எழுதழல் - 75
எட்டு : குருதிவிதை – 6
மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க நிர்மித்ரனும் சதானீகனும் இருபுறமும் சற்று பின்னால் என தொடர்ந்து சென்றனர். அவர்களை எதிர்கொண்ட சிற்றமைச்சர் தலைவணங்கி “விருந்துக்கூடம் ஒருங்கிவிட்டது. தங்களுக்காக காத்திருக்கிறார்கள், அரசே. வருக!” என்றார். அவரைத் தொடர்ந்து நடந்தபடி அர்ஜுனன் “மதுராபுரியில் இளைய யாதவருடன் இருமுறை விருந்தாடியிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது பிறிதொரு விருந்து” என்றான்.
சிற்றமைச்சர் “ஆம், முன்பு தாங்கள் இங்கு வந்தபோது என் தந்தை உடனிருந்தார்” என்றார். நிர்மித்ரன் “இது முறைமை சார்ந்த விருந்து அல்ல என்றார்கள். ஆகவேதான் நான் எளிய உடை அணிந்தேன். மூத்தவர் இது போதுமென்று சொன்னார்” என்றான். சதானீகன் “மாற்றரசர்களும் அயல்நாட்டுத் தூதர்களும் இருந்தால் மட்டுமே அது அரசமுறைமை விருந்து. இது மதுராவின் அரசியுடனும் அரசருடனும் நாம் அமர்ந்து விருந்துண்ணும் நிகழ்வு மட்டும்தான்” என்றான்.
அர்ஜுனன் “யாதவ குடித்தலைவர்களையும் அழைத்திருக்கிறார்களா?” என்றான். சிற்றமைச்சர் திரும்பி “இல்லை. உபயாதவர்கள் மட்டுமே உள்ளனர்” என்றார். சதானீகன் “அப்படியென்றால் இங்கும் அரசியலே பேசப்படுமா?” என்றான். அர்ஜுனன் புன்னகைத்து “அரண்மனைகளில் பேசப்படுவது எதுவும் அரசியலே” என்றான். “உபயாதவர்களே ஒரு பெருவிருந்துக்கு போதுமானவர்கள்” என்றான் நிர்மித்ரன். “இங்கே துவாரகையின் நான்கு அரசியரின் மைந்தர்களே வந்துள்ளனர்” என்று சிற்றமைச்சர் சொன்னார்.
இடைநாழியினூடாக உள்கூடத்தின் வாசலை அடைந்து அவர்கள் வரவை அறிவிக்கும்படி ஏவலனிடம் சிற்றமைச்சர் சொன்னார். ஏவலன் உள்ளே சென்று அறிவித்து அவர்களை உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். எடைமிக்க கதவு விலகி உள்ளே இருந்தவர்கள் பேசிக்கொண்ட ஓசையை வெட்டி அவர்கள்மேல் வீசியதுபோல் தோற்றம் அளித்தது. அவர்கள் உள்ளே நுழைந்ததும் பின்னால் கதவு ஓசையின்றி மூடிக்கொண்டது. பலராமர் முன்னரே உண்ணத்தொடங்கிவிட்டிருந்தார். கையிலிருந்த பெரிய ஊன்துண்டுடன் எழுந்து பிறிதொரு கையை நீட்டி “வருக, இளையோனே. உனக்காகவே காத்திருந்தோம். மைந்தரே, வருக! உணவருந்துங்கள். மதுராவின் அடுமனைத்தொழில் தனித்துவம் கொண்டதென்று உங்கள் மூத்தவன் பீமனே கூறியிருக்கிறான்” என்றார்.
அக்ரூரர் எழுந்து அர்ஜுனனை நோக்கி “வருக, இளைய பாண்டவரே! நல்லுணவின் முன்பு இனிய சொற்களுடன் இவ்விரவை நிறைவு செய்வோம். அவையில் நான் கடுஞ்சொற்கள் ஏதேனும் சொல்லியிருந்தால் அதன்பொருட்டு தலைவணங்கி பொறுத்தருளக் கோருகிறேன்” என்றார். அர்ஜுனன் “இதென்ன சொற்கள்? தாங்கள் என் தந்தையைப் போன்றவர்” என்றான். பலராமர் அர்ஜுனனின் கையை பற்றிக்கொண்டு “உண்ணுக, ஏழுவகை ஊனுணவு உள்ளது இங்கு” என்றார். அர்ஜுனன் “நான் உண்ணும் உணவை குறைத்துக்கொண்டே வருகிறேன்” என்றான். “ஏன்?” என்று பலராமர் கேட்டார். “எதற்காக குறைக்க வேண்டும் உணவை?” அர்ஜுனன் சிரித்து “உணவு மிக அரிதாகக் கிடைக்கும் நிலங்களில் பயணம் செய்திருக்கிறேன். ஆகவே தேவைக்குமேல் உண்பது அதை வீணடிப்பதே என்ற எண்ணம் உருவாகிவிட்டது” என்றான். “நன்று! நன்று!” என்று நகைத்த பலராமர் ஊன்துண்டை கடித்து மென்றபடி “ஆனால் நான் ஒவ்வொரு முறையும் முந்தைய முறையைவிட கூடுதலாக உண்கிறேன்” என்றார்.
சதானீகனையும் நிர்மித்ரனையும் சாம்பனும் சுமித்ரனும் அழைத்து அமரச்செய்தனர். ஒரே தோற்றத்தில் இருந்தவர்கள் தம்பியர் புருஜித், சதாஜித், சகஸ்ரஜித், விஜயன், சித்ரகேது, வசுமான், திராவிடன், கிராது ஆகியோர் என சதானீகன் புரிந்துகொண்டான். சாம்பன் “இவன் சுருதன். இளைய அன்னை காளிந்தியின் மைந்தன்… அவர்கள் தம்பியர்” என்றான். சதானீகன் “கவி, விருஷன், களிந்தவீரன், சுபாகு, பத்ரன், சாந்தன், தர்ஷன், பூர்ணநமாம்ஷு, சோமகன். நான் சரியாக சொல்லிவிட்டேனா?” என்றான். சாம்பன் சிரித்து “ஆம், அவர்கள் அன்னை லக்ஷ்மணையின் மைந்தர்கள். பிரகோஷன், காத்ரவான், சிம்மன், பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், ஓஜஸ், அபரஜித். அப்பாலிருப்பவர்கள் அன்னை மித்ரவிந்தையின் மைந்தர்கள். விருகன், கர்ஹன், அனிலன், கிருதரன், வர்தனன், ஆனந்தன், மகாம்சன், பவனன், வஹ்னி, சூதி” என்றான்.
நிர்மித்ரன் “இவர்களே இப்படி எண்ணற்றவர்களாக தோன்றுகின்றனர். அஸ்தினபுரியில் உபகௌரவர் நிரை ஒரு படையென்றே தோன்றும்போல” என்றான். சுமித்ரன் “ஆம், ஆலயச்சுற்றுமண்டபத்தில் நின்றிருக்கும் சிலைகள்போல ஒன்றென்றே தெரிவார்கள்” என்றான். சாம்பன் நிர்மித்ரனிடம் “உன்னை நான் கைக்குழந்தையாக பார்த்திருக்கிறேன்” என்றான். நிர்மித்ரன் “எப்போது?” என்றான். “இந்திரப்பிரஸ்த நகர்நிலை விழவின்போது. உன் அன்னை இடுப்பிலிருந்தாய். அரையாடை உனக்கு ஒவ்வாததால் அதை பிடித்து இழுத்து கழற்ற முயன்றபடியே இருந்தாய்” என்றான். அவன் தம்பியர் நகைத்தனர்.
“உண்மையை சொல்லப்போனால் இப்போதுகூட அரையாடை சுமையாகவே உள்ளது” என்றான் நிர்மித்ரன். “நான் விழைவது யமுனையில் ஆடையின்றி நீராடுவதை மட்டுமே.” சதானீகன் “மூத்தவர் பிரத்யும்னர் இப்போது எங்குள்ளார்?” என்றான். சாம்பன் “அவர் தந்தையைக் காண விழையாது தசபுஜங்கத்தின் சிறிய கோட்டையிலேயே தங்கியிருக்கிறார். பத்ரையன்னையின் மைந்தர் உடனிருக்கிறார்கள். இங்கு வரும்படி முதுதந்தை தூதனுப்பியும்கூட கிளம்பவில்லை. அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை” என்றான். “சத்யபாமை அன்னையின் மைந்தர்கள் பானுவின் தலைமையில் மதுவனத்திற்கு சென்றனர். நக்னஜித்தியன்னையின் மைந்தரும் உடன்சென்றனர். அனைவரும் இன்னும் சில நாட்களில் மதுராவுக்கு வந்துவிடுவார்கள்” என்றான்.
சதானீகன் “உபயாதவர்கள் பூசலின்றி ஓரிடத்தில் கூடுவது ஒருவேளை அதன்பின் நிகழக்கூடும்” என்றான். அதிலிருந்த ஏளனத்தை உணர்ந்த சாம்பன் ஒருகணம் விழிசுருங்கி பின் தலையை பின்சரித்து நகைத்து “மெய்தான். இப்போது அனைவருக்குமே தந்தை பொதுஎதிரியாகிவிட்டார்” என்றான். “பிரத்யும்னரை நான் சந்திக்கவேண்டும்” என்று சதானீகன் சொன்னான். “நீயா? இங்கு தூது வந்திருப்பது உன் தந்தை. நீ வெறுமனே அவருடன் வந்திருக்கிறாய்” என்றான் சுருதன்.
அவன் விழிகளை நேருக்குநேர் சந்தித்து “தந்தை தன் தூதை சொல்லிவிட்டார். பிரத்யும்னரிடம் சொல்ல எனக்கு சில சொற்கள், வாக்குகள் உள்ளன” என்றான் சதானீகன். “ஏன், என்னிடம் சொல்ல சொற்கள் இல்லையா?” என்று சாம்பன் கேட்டான். “உள்ளன, அவற்றை உரிய முறையில் சொல்ல வேண்டும்” என்றான் சதானீகன். “இப்போது சொல்லலாமே? அன்னத்தை சான்றாக்கி சொல்வது சிறந்த வழியல்லவா?” என்று சாம்பன் கேட்டான். “ஆனால் இதுவே ஒரு பெரிய அவை போலிருக்கிறது” என்றான் சதானீகன். “தம்பியர் என்னிடமிருந்து வேறுபட்டவர்களல்ல” என்று சாம்பன் சொன்னான். “அவன் நானிருப்பதனால் தயங்கலாம்” என்றான் சுருதன்.
சதானீகன் அவனை நோக்கி புன்னகைத்தபின் “சாம்பரே, நான் நகுலனின் மைந்தன் என்பதை அறிந்திருப்பீர்கள். புரவி தேர்வதினூடாக எந்தையர் அறிந்த ஒரு கலையுண்டு. ஐம்புலன்களுக்கும் அப்பால் உள்ள ஒன்றை தன் உள்ளுணர்வால் அறியும் திறன்கொண்டது குதிரை. அவ்வாறு அறிந்த ஒன்றை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். துவாரகையை நீங்கள் ஆள்வீர்கள். ஆனால் அது உங்களுக்கோ உங்கள் குலத்திற்கோ நன்று பயக்காது. உங்களால் துவாரகை அழியவும் கூடும்” என்றான்.
ஒருகணம் முகம் மங்கலடைந்து பின் சிரிப்பில் மீண்டு “இதென்ன தீச்சொல்லா?” என்று சாம்பன் நகைத்தான். “அல்ல, விழைவு” என்றான் சுருதன். “சாம்பரே, தங்கள் தந்தையின் தோற்றத்திற்கும் தங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. ஆனால் முதற்கணம் தங்களைக் கண்டபோது தங்கள் தந்தையைக் கண்டது போலவே தோன்றியது. தாங்கள் தங்கள் தந்தையைப் போன்றவர் என பலரும் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அது ஏன் என்பதைத்தான் என்னுள்ளே அலசிக்கொண்டிருந்தேன். நீங்கள் சிரித்தபோது அது மின் என தெரியவந்தது. அனைத்துக்கும் அப்பால் செல்லும் ஒரு சிரிப்பை அவரிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான் சதானீகன்.
“ஆனால் தங்களை அவராக்குவது பிறிதொன்று. தங்களிடம் இருக்கும் தங்கள் தந்தையின் விழைவு” என சதானீகன் தொடர்ந்தான். “துவாரகையெனும் பெருநகரை உருவாக்கியது அவர் கொண்ட பெருவிழைவு. அதை அழிக்கவேண்டும் எனும் ஆழ்விழைவும் அவருக்குள் இருக்கும். அத்தனை நதிகளுக்கு அடியிலும் எதிர்நீரோட்டம் உள்ளது என்பதுபோல. அவருடைய எதிர்வு நீங்கள். அவரது ஆழம் விழைவதை நிகழ்த்தப்போகிறவர்.”
சாம்பன் கூர்ந்து நோக்கி “அவருடைய ஆழம் ஏன் அவரால் ஆக்கப்பட்ட அந்நகரை அழிக்க விரும்பவேண்டும்?” என்றான். “அவருக்குள் எழுந்த அனல் ஒன்றுண்டு. அது அடங்கவில்லை. காட்டுத் தெய்வங்களுக்கு முன் குலப்பழி நீங்க கூந்தல் அரிந்து வைப்பது உண்டு. குருதி சொட்ட உடலுறுப்புகளை அரிந்து வைப்பதும் உண்டு. தலையரிந்து வைக்கக்கோரும் கொடுந்தெய்வம் ஒன்று அவர்முன் நின்றுள்ளது. தன் குடிமேல் இளைய யாதவர் கொண்ட பழி அழியாதது.” சுருதன் “என்ன பழி?” என்று கேட்க சாம்பன் அவனை நோக்கினான். அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. சதானீகன் “எவருமறிந்ததே” என்றான்.
“அனைவரும் மீளமீள சொல்கிறீர்கள், இந்நகர் மீது கொல்லப்பட்ட குழவியரின் பழி உள்ளதென்று. அதைத்தான் எண்ணுகிறாய் என நினைக்கிறேன்” என்றான் சுருதன். “நுண்ணுணர்வின் அறிதல். நல்ல கள் உண்டால் அது பெருகவும் கூடும்.” சதானீகன் “ஆம், உளமயக்காகவேகூட இருக்கலாம். அவ்வண்ணமே விழைகிறேன். ஆனால் அதை என் இரு ஊன்விழிகளால் நேற்று பார்த்தேன்” என்றான். சாம்பன் உதடுகளை கடித்துக்கொண்டான்.
சுருதன் ஏளனத்தில் உதடுகள் சற்று வளைய “உபபாண்டவர்கள் நிமித்திகர்களுக்கு இணையாகவே வருவதுரைப்பவர்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்” என்றான். அவன் விழிகளை ஏறிட்டு நோக்கி புன்னகைத்த சதானீகன் “எந்தையர் ஐவரில் இளையவர் நிமித்த நூல் தேர்ந்தவர், ஆவதை முற்றுணர்ந்தவர் என்று அறிந்திருப்பீர். நாங்கள் ஒன்பதின்மர் அந்த ஐவரின் நல்லியல்புகள் அனைத்தையும் பெற்றவர்கள் என்பார்கள்” என்றான். “சுருதரே, வருவதை உள்ளறியாத எவரும் மண்ணில் இல்லை. ஏனென்றால் நிகழ்வதறிந்த பார்த்திவப் பரமாணுவே உள்ளமென விரிந்தெழுகிறது. அறிந்ததை விழைவாலும் ஆணவத்தாலும் மறைத்துக்கொள்கிறோம்.”
வெளியே வாழ்த்தொலியும் சங்கோசையும் எழுந்தன. அவைக்குள் நுழைந்த நிமித்திகன் உரத்த குரலில் “மதுராவின் அரசர் அவைபுகுகிறார்” என்றான். உண்டுகொண்டிருந்த ஊன்துண்டை தட்டில் வைத்துவிட்டு எழுந்து நின்ற பலராமர் “தந்தை நெடுநேரம் உணவு உண்ண முடியாது. அவர் அவை அமர்ந்து சற்றே உண்டு ஓரிரு சொற்கள் பேசியதுமே கிளம்பிவிடுவார். அதன் பின்பு நாம் நமது விருப்பப்படி பேசலாம்” என்றார். இரு காவலர்கள் தொடர வளைந்த கூனுடலுடன் நடுங்கும் கால்களால் உள்ளே வந்த வசுதேவர் அனைவரையும் வணங்கி அவருக்கிடப்பட்ட பெரிய பீடத்தில் சென்று அமர்ந்தார்.
அவர் மிக முதிர்ந்திருந்தார். கழுத்துக்குக் கீழ் தசைகள் தொய்ந்து மடிந்து கிடந்தன. கைகளும் வாயும் நடுங்கி ஆடிக்கொண்டிருந்தன. தசைவளையங்கள் பழுத்து தொய்ந்த கண்கள் ஒளியிழந்து கூழாங்கற்கள் போலிருந்தன. “அரசியர் வந்துகொண்டிருக்கிறார்களல்லவா?” என்று நிமித்திகனிடம் கேட்டார். நிமித்திகன் “வந்துகொண்டிருக்கிறார்கள், அரசே” என்றான். பலராமரைப் பார்த்து “முன்னரே தொடங்கிவிட்டாயா?” என்றபின் அர்ஜுனனிடம் “முறைப்படி உண்பதற்காக நீ காத்திருந்தது மகிழ்வளிக்கிறது. சோற்றுவெறிகொண்ட மல்லர்களை நான் அஞ்சுகிறேன்” என்றார். பலராமர் “முறைமைப்படி உண்ணும்பொருட்டு நெடுநேரம் காத்திருப்பது எனக்கு வழக்கமில்லை” என்றார். “அமர்க!” என வசுதேவர் கைகாட்ட அனைவரும் அமர்ந்தனர்.
வசுதேவர் உபயாதவர்களைப் பார்த்து “பிரத்யும்னன் வரவில்லையா?” என்றார். சுருதன் “வந்துகொண்டிருக்கிறான்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “பானுவை நேராக இங்கே வரச்சொன்னேன்” என்றார். சங்கொலி எழ அரசியின் ஏவற்பெண்டு உள்ளே வந்து “பேரரசி தேவகி, பேரரசி ரோகிணியுடன் அவைநுழைகிறார். உடன் அரசி ரேவதியும் எழுந்தருள்கிறார்” என்றாள். பேரரசி தேவகி இரு சேடியர் தொடர அவைக்குள் நுழைந்தாள். வசுதேவர் தவிர அனைவரும் எழுந்து தலைவணங்கினர். தேவகியை சேடிப்பெண் அவளுக்கான பீடத்தில் அமரவைக்க அவள் அருகே ரோகிணி அமர்ந்தாள். தனியாக வந்த ரேவதி தன் பீடத்தில் அமர்ந்தபின் ஏவல்பெண்டிடம் விழிகளால் ஏதோ ஆணையிட்டாள்.
அரசியர் அமர்ந்ததும் பிறர் அமர்ந்தனர். அக்ரூரர் கைகாட்ட விளம்பர் உணவை பரிமாறத் தொடங்கினர். தட்டுகளின் ஓசையும் கரண்டிகள் முட்டும் ஒலியும் மெல்லிய குரலில் விளம்பர் பேசிக்கொண்ட ஒலியும் மட்டுமே எழுந்தன. விளம்பப்பட்ட உணவின் கலவைமணம் கூடத்தை நிறைத்தது. அவர்கள் முடித்ததும் நிமித்திகன் எழுந்து உரத்த குரலில் “விண்புரக்கும் இந்திரனை, மழையாளும் வருணனை, கனியவைக்கும் அனலோனை, பசுமையூட்டும் கதிரோனை, பசும்புல்களின் தெய்வமாகிய குசையை, பசுக்களின் அன்னையாகிய காமதேனுவை, பாற்கடலில் பள்ளிகொண்டருளிய பெருமாளை, அவன் பாதத்தில் அமர்ந்த திருமகளை வணங்குக! அவர்கள் அனைவருக்கும் இனியவர்களான எங்கள் மூதாதையரை வணங்குக! இந்த உணவு எங்கள் பசியினூடாக எங்கள் குடியாளும் தெய்வங்களுக்கு அவியாகுக! எங்கள் மூதாதையரை நிறைவுறச் செய்க! ஓம்! அவ்வாறே ஆகுக!” என்றான். “ஆம்! அவ்வாறே ஆகுக!” என்று அனைவரும் உரைத்தனர்.
தாலத்தில் நீட்டப்பட்ட ஓர் அப்பத்தை எடுத்து இரண்டாகக் கிழித்து அதை அர்ஜுனனிடம் நீட்டினார் வசுதேவர். அவன் அதை வாங்கிக்கொண்டபின் மீண்டும் இரண்டாகக் கிழித்து ஒன்றை பலராமருக்கு அளித்தார். அவர் முதல் வாய் அன்னத்தை உண்டதும் அனைவரும் உண்ணத்தொடங்கினர். நிர்மித்ரன் சதானீகனிடம் “மிக மெதுவாகத்தானே உண்ணவேண்டும்?” என்றான். சதானீகன் “அப்படித்தான் வழக்கம் என்று கற்றிருக்கிறேன். ஆனால் இவர்கள் உண்பதைப் பார்த்தால் எப்படி வேண்டுமானாலும் உண்ணலாம் என்று தோன்றுகிறது” என்றான்.
அர்ஜுனன் விழிகள் தாழ்த்தி அங்கில்லாதவன்போல் இருந்தான். கைகள் தானாக இயங்க சிறு துண்டுகளாக அப்பத்தை எடுத்து கறியுடன் தொட்டு உண்டான். தேவகி “நீ இளையவனை எப்போது பார்த்தாய்?” என்று அர்ஜுனனை கேட்டாள். அர்ஜுனன் திகைப்புடன் அவள் குரலைக் கேட்டு பின்னர் “உபப்பிலாவ்யத்திற்கு அபிமன்யூவின் மணநிகழ்வுக்கு வந்திருந்தார். அப்போது முழுமையாக உடனிருந்தேன்” என்றான்.
அவள் சிலகணங்கள் விழிசரித்து அமர்ந்திருந்தபின் அர்ஜுனனை நோக்காமல் “அவன் எண்ணுவதுதான் என்ன?” என்றாள். “அன்னையே, பிற எவரையும்விட அதை தாங்கள் உணரமுடியும்… வெறுமனே மண்நிகழ்ந்து உலகுழன்று மறையும்பொருட்டு அவர் இங்கு எழுந்தருளவில்லை” என்றான். “ஆம், அதை நான் இளமையிலேயே அறிந்திருந்தேன்” என்று தேவகி சொன்னாள். “அவனை பிறப்பிக்கும்பொருட்டே நான் இம்மண்ணில் நிகழ்ந்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றியது.”
ரேவதி “அன்னையர் அனைவருக்கும் தோன்றுவதுதான் அது. என்னுடைய முதல் மைந்தன் பிறந்தபோது அவன் பாரதவர்ஷத்தை முழுதாளும் சக்ரவர்த்தியாவான் என்று நான் எண்ணினேன். ஒரு மாதம் அதை எண்ணி எண்ணி சிரித்துகொண்டும் அழுதுகொண்டும் இருந்தேன். அன்று என்னைச் சுற்றி சில சூதர்கள் இருந்திருந்தார்கள் என்றால் அதையே பாடலாகப் பாடி என்னை நம்ப வைத்திருப்பார்கள்” என்றாள். ஊனுணவுக்காக கையால் ஆணையிட்டபின் “இன்று அவர்கள் மதுவனத்தில் கன்றோட்டுகிறார்கள்” என்றாள். அக்ரூரர் “மதுரா அவர்களுக்காக காத்திருக்கிறது, அரசி” என்றார்.
தேவகி பொறுமையின்மை தோன்ற அவளை பார்த்துவிட்டு திரும்பி அர்ஜுனனிடம் “இங்கு என்ன நிகழப்போகிறது என்று நீ எண்ணுகிறாய்?” என்றாள். “அவர் எதன்பொருட்டு வந்தாரோ அதை நிகழ்த்திவிட்டே மீள்வார். அது நிகழவேண்டுமென்றால் இங்குள்ள ஷத்ரிய குலங்கள் அனைத்தும் அழியவேண்டும். ஆயிரமாண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட அனைத்தும் இடிந்து சரியவேண்டும். அவற்றை காத்து நின்றிருக்கும் சொற்கள் மறையவேண்டும்” என்றான் அர்ஜுனன். “குருதியின்றி அது நிகழாது. அக்குருதி எவர் குருதியாயினும் படையாழிக்கு வேறுபாடில்லை.”
அவள் கண்கள் சுருங்க “ஆனால் இவர்கள் அனைவரும் அஸ்தினபுரியுடன் நிற்பதாக அல்லவா முடிவெடுத்திருக்கிறார்கள்?” என்றாள். “ஆம் அன்னையே, படையாழியின் முன் தலைவைக்கப் போகிறார்கள்” என்றான் அர்ஜுனன். “நாம் இதை இங்கு பேசவேண்டியதில்லை. இது ஊண்மேடை” என்று வசுதேவர் சொன்னார். பலராமர் “பேசத்தொடங்கிவிட்டபின் நிறுத்த முடியாது, தந்தையே” என்றபின் அர்ஜுனனிடம் “மீண்டும் மீண்டும் இதை சொல்கிறாய். இப்புவியில் பிற எவருமே ஆண்மகன்கள் அல்ல என்கிறாய்” என்றார். அர்ஜுனன் “இப்புவியே ஒரு பெண், பிரம்மம் அதன் தலைவன்” என்றான்.
“புரியும்படி எதையாவது சொல்” என்றார் பலராமர். ரேவதி “சூதர்கள் சொல்லும் அத்தனை பொய்க்கதைகளையும் அவரே நம்பத்தொடங்கிவிட்டார். அவர் அணுக்கர்களும் அதையே நம்புகிறார்கள். சூதர் கதைகளை நம்பும் அரசர்களே வீண்முடிவுற்று வேருடன் அழிகிறார்கள்” என்றாள். தேவகி ரேவதியிடம் “நீ சற்று சொல்லடங்கி இரு. நான் இவனிடம் கேட்பதற்கு சில உள்ளன” என்றபின் “நீ சொல்க மைந்தா, எவ்வகையிலேனும் இளையவனை போரிலிருந்து பின்திருப்ப முடியுமா?” என்றாள். “இல்லை, அன்னையே. இப்போர் நெடுங்காலம் முன்னரே அவரால் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. இதில் எவர் அழியவேண்டும் என்பதை மட்டுமே அவர் முடிவெடுப்பதில்லை. அதை அவரவரே முடிவெடுக்கிறார்கள்.”
தேவகி கையிலிருந்த உணவை தட்டில் போட்டுவிட்டு மெல்ல பின்னால் சாய்ந்தாள். அவள் அருகே நின்றிருந்த சேடி அவள் கையை மரவுரியால் அழுத்தி துடைத்தாள். “போர் நிகழுமென்றுதான் சொல்கிறாயா?” என்றாள். “ஆம், அவர் வெல்வார். எதிரிகள் முற்றழிவார்கள்” என்றான் அர்ஜுனன். தேவகி சிலகணங்களுக்குப்பின் “மூத்தவனே, நீ அஸ்தினபுரிக்கு அளித்த சொல் என்ன?” என்றாள். “இன்று அவையிலும் அதை சொன்னேன், அன்னையே. யாதவர் அஸ்தினபுரியுடன் நிற்பார்கள் என்று சொல்லளித்தேன்” என்றார் பலராமர்.
“நீ அவர்களுக்காக படைமுகம் நிற்பாயென்று சொல்லளித்தாயா?” என்று தேவகி கேட்டாள். எரிச்சலுடன் “யாதவர் என்றால் என்னையும் சேர்த்துதானே?” என்றார் பலராமர். “நீ உனக்காக சொல்லளித்தாயா?” என்று மீண்டும் கேட்டாள். “அவ்வாறு நான் சொல்லளிக்கவில்லை” என்றதும் ரேவதி “யாதவர்களின் தலைவரன்றி யாதவர் எப்படி படைதிரளமுடியும்?” என்றாள். தேவகி அவளை புறக்கணித்து “நீ படைமுகம் நிற்பாயென்று சொல்லளிக்கவில்லை அல்லவா?” என்றாள். “ஆம், நான் சொல்லளிக்கவில்லை” என்றார் பலராமர்.
“யாதவ மைந்தர்கள் அப்படையிலிருப்பார்கள் என்று தனியாக ஏதேனும் சொல்லளிக்கப்பட்டதா? சாம்பா, உன் துணைவியின் தந்தைபொருட்டு நீ போர்க்களம் புகுவாய் என்று சொல்லளித்தாயா?” என்றாள் தேவகி. “இல்லை, ஆனால் யாதவர்கள் என்னும்போது எங்கள் அனைவரையும் சேர்த்துதான் பொருள் கொள்ளப்படுகிறது” என்று சாம்பன் சொன்னான். “பொருள் கொள்வது இயல்பு. ஆனால் தனித்தனியாக சொல்லளிக்கப்படவில்லையென்றால் அன்னையாக என் ஆணை இது. என் இளைய மைந்தனுக்கு எதிராக அவன் தந்தையோ உடன்பிறந்தாரோ மைந்தர்களோ களம் நிற்கலாகாது” என்று தேவகி சொன்னாள். அவள் குரல் நடுங்கி தளர்ந்திருந்தாலும் உறுதிகொண்டிருந்தது.
பலராமர் சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள், அன்னையே? இது அரசுசூழ்தல்” என்றார். “இல்லை, இவை என் குடிநிகழ்வுகள்” என்று உரத்த குரலில் தேவகி சொன்னாள். தன் முன்னால் இருந்த தட்டிலிருந்த அப்பத்தின்மீது வலக்கையை வைத்து “அன்னத்தின் மீது ஆணை! என் இளைய மைந்தனுக்கு எதிராக அவன் குருதிகொண்ட எவரும் படைநிற்கலாகாது! இப்போதே இங்கே அதற்கான சொல்லுறுதி எனக்களிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்த அன்னத்தின் முன்பிருந்து நான் உயிருடன் எழமாட்டேன்” என்றாள்.
பலராமர் எழுந்த விசையில் எடைமிக்க பீடம் சரிந்து பின்னால் பேரோசையுடன் விழுந்தது. அன்னையின் தோள்களைப்பற்றி “என்ன சொல்கிறீர்கள்? யாதவ குலத்திற்கே பெரும்பழி சேரும். நம்மை கோழையென்றும் சொல்லுக்கு மதிப்பில்லாதவர்கள் என்றும் ஷத்ரியர் எள்ளி நகையாடுவார்கள். அஸ்தினபுரியுடன் நாம் எதன்பொருட்டு படைக்கூட்டு கொண்டோமோ அதன் நலன்கள் எதுவும் நமக்கு வந்துசேரப் போவதில்லை. நமது குடிகள் அனைவரையும் நாம் கைவிட்டதற்கு நிகர் அது” என்றார். தேவகி “ஒரு சொல்லையும் நான் கேட்க விரும்பவில்லை. இளையவனுக்கு எதிராக அவன் குடியினர் எவரும் படைநிற்கலாகாது. அவ்வுறுதி இப்போதே எனக்கு அளிக்கப்படவேண்டும்” என்றாள்.
ரேவதி “பெண்டிர் அரசுசூழ்தலில் ஈடுபடலாகாதென்று ஏன் சொல்கிறார்கள் என்று புரிகிறது. இத்தனை எளிய உணர்வுகளுடன் ஆடவேண்டியதல்ல அரசியல்” என்றாள். தேவகி அதற்கு மறுமொழி கூறாமல் அமர்ந்திருந்தாள். வசுதேவர் “தேவகி, உன்னுடைய பிடிவாதத்தால் நீ மைந்தருக்கிடையே இருக்கும் கசப்பை மேலும் வளர்க்கிறாய். யாதவ குலமே அழிய வழிகோலுகிறாய்” என்றார். தேவகி கண்மூடி அசையாது அமர்ந்திருந்தாள். ரேவதி முகம் சினத்தில் கோணலாக, கண்கள் நீர் கொள்ள, உடைந்த குரலில் “இதென்ன நாடகம்? இது கீழ்மையன்றி வேறென்ன? அகத்தளம் விட்டு வெளிக்காற்று படாத பெண்டிரா அரசமுடிவெடுப்பது? இதோ பாருங்கள், இதை ஒருபோதும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது, நான் சொல்கிறேன்” என்றாள்.
பலராமர் அவளை நோக்காமல் தாழ்ந்த குரலில் “அமர்க!” என்றார். “நான் அமரமுடியாது. இவ்வளவு தொலைவுக்கு இவையனைத்தையும் உருவாக்கிக்கொண்டு வந்தபின் இறுதியில்…” என்று அவள் தொடங்க அவள் விழிகளை நோக்கி “அமர்க!” என்று மிகத் தாழ்ந்த குரலில் பலராமர் சொன்னார். அவள் நடுங்கி பின்னடைந்து “நான் சொல்வதை கேளுங்கள்…” என்றாள். “இனி ஒரு சொல்லும் நீ உரைக்கலாகாது. மறுசொல் உரைக்க நீயோ உன் குடியோ இருக்கமாட்டீர்கள்” என்று பலராமர் அவளிடம் சொன்னார். அவள் இரு கைகளையும் கூப்பி அதன்மேல் தன் நெற்றியை வைத்து ஓசையின்றி தோள் குலுங்க அழுதாள். இரு சேடியர் வந்து அவள் தோள்களைப்பற்ற கால்தளர்ந்து அவர்கள்மேல் சாய்ந்துகொண்டாள். அவர்கள் அவளை மெல்ல அழைத்துச் செல்ல கால்கள் தரையில் இழுபட விசும்பலோசையுடன் சென்றாள்.
பலராமர் “அன்னையே, உங்களை நான் அறிவேன். இது மாற்றமுடியாத முடிவென்று தெரியும். என்னவாயினும் இது எனக்கு தெய்வ ஆணையேதான். நான் இளையவனுடன் போர்முனையில் நிற்கப்போவதில்லை. இன்றே இங்கிருந்தே நாடு துறந்து இமயமலை செல்கிறேன். இப்பூசல் முற்றிலும் முடிவடைந்ததென்று அறிந்த பின்னரே இங்கு திரும்பி வருவேன்” என்றார். வசுதேவர் “மூடா, என்ன சொல்கிறாய்? அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? நீ ஏன் இமயமலைக்குச் செல்லவேண்டும்?” என்றார். “இங்கிருந்து எழும் வினாக்களுக்கெல்லாம் மறுமொழி சொல்ல என்னால் இயலாது. நாளை புலரும்போது நான் இங்கிருக்க மாட்டேன். விடைகொடுங்கள்” என்று பலராமர் சொன்னார்.
தேவகி அசையாமல் அமர்ந்திருக்க அவர் அன்னையையும் தேவகியையும் கால்தொட்டு வணங்கிவிட்டு வசுதேவரின் அருகே சென்றார். அவர் நடுங்கும் கைகளை அவர் தலைமேல் வைத்து “இங்கே எவர்…?” என்றார். “இந்நகரை அநிருத்தன் ஆளட்டும்” என்றபின் பலராமர் அர்ஜுனனை நோக்காமல் வெளியே சென்றார்.
தேவகி அவர் செல்லும் காலடியின் ஓசைக்கு உடல்விதிர்க்க இறுகிய தசைகளுடன் அமர்ந்திருக்க, சாம்பன் “அன்னையே, தாங்கள் கோரும் சொல்லை நானும் அளித்தாகவேண்டும். நானோ என் உடன்பிறந்தாரோ கௌரவப் படைகளுடன் நிற்கப்போவதில்லை. எந்தைக்கு எதிராக படைக்கலம் எடுக்கவும் மாட்டோம்” என்றான். திரும்பி தம்பியரை நோக்கியபின் அவன் வெளியே சென்றான். அவர்கள் எழுந்து தேவகிக்கும் ரோகிணிக்கும் வசுதேவருக்கும் தலைதாழ்த்திவிட்டு அவனைத் தொடர்ந்தனர். சுருதனும் இரு தம்பியரும் எஞ்ச உணவறை முற்றொழிந்தது.
வசுதேவர் எழுந்து வந்து தேவகியின் தோளைத் தொட்டு “அனைத்தும் நீ விரும்பிய வண்ணமே, எழுக!” என்றார். அவள் மெல்ல எழுந்து நின்று பெருமூச்சுவிட்டாள். சேடியர் தோளைத்தொட அவர்களில் ஒருத்தியின் தோளைப் பற்றியபடி தலைகுனிந்து நடந்து அங்கிருந்து அகன்று சென்றாள். ரோகிணி ஒரு சொல்லும் உரைக்காமல் அவளை தொடர்ந்தாள்.
அங்கு நடந்த அனைத்தையும் பற்றிலா விழிகளுடன் நோக்கியபடி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். பரிமாறப்பட்ட உணவு பெரும்பாலும் தொடப்படாமல் அப்படியே குளிர்ந்து தட்டுகளில் இருந்தது. வசுதேவர் பெருமூச்சுடன் கைநீட்ட ஏவலர் வந்து அவர் கையைப்பற்றி தூக்கினார். அவர் எழுந்து நடுங்கும் கால்களுடன் நின்று பெருமூச்செறிந்தபின் வெளியே சென்றார்.
சுருதனும் அவன் தம்பியர் கவியும் விருஷனும் மட்டும் இருந்தனர். சுருதன் இதழ்கோணலாக சிரித்தபடி “பாண்டவரே, உண்மையில் நாங்கள் எண்ணியிருந்ததேதான் இது. தந்தைக்கு எதிராக போர்முகம் நின்றால் என்றிருந்தாலும் அப்பழியுடன் சாம்பர் அரியணை அமரவேண்டியிருக்கும். எங்களை கிராதரென்றும் நிஷாதரென்றும் பழிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவே ஆகும் அது. பின்னடைந்தால் ஷத்ரிய அவையில் கோழைகள் என இளிவரலுக்கு இடமாகும். இன்று அன்னையின் இந்த ஆணையையே சுட்டிக்காட்டி அதை தவிர்க்கமுடியும்” என்றான்.
விருஷன் சிரித்து “ஆம், அன்னை ஆணை கூறியதும் என் உள்ளம் துள்ளத்தொடங்கியது” என்றான். “நன்று செய்தீர்கள், பாண்டவரே” என்ற சுருதன் தம்பியரிடம் “வருக!” என்றபடி வெளியேறினான். உணவுத்தாலத்தின் முன் அர்ஜுனன் அசையாது அமர்ந்திருந்தான். சதானீகன் “நாம் கிளம்பவேண்டியதுதானே, தந்தையே?” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றபடி எழுந்தான். வெளியே நடந்த அவனுக்கிணையாக சென்றபடி சதானீகன் “இதைவிட பெரிய வெற்றி எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. தங்கள் அம்புகள் கூர் தவறுவதே இல்லை, தந்தையே” என்றான்.
அர்ஜுனன் “நாளை புலரியில் நாமும் கிளம்புகிறோம்” என்றான். “எங்கே?” என்றான் சதானீகன். அர்ஜுனன் “இளைய யாதவரை பார்க்க” என்றான். “எங்கிருக்கிறார்?” என்று நிர்மித்ரன் கேட்டான். “அது இன்னும் நமக்குத் தெரியாது. ஆனால் இன்றிரவே அவர் எங்கிருக்கிறார் என்ற செய்தி நமக்கு வந்துவிடும்” என்று அர்ஜுனன் சொன்னான்.