எழுதழல் - 45
ஆறு : காற்றின் சுடர் – 6
சத்யபாமையின் அறைக்குள் அவள் இளைய மைந்தர்களான அதிபானுவும் ஸ்ரீபானுவும் பிரதிபானுவும் இருப்பார்கள் என்று அபிமன்யூ எண்ணியிருக்கவில்லை. அவனை உள்ளே அழைத்த ஏவலன் அதை அறிவிக்கவில்லை. அதில் மட்டுமல்ல அங்கே அனைத்திலும் முறைமைக்குறைவு இருந்தது. அவனை அழைத்துவந்த அமைச்சர் ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிச்செல்கையில் அவன் எவரை சந்திக்கவேண்டுமென்று ஏவலனிடம் சொல்லவில்லை. ஆகவே ஏவலனே அவனிடம் “இளவரசே, தங்கள் வருகை நோக்கம் என்ன?” என்று கேட்டான். அவன் சற்று எரிச்சலுடன் “மூத்த அத்தை சத்யபாமையை சந்திப்பது” என்றான். வழியில் தெரிந்த பாவட்டாக்களில் ஒன்று சரிந்திருந்தது.
அபிமன்யூ தலைவணங்கி “வணங்குகிறேன், அத்தை” என்றான். சத்யபாமை புன்னகை இல்லாத முகத்துடன் “நீ அங்கே சென்றிருப்பாய் என நினைத்தேன்” என்றாள். “நான் ஏன் அங்கே செல்கிறேன்? எனக்குத் தெரியாதா இங்கே எவர் அரசி என்றும் எவருக்கு குலமுதன்மை என்றும்?” என்றான் அபிமன்யூ. சத்யபாமை முகம் மலர்ந்து “வா… இப்படி அமர்ந்துகொள்” என்றாள். “எப்படி இருக்கிறாள் உன் அன்னை?” அபிமன்யூ “அன்னையை நான் பார்த்தே நெடுநாட்களாகின்றன. நன்றாகவே இருப்பார்கள் என எண்ணுகிறேன்” என்றான். “ஏனென்றால் அவர்கள் இங்கே இல்லை.”
“என்ன சொல்கிறாய்?” என்று சத்யபாமை புருவம் சுருக்கியபடி கேட்டாள். “இங்கிருந்தால் ஏழு அரசியராலும் அவர்கள் துன்புறுவார்கள். நீங்களும் எத்தனை ஆறுதல்தான் அளிக்கமுடியும்? யாதவகுலத்தோர் இங்கே மதிக்கப்படுகிறார்களா என்ன?” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சத்யபாமை. அபிமன்யூ “நான் மூதன்னை குந்தியை பார்த்தேன். உங்களைப்பற்றி எண்ணி உளமுருகினார்கள். சத்யை இல்லையேல் துவாரகையே இல்லை. யாதவகுலத்தில் இப்படி ஒரு பேரரசி பிறப்பாள் என்பதை முன்னரே நிமித்திகர்கள் சொல்லியிருந்தமையால்தான் பதின்மூன்றாண்டுகள் உளம் அமைந்திருந்தேன் என்றார்” என்றான்.
“என் இடர்கள் அன்னைக்குத் தெரியும்” என்றாள் சத்யபாமை. “ஆனால் மூத்த தந்தை பீமசேனர் உடனே சொன்னார், பேரரசியர் கையாளும் அனைத்து இடர்களும் பேரரசியரே உருவாக்குவது என்று.” சத்யபாமை முகம் மாற உடனே அபிமன்யூ “பீமசேனரை நீங்களே அறிவீர்கள், அத்தை. காட்டு மனிதர்” என்றான். சத்யபாமை “ஆம்” என்றாள். பிரதிபானு சிரிப்பதைக் கண்ட அபிமன்யூ “இளையோனின் சிரிப்பு அழகாக உள்ளது” என்றான். “சிரிக்கிறானா?” என்று சத்யபாமை திரும்பிப்பார்த்தபோது பிரதிபானு சிரிப்பை அடக்க ஸ்ரீபானுவின் முகத்தில் சிரிப்பு எஞ்சி இருந்தது. “அறிவிலி… இப்போது இங்கே சிரிக்கும்படி என்ன நிகழ்ந்தது?” என்றாள் சத்யபாமை.
“பீமசேனரை எண்ணி சிரிக்கிறான்” என்றான் அபிமன்யூ. “அவர் யாதவர்களை எளிதாக எண்ணிவிட்டார். இப்புவியில் இன்று முற்றாக ஒருங்கிணைக்கப்பட்ட குலம் யாதவர் அல்லவா?” பிரதிபானு வெடித்துச் சிரிக்க பிற இருவரும் அவன் பின்னால் ஒளிந்துகொண்டார்கள். சத்யபாமை “நீங்கள் நால்வரும் என்னை ஏளனம் செய்கிறீர்கள்” என்றாள். “மெய்யாகவே இல்லை, அத்தை. பேரரசியரை சந்திக்கையில் முகமன் உரைக்கவேண்டும் என்று அறிவேன். ஆகவேதான் சொன்னேன். ஆனால் நான் என்ன சொன்னாலும் அது பொய்யாகத் தெரிகிறது” என்றான் அபிமன்யூ. பிரதிபானுவும் ஸ்ரீபானுவும் பேரோசையுடன் சிரித்தபடி திரும்பிக்கொண்டார்கள்.
“விளையாட எனக்குப் பொழுதில்லை” என்று சத்யபாமை சொன்னாள். “நான் உன்னை வரச்சொன்னது சில செய்திகளை உசாவியறியவே. இங்கே என்ன நிகழவிருக்கிறது? அவர் எப்போது நகர்புகவிருக்கிறார்?” அபிமன்யூ “நான் என்ன அறிவேன்? உளவாளர்கள் சூழ வாழ்பவர்கள் நீங்கள்” என்றான். “அவர் இப்போது ஒவ்வொரு அசுரர்நாடுகளாக சென்றுகொண்டிருக்கிறார். உடன் மூத்தவராகிய பிரத்யும்னரும் இருக்கிறார். அநிருத்தன் பாணருடன் இப்போதும் தங்கியிருக்கிறான். அவனும் துணைவியும் கோகுலம் செல்லக்கூடும் என்றும் நந்தகோபரை அழைத்துக்கொண்டு சூரசேனரை சந்திக்க மதுவனம் செல்லத் திட்டமுள்ளது என்றும் அறிந்தேன்.”
“அங்கே அவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?” என்று சத்யபாமை கேட்டாள். பிரதிபானு சிரிப்பை அடக்கிய மெல்லிய ஓசை விம்மல் என கேட்டது. சத்யபாமை திரும்பி நோக்கியபின் “மூடர்கள்” என்றாள். அபிமன்யூ “அவர்கள் என்ன செய்வார்கள்?” என்றான். அவள் அதை செவிகொள்ளாமல் “அவர் எப்போது நகர்புகுவார் என்பதை ஒருவாறாக உய்த்துணர்கிறேன். இன்னும் ஏழு நாட்கள் ஆகக்கூடும். ஆனால் வந்ததுமே பிரத்யும்னன் பட்டத்து இளவரசனாக ஆக்கப்படுவானா என்று மட்டுமே நான் அறியவேண்டும்” என்றாள்.
“அந்த எண்ணம் இருக்கலாம்” என்றான் அபிமன்யூ. “ஆம், நானும் அவ்வாறே ஐயுறுகிறேன். அசுரச் சக்ரவர்த்தி தன் மகள் பேரரசியாகவேண்டும் என்றே கோருவார். அதை அளித்தே அப்பெண்ணை இல்லம் கொண்டிருக்க முடியும். பிற அசுரர்களுக்கும் அதுவே விருப்பமாக இருக்கும்” என்றாள் சத்யபாமை. “சரியாக சொன்னீர்கள். அவர் பட்டத்து இளவரசரானால் ஷத்ரியர்களும் அகம் மகிழ்வார்கள். அசுரர்களும் உடன்நிற்பார்கள்” என்றான் அபிமன்யூ. “மூடனைப்போல் பேசாதே. எந்த அடிப்படையில் அவன் முடிசூடுவது? ஷத்ரியன் என்றா? அசுரகுடியில் பெண்கொண்டவனை ஷத்ரியர் ஏற்பார்களா?” என்றாள் சத்யபாமை.
“ஆம், ஆனால் அசுரகுடியினர் என முடிசூடலாமே?” என்று அபிமன்யூ சொன்னான். “அசுரர் ஆள இது அசுரபுரி அல்ல” என்று சத்யபாமை உரக்க கூவினாள். “இது யாதவர் நகரம்… கார்த்தவீரியரின் புகழ் என்றும் வாழவேண்டிய நிலம்.” அபிமன்யூ “ஆம், ஆனால் அதை யாதவர் உணர்ந்ததாகத் தெரியவில்லையே. போஜர்களும் ஹேகயர்களும் கிளம்பிச்செல்கிறார்கள். அந்தகர்கள் உடன் செல்கிறார்கள். அவர்களின் அரசி இங்கிருப்பதையே அவர்கள் உளம்கொள்ளவில்லை” என்றான். சத்யபாமை முகம் சோர்வடைய உதடுகளை மட்டும் அசைத்தாள். “சரி, விருஷ்ணிகள் இருக்கிறார்களே என்று எண்ணலாம் என்றால் அவர்களுக்கும் மூத்த யாதவரே உகந்தவர் என்கிறார்கள்.”
சத்யபாமை “ஆம், இங்கே இன்றிருப்பதுபோல நான் எப்போதும் சோர்ந்திருந்ததில்லை” என்றாள். “என் குலத்தால் நான் கைவிடப்பட்டிருக்கிறேன். இப்போது அவள் வென்றுவிட்டிருக்கிறாள்.” அபிமன்யூ “ஆம், ருக்மிணி அத்தை வென்ற இறுமாப்பில் உள்ளார்” என்றான். “அவளா? அவள் மைந்தனை அரசனாக்க அவளால் இன்னும் இயலவில்லை. அது நடக்கப்போவதுமில்லை” என்றாள் சத்யபாமை. “ஜாம்பவதி அத்தைக்கு தன் மைந்தன் பெருவீரன் என எண்ணம்…” என்றான் அபிமன்யூ. “அறிவில்லாமல் பேசாதே. அவளுக்கு என்ன பெருமை?” அபிமன்யூ “நக்னஜித்தி அத்தைக்கும் பத்ரை அத்தைக்கும் அவர்கள் ஷத்ரியர்கள் என்பதனால்…” என்றான்.
“வாயைமூடு… இங்கே ஷத்ரியர்களின் கூட்டமைப்பு ஒன்றும் எழப்போவதில்லை” என்றாள் சத்யபாமை. “காளிந்தி அத்தை…” என அபிமன்யூ தொடங்க “நான் ரேவதியைப்பற்றி பேசுகிறேன், மூடா” என்றாள் சத்யபாமை. “நினைத்தேன்… அவர் வென்றுவிடலாமென்று எண்ணலாம். வெல்வதெப்படி என்று பார்ப்போம். அத்தை, நீங்கள் ஆணையிட்டால் நான் இன்றே படையுடன் கிளம்பி மதுராவை கைப்பற்றி…” சத்யபாமை “வீண்பேச்சு எதற்கு? இங்கே ஒருபோதும் ருக்மிணியின் மைந்தன் பட்டத்து இளவரசனாக ஆகப்போவதில்லை. இன்று என் மைந்தர்கள் நாடாள்கிறார்கள். அவர்களே ஆள்வார்கள்” என்றாள்.
“அதில் என்ன ஐயம்?” என்றான் அபிமன்யூ. “நீ என் சொல்லை சென்று ருக்மிணியிடம் சொல். உண்மையில் பல ஆண்டுகளாக எங்களுக்குள் சொல்பரிமாற்றம் இல்லை.” அபிமன்யூ “ஆம், எண்ணையும் புண்ணாக்கும்போல தனித்திருக்கிறீர்கள் என்று ஏதோ ஓர் சூதர் அணிச்சொல்லை அமைச்சர் சந்திரசூடர் சொன்னார்” என்றான். சத்யபாமை அதைத் தவிர்த்து “அவளிடம் சென்று சொல். அவள் மைந்தன் பட்டத்து இளவரசனாக ஆக வாய்ப்புள்ளது. ஆனால் இந்நகரில் ஷத்ரிய வீரர் மிகச் சிலரே. என் ஆணையில் இயலும் யாதவர் ஒருபோதும் அவள் மைந்தனை அரசன் என ஏற்கப்போவதில்லை” என்றாள். “யாதவ அரசை ஷத்ரியர் ஏற்கப்போவதில்லை. என்றேனும் இருசாராரும் களம்நிற்கவே போகிறார்கள். ஆகவே அவள் மைந்தர் அரியணையில் அமரமுடியாது.”
“ஆம், அதில் ஐயமே இல்லை” என்றான் அபிமன்யூ. “பானு பட்டத்து இளவரசனானால் பிரத்யும்னனை துவாரகை ஒழிந்த பிற நிலங்களுக்கு பொறுப்பாக அமைப்பான். அவன் தனிமுடி என ஆளலாம். அதை நான் சொல்லளிக்கிறேன் என்று அவளிடம் சொல்” என்றாள் சத்யபாமை. “அதை சொல்லிவிடுகிறேன். ஆனால் ஷத்ரிய குலத்து அரசியரும் அவர்களின் மைந்தரும்…” என அபிமன்யூ தொடங்க “மைந்தர்கள் இருக்கிறார்கள். எவரிடம் படை உள்ளது? யாதவப்படை?” என்றாள் சத்யபாமை. “ஆம், எவரிடம் உள்ளது? தங்களிடம்கூட இல்லை.”
பிரதிபானு மீண்டும் சிரித்தான். அவனை எண்ணம் அழுந்திய விழிகளுடன் திரும்பி நோக்கியபின் “ஆம், நாள் செல்லச் செல்ல என் ஆற்றல் குறைந்து வருகிறது. நாம் அவளை அச்சுறுத்தி சொல் பெற்றாகவேண்டும். ஆகவேதான் அவர் நகர்புகுவதற்குள் இதை முடிக்கவேண்டுமென விழைகிறேன். நீ அவளிடம் என் தூதனாக செல்!” என்றாள் சத்யபாமை. அபிமன்யூ எழுந்து மிகையான நாடகத்தன்மையுடன் “ஆணை, பேரரசி” என தலைவணங்கினான். சத்யபாமை அதை உளம் கொள்ளாமல் தன்னுள் ஆழ்ந்த விழிகளுடன் “எங்கே சென்றுகொண்டிருக்கிறது இது? ஒன்றும் புரியவில்லை” என்றாள்.
அபிமன்யூ வெளியே வந்தபோது மூவரும் அவன் பின்னால் ஓடிவந்தனர். “மூத்தவரே, உங்களைக் காண வரவேண்டுமென எண்ணினோம். அன்னை இங்கே வரச்சொன்னார்” என்றான் ஸ்ரீபானு. “நீ என்ன முழுப்பொழுதும் அடுமனையில் வாழ்கிறாயா?” என்றான் அபிமன்யூ. “பயிற்சிக்களம் என ஒன்று உண்டு, அறிவாயா?” பிரதிபானு “அறிவான், மூத்தவரே. அடுமனைக்கு வெளியேதான். சாளரம் வழியாக அங்கே பயிற்சி செய்பவர்களைக்கூட பார்க்கமுடியும்” என்றான். “நீ நாவை வளர்த்திருக்கிறாய்” என்றான் அபிமன்யூ. “அதை வைத்து போரிடப் போகிறாயா?”
“கட்கரசனா என்று ஒரு கந்தர்வன். அவன் நாக்கே ஒரு பெரிய வாள்…” என்று பிரதிபானு சொன்னான். “புல்லன்னைக்கு மின்னலில் பிறந்தவன். அவனைப்பற்றிய கதையை கதாமஞ்சரியில் படித்தேன்.” அபிமன்யூ “முதலில் கதாமஞ்சரியில் உன்னைப்பற்றி என்ன எழுதுவார்கள் என்று எண்ணிப்பார்” என்றான். பிரதிபானு “இங்கே சித்தம் கொண்ட ஒவ்வொருவரும் எதிலேனும் ஒளிந்துகொள்ள வேண்டியிருக்கிறது, மூத்தவரே” என்றான். அக்குரல் மாற்றத்தை உணர்ந்து தானும் மாறிய அபிமன்யூ “என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான்.
“ஒன்றுமே நிகழவில்லை. பதின்மூன்றாண்டுகளாக இதுவே. முறைத்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருக்கிறார்கள். நாங்கள் நினைவறிந்த நாள்முதலாக இதை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றான் ஸ்ரீபானு. “முதலில் இது மிகச் சிக்கலானது என தோன்றும், கடல் அலைகளைப்போல. ஆனால் இரண்டு நாட்கள் கடலோரம் அமர்ந்து அலைகளைப் பார்த்தால் அவற்றின் ஒழுங்கு தெரியவரும். நாலைந்து எளிய கணக்குகள் மட்டுமே. திரும்பத்திரும்ப சலிக்காமல்…” என்றான் பிரதிபானு. “நாங்கள் பதின்மூன்றாண்டுகளாக இந்த அலைகளை பார்த்துவருகிறோம். எளிமையானவை சலிப்பூட்டுகின்றன. அவ்வெளிமையை அறியாதவர்கள் கொள்ளும் அச்சமும் சினமும் விழைவும்போல வேடிக்கையும் பிறிதில்லை.”
“நான் இளைய அத்தையை சென்று பார்க்கவேண்டும்” என்றான் அபிமன்யூ. “மெய்யாகவே செல்கிறீர்களா? மூத்தவரே, இதையெல்லாம் பொருட்டாக கொள்ளாதீர்கள். நாம் கிளம்பி பாலையில் ஒரு எலிவேட்டை ஆடி வருவோம்” என்றான் பிரதிபானு. “இப்படி தூதுக்கள் சென்றபடியே இருக்கும். நுட்பமான தூதுமொழிகள், அவற்றுக்கு மிகுநுட்ப எதிர்மொழிகள் திரும்ப வரும். அவற்றுக்கு உயர்நுட்ப மொழிகள் அனுப்பப்பட்டு உச்சநுட்ப மறுமொழிகள் பெறப்படும்.”
அபிமன்யூ “இல்லை, அவர்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆகவே நாம் சென்று நம் கடமையை ஆற்றி வருவோம்” என்றான். “நால்வராகச் செல்வது மங்கலமும்கூட.” பிரதிபானு திடுக்கிட்டு “நால்வராகவா? என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “பிறகென்ன, நான் தனியாகவா செல்லமுடியும்?” ஸ்ரீபானு “நான் இளைய அன்னையை பார்த்தே நெடுநாட்களாகின்றன… என் அன்னைக்குத் தெரிந்தால் கொற்றவைக்கோலம் கொள்வார்” என்றான். “இப்போது அவர்தானே உங்களை அனுப்பியிருக்கிறார்?” என்றான் அபிமன்யூ. “அவரா? எப்போது?” என்றான் ஸ்ரீபானு.
“நன்றாக எண்ணிப்பாருங்கள். என்னை தூதுபோகச் சொன்னார்கள், அப்போது நீங்கள் உடனிருந்தீர்கள்.” ஸ்ரீபானு “ஆம்” என்றான். “என்னை அவர் தன் செய்தியுடன் அனுப்பிய செய்தி வேறு எவருக்கேனும் தெரியுமா?” ஸ்ரீபானு வெறுமனே நோக்கினான். “நான் இன்றுதான் இங்கே வந்துள்ளேன். முறைமைப்படி இன்னும் இங்கே வரவேற்கப்படவே இல்லை. ஆகவே நான் சொல்வனவற்றுக்கு பொருள் இல்லை. அவை அரசியின் சொற்கள் என இரு சான்றுரைஞர்கள் சொல்லும்போதுதான் அவை பொருள்கொள்கின்றன. ஆகவேதான் தன் மைந்தர்களையும் சான்றுரைஞர்களாக அரசி அனுப்பியிருக்கிறார்கள்.”
ஸ்ரீபானு “ஆனால் அவர்கள் அப்படி அனுப்பவில்லையே?” என்றான். “அனுப்பி ஆணையிடவில்லை. ஆனால் அரசியின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொள்வது அல்லவா நம் பணி? நாம் என்ன எளிய ஏவலரா ஆணைகளை நிறைவேற்ற? அவர் மைந்தர்கள் அல்லவா?” பிரதிபானு ஏதோ சொல்வதற்குள் அதிபானு “இவன் சொல்வது சிறப்பாகவே தெரிகிறது, இளையோரே. நாம் செல்வோம்” என்றான். “அன்னை…” என ஸ்ரீபானு முனக “அன்னையிடம் இவன் சொல்வதை சொல்வோம்” என்றான் அதிபானு. பிரதிபானு முகம் மலர்ந்து “ஆம், அது ஒரு நல்ல வழிமுறை” என்றான். ஸ்ரீபானு “ஆனால் அன்னையிடம்…” என்றபின் “சரி” என்றான்.
ருக்மிணியின் அறையின் வாயிற்காவலாக நின்ற ஆணிலியின் முகம் அவர்களைக் கண்டதும் சற்றே மாறுபட்டது. யவனநாட்டைச் சேர்ந்தவள் அவள் எனத் தெரிந்தது. அபிமன்யூ தங்கள் வரவை அறிவிக்கும்படி சொல்லிவிட்டு ஸ்ரீபானுவிடம் “அவள் உங்களை பார்த்ததே இல்லைபோலத் தெரிகிறது” என்றான். “யவனக் காவலருக்கு இரண்டே நோக்குதான். ஒன்று நம்மை அவர்களுக்கு தெரியவே தெரியாது. அல்லது நம்மை அவர்கள் கூழாங்கற்கள் என எண்ணுகிறார்கள்.” கதவு திறந்து அவர்களை உள்ளே செல்லும்படி ஆணிலி செய்கை காட்டினாள். அபிமன்யூ உள்ளே நுழைந்து பிற மூவரையும் உள்ளே அழைத்தான். தயங்கி நின்றிருந்த அதிபானு “நீதான் எங்களை அழைத்துவருகிறாய்” என்றான். “என்ன சொல்கிறீர்கள்? மூத்தவரே, உங்களை தொடர்ந்தல்லவா நானே வருகிறேன்? வருக!” என்றான் அபிமன்யூ. அதிபானு வாய்திறந்து அசைவற்று நிற்க “நாங்கள்…” என ஸ்ரீபானு ஏதோ சொன்னான்.
உள்ளிருந்து ருக்மிணியின் மைந்தன் சீசாரு வெளியே வந்து “உள்ளே வருக!” என்றான். அவர்கள் “ஆம், நாங்கள் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என தயங்கினார்கள். அவர்களை உள்ளே அழைத்துச்சென்ற சீசாரு “இளையோர், அன்னையே” என்றான். ருக்மிணி மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்து “வருக, மைந்தர்களே!” என்றாள். “சென்ற ஆவணி எட்டாமிரவு விழாவில் பார்த்தது… அதற்குள் வளர்ந்துவிட்டீர்கள்.” அறைக்குள் சாருதேஷ்ணனும் சுதேஷ்ணனும் நின்றிருந்தார்கள். சாருதேஷ்ணனின் முகம் மெல்லிய கசப்பு தோன்ற தெரிந்தது. சுதேஷ்ணன் மூத்தவனின் முகத்தை இயல்பாக நடிக்கும் தன்மை கொண்டிருந்தான்.
ருக்மிணி கைகளை விரிக்க பிரதிபானுவும் ஸ்ரீபானுவும் சென்று அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவர்களை தலைதொட்டு வாழ்த்திவிட்டு இரு கைகளாலும் பற்றி தோளுடன் அணைத்துக்கொண்டாள். அதிபானு அவள் காலடியை தொட்டு வணங்கி “நாங்கள் பார்க்க விழைந்தோம், அன்னையே. இவன் ஒரு சரியான விளக்கத்தை அளித்தான். ஆகவே வந்துவிட்டோம்” என்றான். ருக்மிணி நகைத்து “ஆம், இவன் எதையும் விளக்கிவிடுவான்” என்றாள். அவர்களின் தோள்களையும் தலையையும் வருடி “இளைஞர்களாக ஆகிவிட்டீர்கள்…” என்றாள்.
அபிமன்யூ அவளை தாள்வணங்கி வாழ்த்து பெற்று எழுந்து “நான் தனியாக வர அஞ்சினேன். ஏனென்றால் மிகக் கடுமையான சூழ்ச்சிகள் என்னிடம் உள்ளன” என்றான். அவள் புருவம் சுருங்க “என்ன சூழ்ச்சி?” என்றாள். “மூத்த அத்தையின் சொற்கள். அதாவது பிரத்யும்னர் முடிசூடினால் அவரை யாதவர் கைவிடுவார்கள். பிற ஷத்ரியர்களால் அவர் தோற்கடிக்கப்படுவார். ஆகவே நீங்கள் மூத்தவராகிய பானுவை அரசராக ஒப்பவேண்டும். மறுகடனாக அவர் உங்கள் மைந்தர்களை துவாரகையின் இளவரசர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒப்புதல் அளிப்பார். இதை நான் உங்களிடம் சொல்லி அச்சுறுத்தி ஒப்புதல் பெறவேண்டும்” என்றான்.
“அய்யோ!” என்றான் ஸ்ரீபானு. “என்ன?” என்றான் பிரதிபானு திகைப்புடன். “ஒருவேளை இதைவிட விரிவாகவும் முறையாகவும் நான் சொல்லியிருக்க வேண்டுமோ? மறந்துவிடாமலிருக்க சுருக்கி புரிந்துகொண்டிருந்தேன். அதை அப்படியே சொல்லிவிட்டேன். அத்தை, நீங்கள் இதை ஆங்காங்கே முறைமைச்சொற்கள் போட்டு விரிவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பல்லாண்டுகாலமாக புழங்கும் மொழி அல்லவா அது?” என்றான் அபிமன்யூ.
“அன்னையே, இவன் விளையாடுகிறான். அன்னை சொன்னது என்னவென்றால்…” என அதிபானு தொடங்க ருக்மிணி “அவன் சொன்னதுதான் சரியானது. அதற்கு என் மறுமொழி இதுதான். இங்கே நாம் எவருமே களமாடுபவர்கள் அல்ல. நாம் களத்தில் காய்கள். அவர் எண்ணுவது நிகழட்டும். அவர் நகர்நுழைவது வரை காப்போம்… வேறேதும் இப்போது செய்வதற்கில்லை” என்றாள். சீசாரு “ஆம், நாம் இங்கே அரசியல் பேசவேண்டாமே” என்றான். “ஆனால் அவன் அரசியல் பேசத்தான் வந்திருக்கிறான்” என்றான் சாருதேஷ்ணன். “ஆம், யாதவர்களின் அரசர் எவர் என்பதை யாதவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார் அன்னை” என்றான் அபிமன்யூ.
“தன் மைந்தரில் முதல்வன் எவன் என்பதை முடிவுசெய்ய வேண்டியவர் தந்தை. அதை அவர் முடிவுசெய்துவிட்டார். அநிருத்தனின் மைந்தனே துவாரகையை ஆள்வான் என்பது அவர் அளித்த சொல். ஆகவே பிரத்யும்னரே துவாரகையின் முடிசூடுவார் என்பது வழிப்பெறுகை. உன் மூத்த அத்தையிடம் சொல்” என்றான் சாருதேஷ்ணன். “அதை அவர் முன்னரே அறிவார் என்பதனால்தான் தந்தை நகர்நுழைந்து முறைப்படி அறிவிப்பதற்கு முன்னரே பேசி முடிவெடுக்கத் துடிக்கிறார்” என்றான் சுதேஷ்ணன்.
ருக்மிணி “இதெல்லாம் எதற்கு? எவர் முடிசூடினாலும் இங்கே அனைவரும் ஒன்றாக இருந்தாகவேண்டும். இல்லையேல் அனைவருக்கும் எதிரிலக்காகிய துவாரகை வாழ இயலாது” என்றாள். “இதையே நான் சென்று சொல்லிவிடுகிறேன், அன்னையே” என்றான் அபிமன்யூ. “என்ன சொல்லவிருக்கிறாய்?” என்றான் சுதேஷ்ணன் ஐயத்துடன். “அநிருத்தரை அரசராக்க அனைத்து யாதவரும் ஒருங்கிணையவேண்டும் என்று” என்றான் அபிமன்யூ. சீசாரு சிரித்துவிட்டான். அவனை சீற்றத்துடன் பார்த்தபின் “என்ன உளறுகிறாய்?” என்றான் சாருதேஷ்ணன். “இல்லை, அநிருத்தரின் மைந்தரை…” என்ற அபிமன்யூ ஸ்ரீபானுவிடம் “அல்லது பிரத்யும்னரையா?” என்றான்.
“நீ ஒன்றுமே சொல்லவேண்டாம்… அரசர் வந்துசேரும் வரை இங்கே எதுவுமே மாறாது” என்றான் சாருதேஷ்ணன். “அரசருடன் பிரத்யும்னரும் வருகிறார். அவர்கள் நகர்நுழைந்ததும் அனைத்தும் முடிவெடுக்கப்படும்” என்றான் சுதேஷ்ணன். “நன்று, நான் இதையே சொல்கிறேன்” என்றான் அபிமன்யூ. “நீ அதையும் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாருதேஷ்ணன். ருக்மிணி சிரித்தபடி “அவன் உங்களிடம் விளையாடுகிறான், மைந்தா. இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா உன்னால்?” என்றாள். “விளையாடவில்லை, வினையாடுகிறான்” என்றான் சுதேஷ்ணன்.
அபிமன்யூ “என்னைப்பற்றி என் அன்னையும் அப்படித்தான் சொல்கிறார்” என்றான். ருக்மிணி “இளையோரை சென்று பார். உன்னுடன் அவர்கள் விளையாடி நெடுநாட்களாகின்றன” என்றாள். அபிமன்யூ “ஆம், நான் அதற்குத்தான் இவர்களையும் கூட்டிவந்தேன்” என்றான். சீசாரு ஆறுதலுடன் “வருக, நானே அழைத்துச்செல்கிறேன். நீ வந்த செய்தி முன்னரே இங்கு வந்துவிட்டது. சாரு உன்னைத்தான் கேட்டுக்கொண்டே இருந்தான்” என்றான். அபிமன்யூவும் ஸ்ரீபானுவும் அதிபானுவும் பிரதிபானுவும் ருக்மிணியை வணங்கி விடைபெற்றுக்கொண்டனர்.
இடைநாழியினூடாகச் செல்கையில் “புட்சிறைப் படகில் கடலாடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். யவன மாலுமிகள் நால்வர் அதற்கான பயிற்சியை அவர்களுக்கு சென்ற சில மாதங்களாகவே அளித்துக்கொண்டிருந்தார்கள். நீயும் வந்தால் கொண்டாட்டமாக இருக்கும்” என்றான் சீசாரு. அபிமன்யூ “ஆம், அப்படி எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சில நாட்களாகவே எங்கே பார்த்தாலும் அரசியல்சூழ்ச்சிகளைக் கண்டு சலிப்பு கொண்டிருக்கிறேன்” என்றான். “எனக்கும்தான் சலிப்பாகிவிட்டது. சோர்வூட்டுவது என்னவென்றால் அனைவரும் இளவரசர்கள் என்றால் அரசியலில் திளைக்கவேண்டுமென எதிர்பார்ப்பதுதான்” என்றான் சீசாரு.
அபிமன்யூ உளஎழுச்சியுடன் “ஆனால் மூத்தவரே, போரைப்போல சிறந்த விளையாட்டு வேறில்லை. அதைக் கண்டபின் பிற அனைத்துமே குழந்தைகளுக்குரியவை என்று தோன்றிவிட்டது. நான் இன்று விரும்புவதெல்லாம் ஒரு நல்ல போரைத்தான்” என்றான். சீசாரு திரும்பிப்பார்த்து “போரா? போர் என்றால் இறப்பும் அழிவும் மட்டும்தான், மூடா” என்றான். “ஆம், அத்தனை விளையாட்டுகளிலும் நடிப்பாக இறப்பு உள்ளது” என்றான் அபிமன்யூ. “மெய்யான இறப்புமையத்தில் அமர்ந்து ஆளெண்ணி அகற்றும் விளையாட்டே சரியான விளையாட்டு. மூத்தவரே, பிறப்பும் இறப்பும்போல விரைவும் எழுச்சியும் கொண்ட ஆடல் பிறிதில்லை.”