எழுதழல் - 54
ஏழு : துளியிருள் – 8
தொலைவிலேயே மதுராபுரியின் துறைமுகப்பு பந்தங்களின் செவ்வொளியில் காட்டெரியெனத் தெரிவதை யௌதேயன் பார்த்தான். பீதர் நாட்டின் பளிங்குக் குமிழ் விளக்கொளியில் படித்துக்கொண்டிருந்த பூர்ஜ மரப்பட்டைகளாலான ஏட்டை சீராக அடுக்கி பட்டுநூலால் கட்டி பேழைக்குள் வைத்தபின் அருகே மூங்கில் அழியில் தொங்கிய மேலாடையை எடுத்து அதன் மடிப்புகளை நீவி சீராக தோளிலிட்டபடி படகின் முகப்பிற்கு வந்தான்.
அவன் குழல்கற்றைகள் காற்றில் எழுந்து பறந்தன. இடையில் இருந்த பட்டு நூலை எடுத்து குழல்கற்றைகளைக் கட்டி முடிச்சிட்டுக்கொண்டான். படகு முகப்பிலிருந்த பீதர்நாட்டு தூக்குவிளக்கு உலைந்தாடி தூண்களின் நிழல்களையும் வடங்களின் நிழல்களையும் நாகங்களென பின்னி நடனமிடச் செய்தது. அவன் படகிற்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கலிங்கநாட்டு பொதிப்படகின் விளக்கொளி காற்றிலெழுந்து புடைத்திருந்த பாயை பெருந்தழலென வானில் நெளிந்தாடச் செய்தது.
படகோட்டி “மதுராபுரி அணுகுகிறது, இளவரசே” என்றான். படகறைச் சுவரில் சாய்ந்து கைகட்டி நின்றபடி யௌதேயன் துறைமேடை விரைவழிந்த பெருங்கலமென தன்னை நோக்கி வருவதை பார்த்துக்கொண்டிருந்தான். மதுராபுரியின் முகப்பிலிருந்த அறுபத்துநான்கு கல்தூண்களின்மேல் மீனெண்ணெய் விளக்குகள் தழல் சிதறி இருளுக்குள் எழத் துடிக்க செந்நிழல் பரப்பி நின்றிருந்தன. செவ்வொளியில் படிக்கட்டுகளும் துலாமேடைகளும், அவற்றை இழுக்கும் எருதுகளும் யானைகளும், பாய் சுருக்கி அணைந்த படகுகளின் தேன்மெழுகு பூசப்பட்ட கூரைவளைவுகளும் அனல் பூசிக்கொண்டு மின்னின.
யமுனையின் அலைப்பரப்புகளின்மேல் நெடுந்தொலைவுவரை நெளியும் செந்நிறச் சட்டங்கள்போல பந்தங்களின் ஒளி விழுந்து நீண்டுகிடந்தது. காலைப்பனிக்குள் பொதிஏற்றும் விலங்குகளை ஓட்டுபவர்களும் துலா பிடிப்பவர்களும் ஆயக்கணக்கர்களும் காவலர்களும் எழுப்பிய ஓசைகள் உரக்க கேட்டன. அவற்றுக்கு நிகராக படகுகளில் இருந்த நீரோடிகள் உரக்க கூச்சலிட்டனர். காற்று சுழன்றடிக்கும் நீர்வெளிகள்மேல் வாழ்பவர்கள் ஆதலால் அத்தனை சொற்களையும் அவர்களால் வெடித்தெழும் கூச்சலாகவே வெளிப்படுத்த முடிந்தது.
அவர்களின் ஆடைகள் செவ்வொளி பட்டு தழல் என காற்றில் துடித்தன. திரும்புகையில் படைக்கலங்களும் உலோகப் பொருட்களும் அனல் மின்னி அணைந்தன. ஆடும் படகுகளில் தொங்கிய சங்கிலிகளும் பலவகையான கலங்களும் மதஎருதின் கழுத்து மணிகளென குலுங்கின. கந்தில் பிணைந்த யானையென உடல் உலைந்தபடி கலிங்கத்துப் பெரும்படகொன்று அப்பால் நின்றது. அதன் சாளரங்கள் செந்நிற விளக்கொளிகள் விரிய நிரையாக தெரிந்தன. அதன் கொடிமர உச்சியில் சிம்மக்கொடி காற்றில் படபடத்தது.
துறைமேடையில் மூன்று பெரும்துலாக்கள் சீராக சுழன்றிறங்கி கலிங்கப் படகில் இருந்து பொதிகளைத் தூக்கி இரை கவ்விய பருந்துகளென காற்றில் வளைந்து அப்பால் இறக்கி வைத்தன. துறைமேடையிலிருந்து வளைந்தேறிச் சென்ற கல்பாவப்பட்ட சாலைகளில் பொதிவண்டிகளை இழுத்த மாடுகள் உச்சவிசையில் உடலிறுகி தசைகள் அசைய, சகடங்கள் உரசி முனக, சவுக்கோசைகளும் வசையொலிகளும் ஆணைகளுமாக ஏறிச்சென்றன. அப்பால் மதுராவின் வெளிக்கோட்டை அதன்மேல் நிரையாக காவல்மாடங்களில் மீன்நெய் விளக்குகள் எரிய கவச உடையணிந்த காவலர்கள் அனல் சூடிய வேல் முனைகளுடன் நின்றிருக்க இருண்ட பரப்பெனத் தெரிந்தது.
வானில் விடிவெள்ளி எழுந்திருந்ததை யௌதேயன் பார்த்தான். அவனுடைய படகு துறைமேடையில் தன் முறை வருவதற்காக நிரையில் இணைந்து ஆடியபடி காத்து நின்றது. இரு படகோட்டிகளும் துடுப்புகளை விட்டு எழுந்து வந்து அணைக்கயிறுகளை வளையங்களில் இருந்து அவிழ்த்து பாய்களை சுருக்கினர். புடைத்துப் பரந்து நின்றிருந்த பெருந்தழல்கள் நெய்குறைந்தவைபோல் சுருங்கி பின் இறங்கி சுருண்டன. அமரத்திலிருந்தவன் பெருந்துடுப்பை நீரில் ஆழ இறக்கி சுக்கானை இரும்புக் கொக்கிகளில் மாட்டினான். “தெய்வங்களே!” என கூவியபடி எழுந்து நின்று கைகளைத் தூக்கி உடலை வளைத்து சோம்பல் முறித்தான்.
அவன் இரும்பு நங்கூரத்தை அதன் வளையத்திலிருந்து அவிழ்த்து மரப்பட்டைச் சரிவினூடாக தள்ளிக்கொண்டுவந்து நீருக்குள் விட்டான். திமிங்கலம்போல வழுக்கி மெல்ல அது நீரில் இறங்கி ஓசையின்றி மூழ்க வளையங்களாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த அதன் வடம் உயிர்கொண்ட பாம்பெனச் சுருளவிழ்ந்து ஓடிக்கீழிறங்கிச் சென்றுநின்று பின் இறுகி விம்மி அசைந்தது. படகு ஊசலாட்டத்தை இழந்து சிற்றலைகள் மேல் மெல்ல ததும்பியது.
யௌதேயன் அறைக்குள் சென்று அங்கே மஞ்சத்தில் மல்லாந்து படுத்து துயின்றுகொண்டிருந்த சர்வதனை தோளில் தட்டி “இளையோனே இளையோனே” என்றழைத்தான். “சற்று பொறுத்து உண்கிறேன். இப்போது பசியில்லை” என்று அவன் சொன்னான். மேலும் உலுக்கி “எழுக மந்தா, மதுரா வந்துவிட்டது” என்றான் யௌதேயன். சர்வதன் விழித்துக்கொண்டு வாயைத் துடைத்து “ஏன்?” என்றான். சினத்தை அடக்கி “ஏனென்றால் நம் படகு இங்கு வந்துவிட்டது” என்றான். அவன் “நமது படகா?” என்றான். யௌதேயன் அவன் கன்னத்தில் அறைந்து “எழுக, மூடா!” என்றான்.
அதன் பின்னரே சித்தம் தெளிந்து சர்வதன் எழுந்தமர்ந்தான். கைகளை அவன் தூக்கியபோது பெருந்தோள்களில் தசைகள் புடைத்தெழுந்தன. இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று சுழற்றி தலைக்குமேல் நீட்டி சோம்பல் முறித்து கோட்டுவாயிட்டபடி “விரைந்து வந்துவிட்டோம்” என்றான். “விரைந்து வரவில்லை. எதிர்ப்பெருக்கிருந்தமையால் மூன்று நாழிகை பிந்தி வந்துள்ளோம்” என்றான் யௌதேயன். “விடிவெள்ளி எழுந்துவிட்டதா?” என்றபடி சர்வதன் எழுந்து தலையைச் சுழற்றி எலும்புகள் சொடுக்கோசை எழுப்ப தன் உடலை சீர்படுத்தியபடி வெளியே சென்றான்.
படகுமுற்றத்தில் ஆடையும் குழலும் பறக்க நின்று கைகளை மீண்டும் தூக்கி விரல்களை விரித்து சொடுக்கோசைகளை எழுப்பியபடி “சிறிய நகரம்” என்றான். யௌதேயன் “இந்திரப்பிரஸ்தத்தை பார்த்தபின் எந்நகரும் சிறிதே. மதுரா தொல்புகழ் கொண்டது” என்றான். சர்வதன் “ஆம், நெய்வணிகர்களின் நகரம்” என்றான். “இல்லை, யாதவர்களின் நகர்” என்று எரிச்சலுடன் யௌதேயன் சொன்னான்.
முன்னால் நின்றிருந்த நான்கு படகுகளும் பொதித்துறைகளுக்குச் சென்று நிற்க அவர்களின் படகு பயணிகளுக்கான துறையை சென்றடைந்தது. அமர மேடையில் ஏறிய படகோட்டி தன் முழங்கையளவு தடிமனான கயிற்றைத் தூக்கி மும்முறை ஆயம் கூட்டிச் சுழற்றி கரை நோக்கி வீசினான். அங்கு நின்றிருந்த கரையன் அதைப்பற்றி இழுத்து தரையில் ஆழ அறையப்பட்டிருந்த தடித்த மரக்குற்றிகளில் சுற்றிக் கட்டினான். பின்பக்கம் இன்னொரு வடத்தை படகோட்டி வீச பிறிதொருவன் அதைப்பற்றி அங்குள்ள தரையில் கட்டியபோது நீர் நிறைந்த கலம் என படகு அமைதி கொண்டது.
சகடங்கள் அமைந்த நடைபாலத்தை இருவர் தள்ளிக்கொண்டு வந்து அவர்களின் படகின் விளிம்பை முட்டினர். படகோட்டி அதைப்பற்றி அதன் விளிம்புகளைப் பொருத்தி இறுக்கிக் கட்டினான். சர்வதன் திரும்பி “செல்லவேண்டியதுதானே, மூத்தவரே?” என்றான். “ஆம்” என்றபின் யௌதேயன் படகோட்டியிடம் “எங்கள் பெட்டிகளை எடுத்துவரும்படி அவர்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அரண்மனைக்குச் செல்கிறோம்” என்றான். சர்வதன் “நம்மை வரவேற்க இங்கு அரண்மனைப் பொறுப்பாளர் எவரேனும் வந்திருப்பார்கள் என்று எண்ணினேன்” என்றான்.
யௌதேயன் “நாம் இங்கு அரசமுறையாக வரவில்லை” என்றான். “ஆயினும் நாம் அரச குடிகள்” என்று சர்வதன் சொன்னான். யௌதேயன் மறுமொழி கூறாது மரப்பாலத்தின் மீதேறி மெல்ல அடிவைத்து கரையிலிறங்கி நின்றான். திரும்பி சர்வதனிடம் “எனது நூல்பேழைகளை மட்டும் கையிலெடுத்துக்கொள், மந்தா” என்றான். சர்வதன் அவன் மூடிவைத்திருந்த மூன்று நூல் பேழைகளை கையிலெடுத்துக்கொண்டு படகின் விளிம்பிலிருந்து தாவி கரைக்கு வந்தான். அவனை திரும்பிப்பார்த்த யௌதேயன் “ஏடுகள் நீரில் விழுந்திருந்தால் என்ன செய்வாய்?” என்றான்.
“இதுவரை என் கையிலிருந்து எதுவும் விழுந்ததில்லை” என்றபடி சர்வதன் அவனுக்குப் பின்னால் வந்தான். “இந்த நள்ளிரவிலும் இப்படி பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அத்தனை துறைமேடைகளிலும் நள்ளிரவில்தான் பொதிகளை இறக்குவார்கள், மந்தா. பகற்பொழுதின் வெம்மையில் உழைப்பதுதான் கடினம்” என்றான் யௌதேயன். “ஆம், அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்” என்று சர்வதன் சொன்னான். யௌதேயன் எரிச்சலுடன் அவனை திரும்பிப்பார்த்தபின் மறுமொழி சொல்லாமல் நடந்தான்.
சுங்கநிலையை அடைந்த யௌதேயன் அங்கிருந்த காவலனிடம் “நாங்கள் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். தேர்களோ வண்டிகளோ இருந்தால் ஒருங்கு செய்க!” என்றான். காவலன் “தாங்கள்…” என்று சொல்லி இருவரையும் மாறி மாறிப் பார்த்தபின் சர்வதனை அடையாளம் கண்டுகொண்டு “இளைய பாண்டர் பீமசேனரின் மைந்தர் அல்லவா?” என்றான். “ஆம், இவர் முதற்பாண்டவர் யுதிஷ்டிரரின் மைந்தர்” என்றான் சர்வதன். “தங்கள் உடலே தெரிவிக்கிறது” என்று காவலன் சொன்னான். “சற்று பொறுங்கள், இதோ வருகிறேன்” என்று தீர்வை அலுவலகத்துக்குள் சென்று அங்கிருந்த சுங்கநாயகத்துடன் வந்தான்.
முதியவராகிய சுங்கநாயகம் சர்வதனின் அருகே வந்து வணங்கி “உபபாண்டவர்களை மதுராபுரிக்கு வரவேற்கிறேன். தாங்கள் வரும் செய்தி எதுவும் இங்கு அறிவிக்கப்படவில்லை. ஆகவே அரண்மனைத் தேர் எதுவும் இங்கில்லை. என்னுடைய சிறிய ஒற்றைப்புரவித் தேர் உள்ளது. அதில் ஒருவர் மட்டுமே செல்ல இயலும். பிறிதொருவர் புரவியில் செல்வீர் என்றால் அதை ஒருங்கு செய்கிறேன்” என்றார். சர்வதன் “எடைதாங்கும் ஒரு புரவி இருந்தால் போதும். நான் அதில் சென்றுவிடுவேன். மூத்தவருக்கு அந்தத் தேர் உகந்ததென்றால் பழுதில்லை” என்றான்.
“புதிய தேர்தான். அத்துடன் இங்கிருந்து அரண்மனை நெடுந்தொலைவிலும் இல்லை. ஏழு தெருக்களுக்கு அப்பால் உள்ளது மையக்கோட்டை. இரவாதலால் அரைநாழிகைக்குள் சென்று சேர்ந்துவிட முடியும்” என்று சுங்கநாயகம் சொன்னார். “நன்று! தேர் வருக!” என்றான் யௌதேயன். புரவியும் தேரும் வந்து நின்றன. ஏட்டுப் பேழைகளை தேருக்குள் வைத்தபின் அருகிலிருந்த மரப்பெட்டி ஒன்றை ஒரு கையால் தூக்கி படியாக வைத்து “ஏறிக்கொள்ளுங்கள், மூத்தவரே” என்றான் சர்வதன்.
யௌதேயன் பெட்டியின் மேலேறி தேரிலேறிக்கொண்டான். பாகன் ஏறிக்கொண்டதும் தேர் கிளம்பியது. சர்வதன் சுங்கநாயகத்திடம் “அரண்மனையில் இவ்வேளையில் அடுமனையில் உணவு சித்தமாக இருக்குமல்லவா?” என்றான். அவர் “மதுராபுரியின் அரண்மனையில் அடுமனை விளக்கும் அடுப்பும் அணைவதேயில்லை. தாங்கள் நிறைவுறும் வரை உண்ணலாம்” என்றார். புன்னகையுடன் “அதையும் பார்ப்போம். நான் உண்டபின் அடுமனைகளில் பெரும்பாலும் உடனே மீண்டும் அடுப்புமூட்டுவது வழக்கம்” என்றபடி சர்வதன் புரவியை செலுத்தினான்.
துறைமேடையிலிருந்து கிளம்பிய பொதிவண்டிகள் கோட்டையை இருபுறமும் சுற்றிக்கொண்டு பின்னால் அமைந்த பண்டகசாலை நோக்கி சென்றன. பயண வண்டிகள் மட்டுமே கோட்டைக்குள் சென்றன. அவை மிகச் சிலவே. அவற்றில் இருந்த வணிகர்களும் துயிலில் அசைந்தனர். கோட்டைக் காவல்தலைவர் அவர்களின் தேரை நிறுத்தி உள்ளே பார்த்தார். யௌதேயன் தன் கணையாழியை காட்டியதும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி கைகாட்டினார்.
அவர் விழிகளில் தெரிந்த வியப்பைப் பார்த்தபின் சர்வதன் “நம்மை இங்கு எவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். “ஆம், இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக பெரும்படைக்கூட்டொன்று நிகழும் களம் இது என இன்று பாரதவர்ஷமே அறிந்திருக்கிறது. மூத்த யாதவர் யாதவக்குடிகள் அனைத்தையும் திரட்டி துரியோதனருக்குப் பின்னால் நிறுத்த முயன்றுகொண்டிருக்கிறார். மும்முறை யாதவப் பேரவைகள் இங்கு கூடிவிட்டன. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து பாண்டவர் மைந்தர் இருவர் இந்நகரில் நுழைவதைப்போல வியப்பூட்டும் செய்தி ஒன்றில்லை” என்றான் யௌதேயன்.
சர்வதன் “ஆம், நாளை இந்நகர் முழுக்க இதுவே பேச்சாக இருக்கும்” என்றான். “எப்படியோ நாமும் வரலாற்றுக்குள் நுழைந்துவிட்டோம். சற்று செலவேறியது என்றாலும் தாழ்வில்லை. சூதர்களைக்கொண்டு நமது வீரச் செயல்களை பாடச்செய்துவிட வேண்டும்” என்றான். யௌதேயன் புன்னகைத்து “என்ன வீரச் செயல் உன் கணக்கில் உள்ளது?” என்றான். “என்ன அப்படி கேட்டுவிட்டீர்கள், மூத்தவரே? ஒவ்வொரு ஊட்டறையிலும் அடுமனையிலும் எனது வீரச் செயல்கள் என பத்துபதினைந்து உள்ளன. அவற்றை சூதர்கள் அறியவில்லை. அவர்கள் மிகக் குறைவாக பொழுது கழிக்குமிடம் அடுமனையே. ஆகவே நானேதான் அவர்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது” என்றான் சர்வதன்.
புலர்காலையில் மதுராபுரியின் அங்காடித்தெரு அன்றி பிற அனைத்துப் பகுதிகளும் துயிலில் இருந்தன. பெருங்கைவீதியும் முதல்மாடவீதியும் அரசநடுவீதியும் தேர்த்தடங்கள் பதிந்த தரையுடன் இருபுறமும் நிரைவகுத்த கற்தூண்களில் எண்ணை விளக்குகள் தழலாட ஓய்ந்தவை எனக் கிடந்தன. அங்காடிவீதிகளில் அத்திரிகளிலிருந்து பொதிகளை சுமையர் இறக்கிக்கொண்டிருந்தனர். அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் ஒரு கால் தூக்கி தலைதாழ்த்தி நின்று துயில்கொண்டன.
மணிவண்ணன் கோட்டத்தில் புலரிமணியோசை எழுந்தது. தொடர்ந்து கொற்றவை ஆலயத்திலும் வேல்மயிலோன் ஆலயத்திலும் செம்பொன் மேனியன் ஆலயத்திலும் மணியோசைகள் எழுந்தன. நகரம் நீர்த்துளிக் கிளை உலுக்கப்பட்டு சொட்டுவதுபோல மணியோசைகளால் நிறைந்தது. மரங்களிலிருந்து பறவைகள் சிறகு கொண்டெழுந்தன. சங்கொலி “ஓம்” என வானை அழைத்து அமைந்தது. பிறிதொரு சங்கொலி “ஆம்” என முழங்கி தொடர்ந்து எழுந்தது. யௌதேயன் கைகூப்பி கண்மூடி வணங்கினான். “நற்பொழுது! நாம் எண்ணி வந்தது நிகழவேண்டும்” என்றான்.
தேரின் விளிம்பைப் பற்றியபடி வந்த சர்வதன் நகைத்து “நாம் அங்கிருந்து எண்ணி வந்ததில் பெரும்பகுதி இங்கு நிகழும் அரசியல் சூழ்ச்சிகளைப்பற்றித்தான். அவை முறைப்படி நிகழுமென்பதில் ஐயமில்லை. அதற்கு நமது தெய்வங்களின் உதவி அவர்களுக்கு தேவையும் இல்லை” என்றான். “உளறாதே! நாம் தந்தையரின் ஆணை பெற்று வந்துள்ளோம்” என்று யௌதேயன் சொன்னான். “அதற்கு நம்மை ஏன் அனுப்பினார்கள் என்பதுதான் அங்கிருந்தே என்னைத் தொடரும் வினா” என்றான் சர்வதன்.
“நம்முடையது முறையான அழைப்பு மட்டுமே. நாம் அழைக்கவில்லை என்றொரு சொல் எழக்கூடாது. போர்முகம் திரள்வதற்குள் அத்தனை அரசர்களையும் முறையாக துணைக்கழைப்பதென்பது ஒரு மரபு. செய்வனவற்றை முறையாகவே செய்யலாம் என்றுதான் நம்மிருவரையும் தந்தை தேர்வு செய்துள்ளார். வசுதேவருடன் பேசுவதற்கு நான் பலராமருடன் பேசுவதற்கு நீ. நான் சொல்லாலும் நீ தசையாலும் அவரிடம் உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் தந்தை” என்றான் யௌதேயன்.
மதுராவின் தெருக்கள் இடுங்கியவையாகவும் இருபுறமும் வந்த மாளிகைகள் இரண்டு அடுக்குக்கு மிகாதவையாகவும் இருந்தன. “தொன்மையான மரக்கட்டடங்கள் இவை. இவற்றில் பெரும்பகுதி முன்பு இளைய யாதவராலும் பின்னர் ஏகலவ்யவனாலும் எரியூட்டப்பட்டது. முன்பிருந்த அதே வடிவில் புதிய மரத்தால் மீண்டும் செய்துகொண்டார்கள்” என்று யௌதேயன் சொன்னான். “ஏனெனில் இவற்றின் அடித்தளங்கள் மண்ணாலானவை. எஞ்சிய அடித்தளங்களின்மேல் கட்டும்போது முந்தைய வடிவிலேயே கட்டுவதுதான் இயல்வது.”
“ஏன், புதிய வடிவிலேயே கட்டலாமே? அடித்தளத்தை இடித்துவிட்டு அமைப்பதற்கென்ன?” என்று சர்வதன் கேட்டான். “அடித்தளங்களை இடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் வீதிகள் அவற்றின் அடிப்படையில் அமைந்தவை” என்றான் யௌதேயன். “ஆம், ஆனால் அடித்தளங்களை இடிக்காமல் எதுவும் மாறுவதில்லை” என்று சர்வதன் சொன்னான். “வீதிகளை மாற்றாமல் நகரம் மாறுவதில்லை. மாறா நகர் அம்மக்களை மாறாமல் வைத்திருக்கிறது.”
அவர்களின் தேர் சென்று அரண்மனை உட்கோட்டை வாயிலில் நின்றது. பெரிய தலைப்பாகை அணிந்திருந்த பெருந்தோளரான காவலர்தலைவர் இறங்கி வந்து புரியாத விழிகளுடன் தேரைப் பார்த்தபின் அணுகி “சுங்க நாயகத்தின் தேரல்லவா?” என்றார். சர்வதன் “ஆம், நாங்கள் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறோம். பாண்டவரின் மைந்தர்கள்” என்று தன் கணையாழியை காட்டினான். அவர் முகம் மலர்ந்து “உண்மையில் நீங்கள் தொலைவில் வருகையில் இளைய பாண்டவர் பீமசேனர் வருவதுபோல் உணர்ந்தேன். நான் அவரை ஏழுமுறை பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவருடன் தோள்கோத்து களம் நின்றிருக்கிறேன்” என்றார்.
“ஆம், அவருடன் தோள்கோக்கும் தரமுடையவை உங்கள் புயங்கள்” என்றபின் “தந்தையே, தங்கள் பெயரென்ன?” என்றான் சர்வதன். “சவிதன், யாதவ போஜர்குடியினன். நான் இளைய பாண்டவர் பீமசேனரின் அதே அகவை கொண்டவன்” என்றார். “நாளை களத்திற்கு வாருங்கள். அவர் மைந்தனுடன் ஒருமுறை தோள் சேர்த்தோமெனும் பெருமை உங்களுக்கு அமையட்டும்” என்று சர்வதன் சொன்னான். “உறுதியாக வருகிறேன்” என்று அவர் மலர்ந்த முகத்துடன் சொன்னார். “பாரதவர்ஷத்தின் மல்லர்களில் மிகச் சிலருக்கே அமையும் வாய்ப்பல்லவா அது?”
திரும்பி இளைய காவலன் ஒருவனிடம் “இளவரசர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்க! அவர்கள் சிற்றமைச்சர் சூக்தரை சந்திக்கட்டும். அவர்களின் தங்குமிடத்திற்கும் இளைப்பாறலுக்கும் அவர் ஏற்பாடு செய்வார்” என்றார். இளங்காவலன் அருகே வந்து புரவியை பிடித்துக்கொண்டு “வருக, இளவரசர்களே! தங்கள் வருகையால் மதுரா நகர் மகிழ்கிறது. என் வாழ்வில் எஞ்சிய நாள் முழுக்க சொல்லி மகிழும் ஒரு தருணமும் வாய்த்தது” என்றான்.
சர்வதன் இறங்கி அணுகிவந்த புரவிக்காவலனிடம் புரவியை ஒப்படைத்தான். யௌதேயன் தேரிலிருந்து இறங்கி “மந்தா, என் சுவடிப்பேழைகளை எடுத்துக்கொள்!” என்றான். சர்வதன் அப்பெட்டிகளை கையிலெடுத்துக்கொண்டு “செல்வோம்” என்றான். இளைய காவலன் “என் பெயர் மூர்த்தன். நானும் ஒருமுறை தங்கள் தந்தையை பார்த்திருக்கிறேன். அவர் கானேகக் கிளம்புவதற்கு முந்தைய ஆண்டு இந்திரப்பிரஸ்தத்தில். அங்கு ஒரு மற்போர் நிகழ்ந்தது. இங்கிருந்து பதினெட்டு மல்லர்கள் அங்கு வந்திருந்தார்கள். அதில் என் தாய்மாமனும் ஒருவர். அவருடன் நானும் சென்றிருந்தேன்” என்றான்.
“எந்தையுடன் போர் புரிந்தாரா உமது மாமன்?” என்றான் சர்வதன். “அதை போரென்று சொல்ல முடியாது. தசை பெருக்கியவண்ணம் சென்று நின்றார். மறுகணமே அவரைத் தூக்கி நிலத்தில் அறைந்தார் இளைய பாண்டவர். என்ன ஆயிற்றென்றுகூட பார்க்காமல் பிறிதொரு மல்லரை நோக்கி திரும்பிவிட்டார். நான்கு ஏவலர்கள் என் தாய்மாமனை காலைப்பற்றி இழுத்து களத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவருடைய வலத்தோளில் தசை கிழிந்து விலாவில் குருதி கொட்டியது. புண் ஆறுவதற்கு நெடுநாட்களாயிற்று” என்றான் மூர்த்தன்.
சர்வதன் சிரித்தான். மூர்த்தன் “இப்போதும் இருக்கிறார், வடக்குக்கோட்டை காவல் பொறுப்பில். மேலாடையை அவர் இடத்தோளிலேயே போடுவது வழக்கம். வலத்தோளின் பெரிய வடு இளைய பாண்டவருடன் அவர் போர்புரிந்து ஈட்டியது என்பதை எவரிடமும் கூறாமலிருக்கமாட்டார். பதினாறாண்டுகளுக்குப்பின் இப்போது அவரது குலத்தின் பெருமையாகவே அது அமைந்துள்ளது” என்றான். “அவரை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று சர்வதன் சொன்னான். “போர்புரிந்து அவர் மேலாடையணியாமல் ஆக்கவேண்டும்.”
மதுராவின் அரண்மனை உயரமற்றதாக, இரு கைகளையும் நீட்டிய நண்டு வடிவில் அமைந்திருந்தது. அதன் முற்றத்தில் ஒழுங்கற்று பல்லக்குகளும் புரவிகள் அவிழ்த்திடப்பட்ட தேர்களும் அத்திரிகளும் மஞ்சல்களும் முட்டி நிறைந்திருந்தன. அதனூடாக அவர்களை அழைத்துச்சென்ற இளங்காவலன் “அரண்மனையின் அனைத்து அறைகளிலும் யாதவ குலத்தலைவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். முப்பொழுதும் அங்கு உணவும் குடியும் நடக்கிறது. நாற்களம் ஆடுவது எவருக்கும் தெரியவில்லை. தாயம்தான் ஆட்டம். எஞ்சிய பொழுதுகளில் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் பேச்சை முடித்து அவர்களை விருந்துக்கு அனுப்பாவிடில் இங்கேயே மீண்டுமொரு குல உட்பூசல் தொடங்கிவிடும். நேற்றுகூட போஜர் குடித்தலைவர் சுதீரரை குங்குர குடித்தலைவர்களில் ஒருவரான சம்புகர் அறைந்துவிட்டார் என்றார்கள்” என்றான்.
“நேராக மற்போர் களத்திற்குச் சென்று வஞ்சம் தீர்த்துக்கொள்வதுதானே?” என்றான் சர்வதன். “அவர்கள் மற்போர் களத்திற்கு பழகியவர்கள் அல்ல. ஆகவே இருவரும் எழுந்து நின்று கைநீட்டி உரத்த குரலில் சொற்போரிட்டனர். ஒவ்வொருவருக்கும் எத்தனை பசுக்களும் காளைகளும் உள்ளன என்பதன் அடிப்படையில் அது நிகழ்ந்தது. இருவரிடமும் ஏராளமான கால்நடைகள் இருந்தன. என்ன இடர் என்றால் பசுக்களைச் சொல்லும்போது அவை நாளை இடப்போகும் குட்டிகளையும் சேர்த்து சொல்லிவிட்டார்கள்” என்றான் மூர்த்தன்.
சர்வதன் உரக்க நகைத்து “நன்று! யாதவர்களின் இயல்பே அதுதான். ஒன்று மூன்றென பெருகும் என்பதில் அவர்கள் உளஉறுதி கொண்டிருக்கிறார்கள். ஆகவே எல்லா ஒன்றுகளையும் மூன்றென எண்ணி கணக்குகளை இடுவார்கள்” என்றான். அரண்மனையின் வலப்பக்க நீட்சியை நோக்கி அவர்களை கொண்டுசென்ற இளங்காவலன் எதிரே வந்த முதிய காவலரிடம் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வரும் இளவரசர்கள் இவர்கள். இவர் இளைய பாண்டவர் பீமசேனரின் மைந்தர்’ என்றான்.
அவர் “கூறவே வேண்டியதில்லை, நீங்கள் பீமசேனரின் மைந்தர் சுதசோமர் அல்லது சர்வதர்” என்றார். “நான் சர்வதன்” என்றான் சர்வதன். “இவர் பிரதிவிந்தியர் அல்லது யௌதேயர்” என்றபின் “நீங்கள் சர்வதர் என்பதனால் இவர் யௌதேயராகத்தான் இருக்கவேண்டும்” என்றார். “ஆம்” என்று யௌதேயன் சொன்னான். “வருக இளவரசர்களே, யாதவர்கள் உங்கள் வருகையால் பெருமைகொள்கிறார்கள். சிற்றமைச்சர் சூக்தர் தங்களை ஆற்றுப்படுத்துவார்” என்று அவர் அவர்களை அழைத்துச் சென்றார்.
இடைநாழிகளினூடாக நடக்கையில் “என் பெயர் சுசக்தன். நான் பலமுறை மூத்த பாண்டவர் யுதிஷ்டிரரை பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவருக்கு காவலிருக்கையில் என்னிடம் யாதவப்பிரகாசிகை என்ற நூலில் ஒரு பகுதியைப்பற்றிய ஐயத்தை கேட்டார். அக்கணமே நான் மறுமொழி சொன்னதும் எழுந்து வந்து என் தோளைத்தட்டி யாதவபுரியில் ஒவ்வொருவரும் நூல் கற்றிருக்கிறீர்கள். இது அறிவுமுளைக்கும் நிலம் என அறிந்தேன் என்றார். யாதவப்பிரகாசிகையைப் பற்றி இந்திரப்பிரஸ்தத்தில் அறிஞர்களுக்குக்கூட தெரியாது என்று மகிழ்ந்தார்” என்றார்.
“நான் யாதவன் என்பதனால் அதை தெரிந்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றபின் சுசக்தர் புன்னகைத்து “அதைவிட இன்னுமொன்று உண்டு. அந்நூலை எழுதிய பர்வதர் எங்கள் ஊரை சேர்ந்தவர். இளவயதில் அவர் இல்லத்தில்தான் நாங்கள் சென்று விளையாடுவோம். அவர் அந்நூலை இயற்றிக்கொண்டிருக்கையில் பலமுறை ஏடுகளை நான் அடுக்கிவைத்ததும் உண்டு. அதை நான் மூத்த பாண்டவரிடம் சொல்லவில்லை. மதுராவைப்பற்றி அப்படி ஒரு நல்லெண்ணம் தவறுதலாகவேனும் ஒருவருக்கு உருவாகுமென்றால் நாம் ஏன் அதை தடுக்க வேண்டும்?” என்றார்.
“எவரிலும் நன்மையை மட்டுமே பார்க்கும் விழிகொண்டவர் எந்தை” என்றான் யௌதேயன். சிற்றமைச்சரின் அறைவாயிலை அடைந்த சுசக்தர் “நான் அறிவிக்கிறேன் தங்களை” என்றபின் உள்ளே சென்றார். பின் வெளியே வந்து “தங்களை அழைக்கிறார் அமைச்சர்” என்றார். யௌதேயன் இளையவனை நோக்கிவிட்டு உள்ளே சென்றான். ஒருகணம் தயங்கி பின் சர்வதனும் தொடர்ந்தான்.
சிற்றமைச்சர் சூக்தர் தன் பீடத்தில் அமர்ந்தவாறே “வருக, இளவரசர்களே!” என்றார். முகமன் என ஏதும் சொல்லவில்லை. யௌதேயன் “நாங்கள் மதுராபுரியின் அரசரையும் மூத்த யாதவரையும் சந்திக்கும்பொருட்டு வந்துள்ளோம்” என்றான். அவர் அவர்களின் விழிகளை சந்திக்கவில்லை. பீடத்தின் மேலிருந்த ஏடுகளை எடுத்து அடுக்கியபடி “தங்கள் வருகை முறைப்படி இங்கு அறிவிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் தங்களை சந்திக்க சித்தமாக இருக்கிறார்களா என்பதை இப்போது சொல்லமுடியாது. தங்களுக்கு நான் தங்குமிடமும் நீராட்டும் உணவும் ஒருக்குகிறேன். புலர்ந்த பின்னர் அரசருக்கும் மூத்த யாதவருக்கும் முறைப்படி செய்திகளை தெரிவிக்கிறேன். அவர்கள் விழைவார்கள் என்றால் நீங்கள் சந்திக்கலாம்” என்றார்.
“ஆம், அதுவே முறை. அது போதும்” என்றான் யௌதேயன். அவர் அடுக்கிய சுவடிகளை மீண்டும் அடுக்கியபடி மேலே விழிதூக்காமல் “முறைப்படி அறிவிக்கப்பட்டு அரசப்பணியென தாங்கள் இங்கு வரவில்லை. ஆகவே இங்கு வரும் அயலவருக்கான சிற்றறைகளையே நான் அளிக்கமுடியும். அரச குலத்தோருக்கான அறைகள் அனைத்துமே இப்போது பிறரால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தாங்கள் அறிந்திருப்பீர்கள், யாதவ குடித்தலைவர்கள் அனைவரும் இங்குதான் உள்ளனர்” என்றார்.
“ஆம், அறிவேன்” என்று யௌதேயன் சொன்னான். “வருக! தங்கள் அறைகளை காட்டுகிறேன்” என்று சிற்றமைச்சர் எழுந்துகொண்டார். யௌதேயன் சர்வதனின் கையை அவர் அறியாமல் பற்றி சற்று அழுத்தி அவனை அடக்கிவிட்டு அவரை தொடர்ந்தான். சர்வதன் தன் பெரிய உடலை அசைத்து உடன் சென்றான். அவன் காலடிகள் மரத்தரையில் எடையுடன் விழுந்தன. அந்த ஓசைகேட்டு திரும்பி நோக்கிய அமைச்சர் அறியாமல் அவன் விழிகளை ஏறிட்டு நோக்கிவிட்டு திடுக்கிட்டு விலகிக்கொண்டார்.