எழுதழல் - 76
எட்டு : குருதிவிதை – 7
முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி ஏறி வரும் ஏவலனின் காலடியோசைகளைக் கேட்டு அவன் திரும்பி நோக்க அவன் வந்து தலைவணங்கி “ஒளியெழுந்ததும் கிளம்பவேண்டும் என்று இளைய அரசரின் ஆணை” என்றான். தலையசைத்த பின்னர்தான் அவன் உள்ளம் பதற்றம் கொண்டது. செய்தி வந்திருக்கிறது என்று அதற்குப் பொருளா?
“இளையவனை எழுப்புக!” என்றபின் அவன் நீராட்டறைக்கு சென்றான். நீராடி எழுந்து அணிசெய்துகொண்டிருக்கையில்தான் நிர்மித்ரன் ஏவலன் துணையுடன் துயில்விழிக்காத கால்களில் நடந்துவந்தான். துயில் நனைந்த குரலில் “செய்தி வந்துவிட்டதா, மூத்தவரே?” என்றான். “தந்தையின் ஆணை. நீ விரைவில் ஒருங்கி எழு!” என்றான் சதானீகன். அவன் ஒருங்கி வந்து முற்றத்தில் காத்து நின்றபோது ஈரமுலராத குழலுடன் நிர்மித்ரன் மூச்சிரைக்க கீழிறங்கி வந்தான். “நான் இன்று கிளம்பவேண்டியிருக்குமென எண்ணவேயில்லை, மூத்தவரே. நேற்று இரவு பிந்துவதுவரை செய்தி ஏதுமில்லை” என்றான்.
தேர்ப்பாகன் “தங்களை அகத்தளத்திற்கு அழைத்துச்செல்லும்படி ஆணை, இளவரசே” என்றான். “அகத்தளத்திற்கா? அன்னையரசியரையா சந்திக்கவிருக்கிறோம்?” என்றான் நிர்மித்ரன். சதானீகன் ஒன்றும் சொல்லாமல் தேரிலேறிக்கொள்ள நிர்மித்ரன் “நாம் அரசியரிடம் விடைபெறப் போகிறோம், அவ்வளவுதானே?” என்றான். சதானீகன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “அதன் பின்னர் பேரரசரிடமும் அரசரிடமும் விடைபெறவேண்டும்” என்றான். சதானீகன் “அரசர் நகரில் இல்லை, இன்று முற்புலரியிலேயே கிளம்பியிருப்பார்” என்றான். “ஆம், அவர் அவ்வாறு சொன்னார். ஆனால் முறைப்படி வாழ்த்து பெறாமல் செல்வாரா என்ன?”
“அவர் செல்வது கானேகல். அது ஒரு சிறுதுறவு. சொல்லாமல் செல் என்பதே அதன் வழி” என்றான் சதானீகன். நிர்மித்ரன் நீள்மூச்சுடன் “ஆம், நம் தந்தையரும் அவ்வாறே செல்கிறார்கள்” என்றான். “ஒருநாள் அவ்வாறு கிளம்பவேண்டும் என்பது என் விழைவு. நெடுந்தொலைவுகளுக்கு… காஞ்சனர் இயற்றிய அஷ்டதிக்விஜயம் சொல்கிறதே, நம் தந்தை மேற்கே கல்மிதக்கும் கடல்வரை சென்றிருக்கிறார் என்று. மெய்யாகவே அத்தகைய கடல்களும் மழையறியா மணல்நாடுகளும் உள்ளனவா? அங்கெல்லாம் அவர் சென்றாரா?” என்றான். சதானீகன் “சென்றிருப்பார்” என்றான். “கதைகளாகக்கூட இருக்கலாம். எவரும் தெளிவாக சொல்வதில்லை. ஆனால் நானும் ஒருநாள் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன்” என்ற நிர்மித்ரன் சிரித்து “நான் செல்லப்போகுமிடங்களை கவிஞர்கள் இன்னமும் உருவாக்கவில்லை போலும்” என்றான்.
அரண்மனைக் கோட்டைக்குள் நுழைந்து இடப்பக்கம் திரும்பி வளைந்துசென்று அகத்தள வாயிலில் தேர் நின்றது. அவர்கள் இறங்கி நின்றனர். அப்போது மறுபக்கம் ஓசை கேட்க நிர்மித்ரன் திரும்பிநோக்கி “மிகச் சரியாக வருகிறார். பொழுதும் தொலைவும் அவர் கணக்கிலிருந்து வழுவுவதே இல்லை” என்றான். அர்ஜுனன் சிறிய தேரிலிருந்து இறங்கி நேராக வந்து சதானீகனிடம் “செல்வோம்” என்று சொல்லி படிகளில் ஏறினான். கூடத்தில் நின்றிருந்த சேடி “இவ்வழி, அரசே” என அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்றாள்.
அவர்களை இடைநாழியினூடாக கூட்டிச்சென்று சிற்றறை ஒன்றில் அமரவைத்தாள். தலைவணங்கி அவள் வெளியேற சதானீகன் எழுந்து நின்றான். அவனருகே வந்து நின்ற நிர்மித்ரன் “மிகச் சிறிய அறை” என்றான். “தொன்மையான அரண்மனைகள் இப்படித்தான் இருக்கும்” என்றான் சதானீகன். “ஏன், அன்றிருந்தவர்கள் பெரிய உடல்கொண்டவர்கள் என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்றான் நிர்மித்ரன். “ஆம், ஆனால் அவர்கள் காற்றிலும் ஒளியிலும் வாழ்ந்தனர். ஐம்பெரும்பருக்களை சான்றாக்கி உரையாடினர்.” நிர்மித்ரன் அறையை நோக்கிவிட்டு “ஆம், ஐந்து பருக்களையும் அகற்றுவதே அறை” என்றான்.
முதுசெவிலி அறைக்குள் நுழைந்து “அரசியரும் அரசரும் தங்களை வரவேற்கிறார்கள்” என்றாள். அவர்கள் எழுந்து அவளுடன் சென்று இன்னொரு அறையின் கதவை அடைந்தனர். அவள் அதன் துளையில் வாய் வைத்து குறிச்சொல்லை உரைக்க உள்ளிருந்து அது திறக்கப்பட்டது. அர்ஜுனன் கைகூப்பியபடி உள்ளே சென்றான். சதானீகனும் நிர்மித்ரனும் தொடர்ந்தனர். அவ்வறையும் சிறிதாகவே இருந்தது. யமுனைநோக்கித் திறந்த சாளரம் இல்லையேல் அதை திணறவைக்கும் சிறை என்றே சொல்லவேண்டியிருக்கும் எனத் தோன்றியது. உள்ளே வசுதேவர் பீடத்தில் அமர்ந்திருக்க இரு பக்கமும் ரோகிணியும் தேவகியும் இருந்தார்கள்.
வசுதேவர் முந்தைய இரவைவிட மிகவும் களைத்திருந்தார். வாயும் விழிகளும் சுருங்க தாடை அதிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் தேவியர் இருவரும் உள்ளம் எளிதானவர்களாக தோன்றினர். அர்ஜுனன் சென்று அவர்களை தாள்வணங்கி வாழ்த்துகொண்டு அமர்ந்தான். வணங்கி சொல்கொண்டபின் சதானீகனும் நிர்மித்ரனும் சற்று அப்பால் நின்றனர். “பலராமன் கிளம்பிவிட்டான்” என்று வசுதேவர் சொன்னார். “அவன் நேற்று சொன்னபோது அதை என் உள்ளம் மறுத்தது. ஆகவே அதை வெறும் சொல் என்றே கொண்டேன். இரவு மதுவருந்திவிட்டு துயின்றேன். முதற்புலரியில் விழிப்புவந்ததும் தோன்றிய முதல் எண்ணம் அவன் சென்றுவிட்டான் என்பது. ஏவலனை அனுப்பி நோக்கிவரச் சொன்னேன். அவன் அறையில் இல்லை என்று ஏவலன் வந்து சொன்னான். அறையில் மஞ்சத்தின்மேல் அவனுடைய அரசக்கணையாழி இருந்தது.”
அர்ஜுனன் “ஆம், அதுவே மரபு” என்றான். “ஏவலனை அனுப்பி ரேவதியிடம் செய்தியை சொல்லச் சொன்னேன். அவள் அச்செய்தியைக் கேட்டு நிலையழிந்தாள். நாங்கள்தான் அவனை துரத்திவிட்டோம் என்று என்னையும் என் அரசியரையும் வசைபாடினாள். அணிகலன்களையும் குழல்மலரையும் பிடுங்கி வீசினாள். கலங்களைத் தூக்கி சேடியர்மேல் எறிந்தாள். பின்னர் கதறியழுதபடி அறையை மூடிக்கொண்டாள். இப்போதுதான் அவள் சேடி வந்து சொன்னாள், அவள் குக்குடநாட்டுக்கே செல்லப்போவதாக. அவள் கொழுநன் மதுராவுக்கு மீண்ட பின்னரே இங்கு வருவாள் என்று.”
அர்ஜுனன் “அவர் மைந்தர் மதுவனத்தில் அல்லவா இருக்கிறார்கள்?” என்றான். “ஆம், அவர்களை தவிர்ப்பதற்காகவே நாங்கள் இயற்றிய நாடகம் இது என்கிறாள். அநிருத்தன் மதுராவை ஆளவேண்டும் என பலராமன் சொன்னது நாங்கள் அவன் தலைக்குள் புகுத்தியது என்கிறாள்… ஐயம்கொண்ட உள்ளம் அதை பெருக்கிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் அச்சமூட்டுபவை. அத்தனை கற்பனையும் அறிவுத்திறனும் அதற்கே செலவழிக்கப்படுகிறது” என்றார் வசுதேவர்.
அர்ஜுனன் புன்னகைத்தான். பின்னர் “ஓரிரு மாதங்களில் திரும்பி வருவார். அவரால் அங்கே இருக்கமுடியாது. அவர் நாடும் அடையாளங்கள் எவையும் அங்கே அவருக்கு அளிக்கப்படாது. இங்கு வந்து பலராமரின் அரசியாக மதுராவை தானே ஆட்சிசெய்ய முயல்வார்” என்றான். “ஆம், அதையே இவளும் சொன்னாள்” என்றார் வசுதேவர். “நான் இன்று கிளம்புகிறேன், பேரரசே. யாதவநிலத்தின் எல்லையில் இருக்கும் முக்தஜலம் என்னும் சிறுகோட்டையில் இளைய யாதவர் தங்கியிருப்பதாக பின்னிரவில் செய்தி வந்தது. நேற்று முன்னிரவில்தான் அவர் சாத்யகியுடன் அந்நகருக்குள் நுழைந்திருக்கிறார்.”
வசுதேவர் “எங்கள் ஒற்றர்களும் சொன்னார்கள்” என்றார். அர்ஜுனன் “நான் அவரை சந்தித்தபின் உபப்பிலாவ்யம் செல்லவிருக்கிறேன். என் பணி அத்துடன் முடிகிறது” என்றான். வசுதேவர் “நன்று, யுதிஷ்டிரனுக்கு என் வாழ்த்துக்களை தெரிவி…” என்றார். அர்ஜுனன் “தங்கள் வாழ்த்துக்களால் நாங்கள் செழிப்புறுகிறோம்” என்றான். அதன்பின் தேவகியை நோக்கிக்கொண்டிருந்தான், அவள் சொல்லவருவதை எதிர்நோக்குபவன்போல. தேவகி தன் முற்றமைதியில் அசைவிலாதிருந்தாள். ரோகிணி பிறிதொரு அமைதியில் இருந்தாள். முதியவர்களுக்கே உரிய அமைதி அது என சதானீகன் எண்ணினான். அவர்களின் உடல் அகவையில் நெகிழ்ந்து சேறுபோலாகிறது. அதில் அவர்களின் உள்ளம் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது.
அர்ஜுனன் எழுவதைப்போல் ஓர் அசைவை உருவாக்க தேவகி விழிப்புகொண்டு அவனை நோக்கினாள். “நீ அவனைப் பார்க்கையில் என் ஆணையை சொல்” என்றாள். “ஆணையிடுங்கள், அன்னையே” என்றான் அர்ஜுனன். “அவன் தன் குலத்தவருக்கு எதிராக படைக்கலம் எடுக்கக்கூடாது. இனி அவன் கையால் ஒரு யாதவன்கூட கொல்லப்படலாகாது.” அர்ஜுனன் சில கணங்களுக்குப்பின் “ஆணை” என்றான். வசுதேவர் முகம் மலர்ந்து “ஆம், அதைத்தான் மிகச் சரியாக நானும் விரும்பினேன். அவனால் நம்மவர் இனி கொல்லப்படலாகாது…” என்றார். “அவன்பொருட்டே ஒருங்கிணைந்தோம், அவன்பொருட்டே பிளவுற்று மடியலாகாது.”
தேவகி அவரை நோக்கி “நாம் பிளவுற்று மடிவது ஊழ் எனில் அவனும் அதை தடுக்கமுடியாது. என் மைந்தன் அப்பழி கொள்ளவேண்டாம் என்று மட்டுமே சொல்லவந்தேன்” என்றாள். அர்ஜுனன் “ஆம் அன்னையே, நீங்கள் சொல்வது முறையே” என்றான். எழுந்து அவள் காலடியை தொட்டு வணங்க அவள் அவன் தலையை தொட்டு வாழ்த்தினாள். அர்ஜுனன் வசுதேவரையும் ரோகிணியையும் வணங்கி சதானீகனையும் நிர்மித்ரனையும் நோக்கிவிட்டு வெளியேறினான். அவர்களை முறைப்படி வணங்கிவிட்டு அவர்களும் தொடர்ந்துசென்றார்கள்.
படகிலேறிக்கொள்வதுவரை அர்ஜுனன் எதுவும் சொல்லவில்லை. தலைகுனிந்து தன்னிலாழ்ந்து நடந்தான். மதுராவுக்கு வந்த படகுநிரைகளில் வரிசைப்படகுகள் மட்டும் திரும்பிச்சென்றன. எஞ்சியவை அவர்களுடன் முக்தஜலத்திற்கு வந்தன. “அக்கோட்டை இங்கிருந்து எத்தனை தொலைவிலுள்ளது, மூத்தவரே?” என்றான் நிர்மித்ரன். “ஒரு பகல் பயணம் என்றார்கள். ஆனால் யமுனையின் ஒழுக்குக்கு எதிராக செல்லவேண்டும். பூர்வசிலா என்னும் ஊருடன் படகுகள் நின்றுவிடும். பின்னர் இறங்கி வண்டிப்பாதையில் செல்லவேண்டியிருக்கும்” என்றான் சதானீகன். “அவர் காட்டுவழியாக அங்கே வந்திருக்கிறார்” என்றான் நிர்மித்ரன்.
படகுகள் பாய்விரித்து நீரலைகள்மேல் ஏறிக்கொண்டதும் நிர்மித்ரன் அர்ஜுனன் அருகே சென்று “தந்தையே, நாம் இன்றே அவரை பார்ப்போமா?” என்றான். “இன்றா?” என்ற அர்ஜுனன் “பெரும்பாலும். இரவணைவதற்குள் அங்கே சென்றுவிடுவோம் என எண்ணுகிறேன்” என்றான். அருகே வந்த சதானீகன் “அஸ்தினபுரியிலிருந்து பறவைச்செய்தி. நம் ஒற்றர் சந்திரர் அனுப்பியிருக்கிறார். அஸ்தினபுரியின் அரசரும் முக்தஜலத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார்” என்றான். அர்ஜுனன் தலையசைத்தான்.
“இளைய யாதவர் மதுராவுக்கு வரவில்லை என அறிந்ததும் தன் பயணத்தை அஸ்தினபுரியின் எல்லைப்புறக் காவல் கோட்டைகளை நோக்குவதாக ஆக்கிக்கொண்டார். சீர்ஷசிலையில் இருந்து இன்று காலைதான் அவரும் கிளம்பியிருக்கிறார். பெரும்பாலும் நாம் ஒரே தருணத்தில் அங்கே சென்றுசேர்வோம். வழியில் சந்தித்துக்கொண்டாலும் ஆகும்” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “சந்திக்க மாட்டோம்” என்றான். “ஏன்?” என்றான் நிர்மித்ரன். “அதற்கு நாம் விழையவில்லை” என்றான் அர்ஜுனன். நிர்மித்ரன் “ஆம்” என்று சிரித்தான்.
வெயில் பழுக்கத் தொடங்கியதும் வியர்வை வழியலாயிற்று. “நீர்மேல் எப்போதுமே புழுக்கமிருக்கும். இன்று சற்று மிகை” என்ற சதானீகன் குகனிடம் “மிகைவெயில் அல்லவா?” என்றான். முதிய குகன் “ஆம், இளவரசே. இங்கு மிகைவெயில் என்றால் அங்கு மழையுண்டு” என்றான். “மழையா?” என்றான் சதானீகன். “கோடைமழை. இங்கிருந்து செல்லும் முகில்கள் வடக்கே மலைகளில் முட்டிக் குளிர்கின்றன. மழை அங்கே கிளம்பிவிட்டது” என அவன் வடமேற்கே சுட்டிக்காட்டினான். “அங்கே வானம் நிழல்கொண்டிருக்கிறது.”
சதானீகன் மழைக்கான தடயங்களை நோக்கிக்கொண்டிருந்தான். மேற்குவானிலிருந்து பறவைகள் அகன்றதை முதிய குகன் சுட்டிக்காட்டினான். அங்கிருந்து வந்த காற்றில் முதலில் நீராவி மிகுந்திருந்தது. பின்னர் மெல்லிய குளிர் காதுகளை தொட்டது. மூச்சில் மழைமணம் வரத்தொடங்கியது. குகன் “நீரை தொட்டுப்பாருங்கள்” என்றான். சதானீகன் குனிந்து நீரை தொட்டான். “வெம்மை கூடியிருக்கிறதா?” என்றான். “ஆம், பனியுருகிய நீர்தான் யமுனையின் ஒழுக்கு. வெந்த நிலத்து நீர் வந்து சேரத் தொடங்கியிருக்கிறது.” நிர்மித்ரன் அவனருகே வந்து நின்று “மழையா, மூத்தவரே? நான் படகிலிருந்து மழையை பார்த்ததே இல்லை” என்றான்.
மழை ஒரே வீச்சில் வந்து படகை அறைந்து முழுமையாக மூடி கடந்துசென்றது. “வானிலிருந்து அவிழ்ந்து சரிந்த திரைபோல” என்றான் நிர்மித்ரன். மழையின் ஓசை பெருகிச்சூழ்ந்திருந்தது. அருகே யமுனையின் நீர் கொதிப்பதுபோல கொப்பளித்தது. மழையலை வீசி அகன்ற இடைவெளியில் தொலைவில் கரைமரங்கள் பசுங்கொந்தளிப்பாக தெரிந்தன. படகுகளின் பாய்களை முழுமையாக இறக்கி சுருட்டிக் கட்டினர் குகர்கள். கட்டப்பட்ட பாய்கள் திமிறி எழத்துடித்தன. நுனிகளில் ஈரம் தெறிக்க படபடத்தன.
மின்னல் எழுந்து நீர்த்தாரைகளை ஒளிரச்செய்தது. மிகத் தொலைவிலென ஓர் இடியோசை மழைத்திரையால் மூடப்பட்டு கேட்டது. அடுத்த மின்னலில் யமுனையின் நீர் ஆடியென ஒளிகொள்ள இடியோசை அவர்கள் தலைக்குமேல் முழங்கியது. நிர்மித்ரன் பாய்ந்து சதானீகனைப் பற்றிக்கொண்டான். “இந்திரன் பெயர்களை சொல்லிக்கொள்” என்றான் சதானீகன். நிர்மித்ரன் அச்சத்துடன் “அகாரி, அந்தரன், அமரர்கோன், அயிராணி கேள்வன், ஐராவதன், ஆகண்டலன், ஆகாயபதி, ஆயிரவிழியன், ஆனையூர்வன், இந்திரன், இடிக்கொடியன், உடலக்கண்ணன், உம்பர்கோன்…” என கண்மூடி சொன்னான். அடுத்த இடியில் கண்விழித்து கயிற்றை பற்றிக்கொண்டான்.
“சென்று அறைக்குள் அமர்ந்துகொள்” என்றான் சதானீகன். நிர்மித்ரன் கயிற்றையும் சுவரையும் பற்றிக்கொண்டு உள்ளே சென்றான். சதானீகன் மழையை நோக்கிக்கொண்டு நின்றான். வான் விரிசலாக தோன்றி விழுதுகளாக இறங்கி துடித்து அணைந்த மின்னலில் தொலைவில் ஒரு செந்தழல் எழுந்தது. “பனை” என்றான் குகன். ஒருகணம் ஓய்ந்ததென மாயம் காட்டி மீண்டும் வீசியறைந்தது மழை. படகுக்குள் சேர்ந்த நீரை குகர்கள் மரக்குடுக்கைகளால் அள்ளி வெளியே ஊற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கரிய உடல்கள்மேல் நீர்த்துளிகள் அறைந்து உடைந்து சிதறிக்கொண்டிருந்தன. மழைக்குள் விழிகளும் பற்களும் அவ்வப்போது மின்னிமறைந்தன.
மிக மெல்ல படகு நகர்ந்தது. பாய்கள் இல்லாமல் அது ஒழுக்கிலேயே சென்றுவிடாமலிருக்க பன்னிருவர் துடுப்புகளால் உந்தி துழாவிக்கொண்டிருந்தார்கள். ஒழுக்கை மறுத்து பக்கவாட்டில் கரைநோக்கி சென்றது. பின்னர் திரும்பி மறுகோணத்தில் சாய்வாக மறுகரை நோக்கி சென்றது. “நல்லவேளை நம்மிடம் பெரும்பொதிகள் ஏதுமில்லை… இல்லையென்றால் கரையணைந்து நிறுத்திவிட்டு காத்திருக்கவேண்டியிருக்கும்” என்றான் முதிய குகன்.
மழையின் ஓலம் செவிக்கு பழகிய பின்னர் சிறிய ஒலிகளைக்கூட கேட்கமுடிந்தது. இரும்பாலான பாய்மரக்கண்ணிகள் அசையும் ஒலி. கயிறுகளின் முனகல். அலைகள் படகின் வயிற்றை நக்கும் ஓசை. அப்பால் ஏதோ பாறையை யமுனை வளைந்துசெல்வதன் முழக்கம். கைகளைக் கட்டி சுவர் சாய்ந்து நின்று அவன் மழையை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் உணர்வுகொண்டு “தந்தை எங்கே?” என்றான். குகன் சுட்டிக்காட்டினான். அமரமுனையில் கைகளை மார்பில் கட்டியபடி வானில் எழுந்த மின்னல்களை நோக்கி அசையாமல் அர்ஜுனன் நின்றிருந்தான்.
எவரோ இழுத்து அகற்றியதுபோல மழை ஓய்ந்தது. நோக்கியிருக்கவே வானில் முகில்பெருக்கு பிளந்து துண்டுகளாக மாறி சிதறி கிழக்கு நோக்கி சென்றது. நீர்ப்பரப்பு மழையை முழுமையாக மறந்து உள்ளொளி கொள்ளலாயிற்று. நூற்றுக்கணக்கான சிறிய மீன்கள் அலைவெளியில் எழுந்து துள்ளி அமிழ்வதை சதானீகன் கண்டான். கூர்ந்தபோது அவற்றை பிடிக்கவந்த பெரிய மீன்களை நீருக்குள் காணமுடிந்தது. “புதுமழையில் வரும் உணவை அவை கொண்டாடுகின்றன” என்று குகன் சொன்னான்.
கரையிலிருந்து வெண்கொக்குகளின் கூட்டம் எவரோ வீசியெறிந்த மென்துகில் என எழுந்து அலையடித்தபடி பறந்து வானில் சுழன்றது. ஒரு நீர்க்காகம் வந்து பாய்க்கயிற்றின் மேல் அமர்ந்து ர்ர்ரா என்றது. மேலும் மேலும் பறவைகள் நீர்ப்பரப்பின்மேல் எழுந்தன. பாய்ந்து நீர்சிதற மீன்கவ்வி மேலெழுந்து பாய்வடங்கள்மேல் அமர்ந்தன. குகர்கள் கயிறுகளை அவிழ்க்க, திமிறும் புரவிகள் என பாய்கள் ஓசையுடன் விரிந்து உப்பி மேலெழுந்து சென்றன. ஒன்றன்மேல் ஒன்றாக வெள்ளை யானைகள் ஏறி அமர்ந்ததுபோல அவை பாய்மரத்தின்மேல் அமைய படகு விரைவு கொண்டது.
புதுக்காற்றில் விம்மி ஆடி துள்ளின பாய்கள். அவற்றில் இருந்து உதறப்பட்ட நீர்த்துளிகள் அவன்மேல் தெறித்தன. சில கணங்களுக்குள்ளாகவே காற்றில் ஈரத்தலைமுடியும் ஆடைகளும் காய்ந்தன. தோல் மென்மெருகு கொண்டது. நிர்மித்ரன் உள்ளிருந்து வந்து அவனருகே நின்றான். “வளத்தான், வண்மையன், வண்ணன், வஜ்ரதரன், வைரவன், வரக்கிருது, வரைச்சிறையரிந்தோன், வரைப்பகைவன், வலாரி, வாசவன், வானவர்கோன், வாழ்வருளி…” என அவன் சொல்லிக்கொண்டிருந்தான். “முடிக்கவில்லையா? இடி நின்றுவிட்டது” என்றான் சதானீகன். “ஆம்” என்று புன்னகைத்த நிர்மித்ரன் “மூத்தவரே, நான் அஞ்சியது வேறு எவருக்கும் தெரியவேண்டியதில்லை” என்றான். சதானீகன் சிரித்தபடி அவன் முதுகை தொட்டான்.
“நாம் சென்றுசேர்கையில் இருட்டிவிடும்… இப்போதே உச்சிப்பொழுதாகிவிட்டது” என்றான் நிர்மித்ரன். “ஆம், நள்ளிரவிலேயே சென்றுசேரமுடியுமென்று தோன்றுகிறது” என்றான் சதானீகன். “நற்செய்தி என்னவென்றால் நமக்கு முன் அஸ்தினபுரியின் அரசரும் செல்லமுடியாது” என்றான் நிர்மித்ரன். சதானீகன் புன்னகைத்தான். “அந்திக்குள் கரையில் இறங்கிவிட்டால் நன்று, இளவரசே. இருட்டிய பின்னர் துறைமேடையில் இறங்கினால் அறியாத வழியில் செல்லவேண்டியிருக்கும். மழையிருந்தால் பந்தங்களையும் ஏற்றிக்கொள்ளமுடியாது” என்றான் காவலன்.
முதிய குகன் “இனி மழை இருக்காது” என்றான். “இது எடைகொண்டுவிட்ட ஒரு முகில் கிழிபட்டுப் பெய்த மழை. பிற முகில்கள் சிதறிவிட்டன.” நிர்மித்ரன் “இன்னொரு மழை பெய்தால்கூட நன்றாகவே இருக்கும்” என்றான். சதானீகன் அவனை திரும்பிப்பார்க்க “நான் இனிமேல் அஞ்சமாட்டேன்” என்றான். “ஏன், இந்திரன்பெயர்களை முழுமையாக சொல்லிவிட்டாயா?” என்றான் சதானீகன். “ஆம், ஏழுமுறை…” என்றான் நிர்மித்ரன். “நீர்ப்பரப்பில் இடியை அஞ்சத்தான் வேண்டும், இளவரசே. ஆண்டுக்கு நூறு படகுகளாவது இடிதாக்கி அழிகின்றன யமுனையில்” என்றான் முதிய குகன்.
மீனுணவின் மணம் எழுந்தது. மழையில் நீரள்ள வந்துவிட்டிருந்த அடுமனையாளர்கள் கலம் ஏற்றி சமைக்கத் தொடங்கியிருந்தனர். “இனிய மணம்… உணவு இத்தனை இனிதென இதற்கு முன் அறிந்ததே இல்லை” என்றான் நிர்மித்ரன். குரல் தாழ்த்தி “தந்தை உள்ளே சென்று அமர்ந்துவிட்டார்” என்றான். இளவெயில் எழத் தொடங்கியது. யமுனையின் அலைகள் ஒளிகொண்டன. தொலைவுகள் தெளிந்து அணுகின. பறவைகளின் சிறகுகளின் பிசிறுகளைக்கூட காணமுடிந்தது. கரையோர மரங்கள் வெண்பற்களின் நகை என கடந்துசென்றன. மீன்கள் வெள்ளிக்காசுகள் என ஒளியுடன் நீருக்குள் திரும்பின. சற்றுநேரத்திலேயே கண்கூசி நீர்வழியலாயிற்று.
அடுமனையர் வந்து உணவுண்ண அழைத்தனர். “சொற்களில் இதுவே இனியது” என்றபடி நிர்மித்ரன் பாய்ந்து உள்ளே சென்றான். சிறுபீடத்தில் மீனுணவும் ஆவியெழும் அப்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கைகழுவி அமர்ந்தனர். “யமுனையின் மீன்!” என்றான் நிர்மித்ரன். “யமுனையின் மீன் சற்று அழுத்தம்கொண்டது. கொழுப்பும் மிகுதி” என்றான் சதானீகன். அர்ஜுனன் வந்து அமர்ந்தான். அவன் அப்பத்தை எடுத்து அளிக்க அதை நிர்மித்ரன் பெற்றுக்கொண்டதும் அவர்கள் உண்ணத் தொடங்கினர்.
சதானீகன் “நாம் நாளை புலரியில்தான் இளைய யாதவரை சந்திக்கமுடியுமெனத் தோன்றுகிறது, தந்தையே” என்றான். ஆம் என அர்ஜுனன் தலையசைத்தான். “அதற்குமுன் அஸ்தினபுரியின் அரசரும் சந்திக்க முடியாது” என்றான் சதானீகன். “ஆம், அவரும் நமக்கு முன்னால்தான் செல்கிறார்” என்றான் அர்ஜுனன். “அமரமுனையில் நின்றிருக்கையில் அவர்களின் படகின் கொடியை கண்டேன்.” சதானீகன் “இருவரும் சேர்ந்தே அவரை காண்போம் போலும்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான்.
நிர்மித்ரன் விரைந்து உண்டபடி “இன்னுணவு” என்றான். அர்ஜுனன் “பிரத்யும்னனும் அங்கே வந்திருக்கிறான்” என்றான். “எப்போது அறிந்தீர்கள்?” என்றான் சதானீகன். “சற்றுமுன்” என்றான் அர்ஜுனன். “புறா வந்ததா? நான் பார்க்கவில்லையே” என்றான் நிர்மித்ரன். அர்ஜுனன் “அவன் இன்று இரவுக்குள் தந்தையை சந்திக்க வாய்ப்புள்ளது” என்றான். சதானீகன் “எதற்காக வந்திருக்கிறார்?” என்றான். அர்ஜுனன் “நீ என்ன நினைக்கிறாய்?” என்றான். “சாம்பர் அஸ்தினபுரியில் மணம்கொண்டிருக்கிறார். ஆகவே அவரை இளைய யாதவர் துவாரகையின் நாளையரசராக ஆக்க வாய்ப்பில்லை. யாதவக்குடியினருடன் இணைந்து பானுவும் துவாரகையை உதறிவிட்டார். ஆகவே எஞ்சியிருப்பது பிரத்யும்னர் மட்டுமே. இளைய யாதவர் அவரை பட்டத்து இளவரசராக ஆக்கலாம்” என்றான் சதானீகன்.
“ஆம், நானும் அதையே எண்ணுகிறேன். தன்னை பட்டத்து இளவரசாக அறிவிப்பாரென்றால் படைமுகம் நிற்பதாக அவர் சொல்லளிக்கக்கூடும்” என்ற நிர்மித்ரன் “அத்துடன் தந்தை படைக்கலமேந்தப்போவதில்லை என்பதையும் அவர் அறிந்திருப்பார். தந்தையின்பொருட்டு அவர் போரிட்டால் நன்றல்லவா?” என்றான். அர்ஜுனன் “இப்போது நாம் அதை எண்ணிச்சூழ்வதில் எப்பொருளும் இல்லை. நாளை புலரிக்குள் அனைத்தும் தெளிவாகிவிடும்” என்றான்.
உண்டு எழுந்தபோது சதானீகன் இனிய சோர்வொன்றை உணர்ந்தான். நிறைவும், நிறைவளிக்கும் தனிமையும். துயிலில் உள்ளம் அமிழ்ந்து ஒவ்வொரு சொல்லாக மறைந்துகொண்டிருந்தது. அவனருகே வந்த நிர்மித்ரன் “இது நம் வாழ்வில் ஒரு நன்னாள், மூத்தவரே” என்றான். “ஏன்?” என்றான் சதானீகன். “தெரியவில்லை. நமக்கு நலமென்று ஏதும் நிகழவுமில்லை. ஆனால் பிறிதொரு நன்னாள் நமக்கு இனி இல்லை என்று தோன்றுகிறது” என்றான் நிர்மித்ரன். சதானீகன் ஒன்றும் கூறாமல் ஏவலன் நீட்டிய மரவுரியில் கையை துடைத்தபின் மீண்டும் படகின் அகல்மேடைக்கு சென்றான்.