இமைக்கணம் - 12
பீஷ்மரின் அருகே வந்து மேலிருந்து குனிந்து நோக்கிய இளைய யாதவர் “பிதாமகரே” என்று அழைத்தார். “யாதவரே, இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிடும்… என்னை மீட்டெடும்” என்று பீஷ்மர் கூவினார். அவர் புன்னகைத்து “மிக எளிது அது பிதாமகரே, கிளம்பிச் செல்வதில்லை என முடிவெடுங்கள். அனைத்தும் நீங்கள் செல்வதை தடுக்கும்பொருட்டு எழுந்தவை அல்லவா?” என்றார். “ஆம், நான் செல்லப்போவதில்லை” என்றதுமே பீஷ்மர் தன்மேல் மரநிழல்கள் விழுந்துகிடப்பதை கண்டார். அனைத்தும் விழிமயக்கா என திகைத்தபின் எழுந்து நின்று புழுதியைத் தட்டியபடி “கனவு!” என்றார்.
“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “நனவுகளின் கூர்முடிச்சுக்களை கனவென்கிறோம்.” பீஷ்மர் “யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா?” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது!” என்றார் பீஷ்மர். “அறுக்கமுயலாதவரை அந்த வலை இல்லை என்றே இருக்கும்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் பெருமூச்செறிந்தார்.
“வருக!” என்று சொல்லி இளைய யாதவர் நடக்க பீஷ்மர் பின்னால் சென்றார். அவர்கள் மீண்டும் குடில்வாயிலை அடைந்தனர். இளைய யாதவர் படியிலேறி உள்ளே செல்ல பீஷ்மர் முற்றத்திலேயே நின்றார். “வருக!” என்று திரும்பிநோக்கி இளைய யாதவர் அழைக்க பீஷ்மர் தயங்கிய காலடிகளை எடுத்துவைத்து உள்ளே சென்றார். இளைய யாதவர் மீண்டும் தன் தர்ப்பைப்பாயில் அமர்ந்தார். பீஷ்மர் அவரை நோக்காமல் அவர் முன் அமர்ந்து கால்களை முன்பெனவே மடித்துக்கொண்டார். அவர் பேசுவார் என சற்று எதிர்பார்த்தபின் இளைய யாதவர் “செல்வது எளிதல்ல, பிதாமகரே” என்றார்.
“ஆனால் சென்றுகொண்டேதான் இருக்கிறார்கள்” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் அவர்களின் வழி வேறு” என்றார் இளைய யாதவர். “அவர்களை தளைகள் பூட்டுவதில்லையா?” என்று பீஷ்மர் கேட்டார். “அவர்களுக்கிருக்கும் தவவல்லமை எனக்கில்லை என்கிறீர்களா?” இளைய யாதவர் சிரித்து “பிதாமகரே, ஒவ்வொரு வழியிலும் அதற்குரிய தவம் தேவையாகின்றது. மைந்தரைப்பெற்று பொருளீட்டி வளர்த்து குடிப்பொறுப்புகளை முழுமைசெய்து ஓய்ந்து குலம்பெருகக் கண்டு நிறைவடையும் எளிய உலகியலான் இயற்றுவதும் தவமே” என்றார். “துறப்போர் துறக்கமுடிவது அவர்கள் எய்தவிருப்பது துறந்தபின்னர்தான் என்பதனால்தான்.”
அவர் சொன்னதை சற்றுநேரம் எண்ணி நோக்கியபின் “நான் எய்தவிருப்பது செயல்தளத்தில்தான் என்கிறீர்களா?” என்றார். “ஆம், ஆகவேதான் ஒவ்வொரு துறவிலிருந்தும் திரும்பி வருகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அவ்வண்ணமென்றால் ஞானமும் தவமும் வீடுபேறும் எனக்கில்லையா?” என்று பீஷ்மர் கேட்டார். “காங்கேயரே, அன்னமென்பது என்ன?” என்றார் இளைய யாதவர். “உண்ணப்படுவது” என்றார் பீஷ்மர் புரியாதவராக. “உண்ணப்படாத ஏதாவது இப்புவியில் உண்டா?” என்றார் இளைய யாதவர். அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு “இல்லை” என்று பெருமூச்சாக முனகினார் பீஷ்மர்.
“மலர்த்தேனும் மண்ணில் மட்கும் மாசும் அன்னமே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிருக்கு அமுது. ஒன்றை பிறிது கொள்ளலாகாது” என்று இளைய யாதவர் சொன்னார். “உங்கள் வழியேதென்று தேர்க! அது அம்புகளின் வழி.” பீஷ்மர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “அம்புகளின்றி நீங்கள் இருந்ததே இல்லை, மூத்தவரே” என்றார் இளைய யாதவர். அவர் கை அன்னக்குஞ்சின் மென்தூவியை என தாடியை நீவிக்கொண்டிருந்தது.
பின்னர் விழிதூக்கி “நான் கேட்பது ஒன்றே, யாதவரே. நீர் பன்னிரு தலைமுறைகளாக மெய்யுசாவும் சாந்தீபனிக் குருநிலையின் முதலாசிரியன். அறிதலைவிட ஆற்றுதல் மேலென்று எண்ணவில்லையா?” என்றார். “ஆம், மேல்தான்” என்றார் இளைய யாதவர். “ஊர்தலைவிட நடத்தல் மேல். பறத்தல் அதனினும் மேல்.”
பீஷ்மர் சினம் மின்னியணைந்த விழிகளுடன் நோக்கினார். “ஆனால் ஊர்வது விழுவதேயில்லை. நடப்பது எளிதில் ஓய்வதில்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தபோது தலையை அசைத்தார். “செயலைவிட அறிவே மேலென்றால் அறிவுடையோரும் அறிவிலாரும் ஒன்றென்றே நின்று இயற்றும் இச்செயலுக்கு ஏன் என்னை செலுத்துகிறீர்? சொற்சிடுக்கால் என் சித்தம் மயங்கச்செய்கிறீர். சொல்க, நான் இயற்றவேண்டியது என்ன?”
“தேவவிரதரே, இரு கைகளுமில்லாத ஒருவர் உங்களைவிட விற்தொழில் அறிந்திருக்கக் கூடுமா?” என்றார் இளைய யாதவர். “அதெங்ஙனம்?” என்றார் பீஷ்மர் திகைப்புடன். “இருக்கிறார், அவர் பெயர் கண்டகர். அவரிடம் சென்று அவ்விற்தொழிலை அவர் எங்ஙனம் கற்றார் என்று அறிந்துவருக!” என்றார் இளைய யாதவர். “உளம்கூர்க! இது இமைப்பொழுதில் காலம் கடக்கும் காடு.”
பீஷ்மர் எண்ணிய கணமே வேசரநாட்டில் விற்தொழில் கற்பிக்கப்பட்ட ஒரு குருநிலையில் நின்றிருந்தார். வில்வேதம் தேர்ந்த முனிவர்போல் உடையணிந்து, பிறிதொரு முகமும் உயரமற்ற உடலும் கொண்டிருந்தார். அங்கே ஒரு மரப்பீடத்தில் பிறவியிலேயே இரு கைகளுமில்லாதவரான கண்டகர் அமர்ந்து அவர் முன் வில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களுக்கு சொற்களால் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பால் நின்று அச்சொற்களைக் கேட்ட பீஷ்மர் சில கணங்களுக்குப்பின் மொழியினூடாக அங்கே வில்வளைந்து அம்பு தொடுக்கப்பட்டு இலக்குகள் வெல்லப்படுவதைக் கண்டு திகைத்தார்.
அருகணைந்த பீஷ்மர் “ஆசிரியரே, என் பெயர் தேவவிரதன். வடநாட்டு காமத்துறப்பு நெறியன். கைகளில்லாமல் எங்ஙனம் விற்தொழில் அறிந்தீர் என்று நான் அறியலாமா?” என்றார். கண்டகர் “நான் கௌதம முனிவரின் மாணவனாக வடக்கே அஸ்தினபுரிக்கு அண்மையிலிருந்த சாரதம் என்னும் காட்டில் தவம் செய்தேன். ஒருமுறை அங்கே ஆற்றினூடாக படகில் செல்கையில் கரையில் அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மர் வில்பழகுவதை கண்டேன். அவர் ஓர் அம்புவிடுவதற்குள் நான் கடந்துசென்றேன். ஆனால் அக்காட்சி என்னுள்ளத்தில் ஆழப் பதிந்தது. அதை விரித்து என் கனவில் வரைந்துகொண்டேன். அதிலிருந்து முன்னும் பின்னும் சென்று அக்கலையின் அனைத்து நிலைகளையும் உய்த்தறிந்து கற்றேன்” என்றார்.
பீஷ்மர் திகைப்புடன் பணிந்து நிற்க “கனவுக்குள் இருந்து காட்சியை எடுக்கிறேன். அதை சொல்லென்றாக்கி ஆழத்திற்கு மீண்டும் செலுத்துகிறேன். அங்கு அது பெருகி துரியத்தை அடைகிறது. ஒன்று பல்லாயிரமென திரும்பி வருகிறது. முனிவரே, ஒவ்வொருநாளும் வில்வேதம் என் நாவிலெழுந்தபடியே இருக்கிறது. வில்வேதம் சார்ந்த பன்னிரு நூல்களை யாத்தேன். இங்கே மூன்று தலைமுறைகளாக என் நூல்களினூடாகவே அனைவரும் விற்தொழில் பயில்கின்றனர்” என்று கண்டகர் கூறினார்.
“கண்டகரே, நீங்கள் ஒருமுறையேனும் அம்பையோ வில்லையோ தொட்டதுண்டா?” என்றார் பீஷ்மர். “இல்லை” என்றார் கண்டகர். பின்னர் புன்னகையுடன் “வில்லென்றும் அம்பென்றும் மூங்கிலிலும் இரும்பிலும் புல்லிலும் எழுவது என்ன? அவையென்று ஆன சொல் அல்லவா? ஒவ்வொருநாளும் அவற்றின் விசையறியாது, கூர்தீண்டாது நான் இருந்ததில்லை” என்றார். பீஷ்மர் “ஆனால் ஓர் எதிரி வில்லம்பு கொண்டு உங்களை கொல்லவந்தால் இச்சொல் எழுந்து காக்குமா என்ன?” என்றார். “என்னை கொல்க!” என்றார் கண்டகர். பீஷ்மர் தயங்க “தயங்கவேண்டாம், முயல்க!” என்றார்.
பீஷ்மர் தன் வில்லை எடுத்து கணப்பொழுதில் அம்புதொடுத்து எய்தார். அகல்சுடர்போல இயல்பாக வளைந்து அம்பை தவிர்த்தார் கண்டகர். சீற்றம்கொண்டு அம்புகளை தொடுத்துக்கொண்டே இருந்தார் பீஷ்மர். கை ஓய்ந்து அவர் வில்தாழ்த்தியபோது ஓர் அம்புகூட தைக்காத உடலுடன் புன்னகைத்தபடி கண்டகர் நின்றிருந்தார். பீஷ்மர் சிறுமைகொண்டு உதட்டை கடித்தார். “நாணவேண்டாம் முனிவரே, இது விற்கலையின் அடுத்த நிலை. நீங்கள் வில்லேந்தும் கோணம் அம்பின் இயல்பு தோள்தசைகளின் இறுக்கம் விரல்களின் விசை என அனைத்தையும் ஒருகணத்தில் கண்டு அந்த அம்பு எழுவதற்குள் அது சென்று தைக்கும் இடத்தை என்னால் கணிக்க முடியும்.”
கைகளில்லாத அந்த உடல் ஆடிய அழகிய நடனத்தை ஒருகணத்தில் திரும்பச்சென்று கண்ட பீஷ்மர் எய்பவனின் இடத்திலிருந்தே விற்கலையை அதுவரை அவர் அறிந்திருந்ததை உணர்ந்தார். கொள்பவரின் நிலையிலிருந்து முழு விற்கலையையும் ஒரு கணம் நோக்கினார். “வணங்குகிறேன், மெய்யறிவரே. வில்லினூடாக காலம் கடக்கலாகும் என்று இன்று அறிந்தேன்” என்றார். “வில்முனிவரே, அறிவென்று இங்குள்ள அனைத்தும் காலம்கடப்பதற்கானவையே. செல்காலத்தை இக்கணக் காலத்தினூடாக வருகாலத்துடன் இணைப்பதையே எண்ணுதல் என்கிறோம். எண்ணியறியும் மெய்மையெல்லாம் ஒருவழிப்பாதையே” என்றார் கண்டகர்.
“இவ்வில்லை நான் கையினால் அறிந்ததில் இருந்து எவ்வகையில் தாங்கள் அறிவது வேறுபடுகிறது?” என்றார் பீஷ்மர். “முனிவரே, வில்லை கையில் ஏந்துகையில் அதன் பொருண்மையை தொடுகிறீர்கள். எனவே பருப்பொருளென்று அது தன்னை காட்டுகிறது. சூழநோக்குக! இங்குள்ள பொருட்களனைத்தும் கணமொழியாது விரிந்தும் பிரிந்தும் வளர்ந்தும் பெருகிப் பரவிக்கொண்டிருக்கின்றன. பருப்பொருளுக்கும் பிரம்மம் அளித்த ஆணை அது. பெருகுதலென்னும் செயலே பருப்பொருள். செயலின்றி அதற்கு இருப்பென்பதில்லை. பருப்பொருளை அறியத் தொடங்குபவன் அதன் செயல்பின்னலையே சென்றடைகிறான். முடிவிலாது பெருகிக்கொண்டிருக்கிறது அவன் அறிதல்.”
“நான் அறிந்தது வில்லெனும் பருப்பொருளின் உட்பொருளை. அது இணைந்தும் நிறைத்தும் கூர்ந்தும் தன்னை ஒன்றாக்கிக்கொள்ளும் தன்மைகொண்டது” என்று கண்டகர் தொடர்ந்தார். “வில்லே மலையென்றும் அலையென்றும் முகிலென்றும் தழலென்றும் அறிந்தேன். அறிந்தறிந்து அதன் ஆழ்நெறியே அதுவென்று சென்று நின்றேன்” என்றார் கண்டகர். “பருப்பொருளை அறிபவன் அதனுடன் ஆடுகிறான். உட்பொருளை அறிபவன் அதுவாகிறான்.” பீஷ்மர் தலைவணங்கி “தெளிந்தேன் அறிவரே, இத்தருணத்தை என் குடித்தெய்வங்கள் எனக்கு அருளின” என்றார்.
மறுகணம் முன்னால் நின்ற இளைய யாதவரை நோக்கி “விந்தை!” என்றார் பீஷ்மர். இளைய யாதவர் “அதனினும் விந்தை ஒன்றை காண்க! வில்மெய்மை துறைபோகிய கண்டகரை விடவும் அப்பால் சென்றவர் காலகண்டர் என்னும் முனிவர். கோடிமுறை எய்தாலும் இலக்கு பிழைக்காத வில்கொண்டவர். சென்று அவரை கண்டுவருக!” என்றார். “ஆம்” என்றதுமே பீஷ்மர் அங்கு நின்றிருந்தார். அது அரையிருள் நிறைந்திருந்த மலைக்குகை. புலித்தோல்மேல் கால்மடித்தமர்ந்து ஊழ்கத்திலிருந்தார் காலகண்டர். பீஷ்மர் அவர் அருகே சென்று பணிந்து “முனிவரே” என்று அழைத்தார். அவர் அவ்வழைப்பை கேட்கவில்லை. கோடிமுறை அழைத்தபோது அவர் விழிகள் அசைந்தன. முகம் மீண்டுவருவதைக் காட்டியது.
முனிவர் விழிதிறந்ததும்தான் அவருக்கு பார்வையில்லை என்பதை பீஷ்மர் உணர்ந்தார். அவரை வணங்கி “முனிவரே, வில்லாடலை ஊழ்கமெனக் கொண்ட என் பெயர் தேவவிரதன். தங்களைக் கண்டு தாங்கள் அறிந்த மெய்மையை உணர்ந்துவர விழைந்து வந்தவன். தாங்கள் என்னைப்போல் வில்லூழ்கம் இயற்றுபவர் என்று அறிந்தேன்” என்றார். “ஆம், என் வழி வில்பயில்தலே” என்றார் காலகண்டர். பீஷ்மர் அவரைச்சுற்றி நோக்கியபின் “இங்கே வில்லென்று ஏதுமில்லையே” என்றார். “நான் வில்லை கண்டதேயில்லை” என்றார் காலகண்டர்.
அம்மறுமொழியை பீஷ்மர் எதிர்பார்த்திருந்தார். “விழியின்மையால் வில்லை தெய்வம் என உருவகம் செய்து உள்ளத்தில் பயில்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதை எவ்வண்ணம் அடைந்தீர்கள் என்று உரைக்கவேண்டும்” என்றார். காலகண்டர் “நெடுங்காலம் முன்பு நான் என் ஆசிரியரான பிரசண்ட கௌசிகரிடம் ஊழ்கம் பயின்ற நாளில் அவருக்கும் மாணவர்களுக்கும் உணவு இரக்கும்பொருட்டு எங்கள் ஊழ்கநிலை இருந்த காட்டுக்கு அருகே இருந்த சிற்றூருக்குச் சென்றேன். அங்கே வில்வேதநிலை ஒன்றில் கண்டகர் என்னும் கைகளில்லாத வில்வேத அறிவர் தன் மாணவருக்கு வில்நெறியை சொல்லில் அளிப்பதை கேட்டேன்” என்றார்.
“கடந்து செல்கையில் எட்டு சொற்களை நான் கேட்டேன். அவை எனக்கென்றே சொல்லப்பட்டவை என்று தோன்றின. மீண்டு வரும்வரை அச்சொற்களிலேயே இருந்தேன். என் ஆசிரியரிடம் அச்சொற்களில் அக்காட்டைவிட மிகுதியான ஊடுவழிகள் இருப்பதை சொன்னேன். அவையே என் ஊழ்கநுண்சொற்கள் எனக்கொள்ளும்படி எனக்கு அவர் அருள்புரிந்தார். அச்சொற்களுடன் இங்கு வந்தமர்ந்தேன். அதனூடாக நெடுந்தொலைவு சென்றேன்” என்றார் காலகண்டர். “நான் அடைந்தவை அனைத்தும் என் அம்புகள் சென்று சேர்ந்த முடிவிலி எனக்கு அருளியவையே.”
பீஷ்மர் “உள்ளே நிகழும் விற்கலையால் எதிரியுடன் பொருதுவது எவ்வாறு?” என்றார். “என் எதிரியென்றாகுக!” என்றார் காலகண்டர். பீஷ்மர் தன் கையை அம்புக்கென எடுப்பதற்குள்ளாகவே காலகண்டர் அந்த அம்பை சொல்லால் சுட்டினார். திகைத்த கையை நிறுத்தி பிறிதொன்றை அவர் எண்ணிய அதே கணம் அதை சொன்னார் காலகண்டர். மேலும் அவர் எடுக்கவிருக்கும் அம்புகளை சொல்லலானார். “எப்படி இது?” என்று பீஷ்மர் திகைத்தார். “தேவவிரதரே, என் எதிரி நானே. இத்தனை அம்புகளால் நான் என்னுடன்தான் பொருதுகிறேன்” என்றார் காலகண்டர்.
பீஷ்மர் “சொல்க, கண்டகர் தன் சொற்களால் அறிந்த வில்வேதத்திற்கும் நீங்கள் அறிவதற்கும் என்ன வேறுபாடு?” என்றார். “சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது. சொல்லில் இருந்து ஒலியை அகற்றுவதே என் ஊழ்கம்” என்றார் காலகண்டர்.
பீஷ்மர் மீண்டு வந்து இளைய யாதவர் முன் நின்றார். “ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “செயலொருமையால் எய்துவதைவிட மெய்யறிவால் எய்துவது அரியது. அதைவிட ஊழ்கத்தால் எய்துவது அரியது. அரியவை என்பதனாலேயே அவை அனைவருக்கும் உரியவையல்ல. உங்கள் வழி செயலே என்று தெளிக! செயலினூடாக சென்றடைக!”
பீஷ்மர் அவர் விழிகளை குனிந்து நோக்கி ஆழ்ந்த குரலில் “ஒவ்வொரு செயலும் ஒருநூறெனத் திரும்பிவரும் இவ்வெளியில் செயலாற்றி முடியும் நிலை உண்டா? ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர் செய்யப்பட்டிருக்கையில் இறுதியில் அடைவதொன்று உண்டா?” என்றார். “ஆம், செயல் யோகமென்றாகுகையில்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார்.
“நெறிநிலை கொண்டவரே, முன்பு விதேகத்தை ஆண்ட ஜனகரின் கதையை அறிந்திருப்பீர்கள். விஷ்ணு, பிரம்மா, மரீசி, காசியபர், விவஸ்வான், வைவஸ்வதன் எனத் தொடரும் பிரஜாபதி நிரையிலிருந்து இக்ஷ்வாகுகுலம் எழுந்தது. அதில் நிமி என்னும் மைந்தன் பிறந்தான். இந்த நைமிஷாரண்யம் அவனால் உருவானது என்றும் ஒரு சூதர்கதை உண்டு. நிமி மைந்தனில்லாமல் இறந்தான். அவன் குலம் அழியலாகாதென்று விழைந்த முனிவர்கள் அவன் உடலில் இருந்து உயிர்த்துளியை எடுத்து புடமிட்டுப் பேணி அவன் துணைவியின் வயிற்றில் ஒரு மைந்தனை உருவாக்கினர்.”
“உடலிறந்தும் உயிருடன் இருந்தான் என்பதனால் நிமி விதேகன் என்று அழைக்கப்பட்டான். அந்நாடு அப்பெயர் பெற்றது. பாலில் வெண்ணையென தந்தையின் உடலில் கடைந்தெடுக்கப்பட்டு பிறந்தவன் என்பதனால் அவன் மைந்தன் மிதிஜனகன் என்று பெயர்கொண்டான். அம்மைந்தனும் அவன் குலமும் ஜனகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.”
“உடலில்லாது பிறந்தவர்கள் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் உடலுக்குள் உடலிலியை உணர்ந்து நிலைகொள்ளும் தவவல்லமை பிறவியிலேயே வந்தது. அவர்கள் அரசகட்டிலில் துறவிகளாக, மஞ்சத்தில் துணைவியருடன் இருக்கையிலும் காமத்துறப்பு கொண்டவர்களாக, போர்க்களத்திலும் ஊழ்கத்திலமைபவர்களாக இருந்தனர். புகழ்பெற்ற ரகுகுலத்து அரசன் ராமனின் துணைவி சீதையின் தந்தையாகிய ஸீரத்வஜன் என்னும் ஜனகனைப்பற்றி காவியங்களில் இருந்து அறிந்திருப்பீர்கள்.”
“அறத்தில் நின்ற அரசமுனிவர்களாகிய பன்னிரு ஜனகர்களை மெய்நூல்கள் குறிப்பிடுகின்றன” என்று இளைய யாதவர் சொன்னார். பீஷ்மர் ஆமென தலையசைத்தார். “உதாவசு, நந்திவர்த்தனன், சுகேது, தேவராதன், பிருஹத்ரதன், மகாவீரன், சத்ருதி, திருஷ்டகேது, ஹரியஸ்வன், மரு, பிரதிந்தகன், கீர்த்திரதன், தேவமிடன், விபுதன், மஹித்ருகன், கீர்த்திராதன், மகாரோமன், சுவர்ணரோமன் என்னும் கொடிவழியில் வந்தவர் தர்மத்வஜன் என்னும் ஜனகர். இவர் ஹ்ருஸ்வரோமன் என்றும் அழைக்கப்பட்டார். இவருடைய மைந்தரே சீதையின் தந்தையாகிய ஸீரத்வஜ ஜனகர்” என்றார் இளைய யாதவர்.
ஜனகர்களில் முதன்மையானவர் என்று அவரைப்பற்றி நூல்கள் சொல்கின்றன. மகாஜனகர் என்னும் சொல்லால் மட்டுமே அவர் குறிப்பிடப்படுகிறார். விதேகத்தை அவர் ஆண்டுவரும் நாளில் சுலபை என்னும் முதுமகள் அவரை காண வந்தாள். அவர்கள் பேசிய கருத்துக்கள் சுலபாதந்த்ரம் என்னும் நூலென பயிலப்படுகின்றன.
நூறாண்டுகாலம் பாரதப்பெருவிரிவில் அலைந்தவள் அவள். மெய்மையை அறிதல் என்றன்றி பிறிதேதும் வாழ்விலக்கெனக் கொள்ளாதவள். ஒவ்வொரு அறிதலாலும் மேலும் மேலும் அவள் மெய்மை மேல் நம்பிக்கையை இழந்தாள். தண்டகாரண்யத்தில் அவள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவள் நிழல்பட்டு இலைகள் வளைவதை அங்கு தவம்செய்துகொண்டிருந்த முனிவரான அஷ்டவக்ரர் கண்டார். திகைப்புடன் தன் மாணவர்களை அனுப்பி அவளை அழைத்துவரச் செய்தார்.
அவள் மிக மெல்ல காலடி வைத்து நடந்து வந்தபோது நூறுமடங்கு எடைகொண்டவள்போல் அவள் கால்கள் மண்ணில் புதைந்ததை கண்டார். அவள் அவர்முன் அமர்ந்த கற்பாறை சேற்றுப்பரப்பென நெகிழ்ந்து குழிந்தது. அஷ்டவக்ரர் அவ்விந்தை நிகழ்வு ஏன் என அவளிடம் கேட்டார். “முனிவரே, நான் நூறாண்டுகளாக மெய்மையைத் தேடி அலைபவள். அனைத்துக் குருநிலைகளிலும் சென்று தத்துவங்கள் அனைத்தையும் கற்றேன். ஒவ்வொரு அறிதலும் அறிபவனால் ஆக்கப்படுவதே என்றுதான் இன்றுவரை கண்டறிந்தேன். தன்னை அகற்றி மெய்மையின் முன் நின்று அறியும் ஒருவரைத் தேடி அலைந்தேன். கற்றவை என்னுள் பெருகிப்பெருகி எடைகொண்டன” என்றாள் சுலபை.
“கற்றவற்றில் சிலவற்றைக் கைவிடுக! உன் எடையை குறைக்கலாகும்” என்றார் அஷ்டவக்ரர். “அதற்கு பலவாறாக முயன்றேன். நான் கற்ற ஒவ்வொன்றையும் எனதென்று ஆக்கி உள்ளே தேக்கியிருக்கிறேன். அவை அனைத்திலும் நான் உள்ளேன். என்னில் ஒரு துளியையும் என்னால் விட இயலவில்லை” என்று அவள் சொன்னாள். “அது உன் எண்ணத்தால். கைவிடுவது எளிது” என்றார் அஷ்டவக்ரர். “அறிந்ததைக் கைவிடாமல் அறிபவர் அறிந்ததையே மீண்டும் அறிகிறார்.”
சீற்றத்துடன் சுலபை “மண்ணில் உடலுடன் உள்ளத்துடன் வாழும் எந்த மானுடராலும் தன்னை கைவிட முடியாது” என்றாள். “புவியில் மானுடருக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்தையும் அறிந்து துய்த்தபடி முற்றிலும் தன்னை கைவிட்டு அமர்ந்திருப்போர் உண்டு” என்றார் அஷ்டவக்ரர். ஐயம்கொண்டு நோக்கிய சுலபையிடம் “செல்க, விதேகத்தை ஆளும் ஜனகராகிய ஸீரத்வஜரை வணங்குக! தன்னைக் கைவிடும் கலையை கற்றுக்கொள்வாய். முற்றாக தன்னைக் கைவிட்டபின் எஞ்சுவதென்னவோ அதுவே உனக்கான மெய்மை என்று அறிவாய்” என்றார்.
சுலபை தான் கற்ற மாயத்திறனால் பேரழகுமிக்க இளம்பாணினியாக மாறி மிதிலையை வந்தடைந்தாள். அரசருடன் காவியச்சொல்லாட விழைவதாகச் சொல்லி ஜனகரின் அவையை அடைந்தாள். ஜனகரின் அவையிலமர்ந்ததும் அவள் அவரிடம் தன் முதல் வினாவை கேட்டாள். “உயிர்களின் உடல்வடிவை அமைப்பது எது?” ஜனகர் “அவற்றின் உணவு” என்றார். “அவற்றின் உள்ளமைந்த விழைவு அல்லவா?” என்று அவள் கேட்டாள். “விழைவு அவற்றின் உள்ளத்தை அமைக்கிறது. உள்ளம் உடலின் வடிவைச் சூடுவதேயில்லை” என்றார் ஜனகர்.
“முற்றிலும் தூய உணவு எது?” என்று அவள் இரண்டாவது வினாவை கேட்டாள். “முற்றிலும் சுவையறியாமல் உண்ணப்படுவது” என்று அவர் சொன்னார். அவள் “சுவையல்லவா உணவின் இயல்பு?” என்றாள். “இல்லை, பெரும்பசி கொண்டவன் உயிர்வாழும்பொருட்டே உண்கிறான்” என்றார். “பசித்து உண்ணும் உணவு சுவைமிக்கதல்லவா?” என்றாள். “இல்லை, உயிர்கொண்ட பெரும்பசி சுவையறியாது. ஏனென்றால் அது உடல்கடந்தது” என்றார் ஜனகர்.
“முற்றிலும் தனியர் எவர்?” என்று சுலபை இறுதியாக கேட்டாள். “அனைத்தையும் ஆற்றுவோனும், எதையும் ஆற்றாதவனும்” என்றார் ஜனகர். “ஆற்றுபவன் எப்படி தனித்திருக்கவியலும்?” என்றாள். “ஏதேனும் ஒரு செயலில் மகிழ்ந்து ஒன்றுபவன் அச்செயலால் பின்னப்படுகிறான். எதிலும் ஒட்டாதவனே அனைத்தையும் இயற்றுகிறான்” என்று ஜனகர் சொன்னார்.
மூன்று வினாக்களிலிருந்தும் அவருடைய கொள்கையை உணர்ந்துகொண்ட சுலபை “கொள்கையென எவர் சொல்வதும் சொல்பவரின் தன்னிலையின் ஒருமுகத்தை மட்டும்தான். தானற்ற அறிதல் மானுடருக்கு இயல்வதேயல்ல” என்றாள். ஜனகர் “இவ்வுடலில் இவ்வண்ணம் இருந்து நான் அறிவதையே எவ்வுடலிலும் எச்சூழலிலும் இருந்து அறிவேன்” என்றார். “அவ்வாறென்றால் ஆயிரம் முனிவர் அறிந்து சொல்லும் மெய்மை ஆயிரம் கோணத்தில் அமைவதெப்படி?” என்றாள் சுலபை. “ஆயிரத்திலும் நடுவென ஓடுவதே அவர்கள் அறிந்த மெய்மை. ஆயிரமெனக் காட்டுவது அவர்கள் சொல்லும் மெய்மை” என்றார் ஜனகர்.
சுலபை “மன்னரே, மண்ணுக்கு வரும் குழவி ஒன்றென்றிருப்பதில்லை. அதன் விழிகளும் கைகளும் கால்களும் வாயும் செவியும் தனித்தனியாகவே இருக்கின்றன. வெளியுலகை நோக்கி தன்னை குவித்துக்குவித்து உடலைத் தொகுத்து உருவம் கொள்கிறது. உடலைத் தொகுக்கும்போதே அது தன்னையும் வகுத்துக்கொள்கிறது. தன்னிலை அறிவாவதில்லை. அறிவே தன்னிலையை படைக்கிறது. அறிவும் தன்னிலையும் வெவ்வேறல்ல. எனவே தன்னிலை அற்ற அறிவென்பதில்லை” என்றாள்.
ஜனகர் “எந்த மானுட உடலும் தன்னை நாயென்றும் காகமென்றும் வகுத்துக்கொள்வதில்லை. ஆணென்றும் பெண்ணென்றும்கூட அறிவதில்லை. உடலென ஆகும் அறிவுகொள்ளும் பொதுமையே அறிவென்பது. அது உடல்கடந்தது. உடலில் எழுவது” என்றார் ஜனகர்.
அவர் சொல்வனவற்றை உள்புகுந்தறிய விரும்பிய சுலபை அவர் விழிகளை கூர்ந்து நோக்கி தன் மாயத்தால் அவர் உடலுக்குள் அக்கணமே புகுந்துகொண்டாள். அவரென அமர்ந்து அத்தருணத்தில் திகழ்ந்த அறிவை அடைந்தாள். எதிரில் சுலபையின் உடலில் அமைந்திருந்த ஜனகர் அவளை நோக்கி “தன்னிலையே மெய்மை என்றால் தன்னிலை அழிகையில் மெய்மை மறையவேண்டும். ஆனால் தன்னிலை மறையும்போதெல்லாம் மெய்மை தங்கத்தாதுவிலிருந்து மண் உருகி அகன்றபின்பு என மேலும் தனித்தூய்மையையே கொள்கிறது” என்றார்.
“அவர் உடல்மாறியதையே அறிந்திருக்கவில்லை என்பதை சுலபை அறிந்தாள். திகைத்து அதற்கு மறுமொழி சொன்னாள்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் அவரை விழிகள் நிலைத்திருக்க நோக்கிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் “பிதாமகரே, சுலபை எந்நிலையில் நின்று மறுமொழி சொல்லியிருப்பாள்?” என்றார். “அவள் தானறிந்த மெய்மையையே சொல்லியிருப்பாள். ஏனென்றால் உடலால் மெய்மை மாறுவதில்லை என்றுதான் இக்கதை சொல்கிறது” என்றார் பீஷ்மர்.
இளைய யாதவர் சிரித்து “இல்லை, ஜனகர் சொல்லை ஏற்று ஆம், கல்லில் அமைந்தாலும் மண்ணில் வனைந்தாலும் மரத்தில் செதுக்கினாலும் எழுவது ஒரே தெய்வம்தான் என்று சுலபை மறுமொழி சொன்னாள்” என்றார். பீஷ்மர் திகைப்புடன் நோக்க “காங்கேயரே, மெய்மை ஒன்றே என்றுதான் இக்கதை சொல்கிறது. தன்னிலையெனும் ஆணவம் அழிந்து மீண்ட சுலபை ஜனகர் அறிந்த மாறா மெய்மையை தானும் அடைந்தாள்” என்றார்.