இமைக்கணம் - 25

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்தில் கிருஷ்ண துவைபாயன வியாசர் இளைய யாதவரிடம் சொன்னார் “யாதவரே, நான் வியாசவனத்தில் இருந்து கிளம்பும்போது தாளவொண்ணா ஆற்றாமையுடன் வந்தேன். வெறுமையும் கசப்பும் என்னில் நிறைந்திருந்தன. இங்கு வந்து உங்களைப் பார்த்த முதற்கணமே அவையிரண்டும் அகன்றன. ஏனென்றால் நீர் நான் புனைந்த கதைத்தலைவன். எத்தனை துயரடைந்தாலும், எவ்வளவு வெறுமையில் திளைத்தாலும் பிறர்போல் பொருளின்மையை நான் அடைவதில்லை. என் விழுப்பொருளாக நான் படைத்தவை நின்றிருக்கும்.”

“உங்களை கால்தலை என நோக்க நோக்க நான் நான் என்று என் உள்ளம் விம்மியது. ஏனென்றால் கவிஞன் புனையும் அனைத்துக் கதைமாந்தரும் அவனே. கதைத்தலைவனிலோ அவன் பேருருக்கொண்டு எழுகிறான். நான் இப்புவியின் மாந்தரை விண்ணவன் என குனிந்து பார்க்கிறேன். அவர்கள் மூவூழையும் அறிகிறேன். அவர்கள்மேல் கனிவுகொண்டிருக்கிறேன். அறிந்தவன் என்பதனால் அளி கொள்வதில்லை, மெல்லிய புன்னகையையே அணிந்துகொள்கிறேன்” என்றார் வியாசர்.

இளைய யாதவர் “ஆம், தத்துவத்தின் முழுமைநோக்கையே காவிய ஆசிரியனும் வந்தடைகிறான். தத்துவஞானி சென்றடையும் வெறுமை காவிய ஆசிரியனுக்கில்லை. எழுந்தும் அமைந்தும் ஒவ்வொன்றும் முற்றிலும் நிகர்செய்து இன்மையென்றாகும் வெளி தத்துவஞானிக்கு அமைகிறது. அங்கே கையிலொரு அழகிய மலருடன் அமர்ந்திருக்கும் நல்லூழ் காவிய ஆசிரியனுக்கு அருளப்பட்டுள்ளது” என்றார். வியாசர் முகம் விரிய புன்னகைத்து “மெய், யாதவரே. என் தலைமேல் நான் சூடும் ஒளிமலர் நீர். என் ஆழிஏழில் இதழாயிரமலர்” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார்.

“துயர் நீங்கியதென்றாலும் என் வினா அவ்வண்ணமே உள்ளது. துயர் நீங்கும்போது தத்துவக்கேள்விகள் மாசகன்று மேலும் கூர்கொள்கின்றன” என்றார் வியாசர். “கேளுங்கள், ஆசிரியரே” என்றார் இளைய யாதவர். “யாதவரே, நான் நீடூழிவாழ என காலத்தில் நிறுத்தப்பட்டுள்ளேன். அதன்பொருள் எனக்கு வீடுபேறில்லை என்பதே. நான் இவ்வுலகை நீத்து எழப்போவதில்லை. என் துயரும் அலைக்கழிப்பும் என்றென்றுமென நீடிக்கும். ஒருபோதும் எனக்கு முழுமை நிகழாது” என்றார் வியாசர். “ஆம்” என்றார் இளைய யாதவர். வியாசர் சீற்றத்துடன் “நான் எவ்வகையில் கீழோன்? வேதம் முற்றுணர்ந்தவன். வாழ்வே தவமெனக் கொண்டவன். மூன்று முதற்தெய்வங்களையும் சொல்லெடுத்து ஏவி என் முன் தோன்றச் செய்யும் ஆற்றல்கொண்டவன். என்னை முனிவரில் முதல்வன் என்கின்றன நூல்கள். வீடுபேறுக்கு மட்டும் நான் ஏன் தகுதிகொள்ளவில்லை?” என்றார்.

“ஏனென்றால் நீர் கவிஞர்” என்றார் இளைய யாதவர். “கவிஞனுக்கு வீடுபேறில்லை.” வியாசர் அந்த நேரடிக்கூற்றில் சொல்லிழந்து வெறுமனே நோக்கினார். அந்த கணப்பெருக்கில் அவர் உள்ளம் நூறுநூறு கவிஞர்களை தொட்டுத்தொட்டு மீண்டது. பெருமூச்சுடன் தோள்தளர்ந்த பின் “ஆம்” என்றார். பின்னர் இளைய யாதவரை நோக்கி “ஏன்?” என்றார். “ஏனென்றால் அவர்களின் கவிதை மண்ணுலகு சார்ந்தது. ஒருபோதும் இங்கிருந்து அது முற்றகல முடியாது. விண்ணனைத்தையும் மண்ணைக்கொண்டு விளக்கும் முயற்சியே கவிதை. ககனவடிவான பரையை பஸ்யந்தி என்னும் கனவுமொழியாக்குகிறீர்கள். பொருளேற்றி மத்யமை எனச் சமைக்கிறீர்கள். ஏட்டிலும் பாட்டிலும் அமைத்து வைகரி ஆக்குகிறீர்கள். கவிதை என்பது மழை. விண் குளிர்ந்து மண்ணில் வீழ்வது. உயிரும் அமுதும் ஆவது” என்றார் இளைய யாதவர்.

“தன் கவிதையிலிருந்து கவிஞனுக்கு விடுதலை இல்லை, ஆசிரியரே. அவ்வாறு விடுவிக்கப்படுவானென்றால் அதுவே அவன் அடையும் துயரப்பாழ். தாங்கள் மட்டுமல்ல, பெருங்கவிஞர்கள் அனைவருமே நீடுவாழிகளே. அவர்களின் நற்கொடையும் தீயூழும் கவிதையே” என்றார் இளைய யாதவர். “என் கவிதை உலகியலில் நின்று எவரையும் மீட்காதென்கிறீர்களா?” என்றார் வியாசர். “உலகப்பொருட்களை அள்ளி ஒன்றன்மீது ஒன்றெனக் குவித்து விண்நோக்கி சமைக்கப்பட்ட படிக்கட்டு உங்கள் காவியம். அது இங்குதான் இருக்கும். ஏறிக் கடப்பவர்கள் யுகந்தோறும் பிறந்து வந்தணைவார்கள்” என்றார் இளைய யாதவர்.

“ஆம்” என வியாசர் தலையசைந்த்தார். “அது மெய் என உள்ளம் சொல்கிறது. ஆனால் அதை ஏற்க அகம் தயங்குகிறது. யாதவரே, அனைத்துத் தவங்களும் வீடுபேறெனும் முழுமையை நோக்கியே செல்கின்றன. துயர்களும் தத்தளிப்புகளும் தனிமையும் எய்தப்படும் வீடுபேறால்தான் பொருள்படுகின்றன. அந்த இலக்கில்லையேல் என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் வீண் அல்லவா? என் சொற்கள் எனக்குப் பொருளற்றவை அல்லவா?”

இளைய யாதவர் “அதை நீங்கள் உங்கள் விருப்பத்தெய்வத்திடம் கோரலாம், ஆசிரியரே” என்றார். அருகிலிருந்த ஒரு சிறு கூழாங்கல்லை எடுத்து தன் முன் வைத்தார். “இக்கல்லை உயிர்ப்பதிட்டை செய்து நிறுவியிருக்கிறேன். இதை உபாசனை செய்க! உங்களுக்கு உகந்த வடிவை இதில் எழுப்புக!” என்றார். வியாசரின் முகம் மாறியது. ஊழ்கநிலை கொண்டு சரிந்த இமைகளுடன் அதை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் கைகூப்பியபடி “சொல்மகள்” என்றார். “என்னை கட்டிவைத்திருக்கும் பாசம். கணம்தோறும் கொத்திப்பிடுங்கும் அங்குசம்” என முணுமுணுத்தார். காற்றில் என வடச்சுருளும் கொக்கிப்படையும் கண்முன் தோன்றின.

“என் சொல்லென்றாகும் அம்புவில். அறிவிலியர் சொல்லை என் மீதிருந்து விலக்கும் கேடயம்” என்றார் வியாசர். அவை தோன்றி ஒளிகொண்டன. “என் சித்தத்தில் அதிர்ந்து வான்காட்டும் மின்படை. என் கனவுகளில் மலரும் தாமரை” என்றார் வியாசர். “தேவி, அஞ்சல் அருளல் என மலர்ந்த உன் கைகள்.” தன்முன் எழுந்த அவ்வடிவை நோக்கி இளங்காதலன் என முகம்மலர்ந்து “உன் கனிந்த விழிகள். சுடர்கொண்ட முகம்” என்றார். மதலை என குழைந்து “உன் எழுமுலைகள். மென்மடி” என்றார். தலைவணங்கி அடிமையெனப் பணிந்து “வேதம் சிலம்பென்றமைந்த உன் கால்கள். தேவி, மெய்மை புன்னகைக்கும் உன் அணிநகங்கள்” என்றார்.

முழுமைகொண்டு எழுந்து நின்றிருந்த கலைதேவியிடம் வியாசர் கேட்டார் “தேவி, உன்னை ஒவ்வொரு சொல்லாலும் வாழ்த்துபவன் நான். எனக்கு நீ வீடுபேறு அருள இயலாதா? இப்புவியின் மாயங்களில் அலைக்கழிந்து முடிவிலி வரை வாழ்வதா என் ஊழ்?” கலைமகள் விழிகனிந்து புன்னகைத்து “நீ என் மைந்தரில் முதல்வன். உன் நாதொட்டு எஞ்சிய சொற்களே இனி பிற கவிஞர் நவில்வதனைத்தும். வேதப்பசுவின் பால்கறந்து நெய்யென்றாக்கும் இடையன் நீ. உன் சொல்லில் எழுந்த மெய்மையால் வானடைந்தோர் ஏராளம். இனிவரும் தலைமுறைகள் அனைத்துக்கும் நீ ஒரு விண்திறந்த பெருவாயில். மைந்தா, நீ விழைவது எதையும் என்னால் அருள முடியும்” என்றாள்.

“அவ்வண்ணமெனில் எனக்கு இக்கணமே வீடுபேறு அருள்க!” என்றார் வியாசர். “நன்று, நீ வீடுபேறென்றால் என்னவென்று அறிந்திருக்கிறாயா?” என்றாள் அன்னை. வியாசர் “ஆம், நான் எழுதியிருக்கிறேன்” என்றார். “எச்சமின்றி ஏகுவதே வீடுபேறு. பற்றிநிற்கும் அனைத்தையும் விடுவது. பற்றுகோடுகள் அனைத்திலிருந்தும் எழுவது. இல்லறத்தோர் உறவை, அரசர்கள் அறத்தை, தவத்தோர் தவத்தை முற்றாகக் கைவிட்டுவிட்டே முழுமைகொள்கிறார்கள். நீ கவிஞன், உன் சொற்களை ஒவ்வொன்றாகக் கைவிடுக. வைகரி அணைந்து மத்யமாவில் சுருங்கி பஸ்யந்தியில் துளியாகி பரையில் உலர்ந்து மறைக. வீடுபேறின் நுழைவாயிலில் அமைந்துள்ளது இன்மை.”

வியாசர் “ஆம்” என்றார். பின்னர் திடுக்கிட்டு “தேவி, அப்படியென்றால் என் காவியங்கள்?” என்றார். “ஒரு சொல்லும் இங்கு எஞ்சாது. எந்த பதிவிலும், எவர் நினைவிலும். விண்ணில் தடம் பதிக்காது சென்றுமறையும் பறவை என்றாவாய்.” வியாசர் “தேவி, அச்சொற்கள்மேல் நான் தவம் செய்திருக்கிறேன்” என்றார். “ஒவ்வொருநாளும் பல்லாயிரம் அருந்தவத்தோர் இங்கு முழுமைகொண்டு விண்செல்கின்றனர். அவர்கள் சொன்னவை என பல்லாயிரம் சொற்கள், அவர்கள் எண்ணியவை என பலகோடிச் சொற்கள் எழுந்து வளர்கின்றன. அவை ஒரு மாத்திரைகூட எஞ்சாமல் மறைகின்றன. அதுவே புடவிநெறி.”

சீற்றத்துடன் “என் சொல் இறந்தபின் நான் வீடுபேறடைந்து என்ன பயன்?” என்றார் வியாசர். “நீ விடுபடுவாய். உன் ஒவ்வொரு சொல்லுக்கான பயனையும் நீ அடைந்தவனாவாய்” என்றாள் கலைமகள். “வேண்டியதில்லை” என வியாசர் கூவினார். “பயனடையும்பொருட்டு ஒரு சொல்லையும் யாத்தவனல்ல நான். கொள்வதற்கல்ல கொடுப்பதற்கே தோன்றினேன். என் ஒவ்வொரு காவியமும் ஒரு வேள்விப் பெருங்கொடை. இப்புவியில் போர்க்களத்தில் அறத்தின் கோலுடன் எழவேண்டும் என் நூல். வயலில் மேழியாக, ஆயர்நிலைகளில் வேய்குழலாக, அங்காடிகளில் பொன்னாக அது நிறையவேண்டும். பயணிகளில் வழித்துணையாக, பாணரில் இசையாக, கூத்தரில் நாடகமாக விளங்கவேண்டும். தாலாட்டாக அன்னைநாவில் ஒலிக்கவேண்டும். இறுதி வாய்நீருடன் மைந்தர் நாவில் எழவேண்டும். அதுவே என் வாழ்வின் பொருள்.”

“ஆம், நீ அதையே சொல்வாய். மைந்தா, கவிஞனே புவிநிகழ்வோரில் முதன்மை வள்ளல் என்றறிகர். ஈட்டியவற்றை அளிப்போர் பிறர். தன்னுள் எழுவதை அளிப்பவன் கவிஞன். விழிநீரையும் குருதியையும் மூச்சையும் சித்தத்தையும் ஈபவன். தன் மீட்பையும் முழுமையையும் கூட கொடையளிப்பவனே பெருங்கவிஞன். பொன்பெருகிய கருவூலங்களைக் கையளித்துவிட்டு அன்னமும் ஆடையும் இன்றி அமர்ந்திருப்பவன்.” வியாசர் விழிகளில் நீர்ப்படலம் பரவ புன்னகையுடன் “ஆம், அதன் இனிமையை அறிந்தவன் நான்” என்றார். கைகூப்பி “தேவி, வீடுபேற்றை நான் வேண்டேன். என்னை அறிந்தே எனக்கு அளிக்கப்பட்டுள்ளது இந்த நல்லூழ்” என்று சொன்னார்.

“சொல் என் அருள். ஒரு சொல்லையேனும் ஒவ்வொருவருக்கும் அருளியிருக்கிறேன். சொல்லுக்கு நிகராக ஒன்றை எடுத்த பின்னரே அளிக்கிறேன். அனைத்தையும் எடுத்துக்கொண்ட பின்னர் சொல்லனைத்தையும் நான் அளிக்க சித்தம் நிறைந்தவரே பெருங்கவிஞர். அவர்களில் நான் மீள மீள நிகழ்கிறேன், அலையாடும் தாமரையில் நதி திகழ்வதுபோல” என்றாள் கலைமகள்.

இவ்வுலகு கலைஞனுக்கு அயலானது. இங்குள்ள ஒவ்வொன்றையும் சொல்லென்று மட்டுமே அறிந்தவன் அவன். இங்கிருக்கும் எதனாலும் அறியப்படாதவன். இதில் உழல்பவன் விடுதலை பெறக்கூடும். இதை உதறி முன்செல்பவனும் விடுதலை பெறக்கூடும். இதிலாடுகையில் இதை விட்டு விலகியிருப்பவன் இந்த நாடகத்தை முற்றறிந்தவன். அவனுக்கு விடுதலை இல்லை. கவிஞன் மண் அளைந்து ஆடும் மகவு. விண்ணில் தெய்வங்கள் அமைத்த ஒவ்வொன்றுக்கும் அவன் இவ்வுலகில் ஒன்றை எடுத்து நிகர்வைக்கிறான். மண்ணில் தெய்வங்கள் நிறுத்தியிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிற்றுருவை எடுத்து மாற்றென்று வைக்கிறான். விண்ணுக்கு ஒரு துணியை. மலைகளுக்கு ஒரு கூழாங்கல்லை. தெய்வத்திற்கு ஒரு மலரை. விண்ணையும் மண்ணையும் கொண்டு விளையாடுகிறான்.

அவன் கைகளில் எழுகின்றன மூன்று தெய்வங்களும். அம்மூன்று முகம் கொண்டு அமைந்த பிரம்மமும். அதன் ஆடலான ஊழும். அதில் மானுடர் ஆடும் நாடகமனைத்தும். மைந்தா, கவிஞன் இங்கேயே தன் சொல்லில் வீடுபேற்றுக்கு நிகரென ஒன்றை வைத்துவிட்டவன். நீ விளையாடிய களங்களை, அங்கு நீ பரப்பிய கருக்களைச் சென்று பார். அதிலமைந்திருக்கும் உன் வீடுபேறு, வேற்றுருக்கொண்டு. பெருமரத்தை விதைவிட்டெழும் முளை வடிவில் பார்ப்பதுபோல. கவிஞனுக்கு பிரம்மம் வீடளிக்க வேண்டியதில்லை, அவன் அடையும் அனைத்தும் அவனாலேயே சமைக்கப்படுகின்றன.

துயர்கொள்கிறான் கவிஞன். பெரும் வதைபட்டு உழல்கிறான். கைவிடப்படுகிறான், பழிக்கப்படுகிறான், தனிமை கொள்கிறான், வழிதவறுகிறான். பெரும்பழிகளைச் சுமக்காத கவிஞன் இல்லை. வஞ்சமில்லாமல் எரிபவன். வஞ்சினங்களைத் தான் சுமப்பவன். அறமீறல்களை, ஆறாப் பிழைகளை ஆற்றுபவன் அவன். ஆனால் அவை அனைத்தும் ஓவியத்திலெழுந்த அனல்போல. அனலேயாயினும் எரிக்காதவை, சுடாதவை. நாடகமேடையின் அருங்கொலைக்காட்சிபோல அவை நிகழ்வனவாயினும் நிகழாதவை. கனவுபோல மெய்ப்பாடுகள் மட்டுமே கொண்டவை.

காலத்தால் வெல்லப்படாததென ஏதுமில்லை இப்புவியில். ஏனென்றால் ஒவ்வொன்றும் காலத்துடன் மோதிக்கொண்டிருக்கின்றன. காலத்தை அள்ளித் தன்னில் நிறைத்து தன்னிலொரு பகுதியே காலமென்றாகி நின்றிருக்கும் பெருங்காவியம் காலத்தை வென்றுசெல்லும். வீழ்ந்த பெருமரத்தில் பல்லாயிரம் முளைகளெழுவதுபோல் உன் உடலில் எழுக ஒரு காவியம்.

நீ அடைவன அனைத்தையும் சொல்லாக்கிவிட்டாய் என்றால் விடுதலை கொள்கிறாய். ஏனென்றால் சொல்பெறும்பொருட்டே அவை உனக்கு நிகழ்கின்றன. உன் முன் சொல்லிரந்து நிற்கின்றன உணர்வுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அறங்களுக்கும் உரிய தெய்வங்கள். அளிக்கையில் நீ முழுமுதல் தெய்வமாகிறாய். ஒவ்வொரு சொல்லும் உனைவிட்டு நீங்கும்போது மலருதிர்ந்து மேலெழும் கிளை என விடுபடுகிறாய். சொல்லூறுகையில் கவிஞன் மானுடன். சொல் ஒழிகையில் அவன் தெய்வம். மண்ணை நோக்கி இமைக்கும் தவமுனிவர்களே விண்மீன்கள். கவிஞன் விண் நோக்கி இமைக்கும் மண்ணின் ஒளி.

“உன் சொல் இங்கு வாழும். காலந்தோறும் அது முளைக்கும். கோடிமுறை கண்டடையப்படும். விரும்பவும் வெறுக்கவும் படுவாய். வாழ்த்தும் வசையும் உன் செவிகளில் கணமொழியாது அலையடிக்கும். துயரிலும் உவகையிலும் ஊசலாடுவாய். இருளுக்கும் ஒளிக்குமென நிலையழிவாய். உன் சொல்லுக்கு அருகே நீயும் என்றுமென நின்றிருப்பாய். மண்ணில் வேரூன்றி கிளைகளில் விண்ணை ஏந்தி நின்றிருக்கும் பெருமரம் நீ. மைந்தா, நீடுவாழிகளால்தான் இப்புவி தாங்கப்படுகிறது.” தேவி மெல்ல ஒளியெனக் கரைந்தழிய வியாசர் விடுபட்டு மீண்டார். அவரை நோக்கிக்கொண்டிருந்த இளைய யாதவரை நோக்கி “ஆம்” என்றார். புன்னகையுடன் “ஆம்” என தனக்குள் சொல்லிக்கொண்டார்.

wild-west-clipart-rodeo-31வியாசர் மலர்ந்த முகத்துடன் “நான் கிளம்புகிறேன் யாதவரே, இனி ஏதும் நான் அறியவேண்டியதில்லை” என்றார். இளைய யாதவர் “நன்று, புவி உள்ளளவும் வாழும் பெருங்கவிஞரென்று உங்களை அறிந்துகொண்டீர்கள். மண்ணில் நிலைத்து விண்ணின் பொன்னொளி சூடி அனைத்தையும் நோக்கி அசைவிலா சான்றென நின்றிருக்கும் இமயம் மட்டுமே உங்களுக்கு நிகர். தேவதாத்மா என உங்கள் இருவரையும் மட்டுமே இனி நூலோர் சொல்வார்கள்” என்றார். “அது என் அன்னையின் அருள்” என்றார் வியாசர்.

வணங்கி திரும்பி நடந்தவர் இயல்பாக படிகளைப் பார்த்தார். “என்ன அது?” என்றார். இளைய யாதவர் கைவிளக்கைத் தாழ்த்தினார். குனிந்து நோக்கிய வியாசர் “குருதி, புதியது” என்றார். “சிம்மம் வந்திருக்கக்கூடுமோ?” என்றபடி முற்றத்தைப் பார்த்தார். இளைய யாதவர் “உங்கள் காலடி அது, ஆசிரியரே” என்றார். “ஆம்” என்று மூச்சொலியில் கூவிய வியாசர் மண்டியிட்டமர்ந்து நோக்கினார். குருதிவடுக்களாக அவருடைய காலடித்தடங்கள் முற்றத்திலிருந்து ஏறிவந்திருந்தன. அவர் தன் கால்களைப் பார்த்தார். அவை செந்நீரில் முக்கி எடுத்தவை போலிருந்தன.

“குருதி!” என்று அவர் கூவினார். பின்னடைந்து சுவரில் முட்டி கதவைப்பற்றியபடி நின்று “என் மைந்தரின் குருதி!” என்றார். அவர் காலடியில் ஒரு சிறுகுழந்தையின் செவியிதழ் கிடந்தது. அப்பால் ஒரு குழந்தையின் விழிக்குமிழி. வியாசர் உடல்நடுங்க “நான் விழுந்துவிடுவேன்… என் கால்கள் தளர்கின்றன” என்றார். “உள்ளே வருக… நீங்கள் இக்காட்டைக் கடந்து செல்லமுடியாது” என்றார் இளைய யாதவர். “இல்லை, நான் உங்கள் அறையை மாசுபடுத்திவிட்டேன்… நான் உள்ளே வரலாகாது” என்றார் வியாசர்.

கைகளைக் கூப்பி மார்பில் வைத்துக்கொண்டு அவர் மெல்ல தளர்ந்து நிலத்தில் அமர்ந்தார். “குருதி… குருதித்தடங்கள்” என்றார். இளைய யாதவர் “உங்கள் பணி அதுவே. குருதிக்களத்திலிருந்து எதிர்காலத்தின் முடிவிலி வரை செல்லும் ஒரு கால்தடம் நீங்கள்” என்றார். “இல்லை… இல்லை” என்றார் வியாசர். “நான் மீண்டு செல்ல விரும்புகிறேன். நான் கவிஞனல்ல தந்தை. ஆம், நான் வெறும் தந்தை மட்டுமே. வேறெதையும் வேண்டேன். என் மைந்தர் மட்டும் வாழ்ந்தால்போதும். என் சொல் அழிக. என் தடங்களனைத்தும் மறைக. என் மைந்தரை இழந்து அடைவதொன்றுமில்லை.”

“உள்ளே வருக, வியாசரே” என இளைய யாதவர் அழைத்தார். “உங்களுக்கு அருளும் பிறிதொரு தெய்வத்தை நீங்கள் அழைக்கலாம். கோரியதை அடையலாம்.” “ஆம், அதுதான் நான் செய்யவேண்டியது…” என்றபடி சுவரைப்பற்றிக்கொண்டு வியாசர் எழுந்தார். அறைக்குள் சில அடிகள் வைத்ததுமே மீண்டும் கால்தளர்ந்து அமர்ந்தார். இளைய யாதவர் அந்தச் சிறுகூழாங்கல்லைக் கொண்டுவந்து அவர் முன் வைத்தார். “இதை உங்கள் அணுக்கத்தெய்வமொன்றென எண்ணுக. கல்லில் பூத்தெழுபவை தெய்வங்கள்” என்றார்.

வியாசர் அக்கல்லை நோக்கிச் சில கணங்கள் அமர்ந்திருந்தார். பின்னர் “திருமகள்!” என்றார். “இப்புவியிலுள்ள அனைத்தையும் அருளும் தேவி” என்றார். “உங்கள் கவியுள்ளம் கொண்ட வடிவில்” என்றார் இளைய யாதவர். “எட்டு உருக்களில் எனக்குரியவள் சந்தானலட்சுமி” என்றார். விழிகளால் காற்றைத் துழாவியபடி “என் நெஞ்சில் நிறைந்த அமுதைக் கலத்தில் ஏந்தியவள். என் கனவுபூக்கும் தாமரை கொண்டவள். பொன்மழை தூவும் ஒரு கை. கதிர்க்குலை சூடிய மறுகை. அஞ்சல் அருளல் என அமைந்த மலர்க்கை கொண்டவள். நோக்குமிடம் பொலியும் விழிகள். தொட்ட இடம் செழிக்கும் கால்கள். அன்னை எழுக!” என்றார்.

அவர் முன் தோன்றிய திருமகளிடம் “அன்னையே, என் மைந்தர் நலம்பெறவேண்டும். மண்ணில் மானுடர் அடையும் அனைத்து உச்சங்களையும் அவர்கள் பெறவேண்டும்” என்றார். “அதன்பொருட்டு நீ உன் சொல்லைக் கைவிடலாகுமா? ஒன்றை இழக்காமல் பிறிதொன்றை எய்தவியலாது” என்றாள் திருச்செல்வி. வியாசர் “ஏன் நான் சொல்லை கைவிடவேண்டும்?” என்றார். “மைந்தர்நலம் நாடும் அனைத்துத் தந்தையரும் தங்கள் உள்ளத்திற்கு இயைந்தவற்றைக் கைவிட்டவர்களே. பெருந்தந்தை என்றாகின்றவர் பிறிதெதையும் அடையமுடியாது” என்று பேறுகளின் இறைவி சொன்னாள். “ஏனென்றால் தந்தை என்பவன் மண்ணில் இறங்கி வேரென விரிபவன். ஒளியும் காற்றும் அவனுக்கில்லை. முளைத்தலும் மலர்தலும் அவனில் நிகழ்வதில்லை.”

வியாசர் பெருமூச்சுடன் “ஆம், தந்தை என்பது முற்றிலும் உலகத்துநிலை. உலகியலில் இருந்து ஓரடியேனும் எடுத்துவைக்காதவர் உலகியலையும் முழுமையாக அடையமுடியாது” என்றார். பின்னர் “தேவி, நான் தந்தையென்றே அமைகிறேன். என் மைந்தர் வெல்க!” என்றார். “உன் மைந்தரில் எழுந்த மைந்தரும் அவர் குருதியினரும் என இன்றிருப்போர் பலர். அனைவருக்கும் முழுமையைக் கோருகிறாயா?” என்றாள். “ஆம், அவர்கள் விழைவதனைத்தும் கைகூடுக. பேறுகளில் முதன்மையானது, நிலைகளில் உச்சமானது அவர்களுக்கு அமைக” என்றார் வியாசர்.

“நன்று, அவ்வண்ணமே. உன் முதல் மைந்தனுக்கு நீ கோருவனவற்றை அளித்துள்ளேன். நீ அதில் நிறைவுற்ற பின் அடுத்தவனுக்கும் அவனுக்குரியதை அருள்வேன்” என்று சொல்லி திருமகள் மறைந்தாள். “தேவி!” என கைகூப்பி வியாசர் அமர்ந்திருந்தார். பின்னர் நிறைவுப்புன்னகையுடன் “இதுபோதும் யாதவரே, இப்போது நான் அடையும் நிறைவை பெருங்காவியமும் எனக்களிக்காது. என் மடியில் மைந்தர் நிறையட்டும். அவர்கள் நிலம்நிறைத்து பொலியட்டும்” என்றார்.

“உங்கள் முதல் மைந்தன் சுகனைச் சென்றுநோக்கிவிட்டு வந்து பிற மைந்தருக்கான கோரிக்கையை எழுப்புங்கள், ஆசிரியரே” என்றார் இளைய யாதவர். வியாசர் “ஆம், நான் அவனைப் பார்க்க விழைகிறேன். அவனை எண்ணியதுமே அவன் அழகிய தோள்களை என் கண்களால் கண்டுவிட்டேன்” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் “இந்த நிலத்தில் கைவைத்து அங்கிருக்க விழைக. இமைக்கணம் உங்களை இடம்கடக்கச் செய்யும்” என்றார். வியாசர் அவ்விடத்தில் கைவைத்து “என் மைந்தன் சுகன்” என்றார். மறுகணமே அங்கிருந்தார்.