காண்டீபம் - 57
பகுதி ஐந்து : தேரோட்டி – 22
சீரான காலடிகளுடன் கலையாத ஒழுக்காக யாதவர்கள் சோலைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். அவர்களது காலடிகளின் ஓசை சோலையெங்கும் எதிரொலித்தது. கலைந்து எழுந்த பறவைகள் குட்டைமரங்களின் இலைப்பரப்புக்கு மேலே கலைந்து ஒலித்துக்கொண்டிருந்தன. யாதவர்கள் ஒருவர் தோளை ஒருவர் பற்றியிருந்தனர். தளர்ந்து நடந்த சிலரை இளைஞர் பிடித்துக்கொண்டனர்.
எங்கும் அந்த அணி உடைவதற்கான அசைவு தெரியவில்லை. அர்ஜுனன் நீள்மூச்சுவிட்டான். ஒன்றுமில்லை, வெறும் அச்சம் இது, அனைவரும் சீராகவே செல்கிறார்கள், அனைத்தும் முறைப்படியே உள்ளன என்று சித்தம் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அடியில் சுஷுப்தி பதைபதைத்து முகங்கள் தோறும் தாவிக்கொண்டிருந்தது. ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. உடையும் ஒன்று அதன் முந்தைய கணம் உடைவெனும் இயல்கையின் உச்சகணத்தை சுமந்து அதிர்கிறது.
எக்கணம்? யார் முதல்வன்? எப்போதும் அந்த கணத்தின் துளியென உதிர்ந்து சொட்டுபவன் ஒரு தனிமனிதன். அவனை ஊழ்விசை தேர்ந்தெடுக்கிறது. அதற்கு முந்தையகணம் வரை அவன் எளியவன். அவர்கள் ஒவ்வொருவரையும் போன்றவன். தன்னை நிகழ்த்திக்கொண்ட பின்னர்தான் அவன் வேறுபட்டவனாகிறான். இவர்களில் எவனோ ஒருவனின் தலை. உண்ணப்படாத நீருக்காக அவன் உடல் நின்று துடித்து மண்ணில் நெளியப்போகிறது. விழித்த கண்களும் திறந்த வாயுமாக அவன் தலை ஈட்டியில் அமரப்போகிறது. விடாயுடன் இறந்து தெய்வமாகப் போகிறான்.
அவன் இவன் என ஒவ்வொருவரின் தலையையும் ஈட்டியின் முனையில் அர்ஜுனன் பார்த்துவிட்டான். நூறாயிரம் தலைகள். ஆயிரம்பல்லாயிரம் பொருளற்ற விழிப்புகள். துடிக்கும் உடல்கள். கண்களை மூடி கண் இமைகளை இருவிரல்களால் அழுத்தி நீவினான். உடலெங்கும் நூற்றுக்கணக்கான மையங்களில் நரம்புகள் அதிர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். புரவியைத் திருப்பி அந்நிரையின் பின்பக்கத்திற்கு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினான். அங்கு சென்றால் அவனுக்கென தனிப்பொறுப்பு ஏதுமில்லை. அந்த நிரையில் அவனும் ஒருவன். முன்னிரையில் இருப்பவன் அனைத்து எடையையும் தாங்குபவன்.
கண்களை திற. இதோ இப்பெரு நிரை உடையும் கணம். ஒரு வேளை உன்னால் அதை தடுக்க முடியும். பெரும்படைகளை ஆணையிட்டு நிறுத்தும் குரல் கொண்டவன் நீ. இவர்கள் எளிய யாதவர்கள். நீ ஷத்ரியன். இவர்கள் கட்டுமீறுவது பிழையல்ல. அவர்களை கட்டுப்படுத்தாது நீ நின்றிருப்பதே பிழை. இதோ. இக்கணம்தான். இதை நீ மறக்கவே போவதில்லை. அவனால் கண்களை திறக்க முடியவில்லை. இமைகளுக்கு மேல் அவன் சித்தத்திற்கு ஆணையென ஏதுமில்லை என்று தோன்றியது. எண்ணத்தை குவித்து கண்களைத்திறக்க அவன் முயன்று கொண்டிருக்கும்போது மிக அருகே அவன் எவரையோ உணர்ந்து திகைத்து விழிதிறந்தான். எதிரே எவருமில்லை. அருகே உணர்ந்தது இளைய யாதவனை என எண்ணியபோது மெய் குளிர்கொண்டது.
அவன் அனிச்சையாக விழிதிருப்பியபோது எதிரே மிக அண்மையிலென ஒருவனின் முகத்தை கண்டான். அவன் வாய் திறப்பதை, விழிகள் சுருங்குவதை, அலறலில் தொண்டைத்தசைகள் இழுபட நரம்புகள் புடைப்பதை, கைகளும் கால்களும் உள்ளத்தின் விசையால் இழுபட்டு அதிர்வதை தனித்தனியாக சித்திரப்பாவைகள் என கண்டான். தாளமுடியாத வலியால் துடிப்பவனின் முகம். பெரும்பாறையைத் தாங்கி இற்று உடைந்து சிதறும் அணைக்கல். அந்த மனிதன் நொறுங்குவதை அவன் கண்டான். பிறிதொன்றாக ஆவதை. அக்கணத்திற்கு முன் அவனில் இல்லாத ஒன்று அவனை அள்ளிச்செல்வதை. மானுடன் ஒரு பெருவிசையின் விழியுருவென ஆவதை.
அவன் கூச்சலிட்டபடி பாய்ந்து சோலையை நோக்கி ஓட அத்தனை யாதவர்களும் அவனை நோக்கி திரும்பினர். ஒரு கணம் மொத்த நிரையே கழிபட்ட நாகமென உடல்விதிர்த்தது. பின்பு ஏரி கரையை உடைத்தது. அந்த நிரை அனைத்து பகுதிகளிலும் உடைந்து சிதறி தனித்தனி மனிதர்களாக ஆகி காற்றில் சருகுகள் பறப்பது போல கலைந்தும் சுழன்றும் சோலையின் உள்ளே புகுவதை அர்ஜுனன் கண்டான். செவியற்ற விழியற்ற ஒரு பெருக்கு. உருகி வழியும் அரக்குக்குழம்பு என அது ஒற்றையலையாக எழுந்து சென்றது.
“நிறுத்துங்கள் அவனை!” என்று தலைவன் கூவினான். முரசுகளையும் கொம்புகளையும் தொண்டைகளும் கன்னங்களும் புடைக்க உரக்க முழக்கியபடி காவலர்கள் அவர்களை அணைகட்ட முயன்றனர். “நில்லுங்கள்! ஒழுங்குமீறினால் தண்டிக்கப்படுவீர்கள்! நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று காவலர்கள் கூவினார்கள். மதம்கொண்ட யானை என கூட்டம் குரலுக்கு செவிகொடுக்கவில்லை. காவலர் தலைவன் வெண்பற்கள் தெரிய முகத்தைச் சுளித்து கூவியபடி தன் நீண்ட வாளை வீசியபடி முன்னால் பாய்ந்தான். அவன் கட்டற்ற சினம் கொண்டிருக்கிறான் என அறிந்த அவன் புரவியும் அதே சினத்தை அடைந்து பற்களைக் காட்டியபடி கால்தூக்கி வந்தது.
தன்முன் வந்த அந்த முதல் யாதவனை நீரைச் சுழற்றி வீசியதுபோல ஒளிவிட்ட வாள்வீச்சின் வளைவால் வெட்டி வீழ்த்தினான். என்ன நிகழ்கிறதென்றே அறியாமல் அவன் தலை துண்டிக்கப்பட்டு திகைத்த கைகளும் மண்ணில் ஊன்றிய கால்களுமாக நின்றான். தலை அப்பால் சென்று விழுந்தது. போரில் மானுடத் தலைகள் வெட்டுண்டு விழுவதை அர்ஜுனன் பல நூறுமுறை பார்த்திருந்தான். அவையனைத்தும் ஒரு பெருநிகழ்வின் கணத்துளிகளென கடந்துசெல்பவை. மானுடத்தலை என்பது அத்தனை எடை கொண்டது என்பதை அப்போதுதான் உணர்ந்தான். இரும்புக்கலம் போல் மண்ணில் விழுந்து குழி எழுப்பி பதிந்தது. மணலில் குருதித்துளிகள் கொழுத்துச்சிதறின. விழிகள் காற்றில் பூச்சியிறகுகள் என அதிர்ந்து பின் நிலைத்தன.
அதன்பின் நிலையழிந்து ஒருக்களித்து மண்ணில் விழுந்த யாதவனின் கால்கள் உதைத்தன. கைகள் மணலை அள்ளிப் பற்றின. தன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி உடல் நடுங்க அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவன் வெட்டுண்டதை அவனைத் தொடர்ந்து வந்த யாதவர் சிலரே கண்டனர். அவர்கள் என்ன நிகழ்ந்தது என்பதை உள்ளம் வாங்கிக்கொள்ளாமையால் இளித்தும் சுழித்தும் திகைத்தும் உறைந்த முகங்களுடன் நின்று மாறி மாறி நோக்கினர். ஒருவன் கைநீட்டி தலையை சுட்டிக்காட்ட இன்னொருவன் பாய்ந்து மேலும் முன்னேறினான். அவன் தலையையும் வீரன் வெட்டி வீழ்த்தினான். அதன்பின்னரே அடுத்துவந்தவர்கள் அதை உணர்ந்து பின்னால் நகர்ந்தனர்.
“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவியபடி யாதவக் காவலர்கள் ஒவ்வொருவரையும் சவுக்கால் அறைந்தனர். வாளின் பின்புறத்தால் தலையில் அடித்தனர். கூட்டத்தை ஊடுருவி முன்னால் சென்ற படைத்தலைவன் சுனையைச் சூழ்ந்து எழுந்திருந்த குட்டை முட்புதர்களைத் தாண்டி அதன் சேற்றுச் சரிவில் பாய்ந்து சறுக்கியும் புரண்டும் உள்ளே இறங்கி அருகே சென்று அசைவுகள் கொந்தளித்த அடிநீரை நோக்கி கை நீட்டிய யாதவர்களை பின்னால் இருந்து வாளால் வெட்டினான். இருவர் தலையற்று சேற்றில் விழுந்தனர். தலை சரிவில் உருண்டு நீரை அணுகியது. கொழுங்குருதி வழிந்து சென்று நீரில் கலந்தது.
உடல்கள் சேற்றில் சரிந்ததும் சுனையைச் சூழ்ந்திருந்த யாதவர்கள் அலறியபடி பின்னால் நகர்ந்தனர். “பின்னால் செல்லுங்கள்! சுனைக்குள் இறங்கும் எவரும் அக்கணமே கொல்லப்படுவீர்கள்” என்றான் தலைவன். யாதவர்கள் பின்காலடி எடுத்து வைத்து சென்றனர். முன்னால் நின்றவர்கள் விசையழிந்து தயங்க அவர்களை பின்னால் வந்து முட்டிய கும்பல் உந்தி முன்னால் செலுத்தியது. கூட்டத்தின் முன்விளிம்பு அலையடித்தது. பின்னால் இருந்து தள்ளப்பட்டவர்களால் கால்தடுக்கி சுனையின் சேற்றுச் சரிவில் விழுந்த ஒருவன் அலறியபடி எழுவதற்குள் காவலன் ஒருவன் தலையை வெட்டி தோளை உந்தித் தள்ளினான்.
“விலகுங்கள் விலகுங்கள்!” என்று காவலர் கூவிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் சுனையைச் சுற்றி யாதவர்கள் தோளோடு தோள் சேர்ந்து தலை செறிந்து நீள் வட்டமென அசைவிழந்தனர். “உடல்களை இழுத்து அகற்றுங்கள்” என்று தலைவன் ஆணையிட்டான். யாதவ வீரர்கள் இறங்கி ஒவ்வொரு உடலாக கால்பற்றி இழுத்து மேலே கொண்டு சென்றனர். நீண்டு சேற்றில் இழுபட்ட கைகளுடன் தலையில்லாத உடல்கள் அகன்ற தடம் மட்டும் எஞ்சியது.
“தலைகள் இங்கே காவலுக்கு நிற்கட்டும்” என்றான் தலைவன். வெட்டுண்ட தலைகளை எடுத்து வேல்முனைகளில் குத்தி மணலில் நாட்டி வைத்தனர். ஆறு தலைகள். ஒருதலை வேலில் இருந்து விழுந்து நீரை நோக்கி விடாய்கொண்ட வாயுடன் உருள அதை ஓடிச்சென்று எடுத்து மீண்டும் குத்திய வீரன் புன்னகையுடன் ஏதோ சொன்னான். இன்னொருவன் அதற்கு சிரித்தபடி மறுமொழி சொன்னான். சூழ்ந்திருந்தவர்களின் முகத்தில் அச்சமில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். அவர்கள் அங்கு நிகழ்வனவற்றை வேடிக்கை பார்ப்பவர்களாக மாறியிருந்தனர். ஊர் சென்றதும் அங்கு உற்றவர்களிடம் சொல்லவேண்டிய சொற்களாக அவர்கள் அதை மாற்றிக்கொண்டிருந்தனர் என்று தோன்றியது.
அர்ஜுனன் தன் புரவியை பின்னடி எடுத்து வைத்து விலகி குறும்புதர் ஒன்றிற்குள் மறைந்து நின்றான். குதிரையின் கழுத்திலேயே முகம் வைத்து உடலை பதித்து தளர்ந்தவன் போல் கிடந்தான். கூட்டத்தினர் மெல்ல கலைந்து பேசிக்கொள்வதை கேட்கமுடிந்தது. தாங்கள் இன்னும் சாகவில்லை என்பதை மகிழ்வுடன் உணர்கிறார்கள் போலும். எவரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்ல சிரிப்பொலிகள் கலந்து ஒலித்தன. நீரை உணர்ந்த அத்திரிகளில் ஒன்று தலையசைத்து அமறியது. இன்னொரு அத்திரி அதற்கு மறுமொழி உரைத்தது.
“ஒவ்வொருவரும் தங்கள் நீர்க்குடுவைகளை எடுத்து கொள்ளுங்கள். சீராக விலகிச் சென்று நிரைவகுத்து தரையில் அமருங்கள். பூசலிடுபவர் எவரும் அக்கணமே வெட்டப்படுவீர்கள்” என்றான் தலைவன். “எங்கள் படைவீரர் உரிய நீரை உங்களுக்கு அளிப்பார்கள். அளிக்கப்படும் நீருக்கு அப்பால் ஒரு துளி நீரும் எவருக்கும் உரிமை கொண்டதல்ல. நீரை வீணடிப்பவர்கள் இரக்கமில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.” ஒருவன் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல யாதவர் நிரையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.
யாதவர்கள் ஓசையின்றி காலெடுத்து வைத்து பின்னால் சென்றனர். மெல்லிய குரலில் “நிரை நிரை” என ஒரு முதியவர் சொல்லிக்கொண்டிருந்தார். “அமருங்கள். நிரை வகுத்து அமருங்கள். விலங்குகளை வண்டிநுகங்களிலோ புதர்களிலோ கட்டிவிடுங்கள்” என்று தலைவன் ஆணையிட்டான். படை வீரர்கள் அவ்வாணைகளை திரும்பச் சொல்ல மணலில் ஒவ்வொருவராக அமர்ந்து தங்கள் முன் சுரைக்கொப்பரைகளையும் தோல்குடுவைகளையும் மூங்கில்குவளைகளையும் எடுத்து வைத்துக் கொண்டனர்.
எவரோ “அமுதுக்காக தேவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்” என்று சொல்ல சிலர் சிரித்தனர். “அசுரர்கள். வரப்போவது ஆலகாலம்” என்று இன்னொரு குரல் எழுந்தது. “அமைதி” என வீரன் கூவினான். அந்த அச்சுறுத்தல்நிலை அவர்களை கிளர்ச்சியடையச் செய்திருந்தது. நிகழ்வுச்செறிவு கொண்ட நாடகத்தில் ஓரு தருணம். கிளர்ச்சியை உள்ளம் மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டது. உள்ளம் ததும்பியபோது எளிய சொல்லாடல்கள் வழியாக அதை மெல்ல கீழிறக்கிக் கொள்ளவேண்டியிருந்தது. வேட்டையாடுவது மட்டுமல்ல வேட்டையாடப்படுவதும் உவகையளிப்பதே.
அர்ஜுனன் அருகே வந்த சுபத்திரை “அங்கே தங்களை தேடினேன்” என்றாள். அர்ஜுனன் அவள் குரலைக்கேட்டு நிமிர்ந்து “ஆம்… நான்” என்றபோது வியர்த்தமுகத்தில் காற்று பட்டது. நடுங்கும் உதடுகளுடன் “அந்த நெரிசலை தவிர்க்க விழைந்தேன்” என்றான். “வியர்த்திருக்கிறீர்கள். முகம் வெளிறியிருக்கிறது” என்றாள். “என்னால் அங்கு நிற்க முடியவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆறு உயிர்கள்” என்றான்.
“ஆம்” என்றபின் சுபத்திரை திரும்பிப் பார்த்து “ஆறு மூடர்கள்” என்றாள். “பொருளற்ற இறப்பு” என்றான் அர்ஜுனன். “எந்த இறப்புதான் பொருளுடையது? இவர்கள் ஒரு போரில் இறந்தபின் போரில் ஈடுபட்ட இரு அரசர்களும் பேச்சமைந்து மகள்மாற்றிக்கொண்டால் அவ்விறப்பு பொருள்கொண்டதா?” என்றாள். அர்ஜுனன் அவள் பேச்சை தவிர்க்க முயன்றான். “அவை வீரஇறப்புகள் ஆகிவிடும். வீரருலகுக்கு அவர்கள் செல்வார்கள் இல்லையா?” என்றாள். “இல்லை, நான் அதைச்சொல்லவில்லை” என்றான்.
சுபத்திரை “நான் கொல்வதை கருத்தில் கொள்வதில்லை” என்றாள். அர்ஜுனன் அவளை நிமிர்ந்து நோக்கி “மூத்தவர் எங்கே?” என்றான். “இந்த நெரிசலில் அவர் ஈடுபடவேண்டாம் என எண்ணினேன். ஆகவே பின்நிரையில் இருந்து அப்பாலுள்ள பெருமரம் ஒன்றின் அடிக்கு அவரை கூட்டிச்சென்றேன். அங்கே ஊழ்கத்தில் அமர்ந்துவிட்டார். அதுவும் நன்றே என முன்னால் வந்தபோது கண்டேன். இங்கு நிகழ்ந்த உயிர்ப்பலியை அவர் காணவில்லை” என்றாள் சுபத்திரை. பெருமூச்சுடன் “ஆம். அது நன்று” என்று அர்ஜுனன் சொன்னான்.
“போர்க்கலையும் படைசூழ்கையும் கற்றவர் என்று சொன்னீர்கள். இத்தனை எளிதாக தளர்வீர்கள் என நான் எண்ணவில்லை” என்று சுபத்திரை வெண்பற்கள் மின்னும் சிரிப்புடன் சொன்னாள். அர்ஜுனன் “முன்பெப்போதும் உயிரிழப்பை நான் ஒரு பொருட்டென எண்ணியதில்லை. இப்போது அந்தத் தலைகளின் விழிகளை என்னால் பார்க்க முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை, அவ்விழிகள் என்னுடன் பேசமுற்படுபவை போல தெரிகின்றன” என்றான். “ஆம்” என்றாள் சுபத்திரை திரும்பி நோக்கியபடி. “நானும் ஒருகணம் கைகால்கள் தளர்ந்துவிட்டேன். நம்முடன் மூத்தவர் இருப்பதனால்தான் என்று தோன்றுகிறது. அவர் நம்மை நாமறியாத எதையோ நோக்கி செலுத்துகிறார்.”
அர்ஜுனன் “திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றுகிறது. என்னால் இங்கே இனிமேல் நிற்கமுடியாது” என்றான். சுபத்திரை புன்னகைத்து “உங்களை எனக்கு படைக்கலன் பயிற்றுவிக்க அனுப்பியிருக்கிறார் என் தமையன்” என்றாள். “எந்த படைக்கலத்தையும் என் கைகளால் பற்ற முடியுமென்று தோன்றவில்லை” என்றான் அர்ஜுனன். சுபத்திரை சிரித்தாள். “என்ன?” என்றான் அர்ஜுனன். “ஆண்மகனை ஆற்றல்சோர்ந்த நிலையில் பார்ப்பது பெண்களுக்கு பிடிக்கும்” என்றாள். அர்ஜுனன் அவள் சிரிப்பு ஒளிர்ந்த விழிகளை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டான்.
சுனையின் கரையில் இரு மூங்கில்கழிகளை நாட்டினர். அதில் நெம்புதுலா போல நீண்ட மூங்கில்கழியை அமைத்து அதன் முனையில் தோல்பையைக் கட்டி தாழ்த்தி சுனையிலிருந்து நீரை கலக்காமல் அள்ளி மறுமுனையை நான்கு வீரர்கள் சேர்த்து அழுத்தி தூக்கி சேற்றில் தொடாது வட்டமிட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அதை மரக்குடைவுக் கலங்களில் ஊற்றி தூக்கிக்கொண்ட யாதவர்கள் நிரையாக அமர்ந்திருந்தவர்களின் அருகே சென்றனர். பக்கத்திற்கு ஒருவராக மூங்கில் குவளையில் நீரை அள்ளி ஒவ்வொருவருக்கும் ஊற்றினர். நீரின் ஒலி முன்பு எப்போதும் கேட்டிராதபடி ஓர் உரையாடல்போல சிரிப்பு போல ஒலித்தது.
கண் முன் நீரை பார்த்தும்கூட அதை எடுத்து அருந்தாமல் யாதவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர். யாதவர்தலைவன் “உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நீரை பாதி அருந்துங்கள். எஞ்சியதை கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். மறுமுறை நான் சொன்ன பின்பே அருந்தவேண்டும். முழுதாக அருந்தியவர்கள் நாதளர்ந்து போவார்கள் என்று உணர்க” என்று சொன்னான். அதன் பின்னரும் அவர்கள் தயங்கியபடி அமர்ந்திருந்தனர். ஒருவன் நீரை எடுத்து உறிஞ்ச அந்த ஒலியில் பிறர் உடல் விதிர்த்தனர். அத்தனைபேரும் நீர்க்குவளைகளை எடுத்து குடித்தனர். நீர் உறிஞ்சும் ஒலிகளும் தொண்டையில் இறங்கும் ஒலிகளும் கலந்த ஓசை எழுந்தது.
அர்ஜுனன் அந்த ஒலியைக் கேட்டு உடல் கூசினான். விலகிச்சென்றுவிட எண்ணி கடிவாளத்தை அசைக்க அவன் குதிரை காலெடுத்துவைத்தது. சுபத்திரை “என்ன?” என்றாள். “மூத்தவரிடம் செல்கிறேன்” என்று அவன் திரும்பிப்பார்க்காமல் சொன்னான். “அதோ அங்கிருக்கிறார்” என்றாள் சுபத்திரை. அரிஷ்டநேமி யாதவர்களின் நிரைக்கு அப்பால் முள்நிறைந்த மரத்தின் அடியில் சருகுமெத்தைமேல் ஊழ்கத்தில் அமர்ந்த அருகர்களைப் போல கால்களை தாமரையிதழென மடித்து கைகளை அதன்மேல் விரித்து நிமிர்ந்த முதுகுடன் மூடிய விழிகளுடன் அமர்ந்திருந்தார்.
“முன்னரே கற்சிலையாக மாறிவிட்ட அருகர்” என்றாள் சுபத்திரை. “அவரை ஏன் கொண்டுசெல்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை.” அர்ஜுனன் “அவருள் ஏதோ மாறிக்கொண்டிருக்கிறது. அதை அஞ்சித்தான் ஊழ்கத்தை பற்றிக்கொள்கிறார்” என்றான். “என்ன?” என்றாள். “அவர் உள்ளம் காலத்தில் விரைந்தோடி உக்ரசேனரின் மகளை மணந்து கொண்டிருக்கலாம். இப்போது அவர் பாரதவர்ஷத்தை குடைகவித்து ஆண்டுகொண்டிருக்கலாம்” என்றான் அர்ஜுனன்.
சுபத்திரை திரும்பி நோக்கியபின் “ஆண்களுக்கு என்னதான் வேண்டும்?” என்றாள். “வெற்றி” என்றான் அர்ஜுனன். “இறுதிவெற்றி தன்மீது.” அவள் மீண்டும் நோக்கியபின் புன்னகைத்து “ஒப்புநோக்க பெண்ணின் விழைவு எளியது. அவள் ஆணை வெற்றிகொண்டால்போதும்” என்றாள். உடனே சிறுமியைப்போல சிரித்து “உலகைவெல்ல எழுந்த ஆணை வெற்றிகொள்வதென்றால் எத்தனை எளியது” என்றாள். அர்ஜுனன் அதுவரை இருந்த உளச்சுமை விலக தானும் சிரித்தான்.
யாதவவீரன் ஒருவன் அவர்களை நோக்கி இரு குவளைகளில் நீர் கொண்டுவந்தான். பணிவுடன் ஒன்றை அவனிடம் அளித்து பிறிதொன்றை சுபத்திரையிடம் அளித்தான். “அருந்துங்கள் இளவரசி” என்று தலைவணங்கி பின்னால் சென்றான். சுபத்திரை நீரை வாங்கியபின் பெண்களுக்குரிய இயல்புணர்வால் அவன் முதலில் அருந்தட்டும் என்று காத்து நின்றாள். அர்ஜுனன் குனிந்து நீரை நோக்கினான். பின்பு தலையை அசைத்தபின் யாதவனை கைசுட்டி அழைத்து குவளையை நீட்டி “வேண்டியதில்லை” என்றான். அவன் புரியாமல் “உத்தமரே” என்றான். “நான் இந்நீரை அருந்தவில்லை” என்றான்.
அவன் திகைப்புடன் “உத்தமரே” என்றான். “நீர் பிழையேதும் செய்யவில்லை. நான் இன்று நீர் அருந்துவதில்லை” என்றான் அர்ஜுனன். அவன் சுபத்திரையை நோக்கியபின் குவளையை வாங்கிக்கொண்டான். சுபத்திரை “ஏன்?” என்றாள். அவள் விழிகளை நோக்காமல் மெல்ல “குருதி விழுந்த நீர்” என்றான். அவள் “ஆம். ஆனால் அனைத்துப் போர்க்களங்களிலும் குருதி கலந்த நீரை அல்லவா அருந்த வேண்டியுள்ளது?” என்றாள். “உண்மை. நான் பல களங்களில் குருதிகலந்த நீரை அருந்தியுள்ளேன்” என்றபின் அர்ஜுனன் தலையை அசைத்து “இதை அருந்த என்னால் முடியாது” என்றான்.
சுபத்திரை யாதவவீரனை அழைத்து தன் குவளையையும் கொடுத்து “கொண்டு செல்க!” என்றாள். அவன் இருவர் விழிகளையும் நோக்கியபின் வாங்கிக்கொண்டு சென்றான். “நீங்கள் அருந்தலாமே” என்றான் அர்ஜுனன். “ஒருவர் அருந்தாதபோது நான் அருந்துவது முறையல்ல” என்றாள். அர்ஜுனன் ஏதோ சொல்ல வந்தபின் தலையை திருப்பி யாதவர்களின் கூட்டத்தை பார்த்தான். நீர் அவர்களுக்கு களியாட்டாக ஆகிவிட்டிருந்தது. அதன் அருமையே அதை இனிதாக்கியது. துளித்துளியாக அதை உண்டனர். சுபத்திரை “இனியநீர். தம்மவர் குருதி கலந்தது” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம்” என்றான்.
அரிஷ்டநேமியை நோக்கி ஒரு குவளை நீருடன் ஒருவன் சென்றான். “அவருக்கு இந்த நீரா?” என்றான் அர்ஜுனன். “குருதி உண்ணத்தானே மலையிறங்கினார்? அருந்தட்டும்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் அவள் கண்களை நோக்கி சற்று நெஞ்சு அதிர்ந்து விழிவிலக்கினான். “என்ன அச்சம்?” என்றாள். “நீ இரக்கமற்றவள்” என்றான். “எல்லா பெண்களையும்போல” என்று சேர்த்துக்கொண்டான். “நான் மண்ணில் நிற்பவள். என் வெற்றிகளும் மண்ணில்தான்” என்றாள். அர்ஜுனன் “அவர் அதை அருந்தமாட்டார். முதற்துளியிலேயே சுவையறிவார்” என்றான்.
அரிஷ்டநேமிக்கு முன் ஒரு கொப்பரைக் குவளையை யாதவ வீரர்கள் வைத்தார்கள். அதில் நீரை ஊற்றிய யாதவன் “அருந்துங்கள் மூத்தவரே” என்றான். அவர் விழிதிறந்து அவனை நோக்கியபின் நீரை எடுத்து ஒரு துளி அருந்தினார். அர்ஜுனன் விழிகளே உள்ளமென அவர் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் நீரை அருந்தும் ஒலியைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. அவர் பாதிக்குவளையை அருந்திவிட்டு கீழே வைத்தபோது அவன் பெருமூச்சுவிட்டான்.
“நீங்கள் எதிர்பார்ப்பது என்ன யோகியே?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “தெரியவில்லை” என்றான். “உலகியலை அத்தனை எளிதானதென்று மதிப்பிட்டுவிட்டீர்களா?” என்றாள். “இல்லை, அதன் வல்லமையை நான் அறிவேன்” என்றான் அர்ஜுனன். “துறவு என்பது மானுடக்கீழ்மையை கனிவுடன் நோக்கும் பெருநிலை என எண்ணியிருந்தேன்” என்றாள். “இல்லை, தன் கீழ்மையை திகைப்புடன் நோக்கும் நிலை” என்றான் அர்ஜுனன். அவள் சிரித்து “சரி, அப்படியென்றால் அந்த துயரத்துடன் நீரை அருந்துங்கள்” என்றாள்.
“நீங்கள் அருந்துங்கள் இளவரசி” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அருந்தாமல் நான் அருந்தப்போவதில்லை” என்று அவள் சொன்னாள். அவன் அவள் விழிகளை நோக்கியபின் தலைதிருப்பினான். இருவரும் ஆழ்ந்த அமைதியில் சிலகணங்கள் நின்றனர். அவன் “நீங்கள் இளைய பாண்டவரை வெறுக்கிறீர்கள் என்று முதிய யாதவர் சொன்னார்” என்றான். “ஆம், அதை நானே சொன்னேனே?” என்றாள். “ஏன் என்றும் சொன்னார்” என்றான். “ஏன்?” என்றாள்.
அவன் உள்ளத்தில் எழுந்த முதல் வினா நாவில் தவித்தது. திரும்பி அவளை நோக்கியபோது அவள் முகம் பதற்றத்தில் சிவந்திருப்பதை கண்டான். “உங்கள் தமையனுடன் அவர் இணை வைக்கப்பட்டமையால்தான் என்றார்கள்” என்றான். அவள் உள்ளம் எளிதாகி உடல்தளரச் சிரித்து “ஆம், இருக்கலாம்” என்றாள். “இல்லை என்று தோன்றுகிறது” என்றான் அர்ஜுனன் அவள் விழிகளை கூர்ந்து நோக்கி. திடுக்கிட்டு அவன் விழிகளை சந்தித்து “ஏன்?” என்றாள். “உங்கள் உள்ளத்தில் பிறிதொருவர் குடியேறியிருக்கலாம் என்றனர்” என்றான்.
அவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. அந்த ஓசையைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. மெல்லிய சிறிய செவ்வுதடுகள். உள்ளே ஈரமான வெண்பரல் பற்கள். “யார் என்று சொல்லவில்லையா அவர்கள்?” என்றாள். அர்ஜுனன் அவள் தொண்டை ஏறியிறங்குவதை கழுத்துக்குழி அசைவதை நோக்கினான். “இல்லை” என்றான். அவள் புன்னகைத்து “அதையும் அவர்கள் சொல்லியிருக்கலாமே” என்றாள். “அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான். “இதை மட்டும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபின் “நான் ஒரு சிறிய புரவிப்பாய்ச்சலை விழைகிறேன்” என்றாள்.
“இந்நேரத்திலா?” என்றான். “ஆம்” என்றபின் அவள் தன் புரவியின் மேல் ஏறி அதை குதிமுள்ளால் குத்தினாள். அதை எதிர்பாராத புரவி கனைத்தபடி குளம்புகள் மணலை அள்ளி பின்னால் வீச பாய்ந்தோடியது. அர்ஜுனனின் புரவி உடன் விரைய விழைந்து கால்களால் மண்ணை அறைந்து தலைகுனிந்து பிடரிகுலைத்தது. அவன் அதன் முதுகைத்தடவியபடி அசையாமல் நின்றான். தொலைவில் புழுதிக்குவைக்கு அப்பால் அவள் மறைந்தபோது விழித்துக்கொண்டவன்போல தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.
அவன் ஆணையிடாமலேயே அவன் புரவி அவள் புரவியை துரத்தத் தொடங்கியது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் அது மேலும் வெறிகொண்டது. புழுதிக்குவைகள் செந்நிறமான புதர்கள் போல நின்றன. அவற்றை ஊடுருவிச்சென்று அவளை கண்டான். அவன் அணுகுவதைக் கண்டதும் அவள் புரவியை மேலும் விரைவாக்கினாள். அவன் குதிமுள்ளால் தொட்டதும் அவன் புரவி கனைத்தபடி கால்தூக்கி காற்றில் எழுந்து விழுந்து எழுந்து சென்றது. வானிலேயே செல்வதுபோல அவன் தொடர்ந்தான்.
நெடுந்தொலைவில் அவள் விரைவழிவது தெரிந்தது. அவன் புரவி மேலும் விரைவுகொண்டது. அவள் சிலந்திவலைச் சரடிலாடும் சிறிய பூச்சி போல அந்தக் குளம்புத் தடத்தின் மறு எல்லையில் நின்றாடினாள். பெரியதாகியபடி அணுகி வந்தாள். அவன் புரவி அவளை நோக்கி சென்றது, முட்டி வீழ்த்திவிடுவதுபோல. அவள் தன் புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தி அவனை அசையாமல் நோக்கி நின்றாள். அவன் அவளை நெருங்கி தன் புரவி அவள் புரவியை மோதும் கணத்தில் கடிவாளத்தைப்பற்றித் திருப்பி அவளைத் தவிர்த்துச் சென்று சுழன்று நின்றான்.
இருபுரவிகளும் கொதிக்கும் கலத்தில் நீர் விழுந்த ஒலியுடன் மூச்சுவிட்டபடி தலைதாழ்த்தி நின்றன. அவற்றின் வியர்வையின் தழைகலந்த உப்புமணம் எழுந்தது. அவள் அவனை நோக்கி சிரித்தாள். எத்தனை வலுவான ஈறுகள் என அவன் நினைத்தான். “என்ன?” என்றாள். இல்லை என தலையசைத்தான். “விடாய்” என்றாள். “ஆம்” என்றான். “திரும்பச்சென்று நீர் அருந்துவோம்” என்றாள். செல்லமாக தலைசரித்து “எனக்காக” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் கண்கள் இடுங்க சிரித்து “குருதிநீர்” என்றாள். அவன் “ஆம்” என்றான்.