எழுதழல் - 64
ஏழு : துளியிருள் – 18
சுருதசேனன் கங்கைப்பெருக்கின் எதிர்த்திசையில் எட்டு பாய்களை விரித்து அலைகளில் ஏறியமைந்து சென்றுகொண்டிருந்த அரசப்பெரும்படகின் சற்றே தாழ்ந்த முதன்மை அறையை நோக்கி மரப்படிகளில் இறங்கிச்சென்று விரற்கடை அளவுக்குத் திறந்திருந்த கதவருகே நின்றான். உள்ளே பிரதிவிந்தியனும் சௌனகரும் தௌம்யரும் துருபதனின் அமைச்சர் கருணரும் சொல்லாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தன் வருகையை உணரும்பொருட்டு அவன் சற்று தயங்கினான்.
நால்வர் உளவிசையுடன் உரையாடும் ஓசையெதுவும் அறைக்குள்ளிருந்து எழவில்லை. தௌம்யர் தான் உரைக்கும் எதையும் நெடுநாள் உசாவிய நூலின் இறுதியை குறைந்த சொற்களில் அருகமர்ந்த மாணவனுக்கு வகுத்துரைக்கும் குரல் கொண்டிருந்தார். சௌனகர் அவையமர்ந்த அரசரின் செவியருகே நுண்சொல்லுரைக்கும் அளவுக்கே குரல் எழுப்புவார். கருணர் தன்னிடம் பேசும் பிறர் சொல்நிறுத்தி செவிகூர்ந்தாலொழிய கேட்காத அளவுக்கு குரல் தாழ்த்தி பேசுவதை பயின்றிருந்தார். பிரதிவிந்தியன் கற்றவர் பேசும் அவையில் தன் குரல் விஞ்சி எழலாகாது என்று நெறி கொண்டவன். எனவே அறைக்குள்ளிருந்து ஏதோ மந்தணச் சடங்கொன்றின் நுண்சொற்கள் எழுவதாகத் தோன்றியது.
அவன் படியிறங்கி வந்ததை அவர்கள் கேட்கவுமில்லை. போர்க்கலையும் படைக்கலமும் பயின்றவர்களுக்குரிய செவிநுண்மையோ விழிக்கூர்மையோ உடலுணர்வோ அவர்களிடம் இல்லை. அவன் மும்முறை கதவை தட்டினான். அதன் பின்னரே பிரதிவிந்தியன் அவ்வோசையைக் கேட்டு “யார்?” என்றான். “நான்தான், மூத்தவரே” என்று சுருதசேனன் சொன்னான். “வருக!” என்று பிரதிவிந்தியன் சொன்னான். சுருதசேனன் உள்ளே சென்றபோது பிரதிவிந்தியன் அவனை திரும்பிப்பார்க்காமல் “…ஆனால் நெறிகளின்படி இறந்த ஒருவனின் உடைமைகள் அவன் தந்தையருக்கே திரும்ப சென்றுசேர்கின்றன. அவருடைய விருப்பப்படிதான் அவர் அதை பிறருக்கு அளிக்கமுடியும். இறந்தவனின் துணைவி அவன் தந்தையின் மகளென்ற இடத்தில் இருப்பதால் அவ்வுரிமை மட்டுமே கோரமுடியும். இறந்தவனின் முழு உடைமையையும் அவன் மைந்தரோ மனையாட்டியோ கோருவதற்கு நூல்கள் இடமளிக்கவில்லை” என்றான்.
“ஆம், தொல்நெறிகளின்படி தன் குலத்துக்கு வந்த பெண்ணை பேணுவது அக்குலத்துக்கு கூட்டாக உள்ள பொறுப்பு” என்றார் கருணர். “பாஞ்சாலத்தின் குலநெறிகளின்படி உடைமைகள் என்பவை ஒருவன் உயிரோடிருக்கும்வரை விண்ணாலும் மண்ணாலும் அவனுக்கு அளிக்கப்படுபவை மட்டுமே. அவன் பிறப்பதற்கு முன்பு அவை ஐம்பருக்களுக்கும் அவற்றைக் கையாளும் குலத்தவருக்கும் உரியவை. அவன் இறந்தபிறகு அவை மீண்டும் அங்கே சென்று சேர்கின்றன” என்றார். பிரதிவிந்தியன் சுருதசேனனை திரும்பிப்பார்த்து “என்ன சொல்ல வந்தாய்?” என்றான். “நாம் அஸ்தினபுரியை நெருங்கிவிட்டோம். முதற்காவல் மாடம் தொலைவில் தெரிகிறது” என்று சுருதசேனன் சொன்னான்.
“நன்று” என்றபின் பிரதிவிந்தியன் திரும்பி “ஆனால் அக்குடியோ அல்லது இறந்தவனின் தந்தையரோ அப்பெண்ணை துறந்துவிட்டால் என்ன செய்வது? அதுவே இங்கு உசாவப்படுகிறது” என்றான். சௌனகர் “பொருட்கள் அனைத்தும் மண்ணுக்குரியவை என்பதுபோல குடிகள் அனைவரும் அரசருக்கு உறவினர் என்று ஒரு சொல் உண்டு. குடியாலோ குலத்தாலோ உற்றாராலோ கைவிடப்படுபவர்கள் அனைவருக்கும் அரசரிடம் வந்து அடைக்கலம் கொள்ள உரிமையளிக்கின்றன நூல்கள்” என்றார். பிரதிவிந்தியன் “அதைத்தான் நான் கேட்டேன். அவ்வாறு ஒரு பெண் தன் குலத்தாலும் மூத்தாராலும் உறவினராலும் கைவிடப்பட்டு வந்துநின்றால் அரசன் அந்தப் பெண்ணுக்கு அளிக்கவேண்டிய நீதி என்ன? எந்த உடைமைப்பொருளை அவன் எடுத்து அவளுக்கு அளிக்கவேண்டும்?” என்றான்.
சௌனகர் “அரசனின் கருவூலத்திலிருந்து அளிக்கலாமே?” என்றார். கருணர் “குடிகளுக்கு ஒருபோதும் அரசன் கொடையளிக்கலாகாது. அரசனுக்கே குடிகள் நிகுதியளிக்கவேண்டும். குடிகளுக்கு அரசன் கொடுக்கத் தொடங்கினால் ஒவ்வொரு குடியும் அரசனிடமிருந்து செல்வத்தை எதிர்பார்க்கும். அதன்பின் அவர்களால் அளிக்கவியலாது. அவன் கருவூலம் ஒருபோதும் நிறையாது” என்றார். “குடிகளின் செல்வம் குடிகளுக்குள்ளேயே புழங்க வேண்டும். பிறிதொருவரின் உடைமையை எடுத்து அப்பெண்ணுக்கு அளிக்கவும் அரசனுக்கு உரிமையில்லை. அவள் குடியிலிருந்தே அச்செல்வம் அளிக்கப்பட வேண்டும். மூத்தாரிடமோ உற்றாரிடமோ குலத்தவரிடமோ அவளுக்குத் தேவையானதை அளிக்க அரசன் ஆணையிடலாம்.”
சுருதசேனன் “இன்னும் சற்று நேரத்தில் நாம் அஸ்தினபுரியை அணுகிவிடுவோம்” என்றான். “ஆம், அதை நீ முன்னரே சொல்லிவிட்டாய். அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று பிரதிவிந்தியன் எரிச்சலுடன் கேட்டான். சௌனகர் “அரசமுறைப்படி நாங்கள் அஸ்தினபுரிக்கு வந்துகொண்டிருப்பதை முன்னரே அறிவித்துவிட்டோம். அவ்வாறே அங்கு எங்களுக்கு வரவேற்பும் இருக்கும். நாங்கள் உரைக்கவேண்டியவற்றை முன்னரே வகுத்துவிட்டோம். இனி செய்வதற்கென்ன?” என்றார். கருணர் புன்னகைத்து “வாழ்வில் முதல் முறையாக அரசுசூழ்தல் பொறுப்பொன்றை அடைந்திருக்கிறார் இளையோர். அந்த உள எழுச்சி இல்லாமல் இருக்காது” என்றார்.
பிரதிவிந்தியன் அவரிடம் திரும்பி “நான் கேட்ட வினா இதுவே. அரசன் தன் கருவூலப்பொருளை பிறருக்கு அளிக்கும் உரிமைகொண்டவன் அல்ல. ஏனென்றால் அது அவன் குடிகளின் செல்வம். அப்பொருளை அவன் தேவர்களுக்கு அளிக்கலாம். நாடு நலம் சூழும்பொருட்டு வேள்விசெய்யும் அந்தணருக்கு கொடையளிக்கலாம். முனிவருக்கு காணிக்கையாகவும் புலவருக்கு பரிசிலாகவும் அளிக்கலாம். அவையனைத்தும் அருளென்றும் மழையென்றும் மெய்மையென்றும் கல்வி என்றும் அந்நாட்டுக் குடிகளுக்கு திரும்பிவருகின்றன. தன் ஆணவத்தின் பொருட்டோ விழைவின் பொருட்டோ அவன் செல்வத்தை செலவிடலாகாது” என்றான்.
“அரசன் குடிகளின் பொருளை கவரலாகாது. தன் குடிகள் ஒருவரிடம் இன்னொருவருக்கு பொருள் அளிக்கும்படி அவன் ஆணையிட்டால் அது ஒருவகை கவர்தலே ஆகும்” என்றார் கருணர். “அப்பெண்ணை கைவிட்ட குடியும் உறவினரும் அவளுக்கு தாங்கள் உடைமைகளை அளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டால் அரசன் தன் தண்டத்தால் அவ்வாணையை நிறைவேற்றலாமா கூடாதா? நாம் நெறியுசாவத் தொடங்கியதே இந்த வினாவில்தான்” என்றான் பிரதிவிந்தியன். கருணர் “அரசன் அவர்களிடம் கோரலாம். அறமுரைக்க அந்தணரிடம் கூறலாம்” என்றார். “நாம் பேசுவது அரசனின் கோல் ஆற்றவேண்டியதென்ன என்று” என்றான் பிரதிவிந்தியன்.
சௌனகர் “ஒவ்வொரு நெறியையும் இவ்வாறு ஆணிவேர் வரை சென்று உசாவினால் விடையிலாத வினாக்களே எழும். மைந்தனை தந்தை தண்டிக்கலாமா என்ற எளிய வினாவில் தொடங்கி மூன்று பகலும் இரவும் நாங்கள் நெறியுசாவிய நிகழ்வொன்று நினைவிலெழுகிறது. நெறியென்பது எப்படியோ ஒருவரின் உளச்சான்றை பிறர் அனைவரும் ஏற்றுக்கொள்வதன் வழியாகவே நடைமுறைக்கு வரமுடியும். அதில் ஐயம் வருமென்றால் ஒருபோதும் பேசித் தீராது. ஏனெனில் ஒவ்வொரு தனி மனிதரும் தங்களுக்கென பிறப்பால் இருப்பையும் குருதியால் உரிமைகளையும் தெய்வங்களால் ஊழையும் கொண்டுள்ளார்கள். ஒருவருக்கு நெறி என்பது பிறருக்கு அவ்வாறு ஆகவேண்டுமென்பதில்லை. நெறிகள் அனைத்தும் மானுட உருவாக்கங்களே. ஆகவே காலமும் இடமும் கொண்டவை” என்று தௌம்யர் சொன்னார்.
அவர் தொடர்ந்தார் “அவை மானுடரால் உருவாக்கப்பட்டு தெய்வங்களுக்கு முன் ஆணையிடப்பட்டு முன்னோரால் மொழியாக்கப்பட்டு நாம் பெற்றுக்கொண்டவை. உங்கள் இடரென்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு நெறியையும் இத்தருணத்திலிருந்து தொடங்கி மேலே ஆய்ந்து செல்கிறீர்கள். நெறியென இங்குள்ள அனைத்துமே நம் முன்னோர்கள் வகுத்தவை. அறிய முடியாத தொல்காலத்திலிருந்து வந்து நம்மை அடைந்தவை. ஆகவே நெறியுசாவுவதற்கு வழிமுறை ஒன்றே. முன்னர் இங்கு என்ன நிகழ்ந்தது? அதற்கு என்ன செய்யப்பட்டது? அவ்வினா அளிக்கும் விடை மட்டுமே நெறியெனப்படும்.”
பிரதிவிந்தியன் அவரை மென்மையாக கையசைத்து மறுத்து “தொன்மையான நெறிகளை அவ்வண்ணமே மீண்டும் ஆணையிடுவதிலோ கடைபிடிப்பதிலோ தடையில்லை, அந்தணரே. ஆனால் ஒவ்வொருமுறையும் அரசனின் அவை வரைக்கும் வரும் அத்தனை வழக்குகளும் அந்தத் தொல்நெறிப்படி தீர்த்துக்கொள்ள முடியாத புதிய சிக்கலொன்றையே கொண்டிருக்கும். தொல்நெறிகளின்படி முடிவெடுக்கப்படுவன அனைத்தும் கீழ்நிலையிலேயே இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். மானுட வாழ்க்கை ஒவ்வொரு கணமும் விரிந்துகொண்டிருக்கிறது. புதிய தருணங்கள், புதிய உணர்வுகள், முன்பிலாத எண்ணங்கள்… அவை புதிய நெறிகளை தேடுகின்றன” என்றான்.
தௌம்யர் “புதியநெறி என ஒன்றிருக்கமுடியாது. முன்பிருந்த நெறி வளர்ந்துவரமுடியுமே ஒழிய புதிய நெறியென ஒன்றெழுமென்றால் அந்நெறி செல்லுபடியாகும் புதிய உலகொன்றும் அமைந்தாகவேண்டும்” என்றார். சௌனகர் “ஆம், ஒவ்வொரு நெறியும் தனக்கான உலகை படைத்தாகவேண்டும்” என்றார். பிரதிவிந்தியன் அவர்களை மாறி மாறி பார்த்தபின் “அப்படியென்றால் முற்றிலும் புதிய பெருநெறியொன்றை வகுப்பவன் முன்னர் இருக்கும் உலகத்தை அழித்து பிறிதொன்றை ஆக்க வேண்டுமா?” என்றான். சௌனகர் “ஆம், அவ்வாறு செய்தாக வேண்டும்” என்றார்.
சுருதசேனன் “மூத்தவர்களே, நான் சொல்ல வந்ததை சொல்ல சற்று பொழுதிடை எனக்கு அளிக்கவேண்டும்” என்றான். பிரதிவிந்தியன் சினத்துடன் “மூடா… நாங்கள் பேசிக்கொண்டிருப்பது எத்தனை முதன்மையானது என்பதை உணராத அளவுக்கா உனக்கு அறிவில்லை?” என்றான். “ஆம், அது முதன்மையானதே. ஆனால் இங்கிருந்து மீண்டுசென்று இந்திரப்பிரஸ்தத்திலோ உபப்பிலாவ்யத்திலோ அமர்ந்துகூட அதை பேசிக்கொள்ள முடியும். இன்னும் ஒரு நாழிகைக்குள் நாம் அஸ்தினபுரியின் துறைமேடையை அடைவோம்” என்றான்.
“அதை பலமுறை சொல்லிவிட்டாய்” என்று சொல்லி பிரதிவிந்தியன் திரும்பி சௌனகரிடம் “ஒரு நெறி எவ்வாறு மானுடரால் ஏற்கப்படுகிறது?” என்றான். சௌனகர் “அவர்கள் அந்த நெறிக்குள் பிறந்து வளர்ந்திருக்கவேண்டும். மொழியை அறிகையில் அதன் உள்ளடக்கமாகவே நெறியையும் அறிந்திருக்கவேண்டும். அதுவே உலகென்று அவர்கள் உளம் சமைத்துக்கொண்டிருக்கவேண்டும். உளம் அமைந்த பிறகு அவர்களுக்கு கற்பிக்கப்படும் எந்நெறியையும் ஆழம் ஏற்றுக்கொள்வதில்லை. இளவரசே, நெறிகளுக்கு பணிதல் வேறு, நெறியிலாதல் வேறு. பணியப்படும் நெறி எவரும் அறியாமல் மீறப்படும் என்பதில் ஐயமில்லை. ஆகும் நெறியே என்றும் திகழ்வது” என்றார்.
“அப்படியானால் அரசனின் கோல் எதற்கு?” என்றார் கருணர். “அனைவரும் நெறியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. மானுட இயல்பில் நெறியை மீறும் ஒரு பகுதி என்றுமுண்டு. அதுவே எல்லைகளைக் கடந்து மெய்மையையும் தேடுகிறது. எந்நெறியையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் மிகச் சிலரே. ஆனால் நெறியை ஏற்றுக்கொண்டவர்களை அவர்கள் துன்புறுத்துவதோ வென்றடக்குவதோ கூடாது. அரசனின் கோல் நெறிக்கு காப்பு, நெறி சமைப்பதல்ல” என்று சௌனகர் சொன்னார். “அரசன் என்பவன் யார்? நெறியை ஏற்றுக்கொண்டவர்கள் அந்நெறியை நிலைநாட்டும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட மானுடப் படைக்கலம் மட்டும்தானே?” தௌம்யர் “ஆம், அதை தெய்வங்களின் கையில் கொடுத்து மறுக்கமுடியாததாக ஆக்குகிறார்கள்” என்றார்.
சுருதசேனன் “நான் என் செய்தியை சொல்லவில்லை” என்றான். பிரதிவிந்தியன் சினத்துடன் எழுந்து “சரி, சொல்! விரைந்து சொல்லிவிட்டு வெளியேறு” என்றான். “மூத்தவரே, நேற்று அஸ்தினபுரியின் துறைமேடையில் மூத்த யாதவராகிய பலராமர் வந்து இறங்கியிருக்கிறார்” என்றான் சுருதசேனன். “பலராமரா?” என்று கேட்டபடி சௌனகர் எழுந்தார். “ஆம், அதற்கு முந்தைய நாள் நமது இளையோன் சர்வதன் இளைய யாதவரின் மைந்தர் சாம்பரை அழைத்துக்கொண்டு விரைவுப்படகில் வந்து அஸ்தினபுரியின் இளவரசி கிருஷ்ணையை கவர்ந்துசெல்ல முயன்றிருக்கிறான். அங்க நாட்டரசர் கர்ணரின் மைந்தர் விருஷசேனரும் தம்பியரும் சேர்ந்து அவர்களை வென்று சிறைபிடித்தனர். சிறை மீட்டுச் செல்லும்பொருட்டு மூத்த யாதவர் அஸ்தினபுரிக்கு வந்தார்” என்றான்.
சௌனகர் ஆர்வத்துடன் “விந்தை! அப்படியென்றால் அஸ்தினபுரிக்கும் யாதவர்களுக்குமான படைக்கூட்டு முறிந்துவிட்டதா?” என்றார். “முறிந்திருக்கும். ஆனால் தூது வந்த பலராமரின் காலில் துரியோதனர் பணிந்து வணங்கி தன் மகளை அவர் மைந்தனுக்கு அளிக்க ஒப்புக்கொண்டார். ஒரு சொல் கோரினால் தன் முடியையும் குடியையும் கொடிவழிகளையும்கூட ஆசிரியக்கொடையாக அளிப்பதாகக் கூறினார் என்கிறார்கள்.” தௌம்யர் “ஆம், அவர் அப்படித்தான் கூறமுடியும். அவர் திருதராஷ்டிரரின் மைந்தர்” என்றார். பிரதிவிந்தியன் அவரை திரும்பி நோக்கிவிட்டு “இப்போது அங்கு என்ன நிகழ்கிறது?” என்றான்.
“இன்றோ நாளையோ அஸ்தினபுரியில் மணநிகழ்வு கூடுகிறது. கிருஷ்ணையை முறைப்படி சாம்பருக்கு மணம்புரிந்து கொடுக்கப்போகிறார்கள். நாள் குறிப்பதைப் பற்றிய பேச்சுத்தான் இன்று பகல் முழுக்க அஸ்தினபுரியில் நிகழ்ந்திருக்கிறது” என்றான் சுருதசேனன். “விதுரர் அரசவையில் எழுந்து முறைப்படி அவள் இந்திரப்பிரஸ்தத்தின் யுதிஷ்டிரருக்கும் திரௌபதிக்கும் மகள், பாண்டவர் ஐவருக்கும் அவள்மேல் தந்தையுரிமை உண்டு, அவர்கள் வந்துநின்று கைபற்றி கொடுக்காமல் குடிமுறைப்படி திருமணம் நிறைவுறாது என்றார். அவர்கள் அஸ்தினபுரிக்குள் நுழையமாட்டோம் என்று வஞ்சினம் உரைத்துள்ளார்கள் என்று சகுனி சொன்னார்.”
“ஆம், அவர்கள் அஸ்தினபுரிக்குள் நுழையவேண்டுமென்றால் இந்திரப்பிரஸ்தம் திருப்பி அளிக்கப்படவேண்டும், துரியோதனர் தன் சொல்லை கடைபிடிக்கவேண்டும்” என்றார் சௌனகர். சுருதசேனன் “அந்தப் பேச்சு இரவு வரை நீடித்தது. இன்று காலையும் தொடர்ந்தது. அப்போதுதான் நாம் வந்துகொண்டிருக்கும் செய்தி அஸ்தினபுரியின் அவைக்குச் சென்றது. அதை விதுரர் அவையில் சொன்னதுமே கணிகர் பிறகென்ன இந்திரப்பிரஸ்தத்தின் தலைமை அமைச்சரும் பாண்டவர்களின் வைதிகரும் பட்டத்து இளவரசரும் இங்கு வருகிறார்கள். அவர்கள் நின்று நடத்தட்டும் இந்தத் திருமணத்தை. பிரதிவிந்தியர் வருவது யுதிஷ்டிரர் வருவதற்கு நிகர்தான் என்றார்.”
பிரதிவிந்தியன் “அதெப்படி?” என்று சொல்ல சுருதசேனன் “விதுரர் அவர்கள் வரமறுத்தால் மட்டுமே அதற்கு நெறியுள்ளது என்றார். கணிகர் இன்னமும் அவர்கள் கானேகுதலிலிருந்து மீளவில்லை என்பதே நூல்முறை. இந்திரப்பிரஸ்தத்திலோ அல்லது தங்களுக்கு முடியுரிமை உள்ள பிற நிலத்திலோ அவர்கள் கோல்கொண்டு அமைந்தாலொழிய நாம் அவர்களை அரசராகக் கருதவேண்டியதில்லை, அரசு துறந்து காட்டிலிருக்கையில் மைந்தர்களை மணச்சடங்குக்கு அனுப்பும் முறைமை உள்ளது என்றார்” என்றான்.
“ஆனால் அவர்கள் உபப்பிலாவ்யத்தில் முடிசூட்டிக்கொண்டுவிட்டார்களே?” என்று கருணர் சொன்னார். “அதை அங்கு எவரும் சொல்லவில்லையா?” சுருதசேனன் “விதுரர் அனைத்து வழிகளிலும் சொல்லிப் பார்ப்பவர். ஆனால் கணிகர் மிக எளிதாக அதை கைவீசி விலக்கிவிட்டார். உபப்பிலாவ்யத்தில் மூத்த தந்தை முடிசூட்டிக்கொண்டதை அரசுஅமர்தலென்று ஏற்கவேண்டியதில்லை, அது ஒரு நகர்கோள் மட்டுமே என்றார். அவர் முடிசூட்டிக்கொண்டபோது அவை அமர்ந்து அரிமலரிட்டு வாழ்த்திய ஷத்ரியர்கள் எவரெவர், அஸ்தினபுரியிலிருந்து அரசமுறைப்படி எவர் சென்றனர் என்று அவர் கேட்டார். நாம் இங்கிருந்து செல்லாதபோது அது முடிசூட்டல் என்று ஆகுமா என்றார். நம்மைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் காட்டிலேயே இருக்கிறார்கள், ஆகவே பிரதிவிந்தியர் வருகையே போதுமானது என்றார் கணிகர். அதை அவை ஏற்றுக்கொண்டது” என்றான்.
பிரதிவிந்தியன் சலிப்புடன் “என்ன செய்வது? நாமே அவர்கள் சந்தித்த இக்கட்டு ஒன்றிலிருந்து வலிந்து சென்று அவர்களை மீட்கிறோம் என்று தோன்றுகிறது” என்றான். கருணர் “இக்கணமே நாம் திரும்பிச்செல்ல வேண்டுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நாம் வந்தது நம் இறுதி எச்சரிக்கைச் செய்தியை அரசருக்குச் சொல்லி அவர் மறுப்பாரென்றால் அதை போர் அறைகூவலாக மாற்றி அஸ்தினபுரியின் பேரவையில் அறிவிக்கும்பொருட்டு. இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரிக்கு இறுதிச்சொல் அளித்துள்ளது, போரென அது எழவும் கூடுமென்று பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவரும் அறியவேண்டுமென்பதற்காகவே பேரமைச்சரும் அந்தணரும் இளவரசருமாக இந்த தூதுக்குழு அமைக்கப்பட்டது” என்றார்.
“ஆனால் நாம் சென்று இறங்குகையில் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து இளவரசிக்கு சீர்வரிசையுடன் வந்த மணமங்கலக் குழு என்றே கருதப்படுவோம். நமக்களிக்கும் வரவேற்பும் நகருலாவும் அவ்வாறே காட்டப்படும்” என்றார் கருணர். சௌனகர் “ஆம், கருணர் கூறுவதும் சரியென்றே தோன்றுகிறது. நம்மை இந்தத் திருமணத்தில் பங்கேற்பதற்காக அரசர் அனுப்பவில்லை. அங்கு சென்று இறங்கினால் அத்திருமணத்தை நாம் தவிர்க்க முடியாது” என்றார். தௌம்யர் “நானும் அவ்வாறே எண்ணுகிறேன். நாம் திரும்பிச் செல்வதே முறை. மாமன்னரின் ஆணை நமக்கில்லை. நாளை அவர் எந்தப் பொறுப்பில் இதை செய்தீர்கள் என்று கேட்டால் மறுமொழியில்லை நம்மிடம்” என்றார்.
பிரதிவிந்தியன் சுருதசேனனை நோக்கி திரும்ப சுருதசேனன் “என் சொற்களை கேட்கிறீர்களா, மூத்தவரே?” என்றான். “மூடா, உன்னிடம் கேட்காமல் நான் எப்போதாவது முடிவெடுத்திருக்கிறேனா? அறிவிலிபோலத்தான் ஒவ்வொரு முறையும் பேசுகிறாய்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “மூத்தவரே, இத்தருணத்தில் நம் தங்கையின் திருமணத்தை நம் தந்தையின் உருவாக நின்று நிகழ்த்திவைப்பது உங்கள் பொறுப்பு. எவ்வகையில் நிகழ்ந்தாலும் அவள் விரும்பிய வண்ணம் ஓர் ஆண்மகனை கைபிடிக்கிறாள். அது நமக்கு உவப்பூட்டுவதே” என்றான் சுருதசேனன்.
“திருமணங்களை அரசுசூழ்தலின் காய்நகர்வுகளென்று எண்ண ஷத்ரியர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால் மங்கை தன் கொழுநரைக் கைப்பிடிக்கும் அத்தருணத்தில் சூழ்ந்து நின்றிருக்கும் கந்தர்வர்களுக்கோ தேவர்களுக்கோ அவ்வரசியல் சற்றும் தெரியாது. இங்கிருந்து நீங்கள் திரும்பிச்செல்வதென்பது இத்திருமணத்தை நம் குடி புறக்கணித்துச் செல்வது. கிருஷ்ணை நம் குடியால் தவிர்க்கப்படும் பிழையென்ன செய்தாள்? நமக்கும் அவளுக்குமான உறவென்பது இந்த மண்ணாலோ இதை ஆளும் செல்வத்தாலோ ஆனதல்ல, குருதியால் ஆனது. நூறாயிரம்முறை வாளால் வெட்டினாலும் நதியை துண்டுகளாக்க முடியாது என்பார்கள்” என்று சுருதசேனன் சொன்னான்.
“ஆம், நன்று சொன்னாய்! நான் எண்ணியதும் அதுவேதான். நீ பிறிதொன்று சொல்லமாட்டாய் என்று எனக்குத் தெரியும்” என்றபின் பிரதிவிந்தியன் சௌனகரிடம் “எந்தை சிறிய தந்தை சகதேவரின் சொல்லுக்கு அப்பால் ஒரு தருணத்திலும் எண்ணியவரல்ல. நானும் அவ்வாறே. இவன் கூறாத ஒரு முடிவை நான் எடுப்பதில்லை. இவன் கூறியவற்றுக்கு அப்பால் செல்வதுமில்லை” என்றான். சுருதசேனனிடம் “நமது படகு மணமங்கல அணிகொள்ளட்டும். படகை சற்று முன்னரே நிறுத்தி கரையோரத்துச் சிற்றூர்களிலிருந்து மலர்மாலைகளையும் தோரணங்களையும் வாங்கிக்கொள்வோம். கரையிலிருந்து இசைச்சூதர்களின் ஒரு குழு வரட்டும். நம்மிடம் இருக்கும் செல்வம் அரசகுடியின் சீர்வரிசையாக போதுமானதல்ல, இதை வெறும் கையுறையாகவே கொண்டுவந்தோம். ஆயினும் இதையே மூத்தார் பரிசிலாக அவளுக்கு அளிப்போம்” என்றான்.
இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடி எழுந்து படபடக்க மலர்மாலைகளாலும் மாந்தளிர்த் தோரணங்களாலும் அணிசெய்யப்பட்ட அரசப்பெரும்படகு மெல்ல அலைகளிலெழுந்து அஸ்தினபுரியின் துறைமேடையை அணுகியது. அதன் அகல்முகப்பில் நின்றிருந்த இசைச்சூதர்கள் கொம்புகளையும் முழவுகளையும் சங்குகளையும் மணிகளையும் முழக்கி மங்கலஇசை எழுப்பினர். படகின் கூர்முனை வந்து துறைத்தட்டில் தொட்டு நின்றது. வடங்கள் எழுந்து துறைமேடைமேல் விழுந்தன. அவற்றைப் பற்றி தறிகளில் இழுத்துக்கட்டிய குகர்கள் ஆணைகளை உரக்கக் கூவினர். படகில் நின்றிருந்த வீரர்கள் “மணமங்கலம் நிறைவு கொள்க! மைந்தர் பொலிக! கொடிவழிகள் நீடுழி வாழ்க!” என்று வாழ்த்துக்குரல் எழுப்பினர்.
சூதர்கள் இசைமுழக்க பிரதிவிந்தியன் அரச அணிக்கோலம் பூண்டு கையில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் பொறிக்கப்பட்ட கோல் ஏந்தி படகின் முகப்பில் தோன்றினான். அவனருகே அணிக்கோலம் பூண்ட சுருதசேனன் நின்றான். அவனுக்குப் பின்னால் தௌம்யரும் கருணரும் சௌனகரும் வந்தனர். படகுமேடையில் யுயுத்ஸு தலைமையில் அஸ்தினபுரியின் வீரர்கள் அணிகொண்டு நின்றனர். அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியை ஏந்திய கவசவீரன் இரும்புப்பரப்பின்மேல் கங்கையின் நீரொளி அலையடிக்க நடந்து வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொடிக்கம்பத்தை தரையில் ஊன்றி பற்றிக்கொண்டான்.
நூற்றெட்டு அணிப்பரத்தையர் ஐந்து மங்கலங்கள் கொண்ட பொற்தாலங்களுடன் ஏழு நிரைகளாக முன்னால் வந்தனர். மங்கலச் சேடியர் இருபுறமும் பிரிந்து நின்று வழிவிட இசைச்சூதர் முழங்கியபடி வந்தனர். அரசணிக்கோலத்தில் யுயுத்ஸு கையில் அஸ்தினபுரியின் அமுதகலக்குறி பொறிக்கப்பட்ட வெள்ளிக்கோலுடன் வந்தான். யுயுத்ஸுவின் வலப்பக்கம் உபகௌரவனாகிய லட்சுமணன் அரசணிக்கோலத்தில் நடந்து வந்தான். அவனுடன் எட்டு உபகௌரவர்கள் தொடர்ந்து வந்தார்கள்.
பிரதிவிந்தியன் சுருதசேனனிடம் “அவர் யுயுத்ஸு அல்லவா?” என்றான். சுருதசேனன் “ஆம், மூத்தவரே” என்றான். “ஒருகணத்தில் வருபவர் விதுரர் என்றே எண்ணினேன்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “அகவை ஏற ஏற மேலும் தோற்ற ஒப்புமை தெளிந்து வருகிறது. அதையே உபகௌரவர்களுக்கும் சொல்லலாம். தந்தையைப்போலவே தோள்திரண்டு உடல்பெருக்கி எழுந்திருக்கிறார்கள்.” லட்சுமணனை நோக்கி “லட்சுமணனை பார். தந்தையைப்போலவே நன்கு வடித்த தேர்போல முற்றிலும் நிகர்நிலை கொண்ட உடல். இளையவனே, இப்புவியில் நான் மிக விரும்பும் உடன்பிறந்தாரில் ஒருவன் இவன்” என்றான்.
“ஆம், அது அவ்வாறே இருக்கும்” என்று சுருதசேனன் புன்னகையுடன் சொன்னான். “ஏன்?” என்று பிரதிவிந்தியன் புருவம் சுருங்க கேட்டான். “நமது தந்தையின் நெஞ்சில் ஒருகணமும் நீங்காது நிலைகொள்பவரல்லவா அஸ்தினபுரியின் அரசர்?” என்றான் சுருதசேனன். பிரதிவிந்தியன் நகைத்து “உண்மை” என்றான்.
நடைமேடை நீண்டு வந்து படகைத் தொட்டது. அதை பொருத்திக்கட்டிய குகர்கள் இருவர் இருபுறமும் விலகி வணங்கினர். தௌம்யர் பொற்கலத்தில் கங்கை நீர் ஏந்தியபடி வலக்கால் எடுத்து வைத்து முன்னால் சென்றார். அவருடைய மூன்று மாணவர்கள் கங்கை நீரேந்திய பொற்கலங்களுடன் அவரைத் தொடர்ந்து சென்றனர். அஸ்தினபுரியின் அணிநிரையிலிருந்து ஏழு வைதிகர்கள் பொற்கலங்களில் கங்கை நீருடன் முன்னால் வந்து தௌம்யரை வரவேற்றனர். தௌம்யர் வேதம் ஓதி கங்கை நீரை யுயுத்ஸுவின் மீது தெளித்து வாழ்த்தினார். அந்தணர் குழு வலப்பக்கமாக விலகி நின்று வேதம் ஓதிக்கொண்டிருக்க கைகூப்பியபடி பிரதிவிந்தியன் நடைபாலத்தின் மேலேறி அஸ்தினபுரியின் மண்ணில் வலக்காலெடுத்து வைத்தான்.
மலர்ந்த முகத்துடன் கைகூப்பியபடி வந்த யுயுத்ஸு “அஸ்தினபுரிக்கு குருவின் கொடிவழி வந்த இளவரசர் பிரதிவிந்தியரை வரவேற்கிறோம். அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் கொடியும் கோலும் தங்கள் முன் வாழ்த்தி நிற்கிறது” என்றான். “வாழ்த்துங்கள், தந்தையே!” என்று பிரதிவிந்தியன் யுயுத்ஸுவின் கால்களைத்தொட்டு வணங்க அவன் தலைமேல் கைவைத்து “பொன்றாப் புகழ் தொடர்க! கொடிவழிகள் வெல்க!” என்று வாழ்த்திய யுயுத்ஸு பிரதிவிந்தியனின் இரு தோள்களையும் தொட்டு அணைத்து தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான்.
லட்சுமணன் “வணங்குகிறேன், மூத்தவரே” என்று பிரதிவிந்தியனின் கால்தொட்டு வணங்க அவன் தலையைத் தொட்டு “புகழ் சிறக்கட்டும்! அனைத்து நலன்களும் அருகணையட்டும்!” என்று வாழ்த்திய பிரதிவிந்தியன் அவனை தன் நெஞ்சுடன் அணைத்தான். பின்னர் இரு தோள்களிலும் கைவைத்து “அண்ணாந்து நோக்கியே உன்னிடம் சொல்லெடுக்க வேண்டியிருக்கிறது, இளையோனே. சுதசோமனும் சர்வதனும் நீயும் நிகரான உடல் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்” என்றபின் பின்னால் நின்றிருந்த உபகௌரவர்களைப் பார்த்து “அத்தனை பேரும் பேருடல் கொண்டிருக்கிறீர்கள். அஸ்தினபுரியில் எந்நேரமும் அடுமனை எரிந்துகொண்டிருக்கிறதுபோலும்” என்றான். அவர்கள் நாணத்துடன் நகைத்து ஒவ்வொருவராக வந்து பிரதிவிந்தியன் கால்களைத் தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். சுருதசேனன் யுயுத்ஸுவை வணங்க தலைதொட்டு வாழ்த்தி “தந்தை தவம் செய்து ஈட்டிய அழகும் இனிமையும் தனயனாக இருப்பதனால் மட்டும் இவனுக்கு வந்துவிட்டது” என்றான்.
சௌனகரும் கருணரும் முன்னால் வர லட்சுமணனும் இளையோரும் அவர்களை அணுகி தாள்பணிந்து வணங்கி வாழ்த்துகொண்டார்கள். “நகருலாவாக நாம் அரண்மனைக்கு செல்கிறோம். அணித்தேர்களும் பட்டத்து யானையும் கோட்டை முகப்பில் ஒருங்கி நிற்கின்றன. இங்கிருந்து விரைவுத்தேரில் சென்று அஸ்தினபுரிக்குள் நுழைகிறோம்” என்றான் யுயுத்ஸு. “தாங்கள் நுழைவது மூத்தவர் யுதிஷ்டிரர் நகர் நுழைவதுபோல. அஸ்தினபுரியின் குடிகள் அனைவரும் தெருக்களில் திரண்டுள்ளார்கள். இந்நாளில் முதல் மங்கலமென்பது அதுதான்.” பிரதிவிந்தியன் “ஆம், இப்போது எந்தையும் எங்கோ இருந்து இந்நகருக்குள் நுழைகிறார். என் சொற்களில் எழுந்து தன் மகளை வாழ்த்துகிறார்” என்றான்.