காண்டீபம் - 70
பகுதி ஆறு : மாநகர் – 2
கிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல் அமைந்திருந்த பெரிய பாறையின் மீது இந்திரனின் சிலை நின்றிருந்தது. இடக்கையில் அமுத கலசமும் வான் நோக்கி தூக்கிய வலக்கையின் நுனியில் வஜ்ராயுதமும் ஏந்தி வலக்காலை முன்னால் தூக்கி நின்றிருந்தான் விண்ணவர்கோன். அப்பெரும் பாறையில் புடைப்புச் சிற்பமாக ஐராவதத்தின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. இந்திரப்பிரஸ்தத்தை அணுகி விட்டோம் என்பதற்கான அடையாளம் அது.
சாலையின் முதல் வளைவிலேயே அச்சிலை கண்களுக்குத் தெரிந்தது. இளம்புலரியில் விழித்தெழுந்து வணிகப்பாதையில் பொதி வண்டிகளுடனும் அத்திரிகளுடனும் குதிரைகளுடனும் கழுதைகளுடனும் சிறிய குழுக்களாக வந்து கொண்டிருக்கும் வணிகர்களின் விழிகள் வானில் அச்சிலைக்காக துழாவிக் கொண்டிருக்கும். செறிந்த கூட்டங்களுக்கு மேல் இந்திரனின் கையில் வஜ்ராயுதம் தெரிந்ததுமே வணிக குழுக்களில் ஒலி எழும். பார்க்காதவர்களுக்கு பார்த்தவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். மெல்ல பசும் பெருக்கிலிருந்து இந்திரன் மேலெழுந்து வருவான். கீழ்வானை நோக்கிய விழிகளும் உடலெங்கும் அலை விரிந்த ஆடையுமாக.
இடக்கையில் அமுத கலசம் எழக்கண்டதுமே இந்திரப்பிரஸ்தத்தில் நுழைந்த உணர்வை வணிகர் அடைவார்கள். அர்ஜுனனின் அருகே சென்ற இளம் வணிகன் இரு கைகளையும் தூக்கி “இந்திரப்பிரஸ்தம்! இந்திரப்பிரஸ்தம் வந்துவிட்டது” என்று கூச்சலிட்டான். அர்ஜுனன் புன்னகைத்தான். “யோகியே, மண்ணில் மானுடர் அமைத்த மாநகரம் இது. யாதவர்கள் துவாரகையில் அமைத்த நகரம் இதில் பாதி கூட இல்லை” என்றான். அர்ஜுனன் “நான் அதை பார்த்திருக்கிறேன்” என்றான். “இதை பார்க்கப்போகிறீர். நீரே அறிவீர்” என்றான் இளைய வணிகன்.
சிலை அருகே பொதிவண்டிகளும் வணிகர்குழுக்களும் தயங்கின. சாலை ஓரமாக இருந்த சிறிய கல் மண்டபத்தில் இந்திர சிலைக்கு பூசனை செய்யும் நாகர்களின் குழு அமைந்திருந்தது. வணிகர்கள் அவர்களுக்கு காணிக்கை பொருட்களையும் குங்கிலியம் முதலிய நறுமணப் பொருட்களையும் அளித்து வணங்கினர். இளைய வணிகன் “இப்பகுதியெங்கும் முன்பு காண்டவ வனம் என்று சொல்லப்பட்டது, அறிவீரா?” என்றான். அர்ஜுனன் “ஆம் கேட்டிருக்கிறேன்” என்றான்.
“இளைய பாண்டவர் இங்கிருந்த நாகங்களை அழித்தார். அவரது அனல் அம்புகளால் காண்டவ வனம் தீப்பற்றி எரிந்தது. அன்று இங்கிருந்த நாகர்கள் அனைவரும் இந்திர வழிபாட்டாளர்கள். அவர்களைக் காக்க இக்குன்றின்மேல் இந்திரன் எழுந்தான் என்கிறார்கள். பன்னிரண்டு முறை கருமுகில் செறிந்து காண்டவ வனத்தில் எரிந்த அனலை முற்றழித்தது. பின்னர் இளைய பாண்டவர் தன் தந்தை இந்திரனிடம் நேருக்கு நேர் போர் புரிந்தார். தனயனிடம் போரில் தோற்கும் இன்பத்துக்காக இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தபடி வானில் மறைந்தான்.”
இளம் வணிகன் தொடர்ந்தான் “அதன் பின் இங்கிருந்த நாகர்கள் இளைய பாண்டவர் முன் பணிந்து அவரது வில்லுக்கு தங்கள் கோலை அளித்தனர். அஸ்தினபுரியின் பங்கு வாங்கி பாண்டவர் பிரிந்து வந்த போது இந்தக் காட்டிலேயே தங்கள் நகரை அமைக்க வேண்டுமென்று பாஞ்சாலத்து அரசி விரும்பினார்கள். இங்கு நகரெழுந்தபோது இந்திரன் மைந்தனால் வெல்லப்பட்டது என்பதனாலும் இந்திரனால் காக்கப்படுவது என்பதனாலும் அதற்கு இந்திரப்பிரஸ்தம் என்று பெயரிட்டார்கள். இங்கு அமைந்த இந்திரன் சிலையை நாகர்களுக்கு உரியதாக்கினார்கள். இன்றும் இப்பகுதி நாகர்களால் காக்கப்படுகிறது. இங்குள்ள பதினெட்டு நாகர் ஆலயங்களும் அவற்றின் மேல் எழுந்த இந்திரனின் பெருஞ்சிலையும் அவர்களாலேயே பூசனை செய்யப்படுகிறது” என்றான்.
அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம், அரிய சிலை” என்றான். “இதற்கு நிகர் தாம்ரலிப்தியின் கரையில் நின்றிருக்கும் சோமனின் பெருஞ்சிலையும் தெற்கே தென்மதுரைக் கரையில் நின்றிருக்கும் குமரியன்னையின் பெருஞ்சிலையும்தான்.” அர்ஜுனன் “குமரியின் பெருஞ்சிலை பேருருவம் கொண்டது என்கிறார்கள்” என்றான். வணிகன் அதை தவிர்த்து “விண்ணில் எழும் மின்னலைப் பற்றுவது போன்ற கைகள். கலிங்கத்துச் சிற்பி கம்ரகரின் கற்பனை அது. பாரதவர்ஷத்தின் பெருஞ்சிற்பிகளில் ஒருவர். இச்சிலை ஒற்றைக் கல்லால் ஆனதல்ல. இங்கிருந்து பார்க்கையில் அப்படி தோன்றுகிறது. பதினெட்டு தனிக்கற்களில் செய்து உள்ளே குழி மீது முழை அமரும் விதத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இதை எழுப்பியிருக்கிறார்கள்” என்றான்.
“மண் நடுங்கினாலும் சரியாத உறுதி கொண்டது என்கிறார்கள்” என்று அவன் தொடர்ந்தான். “அதன் எடையே அதன் உறுதி” என்றார் பின்னால் வந்த முதுவணிகர். “விண்ணிலிருந்து மின்னலைப் பற்றி இந்திரப்பிரஸ்தத்திற்கு படைக்கலமாக அளிக்கிறது இது. இடது கையில் அமுத கலசம் அஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் இனி இந்திரப்பிரஸ்தத்திற்கே என்பதை குறிக்கிறது. இன்னும் எட்டு மாதத்தில் நகரத்தின் பணிகள் அனைத்தும் முடியும் என்று சொன்னார்கள்.”
“அப்படித்தான் சொல்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் நான் வரும்போது இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்துவிடும் என்றனர். அதன் பிறகே தெற்கு வாயில் கோட்டை பணி தொடங்கியது” என்றான் இளம்வணிகன். “இத்தனை பெரிய மாநகரத்தை கட்டுவதற்கான கற்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டாமா?” என்றார் காந்தாரர். “இந்நிலம் காண்டவ வனமாக இருந்தபோது செந்நிறப் பெரும் பாறைகள் நிறைந்த வெளியாக இருந்தது. விண்ணை தாங்கி நிற்கும் பெருந்தூண்கள் ஒவ்வொன்றும் மரங்கள் அடர்ந்து இருந்தன. அனைத்து மரங்களையும் வெட்டி இல்லங்கள் அமைக்க கொண்டு சென்றனர்.”
“அச்செம்பாறைகளே இந்நகரை அமைக்க போதுமானவை என்று அந்தச் சிற்பிகள் கணக்கிட்டனர். ஆனால் மாளிகைகள் எழும்தோறும் கற்கள் போதவில்லை. எனவே வடக்கே தப்தவனம் என்னும் இடத்தில் இருந்த மென்பாறைகள் முழுக்க வெட்டப்பட்டு யமுனையின் நீர்ப்பெருக்கு வழியாக தெப்பங்களில் கொண்டுவரப்பட்டன. தப்த வனம் இன்று கல் பாறைகள் ஏதுமற்ற ஒரு கோடைகால மலர்த்தோட்டமாகிவிட்டது. அதற்கப்பால் இருந்த சீர்ஷகம் என்னும் பெருமலையின் அனைத்து மணல்பாறைகளும் வெட்டி உருட்டிக் கொண்டு வரப்பட்டு யமுனையினூடாக இங்கு வந்து சேர்ந்தன. கங்கைக்கரையின் ஜலபூஜ்யம் என்னும் இடத்திலிருந்து சேற்றுப்பாறைகளை பாளங்களாக வெட்டிக்கொண்டு வந்தனர். இங்குள்ள கோட்டைகள் அப்பாறைகளால்தான் அமைந்துள்ளன.”
“அரசப் பெருமாளிகைகள் சிவந்த கற்களாலும் கோட்டைகளும் காவல் மாடங்களும் பிற கற்களாலும் அமைந்துள்ளன. மானுட உழைப்பில் இப்படி ஒரு நகரம் அமையும் என்று விண்ணவர்களும் எண்ணியிருக்கவில்லை என்பதனால் எப்போதும் இந்திரப்பிரஸ்தத்திற்கு மேல் வானம் ஒளியுடன் இருக்கிறது. விண்ணூரும் முகில்களில் வந்தமர்ந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் இந்நகரை விழிவிரித்து நோக்கியிருக்கின்றனர் என்கிறார்கள் சூதர்கள். இந்திரனின் வில் பல நாட்கள் இந்நகர் மேல் வளைந்திருப்பதை கண்டிருக்கிறார்கள்” என்றார் முதுவணிகர்.
நாடோடி “இந்நகர் அமைந்திருக்கும் இடத்தின் இயல்பு அது. பாரதவர்ஷத்தில் மிகக்கூடுதலாக மழை பெய்யும் இடங்களில் ஒன்று இது. பெரும்பாலான நாட்களில் இளவெயிலும் உள்ளது. விண்ணில் மழைவில் எழுவதனால்தான் இதற்கு இந்திரப்பிரஸ்தம் என்றே பெயர்” என்றான். “எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் விண்முகில் சூடி மழைவில் ஏந்திய ஒரு நகரம் பிறிதொன்றில்லை இப்புவியில்” என்றார் காந்தார வணிகர்.
இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும் சாலையின் இருபுறமும் மென் மணற்கற்களால் கட்டி மரப்பட்டைக்கூரை போடப்பட்ட வணிகர் சாவடிகள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வணிகர் குழுவும் அவற்றின் குலக்குறிகள், ஊர்மரபுகளை ஒட்டி அவர்களுக்குரிய சாவடிகளை அமைத்திருந்தனர். அங்கு முன்னரே இருந்த அவர்களின் அணுக்கர்கள் வெளி வந்து கை வீசி அவர்களை வரவேற்று கூச்சலிட்டனர். ஒவ்வொரு வணிகராக விடைபெற்றுச் சென்று சாவடிகளில் தங்கினர்.
“நகருக்குள் செல்வதற்கு முன்னரே இச்சாவடிகளை அமைத்தது ஒரு சிறந்த எண்ணம். இங்கேயே பொதிகளை அவிழ்த்து சீராகப் பங்கிட்டு தேவையானவற்றை மட்டும் ஒவ்வொரு நாளும் அத்திரிகளில் ஏற்றிக் கொண்டு நகரின் பெரும் சந்தைக்கு நம்மால் போக முடியும். வணிகர்கள் மட்டுமே தங்கும் பகுதிகள் இவை. எனவே இங்கேயே ஒருவருக்கொருவர் பாதி வணிகம் நடந்து விடும்” என்றார் காந்தாரர். “வணிகரின் இடமென்பதனால் பொதுவான காவலே போதும். திருட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை.”
“நான் நகருள் நுழைகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நெடுந்தூரப் பயணம். இங்கே எங்களுடன் தங்கி யமுனையில் நீராடி உணவுண்டு ஆடை மாற்றி நகர் நுழையலாமே?” என்றான் இளைய வணிகன். அர்ஜுனன் “சிவயோகி மாற்ற விரும்பும் ஆடை ஒன்றே. ஒரு முறை மட்டுமே அணியும் ஆடை அது” என்றான். பின்பு இளவணிகனின் தோளை தட்டியபடி “இந்திரனின் நகரில் இன்று மழைவில் எழுமா என்று பார்க்கிறேன்” என்று புன்னகைத்தான். “வணங்குகிறேன். என்னை வாழ்த்திச் செல்லுங்கள் யோகியே” என்றான் அவன். “செல்வம் பெருகட்டும் குலம் பெருகட்டும்” என்று வாழ்த்தியபின் அர்ஜுனன் நடந்து இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டை வாயிலை நோக்கி சென்றான்.
இந்திரப்பிரஸ்தத்தின் முதல் வெளிக்கோட்டை பெருவாயில் மட்டுமே கட்டப்பட்டு ஒரு பெருமாளிகை போல தனியாக நின்றது. அதன் வலப்பக்கம் கரிய பெருஞ்சுவர் சற்றே வளைந்து சரிவேறி சென்று உடைந்தது போல் நிற்க அதன் அருகே வண்ண உடைகள் அணிந்த பல்லாயிரம் சிற்பிகள் அமர்ந்து கற்களை உளியால் கொத்தி பணியாற்றிக் கொண்டிருந்தனர். கிளிக்கூட்டத்தின் ஓசை போல உளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் பணியாற்றுவதை கண்காணிப்பதற்காக தோல் கூரையிட்ட மேடைக் குடில் ஒன்று அமைந்திருந்தது. அதன் வாயிலில் மூங்கில் பீடத்தில் தலைமைச் சிற்பி அமர்ந்திருக்க அருகே அவர் அடைப்பக்காரன் மூங்கில் குடுவையுடன் நின்றிருந்தான்.
கிழக்கே எழுந்த வெயில் கோட்டையின் பெரிய கற்சதுரங்களை மின்ன வைத்தது. அருகணையும்தோறும் கருங்கல்லில் உப்பின் ஒளி தெரிந்தது. கருநாகத்தின் செதில்கள் மின்னுவது போல் வெயிலில் அதன் புதிய கற்பொருக்குகள் ஒளிவிட்டன. பெருவாயிலில் மிகச்சில காவலர்களே இருந்தனர். உள்ளே செல்லும் வணிகர்களை அவர்கள் தடுக்கவோ உசாவவோ இல்லை. காவல் மாடங்களில் மடியில் வேல்களைச் சாய்த்தபடி அமர்ந்து ஒருவரோடொருவர் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தில் சுங்க வரி இல்லை என்பதனால் காவலும் தேவையில்லை என்று திரௌபதி முடிவுசெய்திருந்தாள். ஆனால் கண்காணிப்பு எப்போதுமிருந்தது. “மிகப்பெரிய நகரம் என்பதனால் ஏற்படும் அச்சத்தை காவலின்மை போக்கிவிடும். நகரம் அவர்களுக்கு அணுக்கமானதாக ஆகிவிடும்” என்றாள்.
கோட்டை முகப்பு பதினெட்டு அடுக்குகள் கொண்ட இரு தூபிகளுக்கு நடுவே சென்ற கற்பாளங்கள் பதிக்கப்பட்ட பாதையால் ஆனதாக இருந்தது. தூபிகளின் அனைத்து அடுக்குகளிலும் வட்டமான உப்பரிகைகள் அமைந்திருந்தன. அவற்றில் காவலர் அமரவும் சாலையை நோக்கி அம்புகளை செலுத்தவும் இடமிருந்தது. தூபிகளின் உச்சி கவிழ்ந்த தாமரை வடிவ வேதிகையை சென்றடைந்தது. அதன்மேல் இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதம் பொறிக்கப்பட்ட செங்காவிநிறமான பட்டுக் கொடி பறந்து கொண்டிருந்தது.
தூபிகளை இணைத்து கதவுகளேதும் அமைக்கும் எண்ணம் இல்லையென்று அதன் அமைப்பே காட்டியது. இந்திரப்பிரஸ்தம் அகழியாலோ காவல் காடுகளாலோ காக்கப்படவில்லை. ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த ஏழு கோட்டை நிரைகளே அதற்கு காப்பு. “இந்நகர் ஓர் எறும்புதின்னி. எதிரி வருகையில் தன் செதில்களை ஒன்றன் மேல் ஒன்றென மூடி உலோக உருளையென ஆக முடியும்” என்றார் வாஸ்துபுனிதமண்டலத்தை அமைத்த கலிங்கச்சிற்பியான கூர்மர்.
தூபிகள் நடுவே சென்ற பாதையில் மிகக் குறைவாகவே வணிகர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். சிற்பிகளும் வினைவலரும் அன்றி பொதுமக்கள் என சிலரே கண்ணுக்குத் தெரிந்தனர். இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்திருந்த நாநூற்றி எழுபத்தாறு யாதவர் ஊர்களிலிருந்தும் மக்கள் நகருக்குள் குடிவரத் தொடங்கவில்லை. அவர்களுக்கு நகரில் அவர்களின் இடமென்ன என்று அப்போதும் புரியத்தொடங்கவில்லை. மக்களை உள்ளே கொண்டுவர திரௌபதி தொடர்ந்து முயற்சிகள் செய்துகொண்டிருந்தாள். ஆனால் துறைமுகம் முழுமையாக பணிதொடங்குவது வரை நகரம் முற்றமைய வாய்ப்பில்லை என அவளும் அறிந்திருந்தாள்.
முதற்கோட்டைக்கு அப்பால் நகரைச் சூழ்ந்து நறுமணம் வீசும் சந்தனமும் நெட்டி மரங்களும் வளர்க்கப்பட்ட குறுங்காடு இருந்தது. அதனூடாக சென்ற சாலை இரண்டாவது கோட்டையை சென்றடைந்தது. அக்கோட்டையும் கட்டி முடிவடையா நிலையிலேயே இருந்தது. பெரிய மணற்பொரிக் கற்கள் நீள் சதுரங்களாக வெட்டப்பட்டு ஆங்காங்கே தரையில் கிடந்தன. அவற்றை வடங்களில் கட்டி சரிவாக அமைக்கப்பட்ட மூங்கில் சாரங்களில் ஒவ்வொரு படியாக இழுத்து ஏற்றி மேலே எடுத்துச்சென்று கொண்டிருந்தனர்.
அப்பெரும் பாறைகளை மூங்கில் சாரங்களில் ஏற்ற முடியுமா என்ற ஐயமே பார்வையாளர்களுக்கு எழும். அதை வேடிக்கை பார்த்தபடி அங்கேயே நின்றிருக்கும் கும்பலில் சிலர் “எப்படி மூங்கில் எடை தாங்குகிறது?” என்று எப்போதும் கேட்பதுண்டு. ஒருமுறை முதிய வினைவலர் ஒருவர் “மூடா, ஒரு மூங்கில் அல்ல அங்கிருப்பது பல்லாயிரம் மூங்கில்கள். அப்பெரும்பாறையை கட்டியிருப்பது பல நூறு சரடுகள். அவற்றின் ஒட்டு மொத்த வலிமை அப்பெரும்பாறையை கூழாங்கல் என ஆக்கக்கூடியது” என்றார். “சூத்திரர்களின் ஆற்றல் அதைப் போன்றது. ஷத்ரியர்களை தூக்கி மேலெடுக்க நமக்கு பல்லாயிரம் கைகள் உள்ளன” என்று ஒருவன் சொல்ல கூடி நின்றவர்கள் நகைத்தனர்.
பாறைகளை அசைத்த நெம்புகோல்களையும் தூக்கி மேலேற்றிய பெருந்துலாக்களையும் பின்னிக்கட்டியிருந்த வடங்களையும் இழுக்கும் யானைகள் மிக மெல்ல காலெடுத்து வைத்து அசைவதாக தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் உடற்தசைகளும் இழுவிசையில் தெறித்து நின்றிருந்தன. அவ்விசைகளுக்குத் தொடர்பின்றி தங்கள் சொந்த விழைவாலேயே செல்வதுபோல சதுரப்பாறைகள் மேலேழுந்து சென்று கோட்டை விளிம்பை அடைந்தன. அங்கிருந்த சிற்பிகள் கயிறுகளில் கட்டியிருந்த சிறிய வண்ணக்கொடிகளை அசைத்து ஆணையிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு வடங்களை பற்றி இழுக்க அவர்கள் இழுக்கின்ற விசைகளுக்கு இயைபற்றதுபோல அசைந்தாடிச்சென்ற பாறை துலாக்கள் கிரீச்சிட்டபடி சென்று தான் அமர வேண்டிய குழியில் முழை அமர்த்தி அமைந்தது.
அங்கு எப்போதும் பார்வையாளர் இருந்தனர். கற்கள் சென்று அமர்வது நோக்க நோக்க வியப்பு குறையாததாகவே எப்போதும் இருந்தது. கூடிநின்றவர்கள் கைசுட்டி கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். “முடிவற்ற உடற்புணர்ச்சியில் இனி அவை அமர்ந்திருக்கும்” என்றார் ஒருவர். உரக்க நகைத்து “நாய்களுக்காவது நாலு நாழிகை. இவற்றுக்கு நாலு யுகம்” என்றார் இன்னொருவர். “அவர்கள் இழுப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இழுக்கும் திசைக்கு அந்தப்பாறை செல்லவில்லை” என்றான் ஒருவன். “மூடா, எறும்புகள் வண்டுகளை இழுப்பதை நீ பார்த்ததில்லையா ஒவ்வொரு எறும்பும் ஒரு திசைக்கு இழுக்கும். அவை ஒட்டுமொத்தமாகவே சென்ற திசைக்கு சென்று சேரும்” என்றார் ஒரு முதியவர்.
வடிவமிலாது காலவெளியில் நின்றிருந்த பாறைகள். ஒவ்வொன்றையும் சூழ்ந்திருந்தது முடிவில்லாத தனிமை. வடிவம் கொண்டு ஒன்றோடொன்று பொருந்தி அவை உருவாக்கும் வடிவம் அக்கணத்திற்கு முன் இல்லாதிருந்தது. அப்போதென உருவாகி எழுவது. அது காலத்தின் முன் நிற்கும். ஆயிரம் காலம். பல்லாயிரம் காலம். ஆனால் ஒருநாள் உதிர்ந்து அழியும். அதில் மறுப்பே இல்லை. அவ்வகையில் நோக்கினால் மாலையில் வாடி உதிரும் மலரும் அதுவும் ஒன்றே. ஆனால் பாறைகள் அங்கே கிடக்கும். மிகமெல்ல அவை கறுத்து விளிம்புகள் உதிர்ந்து தங்கள் வடிவமில்லா தோற்றத்தை மீட்கத்தொடங்கும்.
மூன்றாவது கோட்டையும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இருந்தது. அதற்குள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட காவலர் இல்லங்கள் கூரை அற்ற நிலையில் நின்றன. “இவற்றுக்குள் ஒரு முறை வழிதவறினால் திரும்ப வருவது கடினம்” என்று அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வணிகர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் இவை மாறிக்கொண்டிருக்கின்றன. தென்னிலங்கை ஆண்ட ராவணன் நகருக்குள் படைகொண்டு வருபவர்களை சிக்க வைத்து விளையாடும் பொருட்டு இப்படி ஒரு சித்திரச் சுழல் பாதையை அமைத்திருந்தார் என்கிறார்கள். இதுவும் ஒரு ராவணன் கோட்டை போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும் யாராவது சென்று சிக்கி மீள முடியாமல் கதறி மறுநாள் மீட்கப்படுகிறார்கள்.”
இன்னொருவர் “அவை இன்று கட்டிமுடிக்கப்படவில்லை. எனவே அனைத்தும் ஒன்று போல் இருக்கின்றன. கூரை அமைந்தபின் முகப்பு எழும். அவற்றில் மானுடர் குடியேறுவார்கள். அவை அடையாளங்கள் சூடிக்கொள்ளும். அதன்பின் ஒவ்வொன்றும் தனி முகம் கொள்ளும்” என்றார். “இந்நகர் ஓர் ஒழிந்த கலம். இதற்குள் நிறைக்க மக்கள் தேவை” என்றார் ஒரு முதியவர். “யாதவர்களைக் கொண்டே நிறைப்பார்கள். அவர்கள் முதியகள்ளைப் போல. பெருகி நுரைத்து வெளியேயும் வழிவார்கள், பார்த்துக்கொண்டே இரு.”
ஒன்றினுள் ஒன்றாக அனைத்து கோட்டைகளும் பணி நடக்கும் நிலையிலேயே இருந்தன. அங்கு பல்லாயிரம்பேர் பணியாற்றியபோதும் அதன் பெருவிரிவால் அது ஒழிந்த வெறுமை கொண்டிருப்பதாகவே தோன்றியது. அங்கிருந்த நிலத்தில் பலநூறு சிறு சுனைகளும் குளங்களும் இருந்தன. அவற்றையெல்லாம் விளிம்புகட்டித் திருத்தி படியமைத்து நீரள்ளும் சகடையும் துலாவும் பொருத்தி பேணியிருந்தனர்.
கல்தொட்டிகள் நிரையாக அமைந்த குளக்கரையில் எருதுகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. குளங்களில் யானைகள் இறங்கிச்சென்று நீர் அருந்துவதற்கான சரிவுப்பாதை இருந்தது. சில குளங்களில் யானைகள் இறங்கி கால்மூழ்க நின்று நீரை அள்ளி முதுகின்மேல் பாய்ச்சிக்கொண்டிருந்தன. யானையின் முகத்தில் கண்களோ மூக்கோ வாயோ இல்லை என்றாலும் எப்படி புன்னகை தெரிகிறது என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணமே அவனை புன்னகைக்கச் செய்தது.
நான்காவது கோட்டைக்குள் எழுந்த சற்றே சரிவான நிலப்பரப்பு முழுக்க தோல்களாலும் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில் தட்டிகளாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட நெருக்கமான கொட்டகைகள் அமைந்திருந்தன. கோட்டைகளையும் கட்டடங்களையும் கட்டும் ஏவலரும் வினைவலரும் அங்கு செறிந்து தங்கியிருந்தனர். காலையில் பெரும்பாலானவர்கள் பணியிடங்களுக்கு சென்று விட்டபோதிலும் கூட அங்கு ஏராளமானவர்கள் எஞ்சியிருந்தனர். அமர்ந்தும் படுத்தும் சிறு பணிகளை ஆற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒலி திரண்டு முழக்கமாக எழுந்தது. அவர்களின் உச்சிப்பொழுது உணவுக்காக அடுமனைகள் எரியும் புகை எழுந்து கோதுமையும் சோளமும் வேகும் மணத்துடன் வானில் பரவி நின்றது.
ஐந்தாவது கோட்டை ஒப்பு நோக்க சிறியது. அதன் முகப்பில்தான் முதல் முறையாக பெரிய கதவுகள் அமைக்கும் இரும்புக்கீல்கள் இருந்தன. கதவுகள் அப்போதும் அமைக்கப்படவில்லை. அவை நகரின் மறுபக்கம் யமுனைக்கரையில் பெருந்தச்சர் குடியிருப்புகளில் தனித்தனி பகுதிகளாக கட்டப்படுகின்றன என அவன் அறிந்திருந்தான். அவன் கிளம்பும்போதே பணி நடந்துகொண்டிருந்தது. அவற்றை கொண்டு வந்து ஒன்றுடன் ஒன்று இணைத்து கோட்டை கதவாக ஆக்குவார்கள் என்றார்கள். “இணைக்கப்பட்ட கதவுகள் யானைகள் தண்டுகளை கொண்டு வந்து முட்டினால் எப்படி தாங்கும்?” என்று நகுலன் கேட்டான்.
“இணைக்கப்பட்டவை மேலும் வல்லமை கொண்டவை இளவரசே” என்றார் பெருந்தச்சரான மகிஷர். “ஒற்றைப் பெருங்கதவாக இவ்வளவு பெரிய கோட்டைக்கு அமைக்க முடியாது. அத்தனை பெருமரங்கள் தென்னகத்து மழைக்காடுகளில் கூட இருக்க வாய்ப்பில்லை. இவை கணக்குகளின் அடிப்படையில் இணைக்கப்பட்டவை. தண்டுகளோ வண்டிகளோ வந்து முட்டினாலும் அவ்விசையை பகிர்ந்து தங்கள் உடலெங்கும் செலுத்தி அசைவற்று நிற்கும்படி இக்கதவின் அமைப்பு சிற்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மழைவெயிலில் சுருங்கிவிரிந்து மரப்பலகை விரிசலிடும். இணைக்கப்பட்டவை அவ்விரிசலுக்கான இடைவெளியை முன்னரே தன்னுள் கொண்டவை.”
“காலம் செல்லச் செல்ல ஒற்றைமரம் வலுவிழக்கும். ஆனால் இணைக்கப்பட்டவற்றின் உறுப்புகள் ஒன்றை ஒன்று இறுகக் கவ்வி மேலும் உறுதி கொள்கின்றன. இதுவரை இங்கு கட்டப்பட்ட கோட்டைக் கதவுகள் அனைத்தும் வெண்கலப்பட்டைகளாலும் இரும்புப் பட்டைகளாலும் இறுக்கப்பட்டவை. குமிழ்களாலும் ஆணிகளாலும் ஒன்றிணைத்து நிறுத்தப்பட்டவை. இக்கலிங்கக் கதவுகள் முற்றிலும் மரத்தால் ஆனவை. ஒன்றை ஒன்று கவ்வி முடிவற்ற இணைப்பு ஒன்றை நிகழ்த்தியிருப்பவை. ஒரு முறை பூட்டி விட்டால் அவற்றை அவிழ்ப்பதற்கும் எங்கள் பெருந்தச்சனே வரவேண்டும்” என்றார் மகிஷர்.
கோட்டைக்குள் அமைந்த சிற்பியர் மாளிகைகளை கடந்து சென்றான். மெல்லமெல்ல அந்நகருக்குள் உளம்நுழைந்து உரிமைகொள்வதற்கு மாறாக முற்றிலும் அயலவனாக ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். கோட்டைப் பணிகளுக்குப் பிறகு காவலர்தலைவர் இல்லங்களாக மாற்றும்படி அமைக்கப்பட்ட மாளிகைகள். கோட்டை அமைவதற்குள் அவ்வில்லங்களை சிற்பிகள் அமைத்து அவற்றில் குடியேறிவிட்டனர். அவர்களுக்கு அனைத்தும் செம்மையாக அமைந்தாகவேண்டும். மலைக்கு மேல் இருக்கும் பன்னிரண்டு தடாகங்களிலிருந்து குடிப்பதற்கும் நீராடுவதற்குமான நீர் சுட்ட மண்குழாய்கள் வழியாக இல்லங்களின் ஒவ்வொரு அறைக்குள்ளும் வந்தது. வெண்பளிங்குச் சுவர்களில் நீர் வழிந்து கோடை காலத்தில் குளிர்ந்த தென்றல் அறைகள் எங்கும் உலவியது.
அவ்வில்லங்களை நோக்கி நின்றபின் ஒரு வணிகன் திரும்பி “சிற்பிகள் சக்ரவர்த்திகளுக்கு நிகரான வாழ்க்கை கொண்டவர்கள். ஆயிரம் வருடம் தவம் இருந்தாலும் லட்சுமி அத்தனை அருளை நமக்களிப்பதில்லை. பதினெட்டு வருடம் கற்றால் கலைமகள் அருளுக்கு விழைவதையெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள்” என்றான். “அதற்கு முற்பிறப்பில் செய்த அபூர்வமும் துணைவரவேண்டும்” என்றார் சூதர் ஒருவர்.
அந்தப்பாதையில் சென்ற அனைவரும் விழிகளென உளம் குவிந்திருந்தனர். அகத்தில் எழுந்த வியப்பை கட்டுப்படுத்தும்பொருட்டு எளிய சொற்களாக அவற்றை மாற்றிக்கொண்டிருந்தனர். வீணாக சிரித்தனர். எளிமையான அங்கதங்களை கூறினர். தங்களை அறிந்தவர் போலவும் அறியாதவர் போலவும் காட்டிக்கொண்டனர். ஒவ்வொருவரும் அந்நகரின் குடிகளாக ஒருகணமும் அயலவராக மறுகணமும் வாழ்ந்தனர்.
அவர்களில் ஒருவனாகவே அர்ஜுனன் தன்னை உணர்ந்தான். அவன் பெயரால் அமைந்த நகரம். அவனுடையதென பாரதம் எண்ணும் மண். ஆனால் ஒருபோதும் அதை அவன் தன் இடமென உணர்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் முற்றிலும் புதியவனாகவே திரும்பி வந்தான். எப்போதும் அது தனக்கு அவ்வண்ணமே இருக்கப்போகிறதென அவன் உணர்ந்தான்.