காண்டீபம் - 14

பகுதி இரண்டு : அலையுலகு – 6

இளவெயில் பூத்து இலைகளிலிருந்து சொட்டத் தொடங்கிய காலை. நாணம் கொண்டதென பசுமையில் மறைந்து எழுந்து உடல் வளைத்து சென்ற சிறு காலடிப்பாதையில் இருவரும் நடந்தனர். உலூபி அவன் வலக்கையை தன் இடக்கையால் வளைத்துப் பற்றி, விரல்களைக் கோத்து தன் முலை நடுவே வைத்து அழுத்தி கூந்தல் அவன் தோள்களில் சரிய தலைசாய்த்து உடன் நடந்துவந்தாள். அவர்களின் காலடியோசையை ஒலித்தது காடு. அவர்களைக் கண்டு எழுந்த பறவைகளின் ஒலியால் உவகை காட்டியது.

அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ எந்தப் பெண்ணும் அப்படி ஆண்மகனோடு நிகரனெ நடப்பதில்லை. நாணில்லாது காதலை வெளிப்படுத்துவதும் இல்லை. அவளது வேட்கை அவனை நாணச்செய்தது. இருமுறை கையை விடுவித்துக் கொள்ளவும், சற்றே விலகி நடக்கவும் அவன் முயன்றான். அவ்வெண்ணம் எழுந்ததுமே அறிந்தவள் போல் அல்லது உளமறியாது உடல் மட்டுமே அறிந்தது போல அவள் மேலும் இறுக்கிக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அவன் தோள்களிலும் புயங்களிலும் தன் உருகும் உதடுகளால் முத்தமிட்டாள். மூக்கையும் வாயையும் ஆவல்கொண்ட நாய்க்குட்டியைப்போல அவன் மேல் வைத்து உரசினாள். அப்போது கொஞ்சும் பூனைபோல் மெல்ல ஒலியெழுப்பினாள்.

அவன் “இங்கு எவரேனும் பார்க்கக்கூடும்” என்றான். வியந்து புருவம் சுளித்து “பார்த்தால் என்ன?” என்றாள். “நாம் இன்னும் மணம் கொள்ளவில்லை” என்றான். உலூபி “நாகர்குல மணம் என்பது மணமக்களே முடிவெடுப்பது. அக்குலம் அதை ஏற்கிறதா இல்லையா என்பதே பின்னர் முடிவு செய்யப்படுகிறது” என்றாள். “என்வரையில் கங்கையின் அடியில் நீந்தி வந்து உங்கள் கால்களைப் பார்த்த கணம் என் மணம் முடிந்துவிட்டது. நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டபோது அது முழுமை அடைந்தது. என் தந்தை ஏற்றுக்கொள்ளும்போது நாளை பிறக்கும் என் மைந்தர்கள் அடையாளம் கொள்வார்கள், அவ்வளவே” என்றாள்.

அர்ஜுனன் திரும்பி அவளை பார்த்தான். காதல் கொண்ட முகம். இரு விளக்குகள் ஏற்றப்பட்ட பொற்தாலம். உருகி விடுகிறாற்போல் இருந்தன விழிகள். அக்கணம் ஏதோ இன்கனவு கண்டு எழுந்ததுபோல தெரிந்தாள். “என்ன?” என்று அவள் கேட்டாள். “பெண்களை கண்டிருக்கிறேன். இத்தகைய பெருங்காதல் எழுந்த முகம் இதுவரை கண்டதில்லை” என்றான். நாணிச்சிரித்து அவன் தோள்களில் முகம் அழுத்தினாள். கழுத்துகளும் நாணிச்சிவக்குமோ? தோள்கள் புன்னகைக்குமோ? அவளுடைய பறந்தலைந்த குழலை கையால் நீவி, மயிர்ப் பிசிறுகளை பின்னலில் சேர்த்தான். பின்பு அப்பின்னலை ஒரு கையால்பற்றி இழுத்து அவள் முகத்தைத் தூக்கி “உன் கண்களைப் பார்க்கப் பார்க்க தீரவில்லை” என்றான்.

“என்ன?” என்று அவள் தாழ்ந்த குரலில் கேட்டாள். “தெரியவில்லை. கள்ளையும் வேள்வியமுதான சோமத்தையும் வெறும் நீர் என மாற்றும் களிமயக்கு கொண்டவை இக்கண்கள். இதை அடைந்தபின் இவ்வுலகில் இனி அடைவதற்கேதுமில்லை.” அவள் “ம்?” என்றாள். அவன் சொற்கள் அவளுக்குப் புரியவில்லை என்று தோன்றியது. அவளை நெருங்கி “இத்தகைய பெரும் காதலை எழுப்பும் எது என்னிடம் உள்ளது என்று வியக்கிறேன்” என்றான். “நான் என்றும் இதே காதலுடன்தான் இருக்கிறேன். காதலுக்குரியவனை அறியாதிருந்தேன். மண்ணில் அவன் பெயர் என்ன, தோற்றமென்ன என்பது மட்டுமே எஞ்சியிருந்தது” என்றாள். “ஆம். இது உன்னுடனேயே பிறந்த காதலாகவே இருக்கவேண்டும். விதையில் உறைகின்றன மலரும் கனியும் என்று ஒரு சூதர் வாக்கு உண்டு” என்றான் அர்ஜுனன்.

அவள் விழிகள் சுருங்க தலைசரித்து “என் மேல் காதல் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அர்ஜுனன் அந்த நேரடி வினாவுக்குமுன் சொல்லிழந்தான். மூடிய அறைக்குள் சிட்டுக்குருவி போல அவன் சித்தம் பதறி சுற்றி வந்தது. பின்பு தடுத்த சுவர்ப்பரப்பு ஒளித்திரையென மாற பீறிட்டு வானிலெழுந்தது புள். அக எழுச்சியுடன் அவள் இடையை வளைத்து அணைத்து “நேற்றிரவு இறந்து மீண்டும் பிறப்பதுபோல் ஒன்றை உணர்ந்தேன்” என்றான். “என்ன?” என்று அவள் மேலும் கேட்டாள்.

பிறிதெவர் குரலோ என தானே செவிகொண்டபடி “உன்னைக் கடந்து நான் செல்லமுடியாது. இன்று வரை பகிரப்படாத எதையும் நான் பெற்றதில்லை. ஐவரில் ஒருவன் என் அன்னைக்கு. அவ்வண்ணமே என் துணைவிக்கும். பிறிதொன்றில்லாத முழுமை ஒன்றுக்காக என் அகம் தேடிக்கொண்டிருந்தது. நிகர்வைக்கப்படாத ஓரிடம். நான் மட்டுமே அமரும் ஒரு பீடம்” என்றான் அர்ஜுனன்.

என்ன சொல்கிறோம் என்று சொன்னபின்னரே தெளிவடைந்தான். அவள் விழிகளை நோக்கி “ஆண்மகன் குடியின் செல்வத்தின் முடியின் புகழின் ஆணவத்திலிருந்து விடுபடமுடியும். மெய்ஞானத்தின் ஆணவமேகூட அவனை விட்டு நீங்கமுடியும். ஒரு பெண் நெஞ்சில் பிறிதொன்றில்லாது அமரவேண்டும் என்ற விழைவை, அதை எய்தியதன் ஆணவத்தை அவனால் துறக்க இயலாது” என்றான்.

அவன் சொற்களை புரிந்துகொள்ளாததுபோல் அவள் ஏறிட்டு நோக்கினாள். “திரௌபதியிடம் நான் இருக்கையில் அவளை அடைந்த பிற நால்வரையன்றி எதையும் என் நெஞ்சு எண்ணுவதில்லை. அவ்வெண்ணங்களை அள்ளி தவிர்க்கும் முயற்சியில் என்னுள்ளம் அலைபோல் கொந்தளித்துக்கொண்டிருக்கும். அவளுடன் கொள்ளும் காமம்கூட அக்கொந்தளிப்பின் சுவைதான்” என்றான். வியத்தகுமுறையில் அவள் அதைப்புரிந்துகொண்டு விழிமாற்றம் கொண்டாள்.

“இன்று உணர்கிறேன், துன்பத்தை இன்பமெனக்கொள்ளும் கணங்கள் அவை. தன்குருதி நாவில் அளிக்கும் சுவையை அறிந்தவன் அதிலிருந்து மீள்வதில்லை” என்றான் அர்ஜுனன். “என் உள்ளம் அறிந்து விதுரர் என்னிடம் சொன்னார், படித்துறைகள் தோறும் தழுவி வரும் கங்கை ஒவ்வொரு படித்துறைக்கும் புதியதே என்று. அச்சொற்களின் பொருள் முழுமையை என் சித்தம் உணர்ந்தது. சித்தத்தில் பற்றி எரியும் ஆணவம் அதை ஏற்க மறுத்தது.”

“அவள் உடலை பிறர் தொட்டதனாலா?” என்றாள். அவள் கண்களில் வந்துசென்ற மெல்லிய ஒளி மாறுபாட்டைக் கண்டு எத்தனை கூர்மையாக தன்னை பின் தொடருகிறாள் என்று எண்ணி வியந்தான். “இல்லை, உடலல்ல” என்று தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். “பின்பு?” என்றாள். அப்போது அவள் காட்டுமகளாக தெரியவில்லை.

“அவள் உள்ளத்தில்” என்று சொன்னபின் “அங்கு ஐவருக்கும் இடமுள்ளது” என்றான். நோக்கு விலக்கி “அதிலென்ன, தாங்கள் அறிந்ததுதானே?” என்று அவள் கூறினாள். “ஆம், அறிந்ததுதான்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆயினும் நான் ஐந்தில் ஒன்று என்ற எண்ணத்தில் இருந்து என்னால் ஒரு கணமும் மீள முடிந்ததில்லை.”

திரும்பி அவள் விழிகளை நோக்கி “அதை நீ அறிவாய். உன் காதலை என்னிடம் சொன்னபோது நேராக அந்த நுண்ணிய நரம்பு முடிச்சில்தான் உன் விரலை வைத்தாய்” என்றான். “இல்லை” என்றாள் அவள். “பெண்களின் உள்ளத்தை நான் சற்று அறிவேன். இதுநாள்வரை அவர்களை வேட்கைகொண்ட நிழலாக தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். சொல், நீ அறியாததா?” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் தலை குனிந்தாள். “என்னிடம் சொல். நீ அறிந்தே உரைத்ததுதானே. பிறிதொன்றில்லாமை எனும் சொல்? அது சினம்கொண்ட குளவி என என்னைத் தொடரும் என்று நீ அறிந்திருந்தாய்” என்றான்.

அவள் கழுத்தில் ஒரு நரம்பு அசைந்தது. நாவு நீண்டு வந்து கீழுதட்டை நீவி மறைந்தது. வாய்நீர் இறங்குவதை தொண்டை அசைவு காட்டியது. குனிந்து மேலும் ஆழ்ந்த குரலில் “அறிந்துதானே சொன்னாய்?” என்றான். “ஆம்” என்று அவள் மூச்சின் ஒலியில் சொன்னாள். “ஆனால் அத்திட்டம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. ஏழுலுகங்களுக்கும் செல்லும் திறன் படைத்திருப்பவர் நீங்கள். பாரதவர்ஷத்தின் மாவீரர். உங்களுக்கு இச்சிறிய நாகர்குலத்தில் பிறந்த நான் அளிக்கக்கூடிய அரும்பொருள் எதுவுமில்லை.”

அவள் இளமுலைகள் எழுந்தமைந்தன. “இப்பிறவியில் உள்ளும் புறமும் பிறிதொன்றிலாத காதல். அதுவே என் படையல்.” அர்ஜுனன் மேல்மூச்செறிந்தான். “ஆம்” என்றபின் மேலும் ஏதோ சொல்ல வந்து அச்சொற்களை தானே உணர்ந்து கைவிட்டான். அக்கணம் அங்கிருந்து விலகியோட ஏன் தோன்றுகிறது என்று வியந்தான்.

குறைநீர் கலம் என உள்ளம் அலைந்து நடையை உலைத்தது. “உன் இல்லம் இன்னும் எத்தனை தொலைவில் உள்ளது?” என்றான். “ஐந்நூறு இல்லங்களாலானது எங்கள் ஊர். அதன் பெயர்தான் ஐராவதீகம்” என்று உலூபி சொன்னாள். அத்தருணத்தின் முள்காட்டிலிருந்து உடல் விலக்கி அவளும் விலகுவது போல் தோன்றியது. “உன் குலத்தில் பெண் கொள்வதற்கு முறைமைகள் ஏதும் உள்ளதா?” என்றான் அர்ஜுனன் “முன்பு எவரும் பெண் கொண்டதில்லை. எனவே முறைமை என ஏதும் உருவாகவுமில்லை. என்ன நிகழும் என்று என்னால் உய்த்தறியக் கூடவில்லை. ஆனால் இறுதியில் நீங்கள் வென்றெழுவீர்கள் என்று நன்கறிகிறேன்” என்று உலூபி சொன்னாள்.

பின்பு நெடுநேரம் இருவரும் உரையாடவேயில்லை. உலூபி தனக்குள் மெல்ல பேசியபடியும் முனகலாக பாடியபடியும் நடந்துவந்தாள். அவன் உடலுடன் ஒட்டிக்கொள்ள விழைபவள் போல சாய்ந்தும், கை தழுவியும் நடந்தாள். காற்றில் எழுந்த அவள் குழல் அவன் தோளை வருடி பறந்தது.

இலைத் தழைப்பின் இடைவெளி வழியாக வானம் தெரிந்தபோது அவன் நின்று அண்ணாந்து நோக்கினான். முந்தைய இரவின் அடரிருளை, அதைக்கிழித்தெழுந்த ஒளிப்பெருக்கை, முகில் அதிர்ந்த பேரோசையை நினைவு கூர்ந்தான். அவை அங்கு நிகழ்ந்தனவா என்றே ஐயம் எழுந்தது. பிறிதொரு வானில் அது நிகழ்ந்ததுபோல.

தலைகுனிந்து பாதையை நோக்கினான். அவன் நின்றதைக் கண்டு அவள் “என்ன?” என்றாள். “இப்பாதையில் கன்றுகள் ஏதும் நடப்பதில்லையா?” என்று கேட்டான். எண்ணியது பிறிதொன்று என்று அவ்வினாவிலேயே உணர்ந்துகொண்டு, “இல்லை. நாங்கள் விலங்குகள் எவற்றையும் வளர்ப்பதில்லை” என்றாள். “நீங்கள் பால் அருந்துவதில்லையா?” என்றாள். “இல்லை, நாங்கள் வேளாண்மை செய்வதும் இல்லை. இக்காடு எங்களுக்கான உணவால் நிறைந்துள்ளது.” “எப்படி என் மொழி அறிந்தாய்? பாரதவர்ஷத்தின் அரசியலைக்கூட அறிந்திருக்கிறாய்!” என்றான்.

“எங்கள் பாடகர்கள் பாம்பாட்டிகளாக நகர்களுக்குச் செல்வதுண்டு. மழைக்காலம் தொடங்குகையில் அவர்கள் திரும்பி வரும்போது கதைகளால் நிறைந்திருப்பார்கள். இங்கு மழை நின்று பெய்யும். மழைக்காலம் முழுவதும் எங்கள் இல்லங்களுக்குள் அமர்ந்து நெருப்பிட்டு குளிர்காய்ந்தபடியே கதைகளை சொல்லிக்கொண்டிருப்போம். அஸ்தினபுரி, இந்திரப்பிரஸ்தம், ராஜகிரகம், தாம்ரலிப்தி, விஜயபுரி, காஞ்சி, மதுரை என்று நாங்கள் அறியாத ஊர்களே இல்லை.” அர்ஜுனன் “கதைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது பாரதவர்ஷம்” என்றான்.

அவ்வெளிய உரையாடல் அதுவரை பேசிய எடையேறிய சொற்களை பின்னுக்குத்தள்ளியது. விழிகளை இயல்பாக்கி சூழ்ந்திருந்த காட்சிகளை துலக்கியது. அவன் திரும்பி அவள் முகத்தை நோக்கினான். பக்கவாட்டுப்பார்வையில் அவள் கன்னங்களின் வளைவில் விழுந்த ஒளி மென்மயிர்களை பொன்னாக்கியிருக்கக் கண்டான். கழுத்துக்கோடுகளில் வியர்வை பட்டுநூலென தெரிந்தது. எதையோ தன்னுள் பாடிக்கொள்பவள் போல அவள் விழிகளும் இதழ்களும் அசைந்தன.

பாதை வளைந்தபோது தொலைவில் மலைச்சிகரம் எழுந்து தெரிந்தது. அதன் மறுபக்கத்தைப் பார்த்த நினைவை அர்ஜுனன் அடைந்தான். “உங்கள் மொழியில் இதன் பெயர் என்ன?” என்று கேட்டான். “மூன்று தலையுள்ள பேருருவன்” என்று உலூபி சொன்னாள். அர்ஜுனன் வியப்புடன் “மூன்று தலையா?” என்றான். “ஆம், ஊழ்கத்தில் அமர்ந்து எங்கள் மூதாதையில் ஒருவர் இம்மலைக்கு அருகில் கண்ணுக்குத் தெரியாத இன்னும் இரு மலைகள் இருப்பதைக் கண்டார். அதனால் இதற்கு திரிசிரஸ் என்று பெயரிட்டார். பிற இரு தலைகளும் விண்ணுலகங்களில் எங்கோ விழுந்துள்ளன என்பது எங்கள் கதை” என்றாள்.

அர்ஜுனன் “இக்காட்டின் எல்லையில் நுழையும்போதே அதை நான் கண்டேன். அங்கிருந்து நோக்குகையில் இரு குகைகள் விழிகளாக மாறி என்னை நோக்கின” என்றான். “ஆம், அந்நோக்கு எங்கள் எல்லையைக் கடக்கலாகாது என்ற எச்சரிக்கை” என்றாள் உலூபி. “கடந்தவர்கள் திரும்பமுடியாதென்பது எவரும் அறிந்ததே. திரிசிரஸை வெல்ல மானுடரின் தெய்வங்களால் இயலாது.” நகைத்து “அதை அறைகூவல் என நான் எடுத்துக்கொள்வேன்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அறைகூவலை நீங்கள் அங்கே எங்களூரில் சந்திப்பீர்கள்” என்றாள் உலூபி. “எங்கள் கதைகளில் திரிசிரஸ் என்னும் பேருருவனைப் பற்றிய சித்திரம் ஒன்று உள்ளது. ஒரு முகத்தால் கள்ளுண்டு களித்திருப்பான். பிறிதொரு முகத்தால் உலகறிந்து இயற்றுவான். மூன்றாம் முகத்தால் தன்னுள் மூழ்கி வேதம் அறிவான். ஒன்றையொன்று நோக்கும் திறன் கொண்ட மூவரில் எவரையும் தெய்வங்களும் வெல்ல முடியாது என்கின்றது தச பிராமணம் என்னும் தொன்மையான நூல்.”

“அதே கதை இங்குள்ளது” என்று உலூபி வியப்புடன் சொல்லி அவன் கையை அள்ளிச் சேர்த்தாள். “நேற்று உங்களைப் பார்த்ததுமே நான் எண்ணியதும் அதைத்தான். மூன்று முகம் கொண்டவர் நீங்கள். கள்ளுண்டு வில்லாண்டு மெய்தேர்ந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்.”

அர்ஜுனன் அவளை நோக்கி புன்னகைத்து “ஆம், அன்று அப்பெருமுகத்தை நோக்கியபோது என்னிடம் அது ‘நான் நீ’ என்று சொல்வதுபோல் உணர்ந்தேன்” என்றான். உலூபி “அதிலென்ன ஐயம்? இதோ நான் சொல்கிறேன். அவர் நீங்களே” என்றாள். அர்ஜுனன் “மூன்று முகம்… நன்றாகத்தான் உள்ளது” என்றபின் “என் தோழன் ஒருவன் உள்ளான். யாதவன்” என்றான். “ஆம், அறிவேன்” என்றாள் உலூபி. “அவனுக்கு மூவாயிரம் முகம் என்று சொல்வேன்” என்றான் அர்ஜுனன்.

தொலைவிலேயே மானுடக் குரல்களை அர்ஜுனன் கேட்கத் தொடங்கினான். முதலில் கேட்டவை கைக்குழந்தைகளின் கூரிய அழுகுரல். பின்பு சிறுவர்கள் கூவி ஆர்த்து விளையாடும் ஓசை. உடன்கலந்த பெண்களின் ஓசை. படைக்கலன்கள் இல்லாமல் செல்கிறோம் என்ற எண்ணம் அவனில் எழுந்ததுமே உலூபி “படைக்கலன்கள் இல்லாமல் எங்கள் நகர் நுழைவதே உகந்தது. இதை அறியாது எல்லை கடந்து உயிர் துறந்தோர் பலர்” என்றாள். “அறியாத இடத்திற்கு படைக்கலன்களுடன் நுழைவது அல்லவா நல்லது?” என்று அவன் கேட்டான்.

“நாங்கள் கொண்டிருக்கும் படைக்கலன்கள் என்ன என்று அறியாதபோது உங்களிடம் இருக்கும் படைக்கலன்களால் என்ன பயன்?” என்று அவள் கேட்டாள். அர்ஜுனன் திரும்பி அவளை நோக்கி “உங்கள் படைக்கலன்கள் என்ன?” என்றான். “நஞ்சு” என்று அவள் சொன்னாள். “இப்பகுதிக் காடுகள் பாம்புகளால் நிறைந்தவை. நாக நஞ்செடுப்போம். அதை பிசினாக ஆக்கி பாதுகாக்கும் கலையை பல தலைமுறைகளாகவே நாங்கள் கற்றிருக்கிறோம்.”

“அம்புகளில் தீற்றிக் கொள்வீர்களா?” என்றான். “இல்லை. அம்புக்கலை எங்களிடம் இல்லை” என்றாள். “சிறிய முட்களை நாக நஞ்சில் ஊறவைத்து சேர்த்து வைத்திருப்போம். சிறிய மூங்கில் குழாய்க்குள் அவற்றை இட்டு வாயால் ஊதி பறக்கடிப்போம். கொசு ஒன்றின் கடி அளவுக்கே அந்த முட்கள் தீண்டும். ஒரு யானையை சரிக்கும் ஆற்றல் கொண்ட முட்களும் உண்டு. விழிகளால் அவை வருவதை பார்க்க முடியாது. அம்புகளால் தடுக்கவும் இயலாது” என்றாள் உலூபி.

அவர்கள் அணுகுவதை உயர்ந்த மரத்தின் மேலிருந்து நோக்கிய காவலன் ஒருவன் எழுப்பிய குறுமுழவோசையில் நாகர் குடி அமைதியாகி சிறுத்தை என பின்வாங்கி புதர்களுக்குள் முற்றிலும் பதுங்கிக்கொண்டது. எல்லையைக் கடந்து உலூபி தன் வாயில் கைவைத்து பறவை ஒலி ஒன்றை எழுப்பினாள். மரத்தின் மீதிருந்து கூகை குழறும் ஒலியில் அதற்கு மறுமொழி எழுந்தது. அவள் திரும்பி அர்ஜுனனை நோக்கி “நீங்கள் அஞ்ச மாட்டீர்கள் என்று அறிவேன். ஆனால் உடலிலும் விழியிலும் அனிச்சையாகக்கூட அச்சம் தெரியாது என்பதை இப்போதே காண்கிறேன்” என்றாள். “இதுவரையிலான வாழ்நாளில் கடந்தது அச்சத்தை மட்டுமே” என்றான் அர்ஜுனன்.

மூன்று நாகர்கள் அவர்களை நோக்கி எதிரே வந்தனர். புலித்தோல் ஆடை அணிந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, கழுத்தில் கமுகுப்பாளையாலான நாகபட ஆரம் அணிந்து, நெற்றியில் இறங்கிய நாகபடம் பொறித்த கொந்தை சூடியிருந்தனர். முதலில் வந்த முதியவரை நோக்கிய உலூபி நாகமொழியில் பேசினாள். குரலதிர்வுகளுக்கு மாறாக மூச்சுச் சீறல்களாலான மொழி அது என்று கண்டான். பாம்புகள் பேசுமென்றால் அது அம்மொழியாகவே இருக்கும். அவர்கள் நாகங்களுடன் உரையாடுவார்கள் போலும்.

மூவரும் அவனை நோக்கி தலை தாழ்த்தினர். முதியவர் சற்றுக் குழறலான மொழியில் “ஐராவதீகத்திற்கு நல்வரவு இளைய பாண்டவரே” என்றார். அர்ஜுனன் “நானும் என் மூதாதையரும் வாழ்த்தப்பட்டோம். இந்திரப்பிரஸ்தம் ஆளும் மன்னர் யுதிஷ்டிரரின் தூதனாக உங்கள் ஊருக்குள் நுழைகிறேன். உங்கள் ஊர் நெறிகளுக்கும் குலமுறைகளுக்கும் முற்றிலும் கட்டுப்படுகிறேன். உங்கள் நகரில் இருக்கும்வரை நாகர் குலத்து அரசனின் ஆணைகள் என்னை கட்டுப்படுத்தும்” என்றான்.

“ஆம், அதுவே முறை” என்று சொன்னார் முதியவர். “என் பெயர் கர்க்கன். உங்களை ஐராவதீகத்திற்குள் இட்டுச்செல்ல இளவரசியால் ஆணையிடப்பட்டுள்ளேன்” என்றார். அர்ஜுனன் அவருக்கு தலைவணங்கினான். “எங்கள் அரசர் குடிமூத்தவர் மட்டுமே. அன்னையர் அவையே இறுதிமுடிவெடுக்கிறது” என்றார் கர்க்கர். “வருக!” அவரது முகத்தில் அவன் அறியாத ஒன்றிருந்தது. அவரை அது மானுடரல்ல என்று காட்டியது.

புதர் வகுந்து வளைந்து சென்ற பாதை வேர்ப்பின்னல்களுக்குள் நுழைந்தது. உருளைப் பாறைகளை கவ்விப் பிடித்திருந்த வேர்களின் ஊடாக நோக்கி விழிகூர்ந்து காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றனர். மரங்கள் செறிந்து மேலும் மேலும் அவ்வழி இருட்டி வந்தது. இருள் அடர்ந்தபோது விழி மேலும் கூர்மைகொள்ள அவ்வேர்களுக்குள் உயிருள்ள வேர்கள் என பல்லாயிரம் பாம்புகளை அர்ஜுனன் கண்டான். துயிலில் என அவை ஒன்றுடன் ஒன்று பின்னி வழுக்கி உருவி தலைதூக்கி வால் நெளித்து அசைந்துகொண்டிருந்தன. பல்லாயிரம் கரிய சிற்றோடைகளென பாறைகளை வளைத்து சரிவிறங்கின.

பாறையொன்றின் மேல் நுனிக்கால் ஊன்றி நின்று அவன் சுற்றிலும் பார்த்தான். “உரகங்கள்” என்றார் கர்க்கர். “ஆனால் அவை எங்களை தீண்டுவதில்லை. எங்களுடன் வந்திருப்பதனால் தாங்களும் பாதுகாக்கப்பட்டவரே.” பாறையில் இருந்து பிறிதொரு பாறைக்குத் தாவி சமன்பெற்றுநின்ற அர்ஜுனன் “இவை உண்ணுவது எதை?” என்றான்.

“இந்தச் சிற்றாறு மீன்களாலும், தவளைகளாலும் நிறைந்தது. உணவு உண்பதற்காக காடுகளில் இருந்து இவை வந்தபடியே உள்ளன” என்றார் கர்க்கர். பாறைகளை அலைத்து நுரையோசையுடன் கடந்துசென்ற ஆற்றின் ஒலியில் இலைகளுக்கு அப்பால் அர்ஜுனன் பார்த்தான். நீர் விளிம்புகள் முழுக்க பாம்புகள் நெளிந்து இரை தேடின. நீரில் இறங்கி அலைகளுடன் வளைந்து நீந்திச் சென்றன. இருண்ட நீர்ப்பரப்பெங்கும் கருவூலத்தின் வெள்ளி நாணயப் பெட்டியைத் திறந்ததுபோல் மீன்கள் நீந்தின.

பாறைகளை இணைத்து போடப்பட்டிருந்த பெரிய தடிப்பாலம் வழியாக உலூபி முதலில் நடக்க அர்ஜுனன் தொடர்ந்தான். அவனுக்குப் பின்னால் கர்க்கர் வந்தார். மறுகரையின் சரிவுப் பாறைகளிலும் வேர்களுடன் கலந்து நெளிந்த பாம்புப்பரப்பே கண்ணுக்குப்பட்டது. அவை கொண்ட ஓசையின்மையே அவற்றை உயிர்களல்ல என்றாக்கியது. ஓசையே உலகம். ஓசையின்மையின் ஆழத்திலிருந்து ஊறிவந்தவை அவை. விண்ணின் இயல்பு ஓசை என்கின்றன நூல்கள். ஆகவேதான் இவை விண்ணொலியை அஞ்சுகின்றன போலும்.

சற்று ஏறிச்சென்ற பாதையின் முடிவில் கூடிநின்ற நாகர்குலச் சிறுவர்களை அர்ஜுனன் கண்டான். தோலாடை அணிந்து நாகபட ஆரம் கழுத்திலிட்டு கைகளில் மரப்பாவைகளை ஏந்தி விழிவிரித்து அவனை நோக்கி நின்றனர். “அவர்கள் மானுடரைக் கண்டதில்லை” என்றார் கர்க்கர். “மானுடர்களும் நாகர்களைப்போல் கை கால்களைக் கொண்டவர்களே என்று இப்போது அறிந்திருப்பார்கள்” என்றான் இன்னொருவன்.

அர்ஜுனன் உள்ளே நுழைந்தபோது விரல் தொட்ட சுனையின் மீன்கள்போல் குழந்தைகள் விலகி ஓடி புதர்களுக்குள் மறைந்தனர். அங்கு நின்று நோக்கியபோது ஐராவதீகத்தின் இல்லங்களை ஒற்றைநோக்கில் அவன் கண்டான். “இவையா இல்லங்கள்?” என்று திரும்பி கேட்டான். “இவை உங்களால் கட்டப்பட்டவையா?” மூன்றுஆள் உயரக் கரையான் புற்றுகள் போல எழுந்து நின்றன அவ்வில்லங்கள். கவர் விரித்துப் பரவிய உருளைக்கூம்புகள். மழை ஒழுகிய தடம் கொண்டவை. இறுகிய தொன்மையான மண் அவற்றை அடிமரமென்று மயங்கச்செய்தது.

“இல்லை, இவை உண்மையான சிதல் புற்றுகள். மானுடன் இத்தனை உறுதியுடனும் அழகுடனும் இவற்றை அமைக்க முடியாது என்றார்” கர்க்கர். “தலைமுறைகளுக்கு முன் எங்கள் மூதாதையர் இங்கு குடியேறியபோது இவற்றைக் கைக்கொண்டு இல்லங்களாக ஆக்கிக்கொண்டனர்.” அவற்றினுள்ளே எப்படி நுழைவது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். “நாகர்கள் அவற்றுக்குள் நுழைந்து உள்ளறைகளுக்குள் வாழும் கலையை இளமையிலேயே அறிந்திருக்கிறோம். மானுடர் உள்ளே செல்லமுடியாது” என்று கர்க்கர் சொன்னார்.

“நடுவே உயர்ந்து நின்ற பெரிய புற்று பத்து ஆள் உயரமிருந்தது. “நூற்றெட்டு கரவுப்பாதைகளும் எண்பத்தேழு உள்ளறைகளும் கொண்டது அது. முன்பு இந்த ஒரு புற்றே இருந்தது. இன்று அது எங்கள் அரண்மனை” என்றார் கர்க்கர். புதர்களிலிருந்து குழந்தைகள் எழுந்து அர்ஜுனனை நோக்கின. அச்சம் தெளிந்த சில குழந்தைகள் மேலும் அணுகின. அக்கையரின் இடையிலிருந்து சில குழவியர் அவனை நோக்கி கைசுட்டி இனிய ஒலியெழுப்பின.

அர்ஜுனன் திரும்பி ஒரு குழந்தையை நோக்க அது நாணம்கொண்டு தனது அக்கையின் தோள்மேல் முகம் புதைத்தது. தோல் ஆடையால் முலைமறைத்த நாகர் குலப் பெண்கள் மரங்களிலிருந்தும் புற்றில்லங்களின் மறைவுகளிலிருந்தும் அவனைச் சூழ்ந்தனர். உலூபி “அரசரை சந்தித்து முறை செய்க!” என்றாள். அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்றான்.

நாகர்களில் ஒருவன் தன் இடையில் இருந்த மூங்கில் குழாய் ஒன்றை வாயில் வைத்து பேரொலி ஒன்றை மூம்முறை ஒலித்தான். அனைவரும் அந்த மையப்பெரும்புற்றை நோக்க, அதன் சிறிய வாய் வழியாக உடல் நெளித்து பசுவின் வாயிலிருந்து நாக்கு வெளிவருவதுபோல் முதியவர் வெளிவந்தார். அவர் அணிந்திருந்த பொன்னாலான நாகபட மணிமுடியைக் கண்டு அவரே நாகர்களின் அரசர் கௌரவ்யர் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான்.

“ஐராவதீகத்தின் தலைவரை இந்திரப்பிரஸ்தம் ஆளும் மாமன்னர் யுதிஷ்டிரரின் தம்பியும் அரச தூதனுமாகிய பார்த்தன் வணங்குகிறேன். தங்கள் நிலத்தில் தங்கள் ஆணைக்குப் பணிகிறேன்” என்றான். அவரது உடல் முதுமையில் சுருங்கியிருந்தது. பாம்புத்தோல் என செதில்கள் மின்னின. பழுத்த விழிகள் இமைப்பு ஒழிந்திருந்தன. அப்போதுதான் கர்க்கர் முதலிய நாகர் அனைவரிலும் இருந்த மானுடம்கடந்த தன்மை என்ன என்று அவன் அறிந்தான். அவர்கள் எவரும் இமைக்கவில்லை.

வெளிவந்த முதியவர் அவனை கைதூக்கி வாழ்த்தியபடி வந்து அங்கு போடப்பட்டிருந்த கற்பீடங்கள் ஒன்றில் அமர்ந்தார். அவரது குலத்தவரில் ஆண்கள் மட்டுமே அவருக்கு தலைவணங்கினர். குழந்தைகள் அவரை அணுகி இயல்பாக அவரது மடியில் ஏறியமர்ந்துகொண்டனர். பெண்கள் அவருக்குப்பின்னால் திரண்டு கூர்ந்த விழிகளுடன் அவனை நோக்கினர்.

“எங்கள் எல்லைக்குள் மானுடர் இதுவரை வந்ததில்லை” என்றார் கௌரவ்யர். “உன்னை என் மகள் கொண்டுவந்தாள் என்று அறிந்தேன். என்குடியில் மானுடர் மகற்கொடை கொள்ள மூதாதையர் ஒப்புதல் இல்லை” என்றார். அவருக்குப்பின்னால் நின்ற பெண்கள் ஆம் என முனகினர். “நீ அவளை கண்டிருப்பாய். மானுடராகிய உங்களைப்போல் அவள் இமைப்பதில்லை.”

அர்ஜுனன் திரும்பி நோக்க அவள் விழிகள் இமைப்பின்றி இருப்பதைக் கண்டான். ஆனால் அவள் விழிகள் முன்பு மானுடவிழிகளாகவே இருந்தன என நினைவுகூர்ந்தான். “அவள் எடுத்த முடிவு அது” என்றான். “மானுடனே, எங்கள் உடலின் குருதி நஞ்சாலானது. எங்கள் கைநகம் கீறினால் நீ நஞ்சுண்டு இறப்பாய்…” என்றார் கௌரவ்யர்.

“அதையும் அவளே முடிவெடுத்தாள். நான் அவள்பொருட்டு இறக்கவும் சித்தமாகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “மூடா, நீ அவளை கொள்வதென்பது அவள் முடிவல்ல. இக்குலம் காக்கும் மூதன்னையரின் முடிவு” என்று கௌரவ்யர் சினத்தால் நடுங்கும் தலையுடன் கைநீட்டி சொன்னார். சூழநின்றவர்களில் பாம்புகளின் அசைவென ஓரு நெளிவு ஓடுவதை அவன் கண்டான்.

அர்ஜுனன் “மூதன்னையர் ஒப்புதல்கொள்ள நான் இயற்ற வேண்டியது என்ன?” என்றான். “முன்பொருமுறையும் இவ்வண்ணம் நிகழ்ந்ததில்லை. எனவே எங்கள் மூதன்னையரை இங்கு வரவழைப்போம். அவர்களிடம் கேட்போம்” என்றார். “நான் அவர்களை சந்தித்து அடிபணிகிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இங்கில்லை. இந்த மண்ணுக்கு அடியில் காட்டின் வேர்ப்பரப்புகளில் உடல் பின்னி தங்கள் உலகில் வாழ்கிறார்கள்” என்றார் கௌரவ்யர்.

“இன்று உணவுண்டு எங்களுடன் உறைக! இரவு இங்கே நாங்கள் நிகழ்த்தும் பெருங்கொடைக் களியாட்டில் எங்கள் மூதாதையர் எழுவார்கள். அவர்கள் ஆணையிடட்டும், உனக்குரியது எங்கள் நஞ்சா குலமகளா என்று.” அர்ஜுனன் “ஆணைக்குப் பணிகிறேன்” என்றான்.