இமைக்கணம் - 27

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என் வினாக்களை உணர்வுகளாகவும் கனவுகளாகவும் பெருநோக்குகளாகவும்தான் தொகுத்துக்கொண்டேன். அவை ஒவ்வொன்றும் சொல்லுக்கரியவை என்பதனால் சொல்பெருக்கினேன். சொற்கள் பெருகுகையில் அவற்றுக்கு ஒழுங்கு தேவையாகிறது. ஒழுங்கு அழகென்றாகிறது. காவிய ஆசிரியனின் தப்பவியலாத் தீயூழ் என்பது அவன் சொல்லணியாக மட்டுமே பார்க்கப்படுவது.”

“அரசித்தேனீயை அதன் சுற்றம் என உணர்வுகளையும் கனவுகளையும் பெருநோக்குகளையும் சொற்கள் மொய்த்திருக்கின்றன. தேன்நிறை அறைகளில் தவம்கொள்கின்றன. சிறகுமுளைத்தெழுகின்றன. ரீங்கரிக்கின்றன. நச்சுக்கொடுக்குகளுடன் காவல் காக்கின்றன. சொல்தொடுத்து அல்ல சொல் விலக்கியே என் வினாவை எழுப்பமுடியும் என இப்போது கண்டுகொண்டேன். இதோ என் வினாவை பசிக்குரல்போல், வலியலறல்போல் நேரடியாக சொல்லாக்கிக்கொள்கிறேன்” என்றார் வியாசர் .

“இங்கு உயிர்க்குலங்கள் பிறக்கின்றன, போராடுகின்றன, பிறப்பித்துப் பெருக்கிய பின் மடிகின்றன. இதன் பொருள் என்ன?” தலையசைத்து முகத்தசைகள் இறுக “ஆம், இவ்வாறு எளிமையாகக் கேட்டாலொழிய இதற்கு விடை தேடமுடியாது. இதை கேட்கும் எவரும் ஆம், இதுவே என் வினா என்று சொல்லவேண்டும். இவ்வினாவின் முன் எந்த இலக்கியமும் தத்துவமும் மெய்யுரையும் அணிகொண்டு நின்றிருக்க முடியாது. இதற்கான விடையும் இவ்வாறே எளிமையாக அமையவேண்டும், உணவுபோல, உழுபடைபோல, வாள்போல வெளிப்படையாக, பிறிதொன்றிலாததாக” என்றார்.

இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அவரை மலர்ந்த விழிகளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தார். வியாசர் மேலும் சொல்வார் என அவர் அறிந்திருந்தார். வியாசர் இளைய யாதவரின் விழிகளை நோக்கியதும் சீண்டப்பட்டு சினம்கொண்டார். “நீர் என்னிடம் மெய்யை மட்டுமே உரைக்கமுடியும். அரசன் என்றோ, கவிஞன் என்றோ, அறிஞன் என்றோ, மெய்யுசாவி என்றோ அல்ல தெய்வமென்று நின்று கூறுக! உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன? மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா? இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது? யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா?”

“அனைத்து விடைகளையும் நீங்களே அறிந்திருப்பீர்கள், வியாசரே” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அறிவேன். சொற்கடல்அலை நான். என்னில் இல்லாத எண்ணமே இல்லை. யாதவரே, அவற்றின் மெய்யான பெறுமதி என்னவென்றும் நான் அறிவேன். இறப்புக்கு மாற்றில்லை என்று அறிந்த பின்னர் நோய்க்கு மருந்து அளிக்கும் மருத்துவன் நான்” என்றார் வியாசர். “செவிகொள்வீர் என்றால் சொல்கிறேன். நான் கேட்ட வினாவுடன் ஒவ்வொருநாளும் என் நூலை அணுகுகிறார்கள் மானுடர். விடைகளை அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் ஒப்ப நான் அளிக்கிறேன். ஒவ்வொரு துயருக்கும் தவிப்புக்கும் தனிமைக்கும் அதற்குரிய வகையில் வகுக்கிறேன்.”

“ஒன்றை மறுப்பவர் பிறிதொன்றை கொள்வார், ஒன்றை மறுப்பதனாலேயே பிறிதொன்றை ஏற்றாகவேண்டும் என அவர் உளப்பழக்கம் கொண்டிருப்பதனால். சிலவற்றை மறுத்தமையாலேயே சரியானதை ஏற்கும் நுண்மை தன்னிடம் உள்ளது என எண்ணிக்கொள்வார். தான் மறுத்தவற்றை ஏற்றுக்கொண்டவர்களைவிட தான் மேலென்றும் ஆகவே ஏற்றது தானறிந்த உண்மை என்றும் கருதிக்கொள்வார். அதன்பொருட்டு பிறருடன் சொல்லாடுவதன் வழியாக அனைத்து ஐயங்களுக்கும் விடைகண்டு அதை தனக்கென உறுதி செய்துகொள்வார். அறிவுக்கான விழைவை அறிகிறேன் என்னும் ஆணவம் ஓர் அடி முந்திச் செல்கிறது, விடையை தான் பற்றிக்கொள்கிறது.”

“அனைத்துக்கும் மேலாக ஒன்றை ஏற்று தன் துயரிலிருந்து மீளவேண்டும் என முன்னரே முடிவுசெய்த பின்னரே என்னிடம் வருகிறார். எளிதில் கிடைப்பது தூண்டில் புழு என எண்ணும் மீன் இது. எளிதில் ஏற்கலாகாதென்னும் அவருடைய ஆணவத்தின்பொருட்டு அணிகளில் மறைத்து, ஆயிரம் முறை மறுத்து, ஊடுசுழற்பாதைகளுக்கு அப்பால் அதை சமைத்து வைத்திருக்கிறேன்.”

“தேடிவந்து கொள்பவர் இவ்விடைகளினூடாக துயர் நீப்பார், இந்தப் புணை பற்றி நீந்தி உலகியலை கடப்பார். எவரையும்போல் இயற்றி ஓய்ந்து மடிவார். காலத் துயரும் கருத்துத் துயரும் கோடியில் சிலருக்கே உரியவை. அவர்கள் உள்ளிருக்கும் அறியாத் துளியை அறிந்து, நோற்று, பெருக்கி, சூழப்பரப்பி அதில் திளைப்பவர். தேடி, எழுந்து, கடந்து கண்டடைபவர். பிறர் வாழ்க்கை நிகழ்வதன் அலைகளால் அறியாமல் அவற்றின் நுனியை தொடநேர்ந்தவர். தெய்வத் துயரால் அறைபட்டு சித்தம் சிதறி பெருவினாக்களைச் சென்று முட்டியவர்கள்.”

“அவர்களுக்குத் தேவை விடை அல்ல. அவ்வினாவிலிருந்து திசைதிருப்பி கொண்டுசெல்லும் சொற்கள். மீண்டும் அவர்களின் உலகியல் அலைகளுக்கே சென்றமையச் செய்யும் ஆற்றுப்படுத்தல். நான் அளிப்பது அதையே” என்று வியாசர் சொன்னார். “பல்லாயிரம் பூக்களில் சிலவே காய்க்கின்றன. அவற்றில் சிலவே கனிகின்றன. அவற்றில் சிலவே விதைமுளைக்கச் செய்கின்றன. மலர்கள் வண்ணமும் இனிமையும் நறுமணமும் கொண்டு இங்கே அழகு நிறைக்கின்றன, அனைத்தையும் இனிதெனக் காட்டுகின்றன. கவிதை என்பது மலர்.”

“நன்கு மலர்ந்த நான்கு விடைகள் என்னிடம் உள்ளன” என்றார் வியாசர். “இது ஒரு தேர்வுக்களம் என்பது முதல் எளிய விடை. எங்கோ தந்தையே ஆசிரியரென அமைந்து நம்மை மதிப்பிடுகிறார். நன்று செய்க, நலம் கொள்க. தீதியற்றுக, துயர் பெறுக. இன்று பெறுவது நேற்று இழைத்தவற்றின் நிகரி. இன்று ஈட்டுவது நாளைக்கென உடன் வரும். பிறவிச்சுழலின் ஒரு களம் இவ்வாழ்க்கை. பிறந்து பிறந்து முதிர்ந்து சென்றடைவது முழுமை. இலக்கு அது. வீடுபேறென்பது பிறப்பொழிதல். முன்வினை நிகழ்வினை வருவினையின் முச்சுழற்சியால் ஆனது வாழ்க்கை. துயர் வருகையில் கடன் தீர்ந்ததென்று கொள்க. இன்பம் நிகழ்கையில் ஈட்டியதைப் பெற்றோம் என்று நிறைக. நன்றுசெய்து தீதுநீக்கி நல்வாழ்வு பெறுக. தீதும் நன்றும் பிறர் தர வாரா.”

“இது ஒரு சுழல் என்பது இரண்டாவது விடை” என்று வியாசர் தொடர்ந்தார். “ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர் வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”

“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.”

“இங்கு நிகழ்வன அனைத்தும் அறிதல்களே என்பது மூன்றாவது விடை” என்றார் வியாசர். “துயரும் மகிழ்வும், இழப்பும் பெறுகையும், கசப்பும் இனிப்பும் அறிதல்கள் மட்டுமே. அறிபவனுக்கு அறிபடுபொருள் அனைத்தும் நிகரே. அறிவை அளிப்பதனால் நிகழ்வன அனைத்தும் நன்று. அனைத்தும் அறிவாவதை உணர்ந்தவன் ஏற்றலும் விலக்கலும் என வாழ்வைப் பகுத்து இடருறுவதில்லை. கசக்கும் அருமருந்துகள் உண்டு. இனிக்கும் நஞ்சுகளும் உண்டு. இருமையகற்றியவன் இவ்வாழ்வை அவ்வண்ணமே ஏற்கும் நடுநிலை கொள்கிறான். அறிந்தறிந்து முதிர்வதே வாழ்க்கை. முற்றறிந்து நிறைவதே வீடுபேறு. முழுதறிந்த பின் நோக்குபவன் சிற்றறிவுகள் அனைத்தும் முழுதறிவின் படிநிலைகளே என்று உணர்வான்.”

“நான்காவது விடை இவையனைத்தும் கனவே என்பது. கனவின் துயர்களும் அச்சங்களும் அலைக்கழிவுகளும் விழித்தெழுந்ததும் பொருளிழந்துவிடுகின்றன. கனவில் பெற்றவை அனைத்தும் இல்லையென்றாகின்றன. ஆனால் நனவிலிருந்தே கனவுகள் எழுகின்றன. நனவின் ஒலிகளே கனவில் பொருள்மாறு கொண்டு துயரும் மகிழ்வுமென நிகழ்கின்றன. கனவினூடாக நனவின் மெய்மையை அறிக. விழித்தெழுதலே விடுதலை” என்றார் வியாசர்.

“யாதவரே, உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. இந்நான்குக்குமேல் சென்று எவரும் கேட்பதில்லை. இந்நான்கும் நால்வகை அறிவின் வழிகள். ஒருவன் முற்றிலும் பின்திரும்பி நின்று அறிவின்மையால் என் வாழ்வுக்கென்ன பொருள் என்று கேட்பான் என்றால் அவனிடம் சொல்ல என்னிடம் விடை ஏதுமில்லை. நான் கேட்பது நான்கென சொல்திரளாதவனின் அக்கேள்வியையே. சொல்க, இங்கு வாழ்வு நிகழ்வது எதனால்?” என்று வியாசர் கேட்டார்.

இளைய யாதவர் “வியாசரே, துறவியிடமன்றி மெய்மை உரைக்கப்படலாகாது” என்றார். “யோகமே துறவெனப்படும். அனலோம்பாதவனும் சடங்குகளைச் செய்யாதவனும் துறவி அல்ல. தன் கொள்கைகளை துறத்தலே துறவை யோகமென்றாக்குகிறது. கற்பவன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும். நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து. தன்னை இழிவுறுத்திக்கொள்பவன் கவிழ்த்தப்பட்ட கலம் கொண்டவன். தன்னை தான் வெல்லாதவன். தன்னை தனக்கே பகைவனாக்கிக் கொண்டவன்” என்றார்.

இருவகை அறிதல்களினூடாக மானுட உள்ளம் பின்னிச் செல்கிறது. இவ்வுலகில் நலம்பெறும் முறையை அறிதல் சாங்கியம். இவ்வுலகு என்னவென்று அறிதல் விஞ்ஞானம். இவையனைத்தையும் முழுமையில் அறிதல் ஞானம். விஞ்ஞானமும் ஞானமும் ஒன்றுபிறிதை விலக்கா நிலையே யோகம். ஞானம் விஞ்ஞானத்திற்கு மறுமொழியென்றாகவேண்டும். விஞ்ஞானம் ஞானம்நோக்கி கொண்டுசெல்லவேண்டும்.

வாள்முனை நடையே யோகிக்குரியது. விழிப்போனும் துயில்வோனும் உண்மையை காண்பதில்லை. உண்போனும் நோற்போனும் மெய்யை சுவைப்பதில்லை. அகன்றோனும் உழல்வோனும் அதை உணர்வதில்லை.

அசைவிலாச் சுடரால் படித்தறிக. நிலைகொண்ட உள்ளத்தால் வாழ்ந்தறிக. இவையனைத்திலும் இறையுறைகிறது. எங்கும் அதை காண்கிறவன் அனைத்தையும் அதில் காண்கிறான். அவனுக்கு அது அழிவற்றது. அதற்கு அவன் அழிவற்றவன்.

முதலாசிரியரே, நீங்கள் முன்னர் கூறிய நால்வகை விளக்கங்களும் பொய்களல்ல, அவை நால்வகை உண்மைகள். நான்கு நிலைகளில் நிற்பவர்களுக்கு மெய்யமைவு அவ்வண்ணம் வெளிப்படுகிறது. யார் எவ்வடிவில் எண்ணுகிறார்களோ அவ்வகையில் அவர்களுக்கு தோற்றமளிப்பது அது. தன் பேரளியால் அது திரிபுறவும் குறைவுறவும்கூடும். தன் ஆடலால் உருவுறவும் உறவாடவும்கூடும். மைந்தரின் சிறுகைகளுக்கு ஏற்ப சிறுதேர் செய்து அளிக்கிறான் பெருந்தச்சன்.

அதன் வடிவங்கள் முடிவிலாதவை. துன்பம்கொள்பவருக்கு அன்பென. ஒடுக்கப்பட்டோருக்கு அறம் என. தனியருக்கு துணை என. வெறுமையிலமர்ந்தோருக்கு விழுப்பொருள் என. எதுவும் அது அல்லாதது அல்ல. அறிவு மட்டுமல்ல அறியாமையும் அதுவே. தெளிவும் மயக்கமும் அதுவே.

உங்கள் வினாக்கள் விடைகளை வாங்கும் கலங்கள். அறிவோனால் வகுக்கப்படாத விடை அறியப்படுவதில்லை. முதல் முழுமையெனும் விடை இன்மையெனும் பெருங்கலத்திலேயே இறங்கியமைய இயலும்.

நான்கு விடைகளை சொன்னீர்கள். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள்.

மானுடர் கேட்பதில்லை, கோருகிறார்கள். கோரும் வடிவில் பெறுகிறார்கள். தன் அளியின்மையால் அது முழுமையை மறைத்துக்கொள்ளவில்லை. இங்கு வாழும் உயிர்களின் மீதான பேரளியாலேயே கரந்துறைகிறது. அறிந்தமையாலேயே அளந்து அளிக்கிறது. அருள்வதனால் அளித்தவற்றில் நிறைகிறது.

வியாசரே, நீங்கள் கவிஞர். ஒருபுறம் எளியோனாய் உலகாடி, மறுபுறம் ஞானியென மெய்நாடி, இரண்டுக்கும் நடுவே உழல்பவர். நலம்பயக்கும், மகிழ்வளிக்கும், காக்கும், புரக்கும் ஒன்றை மண்ணில் நின்று விழைகிறீர்கள். இரண்டற்ற ஒன்றை நோக்கி ஞானத்தால் எழுகிறீர்கள்.

இன்மையின் கலமேந்தி நின்றால் அறிவீர்கள். அது நலம்பயப்பதல்ல. அளிகொண்டதல்ல. அழகும் ஒழுங்கும் இசைவும் அதில் இல்லை. அது உண்மை அல்ல. உள்கடந்த ஒருமை அல்ல. அது மானுடர் எண்ணும் எவ்வியல்பையும் தான் கொண்டது அல்ல. இன்மையென விரியும் யோகியின் உள்ளத்தில் இன்மையென எழுவது. இன்மையின்மேல் மட்டுமே முடிவிலா இயல்புகளை ஏற்றமுடியும்.

பல்லாயிரம்கோடியினரில் ஒருவரே அதை அறிய முயல்கிறார்கள். பிறர் அதை விடையெனக் கொண்டு வாழ்ந்து கடக்க விழைபவர்கள் மட்டுமே. முயல்பவர்களில் மிகச் சிலரே அதை முழுதுணர்கிறார்கள்.

உயிர்க்குலங்களை படைத்தாளும் பெருநெறி என்று கொண்டால் தொழுவீர் எனில் அதை அறியமாட்டீர். உயிர்க்குலங்களை கொன்று களியாடும் கட்டின்மை என்று கொண்டால் அஞ்சுவீர் எனில் அதை அறியமாட்டீர். ஒளியென்று வணங்குவீரென்றால் இருளென்று விலக்குவீரென்றால் அதை அறியவேமாட்டீர். விழிநீருக்கு இரங்கும் என்றும் விளித்தால் அணுகும் என்றும் எண்ணுவீரென்றால் அதுவல்ல உங்களுக்குரியது.

விழிதிறந்துவிட்டீர் என்பதனால் காண்க. உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம்.

உங்களை அது அறியாதென்றே கொள்க. உங்கள் இருப்பு அதற்கு ஒரு பொருட்டில்லை என்றே கொள்க. உங்களுக்கு இரங்குவதோ உங்களை அணுகுவதோ அல்ல என்றே கொள்க. உங்களால் அறியப்பட இயலாததென்றே கொள்க. அவ்வெறுமையை எதிர்நிலையென கொள்ளாதிருக்க பழகுக. வெறுமை இயல்பென அமைதலே இன்மை. இன்மையே அறிவோன் ஏந்தவேண்டிய கலம்.

அங்குளது பிறிதொன்று. இங்குள எதனாலும் விளக்கப்படாதது. ஆகவே இங்குள எதற்கும் விடையல்லாதது. இங்குள அனைத்திலிருந்தும் அகன்றாலொழிய அணுகவொண்ணாதது. அதுவே இங்குள அனைத்துமென்றாகி சூழ்ந்துள்ளது. மறைவும் வெளிப்பாடும் கொண்டது அது என்பதே மெய்மயக்கம்.

பருவென, பொருளென இங்குள்ள அனைத்துமே நூலில் மணிகள் என அதன்மேல் கோக்கப்பட்டவை. அனைத்துக்கும் பொருளென்றமைவது ஒன்றே. அதை அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார். இயல்பற்றது மூவியல்பால் இயக்கம்கொண்டு தன் முழுமையை மறைத்தாடுகிறது. அதன் மாயை கடத்தற்கரியது.

பிறந்திறந்து பெருகிச்செல்லும் இவ்வொழுக்கின் பொருளே புடவியென்றாகி சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு கணத்திலும் விளங்காத பொருள் என்று ஒன்று காலமுடிவிலியில் இல்லை. ஒவ்வொரு பருவிலும் திகழாத பொருள் என்று ஒன்று கடுவெளியில் இல்லை.

பிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை. தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை. முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை. இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.

wild-west-clipart-rodeo-31வியாசர் இளைய யாதவரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். பின்னர் “யாதவரே, நீர் சொல்லும் அழகிய சொற்களால் நிறைந்தேன். இக்கணம் நான் தேடியதற்கு விடைபெற்றேனா என்று கேட்டால் ஆமென்றே உரைப்பேன். ஆனால் நான் சொல்லிலாடும் புலவன். அதனாலேயே அது நாற்களத்தில் உருளும் நாலாயிரம் முகம்கொண்ட பகடை என்று அறிந்தவன். இங்கிருந்து எழுந்து சென்றால் அடிக்கொரு சொல் என தடம் திரும்பி அமைய ஐயத்தால் நிறைந்தவனாவேன். நான் தேடுவது ஓர் உறுதிப்பாட்டை. என் கையால் சித்தத்தால் தொட்டறியும் மெய்யின் ஒரு தடத்தை” என்றார்.

“நீங்கள் எண்ணுவதென்ன என்று சொல்க”! என்றார் இளைய யாதவர். “நான் என் மைந்தனை பார்க்க விழைகிறேன். விண்ணில் மீன் என நின்றிருக்கும் சுகனிடம் நீ அங்கு நிறைவடைந்தாயா என்று கேட்கவேண்டும். அது இயலாததென்று அறிவேன். ஆனால் உம்மால் இயலாதது ஒன்றில்லை என்றும் அறிவேன்” என்றார் வியாசர் . “ஆம், என்னால் இயலும்” என்றபடி இளைய யாதவர் எழுந்துகொண்டார். “வருக!” என்று நடந்தார். தன் மேலாடையை எடுத்திட்டுக்கொண்டு முதிய எலும்புகள் ஒலிக்க மெல்ல எழுந்து வியாசர் அவரை தொடர்ந்து சென்றார்.

அவர்கள் வெளியே முற்றத்தில் இறங்கி காட்டினூடாகச் சென்றனர். யாதவரின் காலடியோசையை இருள் ஒலித்து பெருக்கி சூழச் செய்தது. இளங்காற்றில் இருளுக்குள் நிழல்குவைகளென மரங்கள் அசைந்தன. ஒற்றையடிப்பாதை கரிய காட்டுக்குள் கம்பளியை தைத்த மரவுரிச் சரடென ஊடுருவிச் சென்றது. இலைகளுக்கு அப்பால் ஓர் இரும்புக் கேடயம் கிடப்பதை வியாசர் கண்டார். மேலும் அணுகியபோது அது ஒரு சிறு ஊற்று என தெரிந்தது. அசைவற்றிருந்தது வானொளி பரவிய நீர்ப்பரப்பு.

அதனருகே சென்று நின்று இளைய யாதவர் திரும்பி நோக்கினார். “பிதாமகரே, இச்சுனைக்கு சூக்ஷ்மம் என்று பெயர். இது உண்மையில் சுனை அல்ல. விண்ணுக்குச் செல்லும் கரவுப்பாதைகளில் ஒன்று. இதில் தேங்கியிருப்பது இருள் துளித்த நீர். வருக!” என்றார். வியாசர் சென்று அவர் அருகே நின்றார். “நோக்குக!” என்றார் இளைய யாதவர். குனிந்து நோக்கிய வியாசர் நீரின் ஆழத்தில் மின்னிய ஒரு விண்மீனை கண்டார். அருமணி ஒன்று நகையிலிருந்து உதிர்ந்து அடித்தட்டில் கிடப்பதுபோலிருந்தது. “பிதாமகரே, அந்த விண்மீன் உங்கள் மைந்தர் சுகர்” என்றார் இளைய யாதவர்.

நெஞ்சதிர கூர்ந்து நோக்கிய வியாசரின் தலை நடுக்கு கொண்டது. கைகள் அறியாது நெஞ்சில் படிந்தன. மூச்சொலி மட்டும் எழ அவர் விழிகளில் உள்ளத்தை நிறுத்தியிருந்தார். “நீங்கள் விழைந்தால் அவரிடம் சென்று சேரலாம்” என்றார் இளைய யாதவர். “இச்சிறு சுனையினூடாகவா?” என்றார் வியாசர். “ஆம், இறங்குக!” என்றார் இளைய யாதவர். வியாசர் குனிந்து அந்நீரை தொட்டார். அனல்சுட்டதோ என கை திடுக்கிட்டு விலகிய பின்னரே அது குளிர் என்று உணர்ந்தார். ஒருகணம் தயங்கிவிட்டு தன் வலக்காலை எடுத்து நீரில் வைத்தார்.

குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த தோள்களை ஒடுக்கியபடி இடக்காலையும் தூக்கி நீருள் வைத்தார். மெல்ல உள்ளே சென்றபோது ஆழத்தில் இறங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தார். ஆழமல்ல, தன் உடல் அந்நீரில் கரைந்தழிவதுதான் அது என்று எண்ணினார். கழுத்தளவு இறங்கி தலைமூழ்கி நீருள் புகுந்தார். அடியிலா ஆழத்துக்குள் விழுந்து அந்த ஒற்றை விண்மீனை நோக்கி பறந்து சென்றுகொண்டிருந்தார்.