எழுதழல் - 55
ஏழு : துளியிருள் – 9
அறைக்குள் சென்றதுமே சர்வதன் “நாம் ஓய்வெடுக்க வேண்டியதில்லை, மூத்தவரே. நீராடிவிட்டு நேராக களத்திற்கு செல்வோம். மூத்த யாதவர் அங்குதான் இருப்பார். அவரை அங்கு சந்திப்பதும் எளிது” என்றான். யௌதேயன் “ஆனால் நாம் அங்கு எதையும் பேசமுடியாது” என்றான். “நாம் அரசமுறையாக வரவில்லை. ஆகவே அவையில் எழுந்து முறையாக அறிவிப்பதற்கும் ஏதுமில்லை. அவருடன் தனியறையில் சொல்லவே செய்தி உள்ளது. அதற்கு முன் அவரிடம் சற்றேனும் அணுக முடியுமென்றால் நம் பணி எளிதாகிறது” என்றான் சர்வதன்.
யௌதேயன் மஞ்சத்தில் அமர்ந்து கால்களை நீட்டி உடலை சோம்பல் முறித்தபடி “மெய்யாகவே நமது செய்தியால் எதுவும் நிகழுமென்று நான் எண்ணவில்லை. யாதவர்கள் இறுதி முடிவெடுத்துவிட்டார்கள். மூன்று முறை பேரவை கூடிவிட்டார்கள். கிருதவர்மன் இங்கு வந்து இளைய யாதவருக்கெதிராக யாதவக்குடிகளிடம் இருந்து சொல்லுறுதியை பெற்றுச் சென்றிருக்கிறார். கிருதவர்மன் அஸ்வத்தாமரின் இணைத்தோழர். மூத்த யாதவரோ துரியோதனரின் நல்லாசிரியர்” என்றான்.
“ஆம், சிறிய விரிசல்கூட இப்போது தெரியவில்லை. ஆனால் பயிற்சிக்களம் என்பது பிறிதொரு ஆடல்மேடை. அது ஒரு கலைக்கூடம் போல, அங்கு உடலும் உள்ளமும் மகிழ்கின்றன. மூத்தவரே, எங்கு அவையிரண்டும் நெகிழ்வு கொள்கின்றனவோ அங்கு அரசியல் விலகிவிடுகிறது. உடல் உடலையும் உள்ளம் உள்ளத்தையும் வெறும் மானுடராகவே அறிகிறது. அரசியல் என்பது மானுடரை விலக்குவதனூடாக வெல்வதனூடாக நிகழ்வது” என்றான் சர்வதன்.
யௌதேயன் “நீ களம் புகவிரும்புகிறாய் என்றால் அவ்வாறே ஆகட்டும். நான் வந்து என்ன செய்யப்போகிறேன்? இப்புவியில் நான் வெறுக்கும் ஓர் இடம் இருக்குமென்றால் அது பயிற்சிக்களம்தான். உடல் தன் இயல்பிலிருக்கையிலேயே நலமாக உள்ளது என்று நான் எண்ணுகிறேன். அதை வருத்தி பயிற்றி மலைபோல் ஆக்க வேண்டுமென்று தெய்வம் எண்ணியிருந்தால் அவ்வாறே அது மானுடரை படைத்திருக்குமல்லவா?” என்றான்.
சர்வதன் “ஏன் உள்ளத்தை வருத்தி பயிற்றுவிக்கிறீர்களே?” என்றான். யௌதேயன் “இது மெய்மை. மானுடனுக்கு தெய்வங்கள் விடுத்த அறைகூவல் அதை அடைவது” என்றான். “உடலினூடாகவும் மானுடர் தேடிச்செல்வது மெய்மையைத்தான். முழுதுடல் தெய்வங்களுக்கு அணுக்கமான ஒரு மெய்” என்று சர்வதன் சொல்லி “தாங்கள் வருகிறீர்கள், நெடுநாட்களுக்குப்பிறகு வாளை ஏந்துகிறீர்கள்” என்றான்.
யௌதேயன் “கேலிப்பொருள் என்று ஆவேன் என எண்ணுகிறேன்” என்றான். சர்வதன் “கவலைவேண்டாம். வாள் கையிலிருந்து தவறுமென்றால் அவ்வாறு தவறுவது ஒரு நல்லூழென்று ஏதேனும் நூலில் சொல்லப்பட்டிருக்கும் .அதை நினைவுகூர்ந்து சொன்னால் போயிற்று. கிளம்புங்கள்!” என்றான். “விடமாட்டாய்” என்றபடி யௌதேயன் எழுந்துகொண்டான். வாயிலில் வந்து நின்ற ஏவலன் “தாங்கள் ஓய்வெடுத்தபின்…” என்று தொடங்க “இல்லை நாங்கள் விரைவாக நீராடி களம் புகவிருக்கிறோம்” என்றான் சர்வதன். தலைவணங்கி “நன்று” என்று அவன் அவர்களைக் காத்து நின்றான்.
பொதியில் இருந்து நீராட்டுக்குரிய ஆடைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் அவனுடன் சென்றனர். சர்வதன் ஓசையெழ பெரிய கைகளை வீசி ஆட்டி நடந்தபடி “மிகச்சிறிய மாளிகை. என் உடல் அமையும் நீராட்டறை இங்கு இருக்குமெனத் தோன்றவில்லை” என்று சொன்னான். “அனைத்து மாளிகைகளிலும் யாதவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்றார்கள். துவாரகையிலிருந்து கிளம்பி வந்துகொண்டேயிருக்கிறார்கள்” என்று யௌதேயன் சொன்னான். “அவர்கள் ஒவ்வொருவரும் இங்கே மதிக்கப்பட்டாகவேண்டும். அதைவிட அவர்கள் மதிக்கப்படுவதாக நம்பவைக்கவேண்டும். ஒவ்வொருவரும் பிறரைத்தான் நோக்கிக்கொண்டிருப்பார்கள். அனைவருமே அரசகுடியினரென சொல்லிக்கொள்வார்கள்.”
சர்வதன் ஏவலனிடம் “இளைய யாதவரின் மைந்தர் பிரத்யுமன்ர் இங்கு வந்துள்ளார் என்றார்களே?” என்றான். “இல்லையே, இங்கு சாம்பரும் அவர் இளையோரும்தான் நேற்று முன்னாள் வந்தனர்” என்றான் ஏவலன். “ஆம், அவர் வந்ததாக கேள்விப்பட்டேன்” என்ற யௌதேயன் “பிறர் இங்கு வந்துகொண்டிருப்பார்கள். இன்று அவர்களைத்தான் அவையில் சந்திக்கவேண்டுமென்று வந்தோம்” என்றான். சர்வதன் “இவர் அனைத்தும் அறியும் இடத்தில் இருக்கிறார், மூத்தவரே” என்றான்.
“இளவரசே, நான் அறிந்தவரை பிரத்யும்னரும் அவரது உடன்பிறந்தோரும் மதுவனத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சூரசேனரின் வாழ்த்துக்களை பெற்றபின்னரே இங்கு வருவார்கள். யாதவ அரசியின் மைந்தர் பானுவும் அவர் உடன்பிறந்தாரும் வந்துகொண்டிருக்கிறார்கள். பிற உபயாதவர் அனைவருமே ஒரிருநாட்களுக்குள் இங்கு வந்து சேர்வார்கள் என்று சொன்னார்கள்” என்றான் ஏவலன். யௌதேயன் “கிருதசேனர் ஊர் திரும்பி விட்டாரா?” என்றான். “ஆம், நேற்றுமுன்னாள் அவர் கிளம்பிச்சென்றுவிட்டார்” என்றான் ஏவலன். “இங்கு யாதவ இளையோர் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலானோருடைய பெயர்களையே நான் அறிந்ததில்லை.”
நீராட்டறை அவர்கள் எண்ணியது போலவே மிகச்சிறியதாக இருந்தது. உள்ளே நுழைந்ததுமே அது சுவர்கள் கைகளை முட்டுமளவுக்கு மேலும் சிறிதென மாறியது. “ஒரு பெரிய குளியல் தொட்டிபோல் உள்ளது” என்று சர்வதன் சொன்னான். நீராட்டறையின் அணியர் புன்னகையுடன் வந்து “இளைய பாண்டவரின் மைந்தருக்கு வணக்கம். இந்தச் சிறிய நீராட்டறையில் தாங்கள் நீராட வருவீர்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை” என்றார்.
அவர் உதவியாளன் “நீராட்டறை ஏவலர் எவருக்கும் வாழ்நாள் பேறென்பது தங்கள் தந்தையின் உடலை கையால் தொடுவதுதான் என்று எந்தை சொல்லியிருக்கிறார். அதற்கு நிகரான பேறுபெற்றேன்” என்றான். “எந்தை வெறுந்தரையில் பதினான்காண்டுகள் துயின்று பழகிவிட்டார். நான் நறுஞ்சுண்ணம் சற்று கடினமானதாக இருந்தாலே உடல்நோவு கொள்பவன்” என்றபடி சர்வதன் ஆடைகளைக் களைந்து உயரமற்ற வெண்கல முக்காலியில் அமர்ந்தான். நறுமணத்தழையிட்டு கொதிக்கவைத்த வெந்நீரை அவன் உடலில் ஊற்றி அவர்கள் நீராட்டத்தொடங்கினர்.
“அணியரே, தங்கள் பெயரென்ன?” என்று சர்வதன் கேட்டான். அவர் “கர்த்தப குலத்தவனாகிய என் பெயர் உக்ரன். இவன் துர்வீரன். இன்னமும் நாங்கள் நீராட்டறையில் நெறிகளை பயில்பவர்களாகவே இருக்கிறோம். ஒருமுறைகூட பேருடலர்களை தொட்டதில்லை. ஒருமுறை மூத்த யாதவரின் தசைகளை தொடும் வாய்ப்பு கிடைக்குமென்று எண்ணியிருந்தோம். எங்கள் குல தெய்வங்கள் அணுக்கத்திலுள்ளன” என்றார். சற்று முதிய அணியர் யௌதேயனை நீராட்டினார். அவன் சிறிய தொட்டிக்குள் தன் உடலை நன்றாக வளைத்துக்கொண்டான்.
சர்வதனின் பெருந்தசைகளை கையால் நீவி வெந்நீர் ஊற்றி அழுத்தியபடி உக்ரர் “ஒருமுறை இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரின் உடலை நீராட்டினால் மானுட உடலின் தசைகள் எங்கெங்கு எவ்வாறு முழுமை கொண்டிருக்குமென்று அறிந்துவிடலாம், பிறகு இப்புவியிலுள்ள அனைத்து மானுட உடல்களையும் எளிதில் கையாளலாம் என்பார்கள்” என்றார். “ஒவ்வொரு தசையும் ஒவ்வொரு கோணத்தில் இழுபடுகிறது. பிற தசையுடன் அவை இணையும் ஒரு முடிச்சு ஒவ்வொரு முறை. உடலசைவில் அவை கொள்ளும் திசைமாற்றம் பிறிதொன்று. ஓய்ந்திருக்கையில் கொள்ளும் பதிதல் தனி. அடிபட்டுச் சிதைகையில் அவை உடையும் முறையும் அதற்கென்றே உரியது. ஒருபோதும் கற்றுத் தீராக்கலை இது.”
“கற்ற அனைத்தையுமே தங்கள் உடலில் இப்போது காண்கிறோம், இளவரசே” என்றான் துர்வீரன். சர்வதன் கைநீட்டி “என் மூத்தார் சுதசோமர் என்னிலும் பேருடலர்” என்றான். “பிறிதொன்றாக அமைய வாய்ப்பில்லை. இப்புவியில் நீங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பீர்கள்” என்றார் உக்ரர். அவர்கள் வேள்விசெய்யும் அந்தணரின் உள ஒருமையுடன் அவனை நீராட்டினர். அவன் குழல்களைப் பிரித்து நீவி அலசினர். நகங்களின் அழுக்கை நீக்கினர். அவர்களின் கைகள் அவன் உடலை கனிந்த அன்னைப்பசுவின் நாக்கென வருடிக்கொண்டே இருந்தன.
நீராடி எழுந்து ஆடியில் தன்னுடலைப் பார்த்த சர்வதன் “எந்தை என்னைப் பார்த்ததும் முதலில் எங்கு தொட்டார் என்று எண்ணுகிறீர்கள்?” என்றான். உக்ரர் “தோளில்” என்றார். “இல்லை, அணுகியதுமே என் புறங்கழுத்து முடிச்சில் தன் கையை வைத்தார்” என்றான் சர்வதன். துர்வீரன் “மல்லர்களின் புறங்கழுத்தே அவர்களின் உடலில் மிகநொய்மையான பகுதி. அனைத்துடலும் தசைக்கோட்டையால் மூடப்பட உயிர்முடிச்சு மட்டும் திறந்திடப்பட்டுள்ளது. தேர்ந்த மல்லன் ஒருவனின் அடி அங்கு விழுமெனில் நரம்புகள் அனைத்தும் உடைந்து செயலற்றுவிடும்” என்றான்.
உக்ரர் “தங்களை தந்தையென அவர் எதிர்கொள்ளவில்லை. இணை மல்லரென்று பார்த்திருக்கிறார்” என்றார். யௌதேயனை நீராட்டிக்கொண்டிருந்த முதிய நீராட்டறையர் “அல்ல உக்ரரே, அத்தனை தந்தையருக்கும் மைந்தர்கள் ஆற்றலற்றோர், பாதுகாக்கப்பட வேண்டியோர் என்றே தெரிவர். இப்பேருடலரைக் கண்டதுமே தந்தையின் கை அவரது காப்பற்ற புறங்கழுத்துக்குச் செல்வதென்றால் அவர் அங்கு மல்லராக இல்லை. தலைநிலைக்காத குழவியை கையிலேந்திய அன்னைபோல் கனிந்திருக்கிறார்” என்றார்.
உடலெங்கும் நறுமணச்சுண்ணமிட்டு தோலாடை அணிந்து கழுத்தில் வெள்ளிச் சரடொன்று மட்டும் அணியென பூண்டு சர்வதன் கிளம்பினான். வெண்ணிறப் பட்டாடை உடுத்தி வெண்மேலாடை அணிந்து பொன்சரப்பொளி பூண்டு அவனுடன் வந்த யௌதேயன் “களத்தில் நம்மை முதலில் பார்க்கையில் மூத்த யாதவர் என்ன செய்வார் என்று எண்ணிப்பார்க்கிறேன். நாம் வருவது அவருக்கு உகந்ததல்ல. நாம் படைத்துணைகோரி வந்துள்ளோம்” என்றான். “இது முறைப்படி எழும் அழைப்புதானே?” என்றான் சர்வதன்.
“ஆம், ஆனால் இவ்வழைப்பிற்கு இன்னமும் இடமுள்ளது என்பதே யாதவர் மேல் பிறரை ஐயம் கொள்ள வைக்கலாம். நாம் எந்த வாக்குறுதியுடன் வந்தோம் என அவர் அறிய விரும்புவார்கள். அந்த வாக்குறுதியை பிறரிடம் நாம் சொல்லாது செல்வோமெனில் ஒருதுளி ஐயமென அது எப்போதும் அவர்கள் நடுவே எஞ்சும். என்னதான் தன்னை ஷத்ரிய அணியில் முற்றிலும் நிறுத்திக்கொண்டாலும் பலராமர் யாதவர் என்றே கருதப்படுவார். ஷத்ரிய குடிகள் அவரை முற்றிலும் நம்புவது நடவாது. சொல்லுறுதியுடன் வந்திருக்கும் நாமோ யாதவக்குருதி” என்றான் யௌதேயன்.
மெல்ல நடந்தபடி அவன் “இப்போது எண்ணுகையில் இப்படி ஓர் ஐயத்தை இங்கு எழுப்பிவிட்டுச் செல்வதற்கென்றே நம்மை அனுப்பினார்களோ என்று ஐயுறுகிறேன்” என்றான். சர்வதன் “இந்தக்கணக்குகள் எனக்குப் புரிவதில்லை. நான் கருதுவதெல்லாம் என்னைப் பார்த்ததுமே இணை மல்லரென இருகைகளையும் விரித்து அவர் களம் அழைப்பார் என்று மட்டும்தான்” என்றான் சர்வதன். “மல்லர்கள் அன்னத்தின் உலகில் வாழ்கிறார்கள். அங்கு பருப்பொருட்களுக்கு மட்டுமே இடம்.”
மதுராவின் அரண்மனை உள்ளடுக்குகள் அனைத்தும் விழிப்புகொண்டிருந்தன. சிறு கைவிளக்குகளை ஏந்தியபடி சேடியரும் ஏவலரும் அங்குமிங்கும் உலவியதனால் தொலைவிலிருந்து பார்க்கையில் சிற்றகல்கள் மிதந்து சுழிக்கும் ஆற்று வளைவென தோன்றியது அரண்மனை. அகன்று செல்லும்தோறும் மின்மினிகள் மொய்க்கும் மரத்தடியென மாறியது. வெண்சுண்ணச் சுவர்கள் இளநீல ஒளி கொண்டிருக்கும் முன்புலர்காலை. இலைகளின் பசுமையும் மலர்களின் செம்மையும் காற்றுப்பரப்பிலிருந்து புடைத்தவைபோலத் தெரிந்தன. பறவைக்குரல்களால் சூழப்பட்டிருந்த மரங்கள் கன்றுகளின் கொம்புச்செண்டு என சிலம்பிக்கொண்டிருந்தன.
களத்தை அணுகுவதற்கு முன்னரே வாள்களும் வேல்களும் உரசும் ஒலியும் கேடயங்களில் வாள்படும் மணியோசையும் கால்வைப்பும் சுவடுமாற்றலும் கைப்பிடியும் பூட்டும் ஒழியலும் தாவலும் உழியலும் மண்டிலமும் எழுப்பிய வாய்த்தாரிகளுடன் இணைந்து கேட்கத்தொடங்கின. களத்துமுகப்பில் நின்றிருந்த காவலர் அவர்களைக் கண்டதும் வியந்து அருகிருந்த பிறிதொரு காவலனை பார்த்தபின் முன்னால் வந்து தலைவணங்கி “இளவரசர்களே, இளையவர் தாங்கள் இங்கு வந்ததை…?” என்று தொடங்கினார்.
“மூத்த யாதவர் இன்னும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சற்றுமுன்னர்தான் நகர் நுழைந்தோம்” என்றான் யௌதேயன். “களம் புக விரும்புகிறோம் என்று அவரிடம் சொல்க!” அவர் “ஆணைபெற வேண்டியதில்லை. தாங்களே உள்ளே செல்லலாம். இது அரசவையல்ல” என்று சொல்லி கைகாட்டினார். வாயிலினூடாக மறுபுறம் நுழைந்தபோது குளிர்காற்று வீசிச்சுழித்த வட்ட உள்முற்றத்தில் நின்றிருந்தவர்களின் ஆடைகள் காலையின் எழா ஒளியில் வெண்சுடர்கள்போல அணுக்கம் கொண்டன. இரு மல்லர்கள் இருகைகளையும் பற்ற கால்களை முன்னால் வைத்து நண்டுக் கொடுக்கென கைகளை மேலே தூக்கி அவர்களை சுழற்றிவீசி அவர்கள் மண்ணில் உடலறைந்து விழுகையில் அப்பால் சென்று சுழன்று திரும்பி தொடைதட்டி நிமிர்ந்த பலராமர் அவர்களை பார்த்தார்.
மறுகணம் “யார்? உபபாண்டவர்கள் அல்லவா?” என்று கூவியபடி கைகளை விரித்தார். சர்வதன் “நான் பைமசேனியாகிய சர்வதன். தங்களை சந்திக்கும் பேறு பெற்றேன், அரசே” என்று சொல்லி அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவன் தோளை வளைத்து தன்னுடலுடன் இறுக்கி அணைத்து மறுகையால் ஓங்கி புயத்தில் அறைந்து உரக்க நகைத்து “பேருடலன்! இளமையில் தந்தை இருந்ததைப் போலவே இருக்கிறாய். இன்று இக்களத்தில் மற்போர் பொலிகிறது! நன்று! நன்று!” என்றார் பலராமர்.
யௌதேயன் அருகே வந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். “நீ என்ன உணவுண்பதே இல்லையா?” என்று அவன் தோள்களை தன் பெரிய கைகளால் தட்டியபடி அவர் கேட்டார். “நூல்களை உண்கிறார்” என்றான் சர்வதன். உரக்க நகைத்த பலராமர் “ஆம், உன் தந்தையைப் போலவே இருக்கிறாய்” என்றபின் சர்வதனிடம் “ஓர் உடல் எத்தனை சொற்களுக்கு நிகர் என்பதை இவன் தந்தையைப் பார்த்தால் அறியலாம். சொல்லிச் சொல்லி அடையா உடலை அறுபதாண்டுகளாக நிரப்பிக்கொண்டிருக்கிறான்” என்றார்.
சர்வதன் சிரித்தான். அவர் கைகளால் யௌதேயனின் மெல்லிய தோள்களைப் பற்றி உலுக்கி “நீ என்ன படைக்கலப்பயிற்சி செய்கிறாய்?” என்று கேட்டார். அவன் “வாள்” என்றபின் “பொழுது அமைகையில் மட்டும்” என்றான். “அதாவது எப்பயிற்சியும் இல்லை. நன்று!” என்றபின் “அங்கு சென்று வாட்பயிற்சி செய். நான் இவனுடன் சற்று தோள்கோக்கிறேன்” என்றபின் திரும்பிப்பார்த்து அப்பால் நின்ற சாம்பனை கைகாட்டி அழைத்து “இவனை அறிந்திருப்பாய். இளைய யாதவன் மகன் சாம்பன். இங்கு வந்திருக்கிறான்” என்றார்.
“தந்தையிடம் பூசலிட்டு வந்தீர்கள் என அறிந்தேன்” என்றான் யௌதேயன். உரத்த குரலில் பலராமர் “அது பூசல் அல்ல. அவன் தந்தை எது குலத்திற்கு உகந்ததோ அதை செய்யாதொழிந்தபோது குலத்தின் தலைமைந்தன் என்ற முறையில் அவன் கொண்ட பொறுப்பு அது. தந்தை தன் குலத்து மூதாதையர் பல்லாயிரவரில் ஒருவனே என்றுணர்ந்த மெய்யறிவு” என்றார்.
சாம்பனைப் பார்த்து புன்னகைத்த யௌதேயன் “மெய்யறிதல் எந்நிலையிலும் மானுடருக்கு தேவைதான்” என்றான். அவன் சொற்களிலிருந்த மெல்லிய இளிவரலை சாம்பன் உணர்ந்தான். அவன் விழிகள் மாறின. ஆனால் பலராமர் “அதைத்தான் நானும் சொல்லிக்கொண்டிருந்தேன். தந்தையை மீறிவிட்டான் என்னும் பழி சில தரப்புகளிலிருந்து எழலாம். ஆனால் நெறி நின்றான் எனும் பெயர் காலத்தில் அதைக்கடந்து செல்லும். தந்தையர் எல்லை மீறுகையில் அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு மைந்தருக்குண்டு. அது என் மைந்தரேயானாலும்” என்றார்.
சாம்பன் “நாம் வாள் பயில்வோமே?” என்று யௌதேயனை அழைத்தான். யௌதேயன் “உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், சாம்பரே. பிரத்யும்னரும் நீங்களும்தான் இளைய யாதவரின் மைந்தரில் பெருவீரர்கள் என்று சூதர்கள் பாடுவதுண்டு. நான் முறைப்படி வாள் பயிலாதவன். ஆசிரியராக நின்று எனக்கு ஏதேனும் கற்பிப்பீர்கள் என்றால் வருகிறேன்” என்றான். “வருக!” என்று சாம்பன் அவன் தோளில் கைவைத்து அழைத்துச் சென்றான்.
பலராமர் இருகைகளையும் சர்வதனின் தோளில் வைத்து “என்னளவே இருக்கிறாய். கதை பயில்கிறாயா?” என்றார். “ஆம், கதையும் மற்போரும் பயில்கிறேன்” என்றான் சர்வதன். “திரும்பு” என்று சொல்லி அவனைப்பிடித்து திருப்பி விலாவுக்கு மேலிருக்கும் இருதசைகளையும் கைகளால் பற்றி “பயிற்சி போதாது. எடைமிக்க கதாயுதம் ஒன்றை எடுத்து தலைக்குமேல் சுழற்றுவாயென்றால் இந்தத் தசை இறுகிச் சுருண்டுகொள்ளும்” என்றார்.
சர்வதன் “நான் பேரெடைகளையும் தூக்குகிறேன்” என்று சொன்னான். “தூக்குவதல்ல. பேரெடைமிக்க கதாயுதத்தை சுழற்றவேண்டும். கதை எடை மட்டும் கொண்டதல்ல. அதை நெம்பித் தூக்குவதனால் மும்மடங்கு எடையை கைக்கு அளிக்கிறது” என்றார் பலராமர். சர்வதன் “ஆம்” என்றான். பலராமர் சர்வதனிடம் அங்கே கிடந்த பெரிய கதை ஒன்றை எடுத்து “இதைச் சுழற்று” என்றார். சர்வதன் குனிந்து அதை முழுவிசையையும் கூட்டித் தூக்கி ஒருமுறை சுழற்ற அதன் எடைமிக்க உருளை தரையில் அறைந்தது.
“மூடா! தரையுடனா போர் புரிகிறாய்?” என்றார் பலராமர். “முதல் விசை அனைத்தையும் செலுத்தி தூக்கிச் சுழற்றி கதையை மேலெடுக்கிறாய். கதை வந்து நிலம் தொட்டதும் அனைத்து விசையையும் மண் வாங்கிக்கொள்கிறது. மீண்டும் புதியவிசை திரட்டி அதை தூக்க வேண்டியிருக்கிறது. மூன்று முறைக்குமேல் உன்னால் விசை திரட்ட முடியாது. மண்ணில் அது பாய்ந்து பின் நீ மீண்டும் விசை திரட்டி அதை தூக்குவதற்கு முந்தைய சில கணங்களில் எதிரிக்கு முன் படைக்கலக் காப்பு இன்றி நிற்கிறாய். உன் தலையை உடைத்து கூழென ஆக்க அவனால் இயலும்.”
“நோக்குக! முதல்விசை திரட்டி கதையை தூக்கியபின் அவ்விசையைக் கொண்டே பன்னிருமுறைவரை இக்கதையை சுழற்ற முடியும். அதற்கு உன் கீழ் விலாத் தசைகள் பெருத்திருக்க வேண்டும். அதன் மேல் கொழுப்பு படிந்திருக்கலாகாது. வெறும் கைகளை வைக்கும்போதே தசைநாரின் முறுக்கம் தென்படவேண்டும்” என்றபின் “நோக்குக!” என்று அந்தக் கதையை அவனிடமிருந்து வாங்கி ஒரே மூச்சில் தூக்கி காற்றில் சுழற்றினார். அவரைச் சுற்றி அதன் எடைமிக்க உருளை விம்மியபடி சுழன்று வந்தது. எட்டு அடி முன்னால் எடுத்து வைத்து திரும்பி தரையிலிருந்த பிறிதொரு கதையை ஓங்கி அடித்தார். அதன் இரும்புருளை உடைந்து செதில்களாக தெறித்தது.
கதையை தரையில் ஊன்றியபின் “சரியான முறையில் சுழற்றினால் இதைக்கொண்டு தேர்களை உடைத்துத் தள்ள முடியும். யானைகளை கொன்று சரிக்கமுடியும்” என்றார் பலராமர். “இன்னும் எத்தனை நாள் இங்கிருப்பாய்?” சர்வதன் “சில நாட்கள். அதன் பிறகு ஊர் திரும்ப வேண்டியிருக்கும். உங்களிடம் எந்தை அனுப்பிய ஒரு செய்தியை சொல்லிச் செல்ல வேண்டும்” என்றான். “அரசியல் செய்தியென்றால் அதை அவையில் சொல். நான் களத்தில் அரசியல் பேசுவதில்லை” என்றார் பலராமர்.
“மெதுவாக மெதுவாக” என்று யௌதேயன் கூச்சலிடுவதைக் கேட்டு சர்வதன் திரும்பிப்பார்த்தான். சாம்பன் தன் வாளை சுழற்றிக்கொண்டு முன்னால் செல்ல அவ்வீச்சை அவ்வப்போது தன் வாளால் தடுத்தபடி காலடி வைத்து யௌதேயன் பின்னால் சென்றான். அவன் நெற்றிக்குழலை சீவிச் சென்றது சாம்பனின் வாள். காக்கையிறகென முடிக்கீற்று தரையிலுதிர சூழ்ந்திருந்த யாதவர்கள் குரலெழுப்பி நகைத்தனர். மீண்டும் ஒருமுறை வாள் எழுந்து அவன் இடைக்கச்சையை வெட்டிச்செல்ல இடுப்பிலிருந்து ஆடை நழுவியது. ஒருகையால் அதைப்பற்றியபடி “போதும்! எனக்கு பயிற்சியில்லை” என்று யௌதேயன் கூவினான். மீண்டுமொருமுறை வாள் மின்னிச் செல்ல அவன் தோளில் நீண்ட சிவந்த கோடு விழுந்து குருதி பீறிட்டது.
பலராமர் “என்ன செய்கிறாய்? மூடா, நிறுத்து!” என்று கூவினார். “கற்றுக்கொடுக்கிறேன்” என்றபடி மீண்டும் வாளைச் சுழற்ற ஓங்கிய சாம்பனின் கையை நோக்கி கீழிருந்து எடுத்த ஒரு கதாயுதத்தை வீசினான் சர்வதன். வாள் தெறித்துச் சுழன்று அப்பால் மண்ணில் விழ எடையுடன் கதை மண்ணை அறைந்தது. வலக்கையை இடக்கையால் பற்றி காலிடுக்கில் வைத்து அழுத்திகொண்டு வலிமுனகலுடன் உடலை ஒடுக்கிக்கொண்டு சுழன்றான் சாம்பன். நான்கு அடிகளில் அவனை அணுகி இடைபற்றி தலைக்குமேல் தூக்கி ஓங்கி தன் தொடைமேல் அவனை அறையப்போனான் சர்வதன்.
“மைந்தா, நிறுத்து!” என்று பலராமர் கூவ சர்வதன் தயங்கி பின்பு சாம்பனை நிலத்தில் வீசினான். அவன் மண்ணில் தோள் அறைய விழுந்து புரண்டு கால்களை மடித்து மார்புடன் அணைத்துச் சுருண்டபடி முனக அவன் தம்பியர் ஓடிவந்து அவன் அருகே குனிந்தனர். சுருதன் “விலகுக! விலகுக!” என்று கூவ விருஷனும் சுமித்ரனும் அவனைத் தூக்கி அமரச்செய்தனர். பலராமர் ஓடிவந்து சாம்பனை ஒருகையால் பற்றித் தூக்கி அவன் முகத்தை நோக்கி பற்களைக் கடித்தபடி “என்ன செய்தாய்? மூத்தவனுக்குக் காவலாக இவனை அனுப்பியிருக்கிறார்கள் என்றால் இவன் முன் வைத்து அவனை நீ சிறுமை செய்ய முடியுமா?” என்றார். “அவன் பைமசேனி என்று தெரியாதா உனக்கு? அறிவிலி! ஒருகணத்தில் உன் முதுகெலும்பை முறித்திருப்பான்.”
சர்வதன் பற்களைக் கடித்தபடி “களம் நிற்க வேண்டுமென்று விரும்பினால் ஒரு வாய்ப்பு தருகிறேன், சாம்பரே. இதோ இங்கு நின்றிருக்கும் உங்கள் இளையோர் அனைவரும் ஒரே தருணத்தில் தாங்கள் விரும்பிய படைக்கலங்களுடன் என்னை எதிர்கொள்ளலாம். ஒரு முறைக்குமேல் எவரையும் அடிக்க மாட்டேன் என்றும் நான் சொல்லிடுகிறேன்” என்றான். பலராமர் “வேண்டியதில்லை. உனது ஒரு அடியைத் தாங்கும் ஆற்றல் கொண்ட யாதவமைந்தர் எவருமில்லை. விடு!” என்றார்.
சாம்பன் எழுந்து தன் உடைந்த கையைத் தூக்கி அசைத்தபடி விழிகள் நீர்கொள்ள பற்கள் கிட்டித்திருக்க “எலும்பு உடைந்துவிட்டது, தந்தையே” என்றான். “தலை உடையவில்லை என்று ஆறுதல் கொள், கீழ்மகனே” என்று பலராமர் சொன்னார். திரும்பி ஏவலனிடம் யௌதேயனை சுட்டிக்காட்டி “இந்தக் குருதியை துடைக்கச் சொல்! அறச்செல்வனின் குருதி, யாதவமண்ணில் விழகாலாது அது” என்றபின் சுருதனிடம் “அழைத்துச் செல் இவர்களை! ஆதுரசாலைக்குச் சென்று எலும்புகளை சேர்த்துக்கட்டு” என்றார்.
ஏவலன் மரவுரியால் யௌதேயனின் தோளில் இருந்த காயத்தை அழுத்திக்கட்டினான். “எந்தையே, தாங்கள் இப்போது சொன்ன வார்த்தைகளை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இவர்கள் அறிவிலிகள், எண்ணாது துணிபவர்கள். இவர்களால் ஒருபோதும் யாதவ குலத்தை காத்து நிற்க இயலாது. இன்றல்ல, நாளையும் யாதவ குலத்திற்குக் காவலென நிற்கப்போகிறவர்கள் என் இளையோர் மட்டுமே” என்றான் யௌதேயன்.
“எந்தையர் இப்புவி கண்ட மாவீரர்கள். அவர்களில் இருவரும் ஆளுக்கிருவரென பெருகி இதோ நம் முன் நின்றிருக்கிறார்கள். இரண்டு பீமசேனர்கள் இரண்டு அர்ஜுனர்கள். அவர்களால் காக்கப்படும் உங்கள் குடி எளிய அரசியல் சூழ்தலுக்கு ஆட்பட்டு அவர்களை இழக்க வேண்டியதில்லை” என அவன் தொடர்ந்தான். “உண்மையில் இழக்கப்போவது மட்டுமல்ல, அவர்களை எதிர் தரப்பில் நிற்க வைக்கவும் போகிறீர்கள். எந்தையரையும் அவர்களின் நான்கு மைந்தர்களையும் எதிர்கொள்ள யாதவர்களால் இயலுமா என எண்ணிச்சூழ்க! இத்தருணத்தில் நான் உரைக்க வந்த செய்தி இது மட்டுமே. இதை இனி அவையில் நான் கூறவேண்டியதில்லை.”
பலராமர் அவர்கள் இருவரையும் பார்த்தபடி சில கணங்கள் நின்றார். பின்னர் “ஆம், இந்த மூடர்களை நம்பி துவாரகையோ யாதவப்பெருங்குடியோ இல்லை” என்றார். “ஆனால் அது வேதத்தை நம்பியிருக்கிறது. எந்த அழியாச்சொல்லால் மழைமுகில்களை இந்திரன் ஆள்கிறானோ, எந்த வானமுதால் புல்வெளிகளை வருணன் ஆள்கிறானோ, அனலோனும் மாருதர்களும் கதிரோனும் எந்த அன்னத்தை உண்கிறார்களோ அந்த வேதத்தால். அதுவே எங்கள் பொறுப்பு. எங்கள் கடன் அதற்கு மட்டுமே” என்றபின் திரும்பி நடந்தார்.