எழுதழல் - 59
ஏழு : துளியிருள் – 13
அஸ்தினபுரியின் எல்லையை எந்த அடையாளங்களும் இல்லாமல் சர்வதன் தொலைவிலேயே அறிந்துகொண்டான். “அஸ்தினபுரி அணுகுகிறது, மூத்தவரே” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் சாம்பன். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. ஒரு கையால் சுக்கானை பிடித்தபடி எழுந்து நின்று கரையை நோக்கிக்கொண்டு வந்தான். எப்படி அவன் அதை உணர்ந்தான் என சாம்பனுக்கு புரியவில்லை. நீர்வெளி ஒற்றை ஒளிப்பெருக்காக சிற்றலைகள் சுழிக்க சென்றுகொண்டிருந்தது.
சாம்பன் “இன்னும் அஸ்தினபுரி அணுகவில்லை” என்றான். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. “என்ன பார்க்கிறாய்?” என்றான் சாம்பன். சர்வதன் “அஸ்தினபுரிக்கு விரைவுக் காவல்படகுகள் உண்டு. அவர்கள் பொதுவாக புலரியில்தான் மிகுதியாக சுற்றிவருவார்கள்” என்றான். சாம்பன் “நம்முடையது மிகச் சிறிய படகு. நம்மை அவர்கள் காணமுடியாது” என்றான். சர்வதன் “அதோ!” என்றான். “எங்கே?” என்றபடி சாம்பன் எழுந்தான். “அதோ… கரையோரமாக…”
“அது வணிகப்படகு” என்றான் சாம்பன். “விரைவுப்படகுகளை அப்படித்தான் உலவவிடுகிறார்கள் அஸ்தினபுரியில். எட்டு பாய்கொண்ட நடுத்தர வணிகப்படகுகளாக பாய்விரித்து அவை கரையோரமாக சென்றுகொண்டிருக்கும். அவற்றுக்கு அன்னை இறால்கள் என பெயர். உடலெங்கும் அவை சிறிய விரைவுப்படகுகளை ஒட்டிவைத்திருக்கும். ஒற்றைமுடிச்சாக அவை கட்டப்பட்டிருப்பதனால் ஒரே இழுப்பில் அவிழ்த்துக்கொண்டு நீரில் பரவி அம்புக்கூட்டம்போல விசைகொள்ள முடியும்.” சாம்பன் பெருமூச்சுவிட்டான்.
சர்வதன் பாய்களை அவிழ்த்துச் சுருட்டினான். கொடிமரத்தை ஒன்றுடனொன்று செருகி சிறுகுழாயாக ஆக்கி உடலுடன் சேர்த்துக்கட்டினான். பாய்களையும் பெரிய மூட்டையாகக் கட்டியபின் அதனுடன் துடுப்பைச் சேர்த்து படகில் சேர்த்துக்கட்டினான். “பாய் இல்லாமல் அவர்கள் நம்மை பார்க்கவே முடியாது” என்றான் சாம்பன். “கருக்கிருளில் நோக்கும் பயிற்சியும் அவற்றுக்கு மிகுதி” என்றான் சர்வதன். “நான் செய்வதற்கு ஒத்துழையுங்கள்… நீரில் மெல்ல குதியுங்கள்.” சாம்பன் “நானா?” என்றபின் நீரில் அலையிளகாமல் இறங்கி நீந்தினான்.
சர்வதன் நீரில் நழுவியிறங்கியபின் படகை கவிழ்த்து மிதக்கச்செய்தான். ஒரு பெரிய மரத்தடிபோல அது தெரிந்தது. “முனையை பற்றிக்கொள்க! உங்கள் தலை மட்டுமே வெளியே தெரியவேண்டும். எவரேனும் நோக்கினார்கள் என்றால் தலை நீருக்குள் அமிழட்டும்” என்றான் சர்வதன். “ஆனால் நாம் எப்படி கரைவரை செல்வது?” என்றான் சாம்பன். “நான் தள்ளிச்செல்கிறேன்” என்றான் சர்வதன். “கங்கை ஒழுக்கை கடந்து செல்வதா?” என்றான் சாம்பன். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை.
சர்வதன் கைகளை வீசி நீந்தத்தொடங்கியதும் சாம்பன் அவனால் அதைவிடப் பெரிய படகையே தள்ளமுடியும் என உணர்ந்தான். அவன் கைகள் பெரிய துடுப்புகள்போல சுழன்று சுழன்று நீரில் விழுந்தன. நீர் அலையிளகவில்லை. ஓசையும் எழவில்லை. ஆனால் படகு நீர்ப்பரப்பில் கோடிழுத்தபடி முதலைபோல முன்னால் சென்றது. தொலைவில் நோக்குபவர்களுக்கு மரத்தடி என்றோ முதலை என்றோதான் அது தோன்றும் என சாம்பன் எண்ணினான். அக்கணமே முதலையின் நினைப்பெழுந்தது. அவன் கைகால்கள் நீருக்குள்ளேயே வெம்மை கொண்டன.
கரையை நோக்கி மிக மெல்ல அவர்கள் சென்றனர். சாம்பன் கரையோரமாக சென்றுகொண்டிருந்த அஸ்தினபுரியின் படகை கடந்துசெல்லும் கணத்தை நெஞ்சிடிப்புடன் எதிர்நோக்கினான். அதன் அமரமுனையில் இருவர் அமர்ந்து நீர்ப்பரப்பை நோக்கிக்கொண்டிருப்பதை அவனால் காணமுடிந்தது. பகலொளியில் என அவர்கள் அகநீர் ஒளி மட்டுமே கொண்டிருந்த அலைப்பரப்பை நோக்கிக்கொண்டிருந்தனர். எங்கோ ஒரு குதிரை கனைத்தது. பிறிதொன்று மறுமொழி உரைத்தது. அக்குதிரை கரையில் நின்றிருக்கிறதா? அதன் ஒலி அருகே எப்படி கேட்கும்?
அது அந்த படகுக்குள் நின்றிருக்கிறது என்பதை சாம்பன் உணர்ந்தான். அப்படியென்றால் அது அவர்களை பார்த்துவிட்டது. சாம்பன் பதற்றத்துடன் “பார்த்துவிட்டது” என்றான். “மூக்குணர்வு” என்றான் சர்வதன். “அவர்களிடம் அது உரைக்குமா?” என்றான் சாம்பன். “அவர்கள் அதனுடன் பேசமுடிந்தால்…” என்றான் சர்வதன். “பொதுவாக சூதர்களிடம் மட்டுமே புரவிகள் பேசுகின்றன. ஷத்ரியர்கள் சூதர்களை புரவிகளின் அளவுக்குக்கூட மதிப்பதில்லை.” அந்தச் சிறிய உரையாடல் அத்தருணத்தின் பதற்றத்தை குறைத்தது.
என்ன விசை! இவன் எத்தனை மானுடருக்கு நிகரான உடல்கொண்டவன் என சாம்பன் எண்ணிக்கொண்டான். இத்தனை பெரிய உடலுக்குள் இவன் உள்ளம் எப்படி இருக்கும்? அரிதானவை எல்லாம் எளிதானவையும் பெரியவை எல்லாம் சிறியவையுமாக இருக்கும். பிறிதொரு உலகில் அவன் வாழ்கிறான். பிறர் கொள்ளும் துயர்களும் அலைக்கழிப்புகளும்கூட இவனுக்கு சிறிதாகத் தெரியக்கூடுமா? அவனுக்கு தன்மேல் எந்த மதிப்பும் இருக்க வழியில்லை. அவன் யானை என்றால் நான் எளிய கீரி.
இல்லை, உடலெங்கும் கூர்சிலிர்த்துவைத்திருக்கும் முள்ளம்பன்றி. அஞ்சி அஞ்சி உடல்மெய்ப்புகொண்டுதான் அது முடியெல்லாம் முள்ளென்றானது என்று ஒருமுறை சுருதன் சொன்னான். இளையோனே, என்னை வெறுக்காதே, நான் மிக எளியவன், என் எல்லைகளைக் கடப்பது மிகமிகக் கடினம் என்று அவன் கைகளை பற்றிக்கொண்டு சொல்லமுடிந்தால் அனைத்தும் சீராகிவிடும். அவனைப்போன்ற மதகரி துணையிருக்கும் என்றால் வெல்லற்கரிய இலக்குகளே இல்லை. ஆனால் அது தன்னால் முடியாது. முட்களை சிலிர்ப்பதொன்றையே போர்முறையென பயின்று வந்திருக்கிறேன்.
ஆனால் அவன் தன்னை காப்பான் என்று உள்ளம் மேலும் மேலும் உறுதிகொண்டது. அவன் தன்னுடன் இருப்பான், குறைந்தது இப்பெண்கோள் முடியும் வரையிலாவது. அவன் வெல்வான். பெண்கொள்ளாமல் திரும்பமாட்டான். அவன் எண்ணியதுமே கிருஷ்ணை தனக்குரியவளாக ஆகிவிட்டாள். அவன் முகம் மலர்ந்தான். அரசமகள். அவளை மணந்தபின் அவன் எந்த யாதவர் அவையிலும் தலைநிமிர்ந்து நுழையலாம். நுழைவதற்கு முன் எண்ணம் கூட்டி தன்னை பெருக்கிக்கொள்ள வேண்டியதில்லை. ஷத்ரியர்கள் நடுவே தழையா விழிகளுடன் சென்று நிற்கலாம்.
தோள்கள், புயத்தசைகள். இவன் நீரிலிருக்கையில் ஓங்கில்போல் ஆற்றல்கொண்டிருக்கிறான். கொடுபற்களும் எலும்புவாலும் இருப்பினும் ஓங்கிலைக் கண்டால் முதலைகள் அஞ்சி வழிவிட்டுவிடுகின்றன. ஆற்றலை முழுக்க விசையென்று ஆக்கிக்கொண்ட மீன் அது. நீரில் வாழ்ந்தாலும் ஒருதுளியும் நீர் ஒட்டாதது என அதைப்பற்றி சூதர்பாடல்கள் உண்டு. கடலுக்குள் நூறாயிரம் மடங்கு பெரிதான ஓங்கில்கள் உண்டு என்கிறார்கள். பெருநாவாய்களை வாலால் அடித்து தெறிக்கவைப்பவை. இவன் அவற்றில் ஒருவன்…
அவ்வெண்ணங்களின் சொற்களே கணங்களாக அவர்கள் அஸ்தினபுரியின் காவல்படகை கடந்துசென்றார்கள். சர்வதனின் கைகள் துழாவும் ஓசை மட்டும் புலி நீர் அருந்தும் ஒலியென கேட்டது. அல்லது வேர்க்குவைகளுக்குள் அலைநாவு துழாவும் ஒலி. அந்த ஓசையே அச்சுறுத்தியது. படகின் விலா பெரிதாகி அணுகி வளைந்து பின்னகர்ந்தது. அதிலிருந்தவர்களின் நோக்கை சாம்பனால் தன் தலைமேல் நாகம் ஊர்வதைப்போல உணரமுடிந்தது.
அது சிறிதாகி பின்னால் மறைந்ததும் சாம்பன் மெல்ல உடல்மீண்டான். ஒரே படகுதான், இன்னொன்று இல்லை. அவ்வெண்ணமே அவனை எளிதாக்க திரும்பி சர்வதனிடம் “அஞ்சிவிட்டேன், இளையோனே” என்றான். “அவர்கள் நம்மை காணமுடியாது. கங்கைப்பெருக்கில் உலர்மரத்தடிகள் மிதந்துசெல்வது வழக்கம்…” என்றான் சர்வதன். “ஆனால் அவை ஒழுக்குக்கு எதிராகச் செல்வதில்லை.”
சாம்பன் சினம்கொண்டு உடல் எரிந்தான். எப்போதும் இவன் குரலில் ஓர் ஏளனம் உள்ளது. நான் சொல்வதை எல்லாம் இவன் ஒரு மெல்லிய புன்னகையால் அல்லது சொல்லில்லாத புறக்கணிப்பால் கேலிக்குரிய அறிவின்மையாக ஆக்கிவிடுகிறான். ஒருநாள் இவன் தலையை அறைந்து உடைப்பேன். ஒருநாள் இவன் உடல் சிதறிக்கிடப்பதை நான் நின்றுநோக்கி சிரிப்பேன். ஆம், தெய்வங்களே, குலமூதாதையரே, இத்தருணத்தில் நான் விழைவது பிறிதொன்றுமில்லை.
நீண்ட நேரம் சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது. இத்தனை தொலைவா? அன்றி, இவன்தான் நீந்தி கைதளர்ந்து விரைவிழந்துவிட்டானா? விண்மீன்கள் அவ்வாறே இருந்தன. அவை இடம் மாறும் என்கிறார்களே? விண்மீன்கள் இரவில் கீழே நிகழ்வனவற்றை நோக்கும் மூதாதையரின் விழிகள். அவர்கள் மண்ணில் காண்பது மானுட வாழ்க்கையை அல்ல, அவர்களின் கனவுகளையும் பிறழ்வுகளையும் மட்டுமே.
“அதோ!” என்றான் சர்வதன். சாம்பன் நெஞ்சு அதிர “எங்கே?” என்றான். “அதோ, அந்தச் சோலை… இங்கிருந்து நோக்குகையில் எழுந்த கை என ஒற்றைப்பெருமரம் ஓங்கியிருக்கிறதே… அதுதான் கானுறைக் காளியன்னையின் சிற்றாலயம். அன்னை அடியமர்ந்த முதிய தேவதாரு அது…” சாம்பன் மூச்சுத்திணற “கரையிலிருந்து நெடுந்தொலைவோ?” என்றான். “அருகேதான்” என்றான் சர்வதன். “அஞ்சவேண்டாம், நான் பின்னால் வருவேன்.” சாம்பன் “எனக்கு எதைப்பற்றியும் அச்சமில்லை” என்றான்.
படகு அணுகியபோது நிழல்வேலி எனத் தெரிந்த கரை மரங்களாகவும் கிளைகளாகவும் அடிமரங்களாகவும் உருத்திரளத் தொடங்கியது. அதன் கிளைகளிலிருந்து பறவைகள் அவர்கள் அணுகும் ஓசை கேட்டு எழுந்து சிறகடித்து வானில் சுழன்றன. கரையிலிருந்து இரண்டு முதலைகள் நீரில் சுழன்றிறங்கி மெல்ல அணுகுவதை சாம்பன் கண்டான். “முதலைகள்” என்றான். “ஆம், ஆனால் அவற்றுக்குத் தெரியும்” என்றான் சர்வதன். “என்ன?” என்றான் சாம்பன். “அச்சம்” என்றான் சர்வதன்.
முதலைகள் நீரலைகளாகவே அணுகின. சர்வதன் முதலை ஒன்றை நோக்கி எம்பி தாவிச்சென்று அதன் வாயைப்பற்றி இடையிலிருந்த கத்தியால் அதன் கண்ணில் குத்தினான். வால்சுழன்று நீரை அறைய அது கொப்பளித்துச் சுற்றியது. அதன்மேல் காலுதைத்து உந்தி விலகிவந்து படகை பற்றிக்கொண்டான். “இங்கே நிறைய முதலைகள் உள்ளன” என்றான் சாம்பன். “ஆம், அது நன்று. இங்கே காவல் இருக்காது” என்றான் சர்வதன். “அந்தக் குருதியை பிற முதலைகள் தேடிச்செல்லும். அவற்றுக்கு குருதி என்பது உணவு மட்டுமே. உறவல்ல.”
குருதி வழிந்த முதலையை மூன்று முதலைகள் சூழ்ந்துகொண்டு தாக்கின. அது வால்சுழல துள்ளி நீரில் விழுந்து கொந்தளிக்க அவை வால்சுழல அதை கவ்வின. அதன் கால் ஒன்றைப் பிடுங்கியபடி ஒரு முதலை விலகிச்செல்ல இரு முதலைகள் அதை தொடர்ந்தன. கரைச்சேற்றிலிருந்து மேலும் மேலும் முதலைகள் நீரிலிறங்கி அந்த நீர்க்கொந்தளிப்பை நோக்கி சூழ்ந்து சென்றன. சாம்பன் தன் எண்ணங்கள் முற்றிலும் உறைய சித்தம் ஒரு ரசத்துளி என நடுங்கி நிலைகொண்டிருப்பதை உணர்ந்தான்.
கால் நிலத்தைத் தொட்டதும் சர்வதன் படகை தூக்கிக்கொண்டு கரை நோக்கி சென்றான். “முதலைகள்… மிதிக்காமல் வருக!” என்றான். “ஆம்” என்றான் திகைக்கும் கால்களுடன் வந்த சாம்பன். கரையில் படகை வைத்தபின் அவன் கைகளைப்பற்றி இழுத்து சேற்றுமேட்டில் நிறுத்திய சர்வதன் “நன்று! இனி அவர்கள் வந்துவிட்டார்களா என்று பார்ப்போம்” என்றான். வாயில் கையை வைத்து நரியின் ஓசையை எழுப்பினான். இருமுறை அவ்வோசை எழுந்தமைந்த பின்னர் தொலைவில் அகல் விளக்கு ஒன்று சுழன்று அணைந்தது தெரிந்தது.
“செல்க!” என்றான் சர்வதன். சாம்பன் வாளை உருவி இடதுகையில் எடுத்துக்கொண்டு புதர்களினூடாக கால்வைத்தும் புடைத்த வேர்கள்மேல் ஏறித்தாவியும் அந்த ஒளி நோக்கி சென்றான். அணுகுந்தோறும் விழி தெளிய அவன் அங்கே நின்றிருந்தவனது உருவின் வான்கோட்டு வடிவை கண்டான். அருகணையாமல் நின்று “யார்?” என்றான். “படகு எங்குள்ளது?” என்றது அக்குரல். “அங்கே… கங்கையின் கரையில்” என்றான் சாம்பன். அவன் அருகே வந்து “வருக இளவரசே, தங்கள் குரலை நான் நன்கறிவேன்” என்றான். “என் பெயர் காதரன். நான் இந்திரப்பிரஸ்தத்தின் ஒற்றன். யௌதேயரின் ஆணைகொண்டவன்.”
“வருக!” என அவன் அழைத்துச்சென்றான். அவர்கள் மரக்கூட்டங்களுக்கிடையே நடந்தனர். “கானுறைக் காளிக்கு கருக்கிருளில் கரிச்சான்குரல் கேட்கும்போது உயிர்ப்பலி கொடுப்பது இங்குள்ள மரபு. அதற்காக காத்திருக்கிறார்கள்” என்றான். “கரிச்சான் அஞ்சிவிடலாகாதென்பதனால் பந்தங்களோ விளக்குகளோ ஏற்றுவதில்லை. ஒலிகளும் எழுப்புவதில்லை. கோயில் நடைதிறந்து நீராட்டும் மலர்செய்கையும் நடந்துவிட்டது. பூசகரும் இசைச்சூதரும் காத்திருக்கிறார்கள்.”
“இளவரசி வந்துள்ளார்களா?” என்றான் சாம்பன். ஏன் பன்மையில் கேட்டோம் என எண்ணிக்கொண்டான். “உங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றான் காதரன். “உடன் எத்தனை காவலர் இருக்கிறார்கள்?” அதை கேட்டிருக்கக்கூடாது என உணர்ந்தான். “பதினெண்மர் அணுக்கக் காவலர். தேர்க்காவலர் எழுவர். எட்டு புரவிகள். அவர்களில் பன்னிருவர் வில்லவர். எஞ்சியவர்கள் வேலேந்தியவர்கள்” என்றான் காதரன்.
சாம்பன் உள்ளத்தின் ஓசையை கேட்டபடி உடன் நடந்தான். அவர்களின் ஓசைகேட்டு பறவைகள் எழுந்து சிறகடித்தன. “பறவைகள்” என்றான். “ஆம், ஆனால் அவை தங்களைப் பார்த்து எழுகின்றன என எண்ணுவார்கள்.” காதரன் கைகாட்ட அவன் நின்றான். தொலைவில் ஆளுயரமான கல்லால் ஆன சிற்றாலயம் தெரிந்தது. அதைச் சூழ்ந்து நின்றிருந்தவர்கள் நிழலுருவென தென்பட்டனர். வேல்முனைகள் மான்விழிகள் என மின்னின. வீரர்களின் தலைப்பாகைகளின் வெள்ளிநூல் பின்னல்கள் ஈரமெனத் தெரிந்தன. புரவிகள் சற்று அப்பால் மரத்தடிகளில் கால்தூக்கி அரைத்துயிலில் நின்றிருந்தன. ஒரு சிறிய துணிமஞ்சலை இறக்காமல் சுமந்தபடி தூக்கிகள் நின்றிருந்தனர்.
அவன் இளவரசியை கண்டான். இருமருங்கும் சேடியர் நிற்க அவள் கைகூப்பியபடி கோயில் முகப்பில் நின்றாள். முகத்தின் பக்கவாட்டு வெட்டுத்தோற்றத்திலேயே அவளிடமிருந்த துரியோதனனின் சாயல் தெரிந்தது. பின்னர் நெற்றியும் மூக்கு வளைவும் இதழ்களின் மெல்லிய மலர்வும் முகவாயும் கழுத்துச்சரிவும் மார்பெழுச்சியும் தோள்களின் குழைவும் துலங்கின. ஒளியில் என, அருகில் என அவளை அவன் கண்டான். இளநீல மென்பட்டு அரையிருளில் வெளிறிய வெண்மையென விழிமாயம் காட்டியது. கைவளைகளின் அணிச்செதுக்குகளைக்கூட விழிதொட்டுவிட முடிந்தது.
“காதரரே, நீங்கள் சென்று நான் வந்திருக்கும் செய்தியை இளவரசியிடம் தெரிவியுங்கள். இளவரசி ஏதேனும் ஒன்றைச் சொல்லி இப்பக்கமாக வருவார்கள் என்றால் படைவீரர்களை போக்குகாட்டி இங்கிருந்து கங்கைக்கு சென்றுவிடலாம்” என்றான் சாம்பன். “பீமசேனரின் மைந்தர் சர்வதர் படகுடன் கங்கைக்கரையில் காத்திருப்பதாக சொல்லுங்கள்.” காதரன் “அது அவர்களுக்கே தெரியும்” என்றபடி முன்னால் சென்றான்.
அவன் சென்று இளவரசியிடம் பேசுவதை சாம்பன் கண்டான். அவள் ஓரிரு சொல்லில் விழிவிலக்காமல் ஏதோ கூற அவன் தலைவணங்கி பின்னகர்ந்தான். பின்னர் சேடியரிடமும் காவலரிடமும் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு இயல்பாக பின்னகர்ந்தான். பின்னர் மறுபக்கம் காட்டுக்குள் மறைந்தான். அவனை விழிதொடர முயன்று தவறவிட்ட சாம்பன் காத்திருக்கையில் அவனுக்குப் +பின்னால் தோன்றினான்.
“என்ன சொன்னார்கள்?” என்றான் சாம்பன். “இளவரசே, கவர்ந்துசெல்வதற்காகவே இளைய யாதவரின் மைந்தர் வந்தார். அதுவே நிகழவேண்டும் என்றார் இளவரசி” என்றான் காதரன். “அப்படியென்றால்?” என்றான் சாம்பன். “நீங்கள் இப்படைவீரர்களை வென்று அவர்களை கவர்ந்துசெல்லவேண்டும்” என்றான் காதரன். சாம்பன் “இத்தனை பேரையா?” என்றான். “ஆம், அதுவே இளவரசிக்கு பெருமை… நாளை இந்நிகழ்வைக் கேட்கும் எவருக்கும் உங்கள்மேல் மதிப்பு எழவேண்டும்.”
சாம்பன் “ஆம்” என்றான். பின்னர் பெருமூச்சுவிட்டு “மெய்” என்றான். “இதை நான் மட்டுமே செய்யவேண்டும்…” என்றபின் “செல்க!” என்றான். “இன்னும் சற்றுநேரத்தில் கரிச்சான் குரலெழுப்பும். அக்கணமே பலிவிலங்கு வெட்டப்படும்… உடனே பந்தங்களும் விளக்குகளும் ஒளிரத் தொடங்கும். அதன்பின் ஒன்றும் இயலாது.” சாம்பன் “நான் திட்டமிடுகிறேன்… செல்க!” என்றான். அவன் செல்வதை விழிகள் வெறிக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உள்ளம் ஒன்றுடனொன்று தொடர்பற்ற எண்ணங்களால் ஆனதாக, முற்றிலும் பொருளற்றதாக இருந்தது.
பின்னர் அவன் ஒரு நோக்கை அடைந்தான். மிக அருகே ஒரு குரங்கு அவனை நோக்கிக்கொண்டிருந்தது. அந்த அறியாப் புலன் கண்டபின்னரே அவன் விழிதிருப்பி அதை கண்டான். அதன் விழிகளை சந்தித்ததுமே செய்யவேண்டியவை அனைத்தும் முன்னரே நிகழ்ந்து துளித்துளியாக காட்சியாக நினைவிலெழுபவைபோல துலங்கின. அவன் கால்களால் கீழிருந்த கூரிய சப்பைக்கல் ஒன்றை எடுத்தான். கையிலிருந்த வாளை மரத்தில் வெட்டி நிறுத்திவிட்டு அந்தக் கல்லை கையால் நெருடியபடி குரங்கை பார்த்தான். பின் அதை ஓங்கி எறிந்தான்.
கீச் என அலறியபடி அது பாய்ந்து மரக்கிளைகளில் தாவி ஓட பல குரங்குகள் துயிலெழுந்து பெருங்குரல்களில் ஓசையிட்டபடி கிளைகளை உலுக்கத் தொடங்கின. பறவைகள் பதறி வானிலெழ சில கணங்களுக்குள் இருண்ட காடு ஒலிக் கொந்தளிப்பை அடைந்தது. “யார்? யாரென்று பார்” என காவலன் ஆணையிட்டான். “குரங்குகள்” என்றான் ஒருவன். “மூடா, முதற்குரங்கு ஏன் அலறியது? ஏழுபேர் உள்ளே சென்று பாருங்கள்!” வேலுடன் வீரர்கள் காட்டை நோக்கி வந்து குரங்குக்கூட்டம் ஓலமிட்டுக்கொண்டிருந்த பகுதி நோக்கி செல்ல புதர்களுக்கிடையே குனிந்து பன்றிபோல ஓடிய சாம்பன் சட்டென்று எழுந்து அங்கே நின்ற முதல்வீரனின் கழுத்தை அறுத்தான். அவன் சிறிய குருதிக்கொப்பளிப்போசையும் மூச்சோசையும் எழ கீழே சரிந்தான். உடனே எழுந்து அவனை நோக்கித் திரும்பிய இன்னொருவனை வீழ்த்தினான்.
இருளுக்குள் நிழலுடலசைவுகளாக அங்கே நிலவிய குழப்பத்திலும் குரலோசைகளிலும் அவன் முற்றாக மறைக்கப்பட மூன்றாமவனையும் வீழ்த்திவிட்டு பாய்ந்து இளவரசியை அடைந்தான். “இங்கே! இங்கே! இளவரசி!” என காவலன் கூச்சலிட அனைவரும் அவனை நோக்கி திரும்பினர். வேல்முனைகள் அவனைச்சூழ வில்லவர்கள் நாணிழுத்து அம்புபூட்டினர். அவன் கிருஷ்ணையை பிடித்துக்கொண்டு அவள் கழுத்தில் வாளை வைத்தான். “விலகுக… வேல்கள் தாழட்டும்… இல்லையேல் இளவரசியை கொல்வேன்” என்றான்.
அவன் முன்னால் நகர அவர்கள் அதற்கேற்ப பின்னால் நகர்ந்தனர். “எதுவும் முயலவேண்டாம். ஒரு சிறிய பிழை நிகழ்ந்தால்கூட கௌரவக்குடிக்கு கருவன்னை இல்லாமலாவாள்” என்றான் சாம்பன். அவளை உந்தியபடி காட்டைநோக்கி நடந்தான். காவலர்தலைவனின் விழிகள் அவன் அசைவுகளைத் தொட்டு அசைந்தன. அவன் உதடுகளை ஒரு விழியாலும் பிறர் அசைவுகளை மறுவிழியாலும் அவன் நோக்கினான். விழிகள் பெருகின. ஒவ்வொரு கூர்முனைக்கும் ஒவ்வொரு நோக்குக்கும் ஒருவிழி என அவன் கொண்டான். அப்பகுதி எங்கும் அருவுருவாக நிறைந்து பரந்தான்.
அவன் உள்ளம் ஆழ்ந்த அமைதி கொண்டது. அதுவரை இருந்த அத்தனை அலைக்கழிப்பும் நிலைகொள்ளாமையும் கனவென விலக முற்றிலும் அகம் குவிந்து பேருருக்கொண்டு எழுந்துவிட்டிருந்தான். அதற்கிணையான தருணம் வாழ்வில் அரிதெனக்கூட அமைந்ததில்லை என உணர்ந்தான். வெல்லமுடியாதவனாக, அனைத்தையும் அறிந்தவனாக, எதையும் கடக்கக்கூடியவனாக தன்னை அறிந்தான். கட்டுபோடப்பட்டிருந்த வலக்கையின் வலி அதுவரை எப்போதும் இருப்புணர்த்திக்கொண்டிருந்தது. அது முற்றிலுமாக மறந்து இடக்கையாலேயே அனைத்தையும் அதுவே பிறப்பியல்பென்பதுபோல செய்யமுடிந்தது.
காலில் ஒரு வாள் தட்டுபட்டது. அவனால் கொல்லப்பட்ட வீரன். அக்கணத்தில் தன் வாளை காவலர்தலைவனை நோக்கி வீசிவிட்டு காலால் கீழே கிடந்த வாளை எடுத்து கிருஷ்ணையின் கழுத்தில் வைத்தான். கழுத்தில் வாள்பாய காவலர்தலைவன் குப்புற கீழே விழுந்து உடல்துடித்தான். அனைவரும் திகைத்து அவனை நோக்கிய கணத்தில் மீண்டும் ஒருமுறை வாளை வீசி இரண்டாம்தலைவனை வீழ்த்திவிட்டு காலில் தட்டுபட்ட அடுத்த வாளை எடுத்துக்கொண்டான்.
அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் எச்சரித்தபடி உடல்முட்டி கால்பின்னி பின்னகர்ந்தனர். அவர்களின் உளவல்லமையை உடைத்துவிட்டோம் என உணர்ந்தான். இனி அவர்களால் ஒருங்கு திரண்டு போரிட முடியாது. அவர்கள் வெறும் திரள். காட்டுக்குள் பாயப்போவதாக ஓர் உடலசைவை எழுப்பியபடி அவன் திரும்ப அவர்கள் “சுற்றிவளையுங்கள்…” எனக் கூவியபடி காட்டை நோக்கி பாய்ந்தனர். அவன் அங்கு நின்ற புரவி ஒன்றை நோக்கி சீழ்க்கை அடித்தான். அது செவிகளைக் கூர்ந்து மூக்குவிடைக்க அவனை நோக்கியது. பின்னர் பாய்ந்து அவனை நோக்கி ஓடிவந்தது.
நடுவே நின்ற ஒருவனை உதைத்துத் தள்ளிவிட்டு அவனருகே அது உடல்வளைய அவன் அதன் கடிவாளத்தை பற்றிக்கொண்டு பாய்ந்தேறினான். அவள் இடையை சுழற்றிப்பிடித்து மேலேற்றி தன் முன்னால் அமரச்செய்து அதேகணத்தில் அதன் விலாவை உதைத்து விசைகூட்டி முன்பாயச்செய்து காட்டுக்குள் ஊடுருவிச் சென்றான். அவர்கள் கூச்சலிட்டபடி அவனுக்குப் பின்னால் பாய்ந்துவந்தனர். ஆனால் அம்புகளையோ வேல்களையோ செலுத்தவில்லை. இளவரசி இருட்டில் எங்கே இருக்கிறாள் என அவர்களால் எண்ணமுடியவில்லை.
அவன் புதர்களுக்குமேல் புரவியை பாயவிட்டான். ஒவ்வொரு மரத்தையும் வேர்ப்புடைப்பையும் தனித்தனியாகக் கண்டு புரவியை செலுத்தினான். கங்கையின் நீர்ப்பரப்பு இளநீல ஒளியாக தெரிய அதன் பகைப்புலத்தில் இலைகள் செறிந்த கிளைகள் நிழலுருக்களாக அசைந்தன. புரவிக்குளம்புகளின் ஓசையை காடே எதிரொலித்தது. அவர்கள் புதர்களுக்குள் முட்டிமோதி பின்தங்கிவிட்டிருந்தனர். சர்வதன் எழுந்து நின்று கைவீசினான். அவனை நோக்கி சென்று புரவியை வளைத்து நிறுத்தி பாய்ந்திறங்கி அவளை இடைபற்றி இறக்கினான்.
சர்வதன் படகை நீரில் தூக்கிப்போட்டு தானும் இடைவரை நீரில் இறங்கிக்கொண்டான். கிருஷ்ணை நீரில் இறங்கிச்சென்று படகில் ஏறி அமர்ந்தாள். படகு நீரில் நீந்தி அகல சாம்பன் பாய்ந்து அதன் முனையைப்பற்றி ஏறினான். முன்னரே பொருத்தி வைத்திருந்த துடுப்பை எடுத்து தசைத்திரள் புடைக்க உந்திய சர்வதன் படகை கங்கைப்பெருக்கின்மேல் கொண்டுசென்றான். அஸ்தினபுரியின் வீரர்கள் கரையோரமாக வந்து முட்டிமோதினர். அவர்களால் அம்புதொடுக்கலாமா என முடிவெடுக்க இயலவில்லை. கரையோர முதலைகளை எவனோ மிதிக்க அது அவனைக் கவ்வியது. அவன் அலறியபடி துடிக்க பிறர் அவனை அப்படியே விட்டுவிட்டு பின்னால் ஓடினர்.
கரையில் நின்றிருந்த ஒருவன் கொம்போசையை எழுப்பினான். சாம்பன் “மூடன், இத்தனை பிந்தி ஊதுகிறான்…” என்றான். அந்த ஓசைகேட்டு அப்பால் கங்கையின் மையப்பெருக்கில் நின்றிருந்த பெரிய படகொன்றிலிருந்து மறுமொழி எழுந்தது. அதிலிருந்து சிறிய படகுகள் இருபுறமும் நீரில் உதிர்ந்தன. சர்வதன் கொடிமரத்தைப் பொருத்தி பாய்களை கட்டினான். அதற்குள் அஸ்தினபுரியின் விரைவுப்படகுகள் பாய்களை விரித்துவிட்டிருந்தன. விர்ர் என்னும் ஒலியுடன் அவர்களின் பாய்கள் புடைத்து மேலெழுந்தன. சர்வதன் துடுப்பை இழுத்து படகை காற்றுக்குத் திருப்பி பாய்களை இணைந்து விசைகொள்ளச் செய்தான். அவர்களின் படகு நீர்ப்பரப்பை கிழித்துக்கொண்டு விரைவுகொண்டது.
விரைவுப்படகுகள் அவர்களை நோக்கி அம்புவடிவில் வந்தன. முதன்மைப்படகில் இருந்தவர்களின் ஆடைகள் படபடப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. பின்னர் இருபக்கப் படகுகளும் விசைமிகுந்து இணையாக அமைய அம்பு பிறையாக மாறியது. “விரைவு… விரைவு!” என்றான் சாம்பன். சர்வதன் பாய்விசையுடன் இணைந்து துடுப்பாலும் உந்தினான். வானில் போரிடும் பறவைகள்போல அவர்கள் நீர்ப்பரப்பில் பறந்து செல்ல அஸ்தினபுரியின் படகுகள் துரத்தி வந்தன.
கிருஷ்ணை படகின் கயிற்றில் கால்களை பிணைத்துக்கொண்டு உடல்குறுக்கி அமர்ந்திருந்தாள். “நான் இன்று ஒன்றை உணர்ந்தேன்” என்றான் சாம்பன். “அச்சமும் சிறுமதியும் கொண்டிருந்தாலும் நான் இளைய யாதவரின் மைந்தன். அவர் என்னில் எழும் தருணங்கள் உண்டு.” புடைத்த பாய்கள் அரக்கர்கள்போல அசைந்து நடமிட சூழ வந்த அஸ்தினபுரியின் விரைவுப்படகுகளை நோக்கியபடி “நான் அஞ்சுவதற்கேதுமில்லை. நான் அறியவேண்டுவனவும் இல்லை…” என்றான். “இளையோனே, அப்புரவியை அழைக்கும் சீழ்க்கையை நான் முன்னர் அறிந்திருக்கவேயில்லை. அது என் நாவிலெழுந்தது.”
குனிந்து கீழே கிடந்த வில்லை எடுத்தான். காலால் அதை பற்றிக்கொண்டு ஒற்றைக்கையால் நாணிழுத்துப் பூட்டினான். கிருஷ்ணை அம்புகளை எடுத்து அளிக்க அவன் தொடுத்த அம்பு எழுந்து சென்று முதல் விரைவுப்படகின் பாய்மேல் பதிந்து அதை கிழித்தது. அதன் விசை தடுமாற இன்னொரு அம்பு அதன் அமரத்தில் இருந்தவனை வீழ்த்தியது. “என் அம்புகள் ஒன்றுகூட குறிதவறாதென உணர்கிறேன்” என்றான் சாம்பன். இன்னொரு அம்பு இரண்டாவது படகிலிருந்தவனை நீரில் சரியச்செய்தது. அடுத்த அம்பில் அவன் அருகே இருந்தவன் விழுந்தான். “நான் படையாழியையே ஏந்த முடியும். இப்புவியை வெல்லமுடியும்!” என்றான் சாம்பன்.