எழுதழல் - 57
ஏழு : துளியிருள் – 11
மதுராவின் யமுனைக்கரையில் அமைந்த சிறிய மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து பிரமோதரின் சப்ததாராவலியை ஆராய்ந்துகொண்டிருந்த யௌதேயன் சர்வதனின் எடைமிக்க காலடிகள் மரப்படிகளில் ஓசையுடன் எழுந்து அணுகுவதை கேட்டான். அதிலிருந்த விரைவை உணர்ந்து ஏடுகளை அடுக்கி பட்டு நூலால் கட்டியபடி அவன் வருகைக்காக காத்திருந்தான்.
நீர் பிளந்து பெருமீன் எழுவதுபோல படிப்பள்ளத்தில் இருந்து மேலெழுந்த சர்வதன் அங்கிருந்தே உரத்த குரலில் “மூத்தவரே, நான் தங்களிடம் உரைத்ததுபோல நாம் எண்ணாத பிறிதொன்று நிகழ்ந்துள்ளது” என்றான். “கணிகரின் சூழ்திறன் இளைய யாதவருக்கு நிகரானது என்பார்கள். இப்போது ஏற்கிறேன்.” அவன் அணுகிய ஒலியிலேயே எதிர்பாராத செய்தி இருந்ததை யௌதேயன் உணர்ந்திருந்தான். ஆயினும் அவன் உளச்சோர்வடைந்தான். தாழ்ந்த குரலில் “என்ன நிகழ்ந்தது?” என்றான்.
சர்வதன் “அஸ்தினபுரியில் தந்தை துரியோதனரின் மகள் கிருஷ்ணைக்கு மணத்தன்னேற்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பறவைத்தூது இன்று காலை மதுராவுக்கு வந்தது. போர் அணுகிக்கொண்டிருப்பதனால் கிருஷ்ணையின் மணத்தை விரைந்து நிகழ்த்த வேண்டியிருக்கிறதென்றும் இன்னும் சில நாட்களில் கூடும் ஷத்ரியப் பேரவைக்கு முன்னரே மணநிகழ்வு நிறைவுற வேண்டுமென்பதனால் ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுக்க எண்ணி நாள்குறிக்கப்பட்டது என்றும் அவர் சொல்கிறார்.”
“ஆகவே வரும் தேய்பிறை ஐந்தாம் நாளில் மணத்தன்னேற்பு நிகழ்வு முடிவு செய்யப்பட்டுள்ளதென்று ஓலை சொல்கிறது” என்றபடி சர்வதன் அமர்ந்தான். அவன் அமர்ந்த பீடம் முனகியது. “அரண்மனையே பதறி நாகம் நுழைந்த பறவைமரம்போல ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அடுமனையில் இருக்கையில் அங்கு வந்த சூதர் ஒருவர் இதை சொன்னார். பாதியுணவில் எழுந்து சென்று யாதவ அவையில் நுழைந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன். என்னைக் கண்டதும் அனைவரும் எழுந்து என்னை சூழ்ந்துகொண்டனர். அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு கோணத்தில் அதை கூறமுடிந்தது. தங்களிடம் அறிவிப்பதற்கு ஓடிவந்தேன்.”
“அக்ரூரர் இன்னும் அங்கு சென்று சேரவில்லையல்லவா?” என்று யௌதேயன் கேட்டான். “ஆம், இன்று காலைதான் அவர் கிளம்பியிருக்கிறார். இப்போது கங்கைக்குள் நுழைந்திருப்பார்” என்றான் சர்வதன். யௌதேயன் கசப்புடன் புன்னகை புரிந்து “நான் எண்ணியது சரிதான். யாதவ குடித்தலைவர்களில் எவரோ அஸ்தினபுரிக்கும் ஒற்றர்கள்” என்றான்.
“அவ்வாறு குடிநெறி பிறழ்ந்து பிறிதொருவருக்கு ஒற்றர் பணி செய்யுமளவுக்கு சூழ்திறனும் உளக்கரவும் கொண்டவர்கள் அல்ல குலயாதவர்கள். உண்மையில் அவர்கள் பிறழ்வே நாவில் பூணிலாமைதான். நேற்று அவையிலிருந்து கிளம்புகையிலேயே தங்களுக்குள் பூசலிடத் தொடங்கியிருப்பார்கள். தங்கள் அரண்மனைகளுக்கு சென்றுகொண்டிருக்கையிலேயே சந்தித்த அனைவரிடமும் அதை சொல்லியிருப்பார்கள். வாயிற்காவலன், அடுமனையாளன், அணி ஏவலன் அனைவரிடமும். நாவிதன் அறிந்த சொல் நாடறிந்தது என்பது தொல்மொழி” என்றான் சர்வதன்.
“நேற்றிரவே அவைநிகழ்ந்த அனைத்தையும் மதுராபுரியினர் அனைவரும் அறிந்திருப்பார்கள். இங்கிருந்து பல பறவைகள் அஸ்தினபுரி நோக்கி எழுந்திருக்கும்” என்றான். யௌதேயன் “ஆம், செய்தி கிடைத்ததுமே முடிவெடுத்துவிட்டார்கள். ஓரிரு நாழிகைக்குள்ளேயே அங்கிருந்து புறா கிளம்பியிருந்தால்தான் இப்போது இங்கு வந்து சேர்ந்திருக்க முடியும்” என்று அகம்நோக்கிய குரலில் சொன்னான். “எத்தனை பெரிய உள்ளத்துடன் எதிராடிக்கொண்டிருக்கிறோம் என்னும் எண்ணம் திகைப்பையும் பின்னர் ஊக்கத்தையும் அளிக்கிறது. இதுவரை அன்னை வாலுடன் ஆடிய குருளைகள் நாம். இப்போதே முதுவேங்கையை எதிர்கொள்கிறோம்.”
“எண்ணிப்பார்க்கையில் எத்தனை சிறந்த முடிவென்று வியப்பே தோன்றுகிறது. யாதவர்களுக்கு அஸ்தினபுரி இப்போது பெண் மறுக்கவில்லை. ஏனெனில் இன்னமும் மணத்தூதை அவர்கள் அறியவில்லை. மணத்தன்னேற்புக்கு முறைப்படி அழைப்பு விடுத்திருப்பதனால் தங்கள் குடிக்கு நிகராக யாதவரை நடத்தவில்லை என்ற குறை நீங்குகிறது. ஷத்ரியர்கள் தங்கள் மணத்தன்னேற்பில் முடிகொண்ட அனைவரையும் அழைக்கலாம் என்பது தொல்நெறி. அசுரரும் நிஷாதரும்கூட மணத்தன்னேற்பில் அவைபுகுந்து அமரலாம் என முன்காட்டு உள்ளது. ஆகவே ஷத்ரியர்கள் உளக்குறை கொள்ள முடியாது” என்று யௌதேயன் சொன்னான்.
“மணத்தன்னேற்பு நிகழுமெனில் யாதவ இளவரசர் எவரும் லக்ஷ்மணையை வென்று கைக்கொள்ள முடியாது. இவர்கள் எவருமே வில்லிலோ கதையிலோ திறன்கொண்டவர்கள் அல்ல” என்று சர்வதன் சொன்னான். “சாம்பர் அவையெழுந்து திறன்காட்ட முற்பட்டார் எனில் லக்ஷ்மணை ஒருபோதும் அவருக்கு மாலை சூட்டமாட்டாள். மிக எளிய படைக்கலப் பயிற்சி வைத்தால்கூட மாளவ அரசரின் மைந்தரோ கலிங்கத்தின் இளவரசரோ காமரூபத்தின் சுப்ரஜரோதான் வெல்வதற்கு வாய்ப்பு.”
யௌதேயன் பெருமூச்சுவிட்டு எழுந்து “எத்தனை மதிக்கூர்மை! இத்தனை தேர்ச்சி அறமுசாவுவதில், நெறிநிலைகொள்வதில், மெய்மை தேடிச் செல்வதில் செலவிடப்பட்டிருந்தால் மானுடம் இன்று எங்கே இருந்திருக்கும்? வெல்வதற்கு மட்டுமே மானுடத்தின் உச்சங்கள் ஒவ்வொரு நாளும் செலவிடப்படுகின்றன” என்றான். “முள்முனையில் மூவுலகும் என்று அஸ்வபாலர் அவருடைய கிருஷ்ணதரங்கிணி என்னும் நூலில் சொல்கிறார். நெறி வகுப்பதன் இடர்கள் பற்றி பேசுகையில்…” பொறுமையின்மையுடன் அப்பேச்சை மறித்து “என்ன நிகழப்போகிறது?” என்றான் சர்வதன்.
யௌதேயன் “மணத்தூது வந்ததுமே யாதவர்கள் குழம்பியிருப்பார்கள். அவர்களால் தங்கள் கணக்குகள் தோற்றுவிட்டன என உணரமுடியாது. கடந்துசென்று உணர்பவர் மதுராவில் இன்று இருவரே. பேரரசர் வசுதேவர், மூத்தஅரசி ரேவதி. லக்ஷ்மணையை யாதவர் வெல்லப்போவதில்லை என ரேவதி அறிந்திருப்பார் இந்நேரம். ஆனால் மண மறுப்பு நிகழவும் இல்லை என்பதனால் பலராமர் அவையில் சொன்னதே வென்றதாக பொருள்கொள்ளமுடியும் என்றும் கணித்திருப்பார். பலராமரிடம் அதை சொல்லி யாதவ அவையில் முன்வைத்திருப்பார். இப்போது யாதவர் அவைகூடி பேசிக்கொண்டிருப்பார்கள். யாதவர்களும் அஸ்தினபுரியும் கொள்ளும் படைக்கூட்டு உறுதியாகிறது” என்றான்.
சர்வதன் “நாம் வந்த பணியை முடித்துவிட்டோம். விடைபெற்று கிளம்புவோம்” என்றான். யௌதேயன் “அல்ல, யுதிஷ்டிரரின் மைந்தனாக நான் இங்கு வந்தேன். அவர் இங்கு ஆற்றும் பணி எதுவோ அதை முடித்தே நான் கிளம்பவேண்டும்” என்றபின் “எழுக! நாம் சாம்பரை சென்று சந்தித்து வருவோம்” என்றான். “சாம்பரையா? எதற்கு?” என்றான் சர்வதன். யௌதேயன் புன்னகைத்து “அவரிடம் நாம் பேசவேண்டியவை சில உள்ளன” என்றான்.
சாம்பன் படுத்திருந்த மருத்துவநிலை நோக்கி செல்கையில் யௌதேயன் சர்வதனிடம் “இளையோனே, அவர் உன் மூத்தவர். உன்னை இளமையில் தூக்கியிருக்கிறார். ஆகவே அவரிடம் நீ ஒரு சொல் பொறைகோருவதில் பிழையில்லை” என்றான். சர்வதன் புன்னகைத்து “அதை நான் அரசுமுறையாகவே செய்கிறேன், மூத்தவரே” என்றான். “வெறும் சூழ்ச்சி என நான் இதை சொல்லவில்லை. உள்ளுணர்ந்தே நீ இதை செய்யலாம். மூத்தவர் முனியாதிருப்பது எவருக்கும் நன்று” என்றான். சர்வதன் புன்னகைத்தான்.
மருத்துவநிலை வாயிலில் நின்ற காவலன் தலைவணங்க அவனிடம் தங்கள் வருகையை அறிவிக்கும்படி யௌதேயன் சொன்னான். அவன் உள்ளே சென்றதும் “நிஷாத குருதி கொண்டவர் சாம்பர். அவர்கள் மெல்லுணர்வுகளை ஐயப்பட இன்னமும் நூல்களால் கற்பிக்கப்படவில்லை. ஆகவே எளிதில் உளம் நெகிழ்பவர்கள்” என்றான். “ஆம், நாம் அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றான் சர்வதன். சினத்துடன் யௌதேயன் “நான் அப்படி சொல்லவில்லை” என்றான். “ஆம், தாங்கள் சொல்லவில்லை” என்றான் சர்வதன்.
சினத்துடன் பற்களைக் கடித்தபடி யௌதேயன் கைகளை வீசி சர்வதனை புறக்கணித்தபடி திரும்பிக்கொண்டான். ஏவலன் திரும்பி வந்து “வருக!” என்றான். அவர்களை சாம்பன் படுத்திருந்த சிற்றறைக்குள் இடைநாழியினூடாக அழைத்துச் சென்றனர் ஏவலர். மூலிகை எண்ணையும் குங்கிலியப் புகையும் கலந்து மணத்த சிற்றறைக்குள் உயரமற்ற பீடத்தில் சாம்பன் படுத்திருந்தான். அவனுடைய வலக்கை தேன்மெழுகும் களிமண்ணும் கலந்து பூசப்பட்டு மரவுரிக்கட்டுக்குள் ஒரு பொதி என சிறுமெத்தைமேல் வைக்கப்பட்டிருந்தது.
அவர்களைக் கண்டதும் ஐயத்துடன் அவன் விழிகள் உலைந்தன. யௌதேயன் தலைவணங்கி “களத்திலாயினும் மூத்தவர்மேல் படைக்கலம் ஏவியது பெரும்பிழையென்று நான் இவனிடம் சொன்னேன். தங்களிடம் நான் முதலில் தலை கால்தொட்டு பொறுத்தருள்கையை கோர விரும்புகிறேன்” என்றான். சாம்பன் விழிமாறுபட்டு “ஆம், நானும் சற்று எல்லை மீறிவிட்டேன். அத்தருணத்தில் ஏதோ புரியாத எரிச்சலொன்ற இருந்தது” என்றான்.
சர்வதன் சாம்பனின் கால்களில் தலைவைத்து “பொறுத்தருள்க, மூத்தவரே! தங்கள் இளையோன் செய்த பிழை” என்றான். சாம்பன் மேலும் நெகிழ்ந்து தன் இடக்கையை அவன் தலைமேல் வைத்து “நன்று! இந்தப் பணிவு உன்னை காக்கட்டும்” என்றான். “அத்தனை பெரிய கதையை இவன் சுழற்றி வீசுவான் என்று எண்ணியபோது நடுங்கிவிட்டேன். என் கையில் ஏழு எலும்புகள் முறிந்துவிட்டன. நல்லவேளை அது என் தலையை தாக்கவில்லை” என்றான்.
“இல்லை, மூத்தவரே. என் பிழை…” என்று சர்வதன் சொல்லத்தொடங்க அவன் தோளை தன் இடக்கையால் அறைந்து “நன்று! எவ்வாறாயினும் நீ என் இளையோன். அயலான் ஒருவனிடம் நான் அடி வாங்கவில்லையல்லவா?” என்று சாம்பன் சொன்னான். யௌதேயன் “அத்தருணத்தில் அவ்வாறு நிகழ்ந்தது. ஆனால் இன்று அதன் அரசியல் தருணத்தை எண்ணும்போது பெரும் வருத்தம் உருவாகிறது” என்றான்.
சாம்பன் புருவம் சுளித்து யௌதேயனை நோக்க “தாங்கள் அறிந்திருப்பீர்கள், அஸ்தினபுரியில் துரியோதனரின் மகள் லக்ஷ்மணையை தங்களுக்கு மணமகளாகக் கோரி இங்கிருந்து தூதனுப்பப்பட்டது. அக்ரூரர் இன்னும் அஸ்தினபுரிக்கு சென்று சேரவில்லை. ஆனால் அதற்குள் அஸ்தினபுரியிலிருந்து இங்கு அவளுடைய மணத்தன்னேற்புக்கான அழைப்பு வந்துவிட்டது” என்றான்.
சாம்பன் விழிகள் நிலைபதறிக்கொண்டே இருந்தன. சர்வதன் ஓரவிழியால் யௌதேயனின் முகத்தை பார்த்தான். அதிலிருந்த கனிவும் அமைதியும் அவனில் புன்னகையை உருவாக்கின. யௌதேயன் “இந்தச் சூழ்ச்சியை தங்களைப்போன்ற அரசு அறிந்த ஒருவர் புரிந்துகொள்வதொன்றும் கடினமல்ல, மூத்தவரே. இப்போது யாதவக்குடியை அவர்கள் நிகரென நடத்தவில்லையென எவரும் சொல்ல முடியாது. ஆனால் ஒருபோதும் யாதவர் அஸ்தினபுரியின் அரசரின் மகளை கொள்ளவும் முடியாது” என்றான்.
“ஏனென்றால் இத்தகைய மணத்தன்னேற்புகளில் எவர் வெல்ல வேண்டுமென்பது பெரும்பாலும் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. தன் மகளை மாளவ இளவரசருக்குக் கொடுக்கவே துரியோதனர் முயல்வார். ஏனெனில் சிந்துவுடன் முன்னரே மணஉறவுள்ளது. கூர்ஜரம் சிந்துவுக்கு அணுக்கமானது. சௌவீர நாடுகள் பால்ஹிக இளவரசர் பூரிசிரவஸ் தலைமையில் அவர்களின் படைக்கூட்டுக்குள் வந்துவிட்டன. தென்னகத்தில் மாளவமும் அவந்தியும் மட்டுமே முரண்பட்டு நிற்கின்றன” என யௌதேயன் சொன்னான். “விராடம் எங்களுடன் நிற்பதனால் விராடத்திற்கு எதிர்நிற்கும் மாளவத்தின் ஆதரவு கௌரவர்களுக்கு தேவையாகிறது. மாளவ இளவரசர் விற்போரில் வல்லவர் என்கிறார்கள். ஆகவே அரிய வில்நுட்பம் ஒன்றே அங்கு மணப்போட்டியாக அமைக்கப்பட்டிருக்கும்.”
“தாங்கள் அறிவீர்கள் யாதவர்களில் தாங்களன்றி எவருமே வில்லில் சிறந்தவர்கள் அல்ல. சென்று திரும்பும் வளைதடியில் போர்க்கலை பழகியவர்கள் நமது மூத்தோர். வளைதடி நம் கைகளில் நுண்ணுருவில் உறைகிறது. ஆகவே படையாழியையும் எறிவாளையுமே நம்மால் கையாள முடியும். அம்புக்கும் படையாழிக்குமான வேறுபாடு மிக அகன்றது. மீளாதது அம்பு, அதனாலேயே நம்மிடமிருந்து முழுவிசையையும் பறித்துக்கொண்டு செல்வது. படையாழியை கையாள்கையில் நம் உள்ளம் இரண்டாகப் பிரிகிறது. நம் முன் இருப்பது இரண்டு இலக்கு. ஆழி சென்று தாக்குவது ஒன்று, மீண்டு வந்தமையும் நமது கை பிறிதொன்று.”
“ஆகவே ஒற்றை இலக்குகொண்ட அம்பில் யாதவர்கள் ஒருபோதும் தேர்ச்சிகொள்ள இயலாது” என்றான் யௌதேயன். அவன் அதையெல்லாம் ஏன் சொல்கிறான் என சர்வதன் வியந்தான். சாம்பனின் முகத்தில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை என்பது தெரிந்தது. ஆனால் மதிப்புள்ள சொல்லாடல் ஒன்றில் ஈடுபட்டிருப்பதாக அவன் எண்ணுவது விழிகளில் தோன்றியது. சர்வதன் அகத்தே புன்னகையுடன் முகத்தை இறுக்கிக்கொண்டான்.
“ஆம்” என்றான் சாம்பன். “விதிவிலக்கு தாங்கள். வில்லறிந்தவர். ஆனால் நாணிழுத்து அம்பேற்றும் கை உடைந்துள்ளது. அதை அறிந்தே இந்தப் போட்டியை அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஐயமே இல்லை” என்றான் யௌதேயன். “ஆகவே நமக்கு மகற்கொடை மறுத்துவிட்டார்கள் என்றே பொருள்.” சாம்பன் பெருமூச்சுடன் “உண்மை” என்றான். “ஆனால் அச்சூழ்ச்சியை நாம் அவ்வாறே ஏற்று வணங்க வேண்டுமென்றில்லை. நாம் வென்று செல்ல முடியும்” என்று யௌதேயன் சொன்னான். “இன்னும் மணநாளுக்கு ஒன்பது இரவுகள் பொழுதிருக்கிறது.”
சாம்பன் குழப்பத்துடன் நோக்க “இங்கிருந்து தாங்கள் கிளம்பி அஸ்தினபுரியை ஒரே இரவில் சென்றடையலாம்” என்றான் யௌதேயன். சாம்பனின் விழிகள் மேலும் அலைவுகொண்டன. “இளவரசியைக் கவர்ந்து வருவதொன்றும் கடினமல்ல. யாதவர்கள் விரைவுப்படகுகளில் தேர்ந்தவர்கள். அஸ்தினபுரியின் பெரும்படகுகள்கூட நம்மை துரத்திப் பிடித்துவிட முடியாது” யௌதேயன் சொன்னான். சாம்பனின் விழிகள் நிலைத்தன. “பெண்ணைக் கவர்ந்து வருவது யாதவர்களுக்கு முன்னரே வகுக்கப்பட்ட நெறிதான், மூத்தவரே” என்றான் யௌதேயன்.
சாம்பன் பேச வாயெடுக்க அச்சொல் எழ இடைகொடாது யௌதேயன் “உங்கள் தந்தை நான்கு ஷத்ரிய இளவரசிகளை கவர்ந்து வந்தவர். அந்தக் குடிமரபு உங்களுக்குள்ளது. அப்பெண்ணை நீங்கள் உளம்கொண்டுவிட்டீர்கள். அவளும் உளமேற்றுவிட்டாள். ஆகவே எல்லை கடந்து கவர்ந்து வந்தீர்கள்” என்றான். சாம்பன் முகம் அப்போதும் குழப்பத்திலேயே இருந்தது. “தயங்கவேண்டாம், மூத்தவரே. என் இளையோன் உங்களை துணைப்பான். படகை இவன் செலுத்துவான் என்றால் எவரும் தொடர இயலாது. இளைய தந்தை பீமசேனரே உங்களுக்கு துணைவந்தாரென்று கொள்ளுங்கள்.”
சாம்பன் முகம் சற்று மலர்ந்தது. ஓரவிழியால் சர்வதனை நோக்கிவிட்டு “ஆம், இவன் உடன் வந்தால் என்னால் அதை இயற்ற முடியும்” என்றான். “ஆனால் இவன் உடன் வருவது எவருக்கும் தெரியவேண்டியதில்லை” என்று யௌதேயன் சொன்னான். “ஏனெனில் இது முழுக்க முழுக்க யாதவர்களின் செயலாகவே இருக்கவேண்டும். பாண்டவர்கள் இதில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்றால் இன்றைய போர்ச்சூழலில் பிறிதொரு பொருள்கொள்வதாக அமையும்.” சாம்பன் “ஆம்” என்று சொன்னான். “ஆனால் அவளுக்கு சற்றேனும் விருப்பமில்லை என்றால்…” என்று தொடங்க “அவளுக்கு விருப்பம் உண்டு” என்றான் யௌதேயன். சாம்பன் “அப்படியா?” என்றான்.
“அவளை நான் நன்கு அறிவேன். அவள் தங்கள் தந்தையை நினைவிலிருத்தி வாழும் கோபமானசை. அவள் தனியறையில் இளைய யாதவர் கோகுலத்து உருவுகொண்டு குழலூதி ஆபுரந்து நின்றிருக்கும் சிலையை நான் கண்டதுண்டு. அவளை கைப்பற்றப்போகும் நீங்கள் இளைய யாதவரின் மைந்தரென்பதே போதுமான தகுதி” என்று யௌதேயன் சொன்னான். “அவளுடைய ஒப்புதலையே கேட்போம். ஒரு புல்லாங்குழலையும் மயிற்பீலியையும் ஓலையுடன் சேர்த்து அவளுக்கு அனுப்பி வைப்போம். நம்புங்கள், நீங்கள் விரும்பும் இடத்தில் அவள் வந்து நிற்பாள்.”
சாம்பன் ஐயம் விலகாமல் நோக்கிக்கொண்டிருந்தான். “அந்த ஓலையை நானே எழுதி அளிக்கிறேன். அதில் இருக்கவேண்டிய முதன்மை வரி ஒன்றுதான். பீலிசூடி வேதம் அளந்த விண்ணவன் வடிவினனின் பெயர்மைந்தனைத் தாங்கும் வயிறென தன்னை அவள் உணர்கிறாளா என்று மட்டும்” என்றான் யௌதேயன். “அவ்வரியை அவள் விழிதொட்டதும் நெஞ்சுலைய விம்முவாள். கண்ணீருடன் அந்த ஓலையை அணைத்துக்கொண்டு ஆம் பிறிதொன்றும் அல்ல நான் என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்வாள். கிருஷ்ணனின் அழைப்பை மறுக்கும் வல்லமை ராதைகளுக்கில்லை. இப்புவி இன்று ராதைகளால் நிறைந்துள்ளது.”
சாம்பன் முகம் மலர்ந்து “ஆம், அவ்வாறே நானும் உணர்கிறேன். இது நிகழும். நான் அவளை வெல்வேன்” என்றான். “உங்கள் குலத்தின் பொருட்டு நீங்கள் இதை செய்தாகவேண்டும். உங்களுக்கு முறைப்படி தன் மகளை அளிக்க துரியோதனருக்கு உளத்தடைகள் இருக்கலாம். அதைவிடப் பெருந்தடை அவர் குலமும் அவருடன் நிற்கும் ஷத்ரிய குடிகளும் அளிப்பது. பெண்கவர்ந்து வந்துவிட்டால் எல்லை கடந்து பூசலிடலாகாது என்பது பாரதவர்ஷத்தின் நெறி. அவளை இங்கு கொண்டுவந்த பின்னர் உரிய சீர்வரிசைகளுடன் தங்கள் பெரிய தந்தை பலராமர் அங்கு செல்லட்டும். தன் மாணவனுக்கு அவர் ஆணையிடட்டும். அவரால் மறுக்கமுடியாது.”
“குலக்கோப்பு அவ்வாறு முழுமையடையும். அதன் பின்னர் யாதவர்கள் ஷத்ரியக் குருதியற்றவர்கள் என்று எவர் சொல்லமுடியும்? அவர்களை ஒதுக்கவோ படைகொண்டு அவர்கள்மேல் எழவோ எந்த ஷத்ரியர் துணிவார்கள்? படைக்கூட்டுகளும் அரசியலிணைப்புகளும் நீர்மேல் எழுத்துக்கள். குருதியோ கல்லில் எழுதப்படுவது.” சாம்பன் “நான் இன்றே கிளம்புகிறேன்” என்றான். “இப்போது இதை எவரிடமும் பேசிக்கொள்ள வேண்டியதில்லை. தாங்கள் அறிவீர்கள், யாதவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கூரைமேல் ஏறி உலகுக்கு கூவி அளிக்கிறார்கள். இங்கு பிறர் ஒருவரிடம் நீங்கள் சொன்னால்கூட ஓரிரு நாழிகைக்குள் அஸ்தினபுரிக்கு செய்தி சென்று சேர்ந்துவிடும். இது நாம் மூவர் மட்டுமே அறிந்த ஒன்றாக இருக்கட்டும்.”
“ஆம்” என்றான் சாம்பன். “அந்தியில் இவன் மதுராவின் படித்துறையில் விரைவுப் படகொன்றில் இருப்பான். பிறர் அறியாமல் சென்று அதற்குள் நீங்கள் ஏறிக்கொண்டால் மட்டும் போதும். அங்கு நீங்கள் செல்வதற்குள் எனது ஓலை அவளை அடைந்திருக்கும். அவளுடைய மறுமொழி உங்களையும் வந்தடைந்திருக்கும்” என்று யௌதேயன் சொன்னான்.
சாம்பன் “நன்று, இளையோனே. இது நீ எனக்கு அளித்த கொடையென்றே கொள்கிறேன்” என்றான். பின்னர் நகைத்து “அவளை நான் கொண்டால் அதன்பின் எவரும் அடுத்த பட்டத்து இளவரசர் எவரென்று கேட்க வாய்ப்பில்லை. அஸ்தினபுரியின் பேரரசரின் மகளை மணந்தவன் யாதவபுரியின் அரியணை அமர்ந்தாலொழிய அதற்கு படைப்பாதுகாப்பும் குடிச்சிறப்பும் இல்லை” என்றான். “ஆம், அதன் பொருட்டே தங்களிடம் பேச வந்தேன்” என்று யௌதேயன் சொன்னான். “கிளம்புவோம், வென்று வருவோம்” என்று சர்வதன் சொன்னான். “நீ உடனிருக்கையில் எனக்கு வெற்றியில் ஐயமே இல்லை” என்றான் சாம்பன்.
மருத்துவநிலையிலிருந்து திரும்புகையில் சர்வதன் நகைத்து “ஆக மீண்டுமொரு பெண்கோள்” என்றான். “நாம் இன்னும் பெண்கொள்ளத் தொடங்கவில்லை, இளையோனே” என்றான் யௌதேயன். “நமது தந்தையர் அன்னையரைக் கவர்ந்து வந்த கதைகளைக் கேட்டு வளர்ந்துளோம். நாம் கொள்ளவிருக்கும் பெண்கள் இப்போதுதான் அகவை நிறைந்திருப்பார்கள். இந்தப் போர் குறிக்கப்படுவதற்குள் நம் அனைவருடைய மணநிகழ்வுகளும் முடிந்திருக்கும்.”
“என்ன நிகழுமென்று எண்ணுகிறீர்கள், மூத்தவரே?” என்று சர்வதன் கேட்டான். “நிகழவிருப்பது ஒன்றே. இவர் சென்று துரியோதனரின் மகளை கொண்டுவந்தாரென்றால் அதைப்போல ஷத்ரியரை சினம் கொள்ளவைப்பது பிறிதொன்று அல்ல. அவர் வேதத்தை மறுக்கிறார், பெருஞ்செல்வ மாநகர் ஒன்றை அமைத்திருக்கிறார், மும்முடி சூடி அரியணை அமர்கிறார் என்பதெல்லாம் இரண்டாமிடமே. ஷத்ரியர்களின் தன்மண நிகழ்வுகளில் புகுந்து தொல்குலத்து இளவரசிகளை கவர்ந்து வந்திருக்கிறார் என்பதே முதன்மையானது. இத்தனை ஆண்டுகளில் அவர்கள் அப்பிழையைப் பொறுத்து மறக்கவே இல்லை. மீண்டும் அவ்வண்ணம் ஒன்று நிகழாதிருக்கவேண்டுமெனில் முதல்வழி காட்டிய இளைய யாதவரை முற்றொழித்து வேர் முடிவு வரை அகழ்ந்து அகற்ற வேண்டுமென்று உறுதி கொண்டிருக்கிறார்கள்” என்றான் யௌதேயன்.
“உபயாதவர் இவ்வண்ணம் வெல்வாரெனில் இங்கிருக்கும் அத்தனை தொல்குடிகளிலிருந்தும் திறன்கொண்ட இளையோர் எழுந்து வருவார்கள். மண் கொள்ளவும், அரசர்களுக்கு இணையாக முடிசூடி அமரவும், ஷத்ரியர் குலத்தில் பெண் கொள்ளவும் அவர்கள் கனவு காண்பார்கள். அதைத்தான் ஷத்ரியர் அஞ்சுகிறார்கள்” என்றான் யௌதேயன். “ஆகவே தந்தையின் வழியிலேயே மைந்தர்கள் செல்வதென்பது அவர்களை பெருஞ்சினம் கொண்டவர்களாக்கும். இவ்வொரு நிகழ்வாலேயே துரியோதனர் உருவாக்கிக்கொண்டிருக்கும் ஷத்ரியப் படைக்கூட்டு சிதறவும்கூடும். துரியோதனர் யாதவர்கள்மேல் சினம்கொள்ளவும் வாய்ப்புண்டு.”
தனக்குள் ஒரு நாற்களப் பரப்பில் காய்களைப் பரப்பி ஆடி முடித்து மீண்டு வந்து “ஒருவேளை பலராமரே சென்று மாணவனைக் கண்டு நயந்து உரைத்தால் அச்சினம் சற்று குறையலாம். ஆனால் இன்று இவர்களுக்கு இருக்கும் படையிணைவும் உளச்சேர்க்கையும் மறையும். முதலில் இது நிகழட்டும். இந்த அனலை மேலும் மூட்ட என்ன செய்வது என்று நாம் எண்ணுவோம்” என்றான் யௌதேயன்.
சர்வதன் புன்னகைத்து “நான் எண்ணியது பிறிதொன்று” என்றான். “மூத்த தந்தையின் தன்னுருவே மூத்தவர் பிரதிவிந்தியராகவும் தாங்களாகவும் அன்னையர் கருவிலெழுந்திருக்கிறது என்று சொல்வார்கள்” என்றான். யௌதேயன் “ஆம், அதற்கென்ன?” என்றான். “இத்திறன்கள் அனைத்தும் அவரிடம் உள்ளவைதான்” என்றபின் “அறச்செல்வரென்னும் முகத்தால் அவற்றை மறைத்து வைத்திருக்கிறார். விதைக்குள் உள்ள பருப்பு முளையில் விதையிலைகளாக வெளிவருவதுபோல தந்தையருள் உறங்கும் மெய்யான உள்ளிருப்பு ஒன்று மைந்தராக எழுகிறதுபோலும்” என்றான்.
அவன் எப்பொருளில் அதை சொன்னான் என்பதுபோல அவனை நோக்கிவிட்டு யௌதேயன் சொல்தவிர்த்து தலைகுனிந்து நடந்தான். அதே புன்னகை முகத்தில் இருக்க சர்வதன் உடன் சென்றான்.