காண்டீபம் - 65
பகுதி ஐந்து : தேரோட்டி – 30
அர்ஜுனன் சுபத்திரையின் மஞ்சத்தறையின் வாயிலை அடையும்போது எதிரில் நிழல் ஒன்று விழுந்ததைக் கண்டு திரும்பி அங்கிருந்த தூண் ஒன்றுக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். தாலத்தில் பழங்களையும் பாலையும் ஏந்தி வந்த சேடி சுபத்திரையின் அறைக்கதவை மெல்ல தட்டி “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். கதவைத் திறந்த சுபத்திரை சினந்த குரலில் “எதுவும் வேண்டாம் என்று சொன்னேன்” என்றாள். சேடி “தங்களிடம் அளிக்கும்படி செவிலியன்னையின் சொல்” என்றாள். “வேண்டாம். கொண்டு செல்” என்ற சுபத்திரை கதவை மூடினாள்.
சேடி ஒரு கணம் நின்றபின் திரும்பிச் சென்றாள். அர்ஜுனன் கதவை மெல்ல தட்டினான். ஓசையுடன் கதவைத் திறந்து “உன்னிடம் நான்…” என்று சொல்ல வாயெடுத்த சுபத்திரை அவனைக் கண்டு திகைத்து “ஆ…” என்று வாய் திறந்து விரல்களால் இதழ்களை பொத்தியபடி பின்னடைந்தாள். அவளைத் தள்ளி உள்ளே சென்று கதவை தனக்குப் பின்னால் மூடி தாழிட்டபின் அர்ஜுனன் “உன்னை பார்க்கத்தான் வந்தேன். ஓசையிடாதே” என்றான். “வெளியே செல்லுங்கள்!” என்று சுபத்திரை சொன்னனாள். “வீரர்களை அழைப்பேன்.”
“அழை” என்றான் அர்ஜுனன் சென்று அவள் மஞ்சத்தில் அமர்ந்தபடி. அவள் தாழை தொட்டு மறுகையை நீட்டி “வெளியே செல்லுங்கள்” என்றாள். “திறக்காதே” என்றான் அர்ஜுனன். “உன் படுக்கையறையில் அயலவன் ஒருவன் இருப்பதை நீயே அரண்மனைக்கு சொன்னால் அதன் பிறகு உனக்கு இங்கெங்கும் மதிப்பிருக்காது.” தளர்ந்து அவள் கை விழுந்தது. “இங்கு வந்து அமர்ந்துகொள். உன்னிடம் நான் பேசவேண்டும்.”
“என்ன இது?” என்றாள். “உன்னைப் பார்க்க வேண்டுமென்றே நான் வந்தேன்” என்றான். “என்னை நீங்கள் பார்க்க வேண்டியதில்லை” என்றாள். “இது என்ன மாற்றுரு? யாரை ஏமாற்றுகிறீர்கள்?” என்றாள். “நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னை நீ சிவயோகியெனக் கொண்டாயென்றால் அது உனது பிழை” என்றான். “நான் உங்களை சிவயோகியென்று எண்ணி அர்ஜுனனைப் பற்றி பேசும்போதெல்லாம் நீங்கள் அதை ஒப்புக் கொண்டீர்கள். என்னிடம் பொய்யுரைத்தீர்கள்” என்றாள்.
“நான் பொய்யுரைக்கவில்லை. உண்மையை சொல்லவில்லை, அவ்வளவுதான். இரண்டுக்கும் வேறுபாடுள்ளது” என்றான் அர்ஜுனன். சுபத்திரை “நான் அறிவேன். பொய்யுரைத்தும் மாற்றுரு கொண்டும் பெண்களைக் கவர்ந்து வென்று செல்வது உங்கள் இயல்பு என்று. அந்தப் பட்டியலில் ஒருத்தியல்ல நான். இக்கணமே வெளியேறுங்கள்” என்றாள். “வெளியேறவில்லை என்றால்…?” என்றான் அர்ஜுனன். “ஒன்று செய்ய என்னால் முடியும்” என்றாள். “என் வாளை எடுத்து கழுத்தை வெட்டிக் கொள்வேன். குருதியுடன் இங்கு கிடப்பேன் அப்பழியை சிவயோகியான நீங்கள் சுமந்தால் போதும்” என்றாள்.
அர்ஜுனன் “அதோ உன் அருகில்தான் உன் உடைவாள் இருக்கிறது. எடுத்து வெட்டிக் கொள்” என்றான். அவள் சினத்துடன் சென்று அந்த வாளைப் பற்றி கையிலெடுத்தபின் திரும்பி அவன் கண்களைப் பார்த்து தயங்கி நின்றாள். “நீ வெட்டிக் கொள்ள மாட்டாய்” என்றான். “ஏனெனில் நீ என்னை விரும்புகிறாய். என்னை இக்கட்டுகளில் விட நீ முனையமாட்டாய்.” அவள் “பேசவேண்டாம். வெளியேறுங்கள்!” என்றாள் பற்களை இறுக்கிக் கடித்து பாம்பென சீறும் ஒலியில். “நீ என்னை விரும்பவில்லை என்றால் வெட்டிக்கொள்” என்றான் அர்ஜுனன். “உறுதியாக மறுகணம் நானும் வெட்டிக்கொள்வேன்.” அவள் தளர்ந்து வாளை தாழ்த்தினாள்.
“உன்னிடம் பேசி தெளிவுற்ற பின்னரே நான் இவ்வறைவிட்டு செல்லப் போகிறேன். நீயும் என்னிடம் பேசத்தான் போகிறாய். அதை நாம் இருவரும் அறிவோம். பின் எதற்கு இந்த உணர்ச்சி நாடகம்?” என்றான் அர்ஜுனன். “ஆம், நீ என்னை வெறுக்கிறாய். என் வரலாற்றை அருவருக்கிறாய். நான் உன்னை வென்று செல்ல நீ ஒப்புக் கொள்ளப்போவதில்லை. உன் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திவிட்டாய். நான் புரிந்துகொண்டு விட்டேன். இனி நாம் அமர்ந்து பேசலாமல்லவா?” தான் இந்திரப்பிரஸ்தத்தின் அர்ஜுனனாக ஆகிவிட்டதை அவனே உணர்ந்தான். கன்னியர் படுக்கையறைகளில் நுழைவதற்கு உரிமையுள்ள இந்திரனின் மைந்தன்.
சுபத்திரை பல்லைக் கடித்தபடி “உங்களிடம் இருக்கும் இந்த குளிர்நிலை, வாளின் உலோகப்பரப்பு போல அதன் தண்மை, அதை நான் அருவருக்கிறேன்” என்றாள். “ஆம், அறிந்து கொண்டேன்” என்றான் அர்ஜுனன். “நான் இப்போது இந்திரன். ஆனால் நீ அந்த சிவயோகியை விரும்பினாய்.” “அது உங்கள் மாற்றுரு. உங்கள் நடிப்பு” என்றாள். “இளவரசி, தன்னுள் இல்லாத ஒன்றை எவரும் நடிக்க முடியாது. என் ஆளுமையில் ஒரு பகுதியை நீ விரும்ப முடியும் என்றுதானே அதற்குப் பொருள்? எந்த ஆணிலும் பெண் அவனுடைய ஒரு பகுதியை மட்டுமே அறிகிறாள். அதையே விரும்புகிறாள். நீ பெருங்காதல் கொள்வதற்குத் தகுதியான ஒரு முகத்தை கொண்டுள்ளேன் என்பதே என்னை மகிழ்விக்கிறது” என்றான்.
“இப்பேச்சுகள் எதையும் கேட்கும் உளநிலையில் நான் இல்லை. இன்று என்னை தனிமையில் விட்டு விட்டுச் செல்லுங்கள்” என்றாள். “உங்களுக்காக ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். உங்களை சந்திக்க வேண்டுமென்று பன்னிரு முறை தூதனுப்பினேன். நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை” என்றபின் “நான் எங்கும் தணிந்து வாயில் திறக்கக் கோருவதில்லை. மூடும் கதவுகளை உடைத்துத் திறந்து உட்புகுவதே எனது வழக்கம்” என்றான். சீற்றத்துடன் “இங்கு உட்புகுந்து வரவில்லை நீங்கள். கள்வனென கரந்து வந்துள்ளீர்” என்றாள் அவள். “அதற்கும் இந்திரநூல் விடை சொல்கிறது இளவரசி. உண்மையிலேயே பெண் விரும்பவில்லை என்றால் அவள் அறைக்குள் எவரும் நுழைய முடியாது.”
அவள் கடும் சினத்துடன் “சீ” என்றாள். “காதலில் இதுவும் ஒரு வழியே. நீங்கள் விழைந்தால் சொல்லுங்கள், படை கொண்டு வந்து துவாரகையின் கோட்டையை உடைத்து அரண்மனைக் கதவுகளை சிதைத்து உங்கள் குலத்தை கொன்றுகுவித்து உள்ளே வருகிறேன்” என்றான். அவள் கைகள் வளையலோசையுடன் சரிந்தன. தோள்கள் நீள்மூச்சில் குழிந்து எழுந்தன. “உங்களுக்கென்ன வேண்டும்?” என்றாள். “தெளிவுறச் சொல்லிவிடுகிறேனே. நான் இங்கு வந்தது உங்கள் மேல் காதல் கொண்டு அல்ல. உங்களை அடைய வேண்டுமென்ற உங்கள் இளைய தமையனின் ஆணையை ஏற்று மட்டுமே. உங்களை நான் மணந்தாக வேண்டுமென்பது இந்திரப்பிரஸ்தத்துக்கும் துவாரகைக்குமான அரசியல் உறவுக்கு தேவை.”
அவள் விழிகள் மாறுபட்டன. “காதலின் விழைவு கூட அல்ல இல்லையா?” என்றாள். “ஏன் பொய்யுரைக்க வேண்டும்? உங்களைக் காணும் கணம் வரை அது அரசியல் மட்டுமே. கண்ட பின்னரும் நான் தயங்கினேன். என்னை விழைவை நோக்கிச் செலுத்தியது நீங்கள். உங்களை முத்தமிட்ட பின்னரே விரும்பத் தொடங்கினேன். ஒரு பெண்ணின் அனலெனும் விழைவை வெல்லும் ஆண்மகன்கள் சிலரே. நேமிநாதரைப்போல.” அவள் மேல்மூச்சு விட்டபோது முலைகள் எழுந்தடங்கின. என்ன சொல்வதென்றறியாதவள் போல் தன் மேலாடையை கையிலெடுத்து விரல்களைச் சுழற்றி பார்வையை சரித்தாள்.
“உங்கள் உள்ளத்தில் நான் அமர்ந்துவிட்டேன் இளவரசி” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அல்ல… சிவயோகி” என்றாள். “சரி, சிவயோகியென நான் அமர்ந்துளேன். உங்கள் கன்னிமையை அடைந்துவிட்டேன். இனி பிறிதொரு ஆண் உங்களைத் தொட உங்கள் ஆணவம் ஒப்புக் கொள்ளாது” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “பிறகென்ன? என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான். “என்னால் முடியவில்லை. நீங்கள் அர்ஜுனன் என்று எண்ண எண்ண என் உள்ளம் கசப்படைகிறது” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “நீங்கள் குருதியாடி நிற்கும் போர்த்தெய்வம்போல. நான் போரை வெறுக்கிறேன். போரில் இறப்பவர்களைக் கண்டு கழிவிரக்கம் கொள்கிறேன்.”
அர்ஜுனன் “அதற்கு நேமிநாதர்தான் பின்புலமா?” என்றான். “இல்லை, நான் என்றும் அப்படித்தான் இருந்தேன்” என்றாள். “எண்ணி எண்ணி பார்த்தேன். எப்போது இக்கசப்பு தொடங்கியது என்று. அப்போது தெரிந்தது பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஒரு சூதன் சொன்ன கதையில் வில்லுடன் நீங்கள் எழுந்தீர்கள். போர்க்களத்தில் துருபதனை பற்றி இழுத்து தேர்க்காலில் கட்டி கொண்டு வந்து உங்கள் ஆசிரியரின் காலடியில் போட்டீர்கள். வீரன் செய்யும் வினை அல்ல அது.”
அர்ஜுனன் முதல்முறையாக உளம்குன்றினான். நோக்கைத் திருப்பி கைகளைக் கோத்து பற்றிக்கொண்டு “அது என் ஆசிரியருக்காக” என்றான். “அல்ல… ஆசிரியருக்காக மட்டுமல்ல” என்றாள். “ஆம், அவருக்காகத்தான்” என்றான் அர்ஜுனன். அவள் உரக்க “உங்கள் தமையனை அவ்வண்ணம் கட்டி இழுத்து வர துரோணர் ஆணையிட்டிருந்தால் செய்திருப்பீர்களா?” என்றாள். அர்ஜுனன் தடுமாறினான். இதழ்களை ஓசையின்றி அசைத்தபின் “அது…” என்றான். “நான் கேட்பது நேரடியான விடையை” என்றாள் சுபத்திரை. “இல்லை” என்றான் அர்ஜுனன். “என்ன செய்திருப்பீர்கள்?” என்றாள். “சொல்லுங்கள், அவ்வண்ணம் ஓர் ஆணையை துரோணர் இட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”
அர்ஜுனன் கை தூக்கி உறுதியான குரலில் “அவ்வாணையை அவர் உதடுகள் சொல்லி முடிப்பதற்குள் என் வாளை எடுத்து என் தலையை வெட்டி வீழ்த்தி அவர் முன் இறந்துவிழுந்திருப்பேன்” என்றான். அவள் இதழ்கள் மெல்ல இகழ்ச்சியுடன் வளைந்தன. “அப்படியென்றால் துரோணர் துருபதனை கட்டி இழுத்து வர ஆணையிட்டபோது மட்டும் அறமென எதுவும் ஊடே வரவில்லையா? மழுப்ப வேண்டியதில்லை. அக்கணம் நீங்கள் அறிந்திருந்தீர்கள், பாண்டவர்களில் கௌரவர்களில் எவரும் ஆற்ற முடியாத ஒன்றை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என.” “ஆம்” என்றான் அர்ஜுனன். “அப்போது உங்கள் அகம் அந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தது. பின்னர் நீங்கள் அடைந்த கசப்பெல்லாம் அந்தக் கீழ்மையை உங்களுடையதல்ல என்றாக்கி அவர்மேல் சுமத்துவதன் பொருட்டே.”
அர்ஜுனன் தலையசைத்து “ஆம், உண்மை” என்றான். “ஒவ்வொரு முறையும் ஓர் எல்லை மிக அருகே தெரிகிறது. துணிவின் எல்லை. அறத்தயக்கத்தின் எல்லை. கீழ்மையின் எல்லை. அதைக் கடக்கையிலேயே உள்ளம் நிறைவுறுகிறது. அதுவரையிலான எல்லைகளைக் கடந்தவர்களையே வீரர் என இவ்வுலகு கொண்டாடுகிறது. அறத்தில் மட்டுமல்ல, அறமீறலிலும் எல்லைகடத்தலே வீரமெனப்படுகிறது” என்றான் அர்ஜுனன். “அந்த மீறல் வழியாகவே பெருவீரர் என்று புகழ் பெற்றீர்கள். நீங்கள் எதையும் செய்வீர்கள் என்னும் அச்சம் பாரதவர்ஷத்தில் பரவியது. நீங்கள் செல்வதற்குள்ளாகவே உங்கள் தூதர்களாக அந்த அச்சம் சென்றுவிடுகிறது. களங்களில் உங்கள் முதல் பெரும் படைக்கலம் அது. அதை அறிந்தே கையிலெடுத்தீர்கள்.”
சுபத்திரை தொடர்ந்தாள் “சூதர்கள் சொல்லில் உங்கள் வில் புகழ்பெற்ற முதற்கணம் அது இளைய பாண்டவரே! நீங்கள் அடைந்த அனைத்து வெற்றிகளும் புகழும் அந்தத் தருணத்திலிருந்தே தொடங்குகின்றன. அந்தத் தருணத்திலிருந்தே என் கசப்பும் தொடங்குகிறது.” அர்ஜுனன் “அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வீரன் படைக்கலம் ஏந்துவது அறத்தின் பொருட்டே என நூல்கள் சொல்கின்றன. ஆனால் முற்றிலும் அறத்தில் நின்ற படைக்கலம் கொண்ட வீரன் எவனும் மண்ணில் இதுவரை நிகழ்ந்ததில்லை. பேரறத்தான் என்று நூல்கள் புகழும் ராமனும் மறைந்திருந்து வாலியை கொன்றவனே” என்றான்.
அச்சொற்களாலேயே இயல்பு நிலை மீண்டு புன்னகைத்து “ஒன்று அறிக, இயல்பிலேயே அறமும் வீரமும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு திசைகளைக் கொண்டவை. அறம் என்றும் ஆக்கத்தை உன்னுகிறது. வீரமோ அழிவில் உவகை கொள்கிறது. முற்றிலும் பொருந்தாத ஒன்றை உயர் கனவொன்றில் பொருத்தி வைத்துள்ளனர் மூதாதையர். வில்லேந்தும் இளையவனுக்கு அக்கனவை இளமையிலேயே அளிக்கிறார்கள். படைக்கலம் என அக்கனவை ஏந்தி களம்புகும் அவன் அங்கு முதற்கணத்திலேயே அனைத்தும் அக்கனவிலிருந்து விலகி விடுவதை காண்கிறான். துரோணரின் முன் துருபதனை வீழ்த்திய கணம் நான் என் கனவிலிருந்து விழித்துக் கொண்டேன். படைக்கலங்களைப் பற்றி வீண் மயக்கங்கள் எதுவும் எனக்கில்லை. அவை அறத்தையோ தெய்வங்களையோ நிலை நாட்டுபவை அல்ல. கொல்பவை மட்டுமே” என்றான்.
“நான் நேமியின் முன் தலைவணங்கினேன். ஆனால் ஒருபோதும் சிறுமை கொள்ளவில்லை. ஏனென்றால் எனக்கு என்னைப் பற்றிய மயக்கங்கள் ஏதுமில்லை. என் படைக்கலத்தை நான் அறிந்திருக்கிறேன். அதை தூக்கி வீசிவிடமுடியுமா என்று மட்டுமே பார்த்தேன்” என்றான் அர்ஜுனன். அவள் “அதைத்தான் நான் வெறுக்கிறேன்” என்று கசப்புடன் சொன்னாள். “இன்னும் அக்கசப்பு இருந்து கொண்டிருக்கிறது. படைக்கலமேந்தி பயிலும்தோறும் என் எதிர் நின்று என்னுடன் போரிட்டது அக்கசப்பே.”
“வாளேந்தி தமையனுக்காக போர்புரியச் சென்றேன். முதல் வீரனை என் வாள் வெட்டி வீழ்த்துவதற்கு ஒரு கணம் முன்பு கூட என்னால் கொலை புரிய முடியுமென்று நான் எண்ணியதில்லை. அந்த முதல் தலை வெட்டுண்டு மண்ணில் விழக்கண்டபோது என்னைக் கட்டியிருந்த சரடொன்றை வெட்டி அறுத்து என் எல்லையை கடந்தேன். பின்பு இரக்கமற்ற வெறியுடன் என்னை நானே துண்டித்து கடந்து சென்று கொண்டிருந்தேன். குருதி வழியும் உடலுடன் களம் எழுந்து நின்றபோது உவகையில் என் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. என்னைச் சூழ்ந்து எழுந்த வாழ்த்தொலிகளை கேட்டேன். அன்று முழுக்க என் தசைகள் அனைத்தும் இறுகி அதிர்ந்து கொண்டிருந்தன. மண்ணில் நான் என்னை உணர்ந்தபின் ஒரு போதும் அதற்கிணையான பேரின்பத்தை அடைந்ததில்லை” என்று சுபத்திரை தொடர்ந்தாள்.
“கணம்தோறும் கூடிச் செல்லும் களியாட்டு அது. வாளேந்தி நகர் புகுந்து எதிர்வரும் அத்தனை தலைகளையும் கொய்து வீழ்த்த வேண்டுமென்று தோன்றியது. அவ்வுவகையை கட்டுப்படுத்தியது உடல் கொண்ட களைப்பே. அன்றிரவு துயில்வதற்காக படுக்கும்போது என் உள்ளம் சரிய மறுத்து திமிறி எழுந்து நின்று கொண்டிருந்தது. கைகளும் கால்களும் ஈரத்துணி போல படுக்கையில் ஒட்டிக்கொண்ட போதும் என்னிலிருந்து எழுந்து என் மேல் கைவிரித்து கவிழ்ந்து நோக்கி நின்றது என் துடிப்பு. அப்பொழுது அதை அஞ்சினேன். அதை என் சரடுகளால் கட்டி வைக்க முடியாதென்று தோன்றியது.”
சுபத்திரை பெருமூச்சுவிட்டாள். “ஏதோ ஒரு கணத்தில் நான் அறிந்தேன் பிறிதொருத்தி என நான் மாறிக்கொண்டிருப்பதை. அஞ்சி எழுந்தோடி என் செவிலியன்னையின் அறைக்குள் புகுந்து அவள் இரு கைகளை எடுத்து என்னை சுற்றிக்கொண்டு அவள் பொல்லா வறுமுலைக்குள் என் முகத்தை புதைத்து சிறு மகள் என என்னை உணர்ந்தபடி உடல் ஒடுக்கிக் கொண்டேன். எதைக் கடந்தேன்? அதில் எதை இழந்தேன்? என் உள்ளம் துழாவிக் கொண்டே இருந்தது. அப்போது அறிந்தேன் இவ்வுயிர்கள் அனைத்தையுமே அறிவே என உணர்ந்து வியந்த இளம் சிறுமி ஒருத்தி இருந்தாள். அந்த கணத்தில் நான் தலை வெட்டி எறிந்தது அவளைத்தான்.”
“கண்ணீர் விட்டு உடல் குலுங்கி அன்று அழுதேன். என்னென்று கேட்காமல் செவிலி என் தலையை கோதிக் கொண்டிருந்தாள். இரவெல்லாம் அழுது காலையில் ஓய்ந்தேன். எழுந்து வெளியே சென்றபோது என் அணுக்கத்தோழி எழுவகை இனிப்புகளை தாலத்தில் வைத்து எனக்கென கொண்டு வந்தாள். அன்று தத்தாத்ரேயருக்குரிய நோன்புநாள் என்றாள். குளித்து நீராடை அணிந்ததும் என் அகம்படியினருடன் தத்தாத்ரேயரின் ஆலயத்திற்கு சென்றேன். மூவேதங்களும் வால் குழைத்து பின்னால் தொடர வெற்றுடலுடன் நின்ற தத்தாத்ரேயரின் முன் கைகூப்பி நின்றபோது என் கண்கள் நீரொழுகத் தொடங்கின. கூப்பிய கைகளின் மேல் முகத்தை வைத்து விம்மியழுதேன்.”
“வெற்றுடல் கொண்டு எழுந்து நிற்கும் சிலை கொண்ட கனிந்த விழிகள் என்னை அணுகி நோக்கின. முலையூட்டும் அன்னையின் கருணை. எதன் பொருட்டேனும் அவை படைக்கலம் ஏந்த முடியாது. எவ்வுயிரையும் கொன்று அதை வெற்றி என கொள்ள முடியாது. கனிதல் என்பது மட்டுமே தன்முழுமை. முழுமையல்லாத எதுவும் வெற்றி அல்ல. என் அறைக்குத் திரும்பி மஞ்சத்தில் பித்தெழுந்தவள் போல் அமர்ந்திருந்தேன். அப்போது உறுதி கொண்டேன் என் உள்ளம் விழைவது என்ன என்று. இவ்வுலகைத் தழுவி விரியும் அக்கனிவை மட்டும்தான். படைக்கலம் ஏந்தி போர்க்களம் வென்று நான் அடைவதற்கேதுமில்லை. இனி நான் படைக்கலம் ஏந்துவதில்லை என முடிவெடுத்தேன். இளவரசே, அதன் பின் உங்களை மேலும் வெறுத்தேன்” என்றாள்.
அர்ஜுனன் “தத்தாத்ரேயரின் ஆலயமுகப்பில் சென்று நிற்கையில் நானும் என்னை வெறுப்பதுண்டு” என்றான். சுபத்திரை “பெரும் கருணை கொண்டு முற்றும் உறவைத் துறந்து நிற்கும் ஒருவன் மெய்மையை தேடவேண்டியதில்லை. வால் குழைத்து உடல் நெளித்து மெய்மைகள் அவனை தொடர்ந்து பின்னால் வரும்” என்றாள். “என் குலத்தில் அரிஷ்டநேமி போன்ற ஒருவர் எழுந்தது எனக்களித்த பெருமிதம் அதன் பொருட்டே. எதையும் அவர் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ஒரு கையில் மெய்மையுடனும் மறுகையில் முழுமையுடனும் பிரம்மம் அவரைத் தொடர்ந்து வரும். திமிறி விளையாடச் செல்லும் குழந்தையை தொடர்ந்தோடி பிடித்துத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ளும் அன்னை போல் தெய்வம் அவரை ஏற்றுக் கொள்ளும்.”
“ரைவத மலையில் அவரைக் கண்டபின் நான் மேலும் மேலும் விலகினேன். யோகி என வந்த உங்களிடம் நான் கண்டதேது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கண்டது போர்வீரனின் விழிகளை அல்ல” என்றாள் சுபத்திரை. “ஆம். அவை உண்மையில் போர்வீரனின் விழிகள் அல்ல” என்றான் அர்ஜுனன். “அவை ரைவதமலையின் நெற்றியில் வெற்றுடலுடன் எழுந்து நின்ற ரிஷபரின் கால்களைப் பணிந்த கண்கள். மழைக்குகைக்குள் தேரை போல் ஒட்டி அமர்ந்திருந்த அரிஷ்டநேமியின் கண்களைக் கண்ட கண்கள். அவை அர்ஜுனனின் கண்கள் அல்ல” என்றான் அர்ஜுனன்.
“ஆம்” என்றபடி அவள் முன்னால் வந்தாள். உள எழுச்சியால் கிசுகிசுப்பாக மாறிய குரலில் “குருதித் துளி விழுந்த நீரை அருந்தக் கூசி நின்றிருந்த சிவயோகியைத்தான் நான் உளமேற்றுக் கொண்டேன். இன்றும் என் உள்ளத்தில் உள்ளது அவர்தான். அஸ்தினபுரியின் இளவரசர் அல்ல, இந்திரப்பிரஸ்தத்தின் ஆட்சியாளர் அல்ல, பாரதவர்ஷத்தின் வில்லாளி அல்ல. எனக்கு அவர்கள் தேவையில்லை” என்றாள். அர்ஜுனன் எழுந்து அவளருகே வந்து “இளவரசி, உங்கள் முன் என்றும் உளங்கனிந்த சிவயோகியாக மட்டுமே இருப்பேன் என்றுரைத்தால் என்னை ஏற்கலாகுமா?” என்றான்.
இல்லை என்பது போல் அவள் தலை அசைத்தாள். அவன் அவள் தோளில் கை வைத்தான். “என்னால் உன்னை விட்டு விலக முடியாது சுபத்திரை. என் தலை கொய்து இக்கால்களில் வைக்க வேண்டுமென்று கோரினால் கணம் கூட தயங்காமல் அதை செய்வேன். எங்கும் பெண் முன்னால் நான் முழுதும் தலை பணிந்ததில்லை. இங்கு ஏதும் மிச்சமின்றி வணங்குகிறேன். எனக்கு அருள்க!” என்றான். அவள் கைகளைத் தூக்கி அவற்றில் தன் கைகளை வைத்தான்.
சொற்கள் தவித்த இதழ்களுடன் பெருமூச்சு விட்டு “உங்களை நான் எந்நிலையிலும் தவிர்க்க முடியாது என்று நான் அறிவேன்” என்றாள். “தயக்கமின்றி உன் தோள்களில் என் கையை வைக்க முடியுமா என்று பார்த்தேன். முடிகிறது. நான் உன்னவன்” என்றான் அர்ஜுனன். “என்னை ஒரு விளையாட்டுப் பாவையாக அரண்மனை விலங்காக உன் மஞ்சத்தருகே வைக்கும் எளிய கோளாம்பியாக ஏற்றுக்கொள்.” அவள் தலைகுனிந்து “இளைய பாண்டவரே, என் தமையனுக்கு முழுவதும் அளிக்கப்பட்டது என் வாழ்க்கை” என்றாள். அவன் “இளைய யாதவருக்கு படைக்கப்பட்டதே என் வாழ்க்கையும்” என்றான். “எஞ்சும் ஏதேனும் ஒன்றிருந்தால் அது முற்றிலும் உனக்காக.”
சிறிய விம்மலுடன் அவள் அவன் மார்பில் தலையை வைத்தாள். அவள் இடை சுற்றி தன் மார்புடன் இறுக அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். “எச்சொல்லும் காமத்தில் பொருள்படும். அத்தனை சொல்லும் பொருளற்றுப் போகும் தருணமும் ஒன்றுண்டு. நான் என்ன சொல்வேன் இளவரசி? என்னை சூடிக்கொள்ளுங்கள்” என்றான் அர்ஜுனன். அவள் அவனை இறுக அணைத்து முகத்தை அவன் மார்பில் வைத்து உடல் குலுங்க அழத்தொடங்கினாள்.
இருவரும் ஒருவர் உடலை ஒருவர் உணரத் தொடங்கினர். அவன் கைகளை உணர்ந்த சுபத்திரை தன் கைகளால் அவற்றை பற்றிக்கொண்டு “வேண்டாம்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “ஏன்?” என்றான். அவள் விழிகளைத் தாழ்த்தி “இல்லை” என்றாள். “யாரை அஞ்சுகிறாய்?” என்றான். “யாரையும் இல்லை” என்று அவள் சொன்னாள். “யாதவர்களுக்கு இம்மணமுறை உகந்தது. ஷத்ரியர்களுக்கு இது விலக்கல்ல” என்றான். “ஆம். நான் எவருக்கும் விடைகூற கடமைப்பட்டவளல்ல. என்னளவில் இளைய தமையன் ஒருவருக்கே கட்டுப்பட்டவள். எனவே நான் தயங்க வேண்டியதில்லை” என்றாள்.
அவன் அவள் உடலைவிட்டு கைகளை எடுத்து விலகி “சரி” என்றான். “பிடிக்கவில்லை என்றால் தேவையில்லை.” “பிடிக்கவில்லை என்றல்ல…” என்று அவள் விழிகளைத் தூக்கி சொன்னபோது அவற்றிலிருந்த சிரிப்பை அவன் கண்டான். “அனைவரும் செய்வதை நானும் செய்வது கூச்சமளிக்கிறது” என்றாள் அவள் சிரித்தபடி. “ஆம். அதுவேதான் நானும் எண்ணினேன். ஆனால் நேர்மாறாக. இது ஒரு புழுவோ விலங்கோ பறவையோ செய்வது. நாம் மானுடர் என்றும் கற்றவர் என்றும் அரசகுடியினர் என்றும் எண்ணிக்கொள்ளும் வெறும் உடல்கள். அதன் விடுதலையை கொண்டாடுவதற்குப் பெயர்தான் காமம். காமத்தை அறிந்தபின் நீயும் இச்சொற்களை உணர்வாய்” என்றான்.
“அச்சொல் வேண்டாமே” என்று அவள் முகம் சுளித்தாள். “எச்சொல்?” என்றான். “காமம். அது கூரியதாக இல்லை. ஆடையற்றதாக உள்ளது” என்று தாழ்ந்த குரலில் சொல்லி சிரித்தாள். “உனக்கு நாணம் என்றால் அதை காதல் என்று ஆடையணிவித்து சொல்கிறேன்” என்றான். “என்ன பேச்சு இது?” என்று அவன் கையை அடித்தாள். அவன் அக்கையைப் பற்றி சற்றே வளைத்து அவளை இழுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டு “இன்னும் என்ன?” என்றான். “இத்தருணத்தில் உங்கள் பிற நாயகியரைப் பற்றி எண்ணாமல் இருக்க என்னால் முடியவில்லை என்பதை வியக்கிறேன்” என்றாள். “அது இயல்புதானே?” என்றான். “பிறநாயகியரும் முந்தையவளைப் பற்றியே கேட்டனர்.”
“உலூபியை, சித்ராங்கதையை நான் ஒரு பொருட்டென எண்ணவில்லை” என்றாள். “ஆம். அதுவும் இயல்புதான்” என்றான். “அவள் எப்படிப்பட்டவள்?” என்றாள் சுபத்திரை. “நீ என்ன எண்ணுகிறாய்?” என்றான். “சக்ரவர்த்தினி என்று சொல்லி வளர்க்கப்பட்டவள். எனவே சக்ரவர்த்தினியன்றி பிறிதொரு ஆளுமையை சூடிக்கொள்ள அறியாதவள்.” அர்ஜுனன் சிரித்து “ஆம்” என்றான். “அவள் அமரும் பீடங்கள் அனைத்தும் அரியணைகளே என்று ஒரு சூதன் பாடினான். அரியணையன்றி பிற பீடங்களில் அவளால் அமரமுடியாது என்று நான் புரிந்து கொண்டேன்” என்றாள். அர்ஜுனன் “உண்மை” என்றான். பின்பு “பாரதவர்ஷத்தின் பெண்கள் அனைவருமே அவளைப் பற்றித்தான் அறிய விரும்புகிறீர்களா?” என்றான். “ஆம். அது இயல்புதானே? அத்தனை பெண்களுக்குள்ளும் ஒரு பேரரசி பகற்கனவாக வடிவம் கொண்டிருக்கிறாள். மண்ணில் திரௌபதி அவ்வடிவில் இருக்கிறாள். அவளாக மாறி நடிக்காத பெண் எவளும் இங்கு இருக்கிறாள் என்று நான் எண்ணவில்லை. வெளியே தாலமேந்திச் செல்லும் எளிய சேடி கூட உள்ளத்தின் ஆழத்தில் திரௌபதிதான்.”
அர்ஜுனன் மஞ்சத்தில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றி அருகிலே அமர்த்திக் கொண்டான். அவள் தன் கையை அவன் கையுடன் கோத்து தோளில் தலை சாய்த்து “தொட்டுக் கொண்டிருப்பது எத்தனை இனிதாக இருக்கிறது!” என்றாள். “யாரை தொடுகிறாய்? சிவயோகியையா அர்ஜுனனையா?” என்றான். “அந்தப்பேச்சு வேண்டாம்” என்றாள். “இப்படி எண்ணிப்பார், பொன்னாலான ஓவியச்செதுக்கு உறை. அதற்குள் வாள் இல்லை என்றால் அதை வாளுறை என்று கொள்ள முடியுமா?” என்றான். “அதைப்பற்றி பேசவேண்டாம்” என்றாள்.
“இங்கு நான் யாராக இருக்க வேண்டும்?” என்று அவன் கேட்டான். “எப்போதும் சிவயோகிதான்” என்றாள். “எப்போதுமா?” என்று அவன் கேட்டான். “ஆம். எப்போதும்தான்” என்றாள் அவள். அர்ஜுனன் “அது ஒன்றும் அரிதல்ல. சிவயோகியென்பது என் நடிப்பும் அல்ல” என்றான். பின்பு “காமத்தில் தானென இருந்து திளைப்பவர் சிலரே. மாற்றுருக்களில் ஒன்றுதான் அம்மேடையில் இனிது ஆட முடியும். ஏனென்றால் அது நகக்காயங்களும் பற்காயங்களும் படுவது. குருதி ஊற மாறிமாறி கிழிக்கப்படுவது. மாற்றுரு என்றால் புண்படுவது தானல்ல அவ்வுரு என ஆகும் அல்லவா?” என்றான்.
“என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை” என்றாள். “என்றோ ஒரு நாள் வெற்றுடலுடன் வெற்று உள்ளத்துடன் நீ என்னை காண்பாய். அப்போது அதன் மேல் நான் சூடியிருந்த பலநூறு மாற்றுருக்களை ஒவ்வொன்றாக எடுத்து நோக்கி திகைத்து நிற்பாய்” என்றான். “ஏன் மாற்றுரு சூட வேண்டும்?” என்றாள். “ஏனென்றால் நீ கொண்ட மாற்றுருக்களை அப்படித்தானே நான் எதிர் கொள்வது?” “நான் ஒன்றும் மாற்றுரு கொள்ளவில்லை” என்றாள் அவள். “இப்போது நீ இருப்பது அர்ஜுனனிடம்” என்றான். அவள் விழிகள் மாறின. “அதை எந்த அளவுக்கு உணர்கிறாயோ அந்த அளவுக்கு சிவயோகியுடன் இருப்பவளாக உன்னை கற்பித்துக் கொள்கிறாய்” என்றான்.
“எனக்கு புரியவில்லை” என்றாள். “நிழல்குத்து என்றொரு அபிசாரிக கலை உண்டு. கூரிய வாளின் நிழலால் குத்தி மானுடரைக் கொல்வது” என்றான் அர்ஜுனன். அவள் “எதை குத்துவார்கள்? நிழலையா?” என்றாள். “நிழலையும் குத்துவதுண்டு. உடல்களையும் குத்துவதுண்டு.” அவள் விழிகள் மீண்டு புரியாமல் மங்கலடைந்தன. “என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்றாள். “நிழலாட்டத்தை தொடங்குவோம்” என்றான் அர்ஜுனன். “அது இனியது என்று கண்டிருக்கிறேன்.”
அவன் கைகளில் உடல்குழைய அவள் தசைகளுக்குள் இறுக்கமாகப் படர்ந்திருந்த தன்னுணர்வு மறைந்தது. முலைகளென தோள்களென இதழ்களென ஆனாள். அவன் காதுக்குள் அவள் “நான் ஒன்று கேட்கவா? உங்கள் பெண்களில் முதன்மையானவள் அவளா?” என்றாள். “இவ்வினாவுக்கு நான் என்ன விடை சொன்னாலும் அதை பொய்யென்றே நீ கூறுவாய்.” “இல்லை, உண்மையை சொல்லுங்கள்.” அர்ஜுனன் “உண்மையிலேயே அவள் அல்ல.” அவள் விலகி அவனை நோக்கினாள். அவள் கண்களில் மெல்ல எச்சரிக்கை வந்து சென்றது. “உண்மையிலேயே நீதான்” என்றான்.
அவள் இல்லை என்பது போல் தலை அசைத்தாள். “நம்ப மாட்டாய் என்று சொன்னேன் அல்லவா?” அவள் அவனை தோள்களை அணைத்து முலைகள் அழுந்த முகம் தூக்கி “உண்மையாகவா?” என்றாள். “முற்றிலும் உண்மை.” அவள் அவன் விரல்களை முத்தமிட்டு பெருமூச்சு விட்டாள். “நானா?” என்றாள். “நீதான் உன் முன்தான் முதன் முறையாக நான் பணிந்தேன்” என்றான். “அவள் முன்?” என்றாள். “அவள் ஆணவத்தை புண்படுத்தி விலகிவிட்டால் அவளை வெல்வது மிக எளிது என்று கண்டு கொண்டேன். அதை செய்தேன்” என்றான்.
“எப்படி?” என்றாள். “என்னை எண்ணி அவளை ஏங்க வைத்தேன்” என்றான் அர்ஜுனன். “அதற்கு நிகராக இங்கு உன்னை எண்ணி ஏங்கலானேன்” என்றான். அவள் “ம்ம்ம்” என்று மெல்லிய குரலில் முனகியபடி அவனை மீண்டும் முத்தமிட்டு அவன் முகத்தைப் பிடித்து தன் கழுத்தில் அழுத்திக் கொண்டாள். உடலால் ஒருவருக்கொருவர் மட்டும் புரியும்படி உரையாடிக் கொண்டார்கள். ஒவ்வொரு சொல்லும் மிக மிக தொன்மையான பொருள் கொண்டது. பொருள் அடுக்குகள். ஒன்றை ஒன்று செறிவாக்கிச் செல்லும் நீள் உரையாடல்.
உடலென்பது எத்தனை பழமையானது! புவியில் என்றும் இருந்து கொண்டிருப்பது. ஊனை மாற்றி உயிரை மாற்றி தன்னை புதுப்பித்துக் கொள்ளும் உடல் கொள்ளும் உவகை போல் மண்ணில் தூயது எதுவும் இல்லை. தான் ஒன்றல்ல பல என்று அது அறிகிறது. தன்னிலிருந்து எழும் முடிவிலியை காண்கிறது. அவள் உடலைத் தழுவி படுத்திருக்கையில் மெல்ல புகைப்படலத்தில் விலகி உருவங்கள் தெளிவது போல் எண்ணங்கள் எழுந்தன. குனிந்து அவளை நோக்கினான். சிறிய விழிகளின் இமைகள் அழுந்த ஒட்டியிருந்தன. வியர்த்த கழுத்திலும் தோள்களிலும் கூந்தலிழைகள் பளிங்கில் விரிசல்கோடுகள் போல பரவியிருந்தன.
நாணத்தை முழுக்க இழந்து அவன் மார்பில் தலை வைத்து அவன் கைகளை முலையிடுக்கில் அழுத்தி அவள் துயின்று கொண்டிருந்தாள். மெல்லிய மூச்சு சிறிய மூக்கை மலர்ந்து குவிய வைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. உதடுகள் குழந்தைகளுக்குரியவை போல சற்று உலர்ந்து ஒட்டியிருந்தன. தன் சுட்டு விரலால் அவ்விதழ்களை அவன் தொட்டான். அவள் இமைகள் அதிர்ந்தபின் விழித்து அவனை யாரென்பது போல் பார்த்து பின்பு கையூன்றி எழுந்து தன் உடல் ஆடையின்றி இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு போர்வையை எடுத்து முலைகளை மூடி கையால் அழுத்தியபடி அப்பால் விலகினாள். எழுந்து மேலாடையை எடுத்து சுற்றிக் கொண்டாள்.
அவன் சிரித்துக்கொண்டு “அது எதற்கு?” என்றான். அவள் நாணி முகம் திருப்பி “கிளம்புங்கள். வெகு நேரமாகிவிட்டது” என்றாள். “ஆம்” என்றபடி அவளை கைநீட்டி இழுத்தான். அவள் திரும்பி விலக ஆடை கலைந்து அவள் பின்னுடல் தெரிந்தது. அவள் “என்ன இது?” என அவனை உதறி ஆடையை சீரமைத்தாள். திரும்பி அவன் உடலை பார்த்தபின் “ஐயோ” என்றாள். “என்ன?” என்றான். திரும்பாமலேயே அவன் ஆடையை எடுத்து வீசி “அணிந்து கொள்ளுங்கள்” என்றாள்.
அவன் சிரித்தபடி மேலாடையை கட்டிக் கொண்டான். “திரும்பிக் கொள்ளுங்கள்” என்றாள். “ஏன்?” என்றான் அவன். “திரும்புங்கள்” என்றாள். அவன் சுவரை நோக்கி திரும்பிக் கொண்டான். சுபத்திரை தன் ஆடையை நன்றாகச் சுற்றி அணிந்து கொண்டாள். “நான் கிளம்புகிறேன்” என்றான் அவன். “எப்படி?” என்றாள் அவள். “எவர் விழிகளுக்கும் தெரியாது வரும் கலை எனக்குத் தெரியும். செல்லும் கலை இன்னும் எளிது” என்றான். “இல்லை, இப்போது அத்தனை விழிகளும் பார்க்கவே நீங்கள் செல்லவேண்டும்” என்றாள்.
“என்ன சொல்கிறாய்?” என அவன் திகைப்புடன் கேட்டான். “கரந்து வந்தது நீங்கள். அதில் எனக்கு பொறுப்பில்லை. ஒளிந்து நீங்கள் சென்றால் அக்களவில் நானும் பொறுப்பு என்றாகும். நான் துவாரகையின் இளவரசி. ஒளித்து எதையும் செய்யவேண்டியதில்லை. அது எனக்கு பீடல்ல” என்றாள் “என்ன செய்யப்போகிறாய்?” என்றான். “கதவைத் திறந்து உங்கள் கை பற்றிக் கொண்டு படிகளில் இறங்கி கூடத்தில் நடந்து முற்றத்தை அடைந்து அரச தேரிலேற்றி அனுப்பி வைப்பேன்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் அவள் முகத்தை சிலகணங்கள் நோக்கிவிட்டு “ஆம், அதைத்தான் நீ செய்வாய்” என்றபின் “அதுதான் உனக்கும் அவளுக்குமான வேறுபாடு” என்றான். அவள் புன்னகைத்தாள்.