காண்டீபம் - 47

பகுதி ஐந்து : தேரோட்டி – 12

ரைவதமலை உச்சியில் அமைந்த அரண்மனைக்குச் செல்லும் உருளைப்பாறைப் படிக்கட்டால் ஆன பாதையின் இரு புறங்களிலும் பிரிந்து சென்று நூற்றுக்கணக்கான கொடிவழிப் பாதைகள் ஒவ்வொன்றும் ஓர் அருகர் ஆலயத்தையோ அடிகள் பொறிக்கப்பட்ட ஊழ்கப்பாறையையோ சென்றடைந்தன. அருகர் ஆலயங்கள் கற்பாறைகளை அடுக்கி மேலே மரப்பட்டைக்கூரையுடன் அமைக்கப்பட்டிருந்தன. கூம்புவடிவக்கூரையின் முகப்பில் அந்த அருகருக்குரிய அடையாளம் பொறிக்கப்பட்ட வெண்கொடி பறந்தது. அருகர்அடிகள் அமைந்த பாறைகளின் அருகே சுவஸ்திகம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்தன. அருகே அப்பாறையிலேயே செதுக்கப்பட்ட சிற்றகல்களில் நெய்யிட்டு சிறுதிரியில் சுடரேற்றி இருந்தனர். எங்கும் மண் கலங்களில் குங்கிலியமும் அகிலும் புகைந்தது.

அந்த மெல்லொளி எழுந்த காலையில் வெண்புகை முகில்படலமென குன்றை சூழ்ந்திருந்தது. அக்குன்றே ஒரு புகையும் குங்கிலியக் கட்டி என தோன்றியது. ஆலயங்களுக்குள் இருந்து ஆழ்ந்த இன்குரலில் அருக மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். வெண்ணிற ஆடை அணிந்து வாய்களில் துணித்திரை கட்டிய அருகநெறியினர் கைகளில் மலர்க்குடலைகளும் நறுமணப்பொருட்களுமாக சென்றுகொண்டிருந்தனர். மலையெங்கும் பலவகையான நறுமணப் பொருட்கள் மணத்தன. எதிர்வரும் ஒவ்வொருவர் உடலிலும் மணமிருந்தது. பாதையோரம் நின்றிருந்த பசுக்களின் உடம்பிலிருந்தும் நறுமணப்பொருட்கள் கமழ்ந்தன. பல்வேறு வகையான மணங்களை படிக்கட்டுகளாக மிதித்து மேலேறிச் செல்வதாக அர்ஜுனன் உணர்ந்தான்.

பிற நகரங்கள் அனைத்திலும் இருந்த படிநிலை ஆட்சிமுறை அங்கில்லையென்று தோன்றியது. ஈச்ச ஓலை வேயப்பட்ட சிற்றில்லங்களும் மரப்பட்டை கூரையிட்ட சிறு மாளிகைகளும் தங்கள் போக்கில் முளைத்தெழுந்தவை போல கலந்து மலைச்சரிவை நிறைத்திருந்தன. எதிர்ப்படும் முகங்கள் ஒவ்வொன்றையும் நோக்கியபடி அவன் நடந்தான். அவன் மகிழ்வுநிறைந்த நகரங்கள் பலவற்றை கண்டிருந்தான். விழவு எழுந்த நகரங்களில் கட்டற்று பெருகும் களிவெறியையும். அங்காடிகளில் பொருள் நுகர்வுக்கென எழும் உவகைத்திளைப்பையும் போர்வெற்றிச் செய்தி வருகையில் வரும் கொண்டாட்டத்தையும் கண்டிருக்கிறான். போருக்கென எழுகையில் பற்றிக்கொள்ளும் கொலையெழுச்சியும் கடும்சினமும் கொண்டாட்டங்களே. போரில் கொடி வீழும்போது பெருகும் துயரும் அழுகையும் கூட ஒருவகை களியாட்டமாக ஆகக்கூடும். ஆனால் ஒரு துளி குறையாது ஒரு துளி ததும்பாது நிறைந்த பாற்குடங்கள் போன்ற முகங்களை அங்கு மட்டுமே கண்டான்.

எதிரே வந்த ஒருவனிடம் “அரண்மனையில் அரசர் முகம் காட்டும் நேரம் எது?” என்று கேட்டான். அவன் இனிய புன்னகையுடன் “நீங்கள் அயலவர் என்று எண்ணுகிறேன் இங்கு அவ்வண்ணம் அரசர் உப்பரிகையில் எழுந்து முகம் காட்டும் தருணம் என்று எதுவுமில்லை. இங்குள்ள மாளிகைகள் எதற்கும் கதவுகள் இல்லை என்பதை கண்டிருப்பீர். அரண்மனைக்கும் அவ்வாறே. எப்போது நீர் விழைந்தாலும் அரண்மனைக்குள் நுழைந்து அரசரைப் பார்த்து வணங்கி, சொல்லாட முடியும். இந்நகரில் காவலும் தடையும் கண்காணிப்பும் ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் தலைவணங்கி “நன்று” என்ற பின் அவ்வெண்ணத்தை வியப்புடன் தன்னுள் மீட்டியபடி சென்றான்.

இலைநுனியில் ததும்பிச் சொட்ட காத்திருக்கும் துளி என அந்நகர் தோன்றியது. நீலவான் எதிரொளிக்கும் ஒளி அழியா முத்து என அதை காட்டுகிறது. அதன் ஒவ்வொரு கண நடுக்கலும் ஒரு யுகமே. அல்லது இதுவேதான் அழிவின்மையா? அறம் கொண்டும், மறம்கொண்டும், சொல் கொண்டும், படை கொண்டும் அரசியல் சூழ்ச்சி கொண்டும், நூல்நெறி கொண்டும் காக்கப்பட்ட பெருநகர்கள் என்னாயின? இக்ஷுவாகு குலத்து ராமன் ஆண்ட அயோத்தி எங்கே? தொல்புகழ் மாகிஷ்மதி எங்கே? அரக்கர்கோன் ஆண்ட தென்னிலங்கை எங்கே? எந்நகர்தான் இலைநுனி நீர்த்துளி என நிலையற்றதாக இல்லாமல் இருக்கிறது? விண்ணில் எழுந்த விண்மீன் போல் என்றுமுளதென தோன்றுகிறது? இங்கு சூழ்ந்திருக்கும் உவகை மானுடர் விழையும் பெருநிலை என்றால், இதுவே இவர்களுக்கு காவலென ஆகவேண்டும் அல்லவா?

அரண்மனை முகப்பில் இருந்த ஐந்து அருகர்களின் ஆலயத்தின் முன் சென்று நின்றான். நீண்ட கற்பீடத்தில் நடுவே பெருந்தோள்களுடன் வெற்றுடலுடன் நின்றார் ரிஷபர். கைகள் இரண்டும் கால்முட்டின் மேல் படிந்திருந்தன. விழிகள் முடிவிலியை நோக்கி மலர்ந்திருந்தன. காலடியில் திமில் எழுந்த மாக்காளையின் சிறிய உருவம் இருந்தது. வலப்பக்கம் அடியில் யானைச்சிலை அமைந்த அஜிதரின் சிலை நின்றது. அப்பால் குதிரை பொறிக்கப்பட்ட சம்பவநாதரின் சிலை. இடப்பக்கம் குரங்கு பொறிக்கப்பட்ட அபிநந்தனரின் சிலையும் காட்டுவாத்து பொறிக்கப்பட்ட சுமதிநாதரின் சிலையும் இருந்தன. நன்கு தீட்டப்பட்ட கரிய கல்மேனிகள்மீது ஆலயவாயிலுக்கு அப்பால் தெரிந்த ஒளியசைவுகள் நீர்த்துளியில் என எதிரொளித்துக் கொண்டிருந்தன. அவை சிலைகள் என்று தோன்றவில்லை. இப்புடவிச் சித்திரம் வரையப்பட்ட பெருந்திரையொன்றில் அவ்வடிவங்கள் வெட்டப்பட்டு துளை என தெரிவதாக விழி மயக்கெழுந்தது. அப்பால் ஓர் ஒளியுலகம் அசைந்து கொண்டிருந்தது.

சிறுவர்க்குரிய கற்பனை என்று எண்ணியபடி அவனே புன்னகைத்தபடி அர்ஜுனன் ஆலயத்துக்குள் சென்றான். மஞ்சளரிசியில் முடிவிலிச் சக்கரம் வரைந்து வழிபட்டுக் கொண்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த அருகநெறியினரின் அருகே சென்று அமர்ந்தான். உள்ளே ரிஷபரின் காலடியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை மலர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் அளித்தார் பூசகர். கண் மூடி கை கூப்பிய பின்னர் அதை தன் குழலில் சூடினான். இரு கைகளையும் மடியில் வைத்து விழிகளை ரிஷபரின் நின்ற சிலைக்கு கீழிருந்த பீடத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெருங்காளையின் கண்களை நோக்கி குவித்தான்.

அவ்வாலயத்தின் சுவரிலிருந்த கற்கள் அக்கணம் நீரூற்றில் இருந்து எடுக்கப்பட்டவை போல் குளிர்ந்திருந்தன. அங்கிருந்த அமைதியில் அக்குளுமை பரவி அதை எடை மிக்கதாக்கியது. உள்ளத்தில் எழுந்த அத்தனை சொற்களும் குளிர்ந்த ஈரம் கொண்டு மெல்ல சித்தத்தின் மேல் படிந்து அசைவிழந்தன. வெண்கல மணி அடித்த ஒலி கேட்டு அவன் விழித்துக் கொண்டான். எழுந்து நீள்மூச்சுடன் அவ்வாலயச் சூழலை நோக்கியபின் பிறிதொருமுறை தலைவணங்கி வெளிவந்தான். கண்ணில் எஞ்சிய ஐந்து சிலைகளும் ஐந்து கருவிழி மணிகளென தோன்றின. அவற்றில் ஆடும் காட்சித் துளிகள். சாலையை அடைந்தபின் திரும்பி அச்சிலைகளை நோக்கியபோது அவை ஐந்து கரியவிதைகளென தோன்றின.

அரண்மனை முற்றம் வரை அவன் விழிகளுக்குள் அச்சிலைகள் இருந்துகொண்டிருந்தன. அரண்மனை முற்றத்தை அடைந்து அங்கு நின்ற ஏவலனை நோக்கி தலைவணங்கி “நான் ரைவத குலத்து அரசரை காண விழைகிறேன். அயல் வணிகருக்கு காவலனாக வந்தவன்” என்றான். “என் பெயர் ஃபால்குனன். வடக்கே அஸ்தினபுரி என் ஊர். ஷத்ரிய குலத்தவன்.” “தங்கள் நெறி என்ன?” என்றான் ஏவலன். “இங்கு ஊனுணவு உண்பவர்களுக்கு மட்டும் சில இடங்களில் விலக்குள்ளது.” அர்ஜுனன் “நான் வைதிகநெறியினன்” என்றான். ஏவலன் “அந்த பெரிய வளைவுவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அரசவைக்கூடம் உள்ளது. அங்கு இப்போது அரசமன்று கூடியுள்ளது” என்றான். அர்ஜுனன் “அங்கு…” என்று தயங்க “தாங்கள் தங்களை அறிவித்துக்கொண்டு உள்ளே செல்லலாம். இங்கே எந்த விலக்குகளும் எவருக்குமில்லை” என்றான் ஏவலன்.

மென்புழுதியும் கூழாங்கற்களும் பரவிய விரிந்த முற்றத்தில் மரக்குறடு ஒலி எழுப்ப நடந்தான். காட்டு மரங்களை கற்பாறைகள் மீது நாட்டி அதன் மீது மரப்பலகை தளம் அமைத்து எழுப்பப்பட்டது அம்மாளிகை. அதன் நீள்சதுர முகப்பிற்கு அப்பால் மூன்று வாயில்கள் திறந்திருந்தன. முகப்பு வாயிலில் ரைவத குலத்தின் புதிய அடையாளமான அன்னப்பறவை பொறிக்கப்பட்ட செந்நிறத்திரை தொங்கி காற்றில் நெளிந்து கொண்டிருந்தது. மாளிகையின் கூம்பு வடிவக்கூரையின் உச்சியில் ஊழ்கத்தில் அமர்ந்த அருகரின் மரச்சிலை பொன் வண்ணம் பூசப்பட்டு காலைவெயிலில் மின்னியபடி மணிமுடி என அமர்ந்திருந்தது.

படிகளில் ஏறி மாளிகை முகப்பை அடைந்து ஒருகணம் தயங்கி நின்றான். உள்ளிருந்து வந்த ஏவலன் அவனைக்கண்டு தலைவணங்கி முகமன் கூறி அகன்றான். திரையை மெல்ல விலக்கி உள்ளே சென்று இடைநாழியை அடைந்தான். கையில் இன்நீருடன் அவனைக் கடந்து சென்ற நான்கு ஏவலர் முகமன் கூறி வாழ்த்தி புன்னகைத்துச் சென்றனர். எவரென எவ்விழியும் வினவவில்லை. விலக்கும் முகம் எதுவும் எதிர்வரவில்லை. அங்கு அயலவர் இயல்பாக வருவார்கள் போலும். அப்பால் எங்கோ யாழிசை கேட்டுக்கொண்டிருந்தது. அவன் அதை இலக்காக்கி நடந்தான். அரண்மனைக்கூடங்கள் அமைதியில் ஆழ்ந்து கிடந்தன. அரக்கு பூசப்பட்ட தூண்களில் அவன் பாவை வளைந்தும் நெகிழ்ந்தும் உடன் வந்தது.

உள்கூடத்தை அடைந்து அதற்கு அப்பால் சிறுவாயிலில் தொங்கிய வண்ணத் திரைச்சீலையைத் தொட்டு ஒரு கணம் தயங்கி “வணங்குகிறேன்” என்று கூறியபடி விலக்கி உள்ளே சென்றான். அங்கு தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரி மீது கால் மடித்து அமர்ந்திருந்தார் ரைவத குலத்து அரசரான பிங்கலர். தலையில் அணிந்திருந்த கொடித்தளிர் வடிவமான மெல்லிய பொன்முடிதான் அவரை அரசரென காட்டியது. அவருக்கு முன்னால் நான்கு அயல்நாட்டுச் சூதர்கள் அமர்ந்து மகரயாழை குறுமுழவுடன் இணைத்து இசைத்தனர். சூழ்ந்திருந்த அவையில் குடித்தலைவர்களும் அயல்வணிகர்களும் எளிய குடிகளும் கலந்திருந்தனர்.

காலடியோசை கேட்டு திரும்பிய பிங்கலர் புன்னகையுடன் அர்ஜுனனை நோக்கி தலைவணங்கி அமரும்படி கைகாட்டினார். முகமன் சொல்லி வாழ்த்த நாவெடுத்த அர்ஜுனன் அங்கிருந்த இசையமைதியை கலைக்க வேண்டியதில்லை என எண்ணி அவையின் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டான். இன்நீர் கொண்டு வந்த ஏவலன் அங்கிருந்த அவையின் ஓரத்திலிருந்து தொடங்கி மண்குவளைகளில் அதை அளித்தான். முதலில் அரசருக்கு அளிக்கும் முறைமையை அங்கு காணமுடியவில்லை. பிறருக்கு அளித்த இன்நீர்க் குவளைகளில் ஒன்றையே அரசருக்கும் கொடுத்தான். அவர் இசையில் ஆழ்ந்தபடி அதை அருந்தினார்.

தன் கையில் வந்த குவளையிலிருந்த இன்நீரை அருந்தியபடி அர்ஜுனன் அரசரை நோக்கினான். எளிய பருத்தி ஆடையை அணிந்து பிறிதொரு பருத்தி ஆடையை உடலுக்கு குறுக்காக சுற்றியிருந்தார். அரசணி என்பது காதில் அணிந்திருந்த மணிக்குண்டலங்கள் மட்டுமே. அங்கிருந்த எவரும் அரசருக்கு முன் தலை வணங்கி நிற்கவில்லை. அவர்கள் அமர்ந்திருந்த முறைமையிலேயே விடுதலை தெரிந்தது. ஒருவரை நோக்கி பிங்கலர் புன்னகைக்க அவர் கையை இயல்பாக அசைத்து அந்த இசைத்தாவலை தானும் விரும்பியதை அறிவித்தார்.

இசை முடிந்து யாழ் விம்மி அமைந்தது. இசைச்சூதர் வணங்கியதும் பிங்கலர் அவர்களை திரும்ப வணங்கினார். அருகே வந்த தாலமேந்திய ஏவலனிடமிருந்து சிறு பட்டுக்கிழியொன்றை எடுத்து பரிசிலாக சூதருக்கு வழங்கினார். அவர்கள் வந்து அரசரை வணங்கி அதைப் பெற்றுக்கொண்டனர். பிங்கலர் திரும்பி அர்ஜுனனை நோக்கி “தாங்கள் இளைய பாண்டவரென்று எண்ணுகிறேன்” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “இளைய யாதவர் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று செய்தி அறிவித்தார். தங்களுக்காக இந்நகர் காத்திருக்கிறது. இன்றிரவு இளையவர் இங்கு வரக்கூடுமென்று தெரிகிறது” என்றார்.

அர்ஜுனன் வியப்புடன் “தன்னை எவரென்று அறியாத மக்களுடன் தான் இங்கு தங்குவதாகவே என்னிடம் இளைய யாதவர் சொல்லியிருந்தார்” என்றான். “எவரென அறியத்தலைப்படாத மக்கள் என்று சொல்லவேண்டும்” என்றார் பிங்கலர். அவை புன்னகை செய்தது. “தாங்கள் இன்று இங்கு எங்கள் விருந்தினர் இல்லத்தில் தங்கி இளைப்பாறலாம். மாலையில் அவைக்கு வாருங்கள்” என்றார் பிங்கலர். “ஆவனசெய்யும்படி ஏவலருக்கு ஆணையிட்டிருக்கிறேன்.” அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்றான்.

இளைய யாதவரைப் பற்றிய உரையாடல் எழும் என அர்ஜுனன் எண்ணினான். ஆனால் அவர்கள் இசைபற்றி பேசத்தொடங்கினர். பிங்கலர் திரும்பி அர்ஜுனனிடம் “நாளை மறுநாள் இங்கு எங்கள் குலமூதாதை ரைவதகர் விண்ணேறிய நன்னாள். ரைவதமலை கொண்டாடும் ஏழு விழவுகளில் ஒன்று அது. அவ்விழவுக்கு யாதவகுடியினர் துவாரகையிலிருந்து திரண்டுவரும் வழக்கம் உண்டு. இளைய யாதவர் வருவதும் அதற்காகவே. தாங்களும் அவ்விழவில் பங்கெடுக்கவேண்டும்” என்றார். அர்ஜுனன் “ஆம், அது என் நல்லூழ்” என்றான்.

ஏவலன் அவனை விருந்தினர் இல்லம் நோக்கி கொண்டுசென்றான். அரண்மனையை ஒட்டியிருந்த அந்த மாளிகை மூங்கில்களாலும் ஈச்சமரத்தின் ஓலை முடைந்தமைத்த தட்டிகளாலும் கட்டப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட உட்சுவர்கள் கரிய வண்டின் உடல் போல் ஒளி கொண்டிருந்தன. இழுத்துக் கட்டப்பட்ட கொடிகளால் ஆன மஞ்சத்தில் மரவுரிப் படுக்கையில் படுத்து அர்ஜுனன் துயின்றான். புழுதிக் காற்று கூரையின் மேல் மழையென கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் மழை அவனை நனைக்க தொலைதூரத்துக் காடு ஒன்றுக்குள் சென்றுகொண்டிருந்தான். தன் மேல் விழுந்த மழைத்துளிகள் வெம்மையாக இருக்கக் கண்டு நிமிர்ந்து நோக்கினான். இலைகளென அவன் தலைக்கு மேல் நிறைந்து நின்றவை பசி கொண்ட ஓநாய்களின் சிவந்த நாக்குகள் என்று கண்டான். அவை சொட்டிய உமிழ் நீர் அவன் உடலை நனைத்து தரையில் வழிந்து கால்களை வழுக்கச்செய்தது.

மூன்றாம் முறை வழுக்கியபோது அவன் விழித்துக் கொண்டான். அறைக்கு வெளியே அவன் விழிப்பதைக் காத்து நின்ற ஏவலன் “தங்களை அவைக்கு அழைத்து வரும்படி அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “விருந்தினர் வந்துவிட்டார்களா?” என்று கேட்டான் அர்ஜுனன். “ஆம்” என்றான் ஏவலன். அர்ஜுனன் எழுந்து தன் ஆடையை சுற்றிக் கொண்டான். “அவர் இளைய யாதவரா?” என்றான். ஏவலன் “யாதவர் எனத்தெரிகிறது” என்றான். அதற்கு மேல் அவனிடம் கேட்டறிய ஏதுமில்லை என்பதால் அர்ஜுனன் அவன் செல்லலாம் என தலையசைத்தான். “நீராட நன்னீரும் புத்தாடையும் சித்தமாக உள்ளன” என்றான் அவன். “நன்று” என்றான் அர்ஜுனன்.

நீராடி அங்கு அளிக்கப்பட்ட எளிய மரவுரி ஆடை அணிந்து நீர் சொட்டும் நீள் குழலை தோளில் விரித்திட்டு அர்ஜுனன் அவை நோக்கி சென்றான். முகமன் சொல்லி வரவேற்கவும் வருகை அறிவித்து அவை புகுத்தவும் எவரும் இல்லாததனால் அவன் உடல் தத்தளித்தபடியே இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கணம் தயங்கி பின் நினைவுகூர்ந்து முன் நடந்தான். எதிரே வந்த ஏவலனிடம் “அரசர் எங்குள்ளார்?” என்றான். “உள்ளே தன் தனியறையில் இரு யாதவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்” என்றான் ஏவலன்.

அர்ஜுனனின் உள்ளத்தில் எழுந்த வியப்பு விழிகளில் வெளிப்படவில்லை. “இரு யாதவர்களா? எவர் அவர்?” என்றான். “இங்கு வருபவர்கள்தான். அவர்களில் ஒருவன் நன்கு குழலிசைப்பான்” என்றான். “ஆம்” என்றுரைத்து அர்ஜுனன் படிகளில் ஏறி மாடியின் சிறிய இடைநாழி வழியாக நடந்து அரசரின் தனியறைக்கு சென்றான். அங்கும் கதவுகள் இல்லை என்பது அத்தனை பார்த்தபின்னரும் அவனை வியப்பிலாழ்த்தியது. வெளியே நின்று தன் பாதக்குறடுகளை அசைத்து ஒலி எழுப்பினான். “வருக” என்றார் அரசர்.

உள்ளே நுழைந்து அரசருக்கு தலைவணங்கியபின் அவர் எதிரே பீடங்களில் அமர்ந்திருந்த இளைய யாதவரையும் அருகே அமர்ந்திருந்த சாத்யகியையும் நோக்கி புன்னகையுடன் தலை வணங்கினான். இளைய யாதவர் எப்போதும்போல ஒரு பெரும் நகையாட்டு சற்றுமுன் முடிந்ததுபோல புன்னகை விழிகளில் எஞ்சியிருக்க “நீண்ட தாடி உங்களை துறவி என காட்டுகிறது பார்த்தரே” என்றார். “பெண்கள் விரும்பும் தாடி இது.”

அர்ஜுனன் புன்னகைத்தான். இளைய யாதவர் கண்களில் சிரிப்புடன் “ஒவ்வொரு ஊரையும் உறவையும் துறந்து முன் செல்வதால் இது பொருத்தமுடையதுதான்” என்றார். “இன்னும் சில நாளைக்கு இத்தோற்றம் இருக்கட்டும்.” அர்ஜுனன் அருகே அமர்ந்துகொண்டான். “நான் இங்கு முன்னரே வந்தது என் உடன்பிறந்தவராகிய அரிஷ்டநேமி அவர்களை பார்ப்பதற்காக” என்றார் இளைய யாதவர். “இங்குதான் அருகர்களுடன் குகை ஒன்றில் நோன்பாளராக அவர் தங்கியிருக்கிறார். அவரை என்னுடன் அழைத்துச்செல்லவே வந்தேன்.”

அர்ஜுனன் வியப்புடன் நோக்க “அறியப்படாத ஓர் உறவு அது. தென்மதுராபுரி என அழைக்கப்பட்ட யாதவப்பெருநகரை ஆண்ட சத்வத குலத்து கிரிராஜரின் எட்டாவது மைந்தர் வீரசேனரில் இருந்து அந்தக குலம் உருவானதை அறிந்திருப்பீர். என் தந்தைவழி முப்பாட்டனார் விருஷ்ணியின் உடன்பிறந்தவராகிய சக்ரசேனர் அந்தகக்குடியில் மணமுடித்து அந்தகவிருஷ்ணிகுலம் என்னும் குலத்தை அமைத்தார். அவரது கொடிவழியில் பிறந்தவர் அஸ்வசேனர். அவரது மைந்தர் சமுத்ரவிஜயர் சௌரபுரம் என அழைக்கப்பட்ட தட்சிணமதுராபுரியை ஆண்டார். அவருக்கும் யாதவ அரசியான சிவைதேவிக்கும் பிறந்த இறுதி மைந்தர்தான் அரிஷ்டநேமி. கொடிவழியில் சமுத்ரவிஜயர் என் சிறிய தந்தை. இவர் எனக்கும் என் தமையன் பலராமருக்கும் மூத்தவர்.”

“நான் என் தமையனை சந்தித்து ஓராண்டு ஆகிறது. சென்றமுறை ரைவதகரின் விண்ணேற்ற விழவு நிகழ்ந்தபோது அவரும் நானும் இங்கு வந்தோம். நான் துவாரகைக்கு திரும்பியபோது அவர் வரமறுத்து இங்கேயே தங்கிவிட்டார். ஓரிரு மாதங்களில் திரும்பி வருவார் என நான் எண்ணினேன். வராததனால் என் தந்தையும் தமையனும் கவலைகொண்டிருக்கிறார்கள். அவரை எவ்வண்ணமேனும் அழைத்துவரவேண்டும் என்பது என் தந்தையின் ஆணை” என்றார் இளைய யாதவர். “மறைந்த உக்ரசேனரின் ஏழாவது அரசியின் மகளான ராஜமதியை இவருக்கு மணம்செய்விக்கவேண்டுமென அரசர் எண்ணுகிறார். கம்சரின் கொலையால் உளப்பிரிவுகொண்டுள்ள உக்ரசேனரின் உறவினரை யாதவகுடிகளில் இணைத்துக்கொள்ள இம்மணம் இன்றியமையாதது என நானும் எண்ணுகிறேன்.”

அர்ஜுனன் அரசரை நோக்கியபின் “நோன்பு கொள்பவரை மீட்பது முறையல்ல என்பார்கள்” என்றான். “ஆம், ஆனால் தந்தையின் ஆணை இது. அவரது சகோதரரான சமுத்ரவிஜயர் நேரில் மதுராவுக்கு வந்து கண்ணீருடன் மன்றாடியிருக்கிறார். இவருக்காக குடிகளும் உற்றாரும் தந்தையும் தாயும் அங்கே காத்திருக்கின்றனர். மூதாதையருக்கான நீர்க்கடன்களை கழிக்கும் பொறுப்புள்ளவன் துறவுபூணக்கூடாது என நெறிநூல்கள் சொல்கின்றன. ஆகவே அவரை மீட்டுக்கொண்டுசெல்வதில் பிழையில்லை” என்றார் இளைய யாதவர். “நமக்கு வேறுவழியில்லை. நான் தந்தைக்கு வாக்களித்த பின்னரே துவாரகையிலிருந்து வந்திருக்கிறேன்.”

அர்ஜுனன் திரும்பி பிங்கலரை நோக்கினான். “அதைச் செய்வதில் பிழையில்லை. அவரது துறவு உண்மையானதா என தெய்வங்கள் பரிசீலித்தறிவதற்கான நிகழ்வாகவும் இது அமையலாமே” என்று அவர் சொன்னார். அர்ஜுனன் “ஆம், அவ்வண்ணமும் கொள்ளலாம்” என்றான். “முறைமைச்சொல் சொல்லமுடியாத இடங்களில் அரசகுடியினர் தடுமாறத்தொடங்கிவிடுகின்றனர்” என்று இளைய யாதவர் சிரித்தார். அர்ஜுனன் புன்னகைத்தான். “குலமுறைப்படி அரிஷ்டநேமி எனக்கு தமையனின் இடம் உள்ளவர். துவாரகையிலும் மதுராவிலும் மதுவனத்திலும் அவரை தந்தையென்றே நான் நடத்துவது வழக்கம். சௌராஷ்டிரத்தின் எல்லையைக் கடந்ததும் தோள்தழுவும் தோழர்களாகிவிடுவோம்” என்றார் இளைய யாதவர். “நான் துவாரகையில் அவரைப் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அனைத்து வகையிலும் அவர் யாதவர்களிடமிருந்து வேறுபட்டவர். யாதவர்கள் எவருக்கும் இல்லாத உயரமான உடல் கொண்டவர். என் தமையன் பலராமரே அவரை தலைதூக்கி நோக்கித்தான் பேசவேண்டும். அவரை ஒரே கையால் தூக்கி தோளில் ஏற்றிக்கொள்ளும் அளவுக்கு புயவல்லமை கொண்டவர். வெறும் கைகளால் பலகைகளை அறைந்து உடைப்பார். தலையால் முட்டி பாறைகளை பிளப்பார். களிற்றை கொம்புகளைப்பற்றி அசையாமல் நிறுத்த அவரால் முடியும். இளமையில் அவரை மண்ணுக்கு வந்த அரக்கன் என்றே அவர் குடியினர் எண்ணினர். ஆனால் நிமித்திகர் அவர் பிறந்தநாள் பெருமையுடையது என்றனர். சிரவணமாதம் சுக்லபஞ்சமி. அவர் யாதவர்குலம் ஒளிகொள்ளப்பிறந்த முழுநிலவு என்று கவிஞர் பாடினர்.”

“இளமையில் அவரை படைக்கலப்பயிற்சிக்கு அனுப்பினார்கள். முதல்நாள் ஆசிரியரை வணங்கி மலர்கொண்டு பிற மாணவர்களுடன் நிரையாகச் சென்று படைக்கலமேடை முன் நின்றார். அங்கு வில்லும் வேலும் வாளும் கதையும் வைக்கப்பட்டிருந்தன. இளையோர் அறியாது எடுக்கும் படைக்கலம் எது என்று பார்க்கும் சடங்கு அது. அவர் கதாயுதத்தை எடுப்பார் என அனைவரும் எண்ணினர். அவர் அங்கிருந்த வெண்மலர் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார். திகைத்த ஆசிரியர் பலவகையிலும் அவரிடம் படைக்கலம் ஒன்றை எடுக்கும்படி சொன்னார். உறுதியாக அவர் மறுத்துவிட்டார். எப்போதும் எந்தப் படைக்கலத்தையும் அவர் தொட்டதில்லை” இளைய யாதவர் சொன்னார்.

“சொல்முளைத்ததுமே தமையனார் யாதவபுரியிலிருந்து நீங்கிவிட்டார். அவரை அறநூல்களே கவர்ந்தன. தட்சிணமதுராவிலும் பின்பு மதுராவிலும் குருகுலங்களில் பயின்றபின் மேலும் கல்வி கற்கும்பொருட்டு வடதிசைக்கு சென்றார். அங்கு சௌனக குருமரபில் இணைந்து வேதங்களை கற்றார். சாந்தோக்ய குருமரபைச் சேர்ந்த கோர அங்கிரசரிடம் வேதமுடிவையும் கற்றறிந்தார். ரிஷிகேசத்தில் அமைந்த வசிஷ்ட குருகுலத்தில் நீதிநூல்களையும் யோகநூல்களையும் கற்றார். யாதவகுடியில் அவரே அனைத்தும் கற்ற அறிஞர் என்கிறார்கள்.”

அர்ஜுனன் இனிய மெல்லிய புன்னகையுடன் “கற்று நிறைந்து திரும்பிய எவரையும் நான் இதுவரை கண்டதில்லை” என்றான். “ஆம், கற்று எவரும் நிறைவதில்லை. எதுவரை கற்பது இயல்வது என்று அறிந்து மீள்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “கற்றதன் பயன் அவ்வண்ணம் வாழ்வது. எங்கோ ஓரிடத்தில் கல்வியை நிறுத்திவிடாவிட்டால் வாழ்வதற்கு காலம் இருக்காது அல்லவா?” என்றான் அர்ஜுனன். “வாழும்போதே கற்பவற்றை என்ன செய்வது?” என்றார் பிங்கலர். இளைய யாதவர் “கற்றவற்றின்படி நிற்கும் மாணவர் எவரும் இதுவரை மண்ணில் பிறக்கவில்லை. கற்பது அறிவு. வாழ்வது திருஷ்ணை” என்றார்.

“ஒருவர் கூடவா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றார் இளைய யாதவர். “அயோத்தியை ஆண்ட ரகுகுலத்து ராமன் கூடவா?” என்றான் அர்ஜுனன். “அவனை நான் அறிவேன். நானன்றி அவனை முழுதுணர்ந்தவர்கள் இல்லை” என்றார் இளைய யாதவர். அச்சொற்களின் துணையென அவன் கண்களில் எழுந்த ஒளியைக் கண்டு குழம்பிவிட்டு பிங்கலரை நோக்கிவிட்டு அர்ஜுனன் ஏதோ சொல்ல வாயெடுத்து சொல் உருவாகாமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டான்.

பின்பு அந்த உளநிலையை மாற்ற விழைந்து “இங்கு தாங்கள் அடிக்கடி தங்குவது உண்டென்று அறிந்திருக்கிறேன். இது மலைக்குடிகள் வாழும் மண் என்று சொன்னீர்கள். இங்கு எவருக்கும் உங்களை தெரியாது என்றீர்கள். ரிஷபரின் சொல் நின்று வாழும் நிலம் என்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான். “நான் பிறிதென்ன சொன்னேன்? இங்கு மலைக்குடிகள் வாழ்கிறார்கள், அவர்கள் நான் யாரென்று அறியாதவர்கள். இவ்வரண்மனையிலும் சிலரே என் குலத்தையேனும் அறிந்தவர்கள்” என்றார் இளைய யாதவர். “முடிவற்ற பெருங்காவியம் ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன். அதன் ஒரு ஏட்டிலிருந்து பிறிதொன்றுக்கு தப்புவதே அங்கு எனக்கு இயல்வது. இங்கு வருகையில் காவியத்தின் எல்லைகளைக் கடந்து எளிய மானுடனாகிறேன். பார்த்தரே, மேலும் கீழும் எவரும் இன்றி இருக்கையிலேயே தான் யாரென மானுடன் அறிகிறான். இப்புவியில் அதற்கான இடங்கள் மிக அரியவை.”

“தாங்கள் இங்கிருப்பீர்கள் என்று எப்படி உணர்ந்தேன் என்றே தெரியவில்லை. ஆனால் தெளிவாக அதை கண்டேன்” என்றான் அர்ஜுனன். “உண்மையில் இங்கு வரும் திட்டம் ஏதும் இருக்கவில்லை” என்றார் இளைய யாதவர். “மதுவனத்தில் தங்கையின் மணத்தன்னேற்புக்கான ஒருக்கங்கள் நிகழ்கின்றன. அங்கு நானிருந்தாக வேண்டும். ஆனால் தந்தையின் ஆணை நேற்று முந்நாள்தான் எனக்கு வந்தது. ஆனால் கிளம்பும்போதே நீர் இங்கு வருவதை என் சித்தம் அறிந்தது” என்றார். பிங்கலர் உரக்க நகைத்து “நீங்கள் இருவரும் பாம்பின் வாலும் தலையும் போல என்று யாதவர் சொல்கிறார்கள். தலை எண்ணுவது வாலில் அசைவாக வெளிப்படுகிறது” என்றார். அவர் அருகே இருந்த அமைச்சர் “ஆம், ஆனால் வாலும் தலையும் பிரித்தறியமுடியாத விரியன் பாம்பு” என்றார்.