எழுதழல் - 46
ஆறு : காற்றின் சுடர் – 7
அபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே, உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே நீ வரக்கூடும் என்னும் உள்ளுணர்வு எங்களுக்கு இருந்தது” என்றான் சாரகுப்தன். “உன் திருமணத்திற்கு இங்கிருந்து அனைவரும் கிளம்பினாலென்ன என்று நான் எண்ணினேன். அன்னை அதற்கு அரசியல் சூழல் உகந்ததாக இல்லை என்று சொன்னார்.”
அபிமன்யூ “ஆம், திருமணம் உடனடியாக நிகழவேண்டியிருந்தது” என்று தணிந்த குரலில் சொன்னான். “திருமணம் என்றதுமே நாணுகிறான்” என்றான் சீசாரு. விசாரு “உன் தோழனை இங்கே வரச்சொல்லி ஆளனுப்பியிருக்கிறேன். இந்த நாளை நாம் தவறவிடக்கூடாது. தந்தை நகரணைந்ததுமே இங்கே அரசியல் கொப்பளிப்புகள் மட்டுமே நிகழவிருக்கின்றன” என்றான். சாரு தொலைவிலேயே ”மூத்தவரே!” எனக் கூவியபடி ஓடிவந்தான். அவ்விரைவிலேயே பாய்ந்து அபிமன்யூவின்மேல் தொற்றி ஏறிக்கொண்டு கூச்சலிட்டு நகைத்தான். அபிமன்யூ அவனைப் பற்றியபடி சுழன்றான்.
அவனை கீழே இறக்கி “நீ என்ன உண்கிறாய் இங்கே? எடைகொண்டுவிட்டாய்!” என்றான். “கதை பயில்கிறேன்” என்றான் சாரு. “நான்காண்டுகள் வில் பயின்றேன். அது எனக்கு சரியாக வரவில்லை…” என்று மூச்சுவாங்க சொல்லி “ஆனால் கதையும் சரியாக வரவில்லை. நான் வளைதடி பயிலலாம் என இப்போது எண்ணுகிறேன்” என்றான். களிக்களத்திலிருந்து ஜாம்பவதியின் மைந்தர்களான விஜயனும் சித்ரகேதுவும் வசுமானும் திராவிடனும் கிராதுவும் வெளியே ஓடிவந்தார்கள். “விஜயா, உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ஆசிரியர் நீ வந்தபின் பெரும்பாயை விரிக்கும் கலையை மீண்டும் கற்பிப்பதாக சொன்னார்” என்று சீசாரு கூவினான். “நான் அதை முன்னரே துணியில் செய்து பார்த்துவிட்டேன்” என்றான் விஜயன்.
அபிமன்யூ “உயரமானவர்களாக ஆகிவிட்டீர்கள்” என்றான். அவன் கைகளை பற்றிக்கொண்ட வசுமான் “யாதவ மைந்தர்களில் நாங்களே உயரமனாவர்கள். எங்கள் மூதாதையர் வாழ்ந்த காட்டின் உயரம் அது” என்றான். “மூத்தவரைப் பார்த்தால் நானே அண்ணாந்துதான் பேசவேண்டியிருக்கிறது” என்றான் கிராது. சித்ரகேது “மூத்தவர் இங்கில்லை. தந்தையுடன் வந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். நாங்கள் அனைவரும் மூத்தவர்கள் அறியாமல் இங்கே ஒன்றுகூடிக் கொண்டிருக்கிறோம்” என்றான்.
அரசி நக்னஜித்தியின் மைந்தர்களான சித்ராகு, வேகவான், விருஷன், அமன், சங்கு, வாசு, குந்திகன் ஆகியோர் காளிந்தியின் மைந்தர்களான சுபாகு, பத்ரன், சாந்தன், தர்ஷன், பூர்ணநமாம்ஷு, சோமகன் ஆகியோருடன் வந்தனர். மிக விரைவிலேயே அப்பகுதி ஒருவரோடொருவர் உரக்கப் பேசிக்கூச்சலிட்டுச் சிரித்துக்கொள்ளும் ஒலியால் முழங்கத்தொடங்கியது. ஒவ்வொருவரும் அபிமன்யூவை அள்ளித்தழுவிக்கொண்டார்கள். தோளில் அறைந்தும் இடைவளைத்துத் தூக்கிச் சுழற்றியும் கொண்டாடினார்கள். புதியவர்கள் வந்து சேர்கையில் அனைவரும் உரக்க கூச்சலிட்டார்கள்.
லக்ஷ்மணையின் மைந்தர்களான பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், ஓஜஸ், அபரஜித் ஆகியோர் வந்தபோது அனைவரும் அவர்களை நோக்கி ஓடி அப்படியே தூக்கி அறைமூலையில் வீசினர். சில கணங்கள் அங்கே கூட்டாக மற்போர் நிகழ்ந்த உடலசைவுகள் எழுந்தன. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது அரிதாகவே நிகழ்கிறது என்று தெரிந்தது. அந்தக் களியாட்டு அவர்களை கட்டிவைத்திருந்த தடைக்கு எதிரானது என்று தோன்றியது.
பிரலம்பன் வந்து அந்தக் கூட்டத்தைப் பார்த்து திகைத்து நின்றான். அபிமன்யூ கைகளைத் தட்டி “மூத்தோரே, இளையோரே, இவர் பிரலம்பர், என் அணுக்க ஒற்றர்!” என்றான். “ஆ, இவன் ஒற்றனைப் பேணுபவன்” என்றான் மித்ரவிந்தையின் மைந்தனான கர்ஹன். அவன் உடன்பிறந்தானான அனிலன் “இவர் படகேறுவாரா?” என்றான். கிருதரன் “அதெல்லாம் செய்யக்கூடியவர் என்றே நினைக்கிறேன். அவர் தோள்கள் விற்பயிற்சியை காட்டுகின்றன” என்றான். பத்ரையின் மைந்தனான பிரகரணன் “வில்பயின்றவனின் தோள் என எப்படி தெரிந்துகொண்டாய்? இப்போதே சொல். இல்லையேல் உன் மண்டையை உடைப்பேன்” என்றான். கிருதரன் “அவன் தோள்கள் அபிமன்யூவின் தோள்கள் போலிருக்கின்றன” என்றான்.
“மூத்தவரே, அவன் விழிகளும் சிரிப்பும்தான் இவனைப்போலத் தெரிகின்றன” என்றான் அரிஜித். ஜயனும் சுபத்ரனும் வாமனும் கைகளைத் தட்ட “நோக்குக! அமைதி! நோக்குக! நாம் கடலாடலுக்கு வந்துள்ளோம். கூச்சலிட்டு சுவர்களை உடைப்பதற்காக அல்ல” என்றான் ஜயன். ஆயு “ஆம், ஆசிரியர்கள் நமக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். சீசாரு “கிளம்புக… அனைவரும் களிக்களத்திற்குச் செல்வோம்” என்றான். அவர்கள் கூச்சலிட்டபடி களத்திற்குள் நுழைந்தனர். மேலே கூரையிடப்பட்ட வட்டவடிவமான பெரிய களமுற்றத்தில் யவனக் களப்பயிற்சியாளர்கள் நின்றிருந்தனர். ஒவ்வொருவராகச் சென்று அவர்களின் கால்தொட்டு வணங்கினர். சத்யகன் “அமர்க… ஆங்காங்கே அமர்க!” என்று கூவ அவர்கள் அமர்ந்தனர்.
வர்த்தனன் அபிமன்யூவிடம் “இவர் அளிக்கும் பயிற்சிகளை நான் தவறவிடுவதே இல்லை. இவருடைய சொல்லொலிப்புபோல வேடிக்கையானது பிறிதில்லை” என்றான். “ஆம், அவர்கள் மேலுதட்டை அசைக்காமல் பேசுவார்கள்” என்றான் அபிமன்யூ. அருகே அமர்ந்திருந்த சீசாரு “நான் இவரைப்போலப் பேசுவதற்காக இவர்களின் மதுவைக்கூட பலமுறை அருந்திப் பார்த்தேன்” என்றான். பிரலம்பன் “என்ன நிகழ்ந்தது?” என்றான். “நான் மது அருந்தினால் கோகுலத்து யாதவரின் கன்றோட்டும் ஒலிகள்தான் என் வாயில் இருந்து எழுகின்றன. ஆனால் எனக்கு அது தெரியாது, பிறர் சொன்னார்கள்” என்றான். “அமைதி! அமைதி!” என்று அரிஜித் கையை தட்டினான். அனைவரும் அமைதியடைந்தனர்.
வர்த்தனன் மிக மெல்லிய குரலில் “இவர் சொல்வதை நாம் செவிகொள்ள வேண்டியதில்லை. கைகளை மட்டும் நோக்கினால் போதும். நமக்குக் கற்பிப்பவை அவையே” என்றான். “அவர் பெயர் என்ன?” என்றான் அபிமன்யூ. அவன் உதடசைவை நோக்கிய யவனஆசிரியர் “என் பெயர் அகதன். இவர் என் தோழர் தியோதரர். அவர் யூதாலியர், அருகிருப்போர் ஹெர்மியர்” என்றார். “நாங்கள் இளமையிலேயே மாலுமிகளாக யவனநாட்டிலிருந்து கிளம்பியவர்கள். உலகை வலம் வந்துகொண்டிருந்தோம். இளைய யாதவரின் தோழர்கள் என்றானபின் சென்ற இருபதாண்டுகளாக இங்கேயே வாழ்கிறோம்” என்றார்.
யூதாலியர் “அவருக்கு சிறுபடகோட்டவும் பெருங்கலம் செலுத்தவும் நாங்கள் கற்றுக்கொடுத்தோம். இப்போது ஒரு மணி வயலென்றாகி விளைந்ததுபோல அவரே பலமுகம் கொண்டதுபோல எங்களைச் சூழ்ந்து அவை நிரப்பியிருக்கிறீர்கள்” என்றார். தியோதரர் “சிறுபடகோட்டுவதைப்பற்றி சுபத்திரையின் மைந்தர் முன்னர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அதைப்பற்றி முதலில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இளவரசே, நீங்கள் ஓடும்புரவிமேல் நிற்கும் பயிற்சி கொண்டவரா?” என்றார். அபிமன்யூ “ஆம்” என்றான். “நீங்கள் நேரடியாகவே சிறுபடகில் ஏறி நீர்மேல் விரையமுடியும். இது காலும் உடலும் கொள்ளும் ஒத்திசைவன்றி வேறில்லை” என்றார் தியோதரர்.
”இதன் கொள்கைகளைப்பற்றி மட்டும் சொல்கிறேன்” என்றார் தியோதரர். “மண் அனைத்தையும் தரிப்பதனால் தரித்ரி எனப்படுகிறது. இளையோரே, நீரும் நெருப்பும் காற்றும் வானமும்கூட அனைத்தையும் தாங்குகின்றன. காற்று பறவைகளை தாங்கிச் செல்வதை கண்டிருப்பீர்கள். அனல் கரித்துகள்களைத் தாங்கி நடமிடுவதை அறிவீர்கள். வானம் கோள்களைத் தாங்கி நின்றிருக்கிறதென்று எங்கள் நூல்கள் சொல்கின்றன. மீன்களை நீர் தாங்குகிறது. நீச்சலடிக்கையில் அது நம்மை ஏந்திக்கொள்கிறது.”
“அறிக, இவ்வைந்தில் மண்ணும் வானமும் மட்டுமே அசையாதவற்றை தாங்கும் தன்மைகொண்டவை! நீரும் காற்றும் அனலும் அசைவையே உடலென்று நமக்கு காட்டுபவை. அசையாதபோது அவை தெய்வங்கள் மட்டுமே அறியும் தங்கள் கருத்துருவுக்குத் திரும்புகின்றன. நெளியா நீரும் தழலா எரியும் வீசா காற்றும் தெய்வநிலை அடைந்த யோகிகள் அறிபவை என்று உணர்க!” என்றார் தியோதரர் “நீரும் காற்றும் நெருப்பும் நம்மை ஏற்றுக்கொண்டால் நம்மை அவை அன்னையென மடியிலேந்திக்கொள்கின்றன. நம்மை அவை ஏற்க நாம் அவையென்றாவதே உகந்த வழி. நீரில் ஏறிக்கொள்பவன் நீரென்று நெளிவுகொள்ளவேண்டும். காற்றில் எழுபவன் காற்றென அலைவடையவேண்டும். இளையோரே, நெருப்பென்றே ஆனவனை நெருப்பு அணைத்து தோள்சூடிக்கொள்கிறது.”
“சிறுபடகுக் கலை காற்றுடனும் நீருடனும் ஆடும் விளையாட்டு” என்றார் அகதர். “நம் உடலைத் தாங்குவது நீர். ஆகவே நம் உடல் நீரென்றே ஆகவேண்டும். அதன் அலைகளும் சுழிகளும் விசைகளும் நம் உடலிலும் கூடவேண்டும். புரவியூர்பவன் உடலில் புரவி நிகழ்வதுபோல. யானை அமர்ந்தவன் யானையென அசைவதுபோல. நீர் தன் பல்லாயிரம் கைகளால் நம்முடன் விளையாடும். முடிவிலாக் கால்களால் துள்ளும். மத்தகம் உலைக்கும். முதுகை ஊசலாட்டும். புட்டம் துள்ள எழுந்து அமையும். திமிறித் ததும்பி குதிக்கும். அதன் அசைவும் விசையும் நம்முடையதென்றே ஆகவேண்டும் . நாம் அதனுடன் முற்றிலும் உடல் ஒத்திசைந்திருப்பது வரை நம்மை முழுகடிப்பதில்லை. ஒரு பிழையசைவு, மெல்லிய பிறழ்வு நிகழ்ந்தாலும் வாய்திறந்து நம்மை விழுங்கிக்கொள்ளும்.”
“நீர் பெண். காற்று ஆண். காற்றுடன் ஒத்திசைபவனை அது அள்ளி வீசுகிறது. உதைத்துச் சிதறடிக்கிறது. தன்னை எதிர்ப்பவனை மட்டுமே தோளிலேற்றிக்கொள்கிறது” என்று அகதர் தொடர்ந்தார். ”ஆனால் நிகர் நின்று காற்றை எதிர்ப்பவன் உடைந்தழிவான். காற்றுக்கு நிகரான ஆற்றல் கொண்டவை விண்ணாளும் தெய்வங்கள் மட்டுமே. மல்லனாகிய தந்தையுடன் தோள்கோக்கும் இளமைந்தன் என காற்றுடன் போரிடவேண்டும். காற்று நம்மிடம் விளையாடவேண்டும். காற்றின் நெறிகளை நாம் அறிந்து ஆடி நாம் வெல்வதை அது மகிழும்படி அமையவேண்டும் அவ்வாடல்.”
மென்மரத்தில் செய்யப்பட்ட படகின் சிறிய பாவை வடிவம் ஒன்றை அவர் அவர்களுக்கு தூக்கிக் காட்டினார். “ஒற்றைக் காலடி அமையும் அகலம் கொண்ட நீள்பலகையில் பொருத்தப்பட்ட இரண்டு இரட்டைமடிப்புப் பாய்கள்தான் நமது படகு” என்று அகதர் சொன்னார். “தட்டாரப்பூச்சியின் சிறகுகள் இவை. நான்கு தனிச்சிறகுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் விலகியும் காற்றுடன் விளையாடுகின்றன. அவற்றை இணைக்கும் சரடுகள் இவை. இவற்றைப் பற்றிக்கொண்டு இழுத்து சிறகுகளை கையாள்கிறோம்.”
அவர் அச்சரடை இழுத்து பாய்களை வெவ்வேறு கோணங்களில் இழுத்து திருப்பிக்காட்டினார். சாளரம் வழியாக வந்த காற்றின் எதிர்முகமாக பாவைப் படகை தூக்கிக் காட்டியபோது அதன் பாய்கள் புடைத்தெழுந்தன. சரடுகளை இழுத்து பாய்களை கோணம் மாற்றியபோது படகு உயிர்கொண்டதுபோலத் திரும்பியது. “நம் கால்களை நீருக்கும் கைகளை காற்றுக்கும் அளிக்கிறோம். அன்னையும் தந்தையும் கொஞ்சிமகிழும் இளமைந்தனைப்போல விளையாடுகிறோம். இளையோரே, இதுதான் யவனத்தின் விளையாட்டுகளிலேயே மிகச் சிறந்தது.”
உபயாதவர் ஒவ்வொருவராக கடலில் இறங்க தியோதரரும் ஹெர்மியரும் யூதாலியரும் அகதரும் உதவினர். படகென அமைந்த மென்மரப் பலகையின் கண்ணியில் ஒற்றைக்காலைச் செருகிக்கொண்டு அதன் சூத்திரச்சரடைப் பிடித்தபடி ஒற்றைக்காலால் விந்தி விந்தி நீரை அடைந்தனர். “அலை மீள்கையில் ஏறிக்கொள்ளுங்கள். சரடை இழுத்து பாய்களை விரியுங்கள். இரண்டும் ஒரே கணத்தில் நிகழவேண்டும்” என்றார் அகதர்.
உபயாதவர்கள் முன்னரே பலமுறை அதைச் செய்து பயின்றிருந்தனர். கிளையில் இருந்து காற்றில் தாவும் கிளிக்குஞ்சுகள்போல சற்று தயங்கி அவர்கள் அலைமேல் எழுந்தனர். காற்று கடலில் இருந்து கரைநோக்கி சரிவாகப் பாய்ந்துகொண்டிருந்தது. புடைத்தெழுந்த பாய்கள் ஒன்றுடன் ஒன்று செருகிக்கொண்டு ஒன்றின் காற்றை இன்னொன்றுமேல் செலுத்தி விரிந்தன. படகுகள் நீர்ப்பறவைகள்போல அலைமேல் எழுந்தன. ஒன்றை ஒன்று தொடர்ந்து எழுந்தமைந்து கடலுக்குள் சென்றன.
பிரலம்பன் நீர்விளிம்பை அடைந்து காத்து நின்றான். அவன் கால்களை அறைந்து சிதறி விரிந்து திரும்பிச்சென்றது அலை. “எழுக!” என்றார் தியோதரர். அவன் அறியாமல் சரடை இழுத்தான். அதே கணம் கால்களை அலைமேல் வைத்தும் விட்டிருந்தான். காற்று அவனை வலப்பக்கமாக கொண்டு சென்றது. சரிந்து நீரில் புதைந்தான். உப்புநீர் வாயில் நிறைந்தது. மூக்குக்குள் நுழைந்து திணறச்செய்தது. காலை உதறி நீரில் விழுந்து நீந்தவேண்டியதுதான் என எண்ணிய கணம் அவன் கை சரடை இழுத்தது. வலப்பக்கப் பாய் சற்றே திரும்ப படகு மேலெழுந்து அடுத்த அலைவளைவின்மேல் ஏறி மறுபக்கம் தெறித்தது. அவன் கைகளுக்கு பாய்களின் ஒழுங்கமைவின் நெறி புலப்பட்டுவிட்டது.
ஆனால் அப்போதும் அவன் உள்ளம் அதெப்படி என்று வியந்துகொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு அலையையும் விழிகள் நோக்கியதுமே கைகள் அதைக் கடக்கும் வழியை அறிந்துகொண்டன. மானுடனுக்குள் பறவை ஒன்று வாழ்கிறது. அவன் கைகள் வேறேதோ பிறவியில் சிறகுகள் என்று இருந்திருக்கவேண்டும். மிக விரைவிலேயே அவன் காற்றிலும் நீரிலும் திளைத்துக்கொண்டிருந்தான். அப்பால் அபிமன்யூ மிக இயல்பாக சுற்றிவந்தான். அலைகளில் ஏறி ஸ்ரீபானுவின்மேல் பாய்ந்து கடந்து அப்பால் சென்றான். ஊஊ என ஊளையிட்டபடி சாருவின் அருகே பறந்து அவனை அஞ்சி விலகச்செய்தான்.
“மூத்தவரே, என்னை பிடியுங்கள்” என்று ஜயன் கூவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு பாய்ந்தனர். அவர்களை சுபத்திரனும் சித்ரகேதுவும் விருஷனும் சங்குவும் துரத்திச் சென்றார்கள். மிக அப்பால் விலகி மாபெரும் வட்டமென அவர்கள் சுற்றிவந்தனர். அவர்கள் சென்ற தடம் நீரில் அரைவட்டமென விழுந்து மறைந்தது. நீர்த்துளிகளுக்கு நடுவே அவர்களின் சிரிப்பு ஒளிவிடுவதை பிரலம்பன் கண்டான். சத்யகனும் வஹ்னியும் சூதியும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடினர்.
வெண்ணிற நாரைக்கூட்டம்போல அவர்கள் சிறகு விரித்தும் சரித்தும் நீர்மீது சுழன்றனர். சகன் சரிந்து நீருக்குள் புகுந்ததும் அபரஜித்தும் வஹ்னியும் பாய்ந்து சென்று அவனை இரு பக்கமும் பற்றித் தூக்கி கொண்டுவந்தனர். வசுமானும் வாமனும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நீர்மேல் கிழித்துச்சென்று வான்வளைவை உரசுவதுபோல அகன்று மறைய தியோதரர் “அத்தனை தொலைவு செல்லலாகாது…” என்று கூவியபடி துரத்திச்சென்றார்.
எதிரே விளையாடிக்கொண்டிருந்த பலனும் பிரபலனும் வர்த்தனனும் கூச்சலிட்டபடி விலகினர். அவர்களை திரும்பிப்பார்த்த பிரலம்பன் மிகப்பெரிய மீன் ஒன்று அவர்கள் நடுவே நீருக்குள் இருந்து உருவப்படும் வாள் என ஒளியுடன் எழுவதைக் கண்டான். காற்றில் எழுந்து வால் சுழற்றி உடல்ததும்ப துள்ளி நீரில் மீண்டும் விழுந்து மூழ்கி மறைய அந்த அலையில் அவர்கள் நிலையழிந்தனர். அவர்களுக்கு அப்பால் இன்னொன்று அதேபோல எழுந்தமைந்தது. அவன் அருகே வந்துகொண்டிருந்த அகதர் “அச்சம் வேண்டாம். அவை ஓங்கில்கள். நம்முடன் விளையாட வந்தவை” என்றார்.
“அவை மானுடரை அறியுமா?” என்றான் பிரலம்பன். “அவை ஆழத்து மானுடர். அவற்றால் மொழியாடவும் இயலும்…” என்றார் அகதர். பிரலம்பன் தன் அருகே பேருடலுடன் ஓங்கில் ஒன்று எழுந்து மேலே சென்று நீர் அறைந்து விழுவதை கண்டான். அலையில் அவன் படகு சரிய பாய்கள் விலகின. ஊசி ஆடையில் புகுவதைப்போல அவன் படகு நீர்ப்பரப்பில் புதைந்தது. மறுபக்கம் எழுந்த ஓங்கில் தன் வாலால் அவன் படகை அறைந்து மேலெழுப்ப அவன் நிலை மீண்டு அலைமேல் ஏறிச் சுழன்று எழுந்தான். அந்த ஓங்கிலின் திறந்த வாயில் கூரிய பற்கள் தெரிந்தன. அதன் முகத்தில் புன்னகை இருப்பதுபோலத் தெரிந்தது.
நூற்றுக்கணக்கான ஓங்கில்கள் நீர்ப்பரப்புக்குமேல் எழுந்தன. பனங்குருவிகளைப்போல அவை காற்றில் பாய்ந்து பாய்ந்து நீரில் விழ அனலில் வைத்த யானத்து நீர் என கடல் கொப்பளித்து அலையடித்தது. அபிமன்யூ ஒரு கையால் சரடைப் பற்றிக்கொண்டு மறுகையால் இடையின் கச்சையை அவிழ்த்து வீசி ஓங்கிலின் முதுகிலிருந்த செதில்சிறகின்மேல் தொடுத்துக்கொண்டான். அதற்குள் இன்னொரு ஓங்கில் அந்நுனியைக் பாய்ந்து கவ்விக்கொண்டது.அது அவனை கழுகு குருவியை என தூக்கிக்கொண்டு சென்றது. உபயாதவர்கள் அதை நோக்கி கூச்சலிட்டனர்.
பிரகரணனும் அரிஜித்தும் இரு ஓங்கில்கள்மேல் அதைப்போல சரடை வீசி ஏறிக்கொள்ள முயல நிலையழிந்து நீரில் விழுந்து சறுக்கிச் சென்றனர். ஆனந்தனும் மகாம்சனும் பவனனும் மகாசக்தனும் சென்று அவர்களைத் தூக்கி நிலைமீட்டனர். ”அவை மானுடருடன் ஆடிப்பழகியவை. ஆனால் அவை நம்மை ஏற்கவேண்டும். நாம் அவற்றை வெல்ல முடியாது” என்றார் தியோதரர் “அவை ஆழங்களிலிருந்து வருகின்றன. கடலின் ஆழம் மண்ணுக்குமேல் நிகழும் அனைத்தையும் அறிந்திருக்கிறது என்பது யவனநூல்களின் கூற்று”ஓங்கில்கள் எழுந்து எழுந்து அமைவதைச் சுற்றி இளையோர் கூச்சலிட்டு களியாடினர். ஒரு தருணத்தில் பிரலம்பன் உணர்ந்தான், அவை அவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டிருக்கின்றன என்று.
அபிமன்யூநெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தான். “மறைந்துவிட்டான்!” என்று ஊர்த்துவாகன் கூவினான். “ஓங்கில்களின் உலகுக்குச் சென்றுவிட்டான்” என்று பலன் கூவினான். அப்பாலிருந்து அம்புபோல அபிமன்யூ பாய்ந்து வந்தான். அவன் படகு பாய் ஒடுங்கி கூர்கொண்டிருந்தது. ஓங்கில் விழிகளுக்குத் தெரியவில்லை. கண் அறியா விரலொன்று நீர்ப்பரப்பை கீறிவந்தது. அதன்மேல் எழுந்து அவன் அணுகி அதே விரைவில் சுழன்று அகன்றான்.
ஓங்கில்களைத் துரத்தியபடி உபயாதவர் நீரில் களியாடினர். அவை அவர்கள்மேல் எழுந்து விழுந்தன. அவர்களை கவிழ்த்தும் மீண்டும் தூக்கிவிட்டும் விளையாடின. வெள்ளிப் பூச்செடி என நீரை உமிழ்ந்து எருமைக்கன்றுபோல குரலெழுப்பின. வால்கள் நீரை அறைந்து உச்சிவெயிலில் சலவைக்கல் சிதறல்கள்போல பறக்கச் செய்தன. இளஞ்சாம்பல் நிறமான உடல்கள் இருண்ட நீர்த்துளிபோல் ஒளிகொண்டிருந்தன. உடைந்து உடைந்து தெறித்த நீரின் ஒளியுடன் ஊடு கலந்தவைபோல இளையோரின் முகங்கள் தெரிந்தன. முகிலாடும் விண்ணவர்போல.
ஒருவரை ஒருவர் நோக்கி கூவிச்சிரித்தனர், கைகளை வீசினர், பாய்ந்து வந்து அறைந்து திரும்பி விரைந்தனர், துரத்திச்சென்றனர், ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர், கைகள் பிணைத்துக்கொண்டு காற்றில் விரைந்தனர், சென்றபடியே உதைத்துக்கொண்டனர், பூசலிட்டனர், தோள்பிணைத்து மல்லிட்டபடி சுழன்றலைந்தனர். களியாட்டென்பது உடலுள் தேங்கிய ஆற்றலை சிதறடிப்பது மட்டுமே என பிரலம்பன் எண்ணிக்கொண்டான். சித்ராகுவும் சாந்தனும் மாறி மாறி அறைந்துகொண்டார்கள். சிரித்துக்கொண்டே விலகிச்சென்ற சித்ராகுவை சாந்தன் துரத்திச்செல்ல இருவரும் கைகள் பிணைத்து முறுக கூவியபடி சுழன்றனர். முகங்கள் களிகொண்டு மலர்ந்திருக்க தோள்கள் இறுகி நின்றன. போர் கலக்காத களியுவகையே மானுடருக்கு அளிக்கப்படுவதில்லை போலும்.
அபிமன்யூ ஓர் ஓங்கிலில் இருந்து இன்னொன்றுக்கு தாவினான். இரு ஓங்கில்கள் அவனைத் தூக்கி காற்றில் வீச தலைகீழாகச் சுழன்று இறங்கிய அவனை தன் முதுகால் ஒன்று தாங்கிக்கொண்டது. ஏழெட்டு ஓங்கில்கள் அவனை மட்டுமே சூழ்ந்து நீர்திளைத்தன. சுழன்றுவந்தபோது பிரலம்பன் தொலைவில் துவாரகையின் பெருவாயிலைக் கண்டான். அது காற்றில் பறப்பதுபோலச் சுழன்று மறைந்தது. மறுகணம் அகவிழியில் அண்மையிலென அது எழுந்தபோது கருடனின் விழிகளை கண்டான். நீர் வந்து அறைந்து அவனை அள்ளி வீசியது. சிறகு வளைத்துச் சுழன்று மீண்டபோது அவ்விழிகளில் இருந்த துயரை உணர்ந்தான்.
துயரா என உளம் வியந்தது. துயரேதான் என உறுதி செய்தது அடியுளம். துயர் ஏன்? அது களியாடும் மைந்தரை அல்லவா நோக்கிக் கொண்டிருந்தது? ஒரு கணம் உடல் விதிர்க்க அவன் கையிலிருந்து சரடு நழுவியது. நீரில் விழுந்து மூழ்கி கைவீசிப்பாய்ந்து எழுந்து படகுப்பலகையை பற்றிக்கொண்டான். மீண்டும் சரடைப்பற்றி பாயை விரித்து படகைச் சீரமைத்து திசை அமைத்தபோது உடல் முற்றிலும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். உள்ளம் எடைகொண்டு ஒவ்வொரு தசையையும் அழுத்தியது. அக்கணமே இறந்துவிடவேண்டும் என்பதுபோல் தாளவியலா துயரை அவன் அடைந்தான்.