இமைக்கணம் - 35
நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடில்முற்றத்திற்கு மீண்டு வந்ததுமே யுதிஷ்டிரர் உரத்த குரலில் “எனக்கு ஐயமென ஏதுமில்லை, இத்தெளிவை நான் எப்போதும் அடைந்ததில்லை. யாதவனே, இந்தக் கசப்பு நிறைந்த கனவின்பொருட்டு நான் உனக்கு நன்றியுடையவன்” என்றார். “இங்கு அறமென்றும் நெறியென்றும் மாறாத ஏதுமில்லை. அவையனைத்தும் மானுட உருவாக்கங்களே. அவரவர் இலக்குக்கும் இயல்புக்கும் ஏற்ப கண்டடைவன. அந்தந்த சூழலுக்கேற்ப விளைவன. ஆற்றலுக்கேற்ப நிலைகொள்வன” என்றார்.
“கணமொரு அறம். தருணத்திற்கு ஒன்று. உள்ளத்திற்கு ஏற்ப. இங்கு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருப்பது அறங்களின் மோதல். நாம் கொண்டுள்ள அறம் எதுவோ அதன்பொருட்டு நிற்பதும் களமாடுவதும் வெல்வதும் மடிவதுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. என் வழியின்மேல் ஐயம்கொண்டேன், என் எதிரிமேல் கனிவென்று வெளிப்பட்டது அதுவே. ஐயமில்லாது ஆற்றப்படும் அறமே வெல்கிறது. வெல்லும் அறமே அறமென்று நிலைகொள்கிறது. இப்புவியில் வெல்லும் அறம் தோற்கும் அறம் என இரண்டே உள்ளன.”
“அரசன் என்று நான் என் குடியை, என் நாட்டை, என் கொடிவழியினரை காக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். உலகுக்குப் பொறுப்பென என்னை எண்ணிக்கொண்டதே என் பிழை. இவ்வுலகின் கோடானுகோடி அறங்களை எத்தனை தவம் செய்தாலும் நம்மால் எண்ண முடியாது. ஒரு தருணத்தின் அறங்களை எண்ணி வகுக்கக்கூட எவராலும் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.
“மாறாத பொதுஅறம் ஒன்றைச் சார்ந்துள்ளது இப்புவிச்செயல் என நம்பியதே என் பிழை. அறிந்தோ அறியாமலோ ஒவ்வொருவரும் அதிலேயே அமைந்துள்ளனர் என்று எண்ணினேன். என்னுள் அமைந்த அவ்வறத்தைக்கொண்டு பிறருள் அமைந்த அவ்வறத்தை நோக்கி பேசமுடியும் என கனவுகண்டேன். அது வெற்றாணவம் என்று அறிந்தேன். யாதவனே, ஓர் அறம் பிறிதொன்றை எவ்வகையிலும் விழிநோக்கி அறிவதில்லை.”
“கல்லுடன் கல் மோதுவதுபோல அறங்கள் மோதிக்கொள்கின்றன” என்றார் யுதிஷ்டிரர். “அங்கே நெகிழ்வுக்கே இடமில்லை. அனைத்துச் சொல்லமர்வுகளும் உளம்பகிர்தல்களும் அறங்களை மூடியிருக்கும் அந்தந்தத் தருணத்து உணர்வுகளை அகற்றி உள்ளிருக்கும் மெய்யான அறத்தை மட்டும் வெளியே எடுப்பதற்காகவே. அனைத்தும் விலகிக்கொண்டபின் இரு அறங்கள் மட்டுமே எதிரெதிர் நின்றிருக்கின்றன. ஒன்று வெல்லும். இன்னொன்று முற்றழியும். வெல்வது வரும்காலத்தில் தானே அறமென்று ஓங்கி நிலைகொள்ளும்.”
“நான் நம்புவதே மெய்யறம் என்று நம்பியதே என் பிழை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “ஆகவே பிற அறங்கள் பிழையென்று கருதினேன். என் அறத்துக்கு தெய்வங்கள் துணைநிற்குமென்றும் பிறவற்றை அவை கைவிடுமென்றும் கற்பனை செய்தேன். என் நிலை அறமென்பதனால் அது இரும்பு செடிகளை என பிறவற்றை அரிந்து செல்லும் என்று தருக்கினேன். என் உள்ளத்தால் எதிரறங்களை எல்லாம் சிறுமைசெய்தேன். பழித்தேன். ஆகவேதான் அவற்றை திருத்த முயன்றேன். நான் பேச்சென்றும் உளம்பகிர்தலென்றும் சொன்னதெல்லாம் பிற அறங்களை சிறுமைசெய்தல் மட்டுமே.”
“இன்று தெளிந்தேன். முதலியற்கை மூவியல்புகளின் நிகரழிய நிலைகுலைந்து நிலைமீண்டு தன்னை நிகழ்த்திச் செல்லும் இப்பயணத்தின் ஒவ்வொரு தருணமும் பலநூறு அறங்களின் முடிச்சுப்புள்ளி என்று. எனக்கு ஆணையிடப்பட்டதை ஆற்றுவதற்கு அப்பால் நான் நோக்கவேண்டியது பிறிதில்லை” என்று சொல்லி யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நன்று யாதவனே, நான் நிறைவடைந்தேன்” என்றார்.
“பாண்டவரே, ஒவ்வொரு உயிரும் தன் தனியறத்தின்பொருட்டு போராடுகையில் அனைத்துக்கும் உரிய பொது அறத்தைப் பேணுபவர் எவர்?” என்றார் இளைய யாதவர். “குடித்தலைவர் ஒவ்வொருவரும் தங்கள் குடியறங்களை ஓம்புகையில் அவர்களின் பொது அறத்தைப் பேணிநிற்கின்றது அரசனின் கோல். இங்கு வாழும் அனைத்துயிர்கள் மீதும், இப்புடவியின் அனைத்துப் பொருட்கள்மீதும் நிலைகொள்வது எந்தச் செங்கோல்? எது கடுவெளிப்பெருக்கின் அறங்களின் முடிவிலியை ஆள்கிறது?”
யுதிஷ்டிரர் திகைத்தவர்போல் கை எழுந்து அசைவிழந்து காற்றில் நிலைக்க சொல்லிலாது நின்றார். “அவ்வண்ணம் ஒன்று இருக்குமென்றால் அது இங்கிருக்கும் ஒவ்வொரு துளியிலும் வெளிப்பட்டாகவேண்டும் அல்லவா? அதற்கும் உங்கள் தனியறத்துக்கும் என்ன உறவு? நீங்கள் உங்கள் கடமையால், விழைவால் கொள்ளும் அறம் அந்த அறத்துடன் போரிடுமென்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு கணத்திலும் ஒன்றுடன் ஒன்று மோதும் அறங்களில் எது அப்பேரறத்தின் முகம்?”
யுதிஷ்டிரரின் கை கீழே சரிந்தது. அவர் இருளை திரும்பிபார்த்தார். “பேரறம் என்று ஒன்று இல்லையேல் எந்த அறத்திற்கும் பொருளில்லை. இவையனைத்தும் முட்டிமோதித் திரண்டெழும் ஒரு மையமில்லையேல் இங்கு நிகழ்வது அழிவென்றே பொருள்” என்றார் இளைய யாதவர். “இப்புடவி இங்கிருப்பதே இது அழிவை நோக்கி செல்லவில்லை என்பதற்கான சான்று. இது வாழ்வதே இது ஆளப்படுகிறது என்பதை காட்டுகிறது.”
ஆள்வது ஒன்று உண்டு. அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும் இங்ஙனம் பலமிடும் இயல்புகளெல்லாம் அதனிடமிருந்தே உயிர்கள் அடைகின்றன.
வஞ்சகரின் சூது, ஒளியுடையோரின் ஒளி, ஆள்வோரிடத்தே கோல், வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி, மறைமெய்களில் அது அமைதி. ஞானமுடையோரிடத்தே ஞானம். உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா அது. அவ்வுயிர்களின் முதல் அது. இடையும் அவற்றின் இறுதியும் அதுவே.
அதன் வழிகள் அறியமுடியாதவை. அறியமுடிவது ஒன்றே, அது இங்கே இதை நிகழ்த்துகிறது. இது நிகழவேண்டுமென விழைகிறது. இதில் திகழ எண்ணுகிறது. ஒவ்வொரு துளியிலும் தன் முழுமை திரளும்படி செய்கிறது. விரியும் மலரிலும் வாடும் மலரிலும் அழிவிலாத வண்ணமென நிறைகிறது.
பாண்டவரே, படைப்பழிவினூடாக, நன்மைதீமைகளினூடாக, இருளொளியினூடாக அதன் விழைவெனத் திரண்டு வருவது பொலிக என்னும் செய்தியே. விளங்குக, வாழ்க, வெல்க என்பதே அதன் சொல். இப்புவி ஒவ்வொருநாளும் கதிரெழுகையில் பொலிந்து விரிகிறதென்பதே அதற்குச் சான்று. இங்கு விதைகள் முளைப்பதே அதற்கு உறுதி.
ஒவ்வொரு அணுவிலும் திகழும் அச்செய்திக்கு எதிரான எதுவும் தீமையே. அதனுடன் ஒவ்வாத அனைத்தும் மாசே. எதன்பொருட்டென்றாலும் அழிவை நோக்கும் அனைத்தும் பிழையே. மண்கட்டிகளை பெருநதி என அதன் ஆணை அவற்றை அழித்து பெருகிச்செல்கிறது.
தான் என எழுபவரே அம்முழுமையின் செய்திக்கு எதிர்நிற்கிறார்கள். எழுபவர் வீழ்வர். கொள்ள எழுவோர் விட்டு விலகுவர். வெல்வது தானென்போர் வீழ்ச்சியில் தன்னை அறிவர். பாண்டவரே, முரண்படுபவர் முற்றழிவார்கள்.
தானென்பதை விட்டவர் அதில் அமைகிறார். இவையென்றும் இவ்வாறென்றும் நிற்பதில் தன்னையும் உணர்பவர் அந்த முழுமையை அறிகிறார். அவர் நெஞ்சில் வாழ்க என்ற எண்ணமே வாழும். அவர் வாயில் நா எரிகுளத்தில் வேள்வித்தீ என தழல்கொண்டிருக்கும்.
உயிர்க்குலத்தை வாழ்த்துக! புவிப்பெருக்கை வாழ்த்துக! நீரை காற்றை ஒளியை வானை வாழ்த்துக! வாழ்த்தப்படும் அனைத்தும் அதுவே. வணங்கப்படும் அதுவும் அதுவே. வாழ்த்துபவன் வாழ்த்தப்படுகிறான். நலம் நாடுபவன் நிறைவடைகிறான்.
பொலிக பொலிக என உளமெழாத எந்த எண்ணமும் பழிசேர்ப்பதே. பொலிக என கொள்ளுங்கள். பொலிக என அளியுங்கள். பொலிக என வெல்லுங்கள். பொலிக என அடிபணியுங்கள். பொலிக என வாழுங்கள். பொலிக என்றே மடியுங்கள்.
முழுமையில் நின்று நோக்குபவரிடம் அது சொல்கிறது இணைந்த நலன் என்னால் பேணப்படுகிறது என. அதை அறிந்த யோகிகள் எங்கிருந்தாலும் நிறைநிலை கொள்கிறார்கள். எதுவரினும் மகிழ்கிறார்கள்.
யுதிஷ்டிரர் அக்குரலை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகே அமர்ந்திருந்த சந்திரபீடன் “மூத்தவரே, வேள்வி நின்றுவிட்டது. இனி இங்கு அமர்ந்துகொண்டிருப்பதில் பொருளில்லை” என்றான். அவர் திடுக்கிட்டு அவனை பார்த்தார். பின்னர் மூச்செறிந்து “நான் வேறெங்கோ இருந்தேன், இளையோனே” என்றார். “என்னை மூதாதையான யுதிஷ்டிரர் என உணர்ந்தேன். நைமிஷாரண்யக் காட்டிலமர்ந்து இச்சொற்களை இளைய யாதவர் வாயிலிருந்தே கேட்பதாக மயங்கினேன்.”
திராவிடச்சேர நாட்டிலிருந்து வந்திருந்த, பிருகுவின் மைந்தரான சியவன முனிவரின் குருகுலத்தைச் சேர்ந்த சண்டபார்க்கவர் வேள்வியின் நிலைச்சடங்குகளைச் செய்ய சற்று சோர்ந்தவர்போல அருகே வைசம்பாயனர் அமர்ந்திருந்தார். களைத்து துயில்கொண்டுவிட்டிருந்த மகாவியாசரை மஞ்சலில் வைத்து தூக்கிக்கொண்டு சென்று அரண்மனையில் படுக்க வைத்திருந்தனர். ஜனமேஜயன் கைகளில் தலையை தாங்கி அமர்ந்திருக்க அருகே பட்டத்தரசி வபுஷ்டை அரைத்துயிலில் என அமர்ந்திருந்தாள்.
சந்திரபீடன் “இனி வேள்விமுடிவுக்கான சடங்குகள். அவற்றை அந்தணரே செய்வர். நாம் இங்கிருக்கவேண்டிய தேவையில்லை” என்றான். “அன்னை சென்றுவிட்டார். தந்தை வேள்விக்காவலராதலால் அவிமுடிந்து அனலணைந்து கம்பத்தின் காப்பு அவிழ்க்கப்பட்ட பின்னரே எழமுடியும்.” சூரியபீடன் “பொறு” என்றான். சந்திரபீடன் “எனக்கு பசிக்கிறது” என்றான். சூரியபீடன் புன்னகையுடன் “சரி, எழுக!” என்றான். சந்திரபீடன் எழுந்து தன் பெருங்கைகளை விரித்து சோம்பல் முறித்தான். சூரியபீடன் “நான் யுதிஷ்டிரர் என்றால் நீ பீமசேனர். நம் குடியில் இப்பேருடலும் பெரும்பசியும் எப்போதும் தொடர்கின்றன” என்றான்.
அவர்கள் வேள்விச்சாலையைவிட்டு வெளியே சென்றனர். சூரியபீடன் திரும்பி அவைமுகப்பில் அனல் ஒளிவிட்ட முகத்துடன் அமர்ந்திருந்த ஆஸ்திகனை நோக்கினான். “அவர் யார்? அனலொளியில் அனலென்றே சுடர்கொண்டிருக்கிறார்” என்றான். “நாகங்களின் குலத்தைச் சேர்ந்தவன்” என்றான் சந்திரபீடன். “நான் யுதிஷ்டிரர் என்றால் இவர் யார் என்று கேட்டேன்” என்றான் சூரியபீடன். “நாகங்களுக்காக வந்திருப்பதனால் கர்ணன்” என்றான் சந்திரபீடன் சிரித்தபடி. “ஆம், அல்லது ஷத்ரியருக்கு எதிராக எழுந்த பரசுராமன், ஒருபோதும் நஞ்சு முடிவுறுவதில்லை.”
“ஏன்?” என்று கோட்டுவாய் இட்டபடி சந்திரபீடன் கேட்டான். “நஞ்சிலிருந்து எழுவதே வாழ்க்கை. இளையவனே, விந்து என்பது ஒரு துளி நஞ்சு.” சந்திரபீடன் வேண்டுமென்றே மீண்டும் ஓசையுடன் கோட்டுவாயிட்டு “நீங்கள் தத்துவத்திற்குள் நுழைவதற்கு முன் நாம் உணவுண்பது நன்று என நினைக்கிறேன்” என்றான். “அதற்கு முன் நாம் அன்னையை பார்த்துவிடுவோம்” என்றான் சூரியபீடன். “அன்னை ஏதேனும் உண்ணத் தரக்கூடும்” என்றபடி சந்திரபீடன் நடந்தான். அவனுடைய பெரிய உடலின் நிழல் நீண்டு ஈரம்நிறைந்த மண்ணில் விழுந்தது.
கிளம்பிச்சென்ற தேர்களில் அரசர்களையும் முதுவைதிகர்களையும் ஏற்றி வழியனுப்பிக்கொண்டிருந்த இளைய தந்தையரான சுதசேனரும் உக்ரசேனரும் பீமசேனரும் களைத்திருப்பதை சூரியபீடன் கண்டான். பேருடலரான பீமசேனர் களைத்து அவன் பார்த்ததே இல்லை. அது உளம் கொண்ட களைப்பு என அவனுக்குத் தோன்றியது. நான்காண்டுகளாக அந்த வேள்விக்கென்றே அவர்கள் வாழ்ந்தனர். நாள் நெருங்க நெருங்க ஒவ்வொருநாளும் நூறுமடங்கு பொழுதுகொண்டதென நீண்டது. அதில் துயில்வதற்கு மட்டும் அவர்களுக்கு நேரமிருக்கவில்லை.
அவர்கள் வேள்விச்சாலையை ஒட்டியிருந்த அரசிக்கான சிறுமண்டபத்தை அடைந்தனர். வாயிற்காவல் நின்றிருந்த சேடி தலைவணங்கி உள்ளே சென்றுமீண்டு அவர்களை உள்ளே செல்லும்படி பணித்தாள். அவர்கள் சிறிய அறைக்குள் நுழைந்தபோது அரசி கஸ்யை மஞ்சத்தில் அமர்ந்திருக்க அவள்முன் முதுநிமித்திகர் ஒருவர் அமர்ந்து கவிடி பரப்பி சோழிகளை நீக்கி வைத்துக்கொண்டிருந்தார். கஸ்யை அவனிடம் “என்ன பயன் என்று அறியவேண்டும் என விழைந்தேன். நிமித்திகர்தலைவர் சௌம்யர் வேள்விக்கு வந்திருப்பதாக சொன்னார்கள்” என்றாள்.
“என்ன பார்க்கவேண்டியிருக்கிறது?” என்றபடி சூரியபீடன் அமர்ந்தான். “ஆம், நீ அரசாளுவாயா என்றுதான்” என்று கஸ்யை சொன்னாள். “என் முதற்கவலை எப்போதும் அதுவே.” சந்திரபீடன் “இனிமேல் பட்டத்தரசிக்கு மைந்தர் பிறக்க வாய்ப்பில்லை, அன்னையே” என்றான். “வாயை மூடு!” என்று கஸ்யை சொன்னாள். “இன்னமும் இவன் பட்டம் சூட்டப்படவில்லை. மைந்தன் என்று எவர் வேண்டுமென்றாலும் எழுந்து வரக்கூடும்.”
“இப்போது ஏன் இதெல்லாம்?” என்று சூரியபீடன் கேட்டான். “உனக்கென்ன அறிவே இல்லையா? அடிபட்ட நாகம் என்று கேட்டிருப்பாய். இங்கு எரிபட்ட நாகங்கள் விடப்பட்டிருக்கின்றன. அரசரின் தந்தை நாகத்தால் கொல்லப்பட்டார். நம் குடிமேல் எப்போதும் நாகப்பழி உள்ளது.” சந்திரபீடன் ஏதோ சொல்ல வாயெடுக்க சூரியபீடன் அவனை கைகாட்டி நிறுத்தினான். கஸ்யை “சொல்லுங்கள், நிமித்திகரே” என்றாள்.
நிமித்திகர் தன் முதிய விழிகளால் மூவரையும் நோக்கிவிட்டு “பட்டத்தரசிக்குத்தான் நாகப்பழி முதன்மையாக உள்ளது. ஒரு கண்டம் அணுகி வருகிறது” என்றார். “உங்களுக்கு கோள்கள் நன்று சொல்கின்றன. பட்டம்சூடும் வாய்ப்புண்டு.” கஸ்யையின் முகம் மலர்ந்தது. “சொல்க!” என்றாள். இளைய அரசர்கள் மூவருக்குமே நாகப்பழி மிக அணுக்கமாக உள்ளது. ஒருவேளை மூவருமேகூட…” என்று நிமித்திகர் சொல்லி “ஆனால் இறையருளிருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம். நலமே நிகழும்” என்றார்.
“இறையருளா? இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் ஊழே முந்துறுகிறது என்றுதான் அனைத்தும் காட்டுகின்றன… நான் இவையனைத்தையும் நடத்தும் முழுமுதற்தெய்வமென்று ஏதும் உண்டென்று எண்ணவில்லை. இங்கு நிகழ்வது தெய்வங்களின் போர். எனது தெய்வம் வெல்லுமா என்று மட்டுமே நான் அறிய விழைகிறேன்” என்றாள் கஸ்யை.
சூரியபீடன் “இதை பார்ப்பதில் எப்பொருளும் இல்லை, அன்னையே. வெறும் எதிர்பார்ப்புகள், அச்சங்கள் மட்டுமே மிஞ்சும். நம் உள்ளம் கலங்கிவிடும். நிமித்தம் நோக்கி வாழ்வை அமைத்துக்கொண்டவர் எவருமில்லை. அழித்துக்கொண்டவர் ஏராளம்” என்றான். “நான் உன்னிடம் சொல் கேட்கவில்லை… நிமித்திகரே, கூறுக!” என்றாள் கஸ்யை.
“இளவரசர் பட்டம்சூடுவார். ஐயமில்லை. கோள்கள் நன்னோக்குடன் சூழ்ந்துள்ளன. ஆனால் நாகப்பழி குடியை சூழ்ந்திருக்கும்… இளையவர்…” என்றபின் சந்திரபீடனை நோக்கினார். “நாகத்தால் நான் கொல்லப்படுவேன் அல்லவா? நன்று. மேலே சொல்லுங்கள்” என்றான் சந்திரபீடன். “இல்லை அவ்வாறல்ல. எவர் எங்கு எவ்வண்ணம் மடிவார் என்பதை மாகாலனே அறிவான். மானுடர் சொல்லமுடியாது” என்றார் நிமித்திகர். “நீர் காலனுக்கான வாய்ப்புகளை சொல்கிறீர். அதை காலனுக்கே சொல்லலாம்” என்றான் சந்திரபீடன்.
“மந்தா, வாயைமூடு…” என்றான் சூரியபீடன். சந்திரபீடன் “நான் உணவுண்ணப் போகவேண்டும். உண்பதற்கு முன்னரே நாகம் என்னை கடித்தால் எனக்கு விண்ணுலகும் அமையாது. மலைமலையாக உணவை வைத்து நீங்கள் எனக்கு மாய்ந்தோரூட்டு செய்யவேண்டியிருக்கும்” என்றான் சந்திரபீடன். “பேசாமலிரு” என்று சூரியபீடன் முகம்சுளித்தான். கஸ்யை “சொல்க, நிமித்திகரே!” என்றாள். “அவர் சொல்வதே சரி. ஏன் இதை இப்போது சொல்லவேண்டும்?” என்றார். “சொல்க!” என இறுகிய குரலில் கஸ்யை சொன்னாள்.
“அப்படியே” என வணங்கிய நிமித்திகர் “அரசரின் கொடிவழிதோறும் நாகப்பழி தொடரும்” என்றார். கஸ்யை “மக்கட்பேறு எவ்வாறு?” என்றாள். “நூறுமைந்தர் இருவருக்கும்…” என்றார் நிமித்திகர். ஆனால் கஸ்யையின் முகம் மலரவில்லை. “அவர்கள் வாழ்வார்களா?” என்றாள். “அவர்களில் மூத்தவர் முடிசூடுவார்” என்றார் நிமித்திகர். சிலகணங்கள் நோக்கியமர்ந்திருந்த பின்னர் கஸ்யை “பிறர்?” என்றாள். அவர் மறுமொழி சொல்லவில்லை. “சொல்க!” என்றாள் கஸ்யை. “பிறர் பூசலிட்டு இறப்பார்கள்” என்றார் நிமித்திகர்.
“இந்த வீண்பேச்சுக்காக என் உணவை ஆறவிட முடியாது” என்றபின் “மூத்தவரே, என்னை அடுமனையில் வந்து பாருங்கள்” என்று சொல்லி சந்திரபீடன் கிளம்பிச்சென்றான். கஸ்யை “முன்பு ஒரு நிமித்திகர் சொன்னதுதான். மீண்டும் கேட்கிறேன். என் மைந்தரின் இறுதி எப்படி நிகழும்?” என்றாள். “அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றழிப்பார்கள், நாகநஞ்சால்” என்றார் நிமித்திகர். சூரியபீடன் உடல்கூசி விழிநீர் வரும்வரை மெய்ப்புகொண்டான். மெல்ல பின்னகர்ந்து சுவரில் சாய்ந்து நின்றான். உள்ளங்கால் வியர்வைகொண்டு நிலைவழுக்குவதுபோல் உணர்ந்தான்.
“அவர்கள் தொல்மூதாதையான யுதிஷ்டிரரும் பீமசேனரும் என்கிறார்கள்” என்று தளர்ந்த குரலில் கஸ்யை கேட்டாள். “ஆம். அவர்கள் நடுவே அன்று ஊறிய நஞ்சாக இருக்கலாம் இது. பலமுறை ஓங்கப்பட்ட வாள் ஒருமுறை வீழ்ந்தே தீரும்.” கஸ்யை “ஆம், குருக்ஷேத்திரக் களத்தில் யுதிஷ்டிரரை இளையோன் வெட்டமுயன்றதாக காவியம் சொல்கிறது” என்றாள். பின்னர் நீண்ட அமைதி நிலவியது.
நிமித்திகர் “மேலே ஏதும் அறியவேண்டுமா, அரசியாரே?” என்றார். “போதும், இனி அறிந்து என்ன? உடனடியாக நன்மையே நிகழவிருக்கிறது. அதன்பொருட்டு மகிழவேண்டியதுதான்” என்றாள் கஸ்யை. சூரியபீடன் “அன்னையே, நான் கிளம்புகிறேன்” என்றான். “எங்கே?” என்றாள் கஸ்யை. “அரண்மனைக்கு. களைப்பாக இருக்கிறது” என்றபின் வணங்கிவிட்டு அவன் வெளியே வந்தான்.
சூழ்ந்திருந்த இருள் அவனுக்கு அச்சமூட்டியது. தொலைவில் வேள்விச்சாலையின் செவ்வொளி பந்தலின் கூரையிடுக்குகளினூடாக சட்டங்களாக வானில் எழுந்திருந்தது. அங்கு நடமாடுபவர்களின் நிழல்கள் எழுந்தாடிக்கொண்டிருந்தன. விழிதிருப்பிய கணத்தில் அவன் நாகங்களை பார்த்தான். வேள்விச்சாலையிலிருந்து அவை ஊர்ந்து விலகிக்கொண்டிருந்தன. எஞ்சியது ஒரு நாகம். ஆனால் தன் விழைவால் அது நிழல்களென பெருகிக்கொண்டிருக்கிறது.
அவன் அப்போது கிருஷ்ண துவைபாயன மகாவியாசரைச் சென்று காண விழைந்தான். தன் குடிக்கு அவர் ஏன் ஒரு துளி நஞ்சை எஞ்சவிட்டார்? மூதாதையே, அந்நஞ்சு பெருகி நாங்கள் முற்றழிந்தால் நீங்கள் இங்கிருந்து அதை பார்ப்பீர்களல்லவா? அழிவற்றவரே, அன்று துயர்கொள்வீரா? தெய்வங்களை நோக்கி கூவுவீரா? பேரழிவை மீளமீளக் கண்டபடி இங்கே ஏன் வாழ்கிறீர்?
ஆனால் அவன் குதிரைகள் நிற்குமிடம் நோக்கி சென்றுகொண்டிருந்தான். ஏவலன் அவனைக் கண்டதும் தலைவணங்கினான். அவன் ஒன்றும் சொல்லாமல் புரவிமேல் ஏறிக்கொண்டான். அதன் விலாவை உதைத்து விரைவுகொள்ளச் செய்தான். அது பெருநடையில் கிளம்பி மெல்ல விரைவு கொண்டது. மேலும் மேலுமென அதை ஊக்கி ஓட வைத்தான். குறுங்காட்டைக் கடந்து கங்கைப் படித்துறையை அடைந்தபோது விடிந்துவிட்டிருந்தது.
கங்கையில் இறங்கி நீர் அருந்தி குதிரையை இளைப்பாற்றிவிட்டு கங்கைக்கரையின் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தான். எண்ணங்களை குதிரைக்குளம்பின் தாளம் இணைத்தது. ஒன்றுடன் ஒன்று தொடர்பிலாதவை. ஒரு பொருளும் அளிக்காதவை. நிகழ்ந்தவை, கற்றறிந்தவை, கற்பனையில் எழுந்தவை, கனவில் வந்தவை. நால்வகை உலகிலும் ஒரே தருணத்தில் வாழ்கிறார்கள் மானுடர். ஒன்றிலிருந்து ஒன்றென முளைத்தவை, ஒன்றை பிறிதொன்று நிரப்புபவை.
கனவுகளில் அவன் வேறுவேறு வடிவங்களில் நிகழ்ந்தான். ஒருநாள் புலரியில் கண்ட கனவில் அவன் குருதிச்சுனை ஒன்றில் மூழ்கி குருதி சொட்டும் குழல்கற்றைகளுடன் எழுந்தான். கொப்பளித்த குருதிச்சுனையிலிருந்து காகங்கள் தோன்றி குருதி சொட்ட சிறகடித்து எழுந்தன. எலிகளும் கருநாகங்களும் எழுந்து வந்தன. நரிகளின் ஓலம். விழித்தெழுந்து அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். அன்று மாலை சந்திரபீடனை அழைத்துக்கொண்டு நிமித்திகனாகிய அஸ்வனைச் சென்று பார்த்தான். களம்வரைந்து கருபரப்பி கோள்கணித்து நிமித்திகன் சொன்னான் “இளவரசே, அது நீங்களே. முன்பு அவ்வண்ணம் நிகழ்ந்தீர். மீண்டும் அவ்வாறே நிகழவிருக்கிறீர். அது உங்கள் மைந்தன். அவனை சத்யகர்ணன் என அழைப்பார்கள்.”
உச்சிப்பொழுதில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்த பின் மீண்டும் புரவியில் ஏறி அதே வழியில் சென்றான். வேளாண்சிற்றூர்களும் அதன்பின் ஆயர் சிற்றூர்களும் வந்தன. சிறிய படித்துறைகளில் தோணிகள் அலைகளிலாடி நின்றன. பொதியிறக்கிய படகுகளிலிருந்து சுமைகளை மாட்டுவண்டிகளுக்கு ஏற்றிக்கொண்டிருந்த வணிகர்கள் அவனைக் கண்டதும் தலைவணங்கினர். சிற்றில்களில் அடுமனைப்புகை எழுந்தது. கன்றுகளின் கழுத்துமணிகளும் நாய்க்குரைப்புகளும் சிறார்கூச்சல்களும் ஊர்களிலிருந்து எழுந்துகொண்டிருந்தன. வலப்பக்கம் கங்கை விழிநிறைக்கும் ஒளியென வழிந்து சென்றுகொண்டிருந்தது.
முந்தையநாள் அந்திக்குப் பின் எதையுமே உண்டிருக்கவில்லை என்றாலும் பசியை உணரமுடியவில்லை. இருட்டியதை விழி மங்கியதாகவே உணர்ந்தான். சோலைகள் நிழல்களாயின. ஓசைகள் அடர்வுகொண்டன. கங்கை கல்லொளி கொண்டது. குறுங்காட்டினூடாக நடுவே வந்த புல்நிலத்தினூடாக சென்றுகொண்டிருந்தான். பசுக்களின் கழுத்துமணியோசை கேட்டது. கூடவே ஒரு புற்குழலின் இசை. அவன் விழிதீட்டி நோக்கிச்சென்றான்.
பெருந்திரளான பசுக்களின் நடுவே ஒரு சிறு பாறைமேல் ஏறிநின்று குழலிசைத்த ஏழு வயது ஆயர் சிறுவனை கண்டான். அழகிய கருநிறம். மஞ்சள்நிற ஆடை. தலையில் விழிகொண்ட பீலி. அவ்விசை கேட்டு பசுக்கள் வந்து சேர்ந்துகொண்டிருந்தன. அவற்றின் அஞ்சிய குரலைக் கேட்ட பின்னரே அப்பால் ஓநாய்களின் உறுமலை கேட்டான். “ஓநாய்களா?” என்று அவன் கேட்டான். ஆனால் ஆயர் சிறுவன் வேறேதோ காலவெளியில் இருந்தான். அவன் தன்னை பார்த்தானா என்றே அவனுக்கு ஐயம் எழுந்தது. “அனைத்துப் பசுக்களும் வந்துவிட்டனவா?” என்று மீண்டும் கேட்டான். சிறுவன் ஏதோ சொன்னான். அவன் குழலிசையுடன் செல்ல பசுக்கள் தொடர்ந்துசென்றன.
சூரியபீடன் அதை ஒரு கனவென உணர்ந்தான். அதை நோக்கி நின்றிருந்தபோது வேறெங்கோ இருந்துகொண்டிருந்தான். சிறுவன் திரும்பியபோது முகம் ஒளிகொண்டிருந்தது. நீலமணி என மின்னிய விழிகளுடன் அவன் சொன்னான் “இணைந்த நலனை நான் பேணுகிறேன்.” சூரியபீடன் “என்ன?” என்றான். கங்கையிலிருந்து காற்று பெருகிவந்து அவன் குழலை அள்ளி முகத்தில் சரித்தது.
குழலை அள்ளி பின்னுக்கு இட்டபின் யுதிஷ்டிரர் திரும்பி இளைய யாதவரை நோக்கினார். “யோகக்ஷேமம் வஹாம்யகம்” என்று எவரோ சொல்லக் கேட்டு திரும்பினார். உள்ளிருந்து கேட்ட குரலோ அது என எண்ணி “கனவு” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர்.