காண்டீபம் - 43
பகுதி ஐந்து : தேரோட்டி – 8
எல்லைப்புற ஊரில் நிகழ்ந்த அப்பெரும்போர் கஜ்ஜயந்தத்தில் குலப்பாடகர்களால் ரைவதகவிஜயம் என்ற பெயரால் குறுங்காவியமாக பாடப்பட்டது. இளையோர் மொழியறியும் நாளிலே அதை கற்றனர். வருடம்தோறும் அவ்வெற்றியின் நாள் மூதாதையருக்கு திறைகொடுத்து சொல்பணியும் விழாவாக எடுக்கப்பட்டது. பாலைப் பெருங்காற்றின் வாளை கையில் ஏந்தியவர் என்று ரைவதகர் புகழ் பெற்றார். கஜ்ஜயந்த குடிகளின் அச்சம் ஒழிந்தது. மேலும் மூன்று களங்களில் அவர்கள் படைகொண்டுவந்த கண்டர்களை முழுமையாக வென்றனர்.
புறச்சூதர்கள் வழியாக அச்செய்தி புறநாடுகளுக்கும் பரவியபோது கஜ்ஜயந்தத்தின் மீது எவரும் படைகொண்டுவரத் துணியவில்லை. விண்தொடும் பெருவாளை கையிலேந்தி முகில்களைச் சூடி நிற்கும் ரைவதகரின் ஓவியங்கள் இல்லச் சுவர்களில் வரையப்பட்டன. அவருக்கு ஏழு சிறகுகள் கொண்ட மருத்தனாகிய மந்தன் உடைவாளை அளிக்கும் காட்சி நாடகமாக நடிக்கப்பட்டது. காற்றின் உடைவாளைச் சூடி களம் சென்று வெல்வதை அக்குலத்து இளையோர் கனவு கண்டனர். கன்னியர் அவர்களை எண்ணி உவகை கொண்டனர்.
இருபத்தியெட்டு ஆண்டுகாலம் எதிர்ப்பவர் எவருமின்றி கஜ்ஜயந்தபுரியை ஆண்டார் ரைவதகர். அவர் சொன்ன சொல் ஒவ்வொன்றும் சட்டமென கொள்ளப்பட்டது. அவர் செய்கைகள் அக்கணமே புராணங்களாயின. மண்ணில் இருக்கையிலேயே விண்வாழும் முதியவர்களில் ஒருவராக அவர் போற்றப்பட்டார். அவரது மைந்தர்களான பத்ரபானுவும் சஜ்ஜனரும் பிரபரும் குமாரரும் சுஜரரும் சுந்தரரும் நூலும் வேலும் பயின்று தோள் திரண்டனர். அவர்களுக்கு குஜ்ஜர் குலத்துப் பெண்களை மணம்செய்து வைத்தார். எல்லைப்பகுதிகளை அவர்கள் காத்தனர்.
கஜ்ஜயந்தபுரி அமைதியும் செல்வமும் கொண்டது. அங்கு கலைகளும் கல்வியும் செழித்தன. அயல்நாட்டு வணிகரும் சூதரும் அதை அறிந்து அங்கு வந்தனர். எல்லைகளிலெல்லாம் அங்காடிகள் எழுந்தன. கஜ்ஜயந்தகிரியின் அடிவாரத்தில் பேரங்காடி ஒன்று உருவானது. அங்கு பாலைவணிகர் வந்து தங்கி விற்று கொண்டு மீண்டனர். ரைவதகர் அவர்களில் நூலறிந்த அனைவரையும் தன்னிடம் வரச்சொல்லி புதியன கூறக்கேட்டு கற்றறிந்தார்.
அவர்கள் அயோத்தியில் மண்நிகழ்ந்து கயிலையில் விண்திகழ்ந்த ரிஷபரின் அணையாச்சுடரை அவருக்கு சொன்னார்கள். கொல்லாமை என்னும் பெரும்படைக்கலத்தை ஏந்திய அம்மாவீரரின் செய்தி அவரை அகம் திகைக்கச் செய்தது. ஒவ்வொரு நாளும் கீழ்த்திசையில் கதிர் எழும்போது அவர் தன் உள்ளம் தனித்துவிடப்பட்டிருப்பதை உணர்ந்தார். அந்தியில் அத்தனிமை ஆழ்ந்த துயரமாக கனிந்திருந்தது. அவர் சொல்லவிந்து செயல் நிறைந்து ஒரு பெருஞ்சிலை என ஆவதை அவரது குடியும் குலமும் கண்டது. “கனி முழுத்துவிட்டது. உள்ளே இனிமை ஊறிச் சிவக்கிறது” என்றார் முதுநிமித்திகராகிய ரூபிணர்.
ஒருநாள் அவர் கீழ்வான் நோக்கி நின்றிருக்கையில் அவர் அருகே வந்து பணிந்த அமைச்சர் அயல்நாட்டுச் சூதர் இசையவைக்கு வந்திருப்பதை சொன்னார். எண்ணங்கள் அப்போதும் செம்பொன்கோபுரத்திலேயே படிந்திருக்க சொல்லில்லாமல் ரைவதகர் இசையவைக்குச் சென்று வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் ஏற்று அரியணை அமர்ந்தார். அயல்சூதர் முதியவர். தன் நந்துனியை மீட்டி அவர் மந்தர மலையைப் பற்றி பாடத்தொடங்கினார். தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்து அமுது எடுத்த மத்து. தேவர்களுக்கு அமுது அளிக்கப்பட்டதும் மானுடருக்கு அந்த மலையை அளிக்க உளம்கொண்டார் ஈசன். மண்ணில் வந்து விழுந்தது மந்தரமலை.
அமுதம் படிந்தமையால் அம்மலையின் ஒவ்வொரு உயிரும் இறப்பின்மையை அடைந்தது. அம்மலைமேல் முளைக்கும் செடிகளில் இலைகள் உதிர்வதில்லை. மலர்கள் வாடுவதில்லை. அங்கு வாழும் பூச்சிகளும் இறப்பதில்லை. அமுதிலாடி நிற்கும் அவ்வுயிர்களுக்கு அந்தமென இங்கு ஏதுமில்லை. அச்செடிகளை வருடி வரும் காற்றும் அமுதமே. தீராநோயாளிகள் அக்காற்று பெற்று உயிர் ஊறப்பெற்றனர். அதற்காக உற்றாரையும் ஊரையும் விடுத்து வழிதேர்ந்து நடந்து அதன் சாரலை அடைந்தனர். மந்தரமலையில் முளைக்கும் செடிகளனைத்தும் மூலிகைகளே. அவற்றை மருத்துவர் தேடிச்சேர்த்து அருமருந்துகள் கூட்டினர்.
தொல்கதைகளில் கேட்டிருந்த அம்மலையை பார்க்க வேண்டுமென்பது ரைவதகர் சிறுவனாக இருந்தபோது கொண்ட கனவு. அந்நாளில் அவர் அவைக்கு வந்த வடபுலத்துப் பாணன் ஒருவன் குறுயாழை மீட்டி மந்தரமலையின் உச்சியில் பொன்னொளிர் முகில் வந்து அமரும் அழகை பாடினான். முகில் கீற்றுகளில் தேவதைகள் தோன்றி அம்மலை மேல் இறங்குவதை தேன்தட்டில் தேன் துளிப்பதுபோல என்று அவன் சொன்ன வரியை அவர் ஒருபோதும் மறக்கவில்லை. பின்னர் வணிகருடன் வெளியேறி இரண்டாண்டு காலம் அலைந்தபோது மந்தரமலைக்கு ஒருமுறை செல்வதென்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. வழி தேர்ந்து மந்தரமலைக்கு கிளம்புகையில்தான் தந்தை உடல்நலமின்றி இருக்கும் செய்தி வந்தது. அக்கணமே திரும்பி வர முடிவெடுத்தார். பின்பு குடிகாக்கும் பொறுப்பும் அரச கடமைகளும் அவரை அவ்வூரிலேயே சிறை வைத்தன.
காலத்தில் அவ்வெண்ணம் கரைந்து அழிந்து ஆழத்தில் மறைந்தது. மந்தரமலை என்னும் சொல்லை முதுசூதர் பாடியதுமே கோல்பட்ட முரசின் தூசுத்துளிகள் நடனமிடுவது போல அவருள்ளத்தில் சொற்கள் கொந்தளித்தன. பின்பு அச்சொல் மட்டும் எஞ்சியது. கஜ்ஜயந்தகுடியினர் எல்லை தாண்டி போகும் வழக்கமில்லை என்பதால் பயணத்துக்குரிய முறைமைகள் ஏதும் அந்நாட்டில் இருக்கவில்லை. எனவே வெறும் விழைவென்றே அது அவருள் எஞ்சியது. ஆனால் எவ்வண்ணமோ நாளில் ஒருமுறையேனும் மந்தரமலையென்னும் எண்ணம் நெஞ்சில் எழத் தொடங்கியது. எச்சொல்லிலிருந்தும் அதற்கு சென்று சேரும் ஆழ் உள்ளத்து வழி ஒன்று அவருக்கு இருந்தது.
அரசவையில் மந்தணம் சூழ்ந்து கொண்டிருக்கும்போதே அகத்தில் அவ்வழி திறந்து அவர் அங்கு செல்லத்தொடங்குவார். அவரது விழிகள் அணைவதை உடல் அங்கிருக்க உள்ளம் மறைவதை அறியும் அவையினர் அவர் செவிகளை ஈர்ப்பதற்கென உரக்க பேசுவர். அப்போதும் அவர் விழிதிரும்பவில்லையென்றால் எளிய வீண்பேச்சுகளுக்கு செல்வார்கள். எண்ணி இருந்த நாட்களில் ஒரு முறை உப்பரிகையின் தனிமையில் இருளுக்குள் நிலவை நோக்கி இருந்தபோது எங்கோ எவரோ சொல்லி நினைவில் எழுந்ததுபோல ஒரு சொல் அவர் உள்ளத்தில் எழுந்தது. ‘இனியில்லை’.
திடுக்கிட்டு யார் அதை சொன்னது என்று நோக்கினார். எவ்வண்ணம் அச்சொல் தன் உள்ளத்தில் எழுந்தது என்று வியந்தார். எவரோ தலைக்குப் பின்னால் நின்று காதுகளுக்கு மட்டும் கேட்பதுபோல அச்சொல்லை சொல்லி சென்றார்கள். இனியில்லை இனியில்லை இனியில்லை என்று பல்லாயிரம் முறை அச்சொற்களை சொல்லி நிலைகொள்ளாமல் அம்மாளிகையில் அலைந்தார். காவலனும் துயின்று காற்றும் அடங்கிவிட்ட மாளிகையில் பாதகுறடுகள் ஒலிக்க தலை குனிந்து நடந்தார். நீள்மூச்சுடன் எங்குளோம் என உணர்ந்தபோது உள்ளம் சென்ற நெடுந்தொலைவு காலுக்கு சில அடிகளே என அறிந்து தலையசைத்துக்கொண்டார்.
விடியலில் துயில் மறந்து சோர்ந்த விழிகளுடன் வந்து அவை அமர்ந்தார். தன் மைந்தர்களை வரச்சொன்னார். அமைச்சரும் குடித்தலைவர்களும் படைத்தலைவர்களும் சூழ்ந்த அவையில் தன் மணிமுடியை இளவரசர் பத்ரபானுவிடம் அளித்து அரசு துறந்து வெளியேறவிருப்பதை அறிவித்தார். எவ்வண்ணமோ அப்படி ஒன்று நிகழும் என்பதை அவை முன்னரே அறிந்திருந்தது. அவரது முகக்குறிகள் அங்கு காட்டுவது என்ன என்பதை நிமித்திகர் உய்த்து அமைச்சருக்கு உணர்த்தியிருந்தனர். ஆயினும் அச்சொற்கள் அவர் வாயிலிருந்து நேரடியாக எழக்கேட்டபோது ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தலைமை அமைச்சர் “அரசே, தாங்களின்றி…” என்று சொல்லத் தொடங்கியதும் கையமர்த்தி “தங்கள் உணர்ச்சிகளை அறிவேன். இவ்வவை சொல்லப்போகும் அத்தனை சொற்களையும் ஓராயிரம் முறை முன்னரே என் உள்ளத்தால் கேட்டுவிட்டேன். என் இறுதிச் சொற்கள் இவை. இன்றேனும் இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் இனியில்லை என்றே என் உள்ளம் உணர்கிறது என் மைந்தன் தோள் பெருத்து விழிகூர்ந்து அரசனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுவிட்டான். அவனுக்குத் தகுதியான இளையோர் அவன் தோள்வரை எழுந்துவிட்டனர். அவனுக்குரியது இம்மணிமுடி” என்றார்.
“குடியீரே, இனி இவன் கோல் கீழ் இந்நாடு பொலிவுறட்டும். என் மக்கள் இவனை என் மூதாதையர் வடிவென கொள்ளட்டும். என் மனைவியருக்கு இவன் காவலனாகட்டும். தெய்வங்கள் இனி எனக்கான பலிக் கொடைகளை இவன் கைகளில் இருந்து பெறட்டும். அவ்வாறே ஆகுக!” என்றபின் எழுந்து தன் மணிமுடியை இருகைகளாலும் கழற்றி அருகிலிருந்த பீடத்தில் வைத்தார். செங்கோலையும் கங்கணத்தையும் அதன் அருகே வைத்தபின் “என் மூதாதையர் மேல் கவிந்து என் குடியை குளிர்நிழலில் நிறுத்திய இவ்வெண்குடை இதன் மேல் கவியட்டும்” என்று ஆணையிட்டார். குடைக்காவலன் வெண்குடையை மணிமுடி மேல் குவிக்க அரியணையிலிருந்து படியிறங்கிவந்து அவை நடுவே நின்று அனைவரையும் தலைமேல் கைகுவித்து மும்முறை வணங்கி விலகி வெளியே சென்றார்.
அவர் செல்வதை நோக்கிநின்ற அவையினர் ஏங்கி கண்ணீர் உகுத்தனர். அவர் மைந்தர்கள் விழிநிறைய சொல்மறந்து நின்றனர். மகளிரறைக்குச் சென்று தன் துணைவியர் ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொல்லில் விடைபெற்றார். அவரது பட்டத்தரசி சைந்தவி “இறுதி வரை உடனிருப்பேன் என்று சொல்லி என் கைபற்றினீர்கள் அரசே” என்றாள். “இவ்வுலகில் நான் கொண்டவை அனைத்துக்கும் இறுதி வரை நீ உடனிருந்தாய். ஆனால் காடு உனக்கானதல்ல. மைந்தருடன் கூடி மகிழ்ந்திருந்தால் மட்டுமே உன் உள்ளம் விண்ணேகும். இங்கிரு. நான் சென்றுவிட்ட செய்தி கிடைக்கும்போது என் மங்கலங்களைத் துறந்து எனக்காக நோற்றிரு. அங்கு உனக்காக நான் காத்திருப்பேன். அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.
அன்று பின்மாலை கஜ்ஜயந்தபுரியின் மலைப்பாதை சரிந்திறங்கிய குன்றில் இறங்கி விரிநிலம் வந்தார். குன்று முழுக்க பரவியிருந்த அந்நகரின் மாந்தர் அனைவரும் வந்து மலைப்பாதையின் இருமருங்கிலும் கூடி அவரை வாழ்த்தி குரலெழுப்பி விடை கொடுத்தனர். பெண்கள் விம்மி அழுதனர். அவருக்காக அரசமணித்தேர் காத்திருந்தது. அதில் அவர் ஏறிக்கொண்டதும் பாகன் அவர் சொல்லுக்காக காத்திருந்தான். அவர் அங்கில்லையென்றிருந்தார். அவனே குதிரையை சொடுக்கி அதை விரையச்செய்தான். சிறுவர்கள் அவர் சென்ற தேருக்குப் பின்னால் அழுதபடி கை நீட்டி ஓடினர். ஒருவரையும் திரும்பி நோக்காமல் எல்லை கடந்து விரிநிலத்தில் வளைந்து சென்ற செம்புழுதி எழும் சாலையில் மறைந்தார்.
கஜ்ஜயந்தநாட்டு எல்லையை அடைந்ததும் ரைவதகர் மெல்லிய உறுமலால் தேரை நிறுத்திவிட்டு இறங்கி தன் அரச ஆடைகளைக் களைந்து அதுவரை தன்னுடன் வந்த அணுக்கச் சேவகனிடம் அளித்தார். அமைச்சர் தேரில் வைத்திருந்த மரவுரியும் மரக்குறடும் அணிந்து கையில் கோலும் துணிமூட்டையில் மாற்றுடையும் கொண்டு பாலையில் நடக்கத் தொடங்கினார். அவர் சென்று மறைவதுவரை அவன் அங்கே நோக்கி நின்றான். பெருமூச்சுடன் திரும்பி தேரின் பின்நீட்சியில் ஏறிக்கொண்டான். தேர் திரும்பும்போது பீடத்தில் இன்மையென அவர் இருப்பதாக அவன் எண்ணினான்.
நாடுநீங்கிய முதல்நாள் நாடுநீங்கிய மன்னராக இருந்தார் ரைவதகர். இரண்டாம் நாள் விடுதலை அடைந்த குடிமகனாக ஆனார். மூன்றாம் நாள் வழிதேறும் பயணியாக இருந்தார். நான்காம் நாள் எண்ணங்களை துழாவிச்செல்லும் தனியனாக இருந்தார். ஐந்தாம் நாள் எங்கும் செல்லாது தன்னுள் உழலும் அயலவன் என தோன்றினார். ஆறாம் நாள் அவரது விழி பதைக்கும் பித்தனென்று மாறினார். வெறுமனே சென்றுகொண்டிருந்தார். பதினெட்டாவது நாள் வழிகள் பொருட்டற்ற துறவியாக மாறியிருந்தார். நூற்றியெட்டு நாட்களுக்குப் பிறகு நீண்ட தாடியும் சடைத்திரிகள் தொங்கும் முதுகும் ஒளிரும் வெண்பளிங்கு விழிகளுமாக மந்தரமலை நோக்கிச் செல்லும் பாதையை அடைந்தார்.
மந்தரமலை வரைக்கும் பாடும் மந்தார வழிநடைப்பாடல் நூலில் எழுதப்படாமல் அத்தனை யாதவ குடிகளிடமும் புழங்கியது. ஆண்டில் ஒருமுறை சித்திரை முழுநிலவு நாளில் யாதவர்கள் சிலர் நோன்பு கொண்டு இருமுடி கட்டி செல்வதுண்டு. ஆவளம் பெருக பால் நிறைய தெய்வங்களை வேண்டி அக்காட்டின் முதல்விளிம்பில் எருமையேறிய அறச்செல்வராகிய வசுதேவர் என்னும் தெய்வம் நின்றிருந்த ஆலயத்தில் அமுதும் மலரும் நீரும் படைத்து வணங்கி மீள்வார்கள். அப்பாலிருந்த காட்டுக்குள் சித்தம் தெளிந்த யோகியரே செல்லமுடியும் என்று சொல்லப்பட்டது.
அருகநெறியினருக்கு அவ்வாலயம் அவர்களின் பனிரெண்டாவது தீர்த்தங்கரரான வசுபூஜ்யரின் பதிட்டை. ஆஷாட மாத முழுநிலவு நாளில் அருக நெறி நிற்கும் வணிகர்கள் தங்கள் குடிச் செலவுகளை நிறைவு செய்தபின் அங்கு வந்து அரிசி விரித்து அழியாசுழற்சியை விரல் தொட்டு வரைந்து அருக நாமத்தை பாடி வழிபட்டு மீண்டனர்.
இக்ஷ்வாகு வம்சத்தில் அங்க நாட்டுத் தலைநகர் சம்பாபுரியில் வாசுதேவருக்கும் ஜெயதேவிக்கும் மைந்தனாகப் பிறந்து இளமையிலேயே ஐம்புலனறுத்து அறிபுலன் பெருக்கி அலைந்தார். சித்தக்கடல் கடைந்து அமுதெடுத்தார். அதை நிரப்பி தானென எஞ்ச உரிய இடம் தேடி அலைந்தார். காட்டில் கண்ட காட்டெருமை ஒன்று அவரை அறிந்து கரிய பேருடல் ஒடுக்கி தலை வணங்கி தாள் பணிந்தது. அதன் மேல் ஏறி பன்னிரு நாட்கள் பயணம் செய்து மந்தரமலையை வந்தடைந்தார் ஆஷாட மாதத்தின் பதினான்காவது முழுநிலவு நாளில் தன்னந்தனியாக மந்தர மலை சரிவில் ஏறி சென்று உருளைப் பாறையின் அடிவாரத்தை அடைந்தார்.
முகில்கள் விலகி முழுநிலவு மந்தரமலைக்கு மேல் நின்றபோது உருவான நிலவொளிப்பாதை வழியாக நூற்றெட்டு தேவர்கள் இறங்கி மந்தரமலை சிகரத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் எழுப்பிய அமரப்பேரிசையை கேட்டார். தன் ஊனுடலை அங்கொழித்து இசைகலந்து மேலேறி அவர்களை சென்றடைந்தார். அவ்விசையின் வழியாக தேவர்கள் வாழும் விண்ணுலகை அடைந்தார். அங்கு அழியா புகழுடன் நிலை கொண்டார். அம்மலைவிளிம்பில் கற்சிலையமைத்து வழிபட்டனர். அவர் காலடியில் கொம்பு சரித்து நின்றது மோட்டெருமை.
அப்பால் எழுந்த பசுங்காடு பச்சைப்பிசின் என செறிந்து வழியின்மையாகியது. அதன் நடுவே கரிய தனிமையின் வடிவென எழுந்து விண்தொடும் விரல் என நின்றிருக்கும் மந்தரமலை. காட்டின் விளிம்பில் நின்று நோக்கியதன்றி எவரும் அறிந்ததில்லை. அங்கு செல்ல காலடிப்பாதைகள் இல்லை. அங்கு செல்பவர்கள் தங்களுக்கான பாதையை தாங்களே கண்டடைந்தனர். சென்றவர்கள் எவரும் மீண்டதில்லை என்பதனால் சொல்லில் வழி இருக்கவில்லை.
வசுபூஜ்யரின் கோயில் கடந்து காட்டில் நுழைந்த ரைவதகர் அங்கே ஒவ்வொரு இலையும் பொய்யுரைத்து வழிதிருப்புவதை உணர்ந்தார். ஒவ்வொரு முள்ளும் படைக்கலமாகி எதிர்கொண்டது. ஒவ்வொரு வேரும் கால்பின்னி தடுத்தது. நூறுநாட்கள் அக்காட்டில் தவித்தலைந்து தளர்ந்து விழுந்தார். பசி எரிந்து பின் அணைந்த உடலில் உயிர் இறுதிச்சரடில் நின்று தவித்தது. சிதையென ஆன தசைகளில் விடாய் நின்று தழலாடியது.
கைகளை ஊன்றி கால்களை மடித்து எழுந்தார். ஒவ்வொரு தசையாக இயக்கி உடலை நகர்த்தி சுற்றிலும் நோக்கினார். உலர்ந்த நாக்கு வந்து இதழ்களை நக்கி நக்கி மீண்டது. ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு குழியும் நீரில்லை என்னும் பொருள் மட்டுமே கொண்டிருந்தது. அவர் உடல் நீர்விழைவு என்பதாக இருந்தது. விடாய் என இம்முனையும் இல்லை என மறுமுனையும் இணைவிசைகளுடன் முட்டிக்கொண்டு அசைவிழந்து காலம் மறந்தன. கண்களில் காடு நீர்ப்பாவையென அலையடித்தது. காதுகளில் ஓசைகள் தொலைவிலெங்கோ என ஒலித்தன. மூழ்கிக் கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்திருந்த காற்று நீரென்றாகி அவரை மூழ்கடித்து தன் ஆழத்துக்கு கொண்டுசென்றது.
பற்றுதேடித் தவித்த சித்தத்தின் பல்லாயிரம் கைகள் சொற்களை அள்ளி அள்ளி பற்றிக்கொண்டன. அன்னை, தந்தை, குடி, குலம், நகர், பொருள், இன்பம், வெற்றி, புகழ், அறிவு, மீட்பு, முழுமை என ஒவ்வொரு கொடியும் அவர் எடைதாளாது அறுபட்டது. அறுந்து துடிக்கும் கொடிகளில் ஒன்றென மந்தரமலை இருப்பதைக் கண்டதும் உடல் ஒருமுறை சொடுக்கிக்கொண்டது. கைநீட்டிப் பற்றிய கொடி ஒன்று அவரை தாங்கியது. அது ஒரு செவிவடிவில் இருந்தது. அச்செவியில் நீராவி பட்டு பனித்திருந்தது. இடக்காது. அவர் இடப்பக்கம் நகர்ந்தார். எஞ்சியிருந்த ஒற்றைக்கை ஒரு நாகமென மாறி நெளிந்து மண்ணை உந்தி அவரை தூக்கிச்சென்றது.
தொலைவிலேயே நீரை அறிந்துவிட்டார். அசைவற்ற எருமைவிழி என அது அங்கே கிடந்தது. அதை அணுகி படுத்தபடியே நீரை அள்ளி அள்ளி விழுங்கியபோது உடல் அறிந்தது அது அமுதம் என. கண்மூடி அங்கே கிடந்தார். மெல்லிய முக்காரம் கேட்டு கண்விழித்தபோது மிக அருகே நின்ற கரிய எருமையின் கண்களை கண்டார். அவர் கைநீட்டியபோது அந்தக் காட்டெருமை கரிய பேருடல் ஒடுக்கி தலை வணங்கியது. அதன் மேல் ஏறி பன்னிரு நாட்கள் பயணம் செய்து மந்தர மலையை வந்தடைந்தார். அவர் செல்லும் வழியெல்லாம் முட்கள் சுட்டுவிரல்களாகி வழிகாட்டின. இலைகள் வாழ்த்துகூவின.
அது ஆஷாட மாதத்தின் பதினான்காவது முழுநிலவு நாள். விண்ணில் பொற்பெருங்கலமென எழுந்து நின்றது குளிர்நிலவு. காடு குளிர்ந்து ஒளிசொட்டும் இலைநுனிகளுடன் அசைவிழந்து மோனத்திலாழ்ந்திருந்தது. குவிந்த செம்மண்பீடத்தின் மேல் ஊழ்கத்திலமர்ந்த கரிய ஒற்றைப்பெரும்பாறையே மந்தரமலை. ரைவதகர் அங்கு வந்தபோது அங்கே உயிரசைவே இருக்கவில்லை. நிலவொளியே பருவெளியென்றானது போல் தெரிந்த மலைச்சரிவில் தனித்து ஏறிச் சென்று உருளைப் பாறையின் அடிவாரத்தை அடைந்தார். விண்ணில் தொங்குவது போல நின்றது அது. அங்கிருந்து எவரோ மண்ணை கடைவதுபோல.
ரைவதகர் நிலவொளி தழுவி பளபளத்து எழுந்து நின்ற மந்தரமலையின் கரிய பேருடலை பார்த்தார். கிளம்பிய நாள் முதல் அவர் சித்தத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த பாற்கடலை கலக்கியது எதுவென்றறிந்தார். கன்னங்கரியது. அமுதை உடல் பூசி அழியாமை கொண்டு என்றும் நின்றிருப்பது. விண்ணைத்தொடுவது. மண்ணில் வேரூன்றி இருப்பது. மாநாகங்களும் வானவரும் தங்களதென்று உணர்வது. இதுவே இதுவே இதுவே என்று நெஞ்சு உரைக்க சிறிய பாறை ஒன்றின் மேலமர்ந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார். அதன் மேலிருந்த முகில்கள் ஒளிகொள்வதை கண்டார். வெளிகடைந்த மத்து. அழியாத்தவம் கொண்டு யுகங்கள் தோறும் விண்ணில் பறந்தலைந்த பயணம் மண்ணில் இங்கு நிலை கொள்வதற்காகதானா?
கண்களை மூடி ஊழ்கத்தில் அமர்ந்தார். அவர் நெற்றிப்பொட்டில் எழுந்து சித்தத்தில் சுழன்று கொண்டிருந்தது மந்தரமலை. இறுகி நஞ்சு துப்பியது பாதாள நாகம். பற்றி எரிந்தன புரங்கள். அனல் என உணர்ந்த தருணம். அமுது என உணர்ந்த ஓசை. அமுது என்று நுரைத்த உள்ளம். அமுது என எஞ்சிய சித்தம். அமுது என்று திரண்ட பித்தம். பின் அமுதென்று அங்கிருந்தார். விழிதிறந்தபோது முழு நிலவு மந்தரமலைக்கு நேர் உச்சியில் நின்றிருந்தது. விண்ணையும் மண்ணையும் முழுக்காட்டும் பேரிசையொன்று சூழ்ந்திருந்தது.
செவிகள் தொட முடியாத இசை. ஒவ்வொரு மயிர்க்காலும் அறிந்து தித்திப்பில் விரைத்து நிற்கும் இன்னிசை. கரைகளின் வெண்ணுரை எழுப்பி அலை அலையெனக் கிளர்ந்து அவரை அள்ளி எற்றி எற்றி எற்றிச் சென்றது அவ்விசை. இசையினூடாக நடக்க முடியும் என்று கண்டார். இசையை அள்ளி பற்ற முடியும். இசையில் கால் துழாவி கைவீசி நீந்தி திளைக்க முடியும். இசை அவரை மந்தரமலையின் உச்சிக்கு கொண்டுசென்றது. தன்னருகே மலைப்பாறையின் பளபளக்கும் கருமை எருமைத்தோல் என உயிர்கொண்டு அசைந்ததை அவர் கண்டார். அதன் மடம்புகளிலும் மடிப்புகளிலும் முளைத்த சிறுமுட்செடிகள் முடிகளென சிலிர்த்திருந்தன.
மலையுச்சியில் கால்தொடாது சென்று நின்றார். அது ஒரு முழுவட்டச் சதுக்கமென தெரிந்தது. அதன் மையத்து விளக்கென பொன்னிலவு. அந்நிலவை நோக்கி நின்றிருக்கையில் அதை தன் மேல் சூடிய மாபெரும் நிலவு ஒன்று விண்ணிலெழக்கண்டார். குளிர்நீல நிலவு. அப்பெருநிலவு மழலையை மடியில் வைத்த அன்னையென நிறைந்திருந்தது. அதிலிருந்து வழிந்தோடி இறங்கிய நீலப்பளிங்குப்பாதை வழியாக ஒளிச்சிறகுகளுடன் கந்தர்வர்கள் இறங்கி வந்தனர். நிலவொளியில் சுழன்று நடனமிட்டுக் களித்தபடி வந்து அங்கே நிலவொளித்துளிகளென கிடந்த பாறைகளில் அமர்ந்தனர்.
நூற்றெட்டு கந்தர்வர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் அமர்ந்து இசைமீட்டினர். அவர்கள் தொட்டு மீட்டிய இசைக்கருவிகள் நிலவொளியால் ஆனவையாக இருந்தன. இசையும் ஒளியென்றே அலையடித்தது. அதில் அவர் உடல் உருகி பரந்து திளைத்து மெல்லிய அலைவாக இருந்தது. அவர்கள் அவரை அறியவில்லை. அவர் அணுகிச் சென்றபோதும் அணுகாமல் அவர்கள் அங்கே இருந்தனர். அவர்களில் ஒருவன் விழிதிருப்பியபோது ஒரு கணம் அவன் நோக்கு அவரை அறிந்தது. அக்கணமே விழித்துக்கொண்டார்.
அப்போது அவரது தலைக்கு மேல் இளஞ்சூரியன் எழுந்திருந்தது. பொன்னொளிர் வெயில்பட்டு மந்தரமலை விண்மகள் அணிந்த தாலியின் குண்டு போல சுடர்விட்டது. விழிநீர் வார்ந்து செவிகள் நிறைய அங்கு பார்த்தபடி கிடந்தார். நேற்றிரவு கேட்ட இசை வெறும் உளமயக்கா என்று தோன்றியது. எழுந்து அமர்ந்தபோது தன் இடையில் ஆடை இல்லையென்பதை கண்டார். இசை ஏறிச்சென்று மந்தரமலை உச்சியில் கரைந்து நடமிட்டபொழுது தன் ஆடை கழன்று காற்றில் பறந்து மறைவதை கண்டிருந்தார். எழுந்து அங்கெங்கேனும் தன் ஆடை கிடக்கிறதா என்று பார்த்தார். இல்லையென்று அறிந்ததும் “ஆம், நான் கேட்டேன்! நான் இருந்தேன்! நான் அடைந்தேன்! நான் எஞ்சுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டார்.
கஜ்ஜயந்தபுரியின் எல்லைக்குள் மீண்டும் ரைவதகர் நுழைந்தபோது அவர் புழுதிபடிந்த வெற்றுடல் கொண்டவராக இருந்தார். குழல் வளர்ந்து தோளில் தொங்கியது. சடை கட்டிய தாடி மார்பில் விழுந்திருந்தது. புழுதி படிந்த மேனி தொன்மையான மரம் ஒன்றின் வேர் போன்றிருந்தது. சொல்லற்று புன்னகை ஒன்றே மொழி என கொண்டிருந்தார். உற்றவர் எவரையும் அவர் தனித்தறியவில்லை. மானுடரையும் விலங்குகளையும் பறவைகளையும் வேறுபடுத்தி நோக்கவில்லை. விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மூதாதையரின் விழிகள் அவை என்றனர் குலப்பாடகர்.
எல்லையிலிருந்து பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து ஊருக்குள் கொண்டுவந்தது. அவருக்குப் பின்னால் குலப்பாடகர் இசைமீட்டி வந்தனர். “அருகர் தாள் வாழ்க!” என்று கூவிய குடிமூத்தார் உடன் வந்தனர். தன் அரண்மனை மாளிகை முகப்பில் வந்து நின்று அவர் கைகளை நீட்டினார். செய்தியறிந்து ஓடிவந்த அவரது துணைவி சைந்தவி அவரைக் கண்டு நெஞ்சை அழுத்தி நிலைபற்றி நின்று கண்ணீர் விட்டாள். “அன்னையே, இரவலருக்கு உணவளியுங்கள்” என்றாள் முதியசேடி. விம்மும் இதழ்களை இறுக்கியபடி அவள் அவரது நீட்டிய வெறும் கையில் அன்னமிட்டாள். மும்முறை அதை உண்டபின் அவர் திரும்பிச்சென்றார்.
பன்னிரெண்டு ஆண்டுகாலம் ரைவதகர் கஜ்ஜயந்தநாட்டின் ஊர்களில் அலைந்தார். எங்கும் எவரிடமும் எச்சொல்லும் சொல்லவில்லை. அவர் சென்றவிடத்தில் எல்லாம் அவர் சித்தமுணர்ந்ததை மக்கள் அறிந்தனர். சித்திரை வளர்நிலவு இரண்டாம் நாளில் ரைவதக மலைமேல் ஏறிச்சென்ற அவர் அங்குள்ள மலைப்பாறை ஒன்றில் வடக்கு நோக்கி அமர்ந்து பன்னிரண்டுநாட்கள் உண்ணாநோன்பிருந்தார். அரண்மனையில் தன் மஞ்சத்தில் அவர் துணைவி சைந்தவியும் உண்ணாநோன்பிருந்தாள். அவள் முழுநிலவுக்கு முந்தையநாள் உடல்துறந்தாள். முழுநிலவு எழுந்த நாளில் அவர் முழுமைகொண்டார்.
ரைவதகரின் காலடி அங்குள்ள சேற்றுப்பரப்பில் படிந்திருந்தது. அவரது மைந்தர் பத்ரபானு சிற்பிகளைக்கொண்டு அளவிட்டு அவர் அமர்ந்திருந்த பாறையில் செதுக்கிவைத்தார். அங்கு குஜ்ஜர்கள் நாள்தோறும் சென்று அரிசிப்பரப்பில் அருகமந்திரத்தை எழுதி மலரிட்டு வணங்கலாயினர். கஜ்ஜயந்த மலை ரைவத மலை என பெயர் கொண்டது. அவர் குலம் ரைவதகம் என அழைக்கப்படலாயிற்று. கஜ்ஜயந்தம் என்னும் பெயரே நினைவில் மறைந்து நூல்களில் எஞ்சியது.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்