எழுதழல் - 67
ஏழு : துளியிருள் – 21
தேர்நிரை பேரவை முற்றத்தை அடைந்ததும் அங்கு நின்றிருந்த சிற்றமைச்சர் அவர்களை நோக்கி ஓடிவந்து புரவிகள் குளம்பூன்றி நிற்கவேண்டிய இடத்தை கைவீசி காட்டினார். தேர்கள் நின்றதும் கொம்புகள் பிளிறி வரவறிவித்தன. முதல் புரவித்தேரிலிருந்து கைகூப்பியபடி பிரதிவிந்தியன் இறங்க அவன் இடக்கைப்பக்கம் சுருதசேனன் இறங்கி நின்றான். முறைமைமுரசு ஏழுமுறை ஒலியெழுப்பி அடங்க பன்னிரு கொம்புகள் ஒலித்தன. குருதியுறவுகொண்ட அரசர்களுக்குரிய வரிசைகளுடன் எதிரேற்பு நிரை அவர்களை நோக்கி வந்தது. அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியேந்திய கவசவீரன் ஒருவன் வந்து கொடியை பிரதிவிந்தியனின் காலடியில் தாழ்த்தினான். பிரதிவிந்தியன் முகம்மலர்ந்து இளையோனின் தோளை தொட்டான்.
மங்கலத்தாலங்களுடன் அணிச்சேடியர் எதிர்வந்தனர். இசை முழக்கியபடி ஏழு சூதர்நிரை அவர்களைத் தொடர்ந்து வந்தது. நிமித்திகன் தன் கையிலிருந்த வலம்புரிச் சங்கை முழக்கி “அஸ்தினபுரியின் இளவரசியின் மணநிகழ்வு மங்கலம்பொலிய வந்த இளவரசர் பிரதிவிந்தியரை அரசகுடியும் பிதாமகரும் ஆசிரியர்களும் விண்ணிறைந்த மூதாதையரும் குலமாளும் தெய்வங்களும் வரவேற்கின்றனர். அணி பொலிக! மங்கலம் நிறைக! அழியாச் சொல்லென இத்தருணம் நம் கொடிவழிகளின் நினைவில் அமைக!” என்று உரத்த குரலில் கூவி வரவேற்றான். பிரதிவிந்தியன் கைகளைக் கூப்பியபடி அவைமுகப்பை நோக்கி சென்றான்.
அவைக்கூடத்தை ஒட்டிய அரசஅறையிலிருந்து லட்சுமணன் அருமணிகள் பதித்த அணிகள் பூண்டு பட்டத்து இளவரசனுக்குரிய முடிசூடி கன்மதனும் கர்வதனும் காளிகனும் சுபத்ரனும் சுஜயனும் சுப்ரஜனும் துஷ்பராஜயனும் துணைவர கைகூப்பியபடி வெளிவந்து பிரதிவிந்தியனை வரவேற்றான். இட்டுச்சென்ற நிமித்திகனும் அமைச்சரும் இருபுறமும் விலக பிரதிவிந்தியன் கைகளை விரித்தபடி அணுகி லட்சுமணனின் இரு கைகளையும் பற்றி ஆடையும் அணியும் குலையாது மெல்ல தழுவிக்கொண்டான். லட்சுமணனின் பின்னால் நின்ற உபகௌரவர்கள் மகிழ்ச்சிக்குரலெழுப்பினர். “என் இளையோர்” என அவர்களை லட்சுமணன் அறிமுகம் செய்தான். “தேவையே இல்லை. உன் ஆடிப்பாவைகள்” என்றான் பிரதிவிந்தியன்.
அவர்கள் பிரதிவிந்தியனின் கால்களைத் தொட்டு வணங்க அவன் அவர்களின் தோளைத் தொட்டு வாழ்த்தினான். “எழுவர் மட்டுமே இங்குள்ளனர். பிறர் அங்கே அவைக்குள் சென்றுவிட்டார்கள்” என்றான் லட்சுமணன். “ஆம், ஆயிரவரை வாழ்த்தினால் நான் மருத்துவநிலைக்கும் இவன் அடுமனைக்கும் செல்லவேண்டியதுதான்” என்றான் பிரதிவிந்தியன். சர்வதன் “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். லட்சுமணன் தன் கால்தொட்டு வணங்கிய சர்வதனை தோள்சேர அணைத்து “இணைத்தோளன்” என்றான். “நோக்குவோம்” என்றான் சர்வதன். தன்னை வணங்கிய சுருதசேனனையும் யௌதேயனையும் லட்சுமணன் வாழ்த்தினான். அறைக்குள் வலதுமூலையில் கூடி நின்றிருந்த அணிப்பரத்தையர் குரவையிட்டு அத்தருணத்தை தேவர்கள் நோக்கும்படி அழைத்தனர்.
லட்சுமணன் பிரதிவிந்தியனின் கைகளைப் பற்றியபடி உள்ளறைக்குள் கொண்டுசென்று அங்கிருந்த பீடத்தில் அமர்த்தினான். அவனைத் தொடர்ந்து வந்த விருஷசேனனை நோக்கி “மூத்தவரே, இத்தருணம் என் வாழ்நாளில் நான் அடைந்த உச்சம். உறவினர் சூழ அமர்ந்திருப்பதைப்போல பிறிதொரு உவகை இப்புவியிலில்லை என்று தோன்றுகிறது” என்றான். விருஷசேனன் அவன் தோளைத் தட்டியபின் “நீ உன் முதுதந்தையின் வடிவம் என்கிறார்கள். அவர் சுற்றமும் குலமும் மைந்தரும் சூழ அமர்ந்திருப்பதையே வாழ்வின் முதன்மைக் களியாட்டெனக் கொண்டவர்” என்றபடி அங்கிருந்த பெரிய பீடமொன்றில் அமர்ந்தான்.
லட்சுமணன் சர்வதனை நோக்கி “இளைய தந்தை பீமனை ஓவியங்களில் கண்டதுபோலிருக்கிறான். இவன் உடன்பிறந்தான் சுதசோமனும் அவ்வாறே என்றனர். இவர்கள் இங்கேயே இருந்திருக்கலாம்…” என்றான். சர்வதன் பீடத்தில் அமர்ந்தபடி லட்சுமணனிடம் “பேரழகுடன் எழுந்துள்ளீர்கள், மூத்தவரே…” என்றான். “தங்கள் தந்தையின் முழுநிகர் உடல் கொண்டுள்ளீர்கள்.” விருஷசேனன் “மாற்றுருக்கொண்டு வந்து தந்தையர்தான் இங்கே உளமாடி மகிழ்கிறார்களோ என மயங்குகிறேன்” என்றான்.
லட்சுமணன் எழுந்து சர்வதன் அருகே சென்று ஒரு கையால் அவன் தோளை வளைத்தபின் விருஷசேனனிடம் “இரு தோள்களில் எது ஆற்றல்கொண்டது?” என்றான். “இணைத்தோள்கள்… ஆனால் நிகர்நிலையால் நீ ஒருபடி மேல்” என்றான் விருஷசேனன். “ஆனால் கோணலும் ஓர் ஆற்றல். அதை கலையென ஆக்கிக்கொண்டவர் இளைய பாண்டவர்.” யௌதேயன் “நீங்கள் களம் நின்று மற்போரிடுவதை காணவிழைகிறேன்” என்றான். “இன்றே நிகழ்த்திவிடுவோம். இந்த மணக்கூடலுக்கு பின்னர் களியாட்டரங்கு உள்ளது” என்று லட்சுமணன் சொன்னான்.
சர்வதன் “எனக்கிணையான தோள்கள் கொண்ட அனைவரிடமும் ஒருமுறை களம் பொருத வேண்டுமென்றால் மூன்றாண்டுகளுக்குமேல் இங்கு நான் தங்க வேண்டும். ஆயிரம் பேரை வெல்ல வேண்டும்” என்றான். லட்சுமணன் “ஆம், நாங்கள் ஆயிரவரும் ஒரே அச்சில் ஊற்றி எடுக்கப்பட்டவர்கள் என்கிறார்கள்…” என்று சொல்லி தொடையில் அறைந்து உரக்க நகைத்து “ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குறையுடையவர்கள். அத்தனை குறைகளும் இணைகையில் அதுவே நாங்கள் என்றாகி இந்நகர் மக்களுக்கு தோன்றுகிறோம்” என்றான்.
அவன் இளையோர் நகைக்க “நகைப்புக்காக மட்டும் சொல்லவில்லை, பெருந்திரளென கூடுகையில் பிழைகளே ஒருங்கு குவிகின்றன” என்று லட்சுமணன் சொன்னான். விருஷசேனன் “இன்று மாலை களியாட்டரங்கு உண்டென்று எவர் சொன்னது?” என்றான். “நான் விழைகிறேன். விதுரரிடம் அதை கூறலாம் என்று எண்ணுகிறேன்” என்றான். “பொதுவாக மணநிகழ்வுக்கு முந்தைய நாள்தான் களியாட்டரங்கு வழக்கம். மண நிகழ்வன்று உண்டாட்டும் கலையரங்கங்களுமே ஒருக்கப்படும். இம்முறை மணநிகழ்வு விரைந்து நிகழ்வதனால் இவ்வாறு அமைக்கலாம் என்று தோன்றுகிறது” என்றான் சத்யசேனன்.
விதுரர் மூச்சிரைக்க வந்து “வந்துவிட்டீர்களா? அறை நுரைத்த கலம்போல் நிறைந்து வழிகிறதே!” என்றபின் முகம் மலர்ந்து “அவைக்கு எழுக! பேரவை நிறையத்தொடங்கிவிட்டது” என்றார். “ஆம்” என்றபடி லட்சுமணன் எழுந்து பிரதிவிந்தியனை நோக்கி “அவைக்கு எழுக, மூத்தவரே” என்றான். அவர்கள் எழுந்து நின்றதும் அணிச்சேவகர்கள் அவர்களின் உடைகளின் மடிப்புகளையும் நகைகளின் அமைப்புகளையும் விரைந்த கைகளால் சீரமைக்கத் தொடங்கினர். வெளியே நிமித்திகன் கொம்பூதி லட்சுமணனின் அவைநுழைவை அறிவித்தான். தொலைவில் வாழ்த்தொலிகள் எழுந்தன.
லட்சுமணன் தன் தம்பியரை நோக்கிவிட்டு கூப்பிய கைகளுடன் இடைநாழியினூடாக சென்றான். அவனைத் தொடர்ந்து அவன் இளையோரும் படைநிரையினரும் செல்ல முன்னால் அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியும் அணிச்சேடியரும் இசைச்சூதரும் சென்றனர். பிரதிவிந்தியன் இறுதியாக சென்ற கன்மதனிடம் “ஆயிரத்தவரும் இன்று அவை நுழைவார்களல்லவா?” என்றான். “ஆம் மூத்தவரே, வெவ்வேறு குழுக்களாக அவர்கள் அவைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் கன்மதன். “நான் ஆயிரத்தவரையும் ஒன்றாக பார்த்ததே இல்லை” என்றான் பிரதிவிந்தியன்.
“இன்று அவையில் பாதி அவர்களாகத்தான் இருக்கும் போலும்” என்று சுருதசேனன் சொன்னான். சர்வதன் விருஷசேனனிடம் “அவர்கள் எவருக்கேனும் தாங்கள் மற்போர் கற்றுக்கொடுத்ததுண்டா?” என்றான். “இல்லை. அவர்களுக்கு எவரும் எதுவும் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்கள் ஒற்றை உளமென்றான பெருந்திரள். ஒருவருக்கொருவர் நோக்கி தங்களை நிறைத்துக்கொண்டவர்கள். அத்தனைபேர் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தமையால் பிற மானுடரை நோக்க அவர்களுக்கு உளம் அமையவில்லை” என்றான்.
“அவர்களுக்கு கதைப்போர் தெரியும்” என்றான் சித்ரசேனன். “அவர்களுக்கு மற்போரும் வாட்போரும் கற்றுக்கொடுக்க பல்வேறு ஆசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள். துரோணரின் மாணவர்கள் அவர்களுடன் சென்று தங்கி கற்பிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்கள் பிற மானுடரை உண்மையில் அறிவதே இல்லை. கற்றுக்கொண்டவர் அவர்களின் மூத்தவர் மட்டுமே. ஏனென்றால் அவர் பிறக்கும்போது இளையோர் இல்லை. அவர் கற்றுக்கொண்டதை மட்டுமே பிறர் அறிந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான் சத்யசேனன்.
கனகர் வந்து “தாங்கள் கிளம்பலாம், இளவரசே” என்றார். பிரதிவிந்தியன் அவையெழுவதை அறிவிக்கும் கொம்போசை வெளியே எழுந்தது. பிரதிவிந்தியன் முன்னே செல்ல சுருதசேனனும் சர்வதனும் யௌதேயனும் அவனைத் தொடர்ந்து நடந்தனர். இடைநாழிகளில் அவர்கள் நிற்க வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் இணைந்து அலையடிக்கும் நீர்ப்பெருக்கென அவை நோக்கி கொண்டுசென்றது. அதன் பின்னர் அங்கநாட்டு இளவரசர்கள் அவை புகுவதை அறிவிக்கும் கொம்போசை பின்னால் எழுந்தது. விருஷசேனனும் அவன் தம்பியரும் நிரையாக அவை நோக்கி சென்றனர்.
லட்சுமணன் அவை புகுந்தபோது அஸ்தினபுரியின் பேரவைக்கூடம் உரக்க வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றது. பிரதிவிந்தியன் நுழைந்தபோது அதைவிட இருமடங்கு வாழ்த்தொலி அவையிலெழுந்தது. “பேரறத்தான் வாழ்க! குருகுல முதல்வன் வாழ்க! அவை நிறைக்கும் அருள் மைந்தன் வாழ்க!” என்று அஸ்தினபுரியின் மூத்த குடித்தலைவர்கள் கைகளை வீசி களிவெறிகொண்டு வாழ்த்தொலி கூவினர். இருபுறமும் மங்கலச் சூதர்கள் தெய்வம் இறங்கியவர்கள்போல உடல் வியர்த்துவழிய தலை சுழற்றி உடல்கள் துள்ள இசை முழக்கினர்.
பிரதிவிந்தியன் கைகூப்பியபடி சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். விருஷசேனனும் தம்பியரும் அவர்களின் இருக்கைகளில் வந்தமர்ந்தனர். உத்தரபாஞ்சாலத்தின் அரசன் அஸ்வத்தாமனும் சிந்துவின் அரசன் ஜயத்ரதனும் விதர்ப்பத்தை ஆளும் ருக்மியும் வந்து அவையமர்ந்தனர். மத்ரநாட்டு அரசர் சல்யரும் சேதிநாட்டு தமகோஷரும் கொடியும் குடையும் கொண்டு அவை புகுந்தனர். விசாலநாட்டு அரசர் சமுத்ரசேனரும் கௌசிகி நாட்டு மஹௌஜசனும் காசிநாட்டு சுபாகுவும் கோசலத்தின் பிரகத்பலனுடன் அவை வந்து அமர்ந்தனர். பால்ஹிகனாகிய பூரிசிரவஸ் அவை புகுந்தபோது வாழ்த்தொலிகள் மேலும் ஓங்க பிரதிவிந்தியன் திரும்பி சுருதசேனனை நோக்கி “பால்ஹிகநாட்டு இளவசர் பூரிசிரவஸ் தன் மூத்தவரும் அரசருமாகிய சலனுடன் அவைபுகுகிறார்” என்றான்.
உலூகநாட்டு அரசன் பிரஹந்தன், காஷ்மீரநாட்டு லோகிதன், கோசிருங்கத்தின் சிரேணிமான் ஆகியோர் வந்தனர். அவந்தியின் அரசர்களான விந்தனும் அனுவிந்தனும் அவையில் வந்தபோது பின்பக்கம் வாழ்த்தொலிகள் எழுந்தன. சுருதசேனன் “காந்தாரர் சகுனி” என்றான். காந்தார அரசர் சுபலர் கொடியும் குடையுமாக உள்ளே நுழைந்து முதன்மை நிரையில் அமர்ந்தார். பின்னால் வந்த சகுனி அவருக்கு அருகே அமர்ந்தார். “கணிகர் வரவில்லையா?” என்றான் பிரதிவிந்தியன். “அவர் அந்தணர் நிரையில் அமர்வார்” என்றான் சுருதசேனன்.
“அரசர் பலர் வரவில்லை” என்று சுற்றிலும் நோக்கி பிரதிவிந்தியன் சொன்னான். “விரைந்து எழுந்த விழா. இத்தனைபேர் வந்ததே அரிது. இவர்கள் விரைவுப்படகுகளிலும் தேர்களிலும் வந்திருக்கவேண்டும்” என்றான் சுருதசேனன். இரு மாணவர்கள் தோளில் கைவைத்து பீஷ்மர் நடந்து வந்து தலைக்குமேல் கையெடுத்து அவையை வணங்கியபோது வாழ்த்தொலிகள் உரக்க எழுந்தன. அவர் மரவுரியிட்ட இருக்கையில் சென்று அமர்ந்து வலக்காலைத் தூக்கி மடித்து உடலை ஒசித்துக்கொண்டார். விழிகள் இமைசரிய தோள்கள் மெல்ல தளர துயில்கொள்பவரைப்போல அமைதியடைந்தார். இடதுகை மார்பில் விழுந்திருந்த தாடியை மெல்ல நீவிக்கொண்டிருந்தது.
மாணவர்கள் சூழ துரோணர் அவை புகுந்தார். அவருடன் கிருபரும் இருந்தார். திருதராஷ்டிரர் சஞ்சயனின் தோள்பற்றி அவைக்குள் நுழைந்தபோது உரத்த குரலில் வாழ்த்தியபடி குலமூத்தார் எழுந்து நின்றனர். ஓசை நோக்கி முகம் திருப்பி கைகூப்பி வணங்கியபின் அவருக்கான பெரிய பீடத்தில் அமர்ந்து இரு கால்களையும் நீட்டி பெரிய கைகளை கைப்பிடிமேல் வைத்து நீள்மூச்சுவிட்டார். அவர் தலை மெல்ல சுழலத் தொடங்கியது. எதையோ வாயிலிட்டு மெல்பவர்போல தாடை இறுகி அசைந்தது.
பிரதிவிந்தியன் கணிகர் வந்து அவையமர்வதை பார்த்தான். சுருதசேனனை நோக்கியபின் சற்று விழிதிருப்பி மீண்டும் நோக்கியபோது அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. விழிகளால் துழாவி அதன் பின்னரே எவரும் நோக்கவியலாத வளைவு ஒன்றில் தரையிலிடப்பட்ட மெத்தையில் அவர் உடைந்த உடலை ஒடுக்கி படுத்திருப்பதுபோல அமர்ந்திருப்பதை கண்டான். அவருக்கான பீடத்தின்மேல் அவருடைய மரவுரி மேலாடை மட்டும் போடப்பட்டிருந்தது.
அவை முழுமையாக நிரம்பியதும் நிமித்திகன் அறிவிப்பு மேடையிலேறி கையிலிருந்த சிறுகொம்பை முழக்கினான். ஓசையடங்கி அவை அமைதி கொண்டது. வெளியே அவைமுரசுகள் முழங்க நிமித்திகன் “யயாதியின் குடித்தோன்றல், சந்திரகுலத்து முடிமன்னர், குருகுலத்தலைவர், ஹஸ்தியின் தன்னுரு கொண்டவர், மாமன்னர்கள் பிரதீபனின் விசித்திரவீரியனின் கொடிவழியினர், தார்த்தராஷ்டிரர், அஸ்தினபுரியை ஆளும் துரியோதன மாமன்னர் அவை நுழைகிறார்!” என்று அறிவித்தான்.
மங்கல இசைகளும் வாழ்த்தொலிகளும் எழுந்து குவைமாடங்களில் மோதி ஓசையருவியென தலைக்குமேல் கொட்டின. தன் ஆடைகளும் வயிறும் செவிமடல்களும் அவ்வோசையில் அதிர்ந்துகொண்டிருப்பதாக பிரதிவிந்தியன் உணர்ந்தான். முதல்முறையாக அரசவை அவனுக்கு சலிப்பையும் ஒவ்வாமையையும் உருவாக்கியது. எவருக்கு எதிராக இந்த ஓசை? எவரிடம் அறிவிக்கிறார்கள்? தெய்வங்களுக்கா? மூதாதையருக்கா? குடிகளுக்கா? இல்லை காலத்திடம், ஊழிடம். ஒளிந்திருக்கும் நுணல் எழுப்பும் அழைப்புக்குரல் இது.
அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் வந்த பொற்கவசமணிந்த வீரன் அவை நுழைந்து அதை நிலைபொருத்தினான். தொடர்ந்து மங்கலச்சேடியர் நிரை ஐந்து மங்கலங்களேந்திய தாலங்களுடன் வந்து அவையை வணங்கி இரு பிரிவுகளாக பிரிந்தகன்றது. மூச்சுவாங்க உடல் வியர்த்துவழிய இசை முழக்கி வந்த சூதர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து அவையில் முன்னரே நின்ற இசைச்சூதர்களுடன் இணைந்துகொண்டனர். வெப்பமேறும் கலத்து நீர் என அவை மெல்ல தன்னுள் சுழன்றுகொண்டிருந்தது.
கைகூப்பியபடி அரசணிக்கோலத்தில் வந்த துரியோதனன் அரசமேடைமேல் ஏறி வணங்கி நின்றான். ஏழு வைதிகர்கள் கங்கைநீர் கொண்ட பொற்கலங்களுடன் அவனை எதிர்கொண்டு நீர் தெளித்து மலரளித்து வாழ்த்தி இரு கைகளையும் பற்றி கொண்டுசென்று அரியணையில் அமர்த்தினர். மூன்று குலமூதாதையர் கொண்டுவந்த தாலத்திலிருந்து மணிமுடியை எடுத்து மூத்த குலத்தலைவர் ஒருவர் அவன் தலையில் சூட்ட அவையிலிருந்தவர்கள் அரிமலர் வீசி அவனை வாழ்த்தினர். செங்கோலும் உடைவாளும் அவனுக்கு அளிக்கப்பட்டன.
இடப்பக்கம் மங்கல இசை எழ பேரரசி பானுமதி துச்சாதனனின் துணைவி அசலையுடன் அவை நுழைந்தாள். ஏழு மூதன்னையரால் அவள் அரியணைக்கு கொண்டுவரப்பட்டாள். துரியோதனனுக்கு இடப்புறம் அவள் அமர ஏழு மூதன்னையர் தாலங்களில் கொண்டு வந்த மணிமுடியை அவளுக்கு சூட்டினர். அசலை அவளுக்கு வலப்பக்கமாக வாளுடன் நின்றாள். இடப்பக்கத்தில் வெண்பட்டு மூடிய அவையில் அரசியர் நூற்றுவர் வந்து அமரும் வாழ்த்தொலிகள் கேட்டன. பானுமதியிடம் பொற்தாமரை ஒன்றை அளித்தனர்.
மணிமுடி சூடி செங்கோலேந்தி அரசன் தோற்றமளித்ததும் கங்கைநீர் தெளித்து அவனை வாழ்த்தி மங்கலம் உரைத்து வைதிகர் அவைமேடை நீங்கினர். அரசப்பேரவைக்கு வெளியே எழுந்த முரசொலிகள் களிறுகள் என்றும் உடனிணைந்த கூரிய கொம்போசைகள் அவற்றின் வெண்தந்தங்கள் என்றும் பிரதிவிந்தியன் எண்ணினான். வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் அதைச் சூழ்ந்து அலையடிக்கும் இளஞ்சோலை. அவ்வெண்ணங்களின் சலிப்பு அவனை அசைய வைத்தது. அவன் மெல்ல சரிந்து “அரசப்பேரவையில் மணமங்கலம் நிகழும் வழக்கமுண்டா, இளையோனே?” என்றான்.
சுருதசேனன் “இது யாதவபுரியின் சாம்பர் கொண்ட மகட்கோளை அஸ்தினபுரியின் அவை முறைப்படி ஏற்றுக்கொள்ளும் சடங்கு மட்டும்தான், மூத்தவரே. வேதமுறைப்படி நிகழும் மணங்களிலோ ஷத்ரிய மணத்தன்னேற்புகளிலோ மேலும் பல சடங்குகள் உண்டு” என்றான். பிரதிவிந்தியன் “ஆம், ஆண் பெண்ணை கவருவதற்கு உடன்நிற்கும் தெய்வங்கள் வேறு. குடியும் மூத்தவரும் சூழ்ந்து வேதம் ஓதி கைபிடித்தளிக்கையில் நிரந்து நின்று வாழ்த்தும் தெய்வங்கள் வேறு” என்றான். சுருதசேனன் புன்னகைத்து “முந்தைய தெய்வங்கள் தொல்காடுகளில் பிறந்தவை. ஒருகையில் மதுக்குடமும் மறுகையில் காட்டுமலர்களும் கொண்டவை” என்றான். பிரதிவிந்தியன் அவனை திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.
மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அலைகளென வந்து அனைத்து சாளரங்களினூடாகவும் நின்று அவைக்கூடத்தை நிரப்பின. மூன்று நிமித்திகர்கள் உள்ளே வந்து ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு வண்ண ஒளிச் சுழற்சியென தெரிந்து மறைந்த கொம்போசையை எழுப்பி மணநிறைவு அணுகுவதை அறிவித்தனர். தொடர்ந்து மதுராவின் கொடியேந்திய கவசவீரன் உள்ளே வந்து அவைக்குமுன் கொடியைக்காட்டி அதை நிறுத்தினான். பட்டாடைகளும் பொன்னணிகளும் மின்ன அணிச்சேடியரின் நீண்ட நிரை மங்கலத்தாலங்களில் எரிந்த சுடர்கள் மலரிதழ்களென அசைய அவைக்குள் புகுந்து வண்ணத்திரிகளென பிரிந்து அவையின் விளிம்புகளில் பரவி நிறைந்தது. அதைத் தொடர்ந்து ஏழு நிரைகளாக வந்த இசைச்சூதர்கள் மங்கல இசையெழுப்பியபடி அவைக்குள் நுழைந்து முன்னரே நின்றிருந்தவர்களுடன் இணைந்துகொண்டனர்.
பலராமர் வெண்குடைக்குக் கீழே மதுராபுரியின் மணிமுடி சூடி கைகூப்பி நடந்து வந்தார். விரிந்த பெருந்தோள்களில் வெண்பட்டாடை அணிந்திருந்தார். தோள்வளைகளும் கங்கணங்களும் கணையாழிகளும் மின்னிய பெரிய கைகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்ட இரு யானைத் தந்தங்களைப்போல தோன்றின. கழுத்தில் மார்பு மறைய மருப்பில் வழிந்திறங்கும் முகபடாமென சரப்பொளி மாலைகள், ஆரங்கள். இடையில் பொற்கட்டுக் கச்சை. அணிச்செதுக்குகளில் மணிகள் மின்னிய குத்துவாள். வெண்பட்டாடைமேல் அலையலையென இறங்கி நெளிந்த குறங்குச்செறி. பித்தளையாலான கால்குறடுகள்.
அவைக்குள் அவர் நுழைந்ததும் “மதுராபுரியாளும் யாதவ மன்னர் வாழ்க! பலராமர் வாழ்க! யது குலத்தின் மூத்தோர் வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுப்பியபடி அவை எழுந்து நின்றது. அவையிலிருந்து விதுரரும் துச்சாதனனும் சுபாகுவும் கைகூப்பியபடி சென்று அவரை வரவேற்று அவருக்கிடப்பட்ட அரியணையில் கொண்டுசென்று அமரச்செய்தனர். வாழ்த்தொலிகள் பின்னரும் தொடர்ந்துகொண்டிருக்க யாதவக் குடியின் பன்னிரண்டு தலைவர்கள் கைகளைக் கூப்பியபடி அவை புகுந்தனர்.
அக்ரூரர் அவையை வணங்கி விதுரரிடம் சென்று தலைதாழ்த்தி ஏதோ கூற விதுரர் ஒருமுறை பதற்றத்துடன் அவையை பார்த்துவிட்டு அக்ரூரரை தோளில் தட்டி அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். பிரதிவிந்தியன் சுருதசேனனிடம் “யார் வருகிறார்கள்?” என்றான். சுருதசேனன் “அவையில் இன்மையை உணர்த்துபவர் அங்கநாட்டு அரசர்” என்றான். “ஆம், அவரை நான் முன்னரே எதிர்பார்த்தேன்” என்றான் பிரதிவிந்தியன். “அவர் தோளிலிட்டு வளர்த்த மகள் அல்லவா கிருஷ்ணை?” சுருதசேனன் “அவருக்கு உடல்நலமில்லை. அங்கநாட்டிலிருந்து பயணம் செய்யும் நிலையில் இல்லை என்றார்கள்” என்றான்.
புருவம் சுருங்க “அவர் உடலுக்கு என்ன?” என்றான் பிரதிவிந்தியன். “கடந்த பதினான்காண்டுகளாகவே அவர் தன்னிலையில் இல்லை. மது அருந்துவது நாளுக்குநாள் கூடி வருகிறது. இரண்டாண்டுகளாக அரண்மனையைவிட்டு வெளியே செல்லவே இல்லை. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பொற்கதிரோன் பெருவிழாவில் அவையமர்ந்து தோன்றியதற்குப் பின் அங்கநாட்டுக் குடிகளே அவரை பார்த்ததில்லை. அஸ்தினபுரிக்கு அவர் வந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகிறது என்கிறார்கள்” என்று சுருதசேனன் சொன்னான்.
பிரதிவிந்தியன் அவனை அழுத்தமாக நோக்கிவிட்டு “ஒருவேளை அவர்தான் வருகிறாரா?” என்றான். “அவர் வருவதென்றால் எதற்காக இந்தப் பதற்றம்?” என்றான் சுருதசேனன். “ஒருவேளை சூரசேனர் வரக்கூடும். இது அவருடைய பெயர்மைந்தனின் மகன் மங்கலம் கொள்வது அல்லவா?” என்றான் பிரதிவிந்தியன். “அவரும் மதுவனத்திலிருந்து நீண்ட பயணம் மேற்கொள்ளும் நிலையில் இல்லை” என்றான் சுருதசேனன்.
மீண்டும் நிமித்திகன் உள்ளே வந்து கொம்பொலி எழுப்ப அணிப்பரத்தையர் மூவரும் தொடர்ந்து ஏழு மங்கலச்சூதர்களும் உள்ளே வர கிருதவர்மன் கைகூப்பியபடி அவை நுழைந்தான். அஸ்வத்தாமனை திரும்பிப் பார்த்தபின் பிரதிவிந்தியன் “ஆம், அவரையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்” என்றான். “அவர் இங்குதான் இருக்கிறார். இப்போது யாதவக் குடியின் தரப்பாக பெண்ணின் தாய்மாமனாக அவை புகுகிறார்.” சுருதசேனன் “அவர் ஏன் பிந்தினார்? எவருக்காக காத்திருந்தார்?” என்றான். துர்விநீதனும் துச்சகனும் கிருதவர்மனை இரு பக்கமும் நின்று அழைத்துச்சென்று அமரச்செய்தனர்.
“மணமங்கலம் தொடங்கப்போகிறது என்று எண்ணுகிறேன்” என்று சுருதசேனன் சொன்னான். “அவை கொள்ளும் உடல் மாற்றத்தினூடாகவே நிகழவிருப்பது என்னவென்பதை நம் உளம் உணர்ந்துகொண்டிருக்கிறது. நம் உடலிலும் அம்மாற்றம் அறியாது நிகழ்கிறது. அதை சித்தத்தால் விரட்டிச்சென்று தொடுவதென்பது நல்ல விளையாட்டு.” பிரதிவிந்தியன் “இத்தனை உள்விளையாட்டுகளுடன்தான் ஓர் அவை அளிக்கும் நெடுஞ்சலிப்பை கடந்துசெல்ல வேண்டியுள்ளது” என்றான்.
சுருதசேனன் “சடங்குகள் என்பவையே ஒருவகை சலிப்பை அளைந்துகொண்டிருப்பவைதான், மூத்தவரே” என்றான். “ஏன்?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “சலிப்பு கொள்கையில் நமது உள்ளம் அலையற்றதாகிறது, ஆழம் தெளிகிறது. எண்ணி நோக்குகையில் நெடுங்காலம் கழித்து நாம் நினைவுகூரும் அனைத்தும் நாம் மிகச் சலித்திருக்கும் தருணங்களில் நம்முள் புகுந்த நிகழ்வுகளும் காட்சிகளுமேயாகும்” என்றான் சுருதசேனன். பிரதிவிந்தியன் “ஆம், உண்மை” என்றான்.
நிமித்திகர் கைகளை அசைத்து கனகரிடம் ஏதோ கேட்க கனகர் “சற்று பொறுங்கள்” என்று சொன்னபின் வெளியே ஓடியதை பிரதிவிந்தியன் கண்டான். கூர்ந்து நோக்குவதனாலேயே மிக அண்மையிலென அவை நிகழ்ந்தன. “எவரோ வந்திருக்கிறார்கள்” என்று சுருதசேனன் சொன்னான். சௌனகரின் விழிகள் வந்து தொட்டுச்சென்றன. “சௌனகர் உணர்ந்துவிட்டார், யார் வந்திருப்பதென்று” என்றான் பிரதிவிந்தியன். “நானும் உணர்ந்துவிட்டேன், மூத்தவரே” என்றான் சுருதசேனன். திகைப்புடன் திரும்பி “யார்?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். சுருதசேனன் புன்னகைத்து “சற்று பொறுங்கள்” என்றான்.
சில கணங்களுக்குப்பின் தொலைவில் முரசுகள் முழங்கத் தொடங்கின. அதன் தாளத்தை கேட்டதுமே “அவரா?” என்று பிரதிவிந்தியன் கேட்க “ஆம்” என்று சுருதசேனன் புன்னகைத்தான். தாளம் மேலும் எழுந்ததுமே அவை முழுக்க வருபவர் எவர் என்பதை உணர்ந்துகொண்டது. திகைப்பும் ஆழ்ந்த அமைதியும் உருவாகி அவையெங்கும் படர்ந்தது. பிரதிவிந்தியன் “ஆம், அவள் திருமணத்திற்கு அவர் வரமாட்டார் என்று எப்படி எண்ணினேன்!” என்றான். சுருதசேனன் “மாற்றுருவில் மணங்கொள்வது அவரே அல்லவா?” என்றான். பிரதிவிந்தியன் திரும்பி “சாம்பனா?” என்றான். “அவள்” என்றான் சுருதசேனன்.
முரசுகளின் ஒலி வலுத்து கொம்புகளும் வாழ்த்தொலிகளும் இணைந்துகொண்டன. “இளைய யாதவர் வெல்க! துவாரகையின் தலைவர் வெல்க! யதுகுலத்தோன் வாழ்க! ஆழியும் சங்கும் அமைந்த கரத்தோன் பொலிக!” என வாழ்த்தொலிகள் பெருகிச்சூழ்ந்தன. பிரதிவிந்தியன் கைகளைக் கூப்பியபடி எழுந்தான். அவனைத் தொடர்ந்து சுருதசேனனும் எழுந்தான். அவ்வசைவு உறைந்து அமர்ந்திருந்த அவையில் நீர்ப்பரப்பில் கல் என அலைகுலைவை உருவாக்கியது. குடித்தலைவர்களும் வணிகர்களும் அமைச்சர்களும் அந்தணர்களுமென ஆங்காங்கே ஒவ்வொருவராக எழத்தொடங்கினர்.
கூப்பிய கைகளுடன் வாயிலில் இளைய யாதவர் தோன்றியபோது அவை முழுக்க எழுந்து நின்றது. துரியோதனன் அரியணையிலிருந்து எழுந்து கைகளைக் கூப்பியபடி நடந்து சென்று அவரை எதிர்கொண்டு “அஸ்தினபுரியின் அவைக்கு நல்வரவு, யாதவரே. இந்த மணநிகழ்வு தங்களால் முழுமை கொள்கிறது. இத்தருணம் வரை தங்களையே எண்ணிக்கொண்டிருந்தேன் என அறிவீர்கள்” என்றான். இளைய யாதவர் புன்னகைத்து “எனக்கு இனியவள் அவள்” என்றார். “ஆம், உங்களுக்குரியவள்” என்றான் துரியோதனன்.
இளைய யாதவர் அவையை வணங்கியபடி நடந்து உள்ளே வர அவருக்கான பீடமெதுவும் போடப்படவில்லை என்பதை பிரதிவிந்தியன் கண்டான். அமைச்சர்கள் அங்குமிங்கும் முட்டி மோதுவதைக் கண்டு துரியோதனன் சினத்துடன் கைநீட்டி கனகரிடம் ஏதோ சொல்ல விதுரர் பதறி அணுகுவதற்குள் இளைய யாதவர் சென்று அவை மூலையில் அமர்ந்திருந்த கணிகரின் அருகே ஒழிந்துகிடந்த அவருடைய பீடத்தில் அமர்ந்தார். கணிகர் புன்னகையுடன் இளைய யாதவரிடம் ஏதோ சொல்ல முகம் மலர்ந்து விழிகனிந்து குனிந்து அவர் மறுமொழி உரைத்தார்.
இளைய யாதவரை நோக்கி வந்த விதுரரும் கனகரும் தயங்கி பின் குனிந்து ஏதோ சொல்ல அவர் மறுத்து கையசைத்தார். துரியோதனன் பொறுமையிழந்து விதுரரை நோக்கி இளைய யாதவருக்கான பீடத்தைப் பற்றி சொல்வதை பிரதிவிந்தியனால் உதடு அசைவிலிருந்து உய்த்துணர முடிந்தது. விதுரர் அவர் அங்கு அமரட்டும், அதுவே முறை என்பதுபோல கை காட்டினார். பின்னர் நிமித்திகரை நோக்கி அவர் கையசைக்க நிமித்திகர் இரு கைகளையும் வீசி அவை மங்கலம் தொடங்கும்படி ஆணையிட்டார்.
பெண்கள் குரவையிட மங்கல இசை பெருகி அறையை நிரப்பியது. தன் சிறு கொம்பை எடுத்துக்கொண்டு அவை மேடையில் ஏறிய நிமித்திகன் “அவையீரே, சான்றோரே, மூதாதையரே, தெய்வங்களே, இதை அறிக! ஐம்பருக்களே, இந்த சைத்ரமாதம் ஏழாம்தேய்நிலவு துவாரகையின் இளவரசர் யதுகுலத்தோன்றல் சாம்பர் தந்தையரும் சான்றோரும் அமர்ந்துள்ள இந்த அவையில் அஸ்தினபுரியின் குடித்தோன்றல் மாமன்னர் துரியோதனரின் புதல்வி கிருஷ்ணையை கைபற்ற உள்ளார். இந்நாளில் மணநிகழ்வின் தெய்வங்கள் சூழ்க! வசந்தத்தின், இன்மதுவின், நன்மலர்களின் கந்தர்வர்கள் இங்கெழுந்தருளி வாழ்த்துக! உடலிலியும் காதலியும் அருகணைக! மூன்று முதற்தெய்வங்களும் தேவியருடன் நின்று அருள்க!” என்றான்.
“அவிகொள்ளும் தேவர்களும் நீர்கொள்ளும் மூதாதையரும் மகிழ்க! ஐம்பெரும்பருக்களும் மங்கலம் கொள்க! இனி நிகழும் சேர்க்கையில் நம் குலத்துக் கொடிவழிகள் விண்ணிலிருந்து ஊறி மண்ணில் எழுக! ஓம்! அவ்வாறே ஆகுக!” என அவன் உரைத்தபோது அவை கைதூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என வாழ்த்தியது. கொம்போசைகள் எழ வலது பெருவாயிலினூடாக யாதவக் குடியின் இளவரசர்கள் இருபுறமும் தொடர சாம்பன் கைகளைக் கூப்பியபடி அவைக்குள் நுழைந்தான். மறுபக்கம் சேடியர் தொடர கிருஷ்ணை மலர்மாலையணிந்து தலைகுனிந்து சிற்றடி எடுத்துவைத்து அவை மேடைக்கு வந்தாள்.