எழுதழல் - 70

எட்டு : குருதிவிதை – 1

fire-iconஉபப்பிலாவ்யத்தின் கோட்டைமுகப்பின் பெருமுரசு மும்முறை ஒலித்து அடங்கியதும் அரண்மனை முகப்பிலிருந்த முரசு அதை ஏற்று ஒலித்து அடங்கியது. தொடர்ந்து நகரின் வெவ்வேறு இடங்களில் இருந்த ஆலயங்களில் புலரிப் பூசனைகளுக்கான மணியோசைகள் எழத்தொடங்கின. சதானீகன் தன் சிற்றறையின் மஞ்சத்திலேயே விழிப்பு கொண்டு கைகளை நெஞ்சோடு கோத்து சொல்லற்ற வேண்டுதல் ஒன்றை நிகழ்த்தினான்.

ஒவ்வொரு நாளும் விழிப்பின் முதற்கணத்தில் அவன் இயற்றுவது அது. இளங்காற்றுக்கு தழையும் கிளைபோல, அல்லது முதல் ஒளி கொள்ளும் பனித்துளிபோல இயல்பாக அது நிகழ்ந்தது. அவனுக்கு அவ்வேண்டுதல்முறையை கற்றுத்தந்த கார்க்கியாயன முனிவர் “வேதங்கள் தொன்மையான வேண்டுதல்கள், இளவரசே. துயரும் விழைவும் தனிமையும் எழுச்சியும் கொண்ட சொற்கள் அவை. ஒவ்வொரு நாளும் மானுடன் ஐம்பருக்களிடம், அவற்றை ஆளும் தெய்வங்களிடம், தன் உடலில் உள்ளுறையும் ஆத்மாவிடம் வேண்டிக்கொண்டிருக்கிறான். அவற்றின் மொழிவடிவம் அவை” என்றார்.

அவர்கள் யமுனைக்கரையின் சித்ரவனம் என்னும் சிறு தோட்டத்தில் இருந்தனர். காலையின் எழாஒளி நீரை மிளிர்வு கொள்ளச்செய்யும் பொழுது. அவருக்கு அவன் இனிய மாணவன். உடன் பிறர் இல்லாமல் நதிக்கரைக்கு அவர் வருவதுண்டு. “வேண்டுதலே மானுடனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது. வேண்டுதலினூடாக மானுடம் வளர்ந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் பல்லாயிரம் தலைமுறை துயர்களால், விழைவுகளால், தனிமையால் களிம்பு கொண்டிருக்கிறது. இளவரசே, வேதச்சொல்கூட மானுடக்களிம்பு கொண்டதே. சொல்லற்ற வேண்டுதல் ஒன்றால் மட்டுமே நம்மால் அத்தனை அருகில் செல்லமுடியும்.”

“அதை நீங்கள் உணர்ந்தால் இங்குள்ள ஒவ்வொரு உயிரும் தங்கள் இருப்பால் வேண்டிக்கொண்டிருப்பதை காண்பீர்கள். காலையொளியில் மரச்சில்லையில் அமர்ந்திருக்கும் குருவி, புல்நுனியில் ஆடும் விட்டில், முள்முனையில் திரண்டு வரும் பனித்துளி அனைத்தும் ஒற்றைப்பெரும் வேண்டுதல் ஒன்றை தாங்களும் கொண்டுள்ளன. அவ்வேண்டுதலின் ஒரு பகுதியென ஆவதே நாம் இயற்றவேண்டிய தவம். நமக்கென, குடிக்கென, குலத்திற்கென வேண்டுவது இழிவு. மானுடத்திற்கென, அறத்திற்கென வேண்டிக்கொள்வதும் இழிவே. வேண்டுதல் எதற்காகவும் நிகழலாகாது. அது ஒரு நிலையென நம்மில் கைகூடிவிடவேண்டும்” என்றார் கார்க்கியாயனர்.

“அரிதுதான். ஆனால் அதைப் பயில்வது எளிது. வேண்டிக்கொள்க! ஒவ்வொரு முறை வேண்டுகையிலும் உங்களில் எழும் சொற்களை உள்ளிருந்து விலக்குக! அச்சொற்கள் ஏந்திய விழைவும் துயரும் உடன்விலகுவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே பரம்.” அவன் அவரை நெடுநாட்களுக்குப்பின் அருகிலென உணர்ந்து அம்முகமலர்வுடன் எழுந்தான். ஆடைகளைச் சீரமைத்தபின் கதவைத் திறந்து வெளியே வந்தான். அங்கு நின்றிருந்த வீரன் தலைவணங்கி “ஏவலர் நீராட்டறை ஒருங்கியிருப்பதை அறிவித்தார், இளவரசே” என்றான்.

சதானீகன் மறுமொழி சொல்லாது தலையை அசைத்துவிட்டு நடந்தான். நீராடி ஆடையும் அணியும் கொண்டு இடைநாழியினூடாக படிகளில் இறங்கி கூடத்திற்கு வருவது வரை அவன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. காலையில் எப்போதுமே நெடுநேரம் கழித்து புற அலுவல்கள் ஒன்றிலிருந்து அவன் தன் முதற்சொல்லை பெறுவது வழக்கம். அதுவரை செவியில் விழும் அத்தனை சொற்களும் ஆடிப்பரப்பில் ஒளியென பட்டு முழுமையாகவே திரும்பிச் சென்றுவிடும். முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சர் சம்புகர் “புரவி ஒருங்கியிருக்கிறது, இளவரசே” என்றார்.

அவன் முற்றத்தின் பனி பரவிய தரையில் நடந்து புரவியை அணுகினான். பனியின் ஈரம் பரவிய மென்மையான தோல்பரப்புடன் மெல்ல சிலிர்த்தபடி நின்றிருந்த கரிய புரவி சிற்றலை எழும் ஒரு சிறிய சுனையென அவனுக்குத் தோன்றியது. அவன் அணுகுவதை உணர்ந்ததுமே அது திரும்பி செவிகோட்டி பெரிய மூக்குகளை விடைத்து கனைத்தது. அவன் அதன் ஈரமான மென்முடிப்பரப்பை மெல்ல வருடி பின் முதுகில் தட்டினான். ஏவலன் கால்வளையத்தை எடுத்து வைக்க அதில் மிதித்து ஏறி கால் சுழற்றி அமர்ந்தான். புரவி முதுகுவளைத்து அவன் உடல் எடையை வாங்கிக்கொண்டது.

கடிவாளத்தை வலக்கையால் பற்றி இடக்கையால் கழுத்தை மெல்ல தடவினான். அவன் எண்ணங்கள் அனைத்தையும் முற்றிலும் பெற்றுக்கொண்டு புரவி அமைதி அடைந்தது. கிளம்பலாம் என்று அவன் எண்ணியதுமே சீராக காலெடுத்து வைத்து முற்றத்தைக் கடந்து செல்லத்தொடங்கியது. அதன் குளம்படிகளின் தாளம் சீராக எழுந்தது. சுவர்களில் பட்டு எதிரொலித்து அவனைச் சூழ்ந்தது. உடன் கடிவாளமணிகளின் கிலுக்கம். ஒரு மொழி. ஒலிகளெல்லாம் எவருக்கோ எதற்கோ மொழியே.

உபப்பிலாவ்யம் புலரியில் விழித்தெழும் வழக்கமே இல்லாத சிறுநகர். அங்காடித் தெருவில் மட்டுமே விளக்கொளி இருந்தது. காவல்மாடங்களின்மீது மீனெண்ணெய் விளக்குகள் கொத்துகளாக கரிப்புகையுடன் எரிந்தன. வறுபடும் நெய்மணம் அவற்றின் கீழே நிறைந்திருக்க அதை விழைந்துவந்து பொசுங்கிய சிற்றுயிர்கள் கீழே பொழிந்து பரவியிருந்தன. வேறெங்கும் ஓசைகளும் அசைவுகளும் இருக்கவில்லை. பறவைகள் கலைந்தெழுந்து இருள் வடிந்துகொண்டிருந்த வானில் கரிய சருகுத் துகள்களாக சுழன்று பறந்து மீண்டும் மரங்களில் அமைந்தன.

வானில் விண்மீன்கள் செறிந்திருந்தன. அவன் விழிதுழாவி தொலைவில் துருவனை பார்த்தான். பார்க்கும் கணத்திற்குமுன் அது பல்லாயிரம் கோடி விண்மீன்களாக இருப்பதும் பார்த்ததுமே தனித்து சற்று அண்மையில் வந்து எதையோ உணர்த்த விரும்புவதுபோல அதிரத்தொடங்குவதும் ஒவ்வொரு முறையும் அவன் எண்ணி வியப்பது. மேலும் அருகிலமைந்து கைநீட்டி முழு உள்ளத்துடன் கோரினால் வந்து விழுந்துவிடும் என்பதுபோல். வெறும் அலைச்சுழற்சியென்று அமைந்த இப்புவியை, அதைச் சூழ்ந்திருக்கும் புடவிப்பெருக்கை ஆட்டிவைக்கும் நிலைபெயராமை. இப்பெருந்தேரின் அச்சு.

அவன் அதில் விழி நிலைத்து மெல்ல சென்றுகொண்டிருந்தான். நோக்க நோக்க விண்மீன் கொள்ளும் ஒளி வியப்பை எழுப்புவது. அரைநாழிகை நோக்கினால் விண்மீன் ஒளியில் கண்கள் கூசுவதைக்கூட உணரமுடியும். நீலம், அனல்செம்மை, அல்லது மென்பச்சையா? வெண்சுடரா? துருவன் எண்களில் சுழி. சொற்களில் அகரம். ஒலிகளில் ஓங்காரம். எண்ணங்களில் தன்னுணர்வு. அவன் பெருமூச்சுவிட்டான். எங்கோ ஒரு பறவை காவ் என அவன் வரவை தெரிவித்தது. இரு பறவைகள் ஆம் என்றன.

அவன் உபப்பிலாவ்யத்தின் கோட்டைமுகப்பை சென்று அடைந்தான். அப்போது அங்கு காவல் மாறிக்கொண்டிருந்தது. தொலைவிலேயே அவன் புரவியின் காலடியோசையைக் கேட்டு காவலர்கள் வாள்பிடி தொட்டு காத்து நின்றிருந்தனர். புரவியிலிருந்தபடியே முதற்காவலனிடம் “குளிர்ந்த இரவு” என்று அவன் சொன்னான். “ஆம் இளவரசே, இனிதாக புலர்ந்துள்ளது” என்று அவன் மறுமொழி உரைத்தான். பந்த வெளிச்சத்தில் அவன் முகம் புன்னகையுடன் தெரிந்தது. சதானீகன் புன்னகைத்தபடி புரவியை நிறுத்தி கோட்டையின் முகப்பிலிருந்த சிறுபடிகளிலேறி மேலே சென்றான்.

மரத்தாலான காவல்மாடத்திலிருந்த வீரர்கள் தலைவணங்கி “இக்காலை அழகு கொள்கிறது, இளவரசே” என்றனர். காவல் மாடத்தில் அவர்கள் இரவு போர்த்திக்கொண்டிருந்த மரவுரிகளும் தோல் ஆடைகளும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. புதிதாக காவல் ஏற்றுக்கொண்ட வீரர்கள் படைக்கலங்களை ஏந்தியபடி நிமிர்ந்து நின்றனர். கொசுக்கள் வராமலிருப்பதற்காக இரவெல்லாம் புகைந்துகொண்டிருந்த தூபக்கலங்கள் அனலவிந்து வெண்சாம்பலுடன் இருந்தன. குடிநீர் கலங்களை இரு ஏவலர்கள் நிறைத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் இரவெல்லாம் தங்கியிருந்த இரு பூனைகள் வால்களை செங்குத்தாகத் தூக்கி உடலைக் குறுக்கியபடி செந்நிற வாய் திறந்து ‘மாவ்’ என ஒலியெழுப்பி சதானீகனை நோக்கின. ஒரு பூனை கொட்டாவி விட்டு திரும்பிக்கொண்டு எளிதாகப் பாய்ந்து மேலேறி தூணின் பொருத்தில் கால்வைத்து கற்சுவரை அடைந்தது.

சதானீகன் காவல்மாடத்தின் முகப்பிற்கு வந்து தொலை கிழக்கை பார்த்தான். நான்கு திசைகளும் ஒன்று போலவே உள்ளொளி மட்டுமே இருக்க இளஞ்சாம்பல் நிறம் கொண்டிருக்க மரங்களும் மாளிகை முகடுகளும் கரிய உருவங்களாக புடைப்பின்றி அதில் படிந்திருந்தன. வானில் பறந்த பறவைச் சிதறல்களை பார்த்தான். காவலர்தலைவன் அவனிடம் “சற்று முன்னர்தான் இளைய பாண்டவர் பார்த்துச் சென்றார், இளவரசே” என்றான். அவன் தலையசைத்தான். ஒவ்வொரு முறையும் அவன் உணரும் விந்தை அது. புலரியில் கோட்டையின் நான்கு முனைகளையும் சென்று பார்ப்பது அவன் வழக்கம். ஆனால் பெரும்பாலான தருணங்களில் அவனுக்கு முன்னரே அர்ஜுனன் அங்கு வந்து சென்றிருப்பதுண்டு. இரவில் அவர் வருவதில்லை, புலர்ந்து வருவதுமில்லை. புலரிக்குச் சற்று முன்பு வந்து, பார்வையிடுபவர் போலல்லாமல் தனித்துலவுபவர்போல கோட்டைக்காவலனிடம் ஓரிரு சொற்கள் பேசி கடந்து செல்வார். எவரையும் பார்த்ததுபோல் தெரியாதென்றும் ஒவ்வொருவரையும் தனித்து பார்த்திருப்பாரென்றும் காவலன் சொல்லக் கேட்டிருக்கிறான். துயிலில்லாதவர் என்று அவரை காவலர் உரைப்பதுண்டு.

புரவிகள் துயில்வதில்லை என்று தந்தை ஒருமுறை அவனிடம் சொன்னார். “அவை துயில்வதுபோல் தோன்றும். அவற்றின் உடல் துயில்கையில் உள்ளம் முழுவிழிப்பு கொண்டிருக்கும். உடல் முழுவிசையில் சென்றுகொண்டிருக்கையில் உள்ளத்தை துயிலுக்கு கொண்டுசெல்ல அவற்றால் இயலும். உடலும் உள்ளமும் துயில்வதென்பது அவற்றுக்கு அளிக்கப்படவில்லை. ஆகவேதான் விலங்குகளில் அனல் என்று அவை வேதங்களால் துதிக்கப்படுகின்றன. படைக்கலங்களில் அவை அம்பு. மலர்களில் அவை காந்தள். தெய்வங்களில் அவை இந்திரன்.”

அவருடன் குதிரைக்கொட்டிலில் இருப்பதைப்போல அவன் உவகைகொள்ளும் தருணம் பிறிதில்லை. ஆனால் இளமையில் குறைவாகவே அது அவனுக்கு வாய்த்தது. புரவிகள் ஒவ்வொன்றும் தந்தையை அறிவதை, அவர் அவற்றுடன் மெல்லிய உடலசைவாலேயே பேசிக்கொள்வதை ஒவ்வொரு காட்சியணுவாகவே அவன் நினைவில்கொண்டிருந்தான். “மைந்தா, புலரியை மகிழ்ந்துநோக்காத விலங்குகள் புவியிலில்லை. ஆனால் பொற்கதிரின் முதற்துளி வந்து தொடும் விலங்கு புரவிதான். அதன் பிடரி கதிரவனால், வால் அனலவனால், கால்கள் காற்றிறைவனால் ஆளப்படுகின்றன. அதன் விழிகள் இந்திரனுக்குரியவை” என்று தந்தை சொன்னார்.

தந்தையின் அருகே அவனும் நிர்மித்ரனும் நின்றிருந்தனர். நாய்த்தோலால் அவர் சுபத்ரன் என்னும் பெரிய கரும்புரவியை உடலுருவிக்கொண்டிருந்தார். வழிபடப்படும் தெய்வத்தின் அமைதி அதன் உடலிலும் விழிகளிலும் கூடியிருந்தது. “அனைத்தையும் பற்றும் ஆற்றல் கொண்டவனல்ல மனிதன். ஆகவே ஒன்றை பற்றுக! அது அருகிருக்கும் மரக்கிளைகூட ஆகலாம். காலிடறும் கூழாங்கல்லாகலாம். ஒன்றை பற்றுக! அதை தெய்வமெனக் கொள்க! மானுடன் கற்க வேண்டிய அனைத்தையும் அது அளிக்கும்” என்றார் தந்தை. “இளமையில் நான் பற்றியது புரவி. எனை தெய்வமென அது வந்து பற்றிக்கொண்டது. என் முன் பேருருக் கொண்டு எழுந்தது. மைந்தரே, நான் கற்றுக்கொண்ட அனைத்தும் அது அளித்ததே.”

“என்றேனும் ஒருநாள் பிரம்மம் எனக்கு அருள்புரிய உருசூடி எழுமெனில் மாந்தளிர் நிற உடலும், பறக்கும் தழல்பிடரியும், முரசுக்கோலென முழங்கும் குளம்புக்கால்களும் இமைநீண்ட அழகிய விழிகளும் மூச்சுக்கு திறந்த மூக்கு வளையங்களும், தொங்கும் தாடையும், நீள்கழுத்தும், ஒடுங்கிய உடலும், சுழலும் சாமர வாலும் கொண்டு பேரருள் தோற்றம் கொள்ளும். புரவியைப் பணிக! எண்ணியிராப் பெருங்கனிவொன்று மானுடன்மேல் விழுந்தமையால்தான் புரவி அவனை அடையாளம் கண்டது.” அவர் குரல் தனக்குத்தானே என ஒலித்தது. கனிந்து தாழ்ந்திறங்கியது.

“நீ என்னவன் என்று முதல் புரவி முதல் மானுடனிடம் சொன்ன தருணத்திற்குப் பின்னரே இங்கு அரசுகள் தோன்றலாயின. மணிமுடிகள் ஒளிகொண்டன. செங்கோல்கள் எழுந்தன. சொற்கள் நூல்களாயின. நெறிகள் மானுடரை ஒன்றிணைத்தன. அறமென்று அறியப்பட்ட அனைத்தும் திரண்டன. மானுடம் என்று நாம் இன்று சொல்லும் அனைத்தும் புரவி அளித்த கொடையென்றே நான் எண்ணுகிறேன். புரவியை வணங்குக! இப்புவியில் நோக்கி தொட்டு கேட்டு அறியும் தெய்வமெனப் பிறிதொன்றில்லை.”

சதானீகன் கிழக்கே நெடுந்தொலைவில் செம்புரவியொன்று பிடரி மெல்ல பறக்க தோன்றுவதைக் கண்டான். அதன் சிறிய காதுகளும் குஞ்சி மயிரும் விழித்துளிகளும்கூட தெரியலாயின. அதற்கப்பால் எழுந்தது ஓர் இணைப்புரவி. மீண்டுமொரு புரவி. புரவி நிரைகள். அசைவும் அசைவின்மையுமென ஆகி நிரையா அலையமைவா என்றறியாத புரவிப்படலம். மேலும் மேலும் செம்மை கொண்டெழுந்தன புரவிகள். விழி தளர்ந்து உள்ளம் உவகை நிறைய கைகூப்பி “எந்தையே, அருள்க!” என்று அவன் சொன்னான்.

fire-iconசதானீகன் அரண்மனை முகப்பை அடைந்தபோது சுரேசர் அவனுக்காகக் காத்து நின்றிருந்தார். அவன் புரவியிலிருந்து இறங்கியதுமே படியிறங்கி அவனை நோக்கிவந்து “அரசர் அவையமர்ந்துவிட்டார், காத்திருக்கிறார்” என்றார். சதானீகன் “புலரியிலேயே அவர் தன் ஆலய வழிபாடுகளை முடித்துவிட்டாரா?” என்றான். “இல்லை, மூதாதையர் ஆலயத்திற்கும் தென்திசை தேவனின் ஆலயத்திற்கும் மட்டும் சென்றுவிட்டு நேராக அவைக்கூடத்திற்கு வந்துவிட்டார். அரசியும் அவையில் அமர்ந்திருக்கிறார். இளைய பாண்டவர் சற்று முன்னர்தான் உள்ளே சென்றார். தங்கள் தந்தையையும் இளைய அரசரையும் அழைப்பதற்கு சம்பவர் சென்றிருக்கிறார்” என்றார்.

கடிவாளத்தை ஏவலனிடம் அளித்து புரவியின் கழுத்தைத் தட்டி விடைபெற்று இடைநாழியில் ஏறி “பெருந்தந்தை எங்குள்ளார்?” என்று சதானீகன் கேட்டான். அவனுடன் நடந்தபடி “நேற்று இரவு அவர் நகரில் இல்லை. அருகிலிருக்கும் காடுகளில் எங்காவது இரவு தங்கியிருக்கக்கூடும். அவரிடம் நாம் தொடர்பு கொள்வதற்கு வழியேதும் இல்லை. காட்டில் ஒலிக்கும்படி முரசுச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவர் அதை கேட்டிருந்தாரென்றால் அவை நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே வந்துவிடுவார்” என்றார் சுரேசர். “என்ன, புதிய செய்தி ஏதேனும் வந்துள்ளதா?” என்று சதானீகன் கேட்டான். “ஒவ்வொரு நாளும் நாழிகைக்கு ஒருமுறை புதிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன” என்றார் சிற்றமைச்சர்.

சதானீகன் சிரித்து “ஆம், செய்திகள் அனைத்துமே புதியவைதான்” என்றான். “அவ்வாறல்ல, நாம் எண்ணுவது நிகழாதபோதுதான் அது புதிய செய்தி. பெரும்பாலான செய்திகள் நாம் எண்ணியவாறே நிகழ்கின்றன. அரசுசூழ்தலில் மட்டும் அவ்வாறு நிகழ்வதில்லை” என்றார் சுரேசர். “ஏன்?” என்று சதானீகன் கேட்டான். “அரசுசூழ்தலில் முந்துறுவது ஆணவம். நமது ஆணவம் நமது கணிப்புகள் அனைத்தும் சரியே என்று நம்பச்செய்கிறது. ஆம் சரியே என்று செய்திகளும் சொல்ல வேண்டுமென்று நாம் எண்ணுகின்றோம். நமக்கிணையான ஆணவம் கொண்டவர்களால் மறுமுனைகள் இயக்கப்படுகின்றன என்பதை மறந்துவிடுகிறோம்.”

உரக்க நகைத்து “அதாவது கணிகரிடமிருந்து வலுவான அடிகள் வந்து விழுந்திருக்கின்றன இல்லையா?” என்றான் சதானீகன். சுரேசர் நகைத்து “மெய்தான்” என்றார். அவைக்கூடத்தின் சிறிய வாசலில் நிர்மித்ரன் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் தலைவணங்கி “தங்களுக்காகத்தான் காத்திருந்தேன், மூத்தவரே. காலையில் வந்த செய்தி ஒன்று மூத்த தந்தையை நிலைகுலைய வைத்துள்ளது” என்றான். சதானீகன் தலையசைக்க “அஸ்தினபுரிக்கு இளைய யாதவர் தானே நேரில் சென்று மணநிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அங்கு நிகழ்ந்த பெருங்களியாட்டில் அவையமர்ந்திருக்கிறார். உபகௌரவரைத் தழுவி தலைமுகர்ந்திருக்கிறார்” என்றான்.

“முன்னரே மூத்த யாதவர் யாதவக் குடியின் முற்றாதரவு அஸ்தினபுரிக்கே என்று அவையில் அறிவித்துவிட்டார். இளைய யாதவரும் அங்கு சென்றதென்பது யாதவப் பெருநிலமே நமக்கெதிராகத் திரும்பியதுபோலத்தான் என்று பேசிக்கொள்கிறார்கள்” என்றான் நிர்மித்ரன். சதானீகன் “இளைய யாதவர் நம்முடன் இருக்கவேண்டியதில்லை, நாம் அவருடன் இருப்பவர்கள்” என்றான். “ஆம், அது மெய்தான். ஆனால் இத்தருணம் வரை நம்மை ஆதரித்து நின்றிருக்கும் ஷத்ரிய சிறுகுடிமன்னர்களுக்கும் நிஷாதர்களுக்கும் இருந்த நம்பிக்கை என்பது வெல்ல முடியாதவரான இளைய யாதவர் நம்முடன் இருக்கிறார் என்பது. அவரும் அஸ்தினபுரிக்கு ஆதரவானவராக மாறிவிட்டிருந்தால் இந்தப் போர் இப்போதே தோற்றுவிட்டது என்று அவர்கள் எண்ணக்கூடும். அதைத்தான் மூத்த தந்தை அஞ்சுகிறார் என்று எண்ணுகிறேன்” என்றான்.

வாயிற்காவலரிடம் சுரேசர் “மைந்தர்கள் வந்திருக்கிறார்கள் என அறிவியும்” என்றார். அவர் உள்ளே செல்ல சுரேசர் “இளைய யாதவரின் வழிகளை நமது எண்ணங்களால் தொடரக்கூடாதென்பது ஒவ்வொரு முறையும் அறியப்படுகிறது, ஒரு முறையும் நினைவில் நிலைகொள்வதிலை” என்றார். காவலர் வெளியே வந்து உள்ளே செல்லலாம் என்று கைகாட்ட சதானீகனும் நிர்மித்ரனும் அறைக்குள் சென்றனர்.

தாழ்ந்த கூரையுடைய சிறிய அறையில் சாளரத்தருகே போடப்பட்ட பீடத்தில் யுதிஷ்டிரர் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் சிறிய பீடத்தில் முழங்கால்மேல் கைகளை ஊன்றி தலையை அதில் தாங்கி திரௌபதி அமர்ந்திருந்தாள். சற்று அப்பால் ஒரு பீடத்தில் மார்பில் கைகளைக் கட்டியபடி அர்ஜுனன் இருந்தான். நிர்மித்ரனும் சதானீகனும் அறைக்குள் சென்று யுதிஷ்டிரரையும் திரௌபதியையும் அர்ஜுனனையும் வணங்கி சுவர் ஓரமாக சென்று நின்றனர். அவர்களை இடக்கை தூக்கி வாழ்த்தியபின் உரத்த குரலில் யுதிஷ்டிரர் பேச்சை தொடர்ந்தார். “நமது மைந்தர்கள் வெல்வார்கள் என்று நாம் எண்ணியிருந்திருக்கலாகாது. அவர்கள் அரசுசூழ்தல் கற்றவர்கள் அல்ல. அவர்கள் அறிந்ததெல்லாம் நூல்களையே. நூல்களை எவரும் மீண்டும் நடிக்க முடியாது” என்றார்.

அர்ஜுனன் “மூத்தவரே, நமது மைந்தர்கள் ஆற்றிய பணி என்ன என்று ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருந்தோம். நம்மில் எவர் சென்றிருந்தாலும் இத்தனை கூர்மையாகவும் முழுமையாகவும் அப்பணிகளை செய்திருக்க முடியாது. அவர்கள் வடிவில் எழுந்தது நம்முள் நாம் சேர்த்துக்கொண்டிருந்த ஆற்றல்களும் அறங்களும் மட்டுமே. நாம் கொண்டுள்ள சிறுமைகளின் தடையற்றவர்கள் அவர்கள்” என்றான். “ஆம், அது உண்மை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் கணிகரை வெல்வார்களென்று நாம் எண்ணியிருக்கலாகாது.” யுதிஷ்டிரர் “கணிகரை எவரேனும் வெல்ல முடியுமா என்ற ஐயத்தை இப்போது அடைகிறேன். இளைய யாதவரின் வாழ்க்கைகூட கணிகரால்தான் ஆட்டுவிக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது” என்றார்.

“அவரை வென்றுவருவதற்காக அல்ல, ஒவ்வொரு தருணத்திலும் நம்மால் இயற்றப்படக்கூடிய உச்சம் என்பது எழுந்திருக்க வேண்டும் என்பதற்காகவே மைந்தர்கள் சென்றனர். அது நம் மைந்தர்களால் இயன்றதென்றால் அதுவே போதுமானதாகும்” என்றான் அர்ஜுனன். நகுலனும் சகதேவனும் வந்திருப்பதை ஏவலன் அறிவிக்க யுதிஷ்டிரர் சற்று திகைத்து சதானீகனையும் நிர்மித்ரனையும் பார்த்தபின் அதுவரை இருந்த முகஇறுக்கம் தளர நகைத்து அர்ஜுனனிடம் “இளையோனே, இவர்கள் இருவரும் நகுலனும் சகதேவனும் என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். இத்தனை இளமையாக அவர்கள் இருப்பதுகூட என்னுள் உறைக்கவில்லை” என்றார்.

அர்ஜுனன் புன்னகைத்து “தாங்கள் தங்கள் உள்ளூர இளையவராக இருக்கிறீர்கள், மூத்தவரே” என்றான். நகுலனும் சகதேவனும் உள்ளே வந்து தலைவணங்கி தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். நகுலன் சதானீகனிடம் விழிகளால் என்ன என்றான். சதானீகன் புன்னகைத்து அவர்களைப் பற்றிய வேடிக்கை என்று நோக்கால் தெரிவித்தான். யுதிஷ்டிரர் நகுலனிடம் “நீங்கள் இருவரும் இளமையில் இருந்ததுபோலவே இருக்கிறார்கள், ஆடிப்பாவைகள். ஆடிப்பாவைகளில் ஒருவராக முழு வாழ்வையும் கடந்துவருவது எத்தகையதென்பதை என்னால் எண்ணிப்பார்க்கவே இயலவில்லை” என்றார். நகுலன் “பிறிதொன்றை எங்களாலும் எண்ணிப்பார்க்க இயலவில்லை, மூத்தவரே” என்றான். சகதேவன் “எந்த இடத்திலிருந்தும் என்னால் முழுமையாக விலகிச்சென்றுவிட முடியாது. அங்கு என்னுடைய ஒரு பகுதியென இவன் இருப்பான்” என்றான்.

யுதிஷ்டிரர் திரும்பி சதானீகனிடம் “நீ எவ்வாறு உணர்கிறாய், மைந்தா?” என்றார். “நாங்கள் மூவர் ஒரே முகம் கொண்டவர்கள்” என்று சதானீகன் சொன்னான். யுதிஷ்டிரர் நகைத்து “ஆம், அது மெய்தான். இரண்டு மூன்றெனப் பெருகியிருக்கிறது” என்றார். சதானீகன் “நாங்கள் வெவ்வேறு இடங்களில் இப்போது இருக்கிறோம். இங்கிருந்தபடி அவர்களாகவும் இருந்துகொண்டிருக்கிறோம். ஒன்று பலவாகி காலத்தையும் இடத்தையும் பகிர்ந்துகொள்வதென்பது இனிது” என்றான்.

யுதிஷ்டிரர் முகம் மாறுபட்டு சகதேவனை நோக்கி “இளையோனே, செய்திகளை அறிந்திருப்பாய். அஸ்தினபுரிக்கு இளைய யாதவர் சென்றிருக்கிறார்” என்றார். நகுலன் “அவர் செல்லாமல் இருந்தால்தான் அது வியப்பு. சென்று கிருஷ்ணையை நெற்றிதொட்டு அவர் வாழ்த்தியாக வேண்டும். நாம் நமது மகளுக்காக அஸ்தினபுரிக்குச் சென்றிருந்தால்கூட அது பிழையல்ல. நமக்கு மகளென்று பிறிதொருத்தி புவியில் இல்லை” என்றான். திரௌபதி மெல்ல அசைந்த அணியோசையைக் கேட்டு யுதிஷ்டிரர் திரும்பிப் பார்த்தார். அவள் இரு கைகளையும் கோத்து விரல்களை ஒன்றுடன் ஒன்று அழுத்திக்கொண்டிருந்தாள். இமைகள் சரிந்து தலை கவிழ்ந்திருந்தது.

யுதிஷ்டிரர் “ஆம், ஆனால் நமது வஞ்சினம்…” என்று உரைக்க சகதேவன் கையசைத்து “அது அரசியல். அதைக் கடந்துசெல்ல அவரால் இயல்கிறது, நம்மால் இயலவில்லை. இதுவே உண்மை” என்றான். யுதிஷ்டிரர் “ஆனால் எப்படி?” என்றார். “அவ்வினாவே எழுந்திருக்கலாகாது. சென்றிறங்கியிருக்க வேண்டும். துரியோதனனுக்கு அவள்மேல் எத்தனை உரிமையும் பொறுப்பும் உள்ளதோ அது சற்றும் குறையாமல் நமக்கும் உண்டு” என்றான் சகதேவன். “நீ அதை முன்னரே சொல்லியிருக்க வேண்டும்” என்று சினத்துடன் யுதிஷ்டிரர் சொன்னார். “அது சொல்லித் தோன்றக்கூடாது என்று எண்ணினேன்” என்றான் சகதேவன். “சொல்லி அதை செய்கையில் அது அரசியல் என்றாகிவிடுகிறது. அதன் பின் செல்வதும் பேசுவதும் எண்ணிஎடுத்தவை என்றாகும். செய்யப்படும்தோறும் பொய் என மாறும்.”

யுதிஷ்டிரர் தளர்ந்து “மெய்தான்” என்றார். “எனக்கு தோன்றியிருக்கவேண்டும். நூற்றைந்து தந்தையரும் ஆயிரத்தொன்பது உடன்பிறந்தாரும் கொண்ட நமது குடியின் ஒரே மகள் அவள். மங்கலநாண் பூட்டும்போது நான் அங்கிருந்திருக்க வேண்டும். ஏதோ மூதன்னையர் பழிச்சொல்லால்தான் எனக்கு அது தோன்றாமல் போயிற்று” என்றார். தலையை கையால் வருடி “மூதாதையர் முன் சிறுமைகொண்டு இன்று நின்றிருக்கிறேன்” என்றார். சதானீகன் சகதேவன் அதை மறுத்துரைப்பான் என்று எண்ணினான். ஆனால் இறுகிய முகத்துடன் விழிகளை சாளரத்தை நோக்கி திருப்பி அவன் அமர்ந்திருந்தான். அர்ஜுனன் தலைகுனிந்து அசையாமல் இருந்தான்.

யுதிஷ்டிரர் “மகள் என்பது பிறிதொரு பெருங்கொடை. அரண்மனை நிறைய மைந்தரைப் பெற்றாலும் ஒரு மகள் இல்லையேல் அது பெருங்குறைதான். இந்திரப்பிரஸ்தம் அக்குறையை கடந்து போகப்போவதே இல்லை” என்றார். மேலும் மேலும் துயர்கொண்டு இருண்டபடியே சென்றார். “மேலும் அவள் கிருஷ்ணை அல்லவா? நெடுங்காலத்திற்கு முன் துருபதனின் தன்னேற்பு மேடையில் எழுந்து வந்த அவ்வினிய முகத்தின் இளவடிவம். தந்தையென்று நான் பெருமிதம் கொள்ளவேண்டிய கணம் அவளைப் பார்ப்பது மட்டுமே. எவ்வாறு அதை எண்ணாமல் ஒழிந்தேன்?”

சகதேவன் “ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருக்கிறோம், மூத்தவரே. பெருவிழைவு கொண்ட ஒன்றை எய்துவது தெய்வங்களுக்கு முன் இம்மானுடனின் அறைகூவல். நன்றோ தீதோ எதுவானாலும். தெய்வங்கள் கேட்கின்றன, எதுவரை விழைகிறாய்? அதன்பொருட்டு எதை இழப்பாய்? இதை இதை என நாம் சுட்டிக்காட்டுகிறோம். மேலும் மேலும் என்கின்றன தெய்வங்கள். இறுதியில் அவை கோரும் விலை ஒன்று உண்டு. அது குருதி வழிய அறுத்து வைப்பதாக இருக்கலாம். தலையாக இருக்கலாம். எஞ்சும் இறுதிச் சொல்லாக இருக்கலாம். அதன் பின்னரே அவை அளிக்கின்றன” என்றான்.

யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் “ஆம்” என்றபடி கண்மூடி அமர்ந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. மீண்டும் மீண்டும் பெருமூச்சுகள்விட்டபின் திரும்பி திரௌபதியிடம் “உனக்குத் தோன்றவில்லையா?” என்றார். திரௌபதி அவரை நோக்காமல் “அவளுக்கு நான் என் வாழ்த்துக்களை அனுப்பினேன்” என்றாள். யுதிஷ்டிரர் சிறு துணுக்குறலுடன் “வாழ்த்துக்களையா? எவரிடம்?” என்றார். “எனது முதன்மைச் சேடியை அனுப்பினேன். அரசியாகவோ, துருபதன் மகளாகவோ அல்ல. அவளுடைய அன்னையாகக்கூட அல்ல. பெண்ணாக” என்றாள்.

தணிந்த விழிகளுடன் “நான் அவளுக்கு ஒரு பட்டாடையை கொடுத்தனுப்பினேன். அது அவள் எனக்கு அளித்தது என்று சொல்லச் சொன்னேன். ஒவ்வொரு நாளும் நான் அணிவது அவள் அளித்த ஆடையைத்தான். அதன்பொருட்டு அவளை நான் வாழ்த்துகிறேன் என்று சொல்லச் சொன்னேன்” என்றாள். யுதிஷ்டிரர் மேலும் தளர்ந்து கைகள் மடியில் சரிய தலை பீடத்தில் ஒட்ட அசையாது அமர்ந்திருந்தார்.

அர்ஜுனன் “அவர் அங்கு செல்வார் என்று நானும் எண்ணினேன்” என்றான். “உனக்குத் தெரியுமா? அவர் கிளம்பியது தெரியுமா?” என்றார் யுதிஷ்டிரர். “அவர் கிளம்புவாரென்று தெரியும்” என்று அர்ஜுனன் சொன்னான். “எவ்வாறு?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “காதலெனும் மயிரிழையால் கட்டி இழுக்கப்படும் பெருங்களிறு என்று அவரைப்பற்றி சூதர் பாடலொன்று உள்ளது. கொட்டிலில் கட்டி வைக்கமுடியும். மத்தகத்தின் மேலேறி நகர்வலம் வரவும் முடியும்” என்றான் அர்ஜுனன்.