இமைக்கணம் - 28
நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் சிறுகுடிலின் அறையில் தன்னை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த வியாசர் “என்ன நிகழ்ந்தது? துயின்றேனா? கனவா?” என்றார். “மீண்டீர்கள்” என்றார் இளைய யாதவர். வியாசர் “என்னை காட்டுக்குள் சூக்ஷ்மம் என்னும் சுனைவரை கொண்டுசென்றீர்கள். நான் அதில் இறங்கினேன்…” என்றபின் தன் ஆடைகளை தொட்டுநோக்கி “அதுவும் உளமயக்கா?” என்றார். “இப்போது இங்கு நீங்கள் சொல்லாடிக்கொண்டிருப்பது உளமயக்கென்றால் அதுவும்தான்” என்றார் இளைய யாதவர்.
“ஆம், ஒருகணம் நடுவே நான் என் காட்டுக்குள் சோலையில் தனித்திருப்பதாகவும் உணர்ந்தேன்” என்று வியாசர் சொன்னார். “பிதாமகரே, அதுவும் உளமயக்கே” என்றார் இளைய யாதவர். வியாசர் ஒருகணம் சொல்லுறைந்து பின் “அவ்வாறும் சொல்லலாம்” என்றார். பின்னர் நிகழ்ந்தவற்றை எண்ணி நீள்மூச்செறிந்து “கொடுங்கனவுபோல” என்றார். “என்ன நிகழ்ந்தது?” என்றார் இளைய யாதவர். “அதை நான் மொழியிலாக்குவது சிறுசிமிழால் கடலை அள்ளமுயல்வதுபோல. அது முற்றிலும் பிறிதொரு நிலை, முற்றிலும் பிறிதொரு வெளி” என்றார் வியாசர்.
அவர் சொல்வதற்காக இளைய யாதவர் காத்திருந்தார். “ஆனால் சொல்லென்று அடுக்கிக் கொள்ளாமல் என்னால் இங்கே இனி வாழவும் முடியாது” என்றார் வியாசர். தன்னுடன் என “சொல்லைப்போல் காக்கும் படையும் கோட்டையும் பிறிதில்லை” என்றார். இளைய யாதவரை நோக்கி “நான் அதை சொல்லில் வகுத்துரைத்தாகவேண்டும். ஒருமுறை உரைத்தால் அது உருக்கொள்ளாது சிதறிப்பரவும். மீளமீள சொல்லவேண்டும். பலரிடம் பல கோணங்களில். எழுதவேண்டும். பாடிக்கேட்கவேண்டும். அதன் நூறு பாடவேறுபாடுகளை உணரவேண்டும். அதன்பின்னரே என்னால் இதை நோக்கவும் அள்ளவும் கைக்கொள்ளவும் முடியும். நான் அடைந்த மெய்யறிதல்கள் அனைத்தையும் இவ்வண்ணமே என்னுடையதாக்கியிருக்கிறேன்” என்றார்.
இளைய யாதவர் சிரித்து “ஆம் ஆசிரியரே, மானுடர் அடையும் அனைத்து மெய்யுணர் தருணங்களையும் அவ்வாறே தன்வயமாக்கிக் கொள்கிறார்கள். ஓர் இறப்பை எத்தனை முறை சொல்லிச் சொல்லி இறப்பு மட்டுமே என்றாக்கிக்கொள்கிறார்கள்! எத்தனை விலகிச்சென்று இன்னதென்று அமைத்துக்கொள்கிறார்கள்! உவகையை, துயரை, சிறுமையை சொல்லாக்கிக் கொள்ளாதவர்கள் மூன்று தரப்பினரே. அதன்மேல் முட்டி சித்தம் சிதைந்தவர். அதை அவ்வடிவிலேயே புதைத்து ஆழ்த்தி அறியாதவரென மேலே அமர்ந்திருப்பவர். அதை தொட்டதும் விலகி பிறிதொரு திசையில் நெடுந்தொலைவு சென்றுவிடுபவர். மூவரும் அந்நிகழ்வறிவால் முழுமையாக வெல்லப்பட்டவர்கள். வெல்பவர்களின் படைக்கலம் சொல்லே” என்றார்.
வியாசர் “சொல்லாக்காமல் அதை அறிதலே முழுமை என்கிறீரா?” என்றார். “அது உளம்கொண்டு வாழும் மானுடர் எவருக்கும் இயல்வதல்ல. சொல்லி விரித்துச்செல்க! விரிவன அனைத்தும் ஓர் எல்லைக்கப்பால் இன்மையென்றாகின்றன. அதற்கு முன்னரே நின்று சுருக்கிக் கொணர்க! சுருங்குவன அனைத்தும் இன்மையென்றாகின்றன. அதற்கு முன்னரே நிறுத்திக்கொள்க! அவ்விரு நிலைகளிலும் எஞ்சுவதொன்றுண்டு. அதுவே அவ்வறிதலின் நுண்சொல்வடிவம். அதை உள்ளத்தில் ஊன்றுக! ஊழ்கமென பற்றிக்கொள்க! அது அவ்வறிதலின் மெய்மை எனப்படும்.”
வியாசர் “நான் ஊழ்கம் பயின்றதில்லை. என் தந்தை அது என் வழியல்ல என்றார்” என்று சொன்னார். “இளமையில் அன்னையிடமிருந்து விடைகொண்டு வெண்பனி சூடிய இமயமலைமுடிகள் சூழ்ந்த மாண்டவ வனத்தில், விபாசா நதியின் கரையில் மாணவர்களுடன் வாழ்ந்த என் தந்தையை நாடிச்சென்று அவருடைய மாணவராக அமைந்தேன். அவர் ஊழ்கம் பயில்கையில் உடனிருந்தேன். தன் மாணவர்களுக்கெல்லாம் அவர் ஊழ்கம் கற்பித்தார். எனக்கு சொல்லும் இலக்கணமும் அறமும் நெறியும் வரலாறும் பயிற்றினார். பின் அவ்வைந்தையும் ஒன்றெனக் கொண்ட காவியத்தை கற்பிக்கலானார்.”
ஒருநாள் அவரிடம் “தந்தையே எனக்கு ஊழ்கம் கற்பியுங்கள்” என்றேன். அவர் அதை செவிகொள்ளவில்லை. மீண்டும் கேட்டபோதும் மறுமொழி சொல்லவில்லை. ஏழாவது முறை கேட்டு அவர் விழிவிலக்கிக்கொண்ட தருணத்தில் நான் சினத்துடன் “இனி உங்களுக்கு நான் பணிவிடை செய்யப்போவதில்லை. இங்கிருந்து விலகிச் செல்லவிருக்கிறேன்” என்றேன். “ஊழ்கமில்லாச் சொல் வெறும் கேளிக்கை. நான் மேடையிலாடும் சூதனல்ல. விண்முட்டி மெய்மையின் வாயில்களை திறக்க விழைவும் மெய்யுசாவி. சொல்தேர்ந்தமையாலேயே நான் உலகியலான் என்றாவதில்லை” என்றேன்.
அவர் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. உளம் கொதிக்க அருகே கிடந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அதன் கூர்முனையை என் கழுத்து நரம்பில் வைத்து “தகுதியற்றவனாக வாழ்வதைவிட இறப்பதே மேல்” என்றேன். அவரிலமைந்த ஆசிரியனை மீறி தந்தை எழுந்தார். “நில், மைந்தா!” என்று கூவினார். எழுந்து என் கைகளை பற்றிக்கொண்டு “ஊழ்கம் உனக்குரியதல்ல. சொல் சுருங்குவது ஊழ்கம். சொல் விரிவது காவியம். உன் மனம் நுரைத்தெழுகிறது. நீ கவிஞன்” என்றார். என் தோளை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு “அறிக, உணர்ச்சியின்றி கவிதையில்லை! உணர்ச்சியிருக்கும் வரை ஊழ்கமில்லை” என்று விழிகனிந்து கூறினார்.
நான் “வேதம் உரைக்க எழுந்தவன் நான் என்று என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். வேதத்தை உணர்ந்த முனிவர் அறிந்த ஊழ்கத்தை நான் ஏன் அறியவியலாது?” என்றேன். “ஊழ்கத்தையும் நீ அறிவாய், உன் சொல்லினூடாக மட்டும். ஊழ்கத்திலமர்பவர் ஊழ்கத்தை மட்டுமே அறிவார், நீ அனைத்தையும் அறிவாய். வேதமென்பது சொல்லே” என்றார் தந்தை. “வேதம் உச்சியில் மெய்நூலென்றும் ஊழ்கநூலென்றும் குவியும். ஆனால் என்றும் கவிதையென்றே இங்கு நிலைகொள்ளும். நீ அதை வகுக்கும் பெருங்கவிஞன்.”
நான் சினத்துடன் “நான் அறிந்தாகவேண்டும் ஊழ்கத்தில் அமைந்து நான் கொள்வதென்ன என்று. எனக்கு இன்றே கற்றுத்தாருங்கள்” என்றேன். அவர் சொல்லெடுப்பதற்குள் அவர் கையை உதறி உரத்த குரலில் “பிறிதொன்றும் எனக்கு தேவையில்லை. நான் அறிந்தாகவேண்டும்” என்று கூவினேன். தந்தை புன்னகைத்து “சரி, நீ உன்னை அறிவதும் நன்றே” என்றார். என் ஆசிரியரின் மாணவர்களில் இளையவரான மைத்ரேயரை அருகழைத்து “இளையோனே, உனக்கு ஊழ்கநுண்சொல் அளிக்கும் தருணம் அமைந்துள்ளது. வருக!” என்றார். மைத்ரேயர் அதில் மகிழ்வுறவோ உளவிலக்கு கொள்ளவோ இல்லை. அன்றாடப் பணியொன்றுக்கு உடன் வருபவர்போல் இருந்தார்.
இருவரையும் மலைச்சரிவில் தேவதாருக் காட்டினூடாக அழைத்துச்சென்றார். அலையலையாக எழுந்த மலைகளில் ஏறிச்சென்று அங்கே சூழ பனிக்குன்றுகள் அமைந்த நீள்வட்ட வாவி ஒன்றை அடைந்தோம். அது பராசரசரஸ் என்று அழைக்கப்படுகிறது. மாண்டவக்காட்டின் கனவு அது என்பார்கள் சூதர். முன்பு எந்தை அங்கே ஒரு நாவல் மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தார் என்று கதைகளினூடாக அறிந்திருந்தேன். அதனால் அதற்கு பராசரமானசம் என்று பெயர் அமைந்தது. குளிர்காலத்தில் உறைந்து வெண்பனியாலானதாக மாறிவிடுவதனால் சுஃப்ரம் என்றும் அது அழைக்கப்படுவதுண்டு.
எந்தை அங்கே ஊழ்கத்தில் அமர்வதற்கு முன்பு இளஞ்சேற்றுக் கதுப்பில் தன் குதிகாலால் ஊன்றி ஒரு குழி செய்தார். அதிலூறும் நீர்க்கசிவை நோக்கியபடி அமர்ந்து தன் உள்ளத்தை விரித்துக்குவிக்கலானார். அதில் நீரூறித் தேங்கி பெருகியது. ஏரியென்றாகியது. ஏழாண்டுகள் அவர் விழிதிறக்காமலிருந்தார். அவருடைய மாணவர்கள் ஒவ்வொருநாளும் வந்து அவருக்கு அன்னத்தை அள்ளி ஊட்டிவிட்டுச் சென்றனர். ஏழாண்டு நிறைவில் ஒரு சித்திரை முழுநிலவில் நீரலை வந்து அவர் கால்களை தொட்டது. அவர் விழித்துக்கொண்டு “சுப்ரஃபாவம் சுஃப்ரம்” எனத் தொடங்கும் புராணமாலிகையின் முதற்செய்யுளை யாத்தார். அவர் அங்கிருந்து புராணமாலிகையை யாத்து முடித்தபோது அந்த ஏரி வெண்பளிங்கு என மாறிவிட்டிருந்தது.
மலைகளின் முலையிடுக்கில் பதிந்த நீலப்பதக்கம் என கிடந்த அந்த ஏரியின் கரையில் ஒரு பாறைமேல் அமர்ந்து எங்களை நீராடி வரச்சொன்னார். நாங்கள் நீராடிமீண்டு ஈர மரவுரியுடன் அணுகி பணிந்து நின்றோம். முதலில் என்னை தோள்சுற்றி அணைத்து மான்தோலால் முகம் மூடி செவியில் என் நுண்சொல்லை மும்முறை சொன்னார். ‘வ்யா’ என்னும் அச்சொல்லை நான் உளம்பதித்துக்கொண்டேன். அதன்பின் மைத்ரேயருக்கும் நுண்சொல் அளித்தார்.
“இருவரும் இக்காட்டில் உகந்த இடம்தேடி அமர்க! உளம் செலுத்தி இச்சொல்லை பயில்க! நான் அழைக்கும் ஒலி கேட்டதும் எதை அடைந்தீர்களோ அதை கொண்டுவருக!” சொல்லில் உளம்நிறுத்தி, பிறவற்றை தொகுத்து, சொல்லை இறுகப் பற்றாமல் நிகழவிட்டு, சொல்பெருக்காமல் குறையச் செய்து, சொல்லைக் கடந்து ஒலியென்றாக்கி, ஒலிகடந்து வெறுமையென்றாகி, தனித்து, தன்னிலையைக் கடந்து என எட்டு நிலைகளில் அமைந்து ஊழ்கம் இயற்றும் முறையை எனக்கு கற்பித்தார். எண்நிலை யோகத்தின் முதற்சொல் “ஆம்” என்பது. அதை அவரிடம் உரைத்து திரும்பிநடந்தேன்.
பராசரவாவிக்கு அப்பால் குறுங்காட்டில் ஓரு சிறு சுனைக்கரையில் பொன்னிற நாணல்கள் காற்றிலாடும் வெளியில் அழகிய பாறை ஒன்றை தேர்ந்தெடுத்தேன். அதன்மேல் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அமர்ந்தேன். தந்தை சொன்ன எட்டுநெறிகளை தலைக்கொண்டு ஊழ்கத்திலமர்ந்தேன். இளையோருக்குரிய முறையில் இப்போதே இக்கணமே அது அமையவேண்டுமென உன்னி உளவிசையை உச்சம்கொள்ளச் செய்தேன். பிலத்தில் இறங்கும் பெருநதி என என் சித்தம் அச்சொல்லில் படிந்தது.
வ்யா என்ற சொல் பொருளற்றதென்று தோன்றியது. அவ்வெண்ணத்தை நான் எவ்வளவு அகற்றினாலும் இணையாத வட்டத்தை இணைத்துக்கொள்ளும் விழி என என் உள்ளம் அதற்கே முயன்றது. வ்யா. வியர்த்தம், வியாமோகம் என்றது ஓர் எண்ணம். வீணென்றும் வெறுமை என்றும் சென்றமைய என்னால் இயலவில்லை. வ்யாதி, வ்யாகூலம்… சொற்களின் பெருக்கு. நோயென்றும் துயரமென்றும் ஏன் உளம் செல்கிறது? எண்ணி திசைதிருப்பிக்கொண்டேன். வியாகரணமா? மொழிகற்று இலக்கணம் தேர்ந்தேன் என்றாலும் என் கவியுள்ளம் என்றும் அதை வெறுத்தே வந்தது. வ்யாக்யானம், வ்யாஜம்… விளக்கமும் போலியும் ஒன்றேதானா? சொல் தொடுத்து பின்னி விரித்துக்கொண்டே சென்றேன்.
வ்யவஹாரம். அச்சொல் என்னை விடுவித்தது. அன்றாடச் செயல்களில் நான் எப்போதுமே சுணக்கம் கொண்டவன். ஆனால் அவையனைத்தையும் பலமடங்கு உள்ளத்தால் ஆற்றுபவன். கன்றோட்டினேன். வேளாண்மை செய்தேன். வணிகம் இயற்றினேன். வேட்டைக்குச் சென்றேன். காட்டில் அலைந்தேன். அச்சத்தை அச்சொல்லென உணர்ந்தேன். வியாஹ்ரம். அச்சொல் எழுந்ததுமே நான் புலியின் மணத்தை அடைந்தேன். என் புலன்கள் கூர்கொண்டன. புலி தலைகுலுக்கும் ஓசையை கேட்டேன். சருகின்மேல் பதியும் பஞ்சுப்பொதிக் கால்களின் ஓசை. மூச்சொலி. அதன் விழிகள் என்னில் பதிந்திருப்பதை உணர்ந்தேன்.
விழிதிறக்காமலேயே அதை கண்டேன். அது என் முன் அமர்ந்திருந்தது. நாவால் முகத்தை நக்கியபடி, சூழ்ந்துபறக்கும் சிற்றுயிர்களுக்கு கண்சுருக்கி சிமிட்டியபடி, காதுகள் அடித்துக்கொள்ள தலையை உலைத்து, அவ்வப்போது வாய்திறந்து நாவளைய கோட்டுவாய் இட்டு, கை மலர்த்தி நக்கி, வால் சருகில் விழுந்து நெளிய. பின்பு முன்கால்நீட்டி பின்கால் மடித்து படுத்தது. வெண்ணிற அடிவயிறு தெரிய கால்களை மேலே தூக்கி விரித்து புரண்டது. எழுந்து மீண்டும் அமர்ந்தது.
எந்தை என்னை அழைக்கும் குரல் எழுந்ததும் கண்களை திறந்தேன். என் முன் புலி அமர்ந்திருந்ததை கண்டேன். முள்மயிர் சிலிர்த்த இமைகள் சுருங்கி அதிர சிப்பிவிழிகளால் என்னை நோக்கியது. அருகே சென்று அதன் தலையை தொட்டேன். பின்கழுத்தை வருடியபோது விழிசொக்கியது. அடிக்கழுத்தின் தளர்தசையை அளைந்தேன். காதைப்பற்றி “வருக!” என்றேன். என்னுடன் அது நெடுக்குக் கால் வைத்து வால்நீண்டு வளைந்திருக்க நடந்துவந்தது.
எந்தை குடில்முன் அமர்ந்திருந்தார். அவரை அணுகி வணங்கி “தந்தையே, என் ஊழ்க நுண்சொல் இந்தப் புலியென வடிவுகொண்டது” என்றேன். அவர் அதை நோக்கி புன்னகைத்தார். புலி என்னருகே அவரை நோக்கியபடி நின்றது. அவர் அதை அருகே அழைத்தார். சிறு குருளையென அவர் காலடியில் சென்று படுத்துக்கொண்டது. அவர் அதை அடிவயிற்றை வருடி கொஞ்சினார். விழிசொக்கி சிணுங்கியபடி முன்கைகளால் முகத்தை வருடிக்கொண்டது. எழுந்து வால்சுழற்றி தாவி அவரை பொய்க்கடி கடித்தது. உடலை அவர்மேல் உரசியபடி சுற்றிவந்தது. காதுகள் பின்னால் மடிய அவரை கூர்ந்தது. முதுகைத் தாழ்த்தி உடல்நீட்டியது.
மைத்ரேயர் வருவதற்காக காத்திருந்தோம். நெடும்பொழுது கடந்தும் அவர் வராதது கண்டு தந்தை எழுந்து “நாம் அவனைத் தேடிச்செல்வோம்” என்றார். நாங்கள் காட்டினூடாக சென்றோம். அங்கே ஓர் இருண்ட குகைக்குள் அவர் இருந்ததை தேடிக்கண்டடைந்தோம். குகைக்குள் நான் அவரை முதலில் காணவில்லை. நிழலுருவென அமைந்திருந்தவரை தந்தைதான் அறிந்தார். அவரைக் கண்ட பின்னும் அங்கு எவருமில்லை என்றே எனக்கு தோன்றியது.
தந்தை உள்ளே சென்று அவரைத் தொட்டு அழைத்தார். விழிதிறந்த மைத்ரேயர் தந்தையை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தந்தை “இளையோனே, நீ மாண்டவ வனத்தில் இருக்கிறாய். பராசரனாகிய என் மாணவன் நீ. உன் பெயர் மைத்ரேயன்” என்றார். “ஆம்” என அவர் எழுந்துகொண்டார். தந்தையை வணங்கி “ஊழ்கத்தை எனக்களித்தீர்கள் ஆசிரியரே, செல்வதெங்கு என்பதில் இனி எனக்கு ஐயமேதுமில்லை” என்றார். “நீ எங்கு சென்றாய், எதை அடைந்தாய்?” என்றார் தந்தை.
“ஆசிரியரே, நீங்கள் எனக்கு வ்யா என்னும் ஊழ்கநுண்சொல்லை அளித்தீர்கள். அதை சித்தத்தால் தொட்டு மீட்டிக்கொண்டிருந்தேன். வீண் என்னும் பொருளில் திளைத்தேன். அது வ என்னும் சொல்லாகியது அல்லது அல்லது அல்லது என பொருள்கொண்டு அச்சொல் சென்றுகொண்டே இருந்தது. பின் வெற்றொலியாகியது. ஒலியின்மையாகியது. இன்மையாகியது. அதிலிருந்து உங்கள் சொல்வந்து தொட மீண்டேன்” என்றார் மைத்ரேயர்.
என்னை திரும்பி நோக்கிய தந்தை “நான் சொன்னதை நீயே உணர்ந்திருப்பாய்” என்றார். நான் திகைத்து நின்றேன். “திரும்பி நோக்குக, உன் புலியை!” என்றார் தந்தை. அங்கே அது என்னை தொடர்ந்து வந்து நின்றிருந்தது. “எட்டடி வேங்கை. எரிநிறம், அடிக்கழுத்தின் ஏழு வரிகள், நெற்றியின் மூன்றுபட்டைகள், நெஞ்சுக்குக் கீழே இரு நிகர்ச்சுழிகள், இணையான முன்னங்கால்கள், தொடைபெருத்த பின்னங்கால்கள், ஒட்டிய அடிவயிறு என ஏழு அழகுகள் கூடிய அரிய வடிவம். ஆனால் அதைக் கண்டு ஆள்காட்டிக்குருவி ஏன் குரலெழுப்பவிலை?” என்று தந்தை கேட்டார்.
நான் அதை நோக்கி மகிழ்ந்துகொண்டிருந்ததால் அதை அதுவரை எண்ணியிருக்கவில்லை. எந்தை “அதன் காலடித்தடங்கள் எங்கே?” என்றார். திடுக்கிட்டு குனிந்து நோக்கினேன். ஈரமண்ணில் நகத்தடம் இல்லை. அக்கணமே புலியும் மறைந்தது. அங்கு அது நின்றிருந்ததே என் விழிமயக்குதானா என உளம் வெளியை அளைந்து தவித்தது. என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. திரும்பி தந்தையை நோக்க என்னால் இயலவில்லை. “அது உன் சொல்லில் எழுந்த ஓர் அணி” என அவர் சொன்னார்.
உடைந்து அழுதபடி திரும்பி ஓடினேன். முட்களும் வாளிலை விளிம்புகளும் உடலை கீற காட்டுக்குள் ஊடுருவிச் சென்றேன். ஒரு சுனையருகே அமர்ந்தேன். எண்ணி எண்ணி அழுதுகொண்டிருந்தேன். அங்கேயே படுத்துத் துயின்று மீண்டும் விழித்து ஏங்கி விழிநீர் பெருக்கினேன். தந்தை என்னை தேடிவந்து அருகே அமர்ந்தார். புன்னகைத்தபடி என் தோளைத் தொட்டு “உன் சொல்லில் ஒரு வேங்கை எழுந்தது எளிய நிகழ்வல்ல, மைந்தா. அணியென்பது சொல்லின்மேல் அமையும் புறவுலகின் விந்தை. மானுடர் படைப்பவை அனைத்தும் அழியும், ஓர் அணி என்றும் நின்றிருக்கும். அது பிரம்மனின் படைப்புக்கு மொழிப்பரப்பில் விழுந்த பாவை” என்றார்.
“ஒலியில் கட்டுண்டது சொல். அந்தத் தளையை விடுவித்து அதிலிருந்து பொருளை எழுப்புபவன் கவிஞன். அப்பொருளை மெய்யென்று நிறுத்துபவன் பெருங்கவிஞன். உயிர்கொண்டு வரும் புலி மூப்பெய்தி அழியும். உன் சொல்லில் எழுந்த புலி என்றும் இங்கிருக்கும்” என்றார். நான் என் புலியையே நோக்கிக்கொண்டிருந்தேன். நான் கற்றறிந்த புலிகளனைத்தையும் அதில் கண்டேன். அதற்கு நிகரான ஒரு புலியை எங்கும் கண்டதில்லை என்று உணர்ந்தேன். புலி என்னும் சொல்லின் முழுமை அது.
“சொற்கள் சொற்களைப் பெருக்கி முடிவிலாதெழுபவை. உன்னால் இம்முழுவுலகையே சமைக்கவியலும். உன் நிலத்தை, வானை, மானுடரை, தெய்வங்களை. உனக்குரிய எதையும் எவரிடமும் நீ கோரவேண்டியதில்லை. சொல்லிப் பெருக்கும் உனக்கு ஊழ்கம் ஒருபோதும் அமையாது. சொல்லை முழுதெழவைக்கும் உனக்கு ஊழ்கம் தேவையுமில்லை” என்றார். “சொல்தவம் உனக்குரியது. சொல்லென்றே அதில் பிரம்மம் எழும். வாக்பிரம்மம் என அதை நூலோர் சொன்னதுண்டு” என்றார்.
நான் திரும்பி என்னருகே அமர்ந்திருந்த புலியை நோக்கினேன். என் அணிச்சொல்லை ஓர் ஒப்புமையென்றாக்கினேன். அது ஒரு பூத்த வேங்கைமரமாக மாறியது. பொன்மலர்கள் செறிந்த காற்றிலாட அஞ்சிப் பதுங்கியது. காற்று விலக காலூன்றி செவிதீட்டி எழுந்தது. நான் புன்னகையுடன் எழுந்துகொண்டு “ஆம் தந்தையே, நான் கவிஞன்” என்றேன். மாண்டவக் காட்டில் பராசரவாவிக்கு அருகே அந்த வேங்கை இன்று விரிந்து நின்றுள்ளது. ஒருபோதும் பூவொழியாதது, காலம் கடந்தும் மூப்படையாதது என அதை சொல்கின்றனர் சூதர்.
“சொல்லூழ்கத்தால் அதை தொட்டறிய இயலுமென்றால் ஒரு நீள்கவியென இயற்றுகிறேன். அதையே நான் இயல்பாக செய்ய முடியும்” என்றார் வியாசர். “ஆம், ஆசிரியரே. இயல்பாக செய்யப்படுவதே திறன்முழுமை கொண்டது” என்றார் இளைய யாதவர்.
விண்ணில் சொட்டுவதென முழுத்து நின்றிருந்த வெள்ளிக்கனி நோக்கி சென்றவன் அதை முன்னரே அறிந்திருந்தான். நூறுமுறை கனவில் கண்டிருந்தான். அக்கனவிலும் அதை அவ்வண்ணமே கண்டான்.
விழுவதுபோலவும் எழுவதுபோலவும் அவன் அதை அணுகிச் சென்றான். உடல் இன்மையென்றும் உளம் இருப்பென்றும் ஆக விசைகொண்டான். விசைக்கு தடையளிக்கும் உடலின்மையால் விசையென்பது இன்மையில் ஓர் இன்மையின் விரிதலென்றிருந்தது.
அவ்விண்மீன் தனித்திருந்தது. மின்னி மின்னி தன்னில் மகிழ்ந்துகொண்டிருந்தது. அதை அணுகியவன் கைதொட்டு அதை அள்ளிவிடலாமென்று உணர்ந்தான். உவகை பெருக “மைந்தா!” என்றழைத்தான். “என் மைந்தன்!” என விம்மிதம் கொண்டான். “அவன் பெயர் சுகன்!” என்று உளம்கூவினான். அதிலிருந்து ஒரு முகத்தை விழிகளுடன், புன்னகையுடன் புனைந்தெடுத்தான்.
மேலும் அருகணைந்தபோது அவ்விண்மீனின் அருகிலென பிறிதொன்றை கண்டான். திகைத்து “அது யார்?” என்றான். “அதுவும் சுகனே, பிறிதொரு காலக்களத்தில்” என்றது அவனைச் சூழ்ந்திருந்த வெளி. அதற்கப்பால் பிறிதொன்றை பார்த்தான். “அவனும் சுகனே, அதுவுமொரு காலக்களம்” என்றது முடிவிலி.
மேலும் மேலுமென அவன் விண்மீன்களை கண்டான். “அனைத்தும் அவனே” என்ற குரலை கேட்டான். அச்சமும் திகைப்பும் கொண்டு “எத்தனை பேர்?” என்று கூவினான். “எண்ணிறந்தோர்” என்று மறுமொழி பெற்றான். “இருளே சொல்க, நான் எத்தனை பேர்?” என்றான். “இது முடிவிலி. இங்கு அனைத்தும் எண்ணிறந்ததே” என்றது அது.
எண்ணிறந்தமை என்றால் என்னவென்று ஒரு நோக்கில் கண்டான். எண்ணிப்பகுப்பதே காலம். காலமின்மையில் கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை பெற்றனர். கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை இழந்தனர். கோடிகோடி வியாசர்களை கோடி கோடி சுகன்கள் பெற்று இழந்தனர். சுகன்களை கொன்றனர் வியாசர்கள். வியாசர்களை கொன்றனர் சுகன்கள். வியாசர்களிலிருந்து சுகன்கள் முளைத்தெழுந்தனர். சுகன்களிலிருந்து வியாசர்கள் எழுந்தனர்.
ஒன்றுபிறிதே என்றானவர்கள். ஒன்று பிறிதிலாதவர்கள். கணம்கோடிப் பெருகி கணம்கோடி அழிந்து அழிவின்மையாகி நின்றவர்கள். நெஞ்சிலறைந்து அழுதனர் முடிவிலாக் கோடியர். உவகைகொண்டு நகைத்தனர் எண்ணிலாக் கோடியர். முடிவிலாது பெருகுகையில் அழிவும் ஆக்கமும் துயரும் உவகையும் ஒன்றே. அனைத்தும் இன்மையே. இன்மையும் இருப்பும் ஒன்றே.
பெருகிப்பெருகி விரிந்து விரிந்து சென்றான் வியாசன். அவன் கைகள் திசைகளின் முடிவிலி நோக்கி நீண்டன. கால்கள் ஆழத்தின் அடியிலி நோக்கி சென்றன. தலை விண்ணின் அலகிலி நோக்கி எழுந்தது. கணம்கோடி என பெருகும் தன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு சுகன் என்று உணர்ந்தான். ஒவ்வொரு சுகனும் ஒரு முடிவிலாப் பேருருவன் என்று கண்டான். அவ்வுடலில் ஒவ்வொரு அணுவும் தானே என்று அறிந்தான்.
பித்தெழுந்து வெறிகொண்டு வியாசவனத்தின் காட்டில் நின்றிருந்த அரசமரத்தின் தடியில் தன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்தான். நெஞ்சில் அறைந்து விலங்கென வீறிட்டபடி விண்ணில் ஒளிர்ந்த அத்தனி விண்மீனை நோக்கினான். குருதி நெற்றியில் வழிந்து நோக்கை மறைக்க விம்மியழுதான்.
பின்னர் தன் விழிநீரை குருதியுடன் துடைத்தெறிந்துவிட்டு தளர்ந்த காலடிகளுடன் நடந்தான். நடக்க நடக்க சொல்லூறி உளம் விம்ம விசைகொண்டான். பின்னிரவின் குளிர்காற்றில் ஆடையும் குழலும் பறக்க ஓடி தன் சிறுகுடிலை அடைந்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். சிற்றகலை ஏற்றி ஏட்டுச்சுவடியை எடுத்து மடிப்பலகைமேல் வைத்து மும்முறை நீவினான். எழுத்தாணி மெல்ல வருடிச் சுழன்று செல்ல எழுதலானான். காலதேவனாகிய யமன் செய்தொழில் மறந்து ஒதுங்க இறப்பழிந்த புவியில் உயிர்கள் படும் பெருந்துயரை. தியானிகன் என்னும் சிறுபுழுவை பிரபாவன் என்னும் சிட்டுக்குருவி சந்தித்த தருணத்தை.