காண்டீபம் - 71

பகுதி ஆறு : மாநகர் – 3

நகரின் உள்கோட்டைகள் சற்று உயரம் குறைந்தவையாகவும் சிற்பங்கள் மிகுந்தவையாகவும் இருந்தன. வாயிலின் முகப்பில் நின்றிருந்த பேருருவ வாயிற்காப்போன் சிலைகள் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அஞ்சல் அறிவுறுத்தல் குறிகளுமாக பெரிய பற்கள் செறிந்த வாயும் உறுத்து கீழே நோக்கிய கண்களும் சல்லடம் அணிந்த இடையும் சரப்பொளி அணிந்த மார்புமாக நின்றன. அவற்றின் கழல் அணிந்த கணுக்கால் உயரத்திலேயே அங்குள்ள அனைத்து வணிகர்களும் புரவி வீரர்களும் நடமாடினர்.

கோட்டைமேல் இந்திரப்பிரஸ்தநகரின் வஜ்ராயுதக் கொடிக்கு இருபக்கமும் நந்த உபநந்தங்கள் முழுநிலவுக்குக் கீழே பொறிக்கப்பட்ட கொடியும் வஜ்ராயுதத்தின் அடியில் வில்பொறிக்கப்பட்ட பாஞ்சாலியின் கொடியும் நகுலனின் சரபக்கொடியும் சகதேவனின் அன்னக்கொடியும் பறந்தன. வாயிலோரமாக நான்கு யானைகள் வடம்பற்றி இழுக்க நெம்புகோல் ஏந்திய பன்னிருவர் தள்ளி அமைக்க கோட்டைக் கதவுகளை பொருத்துவதற்கான கற்குடுமியை நாட்டிக் கொண்டிருந்தனர். அதை அடையாளம் கண்டுகொண்ட ஒரு வணிகன் “அரக்கர்கள் மாவிடிக்கும் உரல் என்று சிறு பிள்ளைகளுக்கு இதைக்காட்டி கதை சொல்லலாம்” என்றான். சிரிப்புடன் சிலர் அதனருகே நின்றனர்.

“ஒவ்வொரு நாளும் இப்பெருங்கதவை ஏந்தி சுழலவிட்டாக வேண்டுமே? கற்கள் எத்தனை காலம் தாங்கும் என்று தெரியவில்லை” என்றான் ஒருவன். “இவற்றின் மேல் எண்ணையிடப்பட்ட இரும்பு உருளைகள் அமைத்து அவற்றின்மேல்தான் கதவை நாட்டுவார்கள். இரும்பு உருளைகள் மேல் கதவுகள் செல்வதை தாம்ரலிப்தியில் நீ பார்த்திருக்கலாம். வெண்ணெயில் சுழல்வது போல இனிதாக ஓசையின்றி அவை இயங்கும். நாள் செல்லச் செல்ல இரும்புருளைகள் மேலும் மென்மை கொள்ளும். இப்பெருங்கதவுகளை பத்து வீரர்கள் இருந்தால் தள்ளித் திறக்கவும் மூடவும் முடியும்” என்றார் ஒருவர்.

கோட்டைக்குள் ஆறாவது வாயிலுக்கும் ஏழாவது வாயிலுக்கும் இடையில் இருந்த பகுதிகள் முழுக்க செங்கல்லால் ஆன மேடைகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சிறிய கட்டடங்களைப் போல செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவற்றின் மேல் நின்ற பணியாட்கள் செங்கற்களை எடுத்து இழுத்துக் கட்டப்பட்ட வடங்களின் ஊடாக ஒழுகி வந்து சேர்ந்த மரக்கூடைகளில் அடுக்கினர். அவை இழுபட்டு சென்று அக்கற்கட்டுமானங்களை அடைய அங்கிருந்த செங்கல் சிற்பிகள் அவற்றை எடுத்து அடுக்கினர். கீழிருந்து வடங்களில் இழுபட்ட மரக்கூடைகளில் சுண்ணமணல் கலவை மேலே சென்று கொண்டிருந்தது. சுண்ணத்தையும் மணலையும் அவற்றை இறுக்கும் வஜ்ரங்களையும் கலந்து அரைக்கும் பெரிய கற்செக்குகள் காளைகளால் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கல்நொறுங்குவது போல செக்கு ஓடும் ஓசை கேட்டது.

அரைத்த சுண்ண விழுதை மரத்தாலான மண்கோரிகளால் வழித்தெடுத்து அருகே மலைகள் என குவித்தனர். அவற்றை இரும்புக் கரண்டிகளால் அகழ்ந்தெடுத்து மரக்கூடைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர் வினைவலர். சுண்ணம் அரைபடும் மணம் மூக்குச் சவ்வை சற்று எரிய வைத்தது. ஒருவன் அர்ஜுனனிடம் “எதற்காக இம்மேடைகள்? தெய்வங்களுக்காகவா?” என்றான்.

அர்ஜுனன் “அவை கைவிடுபடைகளுக்கான மேடைகள்” என்றான். “அஸ்தினபுரியின் கைவிடு படைகள் இருநூறு வருடங்களாக எண்ணெய் பூசப்பட்டு ஒவ்வொரு கணமும் என காத்துள்ளன. அவற்றுக்கு மறுபக்கம் என இங்கெழுகின்றன இக்கைவிடுபடைகள். இன்று அமைபவை என்று உயிர் கொண்டு எழுமென்று மேலே நின்று குனிந்து நோக்கும் தெய்வங்களுக்கே தெரியும்” என்று அர்ஜுனனுக்குப் பின்னால் நின்ற ஒரு முதிய வீரன் சொன்னான்.

ஏழாவது கோட்டை முழுதும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அதன் கற்களுக்கு நடுவே புதிய சுண்ணக்காரையாலான இணைப்பிட்ட சதுரங்கள் பரவியிருக்க மானின் உடல்போல தெரிந்தது கோட்டைச்சுவர். வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளாக நாககன்னியர். பொன்னிற நாகபட முடியணிந்து வலக்கையில் ஐந்து தலைப் பாம்பைப் பற்றியபடி இடக்கையால் அஞ்சல் அருளல் குறி காட்டி இடை ஒசிந்து நின்றனர். அவர்களின் சிலம்புக் கால்கள் வழிச்செல்வோரின் தலை உயரத்தில் அமைந்திருந்தன.

உள்ளே புதிய மெழுகரக்கு பூசப்பட்டு முரசுத்தோல் நிறம் கொண்டு மின்னிய பெரிய கோட்டைக் கதவுகள் பொற்குண்டுகள் என ஒளிவிடும் பித்தளைக் குமிழ்களுடன் திறந்திருந்தன. அக்கதவுகளில் ஒருபுறம் இந்திரபிரஸ்தத்தின் மின்னுருச் சின்னமும் மறுபுறம் அஸ்தினபுரியின் அமுதகலசக் குறியும் இருந்தன.

அர்ஜுனன் இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டை வாயிலை அணுகி அங்கு நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கி “வாமமார்க்க சிவயோகி. நகர்புக ஒப்புதல் கோருகிறேன்” என்றான். அவன் விழிகளைப் பார்த்ததுமே காவலர் கண்கள் சற்று விரிந்து முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை எழுந்தது. “தங்கள் நகரம் இது யோகியே” என்றான். அதற்குள் அவனுக்குப் பின்னால் இருந்த கல் மண்டபத்தில் அமர்ந்திருந்த காவல்வீரர்கள் அனைவரும் தங்கள் படைக்கலங்களுடன் எழுந்து நின்றனர். காவலர்தலைவன் படிகளில் இறங்கி வந்து தலைவணங்கி “நகருக்கு நல்வரவு யோகியே” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் கைதூக்கி அவர்களை வாழ்த்திவிட்டு கோட்டைக்குள் சென்றான்.

கோட்டையிலிருந்து உள்ளே எழுந்த குன்றின்மேல் ஏறிய சுருள்பாதைக்குச் செல்லும் அகன்ற சாலை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. செல்லும்பாதை வரும்பாதை என பல்லக்குகளுக்கும் மஞ்சல்களுக்கும் இரண்டு பாதைகளும் தேர்களுக்கும் புரவிகளுக்கும் இரண்டு பாதைகளும் அத்திரிகளுக்கும் கழுதைகளுக்கும் இரண்டு பாதைகளும் பொதி வண்டிகளுக்கு இரண்டு பாதைகளும் அமைந்திருந்தன. பாதையின் இருபுறமும் பணிநடந்துகொண்டிருந்த வீடுகள் சீரான நிரைகளாக விழிதொடும் தொலைவுவரை பின்காலையின் கண்கூசும் ஒளியில் நின்று கொண்டிருந்தன.

ஒவ்வொன்றிலும் எவரோ எதையோ செய்து கொண்டிருந்தனர். மரச் சுவர்களுக்கு சுண்ணங்கள் பூசப்பட்டன. மரப்பட்டைக் கூரைகள் மேல் தேன்மெழுகும் சுண்ணமும் கலந்த சாந்து பூசப்பட்டது. கதவுகள் வடங்களால் தூக்கப்பட்டு குடுமிகளில் பொருத்தப்பட்டன. கல்உடைக்கும் ஒலியும் மரத்தின்மேல் இரும்புக்கூடம் விழும் ஒலியும் மணல்அரைபடும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. அர்ஜுனன் உடல் வியர்வை வழிய சீரான அடிகளுடன் நடந்தான்.

நகரத்தின் முதல் வளைவுப்பாதையின் தொடக்கத்தில் இருபுறமும் இரு சிம்மங்கள் சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டிருந்தன. பற்கள் செறிந்த பெரிய வாயை திறந்து, கூருகிர்கள் எழுந்த கைகளை அள்ளிப்பற்றுவது போல் தூக்கி, வேரென ஊன்றிய பின்னங்கால்களில் எழுந்து விடைத்த பெருங்குறிகளுடன் அவை நின்றன. கலிங்கச் சிற்பிகளால் நகரம் கட்டப்பட்டது என்பதற்கான அடையாளம் அது. தேவசிற்பியான மயனின் வழிவந்த சிம்மகுலத்துக் கூர்மரும் அவரது மாணவர் காலகரும் அதன் பெருஞ்சிற்பிகள். சிம்மங்களுக்குக் கீழே அவர்களின் குலச்சின்னமான மழு பொறிக்கப்பட்டிருந்தது.

உள்ளே செல்லும் வளைவுப்பாதையில் கருங்கற்பாளங்கள் சீராக பதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே புரவிகள் சென்று உருவான மெல்லிய தேய்தடம் இருந்தது. பாதையின் இருபுறமும் மேலிருந்து வழியும் நீர் செல்லும் சிற்றோடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவன் செல்லும்போது அந்தப்பணி நடந்துகொண்டிருந்தது. அப்பால் கட்டடங்களை நோக்கி செல்லும் முற்றத்தின் தரையில் தடித்த மரப்பலகைகள் போடப்பட்டிருந்தன. சுதையால் ஆன அடிச்சுவர்களும் மரத்தால் ஆன இரண்டாம் அடுக்குகளும் மூன்றாம் அடுக்குகளும் கொண்ட மாளிகைகள் இருபுறமும் நிரை வகுத்திருந்தன.

மிகச்சில மாளிகைகளிலேயே மக்கள் குடியேறியிருந்தனர். அவற்றிலும் கூரையிலும் சுவற்றிலும் எஞ்சும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெருஞ்சாலையிலிருந்து கிளை பிரிந்து சென்ற சிறிய சாலைகள் அனைத்திலும் தரையில் கற்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அத்திரிகள் இழுத்த சகடங்களில் வந்து கொண்டிருந்த கற்பாளங்களை கயிறுகள் கட்டி பெரிய துலாக்களால் தூக்கிச் சுழற்றி மண்ணில் அடுக்கினர்.

சுண்ணமும் மணலும் கலந்த கலவையில் உடைந்த சிறுகற்களை கலந்து போடப்பட்ட சாந்தின்மேல் அமைக்கப்பட்ட அக்கற்களை மேலிருந்து மரத்தடிகளால் அடித்து அழுத்தி இறுக்கினர். கற்கள் ஒன்றோடொன்று பொருந்தும் விளிம்புகளை சிற்பிகள் உளிகளால் தட்டி முழைகளை நீக்கி முழுமையாக இணைத்தனர்.

அங்காடித்தெரு நோக்கி செல்லும் கிளைப்பாதையின் இருபுறமும் இரு சதுக்கப் பூதங்கள் நின்றன. வலப்பூதம் வலக்கையில் சுவடியும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையும் கொண்டிருந்தது. இடப்பூதம் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அடைக்கலமும் கொண்டு உறுத்து நோக்கியது. பூதங்களின் திரண்ட பெருவயிறு மீது மார்பில் அணிந்த மணியாரம் வளைந்து அமைந்திருந்தது. மின்னல்முடி சூடி காதுகளில் நாக குண்டலங்கள் அணிந்து நாககச்சையை இடையில் அணிந்து நாகக் கழல் போட்டு அவை நின்றன.

அங்காடி முற்றத்தின் நடுவே வெண்சுண்ணக் கல்லில் செதுக்கப்பட்ட குபேரனின் பெருஞ்சிலை குறுகிய கால்களும் திரண்ட பெருவயிறும் கதாயுதமும் அமுதகலசமுமாக வடக்கு நோக்கி திரும்பி அமர்ந்திருந்தது.

பெருமுற்றத்தில் கற்பாளங்களை வினைவலர் பொருத்திக் கொண்டிருந்தனர். கட்டடங்களில் பணிகள் பெரும்பாலும் முடிந்திருந்தாலும் தூண்கள் சில வண்ணம் பூசப்படாது நின்றிருந்தன. அது வெயில் வெம்மை கொள்ளும் தருணம் என்பதால் பணியாட்கள் அனைவரும் அங்காடித் திண்ணைகளில் அமர்ந்து சூடான அப்பங்களையும் இன்கூழையும் உண்டு கொண்டிருந்தனர். வளைந்த பெருஞ்சாலையில் எவரும் இருக்கவில்லை. தடதடக்கும் ஒலியுடன் ஓரிரு குதிரைகள் கடந்து சென்றன.

பெருஞ்சாலை வழியாக கற்பாளங்களையும் சுண்ணப்பொதிகளையும் மென்மணலையும் கொண்டு வரும் வண்டிகள் வரக்கூடாதென்ற நெறி இருந்தது. அதற்கான சுழற்பாதைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாதையின் வளைவுகளில் திரும்பும்போதெல்லாம் அப்பால் சீரான நிரைகளாக மேலெழுந்து செல்லும் அத்திரிகளையும் கழுதைகளையும் பொதி வண்டிகளையும் காண முடிந்தது. அவற்றை ஓட்டும் வினைவலர் சவுக்குகளை சுழற்றியபடி அதட்டலோசை எழுப்பினர்.

நான்காவது பாதைவளைவில் நகரின் தெற்காக வளைந்தோடும் யமுனையின் கருநீல நீர்ப்பரப்பை காணமுடிந்தது. நகரிலிருந்து ஏழு தட்டுகளாக இறங்கி நீர்ப்பரப்பை அடைந்த துறைமுகம் பெரிய கற்தூண்களின் மேல் எழுந்து நீர் வெளிக்குள் நீண்டு நின்ற பன்னிரண்டு துறைமேடைகளால் ஆனது. அதன் அனைத்து முனைகளிலும் கலங்கள் நின்றன. கரையணைவதற்காக காத்து கலங்கள் அப்பால் நீர்ப்பரப்பின் மீது நங்கூரமிட்டிருந்தன. நூற்றுக்கணக்கான எடைத்துலாக்கள் கலங்களிலிருந்து பொதிகளையும் மரத்தடிகளையும் வடங்களில் கட்டித்தூக்கி சுழற்றி கொண்டுவந்து இறக்கி அமைத்தன. அத்தனை உயரத்தில் அச்செயல்கள் மிகமெதுவாக நிகழ்வனவாக தோன்றின. பூச்சிகள் கூடுகட்டுவதுபோல. அங்கே ஒலித்த ஓசைகளை காற்று அள்ளி சுழற்றி கொண்டுவந்து அளித்தபோது ஒலிப்பிசிறுகளாக செவிகளில் விழுந்து உதிர்ந்தன அவை.

வெட்டிக்கொண்டு வரப்பட்ட கற்களை இறக்குவதற்கு பெரும் துறைமேடைகளுக்கு அப்பால் தனியாக ஒரு துறைமேடை இருந்தது. அக்கற்கள் நீருக்குள்ளேயே படகிலிருந்து இறக்கப்பட்டன. வடங்கள் கட்டி நீருக்குள்ளேயே இழுத்துக் கொண்டுவரப்பட்டு நீருக்குள் மூழ்கி நின்றிருந்த பெரிய சகடங்களின் மேல் ஏற்றி நிறுத்தப்பட்டன.

அச்சகடங்களின் மேல் வடங்கள் கட்டப்பட்டு பதினெட்டு பெருந்துலாக்களால் வண்டிகளே தூக்கப்பட்டன. நீருள் இருந்து மேலெழுந்துவந்த சரிவுப்பாதையில் எழுந்து வந்த அவை நீர்கொட்டியபடி சாலைக்கு வந்தன. அதன் பின்னரே அவற்றில் காளைகள் கட்டப்பட்டன. எடை மிக்க கற்களுடன் அவ்வண்டிகள் அசைந்து எழுவதை மேலிருந்து காணமுடிந்தது.

புடைத்த தசைகளுடன் தலைகுனித்து இழுத்த காளைகளின் விசையால் மெல்ல அசைந்து வளைந்து வந்து அவை சாலைவளைவில் மேலெழும்போது மட்டும் அங்கு நிறுவப்பட்டிருந்த துலாக்களின் வடங்கள் அவ்வண்டிகளின் பின்பக்கத்து கீலில் இணைக்கப்பட்டு அவைதூக்கி மேலெழுப்பப்பட்டன. சீரான வரிசையாக ஒரு மணிமாலை இழுபடுவதைப்போல அவ்வண்டிகள் தனிப் பாதையில் நகருக்கு மேலேறிக் கொண்டிருந்தன. அவற்றின் சகட ஒலியும் கீலோசையும் எங்கிருந்தோ எழுந்து வந்து காதுகளை அடைந்தன. விழிகள் அவ்வோசையை கொண்டுசென்று அவற்றின் உருவங்களில் பொருத்தியறிந்தன.

அர்ஜுனன் வெண்சுண்ணம் குழைத்துக் கட்டப்பட்ட தூண்கள் கொண்ட பெரு மாளிகைகள் அணி வகுத்த சாலையில் நடந்தான். அனைத்து மாளிகைகளின் முகப்பிலும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறந்தது. ஒவ்வொரு மாளிகையும் முதல் பார்வையில் ஒன்று போல் இன்னொன்று என இருந்தன. விழிகூர்ந்தபோது ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டிருந்ததும் தெரிந்தது. உருண்ட இரட்டைத் தூண்கள் கொண்ட யவன மாளிகைகள், மேலே குவை முகடுகள் எழுந்த சோனக மாளிகைகள், செந்நிறமான கல்லால் கட்டப்பட்டு வெண்கலமுழைகள் ஒளிவிட்ட கலிங்க மாளிகைகள்.

ஒரு பகுதி முழுக்க பீதர்களின் மாளிகைகள் நிரை வகுத்திருந்தன. பீதர்நாட்டு வெண்களிமண் ஓடுகள் வேயப்பட்ட கூரைகளும், வாய்திறந்த சிம்மமுக பாம்புகள் நின்றிருந்த நுழைவாயில்களும், செந்நிற வளையோட்டுச் சரிவுக்கூரைகளும் கொண்ட மாளிகைகள். அவற்றின் தூண்களும் சுவர்களும் குருதிச்செம்மை பூசப்பட்டிருந்தன. வெண்பளிங்கால் ஆன தரையில் அச்செம்மை நீரென சிந்திக் கிடந்தது. பீதர்களின் சடைச்சிம்மங்களில் களிறு வலக்காலில் உருளையை பற்றிக்கொண்டு பல்காட்டி சீறி நிற்க பெண்சிம்மம் தலை குனிந்து நின்றது.

மேலும் மேலும் என மாளிகைகள் பெரிதாகிக் கொண்டே சென்றன. காவல்தலைவர்களது மாளிகைகள், படைத்தலைவர்களின் மாளிகைகள், பெரு வணிகர்களுக்குரிய மாளிகைகள். ஒவ்வொரு மாளிகையின் முகப்பிலும் தேர்களும் பல்லக்குகளும் நிற்பதற்கான பெருமுற்றம் அமைந்திருந்தது. தடித்த மரங்களால் தளமிடப்பட்ட அம்முற்றங்கள் நன்கு சீவித்தேய்த்து அரக்கும் மெழுகும் சுண்ணமும் கலந்து பூசப்பட்டு தேரட்டையின் உடல்வளையங்களை அடுக்கியமைத்தது போல ஈரமென மின்னிக்கொண்டிருந்தன.

அரண்மனையின் உள்கோட்டை வாயில் இறுதி வளைவுக்குப் பின்னரே தெரியத் தொடங்கியது. செந்நிறக் கற்களால் ஆன கோட்டை முகப்பின் இரு பக்கமும் சூரியனும் சந்திரனும் வாயிற்காவலர்களாக நின்றிருந்தனர். இருகைகளிலும் தாமரை மலர் ஏந்தி தலைக்குப் பின் கதிர்வளையத்துடன் சூரியன் நின்றிருக்க வலக்கையில் அல்லிமலரும் இடக்கையில் அமுதக்குவளையும் தலைக்கு முன் முழுநிலவு வட்டமுமாக சந்திரன் நின்றிருந்தான்.

கோட்டை வாயிலின் வளைவின் நடுவே இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. நடுவே எழுந்த துருப்பிடிக்காத இரும்புக் கம்பத்தின் உச்சியில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி காற்றில் ஓசையுடன் படபடத்தது.

சிறிய காவல்புழைகளில் காவலர்கள் ஈட்டிமுனைகள் சுடர்கொள்ள அமர்ந்திருந்தனர். காலைவெயில் பழுத்து கோட்டை நிழல் சரிந்து கருங்கல் பாளங்கள் பரப்பப்பட்ட தரையில் விழுந்திருந்தது. உள்ளே சென்ற புரவிகளையும் தேர்களையும் நிறுத்தி ஒரு சொல் கேட்டு அனுப்பினர். அர்ஜுனன் அணுகுவதற்கு முன்னரே அவன் நடையை வைத்தே அவனை அறிந்த அவர்கள் எழுந்து நின்றனர். அவன் அணுகியதும் அனைத்து விழிகளிலும் புன்னகையும் உடல்களில் பணிவும் எழுந்தது. அர்ஜுனன் தலையசைத்து புன்னகைத்தபடி உள்ளே சென்றான்.

காவல்மூத்தான் “நல்வரவு இளவரசே” என்றான். “மூத்தவர் எங்கிருக்கிறார்?” என்றான் அர்ஜுனன். “அரசவைச் சடங்குகளின் முறைமையில் அவரும் இணைந்துவிட்டிருக்கிறார். இந்நேரம் தென்னிறைமூத்தார் ஆலயங்களில் நாள்பூசனைகளை முடித்து ஓய்வெடுக்க அவைபுகுந்திருப்பார்” என்றான் காவல்மூத்தான். “பேருருவர் நகர் விட்டுச்சென்று ஒன்பது மாதங்கள் ஆகின்றன. தாங்கள் சென்ற மறுவாரமே அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.” அர்ஜுனன் புன்னகைத்தான். “இளையோர் துறைமுக கட்டுமானப் பணியில் ஒருவரும் கோட்டை கட்டுமானப் பணியில் ஒருவரும் இருக்கிறார்கள். சௌனகர் கருவூலத்தில் இருக்கிறார்.”

அர்ஜுனன் தலையசைத்து வாயிலைக்கடந்து உள்ளே சென்றான். உள்ளே கோட்டையை ஒட்டியே ஒரு பெரிய படை தங்குமளவுக்கு பல்லாயிரம் சிறிய அறைகள் கொண்ட மண்டபங்கள் ஒன்றன் மேல் ஒன்றென ஏழு அடுக்குகளாக செறிந்திருந்தன. திரும்பிப் பார்க்கையில் பெரும் தேன்தட்டு போல தோன்றியது. பெரும்பாலான அறைகள் ஒழிந்து கிடந்தாலும் அப்போது ஒரு வலுவான படை அங்கு இருந்தது.

உள் முற்றத்தில் இருபது யானைகள் நிழல் மரங்களுக்கு கீழே உடல் அசைத்து நின்றிருந்தன. அவற்றின் மணியோசைகள் மெலிதாக கேட்டன. ஒரு யானை அவனை நோக்கியது. அதன் ஓசை அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் அனைத்து யானைகளும் துதிக்கை நிலைக்க அவனை திரும்பிப்பார்த்தன.

செம்மண்விரிந்த செண்டுவெளிக்கு நடுவே நாற்புறமும் திறந்த மண்டபத்தின் மேல் செங்குத்தான எட்டடுக்கு சுதைக்கோபுரம் எழுந்த கொற்றவையின் ஆலயம் ஐந்தடுக்கு கருங்கல் அடித்தளத்தின்மேல் அமைந்திருந்தது. அடித்தளத்தில் துதிக்கைகோத்த யானைகள் உடல் ஒட்டி நிரைவகுத்திருந்தன. கருவறை மேலேயே கூம்பாக எழுந்திருந்த ஏழடுக்கு கோபுரத்தின் மீது கவிழ்ந்த தாமரை வடிவப் பீடிகைமேல் ஆலயத்தின் முப்புரிவேல் கொண்ட கொடி பறந்தது.

உயர்ந்த கருவறையாதலால் சாலையிலிருந்து கொற்றவையின் சிலையை பார்க்க முடிந்தது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலை பதினாறு தடக்கைகளிலும் படைக்கலங்களுடன் அஞ்சலும் அருளலும் காட்டி யோக அமர்வில் கால்மடித்து யோகபட்டை அணிந்து அமர்ந்திருந்தது. அதன் கழல் அணிந்த வலக்கால் மலர்மாலை சூடி நகங்கள் ஒளிவிட தெரிந்தது. அங்கு பூசனையும் முறைமையும் அக்கால்களுக்கு மட்டுமே. செந்நிற ஆடை அணிந்த பூசகன் அக்கால்களுக்கு முன்னே போடப்பட்டிருந்த பெரிய மலர்க்களத்தில் காற்றில் அணைந்த அகல் விளக்குகளை மீண்டும் கொளுத்திக் கொண்டிருந்தான்.

அர்ஜுனன் தன் உடல் வியர்த்து வழிவதை உணர்ந்தான். விடிகாலையிலேயே வெயில் எழுந்து விட்டிருந்தது. அதில் நீராவி அடர்ந்திருந்தது. மழை பெய்யக்கூடும் என்று எண்ணினான். ஆனால் முகில்களின்றி வானம் முற்றிலும் நீலமாக தெரிந்தது. தென் கிழக்குச் சரிவில் மட்டும் சற்றே முகில்படலம் தெரிந்தது. அங்கிருந்து பார்க்கையில் நகரின் பாதியை வளைத்துச் சென்ற யமுனையின் கருநீல நீர்ப்பெருக்கு வானிலிருந்து பறந்து படிந்த பட்டுச்சால்வைக் கீற்றென தெரிந்தது.

நகரின் உச்சியில் செந்நிறக்கல்லில் எழுந்து நின்ற இந்திரனின் பேராலயத்தின் உச்சியில் சுதைச்சிற்பிகள் அப்போதும் பணிமுடித்திருக்கவில்லை. அல்லிவட்டங்கள்போல ஒன்றன் உள் ஒன்றாக அமைந்த ஏழுஅடுக்குகளிலும் பன்னிரு உப்பரிகைகள் மலரிதழ்களென நீட்டி நிற்க அது நீள்கூம்புவடிவமான பெரிய மலரென தோன்றியது.

சதுக்கத்திற்கு அப்பால் அரண்மனை முகடுகள் தெரியத் தொடங்கின. அத்தனை மாளிகைகளும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. நடுவே பன்னிரண்டு அடுக்குகள் கொண்ட பெருமாளிகை. அதைச் சூழ்ந்து ஏழடுக்கு மாளிகைகளின் பதினெட்டு முகடுகள். அத்தனை உப்பரிகைகளிலும் மலர்ச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. கோடைகாலத்தின் இறுதி என்பதால் அவை அனைத்தும் மலர்செறிந்து வண்ணம் கொண்டிருந்தன. வெண்ணிற, செந்நிற, இளநீலநிற மலர்கள் கலந்த பூந்தோட்டம் ஒன்று தரைவிரிப்பு மடிந்தெழுந்தது போல் செங்குத்தாக நின்றது.

இருகால்களையும் முன்னால் ஊன்றி தலை தூக்கி அமர்ந்திருந்த சிம்மம் போன்றிருந்தது மைய மாளிகை.  அதன் உச்சி அடுக்கிலிருந்து அடித்தளம் வரை இரு பெரும் தூண்கள் இறங்கி வந்து மூன்று கவிழ்தாமரை பீடங்களாக மாறி மண்ணில் நின்றன. அத்தூண்களுக்கு நடுவே அரைவட்ட வடிவமான முப்பத்தியாறு வெண்பளிங்குப் படிகள் நீரலைகள் கரையணைந்ததுபோல அடுக்குகளாக தெரிந்தன. சிறிய தூண்களால் ஆன உள்அறைகள் அங்கிருந்து நோக்குகையில் விந்தையான சக்கரப்பொறி ஒன்றின் புழைகள் போல தெரிந்தன.

முகப்பு மாளிகையின் முன்னால் இருந்த அகன்ற முற்றத்தில் அவ்வேளையிலேயே நூற்றுக்கு மேற்பட்ட தேர்கள் நின்றிருந்தன. அதன் பெருவிரிவில் அவை அனைத்தும் சிறிய செப்புகள் போல் தோன்றின. இடது பக்கம் போடப்பட்டிருந்த பட்டுமஞ்சல்களும் வண்ணக்கூரையிட்ட பல்லக்குகளும் மலரிதழ்கள் உதிர்ந்து கிடப்பதை போல் தோன்றின.

பதினெட்டு யானைகள் நெற்றிப்பட்டமும் முழுதணிக் கோலமுமாக மாளிகை முகப்பில் பொன்வண்டுகள் போல் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தேர்களை இழுத்து வந்த புரவிகள் முற்றங்களின் மறு எல்லையில் இருந்த வலது எல்லையில் இருந்த தாழ்வான மரக்கொட்டகைகளில் முன்கால் தூக்கி துயின்றும் முகத்தில் கட்டப்பட்ட பையில் கொள்ளுண்டும் வால்சுழற்றியும் நின்றிருந்தன.

முற்றத்தில் நுழைந்ததுமே சிற்றெறும்பு போல் ஆகிவிடும் உணர்வை அம்முறையும் அர்ஜுனன் அடைந்தான். நடந்து செல்லச் செல்ல அப்பெரு மாளிகை பேருருக்கொண்டு வானை நோக்கி எழுந்தது. தலைக்கு மேல் அதன் மாடஉப்பரிகைகள் சரிந்து வந்து நின்றன. செல்லும் தோறும் தொலைவு மிகுந்து வரும் உணர்வை அடைந்தான்.

காலை வெயிலில் அடுமனை கலத்தட்டு போல் பழுத்துக்கிடந்த கற்பரப்பில் தேய்ந்த மரக்குறடுகள் உரசி ஒலிக்க அவன் நடந்தான். பெரும் தூண்கள் அகன்று பருத்து தூபிகள் போல் ஆயின. அவன் அணுகியபோது அவற்றின் மூன்று கவிழ் தாமரைகளே அவன் தலைக்கு மேல் இருந்தன.

படிகளின்மேல் ஏறி இடைநாழியை அடைவதற்குள்ளாகவே உள்ளிருந்த பெருங்கூடத்திலிருந்து அமைச்சர்கள் இருவர் அவனை அடையாளம் கண்டு “இளைய பாண்டவர்!” என்று கூவி புன்னகையும் சிரித்த முகமும் குவித்த கரங்களுமாக ஓடி வந்து எதிர் கொண்டனர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்