இமைக்கணம் - 22
விதுரர் நொண்டியபடி படிகளில் மீண்டும் ஏறி கதவை அடைந்து அதை ஓங்கி ஓங்கி அறைந்தார். கால்களாலும் கைகளாலும் அதை மாறி மாறி தாக்கினார். உரக்க ஓலமிட்டார். ஒவ்வொரு கணமும் எடைமிகுந்தபடியே செல்ல அழுகையும் ஆத்திரமுமாக கதவின்மேல் மோதினார். தாளமுடியாமல் தலையால் அதை அறைந்தார். “யாதவரே! யாதவரே” என தான் கூவுவதை தானே உணர்ந்தபோது திகைப்புடன் என்ன நிகழ்கிறதென்று உணர்ந்தார். “யாதவரே, போதும்… என்னை மீட்டெடுங்கள்” என்றார். “அத்தருணத்தை கைவிடுவது உங்கள் கைகளிலேயே” என்றார் இளைய யாதவர். விதுரர் ஒருகணத்தில் திமிறி வெளியே வந்தார்.
இளைய யாதவர் அவரை நோக்கி புன்னகைத்து “அருமணியை கண்டடைந்தீர்களா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “அது அந்த அறைக்குள்தான் உள்ளது, நீங்கள் விரும்பிப் பயிலும் சுவடிக்கட்டுக்குள்.” விதுரர் திகைப்புடன் “ஆம், நான் கட்டுகளை பிரிக்கவேயில்லை” என்றார். பின்னர் “தேவிஸ்தவத்திற்குள்ளா?” என்றார். “இல்லை, விவாதசந்திரத்திற்குள்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்கும் வாய்ப்புண்டு” என்றார் விதுரர். “தேவிஸ்தவம் பின்னர் நீங்கள் பயின்ற நூல், விதுரரே. தொடக்கம் முதல் உடனிருப்பது லகிமாதேவியின் நூல்தான்.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “அவ்விரு நூல்களுக்குள் ஆடுவது உங்கள் ஊசல்” என்றார் இளைய யாதவர்.
இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்த விதுரர் “என் வினாவை நான் எங்கும் சந்திக்கவேயில்லை” என்றார். இளைய யாதவர் “உடல் மண்நீங்குவதற்கு முன்னரே இவ்வுலகில் விழைவாலும் சினத்தாலும் விளையும் விசைகளை தாங்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்பவனே மாறாதனவற்றை அறிய இயலும். அசைவற்ற கலத்திலேயே அமுதத்தை கறந்தளிக்கிறது அப்பசு. தனக்குள் இன்பத்தை அடைந்தவன், ஒளியை தன்னுள் கொண்டவன், வெளியே தேடவேண்டியதில்லை. இருமைகளை வெட்டிவிட்டவன் மட்டுமே இருத்தலுக்கு அப்பால் சென்று எதையேனும் அறியக்கூடும்” என்றார்.
விதுரர் “நான் அந்த அருமணியால் எதை அடைந்திருந்தேன்? எதன்பொருட்டு அதை அத்தனை முயன்று காத்தேன்?” என்றார். “நீங்களே எண்ணிநோக்குங்கள், விதுரரே. இது இமைக்கணக் காடு. காலமென்று ஓடுவதெல்லாம் கையகப்படும் துளிகளென்று ஆன நிலம்” என்றார் இளைய யாதவர். விதுரர் சிறிது எண்ணிச்சூழ்ந்துவிட்டு “அது நான் கொண்ட ஆழ்விழைவு. காமம் ஒன்றே அத்தகைய மந்தணத்தை கொள்ளமுடியும்” என்றார். “அதை காதலென்றும் அதைவிடத் தூய தன்னளித்தல் என்றும் உருமாற்றிக்கொண்டேன். அதற்கே தேவிஸ்தவம் போன்ற காவியங்கள். கவிதையின் உளஉச்சங்களும் பித்தும். உருமாற்றி உருமாற்றி அதை முற்றறிய முடியாத ஒன்றென்று சமைத்து என்னுள் கரந்தேன். யாதவரே, அந்த அருமணி நான் ஒரு கருங்குழல்திரளில் சூடவிழைந்த மலர்.”
“ஏனென்றால் என்னுள் அமைந்த எனக்குரிய இணை அவள். நான் வளர்த்து சூடிக்கொண்ட என் தோற்றத்திற்குத்தான் பெண் தேடினர் என் அன்னையும் பிதாமகரும். அதற்குரிய துணைவியையே அடைந்தேன். அதுவென்று உருமாற்றி அவளுடன் வாழ்ந்தேன். மானுடர் தங்கள் இணைகளை தாங்களே வகுத்து அவ்வடிவில் அடைந்து அவர்களுடன் வாழ்கிறார்கள். ஆனால் எவரும் தங்கள் விழிப்புக்கனவுகளில் தேடுவது தானென்று தான் மட்டுமே அறிந்தவனுக்கான துணையைத்தான். எத்தனை பழக்கி இல்லத்தொழுவில் நாயென்று கட்டினாலும் ஓநாய் காட்டின் ஊனையே கனவுகாண்கிறது.”
“நான் வெளிவந்து ஏறிடும் விழி. என் பற்களும் உகிர்களும் எழ காமம்கொண்டாடும் உடல். அது அவளே” என்றார் விதுரர். “ஒவ்வொரு சொல்லையும் கனியச்செய்யும் உணர்வாக அந்தத் தொல்விசையை எவ்வண்ணம் மாற்றிக்கொண்டேன்?” என தனக்குள் வியந்தார். “நதியின் விசையை கிளைகளாக, கால்களாக பிரித்து நிறுத்துகிறோம். பசுமையெனப் பொலிகிறது. பொன் என விளைகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். அவரை வெற்றுவிழிகளால் நோக்கினார் விதுரர். “அனைத்து தொல்விசைகளும் அழகென்றும் அறமென்றும் மெய்மையென்றும் உருமாற்றத் தக்கவையே” என்றார் இளைய யாதவர். விதுரர் தலையசைத்தார்.
சற்று நேரம் கழித்து “ஆனால் அதனினும் மறைவானது என் ஆணவம்” என்றார் விதுரர். “ஆம், நான் அஸ்தினபுரியின்மேல் விழைவுகொண்டிருந்தேன். நானே தகுதியானவன் என்று எண்ணினேன். அந்நகருக்கு நிகராக நான் கொண்டிருந்தது அந்த அருமணி. அதை விழியருகே வைத்து உள்ளே நோக்குகையில் நான் கண்டது அடுக்கடுக்கென ஒளிகொண்டு விரியும் எனக்கான நுண்நகரத்தை. என் கோல்நிற்கும் கோட்டை, என் சொல் ஆளும் நிலம்.” சொற்களுக்காகக் கொந்தளித்து பின் மெல்ல அடங்கி “நீங்கள் சொன்னதுதான் யாதவரே, அளிக்கப்படும் உரிமை உரிமையே அல்ல. கொள்ளப்படுவதும் வெல்லப்படுவதுமே மெய்யான உரிமைகள். நான் அன்பாலும் அளியாலும் பேணப்பட்டவன். இன்சொல்லின் நஞ்சுண்டு வளர்ந்தவன். அன்பெனும் சிறுமையில் திளைத்துக்கொண்டிருப்பவன்” என்றார்.
“என் உளம்கரந்த நஞ்சு இந்த அருமணி” என அவர் தொடர்ந்தார். “விந்தைதான். ஒளியும் பேரழகும் கொண்டது நஞ்சென்றுமாவது எப்படி? அல்லது நஞ்சுக்கு மட்டுமே அவை இயல்வனவா?” தலையசைத்து அவர் பெருமூச்சுவிட்டார். நிமிர்ந்து தத்தளிக்கும் விழிகளுடன் நோக்கி “ஆம், ஆணவமல்ல. வஞ்சம். இது என் அன்னையின் விழிநீரின் ஒளி. ஒரு முழு வாழ்க்கையையும் சாளரத்தினூடாக நோக்கி கழித்தவள். அவள் நோக்கியது எதை? அச்சாளரத் தனிமையில் அமர்கையில் என் விழிகள் அதை தேடித்தேடி சலிக்கின்றன” என்றார்.
“நான் காண்பதெல்லாம் பொருளற்ற அசைவுகளை. யானைகளின் ஓய்வுநடை. வண்டிகள் எங்கிருந்தோ எங்கோ சென்றுகொண்டிருக்கின்றன. மனிதர்கள் சிலந்திச்சரடில் ஆடும் புழு என நெளிந்து நெளிந்து முன்னும்பின்னும் செல்கிறார்கள். எப்பொருளும் இல்லாத காட்சிகளை நாளெல்லாம் வாழ்வெல்லாம் கண்டவள் எதை மொண்டு மொண்டு எடுத்து தன்னை நிறைத்துக்கொண்டாள்?”
“வெறுமையை! யாதவரே, அங்கே நிறைந்திருப்பது அதுவே. பொருளின்மை, தொடர்பின்மை, இன்மை. முழு நகரில் இருந்து அந்தச் சாலை துண்டுபட்டிருக்கிறது. அந்த சாலையிலேயே அவ்விழிதொடு வட்டம் தனித்திருக்கிறது. முழுமையிலிருந்து வெட்டி எடுக்கையில் ஒவ்வொன்றும் முற்றிலும் பொருளிழந்தவை. பொருளெனக்கொள்வது அந்த முழுமையில் அமைந்திருக்கிறதுபோலும். ஆனால் எவராயினும் வெட்டி எடுத்த வெளியை அன்றி முழுமையை எப்படி அடைய முடியும்? தாங்கள் அளித்த பொருளை அவர்கள் அதில் காண்கிறார்கள். அன்னை அதை அளிக்க முற்றாக மறுத்துவிட்டவள்.”
விதுரர் தனக்குத்தானே தலையசைத்தபடி அமைதியிலாழ்ந்தார். பின்னர் “ஆம், காமம் மோகம் குரோதம். எவராலும் மறைத்துவைக்க இயலாதது. மறைக்க மறைக்க பெருகுவது. மைந்தர் இருவரும் மிகச் சரியாக அதை சுட்டிக்காட்டிவிட்டனர்” என்றார். பின்னர் நிமிர்ந்து இளைய யாதவரை நோக்கி “என் கலம் மாசுடையதென்பதனால் மாசை அள்ளிக்கொள்கிறேனா, யாதவரே?” என்றார். இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.
முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.
“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”
“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”
ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”
“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”
விதுரர் அக்கணம் அஸ்தினபுரியின் கைவிடுபடைக்கல நிலையின் சிற்றறையின் கதவை உடைத்து வெளியே வந்த விதுரரை கண்டார். இரு கைகளையும் விரித்து “மைந்தா! மைந்தா!” என அலறியபடி அவர் ஓடினார். ஆடை தடுக்கி கீழே விழுந்தார். எழுந்து ஓடி கைகளை விரித்து “வீரர்களே, ஓடிவாருங்கள்! வீரர்களே!” என்று கூவினார். பதறி வந்து சூழ்ந்தவர்களிடம் “எழுக முரசு… என் அரசாணை இப்போதே நிறுத்திவைக்கப்படவேண்டும். முரசு ஒலிக்கட்டும்” என்று கூவினார். “எங்கே என் தேர்? என் தேர் எங்கே?” என்றபடி தேரை நோக்கி ஓடினார்.
தேரிலேறிக்கொண்டபோது அவர் விம்மிக்கொண்டிருந்தார். “அரண்மனைக்கு அரண்மனைக்கு” என்று கூவினார். தேர்த்தட்டை ஓங்கி ஓங்கி அறைந்தார். “செல்க! செல்க!” என்று ஓலமிட்டார். தேர் அஸ்தினபுரியின் தெருக்களினூடாக விரைந்தது. முரசொலி அவர் தலைக்குமேல் முகில்முழக்கமென கேட்டது. தேனீத்திரள் என அதன் ஓசை பறந்து சென்றது. “செல்க! விரைக!” என அவர் கூவிக்கொண்டே இருந்தார். அரண்மனை முகப்பை அடைவதற்குள்ளாகவே தேரிலிருந்து குதித்து அதன் செல்விசையில் நிலைதடுமாறி விழுந்தார். மீண்டும் எழுந்து ஓடினார்.
அரண்மனை முகப்பில் சுசரிதனும் சுபோத்யனும் கைகள் பிணைக்கப்பட்டு நிற்பதை கண்டார். கனகர் முரசொலி கேட்டு வெளியே வந்து தயங்கி நின்றிருக்க அப்பால் கொலைவாளுடன் காவலர் இருவர் நின்றிருந்தனர். “நிறுத்துக! நிறுத்துக!” என்று கூவியபடி அவர்களை அணுகிப் பாய்ந்து இரு கைகளாலும் அள்ளி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். நுனிக்காலில் எழுந்து அவர்களின் தோள்களை முத்தமிட்டபடி கேவல்களும் விசும்பல்களுமாக அழுதார். சொல்லெழாமல் நெஞ்சு அதிர்ந்துகொண்டிருந்தது. பின்னர் கால்தளர்ந்து அவர்கள் மேலேயே விழுந்தார்.
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”
“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர். விதுரர் நிலத்தை நோக்கி சரிந்த விழிகளுடன் அமர்ந்திருந்தார்.
அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.
அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.
அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.
அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.
ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.
அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.
எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.
புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.
இளைய யாதவரை வணங்கி விடைகொண்டு கிளம்பிய விதுரர் நைமிஷாரண்யத்தின் அடர்காட்டின் ஒற்றையடிப் பாதையினூடாக நடந்தார். தனித்து தளர்ந்து தொய்ந்த தோள்களுடன் நடந்த அவரை சூழ்ந்திருந்தது காட்டின் இருள். தன் காலடியோசையை அப்பாலென்றும் அருகிலென்றும் கேட்டுக்கொண்டிருந்தார். அறியாமல் தன் இல்லத்தை அடைந்துவிட்டிருப்பதை உணர்ந்தார். முற்றத்தில் சால்வை காற்றில் பறக்க நின்றிருந்தார். இருண்ட வானில் ஒளிர்ந்துகொண்டிருந்த துருவனை ஏறிட்டுப்பார்த்தார்.
நிருத்யை மாளிகை வாயிலில் நின்றிருந்தாள். “குளிர் மிகுந்து வருகிறது” என மெல்லிய குரலில் அவள் சொன்னாள். அவர் ஆம் என தலையசைத்து மாளிகைக்குள் சென்றார். ஒரு நீண்ட கனவென்று நைமிஷாரண்யத்தை உணர்ந்தார். அல்லது பயின்ற நூலொன்றின் நினைவெழுகை. நைமிஷாரண்யம். காலம் ஒரு ஆழியென்று சுழிக்கும் வட்டம். தளர்ந்த காலடிகளுடன் இடைநாழியில் நடந்து மரப்படிகளில் ஏறினார். கீழே நிருத்யை கதவை மூடும் ஓசை கேட்டது. சேடிப்பெண்களின் மெல்லிய குரல்கள். தேரிலிருந்து அவிழ்க்கப்படும் புரவியின் தும்மலோசை. அதன் கழுத்துமணி குலுங்கல். தேர்ச்சகடம் உருண்டு நிற்கும் ஓசை. பிறிதொன்றுக்குச் செல்லும் இரவின் ஒலிகள் அவை.
சுசரிதனின் அறைக்குள் சுடரொளி தெரிந்தது. அவர் நிலைக்கீற்றெனத் தெரிந்த செவ்வொளியை நோக்கியபடி நின்றார். நீண்ட செவ்வரியென அது இடைநாழியின் மரத்தரையில் விழுந்து மறுபக்கம் சுவரில் எழுந்து ஓங்கிய வாள்போல் நின்றது. கதவை மெல்ல தொட்டபோது ஓசையின்றி திறந்துகொண்டது. சுசரிதன் அப்பால் சாளரத்தை நோக்கியபடி திரும்பி நின்றிருந்தான். அறைக்குள் அவர் நுழைந்ததை அவன் அறியவில்லை. அவர் அவன் தோள்களை நோக்கியபடி நின்றார். அது வேறெவரோ என தோன்றியது. அசையாத உடலில்கூட உணர்வுமாற்றம் எவ்வண்ணம் வெளிப்படுகிறது என வியந்தார்.
“மைந்தா” என மெல்லிய குரலில் அழைத்தார். திரும்பியபோதுதான் அது சுபோத்யன் என தெரிந்தது. அவரை இமையசையாமல் நோக்கி அவன் நின்றான். மெல்லிய சொல் ஒன்று எழுந்து உதடுகளிலேயே ஓசையடங்கியது. “ஏன் துயில்நீத்திருக்கிறாய்?” என்று அவர் கேட்டார். இல்லை என அவன் தலையசைத்தான். அவன் விழிகள் அவரை அறியவில்லை என்று தோன்றியது. முற்றிலும் அயலவனின் நோக்கு. அது அவரை அகம் பதறச் செய்தது.
அருகணைந்து அவன் கைகளை தொடப்போனார். அவன் கையை இழுத்துக்கொண்டு விலகினான். “ஏன் துயர்கொண்டிருக்கிறாய்?” என்று அவர் கேட்டார். மீண்டும் அவனைத் தொட கைநீட்டினார். அவன் அருவருப்புடன் முகம்சுளித்து மேலும் பின்னால் சென்றான். “தொடவேண்டாம்” என்றான். திகைப்புடன் “ஏன்?” என்று அவர் கேட்டார். “இனி உங்கள் தொடுகையை என்னால் ஏற்கமுடியாது” என்றான். அவர் “ஏன்?” என உடைந்த குரலில் கேட்டார். “அக்கணத்தை என்னால் கடக்க முடியாது” என்று அவன் விழிகளை விலக்கியபடி சொன்னான்.
அவனால் பேசமுடியவில்லை. உதடுகள் துடிக்க கைகள் அலைக்கழிய உடல் நடுங்க இருமுறை சொல்லெடுத்தான். பின்னர் “கழுமுனைக்கு முன்னரே கழுவன் இறந்துவிடுகிறான்” என்றான். கைகள் அசைந்தசைந்து மேலும் மேலுமென கேளாச் சொற்களை காற்றில் நிகழ்த்தின. “மறுபிறப்பில் நாம் அழிந்தெழுகிறோம்” என்றான். “மைந்தா, அது வெறும் கனவு. அது என் உணர்வுகள் சமைத்த மாயை.” அவன் கோணலாக இழுபட்ட வாயுடன் “ஆனால் திரண்டுவந்த உண்மை என்றுமுள்ளது” என்றான். “இல்லை, அது பொய். அது நான் எனக்கு அளித்துக்கொண்ட உளமயக்கு.”
கதவு திறக்க வாயிலில் சுசரிதன் நின்றான். “தங்கள் அறைக்கு செல்க!” என்றான். அவன் விழிகளில் இருந்த வெறுப்பை நோக்கியபடி அவர் உடல் குளிர்ந்து செயலிழக்க நின்றார். “செல்க… இனி ஒருமுறையும் மைந்தா என்று அழைக்கும் கொடுமையை இழைக்காதீர்கள். உங்களை தந்தை என்று எண்ணும் சிறுமையை எங்களுக்கும் அளிக்கவேண்டாம்.” விதுரர் “இது கனவு… இது வேறெங்கோ நிகழ்கிறது” என்றார். “ஆம், ஆனால் இது அங்கு ஒரு கணம்” என்று சுசரிதன் சொன்னான். “அழிவிலாத மெய்க்கணம்… ”
விதுரர் கண்ணீருடன் கைநீட்டி “எனக்கென்று எதுவும் இல்லாமலாகும், நான் எச்சமில்லாது அழிவேன்” என்றார். “ஆம், அதுவே உங்கள் ஊழ். செல்க!” என்றான் சுபோத்யன். “ஏனென்றால் அறிவை நாடுபவர் அனைத்தையும் மிச்சமின்றி கரைத்தழிப்பார். வேறு வழியே அத்திசையில் இல்லை.” விதுரர் கைகள் நீண்டிருக்க அவனை நோக்கி நின்றார். “செல்க, இனி உங்களுக்கு மைந்தர் இல்லை. குடியும் குருதிவழியும் இல்லை” என்றான் சுசரிதன். அவர் அவனை நோக்கி திரும்பினார். “நான் தனித்துவிடப்படுவேன். வெறுமையால் சூழப்படுவேன்” என்று தாழ்ந்த குரலில் சொன்னார். “ஆம், அதுவே அறிபவனுக்கு வகுக்கப்பட்டது. செல்க!” என்றான் சுசரிதன்.
அவர் அவர்களை மாறிமாறி நோக்கியபடி நின்றார். பின்னர் அவர் கைகள் தளர்ந்து சரிந்தன. முகத்தசைகள் நெகிழ புன்னகைபோல் ஓர் அசைவு கூடியது. பெருமூச்சுவிட்டு “நீங்களும் அறிதலின் பாதையை தெரிவுசெய்துவிட்டீர்கள். கழுமுனைக்கு முந்தைய கணத்தில்” என்றார். அவர்கள் விழிகளில் அதிர்ச்சியுடன் அவரை நோக்கினர். “ஒன்றை உடைத்து அறிகையில் அனைத்தையும் உடைக்கும் படைக்கலம் ஒன்றை பெற்றுவிடுகிறீர்கள்” என்றபின் அவர் வெளியே நடந்தார்.
ஒவ்வொரு காலடியிலும் உடல் எளிதாகியபடியே வந்தது. தன் அறைவாயிலை அடைந்தபோது அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார். சால்வையை மஞ்சத்திலிட்டுவிட்டு அகல்விளக்கை கையில் எடுத்தபடி சிற்றறையைத் திறந்து உள்ளே சென்றார். ஆமாடப் பேழையை திறந்து லகிமாதேவியின் விவாதசந்திரத்தை எடுத்தார். சரடுமுடிச்சை அவிழ்த்து ஏடுகளை புரட்டியபோது அஸ்வதந்தத்தை கண்டடைந்தார். ஏடு விழிதிறந்ததுபோல் அமைந்திருந்தது. குளம்புகள் ஓசையிட தலைக்குமேல் கடந்துசென்றது குதிரை.