எழுதழல் - 56

ஏழு : துளியிருள் – 10

fire-iconயௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல. நிகழ்ந்தது ஏதென்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் நாம் அவர் கையை உடைத்துவிட்டோம் என்ற செய்தி மட்டும் அத்தனை உபயாதவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இங்குள்ள எந்த யாதவ இளவரசர்களும் முகம்கொடுத்து சொல்லாட மறுக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இன்சொல் உரைத்து அணுகுகிறேன், விழிவிலக்கி செல்கிறார்கள். நாம் வந்த பணி நம்மாலேயே இயலாததென மாறிவிட்டது” என்றான்.

சர்வதன் “முடிவெடுப்பது இவர்களல்ல, குடித்தலைவர்கள் மட்டும்தான். அவர்களிடம் பேசுவோமே?” என்றான். “அதை நான் பேசிக்கொள்கிறேன். களத்தில் கதையை விட்டெறிந்ததுபோல இங்கு அவையில் நீ சொல்லை விட்டெறியலாகாது. உன் நாவில் நஞ்சுள்ளது. உன் தந்தையிடமிருந்து பெற்றது அது. அவைக்கூடத்தில் உன் பெருந்தசைகளை மட்டும் நீ காட்சிப்படுத்தினால் போதும்” என்றான் யௌதேயன். “ஆம் மூத்தவரே, நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னாலும் இந்த உடலை எடையாக நிறுத்தி வைக்கிறேன்” என்றான். அவன் தன்னை ஏளனம் செய்கிறானா என்ற ஐயத்துடன் திரும்பிப்பார்த்த யௌதேயன் “நான் புரிந்துகொள்ளும்தோறும் உனது நஞ்சு வன்மை கொள்கிறது” என்றான். அவன் புன்னகை புரிந்தான்.

அவர்களை இட்டுச்சென்ற காவலன் மதுராவின் அரண்மனையின் நீண்ட சிறு இடைநாழிகள் வழியாக கொண்டுசென்று அரசரின் தனி அவைக்கூடத்தின் வாயிலை அடைந்தான். அவர்கள் வருகை அறிவிக்கப்பட்டபோது உள்ளே நிறையபேர் இருப்பதை சற்றே திறந்த கதவினூடாக வந்த பேச்சொலியிலிருந்து யௌதேயன் அறிந்தான். ஒரு கீற்றென வந்து மறைந்த கலவைக்குரல்களிலிருந்து உள்ளே சற்று சினம்கொண்ட உரையாடல் நடப்பதையும் உணர்ந்தான். காவலன் “தாங்கள் உள்ளே செல்லலாம்” என்றதும் திரும்பி சர்வதனைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

நீண்டசதுர வடிவ அறைக்குள் பலராமர் பெரிய பீடத்தில் மார்பில் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தார். அவருக்கு முன் யாதவர்களின் ஐங்குடிகளையும்சேர்ந்த பதினேழு பேர் அமர்ந்திருந்தனர். யௌதேயன் யாதவக்குடித்தலைவர்களை நோக்கி பொதுவாக தலைவணங்கிவிட்டு சென்று பலராமரின் கால்களைத்தொட்டு தலைசூடினான். அவர் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார் சர்வதனும் அதேபோல் தலைவணங்கிவிட்டு யௌதேயன் அமர்ந்த பீடத்திற்குப் பின்னால் சென்று பெரிய கைகளை மார்பில் கட்டியபடி தலை மச்சுப் பலகையை இடிக்கும் வண்ணம் நிமிர்ந்து நின்றான்.

அங்கிருந்த அனைத்து யாதவர்களின் விழிகளும் அவனுடைய விரிந்த தோள்களிலும் இறுகிய கழுத்திலும் அடிமரமென தரையில் ஊன்றியிருந்த கால்களிலுமே பதிந்து மீண்டுகொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் அதுவரை பேசிக்கொண்டிருந்த அனைத்தும் பொருளிழந்து அவர்களுக்குள்ளேயே கரைந்து மறைந்தன. மெய்யாகவே யௌதேயனின் சொற்களுக்கு தன் உடல் மேற்பொருள் ஒன்றை அளிப்பதை சர்வதன் உணர்ந்தான். பலராமர் “நம் இளையோன். அவன் தந்தையைப்போலவே பேருடலன். முறையாகப் பயின்றால் கதைப்போரில் நிகரற்றவனாவான்” என்றார். யாதவர் அலையும் விழிகளுடன் தலையசைத்தனர்.

மறுபக்கக் கதவு மெல்ல திறக்க அனைவரும் திரும்பிப்பார்த்தபின் எழுந்தனர். ஏவலன் வந்து “பேரரசர் வசுதேவர் வருகை” என்றான். வசுதேவர் நன்றாக கூன்விழுந்த உடலுடன் தோளிலிட்ட பட்டு மேலாடை தரையில் இழுபட கால்களை நீட்டி நீட்டி வைத்து நடந்து வந்தார். அவருடைய ஒரு கால் சற்றே தளர்ந்திருப்பது அது மிகையாக மரப்பலகையில் உரசுவதில் தெரிந்தது. “மாமன்னர் வாழ்க! யாதவ குலப்பேரரசர் வாழ்க!” என்று யாதவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர் கைகூப்பியபடி வந்து அரியணையில் அமர்ந்து முனகினார்.

ஏவலன் மெல்ல அவர் உடலை நிமிர்த்தி முதுகுக்குப் பின்னால் ஒரு தலையணையை வைத்தான். இருகைகளாலும் அரியணை கைப்பிடியைப் பற்றியபோது அவர் கை மெல்ல நடுங்கியது. ஏவலன் அவருக்கு சிறுகிண்ணத்தில் மதுவை அளித்தான். அதை மிடறோசையுடன் அருந்தி மெல்ல ஏப்பம் விட்டபின் “நாம் இங்கு யாதவ இளவரசர்களை வரவேற்க கூடியிருக்கிறோமல்லவா?” என்றார். பலராமர் “இல்லை, தந்தையே. அவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள் உபபாண்டவர்கள் இருவர் இந்திரப்பிரஸ்தத்தின் செய்தியுடன் வந்திருக்கிறார்கள். முறைப்படி அதை தங்களுக்கு தெரிவிக்க விரும்பினார்கள்” என்றார்.

“எங்கே அவர்கள்?” என்று வசுதேவர் திரும்பிப்பார்க்க யௌதேயன் அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், பிதாமகரே. தங்கள் வாழ்த்துக்கள் எனக்கும் என் உடன்பிறந்தோருக்கும் என் குடிக்கும் தந்தையருக்கும் வன்பால் மழை எனப் பொழிவதாக!” என்றான். அவன் தலையில் கைவைத்தபின் சர்வதனை நோக்கி “இவன் பீமனின் மைந்தனா?” என்றார். சர்வதன் வந்து அவர் கால்தொட்டு வணங்கினான். அவன் தோளில் கைவைத்து புயங்களை நீவி மணிக்கட்டுகளை பற்றியபின் “அவனைப்போன்றே பிறந்துள்ளான். குந்தி நல்லூழ் செய்தவள். மைந்தனைத் தொட்டு நிறைவுறுவதென்பது பெரும்பேறு” என்றபின் “பலராமா” என்றார்.

“தந்தையே” என்றார் பலராமர். “இவனை இங்கு வைத்து நாம் கதை பயிற்றுவிக்கலாமே?” என்றார். “அவன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று சிலநாட்கள் தங்கும்படி சொன்னேன். இவ்வரசியல் சூழல் சற்று தெளியட்டும், நம் மைந்தர்தானே” என்றார் பலராமர். “ஆம், இவர்கள் என்றும் நம் மைந்தர்களே” என்றபின் யௌதேயனிடம் “உன் தந்தை சொல்லியனுப்பிய செய்தி என்ன?” என்று கேட்டார் வசுதேவர்.

“பேரரசே, எந்தக் குலத்தின் பேரில் இங்கு யாதவர்கள் ஒருங்கிணைகிறார்களோ அக்குலத்தின் பெயரால் எந்தை மதுராவின் படையுதவி கோருகிறார். அஸ்தினபுரியின் முடியுரிமையில் பாதி எந்தைக்குரியது. அம்முடியுரிமையை பேரரசி குந்திதேவிக்கு அளிப்பார்கள் என்னும் சொல்லுறுதியின் பெயரிலேயே அவர்களை குந்திபோஜர் பேரரசர் பாண்டுவுக்கு மணம்புரிந்து கொடுத்தார் என்பதை தாங்கள் அறிவீர்கள். அந்த மணத்தன்னேற்பை முன்நின்று நிகழ்த்தியவரே தாங்கள்தான். ஆகவே அதன் கனியை அவரும் அவர் மைந்தரும் பெறுவதற்கு துணைநிற்கும் பொறுப்பு தங்களுக்குள்ளது” என்றான் யௌதேயன்.

“பேரரசர் பாண்டுவின் கொடையென யாதவப்பேரரசிக்கும் அவர் மைந்தருக்கும் சொல்லளிக்கப்பட்ட முடியுரிமை எந்த நெறியுமின்றி இங்கு மறுக்கப்படுகிறது. இப்பூசலில் மதுரா எந்தையுடன் நிற்க வேண்டும் என்பதுதான் விண்ணிறைந்திருக்கும் மூதாதையரின் விருப்பமாகவும் இருக்கும்” என யௌதேயன் தொடர்ந்தான். “அவையோரே, இந்திரப்பிரஸ்தத்தில் யாதவக்குருதியினர் ஆள்வது வரைதான் மதுராவும் துவாரகையும் முடிகொண்டு நிலைநிற்க முடியும். இன்று வேதம் காப்பதென்றும், குலம் பெருகுவதென்றும் நடைமுறை சூழ்ச்சியைச் சொல்லி யாதவர்கள் ஷத்ரியர்களுடன் நிற்பார்கள் என்றால் தங்கள் கொடிவழியினருக்கு தீரா இடரொன்றை ஈட்டி வைத்துச் சென்றவர்களாவார்கள்.”

அவையை நோக்கி கைகூப்பியபடி திரும்பி “ஆகவே யாதவக்குருதியின் பெயரால், மூதாதையரின் பெயரால், அழியாக் குலநெறிகளின் பெயரால், மானுட அறத்தின் பெயரால் மதுராவின் கோலை தன் துணையாக அமையும்படி இந்திரப்பிரஸ்தத்தின் அரசர், பாண்டுவின் மைந்தர் குருகுலத்தோன்றல், யுதிஷ்டிரர் கோருகிறார்” என்று யௌதேயன் சொன்னான்.

யாதவர்களின் விழிகள் மாறிவிட்டிருப்பதை சர்வதன் கண்டான். வசுதேவர் “ஆம், இன்று பூசலிட்டு நின்றிருக்கும் இருசாராரில் குருதிவழியில் பாண்டவர்களே நமக்கு அணுக்கமானவர்கள். அவர்களுடன் நாம் நிற்பதென்பதே குலமுறையாகும்” என்றார். பலராமர் உரத்த குரலில் “குலத்தைவிட முந்தையது நெறி. நெறிகள் முளைத்த நிலம் வேதம். தந்தையே, நாம் நின்றிருப்பது வேதத்தில். உண்பது வேதத்தில் முளைத்தவற்றை. எரிந்தமைவது வேதத்தில். நம் கொடிவழிகளுக்கு விட்டுச் செல்வதும் அதுவே” என்றார்.

“தன் சொல்காக்கும் பொறுப்பை ஷத்ரியர்களிடம் மட்டுமே விட்டிருக்கிறது தொல்வேதம். யாதவர்களின் வேதம் அதன் மெய்ப்பொருளிலிருந்து முளைத்தெழுவது. இளைய யாதவர் முன்வைப்பது. யாதவ மூத்தோரே, நம் குடியிலிருந்து பல்லாயிரம் காலம் இந்நிலத்தில் அறமும் முறைமையும் மெய்மையுமென வாழும் நாராயண வேதம் எழுந்ததென்பது நமது பெருமை. நாம் அதை துறந்தோமெனில் வேதத்தின் ஒவ்வொரு சொல்லும் வாழும் காலம் வரை நம்குடிக்கு சிறுமையென அது நம் குடிகள் தலைகுனிய, வாழும் மானுடர் வசைபாட நின்றிருக்கும்” என்றான் யௌதேயன். “நாங்கள் கௌரவப் படைக்கூட்டில் இணைய முன்னரே முடிவெடுத்துவிட்டோம், இளையோனே. யாதவர் நலம்பெறவும், நம் குலம் அரசர்நிரையில் இடம்பெறவும் இதுவே வழி” என்றார் பலராமர். யௌதேயன் “மூத்தவர்களே, நான் உரைப்பதற்கொன்றே உள்ளது. காட்டில் புலி மானுக்கும், நாகம் எலிக்கும் எதிராகவே படைக்கப்பட்டுள்ளது. அந்நெறிகளை அவை மீறுவது அக்காட்டின் இயல்புக்கு மாறானது. ஷத்ரியர் ஒருபோதும் பிறகுடிகளை ஷத்ரியரென ஏற்க முடியாது. தங்கள் முழு படைவல்லமையாலும் அவர்கள் உருவாகி வரும் புதிய அரசகுடியினரை எதிர்த்தாகவேண்டும்” என்றான்.

“என்றோ ஒருநாள் பூசல்முனைகளில் பிறரது படை உதவிகளை அவர்கள் ஏற்கக்கூடும். நிகரென அவையில் அமரச்செய்யவும் கூடும். ஒருவேளை வேறு வழியின்றி சொல்லளிக்கவும் கூடும். ஆனால் அறிக, புலி மானுக்கும் நாகம் எலிக்கும் ஒருபோதும் நிகராவதில்லை! இன்று அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் யாதவர்களுக்களிக்கும் எச்சொல்லையும் அரசுசூழ்தல் அறிந்த எவரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆம், இப்போது துவாரகை அவர்களின் உறவால் ஆற்றலுறக்கூடும். ஆனால் எத்தனை காலத்திற்கு? இந்தப் போர்ச்சூழல் முடிந்தபின்னர் அஸ்தினபுரியின் வாள் நம்மை நோக்கி திரும்பாது என ஏதேனும் சொல்லளிக்கப்பட்டுள்ளதா? அப்படி ஏதேனும் சொல்லளிக்கப்பட்டிருந்தால்கூட பிற ஷத்ரியர் அதற்கு கட்டுப்படுவார்களா?”

பலராமர் “மீண்டும் மீண்டும் நம் குடியவைகளில் எழுப்பப்பட்ட ஐயம். இந்த யாதவ குடித்தலைவர்களிடமே நூறு முறைக்குமேல் இதற்கு நான் மறுமொழி உரைத்துவிட்டேன். மெய், ஷத்ரியர் உருவாகி வரும் அரசகுடிகளை ஏற்கமுடியாது. அது ஒரு முன்மாதிரியாக அமையுமென்றால் அத்தனை குடிகளும் தங்களை ஷத்ரியர்கள் என்று சொல்லி வாளெடுத்து எழுவார்கள். காலப்போக்கில் அத்தனை ஷத்ரிய முடியுரிமைகளும் மறுக்கப்படும். பாரதவர்ஷம் முடிப்பூசல்களால் அழியும். ஆகவேதான் முடியுரிமையை அவர்களின் குடிகளுக்கு வரையறுத்தது தொல்வேதம்.”

“ஆனால் அந்த ஷத்ரியர்கள் அனைவருமே நேற்று வேடர்களோ மச்சர்களோ நாடோடிகளோ ஆக இருந்தவர்கள்தான். வேதம் கொண்டு அவர்கள் ஷத்ரியர்களாக எழுந்தனர். இன்று நம்முன் வேதம் வந்து என்னை ஏற்பீர்களாக என்று ஆணையிடுகிறது. அதை ஏற்பதே நாம் ஷத்ரியர் ஆவதற்கு இருக்கும் ஒரே வழி. அதை விலக்குபவன் அறிவின்மையின் உச்சத்தை தொடுகிறான். அதன்பொருட்டு நாளை நம் குடிகள் நம்மை பழிக்கும்” என்றார் பலராமர்.

யௌதேயன் “சொல்லாடுவதில் பொருளொன்றுமில்லை. இத்தனை உள்ளங்கள் இத்தனை நாட்கள் அமர்ந்து பேசியிருப்பீர்கள் என்றால் அத்தனை கோணங்களிலும் சொற்கள் எழுந்து வந்திருக்கும். அவையனைத்தும் முழுமையாக மறுக்கப்பட்டுமிருக்கும். ஆனால் சொல்லிச் சொல்லி மழுப்பப்பட முடியாத ஒன்றுண்டு, மூத்தவரே. வாளின் கூர்மையை விழிதொட்டு நீவி இல்லாமலாக்க முடியாதென்ற சொல்லுண்டல்லவா? இதோ அமர்ந்திருக்கிறார்கள், யாதவ குடித்தலைவர்கள். இவர்கள் அனைவருக்கும் முன் இதை சொல்கிறேன். துரியோதனர் வெறும் சொல்லளிப்பாரென்றால் அதற்கு எப்பயனும் இல்லை. அதற்கும் அப்பால் செல்லும் உரிமைச்சொல் தேவை நமக்கு.”

அவை விழிக்கூர் கொள்ள யௌதேயன் உரத்த குரலில் “முடிந்தால் குருகுலத்தின் முதன்மை இளவரசியை நமது குடிக்கு அளிக்கட்டும். நமது இளவரசர் சாம்பர் இன்னமும் மணம் கொண்டவரல்ல. பானுவும் ஸ்வரபானுவும்கூட இன்னமும் மணம் புரிந்துகொள்ளவில்லை. கௌரவ இளவரசி கிருஷ்ணையை அவர்கள் நமக்களிக்கட்டும். அதன்பின் நாம் அவர் சொல்லை ஏற்போம்” என்றான்.

அக்கணமே அங்கிருந்த யாதவர்களின் முகங்கள் மாறுபட்டதை யௌதேயன் கண்டான். அவன் உள்ளத்தில் ஒரு புன்னகை விரிந்தது. பலராமர் தத்தளிக்கும் விழிகளுடன் “நாம் பெண்கோரலாம். ஆனால் அது இத்தருணத்தை பயன்படுத்திக்கொள்ளல் என்று பொருள்படுமே?” என்றார். “பயன்படுத்திக்கொள்ளுதல் என்றே பொருள்படட்டும். நமது குடியினர், உடன் பிறந்தாரைப் பிரிந்து அஸ்தினபுரிக்கு படைத்துணையளிக்கிறோம். இதோ பேரரசர் தன் தங்கையை துறக்கிறார். நீங்கள் உங்கள் இளையோனை துறக்கிறீர்கள். ஒருவேளை படைமுகத்தில் யாதவர் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு நிற்கவும் கூடும். அதற்கு ஈடாக அஸ்தினபுரி நமக்கு எதை அளிக்குமென்பதே இப்போதைய கேள்வி.”

“நாம் அளிப்பது குருதி. அதற்கீடாக அவர் அளிப்பது குருதியாகவே இருக்கவேண்டும்” என்றான் யௌதேயன். போஜர் குலத்தலைவர் பிரபாகரர் “ஆம், இளையோன் சொல்வது மெய். அவர்கள் இத்தருணத்தில் செய்யவேண்டியது அது ஒன்றே” என்றார். குங்குர குலத்தலைவர் சுதமர் “ஆம், அவ்வண்ணமே நானும் எண்ணுகிறேன்” என்றார். யாதவ குலத்தலைவர்கள் ஒவ்வொருவரும் உரத்த குரலில் அதை எதிரொலித்தனர்.

யாதவர்கள் கலைந்த குரலில் ஒருவரோடொருவர் ஒரே தருணத்தில் பேசத்தொடங்க அவை பொருளற்ற முழக்கமாக மாறியது. சினத்துடன் பலராமர் எழுந்து இருகைகளையும் விரித்து “அமைதி! சற்று பொறுங்கள். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்?” என்றார். அந்தகக் குலத்தலைவர் “நாம் நம் மணத்தூதை அனுப்புவோம். அவர் என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். அதன்படி முடிவெடுப்போம்” என்றார்.

“உடனடியாக இப்படி ஒரு முடிவை நாம் எடுக்க இயலாது. இதன் அரசியல் சூழல் என்ன என்று நாம் பார்க்க வேண்டும்” என்றார் பலராமர். “பார்ப்பதற்கேதுமில்லை. இன்றே நமது தூதன் கிளம்பட்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அதை வைத்து அடுத்த முடிவை நாம் எடுப்போம்” என்றார். “ஆம், இன்னும் பொறுப்பதற்கில்லை” என்றார் போஜகுடித்தலைவர் பிரபாகரர். ஹேகய குலத்தலைவர் மூஷிகர் உரத்த குரலில் “யாதவ அவை முடிவெடுத்துவிட்டது. மணத்தூது உடனடியாக அனுப்பப்படவேண்டும்” என்றார்.

பலராமர் தத்தளிப்புடன் யௌதேயனைப் பார்த்துவிட்டு “பொறுங்கள்! இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் நமது தந்தை. சொல்லுங்கள் தந்தையே, நாம் இப்போது என்ன செய்வது?” என்றார். வசுதேவர் வேறெங்கிருந்தோ மீண்டு வந்தவர் என மெல்ல முனகியபின் “காலந்தோறும் இங்கு நிகழ்வதொன்றே. நமது மகளிரை நாம் ஷத்ரியர்களுக்கு கொடுக்க முடியும், ஷத்ரிய மகளிரை நாம் முறைப்படி மணக்க முடியாது” என்றார்.

“அப்படியென்றால் இங்கு பேசப்பட்ட அவைநிகர் உரிமை, வேதம் காக்கும் பொறுப்பு, குடிபெருகும் வாய்ப்பு அனைத்திற்கும் என்ன பொருள்? அவை வெறும் அணிச்சொற்கள்தானா?” என்றார் அந்தகக் குடித்தலைவர் சாரசர். எரிச்சலுடன் பலராமர் “நாம் இங்கு பேசிக்கொண்டிருப்பது இன்றைய அரசியல் சூழலைப்பற்றி” என்றார். “இல்லை மூத்த யாதவரே, இன்றைய அரசியல் சூழலை என்றுமுள்ள யாதவர்களின் நலன் கருதி முடிவெடுப்பதாகத்தான் சற்று முன்னர் சொன்னீர்கள். யாதவர்களை அவர்கள் அரசர்களாக மதிப்பார்களா இல்லையா என்று மட்டும்தான் இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் போஜர்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல் “மூத்தவர் அகத்தளம் சென்று தன் அமைச்சரவையிடம் சொல் உசாவி வந்து முடிவுசொல்லலாமே” என்றார். பிறிதொருவர் “சேவல் கோழியிடம் குரல் கற்றுக்கொள்வதும் நடக்கும்” என்றார். ரேவதியின் குக்குட குலம் குறித்த இளிவரல் என சற்று பிந்தி புரிந்துகொண்டு யௌதேயன் திரும்பி அதைச் சொன்னவரை பார்த்தான். கண்டுபிடிக்க முடியவில்லை. குலக்கேலி செய்வதில் மட்டும் கூர்மைகொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டான். பலராமர் சினத்துடன் மீசையை முறுக்கியபடி அதை கேளாதவர்போல் அமர்ந்திருந்தார்.

வசுதேவர் “யாதவக் குடியினர் ஒருமித்த குரலில் இதை கோருகையில் எனக்கு இது சரியென்றே படுகிறது. நாம் நம் மைந்தர்களில் ஒருவருக்கு லக்ஷ்மணையை கோருவோம்” என்றார். “ஆம், அவ்வாறு செய்வோம். அவர்களுக்கு சாம்பனை பிடிக்கவில்லையென்றால் இங்கு எண்பது இளவரசர்கள் இருக்கிறார்கள். எவரேனும் ஒருவரை தேர்வு செய்யட்டும். அடுத்த ஆயிரமாண்டுகள் யாதவக்குடி அஸ்தினபுரியின் வலுவான அடித்தளமென்று அமையும். அரசு சூழ்தலில் அவர்களுக்கு இதைவிடப்பெரிய அறுவடை என்ன உள்ளது?” என்றார் விருஷ்ணி குலத்தலைவர் சசிதரர். “இதுவே தருணம். நாம் இதை எதன்பொருட்டும் தவிர்க்கவேண்டியதில்லை” என்றார் சுஃப்ரர்.

பலராமர் சோர்ந்து “நன்று! தந்தை முடிவெடுக்கட்டும். நான் சொல்வதற்கொன்றுமில்லை” என்று அமர்ந்தார். வசுதேவர் “நமது தூதராக அக்ரூரரை அனுப்புவோம் அவர் அஸ்தினபுரியில் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். விதுரருக்கு அணுக்கமானவர். அவர் பேசிப்பார்க்கட்டும்” என்றார். பலராமர் “இன்றுவரை இத்தகைய மணஉறவு நிகழ்ந்ததில்லை. இதை முன்வைத்து படிப்படியாக இதுவரை பேசிய அனைத்தையும் உதறுவது மடமை என்று நான் நினைக்கிறேன்” என்றார். “அல்ல, இது அவர்களுக்கு நாம் வைக்கும் தேர்வு” என்றார் போஜர் குலத்தலைவர் சுஃப்ரர்.

“தேர்வு வைக்குமிடத்தில் நாமில்லை. நலம் நம்முடையதே” என்று பலராமர் சொன்னார். “இல்லை, கொள்பவர்கள் அவர்கள். இழப்பவர்கள் நாம். நாம் இழப்பது நம்குடிப்பிறந்த மாவீரர் இளைய யாதவரை. உடனமைந்த சாத்யகியை. படைத்துணை கொண்டு நமக்கென வரும் பீமனையும் அர்ஜுனனையும். வில்திறனும் தோள்திறனும் கொண்ட அவர்களின் மைந்தர்கள் நால்வரை. இத்தனை இழப்புக்கு ஈடாக நாம் கோருவதொன்றே, அஸ்தினபுரியின் இளவரசியை” என்றார் அந்தகக் குடித்தலைவர் சுதீரர்.

வசுதேவர் “இனி சொல்லாடலில்லை. இந்த அவை முடிவெடுக்கிறது, அக்ரூரர் கிளம்பட்டும்” என்றார். அவை கைதூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று முழங்கியது. யௌதேயன் எழுந்து “அவ்வண்ணமெனில் நான் மேலும் சிலநாள் இங்கு தங்கியிருக்கிறேன். மூத்தவர்களே, ஒருபோதும் துரியோதனர் யாதவருக்கு பெண் கொடையளிக்க முடிவெடுக்க மாட்டாரென்று நம்புகிறேன். ஏனெனில் அது குருதியிழப்பு. இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களின் தலைவராக அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்? அவர் குருதியிலோடும் ஷத்ரியத் தொன்மையால்தான். அதை இன்று இழந்தால் நாளை எந்த அவையில் அவருக்கு முதன்மை கிடைக்கும்? ஏன், இன்று அவரைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்களே அதை ஏற்பார்களா?” என்றான்.

“அவையோரே, அவர் மறுப்பாரேயானால் இந்த அவையில் நான் சொல்லியதனைத்தும் உண்மையென்றாகிறது. குருதி குருதியுடனேயே கூட முடியும். பிற அனைத்தும் நீர்மேல் எழுத்துக்களே. யாதவக் குருதியின் பெயரால் இந்த அவையில் எந்தையின் அழைப்பை முன்வைக்கிறேன். ஐங்குலத்து யாதவரும் மதுராவின் அரசரும் அவர் மைந்தரும் இச்சமரில் எங்களுடன் நின்றாக வேண்டும். யாதவ அரசிக்கு அஸ்தினபுரியின் மண்மறைந்த அரசர் பாண்டு அளித்த சொல் பேணப்படவேண்டும்” என்றபின் எழுந்து தலைவணங்கினான்.

யாதவர்கள் ஒருவரோடொருவர் உரத்து கலைந்த குரலில் பேசிக்கொண்டே அவனுக்கு விடையளித்தனர். ஒருவர் “நாம் இதை முன்னரே ஏன் எண்ணவில்லை? இத்தனை சொல்லாடியும் இது நமக்கு ஏன் தோன்றவில்லை?” என்றார். “அவருக்கு தோன்றியிருக்கும்” என்றார் இன்னொருவர். “வாயை மூடுக! நாம் நம்மைப்பற்றி பேசுவோம்” என்றது இன்னொரு குரல். “நாம் ஒன்றும் மூடர்கள் அல்ல…” அந்தக் குரல்அலை கதவு மூடப்பட்டபோது அறுபட்டு மறைய யௌதேயன் புன்னகைத்தான்.

fire-iconஇடைநாழியினூடாக நடக்கையில் சர்வதன் “உங்களில் எழுந்த மூத்த தந்தையைக் கண்டு வியக்கிறேன். எண்ணி எழுதி உளப்பாடமென்றமைந்த நாடகத்தில் நடிப்பவர் போலிருந்தீர்கள். அத்தருணத்தில் அங்குள்ள அனைவர் உள்ளமும் உங்களுக்குத் தெரிந்திருந்தது” என்றான். யௌதேயன் புன்னகைத்து “அத்தருணத்தில் அது தோன்றியது. நன்றோ தீதோ அறியேன்” என்றான். “ஒருவேளை தன் மகளை அளிப்பதற்கு துரியோதனர் ஒப்புக்கொண்டாரென்றால் நமது திட்டங்களனைத்தும் முழுதாக சரிந்துவிடும்” என்றான் சர்வதன்.

“ஒருபோதும் அது நிகழாது. அங்கு முடிவெடுப்பவர் துரியோதனரோ திருதராஷ்டிரரோ அல்ல. சகுனி அங்கிருக்கிறார். அவர் உளத்தில் உறையும் இருளென கணிகர் இருக்கிறார். இறுதிச்சொல் அவர்களுடையதே. அவர்கள் அறிவார்கள் குருதி அடையாளத்தாலேயே அங்கு முதன்மை கொண்டிருக்கிறார் துரியோதனர் என்று. வங்கமும் கலிங்கமும் கூர்ஜரமும் சிந்துவும் மாளவமும் அவந்தியும் அவருக்குக்கீழே அமரவேண்டுமெனில் அக்குருதி தூயதாக இருக்கவேண்டும்” என்று யௌதேயன் சொன்னான்.

“உண்மையில் இது இருமுனை எரியும் தழல். யாதவருக்கு அவர் பெண்கொடை மறுத்தால் சிறுமைகொண்டு சினமடையும் யாதவர்களை நாம் நம்முடன் இழுக்கிறோம். பெண்ணளிப்பாரேயானால் போர் முடிந்துவிட்டது. ஷத்ரியக் குடிகள் அவரை கைவிடுவர். அவர் நம்முன் பணிந்தாகவேண்டும்” என்றான் யௌதேயன். சர்வதன் “ஒவ்வொன்றும் முதலில் பேசப்படும்போது இதுவே முழுமையென்றும் இதற்கப்பால் சொல்லில்லை என்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் மானுடச் சூழ்திறனும் ஊழின் நகையாட்டும் அதை கடந்து செல்கிறது” என்றான்.

“நீயும் உன் தந்தையும் எதையுமே நம்பாதவர்கள். ஒவ்வொன்றிலும் கோணலையே பார்ப்பவர்கள். நான் நம்புகிறேன், இது வெல்லும். இவ்வூசல் எங்கு சென்று நின்றாலும்” என்று யௌதேயன் சொன்னான். “காத்திருப்போம்” என்றான் சர்வதன். “எண்ணிச்சூழ்வது உங்களுக்கும் அதன் அடுத்த நிலையை நோக்குவது எனக்கும் வாழ்க்கைப்பயிற்சியாக ஆகிவிட்டிருக்கிறது.”

சற்றுநேரம் மரத்தரையில் அவனுடைய எடைமிக்க காலடியோசை கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அவன் “மூத்தவரே, நாம் இதை ஏன் செய்கிறோம்?” என்றான். “இது நம் கடமை” என்றான் யௌதேயன். “கடமையைச் செய்யவா இத்தனை சூழ்ச்சியும் ஆர்வமும்?” என்றான் சர்வதன். “நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்றான் யௌதேயன். “இது நம் ஆணவம் அல்லவா? இந்த மாபெரும் ஊழ்ப்பெருக்கை நாம் நம் மதியால் திசைமாற்றிவிட முடியும் என நினைக்கிறோம். நடந்தால் அது நம் வெற்றி என உள்ளூர ஊதிப்பெருப்போம், இல்லையா?”

“உன் கசப்புக்கு அளவே இல்லை” என்றான் யௌதேயன். “ஆனால் நாம் தனியர் அல்ல. இங்குள்ள ஒவ்வொருவரும் எண்ணுவது இதையே. ஊழ் ஆணவங்களினூடாகவே தன் ஆடலை நிகழ்த்துகிறது. ஒவ்வொரு துளி நீரும் பெருக்கின் விசையையே  தான் எனக் கொண்டுள்ளது” என்றான் சர்வதன்.