எழுதழல் - 71
எட்டு : குருதிவிதை – 2
ஓசையின்றி கதவைத் திறந்து உள்ளே வந்த ஏவலன் பீமன் வந்திருப்பதை தாழ்ந்த குரலில் அறிவிக்க வரச்சொல்லி யுதிஷ்டிரர் கையசைத்தார். அவன் வருவதற்காக அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். சதானீகன் பீமன் என்னும் சொல்லாலேயே முகம் மலர்ந்து வாசலை நோக்கினான். உபப்பிலாவ்யத்தின் உயரம் குறைந்த வாயிலினூடாக மிகவும் குனிந்து உடலைச் சரித்து உள்ளே வந்து நிமிர்ந்த பீமன் அவையை ஒருகணம் விழியோட்டி “என்ன, ஒவ்வாச்செய்தி ஏதோ வந்துள்ளது போலிருக்கிறதே?” என்றபின் யுதிஷ்டிரரை அணுகி தலைவணங்கி அருகிருந்த பீடத்தில் அமர்ந்தான். சதானீகனும் நிர்மித்ரனும் அணுகி அவன் கால்தொட்டு வணங்கி விலகி நின்றனர்.
யுதிஷ்டிரர் “நீ அறிந்திருப்பாய் மந்தா, இளைய யாதவன் அஸ்தினபுரிக்கு சென்றதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அதன் அரசியலை எண்ணினோம், அறத்தை மறந்துவிட்டோம். தந்தையாக நான் சென்றுநின்று நடத்தியிருக்கவேண்டிய திருமணம் அது. கிருஷ்ணையின்றி நம் குலம் வாழ்ந்திருக்குமா என்ன? அன்று அந்த அவையில் இளைய யாதவனின் பெண்வடிவென எழுந்து அருள் புரிந்தவள் அவளல்லவா?” என்றார். பீமன் முகம் இறுகியது. “ஆம், ஆனால் நாம் உரைத்த வஞ்சம் அவ்வண்ணமே நின்றிருக்கிறது” என்றான்.
“அது அரசியல்…” என்று யுதிஷ்டிரர் சொல்ல கையசைத்துத் தடுத்து “கிருஷ்ணையின் திருமணமும் அரசியலே. அரசியலுக்கு அப்பால் அவள் உள்ளத்தில் கனிந்த காதல் கொண்டிருக்கலாம். அக்காதலை நாம் வாழ்த்தலாம். ஆனால் அந்த மணம் நிகழ்வது என்பது அரசியல் மட்டுமே” என்றான் பீமன். “அங்கு நாம் சென்றிருந்தால் நமது அறத்தை வெளிக்காட்டியிருப்போம். ஆனால் நம்மை நம்பி இங்கு அணி சேர்ந்துகொண்டிருக்கும் நிஷாதர்களுக்கும் அசுரர்களுக்கும் கிராதர்களுக்கும் என்ன செய்தியை அது அளித்திருக்கும்? நாம் அனைவரும் ஷத்ரியர், ஒரு மணஉறவின் பொருட்டு அல்லது ஓர் இறப்பின் பொருட்டு எவ்வாறாயினும் ஒருங்கிணையக்கூடும், அன்று கீழ்க்குடிகள் அனைத்தும் நம்மால் இடக்கையால் வெளித்தள்ளப்படுவார்கள் என்று அவர்கள் எண்ணுவார்கள்.”
“எத்தனை தோள்தழுவினும் இன்சொல் பேசினும் இந்த ஐயம் அவர்கள் உள்ளத்தில் இருந்துகொண்டுதானிருக்கும். மூத்தவரே, குலம் என்பது இம்மண் உருவான காலத்திலிருந்து எழுந்து நம்மை வந்தடைந்திருப்பது. எளிதில் மறைவதோ திரிவதோ அல்ல. மலைகளைப்போல மாறா உண்மை அது. நாம் திரட்டியிருக்கும் படையினரின் நடுவே நம்மைக் குறித்த ஐயத்தை நாமே பரப்பி அடைவதென்ன? அங்கு அஸ்தினபுரிக்குச் சென்று நீங்கள் நின்றிருந்தால் வஞ்சத்தை மறந்திருப்பீர்கள். வஞ்சமும் நன்றியும் காற்றுபடக் கரையும் கற்பூரம் போன்றவை. ஆகவே அவற்றை இருண்ட ஆழத்தில் மூடி வைக்கவேண்டும். அடிக்கடி திறந்து நோக்குவதுகூட அவற்றை குறைக்கும்..”
“மூத்தவரே, பேணப்படாத வஞ்சம் மெல்ல மறையும். ஏனென்றால் அது மானுட இயல்பல்ல. மானுடர் பொழுதாலும் சூழலாலும் மட்டுமே ஆக்கப்படுபவர்கள். நேற்றும் நாளையும் அவர்களால் எண்ணி அறியப்படுபவை மட்டுமே. நேற்றென்ற வஞ்சமும் நாளையென்ற விழைவும் மானுடரை ஆளும் தெய்வங்களுக்குரியவை. அவியிட்டு நெய்யூற்றி ஓம்பப்படாத தெய்வங்கள் பகைகொள்ளும் என்பது மரபு” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரர் “வஞ்சம் உள்ளுறை நஞ்சு என்கின்றன நூல்கள்” என்றார். “உழுதுண்பவருக்கும் தொழுதுண்பவருக்குமான நெறிகளை இங்கு சொல்லவேண்டியதில்லை. நஞ்சில்லாத நாகம் வெறும் புழு” என்றான் பீமன். “வஞ்சத்தாலும் விழைவாலும்தான் ஷத்ரியர் உருவாகி வருகிறார்கள்.”
யுதிஷ்டிரர் “ஆனால் அவள் நம் மகள்…” என்று சொல்ல பீமன் “கிருஷ்ணைக்காக நீங்கள் அவள் தந்தையின் பிழையை பொறுத்தருளப்போகிறீர்களா?” என்றான். யுதிஷ்டிரர் “அது எப்படி?” என்றார். “சரி, அவள் தந்தைக்காக உங்கள் நிலத்தை விட்டுக்கொடுப்பீர்களா? அவர் பேசும் தொல்வேத நெறியை ஏற்று உங்கள் தன்னறத்தை கைவிடுவீர்களா?” யுதிஷ்டிரர் பேசாமல் இருக்க “பிறகெதற்கு இந்த அவைநடிப்பு? நாம் எவரோ அதை நாமெனக் காட்டுவோம்” என்றான் பீமன். அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே?” என்றான் பீமன். “நான் எதுவுமே எண்ணவில்லை, மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.
யுதிஷ்டிரர் “நான் முதலில் அவ்வாறே எண்ணினேன். ஆனால் சென்றிருக்க வேண்டுமென்ற எண்ணம்தான் இப்போது என் உள்ளத்தில் உள்ளது” என்றார். நகுலன் “இளைய யாதவர் சென்றிருக்கிறார்…” என்றான். பீமன் “அவர் செல்லலாம். ஏனெனில், அவர் ஷத்ரியக் குடியினர் அல்ல. அவருக்கு துரியோதனனிடம் வஞ்சமென்றும் ஏதுமில்லை. அவன் அவையில் நின்று சிறுமைகொண்டது நமது குலமகள். அவ்வஞ்சத்தில் ஒரு துளி நீர்கூட கலக்க நாம் ஒப்புக்கொள்ளலாகாது, மூத்தவரே. நமது தேரை இழுக்கும் புரவி அப்பகையே ஆகுக! அன்று அவைநின்று நாம் சொன்ன சொற்களே நம்மை ஆளவேண்டிய தெய்வங்கள்” என்றான்.
யுதிஷ்டிரர் தலையை அசைத்து “எனக்குப் புரியவில்லை. இத்தருணத்தில் என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை” என்றார். “எம்முடிவாயினும் அந்நிகழ்வு கடந்துவிட்டது. இனி அதை எண்ணி உருகுவதில் பொருளில்லை” என்று பீமன் சொன்னான். “ஆம், கிருஷ்ணையின்றி நம் குடியின் தன்மதிப்பு காக்கப்பட்டிருக்காது. ஆகவேதான் இன்று அவளை நம் குடிக்கு மகளென கொள்கிறோம். இங்கிருந்து பொன்னும் மணியுமென பரிசில்கள் ஏந்தி துவாரகைக்குச் செல்வோம். அங்கு நம் குடிக்கு வந்த குலமகளைக் கண்டு வாழ்த்துவோம். நம் குலத்து மூதன்னையருக்கு நிகராக வைத்து வணங்குவோம். அதுவே நாம் செய்யக்கூடியது.”
யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், நாம் துவாரகைக்கு பரிசில்களுடன் செல்லவேண்டும். இங்கு விட்டதை அங்கு இயற்றவேண்டும்” என்றார். சகதேவன் “அஸ்தினபுரியிலிருந்து அவர்கள் மதுராபுரிக்குச் செல்வதாகத்தான் பேசப்பட்டது. துவாரகைக்கு அல்ல” என்றான். யுதிஷ்டிரர் “ஏன்? சாம்பன் துவாரகையின் இளவரசனல்லவா?” என்றார். “ஆனால் அவனை தன் மைந்தனென உடன் வைத்திருப்பவர் பலராமர். துவாரகையின் இளவரசர்கள் அனைவருமே இன்று தங்கள் மூத்த தந்தையின் அணுக்கர்கள். யாதவக் குடித்தலைவர்கள் அனைவருமே மதுராவில்தான் உள்ளனர். இன்று முதல் ஏழு நாட்கள் மதுராவில் அவர்களின் மணநிகழ்வு பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்றனர்” என்றான் நகுலன்.
“அப்படியென்றால் மதுராவுக்குச் செல்வோம். அங்கு நம் குலமுறைப்படி சீர்வரிசைகளை அளிப்போம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “எப்படியும் நாம் சென்றாக வேண்டியுள்ளது” என்று பீமன் சொன்னான். “யாதவர்களிடம் சென்று நம்முடைய ஆதரவாளர்களை வென்றெடுக்கவேண்டும்.” நகுலன் குழப்பத்துடன் “மூத்தவரே, பலராமரும் கிருதவர்மனும் யாதவகுல மூத்தார் அனைவரும் துரியோதனரின் ஆதரவாளர்களாக தங்களை அவையிலேயே அறிவித்துக்கொண்டுவிட்டனர். எஞ்சியவர்கள் யார்?” என்றான். “எஞ்சியவர்கள் இருப்பார்கள்” என்று பீமன் சொன்னான். “அதை நாம் அங்கு நேரில் செல்லாமல் அறியமுடியாது.”
“ஆம், நேருண்மை எப்போதுமே பருவடிவு கொண்டது என்பார்கள்” என்றார் யுதிஷ்டிரர். “இளையோனே, இளைய யாதவர் அங்கு இருக்கிறார். இத்தனை காலம் அவர் ஈட்டிய புகழும் உடனுள்ளது. அவர் தோழர்கள் அவருடன்தான் இருப்பார்கள். அவருக்காக தொழும்பக்குறி சூடிய சாத்யகி உடனிருக்கிறார். பிறர் எவர் என்று பார்ப்போம். அவரை உளம்சூடியவர்கள் அத்தனை எளிதாக மறந்துவிடமாட்டார்கள். அவர்களின் மொழி மறக்கலாம், கனவில் அவர் இருப்பார். அவர்களிடம் நாம் பேச முடியும்” என்றான் பீமன். “அவனை அவர்கள் முற்றிழக்கக்கூடும் என உணர்ந்தால் சிலர் உளம் மாறலாம்” என்றார் யுதிஷ்டிரர்.
“அவருடைய மைந்தர்களில் எவர் இன்று அவருடன் இருக்கிறார்கள் என்பதும் முதன்மையான வினாவே. இன்று அவருடன் இருப்பவர்களே நாளை துவாரகையின் முடி சூட்டப்படுவார்கள் என்றால், அவரைத் துறந்து மூத்தவருடன் இருக்கும் மைந்தர்கள் எவரும் ஒற்றை முடிவெடுக்க முடியாது. அவர்களில் எவர் அவருடன் நின்றாலும் நம் தரப்புக்கு ஒரு யாதவப் பெருவீரன் வருகிறான் என்பதுதான் பொருள்” என்றான் பீமன். “பிரத்யும்னனை நாம் வென்றெடுக்க முடியுமென்றே நான் எண்ணுகிறேன்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “இன்றுவரை அவன் தந்தையை மீறி ஒன்றையும் உரைத்ததில்லை. இப்போதும் காத்திருக்கிறான், தயங்கிக்கொண்டிருக்கிறான். குடிப்பிறந்தமைக்குரிய நிகர்நிலையை என்றும் கொண்டவன் அவன்.”
“சாம்பன் நம்முடன் இருப்பான் என்றே எண்ணினேன். துரியோதனனின் மகளை மணம்புரிந்த பின்னர் அவனால் அது இயலாது. பிரத்யும்னன் பெருவீரன். துவாரகையின் பல போர்களில் படை முன் நின்றவன். சாம்பனா பிரத்யும்னனா என்றால் பிரத்யும்னனையே நான் தேர்வு செய்வேன்” என்று நகுலன் சொன்னான். பீமன் “ஆனால் நம்முடன் இருப்பவர்கள் நிஷாதர்கள், அசுரர்கள். அவர்களை வழிநடத்த சாம்பன் வருவானென்றால் நமக்கொரு பெரும்படைத்தளபதி அமைகிறான்” என்றான். “சாம்பன் எப்படி வரமுடியும்?” என்று நகுலன் கேட்டான். “அவன் மணந்திருப்பது துரியோதனனின் மகளை அல்ல, இளைய யாதவரின் பீலியை உளம் சூடிய ஒரு பெண்ணை. அவருக்கெதிராக தன் கொழுநன் படைகொண்டெழுவதை அவள் ஒருபோதும் ஒப்பமாட்டாள்” என்றான் பீமன்.
நீள்மூச்சுடன் “யாதவர்கள் எவரை நாம் வென்றெடுத்தாலும் அது நலம் பயப்பதே” என்றார் யுதிஷ்டிரர். “இன்று நாம் ஆற்றவேண்டிய அரசுசூழ்தல் இதுவே. இளைய யாதவனுடன் நமது படைக்கூட்டு உறுதி கொண்டிருக்கிறது என்றும் அவனை முன்னிறுத்தியே நாம் களம் காணப்போகிறோம் என்றும் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கும் நிஷாதரும் அசுரரும் பிறரும் ஐயமற உறுதி கொள்ளவேண்டும். இளைய யாதவனுடன் களம் நிற்கும் யாதவப் பெருவீரர்கள் எவரெவர் என்பதை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். யாதவ குலத்தலைவர்களில் ஒருசிலரையேனும் நாம் நம் பக்கம் திருப்ப வேண்டும். அத்துடன் நம் குலத்திற்கு வந்துள்ள இளவரசியைக் கண்டு சீர் அளித்து வாழ்த்துரைக்க வேண்டும். உடனடியாக மதுராவுக்கு நான் கிளம்புகிறேன்.”
பீமன் புன்னகைத்து “இப்போதுதான் மீண்டும் இயல்பு திரும்பியிருக்கிறீர்கள், மூத்தவரே. நல்லுணர்வையும் அரசுசூழ்தலையும் இரண்டில்லை என கலந்துவிட்டீர்கள்” என்றான். அவன் சொன்னது புரியாமல் திரும்பி நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் எண்ணம் விலக யுதிஷ்டிரர் திரௌபதியிடம் “மதுராவுக்கு நீயும் வருகிறாயல்லவா?” என்றார். “இல்லை, நான் வரவேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்” என்றாள் திரௌபதி. “நீ அவள் அன்னை” என்றார் யுதிஷ்டிரர் குரல் மேலெழ. “நான் அவளிடமிருந்து எப்போதும் பிரிந்ததில்லை. அவள் அதை அறிவாள்” என்றாள் திரௌபதி. “ஆகவே இப்போது அணுகி இத்தருணத்திற்குரிய நற்சொல் உரைக்கவேண்டிய தேவையுமில்லை. எப்போதாவது அவளை கண்டால்கூட நாங்கள் உரைத்துக்கொள்ள ஒரு சொல்லும் இல்லை.”
சகதேவன் “மூத்தவரே, தாங்கள் மதுராவுக்குச் செல்வது உகந்ததல்ல” என்றான். “ஏன்?” என்று யுதிஷ்டிரர் திகைப்புடன் கேட்டார். “இப்போது விரும்பியோ விரும்பாமலோ தாங்கள் ஓர் அரசமையம் என்றாகிவிட்டீர்கள். விரும்பாவிடினும் போருக்கு படைதிரட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இத்தருணத்தில் நட்பு கோரி யாதவத் தலைநகருக்கு நீங்கள் நேரில் செல்வது அரசநிலைக்கு உகந்ததல்ல. அரசன் துணை கோரவேண்டுமேயொழிய துணைக்காக இரக்கலாகாது. அது அவனது ஆற்றல்குறைவையே வெளிக்காட்டும். அந்த ஆதரவை நாம் பெற்றால் நாளை அவர்கள் நம்மை ஆள நினைப்பார்கள்” என்றான் சகதேவன்.
“இளைய யாதவனிடம் என்ன அரச முறைமை நமக்கு?” என்றார் யுதிஷ்டிரர். “தாங்கள் செல்லவிருப்பது மதுராவுக்கு. துவாரகைக்கு அல்ல. ஆழியர் அமைந்த துவாரகைக்கு தாங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். அங்கொரு அவைக்காவலனாக வேல்கொண்டு நின்றிருந்தாலும் தங்கள் மாண்பு குறைவதில்லை. மதுராவில் வசுதேவருக்கும் பலராமருக்கும் முன்னால் தங்கள் முடி அணுவிடைகூட தாழலாகாது” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் அசைவற்ற இமைகளுடன் அப்படியே உறைந்தார். அறைக்குள் வந்த காற்றை அப்போதுதான் உணரமுடிந்தது. எவருமறியாமல் அது அங்கே சுழன்றுகொண்டிருந்தது என சதானீகன் எண்ணிக்கொண்டான்.
பின்னர் யுதிஷ்டிரர் எண்ணம் கலைந்து தாடியை நீவிவிட்டுகொண்டு பெருமூச்சுவிட்டார். திரும்பி பீமனை நோக்கி “அவ்வண்ணமென்றால் இளையோன் செல்லட்டும். இவனுடைய தோள்விரிவை பலராமர் விரும்புவார்” என்றார். “ஆம், மல்லர்களுக்கு அவர்களுக்கேயுரிய மொழி உண்டு” என்று சகதேவன் சொன்னான். “ஆனால் வெளித்தெரிவதுபோல் பலராமர் அல்ல அங்குள்ள அரசுமையம். அவர் துணைவி ரேவதி அவரை ஆட்டுவிக்கிறார். எவ்வகையிலும் அவருடன் சொல்நிற்கவோ அரசுசூழவோ மூத்தவரால் இயலாது. நமது ஆடலும் அரசியுடன் அல்ல.”
“பிறகு யார் செல்வது?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “மூத்தவர் அர்ஜுனர் செல்லட்டும். அவர் இளைய யாதவரின் தோழர். இது அரசுமுறைப் பயணமல்ல, தன் தோழரை சந்திக்கச் சென்றதென்றே அது தோன்றட்டும். அங்கு சென்று யாதவர்களிடம் குடியவைகளில் அமர்ந்து பேச அவரால் இயலும். ஏனென்றால் அவர் யாதவ குலத்து அரசியை மணந்தவர்” என்று சகதேவன் சொன்னான். யுதிஷ்டிரர் “ஆம், எண்ணுகையில் அதுவே உகந்ததென்று தோன்றுகிறது” என்றார். “அவர் பெண்களுடன் உரையாட முடியும்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் திரும்பி நோக்க “அவரைப் போன்றவர்களை அன்னையர் விரும்புவார்கள்” என்று சகதேவன் சொன்னான். அவன் சொன்னதென்ன என அனைவருக்கும் புரிய பீமன் புன்னகை செய்தான்.
யுதிஷ்டிரர் “இளையோனே, நீ என் பொருட்டு நம் கொடியுடன் மதுராவுக்கு செல். இளைய யாதவரையும் மூத்த யாதவரையும் யாதவப் பேரரசரையும் சந்தித்து நமது தரப்பை சொல். நன்று நடக்குமென்று எண்ணுவோம்” என்றார். நகுலன் “இன்னும் சில நாட்களில் துரியோதனரே மதுராவுக்கு கிளம்பக்கூடும் என்று செய்தி வந்துள்ளது” என்றான். “ஏன்?” என்று ஐயத்துடன் யுதிஷ்டிரர் கேட்டார். “இளைய யாதவர் அஸ்தினபுரிக்கு வந்தது அக்குடிமக்களுக்கிடையே எழுப்பிய எழுச்சியை துரியோதனர் பார்த்திருப்பார். அவரை ஆதரிக்கும் சிறுகுடி அரசர்களிடமும் அது பெருவரவேற்பை பெற்றிருக்கும். இத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டு இளைய யாதவரையும் தன் பொருட்டு பேசும்படி முறையாக அவர் அழைக்க வாய்ப்புள்ளது.”
யுதிஷ்டிரர் தலையசைத்தார். நகுலன் “மணநிகழ்வுக்கு வந்துள்ள அரசரிடம் அரசுசூழ்தல் பேசுவது மரபல்ல என்பதனால் அதை பேசியிருக்க மாட்டார். மதுராவுக்குச் சென்று அவ்வாறு படைத்துணை கோரினால் அதை அரசமுறைப்படியே இளைய யாதவர் மறுக்கமுடியும்” என்றான். “அவர் மறுப்பாரென்பதில் என்ன ஐயம்? துரியோதனனை சூழ்ந்திருக்கும் அரசர்கள் அல்லவா அவருடைய முதல் எதிரிகள்?” என்றார் யுதிஷ்டிரர். “ருக்மியும் ஜயத்ரதனும் அங்கிருக்கிறார்கள். சிசுபாலனின் வஞ்சமும் ஜராசந்தனின் வஞ்சமும்கூட துரியோதனன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்துகொண்டுதான் இருக்கும்.”
“ஆம், ஆனால் அவ்வாறு படைக்கூட்டு கோரி அவர் இளைய யாதவரை சந்தித்து மீள்வதென்பதே நமது தரப்பிலிருக்கும் சிறுகுடி மன்னர்களையும் நிஷாதர்களையும் கிராதர்களையும் ஐயம் கொள்ள வைக்கும். அத்துடன் தனக்கு படைத்துணையுடன் வந்திருக்கும் தொல்குடி ஷத்ரியர்களுக்கு ஒரு செய்தியை அளிக்க துரியோதனர் விரும்பலாம். அவர்கள் அவரை ஆதரிப்பதனாலேயே அவர் அவர்களுக்கு கட்டுப்பட்டவர் அல்ல. இளைய யாதவருடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்வதனூடாகக்கூட அவர் தன் நிலத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்” என்றான் சகதேவன்.
“தலை சுழல்கிறது… இந்த அரசுசூழ்தல் முறைமைகள்” என்றார் யுதிஷ்டிரர். “இளையோனே, நாம் செய்யவேண்டியதென்ன என்று மட்டும் சொல்!” சகதேவன் “மூத்தவர் சென்று தன் தோழரிடம் படைத்துணை கோரட்டும். தந்தையென்று சென்று யாதவ இளவரசனையும் இளவரசியையும் வாழ்த்தட்டும்” என்றான். பீமன் “முதன்மை இலக்காக கொள்ளவேண்டியது ஒன்றே. பலராமர் நமக்கெதிராக அஸ்தினபுரியுடன் இணைந்து படைமுன் நிற்கக்கூடாது. சாம்பனும் பிரத்யும்னனும் அங்கு நிற்காமலிருந்தால் அது மேலும் வெற்றி” என்றான். யுதிஷ்டிரர் “நாம் மீண்டும் மீண்டும் போர் பற்றியே பேசுகிறோம். என்னை அது உளம்கலங்கச் செய்கிறது” என்றார்.
“பிரத்யும்னன் மட்டுமாவது நமது தரப்புக்கு வருவானென்றால் நாம் முழுமையாக வென்றுவிட்டோம் என்றே பொருள். அதன் பொருட்டு இளையவன் செல்லட்டும்” என்றான் பீமன். “நீ என்ன சொல்கிறாய், இளையோனே?” என்றார் யுதிஷ்டிரர். “எனக்கு ஆணையிடப்பட்டதை நான் செய்கிறேன். அரசுசூழ்தலின் நெறிகள் அனைத்தையும் நான் முற்றாக மறந்து நெடுநாட்களாயிற்று. இன்று என் மொழி வேறு. நான் என்னை ஆட்கொண்டவரின் அடியவன் மட்டுமே, பிறிதொன்றும் அல்ல” என்று அர்ஜுனன் சொன்னான்.
யுதிஷ்டிரர் அர்ஜுனனின் முகத்தை பார்த்தபடி சற்று நேரம் உறைந்து அமர்ந்தபின்னர் மெல்ல கலைந்து தாடியை நீவியபடி சகதேவனை பார்த்தார். சகதேவன் புன்னகைத்து “இளையோர் இருவரும் அவருடன் செல்லட்டும். சதானீகன் அவன் மூத்தோருக்கு நிகரான அரசுசூழ் நெறியறிந்தவன். அவனுக்கு ஒரு வாய்ப்பளிப்போம்” என்றான். சதானீகன் தலைவணங்கினான்.
அவையைவிட்டு வெளியே நடந்த நகுலனையும் சகதேவனையும் தொடர்ந்து சதானீகனும் நிர்மித்ரனும் சென்றனர். அர்ஜுனனும் பீமனும் உரையாடியபடி அவர்களைத் தொடர்ந்து வர பீமனின் காலடிகளை உணர்ந்து நால்வரும் ஒதுங்கி வழிவிட்டனர். பீமன் சகதேவனின் தோளில் கைவைத்து “மைந்தருக்கு பணிகளை, சொற்களை பயிற்றுவித்து அனுப்பலாகாது, இளையோனே. அவர்கள் ஆற்றவேண்டியதை அவர்களே அறிவார்கள். மன்றுசூழ்கையில் ஒழிய வேண்டியதென்ன என்பதை மட்டும் சொல்க!” என்றபின் அர்ஜுனனிடம் “இவர்களில் அரசுசூழ்தல் திறன் சற்றுமில்லாதவன் என்று நான் எண்ணியது அபிமன்யூவை. அவனைப் பற்றி கேட்ட ஒவ்வொரு செய்தியுமே வியப்பூட்டுகின்றது” என்றான்.
அர்ஜுனன் “அனைத்திலிருந்தும் விலகி நிற்க அவனால் இயல்கிறது. ஆகவே நிகர்நிலை குலையாமல் செயலாற்றவும் அவன் திறன் கொண்டிருக்கிறான்” என்றான். “ஆம், விலகி நிற்பது அவன் இங்குள்ள அனைத்தையும்விட பெரியதொன்றை பற்றி நிற்பதனால்” என்றான் சகதேவன். “இளையோர் அரசுசூழ்வதை காண்பது இனிது. அது அவர்கள் ஈட்டிய பொருளால் நாம் உண்பதற்கு நிகர்” என்றான் பீமன். “நாளையே கிளம்புக! புதிய ஊர் ஒன்றில் நுழைகையில் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளலாகாது என்பதை மட்டுமே சொல்வேன். பேச்சைப்போல விழிமறைக்கும் திரை பிறிதில்லை” என்றபின் சதானீகனின் தோளை தட்டிவிட்டுச் சென்றான்.
அவர்கள் இருவரும் இடைநாழியில் நடந்து அப்பால் மறைய நகுலன் சதானீகனிடம் “மூத்தவர் மிகவும் உளம் விலகியிருக்கிறார். காண்டீபம் நாணிழந்ததுபோல் தோன்றுகிறார் என்று நேற்றுகூட ஒரு சூதன் சொன்னான். இந்தப் போரிலும் முடிப்பூசலிலும் அவர் அகம் எவ்வகையிலும் ஈடுபடவில்லை. எனவே மதுராவில் அவர் உரிய முடிவெடுத்து திறனுடன் சொல்கோத்து அனைத்தையும் இயற்றுவாரென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. அப்பணியை நீங்கள்தான் இயற்ற வேண்டும்” என்றான். “ஆகவே, இல்லாததுபோல் அங்கிருங்கள். உணர்வுகள் அனைத்தையும் கூர்ந்து நோக்குங்கள். ஒவ்வொரு சொல்லையும் அதனுடன் இணையும் விழியால் பொருள்கொள்ளுங்கள்.”
சகதேவன் “மைந்தா, அஸ்தினபுரிக்கு யாதவர்களின் ஆதரவு இயல்பானதாக இருக்குமென்றால் நாம் இயற்றுவதற்கொன்றுமில்லை. அது மிகையான உணர்வுக்கொந்தளிப்பு கொண்டிருக்குமென்றால், அங்காடியிலும் அவையிலும் அதையே மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் உள்ளே ஐயமும் சிறு விரிசலும் இருக்கிறது என்றுதான் பொருள். அது எத்தரப்பென்று கண்டுபிடியுங்கள். விருஷ்ணிகளும் போஜர்களும் ஹேகயர்களும் இளைய யாதவரிடமிருந்து பிரிந்து வந்துவிட்டார்கள். ஆனால் எவ்வகையிலும் பொருட்படுத்தாத குக்குடநாட்டினர் இன்று மேலெழுந்து வருகிறார்கள். அதை எண்ணி எரிச்சல் கொள்ளும் எவரேனும் யாதவபுரியில் இருக்கக்கூடும். அவர்களிடமிருந்து நாம் தொடங்கவேண்டும்” என்றான்.
சதானீகன் “முயல்கிறேன், தந்தையே” என்று தலைவணங்கினான். சகதேவன் “கணிகரை நீங்கள் அரசுசூழ்தலில் வெல்ல முடியாது. ஆனால் அவர் ஆற்றமுடியாதது ஒன்றே, அறத்தொடு நிற்றல். ஆகவே உங்கள் படைக்கலமாக அறத்தை கைக்கொள்ளுங்கள்” என்றான். சதானீகன் “ஆணை” என்றான். “இன்றே கிளம்புங்கள். அஸ்தினபுரியிலிருந்து மூத்தவர் துரியோதனர் எப்போது கிளம்புவார் என்று தெரியவில்லை. ஓரிரு நாளேனும் அவருக்கு முன்னால் நீங்கள் மதுராவுக்குச் சென்றிருப்பது நன்று. கணிகரின் சொற்களுடன் அவர் வந்து இளைய யாதவரை பார்ப்பதற்கு முன்னர் நீங்கள் பார்த்தாக வேண்டும்” என்றான் சகதேவன்.
“இப்போதே பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்கிறேன், தந்தையே” என்றான் சதானீகன். “சென்றுவருக!” என்று சகதேவன் சொல்ல சதானீகன் அவர்கள் இருவரின் கால்களைத் தொட்டு தலைசூடினான். நிர்மித்ரனும் வணங்க இருவரையும் வாழ்த்தி “வெற்றி கொள்க!” என்று தந்தையர் சொன்னார்கள். அவர்கள் இடைநாழியைக் கடந்து படியிறங்குகையில் நிர்மித்ரன் “களிக்களத்திலிருந்து போர்க்களத்திற்குச் செல்பவனாக உணர்கிறேன், மூத்தவரே” என்றான். சதானீகன் புன்னகைத்து “அனைத்தும் நிகழ்ந்து முன்னரே முடிந்துவிட்டன, இளையோனே. நாம் அதை மீண்டும் நடிக்கிறோம்” என்றான்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டபடி நிர்மித்ரன் அவனுடன் ஓடிவந்தான். “நான் புரவிநிலைக்கு செல்லவிருக்கிறேன். பெரிய சாமரனுக்கு இடக்காலில் சிறிய புண். காலையில் மருந்திடச் சொல்லியிருந்தேன். சென்று பார்த்துவிட்டு செல்லவேண்டும்.” நிர்மித்ரன் முகம் மலர்ந்து “ஆம், இங்கிருந்து நேராக படுக்கைக்குச் சென்றால் என்னாலும் துயில்கொள்ள முடியாது. புரவிச்சாலையிலிருந்து துயிலறைக்குச் சென்றால் இனிய கனவுகள் உடன்வருகின்றன” என்றான்.