எழுதழல் - 5

இரண்டு : கருக்கிருள் – 1

fire-iconஅபிமன்யூ காலைவெயில் எழுந்த பின்னர் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை வந்தடைந்தான். வணிகவண்டிகளின் நீண்டநிரை வலப்பக்கத்திலும் பயணிகளின் நிரை இடப்பக்கத்திலும் நீண்டிருக்க கோட்டைவாயிலில் காவலர்கள் அவர்களை நிறுத்தி முத்திரைகளை நோக்கி, வணிகர்களிடம் சுங்கம் கொள்வதற்குரிய முத்திரைகளைப் பதித்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இரு நிரைகளுக்கும் நடுவேயிருந்த அரசுப்பணியாளர்களுக்கும் காவலர்களுக்குமான சாலையில் அவன் நுழைந்தான். மறுபக்கம் நின்ற புரவிகளை நோக்கியபடி புரவிமேல் சற்று திரும்பி தொற்றியதுபோல் அமர்ந்திருந்தான்.

கரகத்தை ஆடுமகள் தலையில் கொண்டுசெல்வதுபோல அவனை கொண்டுசென்றது புரவி. எதிரே வந்த படைக்கலமேந்திய ஏழு கவசக்காவலர் அவனை முன்னரே கண்டுவிட்டிருந்தனர். அவன் உடையில் ஏதேனும் அரசமுத்திரை உள்ளதா என்று தொலைவிலேயே நோக்கி இல்லை என்று கண்ட காவலர்தலைவன் பிரலம்பன் புரவியை முன்செலுத்தி அவனருகே வந்தான். உரத்த குரலில் “வீரரே, இது அரசப்பாதை… உங்கள் குடிமுத்திரையோ பணிமுத்திரையோ காட்டுக!” என்றான். அபிமன்யூ “நானும் அரசப்பணியாகவே செல்கிறேன்” என்றான். பிரலம்பன் உரக்க “முத்திரை எங்கே?” என்றான்.

Ezhuthazhal _EPI_05

அதற்குள் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த முதிய காவலனாகிய நிகும்பன் “தலைவரே…” என்று அவன் தோளை தொட்டார். “அவர் இளைய பாண்டவரின் மைந்தர்களில் ஒருவர்.” பிரலம்பன் திரும்பி “என்ன சொல்கிறீர்?” என்றான். “அவருடைய இளம்வடிவம்…” என்றார் நிகும்பன். பிரலம்பன் திரும்பி “பிழை பொறுக்கவேண்டும், இளவரசே” என்று சொல்லத்தொடங்க அபிமன்யூ அவன் தோளைத்தொட்டு “என்ன பிழை? நான் உங்களை தொலைவில் கண்டதுமே என் அடையாளத்தை காட்டியிருக்கவேண்டும். வேடிக்கை பார்த்துவிட்டேன். அது என் பிழை” என்றான். தன் முத்திரைக் கணையாழியை நீட்டி “நான் அபிமன்யூ… இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறேன்” என்றான்.

முகம் மலர்ந்த பிரலம்பன் “நான் தங்களை இளமையில் கண்டிருக்கிறேன், இளவரசே…” என்றான். “நான் இங்கே வந்து பதினாறாண்டுகளாகின்றன” என்ற அபிமன்யூ நிமிர்ந்து கோட்டையைப் பார்த்து “என் நினைவில் இருந்த கட்டடங்களும் கோட்டையும் மிகப் பெரியவை” என்றான். “காலம் எல்லாவற்றையும் குறுகச் செய்கிறது” என்றார் நிகும்பன். அவரை நோக்கி சிரித்து “சூதர் சொல்” என்ற அபிமன்யூ “ஆனால் சூதர்பாடல்கள் வழியாக என்னிடமிருக்கும் அஸ்தினபுரி மேலும் பல மடங்கு பெரிதாகிக்கொண்டிருக்கிறது” என்றான்.

நிகும்பன் “அரண்மனைக்கு நல்வரவு, இளவரசே” என்றார். அவனுடன் அவர்களும் சூழ்ந்து பேசிக்கொண்டு சென்றனர். அவன் அவர்களின் பெயர்களையும் குடியையும் மைந்தரையும் குறித்து கேட்டுக்கொண்டான். நிகும்பனிடம் “உங்களுக்கு இரு துணைவியர் என கணிக்கிறேன்” என்றான். “எப்படி தெரியும்?” என அவர் வியப்புடன் கேட்க “அதற்குமேல் உங்களால் இயலாது என்று தோன்றியது” என்றான். அவர் வெடித்துச் சிரித்தார். பிரலம்பன் “எனக்கு எத்தனை மனைவிகள்?” என்றான். “உம்மைப் பொறுத்தவரை அதை பெண்டிர் மட்டுமே முடிவெடுக்க முடியும்” என்றான் அபிமன்யூ.

அவர்களில் ஒரு வீரன் முன்னரே விரைந்து கோட்டைவாயிலில் அபிமன்யூவைப்பற்றி சொன்னான். அவர்கள் அணுகியபோது கோட்டைக்காவல்வீரர்கள் முகப்பில் கூடி நின்றிருந்தனர். அவன் அணுகியபோது வாழ்த்தொலி எழுப்பினர். “குருகுலத்தோன்றல் அபிமன்யூ வாழ்க! விஜயரின் மைந்தர் வாழ்க!” அபிமன்யூ புரவியிலிருந்து இறங்கி அவர்களுடன் சொல்லாடத் தொடங்கினான். அவன் இயல்பாகவே அனைவரிடமும் பெயர்களையும் குடிச்செய்திகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வதை பிரலம்பன் கண்டான். அது ஒரு எளிய நடைமுறைபோலும் என அவன் எண்ணினான். ஆனால் சற்று நேரத்திற்குள்ளாகவே அபிமன்யூ அத்தனை முகங்களையும் செய்திகளையும் நினைவில் வைத்திருப்பதையும் மறுமுறை மிக அணுக்கமானவனைப்போல அவர்களின் பெயர் சொல்லி அழைத்து பேசத்தொடங்கிவிட்டதையும் கண்டான்.

“பழைய கோட்டைகளின் இடர் அவற்றின் ஊடுவழிகள் மிக ஒடுங்கியவை என்பதே” என்றான். “அன்றெல்லாம் கோட்டைகளில் அமர்ந்தமர்ந்து உடல்பெருக்கும் வழக்கமில்லை என நினைக்கிறேன்.” முதிய காவலன் “அன்று ஊனுணவு குறைவு, இளவரசே” என்றார். “இதோ, இந்தப் பாதையில் பெருச்சாளிகளே செல்லமுடியும்.” “உஜ்வலரே, இங்கிருந்து மேலே செல்வதற்கு தானியங்கிக் கலங்கள் ஏதேனும் உள்ளனவா?” என்றான் அபிமன்யூ. உஜ்வலன் “மேலே செல்லவா?” என்றான். “போர் என்று வந்தால் அனைவரும் படிகளில் ஏறவியலாதல்லவா? துலாக்கூடைகளோ இழுகூடைகளோ இருந்தால் பறந்தேறுவதுபோல மேலே செல்லமுடியுமே” என்றான் அபிமன்யூ. “மேலும் பாதியில் தயங்கவும் முடியாது. நேராகவே களநடுவே கொண்டு சேர்த்துவிடும்.”

உஜ்வலன் “அதெல்லாம் உயரமான இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டைக்கு தேவை. இது சற்றே பெரிய வேலிதானே?” என்றான். “ஆம் அக்காலத்தில் கோட்டை என்றால் அதை மதிப்பார்கள். மீறமாட்டார்கள். ஏனென்றால் அது திரேதாயுகம். அதற்கும் முன்னால் கிருதயுகத்தில் வெறுமனே ஒரு கோட்டைத்தான் போட்டுவைப்பார்கள். எவரும் அதை மீறமாட்டார்கள்” என்றான் அபிமன்யூ. மூத்த காவலரான குபடர் “மெய்யாகவா?” என்று கேட்டபோது அபிமன்யூவின் விழிகளில் வந்துசென்ற மிக மெல்லிய புன்னகையைக் கண்ட பிரலம்பன் “காற்று அடித்து அழிந்துவிடுமே?” என்றான்.

அபிமன்யூ அதே சீர்முகத்துடன் “நாள்தோறும் மூன்றுமுறை வரைவார்கள். காலையிலும் மாலையிலும் இரவிலும். அதற்கு துர்க்கசூத்ராகிகள் என்ற சிற்பிகள் இருந்தனர்” என்றான். “இச்செய்தியை இதுவரை நான் அறிந்ததே இல்லை” என்றார் குபடர். உஜ்வலன் குழப்பத்துடன் இருவரையும் மாறிமாறி நோக்கினான். இளம்வீரர்களில் சிலர் புன்னகைக்கத் தொடங்கியதும்தான் அவனுக்குப் புரிந்தது. ஆனால் சிரிப்பதற்கு ஏதும் அவனுக்குத் தெரியவில்லை. “இந்த துர்க்கசூத்ராகிகள்…” என்று குழப்பத்துடன் சொன்னான். “அவர்களை ரேகாஸ்தபதியினர் என்றும் சொல்வதுண்டு” என அபிமன்யூ உறுதியான முகத்துடன் சொல்ல மீண்டும் நம்பி “ஓகோ” என்றான்.

“இரவில் என்ன செய்வார்கள்?” என்று ஏழடி உயரமான காவலன் குனிந்து கேட்டான். “நிசந்திரரே, அது முதன்மையான வினா. கேளுங்கள், அக்காலத்தில் இரவில் அந்தக் கோட்டின்மேல் கழுதைகளை நிறுத்துவார்கள். அவற்றுக்கு நீர் அளிக்கப்படாது. இரவெல்லாம் அவை கூச்சலிட்டுக்கொண்டே இருக்கும். அதுதான் கோட்டையின் அடையாளம்…” என்றான் அபிமன்யூ. “இதை அக்காலத்தில் ஸ்ரவ்யதுர்க்கம் என்று அழைத்தார்கள். கர்த்தஃப சிருங்கலை என்றும் சொல்வதுண்டு. உண்மையில் இன்றைய காவல்முறைகள் பலவும் அந்தச் சங்கிலித்தொடர்முறையிலிருந்து உருவாகி வந்தவை. நம் முன்னோர் ஒன்றும் மூடர்கள் அல்ல.”

அடக்கமுடியாமல் வீரர்கள் சிரிக்கத் தொடங்க நிசந்திரன் இரு பக்கமும் நோக்கியபின் “விளையாடுகிறீர்கள்… எனக்குத் தெரியும்” என்றான். “நான் அதை முன்னரே உய்த்துணர்ந்தேன்.” “நீங்கள் அறிஞர்” என்றான் அபிமன்யூ. வீரர்கள் சிரித்து கூச்சலிட்டனர். மேலிருந்து “என்ன அங்கே ஓசை?” என இறங்கிவந்த முதிய காவலர்தலைவரான அகரர் “யார்?” என கையை விழிமேல் வைத்து நோக்கி “இளையவரே…” என்று சொல்லி நின்றுவிட்டார். “நீங்கள் எவரும் என்னை பார்க்கவேண்டாம்” என உதடசையாமல் முணுமுணுத்த அபிமன்யூ “நானேதான், உங்களுக்காக வந்தேன்” என்றான். அவர் “யார்?” என நடுங்கும் குரலில் கேட்டார்.

“அவர் பெயர் என்ன?” என்றான். “அகரர்” என்றான் பிரலம்பன். “அகரரே, நாம் இளமையில் களத்தில் பந்தாடி விளையாடியதுண்டு, நினைவுகூர்கிறீரா?” அகரர் “ஆம்” என்றார். அவர் தலையும் கைகளும் நடுங்கத் தொடங்கின. அபிமன்யூ அவரை நோக்கி மிதப்பவன்போல நடந்து சென்றான். “இன்று அந்நாளின் ஐம்பதாவது ஆண்டு. இன்று நீங்கள் எங்கள் உலகுக்கு வருவதனால் என்னையே அனுப்பினார்கள்” என்றான். மூச்சொலியுடன் “எங்கே?” என்று அவர் கேட்டார். “என்னை பார்த்தீர்களல்லவா? என்றும் மாறா இளமை கொண்ட எங்கள் உலகுக்கு…” என்ற அபிமன்யூ மிக எளிதாக நிலத்திலிருந்து பாய்ந்து மேலெழுந்து அவர் நின்ற படிக்கு கீழே சென்று நின்றான்.

அவர் உடல் ஒரு பக்கமாக சரியத் தொடங்கியது. கைகள் அறியாது நெஞ்சில் கூப்பின. “முதியவன்தான். ஆனால் என் மைந்தர்கள் இன்னும்…” என்றபோது அவர் குரல் உடைந்து விழிநீர் வழிந்தது. பிரலம்பன் குழப்பமான முகத்துடன் “எவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், மூத்தவரே?” என்று கேட்டான். அகரர் பிரலம்பனை நோக்கிவிட்டு பின்னகர்ந்து சுவரில் சாய்ந்து கால்தளர்ந்து படியில் அமர்ந்து “நான் என் மைந்தரை ஒருமுறை நோக்கிவிட்டு…” என்றார்.

“உமது நெஞ்சில் காமம் அகலவில்லை. நேற்றுகூட இளம்பெண் ஒருத்தியை நோக்கி நாவூறினீர்” என்றான் அபிமன்யூ. “ஆமாம், ஆனால்…” என்று அகரர் தடுமாற நிசந்திரன் பெரிய கைகளால் தன் நெஞ்சில் அறைந்து உரக்க நகைத்தான். சூழ்ந்திருந்த வீரர்களும் சிரிக்கத் தொடங்க அகரர் மாறிமாறி நோக்கியபின் “அதுதானே பார்த்தேன்… இது ஏதோ விளையாட்டு… தாங்கள்…” என்றார். “நான் அர்ஜுனன்…” என்றான் அபிமன்யூ. “இல்லை… ஆ!” என்ற அகரர் பாய்ந்து எழுந்து “நீங்கள் யாதவ இளவரசியின் மைந்தர்… அபிமன்யூ… இளவரசே, உங்களை நான் தோளில் தூக்கியிருக்கிறேன்” என்று கூவினார்.

“தங்கள் தோளில் நான் சிறுநீர் கழித்துள்ளேன் அல்லவா?” என்றான் அபிமன்யூ. “ஆமாம், ஆமாம். எப்படி நினைவுகூர்கிறீர்கள்… அய்யோ, இளவரசர் என்னை நினைவுகூர்கிறார்! அடேய்! நாகமா, கேட்டாயா?” அபிமன்யூ வாய் மட்டும் அசைய “என்னைத் தூக்கிய அனைவர் மேலும் நீர் கழித்திருப்பேன்” என்றான். பிரலம்பன் சிரிப்பை அடக்க வாயைப்பொத்தி திரும்பிக்கொள்ள அகரர் விழிநீர் மல்கி “இளவரசே, மீண்டும் உங்களைப் பார்க்க பேறுபெற்றேனே” என்று கைவிரித்தார். பிரலம்பன் சிரிப்பு பீரிட அப்பால் நகர்ந்தான். “தாத்தா, உங்கள் தோளில் ஏறியமரவேண்டும் என்று இப்போதும் விழைகிறேன்” என்றான் அபிமன்யூ. “ஆமாம், ஆனால்…” என அகரர் தயங்க வயிற்றைப் பிடித்தபடி சுவர்மேல் தலையூன்றி பிரலம்பன் சிரித்தான்.

சிரித்துக் குழைந்தபடி ஆங்காங்கே வீரர்கள் விழுந்துவிட்டார்கள். அகரர் தானும் சிரித்து “நான் எப்படி உங்களை தூக்கமுடியும்? என்னைத் தூக்கவே எனக்கு ஆற்றலில்லை” என்று சொல்லி அச்சிரிப்பு அந்நகைச்சொல்லுக்காக என எடுத்துக்கொண்டார். சுங்கநாயகமான விருபாக்ஷன் உரத்த குரலுடன் இடைபுகுந்து “இளவரசே, தாங்கள் அரண்மனைக்குச் செல்லவேண்டுமென எண்ணுகிறேன். இவர்கள் காவல்பணியில் இருக்கிறார்கள்” என்றார்.

“ஆம், காவல்பணியில் சிரிக்கக்கூடாது என்று தொல்நெறி” என்றான் அபிமன்யூ. “உண்மையில் காவல்பணியை எண்ணினால் நமக்கு சிரிப்புதான் வரும். முடிந்தவரை அடக்கிக்கொண்டால்தான் நாம் நல்ல காவலராக முடியும்.” அவன் முகத்தை நோக்கி அதிலிருந்த உறுதியைக் கண்டு “மெய்தான்” என்றார் விருபாக்ஷன். “இளவரசே, போதும். நாங்கள் இனிமேல் தாளமாட்டோம்” என்று பிரலம்பன் கூவினான். “உண்மையில் போரில்கூட நாம் சிரிக்கக்கூடாது. மறுபக்கம் அவர்களும் சிரிக்கத் தொடங்கினால் இறுதியில் புகழ்பாடும் சூதர்களும் சிரித்துவிடுவார்கள்.” அகரர் ஓகோகோ என பேரொலி எழுப்பி நகைத்தார்.

விருபாக்ஷன் “தங்களை பிரலம்பன் அரண்மனை வரை அழைத்துச்செல்ல ஆணையிடுகிறேன்” என்றார். அபிமன்யூ “நான் பாட்டியை பார்க்கவந்தேன்… எங்கே இருக்கிறார்?” என்றான். “யாதவப் பேரரசிக்கு சூதர்தெருவில் தனி மாளிகை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது” என்றார் விருபாக்ஷன் தன்னைச்சூழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி பற்களைக் கடித்தபடி. “ஆம், அறிந்தேன். அரசவளையத்திற்கு அப்பால் அல்லவா?” என்றான் அபிமன்யூ. “ஆம் இளவரசே, உண்மையில்…” என விருபாக்ஷன் சொல்லத் தொடங்க “எங்கே பிடித்துவிட்டாலும் வீட்டுப்பூனை திரும்பிவந்துவிடும், விருபாக்ஷரே” என்றான் அபிமன்யூ.

விருபாக்ஷன் அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் பொதுவாக தலையசைத்தார். “செல்வோம்” என பிரலம்பனின் தோளைத்தொட்ட அபிமன்யூ “வருகிறேன் அகரர் தாத்தா, வருகிறேன் நிசந்திரரே, சுமூர்த்தரே பார்ப்போம், மீண்டும் வருகிறேன் பாவகரே என ஒவ்வொருவரிடமாக விடைபெற்றுக்கொண்டான். அவன் கிளம்பியபோது அத்தனை கோட்டைக்காவலர்களும் அவனை நோக்கி சிரிப்பில் கலங்கிய கண்களுடனும் மலர்ந்த முகத்துடனும் நின்றனர். அவன் திரும்பி நோக்கி கையசைக்க ஏராளமான கைகளுடன் கோட்டை அவனை நோக்கி மலர்ந்தது.

அவனுடன் புரவியில் சென்ற பிரலம்பன் அப்போதும் நகைத்துக்கொண்டிருந்தான். சாலையில் அவனைக் கண்ட பேரிளம்பெண்கள் திடுக்கிட்டு மறுமுறை நோக்கினர். “தந்தையை எண்ணிக்கொள்கிறார்கள்” என்று அபிமன்யூ சொன்னான். “இந்நகருக்குள் நான் வரவேயில்லை. ஏனென்றால் அன்னையரும் அக்கையரும் தங்கையரும் மட்டுமே இங்கிருக்க வாய்ப்பு.” எதிரே வந்து திகைத்து வாய்பொத்தி நின்றிருந்த பெண்ணிடம் “ராதை, நான் உன்னை நாளை பார்க்கிறேன்” என்றான்.

அவள் வாயை ஓசையின்றி அசைக்க “அஞ்சாதே… கந்தமாதன மலையின் உச்சியில் எனக்கு காயகல்பம் கிடைத்தது. உனக்கும் கொஞ்சம் வைத்திருக்கிறேன்” என்றபின் கடந்துசெல்ல அவள் நெஞ்சைப்பற்றிக்கொண்டு நடுங்கி நிற்பதை பிரலம்பன் கண்டான். “எப்படி பெயர் தெரியும்?” என்று பிரலம்பன் கேட்டான். “ஆயர்குடிப்பெண். பெரும்பாலும் அவர்கள் ராதைகள்தான். வேறுபெயர் இருந்தாலும்கூட உள்ளூர ராதைகளென உணர்வார்கள்.” பிரலம்பன் சிரித்து “ஆம், உண்மை” என்றான். “உமது ராதை எங்கே இருக்கிறாள்?” என்று அபிமன்யூ கேட்டான். “அவள்…” என பிரலம்பன் தயங்க “எல்லா தெருக்களிலும்… புரிகிறது” என்றான் அபிமன்யூ.

இன்னொரு பெண் எதிரே வந்து வாய்மேல் கைவைத்து மூச்சிழுத்து விழிமலைத்தாள். “அம்பை, நான் காயகல்பம் உண்டு இளமை மீண்டுவிட்டேன். இன்று உன்னைப் பார்க்க அந்தியில் வருகிறேன்” என்று கடந்துசென்றான். பிரலம்பனை நோக்கி கண்ணைச்சிமிட்டி “மறக்குலப்பெண்… அவர்களில் அம்பை அல்லாதவர்கள் அம்பிகைகள்” என்றான்.

fire-iconஅரண்மனைச்சாலையிலிருந்து சூதர்தெருவுக்குப் பிரியும் இடத்தில் அபிமன்யூ புரவியை இழுத்து நிறுத்தி “நாம் எங்கே செல்கிறோம்?” என்றான். “பேரரசி குந்தியின் மாளிகைக்கு அல்லவா?” என்றான் பிரலம்பன். “ஆனால் அரண்மனை அந்தத் திசையில் அல்லவா உள்ளது?” என்றான் அபிமன்யூ. “ஆம், அங்கே இப்போது குடிப்பேரவை கூடியிருக்கிறது” என்றான் பிரலம்பன். “குடிப்பேரவையா? இப்போதா? ஏன்?” என்றான் அபிமன்யூ. “இளவரசே, இதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் கோட்டைக்காவலன்” என்றான் பிரலம்பன். “அதை விடும்… கோட்டைக்காவலரும் அடுமனைப்பெண்டிரும் அறியாத அரண்மனை மந்தணங்கள் இல்லை” என்றான் அபிமன்யூ.

“நான் அறிந்தது இன்று ஏதோ ஓலைகள் அனுப்பப்படுகின்றன. இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் உபப்பிலாவ்யநகரியில் இருக்கிறார். அவருக்கும் பிற ஷத்ரிய அரசர்களுக்கும்…” அபிமன்யூ “அதற்கு ஏன் குடியவை?” என்றான். “முடிவுகளை அரசர்கள் எடுத்தாலும் குடியவையின் ஒப்புதலுடன் அனுப்பினால் அது மக்களின் குரலாக ஆகிவிடுகிறதல்லவா?” அபிமன்யூ “ஆ, சூழ்ச்சி… அரசியல் நாற்களமாடல்! அருமை!” என்றபின் புரவியைத் திருப்பி “நாம் உடனே அரண்மனைக்குச் செல்கிறோம். அவை நுழைகிறோம்” என்றான். “இளவரசே…” என்று பிரலம்பன் அலறிவிட்டான். “நான் கோட்டைக்காவலன்… கோட்டையை விட்டு நீங்குவதே பிழை.”

“உமக்கு மூத்த காவலரால் அளிக்கப்பட்ட பணி என்ன?” என்றான் அபிமன்யூ. “தங்களை பேரரசியிடம் அழைத்துச்செல்வது…” அபிமன்யூ அவன் தோளை கைசுழற்றி அணைத்து “ஆகவே நான் பேரரசியிடம் செல்வதுவரை நீர் எனக்கு துணைநின்றாகவேண்டும்… வருக!” என்றான். பிரலம்பன் “இளவரசே…” என்று அரற்றினான். “மிஞ்சிப்போனால் என்ன செய்வார்கள்? கழுவேற்றுவார்கள். அதற்கு அஞ்சலாமா?” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “அஞ்சவில்லை” என முனகினான். “இது ஒரு போர்க்களம்… இதோ போர்முரசு முழங்குகிறது…” பிரலம்பன் “எங்கே?” என்றான். அபிமன்யூ “பிரலம்பரே, வீரன் செவிகளுக்கு எல்லா முரசுகளும் போர்முரசுகளே… வருக!” என்றான்.

பிரலம்பன் அவன் பின்னால் புரவியில் சென்றபடி “அயலவரை உள்ளே விடமாட்டார்கள். அதோடு நீங்கள் எதிரித்தரப்பை சேர்ந்தவர். சூழ்ச்சியே உங்கள் தந்தையருக்கு எதிராகத்தான்” என்றான். அபிமன்யூ “ஆம்” என உரக்க நகைத்தான். “என்னிடம் கேட்டால் நானே பல நல்ல சூழ்ச்சிகளை சொல்வேன்… அரியநாள்… அரசியல்சூழ்ச்சி, சொல்லாடல், உளப்போர்… நான் இதையெல்லாம் பார்த்ததே இல்லை.” பிரலம்பன் “இளவரசே, வேண்டுமென்றால் அத்துமீறியமைக்காக உங்களைக்கூட கொல்லமுடியும்” என்றான். “மெய்யாகவா?” என புரவியை இழுத்து நிறுத்தி அபிமன்யூ திரும்பி நோக்கினான். “என்னை சிறையிலடைத்து கசையாலடிப்பார்களா?” பிரலம்பன் அவனை புரிந்துகொண்டு துயரமாக தலையை அசைத்தான்.

“எப்போதும் நான் விழைவது இதையெல்லாம்தான்… தந்தையைப்போல திசைசூழ்ந்து அருஞ்செயல்புரிந்து இளநங்கையரை மணந்து… ஆனால் தந்தை இல்லாததனால் நான் இந்திரப்பிரஸ்தத்திலேயே இருக்கவேண்டியிருக்கிறது. ஒரு புதிய பெண்ணை வென்று மஞ்சத்திற்கு கொண்டுவந்தால் அவள் முன்பு வந்தவளின் தங்கை என்றால் எப்படி இருக்கும்?” பிரலம்பன் கண்ணீர் கலந்த குரலில் “எப்படி இருக்கும்?” என்றான். “பழையசோறுபோல் இருக்கும்…” என்றான் அபிமன்யூ.

அவர்கள் அரண்மனைக் கோட்டை முற்றத்தை அடைந்ததும் காவலர்கள் அபிமன்யூவைக் கண்டு எழுந்துவிட்டனர். “பிரலம்பரே, முன்னால் சென்று அரசரின் அழைப்பின்பேரில் அவைக்குச் செல்கிறேன் என்று சொல்லும்” என்றான் அபிமன்யூ. “நானா?” என்றான் பிரலம்பன். “ஆம், நானே சொல்வது முறைமை அல்ல அல்லவா? நீர்தானே என் அணுக்கர்?” என்றான் அபிமன்யூ. “இளவரசே, நான் அஸ்தினபுரியின் ஊழியன்” என்றான் பிரலம்பன். “அது சற்று முன்புவரை… இனிமேல் நான் இறந்தால் அருகே இறந்துகிடக்கும் உடல் உம்முடையது.”

பிரலம்பன் கால்தளர நடந்துசென்று காவலனிடம் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர் அபிமன்யூ அவைக்குச் செல்கிறார். அரச அழைப்பு” என்றான். முதிய காவலன் “நன்று, இளவரசர் எவர் என்று சொல்லவும் வேண்டுமா?” என்று மலர்ந்த முகத்துடன் சொல்லி தலைவணங்கினார். “வருகிறேன், மச்சரே” என்றபடி அபிமன்யூ உள்ளே சென்றான். அவர் “என் பெயர் கூர்மன்” என்றார். “இரண்டும் விண்ணளந்தோன் அல்லவா?” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் அருகே வந்து “அவை இப்பக்கம். ஆனால் அங்கே நாம் நுழையவேண்டியதில்லை என்பதே என் எண்ணம்… ஏனென்றால்…” என்றான். “என்ன?” என்றான் அபிமன்யூ. “நுழைவது கூட எளிது… வெளியேறுவது கடினம்…” அபிமன்யூ “மெய்யாகவா?” என்றான். “அப்படியென்றால் அதுதான் என் இடம்… வருக!”

அவர்கள் அரண்மனை முற்றத்தில் இறங்கியதும் புரவியை நோக்கி வந்த காவலரிடம் “கூர்மரே, புரவி இங்கே நிற்கட்டும். விரைவில் வந்துவிடுவோம்” என்றான் அபிமன்யூ. “ஆணை இளவரசே, என் பெயர் சந்திரன்” என்றான் ஏவலன். “ஆம், மறந்துவிட்டேன். கூர்மர் நலமாக இருக்கிறார் அல்லவா?” என்றபின் அவன் தோளைத்தட்டி “பார்த்துக்கொள்ளுங்கள்… வருக அணுக்கரே” என்றபடி படியேறி இடைநாழியில் நடந்தான். பிரலம்பன் “இளவரசே, இதெல்லாம் சற்று மிகை… உண்மையில்…” என புலம்பியபடி அபிமன்யூவுடன் நடந்தான்.

அவர்கள் அவைநோக்கிச் செல்கையில் எதிரே வந்த காவலர்தலைவன் திகைத்து நிற்க “அறிவியுங்கள், பிரலம்பரே” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் முன்னால் ஓடி “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர் அபிமன்யூ. அரசரின் ஆணைப்படி அவைநுழைகிறார்” என்றான். அவன் கண்கள் குழப்பத்துடன் அசைய தலைவணங்கி “குருகுலத்தோன்றல் வாழ்க… இவ்வழி” என அழைத்துச்சென்றான். அவை வாயிலில் நின்றிருந்த சிற்றமைச்சர் “தாங்கள் இளவரசர் அபிமன்யூ அல்லவா? ஆனால்…” என சுவடியை நோக்க “முறைமைகளை கடைப்பிடியுங்கள், பிரலம்பரே” என்றபின் அபிமன்யூ அவைக்குள் நுழைந்தான். “முறைமைப்படி…” என தடுமாறிய சிற்றமைச்சர் தவிப்புடன் பிரலம்பனை நோக்கி “அவருக்கு அழைப்பு இல்லை” என்றார். “அதை அவரிடம் சொல்லியிருக்கலாமே?” என்றான் பிரலம்பன்.

“ஆம், ஆனால் அவர் அதற்குள்…” என சிற்றமைச்சர் தடுமாறினார். பிரலம்பன் “நானும் உள்ளே செல்லவேண்டும்” என்றான். “உமக்கு அழைப்பு இல்லையே” என்றார் சிற்றமைச்சர். “அணுக்கர்களுக்கு தனியாக அழைப்பு அனுப்புவதுண்டா?” சிற்றமைச்சர் “இல்லை” என்றார். “அவர் உள்ளே நுழைந்ததே நான் உள்ளே செல்வதற்கான ஒப்புகை…” என்றபின் பிரலம்பன் உள்ளே நுழைந்தான். தானும் ஒரு அபிமன்யூ ஆகிவிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்து புன்னகை செய்துகொண்டான்.

அபிமன்யூ நேராக அவைநடுவே சென்று நின்று தலைக்குமேல் கைகூப்பி “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன் அபிமன்யூ… தொல்புகழ் அஸ்தினபுரியின் அவையை வணங்குகிறேன்” என்றான். விதுரர் திகைப்புடன் எழுந்து “இளவரசே…” என்றார். “பேரரசியின் அழைப்பின்படி வந்தேன். அவைக்கு வருவதுதான் முறை என்பதனால் இங்கே நுழைந்தேன்…” என்றபின் நேராக அரியணை முன்னால் சென்று நின்று தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன்” என்றான். துரியோதனன் சினத்துடன் “யார் இவனை உள்ளே விட்டது? அமைச்சரே!” என்றான். விதுரர் “அதை பிறகு பார்ப்போம்… அவையில் காவல்முறைமைகளைப் பேசும் மரபில்லை” என்றபின் “இளவரசே, முறைப்படி பிதாமகரையும் ஆசிரியர்களையும் வணங்குக!” என்றார்.

திருதராஷ்டிரர் தலையைத் திருப்பி அசைத்தபடி பெரிய வெண்பற்கள் தெரிய உரக்கச் சிரித்து “இளமைந்தன்… அவன் பெயர் அபிமன்யூதானே?” என்றார். அபிமன்யூ “ஆம், தாத்தா… ஆனால் எனக்கு சௌபத்ரன் அர்ஜுனி கார்ஷ்ணி ஃபால்குனி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு…” என்றான். திருதராஷ்டிரர் “ஆனால் அவை எல்லாமே உன் தந்தையின் பெயர்களின் நீட்சி அல்லவா?” என்றார். “ஆம், வெண்ணை உருகினால் அது நெய்தானே?” திருதராஷ்டிரர் இரு கைகளாலும் பீடத்தை அறைந்து உரக்க நகைத்தபோது அவையும் உடன்சேர்ந்தது. “என்ன ஒரு மறுமொழி! விதுரா, மூடா, இப்படி ஒரு மறுமொழியைச் சொல்ல அறிவும் அறியாமையும் இணையாக இருக்கவேண்டும்” என்றார். “இளமையாக இருந்தால் போதும், அரசே” என்றார் விதுரர். அவை நகைத்து முழக்கமிட்டது.

“இளவரசே, பிதாமகரை வணங்குக!” என்றார் விதுரர். “ஆம், மறந்துவிட்டேன்” என்ற அபிமன்யூ பீஷ்மரை அணுகி கால்களைத் தொட்டு வணங்கினான். மூக்கு வளைந்து வாய் உள்ளொடுங்கி கன்னங்கள் தொய்ந்திருந்தமையால் தளர்வும் கடுமையும் தசையமைப்பாகவே ஆகிவிட்டிருந்த பீஷ்மர் நீண்ட உடலை வளைத்து நீண்ட கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகப்போட்டு ஒடுங்கியவர்போல மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்திருந்தார். பழுத்த விழிகளால் நோக்கியபோது அபிமன்யூவை அவர் அடையாளம் காணாததுபோலவும், அச்செயலே ஒவ்வாத ஏதோ என எண்ணுவதுபோலவும் தோன்றியது. “வாழ்த்துங்கள், பிதாமகரே” என்றான் அபிமன்யூ. அவன் தலையை வலக்கையால் மெல்ல தொட்டு “புகழ்கொள்க!” என்றார் பீஷ்மர்.

துரோணரையும் கிருபரையும் வணங்கி வாழ்த்து பெற்றபின் அபிமன்யூ திருதராஷ்டிரரை நோக்கி திரும்புவதற்குள் அவர் எழுந்து அவன் கையைப் பிடித்து இழுத்து தன் பீடத்தின் கைப்பிடிமேல் அமர்த்தி இடைவளைத்து தழுவிக்கொண்டார். “என்ன இது? என் கையளவுகூட இல்லையே உன் உடல்? மற்போர் பயிலவில்லையா?” அபிமன்யூ “இல்லை, நான் வில்லவன்… மற்போர் பயில்பவன் சுருதசோமன். மூத்த தந்தை பீமசேனரின் மைந்தன்” என்றான். திருதராஷ்டிரர் “வில் என்பது காட்டுவிலங்குகளை பிடிக்க வைக்கும் பொறி… அதை வீரர்கள் தொடக்கூடாது. தோள்களே தெய்வங்கள் அருளும் படைக்கலம்… நீ மற்போர் பயிலவேண்டும்… நாளை என் களத்துக்கு வா! நானே தொடங்கி வைக்கிறேன்” என்றார்.

திருதராஷ்டிரரின் கைகள் அவன் உடலில் தவழ்ந்தன. அவன் தோள்களை வருடி கைகளைப்பற்றி நெரித்தார். அவன் உடலை முகர்ந்தார். உவகையுடன் தலையை ஆட்டி “விதுரா, மைந்தன் நறுமணமாக இருக்கிறான்” என்றார். “நான் வெயிலில் வந்தேன், நேற்றுமுன்னாள் நீராடினேன்” என்றான் அபிமன்யூ. அவை நகைக்க விதுரர் தவிப்புடன் “இளவரசே…” என்றார். “நான் இந்திரப்பிரஸ்தத்திலேயே அன்றாடம் நீராடுவதில்லை, அமைச்சரே…” விதுரர் அறியாமல் “ஏன்?” என்றார். திருதராஷ்டிரர் “இதென்ன வினா? நீ மூடன் என்பதை காட்டுகிறாயா? இளமைந்தர் அனைவருமே நீராடுவதில் விருப்பற்றவர்கள்…” என்றபின் “நீராடவே வேண்டாம், மைந்தா… இதைப்போல மணமாகவே இரு” என்றார்.

விதுரர் “இளவரசே, அவை முறைமைகளை முடியுங்கள்” என்றார். “ஆம்” என்ற அபிமன்யூ எழுந்து சகுனியை அணுகி கால்தொட்டு வணங்கினான். சகுனி சுருங்கிய புருவங்களுடன் தாடியை நீவியபடி அவனை அதுவரை நோக்கிக்கொண்டிருந்தார். சிறிய கண்களில் புன்னகை எழ “அனைத்து நலன்களும் அமைக!” என வாழ்த்தினார். “இங்கே சூழ்ச்சி நடப்பதாக இதோ இவன் சொன்னான். இவன் என் அணுக்கன். பிரலம்பன் என்று பெயர்” என்று அபிமன்யூ சுட்டிக்காட்டினான். பிரலம்பன் அக்கணமே சிறுநீர் கழியும் உணர்வை அடைந்தான்.

சகுனி நகைத்து “ஆம், உங்கள் தந்தையருக்கு எதிரான சூழ்ச்சி” என்றார். “நன்று, எனக்கு சூழ்ச்சி பிடிக்கும். ஆனால் அதை எப்படிச் செய்வதென்று தெரியவில்லை” என்றான் அபிமன்யூ. “ஓய்வாக அரண்மனைக்கு வா… இதோ, இவர் பெயர் கணிகர். இவரிடம் கற்றுக்கொள்ளலாம்” என்றார் சகுனி. கணிகரை நோக்கித் திரும்பிய அபிமன்யூ “இவரிடமா?” என்றான். கணிகர் விழிகளை திருப்பிக்கொள்ள சகுனி தொடையைத் தட்டியபடி தலையாட்டி நகைத்தார்.

விதுரர் “இளவரசே, உங்கள் பெரிய தந்தையை வணங்கி வாழ்த்து கொள்க!” என்றார். அபிமன்யூ அரியணைபீடத்தில் ஏறி துரியோதனனின் அருகே சென்று குனிந்து கால்தொட்டு வணங்கி “அடிபணிகிறேன், தந்தையே” என்றான். துரியோதனன் அவன் தலைமேல் கைவைத்து “புகழும் குடியும் பெருகுக! அனைத்து நலன்களும் அமைக!” என்று வாழ்த்தி மெல்ல தன் கையை அவன் தோள்மேல் வைத்து தாழ்ந்த குரலில் “உன் உடன்பிறந்தாரை பார்த்தாயா?” என்றான். “இல்லை, நான் இதோ இப்படியே வந்தேன். இவன் சொன்னான் இங்கே சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்று… ஆகவே நான் ஆவலுடன் வந்தேன்” என்றான் அபிமன்யூ.

துரியோதனன் புன்னகைத்து “முதலில் புறக்கோட்டத்திற்குச் சென்று உன் உடன்குருதியரை பார். உன் மூத்தோன் லட்சுமணன் உன்னைப் பார்த்தால் மகிழ்வான்” என்றபின் திரும்பி நோக்கி துச்சாதனனிடம் “அழகன், இல்லையா இளையோனே?” என்றான். துச்சாதனன் புன்னகையுடன் குனிந்து “ஆம், நான் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். அன்னையின் வழியாக இளைய யாதவரின் விழிகளை பெற்றிருக்கிறான்” என்றான். துர்மதன் “இளையோர் உன்னைப் பார்த்தால் கொண்டாடுவார்கள், மைந்தா” என்றான். சுபாகு “உன் நினைவாகவே இருக்கும் ஒருவனும் அங்கிருக்கிறான்” என்றான். அபிமன்யூ சிரித்து “ஆம், சுஜயன்… தந்தையை எண்ணி வில்பயின்று ஆற்றல் கொண்டவன்” என்றான்.

கௌரவர் அபிமன்யூவை சூழ்ந்துகொண்டனர். துச்சலன் “அந்தியில் ஓர் நல்ல உண்டாட்டை ஒருங்கமைக்கவேண்டும், மூத்தவரே” என்றான். துரியோதனன் “ஆம், எதுவும் இறுதியில் அங்குதானே செல்லவேண்டும்!” என்றான். துச்சாதனன் சிரிப்பை அடக்கியபடி “ஆணை, மூத்தவரே” என்றான். துரியோதனன் உரக்க நகைத்து அபிமன்யூவின் தோளைத் தட்டி “வில்லவனின் தோள்கள்… ஓடும் புரவிமேல் ஏறுவாயா?” என்றான். “ஏறி ஒற்றைக்காலில் நிற்பேன்” என்றான் அபிமன்யூ. “நாளை பார்ப்போம்… காலையில் களத்திற்கு வா” என்றான் துரியோதனன் அவன் தலையை வருடியபடி.

விதுரர் “அரசே, அவை நிகழ்வுகள் தொடங்கட்டும்” என்றபின் “இளவரசே, தாங்கள் சென்று உடன்பிறந்தாரைக் கண்டுமீளலாம்” என்றார். “ஆம், கிளம்புகிறேன்” என்று அபிமன்யூ திரும்பி அவையை வணங்க “குருகுலத்தோன்றல் அபிமன்யூ வாழ்க! வில்திறல் வீரர் வாழ்க!” என அவை போற்றிக் குரலெழுப்பியது. முதிய குலத்தலைவர்கள் எழுந்து நின்று அவனை கைதூக்கி வாழ்த்தினர்.