இமைக்கணம் - 44
நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் உதங்கர் முதலான முனிவர்களிடம் சொன்னார். “வேதமுடிபின்மீது கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் அடிப்படை ஒன்றே. இங்கு இவ்வுலகின் இப்பொருட்களைக்கொண்டு அதை எப்படி அடைவது? அதை எவ்வகையில் நிறுவுவது?” அவர் கையை அசைக்க அவ்வசைவுக்கேற்ப நாகம் மெல்ல தலைதூக்கியது. அதன் படம் விரிந்து செதில்கள் அசைந்தன. “எல்லா அவைகளிலும் வேதமுடிபு பருவடிவான வினாக்களையே எதிர்கொள்ளும். ஏனென்றால் அது நுண்வடிவானது. இனிவரும் காலங்களிலும் அவ்வாறே. முனிவரே, என்றும் வேதமுடிபுநிலையின் எதிர் என அதுவே நின்றிருக்கும்.”
அவருடைய கையசைவுக்கேற்ப அஸ்வஸ்தை படம் திருப்பி நா துப்பியது. அதன் உடற்சுருட்கள் சுழன்றன. அதற்குள் ஒன்றுள் ஒன்றென அமைந்த ஆறு நாகங்களும் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் சுழன்றுகொண்டிருந்தன. இளைய யாதவர் சொன்னார் “பருவடிவ வினாக்களும் அவற்றுக்கான பருவடிவ விடைகளும் இப்புவியில் மானுடன் வாழத்தொடங்கிய காலம் முதல் எழுந்துகொண்டிருக்கின்றன. ஒன்று திறக்க நூறு தொடங்கும். அவை என்றும் இங்கே இருந்துகொண்டிருக்கும். அவை உணவூட்டும். காக்கும். வெல்லச்செய்யும். அமைப்புகளும் விசைகளுமாகும். வேதமுடிபு நுண்வடிவ வினா ஒன்றுக்கான விடை. நுண்வடிவில் மட்டுமே அது எழமுடியும்.”
புலன் தொட்டறிந்து புழங்கும் இவையனைத்திலும் அறியா நுண்மையொன்று இலங்குவதைக் கண்ட திகைப்பிலிருந்து எழுந்தது அவ்வினா. என்றும் இவையனைத்திலிருந்தும் அவ்வினா எழுந்துகொண்டே இருக்கும். இருமையென்றே இதை அறியமுடியும். இருப்பென்றும் இன்மையென்றும், உருவென்றும் அருவென்றும், கணமென்றும் காலமென்றும், வெளியென்றும் துளியென்றும். ஆனால் இருமையற்ற நிலையிலிருந்தே அவை தொடங்குகின்றன என்று உணர்கின்றனர் அறிவர். இருமையை கடக்காமல் இவையனைத்திற்கும் முதலிறுதியை சென்றடையவியலாது.
அந்த முரணிலிருந்தே இவ்வினாக்கள் எழுகின்றன. அனலென்றும் நீரென்றுமானது எது? ஒளியென்றும் இருளென்றும் இலங்குவது எது? முழு முதன்மையின் மையத்தில் உள்ளது ஒருபோதும் அழியாத பெரும்புதிர். வேதமுடிபு அப்புதிருக்கான விடை அல்ல. அப்புதிரைக் கண்டடைவது மட்டுமே.
ஒவ்வொரு அறிதலின் நிலையிலும் அந்த அறியமுடியாப் பேரிருப்பை சுட்டுவதே வேதமுடிபின் வழி. ஒவ்வொரு விடையுடனும் அந்தப் புதிரையும் இணைத்துவிடுவதே அதன் பணி. வேதமுடிபு உலகியலுக்கான விளக்கம் அல்ல. உலகியல் அனைத்துக்கும் நிகரெடையாக மறுமுனையில் நின்றிருக்கும் ஓர் உள எழுச்சி மட்டுமே.
அதை அடைந்தனர் முந்தையர். பிரம்மம் என்பது வெறுமொரு வியப்பொலி. அவ்வியப்பை அழிக்காமல் ஒரு கைப்பிடி அன்னத்தை உண்ணவியலாது. ஒரு கை நீரள்ளி அருந்தவியலாது. புணர, பெற்றெடுக்க, வளர்த்துவிட முடியாது. போரிட, வெல்ல, கொள்ள உளமிராது. எனவே அப்பெருவியப்பை ஒவ்வொரு அறிதலாலும் அழித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சொல்லாலும் சிறிதாக்கிக் கொண்டிருக்கிறோம். முனிவர்களே, வேதமுடிபு அந்த வியப்பை நினைவுறுத்துவது. அதை தக்கவைப்பது.
முதற்கணம் கடல் சித்தமழியச் செய்கிறது. அகத்திருந்து அறிவது அங்கிருந்து ஒழிந்து தான் கடலென்றாகிறது. மறுகணம் அதற்கு பெயரிடுகிறோம். அதுபோல் இது என்கிறோம். ஆம் அதுவே இது என்று அடையாளம் கொள்கிறோம். நன்று தீதென்றும் அழகென்றும் அல்லதென்றும் பகுக்கிறோம். கடலில் இருந்து கடலறிவோனாக பிரிகிறது அகம்.
கலையென்பது கடலெனும் கருத்திலிருந்து கடலை மீட்டெடுப்பது. கடல்கண்டு கண்ணாகி கருத்தழியும் கணத்தை நிறுத்திவைப்பது. கடலென்றாகி கடலை அறிவது. வேதமுடிபென்பது கலைகளில் முதற்கலை.
இங்குள்ள அனைத்தும் அது உறையும் நிலைகள். அது சொல்லும்பொருளுமென நின்றுள்ளது. சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள். பிறர் உலகியல் யோகத்தால் அதை அறிகிறார்கள். பிறர் செயல்யோகத்தால் அறிகிறார்கள். நிலையாயினும் நடப்பதாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது கலமும் கொள்பொருளும் சேர்ந்தமையால் பிறந்தது என்று அறிக!
வேதமுடிபு வெறும்வியப்பை சொல்லென்றும் கருத்தென்றும் அவைநிலை என்றும் ஆக்கும் அறிவுச்செயல். பகுத்தறிந்து வரையறுத்து அறிவன அனைத்துக்கும் எதிர்நிலை. நிலைமயக்கி புறமழித்து இருமைவிலக்கி இன்மைவரை சென்று நின்று தன்னை நிறுவுவது. அவைகள் அனைத்திலும் அறிக, அறிதலைத் துறந்து மேலும் தெளிக என்றே அது அறைகூவும்.
யானையை பெரிதென்றும் கரியதென்றும் கொம்பென்றும் துதிக்கை என்றும் இறப்பென்றும் காண்பவர் அதை அச்சமென்றே அறிவர். யானையை விலங்கென்று காண்பவனே அதை ஆள்கிறான். காடென்று காண்பவன் அதற்கு நோய்நீக்குகிறான். பாறையென்றும் முகிலென்றும் அதை காண்பவன் அதை சொல்லில் நிறுத்தும் கவிஞனாகிறான். துதிக்கை வண்டும் யானையும் ஒன்றென்று உணர்ந்தவனே முற்றிலும் அச்சம் ஒழித்து யானையை அறிபவன்.
மண், வான், வயிறு என அனைத்துக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் அந்த முழுமுதன்மையே அடிநிலை. அது விதை. அது தந்தை. முளைத்துப்பெருகிய அனைத்தும் அதுவே. ஒன்றென்று அறிந்தவன் பலவென்றானவற்றின் நிலைகளை அறிந்தவன்.
இங்குள அனைத்தும் தங்கள் இயல்புகளின் பருவெளிப்பாடுகள். இயல்புகளன்றி இயற்றுவதென வேறில்லை. மூன்றெனப் பிரிந்து ஒன்று பிறிதை இயக்கி இங்கே இலங்குகின்றன பொருட்கள். இயல்பென நின்றதை அறியாமல் பொருட்களை அறிவது இயலாது. இயல்புகள் பொருளென்றாகும் விந்தையிலிருந்து எழுவதே வேதமுடிபு நோக்கி செல்லும் வினா.
விளங்கும் அனைத்துக்கும் விளங்கா நிலையென்று நிற்பதை அறிந்தமைந்தோன் வீடுபெற்றவன். மேழிபிடிக்கும் ஆயிரவருக்கு கோள்சூழ்ந்து குறிசொல்ல ஒருவன் போதும். நோய்கொண்டோர் ஆயிரவருக்கு நோய்முதல்நாடுவோன் ஒருவன் போதும். இருமையிலுழலும் பல்லாயிரம் மானுடர்பொருட்டு ஒருவன் ஒருமையிலமர்ந்தால் போதும். விடுதலைபெற்றோன் என்புதசைக் கூடென்று எழுந்த இறைச்சிலை.
பித்தனுக்கும் மெய்யனுக்கும் பேசுநிலை ஒன்று. விழிகள் வேறுவேறு. மெய்யிலமைந்தோன் துயரற்றவன். காண்கையிலும் காணாதமைந்தவன். அறிந்திருந்தாலும் கனிந்தவன். முனிவரே, அனைத்தையும் பொறுத்தருள்வாள் அன்னை. மானுடக் குலமனைத்தையும் பொறுத்தருள மானுடர் சிலர் என்றுமிருந்தாகவேண்டும்.
அனைத்தையும் புறக்கணித்தான் போலே இருப்பான். இயல்நிலைகளால் சலிப்படையான். இயல்புகளின் மாறாச் சுழல் இது என்றெண்ணி தன்னுள் அசைவற்று நிற்பான். துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் அமைவான். ஓட்டையும், கல்லையும், பொன்னையும் நிகராகக் காண்பான். இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் நிகராக நடப்பான். இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றெனக் கணிப்பான். மதிப்பையும் சிறுமையையும் இணையெனக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூணுவான். விளைவுதரும் எல்லா செயல்களையும் துறப்பான். அவனே இயல்புகளைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான். அவன் மானுடரிடத்தில் எழுந்து பிரம்மத்தின் முழுமையை சென்றடைந்தவன்.
ஆயிரம் முறை எம்பி ஒருமுறையே தொடுகிறது மானுடம். மாவீரர், பேரறிஞர், மாகவிஞர், அருங்கலைஞர் பல்லாயிரம் மானுடரின் விழைவின் நிறைவேற்றங்கள். அவர்கள் முடிவிலாதெழுக!
அறிபடுபொருட்களனைத்தும் எல்லைக்குட்பட்டவை. அறிபவன் தன் எல்லைக்குள் நிற்பவன். ஆகவே எல்லைக்குட்பட்ட அறிவையே இங்கு மானுடர் அறியமுடியும். எல்லைக்குட்பட்ட அனைத்தும் எல்லையின்மையில் அமைந்துள்ளன. எல்லையின்மையால் வேலியிடப்பட்டவையே வடிவங்களனைத்தும். எல்லைகடந்துசென்று எல்லையின்மையை அறிந்தமைதலே வேதமுடிபு.
அறிவென அதை கொண்டவர் அதன் எல்லையின்மை கண்டு அஞ்சி எல்லைக்குள் வந்து ஒடுங்கிக்கொள்கிறார். வாழ்வென அதை கொண்டவர் ஒவ்வொரு கணத்திலும் அதன் முடிவிலா திகழ்தலை உணர்ந்து ஆமென்று அமர்ந்திருக்கிறார்.
சிற்றுண்மை எனக் கொள்பவை அனைத்தும் எத்தனை சிறியோருக்கும் ஏதோ ஒருகணத்திலேனும் பேருருக் காட்டி பதறச்செய்யும் என்று அறிக! முடிவிலி திறந்துகொள்ளாத தருணமேதும் இங்கில்லை. அதில் முட்டி பதைக்காமல் எவரும் வாழ்ந்தமைவதில்லை. முடிவிலி எழுந்த கணமே சிற்றுண்மைகள் பேருண்மைகள் என்றாகிவிடுகின்றன.
அது வானில் வேர்களும் மண்ணில் கிளைகளும் கொண்ட மரம். இலைகளும் தளிர்களும் மலர்களும் கனிகளும் என இங்கு தழைக்கிறது. அதன் விதைகள் வானில் விதைக்கப்படுகின்றன. அதன் சாறென ஓடுவது வானின் ஊற்று. இங்கு ஒவ்வொரு இலையிலும் மலரிலும் சருகிலும் வானம் உள்ளது.
இளைய யாதவரின் கையசைவுக்கு ஏற்ப படமசைத்துக் கொண்டிருந்த நாகம் மெல்ல தலையை தரையில் வைத்தது. அதன் தலை நீண்டுசென்று துடிக்கும் வாலை நோக்கியது. வாய்திறந்து அது தன்னை தான் விழுங்கத் தொடங்கியது. முனிவர்கள் அதை நோக்கி நின்றிருந்தனர். இறுகிச் சுழியென்றாகி அதிர்ந்துகொண்டிருந்த நாகத்தை நோக்கி திகைத்து அமர்ந்திருந்த உதங்கரிடம் இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார் “இங்கு வெறுமனே பிறந்து உண்டு உறங்கி ஈன்று வளர்த்து வென்று கொண்டு கொடுத்து வாழ்வதற்கும் பேருண்மைகள் தேவையாகின்றன, உதங்கரே.”
உதங்கர் அவரை வெறுமை நிறைந்த விழிகளால் நோக்கினார். “முன்பொருமுறை நாம் சந்தித்தோம், அன்று நீங்கள் சர்மாவதியின் கரையில் தூமவனம் என்னும் காட்டில் தவச்சாலை அமைத்திருந்தீர்கள். நான் அவந்தியிலிருந்து அவ்வழியே துவாரகைக்குச் சென்றபோது என்னைக் கண்டு குடிலில் இருந்து கைகளை விரித்தபடி ஓடிவந்தீர்கள். யாதவரே, இவ்வழி வருவீர்கள் என எண்ணவுமில்லை. என் பெரும்பேறு என்று கூவினீர்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் உதங்கர். “நினைவுகூர்கிறேன். அன்று நீங்கள் களைத்திருந்தீர்கள். உடன் எவருமிலாது தனித்திருந்தீர்கள்.”
இளைய யாதவர் சொன்னார். என்னை உங்கள் குடிலுக்கு அழைத்துச்சென்றீர்கள். தேனும் கனியும் தந்து புரந்தீர்கள். பின்னர் என்னருகே அமர்ந்து “சொல்க யாதவரே, அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் எப்படி உள்ளன? துரியோதனனும் யுதிஷ்டிரனும் நலமா? உங்கள் தோழர் அர்ஜுனன் ஏன் உடன்வரவில்லை? துவாரகையில் உங்கள் மைந்தர்கள் மகிழ்ந்திருக்கிறார்களா?” என்று கேட்டீர்கள். “நான் இருபதாண்டுகளாக இக்காட்டில் தவம்செய்கிறேன். அங்கே நிகழ்வதென்ன என்று சொல்லும் எவரும் இங்கு வருவதுமில்லை” என்றீர்கள். என்னுடன் வந்த சூதனாகிய கிருதகேதுவிடம் நிகழ்ந்ததைச் சொல்லும்படி நான் சொன்னேன்.
கிருதகேது கிருஷ்ண துவைபாயன வியாசர் இயற்றிய காவியத்தை விரித்துரைத்தான். குருக்ஷேத்திரத்தில் நிகழ்ந்த பெரும்போரையும் அங்கே கௌரவப்படையினர் இறந்து குவிந்ததையும் அவர்களால் பாண்டவப்படையும் முற்றழிந்ததையும் அவன் சொன்னான். தொடைபிளந்து துரியோதனன் இறக்க நெஞ்சுடைந்து துச்சாதனன் மாய கர்ணனும் ஜயத்ரதனும் சல்யரும் மாண்ட செய்தியை கூறினான்.
பீஷ்மரும் துரோணரும் மடிந்ததைச் சொல்லிக் கேட்டதுமே நீங்கள் சினந்து எழுந்தீர்கள். அருகிருந்த குடுவையிலிருந்து நீரை எடுத்து என்னை நோக்கி ஓங்கி “இரக்கமில்லாதவனே, என்னவென்று நினைத்தாய் மானுடரை? பல்லாயிரங்களின் குருதியின்மேல், தந்தையரும் ஆசிரியரும் விழுந்த களத்தின்மேல்தான் நிலைநாட்டப்படவேண்டுமா உனது சொல்? எண்ணியிருந்தால் நீ தடுத்திருக்கக்கூடிய அழிவல்லவா இது?” என்று கூச்சலிட்டபடி என்னை நோக்கி வந்தீர்கள். கண்களில் நீர்வழிய “இதோ உன்மேல் தீச்சொல்லிடுகிறேன்” என்று வீசமுற்பட்டீர்கள்.
நான் “அந்த நீரில் குருதியில்லையேல் என்னை முனியுங்கள், உதங்கரே” என்றேன். கையைத் தூக்கி நோக்கி திகைத்து “இது என்ன?” என்று நீங்கள் கூவினீர்கள். கையை உதறியபடி பின்னால் சென்று “இது உன் மாயம். என் விழிமயக்கு” என்று கூச்சலிட்டீர்கள். “முனிவரே, அறமென்று ஒன்றை நீங்கள் எப்போதேனும் உங்களுக்காகவேனும் வகுத்துக்கொண்டீர்கள் என்றால் அக்குருதியை தொட்டுவிட்டீர்கள்” என்றேன். “இல்லை இல்லை” என்று கூவியபடி திரும்பி ஓடினீர்கள்.
அன்று முழுக்க உங்கள் குடிலில் நான் அமர்ந்திருந்தேன். மறுநாள் காலையில் குடில்முற்றத்தில் நடுங்கும் உடலும் விழிநீர் வழியும் கண்களுமாக வந்து நின்றிருந்தீர்கள். நான் இறங்கி வெளியே வந்தபோது கைகளைக் கூப்பியபடி “நான் தொட்ட அனைத்தும் குருதிவடிக்கின்றன. நதிப்பெருக்கே குருதியென ஓடுகிறது” என்றீர்கள். அருகணைந்து “முனிவரே, அறம் போலவே மறமும் மாற்றிலாதது. அறத்தையும் மறத்தையும் அந்தந்தத் தருணங்களில் நிறுத்தி நோக்குவதன் பிழையே உங்கள் உணர்ச்சிகள். ஒவ்வொன்றையும் தாங்கி நின்றிருக்கும் முடிவிலியை உணர்ந்தவருக்கு அறமும் மறமும் ஒரு நிகழ்வின் இரு முகங்களே” என்றேன்.
“ஆம், இதை நீங்கள் எனக்கு முன்பொருமுறை நைமிஷாரண்யத்தின் குடிலில் வைத்து சொல்லியிருந்தீர்கள் என்றீர்கள். நான் வருக என உங்கள் தோளைத் தொட்டேன்” என்றார் இளைய யாதவர். உதங்கர் “ஆம், நினைவுறுகிறேன். அந்தக் கணம் நான் கண்டதென்ன?” என்று கூவியபடி எழுந்தார். “பிறிதொன்று. பேருரு, அலகிலி. யாதவரே, அது என்ன?” இளைய யாதவர் புன்னகையுடன் “அறியப்படுவது” என்றார். “அனைத்துச் சொற்களுமானது. சொல் கடந்தது” என்றார் உதங்கர்.
“பின்னர் அதை எண்ணி எண்ணி தொகுத்துக்கொண்டேன். கோடிகோடி பாடல்கள் கொண்ட பெருங்காவியம். அதில் இனித்து இனித்து கடந்துசென்றேன். கோடிகோடிகோடி சொற்களால் ஆன வேதம். அதன் இசையில் ஆழ்ந்தேன். ஒரு தருணத்தில் அஞ்சி ஆசிரியரே, ஆசிரியரே என்று கூச்சலிட்டேன். அனைத்து அணிகளிலும் சொற்களிலும் என்னை அறைந்துகொண்டு அலறினேன். ஒரு சொல்லிடைவெளி வழியாக வெளியே வந்துவிழுந்தேன். அது சாந்தீபனியின் குருநிலை. அலறியபடி குடிலுக்குள் ஓடிச்சென்றேன். அங்கே ஆசிரியருக்கான பீடத்தில் அமர்ந்து நீங்கள் மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.”
“ஆம், நீங்கள்… நீங்கள் கற்பித்துக்கொண்டிருந்தது வேதம். உங்கள் முகம் வேதவியாசருடையதெனத் தோன்றியது. நான் உங்கள் காலடிகளில் விழுந்து என்னை காத்தருள்க ஆசிரியரே, நான் அழிந்து மறையவிருக்கிறேன், என்னை அணைத்து அருகமையச் செய்க என்றேன். அஞ்சற்க என உங்கள் கை என் தலையைத் தொட்டது” என்றார் உதங்கர். பின்னர் “ஆனால் அது கனவு. நான் உங்கள் முன் நின்றிருந்தேன். நீங்கள் புன்னகைத்தீர்கள். யாதவரே, என் சித்தம் மயங்குகிறது. என்னுடன் இருங்கள் என்றேன். ஆம் என்றீர்கள். அனைத்துப் பாலையிலும் நீரென வருக ஆசிரியரே என உங்கள் கைகளை பற்றிக்கொண்டேன். ஆம் என்று என்னை அணைத்துக்கொண்டீர்கள்” என்றார்.
இளைய யாதவர் “பிறகொருமுறை நான் உங்களுக்கு நீருடன் வந்தேன். துவாரகையின் பாதையில் பெரும்பாலை நிலத்தில் நீங்கள் தனித்து வழிதவறியபோது” என்றார். உதங்கர் திகைப்புடன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் இளைய யாதவரிடம் உரையாடவில்லை, அவ்விழிகளினூடாக எண்ணங்கள் தன்னுள் புகுகின்றன என மயங்கினார். “கணிக்கும்தோறும் திசைகள் மயங்க, செல்லும்தோறும் பாதைகள் பின்னி விரிய, கூவிய குரல் முடிவிலா விரிவில் ஓசையின்மை என்றாக சென்றுகொண்டிருந்தீர்கள். எங்கும் ஒரு இலைநிழல்கூட இல்லை. வெய்யோன் விரிந்த மணல்வெளியில் அனலெழுந்தது. விடாய்கொண்டு நாநீட்டி முதுகு வளைய விழுந்தும் எழுந்தும் சென்றீர்கள்.”
“நீர் நீர்!” என உங்கள் உள்ளம் ஓலமிட்டது. உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. “வானமே அளிகொள்க. மண்ணே கனிவுகூர்க. நான் இறந்துகொண்டிருக்கிறேன்” என்று அரற்றினீர்கள். கால்தளர்ந்து விழுந்து எழ முடியாமலானபோது என் சொற்கொடையை நினைவுகூர்ந்தீர்கள். “யாதவரே, நீரென்று வருக!” என்று கூவினீர்கள். அப்போது கானல் அலைந்த பாலைவிரிவின் தொலைவான் கோட்டில் ஒரு நெளிநிழலசைவை கண்டீர்கள். அணுகிவந்தவன் ஒரு பாலை வேடன். அவனைச் சூழ்ந்து வந்தன எட்டு வேட்டைநாய்கள்.
அவன் உங்களை அணுகி குனிந்து நோக்கினான். அவன் வியர்வைச்சொட்டுகள் உங்கள் நெற்றிமேல் விழுந்தன. இமைகள் அதிர, விழிநீர் கசிய மேலே நோக்கினீர்கள். உங்கள் நாவை நோக்கியபின் அவன் தன் மாட்டுத்தோல் நீர்ப்பையை எடுத்தான். வேட்டைக்குருதியும் சேறும் கலந்த நீர் அதற்குள் இருந்தது. அதை உங்கள் நாவுக்கு அவன் சரித்தான். ஒரு கையை ஊன்றி ஒருக்களித்து எழுந்து “விலகு, காட்டாளனே! உன் இழிநீருண்டு உயிர்வாழ விழையவில்லை நான்” என்றீர்கள். அக்கணமே மயங்கி விட்டீர்கள்.
அவன் சற்றுநேரம் நோக்கி நின்றிருந்தான். பின்னர் தன் நாய்களிடம் சீழ்க்கையால் ஆணையிட்டான். அவை எட்டுத் திசைகளுக்கும் பாய்ந்தன. மிக அப்பால் துணைவருடன் சென்றுகொண்டிருந்த வணிகனொருவனைச் சென்று கவ்வி குரைத்தது ஒரு நாய். அவன் அந்நாயின் அழைப்பை ஏற்று உங்களை அணுகிவந்தான். வேடன் உங்களை வணிகர்குழுவிடம் ஒப்படைத்துவிட்டு அகன்றான். அவனிடமிருந்த நீரை அருந்தி நீங்கள் உயிர்பிழைத்தீர்கள்.
அந்த நீர் தேனைவிட இனிமை கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியிலும் முழுதுடலும் தித்தித்தது. கண்விழித்ததும் அவ்வணிகனின் கைகளை பற்றிக்கொண்டு விழிநீர் வடித்தீர்கள். அக்குடுவையை வாங்கி அதிலிருந்த தெளிந்த நீரை துளித்துளியென அருந்தினீர்கள். ஒரு சொட்டு மணலில் உதிர்ந்தபோது உளம்பதறினீர்கள். தீர்ந்துவிடக்கூடாதென்று உடனே மூடிவிட்டீர்கள். அக்குடுவையை அசைத்து அசைத்து அவ்வொலியை இசையெனக் கேட்டு மகிழ்ந்தீர்கள். நீரின் ஆயிரம் பெயர்களை சொல்லிச் சொல்லி தெய்வமென வழுத்தினீர்கள். நீரை வழுத்தும் செய்யுட்களை நினைவுகூர்ந்து அரற்றிக்கொண்டீர்கள். பிறர் கொள்ளலாகாதென்று மார்புடன் தழுவிக்கொண்டு உறங்கினீர்கள். துயிலில் நீலநீர் பெருகிய ஏரியொன்றில் விழுந்து மூழ்கி எழுந்து திளைத்தீர்கள்.
பின்னர் அவ்வணிகக் குழுவுடன் இணைந்து துவாரகைக்கு என்னைக் காண வந்தீர்கள். என்னைக் கண்டதுமே பாய்ந்துவந்து கைநீட்டி “யாதவரே, நீர் சொன்ன சொல்லை காக்கவில்லை. என் பாலையில் நீருடன் வரவில்லை” என்றீர்கள். “உதங்கரே, இருமுறையும் நானே நீரை அனுப்பினேன். முதல்முறை எட்டு வசுக்களுடன் இந்திரன் வந்தான். அவன் கலத்தில் இருந்தது விண்ணின் அமுது. நீங்கள் அதை மறுதலித்தீர்கள். எனவே மறுமுறை சோமன் மதுவுடன் வந்தான். அதை அருந்தியே உயிர் கொண்டீர்கள்” என்றேன்.
“ஆம், அது சோம மதுவின் இனிமை” என்றீர்கள். பின்னர் சினத்துடன் விழிதூக்கி “குருதியும் சேறுமாகத்தான் அமுது எனக்கு அளிக்கப்படவேண்டுமா?” என்று கேட்டீர்கள். “அது விண்ணிலிருந்து வருவது. என்றும் அவ்வாறே இருந்துள்ளது. மண்ணில் ஊறுவது சோமமே” என்றேன். என்னை நோக்கிக்கொண்டு நின்றபோது உங்கள் விழிகள் ஒளிகொள்ள உதடுகள் நடுங்குவதை கண்டேன். “அது பூமியுள் புகுந்து உயிர்களை தன் ஆற்றலால் தாங்குகிறது. சாறென்றாகி சோமமென ஊறி அனைத்துப் பசுமைகளையும் வளர்க்கிறது” என்றேன். “ஆம்” என்று தலையசைத்தீர்கள்.
உதங்கர் விழித்துக்கொண்டு சுற்றி நின்றவர்களை பார்த்தார். அவர்கள் ஒவ்வொருவரும் விழித்துக்கொள்வதைக் கண்டபின் திடுக்கிட்டு நாகத்தை நோக்கினார். ஒரு சிறு நிழல்புள்ளியாக அது மண்ணில் பதிந்திருந்தது. நோக்க நோக்கச் சிறிதாகி மறைந்தது. “குருதியையும் சேற்றையும் அருந்தும் பெருவிடாயை அடைவதே கற்றல் என்று உணர்ந்தேன், யாதவரே. விடைகொடுங்கள்” என்று கைகூப்பியபடி எழுந்துகொண்டார். “நன்று, தொடர்க!” என இளைய யாதவர் வாழ்த்தினார். முனிவர்கள் கைகூப்பி வணங்கி இளைய யாதவரிடம் விடைபெற்றனர்.