எழுதழல் - 74

எட்டு : குருதிவிதை – 5

fire-iconஅவைமுறைமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே உணர்ந்த நிர்மித்ரன் அவ்வுணர்வை அறியாமல் பெருக்கிக்கொண்டு இரு கைகளையும் விரித்து, உடலை நெளித்து, சோம்பல் முறித்தான். சதானீகன் திரும்பிப்பார்க்க “இங்கு அவைநிகழ்வுகள் நெடுநேரம் நிகழும் போலும்” என்றான். சதானீகன் “கைகளை தாழ்த்து” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவன் கைகளை தாழ்த்தி “பொறுத்தருள்க!” என்றான்.

சதானீகன் “நாம் நினைவறிந்தபின் பெரிய அரசவைகள் எதையும் பார்த்ததில்லை, இளையோனே. அஸ்தினபுரியிலும் மகதத்திலும் கலிங்கத்திலும் குடியவைகள் இவ்வாறுதான் நிகழும். இங்கு யாதவகுலங்களின் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் உரிய சடங்குகளை முழுமையாகவே செய்துமுடிக்க வேண்டும். உரிய முறைமைச்சொற்கள் அவையில் உரைக்கப்பட்டாக வேண்டும்” என்றான். நிர்மித்ரன் உடலை வளைத்து திரும்பி அவையை பார்த்தபின் “ஆனால் இந்த குடித்தலைவர்கள்…” என்று உரக்க சொல்லத் தொடங்க “மெல்ல” என்றான் சதானீகன். குரலை மிகத் தாழ்த்தி “ஆனால் இந்த குடித்தலைவர்களும் இதே அவையில்தானே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்கள்?” என்றான்.

“இல்லை, அவர்களில் பலர் இப்போதுதான் துவாரகையிலும் மதுவனத்திலும் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கேயே இருப்பவர்கள் என்றாலும்கூட அரசமுறைமைகள் இதைவிட குறைய வாய்ப்பில்லை” என்றான் சதானீகன். “எதற்கு இந்த நீண்ட சடங்குகள்?” என்றான் நிர்மித்ரன். “அரசு என்பதே ஒரு சடங்குதான்” என்று சொல்லி சதானீகன் புன்னகைத்தான். அவன் புன்னகையை திரும்பி நோக்கிய நிர்மித்ரன் “ஆம், பல தருணங்களில் எனக்குத் தோன்றியதுண்டு, குடிகள், குலங்கள் அனைத்துமே ஒருவகை சடங்குகள்தான்” என்றான். சதானீகன் “அத்தனை சடங்குகளும் எப்போதோ உளப்பூர்வமாக நிகழ்ந்தவை, பின்னர் உட்குறிச்செயல்பாடுகளாக மாறியவை” என்றான்.

நிமித்திகன் வெள்ளிக்கோலுடன் அவை மேடையிலேற சதானீகன் முகத்தை திருப்பாமல் “எந்த உணர்வையும் காட்டாமல் அவையில் அமர்ந்திருக்க கற்றுக்கொள்” என்றான். “அவ்வாறுதான் நான் எண்ணினேன். ஆனால் சற்று நேரத்திலேயே என் உடலையும் முகத்தையும் மறந்துவிடுகிறேன்” என்றான் நிர்மித்ரன். “உடலையும் முகத்தையும் மறந்தாலும்கூட அவை நாம் விரும்பிய வண்ணம் இருப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசுசூழ்தலின் முதல்நெறி அது. அதோ அக்ரூரர் அமர்ந்திருக்கிறார் பார். இந்த அவையில் நிகழ்வன எதற்கும் அவரிடம் எதிர்வினையில்லை. ஆனால் இங்கு நிகழும் பெரும்பாலானவற்றை அவர்தான் நிகழ்த்துகிறார் என்பதை நாமனைவரும் அறிவோம்” என்று சதானீகன் சொன்னான்.

நிர்மித்ரன் “ஆம்” என்றபின் பெருமூச்சுவிட்டு “இன்று கனவில் நான் அவரை கண்டேன்” என்றான். “அவரையா?” என்று சதானீகன் கேட்டான். “ஆம், இப்போது அவரை பார்க்கையில்தான் கனவில் வந்தவர் அவரென்று தெரிந்தது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் நுரைக்குமிழிகளாக ஒன்றோடொன்று ஒட்டி கொப்பளித்துக்கொண்டிருந்தன. அவர் உள்ளே நுழைந்ததும் குழந்தைகள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டன. கைகளையும் ஆடைகளையும் பற்றி இழுத்தன. அவர் கண்களில் நீர்வழிய விம்மி அழுதபடி அவர்கள் நடுவே நின்றார்” என்றான்.

நிமித்திகன் மதுராவின் அரசர்களின் குடிநிரையைச் சொல்லி வாழ்த்தி முடித்து தன் கொம்பை மும்முறை ஊதியதும் அவையெங்கும் ஓர் அசைவு அலையென சென்று மறைந்தது. “பிறகு பேசுவோம்” என்றான் சதானீகன். நிமித்திகன் வெள்ளிக்கோலை தூக்கி மும்முறை ஆட்டி “அவையீரே, அறிக! தொல்புகழ் கொண்ட மதுராபுரியின் யாதவகுடித் தலைவர் வசுதேவர் புகழ் வாழ்க! அரியணை அமர்ந்த பலராமர் வாழ்க! என்றுமழியா யாதவக் குடியின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் இந்த அவை வாழ்க!” என்றான். “வாழ்க! வாழ்க!” என அவை முழக்கமிட்டது.

அவன் வெள்ளிக்கோலைத் தூக்கி “இவ்வவையில் இன்று உபப்பிலாவ்யத்தின் அரசரும் குருகுலத் தோன்றலும் பாண்டவர்களில் முதல்வருமாகிய யுதிஷ்டிரரின் செய்தியுடன் அவரது இளையோன் அர்ஜுனன் அவை புகுந்திருக்கிறார். அவரை பேரரசரின் சொல்லும் அரசரின் செங்கோலும் வாழ்த்தி வரவேற்கின்றன. இத்தருணம் நிறைவுறுக! நம் குடிகள் இதை என்றும் நினைவில் கொள்க! இரு குடிக்கும் நன்மை பயப்பதே இங்கு எழும் சொற்களில் விளைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கூறி வெள்ளிக்கோலைச் சுழற்றி தலைவணங்கினான். அவையினர் கைதூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினர்.

வசுதேவர் அர்ஜுனனிடம் “பாண்டவரே, தங்களுடைய தூதுச் சொல் என்னவென்பதை இவ்வவையில் உரைக்கலாம்” என்றார். நிர்மித்ரன்  யாதவஅரசியரை பார்த்தான். வசுதேவருக்கு இடப்பக்கம் தேவகியும் அவள் அருகே ரோகிணியும் அமர்ந்திருந்தனர். பலராமரின் அருகே அரசி ரேவதி அமர்ந்திருந்தாள்.  திரும்பி சதானீகனிடம் “இங்கு பேரவையில் அரசியர் அமரும் வழக்கமுண்டா?” என்றான். சதானீகன் “எங்கும் அரசியர் அமர்வதுண்டு. சில தொன்மையான ஷத்ரியக்குடிகளில் வெண்பட்டுத் திரைக்கு அப்பால் அவர்களை அமர்த்துவது வழக்கம்” என்றான். “யாதவர் பெண்வழிக் குடிமரபு கொண்டவர்கள். அரசியரின் சொல் அவைகளை ஆள்வது.”

அர்ஜுனன் கைகூப்பி அஸ்தினபுரியின் கொடிவழியைச் சொல்லி யுதிஷ்டிரரை வாழ்த்தினான். “தந்தையின் தூதை அறிய அவர்கள் ஆர்வம்கொண்டிருக்கிறார்கள்” என்று நிர்மித்ரன் சொல்லி “ஆனால் என்ன நிகழ்கிறது என்பதை அரசர் அறிவதுபோல் தெரியவில்லை” என்றான். சதானீகன் பலராமரை பார்த்தான். தோள்கள் தசைபுடைத்து விரிந்திருக்க கைகளை மார்பில் கட்டியபடி காலால் அரியணையின் கீழிருந்த பட்டுவிரிப்பின் நூலொன்றை நெருடியபடி அவர் அமர்ந்திருந்தார். எதையோ ஆழ்ந்து எண்ணுபவர்போல தோன்றினாலும் அந்த நூலை தன் கட்டை விரலால் பற்றி இழுத்து எடுப்பதை மட்டுமே அவர் உள்ளம்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த சதானீகன் புன்னகைத்தான்.

அர்ஜுனன் யாதவஅவையை நோக்கி தலைவணங்கி “இந்த அவையில் எனது மைந்தன் உரைத்ததற்கு அப்பால் நான் உரைப்பதற்கு எதுவுமில்லை. யாதவர்களின் படைத்துணையைக் கோரி நான் இங்கு வரவில்லை. யாதவ இளவரசியை மணந்தவன், யாதவக் குருதியோடும் மைந்தனுக்கு தந்தை, அனைத்திற்கும் மேலாக யாதவர் ஒருவரின் கால்களை தலைசூடும் பெருமை கொண்டவன். ஆகவே இங்கிருக்கும் எவருக்கும் நிகராக யாதவக்குடியின் பெருமைக்கும் வாழ்வுக்கும் பொறுப்பேற்றுக்கொள்பவன். அந்நிலையிலேயே இங்கு சிலவற்றை உரைக்க வந்துள்ளேன்” என்றான். அந்த நேரடியான சொற்கள் அவையை திகைக்கச் செய்தன. அவை ரீங்காரமிட்டது.

நிர்மித்ரன் திகைப்புடன் “இவை அவர் உரைக்க வேண்டிய சொற்களல்ல” என்றான். சதானீகன் திரும்பாமலிருக்க அவன் கையைப் பிடித்து மெல்ல உலுக்கி “மூத்தவரே, தந்தையர் அவையில் சொல்லவேண்டியதென்ன என்பதை பலமுறை எண்ணி சொல்வகுத்து எழுதி அவருக்கு அளித்தார்கள். பலமுறை அவரிடம் அச்சொற்கள் சொல்லப்பட்டதையும் நான் கேட்டேன். அவை இவையல்ல” என்றான். “ஆம், நானும் கேட்டேன். அவை முறைப்படி வகுக்கப்பட்ட அரசியல்சொற்கள். இவை அவர் மட்டுமே சொல்லக்கூடியவை” என்றான் சதானீகன். நிர்மித்ரன் “அவர் சினம் கொண்டிருக்கிறாரா?” என்றான். சதானீகன் “அவர் சொற்களை கேள்” என்றான்.

அர்ஜுனன் “நாங்கள் எங்கள் நிலத்தின் பொருட்டு படைகொண்டு எழுந்திருக்கிறோம் என்பது உண்மை. ஆனால் உலகறிந்த அவ்வுண்மைக்கு அடியில் எங்கள் உளமறிந்த உண்மை ஒன்றுண்டு. இங்குள்ள எதற்காகவும் அல்ல, விண்ணுள சொல் ஒன்றுக்காகவே நாங்கள் படைமுகம் நின்றிருக்கிறோம். அச்சொல்லை உளம் தொட்டறிந்து எங்களுக்கு உரைத்தவர் இளைய யாதவர். தோழரும் தலைவரும் நல்லாசிரியரும் இறைவனுமாகியவர். இப்போர் மானுடத்தின் முன் அவர் ஏந்தி நின்றிருக்கும் நாராயணவேதத்தின் பொருட்டே என்றுணர்க! பிறிது எதற்காகவும் அல்ல” என்றான்.

“இங்கு போர் எழும். அதை எவரும் கடக்கவியலாது” என அர்ஜுனன் எழாத குரலில், எவரையும் நோக்கா விழிகளுடன், அவனிலூடாக ஒலிக்கும் பிறிதொன்றின் மொழி என சொன்னான். “இங்கு வீழும் ஒவ்வொரு துளிக் குருதியும் அந்த அழியாச் சொல் கொள்ளும் பலியே ஆகும். தனக்குரிய புத்துலகைப் படைக்க அது மேழிப்படைக்கலம் ஏந்தி மண்ணை புரட்டவிருக்கிறதென்றால் அதுவும் நல்லூழே. அறிக, வெல்வது அதுவே! இப்புவியில் படைக்கலம் கொண்டு எழுந்து நிற்கும் ஆற்றல்கொண்ட அனைவரும் எதிர்த்து நின்றாலும்கூட அது வெல்லும். மாமலைகளும் பெருங்கடல்களும் வழிமறித்தாலும் பிளந்து வழிகண்டு செல்லும். ஐயமின்றி உணர்க! மானுடம் உள்ளவரை அது வாழும்.”

“எளியவர்களே, அதன்பொருட்டு இன்றிருந்து நாளை மாய்ந்து மறுநாள் மறக்கப்படவிருக்கும் எளிய மானுடரிடம் படைத்துணை கோரி வந்திருக்கிறேன் என்று எவரும் எண்ணவேண்டியதில்லை. சுழிப்பெரும்புயலில் எழுந்து பறக்கும் சிறுசருகு என்றே என்னையும் உணர்கிறேன். ஆயினும் மலைகளை அறைந்து உடைத்து சிதறடிக்கும் வல்லமையை கொண்டுள்ளேன்… இப்போர் முடிக்க நான் ஒருவனே போதும். துணை நிற்க மானுடர் வெல்லமுடியாத தொல்குரங்கின் கதைப்படைக்கலமும் உள்ளது. நானறியாதனவும் அறிந்து என்னை ஏந்தி மண்நிகழ்ந்துள்ள காண்டீபம் தன் வினைமுடிக்கும் என்று அறிக!” என்றான் அர்ஜுனன்.

“நான் வந்திருப்பது என் பொருட்டோ என் குலத்தின் பொருட்டோ அல்ல. எனையாளும் தெய்வத்தின் பொருட்டும் அல்ல. உங்கள் பொருட்டே. நலம் நாடும் குரல் இது. யாதவரே, உங்கள் குடிகளுக்கு வேறு வழி என ஒன்றும் இல்லை. அடிபணியுங்கள். உடன் சென்று நில்லுங்கள். உங்கள் குடி காத்துக்கொள்ளுங்கள். அவருக்கு எதிர்நிற்பீர்களேயானால் உங்களை முற்றழிக்க படையாழி வேண்டியதில்லை. விழியோர நோக்கொன்றே போதும் என்று உணர்க!” கை தூக்கி விழி அவையில் ஒவ்வொருவரையும் கூர்ந்து நோக்க அர்ஜுனன் உரத்த குரலில் சொன்னான் “வேண்டுதல் அல்ல இது, எச்சரிக்கை. வாழவேண்டுமெனில் பிறிதொரு வழியில்லை. தெய்வப்பகை கொள்ளவேண்டியதில்லை.”

“கேளுங்கள் யாதவர்களே, இந்நகரில் மதுராவின் பைங்குழவியரின் குருதி விழுந்த வரலாறொன்று உண்டு. உங்கள் குடியில் தெய்வமெழுந்தது என்றாலும் அப்பழி மறைவதில்லை. மானுடர் நாவில் சொல் உள்ளவரை அப்பழியும் தொடரும் என்று உணர்க! இன்று சொல்முதல்வனைத் துறந்து மறுபக்கம் செல்ல உங்களுக்குத் தோன்றியதேகூட அப்பழியின் பொருட்டு வஞ்சம் கொண்டு வான்நிறைந்துள்ள உங்கள் மூதாதையரின் விழைவுப்படியே. ஆம், உங்கள் குலதெய்வங்கள் நிறைந்துள்ளன இந்நகரில். கண்ணீர் வற்றாத அன்னையரின் குரல்களும் ஊடுகலந்துள்ளன.”

நிர்மித்ரன் அரசி தேவகி நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டான். “விழப்போகிறார்கள்” என்று மெல்ல சொன்னான். அவன் கையை தொட்டு பேசாதே என உணர்த்தினான் சதானீகன். “பிழையீடு செய்ய ஒரு வாய்ப்பு இது. அவர் சொல்லுக்கென நின்று களம்பட்டீர்கள் என்றால் சென்று உங்கள் மூதாதையர் முன் நிற்கையில் சிறுமை கொள்ளமாட்டீர்கள். இதற்கப்பால் இந்த அவையில் நான் சொல்வதற்கொன்றுமில்லை” என்று சொல்லி தலைவணங்கி அர்ஜுனன் தன் பீடத்தில் அமர்ந்தான்.

அவை நெடுநேரம் அசைவற்று ஒலியற்று அமர்ந்திருந்தது. பலராமர் திரும்பி ரேவதியை பார்ப்பதைக் கண்டு நிர்மித்ரன் சதானீகனிடம் “என்ன செய்யவேண்டுமென்று கேட்கிறாரா?” என்றான். கைகளைத் தொட்டு பேசாதே என்று சதானீகன் அறிவுறுத்தினான். ரேவதி விழிகளால் அக்ரூரரை சுட்டிக்காட்டினாள். பலராமர் அக்ரூரரை திரும்பி நோக்க அவர் கையைத் தொட்டு அவள் அசையாமலிருக்கும்படி சொல்வதை உதடசைவாகவே காணமுடிந்தது.

அக்ரூரர் அவள் நோக்கை சந்தித்தவுடன் எடைமிக்க உடலை உந்தி எழுந்து இரு கைகளையும் கூப்பி “அவையீரே, அடியவன் என்று இந்த மேடையில் நின்று தன் தலைவருக்கு உகந்த சொற்களை இளைய பாண்டவர் சொன்னார். அது நன்று. அவ்வடைக்கலம் சிறப்புறுக!” என்றார். குரலை சீராக ஆனால் அனைவரும் கேட்கும்படி ஒலிக்கவிட்டார். “இங்கு குடியவையில் நாம் எடுக்கவேண்டிய முடிவு எவ்வுணர்வுக்கும் பாற்பட்டதல்ல. நம் குடிக்கென நாம் கொள்வதும், நம் அரசரை சிறப்புறச் செய்வதும், நம் கொடிவழிகள் எண்ணி நிறைவுறுவதுமான ஒன்றே நம் முடிவென்றிருக்கவேண்டும்.” அவை “ஆம், மெய்தான்” என கார்வையோசை எழுப்பியது.

“ஆம், இந்நகரில் இளம்குழவியர் குருதித் துளி விழுந்துள்ளது. அக்குருதியைக் கண்டு உளம் கொதித்தவர்களில் முதல்வன் நானே. நிமித்திகர் குறிதேர்ந்து கோகுலத்திற்குச் சென்று இளைய யாதவரையும் மூத்தவரையும் இங்கு இட்டு வந்தவன் நான். கொடியவனை அழித்து குலப்பழியை அவர்களைக்கொண்டு நிகர் செய்தேன். அந்நாள் முதல் இந்நாள்வரை நம் குடியினர் அனைவரும் அந்நீத்தோர் அனைவருக்கும் எள்ளும் நீரும் இறைத்து விழிநீருடன் சொல்லளித்து வருகிறோம்” என்றார் அக்ரூரர். “ஆம்” என்று அவை முழங்கியது.

“அவர்களின் பொருட்டு விழிநீர் சிந்தாத ஒருவர்கூட இங்கில்லை. நாளை நம் கொடிவழியினரும் அவர்களுக்காக எள்ளும் நீரும் இறைக்கவேண்டும். நாம் அரசுசூழ்வது அதன்பொருட்டே. ஆம், நீத்தோர் நமக்கு முதன்மையானவர்களே. ஆனால் நிகராகவே வரவிருப்போரிடமும் நமக்கு கடன் உண்டு. நமது குடி நம்பிக்கையின்படி அன்று நிறையாமல் நீத்தோரே மீண்டும் மீண்டும் காலமடிப்புகளில் நம் பெண்டிர் கருவில் எழவிருக்கிறார்கள். நீத்தோருக்கான கடனையே நாம் வாழ்வதினூடாக வரவிருப்போருக்கு அளிக்கிறோம்.”

அக்ரூரர் குரலெழுப்பினார் “நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டியது தொல்புகழ் மதுராவின் பெருமையை. நம் குடியினரின் நல்வாழ்வை. நுரையெனப் பெருகிப்பரவும் ஆநிரைக் கூட்டத்தை. ஏதென்று அறியாத மாயச் சொல்லொன்றின் பொருட்டு களம் நின்று குருதிகொடுத்து நாம் முற்றழிந்தோமெனில் வாழ்ந்து நிறையாது வான்சென்று மீண்டும் பிறக்க எண்ணி அவ்வெளியில் காத்து நின்றிருக்கும் நமது குடிமைந்தருக்கு என்ன மறுமொழி சொன்னவர்களாவோம்? அரசிழந்து மீண்டும் கானகங்களில் கன்றோட்டும் குடிகளானோம் என்றால், வற்கடமும் காட்டெரியும் நம் குழவியரை பலிகொள்ளும் என்றால் நம்மைவிடக் கீழோர் உண்டா?”

“யாதவரே, நம் இல்லங்கள் செழிப்பதும் அன்னையர் கரு நிறைவதுமே வீணுக்கு இறந்து விண்சென்ற அவர்களுக்கு நாம் இன்று அளிக்கும் கொடை. அதன்பொருட்டே இங்கு அம்முடிவு எடுக்கப்பட்டது. நாம் அஸ்தினபுரியுடன் உறுதிகொண்டு நிற்பதாக சொல்லளித்திருக்கிறோம். எண்ணிச் சூழ்ந்து எண்திசையும் தெளிந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு அது. ஏனெனில் நம்மை நிகர்அரசென அவையமர்த்தும் ஷத்ரிய அவை அது ஒன்றே. நாளை நம் குடிகள் மணிமுடி சூடி சென்று அமர்வார்கள். நம் மைந்தர் மணம்கொண்ட அரசு அஸ்தினபுரி என்பதை மறக்கவேண்டாம்.”

அக்ரூரர் அவர்களை மாறிமாறி நோக்கி கூர்கொண்ட குரலில் தொடர்ந்தார் “இன்றுவரை நிலம்வென்று முடிசூடி அமர்ந்த நான்காம் வருணத்தவர் என்றே யாதவர் அறியப்பட்டிருக்கிறார்கள். இப்போருக்குப் பின் நாம் ஷத்ரியர் என்று ஆவோம். மாறாக இளைய பாண்டவர் கூற்றை ஏற்று நாம் இளையவரின் பின் நின்றால் என்ன ஆவோம்? பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அனைவராலும் எதிர்கொள்ளப்படுவோம். ஐயம் வேண்டாம், தோற்றழிவோம். கார்த்தவீரியனை முன்னிறுத்தி ஒருமுறை எழுந்தோம். அவர் கொண்ட ஆணவத்தால் வீழ்ந்தோம். மீண்டு எழ ஆயிரமாண்டுகளாயின. இம்முறை விழுந்தால் எழுவதற்கு நம் குடியும் எஞ்சாதென்றறிக!”

“ஆம், இளையவர் நமக்கு எதிராக படையாழி கொண்டு நிற்கக்கூடும். தன் குடியை தானே கொன்றழிக்கவும்கூடும். அவர் அவ்வாறெனில் அவருக்கும் கம்சருக்கும் என்ன வேறுபாடு? தன் மைந்தரை தான் கொன்ற தந்தை என்று அவரை வரலாறு பழிக்கட்டும். அப்பழியை விழைவாரென்றால் படையாழியை கையில் எடுக்கட்டும். படைமுகத்தில் நான் நிற்கிறேன். தந்தை வசுதேவர் நிற்பார். மூத்தவர் பலராமர் நிற்பார். ஈன்ற மைந்தர்கள் நிற்பார்கள். குலத்தலைவர்கள் நிற்பார்கள். அனைவரையும் கொன்று தன் சொல்லை அவர் நிலைநாட்டட்டும். தன்னை தெய்வமென்று நிறுத்தும் பொருட்டே கம்சர் குடிக்கொலை புரிந்தார். இவர் விழைவதும் அதுவென்றால் அவ்வாறே ஆகட்டும்.”

அர்ஜுனனிடம் திரும்பி “பாண்டவரே, நீங்கள் பேசவேண்டியது எம்மிடம் அல்ல. சென்று உம் தோழரிடம் சொல்க, இளையவர் நீடுபழியை தேடுகிறாரா, அன்றி குலத்தோடொத்து புகழ்கொள்கிறாரா என்று” என்றபின் கைகூப்பி அக்ரூரர் அமர்ந்தார். அவை ஓசையின்றி அமர்ந்திருந்தது. பின்னர் ஒருவர் உரத்த குரலில் “ஆம், சென்று அவரிடம் கேட்கட்டும் பாண்டவர். எங்களைக் கொல்வாரென்றால் அதுவே நிகழ்க!” என்று கூவினார். அவை கலைந்து முழங்கத் தொடங்கியது. நிர்மித்ரன் “மூதரசி விழுந்துவிட்டார்” என்றான். கலைந்து கூச்சலிட்ட அவை அதை அறியவில்லை. பீடத்தில் தளர்ந்து சரிந்த தேவகியை மெல்ல தூக்கிக்கொண்டு சென்றனர் சேடியர்.

அதை பிந்தி உணர்ந்த அவை ஓசையடங்கியது. கிருதவர்மன் கைகளைத் தூக்கியபடி எழுந்து “இந்த அவையில் மூத்தவரின் தாள்பணியும் யாதவ அரசனென்று நின்று ஒன்றை சொல்ல விரும்புகிறேன். வெல்ல முடியாதவர் அல்ல இளைய யாதவர். அவரை எதிர்த்து எனக்கென்று ஒரு நாடும் முடியும் கொண்டு நான் நின்றிருக்கிறேன் என்பதை எவரும் அறிவர். என்னை வென்று அழிக்க அவர் எத்தனை விழைகிறார் என்று அறியாத எவருண்டு இங்கே? ஏன் இயலவில்லை? தோள்வலியும் துணைவலியும் கொண்டவனை அவர் அணுகமுடியாது” என்றான். அவை கிருதவர்மனை வாழ்த்தி கூச்சலிட்டது.

“என்றேனும் களம்நின்றால் முதலில் எனக்காக அப்படையாழி எழும் என்று அறிவேன். அவ்வஞ்சினத்தை நானும் கொண்டுள்ளேன். ஒரு நாள் நானும் அவரை எதிர்கொள்வேன். யாதவரே, வீரம் எவருக்கும் தனிச்சொத்து அல்ல. படையாழி ஏந்தவும் படைமுகம் நின்று போரிடவும் நானும் அறிவேன், அதையே இளைய பாண்டவரிடமும் சொல்ல விரும்புகிறேன்” என்றான். ரேவதி புன்னகைத்து அதை மறைப்பதற்காக தலையாடையை இழுத்து முகத்தின் மேலிட்டு சரித்துக்கொள்வதை சதானீகன் கண்டான். நிர்மித்ரன் “புன்னகைக்கிறார்” என்றான். சதானீகன் “தன் சொற்களை பிறர் சொல்லவைப்பவர் அரசுசூழ்தலில் எப்போதும் வெல்கிறார்கள்” என்றான்.

வசுதேவர் எழுந்து கைகூப்பி “இவ்வவையில் பிறிதொரு சொல்லாடலை நான் விரும்பவில்லை. இளைய பாண்டவர் உபப்பிலாவ்யத்தின் அரசர் யுதிஷ்டிரரின் செய்தியுடன் இங்கு வந்ததாக சொன்னார். அதை உரைக்க ஒரு வாய்ப்பளிப்பது நம் கடமை. இங்கு அவர் உரைத்தது நாடிழந்து பெண்கொடையாக பெற்ற சிற்றூரில் தங்கியிருக்கும் பாண்டவர்களின் சொல்மட்டுமே என்று கொள்வோம். அதை உரிய முறையில் அமைச்சர் எதிர்கொண்டார். அவர் சொற்களையே நானும் சொல்கிறேன். யாதவர்கள் அஸ்தினபுரிக்கு அளித்த சொல்லுறுதி தொடரும். எங்கள் செய்தியாக இதை இளைய பாண்டவர் சென்று தமையனுக்கு உரைக்கட்டும். தன் தோழருக்கும் அறிவுறுத்தட்டும்” என்றார்.

பலராமர் எழுந்து “போர் நிகழப்போவதில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அஸ்தினபுரியை எதிர்கொள்ளும் அளவுக்கு பாண்டவர் தரப்புக்கு ஆற்றல் இல்லை. அதை பிற எவரையும்விட யுதிஷ்டிரர் அறிந்திருப்பார். அஸ்தினபுரி நட்பு சேர்த்து ஆற்றல் பெருக்கிவிட்டதனாலேயே இப்போர் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. போர் தவிர்க்கப்படவேண்டும் என்பதனாலேயே அஸ்தினபுரியை ஆதரிக்கவேண்டும் என்று நான் முதலில் முடிவு செய்தேன்” என்றார்.

அர்ஜுனனை நோக்கி திரும்பி “இளைய பாண்டவர் இந்த செய்தியை சென்று யுதிஷ்டிரரிடம் சொல்லட்டும். இன்னமும்கூட பொழுதுள்ளது. யுதிஷ்டிரருக்கு உரிமையுள்ள நிலம் எதுவோ அதை துரியோதனன் அளிக்கும்படி நான் கோருகிறேன். என் ஆணையை அவன் மீறமாட்டான். தன் நிலத்தை பெற்று தனக்கென்று ஒரு அரசை அமைத்துக்கொண்டு அவர் ஆளலாம். அவர் அறம் திகழவேண்டும் என்றும் குடி பெருக வேண்டும் என்றும் நான் விழைகிறேன். என் வாழ்த்துகளை இளைய பாண்டவர் அவருக்கு தெரிவிக்கட்டும்” என்றார் பலராமர்.

அர்ஜுனன் எழுந்து தலைவணங்கி “அவ்வாறே, அரசே” என்றான். அக்ரூரர் நிமித்திகனை நோக்கி கைகாட்ட அவன் மேடையேறி தன் கொம்பை மும்முறை முழக்கி “சொல் நிறைக! அறம் திகழ்க! இனியவை எஞ்சுக! இவ்வவை நிறைவுறுகிறது. அரசர்கள் அவைநீங்குகிறார்கள்” என்றான். மங்கல இசையும் முரசொலியும் எழுந்தன. வசுதேவர் எழுந்து அவையை வணங்கி அவையிலிருந்து வெளியே நடந்தார். பலராமர் அக்ரூரரை நோக்கி கையசைத்து ஏதோ சொல்லிவிட்டு அவையை வணங்கி தானும் தொடர்ந்து சென்றார்.

குடித்தலைவர்கள் எழுந்து கிருதவர்மனை சூழ்ந்துகொண்டனர். ஒரே குரலில் அனைவரும் பேசிய ஒலி அவ்வவையை நிரப்பியது. அர்ஜுனன் தலைகுனிந்து அவையிலிருந்து தனித்து வெளியே செல்ல சதானீகன் விரைந்து உடன்செல்ல கூடவே வந்த நிர்மித்ரன் “தேவையற்றவற்றை பெரும்பாலான நேரங்களில் பேசினார்கள். இத்தனை பெரிய முடிவை மிக விரைவில் எடுத்துவிட்டார்கள்” என்றான். “எப்போதும் அவையில் நிகழ்வது அதுதான்” என்றான் சதானீகன்.

fire-iconஅவையைவிட்டு வெளியே நடந்த அர்ஜுனனை தொடர்ந்து சென்று இடைநாழியில் இணையாக நடந்தபடி சதானீகன் “இந்தத் தூது இவ்வாறாக முடியுமென்று முன்னரே எண்ணியிருந்தீர்களா, தந்தையே?” என்றான். அர்ஜுனன் அரைத்துயிலிலென விழிகள் பாதி மூடியிருக்க தலைகுனிந்து ஒரு கையால் தாடியைப் பற்றி சுழற்றியபடி நடந்துகொண்டிருந்தான். சதானீகன் கேள்வியை ஒருகணம் கழித்தே உள்வாங்கி நிமிர்ந்து நோக்கி புன்னகையுடன் “ஏன்?” என்றான். “அங்கிருந்து பயின்று வந்ததை தாங்கள் கூறவில்லை. சினம்கொண்டு எச்சரிக்கை விடுத்தீர்கள். தங்களை சினமூட்டிய ஒன்று அவையில் நிகழ்ந்தது. அது என்னவென்று நானறியேன்” என்றான்.

நிர்மித்ரன் “நான் அறிவேன். அவை முழுக்க அருவருப்பூட்டும் ஆணவம் ஒன்று நிறைந்திருந்தது. தாங்கள் வென்றுவிட்டதாகவே இந்த மூடர்கள் எண்ணியிருக்கிறார்கள். தந்தை அவைபுகுந்ததும் யாதவகுல மூத்தாரில் எழுந்த மெல்லிய நகைப்பை நான் கேட்டேன்” என்றான். “அவர்கள் உங்களை மதிக்கவில்லை என்று சினம் கொண்டிருக்கமாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்” என்றான் சதானீகன். அர்ஜுனன் “என்னை அவர்கள் மதிப்பார்கள் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அவரை மதிக்கவில்லை. அவரை மதிக்காத ஒரு அவையில் எழுந்து நின்று நான் பிறிதொன்றை கூற இயலுமா என்ன?” என்றான்.

“தாங்கள் இச்சொற்களுடன் அங்கிருந்து வந்தீர்களா?” என்றான் சதானீகன். “இல்லை, உண்மையில் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு சொல்லையும் என் உளம் வாங்கிக்கொள்ளவில்லை. எதன்பொருட்டு வந்திருக்கிறேன் என்பதையோ இந்த அவைக்குள் நுழைவதையோகூட நான் உள்ளூர வகுத்துக்கொண்டிருக்கவும் இல்லை. அவையில் வந்தமர்ந்தபோது என்மேல் நோக்குகளை உணர்ந்தேன். இந்த அவை முழுவதும் என்னை நோக்கிக்கொண்டிருந்தது. மானுட நோக்குகள் மட்டும் அல்ல.” சதானீகன் மெய்ப்பு கொண்டு மூச்சிறுக தலையசைத்தான்.

“இந்த அவையெங்கும் நிறைந்திருந்தவை அவர்களின் இருப்புகளே. நான் சொல்ல வேண்டியதென்ன என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அவர்களின் குரலாகவே நான் இங்கு பேசவேண்டும்” என்றான் அர்ஜுனன். சதானீகன் “ஆனால் அக்ரூரர் அவை நின்று பேசிய ஒன்று பொருள் உள்ளது என்று எனக்குத் தோன்றியது. மிகச் சரியாக அதை அவையிலெடுப்பதன் வழியாக அவர் முதிர்ந்த அரசியலர் என்பதையும் காட்டிவிட்டார்” என்றான். “படையாழி கொண்டு யாதவப்படைக்கு எதிராக நிற்பார் என்றால் இளைய யாதவருக்கும் கம்சருக்கும் என்ன வேறுபாடென்று கேட்டாரல்லவா? அதை இனி அத்தனை யாதவர்களும் கேட்பார்கள். இன்று வரை இவர்கள் அஸ்தினபுரியுடன் இணையும்போது இருந்த உளத்தடை என்பது இளைய யாதவருக்கு எதிராக படை நின்றிருக்கவேண்டுமே என்பதுதான். இப்போது அவ்வெண்ணமே இளைய யாதவர்மேல் சினமும் காழ்ப்பும் கொள்வதாக வளர்ந்துவிடும்.”

அர்ஜுனன் “ஆம், வேறுபாடென ஒன்றுமில்லை என்பதும் உண்மை” என்றான். தனக்குத் தானே என கையசைத்து எதையோ அகற்றுபவன்போல காட்டி “மெய்யாகவே வேறுபாடெதுவும் இல்லை. முற்றழிவை உருவாக்கும் அரக்கர்களும் புத்துலகு படைக்க எண்ணும் ஞானியரும் நிகழ்த்துவது ஒன்றே, பேரழிவு. வேர்வரை கெல்லி எடுத்து மண்புரட்டும் மேழியைவிட அழிக்கும் படைக்கலம் எது? முளைப்பதென்ன என்பதுதான் வேறுபாடு” என்றான். அவர்கள் இருப்பதை அப்போதுதான் உணர்ந்ததுபோல “என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றான்.

சதானீகன் ஒன்றும் சொல்லவில்லை. நிர்மித்ரன் அர்ஜுனனின் கையைப் பற்றி “நான் சொல்கிறேன், தந்தையே. ஆக்கமும் வன்பாதையே” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் அவன் தோளைத்தட்டி “ஆம், பிறவியும் குருதிப்பெருக்கே” என்றபின் சதானீகனிடம் “உரிய ஒப்புமை ஒன்றை சென்றடைந்துவிட்டால் ஊக்கம் கொள்ளும் அகவை” என்றான். சதானீகன் “அதைப்பற்றி நேற்றுதான் பேசிக்கொண்டிருந்தேன்” என்றான்.

அர்ஜுனன் நிர்மித்ரனிடம் “ஆனால் அத்தனை எளிதாக என்னால் சொல்லிவிட முடியவில்லை. ஒவ்வொரு காலடியிலும் நின்று தயங்குகிறேன். உண்மையில் நீ அதை சொன்னபோது ஆமென்று என்னுள் ஒரு ஒலி எழுந்தது. உன்னை ஆசிரியனாகக்கொண்டு நீ சொன்ன அவ்வரியை நம்பி ஆறுதல்கொள்ள என் உள்ளம் விழைகிறது” என்றான். நிர்மித்ரன் அவன் விழிகளிலிருந்த துயரைக் கண்டு புரியாமல் மூத்தவனை நோக்கிவிட்டு “நீங்கள் சொன்னதுதான், தந்தையே” என்றான். “ஆம், ஆனால் நான் அத்தனை ஆழ்ந்து அதை சொல்லவில்லை” என்றான் அர்ஜுனன்.

சதானீகன் “நமது வருகை தோற்றுவிட்டது என்றுதானே பொருள்? நாம் என்ன செய்யப்போகிறோம்? கிளம்புகிறோமா?” என்றான். அர்ஜுனன் “நாம் இளைய யாதவரை பார்க்க வந்தோம். அவர் எங்கிருக்கிறார் என்று அறிவதுவரை இங்கிருப்பது நன்று” என்றான். “அவர் இங்கு வரக்கூடும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்றான் சதானீகன். அர்ஜுனன் “அவர் இங்கு வரமாட்டார். நாம் இந்த நகரத்தில் காணும் அனைத்தையும் அவர் ஒவ்வொரு முறையும் கண்டிருப்பார்” என்றான்.

“அவர் எங்கிருக்கிறார் என்று தங்களுக்குத் தெரியுமா?” என்றான் சதானீகன். “தெரியாது. ஆனால் ஓரிருநாட்களில் அவரை சந்திப்பேன் என்பது மட்டும் உறுதி. அவரே அழைப்பார்” என்றான் அர்ஜுனன். “நான் வந்த தூது வென்றுவிட்டதென்றே சொல்வேன்” என்றான். சதானீகன் “எவ்வாறு?” என்றான். “நான் சொன்னவை அனைத்தும் ஒருவர் செவிக்காக மட்டுமே.” சதானீகன் “ஆம்” என்றான்.

நிர்மித்ரன் மீண்டும் அர்ஜுனன் கையைப் பிடித்து உலுக்கி “நான் சொல்கிறேன், தந்தையே. மூதரசி தேவகி அவையிலிருந்தார். தங்கள் சொல் கேட்டு அவர் அதிர்வதை நான் பார்த்தேன். தலையிலிருந்து குழலாடை நழுவி தோளில் விழ அதை எடுத்து திரும்ப அமைத்தபோது அவர் விரல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. அவர் மயங்கிவிழுந்தார்” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றான். “இன்று மாலை விருந்து நிகழ்கிறது. அது நாம் இங்கு வந்த தூதுப்பணியின் நிறைவு நிகழ்வு” என்றபின் “வருக, சற்று ஓய்வெடுத்து மீண்டும் அரண்மனைக்கே வரவேண்டியிருக்கும்” என்றான்.