எழுதழல் - 51

ஏழு : துளியிருள் – 5

fire-iconஅபிமன்யூ அமைச்சு அறையைவிட்டு வெளிவந்ததும் காத்திருந்த பிரலம்பன் அவனுடன் நடந்தபடி “இப்போது அரசியரை சந்திக்கப்போகிறோமா?” என்றான். அவன் உய்த்துணர்ந்ததைப் பற்றி அபிமன்யூ வியப்பு கொள்ளவில்லை. “ஆம், அரசியரும் மூன்று குழுக்களாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் முதலில் ஜாம்பவதி அத்தையை சந்திக்க விரும்புவதாக ஜாம்பவவிலாசத்தின் அகத்தளத்திற்குச் சென்று சொல்க! நான் செல்வதற்குள் அவர் காளிந்தி அத்தையை அங்கு வரவழைத்திருப்பார்” என்றான்.

நடந்தபடி “அவர்களை நான் சந்தித்துக்கொண்டிருக்கையில் ருக்மிணி அத்தையை சந்திக்க விரும்புவதாக சென்று சொல்க! அங்கே பத்ரை அத்தையும் லக்‌ஷ்மணை அத்தையும் மித்ரவிந்தை அத்தையும் வந்திருப்பார்கள். இறுதியாக அரசி சத்யபாமையை சந்திக்கிறேன். உடன் நக்னஜித்தி அத்தை இருப்பார்” என்றான். பிரலம்பன் “ஆம்” என்றான். “மூன்று சந்திப்புகளில் அனைத்தையும் முடித்துவிடலாம்” என்றான் அபிமன்யூ தனக்கே என. பிரலம்பன் தலைவணங்கி முன்னால் சென்றான்.

அபிமன்யூ தன் அறைக்குச் சென்று ஏவலனிடம் தனக்கு அகத்தளத்திற்குரிய ஆடைகளை அணிவிக்கும்படி சொல்லி அமர்ந்தான். அவன் உள்ளம் அனைத்துச் சொற்களையும் இழந்து முழுமையாகவே ஒழிந்துகிடந்தது. சோர்வு மெல்ல கட்டைவிரலில் இருந்து கிளம்பி உடலை நிறைத்தது. அனைத்து நரம்புகளும் நாணிழக்க அவன் அங்கிருந்து தன்னால் எழவே முடியாது என எண்ணினான். ஏவலன் மெல்ல தட்டியபோதுதான் அவன் தான் துயில்கொண்டு சரிந்தபடி இருப்பதை உணர்ந்தான். அதற்கு முந்தைய கணம் அவன் உபப்பிலாவ்யத்தில் இருந்தான். எவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்?

அகத்தளம் புகுவதற்குரிய வெண்பட்டு மேலாடையும் வெண்ணிறக் கீழாடையும் அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அவன் ஜாம்பவவிலாசத்தை அடைந்தபோது அங்கு ஜாம்பவதியின் சேடியான பிரியை காத்து நின்றிருந்தாள். “அரசி தங்களை உள்கூடத்திற்கு அழைத்துவரும்படி ஆணையிட்டிருக்கிறார், இளவரசே” என்றாள். அவன் புன்னகையுடன் “ஆம், உள்கூடம் ஒலிபுகாச் சுவர்கள் கொண்டது” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் புன்னகைத்தபடி தலைவணங்கினாள் பிரியை.

உள்கூடத்தின் வாயிலருகே சென்றதும் அவள் உள்ளே செல்லும்படி கைகாட்டிவிட்டு நின்றுவிட்டாள். பெரிய கதவு வெண்கலக் கீலில் வெண்ணையில் என ஒலியிலாது சுழன்று தசைகூடுவதுபோல இணைந்து மூட அபிமன்யூ உள்ளே சென்று நின்றான். ஜாம்பவதி பீடத்தில் அமர்ந்திருக்க அப்பால் சாளரத்தருகே சுவர் சாய்ந்து காளிந்தி நின்றிருப்பதை கண்டான். பெரிய பளிங்குத் தூண்களால் தாங்கப்பட்ட வெண்குடைவுக்கூரை கொண்ட அக்கூடத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். கடற்காற்று உள்ளே சுழன்றுகொண்டிருந்தது.

“வருக, மைந்தா!” என்று ஜாம்பவதி அவனை வரவேற்றாள். “தாள் பணிகிறேன், அத்தை” என்று சொன்னபடி குனிந்து அவள் தாள் தொட்டு சென்னிசூடினான் அபிமன்யூ. அவன் தலையில் கைவைத்து “வெல்லப்படாதவனாகுக!” என்று அவள் வாழ்த்தினாள். அவன் காளிந்தியை வணங்கியபோது அவன் தலையை அவள் மெல்ல தொட்டாள். அபிமன்யூ “இதுவரை சந்திக்காமையின் குறை இருந்தது, அத்தை. ஆனால் இளையோருடன் விளையாடி தங்களுடன் சொல்லாடிய மகிழ்வை பெற்றேன்” என்றான்.

அவன் அமர்ந்ததும் ஜாம்பவதி “நீ சாம்பனை இன்று சந்தித்தாயென்று அறிந்தேன்” என்றாள். அபிமன்யூ “ஆம், அத்தை” என்றான். “அவர் என்னிடம் சொன்னவற்றை அரசரிடம் சென்று சொல்லும்படி பணிக்கப்பட்டிருக்கிறேன். அதற்குமுன் அவற்றை தங்களிடம் சொல்ல விரும்புகிறேன்” என்றான். ஜாம்பவதி கைநீட்டி அவனைத் தடுத்து “மைந்தா, அவன் என்ன சொல்லியிருப்பான் என்று எனக்குத் தெரியும். அதில் ஒரு சொல்லையேனும் நான் கேட்க விரும்பவில்லை. என் உடலும் உள்ளமும் ஊழும் மாற்றுலகங்களும் ஒருவருக்காக மட்டுமே. பிறிதொரு எண்ணம் என்னில் எப்போதும் எழுந்ததில்லை” என்றாள்.

“அவர் தந்தையிடம் மாறு கொண்டிருக்கிறார், களமெதிர் நிற்கவும் கூடும்” என்றான் அபிமன்யூ. “அவ்வாறு என் மைந்தர் நிற்பார்களேயென்றால் அவர்களின் குருதியை ஒருதுளி விழிநீர் எழாது நின்று நோக்கவும் நான் சித்தமாவேன். அவர்கள் எனக்கு எவருமல்ல” என்று ஜாம்பவதி சொன்னாள். “இங்கிருக்கும் எவரும் எனக்கு உறவல்ல. இவ்வாறு சூழ்ந்துள்ள எப்பொருளும் என்னுடையதும் அல்ல. இங்கு ஒலிக்கும் ஒரு சொல்லுக்கும் என்னுள்ளத்தில் பொருளில்லை. ஒருவருக்கு மட்டுமென இப்புவி பிறந்தேன்.”

“அவரிலிருந்து அவர் விழைவால் அலைவுற்று விலகிவந்த அவர்தான் நான்” என்று ஜாம்பவதி சொன்னாள். “மீண்டு அவர் அகத்து அமர வேண்டியவள். என்னை அவரென்றன்றி பிறிதென்று எப்போதும் உணர்ந்ததில்லை. இம்மைந்தர் இங்கு பிறக்கையில் அவர் என்னில் நிகழ்கிறார் என்றே எண்ணினேன். எண்புறமும் சூழ்ந்திருந்தாலும் கையெட்டித் தொடமுடியாதவராகிய அவரை மடியிலும் முலைகளிலும் இட்டுச் சீராட்ட முடிவதற்கான வாய்ப்பென்று மட்டுமே கருதினேன். என் வழியாக இவ்வுலகு நோக்கி அவர் விரிகிறார். வில்லென்று என்னைக் கொண்டு அம்புகளை தொடுக்கிறார். பிறிதொன்று கருதியதே இல்லை.”

ஜாம்பவதி பருத்து ஓங்கி பெரிய கைகளும் பரந்த முகமுமாக ஆலயச்சிலைகளில் எழுந்த அன்னை போலிருந்தாள். “இப்போதுகூட இம்மைந்தர் தந்தையிடம் மாறுகொள்கின்றனர் என்று நான் கருதவில்லை. அவரே எண்பது முகம் கொண்டெழுந்து தன்னுடன் தான் போர் புரிகிறார் என்றே தோன்றுகிறது. அது அவர்களின் போர். நாங்கள் எண்மரும் அதில் எங்கும் இல்லை” என்றாள். சிறிய கரிய உடலும் சிறுமியருக்குரிய வட்டமுகமும் கொண்டிருந்த காளிந்தி “ஆம், அக்கை சொல்வதே என் சொல். இத்தனை தெளிவாக என்னால் உரைத்துவிட இயலாது” என்றாள்.

ஜாம்பவதி “மைந்தரை என் தோளிலிருந்து இறக்காது வளர்த்தேன். மூத்தவனை அன்னையுடன் இருப்பவன் என்பதனால் ஸ-அம்பன் என்று செவிலியர் களியாடுவதுண்டு. எப்போதும் பிரியாமல் என்னைச் சுற்றி என் உளம் அமைந்த உருவத்தை பத்தாக பிரித்தமர்த்தி ஒவ்வொன்றையும் வழிபட்டு வந்தேன்” என்றாள். “மீண்டு சென்று என் மைந்தனிடம் பேசுவாயென்றால் சொல்க! அவனிலும் அவன் உடன்பிறந்தாரிலும் நான் கண்டது ஒரு முகத்தை மட்டுமே. அழிவற்றது அம்முகம். அவர்களின் உடல் அழிந்தால்கூட இப்புவியில் என்றும் இருக்கும் அது.”

அவள் எழுந்துகொண்டு “இப்போது நீ மூத்த அரசியர் இருவரையும் பார்க்கப்போகிறாய் என்று எண்ணுகிறேன். அவர்களுடன் பிற நால்வரும் இருப்பார்கள். எண்ணிக்கொள் மைந்தா, ஒருவருக்கும் மறுசொல்லென ஒன்றுமிருக்காது. நாங்கள் எட்டென பிரிந்து வேறு வேறு முகம் கொண்டு உளம் திரண்டு சொல் பெருக்கி முரண்பட்டு இங்கு ஆடும் இந்த நாடகம் அவர் மகிழ்ந்து உவகை கொள்ளும் பொருட்டு எழுந்தது மட்டுமே. இதற்கப்பால் நாங்கள் அரசியர் அல்ல, அன்னையரும் அல்ல” என்றாள்.

அபிமன்யூ எழுந்து கைகூப்பி நின்றான். ஜாம்பவதி தன் மேலாடையை அள்ளி தோளிலிட்டுக்கொண்டு “நாங்கள் அணிபுனையவேண்டும். இன்று அவையமரும் நன்னாள். பதினான்காண்டுகளுக்குப்பின்” என்றாள். அபிமன்யூ தலைவணங்கி “இதையும் நான் அறிந்திருந்தேன், அத்தையே. இத்தனை உகந்த சொற்களில் இதை கேட்கும் பேறு எனக்கு அமையவேண்டுமென்றுதான் இத்தருணம் எனக்கு அளிக்கப்பட்டது என்று உணர்கிறேன்” என்றான்.

fire-iconஜாம்பவவிலாசத்தின் முகப்பில் பிரலம்பன் அவனை எதிர்கொண்டான். அபிமன்யூ அங்கு வந்தபோதிருந்த சோர்வகன்று முகம் மலர்ந்திருப்பதைக் கண்டு “வென்றுவிட்டோமா?” என்றான் பிரலம்பன். “எண்ணியதல்ல நிகழ்ந்தது” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் குழப்பத்துடன் “நாம் பிற அரசியரை பார்க்கவேண்டும் அல்லவா?” என்றான்.

“ஆம். அத்தையரிடம் பேசினாயா?” என்று அபிமன்யூ கேட்டான். “இளவரசே, யாதவஅரசியும் இளையஅரசியும் பிற நால்வருடன் அரசரின் அறைக்கு சென்றுவிட்டார்கள்” என்றான். “அரசர் அறைக்கா? இன்னும் பொழுதிருக்கிறதே?” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம், அவர் இன்னமும் அணியறைவிட்டு வரவில்லை என்றார்கள்” என்றான் பிரலம்பன். “என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை. நாம் மூத்தவர் பானுவை சந்தித்ததை மூத்த அரசி அறிந்திருக்கலாம். சினம்கொண்டு தன் அரண்மனையிலிருந்து கிளம்பி அரசரை சந்திக்கும்பொருட்டு சென்றார் என எண்ணுகிறேன்.”

“ஆனால் அவருடன் பிறரும் சென்றிருக்கிறார்கள்” என்றான் அபிமன்யூ. “ஆம், அவர் செல்வதைக் கண்டு அவருடன் இளைய அரசியும் சென்றார் என எண்ணுகிறேன். ஆகவே பிற நால்வரும் உடன் சென்றனர்.” அபிமன்யூ “எப்போது அவர்கள் அரசர் அறைக்குள் நுழைந்தார்கள்?” என்றான். “சற்று முன்பு. அச்செய்தியை அறிந்ததும் தங்களைச் சந்திக்க ஓடி வந்தேன். அரசியருடனான சந்திப்பு நீளும் என்றால் உள்ளே வந்து எவ்வாறு அதை தெரிவிப்பது என்று தயங்கிக்கொண்டிருந்தேன். அது விரைவிலேயே முடிந்துவிட்டது” என்றான்.

“வருக!” என்று அவன் தோளில் தட்டியபடி அபிமன்யூ நடக்க “எங்கு செல்கிறோம்? அரசியரை சந்திக்க இது உகந்த தருணமல்ல. நீங்கள் எண்ணிய எதையுமே இப்போது நாம் அவர்களிடம் சொல்ல முடியாது” என்றான் பிரலம்பன். “அவர்களிடம் இனி சொல்வதற்கு எதுவுமில்லை. அவர்கள் அனைவரின் பொருட்டும் ஜாம்பவதி அத்தையே பேசிவிட்டார்கள்” என்று அபிமன்யூ சொன்னான்.

அபிமன்யூவும் பிரலம்பனும் இடைநாழிகளினூடாக நடந்து கூடத்தில் படிகளில் மேலேறி மீண்டும் ஒரு இடைநாழியைக் கடந்து அரசரின் மையமாளிகைக்கு சென்றார்கள். பிரலம்பன் மூச்சுவாங்க “இவ்வரண்மனை ஒரு சிறுநகரின் அளவுக்கு உள்ளது. இதற்குள்ளே புரவியிலோ தேரிலோ செல்வதற்கான வழிகள் உருவாக்கப்படவில்லையென்றால் முதியோர்கள் இடருறுவார்கள்” என்றான். அபிமன்யூ அவனை திரும்பிப் பார்த்து புன்னகைத்து “முதியவர்களை உள்ளேயே மஞ்சலில் தூக்கிச் செல்வதுண்டு” என்றான்.

“காலோய்ந்த இளையோரையும் அவ்வாறே அவர்கள் தூக்கிச் செல்லலாம்” என்றான் பிரலம்பன். இளைய யாதவரின் மாளிகை முகப்பில் நின்ற அமைச்சர் சுதமர் அபிமன்யூவைக் கண்டதும் மெல்ல தலையசைத்து நிகழ்ந்ததை அவர் அறிவார் என்பதை உணர்த்தினார். அபிமன்யூ அருகே சென்று “நான் அரசரை சந்திக்கலாமா?” என்றான். “அவர் அணியறையில் இருக்கிறார். அரசியர் மட்டும் உள்கூடத்தில் அவருக்காக காத்திருக்கிறார்கள். அங்கே அமைச்சர்கள் செல்லும் வழக்கம் இல்லை. ஆனால் மைந்தராக உங்களுக்கு தடை இல்லை” என்று சுதமர் சொன்னார்.

அவர் சொன்னதை புரிந்துகொண்டு தலைவணங்கி ஏவலனிடம் தன்னை உள்கூடத்திற்கு கூட்டிச்செல்லும்படி அபிமன்யூ சொன்னான். உள்கூடத்தின் வாயிற்காவலன் உள்ளே சென்று அவன் வரவை அறிவித்து மீண்டு வந்து உள்ளே செல்லும்படி யாதவ அரசி ஆணையிட்டிருப்பதை உரைத்தான். பிரலம்பனிடம் அங்கு நிற்கும்படி கைகாட்டிவிட்டு அபிமன்யூ உள்ளே சென்றான்.

உள்ளே ருக்மிணியும் சத்யபாமையும் இரு பீடங்களில் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் பின்னால் நக்னஜித்தியும் பத்ரையும் லக்ஷ்மணையும் மித்ரவிந்தையும் நின்றிருந்தனர். அபிமன்யூ உள்ளே நுழைந்து சத்யபாமையின் காலடிகளைத் தொட்டு சென்னிசூடினான். அவள் வாழ்த்தும்முகமாக தலையை தொட்டாள். ருக்மிணியையும் தாள் வணங்கிவிட்டு பிற அரசியர் அனைவரையும் பொதுவாக நிலம் தொட்டு வணங்கிவிட்டு அவன் அருகே நின்றுகொண்டான்.

அவன் தொடங்குவதற்குள் சத்யபாமை “நீ எங்கிருந்து வருகிறாய் என்று அறிவேன். நீ சொல்லவருவதும் தெரியும்” என்றாள். “ஆம், அத்தை. சற்று முன்னால் சாம்பரையும் பானுவையும் பார்த்தேன். பின்னர் ஜாம்பவதி அத்தையை பார்த்துவிட்டு தங்களைப் பார்க்க வந்தேன்” என்றான் அபிமன்யூ. ருக்மிணி புருவத்தைச் சுளித்து “அவள் இன்னும் அவைக்கு அணிசெய்துகொள்ளவில்லையா? சற்று நேரத்தில் அரசர் அவை புகவிருக்கிறார்” என்றாள். திரும்பி நக்னஜித்தியிடம் “சென்று அவளிடம் கிளம்பச்சொல்… பொழுதாகிறது” என்றாள்.

அபிமன்யூ உட்புகுந்து “அத்தை, நான் விடைகொண்டபோது அவர்களிருவரும் அணிகொள்ளத்தான் செல்வதாக கூறினார்கள்” என்று சொன்னான். “நாங்கள் கிளம்பிவிட்டோம். இன்று பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அரசர் அவையமரவிருக்கிறார். துவாரகையின் அருந்தருணங்களில் ஒன்று இது” என்றாள் ருக்மிணி. அபிமன்யூ ஆறு அரசியர் முகங்களையும் நோக்கினான். பின்னர் “அதனால்தான் நான் பார்க்கவந்தேன். இது ஒரு நன்மங்கலத் தருணமாக அமையாதென்று அஞ்சுகிறேன்” என்றான்.

சத்யபாமை “ஏன்?” என்றாள். “அத்தையரே, தங்கள் மைந்தர் எவரும் இன்று அவையமரப்போவதில்லை” என்றான் அபிமன்யூ. சத்யபாமை “அதனால் என்ன? அவை என்பது ஒருவரே. அவர் அமர்ந்தபின் அங்கே எவர் இருந்தாலென்ன, இல்லையென்றால் என்ன?” என்றாள். “ஆம், ஆனால் தங்கள் மைந்தர் இல்லையேல்…” என அபிமன்யூ தொடங்க “அதை அவர்கள் முடிவெடுக்கட்டும். அவர்கள் தங்கள் நலன் காக்க அறிந்தவர்கள்” என்றாள்.

“அவர்கள் செயலுக்கு நீங்களும் பொறுப்பல்லவா?” என்றான் அபிமன்யூ சற்று எரிச்சலுடன். சத்யபாமை இயல்பாக “அவர்கள் எங்களுக்கு எவ்வகையில் உறவு?” என்றாள். அபிமன்யூ “இங்கு நான் வந்து தங்களை சந்தித்தபோது பிறிதொன்றை சொன்னீர்கள்” என்றான். “ஆம், அதை எண்ணியே நானும் வியந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பதர்களை எல்லாம் அனைத்துமென எப்படி எண்ணியிருந்தேன்?” ருக்மிணி “அது அவர் அகன்றிருக்கையில் எங்கள்மேல் கவிந்த இருள்” என்றாள். “அல்லது அவர் எங்களை சிக்கவைத்துச் சென்ற ஆடல். பதினான்கு ஆண்டுகாலம் ஒளிமறைவுப் பகுதியிலிருந்தோம். அவர் முன் நாங்கள் எவரென்று அறிந்தோம். மைந்தா, இப்புவியில் எங்களுக்கு மானுடர் என பிறிதெவரும் இல்லை.”

“துணைவியர் என நாங்கள் எட்டு மாயைகளில் சிக்கிக்கொண்டவர்கள்” என்றாள் சத்யபாமை. “நாங்கள் அழகிகள் என்னும் மாயை. உயர்ந்தோர் எனும் மாயை. அவருக்காகவே பிறந்தோம் என்றும் அவருக்காகவே வாழ்கிறோம் என்றும் அவரை மகிழ்விக்கிறோம் என்றும் அவர் முன் எவர் பெரியவர் என்றும் அவர் எங்களை விரும்புகிறார் என்றும் எண்ணும் மாயைகள். அனைத்துக்கும் மேலானது அவர் மைந்தரைப் பெற்றோம் எனும் மாயை. இறுதியாக அதில் சிக்கியிருந்தோம்” என்றாள் சத்யபாமை.

“மாயைகளில் பெரிது அன்னையெனும் பற்று. அனைத்துச் சிறுமைகளையும் அள்ளிக்கொண்டு வந்து நிறைக்கிறது. அனைத்து வாயில்களையும் மூடி அறியாமையை வளர்க்கிறது. அனைத்துக்கும் மேலாக அன்னையென்று அமைந்து ஆற்றுவதெல்லாம் நன்றே என்ற பொய்யில் திளைக்கவைத்து மீட்பில்லாதாக்குகிறது. வெளிவந்த பின்னரே அதை உணர்கிறோம்” என்றாள் ருக்மிணி. “ஆனால் இதுவும் அவர் ஆடுவதே என எண்ணுகையில் நன்றே நிகழ்ந்தது என்றே கொள்கிறோம்.”

சத்யபாமை “இன்று எண்பதின்மர் தந்தையுடன் ஆடும் விளையாட்டு என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. இதையும் அவரே எவ்வகையிலோ ஆடுகிறார் என்று தோன்றுகிறது. ஒருவேளை இப்பெருநகரே ஒரு மாயமென்றிருக்கலாம். இந்திரமாயம் காட்டுபவன் இரு கைவிரல்களை விரைந்து அசைத்து இழுத்து விரித்து வெறும் வெளியில் உருவாக்கும் பொய்யுருவங்கள் போன்றது இந்நகரென்று தோன்றுகிறது. வெறும் நுரைவடிவு. ஒளியே பருப்பொருளாகும் விழிமயக்கு. கைசுருக்கி அவன் விலகும்போது இழுபட்டு உருகுவிந்து துளியென்றாகி வெட்டவெளியில் மறைவது” என்றாள்.

“இந்நகர் போலவே நாங்களும் எங்கள் மைந்தரும் அவர் தோகை விரித்தாடும் வண்ணப் பீலிகளாக இருக்கலாம். அவர் ஆடலுக்கு அழகு சேர்ப்பதன்றி வேறு பொருள் இல்லையென்று நாங்கள் உணர்வதைப்போல் அனைவரும் உணரும் காலம் வரும்” என்றாள் ருக்மிணி. “ஆனால் இது வீண் அல்ல. இறைவிளையாட்டு மாயையினூடாகவே. அதன் அலையெல்லாம் வெறும் மயக்கு. அதிலெழும் அமுது மட்டும் மெய். இப்போரும் குடிப்பூசலும் குருதியும் விழிநீரும் மறையும். பொய்யென்றாகி கதையென மீட்கப்படும். நூலெனப் பயிலப்பட்டு மெய்யெனத் திரட்டப்படும். அதுவே அவர் இங்கு நிகழ்ந்தமைக்கான பொருள்.”

அபிமன்யூ பொருளின்றி அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். முற்றிலும் அயலான ஓரிடத்தில் வேறு ஒளியில் வேறு காற்றில் சொற்கள் அறியாப்பெரும்பொருள் கொள்ளும் சித்தப்பரப்பில் இருந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அது எவரோ இயற்றி முடித்துவிட்ட நூல். மாபெரும் காப்பியங்களுக்குரிய ஒத்திசைவும் பிறழ்வுகளும் கொண்டது. பொருள்கடந்த விரிவும் பொருளின்மையும் நிறைந்தது. குழந்தைக்கதையென்றும், அழியா தொல்கதை என்றும், மூத்தோர் நெறியென்றும், மூவா விழைவென்றும், அறமென்றும், கீழ்மறமென்றும் மாறிமாறி தன்னைக் காட்டுவது.

பல்லாயிரம் பட்டைகொண்ட ஒரு வைரம். அதை பல்லாயிரம்கோடி முறை திருப்பித் திருப்பி மட்டுமே காட்ட இயல்வது இந்த முகம். ஆடிகளால் அல்ல. அள்ளற்கரியது கடல். அதை அள்ள கடலென விரிகிறது எவருடையவோ சொல். அவன் பெருமூச்சு விட்டான். “ஆம், எங்கோ அமர்ந்து கிருஷ்ண துவைபாயனர் இதை எழுதிக்கொண்டிருக்கிறார் போலும் என்று நானும் எண்ணிக்கொண்டேன்” என்று மித்ரவிந்தை சொன்னாள். “அவரிலெழும் அழியாச் சொல்லில் மட்டுமே அவர் முகம் தெரியும்.”

மறுபக்கக் கதவு ஓசையின்றித் திறந்து ஏவலன் வெளிவர ஆறு அரசியரும் எழுந்து நின்றனர். அபிமன்யூ எழுந்து கைகூப்பி நின்றான். உயர்ந்த அறைக்கதவினூடாக இளைய யாதவர் அரசணிக்கோலத்தில் வெளிவந்தார். பச்சை மரகதங்கள் பதிக்கப்பட்டு தளிரென்று ஒளிவிட்ட பொற்குறடு. இளநீல அருமணிகள் சுடர்ந்த கழல். உருகிவழிந்த பொன் என நெளிவுகள் அமைந்த அரையாடை. அனலொளி கொண்ட வைரங்கள் செறிந்த பொற்கச்சை. அதில் செருகப்பட்ட உடைவாளின் பிடியில் கருடன் செவ்விழி திறந்திருந்தது.

பொற்கவசமிட்ட மார்பு. தோளிலையும் புயவளைகளும் கங்கணங்களும் கணையாழிகளும். அணியிலாத ஓர் இடமில்லை. பூத்த மரங்களில் நிகழும் நிறைவு. அணிகள் உடலுக்கு மானுடன் அளிக்கும் படையல். இது உன் அழகு, இது உன் நெகிழ்வு, இது உன் குழைவு, இது உன் குலுங்கல், இது உன் சிலம்பல், இவை நீ கொண்டவற்றின் தூய்மைகள் மட்டுமே என அவன் உடலிடம் சொல்கிறான். ஆம் என்று சூடி மேலும் பொலிகிறது உடல்.

அணிகளால் குழந்தை மலர்கிறது. கன்னியர் கனிகிறார்கள். அன்னையர் நிறைவுறுகிறார்கள். அரசர்கள் மாண்புறுகிறார்கள். தெய்வங்கள் விழியுருக் கொள்கின்றன. அணிகளன்றி அவர்களுக்கு அளிக்க மானுடனிடம் ஏதுமில்லை. அணிகள் அழகென மானுடன் அறிந்தவற்றின் நுண்செறிவு. அவன் விழிகொண்ட தவத்தை கைகள் அறிந்ததன் சான்று. ஆக்கி அழிக்கும் தெய்வங்களுக்கு முன் பணிந்து அவன் காட்டும் ஆணவம்.

செம்பட்டு சுழற்றி அதன்மேல் முத்தாரம் சுற்றி வைரமலர்கள் பதித்து இப்புவியின் முதன்மைப்பெருஞ்செல்வம் என்று அமைத்த மூன்றடுக்கு மணிமுடியின் மீது வானிலிருந்து மிதந்து வந்து விழுந்து மெல்ல தைத்து நிற்பதுபோல் மயிற்பீலி காற்றில் அசைந்தது. பொன்னென்றும் மணியென்றும் அணியென்றும் ஆடையென்றும் குலமென்றும் குடியென்றும் அரசென்றும் அறமென்றும் அவரை இங்கிருக்க வைக்கும் அனைத்துக்கும் அப்பால் சிறகு என எழுந்து அவரை வானில் எடுத்துச்செல்லும் ஓர் அழைப்பு அது.