காண்டீபம் - 60
பகுதி ஐந்து : தேரோட்டி – 25
காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க வைத்தது. இரவு முழுக்க துயில் மறந்து இருந்த நகரத்தில் நாணலில் தீ பற்றிக்கொண்டது போல ஆயிரக்கணக்கான சுடர்கள் கொளுத்தப்பட்டு செவ்வொளி பரந்தது. அனைத்து ஆலயங்களின் மணிகளும் சங்குகளும் முழங்கத்தொடங்கின.
நீராடி சிவக்குறி அணிந்து தன் மாளிகை விட்டிறங்கி வந்த அர்ஜுனனைக் காத்து முற்றத்தில் அவனுக்கான அணுக்கன் நின்றிருந்தான். நள்ளிரவிலேயே சென்று தென்மேற்குத்திசையில் அமைந்திருந்த ஏழு சிவாலயங்களிலும் வணங்கி மீண்டு ஈரஆடை அகற்றி புலித்தோல் அணிந்து உருத்திரவிழிமாலை நெஞ்சில் புரள வந்த அர்ஜுனனை நோக்கி அணுக்கன் “அரண்மனைக்கு அல்லவா?” என்றான். “ஆம்” என்றபடி அவனுக்காக காத்திருந்த ஒற்றைக்குதிரை தேரிலேறிக்கொண்டான்.
விருந்தினர் மாளிகையை மைய அரண்மனையுடன் இணைக்கும் கல்பாவப்பட்ட சாலையில் இருபுறமும் படபடத்துக் கொண்டிருந்த பந்தங்களின் செவ்வொளியினூடாக அர்ஜுனன் சென்றான். நகரத்தின் ஓசை கணந்தோறும் பெருகிக்கொண்டே இருப்பது போல் இருந்தது. வளைந்து மேலெழுந்து அரண்மனை நோக்கி திரும்பியபோது துறைமுகத்தின் மேடை முழுக்க பல்லாயிரம் மீனெண்ணெய் பந்தங்கள் எரிய அந்தி எழுந்தது போல் காட்சிகள் தெரிந்தன. மிதக்கும் சிறு நகரங்களென கடலில் அசைந்தாடிக்கொண்டிருந்த பீதர் கலங்களைச் சூழ்ந்து பல்லாயிரம் விழிகள் ஒளிர நின்ற கலங்களையும் விண்மீன்களுக்கு ஊடாக நின்றெரிந்தது போல் தெரிந்த அவற்றின் கொடிமர முனையின் எண்ணெய் விளக்குகளையும் நோக்கிக் கொண்டு அரண்மனை நோக்கி சென்றான்.
அணைக்கும் கைகள் போல நீண்டிருந்த இரு கிளைகளுடன் நின்ற அரண்மனைத்தொடரின் மாடங்களில் இருந்த அனைத்து சாளரங்களிலும் செவ்வொளிச் சட்டங்கள் எழுந்து வானை துழாவின. அங்கு கைகளில் ஏந்திய அகல்விளக்குச் சுடர்களுடன் ஏவலர்கள் நடமாடிக்கொண்டிருந்தது மின்மினிக் கூட்டம் காற்றில் சுழல்வது போல் தோன்றியது. செவ்வொளி ஈரம் போல் படிந்து மின்னிக் கொண்டிருந்த பெருமுற்றத்தின் தேர்கள் ஓடித்தேய்ந்த கற்தரையில் அவனது தேரின் சகடங்கள் தடதடத்து ஓடிச்சென்று நின்றன. புரவி முன்னும் பின்னும் காலெடுத்து வைத்து தலை தாழ்த்தி சீறியது.
அவன் இறங்கி முற்றத்தில் நின்றதும் அங்கு நின்றிருந்த இளைய அமைச்சர் அவனை நோக்கி வந்து தலைவணங்கி “தங்களுக்காக இளைய யாதவர் அரண்மனை உள்ளறையில் காத்திருக்கிறார்” என்றான். “எனக்காகவா?” என்றான் அர்ஜுனன். “ஆம். குடித்தலைவர்கள் உடனிருக்கிறார்கள். புலரியின் முதல்வெளிச்சத்தில் மணநிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன” என்றார் அமைச்சர். “இளைய யாதவர் துயிலவில்லையா?” என்று கேட்டபடி அர்ஜுனன் நடந்தான். “அனைத்தும் சித்தமானதும் உச்சிப்பொழுதுக்கு மஞ்சம் சென்று விழி மயங்கி சற்று முன்னர்தான் எழுந்தார்” என்றபடி அவனுடன் வந்தார்.
அரண்மனைப்படிகளில் ஏறி உருண்ட பெரும்தூண்கள் நிரை வகுத்த நீண்ட இடைநாழியில் வளைந்து நடந்து வெண்பளிங்குக் கற்களால் ஆன அகன்ற படிகட்டுகளில் ஏறி மாடியில் மரத்தாழ்வாரத்தில் நடந்து உள்ளறையை அடைந்தான். அங்கு பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. வாயில்காவலன் தலை வணங்கி உள்ளே சென்று அவன் வரவை அறிவித்து மீண்டான். கைகளை விரித்து “அவைக்கு நல்வரவு” என்றான்.
அர்ஜுனன் உள்ளே சென்றபோது அங்கு அக்ரூரர் ஏடொன்றை உரக்க வாசித்துக் கொண்டிருக்க அந்தக, விருஷ்ணி, போஜ, குங்குர குலத்தலைவர்கள் அமர்ந்து அதை கேட்டுக் கொண்டிருந்தனர். அரியணையில் முழுதணிக் கோலத்தில் அமர்ந்திருந்த இளைய யாதவர் அவனைக் கண்டதும் திரும்பி சற்றே தலையசைத்து வரவேற்றார். அர்ஜுனன் சென்று அமைச்சர் கனகர் காட்டிய புலித்தோல் விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்தான்.
அக்ரூரர் அஸ்தினபுரியின் திருதராஷ்டிர மாமன்னரின் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். கடிமணம் கொள்ளும் சௌரபுரத்து இளவரசருக்கு வாழ்த்துக்களை மன்னர் தெரிவித்திருந்தார். ‘வேரும் காய்த்த பலா என மைந்தருடன் பெருகி விழுது பெருத்த ஆல் போல் குலம் விரிந்து வாழ்க’ என்று எழுதியிருந்தார். விதுரரின் சொற்கள் அவை என்று அர்ஜுனன் எண்ணிக் கொண்டான். திருமுகத்தை அக்ரூரர் வாசித்து முடித்ததும் குலத்தலைவர்கள் கைதூக்கி “அஸ்தினபுரியின் பேரரசர் வாழ்க!’’ என்று வாழ்த்தினர்.
அக்ரூரர் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து மூத்த பாண்டவரின் வாழ்த்து வந்துள்ளது” என்றபின் பிறிதொரு திருமுகத்தை எடுத்தார். ‘அறமெனப்படுவது பல்கிப் பெருகுவதனாலேயே நிகழ்கிறது. அறம் பெருக்க உகந்தது இல்லறம் புகுதல். அந்தகவிருஷ்ணி குலத்து இளவரசர் ஆயிரம் காடுகள் உறங்கும் விதையென நீர் தொட்டு எழுக!’ என்று தர்மர் வாழ்த்தியிருந்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க!” என்றது அவை.
அப்பால் வாழ்த்தொலிகள் எழுந்தன. மங்கலம் உரைக்கும் சேடி அவைக்கு வந்து தன் கையில் இருந்த வலம்புரிச் சங்கை ஊதி உரத்த குரலில் அரசியரும் மதுராபுரியின் இளவரசியும் அவை புகுவதை அறிவித்தாள். அவையமர்ந்திருந்த குடித்தலைவர்களும் அமைச்சர்களும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்ப வலப்பக்கம் இருந்த வாயிலில் அசைந்த செம்பட்டுத் திரைச்சீலையை விலக்கி நிமித்திகத் தோழி முன்னால் வந்து சத்யபாமையின் வரவை அறிவித்தாள். ருக்மிணியும் நக்னஜித்தியும் மித்ரவிந்தையும் லட்சுமணையும் பத்ரையும் ஜாம்பவதியும் காளிந்தியும் வரவு அறிவிக்கப்பட்டு அவை புகுந்தனர். அர்ஜுனன் விழிகள் அத்திரைச்சீலையின் அசைவை நோக்கிக் கொண்டிருந்தன. சேடி “மதுராபுரியின் இளவரசி சுபத்திரை” என்றறிவித்ததும் பொன்னூல் பின்னலிட்ட வெண்பட்டாடையும் பொன்னிற இடைக்கச்சையும் அணிந்து நீள்குழலில் வெண்மலர்கள் சூடி திறந்த பெருந்தோள்களில் செந்நிறத் தொய்யில் எழுதி சித்திரக் கோலத்தால் உருண்ட வெண்கைகளை அழகுபடுத்தி உடலெங்கும் இளநீல வைரங்களும் தென்பாண்டி வெண்முத்துகளும் பூண்டு சுபத்திரை அவை புகுந்தாள்.
அரசியரும் இளவரசியும் தங்களுக்கு போட்ட பீடங்களில் அமர்ந்தனர். சுபத்திரையின் விழிகள் அர்ஜுனனை சந்தித்து மீண்டன. ஒரு கணத்தில் ஒருவருக்கு மட்டுமே என ஒரு புன்னகையை அளிக்க பெண்ணின் கண்களால் இயல்வது கண்டு அர்ஜுனன் வியந்து கொண்டான். அவை தன்னை நோக்குகிறது என்று அறிந்ததும் தன்னை திருப்பினான். அக்ரூரர் அரசியருக்கும் இளவரசிக்கும் தலை வணங்கியபின் பாஞ்சாலத்து அரசர் துருபதனின் வாழ்த்துரையை வாசிக்கத் தொடங்கினார். சுபத்திரை வேறுதிசை நோக்கி புன்னகைத்துக் கொண்டிருந்தாலும் அது தனக்கான விழியொளி என்பதை அவன் அறிந்தான்.
அஸ்வத்தாமனின் வாழ்த்துரையை வாசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் முரசொலிகளும் மங்கல ஒலிகளும் எழுந்தன. சௌரபுரத்தின் கதிர்க் கொடியுடன் அவை புகுந்த அறிவிப்பாளர் தலை வணங்கி சௌரபுரத்து அரசர் சமுத்ரவிஜயர் தன் முதல்மைந்தர் ஸினியுடன் அவை புக இருப்பதை அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே சமுத்திரவிஜயர் தன் துணைவி சிவை தேவியுடன் அவைக்குள் நுழைந்தார். தொடர்ந்து பட்டத்து இளவரசர் ஸினி தன் அரசுத்துணைவி சுமங்கலையுடனும் இளைய அரசி பிரஹதையுடனும் வந்தார். அவரது தம்பியர் சப்தபாகு தன் துணைவி பிருதையுடனும், சந்திரசேனர் தன் துணைவி அரிஷ்டையுடனும், ரிஷபசேனர் தன் துணைவி ஜ்வாலாமுகியுடனும், சூரியசேனர் தன் துணைவி சித்ரிகையுடனும், சித்ரசேனர் தன் துணைவி அகல்யையுடனும், மகாபாகு தன் துணைவி பத்ரையுடனும் அவைக்கு வந்தனர். அக்ரூரரின் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துச் சென்று அவையில் அமரச்செய்தனர்.
வாழ்த்தொலிகள் அமைந்ததும் அக்ரூரர் மத்ர நாட்டு அரசர் சல்லியரின் வாழ்த்துரையையும் சிந்து நாட்டரசர் ஜயத்ரதரின் வாழ்த்துச் செய்தியையும் வாசித்தார். சீரான அணிச்சொற்களில் எழுதப்பட்ட வாழ்த்துச் செய்திகள். வெறும் முறைமைவெளிப்பாடுகள்தான் எனினும் அத்தருணத்தை அழகுறச்செய்தன. ‘நற்சொற்கள் மலர்களை போன்றவை. அழகுக்கு அப்பால் அவற்றுக்கு பொருளென எதுவும் தேவையில்லை’ என்று துரோணர் ஒரு முறை சொன்னதை எண்ணிக் கொண்டான். மகதமன்னர் ஜராசந்தரின் வாழ்த்துரையை அக்ரூரர் வாசித்தபோது மெல்லிய உரையாடல் ஒலியுடன் எப்போதும் இருந்த அவை முற்றிலும் அமைதி கொள்ள அச்சொற்கள் மேலும் உரக்க ஒலித்தன.
இளைய யாதவர் அத்திருமுகம் முடிந்ததும் தலை வணங்கி “நன்று” என்றார். அங்க மன்னன் கர்ணனின் வாழ்த்துரையை வாசித்தபோது அறியாது இளைய யாதவர் கண்கள் வந்து அர்ஜுனனின் கண்களை தொட்டு மீண்டன. அவன் தலைகுனிந்து அந்நோக்கை விலக்கினான். ஸ்ரீதமர் அவைக்குள் வந்து தலை வணங்கியபோது அக்ரூரர் சேதி அரசர் தமகோஷரின் வாழ்த்துச் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதமர் அருகே வந்து நிற்க இளைய யாதவர் திரும்பி மெல்லிய குரலில் “என்ன நிகழ்கிறது?” என்றார். “ஒருக்கங்கள் அனைத்தும் முழுமையடைந்துவிட்டன” என்றார் ஸ்ரீதமர். “மணமகனுடன் ஏழு மணத்துணைவர்கள் உள்ளனர். அவர் அணி செய்து கொண்டிருக்கிறார்.”
அர்ஜுனன் மெல்லிய குரலிலான அவ்வுரையாடல்களை உதட்டசைவின் மூலமே கேட்டான். அக்ரூரர் காந்தார அரசர் சுபலரின் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். இளைய யாதவர் “சுப்ரதீபம் சித்தமாக உள்ளதா?” என்றார். “ஆம்” என்றார் ஸ்ரீதமர். “அது தன் மேல் பொற்பீடம் அமைக்க ஒப்புக் கொண்டதா?” என்றார் இளைய யாதவர். “ஆம். ஆனால் யானைகளுக்குரிய அசைவுகள் இன்றி நான்கு கால்களையும் மண்ணில் ஊன்றி அசைவற்று நிற்கிறது” என்றார் ஸ்ரீதமர்.
அக்ரூரர் மாளவ மன்னரின் செய்தியை வாசிக்கத் தொடங்கினார். பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு அரசரும் செய்திவடிவில் அங்கு வந்து சென்றனர். அர்ஜுனன் தனக்குள் ஒரு மெல்லிய பதற்றம் குடியேறுவதை உணர்ந்தான். இயல்பாக விழிகளைத் திருப்பியபோது தன்மேல் பதிந்திருந்த சுபத்திரையின் நோக்கை சந்தித்து விலகிக் கொண்டான். வெளியே இருந்து அக்ரூரரின் துணையமைச்சர் சுதாமர் உள்ளே வந்து அருகே நின்று மெல்லிய குரலில் ஏதோ சொன்னார். அக்ரூரர் தலையசைத்தார்.
அக்ரூரர் திருமுகங்களைச் சுருட்டி வெண்கலப் பெட்டிக்குள் வைத்துவிட்டு அவையை நோக்கி தலைவணங்கி “காலை முதற்பொழுது தொடங்கிவிட்டது குடித்தலைவர்களே. மணமகனும் மணமகளும் அணிக்கோலம் பூண்டுவிட்டனர். முதல் ஒளி எழுகையில் மணமகன் நகர்வலம் வரத் தொடங்க வேண்டும் என்பது முறைமை. மணமகள் நம் குடியின் பன்னிரு தெய்வங்களையும் வணங்கி மணப்பந்தலுக்கு வரவேண்டும். நகர்வலம் வந்து நான்கு எல்லைகளிலும் அமைந்த தேவர்களை வணங்கி மணப்பந்தலுக்கு மணமகன் வருவார். அங்கு அவர்களுக்கு காப்பு கட்டி கடிமணம் கொள்ளும் செய்தியை தெய்வங்களுக்கு அறிவிப்பார் நமது குலப்பூசகர். இன்று பகல் முழுக்க நிகழ்ந்து முழுநிலவெழுகையில் முடிவடையும் மணநிகழ்வுக்கான தொடக்கம் அது. நன்று சூழ்க!” என்றார்.
அவையறிவிப்பாளன் குறுமேடை ஏறி நின்று தன் கோலை தூக்கி மும்முறை சுழற்றி முறைப்படி அவை கலைந்துவிட்டதை அறிவித்தான். யாதவ குலக்கொடி வழியின் பெயர்களைச் சொல்லி ‘இளைய யாதவருக்கு வெற்றி திகழ்க! வளம் திகழ்க! பெரும் புகழ் என்றும் வாழ்க!’ என்று சொல்லி அவன் இறங்கியதும் அவை அமர்ந்திருந்த குடித்தலைவர்கள் எழுந்து கை தூக்கி இளைய யாதவரை வாழ்த்தியபின் ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசியபடி அவை விட்டு வெளியே வந்தனர்.
அர்ஜுனன் எழுந்து அக்ரூரரை நெருங்கினான். “தங்கள் நெறிப்படி மணநிகழ்வுகளில் பங்கேற்பதில் பிழை ஏதுமுண்டோ?” என்றார் அக்ரூரர். “எதுவும் எங்களுக்கு விலக்கல்ல” என்றான் அர்ஜுனன். “வருக!” என்றபடி அக்ரூரர் விரைவான காலடிகளுடன் வெளிவந்து இடைநாழியில் நடந்தார். “மெல்லிய அச்சமொன்று உள்ளது யோகியே. இன்றுவரை அந்த யானை எவரையும் தன் மேல் ஏற ஒப்புக்கொண்டதில்லை. முறைமை நிகழட்டும் என்று இளைய யாதவர் சொல்வார். ஆனால் சிறியதோர் படுநிகழ்வு உருவானாலும் அது அமங்கலமென்றே கொள்ளப்படும். அதன் பின் இம்மணம் சிறக்காது.”
அர்ஜுனன் புன்னகைத்து “முற்றிலும் மங்கலத்தால் ஆனதாகவே மணம் அமைய வேண்டுமா என்ன?” என்றான். “என்ன கேட்கிறீர்கள்? மானுடர் அஞ்சும் மூன்று தருணங்கள் உள்ளன. இல்லம் அமைத்தல், போருக்குக் களம் எழுதல், மணம் நிகழ்தல். அறிய முடியாத முடிவிலி வந்து கண்முன் நிற்பதை காண்கிறார்கள். அதன்முன் தங்கள் சிறுமையை உணர்கிறார்கள். அனைத்தும் முற்றிலும் நம்பிக்கையூட்டுவதாக அப்போது அமைந்தாக வேண்டும். ஒரு சிறு பிசகென்றாலும் அச்சம் முழுமையும் அங்கு குவிந்துவிடும். அச்சமே அதை பெரிதாக்கும். அனைத்து நலன்களையும் அழிக்கும் பெரும் புண்ணென அதை மாற்றிக் கொள்ளும். மூதாதையர் மணமங்கலத்தை முழுமங்கலம் என்று வகுத்தது வீணே அல்ல” என்றார்.
“யான் ஏதறிவேன்?” என்று சிரித்தபடி அர்ஜுனன் சொன்னான். “தாங்கள் வந்து அவரிடம் சொல்தொடுக்க வேண்டும் யோகியே. இளைய அரசர் நகர் புகுந்தபின் இதுவரை ஒரு சொல்லேனும் சொல்லவில்லை. இளைய யாதவரும் தாங்களும் சென்று அவரது குகைக்குள் கண்டு உரையாடினீர்கள் என்று அறிந்தேன். இந்நகரில் அரிஷ்டநேமி தம்மவர் என்று உணரும் இருவரில் ஒருவர் நீங்கள். இளைய யாதவர் ஆற்றவேண்டிய அரச பணிகள் உள்ளன. தாங்கள் வந்து அவர் அருகே நில்லுங்கள். தனக்கு நிகரான ஒருவரென அவர் உங்களை எண்ணக்கூடும்” என்றார் அக்ரூரர்.
அர்ஜுனன் புன்னகையுடன் “தனக்கு நிகரென இப்புவியில் அனைவரையும் அவர் எண்ணுவதே அவரை தனிமைப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்” என்றான். அவன் சொன்னதை புரிந்துகொள்ளாமல் அக்ரூரர் திரும்பிப் பார்த்தார். “அவர் இருக்கும் பீடம் மாமலைகளின் முடிகள் அளவுக்கு உயரமானது அக்ரூரரே” என்றான் அர்ஜுனன்.
அரண்மனையின் பெருமுற்றம் முழுக்க நூற்றுக்கணக்கான தேர்களும் மஞ்சல்களும் பல்லக்குகளும் நிறைந்திருந்தன. மேலும் மேலும் உள்ளே வந்து கொண்டிருந்த தேர்களை நிறுத்துவதற்காக ஏவலர்கள் ஒருவரை ஒருவர் கை நீட்டி கூவி அழைத்தபடி ஓடினர். சாலைகளில் வந்து கொண்டிருந்த தேர்களும் மஞ்சல்களும் தேங்கி ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. தேரை இழுத்து வந்த புரவிகள் பொறுமையிழந்து கால்களால் கல்தரையை தட்டி தலை சரித்து மூச்சு சீறின. பின்னால் ஒரு புரவி உரக்க கனைத்தது.
அக்ரூரர் “இந்நகரம் இவ்விழவினை எப்படி கடந்து செல்லப் போகிறது என்று அறிந்திலேன். செய்தி அறிந்து வந்து கூடிக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதுமே நுரைத்து எழும் கள்குடுவை போலிருக்கும் இந்நகர். இன்று மும்மடங்கு மானுடர் உள்ளே வந்துவிட்டனர்” என்றார். முகப்புச் சாலையில் இறங்கி வளைந்து சௌர அரச குலத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மாளிகையை நோக்கி சென்றனர். உருண்டு சென்ற தேர் மக்கள் கூட்டத்தின் நடுவே சென்று மெல்ல மெல்ல விரைவழிந்து சிக்கிக் கொண்டது. இருபுறமும் செறிந்து அலையடித்த முகங்களை அர்ஜுனன் வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தான். உவகையில் தங்களை மறந்து எங்கு செல்வதென்று அறியாது ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். பெருந்திரளென ஆகும்போது மட்டுமே கொள்ளும் மயக்கு அது. ஒவ்வொருவரும் பல்லாயிரம் கைகளுடன் விராட வடிவம் கொண்டது போல்.
மெல்ல மெல்ல நகர்ந்த தேர் மையப்பாதையிலிருந்து பிரிந்து சௌர அரண்மனை நோக்கி சென்றது. அரண்மனை முகப்பில் சௌர குடிக்குரிய சூரிய வடிவம் ஏழு புரவிகள் இழுக்கும் மணித்தேர் வடிவில் பொறிக்கப்பட்டிருந்தது. மாதலி கதிர்முடி சூடியிருந்தான். தேர்த்தட்டில் அமர்ந்த சூரியனின் உடலில் பலநூறு கைகள் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து கதிர்களாக விரிந்திருந்தன. “சௌரபுரம் முன்பு சூரியனை வழிபட்ட சௌரன் என்னும் பழங்குடியினருக்கு உரியதாக இருந்தது. அந்தகவிருஷ்ணிகளில் ஒரு பிரிவினரான விருஷ்டிபாலர்கள் அங்கு சென்று அப்பகுதிகளில் குடியேறினர். கன்று பெருக்கி குலம் செழித்தபோது படை கொண்டு சென்று சௌரபுரத்தை தாக்கி வென்றனர். சௌரபுரத்தின் அன்றைய அரசர் சூரியசேனர் கொல்லப்பட்டார். அவரது மகள் சித்ரிகையை விருஷ்டிபால குலத் தலைவர் பிரஹத்சேனர் மணந்து கொண்டார். அதிலிருந்து தோன்றிய அரசகுடி இது. சௌரபுரத்தின் குறியாகிய சூரியன் இன்றும் அவர்களின் அரண்மனை முகப்புகளிலும் நாணயங்களிலும் உள்ளது” என்றார் அக்ரூரர்.
மாளிகையின் முகப்பில் தேர்களும் மஞ்சல்களும் பல்லக்குகளும் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்டவை போல் சரிந்திருந்தன. அங்கிருந்து கொம்பூதியபடி ஓடி வந்த அணுக்கக் காவலன் அவர்களின் புரவிகளின் கடிவாளத்தை பற்றியபடி “பின்பக்கம் மட்டுமே தேர் நிறுத்த இடம் உள்ளது அமைச்சரே” என்றான். “அங்கு நிறுத்துக!” என்றபடி அக்ரூரர் இறங்கி “வாருங்கள்” என்று அர்ஜுனனை நோக்கி சொன்னபடி அரண்மனைக்குள் சென்றார்.
அணித்தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் பட்டுத்திரைச் சீலைகளாலும் தரைநிரப்பிய வண்ணக்கோலங்களாலும் சுவர்களில் வரையப்பட்ட சித்திரச் செறிவாலும் வண்ணம் பொலிந்த அரண்மனையின் இடைநாழியில் ஏறி உள்ளே சென்றனர். ஓங்கிய சுதைத் தூண்கள் தாங்கி நின்ற பெருங்கூரையிலிருந்து தொங்கிய மலரணிகள் காற்றிலாடின. அவற்றில் வண்டு மொய்க்காது என்ற நிமித்திக உரையை எண்ணி மேலே நோக்கிய அர்ஜுனனை நோக்கி “உண்மையிலேயே இன்று காலை மலர்களில் வண்டுகள் அமரவில்லை யோகியே” என்றார் அக்ரூரர்.
எதிரே ஓடி வந்த சிற்றமைச்சர் சிபிரர் தலை வணங்கி “சித்தமாகிவிட்டார்” என்றார். “என்ன சொல்கிறார்?” என்றார் அக்ரூரர். “சொல்லென எதுவும் எழவில்லை. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை.” அரண்மனை முழுக்க நிறைந்திருந்த ஏவலரும் சேடியரும் தங்கள் செயற்சுழற்சியின் உச்சகட்ட விரைவில் வெறி கொண்டது போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். எறும்புகளைப்போல ஒருவரை ஒருவர் முட்டி ஓரிரு சொற்களில் உரையாடி திரும்பினர். எவரும் எவரையும் பார்க்கவில்லை. எங்கும் நிறைந்திருந்த குங்கிலியப்புகையும் அகிற்புகையும் அவ்வரண்மனை விண்முகில்களுக்குள் எங்கோ இருப்பது போல உளமயக்கை உருவாக்கியது.
யாழ்களுடனும் முழவுகளுடனும் சூதர் குழு ஒன்று படியிறங்கி முற்றத்தை நோக்கி சென்றது. மங்கலத் தாலங்களுடன் ஓர் அறையிலிருந்து பிறிதொரு அறைக்கு சென்றனர் அணிசேடியர். தரையில் பரப்பப்பட்டிருந்த எண் மங்கலங்கள் கொண்ட தாலங்களை ஒருவர் எடுத்து சேடியர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தார். உள்ளிருந்து ஓடி வந்த முதிய செயலகர் ஒருவர் “நீர்க்குடங்கள் நீர்க்குடங்கள்!” என்று அவர்களை கடந்து ஓடினார். இளைய வைதிகர் ஒருவர் மறுபக்கத்திலிருந்து வந்து “வைதிகர் அணி நிற்பதற்கு உரிய இடத்தில் இருக்கும் தேர்களை அகற்ற வேண்டும்” என்று சிபிரரிடம் சொன்னார். “இதோ நான் வருகிறேன். இதோ இதோ” என்றபடி “வாருங்கள் அமைச்சரே” என்று அழைத்துச் சென்றார் சிபிரர்.
மெல்லிய வெண்பட்டு திரை தொங்கிய அறை ஒன்றை அணுகி திரையை விலக்கி உள்ளே நோக்கி “பேரமைச்சர் அக்ரூரர்” என்று அறிவித்தார். உள்ளிருந்த அணிச்சமையர்கள் தலை வணங்கி விலகினர். அக்ரூரர் உள்ளே சென்று தலை வணங்கி “தங்களை சந்திக்க சிவயோகியார் வந்துள்ளார் இளவரசே” என்றார். சந்தன மரத்தால் ஆன பீடத்தில் கால் மடித்து அமர்ந்திருந்த அரிஷ்டநேமி தன் பெரிய கைகளை ஒன்றன் மேல் ஒன்றென வைத்து ஊழ்கத்தில் ஆழ்ந்த அருகரென அமர்ந்திருந்தார். அமர்ந்திருந்த தோற்றத்திலேயே அவர் அவர்களுக்கு நிகரான உயரம் கொண்டிருந்தார். அவரது விழிகள் திரும்பி அர்ஜுனனை நோக்கின. மெல்லிய புன்னகையுடன் தலை வணங்கி வரவேற்றார்.
“தாங்கள் வெண்மலர் மாலை சூடி வெள்ளை யானையின் மேலேறி நகர்வலம் செல்ல வேண்டுமென்பது நிமித்திகரின் ஆணை. அதை முன்னரே தங்களிடம் அறிவித்திருப்பார்கள்” என்றார் அக்ரூரர். “ஆம்” என்றார் அரிஷ்டநேமி. “தருணம் அறிவிக்கப்பட்டதும் தாங்கள் எழுந்தருள வேண்டும். சுப்ரதீபம் என்னும் வெள்ளையானை தங்களுக்கெனவே சித்தமாகி நின்றிருக்கிறது” என்றார் அக்ரூரர். அரிஷ்டநேமி மீண்டும் தலை வணங்கினார்.
“நான் உடனே திரும்பிச் செல்ல வேண்டும். இவர் தங்களுடன் இருப்பார்” என்றார் அக்ரூரர். “மணநிகழ்வுக்கென வந்துள்ள குலத்தலைவர் அனைவரையும் சீராக அமரவைக்கும் பொறுப்பு எனக்குள்ளது. ஒவ்வொன்றுக்கும் அதற்கென முன்னரே வகுக்கப்பட்ட முறைமைகளும் சடங்குகளும் ஒருமைகளும் உள்ளன. எதிலும் எப்பிழையும் நிகழாதிருக்க வேண்டும் என்பது என் கவலை” என்றபின் தலை வணங்கி அவர் வெளியே சென்றார்.
அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே கைகளை கட்டி நின்றான். அவர் விழிகளைத் திறந்து அவனை நோக்கியபோது அவனை அறிந்தது போல் தெரியவில்லை. சில கணங்களுக்குப் பின் அவர் விழிகள் திறந்திருந்த சாளரத்தினூடாக வந்து கொண்டிருந்த பந்தங்களின் செவ்வொளி நோக்கி நிலை கொண்டன. உடலில் இருந்து அசைவுகள் நழுவிச்செல்ல மெழுகு உறைந்து கல்லாவது போல அவர் ஆவதை அவன் கண்டான். அவ்வுடல் மலைப்பாறையின் குளிர்மை கொள்வது போல. தண்மை அறையை நிறைப்பது போல. அங்கிருந்த ஒவ்வொன்றும் விரைத்து மெல்ல சிலிர்த்துக் கொள்வது போல.
குளிரில் தன் உடல் மெல்ல புல்லரிப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். நெஞ்சுக்குள் நுழைந்த காற்றை பெருமூச்சுகளாக வெளியே விட்டான். அறைக்கு வெளியே மும்முரசமும் சங்கும் ஒலித்தபோது வெளியே இருந்து உள்ளே எட்டிப்பார்த்த முதுஏவலன் தலைவணங்கி “முதற்கதிர் எழுந்துவிட்டது இளவரசே” என்றார். அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே சென்று குனிந்து “கிளம்புவோம் மூத்தவரே” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்து இரு கைகளையும் தொங்கவிட்டபடி நின்றார்.
ஆலயக்கருவறையில் ஓங்கி நின்றிருக்கும் ரிஷபதேவரின் சிலையென ஒரு கணம் அர்ஜுனன் எண்ணினான். அறியா வழிபாட்டாளர் அதன் உடலெங்கும் அணிசூட்டியிருந்தனர். செம்பட்டுத் தலைப்பாகை மேல் மணிச்சரம் சுற்றப்பட்டிருந்தது. இடை சுற்றிய மஞ்சள் பட்டாடை பந்தச்செவ்வொளியில் உருகிய பொன்னென ஒளிவிட்டது. கால்களில் சந்தன குறடுகள் அணிந்திருந்தார். மார்பில் செம்மணியாரமும் சரப்பொளி மாலையும் தவழ்ந்தன. இடைசுற்றிய பொன்மணிச் சல்லடமும் மணித்தொங்கல் தோள்வளையும் வைரங்கள் மின்னிய நாககங்கணமும் மலர்க்கணையாழிகளும் இமைப்புகொண்டன. அவ்வுடலுக்கு முற்றிலும் பொருந்தி அணிசெய்த அவை அவ்விழிகளுக்கு முன் பொருளற்றவை ஆயின.
அறை வாயிலின் உத்தரம் அவர் தலையை தொடுமென தோன்றியது. “செல்வோம்” என்றான் அர்ஜுனன். உள்ளே இருந்து அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த மங்கலச் சேடியரும் இசைச் சூதரும் வாழ்த்தொலியும் இன்னிசையும் எழுப்பி அவரை வரவேற்றனர். அணிச்சேடியர் முதலிலும் இசைச்சூதர் தொடர்ந்தும் செல்ல அவர் பின்தொடர்ந்தார். அவர் அருகே சற்று விலகி அர்ஜுனன் நடந்தான்.
அரண்மனை இடைநாழி ஊடாக நடந்து வெளித்திண்ணையை அடைந்து ஓங்கிய இரு தூண்களின் நடுவே நின்றார். அவரைக் கண்டதும் முற்றத்தில் நிறைந்திருந்த மக்கள் கைகளைத் தூக்கி பெருங்குரல் எடுத்து “சௌரபுரத்து இளவரசர் வெல்க! மணமங்கலம் நிறைக!” என்று வாழ்த்தினர். அமைச்சர் சிபிரர் தலைவணங்கி “தங்களை சுப்ரதீபத்தின் வெண்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லும்படி ஆணை” என்றார். “ஆம்” என்று சொல்லி தலை அசைத்தபடி அவர் படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தார்.
“இத்திசை இளவரசே” என்றார் அமைச்சர். அவருக்காக காத்து நின்றிருந்த செம்பட்டுத் திரைச்சீலையிட்ட பொன்வண்ணத் தேரில் ஏறி பீடத்தில் அமர்ந்தார். மூன்று புரவிகள் கட்டப்பட்ட தேர் சிறிய உலுக்கலுடன் மணியோசைகள் எழ கிளம்பி தேய்ந்த கற்தரையில் வழுக்கியது போல ஓடிச் சென்றது. அர்ஜுனன் திரும்பி அருகே நின்றிருந்த ஒரு வீரனின் புரவியைப் பெற்று அதன் மேல் ஏறி அதை தொடர்ந்து சென்றான். வாழ்த்தொலிகள் இருபக்கமும் இருந்து எழ முற்றத்தை நீங்கி வளைந்த சாலையில் இறங்கி இருபக்கமும் எழுந்த பந்தங்களின் ஒளியில் பற்றி எரிந்து தழலானபடி அவரது தேர் சென்றது.