இமைக்கணம் - 21

wild-west-clipart-rodeo-31சுவடிகளில் குருதிமணம் இருந்தது. கொழுங்குருதி. மானுடக்குருதிக்கு மட்டுமே உரிய மணம். அதை அறியாத மானுடர் இல்லை. உமிழ்நீரின், உயிர்த்துளியின், கண்ணீரின் மணம். சுவையின், காமத்தின், துயரின் மணம். ஒவ்வொரு சுவடியும் எனக்கு எனக்கு என வீறிட்டது. நான் நான் என அறைகூவியது. விதுரர் மெல்ல விசைதளர்ந்து மூச்செறிந்து அமைந்தார். கைகளை கட்டிக்கொண்டு தன் முன் பீடத்தில் விரிந்துகிடந்த சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்தார். கனகர் அருகே வந்து தணிந்து “மேலும் ஓலைகள் உள்ளன” என்றார். வேண்டாம் என அவர் கைகாட்டினார்.

“தன்னுடைய படைகள் வேல்திறன் கொண்டவை, அவற்றை படைமுகப்பில் நிறுத்தவேண்டும் என வைராடநாட்டரசர் கோரியிருக்கிறார்” என்றார் கனகர். “அவருடைய அந்தக் கோரிக்கைக்குப் பின்னால் வேறுபல விழைவுகள் இருக்கக்கூடும். அதை நாம் இப்போது ஒப்பமுடியாது. முடிவெடுக்க வேண்டியவர் பிதாமகரான பீஷ்மர். நாம் ஓலைகளை அவரிடம் அனுப்பலாம்.” விதுரர் தலையசைத்தார். கனகர் மேலும் குனிந்து “பேரரசி நோயுற்றிருக்கிறார். நேற்றுமுதல் தன்னினைவே இல்லை. மருத்துவர் எழுவர் சென்று நோக்கி ஓலை அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். விதுரர் அதற்கும் கையசைத்தார்.

மெல்ல அசைந்தமர்ந்தபோது கூர்முனையால் குத்தப்பட்டதுபோல அந்நினைவெழுந்தது. திடுக்கிட்டு எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன்” என்றார். கனகர் சற்று திடுக்கிட்டு “தேர்…” என சொல்லத்தொடங்குவதற்குள் வாயிலுக்குச் சென்று “தேர் எங்கே? தேர்?” என்று கூவினார். ஏவலன் ஓடிவந்து “ஒருங்கியிருக்கிறது, அமைச்சரே” என்றான். “விலகு!” என அவனிடம் சீறிவிட்டு முற்றம்நோக்கி விரைந்தார். “செல்க!” என்று கூவினார். தேரில் அதன்பின்னரே ஏறிக்கொண்டார். அமர்ந்து மூச்சிரைக்க “செல்க! செல்க!” என்று கூச்சலிட்டார். தேர் அதிர்ந்து குளம்புத்தாளம் விரைவுகொள்ள முற்றத்தைக் கடந்து சாலையில் ஏறி அரண்மனை வளைவை சுற்றிக்கொண்டு அவருடைய மாளிகை நோக்கி சென்றது.

இறங்கி இல்லம்நோக்கி ஓடியபடி “எங்கே சுசரிதன்? அவன் துணைவி எங்கே?” என்று ஓசையெழுப்பினார். வெளியே வந்த சுசரிதன் தயங்கி சுவர் சாய்ந்து நின்றான். “எங்கே அஸ்வதந்தம்? கிடைத்ததா? கையில் கொண்டுவந்து தருவேன் என்றாயே? இழிமகனே, எங்கே அது?” என்றார். அவன் தலைகுனிந்து நின்றான். “சொல், எங்கே அது? கிடைத்ததா?” என்று அவன் தோளைப்பற்றி உலுக்கினார். “இல்லை தந்தையே, அதை எங்கும் தேடிவிட்டோம். ஆனால் அது இங்குதான் உள்ளது. இந்த இல்லம்விட்டு சென்றிருக்க வாய்ப்பே இல்லை.” விதுரர் இகழ்ச்சியுடன் முகம்கோணச் சிரித்து “அது எங்கிருக்கிறதென்று உனக்கு தெரியாதா? நீயும் இணைந்து செய்த திருட்டு இது…” என்றார்.

சுசரிதன் துயருடன் “தந்தையே…” என்றான். “பேசாதே! என்ன செய்வதென்று நான் அறிவேன். ஓலை சென்றுவிட்டதா? அவன் உடனடியாக திரும்பி வரவேண்டும். இல்லையேல் துவாரகை நோக்கி படைகள் செல்லும்” என்றார். “மூத்தவர் அருகே மதுராவில்தான் இருக்கிறார். நீங்கள் சொன்னதுமே ஓலை சென்றுவிட்டது. இந்நேரம் வந்துகொண்டிருப்பார். இன்று மாலைக்குள் அவர் நகர்நுழைவார்” என்றான் சுசரிதன். “மூடா! மூடா! நான் சொல்கிறேன், கேட்டுக்கொள். அவன் வரமாட்டான். உன் ஓலை கிடைத்ததுமே கிளம்பி துவாரகைக்கு செல்வான். சாம்பனின் படைகள் நடுவே மூழ்கி மறைந்துகொள்வான். நம் படைகளை அனுப்பினால் அந்த அருமணியை சாம்பனுக்கே அளித்து அடிபணிந்து பாதுகாப்பு கோருவான்.”

“ஆம், அது ஓர் உத்தி. ஆனால் அது உங்களுடைய வழி” என்றான் சுசரிதன். “என்ன சொல்கிறாய்? கீழ்மகனே, என்ன சொல்கிறாய்?” என விதுரர் கையோங்கியபடி அவனை அடிக்கச் சென்றார். அவன் விழிநிலைக்க நோக்கி “எங்களை தண்டிக்கும்பொருட்டு அருமணியை அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரிடம் கொடுப்பதாக நீங்கள்தான் சொன்னீர்கள்” என்றான். அவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவன் தாடையெலும்பில் பட்டு அவர் கை வலியெடுத்தது. அதை உதறியபடி “தூ” என அவர் துப்பினார். அவன் தலைகுனிந்தான். அவர் நின்று நடுங்கி பின்பு சரிந்த மேலாடையை இழுத்துப்போர்த்திக்கொண்டு மூச்சிரைக்க நடந்து தன் அறையை அடைந்தார். மேலாடையைச் சுருட்டி மஞ்சத்தில் வீசிவிட்டு வந்து அன்னையின் சாளரப்படியில் அமர்ந்தார்.

களைப்புடன் விழிமூடிக்கொண்டு நரம்புகளின் துடிப்பை கேட்டார். மெல்ல மெல்ல அவர் உடல் குளிர்ந்து அடங்கியது. மூச்சு ஏறியிறங்கியது. துயில் வந்து மூடி வேறெங்கோ அவரை கொண்டுசென்றது. அருகே வந்து நின்ற காலடியோசை கேட்டு அவர் திரும்பி நோக்கினார். முது மருத்துவர் தலைவணங்கி “மூன்று நாட்களாக காய்ச்சல் இருக்கிறது, அமைச்சரே. ஒவ்வொரு நாளும் அது கனன்றுகொண்டே செல்கிறது. முதல் நாளிலேயே உள்காய்ச்சல் என்று தெரிந்து கொண்டேன். இப்போது உடலெங்கும் அனல் பரவிவிட்டது. மருந்துகள் எதையும் உடல் ஏற்கவில்லை. மருத்துவம் சென்று நின்றுவிட வேண்டிய எல்லை ஒன்றுள்ளது. அதை நாங்கள் உணர்ந்துவிட்டோம்” என்றார். அவர் தலையசைத்தார். “தங்களை பார்க்க விழைகிறார்கள்” என்றார் மருத்துவர்.

அவர் எழுந்து அவரைத் தொடர்ந்து நடந்து சிற்றறைக்குள் சென்றார். சிறிய பீடம் மீது விரிக்கப்பட்ட மரவுரியில் சுருதை படுத்திருந்தாள். அவர் சுருதையின் பீடத்தருகே அமர்ந்து முழங்கையை தொடையில் ஊன்றி குனிந்து அவள் முகத்தை பார்த்தார். காய்ச்சலினால் அவள் முகத்தின் தோல் சருகுபோல் உலர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்த புண்போல சற்றே குவிந்திருக்க மூக்கு எலும்புப் புடைப்புடன் எழுந்து தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அதிர்ந்துகொண்டிருந்தன. ஆனால் மிக இளமையாக இருந்தாள். ஒவ்வொரு நாளும் நோயினூடாக இளமையை சென்றடைந்துவிட்டாளா? கரிய தலைமுடிச்சுருள்கள் அவிழ்ந்து தலையணை மேல் பரவியிருந்தது. அன்று காலையும் அவளுக்கு நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் அணிவித்திருந்தனர். செவியோரம் ஓரிரு மலர்களையும் சூட்டியிருந்தனர்.

அவர் அவள் கைகளை தன் விரல்களுக்குள் கோத்துக்கொண்டு “சுருதை” என்று மெல்ல அழைத்தார். அவள் விழியிமைகள் அதிர்ந்தன. உதடுகள் அசைவுகொண்டன. மெல்ல விழிகளைத் திறந்து அவரை பார்த்தாள். “வந்துவிட்டீர்களா?” என்றாள். அவர் “ஆம்” என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு சொற்கள் எழவில்லை. அவள் தன் இன்னொரு கையை அவர் கைமேல் வைத்து “எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றாள். “இல்லை, நான் கவலைப்படவில்லை” என்றார். அவள் கண்கள் அவர் முகத்தையே நோக்கி அசைந்து கொண்டிருந்தன. அவளும் சொல்லெடுக்க விழைபவள்போல தோன்றினாள்.

அவர் அவள் உதடுகளையே நோக்கினார். அவள் விழிவிலக்கினாள். அவர் அவள் கைகளை இறுக்கிப் பற்றியதும் அதை உருவிக்கொண்டு “நான் அந்த அருமணியை விழுங்கிவிட்டேன்” என்று சுருதை சொன்னாள். “ஏன்?” என்று அவர் திகைப்புடன் கேட்டார். “அது இனிய கனி போலிருந்தது…” என்றாள். பதற்றத்துடன் “அது குருதி… மானுடக்குருதியை… மானுடர் அருந்தக்கூடாது” என்றார் விதுரர். “ஆம், ஆனால் தெய்வமெழுந்தவர்கள் அருந்தலாம்” என்றாள் சுருதை. அவள் விழிகள் நகைத்தன. திறந்த வாய்க்குள் செங்குருதியை அவர் கண்டார். “நீ செய்தது பிழை… அது என் குருதி” என்றார் விதுரர். அவள் மேலும் நகைத்தாள்.

அருகே நின்ற சுசரிதன் அவர் தோளை தொட்டான். அவர் விம்மியழுது “சுருதை… சுருதை” என்றார். “தந்தையே…” என அவன் அவர் தோளை உலுக்கினான். அவர் விழித்துக்கொண்டபோது சுசரிதன் அருகே நின்றிருந்தான். பொழுது மாறியிருப்பது நிழலொளியில் தெரிந்தது. “தந்தையே, நீங்கள் உணவருந்தவில்லை என்றார்கள். உணவு அருந்தி சற்றே ஓய்வெடுங்கள்” என்றான் சுசரிதன். அப்பால் அவன் துணைவி நின்றிருந்தாள். “மூத்தவன் எங்கே?” என்றார் விதுரர். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுசரிதன்.

“அவன் வரமாட்டான். இன்றே இக்கணமே அவன் வந்தாகவேண்டும். அவன் மனைவியும் மைந்தரும் இங்கே என்னுடன்தான் இருக்கிறார்கள். அவனுக்கு ஓலை அனுப்பு. இன்றிரவு விடிவதற்குள் அவன் இங்கு என் முன் வராவிட்டால் அவன் மனைவியையும் குழந்தைகளையும் சிறையிடுவேன் என்று சொல். அவன் மைந்தரை கழுவேற்றுவேன். ஆம், அவர்களை கழுவேற்றுவேன். அவன் என் அருமணியுடன் வந்தாகவேண்டும். என் காலடியில் அதை வைத்தாகவேண்டும்” என அவர் ஓலமிட்டார்.

சுசரிதன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “உன் அமைதியின் பொருள் எனக்கு புரிகிறது. நீயும் அச்சூழ்ச்சியில் ஒருவன். உன்னையும் நான் விடப்போவதில்லை” என்றபின் அவர் தன் அறைக்குள் சென்றார். மஞ்சத்தில் படுத்தபின் அமைதியின்மையுடன் புரண்டு உடனே எழுந்து சென்று கதவைத் திறந்து சிற்றறைக்குள் சென்றார். சுவடிகளை எடுத்து எடுத்து வெளியே வீசினார். லகிமாதேவியின் விவாதசந்த்ரத்தை எடுத்து சுவடிகளை பிரித்தார். “அரசப்பிழை செய்த மைந்தனை மன்னன் கொல்லாமல் விடக்கூடாது. அவன் பிழைசெய்யும் அரசனாவான். அவன் செய்யும் முதற்பிழை தந்தையை கொல்வதே.”

அவர் அவ்வரிகளை அச்சுவடியில்தான் படித்தார். ஆனால் அது அங்கே இல்லை. சுவடிகளை பிரித்துப் பிரித்து படித்துச் சென்றார். “தன் மேல் இரக்கமற்றிருப்பதே தவம். அரசு அமர்தல் என்பதும் தவமே. தன் குருதிமேல் இரக்கமற்றிருக்கும் அரசனே ஆற்றல்மிக்கவன்.” உடல் தளர்ந்தது. துயில்வந்து மூடி விழிகள் சரிந்தன. வேறெங்கோ எவரோ சொல்லிக்கொண்டிருந்தனர். “விழைவே தமோகுணத்தை ரஜோகுணமாக்குகிறது. விழைவற்ற அரசன் குயவன் கைபடாத களிமண்.” அவர் நெடுந்தொலைவில் இருக்க எவரோ முணுமுணுத்தனர். “அரசனின் கோல் கொலைசெய்யும் நாட்டில் குடிகள் கொலைசெய்வதில்லை.”

தன் மெல்லிய குறட்டையோசையை தானே கேட்டு அவர் விழித்துக்கொண்டார். வாயிலிருந்து வழிந்த நீரை துடைத்தபடி சுவடியை நோக்கினார். கைதளர சுவடி தொடைமேல் கிடந்தது. அதை எடுத்துப் புரட்டி நோக்கினார். “குற்றவாளிகளுக்கான உடல் வதையை அரசன் ஒவ்வொருநாளும் செய்யவேண்டும். அதை அவனே நோக்கவேண்டும். அரசனின் ஆட்சி என்பது முதன்மையாக உடல்மீதுதான். உள்ளங்களை ஆள்பவை இருளும் ஒளியும் கொண்ட தெய்வங்கள்.” அவர் சுவடியை அப்பால் வீசிவிட்டு மீண்டும் விழிகளை மூடிக்கொண்டார். எண்ணங்கள் ஒழுகிச்சென்றன. எங்கோ இருந்தார். மெல்லிய தித்திப்பு ஒன்றை உளநா உணர்ந்தது. அது அவர் முகத்தசைகளின் இறுக்கத்தை இல்லாமலாக்கியது.

பராசரரின் தேவிஸ்தவத்தை எடுத்தார். “தேவி, உன் கால்கள் தொட்டுச்செல்லும் இப்பாதையில் எட்டுமங்கலங்களும் பூத்தெழுகின்றன. நீ அகன்றதும் அவை நினைவை சூடிக்கொண்டு மேலும் பொலிவுகொள்கின்றன.” அவர் உடல் மெய்ப்புகொண்டது. வெளியே குரல் “சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்!” அவர் திரும்பி நோக்கி “யார்?” என்றார். மீண்டும் உரக்க “யார்?” என்றார். “தந்தையே, நான்தான்…” என்றான் சுசரிதன். “என்ன வேண்டும் உனக்கு?” என்று அவர் கேட்டார். “மூத்தவர் வந்துவிட்டார். அமைச்சுக்குச் சென்று தன் வரவை அறிவித்துவிட்டு நம் இல்லம்புகவிருக்கிறார்.” அவர் “தனியாகத்தான் வந்துள்ளானா?” என்றார். “ஆம், தந்தையே” என்றான் சுசரிதன்.

“அவனிடம் அஸ்வதந்தம் இருக்கிறதா? முதலில் அதைக் கேட்டு சொல். அவன் அந்த அருமணியுடன்தான் வந்திருக்கிறானா?” என்றார் விதுரர். சுசரிதன் “அதை நீங்களே கேட்கலாம், தந்தையே” என்றான். அவர் சுவடியை மூடிவைத்து எழப்போனார். “தேவி, உன் முலைகள் கனிந்து குழைந்திருக்கின்றன. காதலனை நீ அன்னையெனத் தழுவும் கணங்களும் உண்டா?” அவர் சுவடியை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் நூலைச் சுருட்டிக் கட்டி அதை உள்ளே வைத்தபின் விளக்கை கையிலெடுத்தபடி எழுந்தார். சுவர்கள் அனைத்திலுமிருந்து பேரொலிபோல எழுந்து அவரை அறைந்தது அந்தச் சொற்றொடர். சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்!

நீ மட்டுமே. நீ! நீ! நீ! சங்குசக்ரகதாபத்ம சோபிதம்! பராசரரின் சொற்கள். பதினாறு பெருந்தடக்கைகளில் ஒளிவிடும் படைக்கலன்களுடன் அன்னை தோன்றினாள். ரதி, பூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதா, ஸ்வாதா, ஸ்வாகா, க்‌ஷுதா, நித்ரா, தயா, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தந்திரி என்னும் இருபத்தொரு சக்திவடிவங்கள் விண்ணிலெழுந்தன. அவை இணைந்து ஒன்றாகி அன்னையாகின. நகையொலி எழுப்பி குனிந்து அம்மகவை அள்ளி எடுத்து முலைக்குவைமேல் அணைத்துக்கொண்டன. சர்வகல்விதமேவாஹம்! சர்வகல்விதமேவாஹம்! சர்வகல்விதமேவாஹம்! நீ மட்டுமே. நீ! நீ! நீ!

அவர் கதவைத் திறந்து அறைக்குள் இருந்த வெளிச்சத்திற்கு கூசிய கண்ணை மூடிக்கொண்டார். கால் தடுக்க கையிலிருந்து அகல்சுடர் சரிந்தது. அதனை அணைக்க அதன்மேல் மரவுரியை எடுத்துப்போட்டார். அனல் அதை உண்டு புகை எழுப்பியது. சுசரிதன் உள்ளே வந்து “என்ன இது?” என்றான். அனலை நோக்கியதும் குனிந்து அதை அணைக்கத் தொடங்கினான். அவர் மெல்ல நடந்து சென்று அன்னையின் சாளரக்கட்டையில் அமர்ந்தார். சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! சர்வகல்விதமேவாஹம்!

சுபோத்யன் அவர் முன் வந்து நின்றபோது அவர் அவனை சுசரிதன் என்று நினைத்து “எங்கே அவன்? வந்துவிட்டானா? இல்லை ஒளிந்துகொண்டானா?” என்றார். சுபோத்யன் “தந்தையே, நான் சுபோத்யன்… தங்கள் அழைப்பின்பேரில் வந்தேன்” என்றான். அதை கேட்டதும் அவர் சித்தம் சொல்லின்றி உறைந்தது. வாய்திறந்திருக்க, விழிகள் வெறிக்க வெறுமனே அவனை நோக்கினார். அவன் மீண்டும் “தங்கள் அழைப்பின்பேரில் வந்திருக்கிறேன், தந்தையே” என்றான். “ஆம்” என்றார் விதுரர். உடனே சினம் எழுந்து உடலை உதறச்செய்ய கை நீட்டி “கீழ்மகனே, என் அருமணியை நீ எப்படி எடுத்துக்கொண்டாய்? திருடத்தொடங்கிவிட்டாயா? எங்கே அது?” என்று கூவினார்.

சுபோத்யன் ஏற்கெனவே அனைத்தையும் சுசரிதனிடமிருந்து கேள்விப்பட்டிருந்தான். “தந்தையே, நான் அந்த அருமணியை எடுக்கவில்லை. அதை பார்த்தே நெடுநாட்களாகின்றன” என்றான். “பொய் சொல்லாதே… பொய்சொல்லி மேலும் கீழ்மை தேடாதே. சொல், எங்கே அது? அதை நீ என்ன செய்வாய் என எனக்குத் தெரியும். அதை வைத்து நீ யாதவபுரியில் ஒரு நிலத்தை விலைபேசுவாய். அதைக்கொண்டு நீயும் அரசனே என்று தருக்குவாய். அது உன்னுடையதல்ல. அது என் குடியை சேர்ந்தது. தொல்புகழ்கொண்ட அஸ்தினபுரியின் அரசர்களுக்குரியது. மாமன்னர் பாண்டுவால் எனக்கு அளிக்கப்பட்டது. எளிய யாதவக்குடிகள் அதைத் தொட நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார் விதுரர்.

சுபோத்யன் சினம்கொள்ளலாகாதென தனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தான். “தந்தையே, தாங்கள் அளித்தாலொழிய அந்த அருமணிக்கு எந்த மதிப்பும் இல்லை என நான் அறிவேன். ஆம், அதை நான் விழைகிறேன். அதை நீங்கள் எனக்கு அளிப்பதற்காக காத்திருக்கிறேன். ஆனால் அதை நான் எடுக்கவில்லை” என்றான். அவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து “உன்னை கழுவேற்றுவேன். உன் குடியையே முற்றழிப்பேன். எங்கே அது? இப்போதே எனக்கு அதை அளித்தால் நீ உயிர்பிழைப்பாய். உன் குடி எஞ்சும்” என்றார்.

“தந்தையே, நெறிநூல்களைக் கற்றவர் நீங்கள். குற்றம்சாட்டுபவர்தான் சான்றுகளை அளிக்கவேண்டுமென அறியாதவரல்ல” என்றான் சுபோத்யன். “அரசன் குற்றம்சாட்டினால் நெறிகளை நோக்கவேண்டியதில்லை. ஒவ்வாதவன் யாராயினும் அகற்றலாம் என்கின்றது நெறிநூல்” என்று விதுரர் கூவினார். “லகிமாதேவியின் நூல்” என்றான் சுபோத்யன். “ஆம், அதுவே என் நெறிநூல். நான் உன்னை அரசவஞ்சகன் என துரியோதனனிடம் சொல்வேன்… ஏன் சொல்லவேண்டும்? உன்னை கழுவிலேற்ற நான் எவரிடமும் கேட்கவேண்டியதில்லை. நீ சூதன், ஷத்ரியனல்ல” என்றார் விதுரர்.

“சரி, அவ்வண்ணமென்றால் அதை செய்யுங்கள்” என்றபடி சுபோத்யன் திரும்பினான். விதுரர் அவன் தோளைப்பிடித்து வலுவாகத் திருப்பி “அஞ்சுவேன் என எண்ணினாயா? என் அருமணியை மீட்க நான் எதையும் செய்வேன்… ஆம், அதுவே எனக்கு முதன்மை. உறவும் குருதியும் ஒன்றுமல்ல. இப்புவியில் இனி அதுவே எனக்கு எச்சம்” என்றார். “அதை செய்க!” என்றபடி சுபோத்யன் வெளியேறினான். “நான் உன்னை கழுவேற்றுவேன். என் அருமணி இப்போதே என் கைக்கு வரவில்லை என்றால் நீ கழுவிலமர்ந்திருப்பாய்” என்று கூவியபடி பின்னால் சென்ற விதுரர் தன் மேலாடையை எடுத்து தரையில் வீசினார். “நில், நீ என் அருமணியுடன் எங்கும் செல்லவிடமாட்டேன்” என்று உரக்க கூச்சலிட்டார். அவன் சென்றபின் காலால் நிலத்தை ஓங்கி உதைத்து “கொல்வேன், அனைவரையும் கொல்வேன்” என தொண்டை கமற ஓலமிட்டார்.

பின்னர் தளர்ந்து சுவரில் சாய்ந்து நின்றார். கண்களுக்குள் குமிழிகளாக குருதியின் சுழிகளை கண்டார். மீண்டும் அச்சத்தின் அலைபோல, கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வுபோல அருமணியின் நினைவெழ வெளியே ஓடி அங்கே நின்றிருந்த காவலனிடம் “அரண்மனைக்கு செல்! உடனே கனகரை வரச்சொல். என் இரு மைந்தரும் இப்போதே மறிக்கப்படவேண்டும். அவர்களை சிறையிலடைத்தபின் என்னை வந்து பார்க்கச் சொல்!” என்றார். அவன் கண்களில் திகைப்புடன் “அவ்வாறே” என்றான்.

அவன் சென்றபின்னர் தேரைநோக்கிச் சென்று ஏறிக்கொண்டு இருக்கையில் தளர்ந்து அமர்ந்தார். “கோட்டைமுகப்பு” என்றார். தேர் கிளம்பி இளங்காற்று வந்து முகத்திலறைந்தபோது “ஆம், அங்குதான்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். கோட்டைமுகப்புவரை முகத்தை கைகளில் தாங்கி விழிமூடி அமர்ந்திருந்தார். தேர் நின்று பாகன் “வந்துவிட்டோம்” என்றதும் விழிதிறந்து நேர்முன் எழுந்து நின்றிருந்த கைவிடுபடைகளின் முட்செறிவை நோக்கினார். ஒவ்வொரு கூரும் ஒளிகொண்டிருந்தது. குருதி உண்பதற்கான விடாயே ஒளியென்றானதுபோல்.

இறங்கியபோதுதான் தன் உடலில் சால்வை இல்லை என்று தெரிந்தது. கைவிடுபடைகளை அணுகி அவற்றை சுற்றிவந்தார். அவற்றுக்கான பொறுப்புக்காவலன் அவர் அருகே வந்து “அனைத்தும் முற்றொருக்கப்பட்டுள்ளன, அமைச்சரே” என்றான். “காந்தாரப்படைகளின் அணிவகுப்பு முடிந்ததா?” என்று அவர் கேட்டார். அவ்வினாவின் பொருத்தமின்மை துணுக்குறச்செய்ய அவன் பொதுவாக தலையசைத்தான். அவர் மேலே நோக்கியபோது வேல்முனைகள் வானை குத்தி நின்றிருந்ததை கண்டார். கீழே அவற்றின் நிழல்கள். ஒவ்வொரு நிழலாக அவர்மேல் விழுந்து வருடி அகல மெல்ல அவற்றின் கீழே நடந்தார். கூர்நிழலின் தொடுகை உடல்சிலிர்க்கச் செய்தது.

அப்பால் புரவியில் கனகர் வருவது தெரிந்தது. புரவியிலிருந்து இறங்கி அவரை அணுகி வந்து வணங்கி “ஆணை பெற்றேன், அவர்களை சிறையிட்டுவிட்டு வருகிறேன்” என்றார். “ஆம், அவர்கள் உண்மை சொல்ல மறுக்கிறார்கள்” என்றார். பின்னர் “எவராயினும் திருட்டு குற்றமே. என் அருமணியை இருவரும் திருடினர்” என்றார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. ஒருகணம் அந்த மணி அவர் விழிமுன் என தெரிந்து மறைந்தது. இனி அதை பார்க்கவே போவதில்லை. இனி அதற்கும் அவருக்கும் உறவில்லை. சீற்றத்துடன் திரும்பி “அவர்கள் இருவரையும் தலைகொய்தெறிய ஆணையிடுகிறேன்” என்றார்.

கனகர் “அமைச்சரே…” என்றார். விதுரர் தன் கணையாழியை அவர்முன் தூக்கிக் காட்டி “இது என் ஆணை. அஸ்தினபுரியின் பேரமைச்சரின் ஆணை… செல்க! இப்போதே அவர்களின் தலைகள் கொய்துவீசப்படவேண்டும்” என்று உரக்க வீறிட்டார். “செல்க… மறுசொல் இல்லை! செல்க!” கனகர் தலைவணங்கி திரும்பிச்சென்று புரவியில் ஏறி மறையும் வரை அவர் தசைகள் தளரவில்லை. பின்னர் களைப்புடன் நடந்து கைவிடுபடைகளை நோக்கியபடி சுற்றிவந்தார். உடன்வந்த காவலனை விலகிச்செல்லும்படி கைகாட்டினார். உடலெங்கும் களைப்பு பரவியிருந்தது. படைக்கலங்கள் பேணும் நான்கு கட்டடங்கள் நின்றன. அதற்கப்பால் ஒரு சிற்றறை. அதன் கதவு திறந்திருந்தது.

அதன் முன் அவர் நின்று நோக்கினார். உள்ளே எவரோ இருப்பது போலிருந்தது. இருளசைவென ஒன்று தெரிந்தது. அணுகி அதற்குள் நோக்கினார். எவருமில்லை என விழிசொன்னாலும் எவரையோ உணர்வுகள் அறிந்தன. மெல்ல உள்ளே சென்றார். சிறிய அறை அது. உடைந்த செங்கல் படிக்கட்டுகள் இறங்கிச்சென்று ஆழமான குழிபோன்ற அறையை அடைந்தன. அங்கே கைவிடுபடைகளுக்குரிய துருப்பிடித்த அம்புகள் குவிந்திருந்தன. அங்கே இருளில் ஒருவர் நிற்பது தெரிந்தது. “யார்?” என்றார். ஓசையில்லை எனக் கண்டு மேலும் உரக்க “யார்?” என்றார்.

இறங்கிச்சென்றபோது படிகள் சற்று பெயர்ந்தன. கீழே சென்றபோது அங்கு எவருமில்லை என தெரிந்தது. மேலே நின்றிருந்தபோது விழுந்த தன் நிழல்போலும் அது. திரும்பிவிடலாமென்று எண்ணி படியில் ஏறினார். என்ன பித்து இது என்னும் எண்ணம் வந்தது. இதை ஏன் செய்தேன்? இதைவிட பெரிதொன்றை செய்திருக்கிறேன். அக்கணம் அலையலையென அனைத்தும் விரிந்து அவரை சூழ்ந்தது. உடல் துள்ளித்துடிக்க அவர் செங்கல் படிகளில் ஏறினார். இந்நேரம் கனகர் சென்றுவிட்டிருப்பார். அவரை நிறுத்தவேண்டும். காவலனிடம் செய்திப்புறா இருக்கும். இல்லை, அது செல்ல பொழுதாகும். ஆணைமுரசு ஒலிக்கட்டும். முரசுமேடை அருகேதான். அங்கே செல்ல எவ்வளவு பொழுதாகும்?

படிக்கட்டின் செங்கல் ஒன்று பெயர்ந்து அவரை நிலைபிறழச் செய்தது. கைநீட்டி சுவரைப் பற்ற முயன்றபோது அது அவரை சரிக்க தள்ளாடி கீழே ஈரத்தரையில் செத்தைச்சருகுகள்மேல் விழுந்தார். முனகியபடி திரும்பி எழுந்தபோது அவருடைய உடல்பட்டு நாட்டப்பட்டிருந்த மூங்கில்தூண் ஒன்று சரிந்தது. “யாரங்கே? காவலர்களே…” என்று கூவினார். அவருடைய ஓசை மேலெழவில்லை  மேலே திறந்திருந்த கதவு காற்றிலறைபட்டதென மூடிக்கொண்டது. அதற்கப்பால் தாழ்விழும் ஓசையை அவர் கேட்டார்.