இமைக்கணம் - 29
நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.”
ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் சொன்னார் “அறியவேண்டுமென்றல்ல, வாழவேண்டுமென்றே மானுடர் விழைகிறார்கள். வாழ்வுக்கு உதவுவது என தன்னை அளிக்கும் இரக்கம் கொண்டிருப்பதனாலேயே அது மேலும் முழுமைகொள்கிறது.”
வடிவங்களால் ஆனது இவ்வுலகு. அதன் உட்பொருட்களாலானது. அதன்மேல் எழுந்த ஒலியாலானது. யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே யோகிகள் ஒலியுலகத்தைக் கடந்து செல்கிறார்கள். அதை ஒலியென்று குறைக்கிறார்கள். பொருளென்று சமைக்கிறார்கள். வடிவென்று புனைகிறார்கள். முனிவரும் அறிஞரும் கவிஞரும் அமைத்த இவ்வனைத்தும் அதுவே.
அது அறியப்படாமை. அறியப்படுவன அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. இரவிலிருந்து புலரியில் பொருட்கள் முளைத்தெழுவதுபோல. இரவில் அவை மூழ்கியணைவதுபோல. அறிவால் அறியப்படுவதும் அறிபுலன்கள் அனைத்தையும் கடந்தமைந்ததுமான அறிவே அது. மண், நீர், தீ, காற்று, வான், உளம், மதி, தன்னிலை என்னும் எட்டு வகையாக பிரிந்து இயற்கை என்றாகிறது.
அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். அழிவிலாத அறிவைப் பற்றியது தேவ ஞானம். உடலுக்குள் அதை அறிதல் யாக ஞானம். நீங்களே அது என்றுணர்க! நான் எனச் சொல்லி விரிக! உங்கள் வடிவுகொண்டவனை அறிக! கவிஞனை, பழையோனை, ஆள்வோனை, அணுவின் அணுவை, அண்டப்பேரண்டத்தை, அனைத்தையும் சூடுபவனை, அலகிலா வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிர்என நிற்பவனை வாழ்த்துக! உங்களுடையது சொல்வேள்வி.
இங்கு என்றுமுளது ஒளிவழியும் இருள்வழியும். மீளாதது முதல் வழி. மீள்வது இன்னொன்று. உங்கள் வழி இங்கு மீள்வதே. அது அழகின், அளியின் வழி. அள்ளி அணைப்பது, ஆடி மகிழ்வது. இங்கு என்றுமிருக்கும் பூமரக் காடு உங்கள் சொற்கள். தன் வழியை அறிந்தவனே யோகி. வேதங்களிலும், தவங்களிலும், கொடைகளிலும் இயலும் தூய்மை வழியல்ல உங்களுடையது. சொல்லில் எழுவது. அது முதல்பெருநிலையே.
வாழ்வுக்குப் பொருள் தேடுபவன் கவிஞனல்ல. பொருள் அளிப்பவன் அவன். வினாக்களால் ஆனதல்ல காவியம், அழியா விடைகளாலானது. உசாவவேண்டாம், புனைந்தளியுங்கள். சுருக்கவேண்டாம், விளக்குங்கள். உளம்விரிந்து நீங்கள் புனைவதெல்லாம் மெய்யே. தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும்.
விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்தது. உங்கள் சொற்களாலேயே இங்கு மானுடம் வாழ்வை பொருள்கொள்ளும், கனவுகளை விரித்தெடுக்கும், கண்டடையும், கடந்துசெல்லும். ஆம், அவ்வாறே ஆகுக!
வியாசர் தாடியை நீவிவிட்டு தன்னுள் அச்சொற்களை சீராக அடுக்கியமைத்துவிட்டு எழுந்தார். “நான் கிளம்புகிறேன், யாதவரே. ஆயிரம் முறை ஊசலாடி மெல்ல அமைந்ததுபோல் உணர்கிறேன்” என்றார். “செல்வழி சிறக்கட்டும்” என்று இளைய யாதவர் வாழ்த்தினார். வியாசர் கைகூப்பி “நீங்கள் எண்ணுவது இயல்க! என் சொற்களில் அவை நிலைகொள்க!” என்றபின் படிகளில் இறங்கினார். முற்றத்தில் குளிர்காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மேலாடையை சீரமைத்துவிட்டு காட்டுப்பாதையில் நடந்தார். ஒரு வினாவும் எஞ்சவில்லை என்றாலும் உள்ளம் சிறு நிறைவின்மையை உணர்ந்துகொண்டிருந்தது. அது ஏன் என அவர் ஆழம் வியந்துகொண்டது.
வழிதவறிவிட்டோமா என அவர் எண்ணியபோது அது வியாசவனம் என்று உணர்ந்தார். நின்று தாடியை நீவியபடி சூழநோக்கினார். அங்குதான் அன்று மாலை வந்துசேர்ந்திருந்தார். எழவிருப்பதை எண்ணி கலங்கினார். விழிதிருப்பி குனிந்து நோக்கியபோது தன் எதிரே பாறைமுனையில் அமர்ந்திருந்த சிறுதவளையின் விழிகளை நோக்கினார். அது பாயத்தொடங்கும் கணத்தில் உறைந்திருந்தது.
அருகே நோக்குணர்வை அடைந்து திரும்பிப் பார்த்தார். வியப்புடன் “தந்தையே!” என்றார். பராசரர் புன்னகையுடன் அவரை அணுகி வந்து “நலம்சூழ்க, மைந்தா!” என்றார். “தந்தையே, இது உளமயக்கா, கனவா?” என்றார் வியாசர். “எதையறிகையிலும் அதற்கு கால்தொடும் மண்ணில் என்ன மதிப்பு என்று எண்ணுவதிலிருந்து ஒழியவியலாதா உன்னால்?” என்றார் பராசரர். வியாசர் “இயலாது, ஏனென்றால் நான் கவிஞன்” என்றார். பராசரர் “ஒரு கனவு அதற்குள் அனைத்துக் கனவுகளையும் விரியச்செய்கிறது” என்றார்.
“தந்தையே, சிறு உளக்குலைவொன்று என்னிடம் எஞ்சியிருக்கிறது” என்றார் வியாசர். “ஆம், அதிலிருந்தே நான் எழுந்தேன்” என்றார் பராசரர். “விண்ணளாவிய விடை ஒன்றை கண்டடைந்தேன். அதற்கப்பால் வினாவொன்றில்லை என்றும் உணர்ந்தேன். ஆனால் ஏடெடுத்து எழுத்தாணி வைக்க மண்ணிலூன்றிய விடை ஒன்று எனக்கு தேவை. அதுவே முதற்சொல்லென்று அமையமுடியும்” என்றார் வியாசர். “சொல்லுங்கள், இவையனைத்தும் நிகழ்வது ஏன்?”
பராசரர் “நான் அறிந்தது ஒன்றே” என்றார். “பிரம்மனின் மைந்தராகிய வசிட்ட பிரஜாபதியின் மைந்தர் சக்தி. அவருடைய மைந்தன் நான். நீ என் குருதி.” வியாசர் “ஆம், என் மூதாதையாகிய வசிட்டரிடமிருந்தே சொல்தொடங்குகிறேன்” என்றார். “இக்ஷுவாகு குலத்தில் பிறந்த மித்ரசகன் என்றொரு அரசன் முன்பு அயோத்தியை ஆண்டுவந்தான். அவனுக்கும் எனக்குமான பூசலில் இருந்து தொடங்குகிறது உன் துயர்” என்றார் பராசரர்.
“பிரம்மனுக்கு மரீசியில் பிறந்த கஸ்யப குடியில் வந்தவன். விவஸ்வான், வைவஸ்தமனு, இக்ஷுவாகு, விகுக்ஷி, சசாதன், புரஞ்சயன், ககுத்ஸ்தன், அனேஸஸ், பிருதுலாஸ்வன், பிரசேனஜித், யுவனாஸ்வன், மாந்தாதா, புருகுத்ஸன், திரிசதஸ்யு, அனரண்யன், ஆரியஸ்வன், வசுமனஸ், சுதன்வா, திரய்யாருணன், சத்யவிரதன், ஹரிச்சந்திரன், லோகிதாஸ்வன், ஹரிதன், சுஞ்சு, சுதேவன், பருகன், பாகுகன், சகரன், அசமஞ்சஸ், அம்சுமான், பகீரதன், சுருதநாபன், சிந்துத்வீபன், அயுதாயுஸ், ரிதுபர்ணன், சர்வகாமன் எனும் கொடிவழியில் வந்த சுதாசனின் மைந்தனாகப் பிறந்தவன் மித்ரசகன்.”
ஒருமுறை ஆயர்குடிகள் மித்ரசகனிடம் வந்து அவர்களின் கன்றுகளையும் கன்றோட்டும் மைந்தரையும் காட்டுப் புலிகள் வேட்டையாடுவதாகச் சொல்லி வருந்தினர். அவர்களைக் காக்கும்பொருட்டு அவன் தன் படைகளுடன் ஆயர்நிலத்தை அடைந்து சூழ்ந்திருந்த காடுகளுக்குள் புகுந்து பல் உதிர்ந்த முதுபுலிகளைக் கொன்று இளம்புலிகளை உள்காடுகளுக்கு துரத்தினான். அருகிருந்த கன்மாஷி நதியின் கரையிலமைந்த கன்மாஷம் என்னும் காட்டில் தன் குழுவினருடன் வேட்டையாடிக்கொண்டிருக்கையில் புதர்களுக்குள் இரு புலிகள் விளையாடுவதைக் கண்டு அம்புதொடுத்து ஒரு புலியை கொன்றுவீழ்த்தினான்.
அவை புலிகளல்ல. அக்காட்டிலிருந்த கன்மாஷர் என்னும் அரக்கர்குடியைச் சேர்ந்த கிருதி என்னும் கன்னியும் அவள் காதலனும். அவர்கள் தங்களின் குடிவழக்கப்படி புலித்தோல் ஆடையணிந்து காட்டில் காமமாடிக் கொண்டிருந்தனர். அம்புபட்டு காதலன் அலறி விழ அவனருகே இருந்து அவன் குருதி வழிந்த உடலுடன் சீறி எழுந்த கன்மாஷகுலத்து அரசன் கிங்கரனின் மகளான கிருதி “விழியிலா அரசே, எந்த வேள்வியாலும் தீராத பழியை கொண்டாய்” என்று கூவினாள். “நான் புலியென்றே எண்ணினேன்” என்றான் அரசன். “புலியென்றாலும் காமம் கொண்டாடுகையில் கொல்பவன் அறத்தோன் அல்ல” என்று அவள் சொன்னாள்.
“இல்லை, நான் அதை காணவில்லை” என்று அவன் மீண்டும் சொன்னான். “அரசனே, உன் உள்ளம் காமத்தில் எப்போதும் திளைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே காமத்தின் அசைவை உன் விழி ஒருபோதும் அறியாமலிருக்காது. அவ்வசைவு உன்னை அறியாமலே உன்னிலெழுப்பிய பொறாமையாலேயே நீ அம்பு தொடுத்தாய். இல்லை என்றால் உன் தந்தைமேல் ஆணையிட்டுரை” என்றாள் கிருதி. அரசன் சினத்துடன் “இழிகுலத்தோளான அரக்கி, உனக்கு நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை. உன்னையும் கொன்று இச்செயலை இங்கேயே முடிக்கிறேன்” என்று இன்னொரு அம்பை எடுத்தான்.
“விழிநோக்க நீ என்னை வீழ்த்தமுடியுமென எண்ணுகிறாயா? இப்பழிக்கு உன் குடிமேல் வஞ்சம் தீர்ப்போம். இக்குருதிமேல் ஆணை!” என்றபடி அவள் ஒரு கணத்தில் இலைகளுக்குள் மறைந்தாள். அம்புடன் சினக்கூச்சலிட்டபடி அரசன் அவளை தேடினான். அவள் காட்டில் கலந்து அகன்றுவிட்டிருந்தாள். பகலெல்லாம் அவளை தேடிவிட்டு அரசன் திரும்பிச்சென்றான். அரக்கர் குலமகளின் தீச்சொல்லை எண்ணி அவன் அகம்படியர் அஞ்சினர். அவன் நகர் நுழைவதற்குள்ளாகவே குடிகளும் அரசியும் அதை அறிந்துவிட்டிருந்தனர்.
அயோத்தியின் அரசன் அதை பொருட்டெனக் கருதவில்லை. தன் அரண்மனையில் மகளிருடன் களிப்பதிலும் பாங்கருடன் சூதாடுவதிலும் தன்னை மறந்தான். அரக்கர்களின் பகை தன்னைத் தொடர்வதை ஒரு கணம் எண்ணியிருந்தால் அவன் அழிவை தவிர்த்திருக்கலாம். ஆனால் பெருமரங்களைப் பார்ப்பவர்கள் கால்தடுக்கும் சிறு வேரை காண்பதில்லை. அவன் அரசி மதயந்தி அவன் பொருட்டு அயோத்தியை ஆட்சிசெய்தாள். அவளுரைத்த அறிவுரையும் பொழித்த விழிநீரும் அவனை சென்றடையவில்லை.
அந்நாளில் அந்தண முனிவரான வசிட்டர் அயோத்திக்கு வருவதாகவும், அவன் அரண்மனையில் தங்கவிருப்பதாகவும் செய்தி வந்தது. அரசனின் காமநாட்டத்தால் அயோத்திக்கு இழிபெயர் வந்துவிட்டிருந்த காலம். ஈராண்டு மழையும் பொய்த்து குடிகள் அரசனை பழித்துரைக்கத் தொடங்கிவிட்டிருந்தனர். அந்தத் தீப்புகழை வேதிய முனிவரின் வருகை நீக்குமென அரசி மதயந்தி எண்ணினாள். அரசனும் அதை ஏற்றான். தன் இழிசெயல்களுக்கு அவர் வருகை ஒரு திரையென்றாகுமென்று அவன் கருதினான்.
வசிட்டரின் வருகையை அறிவித்ததுமே அயோத்தி விழாக்கோலம் கொண்டது. அவரை வரவேற்று தங்கவைக்க சோலைக்குடில் ஒருக்கப்பட்டது. அவர் நீராட சரயுவில் புதிய படித்துறை கட்டப்பட்டது. அவருடன் அவையமர வேதியரும் புலவரும் அவைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர் தலைமைகொண்டு அமர அஸ்வமேத வேள்வியை நிகழ்த்தவேண்டுமென்று மித்ரசகன் எண்ணினான். அதற்குரிய அனைத்தும் ஒருக்கப்பட்டன. வேள்விச்சாலை சரயுவின் கரையில் முறைப்படி அமைக்கப்பட்டது.
வசிட்டர் அங்கநாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தார். அயோத்தியில் மகாருத்ரவேள்வி ஒன்றை அவர் நிகழ்த்த எண்ணினார். மித்ரசகன் அதற்கு உதவவேண்டுமென்று அரசனை தனியாக சந்தித்து கோரும்பொருட்டு தன் மாணவனாகிய அர்க்கனை அனுப்ப உளம்கொண்டார். அவனுக்குச் சான்றாக ஓர் ஓலையை அவர் எழுதினார். வசிட்டரின் மஞ்சல்சுமப்பவனாக உடன் சேர்ந்துகொண்டிருந்த கன்மாஷன் ஒருவன் தன் குலத்தோருக்கு அச்செய்தியை சொல்ல, அன்றிரவு புதர்களினூடாக நிழலுருபோல் ஒளிந்து அணைந்த கன்மாஷன் ஒருவன் அவர் கையால் எழுதிய அந்த ஓலையை திருடிக்கொண்டான்.
அவ்வோலையுடன் அயோத்தியை அடைந்து அரசவைக்குச் சென்று வசிட்டரின் மாணவன் என தன்னை அறிவித்துக்கொண்டான். ஓலை அவனுக்கு சான்றாகியது. அரசனிடம் தனியாகப் பேசவேண்டும் என்று அவன் சொன்னதனால் அமைச்சர் அவனை அகத்தளத்திற்கு அழைத்துச்சென்றார். மதுவுண்டு விழிசிவந்து சொல்தளர்ந்து அமர்ந்திருந்த மித்ரசகனிடம் அவன் மந்தணம் பேசினான். வசிட்டர் மகாருத்ரவேள்வியை இயற்றவிருப்பதாகவும் அதன்பொருட்டு ரௌத்ர நோன்பு கொண்டிருப்பதாகவும் சொன்னான். ஒவ்வொரு கருநிலவு நாளிலும் அவர் மானுட ஊனை நோன்புணவாகக் கொண்டு குருதிபலி அளித்து ருத்ரனை வணங்குவது வழக்கம் என்றும் அவர் வந்தணையும் நாளே கருநிலவென அமைவதாகவும் கூறினான்.
மானுட ஊனுணவை அவர் உண்பதை அணுக்கராகிய மாணவரும் அறியலாகாது. எனவே அதை எளிய கிழங்குணவுபோல சமைத்து எவருமறியாமல் அவருக்களிக்கவேண்டும் என்று கூறினான். அவரே அதை அறியாதவரென்று நடிப்பார். வைதிகர் எனும் எல்லையை கடக்காமல் அவர் ருத்ரத்தை அடையமுடியாது, கடந்தாலொழிய விஸ்வாமித்ரரை வெல்லமுடியாது என்பதனால் அவர் அந்நோன்பை கொள்கிறார் என விளக்கினான்.
கரவுள்ளம் கொண்டோர் பிறரெல்லாம் உளம் கரந்தவரே என நம்புபவர்கள். மித்ரசகன் அதை மறுவினாவின்றி நம்பினான். தன் அணுக்கனை அடுமனைக்கு அனுப்பி சிறைப்பட்டவன் ஒருவனைக் கொன்று அவ்வூனை கொண்டுசென்று கிழங்குகளிட்டு ஊன்கறி என்று அறியாதவாறு சமைக்கச்செய்தான். அயோத்திக்குள் புகுந்த வசிட்டரை தன் அரசி மதயந்தியுடன் கோட்டைவாயிலுக்கே சென்று தாள்பணிந்து வரவேற்று அழைத்துவந்து அவருக்கான தவக்குடிலில் தங்க வைத்தான். வசிட்டர் நகர்நுழைந்ததை அயோத்தி பெருந்திருவிழாவென கொண்டாடியது.
அன்றிரவு வசிட்டருக்கான உணவு அரசனின் அணுக்கனால் நேரடியாக கொண்டுசென்று அளிக்கப்பட்டது. அதை அரசனே அவருக்கு கொடுத்தனுப்பியதாக அவன் சொன்னான். நெடும்பயணத்தால் களைத்திருந்த வசிட்டர் அந்த ஊனுணவை உண்டார். அந்தியின் பூசெய்கைகள் முடித்து தர்ப்பைப்பாயில் அவர் உறங்கினார். கனவில் அவர் உண்ட ஊனுக்குரிய சிறையாளன் எழுந்து வந்தான். விழிநீர் வழிய கைகூப்பியபடி அவர் முன் நின்றான். அவன் நீட்டியிருந்த கையில் கரிய புழுக்கள் நெளிந்தன. “இவை என்ன?” என்று அவர் அவனிடம் கேட்டார். “நான் இயற்றிய பழிகள். இவை உங்களால் உண்ணப்பட்டுவிட்டன. உங்கள் குடலில் வளர்கின்றன” என்றான்.
அலறியபடி விழித்துக்கொண்ட வசிட்டர் உடனே தன் வயிற்றில் கைவைத்து ஊழ்கத்திலமர்ந்து நிகழ்ந்தவை அனைத்தையும் உணர்ந்தார். உடல் உலுக்க குமட்டிக் குமட்டி வாயுமிழ்ந்தார். குருதிவழியும்வரை குமட்டிக்கொண்டிருந்த பின் வலிப்பு வந்து நிலத்தில் விழுந்தார். அவர் உடல் கொதிக்கத் தொடங்கியது. அவருடைய மாணவர்கள் அவரை அயோத்தியிலிருந்து விலக்கி சரயுவின் கரையிலிருந்த சோலை ஒன்றுக்கு கொண்டுசென்றனர். அங்கே பதினெட்டு நாட்கள் உடல்காய நோயுற்றுக் கிடந்த வசிட்டர் விழிதிறந்ததும் நிகழ்ந்ததை உணர்ந்து விழிநீர்விட்டார். மீண்டும் மீண்டும் உடல் உலுக்க குருதியுமிழ்ந்தார்.
நிகழ்ந்ததை அறிந்த அரசன் அஞ்சியபடி அக்குடிலருகிலேயே நின்றிருந்தான். அவர் விழித்தெழுந்ததை அறிந்ததும் ஓடிவந்து அடிபணிந்து பொறுத்தருளும்படி கோரினான். பொய்மையால், புலனின்பத்தால், ஆணவத்தால் நீடுதொலைவு நடந்த கால் என தடிப்புகொண்டிருந்த அவன் முகத்தைக் கண்டதுமே வசிட்டர் சினம்மிகுந்தவரானார். அருகிருந்த கெண்டியிலிருந்து சரயுவின் நீரை கையிலூற்றி அவன்மேல் வீசி தீச்சொல்லிட்டார்.
“என்னை இழிவுணவு உண்ணச்செய்தவன் நீ. இப்பழிக்கு இப்பிறவியிலேயே நீ நிகர்செய்தாகவேண்டும். நூறாண்டுகள் மானுடஊனுணவு உண்ணும் அரக்கனாக மாறி காடுகளில் அலைக! அப்பழியைச் சுமந்து ஏழுமுறை பிறந்து உழல்க! உன் குருதிவழி உன்னுடன் அழிக!” என்றார். அரசனின் அருகே நின்ற மதயந்தி அவர் கால்களில் விழுந்து “என் குடியை அழிக்காதீர், முனிவரே. என்பொருட்டு அருளுங்கள்” என்றாள். சினம் சற்றே தணிந்த வசிட்டர் “உன் குருதிவழியினரிலிருந்து அயோத்தி அரசர்களை பெறும். அவர்கள் நியோகமைந்தர்களென அமைந்து உன் அரசனுக்கு விண்பேறளிப்பார்கள்” என்றார்.
மித்ரசகன் அயோத்தி மக்களால் விலக்கப்பட்டான். நகர்நீங்கி கானேகிய அவன் உருவம் நாளுக்குநாள் மாறியது. பார்ப்போர் அஞ்சும் தோற்றம் கொண்டு, பெருஞ்சினமும் காழ்ப்பும் நிறைந்தவனாக காட்டுக்குள் தனித்து அலைந்தான். அவனைப் பற்றி அறிந்து வசிட்டரின் எதிரியாகிய விஸ்வாமித்திர முனிவர் மாற்றுருக்கொண்டு வந்து சந்தித்தார். “உன்னை தீச்சொல்லிட்டு இப்பெரும்பழிக்கு ஆளாக்கிய வசிட்டரை பழிவாங்கு. உனக்கு நான் ஆற்றல் அளிக்கிறேன்” என்றார். “பழிவாங்குதலே அறத்தின் முதல்படி என்று உணர்க! ஐந்து குலத்தோர்க்கும் அது உகந்ததே. அரசனுக்கு அதுவே முதல் அறம். காட்டாளனுக்கு அது ஒன்றே அறம். நீ காட்டாளர்களின் அரசன். உனக்கு எப்பழியும் சேராது” என்றார்.
மித்ரசகன் விஸ்வாமித்திரரிடமிருந்து பேருருக்கொள்ளும் கலை, விழியறியாது மறையும் கலை, பெரும்பசி என்னும் மூன்று சொற்கொடைகளை பெற்றான். ஆற்றல் மிக்கவனாகி அரக்கர் குலத்து ஊர்களைத் தாக்கி அங்குள்ளோரை வென்று உணவும் உறைவிடமும் கொண்டான். அவனை அரக்கர்கள் அஞ்சினர். அச்செய்தியை கன்மாஷகுலத்து தலைவனாகிய கிங்கரன் அறிந்தான். தன் வீரர்களை அனுப்பி மித்ரசகனை சிறைப்பிடித்து இழுத்துவர ஆணையிட்டான். உணவும் மதுவும் அளவிலாது உண்டு மயங்கிக்கிடந்த மித்ரசகனை அவன் வீரர்கள் பிடித்துக்கட்டி கன்மாஷபுரிக்கு கொண்டுசென்றனர்.
கிங்கரன் அரசமுனிவராகிய விஸ்வாமித்திர முனிவரிடமிருந்து அருள்பெற்றவன். முன்பு அவர் கன்மாஷி நதிக்கரையில் குடில்கட்டி தன் மாணவர்களுடன் தவம்செய்துகொண்டிருந்தபோது தொலைவிலிருந்து அவரை நோக்கினான். அவர் ஆற்றுநீரை அள்ளி அனலென்றாக்கி எரிகுளம் அமைப்பதைக் கண்டதும் அவர் ஆற்றல்மிக்கவர் என உணர்ந்து அவரை அணுகி பணிந்தான். அவருக்கு பணிவிடை செய்து அவர் அன்பை பெற்றான்.
தனக்கும் தன் மாணவர்களுக்கும் தேனும் கனியும் கிழங்கும் வேள்விக்குரிய மலைப்பொருட்களும் குன்றாது அளிக்கவேண்டும் என சொல்பெற்றுக்கொண்டு விஸ்வாமித்திரர் அளித்த ஊழ்கநுண்சொல்லால் கிங்கரன் ஆற்றல்கொண்டான். கன்மாஷகுலத்துத் தலைவன் கரபியை அறைகூவி போரிட்டுக் கொன்று அரசன் ஆனான். அவனை அரக்கர்குலத்தில் எவரும் வெல்ல இயலவில்லை என்பதனால் அரசனென்று அறியப்பட்டான். அரக்கர்குலத்துக்கே தலைவனான பின் அவன் விஸ்வாமித்திரரை மறந்தான். அவருடைய தவச்சாலைக்கு அளிக்கவேண்டிய கொடைகளை நிறுத்திக்கொண்டான்.
சிறைப்பட்டு அவைமுன் வந்த மித்ரசகன் கிங்கரனை தன்னுடன் தோள்போரிடும்படி அறைகூவினான். தன்னை எவரும் வெல்ல முடியாது என்று இறுமாந்திருந்த கிங்கரன் அதை ஏற்று போருக்கிறங்கினான். மூன்றுசுற்று போரின் இறுதியில் கிங்கரனை மித்ரசகன் சுழற்றி மண்ணிலறைந்து கொன்று நெஞ்சு பிளந்து குருதி அள்ளி முகத்திலும் நெஞ்சிலும் பூசி வெற்றிமுழக்கமிட்டான். கன்மாஷர்களின் அரசனென்று தானே முடிசூட்டிக்கொண்டான். கிங்கரனின் மகள் கிருதியை மணம்புரிந்துகொண்டான். அவளுக்கிழைத்த தீங்குக்கு அவ்வாறு ஈடுசெய்தான். கன்மாஷபாதன் என்ற பெயர் அவனுக்கு அமைந்தது.
நாளுக்குநாள் சினமும் கீழ்மையும் பெருகிவந்த உள்ளத்துடன் கன்மாஷபாதன் ஆற்றல்களை திரட்டிக்கொண்டான். தன் ஒற்றர்களை அனுப்பி வசிட்டரின் மைந்தர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை கணித்தான். பின்னர் ஒவ்வொருவரையாக வேட்டையாடலானான். அவர்களை கன்மாஷர்கள் காலையில் நீராடச் செல்லும்போதும் இரவில் குடிலில் தனித்துறங்குகையிலும் சிறுத்தைகளைப்போல ஓசையின்றி கவர்ந்து வந்தனர். கன்மாஷபாதன் அவர்களைக் கொன்று ஊனைச் சமைத்து உண்டான். அவன் குடியினர் அம்முனிவர்களின் ஊனை கள்ளுடன் உண்டு தாளமிட்டு களியாட்டமிட்டனர். வசிட்டரின் நூறு மைந்தரையும் கொன்று உணவாக்கிய பின்னரே அவன் வஞ்சம் அடங்கியது.
தன் மைந்தரை கன்மாஷபாதன் கொன்றதை வசிட்டர் அறியவில்லை. தன் மைந்தர்கள் ஒவ்வொருவராக மறைந்துவிடுவதை அறிந்து எண்ணி எண்ணி ஏங்கினார். துயருற்று மெலிந்து எரிந்த சுள்ளிபோலானார். நூறாவது மைந்தன் மறைந்த அன்று வஞ்சவெறியில் நெஞ்சிலறைந்து ஓலமிட்டார். அச்செய்தி வந்தபோது அவர் காலைப்பொழுதின் எரிசெயலில் இருந்தார். நெய்எடுத்து ஊற்ற எழுந்த மரக்கரண்டியுடன் உறைந்தவர் “தேவர்களே, என்பொருட்டு எதையும் கேட்கலாகாதெனும் நோன்பால் கட்டுண்டிருந்தேன். இனியில்லை அந்நோன்பு. இவ்வனலில் எழுந்தருள்க!” என்று கூவினார்.
அவியிட்டு அனலோம்பி வேதம் ஓதியபடி அதை கூவிக்கொண்டிருந்தார். அனலில் எழுந்த காற்றிறைவன் “உன் அழைப்புக்கு இணங்கி வந்தேன், மைந்தா. சொல், நீ விழைவதென்ன?” என்றார். “என் மைந்தர் எங்குள்ளனர்? எவ்வண்ணம் மறைந்தனர்?” என்று அவர் கேட்டார். கண்ணீர் வழிய நெஞ்சுலைய “சொல்லுங்கள், எங்கே என் மைந்தர்? என்ன ஆயிற்று அவர்களுக்கு?” என்றார். “அவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அரக்கர்கள் அவர்களை சமைத்து உண்டனர்” என்றார் காற்றிறை.
“யார் செய்தது அதை?” என்றார் வசிட்டர். கையில் கங்கைநீரை அள்ளியபடி “சொல்க? அதற்கு முதன்மைப்பழி கொள்வோன் யார்?” என்றார். “நீங்கள்” என்று வளியோன் சொன்னார். “உங்கள் சொல்லே தொடக்கம். உங்களால் உருவாக்கப்பட்டவன் கன்மாஷபாதன். நீங்கள் அவனை ஒறுத்தமையால் விஸ்வாமித்திரரிடமிருந்து பேராற்றலை பெற்றான். வேதமுனிவரே, செயல்களெல்லாம் தொடர்நிகழ்வுகளே.”
செவிகேட்டதை உளம் ஏற்றுக்கொள்ள இயலாமல் வசிட்டர் நின்றார். பின்னர் வேள்விக்கரண்டியை வீசிவிட்டு சாலையிலிருந்து இறங்கி ஓடினார். செல்லும் வழியெல்லாம் கதறிக்கொண்டிருந்தார். கால்தளர நின்று விம்மி மீண்டும் எண்ணி நெஞ்சிலறைந்து கூவியழுதபடி ஓடினார். கங்கையை அடைந்து அதன் ஆழச் சுழியின்மேல் எழுந்து நின்ற மரத்தின்மேல் ஏறினார். பாய்வதற்கு முன் அவருடைய ஆடை கிளையில் மாட்டியிருப்பதை உணர்ந்து அதை இழுத்தெடுக்க முயன்றார்.
அவரெதிரே தோன்றிய வளி “முனிவரே, அது உங்கள் செயல்மிச்சம். அது இங்குதானிருக்கும். நீங்கள் நீரில் மூழ்கினாலும் அது அமிழாது. அதன்பொருட்டு மீண்டும் இப்புவிக்கே வருவீர்கள். இச்செயலால் உடல் மட்டுமே நீப்பீர்” என்றார். திரும்பி ஓடிய வசிட்டர் அங்கே காட்டெரி ஒன்றைக் கண்டு அதில் புகும்பொருட்டு சென்றார். அவரை மறித்த காலவர் “வேதமுனிவரே, அதில் உங்கள் கையிலணிந்துள்ள புல்லாழி மட்டும் எரியாது. அது உங்கள் செயல்மிச்சம்” என்றார்.
“முழுதழிய நான் செய்யவேண்டியதென்ன?” என்று வசிட்டர் கூவினார். “செய்வதற்கொன்றே உள்ளது. வாழ்க, அனைத்தையும் அளித்து பெற்று ஆற்றி நிறைவடைந்து மீள்க!” என்றார் காற்றிறை. “ஆம்” என மூச்சொலியுடன் விம்மியபடி மெல்ல நிலத்தில் அமர்ந்தார் வசிட்டர். “வாழ்வை விடலாம், வாழ்வு நம்மை விடுவதில்லை.” அதன்பின் நீரில் இறங்கி தன் மைந்தருக்கு இறுதிக்கடன் செய்யலானார். விழிநீர் வழிய நீரளித்து அவர்களை விண்ணேற்றம் செய்தார்.