காண்டீபம் - 28
பகுதி மூன்று : முதல்நடம் – 11
மீண்டும் தன்னை உணர்ந்த சித்ராங்கதன் திகைத்து எழுந்த விசையில் நீர்ப்புதர்த்தீவு சற்று அசைந்து நகர்ந்தது. ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கி “என்ன?” என்றாள். அவன் தொலைவில் ஒளி அலையடித்த ஏரிப்பரப்பை நோக்கியபடி இறுகி நின்றான். “சொல்லுங்கள்” என்றாள் ஃபால்குனை. “இல்லை” என்றபின் அவன் பெருமூச்சுவிட்டு “நான் மீள்கிறேன்” என்றான். “எங்கு?” என்றாள் ஃபால்குனை. “அரண்மனைக்கு” என்று அவன் அவளை நோக்காமலேயே சொன்னான்.
“என்ன?” அவள் மீண்டும் கேட்டாள். “நான் இப்பொழுது அறிந்தது…” என்றபின் “நான் மீள்கிறேன்” என்றான். சுட்டுவிரல் நகத்தைக் கடித்து விழிதாழ்த்தி “நான் இனி வரப்போவதில்லை” என்றான். “என்ன அறிந்தீர்கள் இளவரசே?” என்றாள் ஃபால்குனை. “நான்…” என்றபின் சித்ராங்கதன் அந்த சொல் பொருத்தமற்றிருக்கிறது என உணர்ந்து “பிறிதொன்று…” எனத்தொடங்கி “இல்லை, நான் போகிறேன்…” என்றபடி குடிலை நோக்கி சென்றான்.
ஃபால்குனை கையூன்றி எழுந்து பறந்த தன் ஆடையை இழுத்து செருகியபடி “இங்கு காற்று சற்று விரைந்து வீசுகிறது” என்றாள். இயல்பாக வந்த அந்த சொற்றொடரால் உளவிசை சற்றே தழைந்த சித்ராங்கதன் சிறு நீள்மூச்சுடன் “ஆம்” என்றான். “மொத்த நகரையே கிழக்கு நோக்கி தள்ளிக் கொண்டு செல்கிறது. விந்தைதான்… “ என்றாள் ஃபால்குனை. “இடம்மாறுநகர் என்று பிறிதொன்று பாரதவர்ஷத்தில் இல்லை.” காவலன் “உருமாறவும் செய்கிறது… வளர்பிறை காலத்தில் இது பெண். தேய்பிறையில் ஆண்” என்றான். ஃபால்குனை திரும்பி நோக்க “பெண்ணாக இருக்கையில் இது கிழக்கே குவிந்திருக்கும். ஆணாக இருக்கையில் நீர்வெளியெங்கும் பரவியிருக்கும்” என்றான்.
“கிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி காற்று வீசத்தொடங்கும்போது இத்தீவுகள் அனைத்தும் திரும்பி செல்லத்தொடங்கும்” என்றான் சித்ராங்கதன். “ஒவ்வொரு ஐந்து நாளுக்கும் ஒரு முறை இந்நகரின் அமைப்பு முற்றிலும் மாறிவிடுகிறது. நடுவே அரசரின் அரண்மனை மட்டுமே நிலைத்திருக்கிறது. ஆகவே இந்நகரை பெரும் சக்கரம் என்பவர்கள் உண்டு. அரசர் அதன் அச்சு” என்றான். அவன் குரல் தழுதழுத்திருந்தது. அழுதுமுடிந்து பேசுபவன் போல. மூச்சை இழுத்து தன் உடலை நேராக நிறுத்திக்கொண்டான். தோளில் எடை ஏற்றிக்கொண்டவன் போல அவன் இடை வளைந்தது.
ஃபால்குனை நடுவே செம்மண் குன்றுமேல் தெரிந்த அரசமாளிகையை நோக்கி “ஆம், உண்மை” என்றாள். அவள் நோக்கு தன்னை தொட்டதும் சித்ராங்கதன் மீண்டும் விதிர்த்தான். திரும்பி காவலனை நோக்கி மென்மையான குரலில் “என் குறடுகள்” என்றான். தன் கால்கள் நிலையற்ற கொடிப்பரப்பில் ஊன்றியிருப்பதனால்தான் உடல் சமன்குலைகிறது என்று நினைத்துக்கொண்டான். காவலன் அளித்த குறடுகளுக்குள் கால்களைச் செலுத்தி நிமிர்ந்து நின்றபோது அவன் விழிகள் மாறின. காவலனிடம் “நான் கிளம்புகிறேன், படகை எடுக்கும்படி அவனிடம் சொல்” என்றான்.
“இளவரசே, நீங்கள் அறிந்த நிலை வேதநிறைவுக் கொள்கையால் பல முறை விளக்கப்பட்டுள்ளது. இரண்டின்மை என்று அதை சொல்கிறார்கள். ஞேயியும் ஞாதாவும் ஒன்றாகி ஞானம் மட்டும் எஞ்சும் நிலை. அந்த ஞானமும் முதல் முடிவிலா ஞானவெளியாகிய ஒன்றின் சிறுதுளியே. நீராவியும் குளிர்காற்றும் இணைந்து நீர்த்துளியாகி அந்நீர்த்துளி கடலில் சென்றடைவது போல் என்று அதை விளக்குகிறார்கள்” என்றாள் ஃபால்குனை. தன் கைகளில் தோள்வளைகளையும் கங்கணங்களையும் அணிந்தபடி “வெறும் சொற்கள்” என்றான் சித்ராங்கதன். “இத்தனை சொற்களைக்கொண்டு அதை விளக்கி என்ன பயன்?”
“சொற்கள் அதன் மீதான ஐயங்களையே களைகின்றன. அறிதல் அங்கு அக்கணத்தில் நிகழ்கிறது” என்றாள் ஃபால்குனை. “நான் இன்று எதையும் அறியவில்லை” என்றபின் “அகம் நிலைகுலைந்துள்ளது. அவைக்கூடத்தில் நாளை சந்திப்போம்” என்றபடி படகை நோக்கி நடந்தான். ஃபால்குனை “எனில் அவ்வண்ணமே ஆகுக” என்றபின் “நான் இவ்வேரியில் சற்று நீந்தி வரலாமென்று எண்ணுகிறேன்” என்றாள். “இங்கா?” என்றான் சித்ராங்கதன். “ஆம், ஆழத்தில்” என்றாள் ஃபால்குனை. “ஆழத்தில் நாம் அறியாதவை முடிவிலாதுள்ளன.”
அவள் தன் மேலாடையைச் சுற்றி இடையில் செருகிய பின் துள்ளி நீரில் அம்பென குதித்து மூழ்கி மறைந்தாள். அவள் சென்ற சுழியின் அலை வட்டங்களை நோக்கி சில கணங்கள் நின்றபின் அவன் திரும்பி படகை நோக்கி மீண்டும் ஓர் அடியெடுத்து வைத்தான். அவள் சென்றபாதை குமிழிகளாகத் தெரிந்தது. நிறமின்மையை வடிவமாகக் கொண்ட மீன்கூட்டங்கள் அங்கே மொய்த்துச் சுழன்றன. நீர் இந்திரனைப்போல் உடலெங்கும் விழிகள் கொண்டது. அவன் படகில் ஏறிக்கொண்டான்.
நீருக்குமேல் எழுந்த ஃபால்குனை அவனை நோக்கி “வா” என்றாள். அவன் திகைத்து காவலனை நோக்க “வா” என்றாள் மீண்டும். அவள் மூழ்கிய இடத்தில் கூந்தல் அலையாகி சுழன்று மறைந்தது. சித்ராங்கதன் எழுந்து தன் குறடுகளை விரைந்து கழற்றி வீசிவிட்டு நீரில் பாய்ந்தான். அவன் உடலணிந்த கவசமும் தோள்வளைகளும் அவனை இறுகிய இரும்புப்பாவை என செங்குத்தாக மூழ்கச்செய்தன.
நீருக்குள் மூழ்கி தன் அருகே வந்த சித்ராங்கதனை ஏறிட்டு நோக்கி ஃபால்குனை சிரித்தாள். பற்கள் மின்னிய வாயிலிருந்து அவள் மூச்சு பொற்குமிழ்களாக மாறி வீங்கி பருத்து மேலே சென்று மறைந்தது. அவள் கை நீண்டு வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டதும் அவன் மூழ்கிய விரைவு குறைந்தது. அவன் கவசத்தை அவள் கழற்றினாள். அது திரும்பித் திரும்பி மூழ்கி நீரின் இருளுக்குள் சென்றது. இருவரும் நீர்க்கொடிகள் நெளிந்த ஆழத்தில் உடலால் துழாவிச் சென்றனர். இருவர் உடல்களும் ஒன்றையொன்று மெல்ல தொட்டு வழுக்கி விலகின. மெல்ல தொடுகையிலேயே தோல் நுண்ணிதின் அறிகிறது.
நீர்ப்பரப்பைப் பிளந்து மேலே வந்து மூச்சிழுத்து சிரித்த ஃபால்குனை “ஆழம் பிறிதோர் உலகம்” என்றாள். “ஆம்” என்றான் சித்ராங்கதன். “அங்கு மேலிருந்து மூழ்கியவை அனைத்தும் சென்று நிறைந்துள்ளன.” அவள் அவன் விழிகளை நோக்கியபின் “அங்கு செல்வோம்” என்றாள். “அங்கு சென்றவர்கள் மீள்வதில்லை என்கிறார்கள்” என்றான் சித்ராங்கதன். “மீளாவிட்டால் என்ன?” என்றபின் ஃபால்குனை மீண்டும் மூழ்கினாள். அவள் நெளியும் கால்களுக்கு அருகே சித்ராங்கதன் மூழ்கி வந்தான். கால்களை இழுத்து வளைந்து அவன் முகத்தை நோக்கி நீர்க்குமிழிகளென சிரித்தபடி அவள் இறங்கிச் சென்றாள்.
காலால் நீரை உந்தி கை நீட்டி அவளை அவன் தொடர்ந்தான். அந்த ஏரியில் அவன் விழுந்து நீந்தக்கற்றபின் இறங்கியதேயில்லை. ஆனால் அந்த முதல் மூழ்கலை ஒவ்வொரு நீர்க்குமிழியையும் அலைநெளிவையும் என நினைவிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. ஒவ்வொரு எண்ணமென மீண்டும் அடையமுடிந்தது. அன்று ஆழம் அவனை அச்சுறுத்தியது. ஆழம் அப்பால் என இருக்கவில்லை. அவனைச் சூழ்ந்து கைகளையும் கால்களையும் பற்றியிருந்தது. கீழே மேலும் மேலும் செறிந்து சென்றது. நீர் என்பதே ஆழம் மட்டும்தான்.
அப்போது ஆழம் ஈர்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்தான். பாதிமூடிய கருவூலப்பெட்டி. அவன் தலைக்குமேல் ஃபால்குனை சிரித்தபடி கருங்குழல் சுருள்கள் அலையில் நெளிய அவனை நோக்கினாள். அவன் எம்பி ஆடையை பற்ற வந்தான். அவள் அக்கைகளை தன் கால்களால் உதைத்து விலகிச் சென்றாள். அவன் தோள்வளைகளும் கங்கணங்களும் எடைமிகத் தொடங்கின. அவன் உடல் மேலும் மேலும் என ஆழத்தை நாடி சென்றது. அவனுக்குமேல் சுருண்டும் குவிந்தும் சுழன்றும் அவள் கடந்து செல்வதை சித்ராங்கதன் கண்டான். இரு கைகளால் நீரை உந்தி கால்களால் மிதித்து மேலிருந்த அனைத்தையும் பின் தள்ளி அவளை தொடர்ந்தான்.
அவள் உடலிலிருந்து எழுந்த மேலாடை நீண்டு அலையடித்தது. அதை பற்றி அவன் இழுக்கையில் சிரித்தபடி சுழன்று அதை கைவிட்டு வளைந்து இருண்ட ஆழத்திற்கு ஒளிரும் உள்ளங்கால்களுடன் அவள் இறங்கி மறைந்தாள். அவ்வாடையை தன்னைச் சுற்றி நெளிந்த ஒளியென கண்டான். முகத்தில் அதன் மென்பரப்பு உரசிச்சென்றது. நீர்ப் பலகைகளை கைகளால் பற்றி திறந்து நீர்த்தூண்களை உதைத்து நீர்த் திரைகளை கிழித்து சித்ராங்கதன் ஆழத்தை நோக்கி சென்றான். தன்னைச் சூழ்ந்து இருந்த நீரொளி மங்கி இருண்டு விட்டதை கண்டான். அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. தொலைவில் வண்ணம் ஒன்று கரைந்து வழிந்திருப்பது தெரிந்தது. அது நீண்டு குவிந்து நீள்கையில் அவளாகி மாறி மறைந்தது.
அவனை ஆயிரம் நுண்கைகளால் அள்ளிச்சுழற்றி இழுத்துக் கொண்டிருந்த ஆழம் மெல்ல அவ்விசையை இழந்து நெளியும் சுவர்ப்பரப்பென ஆயிற்று. அதில் இறங்க மூச்சால் இறுக்கி உடலை மேலும் உந்த வேண்டியிருந்தது. தசையில் முள் என தன்னை தைத்து அதனுள் சென்றான். சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த ஃபால்குனையின் கை வெள்ளைகளும் கால் வெள்ளைகளும் மட்டும் அல்லி நிறத்தில் தெரிந்தன. அவள் வளைந்து திரும்பியபோது கன்னங்களும் கழுத்தும் மின்னி மறைந்தன. அவன் முழு மூச்சையும் அசைவென்றாக்கி உந்திச்சென்று நெளிந்த அவள் இடைக்கச்சை நுனியைப்பற்றினான். அதைக் கழற்றி உதறியபடி அவள் சுழன்று மேலும் ஆழத்திற்கு சென்றாள்.
தன் உடலின் ஆடைகளாலேயே நீந்துவதும் அமிழ்வதும் அத்தனை கடினமாக இருக்கிறது என்று அவன் உணர்ந்தான். நெஞ்சுக்கு முன்னிருந்த மூன்று சரடுகளின் முடிச்சுகளை இழுத்து அவிழ்த்து தன் மெய்ப்பையை கழற்றி மேலெழுந்து பறந்தகல விட்டான். பின்பு உள்ளே அணிந்திருந்த பட்டாலான மெய்யாடையை கழற்றி பறந்தெழ விட்டான். அவனது சுரிகுழல் நீரலைகளில் அலைபாய்ந்தது. சுழன்று திரும்பியபோது தனக்கு முன் நீந்திச்செல்லும் பிறிதொருத்தியைக் கண்டு திகைத்தான். அவள் கைநீட்டி ஃபால்குனையை அடைந்து தோள்சுற்றி கைசுழற்றி இறுக்கி அணைத்து அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டபோது உடல்சிலிர்த்தான்.
அவர்களின் ஆடலை மூச்சு தளர அவன் நோக்கி நின்றான். அப்போது நீர்வாயில் திறந்து தன்னை நோக்கி வரும் ஒருவனை கண்டான். திரண்ட தோள்களும் நீண்ட மெலிந்த கைகளும் கூரிய நகைப்பெழுந்த விழிகளும் கொண்டவன். நாண் இழுத்து உச்ச விசையில் அம்பு நிறுத்தப்பட்ட மூங்கில் வில் போன்றவன். அவன் அஞ்சி பின்னால் நகரமுயன்றபோது நீர் அழுத்தி முன்னால் தள்ளியது. துளைக்கும் காமம் நிறைந்த விழிகள். அவன் நன்கறிந்த சொல் ஒன்று கரந்த இதழ்கள். அவன் தன் உடலை கைகளால் சுற்றி இடைவளைத்து தன் இடையுடன் இறுக்கி குனிந்து தன் இதழ்களை கவ்விக்கொண்டபோது அவன் தன்னுடலை உணர்ந்தான்.
முத்தத்தை உதறி முகம் திருப்பி அவன் நெஞ்சில் கைவைத்து உந்தி விலகி மேலேறினாள். கைகளால் தன் தோளை தொட்டாள். அவை நூறாண்டுகள் உரசி இழைத்த சந்தனத்தடியென மென்மையுடன் குழைந்திருந்தன. கைகள் அல்லித் தண்டுகளென நெளிந்தன. இரு நீர்க்குமிழிகளென வளைவின் ஒளியுடன் முலைகள் எழுந்திருந்தன. குமிழிமுனை நீர்த்துளியென காம்புகள் சிலிர்த்திருந்தன. குழைந்து சரிந்த அடிவயிறை தழுவிச் சென்றது நீரலை ஒன்று.
அவன் சிரித்தபடி அருகே வந்து அவள் ஆடையைப் பற்றி விலக்கி வெற்றுடலாக்கி தன் கைகளில் எடுத்துக்கொண்டான். அவள் உடல் எழுந்து விரிந்து அவன் உடலை சூழ்ந்தது. அவனை தன் கைகளாலும் கால்களாலும் பற்றிக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள். ஒன்றை ஒன்று நிரப்பும் பொருட்டே உருவான இரண்டு உடல்களென தங்களை உணர்ந்தன அவை. குளிர்ந்த ஆழத்தில் குருதி வெம்மையால் சிவந்து கனன்றது அவள் உடல். இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று கண்டு நகைத்துக்கொண்டன.
நீரிலிருந்து மேலெழுந்து இருவரும் அவர்களின் உடலளவே விட்டமிருந்த மெல்லிய கொடித்தீவின்மேல் ஏறிக்கொண்டனர். முதலில் தொற்றி ஏறிய அவன் மல்லாந்து படுத்துக்கொள்ள அது அவன் கால்பக்கமாக சரிந்தது. அவள் சுற்றிவந்து எதிர்த்திசையில் ஏறி குப்புறப்படுத்தாள். அவன் மெல்லதிரும்பி அவள் தோளை தொட்டான். அவள் தலையை மட்டும் திருப்பினாள். “ஒரு கணத்தில் உன்விழிகள் பெண்மைகொண்டுவிட்டன” என்றான். அவள் “உங்கள் விழிகள் ஆண்மை கொண்டதுபோல” என்றாள். “ஒருகணம்…” என்றான். “ஒருகணமா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அங்கே ஆழத்தில் காலமும் செறிந்து விடுகிறது.” அவள் புன்னகையுடன் கண்களை மூடினாள்.
அவன் அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டுசென்றான். “ம்?” என்றான். “என்ன?” என்றாள். “என்ன எண்ணுகிறாய்?” என்றான். “எண்ணமென ஏதுமில்லை. கள்மயக்கு போல் ஒன்று…” அவன் புன்னகையுடன் “என்ன மயக்கம்?” என்றான். “தெரியவில்லை. இதுவரை இதைப்போல் ஒன்றை உணர்ந்ததில்லை” என்றபின் சற்றே ஒருக்களித்து “என் கால்விரல் நுனிகள் தித்திக்கின்றன” என்றாள். “கால்விரல்களா?” என்றான். “எப்படி?” என்று அவள் மூக்கோடு தன் மூக்கை வைத்தான். “இனிய உணவை அறிகையில் நா தித்திக்குமே அதைப்போல.” அவள் கண்களை மூடி “அந்தத் தித்திப்பு அங்கிருந்து தொடைகளுக்கும் இடைக்கும் வயிற்றுக்குமென ஏறிவந்து உடலை மூடுகிறது” என்றாள்.
“ம்” என அவன் சொன்னது அவள் காதுகளை காற்றென தொட்டது. “என் உடல் ஒரு நாவென இனிமையில் திளைக்கிறது. காதுமடல்கள் இனிமையில் கூசுகின்றன” என்றாள். “என்னால் அதை உணரவே முடியவில்லை” என்றான் அவன். “அதையுணர பெண்ணாகவேண்டும் போல.” அவள் புன்னகை செய்தபோது கன்னங்களில் குழி விழுந்தது. “இந்தக்கன்னக்குழி முன்னர் இருந்ததில்லை” என்றான். “அப்போது நான் பெண்ணாக இல்லை” என்றாள் கண்களை மூடியபடி. “எப்போது பெண்ணானாய்?” என்றான். “தெரியவில்லை. நான் அறியத்தொடங்குவதற்கு முன்னரே என் ஆழம் மாறத்தொடங்கிவிட்டிருந்தது என்று எண்ணுகிறேன்.”
அவன் தோள்மேல் தன் கையை வைத்து “அதையே நானும் கேட்கிறேன். நான் பெண் என எப்போது அறிந்தீர்கள்?” என்றாள். “நான் பெண்ணென்றே இருந்தேன். எனவே என் உள்ளம் அதை அறியவில்லை” என்றான். “என் உடல் எப்போதோ அதை அறிந்திருக்கவேண்டும்.” அவள் சிரித்து “நான் சொல்லவா?” என்று அவன் காதில் கேட்டாள். “ம்” என்றான். “என்னை முதலில் தொட்டபோதே” என்றாள். அவள் சிரிப்பு அவன் செவிதொடாது உள்ளே சென்று ஒலித்தது.
”என்ன ஆடல் இது?” என்றபடி அவள் மல்லாந்தாள் . உடனே தன் உடலை உணர்ந்து கவிழ்ந்து கொண்டாள். அவன் சிரித்தபடி அவள் உடலை அணைத்து “எவரிடம் மறைக்கிறாய்?” என்றான். “தெய்வங்களிடம்” என்று அவள் சிரித்தாள். “விண்ணகம் முழுக்க நின்றிருக்கின்றன பெண்ணை நோக்கும் தெய்வங்கள்.” அவன் நனைந்து ஒட்டிய அவள் குழல்கற்றைகளை நகத்தால் கோதி எடுத்து ஒளியுடன் சிவந்திருந்த செவிக்குப்பின்னால் செருகினான். “விழிகள் முன் திகழ்கையிலேயே பெண் உடல் திரள்கிறது. விழிகள் உன்னை அறியாததனால் நீ முளைத்தெழாமலிருந்தாய்” என்றான். “தெரியவில்லை…” என்றாள். “ஒரு விழிக்காக இப்போது உருக்கொண்டுள்ளாய்” என்றான்.
பெருமூச்சுடன் “முன்பு ஒருமுறை இந்த ஏரியில் மூழ்கிச்சென்றேன்” என்றாள். “அன்று ஆழம் அச்சுறுத்தியது. இன்று அது இனிமை தேங்கி இறுகிய பரப்பாக உள்ளது. அவ்வப்போது இறங்கிச்சென்று ஒரு மிடறு அள்ளி மீளவேண்டிய தேன்.” அவன் “அதற்கும் அப்பால் கடும் கசப்பின் ஆழங்கள் இருக்கக்கூடும். எதுவும் ஒற்றையடுக்கு கொண்டதல்ல” என்றான். அவள் “அன்று நான் எதையோ எண்ணினேன்” என்றாள். “எப்போது?” என்றான். “அன்று மூழ்கிச்செல்லும்போது… ஆனால் அதை மறந்துவிட்டேன் தெரியுமா? இத்தனைநாளில் எவ்வளவோ முறை இருளில் படுத்து நான் எண்ணியதுண்டு அதை. என் நினைவு அங்கே செல்வதற்கு முன்னரே நின்றுவிடும்.”
அதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் உடனே எழுந்தது. ஆனால் அவனுடன் இருக்கையில் மிக எளியவற்றையே உரையாடவேண்டுமென அவள் அகம் விழைந்தது. அச்சிறியசெய்திகள் அவளை சிறுமியென்றாக்கின. அவனருகே தண்டோ கிளையோ எழாது என்றும் தளிரென்றே இருக்கவேண்டும் என்று தோன்றியது. “என்ன நினைத்தாய்?” என்றான் அவன். “மறுபிறப்பையா?” அவள் “இல்லை” என்றாள். “தெய்வங்களையா?” என்றான். “இல்லை, அதையெல்லாம் இல்லை.” அவன் “பின்னர் எதை?” என்றான். “தெரியவில்லை” என்றாள். “எனக்கு ஒன்றுமே தெளிவாக இல்லை.”
பின்பு சிரித்து “நான் ஏன் இத்தனை மழலை பேசுகிறேன்?” என்றாள். அவன் அவள் காதில் “இன்னும் குழவிபோல பேசுவாய்” என்றான். முகம் சிவந்து விழி திருப்பி “நான் எப்போதும் எவரிடமும் மழலை பேசியதில்லை. என் தந்தை அதற்கு ஒப்பியதில்லை. ஆண் மகனென்றே என்னை அனைவரும் நடத்தினர்” என்றாள். “பெரும்பாலான பெண்கள் முதல்மழலை பேசுவது காதலர்களிடம்தான்” என்றான். அவள் சிரித்து “ஏன்?” என்றாள். “தெரியவில்லை. அவர்கள் பேசத்தொடங்கும்போதே அன்னையராக எண்ணிக்கொள்கிறார்கள்…” என்றான். “நான் முதியவளான பின்னரும் மழலை பேசுவேனோ?” என்றாள். “பேசுவாய், உன் மைந்தனிடம்” என்றான்.
அவள் மூச்சு திணற “என் மைந்தனிடமா?” என்றாள். “ஆம், ஏன்?” அவள் சற்றுநேரம் அசைவிழந்திருந்தாள். கைதொட சுருங்கி மறுதொடுகைக்காக காத்திருக்கும் அட்டை போல. பின்பு பாய்ந்தெழுந்து நீரில் குதித்து நீந்திச் சென்றாள். அவளுக்குப் பின்னால் குதித்து அவன் அவளை துரத்திச்சென்றான். நெடுந்தொலைவில் அவள் தலை எழுந்து கூந்தல் உதறி நகைக்க அவன் நீரை விலக்கி எட்டிப்பார்த்து கைவீசி நீந்தினான். கைகளை உள்ளே செலுத்தி மீன் போல அவள் நீந்தினாள். இருவரும் சென்று ஒரு தீவின் இலைத்தழைப்பை பற்றிக்கொண்டனர்.
“பெண்ணாகிக் கொண்டிருக்கிறது இது” என்றான். அவள் சிரித்துக்கொண்டு அதில் கையூன்றி எழுந்து அமர்ந்தாள். அது நீருக்குள் அமிழ்ந்து ஒரு பை என அவளை சுமந்தது. “ஏன் சிரிப்பு?” என்றான் அணுகியபடி. அவள் கால்களை ஆட்டியபடி “என்னால் ஏன் கைவீசி நீந்தமுடியவில்லை என எண்ணிக்கொண்டேன்.” அவன் அருகணைந்து அவள் கால்களைப்பற்றி “ஏன்?” என்றான். அவள் வெண்பற்கள் காட்டி சிரித்தபடி புரண்டு படுத்து முழங்காலை ஊன்றி மேலேறினாள். “அய்யோ” என்றாள். “என்ன?” என்றான். “இங்கே ஒரு கூடு… நாரையின் கூடு.” அவன் “கலைக்காதே” என்றான்.
அவள் குனிந்து அக்கூட்டிலிருந்த சிறிய குஞ்சுகளை நோக்கினாள். “பூக்கள்… பூக்களேதான்” என்றாள். வெண்ணிறபூஞ்சிறகுகளும் சிறுமணி மூக்குகளுமாக அவை அவளை அன்னை என எண்ணி சிவந்த வாய் திறந்து எம்பி எம்பி குதித்தன. வெண்கலக்குச்சிகள் உரசிக்கொள்ளும் ஒலியில் கூவின. “உன்னை அன்னை என எண்ணுகின்றன” என்றான். “என்னையா?” என்றாள். “ஆம், இங்கே பிற உயிர்களே வருவதில்லை அல்லவா?” அவள் அவற்றின் அலகு நுனியில் சுட்டு விரலால் தொட அத்தனை குஞ்சுகளும் அவள் விரலை முத்தமிட்டு விரியாத சிறகை அடித்துத் தாவின.
“அய்யோ” என அவள் கைவிரலை எடுத்துக்கொண்டாள். “கூசுகிறது” என்றாள். “அது விரல் அல்ல, உன் முலைக்காம்பு” என்றான். அவள் “சீ” என்று முகம் சிவந்தாள். “பசிக்கின்றதா இவற்றுக்கு?” என்று அவனை நோக்காமல் கேட்டாள். “ஆம், அவை எப்போதும் பசியுடன் இருப்பவை.” அவன் மூழ்கி விலகி கைவீசி ஒரு மீனை பிடித்தான். அதை நசுக்கி உடைத்து தசையைப் பிய்த்து அவள் விரல்நுனியில் வைத்து “ஊட்டு” என்றான். “அதற்கு ஏன் அந்த மீனை கொல்லவேண்டும்? இரக்கமே இல்லை” என்றாள். “கொடு” என்றான். அவள் சுட்டுவிரலில் அந்த ஊன் துளிகளைத் தொட்டு அவற்றின் அலகுக்குள் வைத்தாள். அவை எம்பி ஒன்றன் மேல் ஒன்று விழுந்து சிறுகால்களால் மிதித்து துவைத்து ஏறி உண்டன.
கீழே கிடந்த ஒன்றை அவள் தூக்கி அதன் வாய்க்குள் உணவை வைத்தாள். எம்பி குதித்த ஒன்றை நோக்கி “நீ துடுக்குக்காரன். இவன்தான் எளியவன். இவனுக்குத்தான் முதலில்” என்றாள். அது அவளை நோக்கி சீற்றத்துடன் கூவியபடி கொத்துவதற்காக எம்பியது. “சீறுகிறது” என்றாள். “அவன் பறவைகளில் பார்த்தன்” என்றான். “ஆகவே அவனுக்கு அன்னையின் கனிவே கிடைப்பதில்லை.” அவள் திரும்பி அவன் தலையைத் தொட்டு மெல்ல வருடி “அப்படியா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். “கனிவு அன்னையிடம் மட்டும்தானா?” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கினான்.
பின்னர் நினைத்திருக்காத கணம் அவளை அள்ளி நீருள் போட்டான். அவள் மூழ்கி விலக சிரித்தபடி பாய்ந்து பிடித்தான். அவள் நீருள் இருந்து எழுந்து முகம் துடைத்து “இப்போது நீரில் விழுந்த கணம் உணர்ந்தேன், நான் அன்று எண்ணிய இறுதி விழைவு என்ன என்று” என்றாள். “என்ன?” என்றான். “சற்றுமுன் செய்தது. ஒரு நாரைக்குஞ்சை தொட்டுப்பார்க்கவேண்டும். அதன் சிறிய அலகுக்குள் உணவூட்டவேண்டும்” என்றாள் சித்ராங்கதை. “ஊட்டு” என்றான் ஃபால்குனன்.