காண்டீபம் - 55
பகுதி ஐந்து : தேரோட்டி – 20
அரிஷ்டநேமி தங்கியிருந்த பாறைப்பிளவை நோக்கி செல்லும்போது அர்ஜுனன் தனது காலடியோசை சூழ்ந்திருந்த மலைப்பாறைகளில் பட்டு பெருகி எழுவதை அறிந்தான். பலநூறு உறுதியான காலடிகள் அக்குகைவாயில் நோக்கி சென்று கொண்டிருப்பது போல. அவ்வோசை கேட்டு முட்புதர்களிலிருந்து சிறகடித்தெழுந்த பறவைகள் வானில் சுழன்று படபடத்தன.
கீழே பரவியிருந்த கூர்முட்களில் அச்சிறகுகளின் நிழல்கள் படிந்து கிழிபட்டுச் செல்வதை கண்டான். காலையொளியில் அவற்றின் நிழல்கள் சரிந்து நீண்டிருக்க முட்கள் மேலும் கூர்நீட்சி கொண்டிருந்தன. அவனுக்கு வலப்பக்கம் எழுந்த கரிய பாறையில் முட்புதர் ஒன்றின் நிழல் கூர் உகிர்களுடன் அள்ளிப் பற்றுவதற்காக நீண்ட குருதி தெய்வத்தின் கொடுங்கை போல் நின்றிருந்தது.
காலை வெயிலின் வெக்கையில் ஒரு கணம் நின்று திரும்பி நோக்கியபோது அப்பகுதி முழுக்க நிறைந்திருந்த முட்புதர்களும் அவற்றின் நிழல்களும் இளங்காற்றில் அசைவது கனவுரு போல தோன்றியது. அவன் நிழல் இழுபட்டு நைந்து மீண்டும் உயிர்கொண்டெழுந்து சென்றது. அவன் குகைவாயிலை அடைவதற்குள்ளாகவே நிழல் அதை அடைந்து விட்டது. அதைக் கண்டு உள்ளிருந்து அரிஷ்டநேமி வெளியே வந்தார். கையில் சிறிய மரவுரி மூட்டை ஒன்று வைத்திருந்தார். அவனைக் கண்டதும் புன்னகைத்து “வருக!” என்றார்.
அர்ஜுனன் “பணிகிறேன் மூத்தவரே” என்றான். அரிஷ்டநேமி “நீங்கள் யோகி. நான் ஊழ்கம் துறந்து இல்லறம் ஏகுபவன். இனி உங்களைப் பணிய வேண்டியவன் நானே” என்றார். “ஆம், ஆனால்…” என்று அர்ஜுனன் தயக்கமாகச் சொல்ல “அதுவே முறை” என்றார் அரிஷ்டநேமி உறுதியாக. அர்ஜுனன் தலையசைத்தான். அரிஷ்டநேமி குகையை மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு “கிளம்புவோம்” என்று உரைத்தார். அர்ஜுனன் தன் உள்ளத்தில் ஓடிய எண்ணம் அவரை அடையலாகாது என்று எண்ணியபோதே அவர் அந்த மூட்டையை திருப்பி குகைக்குள் வீசிவிட்டு அவனிடம் திரும்பி புன்னகையுடன் “எத்தனை எளிய உயிர்கள் மனிதர்கள்! நான் நாடாளச் செல்கிறேன். இக்குகையிலிருந்து இந்த மரவுரியையும் திருவோட்டையும் கொப்பரையையும் கொண்டு செல்வதனால் என்ன பொருள்?” என்றார்.
அர்ஜுனன் “இந்நாட்களின் நினைவாக இவை தங்களுடன் இருக்கலாமே?” என்றான். அவர் பொறுமையின்றி கையசைத்து “இந்நாட்களின் நினைவு என்னுள் எஞ்ச வேண்டியதில்லை” என்றார். பின்பு பெருமூச்சுடன் “எஞ்சாது இருக்குமெனில் நன்று. இனி நான் இருக்குமிடத்தில் பொருந்தி அமைய முடியும்” என்றார். “செல்வோம் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றபடி அவர் இரு பாறைகளில் காலெடுத்து வைத்து கடந்து முட்புதர்கள் நடுவே இறங்கினார்.
படியாக அமைந்த பாறையில் கால்வைத்துத் திரும்பி அக்குகையை ஒரு கணம் நோக்கியபின் “இருங்கள்” என்றபடி பாறைகளில் தாவி ஏறி உடலை மண்ணோடு படியவைத்து கைகளால் உந்தி மலைப்பாம்பைப் போல் அதற்குள் நுழைந்தார். திரும்பி வருகையில் அவர் கையில் ஒரு சிறிய உருளைப்பாறை இருந்தது. “இப்பாறையை நான் என்னுடன் வைத்திருந்தேன்” என்றார். முகம் மலர்ந்திருந்தது. “இது என் உள்ளத்துணைவன். முதல் நாள் இப்பாறைக்குள் என்னை அமைத்துக் கொண்டபோது கல்லில் சிறைப்பட்ட தேரை என உணர்ந்தேன். உண்மையில் திறந்த பெரும்வெளி ஒன்பது புறமும் உடைத்து என்னை பீறிட்டுப் பரவ வைக்கிறது என்று தோன்றியபோதே இந்தச் சிறு குகையை தேர்ந்தெடுத்தேன்.”
“உள்ளம் என்பது ஒரு சிறிய கற்பூரத்துண்டு. அதை சிறு பேழைக்குள் அடக்கி வைத்தாக வேண்டுமென்று எனக்கு ஊழ்கநெறி கற்றுத்தந்த அருகப்படிவர் சொன்னார். ஆனால் அவர் எனக்கு இச்சிறிய அறையை சுட்டிக் காட்டியபோது அச்சத்தில் என் உடல் விரைத்துக் கொண்டது. இதற்குள் நுழையவே என்னால் முடியுமென்று தோன்றவில்லை. முதுகெலும்பை நிமிர்த்தி அமர்வதற்கு இதற்குள் இடமில்லை. இதுவே உன் இடம், உன்னை குறுக்கு. உடல் குறுகுகையில் உள்ளமும் குறுகும். உன்னிடம் எழுபவை வானில் விரியாது உன்னிடத்திலேயே திரும்பி வரும். அவை உன்னில் அமிழட்டும். அதுவே ஊழ்கத்தின் முதல் நிலை என்றார்.”
“அவர் சென்றபின் நாளெல்லாம் இந்த சிறிய குகை வாயிலில் தயங்கியும் அஞ்சியும் விழைந்தும் வெறுத்தும் அமர்ந்திருந்தேன். பின்பு முழந்தாளிட்டு கால்களை நீட்டி கைகளை உந்தி இதனுள் நுழைந்தேன். கருவறை விட்டு வெளிவரும் குழந்தை அதற்குள்ளேயே திரும்பிச் செல்வது போல என்று தோன்றியது. உள்ளே குளிர்ந்து இருண்ட அமைதி செறிந்திருந்தது. சில கணங்களுக்குள் என் முதுகெலும்பு வலி கொள்ளத்தொடங்கியது. அதற்குள் நெடுநேரம் அமரமுடியவில்லை. என்னால் முடியாது என்றபின் மீண்டும் வெளிவர முயன்றேன். கைகளை ஊன்றி தவழத்தொடங்கியபோது என்னால் என்னும் சொல் எனக்கு அறைகூவலாகியது. என்னால் முடியாததா? வெளியேறினால் மீண்டும் இக்குன்றுக்கோ அருகநெறிக்கோ வரமுடியாது என்று உணர்ந்தேன். எனவே உள்ளம் திரும்பி உள்ளேயே அமைந்து கொண்டேன். அன்றிரவு முழுக்க இதனுள் எனது தனிமையை நானே உணர்ந்தபடி அமர்ந்திருந்தேன்.”
“மறுநாள் புலரியில் தவழ்ந்து வெளிவந்தபோது என் முதுகு பல துண்டுகளாக உடைந்துவிட்டது போல் வலித்தது. வெளியே விரிந்துகிடந்த ஒளிப்பெருக்கில் கண்கள் கூசின. காற்று நாற்புறமும் என்னைத் தழுவியது. பின்னர் விழிதிறந்து நோக்கியபோது காற்றில் புகை என சிதறடிக்கப்பட்டேன். கரைந்து மறைந்தேன். கைகளை விரித்தபடி இங்குள்ள ஒவ்வொரு பாறையிலிருந்தும் இன்னொரு பாறைக்கு தாவினேன். வானை நோக்கி அண்ணாந்து பெருங்குரலெடுத்து கூவினேன். நெஞ்சில் அறைந்து பொருளற்ற ஒலியை எழுப்பினேன். பின்னர் கண்ணீருடன் சோர்ந்து ஒரு பாறை மேல் அமர்ந்து விம்மினேன்.”
“தன்னுணர்வடைந்தவுடன் எழுந்து ஓடி மீண்டும் குகைக்குள் ஒண்டிக் கொண்டேன். நத்தை தன் ஓட்டுக்குள் என. நத்தையல்ல ஆமை. கைகால்களை நீட்டினால் மட்டுமே உண்ணமுடியும், செல்லமுடியும். ஆனால் எத்தனை நல்லூழ் கொண்டது? விழைந்தகணமே கருவறையிருளுக்குள் மீண்டுவிடும் வாய்ப்புள்ள உயிர்கள் பிறிதெவை? எத்தனை நாள் என் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது என்று இன்று எண்ணினால் வியப்பேற்படுகிறது. இக்குகை என் அகம். இம்மலையுச்சிப் பாறைவெளி என் புறம். இக்குகை என் ஊழ்கம். அந்த வானம் என் விழைவு. துலாக்கோலில் முடிவிலா அசைவு என்று உள்ளத்தை அருக நெறி சொல்கிறது. துலாக்கோலின் முள் புயலில் ஆடும் பாய்மரக்கலத்தின் சுக்கான் என கொடுநடனமிட்ட நாட்கள் அவை.”
“பின்புதான் இக்கூழாங்கல்லை நான் கண்டு கொண்டேன். கண்மூடி நெடுநேரம் ஊழ்கத்தில் அமர்ந்து ஒன்றுமேல் ஒன்றென விழுந்த எண்ணங்களை ஒருவாறாக சீர்ப்படுத்தி என்னை உணர்ந்து விழித்தபோது இருளுக்குள் ஓரத்தில் இதை கண்டேன். என்னை நோக்கியபடி இதுவும் ஊழ்கத்தில் ஆழ்ந்திருப்பதாக தோன்றியது. குகைக்குள் நோக்கினேன். இக்குகைக்குள் அவ்வாறு பலநூறு உருளைக்கற்கள் காலகாலமாக அழியாத்தவத்தில் அமைந்துள்ளன. அவற்றுக்கு துலாமுள்ளின் நிலைகொள்ளாமை இல்லை. தனிமை இல்லை. விழைவுகளின் இமையாவிழி இல்லை.”
“இக்கல்லை எடுத்து என் முன் ஒரு பீடத்தில் அமர்த்தினேன். நீ என் ஊழ்கத்துணைவன், உன் முழுமையும் தனிமையும் என்னுள் திகழ்வதாக என்று சொல்லி கொண்டேன். இளையோனே, வாரக்கணக்காக இதனுடன் நான் உரையாடி இருக்கிறேன். கண்ணீருடன் மன்றாடி இருக்கிறேன். பணிந்து வழுத்தி இருக்கிறேன். பின்பு எங்கள் இருவருக்கும் நடுவே இருந்த தொலைவு கரைந்தழிந்தது. முழுமையான இணைவு அவ்வப்போது வந்து போயிற்று. இக்குகை இருளுக்குள் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தோம். என் அலைக்கழிதல்களை இதுவும் இதன் அகாலத்தை நானும் அறிந்தோம்.”
அவர் கூழாங்கல்லை கையில் விரித்துக் காட்டினார். “எத்தனை அரியது! உருவமென்று ஒன்றுள்ளது, ஆனால் அவ்வுருவுக்கு முற்றிலும் பொருளில்லை. பொருளுண்டென்றால் அது பயன் சார்ந்தோ செயல் சார்ந்தோ உருவானதல்ல. காலத்தின் விருப்பு சார்ந்து காலமாகி வந்த காற்றும் மழையும் செதுக்கியெடுத்தது. உள்ளீடும் புறவடிவும் ஒன்றேயான இருப்பென்பது நல்லூழ் அன்றி வேறென்ன? உட்கரந்துறையும் ஒன்றுமில்லை. உருமாறி அடைவதற்கோ உருவழிதல் மூலம் இழப்பதற்கோ ஏதுமில்லை.”
அரிஷ்டநேமி புன்னகையுடன் “இத்தனை சொற்களால் இதனை வகுத்துரைக்க முயல்கிறேன். நேற்றுவரை இச்செயலை ஒருபோதும் செய்ததில்லை, இன்று நீங்கள் எனக்கு ஒரு முன்னிலையாகி வந்துள்ளீர்கள். சொல்லிச்சொல்லி கடக்க முயல்கிறேன். அல்லது சொல்லாக்கி சேர்த்துக்கொள்ள விழைகிறேன்” என்றபின் தன் இடையாடையின் கச்சையில் அக்கல்லை சுருட்டி உள்ளே வைத்துக் கொண்டார்.
“அது எதற்கு உங்களுடன் மூத்தவரே?” என்றான் அர்ஜுனன். “நான் இங்கிருந்த இந்நாட்களின் நினைவாக” என்றார் அரிஷ்டநேமி. “அந்நினைவு தங்களுக்கு தேவையில்லை என்றீர்கள்?” என்றான் அர்ஜுனன். “ஆம், இந்நினைவு முற்றிலும் அழிந்தால் செல்லும் இடத்தில் நான் முழுநிறைவடையக்கூடும். ஆனால் அதைச் சொன்னதுமே நான் பேரச்சம் கொண்டேன். முழுமையாக என்னை அதில் இழந்து விடக்கூடாதென்று எண்ணிக் கொண்டேன். அறியாத ஆழத்தில் இறங்குபவன் பிடித்துக் கொள்ள சரடொன்றை வைத்துக் கொள்வது போல் இதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது” என்றார்.
இருவரும் முட்களின் ஊடாக நடந்தனர். அர்ஜுனன் நீண்டு நின்ற புதர்முள் கைகளைத் தவிர்த்து பாறைகளில் தாவி ஏறி மறுபக்கம் சென்றான். அரிஷ்டநேமி அம்முட்கள் நீட்டி நின்றதை அறியவே இல்லை. அவன் தாவித் தாவி வருவதை சற்று கடந்த பின்னே அவர் நோக்கினார். “ஏன்?” என்று கேட்டார். “முட்கள்” என்றான். “ஆம்” என்றார் அவர். “மிகக்கூரியவை. மலை உச்சியில் மட்டுமே இத்தனை கூரிய முட்கள் உள்ள செடிகள் முளைக்கின்றன” என்ற அர்ஜுனன் ஒரு செடியை சுட்டிக் காட்டி “இதோ இதற்கு இலை என்றும் மலரென்றும் ஏதுமில்லை. முட்களை மட்டுமே சூடி நிற்கிறது” என்றான்.
அரிஷ்டநேமி “இங்கு வேர்ப்பற்றுக்கு மண்ணில்லை. எனவே ஒவ்வொரு செடியும் இலையையும் மலரையும் பெருந்தவத்திற்குப் பின்னரே தன்னுள்ளிருந்து எழுப்புகிறது. ஓரிலைக்கு ஐந்து முட்களை காவலாக நிறுத்திக் கொள்கிறது” என்றார். மேலும் படியிறங்கும்போது அரிஷ்டநேமியும் பாறைகளை தாவிக் கடக்கத் தொடங்கியிருப்பதை அவன் கண்டான். அவர் புன்னகைத்து “முட்களை நானும் உணரத் தொடங்கிவிட்டேன்” என்றார்.
அரண்மனைக்கு முன்னால் இருந்த முற்றத்தில் புரவிகள் சித்தமாக நின்றன. ஸ்ரீதமர் ஏவலர்களுக்கு ஆணைகளை பிறப்பித்துக் கொண்டு நின்றிருந்தார். தொலைவில் அர்ஜுனனையும் அரிஷ்டநேமியையும் கண்டதும் அவர் திரும்பி மீண்டும் ஒரு ஆணையை பிறப்பித்துவிட்டு அருகே நெருங்கிவந்து “வருக இளவரசே. தங்களுக்கான புரவிகள் சித்தமாக உள்ளன” என்று சொன்னார். அர்ஜுனன் திரும்பி நோக்குவதைக் கண்டு “இளவரசி வந்து கொண்டிருக்கிறார் யோகியே” என்றார்.
அங்கிருந்து நோக்கியபோது மலைச்சரிவில் எங்கும் யாதவர்கள் கீழிறங்கிச் செல்வதை காணமுடிந்தது. மழைநீர் சிறு சிறு ஓடைகளாக வழிந்து பெருகிச் செல்வது போல. முந்தைய நாள் அவர்கள் பொங்கி மேலெழுந்து வந்ததை எண்ணிக் கொண்டான். “அனைவரும் நாளைக்குள் கஜ்ஜயந்தபுரியின் எல்லைக்குள்ளிருந்து சென்றுவிடுவார்கள்” என்றார் ஸ்ரீதமர். “நெடுங்காலமாக நடந்து வருகிறது இந்த விழவு. யாதவர்களின் வரலாற்றில் உண்டாட்டில்லாத ஒரே விழவு இதுவே. நூற்றெட்டுநாள் குடியும் ஊனுணவும் தவிர்த்து கொல்லாமையும் பொய்யாமையும் பூசலிடாமையும் நோற்று இருமுடிகட்டி இங்கு வருகிறார்கள். எனவே செல்லும் வழியிலேயே குடித்தும் உண்டும் கொண்டாடி நிலையழியத் தொடங்கிவிடுவார்கள்.”
அரிஷ்டநேமி அங்கு நின்ற பெரிய வெண்புரவி ஒன்றை அணுகி அதன் கழுத்தை தடவினார். ஸ்ரீதமர் “புரவியேற்றம் தங்களுக்கு மறந்திருக்காதென்று நினைக்கிறேன் இளவரசே” என்றார். “ஆம், புரவியேறி நெடுநாட்கள் ஆகின்றன” என்றார். “விலங்குகளின் மேல் ஏறுவது கருணைக்கு மாற்றானது என்ற எண்ணம் எனக்கிருந்தது” என்றபின் புன்னகைத்து “இனிமேல் ஏவலர்களின் மேல், படைவீரர்களின் மேல், குடிகளின் மேல், அயல்நாட்டவர் மேல் என வாழ்நாளெல்லாம் உயிர்களின் மேலேயே பயணம் செய்யப்போகிறேன். இது ஒரு தொடக்கமாக இருக்கும் என தோன்றுகிறது” என்றார்.
அப்புரவி திரும்பி அவரது தோளை தன் செந்நீல நாக்கால் நக்கியது. “அது தாங்கள் ஏறுவதை விரும்புகிறது” என்றார் ஸ்ரீதமர். “ஆம், அதற்கு அது பழக்கப்பட்டுள்ளது. நான் துவாரகைக்குள் நுழையும்போது அங்குள்ள குடிகளும் வீரர்களும் மகிழ்ந்து கூச்சலிட்டு என்னை வரவேற்பார்கள். வாளேந்தி அவர்களை போருக்கு அழைத்துச் சென்றால் என்னை வாழ்த்தியபடி தொடர்வார்கள். அவர்களின் குருதிமேல் நின்று நான் முடிசூடிக்கொண்டால் என்னை குலதெய்வமாக ஆக்கி கோயில் கட்டுவார்கள்.”
அர்ஜுனன் தொலைவில் சுபத்திரை வருவதை கண்டான். சேடி ஒருத்தி அவளுடைய மான்தோல் பயணமூட்டையுடன் பின்னால் வந்தாள். தோலால் ஆன இடையாடையும் உடலுக்குக் குறுக்காகச் சென்ற செவ்வண்ணம் பூசப்பட்ட காப்பிரிநாட்டு மென்தோல் மேலாடையும் அணிந்து குழலை கொண்டையாகக் கட்டி தலைக்குப் பின் சரித்து அணிகள் ஏதும் இல்லாமல் நடந்து வந்தாள். அவளுடைய இறுகிய தசைகள் அந்நடையில் குதிரைத்தொடைகள்போல் அதிர்ந்தன. அருகே வந்து அரிஷ்டநேமியை வணங்கி “நான் மதுராவின் இளவரசி சுபத்திரை. மூத்தவரை வணங்குகிறேன்” என்றாள். அரிஷ்டநேமி கைதூக்கி அவளை வாழ்த்தி “நாம் கிளம்புவோம்” என்றார்.
அர்ஜுனனை நோக்கி புன்னகைத்து “சித்தமாகிவிட்டீர்களா?” என்றாள். அர்ஜுனன் “ஆம் இளவரசி” என்றபின் புரவியில் ஏறிக்கொண்டான் அரிஷ்டநேமி எளிதாக கால்தூக்கி வைத்து தன் புரவியின் மேல் ஏறினார். சுபத்திரை தன் தோல் மூட்டையை வாங்கி அணுக்கனிடம் கொடுத்துவிட்டு தன் புரவியை நோக்கி சென்றாள். ஸ்ரீதமர் அர்ஜுனன் அருகே வந்து அவன் புரவியின் கழுத்தை நீவியபடி “ஒரு புறம் ஊழ்கப் படிவர் மறுபுறம் காதலிளம் கன்னி. சிறந்த பயணத்தை தங்களுக்கு அமைத்திருக்கிறார் இளைய யாதவர், பாண்டவரே” என்றார். அர்ஜுனன் அவர் விழிகளை நோக்கி “ஆம்” என்றான். பின்பு புன்னகைத்து “எனது துலாமுள் எத்திசைக்கு சாயும் என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை ஸ்ரீதமரே” என்றான்.
ஸ்ரீதமர் “இளைய பாண்டவர் எந்தெந்த விசைகளால் ஆக்கப்பட்டவர் என்பது எனக்கே தெரியும், யாதவருக்கு தெரியாமல் இருக்குமா?” என்றார். அர்ஜுனன் “தெரிந்திருக்கலாம், எனக்கு அவை எவையெனத் தெரியாது” என்றான். முன்னால் நின்றிருந்த காவலர்தலைவன் தன் கொம்பை எடுத்து ஊத பயணத்திற்கென்று சித்தமாக நின்ற யாதவர்கள் கைகளைத் தூக்கி “துவாரகை வாழ்க! நேமியும் சங்கும் வாழ்க! கருடக்கொடி எழுக!” என்று கூவினர். தலை வணங்கி ஸ்ரீதமரிடம் விடை பெற்று அர்ஜுனன் புரவியை காலால் செலுத்தினான்.
மூன்று புரவிகளும் இணையாக மலைச்சரிவில் இறங்கத்தொடங்கின. வளைந்த பாதையில் கூழாங்கற்களின்மேல் புரவியில் இறங்கியபோது அரிஷ்டநேமி ஊழ்கத்தில் இறங்கியவர் போல் பாதி விழி மூட கால்களன்றி உடற்தசைகள் எவற்றிலும் அசைவின்றி அமர்ந்திருந்தார். கஜ்ஜயந்தபுரியின் புழுதி படிந்த பாதையில் அவர்கள் செல்லத் தொடங்கியதும் இருபக்கமும் இருந்த இல்லங்களிலிருந்த அருக நெறியினர் மஞ்சள் அரிசியையும் மலர்களையும் அவர்கள் மேல் வீசி அருகர் பெயர் சொல்லி வாழ்த்தி விடை கொடுத்தனர். இளம்சிறுவர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டு கைகளை வீசி குதித்தனர்.
யாதவர்கள் நகருக்குள் வரும்போதிருந்த உள எழுச்சிகள் முற்றிலும் அகன்று துயிலும் துயரும் கலந்த எடை உடல் தசைகளை அழுத்த தளர்ந்த கால்களை எடுத்து வைத்து மெல்ல நடந்தனர். பொதி வண்டிகள் வலி மிகுந்தவை போல முனகியபடி சென்றன. அத்திரிகளும் கழுதைகளும் இருபுறமும் தொங்கிய எடைகளை நிகர் செய்தபடி மழை நனைந்து ஈரமான முரசுத்தோலில் கோல்குண்டுகள் விழுவது போல ஓசையிட்டு குளம்புகளை வைத்து மெல்ல சென்றன.
கஜ்ஜயந்தபுரியில் இருந்து யாதவர்கள் விலகிச்செல்வது வெயில் இழுபட்டு அந்திக்கதிரவன் அணைதல் போல் அர்ஜுனனுக்கு தோன்றியது. அவர்கள் விலகி விலகிச்செல்ல அசைவின்மையும் இருளும் கஜ்ஜயந்தபுரியின் இல்லங்கள் அனைத்திலும் படிந்து மூடின. அரைப்பாலை நிலத்தின் தொடுவானம் அவர்களை அரைவட்டமாக வளைத்திருந்தது. கூரிய படையாழி ஒன்றின் முனை போல.
அவனருகே புரவியில் வந்த சுபத்திரை தொடுவானை சுட்டிக்காட்டி “வெண்பட்டு நூலை வட்டமாக இழுத்துக் கட்டியது போல” என்றாள். அவன் திரும்பி அவளைப் பார்த்து புன்னகை செய்தான். “தொடுவான் நோக்கி புரவியில் விரையவேண்டும் என்று எப்போதும் எண்ணிக் கொள்வேன்” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “நான் அடைய விரும்புவன எல்லாமே தொடுவானுக்கு அப்பால் இருப்பது போல தோன்றும்” என்றாள் சுபத்திரை. “இளமையின் கனவு” என்று அர்ஜுனன் சொன்னான். “வாழுமிடத்துக்கு அப்பால் வெல்ல வேண்டியவை அனைத்தும் குவிந்து கிடப்பது போல் உணரும் உள நிலை. அது ஒரு முறை கிளம்பிச்சென்று நோக்கினால் தெரியும். தொடுவானம் என்பது ஒன்றில்லை. மீண்டும் மீண்டும் நிகழும் முடிவிலாத வாழ்விடங்களைத்தான் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.”
“அதை நானும் அறிந்துளேன்” என்றாள் சுபத்திரை. “ஆயினும் இக்கனவுகள் இப்படியே இருக்கட்டும் என்று எண்ண விழைகிறேன்.” முன்னால் வந்து நின்ற முதிய யாதவர் “இனிமேல் பாலைவனப்பாதை யோகியே. விரைந்து சென்று முதல் சோலையை அடைந்தாகவேண்டும்” என்றார். “செல்வோம்” என்றான். புழுதித் திரைக்கு அப்பால் சென்று கொண்டிருந்த முன்னோடிக் காவலன் தன் கொம்பை எடுத்து ஊதினான். அதுவரை ஒன்றன்பின் ஒன்றென நிரை வகுத்து வந்து கொண்டிருந்த யாதவர்களின் கூட்டம் நாரைக்கூட்டம்போல பிரிந்து பல தனிநிரைகளாக ஆகி பாலைவனத்தில் செல்லத்தொடங்கியது.
எவனோ ஒரு சூதன் குறுமுழவை மீட்டி பாடத் தொடங்கினான். காளியனை வென்று களிநடமிட்ட கரிய குழந்தையின் அழகை. அர்ஜுனனின் அருகே வந்த சுபத்திரை “இளமை முதலே இப்பாடலை கேட்டு வருகிறேன்” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்காமல் “யாதவப் பெண்கள் அனைவரும் பெற்றெடுக்க விழையும் குழந்தை அல்லவா அது?” என்றான். அவள் முகம் சிவப்பதை திரும்பி நோக்காமலே காணமுடிந்தது. “ஆம்” என்று அவள் சொன்னபோது அது ஒரு பெருமூச்சு போல் ஒலித்தது. “பெருந்திறன் கொண்ட வீரன் ஒருவனை பெறவிரும்பாத பெண் யாருமிருக்க முடியாது” என்று அவள் சொன்னாள்.
அர்ஜுனன் தன் புரவியின் குளம்படி ஓசையை உற்றுக் கேட்டுகொண்டு சில கணங்கள் சென்று கொண்டிருந்தான். தன் உடல் எங்கும் அந்த ஓசை ஒலிப்பதை உணர்ந்தான். பின்பு “இளைய யாதவருக்கு இணையாகவே பாரதவர்ஷமெங்கும் அர்ஜுனன் பெயரும் சொல்லப்படுகிறது” என்றான். அவள் உடல் கொள்ளும் குறுகலை தன் முதுகே எப்படி உணர்கிறது என்னும் வியப்பு அவனுக்கு ஏற்பட்டது. அவள் ஒன்றும் சொல்லவில்லை என்று கண்டு மீண்டும் “அவர்கள் இருவரையும் பேருருவம் கொண்ட ஒன்றின் இரு முகங்கள் என்று சொல்லும் வழக்கமுண்டு” என்றான்.
அதற்கும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அர்ஜுனன் சினம் கொண்டான். “அஸ்தினபுரியில் பெண்கள் இளைய யாதவனை கனவு காண்பது குறித்து சூதன் ஒருவன் பாடிய ஏளனப் பாடலை கேட்டேன். இளைய பாண்டவனுக்கு தங்கை முறையும் தமக்கை முறையும் தாய்முறையும் கொண்டவர்கள் அவனுக்கு மாற்றென இவனை விழைகிறார்கள் என்றான். அதைக்கேட்டு சூழ்ந்து நின்ற நகர்ப்பெண்கள் ஆடையால் வாய் மூடி நகைத்தனர்.” அதற்கும் சுபத்திரையிடமிருந்து மறுமொழி ஏதும் வரவில்லை .அர்ஜுனன் திரும்பி அவளை நோக்க அவள் தலை குனிந்து வேறெங்கோ எண்ணத்தை நிறுத்தி வந்து கொண்டிருந்தாள்.
அர்ஜுனன் ஒருகணம் உளம் தளர்ந்தான். பின்பு அவளை நோக்கி “தாங்கள் இளைய பாண்டவரையே மணப்பதையே தங்கள் தமையன் விரும்புகிறார் என்று நேற்று யாதவன் ஒருவன் சொன்னான்” என்றான். சுபத்திரை “ஆம்” என்றாள். அங்கேயே அச்சொல்லாடலை விலக்கிச் சென்றுவிட வேண்டும் என்று அவன் உள்ளம் விழைந்தாலும் அர்ஜுனனால் அது முடியவில்லை. “தங்கள் எண்ணம் என்ன?” என்றான். அதைக் கேட்டமைக்காக அவனே தன்னை கசந்தான். அவள் “நான் ஷத்ரியர்களை வெறுக்கிறேன்” என்றாள். அவன் அவள் கண்களை நோக்கி “ஏன்?” என்றான். “தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல என்று தோன்றுகிறது. அவர்கள் விழைவதெல்லாம் மண் மேலும் பெண் மேலும் கொள்ளும் வெற்றியைத்தான்” என்றாள்.
அவன் மேலே சொல்லெடுக்காமல் புரவியைச் செலுத்த அவளே தொடர்ந்தாள் “இளைய பாண்டவரைப்பற்றி நான் கேட்கும் செய்திகள் அனைத்தும் ஒன்றையே காட்டுகின்றன. அவர் பெண்களை அடைகிறார், வெல்கிறார். கடந்ததுமே துறந்து செல்கிறார். அவ்வெற்றிகளில் ஒன்றாக நானும் இருப்பது இழிவென்று தோன்றுகிறது. ஒருபோதும் அவர் அடைய முடியாத மலைமுடியென, அவர் எண்ணி ஏங்கும் அரும்பொருளாக இருக்கும்போது மட்டுமே என் ஆணவம் நிறைவுறுகிறது. அவரென்றல்ல அத்தனை ஷத்ரியர்களுக்கும் அவ்வாறு மிக அப்பால் இருக்க வேண்டுமென்று விழைகிறேன்.”
அர்ஜுனன் “கதைகளினூடாக அறியவரும் ஒருவர் பிறரது விழைவுகளாலும் அச்சங்களாலும் தீட்டப்பட்டவர். அச்சித்திரம் எத்தனை பெரிதென்றாலும் தொட்டு எடுத்த வண்ணம் கொண்ட சிமிழ் மிக மிகச் சிறியதே” என்றான். “அதையும் நான் அறிவேன். ஆயினும் அவ்வண்ணம் அவருடையது. அதை என்னால் உணர முடிகிறது. அவருக்கு நானல்ல, எந்தப் பெண்ணும் ஒரு பொருட்டல்ல” என்றாள். அர்ஜுனன் “இளைய பாண்டவரை நீங்கள் எண்ணியதே இல்லையா?” என்றான். அவள் கண்களில் மெல்லிய வலி ஒன்று வந்து சென்றதைக் கண்டதும் அவன் உள்ளத்தில் இருந்த எரிச்சல் சற்றே குளிர்ந்தது.
“எண்ணியதுண்டு” என்றாள். “நான் அவரை எண்ண வேண்டுமென்று சேடியரும் என் செவிலியரும் விரும்பினார்கள். அது என் இளைய தமையனின் விழைவென்று பின்னர் அறிந்தேன். நெடுங்காலம் அவரை எண்ணியிருந்தேன். அவருக்கெனவே என் பெண்மை மலர்ந்ததென்றுகூட நம்பினேன். பிறகெப்போதோ என்னையும் ஓர் இருப்பென எண்ணியபோது இந்தக் கசப்பு எழத்தொடங்கியது” என்றாள். அர்ஜுனன் “இளைய பாண்டவர் இன்று உங்கள் முன் வந்து உங்கள் கைகளை கோரினால் என்ன செய்வீர்கள்?” என்றான். அதைக் கேட்ட கணமே அது தன் வாழ்நாளில் கீழ்மைகொண்ட தருணம் என நினைத்தான்.
அவள் அச்சொற்களை கேட்டதாகவே தோன்றவில்லை. அவன் உள்ளம் எரியத்தொடங்கியது. பிறிதொரு முறை அவ்வண்ணம் கேட்டால் வாளை உருவி தன் தலையை வெட்டிக்கொள்வோம் என எண்ணினான். உடலின் ஒவ்வொரு நரம்பும் இழுபட்டு நின்றது. பின்பு மெல்ல தளர்ந்தான். அப்பால் சென்றுகொண்டிருந்த அரிஷ்டநேமியின் அருகே சென்றுவிட எண்ணி புரவியை திருப்பினான். அப்போது அவள் மெல்ல அசைந்தாள். அந்த அசைவு புரவியிலும் தெரிந்தது. அவன் ஒருகணம் தயங்கினான். அந்தத் தயக்கம் அவன் புரவியிலும் தெரிந்தது. ஆனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.
அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே சென்று அவருடைய புரவிக்கிணையாக தன் புரவியை செலுத்தினான். அவர் கையில் எதையோ வைத்து உருட்டிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்தக் கல் அது என கண்டான். அனைத்துப் பதற்றங்களும் விலக புன்னகைத்துக் கொண்டான். எடை விலகிய உடலுடன் புரவியை காலால் அணைத்து சீர்நடையில் செலுத்தினான்.