதுங்கியது.

உபப்பிலாவ்யத்திலிருந்து அவன் நள்ளிரவில் கிளம்பியிருந்தான். நைமிஷாரண்யத்தின் எல்லைவரை புரவியில் வந்தான். அக்காட்டுக்குள் விலங்கிலோ ஊர்தியிலோ செல்லலாகாதென்பதனால் இறங்கி நடக்கத் தொடங்கினான். எதையும் நோக்காதவனாக, தனக்குள் ஆழ்ந்து, முகவாய் மார்பில் படிய தலைதாழ்த்தி அதுவரை அமர்ந்திருந்தவன் நடக்கத் தொடங்கியதும் காலையொளியில் இலைவிரியும் வாகை என ஒவ்வொரு புலனாக விழித்தெழப்பெற்றான்.

காட்டுச்சேவல் ஒன்றின் கூவலோசை அவனை உடல்விதிர்த்து நிற்கச்செய்தது. பதற்றம் கொண்டிருந்த அவன் நரம்புகள் அவ்வோசையை ஓர் ஒளியதிர்வென விழிக்குள் காட்டின. பற்கள் கிட்டித்துக்கொள்ள கைகளைச் சுருட்டி இறுக்கி விழிமல்கி நின்றான். மீண்டும் நடந்தபோது உடற்தசைகள் வெவ்வேறு திசைகளில் இழுபட்டு நிற்க கால்கள் தள்ளாடின. நெடுநாள் துயில்நீப்பின் விளைவான வாய்க்கசப்பும் உடலோய்ச்சலும் விழியெரிச்சலும் இருந்தன. தலைசுழன்று அவ்வப்போது நின்றும் மீண்டும் உடலை உந்தி நடந்தும் அவன் சென்றான்.

இளைய யாதவரின் குடிலை அடைந்தபோது அது சற்றே திறந்திருப்பதைக் கண்டான். முற்றத்தில் நின்றபடி “யாதவரே! யாதவரே!” என்று அழைத்தான். அவர் காலைநெறிகளுக்காக சென்றிருக்கக் கூடுமென்று எண்ணி திரும்பி நோக்கினான். அவர் உள்ளேதான் இருக்கிறார் என்னும் உள்ளுணர்வு அவனிடமிருந்தது. அதை வியந்தபடி படியேறி கதவை மெல்ல திறந்தான். உள்ளே நுழைந்ததும் அவர் அங்கில்லை என்னும் உணர்வு ஏற்பட்டது. ஆனால் அவர் யோகஅமர்வில் தென்மேற்கு மூலையில் அமர்ந்திருப்பதை விழிகள் உணர்ந்தன.

இளைய யாதவரின் கால்கள் மடிந்து பாதங்கள் தாமரையின் புல்லிகள் என தழைந்திருக்க அல்லிகள் என கைகள் மடிமேல் படிந்திருந்தன. நேர்கொண்ட உடலின் நிகரமைந்த தோள்கள். படிந்த சிறு உதடுகளில் எப்போதுமிருக்கும் புன்னகை இல்லை. மூடிய இமைகளுக்குள் விழிக்குமிழிகள் முற்றிலும் அசைவற்றிருந்தன. இமைமயிர்கள் கருஞ்சிட்டின் இறகுப்பீலிகள்போல பதிந்திருந்தன. நிமிர்ந்த தலையில் குழல்கட்டிலமைந்த விழி மட்டும் நோக்கு கொண்டிருந்தது.

அவன் அவரை நோக்கியபடி சற்றுநேரம் நின்றான். பின்னர் கால்மடித்து அவர் முன் அமர்ந்தான். கைகளைக் கூப்பியபடி “யாதவரே” என்றான். மூன்றாம் முறை அவன் அழைத்தபோது அவர் முகத்தில் மெல்லிய அசைவு தோன்றியது. இமைகளுக்குள் விழிகள் உருண்டன. உதடுகள் விரிந்து பிரிந்தன. விழிதிறந்து அவனை நோக்கியபோது அவர் இவ்வுலகை அறியவில்லை என்று தோன்றியது. “யாதவரே, இது நான். இளைய பாண்டவன், உங்கள் தோழன்” என்றான் அர்ஜுனன்.

அவர் முகத்தில் புன்னகை பரவியது. மடியில் கோக்கப்பட்ட கைகள் பிரிந்து விலகின. பெருமூச்சுடன் “வருக பாண்டவனே, நேற்று உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “எப்போது?” என்று அர்ஜுனன் விழிசுருக்கி கேட்டான். “மூன்றாம் சாமத்தின் தொடக்கத்தில்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, என்னைப்பற்றி என்ன எண்ணினீர்?” என்று அர்ஜுனன் பரபரப்புடன் கேட்டான். “ஏன்?” என்றார் இளைய யாதவர். “சொல்க…” என்று உணர்வெழுச்சியுடன் அர்ஜுனன் கேட்டான்.

“பெருங்கடலொன்றின் கரையில் நீ சிறுவனென நின்றிருப்பதைப்போல. அலைகளெழுவதைக் கண்டு அஞ்சி அலறியபடி கைவிரித்து என்னை நோக்கி ஓடிவந்தாய்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் அப்போது பாண்டுவாக நின்றுகொண்டிருந்தேன். கைகளை விரித்து உன்னை அள்ளி எடுத்து என் நெஞ்சோடணைத்து ஆறுதல் சொன்னேன். தோளிலேற்றிக்கொண்டேன். சிரித்தும் தேற்றியும் பேசியபடி கடல்நோக்கி சென்றேன். உனது சிறுகால்கள் என் தோளில் கிடந்து துள்ளின. நீ அஞ்சி அலறி என் தலையைப் பிடித்து இழுத்தாய். என் நெற்றியை அறைந்தாய். நான் உன்னை இறக்கி அலைவிளிம்பில் விட்டேன். அலறியபடி திரும்பி என்னை பற்றிக்கொண்ட உனது கால்களை அலைவந்து அறைந்தது. நின்று நடுங்கினாய்” என்றார் இளைய யாதவர்.

“மீண்டும் மீண்டும் அலைகள் வந்தன. நான் இன்சொல் கூறிக்கொண்டே இருந்தேன். மெல்ல அலைகளுக்குப் பழகி முகம்மலர்ந்து நோக்கினாய். என் கையை வலக்கையால் பிடித்தபடி அலைகளில் குதித்து விளையாடலானாய். நான் மெல்ல அந்தக் கையைப் பிரித்து உன்னை விட்டுவிட்டு பின்னகர்ந்ததை நீ அறியவில்லை. அலைகளில் உன்னை மறந்து துள்ளிக்குதித்து விழுந்தெழுந்து ஆடிக்கொண்டிருந்தாய்.”

அர்ஜுனன் “யாதவரே, அதே பொழுதில்தான் நான் அக்கனவைக் கண்டேன்” என்றான். “சொல்க!” என்றார் இளைய யாதவர். “கனவல்ல, வெளியே பின்னால் நிகழ்வது முன்னரே உள்ளே நிகழ்வது அது. அதில் ஒவ்வொரு மணற்பருவும் ஒவ்வொரு நிழலும் உண்மை. நான் கொண்ட ஒவ்வொரு உணர்வும் மெய்” என்று அர்ஜுனன் சொன்னான். “யாதவரே, நான் குருக்ஷேத்திரத்தில் போர்முனையில் நின்றிருந்தேன்.” இளைய யாதவர் விழிகளில் மாறுபாடில்லாமல் “சொல்க!” என்றார்.

wild-west-clipart-rodeo-31களத்தில் நிகழ்வதை நான் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தேன். அஸ்தினபுரியின் அரசனாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்துவிட்டு ஆசிரியராகிய துரோணரிடம் போய் இவ்வாறு சொன்னான் “ஆசிரியரே, துருபதன் மகனும் உம் மாணவனுமாகிய படைத்திறத்தானால் வகுக்கப்பட்ட இப்பெரிய பாண்டவப் படையை பாருங்கள். அதில் வீரரும் மாபெரும் வில்லவரும் களத்திறனில் பீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள்.”

யுயுதானன், விராடன், தேர்வலனாகிய துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், வீரம் செறிந்த காசியரசன், புருஜித், குந்திபோஜன், மானுட ஏறாகிய சைப்யன், வலிமை மிக்க யுதாமன்யு, உத்தமௌஜன் ,சுபத்திரை மகன், திரௌபதியின் மைந்தர்  அனைவருமே பெருந்தேர் விறல் கொண்டவர்கள்.

இருபிறப்பாளர்களில் முதல்வரே, இனி எனது படைக்குத் தலைவராக நம்முள்ளே சிறந்தோரையும் தெரிந்து கொள்க! நீங்கள் உளம்கொள்ள அவர்களைப்பற்றி சொல்கிறேன். முதன்மையாக நீங்கள். பின்பு கர்ணன். எதிரிகளை வெல்லும் கிருபர், அஸ்வத்தாமர், விகர்ணர், சோமதத்தரின் மகன் பூரிசிரவஸ் என பெருவீரர் பலர். என்பொருட்டு வாழ்க்கையை துறக்கத் துணிந்தோர், அனைத்து வகை படைக்கலங்களும் அம்புகளும் கொண்டோர், போரில் திறன்மிகுந்தோர்.

ஆயினும் பீஷ்மப் பிதாமகரால் தலைமைகொள்ளப்பட்ட நமது படை போதுமானதாக தோன்றவில்லை. பீமனால் தலைமை தாங்கப்படும் அவர்களின் படையோ போருக்கு போதுமானதாகத் தெரிகிறது.எனவே நீங்கள் அனைவரும் வகுக்கப்பட்டபடி அனைத்து முனைகளிலும் அமைந்து பீஷ்மப் பிதாமகரை காத்து நிற்கவேண்டும்.

அதைக் கேட்டு புகழ்மிக்க கௌரவர் குலத்து மூதாதையான துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு ஓங்கிய ஓசையில் சிம்மமுழக்கம் புரிந்து தன் சங்கை ஊதினார். அப்பால் சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும் எழுந்து சேர்ந்தொலிக்க அது பேரோசையாயிற்று.

பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந்தேரில் நின்ற நீங்களும் நானும் நமது சங்குகளை ஊதினோம். நீங்கள் பாஞ்சஜன்யத்தை முழக்க நான் தேவதத்தத்தை ஒலித்தேன். பகைவர் அஞ்சும் போர்ச்செயல்கொண்ட ஓநாய் வயிற்றனாகிய பீமசேனர் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினார். குந்தியின் முதல் மைந்தராகிய யுதிஷ்டிரர் அனந்தவிஜயம் என்ற சங்கையும், இளையோரான நகுலனும் சகதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்று பெயர்கொண்ட தங்கள் சங்குகளையும் ஊதினர்.

வில்லோரில் சிறந்த காசியரசனும், தேர்த்திறல் சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராடரும், வெல்லப்படாத சாத்யகியும், துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரரின் தரப்பினரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

பின்னர் அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடி பறந்த தேரில் எழுந்து நான் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை விழியோட்டி நோக்கியபின் வில்லை ஏந்திக்கொண்டு உம்மை நோக்கி சொன்னேன் “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக! போரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்முனையில் என்னோடு போர் செய்யப்போகிறவர்கள் யார் யார்? கெடுமதியன் துரியோதனனுக்கு உதவியாக இங்கு போர்செய்யத் திரண்டு நிற்போரை நான் முழுமையாகக் காண வேண்டும்.”

இவ்வாறு நான் உரைக்கக் கேட்ட நீங்கள் வல்லமைகொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினீர்கள். பீஷ்மருக்கும் துரோணருக்கும் மற்றெல்லா வேந்தருக்கும் எதிரே தேரை நிறுத்திக்கொண்டு “பார்த்தா! இங்கு கூடி நிற்கும் கௌரவர்களை பார்!” என்றீர்கள்.

அங்கு நான் என் தந்தையாரும், பாட்டன்களும், ஆசிரியர்களும், மாதுலரும், மூத்தோரும், இளையோரும், மைந்தரும், பெயர்மைந்தரும், தோழர்களும் நிற்பதை கண்டேன். இரு பக்கங்களிலும் படைகள் என மாமன்களும், நண்பர்களும், உறவினர்களும் படைக்கலம்கொண்டு நிற்கக் கண்டு உளம்தளர்ந்தேன். நெஞ்சுதாளா துயருடன் சொன்னேன்.

“கிருஷ்ணா, போர்செய்ய வேண்டி இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு என் உறுப்புகள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என் உடல் நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் பதற்றம் உண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் உளம்,சுழல்கிறது. கேசவா, தீய நிமித்தங்களை காண்கிறேன். போரில் சுற்றத்தார்களைக் கொல்வது நன்று என எனக்குத் தோன்றவில்லை.”

யாதவரே, நான் வெற்றியை விரும்புகிலேன். அரசையும் இன்பங்களையும் வேண்டேன். கோவிந்தா, நமக்கு அரசால் ஆவதென்ன? இன்பங்களாலோ வாழ்க்கையாலோ என்ன பயன்? நாம் எவர்பொருட்டு அரசையும் களியாட்டுகளையும் இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்களே தங்கள் உயிரையும் செல்வங்களையும் துறக்க ஒருங்கி வந்து நிற்கிறார்கள்.

நோக்குக! ஆசிரியர்களும், தந்தையரும், மைந்தரும், பாட்டன்களும், மாதுலரும், மாமன்களும், பேரரும், மைத்துனரும், குலம்பரிமாறியவர்களும் இங்குள்ளனர்.  நான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்பமாட்டேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் இதை செய்யமாட்டேன். வெறும் மண்ணின்பொருட்டு செய்வனோ?

இந்த திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை அடையப்போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மை பழியே சாரும். குருதிச்சுற்றத்தாராகிய திருதராஷ்டிரர் குடியினரைக் கொல்வது நமக்குத் தகாது. உறவினரைக் கொன்ற பின் நாம் இன்புற்றிருப்பதெப்படி? பெருவிழைவால் அறிவிழந்த இவர்கள் குலத்தை அழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்கு வஞ்சம் செய்வதன் பழியையும் காண்கிலராயினும் குலப்பேரழிவால் ஏற்படும் தீங்கை உணர்ந்த நாம் இதிலிருந்து விலகும் வழியறியாதிருப்பதென்ன?

குலமழிகையில் என்றுமுள்ள குலஅறங்கள் அழிகின்றன. அறம் அழிவதனால் குலமுழுவதையும் மறம் சூழ்கிறதல்லவா? கிருஷ்ணா, மறம் சூழ்வதனால் குலப்பெண்டிர் நிலையழிகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, பெண்டிர் நிலைகெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் கீழ்உலகம் அமைகிறது. மூதாதையர் அன்னமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக்கேடர் செய்யும் இக்குற்றங்களால் பிறவிநெறிகளும் தொன்றுதொட்டுள்ள குலமுறைமைகளும் இல்லாமலாகிவிடுகின்றன.  குலநெறிகள் இல்லாமலான மானுடருக்கு எக்காலும் இருளுலகில்தான் இடம் என்று கேள்விப்படுகிறோம்.

அரசஇன்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரும்பிழை செய்யத் தலைப்பட்டோம்! கையில் படைக்கலம் இல்லாமல், எதிர்க்காமல் நிற்கும் என்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் படைக்கலம் ஏந்தி போரில் கொன்றுவிடினும் அது எனக்கு பெரிய நன்மையே ஆகும்.

அர்ஜுனன் காய்ச்சல் கண்ட விழிகளுடன் “தோழரே, களமுனையில் இவ்வாறு சொல்லி அம்புகளையும் வில்லையும் எறிந்துவிட்டு துயரில் மூழ்கிய உளத்தனாய் தேர்ப்பீடத்தின்மேல் அமர்ந்து கொண்டேன்” என்றான்.

“அக்கணம் விழித்துக்கொண்டேன். என் உடல் வியர்வையில் குளிர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது. கோட்டைமுகப்பில் காவல்மாடத்தின் உச்சியில் படுத்திருந்தேன். கீழே புதிய படை ஒன்று நகரணைந்ததன் ஓசை. மிக அப்பால் காற்றில் காடு முழங்கிக்கொண்டிருந்தது. என் விழிகளிலிருந்து நீர் வழிவதை உணர்ந்தேன். எழுந்து அமர எண்ணினேன். ஆனால் உடற்தசைகளை அசைக்க முடியவில்லை. நான் முன்னரே இறந்துவிட்டேன் என எண்ணினேன். இல்லை, இதோ இருக்கிறேன் என்று பிறிதொரு நெஞ்சு சொன்னது.”

“யாதவரே, அப்போது ஒரு பறவை இருளுக்குள் கிருஷ்ணா என கூவியபடி கடந்து சென்றது. என் உடல் மெய்ப்புகொண்டது. எழுந்தமர்ந்து கைகூப்பினேன். மேலாடையை அணிந்துகொண்டு அருகிருந்த கலத்திலிருந்து நீரள்ளி அருந்தினேன். அங்கிருந்தே கிளம்பி உங்களைப் பார்க்க வந்தேன்” என்றான் அர்ஜுனன்.

இளைய யாதவர் கைநீட்டி அர்ஜுனனின் தோளை தொட்டார். அக்கணம் எழுந்த கனவொன்றுக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தனர். அவர்களுக்கு முன் இரு பக்கமும் பெரும்படை நிறைந்து அலையொலித்து சூழ்ந்திருந்தது. தேர்த்தட்டில் வில்லை விட்டுவிட்டு அமர்ந்து தன்னிரக்கம் மிகுந்து நீர் நிரம்பிய விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி தேர்முகப்பில் கடிவாளங்களை பற்றிக்கொண்டு அமர்ந்திருந்த இளைய யாதவர் சொன்னார் “என்னை உன் தோழன் என்றும் ஆசிரியன் என்றும் கொள்க! அர்ஜுனா, இத்தருணத்தில் உன் முன் எழுந்த நானே புவிபடைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருள்.” அர்ஜுனன் கைகூப்பி “ஆம், அவ்வாறே கொள்கிறேன். இப்போது மெய்யென இலங்கும் முதற்பொருளின் சொல் அன்றி எதிலும் என் உள்ளம் நிறைவுகொள்ளாது” என்றான்.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் சொன்னார். பார்த்தா, இந்த இக்கட்டுநிலையில் இவ்வுளச் சோர்வை எங்கிருந்து பெற்றாய்? இது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது, இகழ்வு தருவது. வில்லவனே, ஆணிலிபோல் பேசவேண்டாம். இது உனக்குப் பொருந்தாது. இழிவுகொண்ட இவ்வுளத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில். நீ பகைவரை வெல்லும் விறலோன்.

அர்ஜுனன் சொன்னான். யாதவரே, பீஷ்மரையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர். நீர் பகைவரை முற்றழிப்பவர். நீர் அறியாதது அல்ல, பெரியோராகிய ஆசிரியர்களைக் கொல்வதைவிட இப்புவியில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருள் நச்சி போருக்கெழுந்த ஆசிரியர்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் குருதிபடிந்தவை அல்லவா?

நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரர் கொடிவழியினர் இதோ போர்முனையில் வந்து நிற்கிறார்கள். உளம்குழம்பி சிறுமைகொண்டு இயல்பழிந்து அறமும் மறமும் அறியாது அறிவு மயங்கி உம்மை கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு சொல்க.

நான் உமது மாணவன். உம்மையே அடைக்கலமெனப் புகுந்தேன். சொல் தருக. மண்மேல் நிகரில்லா செல்வமுடைய அரசு பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அழிக்கும் இயல்புடைய இந்தத் துயர் என்னை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை. நான் இனி வில்லெடுத்துப் போர்புரியப் போவதில்லை.

கிருஷ்ணன் புன்னகை பூத்து, முரண்கொண்டு எழுந்த இரண்டு விரிவுகளுக்கும் நடுவே துயருற்று அமைந்த பார்த்தனை நோக்கி சொன்னார்.  துயர்படத் தகாதார் பொருட்டு துயர்படுகின்றாய். மெய்யறிந்தோரின் சொற்களும் உரைக்கின்றாய்! இறந்தார்க்கும் இருந்தார்க்கும் துயர்கொள்ளார் அறிஞர்.

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்ததில்லை. நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற்போகவும் மாட்டோம். உயிருக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பருவமும், இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு உடலும் தோன்றுகிறது. துணிவுளோன் அதில் கலங்கமாட்டான்.

குந்தியின் மகனே, தண்மையும் வெம்மையும், இன்பமும் துன்பமும் தரும் இயற்கையின் தொடுகைகள். தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. அவற்றை பொறுத்துக் கொள்க. இவற்றால் துயர்படாதவன், துயரும் உவகையும் நிகரெனக் கொள்பவன் சாவைக் கடந்தவன்.

இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை உணர்வார். இவ்வுலகம் முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்றது என்றறிக. இது கேடற்றது; இதனை அழித்தல் யார்க்கும் இயலாது. ஆத்மா என்றுமுளன். அழிவற்றான். அளவிடற்கரியன். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் அர்ஜுனா, போர் செய்க.

இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் ஏதுமறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை, எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒருமுறை இருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். நிலையானவன். என்றும் திகழ்வோன். பழையோன். உடல் கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

இது அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது என்று உணர்பவ                       ன் கொல்வது யாரை? அவன் கொல்விப்பது யாரை? நைந்த ஆடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு மனிதர் புதிய துணிகள் அணிவதுபோல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை கொள்கிறது.

இவனை படைக்கலங்கள் வெட்டா. தீ எரிக்காது. நீர் இவனை நனைக்காது. காற்று உலர்த்தாது. பிளத்தற்கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; அழிவற்றவன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பவன். தெளிதற்கு அரியவன்; எண்ணற்கு ஆற்றான்; மாறுதலில்லாதான். இவனை இங்ஙனம் அறிந்து துயர் ஒழிக.

நீ இவனை என்றும் பிறந்து என்றும் மடிவான் என்று கருதினால்கூட இவன் பொருட்டு துயருறல் தகாது. பிறந்தவன் மாள்வது உறுதியெனில், மாண்டோர் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணா நெறிக்கு நீ துயர்கொண்டு பயனென்ன? உயிர்களின் தொடக்கம் தெளிவில்லை. நடுவாழ்வோ இடர் மிக்கது. இறுதியும் அறிதற்கரியது. இதில் துயர்படுவதென்ன?

இந்த ஆத்மாவை வியப்பெனக் காண்கிறார், வியப்பெனச் சொல்கிறார், பெருவியப்பென கேட்கிறார். இதனை அறிபவர் எவருமிலர். அனைவர் உடலிலும் உள்ள இந்த ஆத்மா கொல்லப்பட முடியாதவன். ஆகவே நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!

தன்னறம் எண்ணினாலும் நீ நடுங்குதல் ஒவ்வாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை அரசர்க்கில்லை. தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது இத்தருணம். இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பங்களை அடைவார்.

நீ இந்த அறப்போரை நடத்தாமல் விடுவாயானால், அதனால் தன்னறத்தையும் புகழையும் கொன்று பழியையே அடைவாய். உலகத்தார் உன்னை வசைபாடுவர். புகழ் கொண்டோன் பின்னர் எய்தும் இகழ்ச்சி இறப்பினும் கொடிதல்லவா? நீ அச்சத்தால் போரைவிட்டு விலகியதாக பெருந்தேர் வீரர்கள் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய். உன்னை விரும்பாதார் சொல்லத் தகாதன சொல்வார்கள். உன் திறமையை பழிப்பார்கள். இதைக் காட்டிலும் துன்பம் எது?

கொல்லப்படின் விண்ணுலகு எய்துவாய். வென்றால் புவி ஆள்வாய். ஆதலால் போர்புரியத் துணிக! இன்பம், துன்பம், இழப்பு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போருக்கு எழுக! இவ்வண்ணம் புரிந்தால் பழி கொள்ளமாட்டாய்.

இவை உலகியல் மெய்மையில் எழுந்த சொற்கள். யோகநெறியை சொல்கிறேன், கேள். இந்த மெய்மையை அறிந்தவன் செயற்தளைகளைச் சிதறடித்து மீள்வான். இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்த நெறியில் சற்றே அடைந்தாலும் அது பேரச்சத்தினின்று காக்கும்.

உறுதியுடைய சித்தம் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் அறிவு கிளைவிரிவது, கட்டற்றது. வேதங்களின் வெற்றுரையில் மகிழ்வோர் மணமிலா பூக்களைப்போன்ற அணிச்சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கை அன்றி பிற பிழையென்கிறார்கள். இவர்கள் விழைவுகொண்டோர். மாற்றுலக இன்பங்களையே மீட்பெனக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர். இன்பத் திளைப்பையும் ஆட்சியையும் வேண்டுவோர். பலவகையான சடங்குகளைச் சுட்டிப் பேசுகிறார்கள். இவர்கள் சொல்வதைக் கேட்டு மதிமயங்கி திளைப்பிலும் ஆட்சியிலும் பற்றுகொள்வோரின் அலைகொள்ளும் அறிவு மெய்மையில் நிலைபெறாது.

மூன்று இயல்புகளைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று இயல்புகளையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, மெய்நிலையில் நின்று, இங்கு நிகழ்வனவற்றில் ஈடுபடாமல் தன்னை ஆள்பவன் ஆகுக. பிரம்மத்தை நாடுபவனுக்கு வேதங்கள் பெருவெள்ளம் எழுகையில் சிறுகிணறுகள் போன்றவை.

செயலாற்றவே பணிக்கப்பட்டிருக்கிறாய். அதன் பயன்களின்மேல் உனக்கு ஆணையில்லை. செயல்களின் பயனை கருதக்கூடாது. செயலாற்றாமலும் இருக்கலாகாது. யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு செயலாற்றுக, நடுநிலையே யோகமெனப்படும்.

அறிவுயோகத்தைக் காட்டிலும் செயல்யோகம் தாழ்ந்தது. அறிவை மேற்கொள்க. பயன்கருதுவோர் அளியர். அறிவுடையோன் நற்செய்கை தீச்செய்கை இரண்டையும் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்தில் பொருந்துக. செயல்களில் திறனே யோகமென்பது. அறிவுடையோர் செயற்பயன் துறந்து, பிறவித்தளை நீக்கி, மெய்நிலையை அடைகிறார்கள்.

உன் அறிவு அனைத்து மயக்கங்களையும் கடந்து செல்லுமாயின், கேட்கப்போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு துயர் நிகழாது. உனது அறிவு கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, மெய்யாகும் பெருநிலையில் அசையாது நிற்குமாயின் யோகத்தை அடைவாய்.

அர்ஜுனன் கேட்டான். கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் மெய்நிலையில் அமைந்தோன் எவ்வாறு பேசுவான்? நிலையறிவு உடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனைஅடைவான்?

கிருஷ்ணன் சொன்னார். ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது நிலையறிவு கொண்டவன் என்று சொல்லப்படுகிறான். துன்பங்களுக்கு உளம் கொடாதவனாய், இன்பங்களிலே ஆவலற்றவனாய், அச்சமும் சினமும் தவிர்த்தவனாய் அமைந்தவன் நிலைமதி கொண்டவன் எனப்படுகிறான். நல்லதும் அல்லதும் அணுகும்போது உளவீழ்ச்சியற்றவன், ஆவலுறுவதும் பகைப்பதும் இலாதவன், நிலையறிவுகொண்டவன்.

ஆமை தன் உறுப்புகளை உள்ளிழுத்துக்கொள்வதுபோல், திசைதோறும் பரவும் புலனறிதல்களில் இருந்து தன்னை மீட்க வல்லவனின் அறிவே நிலைகொண்டது. சுவைக்கப்படாதபோது உலகின்பங்கள் தாமே விலகிக்கொள்கின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவை மறக்கப்படுவதில்லை. முழுமுதன்மையின் இன்மையை அடைந்த பின்னரே அவ்விழைவு மறைகிறது.

குந்தியின் மகனே, முயன்றுபார்க்கும் விவேகம் கொண்டவனின் உள்ளத்தையும் கூட கொந்தளிக்கும் புலன்கள் பற்றியிழுத்துக் கொள்கின்றன. விழைவுகளை அடக்கி என்னை முதற்பொருளெனக் கொண்டு, புலன்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனின் அறிவே நிலைகொண்டது.

புலனின்பங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் அறிவழிவு. அறிவழிவால் மானுடர் அழிகிறார்கள்.

விழைவையும் வெறுப்பையும் துறந்து ஆத்மாவில் ஆழ்ந்துள்ள புலன்களை கருவியாக்கி புற உலகில் அலையும் அடங்கிய மனமுடையோன் அருளை அடைகிறான். அருள்கொண்டவனுடைய துயரங்கள் அழியும், ஏனெனில் அகத்தெளிவுடையோன் அறிவிலும் உறுதி பெற்றிருப்பான்.

யோகமில்லாதவனுக்கு அறிவில்லை. யோகமில்லாதவனுக்கு உள்ளுணர்வு இல்லை. உள்ளுணர்வு இல்லாதவனுக்கு அமைதி இல்லை. அமைதி இல்லாதவனுக்கு இன்பமேது? புலன்கள் விழைவை நாடுகையில் உள்ளமும் உடன் செல்லுமாயின், கடற்தோணியைக் காற்றுபோல் அறிவை அது இழுத்துச்செல்கிறது. ஆகவே விழைவுகளில் இருந்து புலன்களைக் கட்ட வல்லவனின் அறிவே நிலைகொண்டது.

எல்லா உயிர்களுக்கும் இரவில் தன்னை கட்டியவன் விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே அவன் இரவு. கடலில் நீர்ப்பெருக்குகள் வந்துசேர அது மேன்மேலும் நிரம்பியபடியே குன்றா கூடா நிறைநிலை கொண்டிருப்பதுபோலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்பவன் அமைதி அடைகிறான். விருப்புகொண்டவன் அதனை அடையான்.

விழைவுகள் அற்றவன், எல்லா பற்றுகளையும் துறந்தவன், எனதென்பது இலாதவன், யானென்று எண்ணாதவன் அமைதி அடைகிறான். இது முதல்முழுமையின் நிலை. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன், வீடுபேற்றை அடைகிறான்.