காண்டீபம் - 34

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 5

அர்ஜுனன் தேவாரண்யத்தின் எல்லை என அமைந்த பிரதிவாகினி என்னும் பெயருள்ள காட்டாற்றின் கரையை அடைந்து, வழுக்கும் பாறைகளில் மெல்ல காலடி எடுத்து வைத்து அவற்றின் கரிய வளைவுகளின் ஊடாக வெண்ணுரை எழ சிரித்துக் கொண்டிருந்த ஆற்றுக்குள் இறங்கி முழங்காலளவு நீரில் நின்றான். நீரை அள்ளிக் குடித்து முகம் கழுவி தோளிலும் முதுகிலும் விட்டுக் கொண்டான். நீண்ட வழிநடை வெம்மையை இழந்து அவன் உடல் சிலிர்ப்பு கொண்டது.

மறுபக்கக் காட்டில் இருந்து பறந்து அவனருகே வந்த சிறிய மண்நிறக் குருவி ஒன்று அவனைச் சூழ்ந்து அம்பு தீட்டும் ஒலியுடன் பேசியபடி சிறகடித்துப் பறந்தது. அவன் முன் இருந்த பாறைவளைவில் அமர்ந்து சிறகை பிரித்து அடுக்கி தலை அதிர ஒலியெழுப்பியது. விருட்டென்று எழுந்து காற்றின் அலைகளில் ஏறி இறங்கி மீண்டும் சுற்றி வந்தது. மேலாடையால் முகம் துடைத்து கை தாழ்த்தும் போது அவன் அப்பறவையின் சொற்களை புரிந்து கொண்டான். “வேண்டாம், திரும்பிவிடு” என்றது அப்பறவை.

“யார் நீ?” என்று அர்ஜுனன் கேட்டான். “என் பெயர் வர்ணபக்ஷன். இங்குள காட்டில் என் குலம் வசிக்கிறது. நீ அங்கு தொலைவில் வருகையிலேயே பார்த்துவிட்டேன். இளையோனே, அழகும் நல்லுணர்வும் கொண்டிருக்கிறாய். உனக்கென்றிலாது செயலாற்றுகிறாய். அறம் உனக்கு துணை செய்கிறது. இக்காடு உனக்குரியதல்ல. விலகி செல்!” என்றது. அர்ஜுனன் புன்னகைத்து “பிற மானுடர் அனைவரும் அஞ்சி விலகிச் செல்லும் எங்கோ ஒரு வாயிலுக்கு அப்பால் எனக்குள்ள அமுதம் உள்ளது என்று எண்ணுகிறேன். பாரதவர்ஷத்தின் மலைச்சரிவுகளிலும் காடுகளிலும் நான் அலைந்து திரிவது அதற்காகவே. நீ சொல்லும் இவ்விலக்குச் சொற்களே நான் உள்ளே நுழைய போதுமானவை” என்றபின் பாய்ந்து இன்னொரு பாறையில் கால் வைத்து உடல் நிகர்நிலை கொண்டு நின்றான்.

“இது பொருளிலாச் சொல்” என்றது பறவை. “உன்னுள் வாழும் ஆன்மாவும் அது கொண்டுள்ள அழியாத்தேடலும் இங்கு ஒரு பொருட்டே அல்ல. உன் உடலின் ஊன் மட்டுமே இங்கு பொருள்பெறும். இங்கு இறப்பு உனக்கு நிகழுமென்றால் உன் உடல் வெறும் உணவு என்றே ஆகி மறையும். அதை தன் ஊர்தியெனக் கொண்டு தெய்வங்கள் வெறும் வெளியில் பதைபதைத்து அலையும்” என்றது வர்ணபக்ஷன். “நான் அஞ்சுவேன் என்று எண்ணுகிறாயா?” என்றபடி இன்னொரு பாறை மேல் கால் வைத்தான் அர்ஜுனன்.

“அஞ்சமாட்டாய் என்றறிவேன். தொலைவிலிருந்து உன்னைக் கண்டபோது எது என்னைக் கவர்ந்ததென்று இச்சொற்களை நான் சொல்லும்போது உன் விழிகளைக் கண்டு அறிந்தேன். உனது நிகரற்ற அச்சமின்மை. ஆனால் அச்சமின்மை அறியாமை என்று ஆகிவிடக்கூடாது. பிரித்தறியும் நுண்மை உன்னில் செயல்பட வேண்டும்.” பிறிதொரு பாறை மேல் தாவியபடி அர்ஜுனன் “அழகிய சிறகுள்ளவனே, எண்ணும் பொறுப்பு வில்லுக்கு. எய்யப்பட்ட அம்புக்கு செல்லும் பணி மட்டுமே” என்றான்.

அவன் தாவிச்சென்று நின்ற பாறைமுன் சுற்றி வந்து சிறகடித்து அவன் முன் பிறிதொரு பாறையில் அமர்ந்தபடி “வீண்சொற்கள்… அணிகள் போல உண்மையை மறைக்கும் திறன் கொண்டவை பிறிதில்லை. இக்காட்டிலும் நீ காவியத்தலைவனாக இருந்தாக வேண்டுமா என்ன?” என்றது வர்ணபக்ஷன். பிறிதொரு பாறைமேல் தாவி “இங்கு வருவதற்கு முன்னரே எனக்கான கதை வடிவம் எழுதப்பட்டுவிட்டது. அதை நான் நடிக்கிறேன்” என்றபின் மேலும் தாவி மறு கரையை ஒட்டிய பாறைமேல் நின்று அப்பால் நோக்கினான் அர்ஜுனன்.
.
“நூற்றாண்டுகளாக மானுடக் காலடி படாத காடு இது. நச்சுக்கோப்பை போல் வஞ்சம் கரந்துள்ளது” என்றது வர்ணபக்ஷன். “ஆம், அழகியது. ஆழ்ந்து உள்ளே ஈர்ப்பது. பொருள் உள்ள அனைத்தும் கொள்ளும் பேரமைதி நிறைந்தது” என்றான் அர்ஜுனன். “இனி உன்னை விலக்க முடியுமென்று நான் எண்ணவில்லை” என்று அவனுக்கு மேல் சிறகடித்தது வர்ணபக்ஷன். மறுபக்கத்து மணல் விளிம்பை அடைந்து கால் நனைத்து மிதித்து மேலேறிய அர்ஜுனனுக்கு மேல் பறந்து முன்னால் உள்ள சிறு சல்லிக்கிளையில் அமர்ந்து மேலும் கீழும் ஆடியபடி “ஏன் இதைச் சொல்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நீ வெல்லவேண்டுமென்று என் உள்ளம் விழைகிறது. ஏனென்றால் நீ வீரன்” என்றது.

“அதற்கான வழிகளைச் சொல்” என்றான் அர்ஜுனன். “இக்காட்டில் ஐந்து சுனைகள் உள்ளன. ஐந்து ஆடிகள், ஐந்து விழிகள். இக்காட்டின் ஐந்து உள்ளங்கள். அவற்றை ஒவ்வொன்றாக நீ கடந்து செல்வாய்” என்றது. தன் வில்லை எடுத்து அதன் நாணை இழுத்து கொக்கியில் மாட்டி செவியளவு இழுத்துவிட்டு நாணொலி எழுப்பினான் அர்ஜுனன். “வில்லுக்கு இங்கு வேலை இல்லை. ஏனெனில் கொடிகளும் செடிகளும் பற்றிச்செறிந்த இப்பெருங்காடு தொலைவென்பதே அற்றது. உன் கை தொடும் அண்மையில் ஒவ்வொன்றும் உள்ளன. உன்னை கொல்ல வரும் யானையை அதன் துதிக்கை உன்மேல் பட்ட பிறகுதான் உன்னால் பார்க்கமுடியும். இங்கு ஒருவர் தன் உடலெனக் கொண்ட தோள்வல்லமை அன்றி பிற படைக்கலன்கள் எதுவும் பயன் தருவதில்லை.”

அர்ஜுனன் புன்னகைத்தபின் ஒருஅம்பை மட்டும் கையில் எடுத்துக் கொண்டான். வர்ணபக்ஷன் “அது நன்று. ஆனால் பாதாள நாகங்களின் நஞ்சை அந்நுனியில் நீ கொண்டிராவிட்டால் அதில் என்ன பயன்? எழுந்து மத்தகம் காட்டும் மதகளிற்றை அது வெல்லுமா?” என்றது. “ஒவ்வொரு உயிரும் தன் உடலில் நூற்றிஎட்டு நரம்பு முடிச்சுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு முடிச்சிலும் ஒரு துளி நஞ்சு உறைந்துள்ளது. அம்பு நுனியென்ன, இக்கைவிரல்நுனியால் அவற்றில் ஒரு துளியைத் தொட்டு எழுப்பிவிட்டாலே உயிர்களை கொல்ல முடியும். நம்புக, இச்சுட்டுவிரல் ஒன்றே எனக்குப் போதும்” என்றான்.

துடித்து மேலெழுந்து சற்றே சரிந்து வளைந்து ஒரு இலையில் அமர்ந்து எழுந்தாடி “அப்படியென்றால் எதற்கு அம்பு?” என்றது வர்ணபக்ஷன். “இளமையிலிருந்தே அம்பு நுனியை நோக்கி என் உள்ளம் குவிக்க கற்றுள்ளேன். போர் முனையில் என் சித்தம் அமர்ந்திருப்பது இந்நுனியிலேயே” என்ற அர்ஜுனன் “வருக! நீ சொன்ன அவ்வைந்து சுனைகளையும் எனக்கு காட்டுக!” என்றான்.

“இக்காடு உனை நோக்கி சொன்ன ஒரு சொல் மட்டும்தானா நான் என்று ஐயுறுகிறேன். அறியாது தெறித்து வெளிவந்து உன்னை சூழ்ந்துளேன்” என்றது வர்ணபக்ஷன். இடம் மாறி அமர்ந்து திரும்பி “காட்டின் ஒளிபுகா ஆழத்தை நோக்கி உன்னை விலக்க நான் வந்தேனா, அல்லது என்னை மீறிய விசைகளால் உன்னை ஈர்த்து உள்ளே கொண்டு வரும் சொற்களை சொன்னேனா என்று குழம்புகிறேன்” என்றது.

அர்ஜுனன் “இவ்வினாக்களுக்கு பொருளே இல்லை. பல்லாயிரம் கோடி முடிச்சுகளால் ஆனது இவ்வலை. அதில் என் உடல் தொடும் முடிச்சைப் பற்றி மட்டுமே நான் உளம் கூர்கிறேன். என் விழி தொடும் எல்லைக்குள் வருபவை, என் அம்பு சென்று தொடும் எல்லைக்குள் வருபவை மட்டுமே நான் அறியற்பாலவை. இவ்வெல்லையை அமைத்துக் கொண்டதனால் எனது தத்துவங்கள் கூரியவை, எளியவை” என்றான்.

வர்ணபக்ஷன் எழுந்து சிறகுகளை காற்றில் படபடக்கும் தளிரிலைகள் போல் அடித்தபடி முன்னால் சென்று “என்னைத் தொடர்ந்து வருக! அச்சுனைகளை உனக்குக் காட்டுகிறேன்” என்றது. அர்ஜுனன் அதை தொடர்ந்தான். வர்ணபக்ஷன் தன் சிறகுகளால் இலைகளை விலக்கி மலர்ப்பொடிகளை உதிரவைத்தும் கனிந்த பழங்களை சிதைய வைத்தும் கிளைகளை விலக்கி காட்டைக் கடந்து சென்றது. “இச்சதுப்பு மண்ணுக்கு அப்பால் சூழ்ந்த புதர் இலைகளை தன் உள்ளொளியால் ஒளிரவைக்கும் முதல் தடாகம் உள்ளது. அதற்கு அகஸ்தியம் என்று பெயர். அச்சுனையில் வாழ்கிறாள் வர்கை. விண்ணின் இந்திரனின் அவையில் வாழ்ந்த அரம்பை அவள். இங்கு தன் கீழியல்பால் விழுந்து ஒரு முதலை வடிவம் கொண்டு வாழ்கிறாள். இக்காட்டுக்குள் நுழைபவர் எவராயினும் முதலில் அவளுக்கு உணவாவது வழக்கம்” என்றது.

“சொல், அச்சுனையின் இயல்பென்ன?” என்றான் அர்ஜுனன். “நன்று. அவள் இயல்பென்ன என்று நீ கேட்கவில்லை” என்றது வர்ணபக்ஷன். “வீரனே! பிராணம் என்று இச்சுனை அழைக்கப்படுகிறது. இக்காட்டில் உள்ள அத்தனை நீரோடைகளும் வழிந்தோடி இங்கு வந்து சேர்கின்றன. இச்சுனை நிறைந்து பல்லாறுகளாக பெருகிப் பிரிந்து பாறைகளில் அலைத்தும் சரிவுகளில் சுழன்றிறங்கியும் ஓடி காட்டாறென மாறி காட்டை கடந்து செல்கிறது. சற்று முன் நீ இறங்கிய ஆறு அதுவே. இக்காட்டில் உள்ள எந்தச் சிற்றோடையை தொடுபவனும் இச்சுனையை தொட்டவனாகிறான். இந்தப் பெருங்காட்டின் உயிர்ப்பு இதுதான்.”

புதர்களினூடாக அர்ஜுனன் எச்சரிக்கையுடன் காலெடுத்து வைத்து முன்னால் சென்றான். “நோக்கு, ஈடிணையற்ற வல்லமை கொண்டது அந்த முதலை. தான் விரும்பும் உருவம் எடுக்கும் ஆற்றல் கொண்டது மட்டுமல்ல, நீ விரும்பும் உருவெடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. அது எவர் விருப்பென்று தெளியாத மயங்கலில் உன் உயிர் உண்டு தன் இருளுக்கு மீளும். எண்ணித் துணிக!” அர்ஜுனன் “சொற்களுக்கு நன்றி. இனி இச்சுனைக்கரையிலிருந்து விடை அறியாது என்னால் மீள முடியுமா?” என்றான். தன் வில்லை மரக்கிளையில் மாட்டிவிட்டு வலக்கையில் ஏந்திய சிற்றம்புடன் வழுக்கும் சேற்றில் நடந்து அச்சுனையை அடைந்தான்.

இருளை எதிரொளிக்கும் மந்தண ஆடி போல் சீரான வட்ட வடிவில் அமைந்திருந்தது அப்பெருஞ்சுனை. அதன் அலைகளே ஒளி அதிலிருப்பதை காட்டின. அணுகும்தோறும் அதன் குளிரெழுந்து அவன் காதுகளை தொட்டது. பின்பு மூக்கு நுனி உறைந்தது. உதடுகள் இறுகின. கால்கள் நடுங்கத்தொடங்கின. “கடுங்குளிர் கொண்டது அது. ஏனெனில் அடியிலா அதலம் வரை அதன் ஆழம் இருப்பதாக சொல்கிறார்கள். ஊறித்தேங்கிய முதற்கணம் முதல் இன்றுவரை இதில் கதிரொளி பட்டதில்லை. அதில் ஒரு துளி எடுத்து உன் மேல் வீசினால் துளைத்து தசைக்குள் புகும் என்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் குளிர்ந்து தன்னுள் தானென இறுகி பாதரசம் என்று ஆகிவிட்டிருக்கிறது அது” என்றது வர்ணபக்ஷன்.

பற்கள் கிட்டித்து கழுத்துத் தசைகள் நாணென பூட்டிக்கொள்ள வயிறை இறுக்கி ஒவ்வொரு காலடியையும் வைத்துப் பறித்து எடுத்து ஊன்றி முன் சென்று அச்சுனைக்கரையை அடைந்தான் அர்ஜுனன். விழிமயக்கா உளமயக்கா என்றறியாது அச்சுனை தன்னை நோக்கி அறிந்து கொண்டது என்ற ஓர் உணர்வை அடைந்தான். அசைவற்ற முதலையின் விழியசைவு அதை ஓர் உயிரெனக்காட்டுவதுபோல. அசையாது நின்று அச்சுனையை கூர்ந்து நோக்கினான். அச்சுனை தன்னை விழிகளில் குவித்து அவனை நோக்கிக் கொண்டிருந்தது. உடலெங்கும் அதன் நோக்கை உணர்ந்து அவ்வெடையை அனைத்து எண்ணங்களாலும் தாங்கியபடி மேலும் காலெடுத்து முன்னால் சென்றான்.

அதன் கரையிலெங்கும் அந்த முதலை தென்படவில்லை. பிறிதொரு உயிரும் அந்நீர்ப்பரப்பில் இல்லை என்று தெரிந்தது. அசைவின்மை இருளெனத்தேங்கிய ஆழத்தை நோக்கி மேலும் அணுகிச் சென்றான். இழைத்த மரப்பலகைப் பரப்பென தெரிந்த சேற்று வளைவில் எங்கும் ஒரு காலடித்தடம்கூட இருக்கவில்லை. வர்ணபக்ஷன் அப்பால் தேங்கி நின்றுவிட்டது. பறவைகள் கூடவா இச்சுனையை அணுகுவதில்லை என்று அர்ஜுனன் வியந்தான்.

நீர்ப்பரப்பை அணுகி குனிந்து இரு கைகளாலும் நீரை அள்ளினான். ஒரு கையில் அள்ளிய அந்நீரை அவனால் மேலே தூக்கமுடியவில்லை. இரும்பு உருளை என எடை கொண்டிருந்தது அவ்விசையில் அவன் புயங்களின் தசைகளும் தோள்களும் இழுபட்டு அதிர்ந்தன. முதுகெலும்பின் கொக்கிகள் உரசி பொறி கொண்டன. அள்ளிய நீரை விடுவதில்லை என்று தன் முழு ஆற்றலாலும் அவன் அதை மேலே தூக்குகையில் அவனுக்குப் பின்னால் இனிய குரலில் “அதை விட்டுவிடு மைந்தா” என்று குந்தி சொன்னதை கேட்டான்.

திடுக்கிட்டுத் திரும்பி தன் அருகே நின்ற அன்னையை நோக்கி “நீங்களா?” என்றான். “நானென்றே கொள். இது கொலை முதலை வாழும் சுனை. இங்கு உயிர் துறந்த பல்லாயிரம் பேரை நான் அறிவேன். இதன் ஆழத்தில் அவர்களின் நுண்வடிவுகள் சிறையுண்டுள்ளன. எக்காலத்துக்குமான இருளில் அவை பதைபதைத்துக் கூவுவதை கேட்கிறேன். அவற்றில் ஒன்றாக என் மைந்தன் ஆவதை நான் விரும்பவில்லை. விலகு” என்றாள். “நான் என்ன செய்வது?” என்றான் அர்ஜுனன். “விட்டேன் என்று அந்நீரை மீண்டும் அதிலேயே விட்டு திரும்பி விடு” என்றாள் குந்தி.

“நான் இச்சுனையில் இறந்தால்தான் என்ன? தங்களுக்கு நான்கு மைந்தர்கள் எஞ்சுகிறார்கள் அல்லவா?” என்றான் அர்ஜுனன். “நீ இறந்தால் பின் இப்புவியில் எனக்கு ஆண்களே இல்லை” என்றாள் குந்தி. திகைத்து “அன்னையே” என்றான் அர்ஜுனன். “அகலாது அணுகாது நான் காயும் அனல் நீ. உன் நெஞ்சறிந்த முதல் பெண் நான்” என்றாள் குந்தி. “ஆம். நீ இன்றி எங்ஙனம் நானில்லையோ அங்ஙனம் நான் இன்றி நீயில்லை. என் சொற்களை கேள். அந்நீரை விட்டு பின்னால் விலகு” என்றாள்.

ஒரு கணத்தின் ஆயிரத்தில் ஒரு பகுதியில் அர்ஜுனன் அந்த கை நீரை சற்றே தாழ்த்தினான். அது ஓர் எண்ணமென அறிந்த மறுகணம் அதை மேலே தூக்கி தன் தலை மேல் விட்டுக் கொண்டான். இருகைகளிலும் கூர் உகிர்கள் எழ முகம் நீண்டு வாய் பிளந்து வெண்பற்கள் தெரிய முதலை உருக்கொண்டு அவன் மேல் பாய்ந்து தள்ளி கீழே வீழ்த்தினாள் குந்தி. தன்னைவிட மும்மடங்கு பெரிய அம்முதலையின் இரு கைகளையும் இறுகப்பற்றி புரண்டு அதன் மேல் தன் முழு உடலையும் அமைத்து மண்ணோடு இறுக்கிக் கொண்டான் அர்ஜுனன்.

முதலை துள்ளி விழுந்தது. புரண்டு திமிறியது. அதன் பிளந்து திரும்பிய வாய்க்கும் சுழன்று சுழன்று அறைந்த வாலுக்கும் நடுவே நான்கு கால்களுக்கு இடையில் தன் முழு உடலையும் வைத்துக் கொண்டான். முதலை அவனை திருப்பி தான் மேலேறி அடிப்படுத்த முயன்றது. அதை அசைத்து மேலேற்றினான். பின்பு தன் ஒரு காலை ஊன்றி ஒரு கணத்தில் அதை இரு கைகளாலும் பற்றித் தூக்கிச் சுழற்றி சேற்றுக் கரைகளுக்கு அப்பால் புதர்களுக்குள் வீசினான். மரத்தடி விழும் ஓசையுடன் மண்ணை அறைந்து விழுந்த முதலை புதர்களுக்கு உள்ளே துடித்து புரண்டு மறைந்தது.

புதர்களின் இலைத் தழைப்பினுள் அதன் செதில்வால் நெளிந்து அமைவதை அர்ஜுனன் கண்டான். சேற்றில் வழுக்கும் கால்களுடன் சற்றே குனிந்து மேலேறி அவன் நோக்கும்போது அப்புதர்களுக்கு அப்பால் புரண்டு எழுந்து கால் மடித்து கையூன்றி குழல் சரிந்து தரையில் விழ கலைந்த இலைகள் கன்னத்திலும் தோள்களிலும் ஒட்டியிருக்க நீண்ட கரிய விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்த வர்கையைக் கண்டு “உன் பெயர் வர்கை என எண்ணுகிறேன்” என்றான்.

மூச்சிரைக்க உதடுகளை நாவால் ஈரம் செய்தபடி அவள் ஆமென தலையசைத்தாள். “இங்கிருந்து விலகி மேலெழ உனக்கு வேளை வந்துள்ளது” என்றான் அர்ஜுனன். “எதன் பொருட்டு இங்கு காத்திருந்தாயோ அது நிறைவேறிவிட்டது.” அவள் நீள்மூச்செறிந்து கால் மடித்து எழுந்து உலைந்த தன் ஆடைகளைத் திருத்தி குழலை அள்ளி தலைக்கு மேலிட்டு “ஆம்” என்றாள். “உன் விடையை அறிந்துவிட்டாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. என் வினா மறைந்துவிட்டது” என்றாள் அவள். “அவ்வண்ணமே ஆகுக!” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அச்சமற்றவன் ஒருவனால் நான் என் நீர்த்தளையிலிருந்து விடுபடுவேன் என்று எனக்கு சொல்லப்பட்டது. படைக்கலன்கள் முன், நோயின் முன், அவமதிப்பின் முன் அச்சமற்றிருப்பவன் வீரன். உண்மையின் முன் முற்றிலும் அச்சமற்றிருப்பவனே மாவீரன். நீ அத்தகையவன். இப்புவி உள்ள அளவும் உன் பெயர் நிலைக்கும். வீரமென்னும் சொல்லுக்கு நிகரென அது நூலோர் நெஞ்சில் வாழும்” என்றபின் இலைகளில் விழுந்த ஒளிக்கதிரென பரவி மெல்ல அலையடித்து மறைந்தாள் வர்கை.

புதர்களைக் கடந்து சென்ற அர்ஜுனனின் தோளில் வந்தமர்ந்து சிறகடித்து எம்பிப்பறந்து மீண்டும் வந்தமர்ந்த வர்ணபக்ஷன் சிறு செவ்வலகை விரித்து கைக்குழந்தையின் சிரிப்பென ஒலியெழுப்பியது. “நன்று நன்று. இவ்வெற்றி நிகழ்ந்ததும் அறிந்தேன், இதையே நான் எதிர்நோக்கினேன் என. இது நிகழ்ந்தாக வேண்டும். இல்லையேல் இக்கதைக்கு இனியதோர் முடிவு இல்லை.”

அர்ஜுனன் “நீ என்ன கண்டாய்?” என்றான். “நீர்பிளந்து எழுந்து உன்னைக் கவ்வ வந்த பெருமுதலையை முதலில் நீ காணவில்லை. அந்த ஒரு கணத்தில் நீ உடல் கிழிபட்டு குருதி வழிய அதற்கு உணவாவதை நான் கண்டுவிட்டேன். நல்லவேளை மறுகணம் நீ திரும்பி அதன் இரு கைகளையும் பற்றிக் கொண்டாய். சித்தத்திற்கு அப்பால் உன் தசைகளில் உள்ளது போர்ப்பயிற்சி. அஞ்சி அதன் நீண்ட வாயை நீ பற்றியிருந்தால் கைகளால் உன்னை கிழித்து எறிந்திருக்கும்” என்றது வர்ணபக்ஷன்.

“இப்போது வென்றது நானல்ல. எனக்கு போர்க்கலை பயிற்றுவித்த ஆசிரியர். அவர் பெயர் துரோணர். கற்று மறக்காத கலை வெறும் ஆணவம் மட்டுமே, முற்றிலும் பயனற்றது என்று அவர் சொல்வதுண்டு” என்றான் அர்ஜுனன். “வருக! இரண்டாவது சுனை இங்கு அருகில்தான். அதற்கு சௌஃபத்ரம் என்று பெயர். அங்கு வாழ்பவள் சௌரஃபேயி என்னும் தேவர் குலத்துப்பெண். பெருமுதலை என விழிநீர் உகுத்து காத்திருக்கிறாள்” என்றது வர்ணபக்ஷன். “அச்சுனையின் இயல்பென்ன?” என்று அர்ஜுனன் கேட்டான்.

“அதை அபானம் என்கிறார்கள்” என்றது வர்ணபக்ஷன். “அச்சுனையில் ஒரு துளி நீர் கூட வெளியிலிருந்து உள்ளே வருவதில்லை. ஒரு துளி நீர் கூட வெளியே வழிவதும் இல்லை. ஆனால் கரை விளிம்புகளை முற்றிலும் நிறைத்து எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கிறது அது. இக்காட்டிலுள்ள அத்தனை ஆறுகளின் அடியிலும் மண்ணுக்குள் கண்காணா ஆறுகள் ஓடுகின்றன என்கின்றனர் என் முன்னோர். அவ்வாறுகள் அனைத்தும் சென்று சேரும் மந்தண மையமே அச்சுனை. அங்கிருந்து மீண்டும் மண்ணுக்குள்ளேயே ஊறி அவை விலகிச் செல்கின்றன. முதற்சுனையின் மறு எல்லை அது.”

அர்ஜுனன் “ஆம், அதை நான் உய்த்துணர்ந்தேன்” என்றான். புதர்களைக் கடந்து செல்லும் தோறும் தன் இமைகளிலும் கன்னங்களிலும் வெம்மை வந்து படுவதை உணர்ந்தான். “அதை நான் அணுக முடியாது” என்றது வர்ணபக்ஷன். “உள்ளிருந்து கொப்பளித்தெழும் அனலால் நீரே தழலாகி அலையடித்துக்கொண்டிருக்கும் வேள்விக்குளம் அது. இன்னும் சற்று நேரத்தில் என் மென்தூவிகள் பொசுங்கத்தொடங்கிவிடும். நீயே முன் செல்க! இப்பெருமரத்தின் உச்சியில் இருந்து உன்னை நான் காண்கிறேன்” என்றது. “அவ்வண்ணமே ஆகுக!” என்றபின் அர்ஜுனன் தன் அம்பை முன்னால் நீட்டியபடி மெல்ல காலடி எடுத்து வைத்து சென்றான்.

அவனைச் சூழ்ந்திருந்த மரங்கள் இலை அனைத்தும் பொசுங்கிச் சுருண்டு இருப்பதை கண்டான். பாறைகள் அடுப்பிலேற்றப்பட்ட கருங்கலங்கள் போல் வெம்மை கொண்டிருந்தமையால் இலைகளிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் பாம்பு சீறும் ஒலி எழுப்பி ஆவியாயின. அவற்றுக்கிடையே இருந்த சேற்றுப்பரப்பில் கால் வைத்து அவன் நடந்து சென்றான். பின்னர் உருளியில் காய்ச்சி கொட்டப்பட்ட கூழ் போல சேறு கொதித்து குமிழி எழத்தொடங்கியது. சுற்றிலும் நோக்கியபின் ஒரு பட்ட மரத்தின் கிளைகளை ஒடித்து அவற்றின் கணுக்களில் தன் இரு கால்களையும் வைத்து மேல் நுனியை கையால் பற்றியபடி அச்சேற்றில் ஊன்றி அர்ஜுனன் நடந்து சென்றான்.

நூறு பெருநாகங்கள் உள்ளே உடல் வளைத்து போரிடுவது போல கொப்பளித்துக் கொண்டிருந்த அப்பெருஞ்சுனையின் நீர்ப்பரப்பை அணுகினான். ஒவ்வொரு கணமும் அது விழிமுன் பெருகி வருவதை கண்டான். வானிலிருந்து கண்காணா பெரும் பாறைகள் அதில் விழுவதைப்போல, உள்ளே இருந்து பெருவெடிப்புகள் நிகழ்ந்து நீர் சீறி எழுவதுபோல அது கொந்தளித்தது. சேற்று விளிம்பை அடைந்து அந்நீர் நோக்கி குனிந்தான். தன் விரலால் அதை தொட்டான். அமிலமென அவன் விரலை பொசுக்கியது.

பற்களை கிட்டித்து அவ்வலி உடல் முழுக்க பரவியபின் அதைக் கடந்து இரு கைகளையும் குவித்து அதை அள்ளினான். “மைந்தா” என்று குந்தியின் ஒலியை கேட்டான். “உன்னை பொசுக்கிவிடும் அவ்வெரிநீர். அதை விட்டு விடு” என்றாள் அவள். அவன் தலை திருப்பாது “தோற்பதற்கென நான் இங்கு வரவில்லை” என்றான். “நீ அதை தொட்டாய். அறிவாய் அது இப்புவியை எரித்து அழிக்கும் பேரனல்” என்றாள் குந்தி. “சின்னஞ்சிறு மகளாக அவ்வனலை நானும் கொண்டிருந்தேன், அன்னையாகி அதைக் கடந்து அணைந்தேன். இது அணையா அனல். வேண்டாம், விலகு” என்று அவள் சொன்னாள்.

“விலகு, விலகிச்செல்” என்றான் அர்ஜுனன். “உன்னை நான் அறிவேன், விலகு.” அவள் “ஆம், நீ அறிவாய் என் குளிர்ந்த ஆழத்தில் வந்திறங்கி என்னை அனல் வடிவாக்கிய கதிரவனை. இன்றும் என் ஆழத்தில் அவனையே நான் சூடியுள்ளேன். அவனன்றி பிறிதொருவன் என் ஆழத்தை அடைந்ததில்லை. இந்தச்சுனை ஏன் கொதிக்கிறது? இதனுள்ளும் கதிரவனே குடிகொள்கிறான்.” அர்ஜுனன் “சீ! விலகு” என்று சீறியபடி திரும்பினான்.

“நான் யாரென்று அறியமாட்டாயா?” என்றாள் குந்தி. “நான் உன்னை அறிவேன். விலகு!” என்று தன் முழங்கையால் அவள் கையை தட்டி அந்நீரை தன் தலை மேலும் தோள் மேலும் விட்டுக் கொண்டான். அக்கணமே முதலை என உருமாறி அவன் மேல் அவள் பாய்ந்தாள். ஒரு கையில் பற்றியிருந்த அவள் கையை வளைத்து முதலையின் பிளந்த வாய்க்குள் செலுத்தி முழு உடலால் உந்தி அவளைச்சரித்து அவள் மேல் விழுந்தான். தன் கையை தானே கவ்விய முதலை வால் துடிதுடிக்க மறு கையால் அவனை அடிக்க முயன்றது. அக்கையை பிறிதொரு கையால் பிடித்து முதலையின் கீழ்த்தாடை மேல் தன் இடுப்பை அமைத்து முழு எடையாலும் அதை அழுத்திக் கொண்டான்.

தன் கை கடிபடும் வலியில் வாலை சேற்றில் அடித்து துடித்தது முதலை. அதன் முழு ஆற்றலையும் தன் தசைகளாலும் ஈடு செய்தான். ஒவ்வொரு கணமென முதலை வலுக்குறைய இருவரும் நிகரென்றாயினர். பிறிதொரு கணம் பிறிதொரு கணம் என முதலை அடங்க அவன் மேலோங்கிய முதல் தருணத்தில் அதை சேற்றில் சுழற்றி இழுத்து மேலே இருந்த புல்வெளி நோக்கி வீசினான். அங்கு விழுந்து புரண்டு வாலை நிலத்தில் ஓங்கி அறைந்து இருகால்களில் எழுந்த முதலை சௌரஃபேயி ஆயிற்று. “என்னை வென்றீர் இளைய பாண்டவரே” என்றாள். “என் வினா உதிர்ந்து மறைந்தது. நிறைவுற்றேன்.” இலைகளில் விழுந்த அடிமரங்களின் நிழல் போல அலையடித்து வானிலேறி மறைந்தாள் சௌரஃபேயி.