காண்டீபம் - 16
பகுதி இரண்டு : அலையுலகு – 8
மூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து கூட்டத்தை நோக்க நாகர்களின் சீறல் மொழியில் வாழ்த்தொலிகள் எழுந்தன. பெருமுரசம் மலை பேசத்தொடங்கியது போல முழங்கியது. குறுமுழவுகள் துடித்து பொங்கி யானைக்கு சுற்றும் துள்ளும் மான்கள் என அதனுடன் இணைந்து கொண்டன.
அர்ஜுனனை கைபற்றி அழைத்துச் சென்று கௌரவ்யரின் முன்னால் நிறுத்தினர். கர்க்கர் “மண்டியிடுங்கள் இளவரசே!” என்றார். அர்ஜுனன் இருகால்களையும் மடித்து மண்ணில் அமர்ந்து தலையை கௌரவ்யரின் கால்களில் வைத்து வணங்கினான். அவர் அவன் முடியைத் தொட்டு தன் நெற்றியில் மும்முறை வைத்து வாழ்த்தினார். எழுந்தபோது அவர் முகத்தில் புன்னகை இல்லை என்பதை அர்ஜுனன் கண்டான்.
அர்ஜுனன் திரும்பி அங்கு கூடியிருந்த நாகர்குலத்து மூதன்னையரின் பெண்கள் பிறரை வணங்கி நின்றான். தரையில் விழுந்த ஏழு அன்னையரையும் நாகர்குலப் பெண்கள் கைகளைப் பற்றித் தூக்கி அமரச் செய்தனர். அவர்களின் நீண்ட சடைக்கற்றைகளை தொகுத்துக் கட்டி தோலாடைகளை அணிவித்தனர். மூங்கில் குவளைகளில் கொண்டுவரப்பட்ட சூடான நீருணவை அளித்தனர். அவர்களில் சிலர் முற்றிலும் களைத்து தங்களை எழுப்பியவர்களின் தோளிலேயே முகம் புதைத்து, சடைத்திரிகள் சரிய, கை தொங்க துயிலத் தொடங்கினர். கால்கள் மண்ணில் தொட்டு இழுபட அவர்களை தூக்கிச் சென்று அப்பால் படுக்க வைத்தனர்.
கைமுழவை ஒலித்தபடி நாகர்குலப்பாணன் ஒருவன் நடமிட்டு முன்னால் வந்தான். தொடர்ந்து ஏழு நாகரிளம்பெண்கள் உலூபியை நடுவே நடக்கவிட்டு இருபக்கமும் தாங்கள் தொடர்ந்து வந்தனர். தலையில் இளம்பாளையாலான நாகபட முடியும், கழுத்தில் நாகாபரணமும் அணிந்த உலூபி தலைகுனிந்து நடந்து வந்தாள். அவளை வாழ்த்தி அவர்கள் குரலெழுப்புவதை அர்ஜுனன் நோக்கினான். அனைத்து முகங்களிலும் உவகையே நிறைந்திருந்தது.
உலூபி இடையில் ஆடையில் எதுவும் அணிந்திருக்கவில்லை. ஆடகப்பசும்பொன் நிறம் கொண்ட வெற்றுடலில் மெல்லிய தசையசைவுகளுடன் வந்து அவனருகே நின்றாள். அவளுடைய இளமுலைகள் நடையில் ததும்புவதை நோக்கிவிட்டு அவன் விழிதிருப்பிக்கொண்டான். குட்டி குதிரையின் இறுகிய தொடைகள் போன்ற இடை அசைவில் மேலும் இறுக்கம் காட்டியது. அவளருகே வந்து நின்றபோது தன் வாழ்வின் முதல் பெண் என உள்ளம் கிளர்ச்சி கொள்வதை உணர்ந்தான்.
குறுமுழவுகளின் துடிப்புகளுக்கு மேலாக தன் நெஞ்சில் ஒலியை கேட்டான். நின்ற இடத்தில் கால் பதியாது விழப்போவது போல் தோன்றியது. நானா என்று அவனே புன்னகைத்துக்கொண்டான். சிறுவனாக ஆகிக்கொண்டிருக்கிறேனா? பெரிய மரத்தாலத்தில் புதிய தோலாடைகளுடன் மூன்று நாக கன்னியர் வந்தனர். முதுமகள் சொல்காட்ட உலூபி அதிலிருந்த புலித்தோலாடையை எடுத்து அவனுக்கு அளித்தாள். அவன் அதை அணிந்துகொள்ள நாகர் இளைஞர் உதவினர். அவன் அதிலிருந்த மான் தோலாடையை எடுத்து அவளுக்கு அளித்தான்.
பிறிதொரு தாலத்தில் கோதையும் தாருமாகத் தொடுத்த மலர்கள் வந்தன. உலூபி தாரை எடுத்து அவனுக்கு அணிவிக்க அவன் கோதையை அவளுக்கு அணிவித்தான். குலமுதியவர் மூவர் சொல்காட்ட கௌரவ்யர் அவள் கையைப் பற்றி அவன் கையில் அளித்தார். அவன் கைபற்றிக் கொண்டதும் சீறல் ஒலியில் எழுந்த நாகர் வாழ்த்துகளால் அப்பகுதி நிறைந்தது. இருவரும் பணிந்து கௌரவ்யரின் வாழ்த்துகளை பெற்றனர். அவர் எழுந்து தன்னருகிருந்த நாகப்பெண்ணின் தாலத்திலிருந்து மலர்களை எடுத்து இருவர் தலையிலும் இட்டு வாழ்த்தினார்.
மூங்கில் குவளை ஒன்றில் குடிப்பதற்காக இளவெந்நீர் வந்தது. முதுமகள் உலூபியிடம் அதை நீட்டினாள். அவள் அதை வாங்கி மூன்று மிடறுகள் அருந்தியபின் அர்ஜுனனிடம் அளித்தாள். அதன் மணம் குடிப்பதற்குரியதென காட்டவில்லை. அர்ஜுனன் தயங்க கர்க்கர் “அருந்துங்கள் இளவரசே” என்றார். அவன் மீண்டும் முகர்ந்துவிட்டு ஒரே மூச்சில் அதை குடித்து முடித்தான். வாயிலிருந்து எழுந்த வெந்நீராவியில் குருதிமணம் இருந்தது. நாள்பட்டு சீழான குருதி.
கர்க்கர் “பதப்படுத்தப்பட்ட நாக நஞ்சு அது” என்றார். பின்பு புன்னகையுடன் “நஞ்சென உங்கள் குடல் அறிந்தது. ஆயினும் ஒரு கணமேனும் அச்சம் கொள்ளாமலிருந்தீர்” என்றார். அர்ஜுனன் மீசையை நீவியபடி “அச்சம் எதற்கு? நான் களத்தில் பலநூறு பேரை இதற்குள் கொன்றிருப்பேன். எனவே எக்கணமும் கொல்லப்படுவதற்கு சித்தமாக இருக்கவேண்டும் என்பதே முறை” என்றான். “என்னைக் கொல்லும் வாளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் கொலைகளை அது நிகர்செய்கிறது”
நாகர் குலத்தின் முதியவர்களும் பெண்களும் அவர்களை சூழ்ந்துகொண்டனர். “தாங்கள் விழைந்தால் எங்களுடன் இங்கு வாழலாம்” என்றார் கர்க்கர். “நான் எங்கும் நிலைத்து வாழ விழையவில்லை” என்றான் அர்ஜுனன். “தங்கள் நகருக்கு இவளை அழைத்துச் செல்ல இயலாது, இல்லையா பாண்டவரே?” என்று முதுநாகர் ஒருவர் சொன்னார். “நாங்கள் மானுடர் அல்ல. மானுட இல்லங்களிலும் தெருக்களிலும் எங்களால வாழ முடிவதில்லை. அவை நேரானவை. எங்கள் உடல்களோ நீரலைகள் போல் நெளிவுகொண்டவை.”
அர்ஜுனன் “ஆம், அதை அறிவேன்” என்றான். கௌரவ்யர் அவ்வுரையாடலை விரும்பாதவராக தனக்குப் பின்னால் நின்ற பெண்டிரை நோக்கி “மணநிகழ்வு முடிந்துள்ளது. பலிகொடை நிகழலாமே” என்றார். அவர்கள் தலைவணங்கி விலகினர். கர்க்கரிடம் “பலிகொடைகள் முடிந்தபின்னர்தான் ஊண்களி. இளையோர் எத்தனைநேரம்தான் காத்திருப்பார்கள்?” என்றபின் அர்ஜுனனை நோக்கி விழி மலராது உதடுகள் விரிய புன்னகைசெய்தார்.
ஏழு குகைவாயில்கள் எழுந்த மலைச்சரிவுக்கு முன்னால் பெரிய அரைவட்டமென நாகர்கள் இடம்விட்டு விலகி நின்றார்கள். அங்கு உயிர்ப்பலி நிகழப்போகிறது என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் பலிபீடம் எதுவும் அங்கிருக்கவில்லை. அடிமரம் தறித்த பலிபீடங்களைக் கொண்டுவந்து வைப்பார்கள் என்று எண்ணியிருக்க, இளையநாகர்கள் காட்டில் கண்ணியிட்டுப் பிடித்த ஆடுகளுடனும் மான்களுடனும் வரத்தொடங்கினர். இழுத்துவரப்பட்ட ஆடுகள் கால்களை ஊன்றி நின்று கழுத்தை பிதுங்க நீட்டி கமறலோசை இட்டன. மான்கள் விழியுருள திகைத்து நின்று கழுத்துச் சரடு இழுபடும்போது துள்ளி முன்னால் பாய்ந்து வட்டமடித்து மீண்டும் காலூன்றின. கால்களைப் பரப்பி நின்று உடல் சிலிர்த்து தும்மல் ஒலி எழுப்பின.
காதுகளைக் கோட்டி அங்கிருந்த கூட்டத்தையும் ஒலியையும் பார்த்த மானொன்று பாளை கிழிபடும் ஒலியில் கனைத்து துள்ளி தன்னைக் கட்டியிருந்த கொடிச்சரடை இழுத்தபடி காற்றில் எம்பிப் பாய்ந்து அவ்விசையில் நிலையழிந்து தலைகீழாகி உடல் அறைபட நிலத்தில் விழுந்தது. ஆடுகள் தங்கள் கழுத்துகள் சரடால் கட்டப்பட்டிருப்பதை புரிந்துகொண்டன. மான்கள் சரடு என்பதையே அறியாதவை என துள்ளிச் சுழன்றன.
அரைவட்ட வெளியில் ஏழு தறிகள் அறையப்பட்டு அவற்றில் ஆடுகள் கட்டப்பட்டன. அவை இழுத்து திரும்பி தாங்கள் வந்த வழியை நோக்கி குரலெழுப்பிக் கொண்டிருந்தன. கொண்டு சென்று கட்டப்பட்ட மான்கள் கால்பரப்பி நின்று கல்விழுந்த நீர்ப்படலம் என உடல் அதிர்ந்தன. அவற்றின் உடலில் முரசுமுழக்கத்தின் ஒவ்வொரு அதிர்வையும் காணமுடிந்தது. சட்டென்று அம்பு என மண்ணில் இருந்து தாவி எழுந்து கயிறு இழுக்க சுழன்று நிலம் அறைந்து விழுந்து குளம்புகளை உதைத்து திரும்பி எழுந்தது ஒரு மான். குறிய வாலை விடைத்தபடி சிறுநீர் கழித்தது.
அர்ஜுனன் அங்கு என்ன நிகழப் போகிறது என நோக்கிக் கொண்டிருந்தான். கூடி இருந்தவர்களின் முகங்களில் மெல்ல குடியேறிய அச்சத்தை கண்டான். கௌரவ்யர் கைகாட்ட முழவுகள் ஓய்ந்தன. பெருமுரசின் தோல் விம்மி மீட்டி மெல்ல ஒலியின்மையில் அமிழ்ந்தது. இரு வெள்ளாடுகள் குறுகிய வால்களை விரைந்து அசைத்தபடி சிறுநீர் கழித்தன. அதை நோக்கிய பிற ஆடுகளும் சிறுநீர் கழித்து புழுக்கை இட்டன. சில ஆடுகள் மூக்கை சுளித்து அந்த மணத்தை கூர்ந்தன. ஆடுகள் அச்சம் கொள்ளவில்லை, மான்கள் நுணுக்கமாக எதையோ உணர்ந்துகொண்டு கடுங்குளிரில் நிற்பவை போல சிலிர்த்து அசையாது நின்றன.
மான்களின் தலையில் இருந்த மாறுபாட்டை அப்போதுதான் அவன் நோக்கினான். அவற்றின் கொம்புகள் ஒட்ட வெட்டப்பட்டிருந்தன. ஆடுகளின் கொம்புகளும் சீவப்பட்டிருந்தன. பலிநிகழ்வு தொடங்குவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்றும் தோன்றியது. பூசாரிக்காகவா, அல்லது நற்பொழுதுக்காகவா? அவன் மீண்டும் அந்த முகங்களை நோக்கினான். அவர்கள் அனைவரும் அங்கு நிகழப்போவதை அறிந்திருந்தனர்.
கைகளைக் கூப்பியபடி குகை வாயில்களை நோக்கி கௌவரவ்யர் நின்றிருந்தார். கர்க்கர் மறு எல்லையில் நின்ற எவருக்கோ கையசைத்து ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். கூடி நின்ற அனைவரும் எதிர்பார்ப்பின் திசையில் உடல் இறுகி காலம் செல்லச் செல்ல மெல்ல கைகள் தளர்ந்த இடைவளைத்து நின்றனர். அப்பால் நாணல் வெளியில் காற்று கடந்து செல்லும் நீரோசை கேட்டது. தொலைவில் காட்டுக்குள் கருமந்திகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.
மெல்லிய மின்னல் துடித்தணைய அத்தனை முகங்களும் ஒளிகொண்டன. கீழ்ச்சரிவில் எரிந்தணைந்த மரங்களுக்குப் பின்னால் இடியோசை அதிர்ந்தது. யாருக்காக காத்திருக்கிறார்கள்? அந்த மலைக்குவைகளுக்குள் இருந்து எவரோ வரப்போகிறார்கள் என்று அத்தனை நோக்குகளும் காட்டின. மலைக்குகைகளில் வாழும் முனிவர்களா?
பெரும் துருத்தி ஒன்றின் ஒலிபோல சீறல் ஓசை கேட்டு ஒட்டுமொத்த அச்ச ஒலியுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டனர். ஒற்றை உடற்சரடென ஆகி விழிகள் தெறித்துவிடுவதைப் போல குகைவாயிலை நோக்கினர். முதற்குகைக்குள் இரு மணிவிழிகளை அர்ஜுனன் கண்டான். நடுவே ஒரு முகம் உருவாகிவந்தது. வெண்பற்கள் வளைந்த வாயென ஆகியது. பழுத்த கலத்தில் நீர் சொரிந்தது போல் மூச்சொலி எழுந்தது.
அங்கு பேருருவ முதலை ஒன்று இருப்பதாக தோன்றியது. மெல்ல அம்முகம் குகையிலிருந்து நீண்டு வெளிவந்தபோது அது உடும்பு என்று தோன்றியது. அதன் நாக்கு இரட்டைச் சாட்டை என விசிறப்பட்டு காற்றில் துடிதுடித்து பின்னிழுக்கப்பட்டது. அத்தனை பெரிய உடும்பா என்று அவன் எண்ணியது முடிவடைவதற்குள்ளே அந்த முகம் கொண்டுவந்த உடல் வளைந்து தெரிந்தது. வெண்கலநாணயங்களை அடுக்கியதுபோல செதில்கள் பரவிய பாம்புடல்.
பொதியிழுபடும் ஒலியுடன் வாய் திறந்து நீரோடை என வளைந்து வந்த மாநாகம் அங்கே கட்டப்பட்டிருந்த முதல் ஆட்டை பாய்ந்து கவ்வியது. இழுத்து சரடை அறுத்து வாய்க்குள் தூக்கி இருமுறை உதறி தலைகீழாக்கி விழுங்கியது. கைக்குழந்தை போன்ற அலறல் ஒலியுடன் ஆட்டின் தலை பாம்பின் வாய்க்குள் நுழைய அதன் இரு பின்னங்கால்களும் உதைத்தபடி அதிர்ந்தன. சேற்றுக்குழியில் மூழ்கி மறைவது போல ஆடு அதன் வாய்க்குள் புகுந்தது.
வெறித்த நாகவிழிகள் அச்சுவை இன்பத்தில் மதம்கொண்டதுபோல் தோன்றின. பாம்பின் வாய்மூட நாவு வெளிவந்து அலையடித்து மீண்டது. அதன் உடல்நெளிவுக்குள் மெல்ல புடைத்து இறுகி அசைந்தபடி ஆடு உள்ளே செல்வதை காணமுடிந்தது. சினம் கொண்ட மல்லனின் புயம் என இறுகி வளைந்து அந்தப் பாம்பு திரும்புவதற்குள் இன்னொரு குகையிலிருந்து அதைவிடப் பெரிய நாகம் ஒன்று தலைநீட்டி சீறி பின்பு வளைந்தோடி வந்தது.
ஏழு குகைகளில் இருந்தும் மாநாகங்கள் எழுந்தன. மானுட உடலளவுக்கே பெரியவை. அடிமரங்களைப்போல, காளான் படர்ந்த கரும்பாறைகள் போல, பாசிவழுக்கும் அடிப்படகுகள் போல பேருடல்கள். மேலிருந்த குகைகளில் இருந்து கரிய அருவி போல வழிந்து ஓசையுடன் தரையை அறைந்து விழுந்து வாய் திறந்து வளைந்த பின்பற்களைக் காட்டி சீறியது ஒன்று. அது பாறையைக் கடக்கும் ஓடையின் சிற்றலை என எழுந்து மானை கவ்விக்கொண்டது. அதன் மேலேயே அடுத்த நாகம் வந்து விழ இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று பின்னி முறுக்கி மரத்தடிகள் உரசிக்கொள்ளும் ஒலியுடன் திளைத்தன.
நாக உடல்கள் சேற்றுச்சுழி என அசைந்தன. உருவி மேலே வந்து இன்னொரு ஆட்டை கவ்விக்கொண்டது கரிய மாநாகம். குகைக்குள்ளிருந்து மேலும் மேலும் என நாகங்கள் வந்துகொண்டிருந்தன. இருபக்கமும் நிரைவகுத்த நாகர் குலத்து இளைஞர்கள் மான்களையும் ஆடுகளையும் இழுத்துக்கொண்டு வந்தனர். அவற்றின் கால்களைப் பற்றித் தூக்கி நெளியும் நாகங்களின் உடல்களின் பரப்பை நோக்கி வீசினர். அவை நிலம் தொடுவதற்குள்ளே பொங்கிய தலைகளின் வாய்களால் கவ்வப்பட்டு மறைந்தன. கருந்தழல்களின் நெளிவை நோக்கி வீசப்படும் அவிப்பொருட்கள்.
ஏரி மதகு என திறந்த ஏழு குகைகளில் இருந்தும் மேலும் மேலும் கரிய நாகங்கள் பீரிட்டு வந்துகொண்டிருந்தன. உயிர்கொண்ட ஆலமரத்து வேர்களென, மலைவேழத்து துதிக்கைகள் என, உருகி வழியும் கரும்பாறைகளென. விழித்த நோக்கும் திறந்த செவ்வாய்களுமாக அவை இரைகளை நோக்கி வந்தன. மான்களும் ஆடுகளும் அவற்றுக்கு முன் செயலற்று அசையாது காலூன்றி நின்றன. அவற்றின் தோல் முடிப் பரப்புகள் மட்டும் விதிர்த்துக்கொண்டிருந்தன. பெரிய ஆட்டுக்கிடா ஒன்றை கவ்விய மாநாகம் ஒன்று அதைத் தூக்கி வானில் வீசி கவ்விப் பிடித்து ஒருமுறை உதறி விழுங்கியது.
நோக்கி நிற்கையில் மான்களும் ஆடுகளும் அஞ்சி வளைக்குள் ஓடி மறையும் எலிகள் போல அவ்வாய்களுக்குள் செல்வதாகத் தோன்றியது. இரு நிரைகளாக கொண்டுவரப்பட்ட ஆடுகளும் மான்களும் வரும் விரைவு குறைந்தபடி வந்தது. மறுபக்கம் குகைகளுக்குள்ளிருந்து அரவங்கள் எழுந்து வரும் விரைவு மேலும் கூடியது. ஒன்றன் மேல் ஒன்றென விழுந்து உடல்நெளித்து சீறி எழுந்து தலைதூக்கிய நாகங்கள் நூறு தலைகள் எழுந்த கால்களற்ற பாதாள விலங்கு என தோன்றின.
சினம் கொண்டு தலைசொடுக்கி நிலத்தை அறைந்து புரண்டது ஒரு நாகம். தன் மேலேறிய ஒரு நாகத்தை நோக்கி அது சீறித் திரும்பியபோது இரு நாகங்களும் ஒன்றை ஒன்று நோக்கி சீறி நாபறக்க மெல்ல அசைந்தாடின. பின்பு மத்தகம் முட்டும் களிறுகளின் சமர்முதல்கணம் போல ஓசையுடன் அவை ஒன்றை ஒன்று அறைந்து பின்னி முறுக்கி எழுந்து விழுந்தன. மேலிருந்து விழுந்த நாகங்கள் கீழே இருந்த நாகக் குவியலில் விழுந்து வளைந்து தலை தூக்கி ஆடின.
கௌரவ்யர் பதறும் கைகளுடன் “எங்கே?” என்று கேட்க, கர்க்கர் ஓடி முன்னால் சென்று எம்பிக் குதித்து கைவீசி “என்ன செய்கிறீர்கள்? கொண்டு வாருங்கள்” என்றார். மறு எல்லையில் இருந்து எவரோ “இனி இல்லை” என கூவினார்கள். கர்க்கர் “இனி கொடைவிலங்குகள் இல்லை அரசே” என்றார். கௌரவ்யர் தன் தலைமுடியை கைளால் பற்றியபடி “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “இனி விலங்குகள் இல்லை” என்றார் கர்க்கர். “எஞ்சிய அனைத்தையும் கொண்டு வாருங்கள்” என்றார் கௌரவ்யர். மூன்று ஆடுகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன” என்று ஒருவன் கூவினான்.
இளையோர் மூன்று சிறிய ஆடுகளை கால்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு ஓடி வந்தனர். அதற்குள் கரிய நாகம் ஒன்று அங்கே நின்றவர்களை நோக்கி தன் நீர்த்துளிக்கண்களை விழித்து நாக்குசீறி வளைந்து நீண்டு வரத்தொடங்கியது. ஆவல் கொண்ட கை என அது அணுக அலறியபடி நாகர்கள் பின்னால் ஓடினர். ஆடுகளை நாகக்குவியலை நோக்கி வீசியபோது ஒரேசமயம் பல தலைகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டி விழுந்தன. ஆடுகளின் தலையையும் உடலையும் வெவ்வேறு நாகங்கள் கவ்வ அவை இரண்டாகக் கிழிந்து குருதியுடன் குடல் தெறிக்க குளம்புகள் அப்போதும் துடிதுடித்துக்கொண்டிருக்க வாய்களுக்குள் மறைந்தன.
தன்மேல் குவிந்த பெருநாகங்களை விலக்கி எழுந்த மாபெரும் நாகம் ஒன்று கடலலையென பத்தி விரித்தபடி சீறி அருகணைந்தது. நாகர்குல முதியவர் தங்கள் மொழியில் உரக்கக்கூவியபடி கைகளை விரித்து மறுபக்கம் ஓடினார். கௌரவ்யர் அவர்களை நோக்கி அச்சமும் சினமும் கொண்டு ஏதோ கூவி தன் கோலை அடிப்பதற்காக ஓங்கினார். அத்தனைபேரும் அஞ்சி கூச்சலிடத் தொடங்கினர். முதியவர் ஏதோ சொல்ல பெண்கள் அலறியபடி வேண்டாம் என்று கைநீட்டி கதறினர். குழந்தைகள் அவர்களைப்பற்றியபடி கதறியழுதன.
கைகளில் சிறிய கத்திகளுடன் ஏழு இளநாகர்கள் ஓடி முன்னால் வந்தனர். முதலில் வந்தவன் அவ்விரைவிலேயே சென்று நாகங்களுக்கு முன் முழந்தாளிட்டு அமர்ந்து தன் கையில் இருந்த கத்தியால் கழுத்துக் குழாயைக் கிழித்தான். மூச்சு குருதித்துளியுடன் சீறித் தெறிக்க கைகள் விடைத்து நீண்டு அதிர குப்புற மண்ணில் விழுந்தான். அவனுக்குப் பின்னால் வந்த நாகனும் தன் கழுத்தை அறுத்து அவனருகே விழுந்தான். நிரைநிரையாக எழுவரும் தங்களை கழுத்தறுத்துக்கொண்டு நாகங்களுக்கு முன் விழுந்தனர்.
நாகங்களின் நெளிவுகள் அசைவமைந்தன. பெருநாகம் எழுந்து வந்து அவர்களில் ஒருவனை கவ்வித் தூக்கி விழுங்கியது. அப்போதும் துடித்துக்கொண்டிருந்த கால்கள் நீண்டு முழங்கால்தசை இழுபட்டு கட்டைவிரல் காற்றில் சுழித்தது. எழுவரையும் ஏழு நாகங்கள் விழுங்கின. ஒரு நாகம் முன்னால் வந்து பத்தி எழுப்பி அசையாது நின்றது. அதன் பத்தியின் வளைவில் கூழாங்கற்கள் அடுக்கப்பட்டது போலிருந்த பரப்பில் பந்தங்களின் ஒளி தெரிந்தது. குனிந்து மூன்றுமுறை தரையை முத்தமிட்ட பின் அது திரும்பி குகை நோக்கிச் சென்றது.
ஒவ்வொரு நாகமாக எழுந்து நெளிந்து குகைக்குள் மறைந்தது. குகை வாயில்கள் பிறிதொரு பெருநாகத்தின் வாயிலென தெரிந்தன. இறுதியாக தரையில் கிடந்த நாகம் தலைதூக்கி பந்த ஒளி தெரிந்த விழிகளுடன் வாய்திறந்து நாக்கை பறக்கவிட்டது. உள்ளிருந்து ஒரு சரடால் கட்டி இழுக்கப்பட்டது போல மெல்ல திரும்பிச் சென்றது. அங்கு வந்ததிலேயே பெரிய நாகம் அதுதான் என அர்ஜுனன் எண்ணினான். சீரான காலடிகளுடன் கவசங்கள் மின்ன ஒரு காலாட்படை வளைந்து திரும்பிச் செல்வதுபோல் தோன்றியது.
அது குகைக்குள் ஏறி நுழைந்து மறைந்த அக்கணமே அங்கு நிகழ்ந்தவை நம்பமுடியாத சூதர்கதையாக மாறின. விழிமயக்காக கண்களுக்குள் எஞ்சின. இல்லை என்பதைப்போல் அதன் வால்நெளிவு இறுதியாக துடிதுடித்து உள்ளே சென்றது. வாயென மாறிய குகைகளின் நாக்கு போல அது தெரிந்து நிழலோ என ஆகி இல்லை என்று மறைந்தது. குகைகள் இருண்ட சுழிகளாக மாறி அமைதிகொண்டன.
கூடிநின்ற நாகர்கள் ஒவ்வொருவராக உடல் தளர்ந்தனர். பெருமூச்சுகள் ஒலித்தன. கௌரவ்யர் சினம்கொண்டவர்போல தலையசைத்து கர்க்கரிடம் ஏதோ சொல்லிவிட்டு திரும்பிச் சென்றார். கர்க்கர் அர்ஜுனனை நோக்கி “இம்முறை நாகங்கள் பெரும் சினம் கொண்டிருந்தன இளைய பாண்டவரே” என்றார். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “பலிபூஜைக்கு இங்கு வரும்போதெல்லாம் எம் குலத்திலிருந்து ஒரு பலி வாங்காமல் அவை திரும்பியதில்லை. ஆனால் எழுவரை பலிகொள்வது இதுவே முதல்முறை” என்றார் கர்க்கர்.
கர்க்கர் அர்ஜுனனிடம் “மணநிறைவுக்குப்பின் புலரி எழுவதுவரை உண்டாட்டு எங்கள் மரபு. உணவும் நாகமதுவும் நீட்டும் கைகள் சோர்வது வரை முடிவின்றி கிடைக்க வேண்டும் என்பது முறைமை. தங்கள் உணவு இங்கில்லை. தாங்கள் தங்கள் துணைவியுடன் மந்தணம்கொள்ளச் செல்லலாம். அங்கே அவளுடன் உணவருந்தலாம்” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான்.
நாகர்குலப் பெண்கள் எழுவரும் குலமூத்தவர் எழுவருமாக வந்து கௌரவ்யரை வணங்கி அழைத்துச்சென்று உண்டாட்டிற்காக முதல் உணவுக் குவை அருகே அமர்த்தினர். அதற்குப்பின் அக்குலத்து மூத்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து அமர்ந்தனர். முதுபெண்டிரும் பெண்களும் குழந்தைகளும் இறுதியாக இளையோரும் உணவுக்கு முன் அமர்ந்தனர். அதுவரை இருந்த அச்சநிலையில் இருந்து உணவு அவர்களை விடுவித்தது. மெல்ல பேசிக்கொள்ளத்தொடங்கி பின்னர் உவகைக்கூச்சல்கள் எழுப்பி அவ்விடத்தை நிறைத்தனர்.
மூன்று நாகினியர் அர்ஜுனனை அணுகி தலைவணங்கினர். ஒருத்தியின் கையில் மரத்தாலத்தில் ஏழு அகல்சுடர்கள் எரிந்தன. அதிலிருந்த மலர்களை எடுத்து அவன் தலை மேல் இட்டு “இன்பம் விடியும்வரை தொடர்க!” என்று வாழ்த்தினாள். இரு நாகினியர் உலூபியின் கைகளை பற்றிக்கொண்டு “செல்வோம்” என்றனர். உண்டாட்டிற்கு அமர்ந்திருந்த நாகர்குலத்தவரின் நடுவே நிரைவகுத்த பந்தங்களின் ஒளியில் அவர்கள் நடந்துசென்றனர். இருபக்கமும் உணவுக்கு முன் அமர்ந்திருந்த நாகர்கள் கை தூக்கி அவர்களை வாழ்த்தினர்.
எரிகுளத்து விளக்கை மும்முறை சுற்றி வந்து வணங்கியபின் அங்கிருந்து விலகி நாணல் பூக்கள் இருளுக்குள் நுரை என அலையடித்த புல்வெளியில் நுழைந்தனர். சுடர் ஏந்திய பெண் முன்னால் நடக்க வழியில் அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. இருளுக்குள் மரங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் சுடர் கண்டதும் எழுந்து ஓசையிட்டன. கருமந்திக் குலம் ஒன்று உறுமல் ஒலியுடன் துயில் கலைந்து கிளைகள் வழியாக தாவிச் சென்றது.
ஒரு பெரிய மின்னலில் அர்ஜுனன் அந்த நாணல்வெளியை நோக்கினான். அதன் இடைவெளிகளிலெல்லாம் பல்லாயிரம் நாகங்கள் நெளிவதைக் கண்ட இருண்ட விழிக்குள் இருளே நெளிவுகளென நிறைந்திருந்தது. இடியோசை நாகப்பெருக்கென நெளிந்தது. விண் என விரிந்த காலம் நெளிந்தது. அவர்கள் மேல் குளிர்க்கற்றைகள் என மழை கொட்டத்தொடங்கியது.