காண்டீபம் - 46
பகுதி ஐந்து : தேரோட்டி – 11
கஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை அள்ளி அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோற்கூடாரங்களின் மீது பொழிந்தது. அதற்குள் மரவுரி போர்த்தி உடல் ஒடுக்கி படுத்திருந்தவர்கள் அவ்வொலியைக் கேட்டு துயிலுக்குள் குளிர்மழையில் நனைந்தனர்.
பொதிவண்டிகளை அவிழ்த்து அத்திரிகளையும் காளைகளையும் அங்கு அறையப்பட்டிருந்த தறிகளில் கட்டிக் கொண்டிருந்த வணிகர்கள் எழுப்பும் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. பொதிகளை விடிந்தபிறகே எண்ணி இறக்குவது அங்குள்ள வழக்கமென்பதால் ஓரிரு காவலர்களை அங்கு நிறுத்திவிட்டு வணிகர்கள் கூடாரங்களுக்குள் எங்கேனும் படுத்துக்கொள்ள இடமிருக்குமா என்று தேடிச் சென்றனர். சிலர் அணைந்துவிட்டிருந்த கணப்பை ஊதி விறகு இட்டு அனலெழுப்பினர்.
சப்தமர் “சற்று நேரம் துயிலுங்கள் வில்லவரே. விடிந்தபின் இங்கு துயில முடியாது. கஜ்ஜயந்தபுரியின் முகப்பு இந்த அங்காடி. பகல் முழுக்க இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். கோடை காலமாதலால் வெளிச்சமும் புழுதியும் நிறைந்திருக்கும். பகலில் துயில்வது இங்கு அரிது” என்றார். அர்ஜுனன் “துயில் வரும்போது படுத்துக் கொள்கிறேன்” என்றபின் நடந்து சென்று கஜ்ஜயந்தபுரியின் நெடுங்குன்றை நோக்கி நின்றான். தொலைதூரத்தில் எல்லா குன்றுகளும் வான் திரையில் எழுதப்பட்டவை போல செங்குத்தாக நிற்பதாக தோன்றும். அணுகும்போதுதான் அவற்றின் சரிவு தெரியும். ரைவதமலை அணுகியபின்னரும் அவ்வண்ணமே வானில் எழுந்து நின்றது.
மலைப்பாறைகளினூடாக வளைந்து சென்ற பாதையில் கற்தூண்கள் நிறைந்த எண்ணெய் விளக்குகளின் சுடர்கள் விண்ணிலிருந்து விண்மீன் சரமொன்று சரிந்தது போல் தெரிந்தன. மேலே மாடங்களில் எரிந்த விளக்குகள் விண்மீன்களுடன் கலந்துவிட்டிருந்தன. முற்றான அமைதி அங்கே நிலவியது. முரசுகள் கொம்புகள் விலங்குகளின் ஓசைகள் எவையும் எழவில்லை. அங்கு மானுடர் வாழ்வது போலவே தோன்றவில்லை.
அவனருகே வந்து நின்ற சப்தமர் “ஏழு முறை இங்கு வந்துள்ளேன் வில்லவரே. ஒவ்வொரு முறையும் இதை முதலில் பார்க்கையில் விந்தையால் சொல்லிழந்துவிடுகிறேன்” என்றார். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “இப்பெரு நகரம் முற்றிலும் காவலற்றது” என்றார் சப்தமர். அர்ஜுனன் திகைப்புடன் “முற்றிலுமா?” என்றான். “ஆம், ரைவத குலத்தின் எழுபத்தியெட்டாவது அரசர் பிங்கலர் இங்கு ஆள்கிறார். அவருக்கு மெய்க்காவலர்கள் இல்லை. அணுக்கர்களாக நூற்றியெட்டு சேவகர்கள் உள்ளனர். எவரிடமும் படைக்கலங்கள் இருப்பதில்லை. அரசர் தன் வாழ்நாளில் எப்போதும் படைக்கலங்களை தொட்டதில்லை.”
அர்ஜுனன் “நான் கேட்டதேயில்லை” என்றான். “நீங்களே நோக்கமுடியும். இந்நகரைச் சுற்றி கோட்டைகள் இல்லை. காவல்மாடங்களோ கண்காணிப்பு அமைப்புகளோ ஏதுமில்லை. மேலே அரண்மனைகளின் வாயில்கள் அனைத்தும் மரவுரித் திரைச்சீலைகளால் ஆனவை. கருவூலம் அற்ற மாநகர் இது என்று சூதர்கள் பாடுகிறார்கள். ஏழு நாட்களுக்குத் தேவையான உணவும் நீரும் மட்டுமே இப்பெருநகரில் சேர்த்து வைக்கப்படும்.” அர்ஜுனன் “மழைபொய்த்தால்?” என்றான். “மானுடர் வாழவேண்டும் என மழை விரும்பவில்லை என்று பொருள். மழையுடன் போரிடலாகாது என்பதே இவர்களின் கொள்கை.”
அர்ஜுனன் முற்றிலும் நம்பமுடியாத புராணநூல் ஒன்றை படிக்கக் கேட்பது போல உணர்ந்தான். “பாரதவர்ஷம் எங்கும் குருதி விழுந்து கொண்டிருக்கிறது. எரிபரந்தெடுத்தலின் புகை எழாது ஒரு தலைமுறையை எந்நகரமும் கடப்பதில்லை என்கிறார்கள். இங்கு இவ்வண்ணம் ஒரு நகரம் எழுந்தது பெருவிந்தை!” என்றான். “அது ஒருபக்க உண்மையே” என்றார் சப்தமர். “மறுபுறம் ஒன்றுண்டு. என் முதுமூதாதையர் காலத்தில் பாரதவர்ஷத்தின் பெருநிலமெங்கும் பல்லாயிரம் பழங்குடியினர் ஒவ்வொரு கணமும் பிற குடியினரை கொன்றபடி இருந்தனர். அணுக முடியாத மலை மடிப்புகளும் தொலைதூரத் தாழ்வரைகளும் அயலவர் குழுமிய கடற்கரையுமாக சிதறிக்கிடந்தது ஜம்புத்வீபம். இன்று வணிகர் செல்லாத ஊர்கள் மிகச்சிலவே.”
“எவ்வணிகரும் பெரும் காவல் படைகளை கொண்டு செல்வதில்லை. படைக்கலமேந்தி எம்மக்களையும் அணுகுவதுமில்லை. மிகச்சில ஊர்களைத் தவிர்த்தால் கொள்ளையர் தொல்லை மிக அரிது. கொல்லாமை எனும் எண்ணம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வேர்ப்பரவலாக இப்பெரு நிலமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் விதை ஊன்றப்பட்டது இங்குதான்” என்றார் சப்தமர். “அருகர்களின் சொல் பேராலமரமாக தலைக்கு மேல் எழுந்து கிளை விரித்து நிழல்பரப்புகிறது இளையவரே. இப்பெரு நிலத்தில் குடிப்போரால் குலங்கள் அமைக்கப்பட்டன. பெரும்போர்களால் நாடுகள் அமைக்கப்பட்டன. இன்று போரின்மையால் இந்த விரிநிலம் ஒன்றாக்கப்படுகின்றது.”
“உடைவாளும் மணிமுடியும் உடலெங்கும் போர்க்கவசமும் அணிந்த மன்னர் ஒருபக்கம். புழுதி ஒன்றையே ஆடையாக அணிந்த எங்கள் அருகர்கள் இன்னொரு பக்கம். துலாவில் எங்கள் தட்டு எடை கொண்டுள்ளது. அது வெல்வதை ஒவ்வொரு ஊரிலும் பார்க்கிறேன். நூறாயிரம் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளன இக்குலங்கள். அனைவருக்கும் விளங்கும் ஒரு மொழி உள்ளது. கருணை எனும் மொழி. பசித்தவனுக்கு உணவாக, பிணியாளனுக்கு மருந்தாக, அஞ்சுபவனுக்கு அடைக்கலமாக, தனித்தவனுக்கு துணையாக, அறியாதவனுக்கு கல்வியாக அது அவனை சென்றணைகிறது. அந்த மொழி புரியாத மானுடர் எவருமில்லை.”
“மத்தகம் தாழ்த்தும் மதகரிகள் வணங்கும் மொழி அது. அம்மொழியால் ஒவ்வொரு கணமும் முடிச்சிடப்பட்டு கட்டி எழுப்பப்படுகிறது பாரதவர்ஷம் எனும் இப்பெருங்கம்பளம்” என்றார் சப்தமர். “வாள்கள் பொருளிழந்து போகும் ஒரு காலம் வரும். குருதி என்பது வியர்வையென்றும் கருணையின் விழிநீர் என்றும் மட்டுமே வெளிப்படும் ஒரு காலம். அருகரின் சொற்கள் நூறுமேனி விளையும் விதைகள். அவை சென்று தொட்ட மண்ணில் எல்லாம் அருகர்களும் படிவர்களும் முளைத்தெழுந்து கொண்டிருக்கிறார்கள்.”
அர்ஜுனன் “நன்று நிகழ்க!” என்றான். “துயில்கொள்ளவில்லையா?” என்றார் சப்தமர். “என் விழிகள் தாழ்கின்றன.” அர்ஜுனன் “நான் நாளில் இருநாழிகைநேரம் மட்டுமே துயில்வது வழக்கம்” என்றான். சப்தமர் கூடாரம் ஒன்றுக்குள் சென்று மறைந்தார். அவரது குறடுகள் மணலில் பதியும் ஒலி கேட்டது. கூடாரத்திற்குள் அவர் படுத்துக்கொள்ளும் முனகல். அருகநாமத்தைச் சொன்னபடி அவர் உடல் நீட்டிக்கொள்ளும் ஒலி.
பாலையிலிருந்து வந்த காற்றை உடலால் அறிந்தபடி அர்ஜுனன் அசையாமல் நின்றிருந்தான். பாலைக்காற்றிலிருந்த மணமாறுபாடுகளை மெல்ல உணரத்தொடங்கினான். தென்மேற்குக்காற்றில் மெல்லிய நீராவியும் நீர்மணமும் கலந்திருந்தது. வடகிழக்குக் காற்றில் இளங்குளிரும் தழைமணமும். தெற்குக்காற்று எடைமிக்கதாக இருந்தது. வடக்கிலிருந்து காற்று வரவில்லை. காற்றலைகள் நின்றபோது அந்த இடைவெளியில் குளிரின் அழுத்தமான அமைதியாக வடக்கை உணரமுடிந்தது.
விழியில்லாதபோது ஓசைகளாக உலகு தன்னை விரித்துக்காட்டுகிறது. ஓசைகளுமில்லாதபோது மணங்கள். எவற்றிலிருந்தும் எழும் புவி ஒன்றே. மானுட உள்ளம் மண்ணை எப்போதும் அறிந்தபடியேதான் இருக்கிறது. மண்ணே காற்றும் நீரும் கனலும் வானுமாக உள்ளது. அல்லது அவை அனைத்தும் ஒன்றே. காற்றிலேறி அலைகிறது மண். என்னைச்சூழ்ந்து எழும் காற்றின் பாடல். தனிமையில் மட்டுமே பொருள்கொண்டதாக ஆகிறது அது. தனியர்களை மட்டும் தொட்டுத்தழுவும் காற்றுகள் இவ்வெளியில் உறைந்துள்ளன.
தனிமை. தனிமை தாளாமல் இங்கு வந்தேன். இங்கு நான் அவனை தோள்தழுவிக்கொள்ளமுடியும். என் தனிமையை கலைப்பவன் அவன் ஒருவனே. ஆனால் இன்று இங்கே நின்றிருக்கையில் என் தனிமையின் தேன்துளியை தக்கவைக்கவே என் அகம் விழைகிறது. அவனை நான் ஏன் அத்தனை நாடுகிறேன்? பசித்தவன் அன்னையை என, நோயுற்றவன் மருத்துவனை என, அஞ்சுபவன் காவலனை என, இருளில் அலைபவன் சுடரை என. ஆனால் என் ஆணவம் அவனைவிட்டு விலகியோடச் சொல்கிறது. ஓடி ஓடி அவனிடம் மீள்கிறேன்.
பூனை எலியை கால் உடைத்து தன் முன் போட்டுக்கொண்டு நகைக்கும் விழிகளுடன் அமர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது. ஓடு என்கிறது. இழுத்து இழுத்து எல்லைகடக்கையில் மெல்லத் தட்டி உள்ளே வீழ்த்துகிறது. அதன் நாக்கில் சுவைநீர் ஊறுகிறது. உண்பதற்கு முந்தைய ஆடலில் அது அச்சுவையை கொண்டாடுகிறது. மூச்சு சீற நாபறக்க இரையை தழுவி அணைக்கிறது மலைப்பாம்பு. அதற்கிணையான பெருங்காதல் பிறிதில்லை.
வானம் செம்மைகொள்ளத் தொடங்கியது. பறவையொலிகள் எழுந்து வானை நிறைத்தன. ஆனால் முதற்கதிர் ரைவத மலையின் மறுபக்கம் எழுவதுவரை நகரம் உறங்கியே கிடந்தது. ஒளி விரிந்ததும் கஜ்ஜயந்தபுரியின் தாழ்வான கூம்பு முகடுகள் தெளிந்து எழுந்தன. கூர்தீட்டிய் ஆவநாழிக்குள் இருக்கும் அம்பு முனைகள் என்று அர்ஜுனன் எண்ணினான். மறுகணமே அவ்வெண்ணத்தின் பொருத்தமின்மையை உணர்ந்து புன்னகைத்தான். ஒளி எழுந்தோறும் குன்று தெளிவடைந்தபடியே வந்தது. உருண்டு நின்ற பெரும்பாறைகளை ஒட்டி மலைக் கற்களை அடுக்கி மூங்கில் படல்களாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட சிறிய வீடுகளால் ஆனதாக இருந்தது அந்நகர். காவல் மாடங்களோ முரசு மேடைகளோ தென்படவில்லை. நகரைச்சுற்றி எளிய முள்வேலி கூட இருக்கவில்லை.
புலரி எழுவதற்கு முன்னரே அங்காடியின் கூடாரங்களிலிருந்து எழுந்து அருகே இருந்த சுனைக்கு காலைக்கடன் கழிக்கச் சென்ற மக்கள் பேசியபடி வந்து குழுமும் ஒலி அவனை வந்து சூழ்ந்து நிறைத்தது. அத்திரிகளும் காளைகளும் துயில் கலைந்து கழுத்துகளை திருப்பி கயிறை இழுத்து குரல் கொடுத்தன. புதுச்சாணி மணம் அவற்றின் சிறுநீர் வாடையுடன் கலந்து எழுந்தது. தொலைவில் இருந்த குறும்புதர்க்காட்டுக்குள் இருந்து எழுந்த சிறு பறவைகள் வானில் வட்டமடித்து சரிந்திறங்கி மணலில் பதிந்து சிற்றடி எடுத்து வைத்து கூர் அலகுகளால் மண்ணைக் கொத்தி காலடி ஓசைக்கு எழுந்து சிறகடித்து அப்பால் எழுந்தமர்ந்தன. மென் புழுதி படிந்த தரையில் நூற்றுக்கணக்கான சிறு குழிகள் விழுந்து கண்காணா காற்றில் மெல்ல சுழன்று கொண்டிருந்தன. அவற்றுக்குள் வாழும் சிற்றுயிர்களை அப்பறவைகள் கொத்தி உண்டு கூவிப்பேசியபடி எழுந்தன.
அங்காடிகளில் இருந்து பாற்குடங்களும் நெய்க்குடங்களும் காய்கறிகளும் கனிகளும் கிழங்குகளும் சுமந்த சிறுவணிகர்கள் கஜ்ஜயந்தபுரியின் கற்படிகளில் ஏறிச்சென்றனர். உடல் அலுப்பை வெல்லும்பொருட்டு அவர்கள் பாடிச்சென்ற குஜ்ஜர்மொழிப் பாடல்களின் சொற்கள் முயங்கி வெறும் ரீங்காரமென ஆகி பாறைகளில் முட்டி பெருகி வந்து கொண்டிருந்தன. இளம் வணிகனாகிய சபரன் அவனிடம் வந்து “தாங்கள் உடல் தூய்மை செய்து சித்தமாகவில்லையா வில்லவரே?” என்றான்.
“ஆம்” என்றான் அர்ஜுனன். “சப்தமர் எங்கே?” “அவர் காலையிலேயே சித்தமாகி கடைக்குச் சென்றுவிட்டார்” என்றான் அவன். அர்ஜுனன் புன்னகை செய்தான் “உங்கள் புன்னகை புரிகிறது வில்லவரே. அவர் முதலும் முடிவுமாக வணிகர். அருகநெறியை கற்றறிந்திருக்கிறார். செல்லுமிடமெங்கும் அதைப்பரப்ப முயல்கிறார். நெறிகளில் வணிகர்களுக்கு பொருள்செய்ய உதவுவது அருகமே என அவர் அறிந்திருக்கிறார்.”
அர்ஜுனன் சிரித்து “ஆம், வணிகர்கள் என்றும் போருக்கு எதிரானவர்களே” என்றான். “இந்நகரைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க வணிகர்கள் உருவாக்கியிருக்கும் கதைகளை இவர்கள் அறிந்தால் திகைத்துப்போவார்கள். அதன்பின் இம்மண்ணில் கால்வைக்கக் கூசி திசையாடையர்களைப்போல உறிகட்டி அமரத்தொடங்கிவிடுவார்கள்” என்றான் சபரன். “நீரும் வணிகர் அல்லவா?” என்றான் அர்ஜுனன்.
“ஆம், ஆனால் என் கையில் பொருள் இல்லை. ஆகவே கொடைசெய்வதில்லை. ஆகையால் கொடையளிக்கும் ஆணவத்தை பெருங்கருணை என விளக்கும் தத்துவங்கள் எனக்குத் தேவையாகவில்லை” என்றபின் திரும்பி செல்லப்போன சபரன் நின்று புன்னகையுடன் “இன்னும் சற்றுநாளில் என் மடிச்சீலையும் நிறைந்து குலுங்கும். அப்போது நானும் ஐந்தவித்து எட்டைத் துறந்து முழுவெறுமையில் நிற்பதன் மாண்பு குறித்து சொல்விளக்கிப் பேசுவேன்” என்றான்.
“இன்று நான் இக்குன்றின் மேல் சென்று இந்நகரை காண விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். இளைஞன் “இந்நகரில் ஐந்து அருகர்களின் ஆலயம் உள்ளது. அரண்மனை முகப்பில் ரைவதரின் கல் ஆலயமும் உள்ளது. நகருக்கு நீரளிக்கும் பன்னிரு ஊற்றுகள் அங்குள்ள மூன்று சுனைகளில் தேக்கப்படுகின்றன. நகர் நடுவே உள்ள அரசரின் அரண்மனை தொன்மையானது. பிறிதெதுவும் இங்கு நோக்குவதற்கில்லை” என்றான்.
அவனுடன் சென்று நீராடி குப்பைமேனிக் கீரைசேர்த்து சமைத்த வஜ்ரதானிய கஞ்சியை காலையுணவாக அருந்தி தன் படைக்கலங்களை அங்கிருந்த முள் மரமொன்றில் மாட்டியபின் அர்ஜுனன் ரைவத மலைமேல் ஏறி சென்றான். உருளைக்கற்களை ஒழுங்கின்றி அடுக்கிக் கட்டப்பட்ட தொன்மையான படிக்கட்டுகள் அவை. பெரிய பாறைகளின் இடைவெளிகள் வழியாக வளைந்து மேலே சென்றன. சற்று நேரம் நடந்த பின்னர்தான் அவை மேலிருந்து நெடுங்காலமாக வழிந்த இயற்கையான மழைநீர் ஓடையால் உருவாக்கப்பட்ட உருளைப்பாறைகளின் தடம் என அவன் அறிந்தான்.
மழை உருட்டிக்கொண்டு வந்து அடுக்கிய உருளைப் பாறைகளை நன்கு இறுக்கி அமைத்து படிக்கட்டுகள் போல் ஆக்கியிருந்தார்கள். மேலும் அவ்வழியாக நீர்வராமல் பிறிதொரு வழியை அமைத்து ஓடையாக்கியிருந்தனர். நீர் அமைத்த படிக்கட்டென்பதால் மானுட உழைப்பு தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால் பாறைகள் நன்கு தேய்ந்து வழுக்கும்படியாக இருந்தன. பன்றிமுதுகுகள் என ஆமையோடுகள் என சுரைக்காய்குடுக்கைகள் என தெரிந்த பாறைகள் மேல் தாவி அவன் மேலே சென்றான். அங்கு ஏறிச்சென்ற சிறு வணிகரும் சிற்றாயர் குடியினரும் அவ்வழி கால்களுக்கு நன்கு பழகியவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் குனிந்து நோக்கவே இல்லை. மூச்சிரைப்புடன் சேர்ந்து ஒலித்த குரலில் நிலைக்காது பேசியபடி மேலே சென்றனர்.
பெரிதும் சிறிதுமென உருளைப்பாறைகளை சிட்டுக்குருவிபோல தாவிக் கடந்து செல்லும்போது அர்ஜுனன் செம்மொழியும் தொல்மொழியும் கலந்த சொற்கள் சேர்த்து அமைக்கப்பட்ட சொற்றொடர்களால் ஆன நூலொன்றில் விழியோட்டிச் செல்வது போல் உணர்ந்தான். மணிமிடைபவள மொழியை வாசிக்கையில் புதிய சொற்றொடர் பழைய சொற்றொடரை முற்றிலும் மறக்கச்செய்துவிடும். அத்தனை சொற்றொடர்களையும் கடந்துவந்துவிட்டோம் என்னும் தன்மகிழ்வு மட்டிலுமே எஞ்சியிருக்கும்.
பஞ்சுத்துகள் பறந்துசெல்வதுபோல் பாறைகள் மேல் கால்கள் பதிகின்றனவா என்னும்படி சென்றுகொண்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த அருகநெறிப் படிவர் ஒருவரைக் கடந்து செல்லும்போது “அடிபணிகிறேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “தாங்கள் செல்லும் விரைவு பொருளற்றது வீரரே. நெடுநேரம் அப்படி தாவிச்செல்ல முடியாது. பாதையை கால்களுக்கு விட்டுக்கொடுங்கள். செல்வதறியாது செல்லும் பாதையே பொருளுடையது” என்றார்.
“நான் இதேபோன்று இன்னும் மூன்றுமலைகளை தாவிக்கடப்பேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “முப்பது மலைகள் என்றால்?” என்றார் அவர். அர்ஜுனன் நின்றுவிட்டான். “நான் முப்பதுமலைகளிலும் இதே விரைவில் ஏறிச்சென்றுவிடமுடியும் அல்லவா?” என்று அவர் புன்னகைசெய்தார். அர்ஜுனன் சிலகணங்களுக்குப்பின் “ஆம்” என்றான். “நான் எப்படி நடக்கவேண்டுமென நீங்கள் சொல்லுங்கள்.” “அடிகள் சீராக இருக்கட்டும். கால்களே அனைத்தையும் புரிந்துகொண்டு முடிவெடுக்கட்டும். மெதுவாகச்செல்லும் பாதைகளே இறுதியை சென்றடைகின்றன.”
அவருடன் அர்ஜுனன் நடந்தான். ஒவ்வொரு பாறையிலும் அவர் மெல்ல கால் எடுத்துவைத்து சீராக ஏறிச்சென்றார். “தாங்கள் சென்றது குட்டிக்குதிரையின் பாதை. நான் செல்வது காளையின் பாதை. காளை களைப்படைவதில்லை” என்றார் படிவர். “ரிஷப பதம் என்று எங்கள் நெறியில் இதை சொல்கிறார்கள். நடக்கும்போதும் விழிமூடி அசைபோட்டுக்கொண்டு செல்லும் எருதுபோல எங்கும் எப்போதும் அசைபோட அருகநாமம் உள்ளே இருக்கவேண்டும் என்பது என் ஆசிரியர்களின் வழிகாட்டல்.”
“மேலே செல்ல குதிரைப் பாதை ஏதுமில்லையா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. ரைவதமலை மேல் விலங்குகளின் மீது பொதியேற்றிச் செல்ல தடை உள்ளது. ஊனுணவும் உயிர்களை வதைப்பதும் இங்கு பாவமென கொள்ளப்படுகிறது.” அர்ஜுனன் புன்னகைத்து “இம்மானுடர் பொதி சுமந்து ஏகலாமோ?” என்றான். “ஆம், ஏனெனில் பொதி சுமக்க முடியாது என்னும் முடிவெடுக்கும் அறிவும் உரிமையும் அம்மானுடருக்கு உள்ளதல்லவா?” என்றார் அவர்.
அர்ஜுனன் சிரிக்க “அருகநெறியின் ஐந்து கொள்கைகள் இங்குள அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. கொல்லாமை, பொய்யாமை, களவாமை, புலனடக்கம், உடைமைகொள்ளாமை என்னும் நெறிகள் அவர்களை சீரான பாதையில் நிறுத்துகின்றன. இருளில் அறியாது சிற்றுயிர்களை மிதித்து கொல்லலாகாது என்பதனால் இங்கு எவரும் கதிர் அணைந்தபின் உணவோ நீரோ உண்பதில்லை. ஒளி எழுந்த பின்னரே விழித்தெழுவர். சொல்லாலோ செயலாலோ எண்ணத்தாலோ எவருக்கும் வன்முறை இழைப்பதில்லை. வெண்காளை வேந்தரின் சொல் விளங்கும் மண் இது.”
“இங்குள்ள விலங்குகள் ஊன் உண்பதில்லையா?” என்றான் அர்ஜுனன். அவன் முகத்தில் இளநகையைக் கண்டும் படிவர் விழிகள் மாறுதல் கொள்ளவில்லை. “ஆம். அவை ஊன் உண்கின்றன. ஏனெனில் ஊன் உண்ணவேண்டியதில்லை என்று முடிவெடுக்கும் அறிவு அவற்றுக்கில்லை. முடிவெடுத்தபின் வாழும் முறைமையும் அவற்றுக்கில்லை” என்றார். “அகிம்சை என்பது உடலைப் பழக்குவதல்ல, உள்ளத்தை அமைப்பதுதான்.”
அர்ஜுனன் சற்று வியப்புடன் அவர் விழிகளை நோக்கி பின் விலக்கிக்கொண்டான். படிவர் “எங்கள் நெறி முன்வைக்கும் பவசக்கரம் என்னும் கருத்தை அறிந்திருந்தால் இவ்வினாவை எழுப்பியிருக்க மாட்டீர். இப்புவி ஒரு மாபெரும் ஆழி. இது அமைந்திருக்கும் புடவி பிறிதொரு பேராழி. அது அமைந்திருக்கும் காலமும் ஆழியே. இவை ஒன்று பிறிதை என முற்றிலும் வகுத்துள்ளன. அந்நெறிகளே இங்கு உறவென முறையென வழியென வாழ்வென விளங்குகின்றன. எறும்பும் யானையும் அப்பேராழியின் சுழலில் ஒன்றோடொன்று முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளன” என்றார்.
“ஒரு தனி எறும்பின் வாழ்வு இப்புவியில் உள்ள பிற அனைத்து உயிர்களாலும் முடிவு செய்யப்படுவதைத்தான் நாங்கள் ஊழ் என்கிறோம். ஊழின் வழி அல்லது ஒழுக உயிர்கள் எவற்றுக்கும் ஆணையில்லை என்றறிக! கொல்வதும் கொல்லப்படுவதும் ஊழெனும் பேராழி ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள் மட்டிலுமே. வீரரே, இங்குள்ள உயிர்க்குலங்களில் அவ்வூழைக் காணும் விழி கொண்ட உயிர் மானுடன். ஆகவே அவ்வூழில் நன்று தேறவும் தீது விலக்கவும் கடமைப்பட்டவன். அதை நாங்கள் சீலம் என்கிறோம். ஐந்து நல்வழிகளை சென்னி சூடி இங்கு முழு வாழ்க்கை வாழ்ந்து முடிப்பவன் இப்பேராழியின் முடிவிலா பெருஞ்சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதையே நாங்கள் முக்தி என்கிறோம்.”
“இச்சுழற்சிக்கு அப்பால் மாறாது என்றுமிருக்கும் ஒன்று என ஆவதே விடுதலை. இதிலிருந்து விடுபடுவதே வீடுபேறு. இங்குள ஒவ்வொரு உயிருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளது அது. ஓருயிர் கொண்ட எறும்பும் தன் பவசக்கரத்தின் விளிம்பில் இருந்து எழுந்து ஈருயிர் கொண்ட நெளியும் உயிராகிறது. மூன்றுயிரும் நான்குயிரும் கொள்கிறது. ஏழுயிர் கொண்ட மனிதனாகையில் முழுதறிவை அடையும் வாயில் அதற்கு திறக்கிறது. பிறந்திறந்து முன் நகரும் இச்சரடின் எல்லை அவ்வழியில் முடிகிறது. அதை திறப்பதும் திரும்பி மீண்டும் முதல்முனை சென்று ஓரறிவுள்ள உயிரென ஆவதைத் தேர்வதும் மானுடரின் தேர்வு மட்டுமே.”
“இங்குள அறிவர் ஒவ்வொருவரும் தங்கள் பிறவிச்சரடு முடித்து ஊழ்ச்சுழல் விட்டு உதிர்ந்து மெய்முழுமை கண்டு பிறிதிலாது அமைவதை இலக்கென கொண்டு ஊழ்கம் இயற்றுகிறார்கள். இதோ இந்நகரின் பாறைப்பிளவுகளுக்குள் இன்று ஆயிரத்திற்கும் மேல் அருகப்படிவர்கள் அருந்தவம் இயற்றுகிறார்கள். நூறு தலைமுறைகளில் பல்லாயிரம் பேர் இங்கு உடல் உதிர்த்து உய்ந்திருக்கிறார்கள். அவர்களின் தூய கால்கள் இங்குள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் முன்சென்றோர் வழியை காலடிச்சுவடுகளைக்கொண்டு கணித்தே நாம் செல்லவேண்டும்.”
“அவ்வடிகளை தொட்டு சென்னி சூடி தங்களுக்கும் அப்பேறு வாய்த்திட வேண்டுமென்று வேண்டி மானுடர் ஒவ்வொரு நாளும் இப்படிகளினூடாக ஏறி மேலே செல்கிறார்கள். தாங்களும் செல்லலாம். அதற்கு முன் தாங்கள் தங்கள் தோளே என்றாகியுள்ள அவ்வில்லையும் அம்பறாத்தூணியையும் துறக்க வேண்டும்.” அர்ஜுனன் “நான் துறந்துவிட்டே மலையேறினேன்” என்றான். “உடல் துறந்தால் ஆயிற்றா? நினைவு துறக்கவேண்டும். அத்தோள்களின் தசைகள் மறக்கவேண்டும்” என்றார் படிவர். “ஒவ்வொன்றையும் அக்கணமே துறந்துசெல்கிறீர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். துறந்தீர், ஆனால் ஒவ்வொன்றாலும் நீர் உருமாறிவிடுகிறீர். அவ்வுருமாற்றத்தையும் துறந்தால் அல்லவா கடந்துசெல்வதாக பொருள்?”
அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “ஆணென்றும் பெண்ணென்றும் ஆனீர். அனைத்து அறிதல்களையும் தொட்டு எடுத்து சூடிக்கொண்டீர். இளைய வீரரே, உம்முள் நிறைந்துள்ள அச்சத்தை அறுக்காமல் நீர் அடையப்போவது ஏதுமில்லை.” அர்ஜுனன் மூண்டெழுந்த சினத்துடன் “அச்சமா?” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்று சொன்னபோது அவனுக்கு மூச்சிளைத்தது. “ஆம், அச்சமே. படைக்கலமேந்திய எவரும் அச்சம் கொண்டவரே. எப்படைக்கலம் ஆயினும் சரி. உலோகப் படைக்கலம். கைகள் கொள்ளும் பயிற்சி என்னும் படைக்கலம். தேர்ந்த சொல் எனும் படைக்கலம். கூர்மதி என்னும் படைக்கலம். நானென எண்ணும் நிலை என்னும் படைக்கலம்.”
“நான் அஞ்சுவது எதை?” என்றான் அர்ஜுனன். “பிறப்பித்த ஒன்றை. உடன்பிறந்த ஒன்றை. உடன் தொடரும் ஒன்றை. அதைத் தொடரும் பிறிதொன்றை” என்றார் அருகர். அர்ஜுனன் உடல் தளர்ந்தது. “என்ன சொல்கிறீர்கள் உத்தமரே?” என்றான். “எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் நீர். அதை வாசிக்கிறேன்” என்றார் படிவர். “அச்சத்தை நான் எப்படி கடந்து செல்வேன்?” என்று அர்ஜுனன் கேட்டான்.
“அச்சங்கள் எவையாயினும் கண்ணொடு கண் நோக்காது வெல்வது அரிது” என்றார் படிவர். “ஒரு களம் வரும். உமது அச்சங்கள் பேருருக்கொண்டு பெரும்படையென முன்னால் திரண்டு நிற்கும். அவற்றை நீர் கண்நோக்கி நின்று பொருதி வெல்வீர். அக்களத்தைக் கடந்தபின்னரே உமக்கு மெய்மை ஓதப்படும். வீரரே, மெய்மையை அஞ்சாது எதிர்கொள்பவனே வீரன். நீர் அதுவாக ஆவீர். அதற்கென இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீர்.” அர்ஜுனனின் பிடரி குளிர்நீர் விழுந்ததுபோல சிலிர்த்தது. “அழியாப்பாடல் ஒன்றை கேட்கும் பேறு பெற்றவர் ரைவதர். நீரும் அக்கீதையை கேட்பீர்.”
“தங்கள் சொல் விளங்கட்டும் படிவரே” என அர்ஜுனன் வணங்கினான். “இன்று தொட்டு ஏழாம் நாள் இங்கு ரைவதர் மந்தரமலையில் அழியாப் பேரிசையைக் கேட்ட நாள். விழவென கொண்டாடப்படுகிறது. இங்கு இருங்கள். ரைவதர் கேட்ட இசையின் ஓர் அதிர்வை அன்று நீங்கள் கேட்கமுடியும். பாலாழியின் ஒரு துளி” என்று படிவர் சொன்னார். “நான் எவரென்று அறிவீரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “எவராயின் என்ன? துயர்கொண்டவர், தனித்தவர், தேடி அலைபவர்” என்றார் படிவர்.