எழுதழல் - 60
ஏழு : துளியிருள் – 14
துயிலறை ஏவலன் தட்டி எழுப்ப விழித்தெழுந்து ஒருகணம் கழித்தே அவன் சொன்ன செய்தியை யௌதேயன் உளம் வாங்கிக்கொண்டான். “மூத்த யாதவர் தங்களை சந்திக்க விழைகிறார், இளவரசே” என்றான் ஏவலன். அவன் இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலன் என தோன்றினான். வெளியே ஒரு களிறு ஓசையிட்டது. மீண்டும் அவன் அதை சொல்ல யௌதேயன் முழு விழிப்புகொண்டு வாயைத்துடைத்து இடையாடையைக் கட்டியபடி எழுந்து நின்று “உடனே கிளம்புகிறேன். வந்து கொண்டிருக்கிறேன் என்று அவரிடம் சென்று சொல்க!” என்றான்.
வெளியே கொம்போசை எழுந்தது. “இல்லை, இங்கே தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான் ஏவலன். “இங்கா…?” என்று சொன்னபின் யௌதேயன் சுற்றும் முற்றும் பார்த்தான். “ஆம், தங்களை எழுப்பும்படி ஆணை.” யௌதேயன் “நான் வாய் கழுவ வேண்டும்” என்றான். “ஏனத்தில் நீர் கொணர்ந்திருக்கிறேன்” என்றான் ஏவலன். “என்ன கொம்போசை?” என்றான். “படைகளுக்கு விழிப்பு எச்சரிக்கை. அரிதொன்று நிகழ்ந்துள்ளது என செய்தி” என்றான் ஏவலன்.
யௌதேயன் விரைந்து சென்று மர ஏனத்தில் இருந்த நீரை அள்ளி முகத்தைக் கழுவி வாய் கொப்பளித்தான். மரவுரியில் முகத்தையும் கையையும் துடைத்தபடி “எங்கிருக்கிறார்?” என்றான். “அறை வாயிலில்” என்றான் ஏவலன். விரைவுடன் கதவைத் திறந்து வெளியே சென்ற யௌதேயன் அங்கு நின்ற பலராமரைக் கண்டு கால் தொட்டு சென்னிசூடி “தாங்கள் என் அறைக்கு எழுந்தருள வேண்டுமா, மாதுலரே? நான் அங்கு வந்திருப்பேன் அல்லவா?” என்றான். “உன்னை சந்திக்க வேண்டியிருந்தது” என்ற பலராமர் அவன் தோளைத்தொட்டு “நாம் உள்ளே சென்று பேசுவோம்” என்றார். “வருக!” என்று அவன் உள்ளே அழைத்துச் சென்றான்.
மஞ்சத்தின் அருகே பீடத்தில் தன் பெரிய உடலின் எடையுடன் அமர்ந்தபடி “சற்று முன்னர்தான் ஒற்றர்செய்தி வந்தது. சாம்பன் கிருஷ்ணையை கவர்ந்து வந்துகொண்டிருக்கிறான்” என்றார். யௌதேயன் “ஆம், எனக்கும் செய்தி வந்தது” என்றான். “உடன் உனது இளையோனும் சென்றிருக்கிறான்” என்றார் பலராமர். யௌதேயன் “ஆம் மாதுலரே, அவனை அனுப்பியது நான்தான்” என்றான். “சாம்பன் கிருஷ்ணையைக் கவர்ந்தது உனது சொல்படிதானா?” என்றார் பலராமர். “ஆம், நான் களவு சொல்வதில்லை” என்று யௌதேயன் சொன்னான்.
சிலகணங்களுக்குப்பின் “அப்படியென்றால் உனது நோக்கம் என்ன?” என்று பலராமர் கேட்டார். அவர் விழிகளை நோக்கி “நான் இங்கு வந்ததே எவ்வகையிலேனும் தங்கள் பெருந்தோள்களை எந்தையுடன் படைத்துணையாக நிற்கவைக்கவேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கும் அஸ்தினபுரிக்கும் பூசல் நிகழுமெனில் அதுவே நான் வந்த இலக்கு வெல்வதற்கான வழி. அதன்பொருட்டே அஸ்தினபுரியின் இளவரசியை யாதவர் கொள்ளலாம் என்று அரசவையில் சொன்னேன்” என்றான் யௌதேயன்.
மேலும் தொடர்ந்தான் “ஆனால் என் திட்டத்தை கணிகர் வென்றார். மணத்தன்னேற்பு என்பது அனைத்து வழிகளிலும் நுண்சூழ்கை. இனி சாம்பர் கிருஷ்ணையின் மணத்தன்னேற்பு நிகழ்வில் நூறு அரசர்களில் ஒருவராக அமரக்கூடும். யாதவர்கள் நிறைவுகொள்ளவும்கூடும். ஆனால் அவளை வில்தேர்ந்த ஷத்ரியர்கள் வென்று செல்லவே வாய்ப்பு மிகுதி. அதை கடப்பதற்கான வழி ஒன்றே, சாம்பர் அவளை கவர்ந்து வருவது. அதனூடாக கணிகரின் சூழ்ச்சி முறியடிக்கப்படுகிறது.”
பலராமர் பெருமூச்சுவிட்டார். “என்னால் இந்த அரசாடல்களின் நடுவே வாழ முடியவில்லை, மைந்தா” என்றார். “ஒருநாள்கூட நிறைவுடன் துயின்றதில்லை. உளம் மலர்ந்து காலையை எதிர்கொண்டதில்லை. இரவு அணைந்த பின்னர்தான் நிலைகுலைய வைக்கும் உளவுச்செய்திகள். காலையில் அவற்றின் தொடர்செய்திகள். ஓய்வே இல்லாத அமைச்சுகூடல்கள். தூதனுப்பல்கள். மன்றுநிகழ்வுகள். மாலையில் மீண்டும் அரசியிடம் அதைப்பற்றிய சொற்கூட்டு. இந்த உச்சத்தில் உயிர்வாழ்வதற்கு இரும்பாலான நரம்புகள் தேவை.”
பெருமூச்சுடன் கைகளை விரித்து “அது உனக்கிருக்கலாம். என் அரசிக்கு இருக்கிறது. நான் பிறிதொருவன். அடுமனையிலும் பயிற்சிக்களத்திலுமாக வாழ்க்கையை நிறைவு செய்தவன்” என்றார் பலராமர். யௌதேயன் “ஏனெனில் நீங்கள் இன்றுவரை அரசுப்பொறுப்பு எதையும் ஆண்டதில்லை. அனைத்தையும் உங்கள் இளையவர் செய்து முடித்திருந்தார்” என்றான். “மாதுலரே, நரம்புகளை இரும்பென ஆக்குவதைவிட யாழ்நாண் என ஆக்குவது அரசுசூழ்தலுக்கு மேலும் உகந்ததெனக் கண்டறிந்தவர் இளைய யாதவர். இன்னும் தங்களுக்கு புரியவில்லையா? வெல்ல முடியாத ஒருவருக்கு எதிராக போர் முனைந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் அலைக்கழிப்பு. முழுக்க தோற்பது வரை உங்களுக்கு நிறைவுத்துயில் இல்லை. நற்காலையுமில்லை.”
பலராமர் சற்று சினம்கொண்டு கைவீசி “அது முடிந்த கதை. இனி அதைப்பற்றி நாம் சொல்லாட வேண்டியதில்லை” என்றார். “இச்செய்தி வந்ததும் நான் ரேவதியிடம் அதைப்பற்றி சொன்னேன். உடனடியாக கிளம்பி அஸ்தினபுரிக்கு செல்லவேண்டும் என்று என்னிடம் சொன்னாள். நான் துரியோதனனிடம் தூதுசென்று அவன் சினத்தை தவிர்க்க வேண்டும் என்றும், மதுராவுக்கும் அஸ்தினபுரிக்குமான படைக்கூட்டு எவ்வகையிலும் இதனால் சிதைவுறாதபடி நோக்க வேண்டுமென்றும் கூறினாள்.”
“ஆனால் நான் அவனுடைய ஆசிரியன். எந்த எதிர்பார்ப்புமின்றி வாங்கும் கலத்தின் வல்லமையை மட்டுமே நோக்கி படைக்கலக் கல்வியை அளித்தேன். திறன்கொண்ட தோளர் எவருக்கும் அதை அளிக்காமலிருந்ததும் இல்லை” என்றார் பலராமர். “ஆசிரியரென்பது அரிய பொறுப்பு. இத்தகைய செயல் ஒன்றுக்காக அத்தகுதியை நான் பயன்படுத்தலாமா என என் உள்ளம் சுருங்கியது. ஆனால் இத்தருணத்தில் வேறு வழியில்லை என்று அவள் சொன்னாள். இதை எவரிடம் உசாவுவது என்று எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான் உன் நினைவு வந்தது. இன்று இந்நகரில் நெறிநூல் தேர்ந்தவன் நீதான்.”
“மருகனே, நீ அறிந்த நூல்களின்படி நெறியுசாவிச் சொல்க, இச்செயலின் அறம் என்ன?” என்றார் பலராமர். “இத்தருணத்தில் நான் ஆற்ற வேண்டியதென்ன? ஆசிரியனாக நான் சென்று என் குலத்து இளவரசனுக்கு உன் இளவரசியை கொடையளித்தருள்க என்று அஸ்தினபுரியின் அரசனிடம் சொல்வது என் ஆசிரியர் எனக்களித்த கல்வியை அங்காடிப்பொருளென்று ஆக்குவது அல்லவா?” யௌதேயன் “நூல்நெறிகளின்படி அறம் என்பது ஒருவர் கொள்ளும் உலகியல்பொறுப்புகளைச் சார்ந்தது. ஆசிரியராக உங்கள் அறம் ஒன்று. மதுராவின் அரசராக பிறிதொன்று. யாதவக்குடித் தலைவராக மற்றொன்று” என்றான்.
“ஆசிரியராக நீங்கள் துரியோதனரிடம் கல்விக்கொடை கோரலாம். ஆசிரியன் பொன், பெண், நிலம், அடிமைக்கடப்பாடு, நூல் ஆகிய ஐந்தையும் கொடையெனக் கோரலாம். நீங்கள் கோருவது எதுவாயினும் அதை அவர் அளித்தே ஆகவேண்டும். அரசராக உங்கள் குடிக்கு எது நலம்பயக்குமென்று நீங்கள் உண்மையிலேயே எண்ணுகிறீர்களோ அதை இயற்றலாம். அதன்பொருட்டு ஆக்கள், அந்தணர், முனிவர் ஆகியோருக்கு ஊறில்லாமலும் கற்புள பெண்டிருக்கும் பால்மாறா மைந்தருக்கும் முதியோருக்கும் குறைவான துயருடனும் ஊருணி, சாலை, கல்விநிலை, ஆலயம் ஆகியவற்றுக்கு அழிவில்லாமலும் நீங்கள் ஆற்றும் எதுவும் நன்றே” என அவன் தொடர்ந்தான்.
“குடித்தலைவராக உங்கள் மைந்தருக்கு நலம் பயப்பதை இயற்றவேண்டிய கடமை உங்களுக்குள்ளது. பிற குடியினர் சிறுமையோ சீரழிவோ கொள்ளாது அதை செய்தால் அறம் பிறழவில்லை என்றே பொருள். இம்மூன்றில் முதல் அறத்துக்கு இரண்டாம் அறம் முரண்கொண்டதென்றால் முதலறத்தை தெரிவுசெய்க! மூன்றாம் அறம் முதலிரண்டுக்கும் ஒத்துநிற்கவேண்டும். ஆனால் இங்கு மூன்றும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஆகவே அரசி உரைப்பதை நீங்கள் ஆற்றலாம்” என்றான் யௌதேயன்.
பலராமர் “நன்று… உன் தந்தையும் இதைவிட தெளிவாக சொல்லமுடியாது” என்றபின் “சொல்க மைந்தா, இத்தருணத்தில் நான் செய்யவேண்டியது எது?” என்றார். யௌதேயன் “நான் வகுத்த சூழ்ச்சியை எப்படி முறியடிப்பது என்று என்னிடம் கோருகிறீர்கள், மாதுலரே” என்றான். பலராமர் “மருகனே, என் ஆடற்களத்தின் எதிர்முனையில் நீ இன்று அமர்ந்திருக்கலாம். ஆனால் என் மருகன் நீ. நிகர்த்தந்தையென நின்று நான் கோருகையில் நீ உதவி செய்தாக வேண்டும்” என்றார்.
யௌதேயன் “இப்படி ஒரு கோரிக்கையை தாங்கள் முன்வைத்தால் நான் மிகுந்த இடருக்குள்ளாவேன், மாதுலரே. எந்தை எனக்கிட்ட ஆணையை நான் கடைப்பிடித்தாக வேண்டும். இத்தருணத்தை முதிர்வித்து உளக்கசப்பைப் பெருக்கி உங்களை அஸ்தினபுரியிலிருந்து பிரித்தெடுக்கவே நான் வந்தேன்” என்றான். “ஆம், அதை நான் அறிவேன். ஆனால் குடிமூத்தானாக நின்று மருகனாகிய உன்னிடம் ஆணையிடுகிறேன்” என்றார் பலராமர்.
யௌதேயன் சிலகணங்கள் எண்ணியபின் “அரசவைக்குச் சென்று அங்கு பீஷ்மரும் துரோணரும் கிருபரும் விதுரரும் அமர்ந்திருக்கையில் உங்கள் கல்விக்கு நிகரான கொடையென அரசமகளை கோருங்கள். அவர் மறுக்கமுடியாது” என்றான். “அவர்கள் அமைந்த அவையில் அதை கோரிப் பெற்றால் பழியும் இருக்காது. ஏனென்றால் அச்செயலுக்கு பிதாமகரின் நல்வாழ்த்து இருக்கும்.” பலராமர் எழுந்து “ஆம், இதைத்தான் நான் வரும்போது எண்ணிக்கொண்டிருந்தேன். அவனிடமிருந்து எதையும் நான் இதுவரை கோரியதில்லை. அவன் மகளை கோருகிறேன்” என்றார்.
எண்ணி எண்ணி கணம்தோறும் உளம் மீண்டு முகம் மலர “இப்போதே கிளம்புகிறேன். அவர்கள் மதுராவுக்கு வந்தணையும்போது நான் இங்கிருக்கலாகாது. அவர்களை முறைப்படி வரவேற்றுவிட்டு நான் இங்கிருந்து கிளம்பினால் அதுவே என்மேல் இவற்றையெல்லாம் இயற்றுவித்தவன் எனும் ஐயம் எழ ஏதுவாகும்” என்றார்.
“அதுவும் முறையே” என்று யௌதேயன் சொன்னான். “நீ என்னுடன் கிளம்பு” என்று பலராமர் அழைத்தார். “நான்…” என்று யௌதேயன் தயங்க “என்னுடன் நீ இருந்தாக வேண்டும். என் சொற்கள்மேல் எப்போதும் எவருக்கும் நம்பிக்கை இருந்ததில்லை. முதன்மையாக எனக்கு அவ்வுறுதி இருந்ததில்லை. நீ அருகிருந்தால் உன் விழிநோக்கி நான் சொல்லெடுப்பேன். பிழையென ஒன்றும் ஆகாது” என்றபின் கைநீட்டி யௌதேயனின் கைகளை பற்றிக்கொண்டு “எனக்கு உதவுக! இந்த இக்கட்டிலிருந்து மதுராவை விடுவித்தருள்க!” என்றார்.
“மாதுலரே, எத்தருணத்திலும் என் உளம் நோக்கி நான் கேட்கும் வினா ஒன்றே. நான் எடுக்கும் முடிவை எந்தை ஏற்பாரா என்று. இத்தருணத்தில் நான் உளப்பூர்வமாக உங்களுடன் வந்து உதவ வேண்டுமென்றே எந்தை ஆணையிடுவார்” என்றான் யௌதேயன். “தங்களுடன் வருகிறேன். தாங்கள் செல்வது வெல்ல முற்றிலும் உடனிருந்து உதவுவேன்.” பலராமர் “ஆம், இங்கு யுதிஷ்டிரன் இருந்திருந்தால் அவனிடமே சென்றிருப்பேன்” என்றார்.
மதுராவின் அரசப்படகு துறைமேடையிலிருந்து கிளம்பும்பொருட்டு சங்கோசை எழுப்பியது. அதன் படகுக்காரர்கள் தங்களுக்குரிய இடங்களில் சென்று நின்றுகொண்டனர். அமரமுனையில் எழுந்த தலைமைப் படகோட்டி சுக்கானை பற்றிக்கொண்டார். கொடிமரத்தின்மேல் பயணத்திற்குரிய கொடி ஏறியது. நடைபாலத்தின் விளிம்பில் நின்ற யௌதேயன் கரையில் நின்றிருந்த பலராமர் விடைபெற்று வருவதற்காக காத்திருந்தான்.
பலராமர் தன்னை வழியனுப்ப வந்திருந்த மூன்று குடித்தலைவர்களிடம் மீண்டும் அதுவரை சொன்னவற்றைச் சொல்லி கைகளைப்பற்றி அழுத்தினார். “அவர்கள் இன்னும் சற்று பொழுதில் இங்கு வந்துவிடுவார்கள். அரசமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட வேண்டியதில்லை. காவலர்தலைவர்கள் மட்டுமே எதிர்கொள்ளட்டும். நேராக அரண்மனைக்கு அழைத்துச் செல்லட்டும். இளவரசி அங்கே அவளுக்குரிய குடிமுறைமைகளுடன் தனி அரண்மனையில் தங்கட்டும். இக்கடிமணம் நிகழ்ந்தது நகருக்கு முறைப்படி அறிவிக்கப்படக்கூடாது” என்றார்.
“ஆம்” என்றார் விருஷ்ணி குலத்தலைவர் சசிதரர். “நாம் இதை ஒளிக்க முடியாது என்பது உண்மை. ஒளிஎழுகையில் யாதவர் அனைவரும் இதை அறிந்திருப்பார்கள். ஆனால் முறையான கொண்டாட்டங்களோ மகிழ்ச்சி வெளிப்பாடுகளோ இங்கு நிகழக்கூடாது. ஒரு பிழை நிகழ்ந்துவிட்டதென மதுரா உணர்கிறது என்ற தோற்றமே இருக்கவேண்டும். நான் சொல்வது புரிகிறதல்லவா?” என்றார். போஜர் குடித்தலைவர் பிரபாகரர் தலையசைத்து “நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். தங்கள் பயணம் வெல்க!” என்றார்.
பெரிய உடலை அசைத்தபடி நடைபாதைமேல் நடந்து படகின் மேலேறிய பலராமர் கயிற்றைப் பிடித்தபடி நின்று பெருமூச்சுடன் மீண்டும் குடித்தலைவரை நோக்கி தலையசைத்தார். அவர் அருகே வந்து யௌதேயன் “கிளம்பலாமா, மாதுலரே?” என்றான். “ஆம், கிளம்ப வேண்டியதுதான்” என்றார் அவர். யௌதேயன் கைகாட்ட நடைபாதை துறைமேடை நோக்கி அகன்றது. படகு சற்று குலுங்கியபின் துடுப்புகளால் உந்தப்பட்டு துறைமேடையிலிருந்து விலகி யமுனையின் சிறுபெருக்கில் தொட்டு ஒழுகியது.
கொம்போசை எழ படகோட்டிகள் கயிறுகளை இழுத்தனர். நீரில் பாறைவிழும் ஓசையுடன் பாய்கள் காற்றை ஏற்றுப் புடைத்து விம்மி கயிறுகளை இழுத்து நெரிபடும் ஓசையெழுப்பி வளைந்து நின்றன. படகு முழுவிசை கொண்டு யமுனையின் பெருக்கில் எழுந்து விரைவுகொண்டது. பலராமர் கயிற்றைப் பிடித்தபடி அகன்று செல்லும் மதுராவை நோக்கி நின்றார். புலரியின் அரையிருளில் அவருடைய வெண்ணிற உடல் பூர்ஜமரத்தின் அடிபோல தெளிந்து தெரிந்தது. யௌதேயன் “தாங்கள் உள்ளே வந்து அமரலாமே?” என்றான்.
அவர் பெருமூச்சுடன் உளம் கலைந்து அவனை நோக்கி “என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் புரியவில்லை. என் உளம் சொல்வதை செய்கிறேன். ஆனால் ஏதோ ஒரு பிழையையும் எங்கோ உணர்கிறேன். என் குடித்தலைவர்கள் என்னை இட்டுச் செல்கிறார்களா? என் துணைவி தன் சொற்களால் என்னை ஆட்டுவிக்கிறாளா? நூறுமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இல்லை என்றே என் உளம் சொல்கிறது. ஆனால் ஆட்டுவிக்கப்படுகிறேன் எனும் உணர்வு எப்போதும் இருக்கிறது. பிறிதொன்றால். பேருள்ளம் ஒன்றால்” என்றார்.
பின்னர் மீண்டும் பெருமூச்சுவிட்டு “ஒருவேளை இதுவும் அவன் விளையாட்டுதானோ என்று அவ்வப்போது எண்ணுகிறேன். இளமை முதலே நான் உணர்ந்த ஒன்றுண்டு. நான் அவனுடைய வெண்நிழல். அவன் இயற்றும் அனைத்திற்கும் மறுதிசையில் மறுசெயலை நான் இயற்றிக்கொண்டிருந்தேன். இப்போதும் அதையேதான் செய்கிறேனா?” என்றார். உள்ளே வந்து சிற்றறைக்குள் தாழ்வான பீடத்தில் கால்களை நீட்டியபடி அமர்ந்து அவனை நோக்கினார். அறைக்குள் எரிந்த நெய்விளக்கின் பளிங்குக் குமிழ் அவர் விழிகளுக்குள் அனல்துளிகளாகத் தெரிந்தது.
யௌதேயன் “இத்தகைய ஐயங்களுக்கு என்னால் மறுமொழி சொல்ல இயலாது, மாதுலரே. ஒவ்வொருவருக்கும் தாங்கள் இங்கு எதை செய்கிறோம் என்னும் திகைப்பு வாழ்வின் அரிய தருணங்களில் எழுந்தே தீரும். பொருளும் பொருளின்மையும் மாறி மாறி தெரியவரும். அதில் எதை அவர்கள் தெரிவு செய்கிறார்கள் என்பதையொட்டி அவர்கள் வாழ்க்கை அமைகிறது” என்றான். “பொருளும் பொருளின்மையும் அவரவர் தெரிவுகளா என்ன?” என்றார் பலராமர். “ஆம்” என்று யௌதேயன் சொன்னான். “ஊழ் நம் தெரிவல்ல. அதன் பொருள் நாம் அளிப்பது மட்டுமே.”
பலராமர் அவனை சிலகணங்கள் கூர்ந்து பார்த்தபின் “இத்தனை இளமையிலேயே அரிய நூல் கற்றுத் தேர்ந்திருக்கிறாய். உன் தந்தையை எனக்கு நன்கு தெரியும். நீ கற்ற நூல்களைவிட பலமடங்கு அவன் கற்றிருக்கிறான். ஆனால் உன்னிடம் இருக்கும் தெளிவை நான் அவனிடம் பார்த்ததேயில்லை” என்றார். “ஏனெனில் அவர் தன் முடிவை இன்னும் தெளிவுறக் காணவில்லை” என்று யௌதேயன் சொன்னான். “நீ கண்டுவிட்டாயா?” என்று பலராமர் கேட்டார். “மிக நன்றாக” என்றான் யௌதேயன்.
பலராமர் விழிசுருங்க அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். பின்னர் மெல்லிய குரலில் “எந்த முடிவை? இவ்வனைத்தும் சென்று சேரும் முடிவையா? அல்லது உன் முடிவையா?” என்று கேட்டார். “இரண்டையும்” என்று அவன் சொன்னான். மேலும் குரல் தழைய, எடைகொண்டதுபோல் தலை தாழ “எப்போது உணர்ந்தாய்?” என்று அவர் கேட்டார். “தெரியவில்லை. மிக இளமையிலேயே இந்த உள்ளுணர்வு என்னிடம் இருந்தது என்று உணர்கிறேன்.”
“ஒருமுறை கனவில் வடபாஞ்சாலத்தின் அரசர் அஸ்வத்தாமரை பார்த்தேன். கங்கைநீர் நடுவே ஓர் ஆற்றிடைக்குறை அது. அவர் நீண்ட தாடி கொண்டிருந்தார். முதுமையில் தளர்ந்து தொய்ந்த இமைச் சதைகளும், பழுத்த கண்களும், சோர்ந்து உள்ளடங்கிய வாயும், நடுங்கும் எலும்புக் கைகளும் கொண்டவர். அவர் அருகே நான் அமர்ந்திருந்தேன். இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர் தலையில் இருந்த மிகப் பெரிய புண்ணை நான் பார்த்தேன். சிவந்து சீழ்கட்டி அழுகிக்கொண்டிருந்தது அது. ஒவ்வொரு கணமும் மாளா வலி அதிலிருந்தது என்று உணர்ந்தேன். அவர் கண்கள் உதடுகள் கைவிரல்கள் அனைத்தும் வலி என்னும் ஒன்றையே ஊழ்கச் சொல்லென ஒலித்துக்கொண்டிருந்தன.”
“பின்னர் விழித்துக்கொண்டபோது நெடுநேரம் எங்கிருக்கிறோம் என்ன எண்ணுகிறோம் என்றே நான் அறியவில்லை. நரம்பு அறுந்து எங்கோ விழுவதுபோல ஒரு அதிர்வு. மீண்டும் உணர்ந்தபோது நான் எழுந்து அறை நடுவே நின்றிருந்தேன். ஆடை நெகிழ்ந்து வெற்றுடலுடன் இருந்தேன். வியர்த்து மெய்ப்புற்று அதிர்ந்துகொண்டிருந்தது என் உடல். இங்கு நிகழப்போகும் அனைத்தையும் அப்போது அறிந்தேன்” என்றான் யௌதேயன்.
“எதை?” என்றார் பலராமர். யௌதேயன் புன்னகைத்து “அதை நான் சொல்ல இயலாது. உணரும்போது இருக்கும் மெய்மை அதை சொல்கையில் அமைவதில்லை” என்றான். “மாதுலரே, சொல்லில் ஒரு புனைவு இருந்தே தீரும். ஏனென்றால் சொல் என்பது புறவயமானது. ஆகவே வகுத்துரைக்கப்பட்ட பொருள் அதற்கு இருந்தாகவேண்டும். வகுக்கப்பட்டவை எல்லையும் அளவும் கொண்டவை. உண்மைக்கு அவ்விரண்டும் இருக்க இயலாது. எனவே சொல்லப்பட்ட அனைத்தும் குறையுண்மைகளே.”
பலராமர் அவன் விழிகளை கூர்ந்து நோக்கிவிட்டு “மைந்தா சொல்க, இவையனைத்தும் எங்கு சென்றுமுடியும்? இங்கு எது எஞ்சும்?” என்றார். “எஞ்சுவதொன்றே. அழியாச் சொல். வேதவிதை பிளந்தெழும் முளை. அதை வேதமுடிவு என்கின்றனர் முனிவர். நாராயண வேதம் என்கின்றனர் நூலோர்” என்றான். “அவன்தான் வெல்வானா?” என்றார் பலராமர். “இல்லை, அவரும் வெல்லப்போவதில்லை” என்றான் யௌதேயன். “சொல்லப்போனால் முழுத்தோல்வி அவருக்கு காத்திருக்கிறது.”
திகைப்புடன் எழுந்து “என்ன சொல்கிறாய்?” என்றபடி பலராமர் அவனருகே வந்தார். “ஆம், மூத்தவரே. முழுத் தோல்வி, மாளாத் துயர், மாற்றிலா வெறுமை. அவருக்கு எஞ்சுவன அவையே. ஆம், அது அவ்வாறுதான் நிகழவியலும். வில்லை உதைத்துத் தள்ளாமல் அம்பு எழுவதில்லை. கனி மட்காமல் விதை முளைப்பதுமில்லை. அவர் சொல் நின்றுவாழும். அவர் தோற்று தனித்து துயர்கொண்டு அழிவார்” என்றான்.
பெருமூச்சுவிட்டு பலராமர் சொன்னார் “நீ சொல்வது வெறும் உளமயக்காகக் கூட இருக்கலாம். ஆனால் இச்சொற்களுடன் இணைந்து தெய்வக்கூர் கொள்ளும் உன் விழிகள் இது உண்மை என்று ஆணையிடுகின்றன. அது எதன் விழைவு என்று தெரியவில்லை. எதுவாயினும் அவ்வாறே ஆகுக!” பின்னர் மெல்ல நகைத்து “இது இவ்வாறு நிகழ்கிறது என்பதே விந்தையாக உள்ளது. பாண்டவர் ஐவரிலிருந்தும் அவர்களின் கூர்முனைகள் மட்டுமே மைந்தராகப் பிறந்துள்ளன” என்றார்.
அத்தருணத்தின் உலகியல்கடந்த கூர்மையை தாளா உளம் கொள்ளும் நடிப்பு அது என தானும் உணர்ந்த யௌதேயன் நகைத்து “கூர்கொண்டவற்றின் முனைகள் நுண்ணுற்றுச் சென்று அடையும் புள்ளிக்கு அப்பால் உள்ளது வெறுமை என்று ஒரு சொல் உள்ளது, மாதுலரே” என்றான். பலராமர் “இனி என்னிடம் நீ சொல்லளாவவேண்டியதில்லை. இதற்குமேல் சொல் எனில் என் அச்சாணி இற்றுவிடக்கூடும்” ஏன்றார். யௌதேயன் நகைத்து “சரி, ஆணை” என்றான்.
படகு முழுப்பாய் விசையில் யமுனைமேல் எழுந்து சென்றது. அது கங்கைமுனையை அடைவதுவரை பலராமர் படகுமுகப்பிலேயே நின்றிருந்தார். கரையென ஒழுகிய சோலைகளையும், எழுந்து மறைந்த சிற்றூர்களின் துறைமேடைகளையும், பிளிறி வழிகேட்டு சென்ற பதினெண்பாய்கொண்ட பெருங்கலங்களையும், அவற்றைத் தொடர்ந்து பறந்து பாய்வடங்களில் அமர்ந்தும் கலைந்தெழுந்தும் கூச்சலிட்ட கொக்குகளையும் நீர்க்காக்கைகளையும் இளமைந்தன்போல் நோக்கிக்கொண்டிருந்தார். காட்சிகளினூடாக அவர் அனைத்து அரசியலையும் களைந்து மீண்டு செல்வதை சிற்றறைக்குள் அமர்ந்து யௌதேயன் நோக்கினான்.
பின்னர் தன் சுவடிப்பெட்டியைத் திறந்து ஏட்டுக்கட்டை எடுத்துப் பிரித்தான். கவனகௌதுகி என்னும் சிறுநூல். சில கணங்கள் கழித்து அதை வைத்துவிட்டு அவன் எப்போதும் உடன்கொண்டு செல்வதும் அரிதாகவே கையிலெடுப்பதுமான நூல் ஒன்றை எடுத்தான். ‘இந்திரபுரிவிலாசம்.’ அவன் அதன் எழுத்தாணிக் கீறல்களை கைகளால் வருடிக்கொண்டிருந்தான். கிருஷ்ணதுவைபாயன வியாசரின் மாணவராகிய பைலர் இயற்றியது. அவன் வாழ்ந்த நாட்கள் ஒவ்வொன்றும் உதிர்ந்து சொற்களென்றாகி அமைந்த காவியம். அதைத் திறந்து படிக்க உளம்கூடவில்லை. அதன் அனைத்து வரிகளும் அவன் அறிந்தவை என்றும் தோன்றியது.